Everything posted by பிழம்பு
-
காப்பாற்றப்பட்ட பின்னர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன நபர்! - தேடும் பணியில் இளைஞர்கள்
29 Jan, 2025 | 05:26 PM மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (29) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் தீர்த்தோற்சவ நிகழ்வின்போதே இந்த நபர் காணாமல்போயுள்ளார். பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே காணாமல் போயுள்ளார். மது போதையில் அப்பகுதிக்குச் சென்ற இந்த நபர் குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை தூக்கி கரைக்கு கொண்டுசென்றதன் பின்னர், மீண்டும் அவர் குளத்தில் பாய்ந்துள்ளார். பல மணிநேரம் கடந்தும் அவர் மேலே வராத காரணத்தால், அங்கிருந்த இளைஞர்கள் அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காப்பாற்றப்பட்ட பின்னர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன நபர்! - தேடும் பணியில் இளைஞர்கள் | Virakesari.lk
-
கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகளுக்காக மாற்றியமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்
கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நேற்று (28) நடைபெற்றது. கிளிநொச்சி குளத்தின் கீழ்ப்புறமாக உள்ள கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கட்டடத்தினை SY NIRO COOL CAFE நிறுவனம் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளது. இந்த பகுதிகளை சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் முகமாக கிளிநொச்சி குளத்தினுள் விசைப்படகு (super boat), துடுப்பு படகு (padpaddele boat) ஆகிய பொழுதுபோக்கு படகுச் சேவைகளை நடாத்துவதற்கும் அதனை அண்டிய பகுதியினை கவர்ச்சிகரமாக மாற்றியமைப்பதற்கும் அனுமதி தருமாறு கோரியுள்ளனர். இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் ஆராயும் நோக்கில், இந்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது SY NIRO COOL CAFE நிறுவனத்தினர் தமது திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தனர். தொடர்ந்து துறை சார்ந்த திணைக்களத் தலைவர்களின் கருத்துப் பகிர்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவிக்கையில், இப்பிரதேசத்தின் வாழ்வாதாரம் மற்றும் வீதி போக்குவரத்து தடைப்படாத வகையில் இதனை வடிவமைக்க வேண்டும். இப்பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளை குறைப்பதை நோக்காக கொண்டிருப்பதுடன் எவ்வகையிலும் அதனை அதிகரிப்பதற்கு இடமளிக்கக்கூடாது. மேலும் இதனுடன் பல திணைக்களங்கள் சம்பந்தப்படுவதால் தங்களது திட்டத்தில் உள்ளடங்குகின்ற விடயங்களை தெளிவாக எழுத்து மூலம் சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில், அந்தந்த விடயங்களில் திணைக்களங்களுக்குரிய விதிமுறைகளை குறித்த திணைக்களங்கள் ஊடாக பெற்றுக்கொள்வது அவசியமானதாகும். இவற்றை கருத்திற்கொண்டு இத்திட்டத்தை சிறப்பாக செயற்படுத்த முடியும் என தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், தேசிய நீர் வளங்கள் அதிகார சபையின் பொறியியலாளர், உள்ளூராட்சி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், கரைச்சி பிரதேச சபைச் செயலாளர், மாவட்ட செயலக மற்றும் கரைச்சி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், NAQDA நிறுவனத்தின் பொறுப்பதிகாரி, பொதுச் சுகாதார உத்தியோகத்தர், கிளிநொச்சி குளத்தின் நன்னீர் மீன்பிடிச் சங்க அங்கத்தவர்கள், விடய உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர். கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகளுக்காக மாற்றியமைப்பது தொடர்பில் கலந்துரையாடல் | Virakesari.lk
-
கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி
Published By: Vishnu 29 Jan, 2025 | 09:08 PM கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 9 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கிளிநொச்சி, கண்ணகிபுரம் பகுதியிலுள்ள வீதியில் இருந்த குளவிக்கூடு கலைந்தமையால், வீதியால் சென்ற பாடசாலை மாணவர்கள் 9 பேரும், வீதியால் பயணித்தவர்கள் மேலும் 6 பேரும் கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணகிநகர் அம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி | Virakesari.lk
-
அடுத்த கைது நாமல்?
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. R Tamilmirror Online || அடுத்த கைது நாமல்?
-
இந்திய மீனவர்களின் ஆக்ரோஷமான செயற்பாடுகளாலேயே துப்பாக்கி இயங்கியது - கடற்படை விளக்கம்
காயமடைந்த இந்திய மீனவர்களை இந்திய துணைத்தூதுவர் சந்தித்தார் ditorial / 2025 ஜனவரி 28 , பி.ப. 05:37 - 0 - 19 நிதர்ஷன் வினோத் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக, செவ்வாய்க்கிழமை (28) அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது. இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர் முயற்சித்தார். இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளது. இதனையடுத்து ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் இருவர் காயமடைந்தனர். கைதான இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க மறுத்துள்ள நிலையில் பருத்தித்துறை பொலிஸாரிடம் இந்திய மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். காயமடைந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி பார்வையிட்டுள்ளார். குறித்த மீனவர்களை நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. Tamilmirror Online || காயமடைந்த இந்திய மீனவர்களை இந்திய துணைத்தூதுவர் சந்தித்தார்
-
”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்” - நாமல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார். . "விடுதலைப் புலிகளை நசுக்கியதற்காக நாமும் எங்கள் பரம்பரையும் கூட கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற உண்மையை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தோம்" என்று எம்.பி. ராஜபக்ச ஊடகங்களுக்குத் தெரிவித்தார். எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் எமது அரசியலைத் தொடர்வோம் என அவர் மேலும் தெரிவித்தார். Tamilmirror Online || ”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்”
-
கட்டைக்காட்டில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் காலில் இருந்து வடிந்த நீர்!
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (28) நீர் கசிந்துள்ளது. மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இயேசுவின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்தது. சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் இயேசுவின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றனர். சகோதர மதத்தினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார், பொது மக்கள் என பலர் இந்த காட்சியை பார்வையிட்டதுடன் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றனர். சம்பவம் தொடர்பாக ஆலய பங்குத்தந்தையால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியுமென கப்பலேந்தி மாதா ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கட்டைக்காட்டில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் காலில் இருந்து வடிந்த நீர்! | Virakesari.lk
-
தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்றால் அனைத்து சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் அபாயம் - சி.அ. யோதிலிங்கம்!
தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்றால் அனைத்து சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் அபாயம் இருப்பதாக அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராயிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளது. என்.பி.பி அரசு பல்வேறு வழிகளிலும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களிடம் இருந்து. அவர்களுக்கான அனைத்து விடயங்களையும் கையாண்டு மக்கள் மத்தியில் ஓர் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். இது ஒரு ஆபத்தான நிலைமையாகும். இதனை தடுப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று திரள வேண்டும் என்றும், இவ்வாறான நடவடிக்கை அனைத்து சிவில் சமூகங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்றால் அனைத்து சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் அபாயம் - சி.அ. யோதிலிங்கம்! | Virakesari.lk
-
மட்டு. கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல் நிகழ்வு
Published By: Vishnu 28 Jan, 2025 | 06:40 PM இந்த நாட்டில் ஜே ஆர் ஜனாதிபதியாக இருந்த காலம் தொடக்கம் இன்று அனுரகுமார திசாநாயக்க காலம் வரையிலும் 37வருடத்தில் பல ஜனாதிபதிகளைக்கண்டாலும் இனப்படுகொலைகளுக்கு நீதியைத்தராத நிலையிலேயே நாங்கள் நினைவேந்தல்களை செய்துவருகின்றோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தையே உலுக்கிய படுகொலைகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்றது. மட்டக்களப்பு மகிழடித்தீவு சந்தியில் உள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்,படுகொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி அகவணக்கமும் செலுத்தப்பட்டது. 28-01-1987 மற்றும் 12-06-1991ஆகிய காலப்பகுதிகளில் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மகிழடித்தீவு இரால்பண்ணை மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளில் 239பேர் படுகொலைசெய்யப்பட்டனர். குறித்த படுகொலையில், சிறுவர்கள்,பெண்கள் மற்றும் முதியவர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.இவர்களை நினைவு கூரும் வண்ணமே, கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி 2,000ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர், 1987ஆம் ஆண்டு இதே தினத்தில் 33ஆண்டுகளுக்கு முன்பு கொக்கட்டிச்சோலை இறால் வளர்ப்பு என்று கூறுகின்ற மகிழடித்தீவு,முதலைக்குடா இறால் வளர்ப்ப பண்ணை,படுவான்கரை பெரு நிலத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலையில் 157க்கும் அதிகமானவர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள்.அதனைவிட கணக்கெடுக்கமுடியாத வகையில் படுகொலைகள் முன்னெடுக்கப்பட்டன.பாரிய இனப்படுகொலையொன்று முன்னெடுக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு என்பது கிழக்கு மாகாணத்தில் இந்த கொக்கட்டிச்சோலை பகுதியில் பெரியளவிலான படுகொலை முன்னெடுக்கப்பட்டது.அதன்பின்னர் இந்தி இலங்கை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் பின்னர் படுகொலைகள் முள்ளிவாய்க்கால் வரையில் இடம்பெற்றது. கொக்கட்டிச்சோலை படுகொலையென்பது அன்றைய காலகட்டத்தில் சர்வதேச ரீதியாக பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.இன்று 38வது ஆண்டினை நினைவுகூரும்போது கூட படுகொலைசெய்தவர்கள் மீதோ அதன் பின்னாளிருந்தவர்கள் மீதோ எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. மட்டு. கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல் நிகழ்வு | Virakesari.lk
-
இந்திய மீனவர்களின் ஆக்ரோஷமான செயற்பாடுகளாலேயே துப்பாக்கி இயங்கியது - கடற்படை விளக்கம்
(எம்.மனோசித்ரா) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் மீன்பிடிப் படகொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்களை கைது செய்வதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்த போது, கடற்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் இரு மீனவர்கள் காயமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து கடற்படை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : திங்கட்கிழமை (27) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்துக்கு அப்பால் இலங்கைக்கு உரித்தான கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த இந்திய மீன்பிடிப்படகுகள் பெருமளவானவை வடக்கு கடற்பளை கட்டளை தலைமையகத்தினால் கண்காணிக்கப்பட்டன. குறித்த மீன்பிடிப்படகுகளை நாட்டின் கடல் எல்லையிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான விசேட சுற்றிவளைப்பினை வடக்கு கட்டளைக்குரிய கப்பல்கள் முன்னெடுத்திருந்தன. இதன் போது சட்ட விரோதமாக மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் ஒரு மீன்பிடிப்படகுடன் கைது செய்யப்பட்டனர். இந்திய மீன்பிடிப்படகினை கடற்படையினர் கைது செய்யவிருந்தபோது, அப்படகு கடற்படையின் சட்டப்பூர்வ உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல், தொடர்ந்து இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளது. இதனால் குறித்த படகில் சில கடற்படையினர் இறங்கியுள்ளனர். இதன் போது தமது படகிற்குள் கடற்படையினர் ஏறுவதை தடுப்பதற்காக, அவர்களது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதோடு குறித்த இந்திய மீனவர்கள் மிகவும் ஆக்ரோஷமாகவும் ஒழுக்கமின்றியும் நடந்து கொண்டனர். கடற்படையினருக்குள்ள அதிகாரத்துக்கமைய அவர்கள் குறித்த படகில் இறங்கிய போது இந்திய மீனவர்கள் குழுவாக அவர்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். கடற்படையினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், கடற்படை வீரர் ஒருவரிமிருந்த துப்பாக்கியையும் அவர்கள் பறிக்க முயற்சித்துள்ளனர். இதன் போது அந்த துப்பாக்கி இயங்கியதாலேயே இரு மீனவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் கடற்படையினரால் காயமடைந்த மீனவர்கள் இருவருக்குள்முதலுதவியளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த மீனவர்கள் நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளதோடு, கடற்படையால் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இதன் போது கைப்பற்றப்பட்ட மீன்பிடிப்படகுடன் எஞ்சிய 11 மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு நேற்று செவ்வாய்கிழமை காலை அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மயிலடி கடற்வள ஆய்வாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோத மீன்படி நடவடிக்கைகளை தடுத்து வடக்கு கடல் பிராந்தியத்தில் கடல் வளத்தின் பாதுகாப்பிற்கும், வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கை கடற்படை தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. இந்திய மீனவர்களின் ஆக்ரோஷமான செயற்பாடுகளாலேயே துப்பாக்கி இயங்கியது - கடற்படை விளக்கம் | Virakesari.lk
-
யாழில் ஆலயம் ஒன்றில் 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையான மாம்பழம்!
யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 5 நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது. கடந்த 22.01.2025.அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் 26.01.2025 அன்று ஜந்தாம் நாள் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.. யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 5 நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது. கடந்த 22.01.2025.அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் 26.01.2025 அன்று ஜந்தாம் நாள் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.. இங்கு விசேட அபிசேக ஆராதனை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி, வெளிவீதியூடாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து ஒரு மாம்பழம் 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஜெயசந்திரன் குடும்பத்தினரே இவ் மாம்பழத்தினை பெற்றனர். இங்கு விசேட அபிசேக ஆராதனை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி, வெளிவீதியூடாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து ஒரு மாம்பழம் 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஜெயசந்திரன் குடும்பத்தினரே இவ் மாம்பழத்தினை பெற்றனர். யாழில் ஆலயம் ஒன்றில் 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையான மாம்பழம்!
-
என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் : ரணில்
நாட்டில் தற்போது நிலவும் சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பு தொடர்பில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி, கட்டுஹெம்பலாவில் உள்ள மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை சென்றிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன்போது சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பு குறித்து கவலைகளை தெரிவித்ததோடு, சிலர் ஒரு தேங்காய் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த முறை 10 கிலோ சிவப்பு அரிசியை வழங்கியவர் ரணில் விக்கிரமசிங்க என அங்கு குடியிருந்த பொதுக்கள் குறிப்பிட்டுள்ளனர். "ஐயா, நீங்கள் தான் எங்கள் நம்பிக்கை, எங்களுக்கு நீங்கள் தேவை" எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கு என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் : ரணில் | Virakesari.lk
-
தமிழ்த் தேசியக் கட்சிகளின் சந்திப்பு ஒத்திவைப்பு!
தமிழரசு கட்சியால் கலந்துரையாடல் பிற்போடப்பட்டது தமிழரசு கட்சியின் முடிவுக்காக, இன்று திங்கட்கிழமை (27) நடைபெற விருந்த தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் ஏற்பாட்டில், தமிழ் தேசிய கட்சிகளுடனான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட இருந்தது. அந்நிலையில் தமிழரசு கட்சி தமக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு கிடைக்கவில்லை என தெரிவித்தது. அதனை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லவராசா கஜேந்திரன் ஆகியோர், தமிழரசு கட்சியின் பதில் தலைவரும், வடமாகாண சபையின் அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானத்தின் வீட்டிற்கு நேரில் சென்று கலந்துரையிடலுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், கலந்துரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் தமது கட்சி சார்பில் இன்று கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியாது எனவும், எதிர்வரும் 08ஆம் திகதி தமிழரசின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளதால் , கலந்துரையாடல் தொடர்பில் கூட்டத்தில் முடிவெடுத்து, அதன் பிரகாரம் எமது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் என கூறியுள்ளார். இது தொடர்பில் இன்றைய கலந்துரையாடலுக்கு சமூகமளிக்க இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கு கஜேந்திரகுமார் தெரிவித்ததை அடுத்து, 08ஆம் திகதி தமிழரசு கட்சி தனது முடிவினை அறிவித்த பின்னர், கலந்துரையாடலை மேற்கொள்வோம் என கூறியுள்ளதால், இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. தமிழரசு கட்சியால் கலந்துரையாடல் பிற்போடப்பட்டது | Virakesari.lk
-
மாங்குளத்தில் தூக்கிலிடப்பட்டு நாய் கொலை; பெண் கைது!
(செ.சுபதர்ஷனி) மாங்குளம் பகுதியில் நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த சனிக்கிழமை (25) நாயொன்று மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. நாய் கொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்ததுடன் அதற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்த வண்ணமுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் திங்கட்கிழமை (27) ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் 48 வயதுடைய ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த நாய், ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபை வழங்கிய தீர்ப்புக்கமையவே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த பெண் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அச்சம்பவம் இணக்க சபைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் வழக்கு விசாரணைக்காக கூடிய இணக்க சபையின் மூன்று நீதவான்கள் அடங்கிய குழாத்தினரே நாயை தூக்கிலிடுமாறு தீர்ப்பளித்துள்ளனர். இணக்கசபையில் இருந்த மூன்று நீதவான்களான ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் யோகேஸ்வரன் (ஓய்வு), சின்னத்தம்பி பாடசாலை அதிபர் நித்தியகலா (ஓய்வு), கிராம அலுவலரின் தாயான மேகலா ஆகிய மூவருமே இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளனர். இணக்கசபையில் இருந்த நீதவான்கள் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரித்து, நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு நாயின் உரிமையாளரும் சம்மதித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, நீதவான்கள் நாயை தூக்கில் இடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், தூக்கிலிடுவது தொடர்பான புகைப்படத்தையும் தமக்கு அனுப்புமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்படி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதையடுத்து பேசுபொருளாக மாறியுள்ளது. ஐந்தறிவு ஜீவனுக்கு தூக்கு தண்டனை எதற்கு என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மாங்குளத்தில் தூக்கிலிடப்பட்டு நாய் கொலை; பெண் கைது! | Virakesari.lk
-
கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை புகையிரத நிலையங்களில் நிறுத்தக்கூடிய வகையில் வடக்குக்கான புகையிரத சேவை!
(இராஜதுரை ஹஷான்) வடக்குக்கு காலை வேளையில் புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதற்கமைய எதிர்வரும் இரண்டு வாரங்களில் கல்கிஸ்ஸை மற்றும் வெள்ளவத்தை ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தக்கூடிய வகையில் வடக்குக்கு புகையிரத சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் என புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார். புகையிரத திணைக்களத்தின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மற்றும் மலையகத்துக்கான புகையிரத சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய எதிர்வரும் வியாழக்கிழமை 31ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முதல் காங்கேசன்துறை புகையிரத நிலையம் வரை பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் காங்கேசன்துறை புகையிரத நிலையம் முதல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை இரவு தபால் புகையிரதம் சேவையில் ஈடுபடும். இத்தினங்களில் இரவு 8 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படும் புகையிரதம் அதிகாலை 4.35 மணியளவில் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையும். அதேபோல் இரவு 8 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படும் புகையிரதம் அதிகாலை 4.45 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும். மலைநாட்டுக்கான புகையிரத சேவை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது. தேசிய மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைய மலைநாட்டுக்கான புகையிரத சேவையில் மேலதிகமாக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன. எல்ல ஒடிசி – கொழும்பு புகையிரதம் கொழும்பு கோட்டை – பதுளை வரையிலும் மேலதிகமாக 10 புகையிரத பயணச் சேவைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும். வடக்குக்கு காலை வேளையில் புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதற்கமைய எதிர்வரும் இரண்டு வாரங்களில் கல்கிஸ்ஸை மற்றும் வெள்ளவத்தை ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்த கூடிய வகையில் வடக்குக்கு புகையிரத சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். புகையிரத என்ஜின் பற்றாக்குறை காரணமாகவே புகையிரத சேவைகள் தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டன. எதிர்வரும் காலப்பகுதியில் சேவைகளை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. புகையிரத இ-டிக்கெட் சேவையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை புகையிரத நிலையங்களில் நிறுத்தக்கூடிய வகையில் வடக்குக்கான புகையிரத சேவை! | Virakesari.lk
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
- யாழில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபத்துக்கு மூன்றாவது முறையாக பெயர் மாற்றம்
24 Jan, 2025 | 01:19 PM இந்திய நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்துக்கு "யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என தற்போது பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட "யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்" 2023ஆம் ஆண்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நிதி ஒத்துழைப்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி இலங்கையின் பிரதி கலாசார அமைச்சரும் இலங்கைக்கான இந்திய தூதுவர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்ட நிகழ்வில் அக்கட்டடத்துக்கு "திருவள்ளுவர் கலாசார மையம்" என பெயர் சூட்டி பெயர்ப்பலகையை திறந்துவைத்தனர். "யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்" என்ற பெயர் மாற்றப்பட்டு, "திருவள்ளுவர் கலாசார மையம்" என பெயர் சூட்டியமைக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள் உட்பட பல தரப்பினரும் தமது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இன்றைய தினம் இக்கட்டடத்தில் "யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என மீண்டும் பெயர் மாற்றப்பட்டு, பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது. யாழில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபத்துக்கு மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் | Virakesari.lk- யாழில் ஆரம்பமாகியது உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி
24 Jan, 2025 | 01:38 PM நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை (24) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது. இன்று வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமான இந்த கண்காட்சி 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் காலை 10:00 மணி முதல், இரவு 07:00 மணி வரை இப் புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது. புகைப்பட ஊடகவியலில் சர்வதேச விருதுகளை வென்ற புகைப்படங்கள் உட்பட, புகைப்படத்தினூடு கதை சொல்லும் பல புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் தமிழர் பாரம்பரிய முறைப்படி மயிலாட்டம், குதிரையாட்டத்துடன் அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்ற பின்னர் நாடா வெட்டி வைக்கப்பட்டு புகைப்பட கண்காட்சி ஆரம்பமாகியது. இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் பிரதித் தூதுவர் தூதுவர் கலந்து சிறப்பித்ததுடன், யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.சுமந்திரன், நெதர்லாந்து தூதரகத்தினர் மற்று பார்வையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். யாழில் ஆரம்பமாகியது உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி | Virakesari.lk- வவுனியா மாவட்டத்தில் 80 வீதமான உழுந்து செய்கை முழுமையாக பாதிப்பு
வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து பெரும் மழையின் காரணமாக 80 வீதமான உழுந்து செய்கையானது முழுமையாக பாதிக்கப்படைந்துள்ளது. வவுனியா மாவட்டம் உழுந்து செய்கையில் பிரதானமாக காணப்படும் நிலையில் செய்கையின் அறுவடை காலம் நெருங்கி இருந்த சமயத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ததன் காரணமாக உழுந்து மரத்திலேயே முளைத்து காணப்படுகின்றது. இதன் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் உழுந்து செய்கையை கைவிட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை இலட்சங்களை செலவழித்து உழுந்து செய்கை மேற்கொண்ட நிலையில் இவ்வாறான ஒரு துர்பாக்கிய நிலைமை தமக்கு ஏற்பட்டிருப்பது தொடர்பில் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே உழுந்து செய்கையாளர்களுக்கு நஷ்டஈட்டை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் கேட்ட போது, இம்முறை 13961 ஏக்கர் உழுந்து செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 11231 ஏக்கர் முழுமையாக அழிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக 1160 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கையும் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வவுனியா மாவட்டத்தில் 80 வீதமான உழுந்து செய்கை முழுமையாக பாதிப்பு | Virakesari.lk- பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளதுடன் மீண்டும் தனது பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்படும் சலுகைகள் பலவற்றை அரசாங்கம் குறைத்துள்ளமை குறிப்பிடத்க்கது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கைழய 60ஆக அரசாங்கம் குறைத்துள்ளது. பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் மகிந்த | Virakesari.lk- காதலனை கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
கேரளா: காதலனுக்கு விஷம் கொடுத்த காதலிக்கு, டிஜிட்டல் 'ஆதாரங்கள்' மரண தண்டனை பெற்று தந்தது எப்படி? சு.மகேஷ் பதவி,பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் காதலனை கசாயத்தில் விஷம் கலந்து கொன்ற காதலிக்கு கேரளாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில், குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க டிஜிட்டல் சான்றுகள் உதவியாக இருந்துள்ளது. ''இந்த வழக்கில் நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லாத போதும், சூழ்நிலை சான்றுகளை இணைத்து, டிஜிட்டல் ஆதாரங்களின் துணையுடன் குற்றத்தை நிரூபித்து குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் அதிகபட்ச தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.'' என்கிறார் அரசு தரப்பு வழக்கறிஞர் வழக்கின் பின்னணி என்ன? அரசு தரப்பு வழக்கறிஞரின் கூற்றுப்படி, ''கன்னியாகுமரி மாவட்டம் தேவிக்கோடு பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்மா, முதுகலை ஆங்கில இலக்கிய பட்டதாரி. கேரள மாநிலம் பாறசாலை பகுதியை சேர்ந்தவர் ஷரோன் ராஜ். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை ரேடியாலஜி (B.Sc., Radiology) இறுதி ஆண்டு மாணவர் (சம்பவம் நடைபெற்ற போது). கிரீஷ்மாவும், ஷரோன் ராஜும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே கிரீஷ்மாவின் பெற்றோர் அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதையடுத்து கிரீஷ்மா ஷரோன் ராஜிடன் தன்னுடனான காதலை கைவிடும்படி கோரியுள்ளார். ஆனால் ஷரோன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பெற்றோர் பார்த்து முடிவு செய்த மாப்பிள்ளையை மணக்க விரும்பிய கிரீஷ்மா, ஷரோன் தனது மண வாழ்க்கையில் இடையூறாக வரக்கூடும் என எண்ணி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவரை தனது வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றார்''. இதுவே வழக்கின் பின்னணி. விசாரணையில் வெளிவந்த உண்மை இந்த வழக்கின் சிறப்பு புலனாய்வு குழுவில் அங்கமாக இருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ரசீத் பிபிசி தமிழிடம் பேசியபோது, "ஆரம்பத்தில் இந்த வழக்கை பாறசாலை காவல்துறையினர், இயற்கைக்கு மாறான மரணம் என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்க துவங்கினர். ஆனால் ஷரோன் ராஜ் மரணத்தில் கிரீஷ்மா மீது சந்தேகம் உள்ளதாக ஷரோன் ராஜின் உறவினர்கள் தெரிவித்தனர்." என்றார் "இதையடுத்து வழக்கு குற்ற பிரிவுக்குக்கு மாற்றப்பட்டு, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படு விசாரணை நடந்தது." என்று அவர் கூறினார். கிரீஷ்மாவிடம் குறுக்கு விசாரணை நடத்திய போது அவர் நடந்தவற்றை மறைக்க இயலாமல் உண்மையை கூறிவிட்டார் என்றும் தொடர்ந்து அவரது அம்மா மற்றும் மாமாவிடமும் குறுக்கு விசாரணை நடந்த போது, ஷரோன் ராஜுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தது ஊர்ஜிதமானது என்றும் டிஎஸ்பி ரசீத் கூறினார். தற்கொலைக்கு முயன்ற காதலி தொடர்ந்து பேசிய டிஎஸ்பி ரசீத், "இதற்கிடையே கிரீஷ்மா காவல்துறை காவலில் இருக்கும் போது, நெடுமன்காடு காவல்நிலையத்தில் வைத்து, கழிவறை கழுவுவதற்காக வைத்திருந்த கிருமிநாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றார்." "அப்போது கிரீஷ்மாவிடம் வாக்குமூலம் பெற்ற மாஜிஸ்திரேட்டிடமும் கிரீஷ்மா நடந்த அனைத்து உண்மைகளையும் கூறிவிட்டார். தானும் ஷரோன் ராஜும் காதலித்து வந்ததாகவும், வேறு ஒருவருடன் தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டாதால் ஷரோனிடம் காதலை கைவிடும் படி கேட்டதாகவும், இதற்கு ஷரோன் மறுத்ததால் அவருக்கு விஷம் கொடுத்து கொன்றதாகவும் கிரீஷ்மா மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்தார்." என்று கூறினார் ரசீத். அதன் பின்னர் கிரீஷ்மா கூறிய அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் சமர்பித்ததாக தெரிவித்தார் டிஎஸ்பி ரசீத். கைபேசி தகவல்கள் அழிப்பு படக்குறிப்பு,இந்த வழக்கில் நேரடி சான்றுகள் எதுவும் இல்லாதது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்கிறார் அரசு தரப்பு வழக்கறிஞர் வினீத் குமார் வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் வி.எஸ்.வினீத் குமார் பிபிசி தமிழிடம் பேசியபோது, "இந்த வழக்கில் நேரடி சான்றுகள் எதுவும் இல்லாதது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதனால் சூழ்நிலை சான்றுகளை ஒவ்வொன்றாக இணைத்து டிஜிட்டல் மற்றும் விஞ்ஞானப்பூர்வமான சான்றுகளின் துணை கொண்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கை நிரூபித்தோம்" என்றார். "கிரீஷ்மா ஒரு முறை பழச்சாற்றில் (Juice) அளவுக்கு அதிகமாக காய்ச்சல் மாத்திரைகளை கலந்து கொடுத்து ஷரோன் ராஜை கொல்ல முயற்சி செய்துள்ளார். அதற்கு முன்பு தனது கைபேசியில் உள்ள தேடு பொறியில் இது குறித்தான தகவல்களை தேடியுள்ளார். ஆனால் பழச்சாற்றை ஷரோன் ராஜ் முழுவதுமாக குடிக்காததால் அன்று உயிர் பிழைத்துள்ளார்." என்கிறார் வழக்கறிஞர் வி.எஸ்.வினீத் குமார். ''அடுத்ததாக 14 அக்டோபர் 2022 அன்று, கிரீஷ்மா தனது கைபேசியில் உள்ள தேடு பொறியில் கொடிய நச்சு தன்மையுடைய பூச்சிக்கொல்லி மருந்து (விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவது) குறித்தும், அதன் எதிர்வினைகள் மற்றும் நச்சுத்தன்மை குறித்தும், அது மனித உடலில் எவ்வாறு செயல்படும், எவ்வாறு கொடுப்பது என்பது குறித்தும் தகவல்கள் தேடியுள்ளார். அந்த மருத்து அவரது வீட்டில் இருந்துள்ளது'' என்று கூறுகிறார் வினீத் குமார். அன்று இரவே ஷரோன் ராஜை தனது வீட்டிற்கு அழைத்த கிரீஷ்மா, கசாயத்தில் அந்த பூச்சிகொல்லி மருந்தை கலந்து கொடுத்ததாகக் கூறுகிறார் அவர். அதை குடித்த பிறகு ஷரோன் ராஜுக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஷரோன் ராஜ் சிகிச்சை பலனளிக்காமல் 25 அக்டோபர் 2022 அன்று உயிரிழந்தார். "இதை அறிந்த கிரீஷ்மா காவல்துறையினர் தன்னிடம் விசாரணைக்கு வரக்கூடும் என சந்தேகித்து தனது கைபேசியில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அழித்துள்ளார். மேலும் அழிக்கப்பட்ட தகவல்களை கைபேசியில் இருந்து மீட்டெடுக்க முடியுமா என்பது குறித்தும் தேடு பொறியில் தேடியுள்ளார்." என்கிறார் வினீத் குமார். ''விசாரணையின் போது, கிரீஷ்மாவின் கைபேசி ஆராயப்பட்டது. ஆனால் அதில் இருந்த தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தடயவியல் ஆய்வகத்துக்கு கைபேசி அனுப்பப்பட்டு Cloud Data-வில் பதிவாகி இருந்த அனைத்து தகவல்களும் மீட்டு எடுக்கப்பட்டன'' என்று அவர் குறிப்பிடுகிறார். அவரது கைபேசியில் உள்ள வாட்ஸ் அப் உரையாடல்கள், வீடியோ அழைப்புகள், அவரது தேடு பொறியில் தேடிய தகவல்கள் உள்ளிட்ட அனைத்தும் மீட்டு எடுக்கப்பட்டு டிஜிட்டல் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. மேலும், "சம்பவம் நடந்த அன்று ஷரோன், கிரீஷ்மாவின் வீட்டிற்கு வந்து சென்றதற்கான ஆதாரமாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், இருவருக்கும் இடையே நடந்த வாட்ஸ் அப் உரையாடல் பதிவுகள், இருவரும் பயன்படுத்திய பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் மற்றும் சிடி ஆகியவற்றில் உள்ள தகவல்கள் டிஜிட்டல் ஆதாரமகவும், சூழ்நிலை ஆதாரங்களையும் துணையாக கொண்டு நிலைநிறுத்தி வழக்கை நீதிமன்றத்தில் நிரூபித்தோம்," என்றார் வழக்கறிஞர் வினீத் குமார். 'தடயம் இல்லை' "கிரீஷ்மா, ஷரோன் ராஜுக்கு விஷம் கொடுத்து கொன்றுள்ளார் என்பது புலன் விசாரணையில் தெளிவாகிவிட்டது. ஆனால் உயிரிழந்த ஷரோன் ராஜின் உடலில் விஷம் குடித்து இறந்ததற்கான எந்த தடயமும் உடற்கூறாய்வில் இல்லை." என்கிறார் வழக்கறிஞர் வினீத் குமார். ''காரணம் விஷம் கொடுக்கப்பட்ட ஷரோன் ராஜ் 11 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். மேலும் சிகிச்சையின் போது மூன்று முறை ஷரோன் ராஜுக்கு டயாலிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது ரத்தம் முழுவதுமாக சுத்திகரிக்கப்பட்டதோடு உடலில் விஷ தடயங்கள் எதுவும் இல்லாமல் போயிருந்தது'' என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் வினீத் குமார். இவற்றை எல்லாம் சூழ்நிலை சான்றுகளைக் கொண்டு நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தினோம், என்கிறார் வழக்கறிஞர் வினீத் குமார். 500 பக்க தீர்ப்பு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த வழக்கு ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது என்று நீதிபதி பஷீர் தீர்ப்பில் தெரிவித்துள்ளார் வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர், 20 ஜனவரி 2025 அன்று வழங்கிய தீர்ப்பில், கிரீஷ்மாவிற்கு தூக்கு தண்டனையும், அவரது மாமா நிர்மல் குமரன் நாயருக்கு 3 வருட சிறை தண்டனையும் அளித்து தீர்பளித்தார். தீர்ப்பில் அவர் காவல்துறையினரின் புலன் விசாரணையை வெகுவாக பாராட்டியுள்ளார். தனது தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளதாவது, "வழக்கில் பாதிக்கப்பட்ட ஷரோன் ராஜ், கொலையாளியின் வயதை ஒத்த வயதுடைய ஒரு மாணவர். ஷரோன் ராஜ், கிரீஷ்மா மீது ஆழ்ந்த காதல் வயப்பட்டிருந்தார். அப்பெண் மீது நம்பிக்கை வைத்து கண்மூடித்தனமாக நம்பி இருந்தார். ஆனால் அந்த நம்பிக்கையை கிரீஷ்மா தவறாக பயன்படுத்திவிட்டார்." "மரண படுக்கையில் ஷரோன் ராஜ் இருந்த போது, மாஜிஸ்த்ரேட்டிடன் மரண வாக்குமூலம் அளித்த போதும், கிரீஷ்மா மீது தனக்கு எந்த புகாரும் இல்லை என்றும் ஏனென்றால் அவளை தான் தண்டிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த குற்றம் மிக மூர்க்கதனமாக நடந்துள்ளது. ஒரு அப்பாவி இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்." ''விஷம் கொடுக்கப்பட்டதால் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் அனைத்தும் அழுகி, உதடு முதல் ஆசனவாய் வரை தாங்க முடியாத வலியுடன் 11 நாட்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தமுடியாமல் ஷரோன் மரண படுக்கையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடியுள்ளார்'' என்ற நீதிபதி பஷீர், "குற்றவாளி அந்த கல்லூரி மாணவன் அளித்த பரிசுத்தமான கபடமற்ற தூய காதலையும் கொன்றுள்ளார். அது ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது. இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு இந்த வழக்கை அரிதிலும் அரிதான வழக்காக கொண்டு தூக்கு தண்டனை அளிக்கப்படுகிறது'' என தெரிவித்துள்ளார். 'அம்மாவின் பிரார்த்தனை நிறைவேறியது' இந்தத் தீர்ப்பை முழுமையாக வரவேற்பதாக கொலை செய்யப்பட்ட ஷரோன் ராஜின் சகோதரர் டாக்டர். ஷிமோன் ராஜ் கூறினார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நாங்கள் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தோம். அதுபோல் தான் வழக்கின் தீர்ப்பும் வந்துள்ளது. எனவே இது எங்களுக்கு மகிழ்ச்சிதான். தீர்ப்பை கேட்ட பிறகு அம்மாவிற்கு ஆறுதல் கிடைத்துள்ளது." என்று கூறினார். "தம்பி எங்களோடு இல்லையே என்ற கவலை ஒரு நாளும் எங்களை விட்டு மறைய போவதில்லை. ஆனால் குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைத்தது எங்களுக்கு மிகுந்த ஆறுதலாக உள்ளது" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. கேரளா - கிரீஷ்மா: காதலனுக்கு விஷம் கொடுத்த காதலி - டிஜிட்டல் ஆதாரங்கள் மரண தண்டனை பெற்று தந்தது எப்படி? - BBC News தமிழ்- டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு - முழு விவரம்
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு - முழு விவரம் புதுடெல்லி: பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியை, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் குழுவினர் டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம பகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமும் பல கலாச்சார பாரம்பரிய தளங்களும் உள்ளன என்று மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர். சுரங்க அமைச்சகம் 2024 டிச.24 தேதியிட்ட ஒரு செய்திக் குறிப்பில், ‘டங்ஸ்டன் ஏல நடைமுறைக்குப் பிறகு, அப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளம் உள்ளது என்ற அடிப்படையில் ஏலத்துக்கு எதிராக கருத்துகள் பெறப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜன.25-ம் தேதி அன்று நடைபெற்ற சந்திப்பின் போது, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி மக்களின் சார்பில் சென்றிருந்த விவசாயிகள் குழுவினர், மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தக் குழுவினரின் கோரிக்கைகளை பொறுமையாகக் கேட்டறிந்த மத்திய அமைச்சர், பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்புக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார். விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, இப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்ய சுரங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது’ என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை சொல்வது என்ன? - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று (ஜன.23) மாலை செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரை மேலூர் தொகுதியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்துக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் இந்த அரசாணை கொண்டு வரப்பட்டுள்ளது. டங்ஸ்ட்ன் சுரங்க விவகாரம் தொடர்பாக திமுகவை போல் நாங்கள் அரசியல் செய்யாமல், ஆக்கபூர்வமான கட்சியாக செயல்பட்டுள்ளோம். டங்ஸ்டன் சுரங்க நடவடிக்கை ரத்து என்பது ஜனநாயகத்தின் வெற்றியாகும். பிரதமர் தமிழகத்தின் மீதுள்ள அன்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்” என்றார். அரிட்டாப்பட்டியில் கொண்டாட்டம்: டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிராமத்தின் மையப்பகுதியில் திரண்ட மக்கள் கரவொலிகளை எழுப்பி தங்களது கோரிக்கையை ஏற்று திட்டத்தை ரத்து செய்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். ‘பணிந்தது மத்திய அரசு’ - முதல்வர்: “நான் முதல்வராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.வும் துணைபோகக் கூடாது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். முன்னதாக, மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி மேலூர் பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலச் செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் உள்ளிட்டோர் டெல்லியில் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை புதன்கிழமை நேரில் சந்தித்தனர். அப்போது மத்திய அமைச்சரிடம், மேலூர் தொகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை ரத்து செய்யும் வகையில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என அமைச்சர் கிஷன் ரெட்டி விவசாயிகளுக்கு உறுதி அளித்தார். இந்நிலையில், டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு - முழு விவரம் | Mines Ministry Decides to Annul the Auction of Nayakkarpatti Tungsten Mineral Block - hindutamil.in- ``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா
நேதாஜியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். "நேதாஜியின் ஐ.என்.ஏ-வில் தமிழர்கள் பெருவாரியாக இருந்தார்கள். அதில் முத்துராமலிங்கத் தேவர் மிகப்பெரும் பங்காற்றினார். அதனால் நேதாஜிக்கு மரியாதை செலுத்தி வருகிறோம். காரைக்குடியில் தமிழக முதல்வர் நிலை தடுமாறி பேசி உள்ளார். வள்ளுவரையும் வள்ளலாரையும் களவாட பார்க்கிறார்கள் என்று பேசியுள்ளார். களவாடுவது, கள்ள ரயிலில் செல்வது திராவிட ஸ்டாக்குகளின் வழக்கம். வள்ளுவர் யார்? வள்ளலார் யார்? அடிப்படை ஞானம் இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதல்வராக உள்ளார். அறம் பொருள் இன்பம் வீடு என்ற சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தான் திருக்குறள் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று வள்ளுவர் சொன்னதும் கீதையில் கண்ணன் சொல்வதும் ஒன்றே. நான்கு வர்ணங்களைப் பற்றி வள்ளுவர் எழுதியிருக்கிறார். வள்ளுவரை விட சனாதனி உண்டா? பல இடங்களில் ஹிந்து தெய்வங்களைப் பற்றி வள்ளுவர் பேசியுள்ளார். திருக்குறளை தங்க தட்டில் இருக்கும் மலம் என்று பெரியார் பேசினார். வள்ளலார் திருநீறில்லாமல் இருந்திருக்கிறாரா? முருகன் தோத்திரத்தையும், மகாதேவ மாலை என்று சிவனைப் பற்றி எழுதியிருக்கிறார். வள்ளலார் பெருமகனாரை விட மிகச்சிறந்த ஹிந்து உண்டா? விவரமில்லாத உதயநிதி ஸ்டாலின், சனாதன இந்து தர்மத்தை அழிப்பேன் என்று இழிவாகப் பேசினார். அதற்காக அவர் மீது நாடு முழுவதும் பல வழக்குகள் உள்ளது. சனாதனம் என்று சொன்னால் இந்து மதம் என்று உச்ச நீதிமன்றமே சொல்லியுள்ளது. அதனால் களவாடுவது, கள்ள ரயில் ஏறி வருவது போன்ற திராவிட மாடலோட நாங்கள் போட்டி போட வரவில்லை. முதல்வர் சரியாக பேச வேண்டும். உங்களை விட களவாணி கூட்டம் இல்லை. அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிக்கும். அறிவிக்க தாமதம் ஆனால் என்ன, குடிகெட்டுப் போய்விடுமா? நீட் கொண்டு வந்தது திமுக அமைச்சர் காந்தி செல்வன், அதற்கு எதிராக பேசுகிறார்களா? ஹைட்ரோ கார்பன் எடுக்க கையெழுத்து போட்டவர் மு.க.ஸ்டாலின். ஆனால், கடைசியில் மக்களிடம் நடிப்பார்கள். அதுபோல் அரிட்டாபட்டி திட்டத்திலும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் திமுக அரசு நடந்துகொண்டது. எப்படியும் மத்திய அரசு ஹட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தியது போல டங்ஸ்டன் திட்டத்தை நிறுத்திவிடும். பரந்தூருக்கு சென்ற விஜய், தான் முன்னேற்றத்திற்கு எதிரானவன் அல்ல என்று பேசுகிறார், விமான நிலையம் வேண்டும், ஆனால் பரந்தூரில் வேண்டாம் என்கிறார். விமான நிலையத்தை எங்கு கொண்டு வரவேண்டும் என்று விஜய், விவசாயிகளிடம் பேசி ஒப்பந்தத்தை வாங்கி கொடுத்தால், மத்திய அரசு அங்கு விமான நிலையத்தை அமைக்கும். என்ன நடக்குது தமிழ்நாட்டில், எல்லா அரசியல்வாதிகளும் தற்குறிகள். அவர்களுக்கு பிரச்னைகள் புரிவதில்லை. நாங்கள் தற்குறிகளுக்கு எதிராக எதிர் நீச்சல் போட வேண்டியுள்ளது. " சீமான் பெரியார் குறித்து பேசுவதற்கு பின்னணியில் பாஜக உள்ளதா? என்ற கேள்விக்கு, "சந்தேகமே இல்லாமல் ஈவெராவைப் பற்றி முதன் முதலில் பேசியது ஹெச்.ராஜாதான், 2013-ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் ஈவெரா ஒரு தேச துரோகி என்று பற்றி பேசினேன். ஏனென்றால், 1947 ஆகஸ்ட் 15 துக்க தினம், கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என்று சொல்லிய ஈ.வெ.ரா ஒரு தேச துரோகி. அது மட்டுமல்ல, தமிழ் விரோதி, தமிழ் மீது பற்று உள்ள எவரும் குச்சியால் கூட ஈவெராவை தொட மாட்டான், தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழை படிக்காதீர்கள் தமிழிலை படித்தால் பிச்சைக்காரனாக கூட இருக்க முடியாது, வேலைக்காரியோடு ஆங்கிலத்தில் பேசு, பொண்டாட்டியோடு ஆங்கிலத்தில் பேசு என்று பேசிய ஈவெரா, பட்டியலின மக்களின் முதல் எதிரி. ஹெச்.ராஜா மீனாட்சியம்மன் கோயில் நுழைவு போராட்டம் வைத்தியநாத ஐயர் தலைமையில் நடந்தபோது பட்டியல் இன மக்கள் கோயிலுக்குள் போகக்கூடாது, அப்படி போனால் சூத்திரன் பார்ப்பான் அளவிற்கு உயர மாட்டான் என்று பேசியவர் ஈவெரா. ஏற்றத்தாழ்வில் நம்பிக்கை கொண்டவர் ஈவெரா. இவர்கள் சமூக நீதி பேசலாமா? சாமி சிதம்பரனார் எழுதிய புத்தகத்தில் ஈவெரா விலைமாதர் வீடுகளுக்கு நண்பரோடு போவார் என்று எழுதியுள்ளார். அதனால்தான் இன்று கூட்டு பலாத்காரம் நடக்கிறது. பெண்களை போகப்பொருளாக அடிமையாக வைத்திருந்தவரைத்தான் பெரியார் என்கிறோம். இது சாமி சிதம்பரனார் எழுதியது, வழக்கு போடுவதாக இருந்தால் அவர் மீது போடுங்கள். அதனால் ஈவெராவைப் பற்றி முதலில் பேசியது ஹெச்.ராஜாதான். சீமான் பேசுவதை ஆதரிக்கிறேன். அவர் வீட்டை முற்றுக்கையிட்டது முட்டாள்களின் செயல்..." என்றார். ``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா | periyar - Seeman: H.Raja controversial press meet at Madurai - Vikatan- ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் பொலிஸாரின் தமிழர்களிற்கு எதிரான மனோநிலையில்மாற்றம் ஏற்படவில்லை என்பதைமருதானை சம்பவம் வெளிப்படுத்துகின்றது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
படுகொலை என்கிறார் சிறீதரன்: தற்கொலை என்கிறார் அமைச்சர் மருதானை பொலிஸ் நிலையத்தில் வவுனியா பெண் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. யான சிறீதரன் தெரிவித்தார்.எனினும் இது தற்கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) விசேட கூற்றை முன்வத்த சிறீதரன் எம்.பி. அந்த யுவதி கொலைச்செய்யப்பட்டுள்ளார் என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், மருதானை பொலிஸ் நிலையத்தில் வவுனியாவை சேர்ந்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால், அவர் தற்கொலை செய்யவில்லை . பொலிஸ் நிலையத்திற்குள் அவர் எவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முடியும்? அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஒரு கைதியான அவர் எவ்வாறு மரணத்தை தழுவ முடியும்? இது ஒரு பயங்கரமான செய்தி. எனவே இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜே பால,நீதியைப்பெற்றுத்தர வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நீங்கள் முன்வைத்துள்ள இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினத்துக்குள் (23) ஆராய்ந்து உங்களுக்கு பதில் வழங்குவேன் என்றார். பின்னர் இதற்கு பதில் வழங்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, வவுனியாவை சேர்ந்த குறித்த பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் ஐந்து வழக்குகளில் பிரதிவாதியாக இருந்து பிடியாணையில் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை (22) துரதிஸ்டமான சம்பவம் நடந்துள்ளது. பிரேத பரிசோதனை வியாழக்கிழமை (23) நடைபெற்றது. அதில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது என்றார். Tamilmirror Online || படுகொலை என்கிறார் சிறீதரன்: தற்கொலை என்கிறார் அமைச்சர்- யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி முற்றவெளியில் நாளை ஆரம்பம்!
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி முற்றவெளியில் நாளை முதல் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளது. பிளாஸ்ரிக் அற்ற வலயத்தை உறுதிப்படுத்தும் விதமாக இம்முறை கண்காட்சி முன்னெடுக்கப்படவுள்ளது. பொருளாதார முன்னேற்றத்துக்கான வடக்கின் நுழைவாயில் என்ற தொனிப்பொருளுடன் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 15ஆவது ஆண்டாக இந்த வருடமும் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 45 ஆயிரம் தொடக்கம் 60 ஆயிரம் வரையிலான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 350க்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயம், தொழில்நுட்பம், விருந்தோம்பல், கல்வி, உணவு, நவநாகரிகம் மற்றும் இதர தொழிற்துறைகள் என பல்வேறுபட்ட வர்த்தக நிறுவனங்களின் பொருள்கள் மற்றும் சேவைகள் இம்முறை காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. இம்முறை கூடுதலான நிலப்பரப்பில் கூடுதலான காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களை மகிழ்வூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் முதல் பல்வேறுபட்ட புதிய ஏற்பாடுகள் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. (ப) சர்வதேச வர்த்தகக் கண்காட்சி முற்றவெளியில் நாளை ஆரம்பம்! - யாழில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபத்துக்கு மூன்றாவது முறையாக பெயர் மாற்றம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.