Everything posted by பிழம்பு
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
03 Dec, 2025 | 01:20 PM வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும், முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது. உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப்பணிகளும் சரியானமுறையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன. இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஊடாக இந்த நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. இதன்முதல் கட்டமாக களுவாஞ்சிகுடி பகுதியில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட சுமார் 1000 பேருக்கான நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தலைமையில் களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தில் போரதீவுப்பற்ற பிரதேசசiபின் தவிசாளர் வி.மதிமேனன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிவாரண வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன், மலையகத்திற்கு விஜயம்செய்தபோது பல பரிதாபகரமான சம்பங்கள் தொடர்பில் அறிந்துகொண்டோம்.சில இடத்தில் முழு கிராமமுமே புதையுண்ட நிலை காணப்படுகின்றது. அந்தநேரத்தில் வீடுகளில் இல்லாத சிலர் தப்பி பிழைத்துள்ளனர்.அங்கிருந்த ஒருவர் தனது முழுக்குடும்பமுமே புதையுண்டுள்ளதாகவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு யாரும் வரவில்லை, மூன்று நாட்களாக எப்படியாவது தமதுகுடும்பத்தினரின் உடல்களை மீட்கவேண்டும் என போராடிவருவதாக தெரிவித்தார். அங்கு சிலர் தமது பணத்தினைக்கொடுத்து டிசல்,இயந்திரங்களை எடுத்து தேடும் பணிகளை முன்னெடுத்திருந்தனர். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நிவாரண பணிகளில் அனைவரும் கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அரசாங்கமும் சொல்கின்றது நாங்களும் கூறுகின்றோம் அனைவரும் கூறுகின்றார்கள். ஆனால் இந்த விடயங்களில் ஏனைய கட்சிகளை புறந்தள்ளிவைப்பதில் அரசாங்கம் மும்முரமாக செயற்படுவது வெளிப்படையாக தெரிகின்றது. நேற்றை தினம் கண்டி அரசாங்க அதிபரை சந்தித்தபோது கம்பளை பகுதியில் 19பேர்தான் உயிரிழந்துள்ளதாக சொல்கின்றார்.நாங்கள் சென்ற முதல் இடத்திலேயே 26 உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 50க்கும் மேற்பட்டவர்கள் புதையுண்டுள்ளதாக கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு பல கிராமங்கள் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. அந்த பகுதிகளில் மக்கள் சென்று மீள வாழமுடியாத வகையில் அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளது. நேற்று நாங்கள் சென்ற பதுளை மாவட்டம்,நுவரேலியா மாவட்டங்களில் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது.அங்குள்ள மக்கள் எங்களைக்கண்டதும் கண்ணீருடன் தமது கஸ்டங்களை கூறினார்கள். அப்பகுதியில் உடனடி நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்படாதது மக்கள் மூலம் அறியமுடிந்தது.இதனை நாங்கள் கூறைகூறவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை.அரசாங்கத்தினை குறைகூறுவதற்காக இதனை சொல்லவில்லை. மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் சென்றடையவேண்டும்,மக்களின் உயிரிழப்புகள் எத்தனையென்பது தெளிவாக தெரியவேண்டும்.உண்மையினை முழுப்புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கமுடியாது. நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கின்றபோது முகத்தினை இறுக்கமாக வைத்துக்கொண்டு பத்து பதினைந்துபேர்தான் உயிரிழந்துள்ளார்கள் என அரசாங்கம் பதில் சொன்னால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தவேளையில் அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது. உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப்பணிகளும் சரியானமுறையில் நடைபெறும். விசேடமாக ஊடகங்களை இதனை விமர்சிப்பதை பார்க்கமிகவும் அருவறுப்பாக இருக்கின்றது. செய்தியை பிரசுரிப்பதுதான் அவர்களின் வேலையாக இருக்கவேண்டுமே தவிர செய்திகளின் பின்பக்கமான கிரிக்கட் வர்ணணை போன்று தமது விமர்சனங்களை முன்வைப்பது அருவறுக்கத்தக்க செயலாகும். இந்த பேரிடர் எவ்வளவு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியாமல் அவர்கள் அரசியல் செய்துகொண்டிருப்பதை காணமுடிகின்றது. இந்தநேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்துதான் மக்களை காப்பாற்றவேண்டும்.இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என்று கூறுகின்றோம். சுனாமி அனர்த்தம் வந்தவேளையில் அன்றைய அரசாங்கமே வடகிழக்கில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து கட்டமைப்பினை ஏற்படுத்தியது. அந்த பிரதேசங்களிலே ஆளுகை செய்தவர்கள் அவர்கள். அந்தவேளையில் அதனை தடுப்பதற்கு நீதிமன்றபடியேறிய ஜேவிபியினருடன் இணைந்து வேலைசெய்வதற்கு நாங்கள் தாயராகயிருக்கின்றோம் என்றால் வேறு யாருடன் நாங்கள் சேர்ந்து செயற்படமாட்டோம். அனைவருடமும் இணைந்து நாங்கள் செயற்படுவோம் என்றார். முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன் | Virakesari.lk
-
மன்னாரில் இறைச்சி விற்பனைக்கு தற்காலிகத் தடை
03 Dec, 2025 | 03:14 PM மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (03) முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த ஆடு, மாடுகளை இறைச்சியாக்கி மன்னார் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மிருக வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாகவும் இன்று புதன் கிழமை முதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளத்தினால் நோய்வாய்ப்பட்ட மற்றும் உயிரிழந்த ஆடு மற்றும் மாடு இறைச்சிக்காக வெட்டப் பட்டுள்மை தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார். உத்தரவை மீறி ஆடு மற்றும் மாடு இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் செயல்படு மாறும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார். மன்னாரில் இறைச்சி விற்பனைக்கு தற்காலிகத் தடை | Virakesari.lk
-
டித்வா புயல் பேரழிவு – இலங்கைக்கு வருகிறது 47 பேர் கொண்ட பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்பு மீட்பு குழு
03 Dec, 2025 | 03:43 PM இலங்கையில் டித்வா புயலால் ஏற்பட்ட மாபெரும் அழிவைத் தொடர்ந்து, இலங்கை அரசின் அவசர உதவி கோரிக்கைக்கு இணங்க பாகிஸ்தான் அரசு மனிதாபிமான நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் முகம்மது ஷஹ்பாஸ் ஷரீப்பின் சிறப்பு உத்தரவின் பேரில், இன்று அதிகாலை பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்பு தேடல் மற்றும் மீட்பு குழு இலங்கைக்காக அனுப்பப்பட்டது. பாகிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் மூலமாக, 47 பேர் கொண்ட சிறப்பு அணி மற்றும் 6.5 தொன் அவசியமான மீட்பு உபகரணங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில், கூட்டாட்சி அமைச்சர் டாக்டர் தரிக் பசல் சௌத்ரி, பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் லெப்டினெண்ட் ஜெனரல் இனாம் ஹைதர் மாலிக், இலங்கை உயர்ஸ்தானிகர் அட்மிரல் ஃப்ரெட் செனவிரத்ன ஆகியோர் பங்கேற்றனர். இதன்போது பாகிஸ்தான் அமைச்சர் டாக்டர் தரிக் பசல் சௌத்ரி கூறியதாவது: “பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும்,” என்றார். இலங்கை உயர்ஸ்தானிகர் ஃப்ரெட் செனவிரத்ன, பாகிஸ்தான் அரசு மற்றும் மக்களுக்கு அவர்களின் தகுந்த நேர உதவிக்காக நன்றி தெரிவித்தார். இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் ஷஹ்பாஸ், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார். இதேவேளை, பாகிஸ்தானில் இருந்து 200 தொன் நிவாரணப் பொருட்கள் கடல் மார்க்கமாக அனுப்பப்பட்டுள்ளது. பிரதமரின் உத்தரவின் பேரில்,தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று 200 தொன் நிவாரணப் பொருட்களை கடல் மார்க்கமாக கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளது. கூடுதலாக, கொழும்பு – லாகூர் விமான சேவையின் மூலம் கூடுதல் நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ள நிவாரணப்பொருட்களில், குடும்பங்களுக்கான தற்காலிக கூடாரங்கள், போர்வைகள், கம்பளிகள், உயிர்காப்பு ஜாக்கெட்கள், காற்றேற்றக் கூடிய படகுகள், நீர் அகற்றும் பம்புகள், விளக்குகள், தரைப்பாய்கள், நுளம்பு வலைகள், குழந்தைகளுக்கான பால் மாக்கள், உடனடியாக உணவாக உட்கொள்ளக்கூடிய பொதியுணவுகள், முக்கிய மருந்துகள் அடங்குகின்றன. மேலும், பாகிஸ்தான் கடற்படை கப்பல்களும் ஹெலிகாப்டர்களும் ஏற்கனவே இலங்கையில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளன. இலங்கை ஜனாதிபதியின் சிறப்பு கோரிக்கையின் பேரில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அணுகுமுறை மற்றும் பாலங்களின் தற்காலிக மாற்றீட்டு பணிகளுக்காக பாகிஸ்தான் இராணுவம் தற்காலிக பாலங்களையும் அனுப்பவுள்ளது. “இலங்கையின் சகோதர மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்தும் வழங்குவோம்; மனிதாபிமான ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கான எங்கள் அர்ப்பணிப்பு எப்போதும் உறுதியாக இருக்கும், என பாகிஸ்தான் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டித்வா புயல் பேரழிவு – இலங்கைக்கு வருகிறது 47 பேர் கொண்ட பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்பு மீட்பு குழு | Virakesari.lk
-
எதிர்வரும் நாட்கள் மழைக்கான சாத்தியம் : விழிப்பூட்டும் முன்னறிவிப்பு !
03 Dec, 2025 | 05:00 PM 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி மணிக்கு இலங்கை வானிலை தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா முக்கிய விழிப்பூட்டும் முன்னறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நாளை 04.12.2025 அன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு , மத்திய மாகாணங்களில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்வரும் 05.12.2025 அன்று கிழக்கு மாகாணத்திற்கு குறிப்பாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. அன்றைய தினம்( 05.12.2025) வடக்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 06 மற்றும் 07 ம் திகதிகளில் நாடு முழுவதும் பல இடங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மன்னார், அனுராதபுரம், புத்தளம், சிலாபம், கண்டி, நுவரெலியா, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, களுத்துறை, காலி,பதுளை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 08.12.2025 அன்று வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் பதுளை மாவட்டத்திற்கும் சற்று கனமழை கிடைக்கும் என்பதோடு வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும். எதிர்வரும் 09.12.2025 திகதி நாடு முழுவதும் மிதமானது முதல் கனமான மழை கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. 10.12.2025 அன்று நாடு முழுவதும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. இது வடகீழ்ப் பருவக்காற்று காலம் என்பதனால் அவ்வப்பொழுது இலங்கையில் பல இடங்களிலும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புக் காணப்படுகின்றது. ஆயினும் ஒரு தீவிரமான வானிலை நிகழ்வுக்குரிய எந்த வாய்ப்பும் அடுத்து வரும் 07 நாட்களுக்கு இல்லை என்பதனால் மக்கள் மழை கிடைத்தாலும் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆனால் ஏற்கெனவே புயலினால் மிகக்கனமழை கிடைத்து, ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து, குளங்கள் வான் பாய்ந்து மண் ஈரலிப்பாக உள்ள நுவரெலியா, கண்டி, பதுளை, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு சற்று கனமான மழை கிடைத்தாலே (குறைந்தது 30-40 மி.மீ. கிடைத்தால் கூட) அது நிலச்சரிவைத் தூண்டும் என்பதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக மிக அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக எதிர்வரும் 6,7,8,9 ம் திகதிகளில் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ணமாகாண மக்கள் அவதானமாக இருப்பது அவசியம். மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் அனர்த்த மீட்பு பணிகளில் ஈடுபடுவோரும் இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது. சாத்தியமான அனர்த்தம் ஒன்றை கருத்தில் கொண்டு நாம் தயாராக இருந்தால், அந்த அனர்த்தம் நிகழாவிட்டாலும் எமக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தயராக இல்லாது விட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாட்கள் மழைக்கான சாத்தியம் : விழிப்பூட்டும் முன்னறிவிப்பு ! | Virakesari.lk
-
இலங்கைக்கு 890 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான அவசர உதவியை வழங்கும் ஐக்கிய இராச்சியம்
03 Dec, 2025 | 04:38 PM இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐக்கிய இராச்சியம் 890,000 அமெரிக்க டொலர்கள் (£675,000 பவுண்ட்கள் ) மதிப்பிலான அவசர மனிதாபிமான நிவாரணத்தை வழங்கியுள்ளது. இந்த உதவிகளை, செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. முகவரமைப்புக்கள், உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளுடன் ஏற்கனவே செயற்பட்டுவரும் மனிதாபிமான அமைப்புகளின் பங்காளர்கள் மூலம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக கூடாரம், குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் வாழ்க்கையை பாதுகாக்க அவசியமான உதவிகள் இதன் மூலம் வழங்கப்படவுள்ளன. வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடனான சந்திப்பின் போது, இலங்கைக்கான உதவியை மேலும் வலுப்படுத்துவதில் ஐக்கிய இராச்சியத்தின் அர்ப்பணிப்பை, இலங்கைக்கான இடைக்கால பிரித்தானிய உயர்ஸ்தானிகராக உள்ள தெரசா ஓ’மாஹோனி உறுதியளித்தார். இதேவேளை, இங்கிலாந்து மன்னர், டித்வா புயல் பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், அவசர மீட்பு பணியாளர்களின் தைரியத்திற்கும், உதவி வழங்கும் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். புயல் காரணமாக வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை இழந்த மக்களுக்கு உதவுவது என்பது பிரிட்டன் – இலங்கை நட்புறவின் நீண்டகால இணைப்பினை பிரதிபலிப்பதாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளதுடன், இலங்கையுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம் எனவும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு 890 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான அவசர உதவியை வழங்கும் ஐக்கிய இராச்சியம் | Virakesari.lk
-
போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?
03 Dec, 2025 | 04:55 PM இலங்கைக்கு காலாவதியான பொருட்கள் வழங்கியதாக பரவும் செய்தியை பாகிஸ்தான் கடற்படை மறுத்துள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் காலாவதியான உணவுப்பொருட்கள் இருந்தன என சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பொய்யானது என பாகிஸ்தான் கடற்படை அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு சமூக ஊடகங்களி்ல் பரப்பிய பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பாகிஸ்தான் கடற்படை, பேரிடர் நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்டிருந்த பைகள், உணவுப் பொருட்களுக்கானவை அல்ல, அவை ஏற்கனவே பாகிஸ்தான் கடற்படை பயிற்சி கப்பலில் இருந்த பழைய பைகள், இலங்கைக்கு அவசரமாக உதவி அனுப்ப வேண்டியிருந்ததால், அந்த பைகள் விரைவாக கொண்டுசெல்லும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. பைகளுக்குள் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் புதியதும், காலாவதி நிறைவடையாதவையும் ஆகும். “இலங்கை மக்களுக்கு உதவுவதில் நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். பொய்யான தகவல்கள் மற்றும் பிரசாரங்களுக்கு எவரும் உள்ளாக வேண்டாம்.” டித்வா புயல் காரணமாக இலங்கையில் மிகப்பெரிய நிவாரண தேவை நிலவுகின்ற நிலையில், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களால் மீட்பு முயற்சியை திசைதிருப்பக் கூடாது. போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ? | Virakesari.lk
-
யாழில் மீண்டும் எலிக்காய்ச்சல்!
யாழில் மீண்டும் எலிக்காய்ச்சல்! பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு மருத்துவ கலாநிதி கேதீஸ்வரன் விளக்கம் அண்மைய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் அதிகரித்து வருகின்றது.இதனால். ஏற்கனவே இருவர் உயிரிழந்துள்ள நிலையில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் இவ்வாறு யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:- எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வாரம் இருவர் உயிரிழந்தனர், கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரியின் பிரிவிலேயே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. கடந்த வருடமும் நவம்பர், டிசெம்பர் மாதங்களில் எலிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவி 8 பேர் உயிரிழந்தனர். எனவே, இந்த நோய் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருப்பது மிகவும் அவசியமாகும். எலிக்காய்ச்சல் ஒருவகை பக்ரீறியாவினால் ஏற்படுகின்றது. எலிகள் போன்ற விலங்குகளின் சிறுநீர் மூலம் வெள்ள நீர், வயல்நீர், சேற்று நிலங்களில் கிருமிகள் சென்றடைகின்றன. மனிதர்கள் வெள்ளநீரில்,வயல் நிலங்களில். சேற்று நிலங்களில் வேலை செய்யும் போது அவர்களின் தோலில் உள்ள புண்கள் அல்லது காயங்கள் மூலம் கிருமிகள் மனித உடலுக்குள் செல்கின்றன. கடுமையான காய்ச்சல், கடுமையான தசைவலி, கடுமையான தலையிடி, இருமல், கண்கள் செந்நிறமாதல், வாந்தி, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்றன இதன் அறிகுறிகளாக உள்ளன. இந்த நோய் ஏற்பட்டால், சிறுநீரகம், சுவாசத்தொகுதி, இதயம், ஈரல், மூளை போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு மரணம் சம்பவிக்கும். இந்த நோயானது பெரும்பாலும் வயல்கள், சேற்று நிலங்களில் பயிர்செய்யும் விவசாயிகள் மத்தியிலும், கடல்நீரேரிகளில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்கள் மத்தியிலும், வெள்ள நீருடன் தொடுகையில் ஈடுபடுபவர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகின்றது. இந்நோயிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள வயல், சேற்று நிலங்களில் வேலை -செய்யும் விவசாயிகள் கடல்நீரேரிகளில் மீன்பிடிப்பவர்கள் உடலில் காயங்கள் அல்லது புண்கள் இருப்பின் அவற்றை நீர் உட்புகாத வகையில் கட்டுப்போடுதல் வேண்டும். வெள்ளநீரில் அல்லது அசுத்தமான நீரில் பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் கால், கைகளுக்கு பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும். வயல்களில், சேற்றுநிலங்களில் வேலை செய்யும் விவசாயிகளும், கடல்நீரேரி மீன்பிடித்தொழிலாளர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகளும் இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை உங்களது பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவக அதிகாரி பணிமனையில் அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் பெற்றுக் கொள்ளலாம். வெள்ளநீருடன் தொடுகை ஏற்படுத்திக் கொள்பவர்களும் மேற்படி தடுப்பு மருந்தைப்பெற்றுக்கொள்ளலாம் என்றுள்ளது. யாழில் மீண்டும் எலிக்காய்ச்சல்!
-
தொடரும் சீரற்ற காலநிலையால் இறந்து ஒதுங்கும் கால்நடைகள்!
யாழ்ப்பாணம் 5 மணி நேரம் முன் தொடரும் சீரற்ற காலநிலையால் இறந்து ஒதுங்கும் கால்நடைகள்! சீரற்ற காலநிலை காரணமாக தேங்கியிருந்த வெள்ளத்தில் இருந்து பெருமளவு கால்நடைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்படுகின்றன. வடமராட்சி கிழக்கு புன்னையடிப் பகுதியில் பெருமளவான கால்நடைகள் வீதிகளில் இறந்து கிடப்பதை அவதானிக்க முடிகின்றது. இறந்து கிடக்கும் கால்நடைகளை அகற்றும் பணிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. தொடரும் சீரற்ற காலநிலையால் இறந்து ஒதுங்கும் கால்நடைகள்!
-
சீரற்ற வானிலையால் பல இலட்சம் கோழிகள் உயிரிழப்பு!
02 Dec, 2025 | 12:34 PM சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 15 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தெதுறு ஓயாவை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் மாத்திரம் சுமார் 10 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளன. இதன்காரணமாக, முட்டை உற்பத்தி நூறில் நாற்பது வீதம் குறைவடைந்துள்ளதாகவும் முட்டையின் விலை உயர்ந்துள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் பல இலட்சம் கோழிகள் உயிரிழப்பு! | Virakesari.lk
-
மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க கூட்டு நடவடிக்கை!
02 Dec, 2025 | 03:51 PM மன்னார், நானாட்டான், முருங்கன், விதயானகுளம் மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தால் நவம்பர் 29 ஆம் திகதி முதல் டிசம்பர் 01 ஆம் திகதி வரை கூட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த கூட்டு மீட்பு நடவடிக்கையின் மூலம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 58 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க கூட்டு நடவடிக்கை! | Virakesari.lk
-
எச்சரிக்கை ! களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயரும் அபாயம்
களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக குறைவு! 02 Dec, 2025 | 04:32 PM களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களனி கங்கையின் நீர்மட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (02) பிற்பகல் 02.00 மணியளவில் 6.9 அடி ஆக இருந்த நிலையில் பிற்பகல் 03.00 மணிக்கு பின்னர் 6.75 ஆக குறைவடைந்துள்ளது. நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்த நிலையில் களனி கங்கையை அண்மித்த பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக குறைவு! | Virakesari.lk
-
இளவயதினருக்கே எயிட்ஸ் நோய்! - வைத்தியர் சந்திரகுமார்
02 Dec, 2025 | 06:18 PM வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ்நோயாளிகளாகஇனம்காணப்பட்டுள்ளதுடன், இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியாமாவட்ட பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புவேலைத்திட்டத்தின் பொறுப்புவைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார். எயிட்ஸ் நோய் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (2) ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..... உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம்1 ம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கபட்டு வருகின்றது. இம்முறை சவால்களை சமாளித்து புதிய வழிகளில் போராடுதல் எனும் தொணிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபடவிருக்கின்றது. இலங்கையில் இதுவரை 7168 பேர் எயிட்ஸ் நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். ஆண்கள்5544 பெண்கள் 1603,இடைநிலை பால்நிலையை சேர்ந்த 21பேர் இதனுள் அடங்கும். இதுவரை நாட்டில் 1629 இந்நோயால் இறந்துள்ளனர். எந்தவித தொற்று அறிகுறிகளும் இன்றி நோய்தொற்றுடன் 5700 பேர் நடமாடி வருகின்றார்கள். வவுனியாமாவட்டத்தில் இதுவரை43 எயிட்ஸ்நோயாளிகள் இனம்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 34 பேர் எம்மிடம் மருந்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். அவர்களில் 21பேர் ஆண்கள். 13 பேர் பெண்கள் 2கர்பிணி தாய்மாரும் உள்ளனர். அவர்களிடம் இருந்து பிள்ளைக்கு தொற்றாத வகையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. 13பேர் இதுவரை மரணத்தை தளுவியுள்ளனர். ஏனைய நோயாளர்களிற்கான சிகிச்சைகள் எம்மால் வழங்கபட்டுவருகிறது. அவர்களிற்கான மருந்துகளை நாம் வழங்கிவருகின்றோம். அந்த மருந்துகளின் மூலம் ஒருவரது மரணத்தினை தாமதப்படுத்தமுடியும். எயிட்ஸ் நோய்பரவுவதற்கான மூன்று காரணங்களில் எச்ஐவி தொற்றுள்ள ஒருவருடன் பாதுகாப்பற்ற வகையில் பாலியல் ரீதியாகதொடர்புகொள்ளல். நோய்தொற்றுள்ள ஒருவரின்குருதியை இன்னுமொருவருக்குசெலுத்துதல்,தொற்றுள்ள தாய்ஒருவருக்கு பிறக்கின்ற பிள்ளை ஆகியோருக்கு இந்த நோய்பரவுகிறது. இலங்கையில் தற்பொது குருதி மாற்றங்களின்போது உரிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் கர்பிணி பெண்களிற்கு அவர்களது இணக்கத்துடன் எச்.ஜ.வி, பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது. நாட்டில் 15 வயது தொடக்கம்25 வயதிற்குட்பட்டவர்களே தொற்றாளர்களாக இருக்கும் நிலை உள்ளது. நோய்தொற்று ஏற்பட்டவர் சாதாரண ஒரு மனிதரை போலவே இருப்பர். அவரது முகத்தை வைத்து நோயை கண்டுபிடிக்க இயலாது. குருதியினை பரிசோதனை செய்வதன் மூலம் மாத்திரமே அதனை கண்டுபிடிக்கமுடியும்.எனவே ஒரு தரமாவது பரிசோதனையை மேற்கொண்டால்குறித்த நோய் மற்றவர்களிற்கு தொற்றாமல் தடுக்கலாம். வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாகவந்து பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றார். இளவயதினருக்கே எயிட்ஸ் நோய்! - வைத்தியர் சந்திரகுமார் | Virakesari.lk
-
நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் மண் மற்றும் கற்பாறை சரிந்ததில் 65குடும்பங்களை சேர்ந்த 250பேர் பாதிப்பு; 08 பேர் சடலங்கலாக மீட்பு மேலும் 05 பேர் மாயம்
நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் மண் மற்றும் கற்பாறை சரிந்ததில் 65குடும்பங்களை சேர்ந்த 250பேர் பாதிப்பு; 08 பேர் சடலங்கலாக மீட்பு மேலும் 05 பேர் மாயம் Published By: Vishnu 02 Dec, 2025 | 06:41 PM குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 27ம் திகதி மண்சரிவு மற்றும் பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் குறித்த தோட்டத்தை சேர்ந்த 65குடும்பங்களை சேர்ந்த 250பர் பாதிக்கபட்டு தற்காலிகமாக உடஹேன்தென்ன கிறேஹெட் இல 01 தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர் லயன் குடியிருப்பை சேர்ந்த 13வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளது கற்பறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த பகுதியில் இருந்து இதுவரையிலும் 08பேர் சடலமாக மீற்கப்பட்தாகவும் இன்றைய தினமும் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு மேலும் 05 பேர் கானாமல் போயுள்ளதாகவும் இவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கபாபட்டு வருவதாக குருந்துவத்த பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட ஏழு பேரின் சடலங்களும் மண்சரிவு ஏற்பட்ட பகுதியின் அருகாமையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது .இந்த விபத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் உடமைகள் அனைத்தும் மண்ணில் புதையுண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம் மண்ணில் புதையுண்ட சடலங்களை மீட்பதற்கு இரானுவத்தினரோ பொலிஸாரோ குறித்த பகுதிக்கு வரவில்லை எனவும் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்ட மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கபாபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் மண் மற்றும் கற்பாறை சரிந்ததில் 65குடும்பங்களை சேர்ந்த 250பேர் பாதிப்பு; 08 பேர் சடலங்கலாக மீட்பு மேலும் 05 பேர் மாயம் | Virakesari.lk
-
யாழ்ப்பாணப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது – மீட்பு பணிக்காக விரைந்த பெல் 212 உலங்குவானூர்தி
கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த யாழ். இளைஞனின் சடலம் மீட்பு 01 Dec, 2025 | 02:21 PM யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் வழியில் பஸ் வண்டியில் சிக்கி பின்னர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட பத்மநிகேதனின் உடல் திங்கட்கிழமை (01) மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்தவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞனே காணாமல் போயிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து அநுராதபுரம் புத்தளம் வீதியில் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது. அதன் போது பேருந்தினுள் சுமார் 60 பேர் வரையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பேருந்தில் சிக்கியவர்களை அருகில் இருந்த வீடொன்றின் கூரை மீது ஏற்றி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு , பின்னர் கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் படகுகளில் ஏற்றப்பட்டு இரு நாட்கள் கடுமையான போராட்டத்தின் மத்தியில் அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த அனுதாபங்கள். கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த யாழ். இளைஞனின் சடலம் மீட்பு | Virakesari.lk
-
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
01 Dec, 2025 | 04:50 PM (எம்.மனோசித்ரா) தித்வா சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட அதிதீவிர மோசமான நிலைமை குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தத் தீர்மானத்தின்படி, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கொழும்பில் உள்ள பிளவர் வீதி அரசியல் அலுவலகத்தில் புதன்கிழமை (03) கூடவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இது தொடர்பில் குறிப்பிடுகையில், ஒரு கடுமையான இயற்கை அனர்த்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். 2003 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவின் போதும், வெள்ளத்திற்குப் பிந்தைய காலப்பகுதியிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமளிக்கவுள்ளார். இந்தக் கடுமையான பேரழிவிற்குப் பிறகு, பாராளுமன்றத்திலும் வெளியேயும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒரே இடத்தில் அழைப்பது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும் என்றாகும். அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு | Virakesari.lk
-
பேரிடர் மரணங்கள் 193 ஆக உயர்வு; 228 பேர் மாயம்
நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழப்பு 01 Dec, 2025 | 03:53 PM நுவரெலியா மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (01) வரை 75 பேர் உயிரிழந்துள்ளதோடு, 62 பேர் காணாமல் போயுள்ளனர். 2,691 குடும்பங்கரளச் சேர்ந்த 12,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 1,914 குடும்பங்களைச் சேர்ந்த 8,654 பேர் 61 இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த இடைத்தங்கள் முகாம்கள் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குரன்கெத்த, அம்பேகமுவ, தலவாக்கலை, நோர்வுட், நில்தண்டாஹின்ன ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான மூன்று நாட்களுக்கான சமைத்த உணவு வழங்கப்படும். ஏனைய நாட்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு முகாம்களில் சமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். அதேநேரம் நுவரெலியா - கண்டி வீதி, நுவரெலியா - இராகலை வீதி, நுவரெலியா - வெலிமடை வீதி, தலவாக்கலை - பூண்டுலோயா வீதி, லிந்துலை - அக்கரபத்தனை வீதி ஆகிய வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்திற்காக பயன்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகின்றது. இதற்கு பதிலாக மாற்று பாதைகளையே பாவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் மாற்று பாதைகளும் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்ட நிலையிலேயே உள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல் நடைபெற்று வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் விவசாய நிலங்களும் முற்றாக பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழப்பு | Virakesari.lk
-
மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள் ; புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவிப்பதென்ன?
01 Dec, 2025 | 04:44 PM மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். 01.12.2025 திங்கட் கிழமை நண்பகல் 12.45 மணி வரையான நிலைவரப்படி, டிட்வா புயலின் அமுக்க நிறைவுச் செயற்பாட்டின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வட மாகாணத்தின் மேற்கு பகுதிகள் குறிப்பாக மன்னார் தீவு, மாந்தை மேற்கின் சில பகுதிகள், நானாட்டானின் சில பகுதிகள், கிளிநொச்சியின் மேற்கு பகுதிகள் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. ஆனாலும் இன்று மாலைக்கு பின்னர் படிப்படியாக மழை குறைந்துவிடும். ஆகவே இது தொடர்பாக பதட்டமடைய தேவையில்லை. மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை. ஆனாலும் எதிர்வரும் ஜனவரி இறுதிப்பகுதி வரை வடகீழ்ப் பருவக்காற்று காலம் என்பதனால் அது வரைக்கும் இடையிடையே மிதமான, கனமான மற்றும் மிகக்கனமழைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்பதனை நினைவில் கொள்க. இடைப்பட்ட காலத்தில் ஏதாவது தீவிர வானிலை நிகழ்வுகள் இடம்பெறும் வாய்ப்பிருந்தால் உரிய காலத்தில் உங்களுக்கு தெரிவிக்கப்படும். அது வரை தேவையற்ற வதந்திகளைப் புறந்தள்ளுங்கள். டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து சென்னைக்கு கிழக்காக 60 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் சென்னைக்கு அண்மையாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிட்வா புயல் இன்னும் கரையைக் கடக்கவில்லை என்பதனால் வடக்கு மாகாணக் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டார். மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள் ; புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவிப்பதென்ன? | Virakesari.lk
-
சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள்; கடுமையான சட்ட நடவடிக்கை எச்சரிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
அனர்த்த நிலைமையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், முறையற்ற வகையில் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். பொதுமக்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புவது தொடர்பாக தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், கணனி புலனாய்வுப் பிரிவு, சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார். அனர்த்தத்திற்குப் பின்னரான காலப் பகுதியில் நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான சேவைகள் மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்நேரத்தில், சில நபர்கள் சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பரப்பும் போக்கு இருப்பதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார். பொதுமக்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புதல் மற்றும் வெளியிடுதல் மிகவும் தவறான செயல் என்றும், பொய்யான தகவல்களைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். எனவே, இந்த அனர்த்த காலத்தில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த நேரத்தில், சமூக ஊடகங்களில் முறையற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று இலங்கை பொலிஸ் சார்பாக தான், பொதுமக்களை கௌரவமாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். அனர்த்த நிவாரண முகாம்களிலும், பாதித்த பகுதிகளிலும் சில குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் பாலியல் வல்லுறவு, அத்துமீறல், திருட்டு மற்றும் கொள்ளை ஆகியவற்றில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்த அவர், அனர்த்தத்தினால் பாதித்த மக்களின் நலனுக்காக அரசாங்கம் செயற்படுத்தும் கூட்டு நடவடிக்கைக்கு அனைவரின் கௌரவமான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்காக பல்வேறு முக்கியமான மற்றும் துரித நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் எடுத்துள்ளது என்றும், அதன்போது சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், சுற்றுலா பொலிஸ் பிரிவு பணிப்பாளரின் 0718591894, 0112421070 அல்லது 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது விமான நிலையத்தின் (சுற்றுலா) பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718596057 என்ற இலக்கத்திற்கோ,விமான நிலையத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718591640 என்ற இலக்கத்திற்கோ தெரிவிக்கலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேலும், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணி நேர விசேட நடவடிக்கை பிரிவு நிறுவப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் 0718595884, 0718595883, 0718595882, 0718595881, 0718595880 இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான அல்லது ஏதேனும் பிரச்சினைகள் பற்றி முறைப்பாடு செய்ய முடியும். சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள்; கடுமையான சட்ட நடவடிக்கை எச்சரிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் | Virakesari.lk
-
சீரற்ற வானிலை ; எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம்!
29 Nov, 2025 | 01:47 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, சுத்தமான நீரை பயன்படுத்துமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வித்துள்ளது. சீரற்ற வானிலை ; எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம்! | Virakesari.lk
-
அட்டன் மண்சரிவில் சிக்கிய 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு!
29 Nov, 2025 | 02:51 PM நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் விளைவாக, விமலசுரேந்திர அணைக்கட்டு அருகே உள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை லக்சபான இராணுவ முகாமின் மீட்புக் குழுவினர் மீட்டு, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று, நோர்டன்பிரிட்ஜ்–கினிகத்தேன பிரதான வீதியில் ஏற்பட்ட மண்மேடு சரிவின் காரணமாக சோதனைச் சாவடி முழுமையாக மண்ணுக்குள் புதைந்துள்ளது. அப்போது 19வது இலங்கை தேசிய இராணுவப்படையைச் சேர்ந்த சார்ஜென்ட் மேஜர் ஒருவரை உள்ளடக்கிய ஐந்து வீரர்கள் சோதனை சாவடி நிலையத்தில் வழக்கம் போல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சரிவு ஏற்பட்டதை முதலில் கவனித்த நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் உடனடியாக லக்சபான இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியைத் தொடர்புகொண்டனர். தகவல் கிடைத்ததையடுத்து, கட்டளை அதிகாரி உடனடியாக மீட்புக் குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்றார். பின்னர், நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து மண்க்குள் சிக்கியிருந்த வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட ஐந்து பேரும் உடனடியாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மண்சரிவு காரணமாக நோர்டன்பிரிட்ஜ்–கினிகத்தேன பிரதான வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதாகவும், வீதியில் உள்ள மண்மேட்டை அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அட்டன் மண்சரிவில் சிக்கிய 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு! | Virakesari.lk
-
யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி
29 Nov, 2025 | 02:57 PM யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிகொண்டது. அப் பேருந்தில் பயணம் செய்த 69 பேர் அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு இடையிலான கலாஓயா பகுதியில் பாதுகாப்பாக கூரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நொச்சிகாமம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இடர்மிகுந்த சூழலில் புத்தளம் மற்றும் அனுராதபுர மாவட்ட செயலாளர்கள் , விமானப்படை, கடற்படை இராணுவம், பொலிஸார் , அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் மீட்பு பணியாளர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு பயணிகளை பாதுகாப்பாக மீட்டமைக்கு யாழ்ப்பாண மாவட்ட மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகல மாவட்ட அரச அதிபர்களுடனான ஜனாதிபதியின் zoom கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தினுடைய வெள்ள நிலவரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்படி விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் ஜனாதிபதியின் செயலாளர், அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. . பல்வேறு நெருக்கடிகள், இடர்பாடுகளுக்கு மத்தியிலும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் என்ற வகையில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி | Virakesari.lk
-
குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி முதியோர் இல்லத்திலிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்
குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி ; 14 பேர் பாதுகாப்பாக மீட்பு! 29 Nov, 2025 | 05:24 PM குருநாகல் பன்னல நாலவலான பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய முதியோர் இல்லத்திலிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி ; 14 பேர் பாதுகாப்பாக மீட்பு! | Virakesari.lk
-
வழமைக்கு திரும்பும் வவுனியா
29 Nov, 2025 | 05:33 PM கடும் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகி இருந்த வவுனியா நகரம் தற்போது மெல்ல மெல்ல வழமையான நிலைமைக்கு திரும்பி வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியான மழையின் காரணமாக பல்வேறு பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் மக்கள் பலர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான சமைத்த உணவுகளை தன்னார்வ செயற்பாட்டாளர்கள் வழங்கி வந்ததோடு அரச திணைக்களங்கள் சில வழங்கி இருந்தன. இதேவேளை வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு பேரிடர் ஏற்பட்ட நிலையில் வவுனியா மாவட்டத்தில் இரு உயிரிழப்புக்கள் இடம்பெற்றதோடு பல்வேறு அசெளகரியத்திற்கு மக்கள் முகம் கொடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. நீரில் அகப்பட்டு மரணங்கள் வவுனியா சாந்தசோலை பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொது சுகாதார பரிசோதகரான 51 வயதான குமார செனவிரத்தின என்ற மட்டக்களப்பை சேர்ந்த ஆணும் 38 வயதுடைய 306 ஏ காத்தான்குடி என்ற முகவரியை சேர்ந்த முகமது முஸாபின் சப்ரினா எனவும் தெரியவந்துள்ளது. வெள்ளத்தில் அகப்பட்ட மக்கள் இதேவேளை வவுனியாவில் கந்தசாமி நகர், பழைய மெனிபார்ம், கோதண்டர்நொச்சிக்குளம், பூம்புகார் ஆகிய இடங்களில் வெள்ளத்தில் அகப்பட்ட பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற முடியாத நிலையில் காணப்பட்ட நிலையில் அவர்களை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது குளங்களின் நிலை இந் நிலையகல் பாவற்குளத்தின் நான்கு வாண் கதவுகளும் முழுமையாக பத்து அடிவரை திறக்கப்பட்டுள்ளதுடன் பேராறு அணைக்கட்டின் மூன்று வான்கதவுகளும் ஐந்து மீட்டர் வரை திறக்கப்பட்டுள்ளது. இக் குளங்களுக்கு கீழுள்ள பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இதேவேளை பல குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் இருப்பதன் காரணமாக குளக்கட்டுகளை வெட்டி நீரை வெளியேற்றும் செயற்பாட்டில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து இந்நிலையில் வவுனியாவில் இருந்து மக்கள் தென்பகுதி நோக்கியோ யாழ்ப்பாணம் நோக்கியோ செல்ல முடியாத வகையில் நொச்சிமோட்டை பாலம் மற்றும் சாந்தசோலை பகுதியில் பல அடி உயரத்திற்கு நீர் ஏ9 வீதியை ஊடறுத்து சென்றதுடன் கல்குண்ணாமடு மற்றும் ஈரப்பெரியகுளம் போன்ற பகுதிகளிலும் ஏ9 வீதி ஊடறுத்து பல அடி உயரத்துக்கு நீர் சென்ற காரணத்தால் குறித்த பகுதிகளின் ஊடாக மக்கள் போக்குவரத்து செய்வதற்கு பொலிஸார் தடை விதித்திருந்த நிலையில் தற்போது குறித்த பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தோடி இருப்பதன் காரணமாக பழமையான போக்குவரத்து நடைமுறைகள் இடம் பெற்று வருகின்றது. தொலைத்தொடர்புகள் இந்நிலையில் கையடக்க தொலைபேசி வலையமைப்புக்கள் பல இடங்களில் செயழிலந்துள்ளமையினால் மக்களை தொடர்பு கொள்வதிலும் பெரும் சிரமங்களுக்கு தொடர்ந்தும் முகம் கொடுத்து வருகின்றனர். வழமைக்கு திரும்பும் வவுனியா | Virakesari.lk
-
சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது
சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது - வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம். 9 Nov, 2025 | 05:31 PM சூறாவளி ஏற்படும் நிலைமை நாட்டை விட்டும் நகர்ந்து செல்கின்ற நிலையில் நேரடி பாதிப்பு நீங்கியுள்ள போதிலும், மறைமுகமான அனர்த்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்கிறது.இதன் விளைவாக, வடக்கு, வடமத்திய, வடகிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பொழிய வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். இது தவிர மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் ஏனைய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்தார். இருந்த போதும், கடுமையான மழைவீழ்ச்சி குறைந்துள்ள போதிலும், அனர்த்த நிலைமை இன்னும் தணியவில்லை என்பதால் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர்க்குமாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் கோரினார். சூறாவளி நிலைமையின் காரணமாக அறுந்து விழுந்த மின்கம்பிகள் இன்னும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்பதோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் வரை தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அவர் மேலும் வலியுறுத்தினார். அத்தோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் கிணறுகளை சுத்திகரிக்காமல் குடிநீருக்காக அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இது பல சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். இருப்பினும், இதன் மறைமுகமான தாக்கங்கள் தொடர்ந்தும் நாட்டில் நீடிக்கும் என்பதோடு நாட்டிற்குள்ளேயும் சுற்றியுள்ள கடற் பிரதேசத்திலும் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் மீன்பிடி மற்றும் கடற் போக்குவரத்து நடவடிக்கைகளை இன்றைய தினம் தவிர்க்குமாறும் அவர் கோரினார். இந்த மறைமுகமான தாக்கங்கள் நவம்பர் 30 ஆம் திகதியாகும் போது நீங்கும் எனவும் அதன் பின்னர் சுமூகமான வானிலை நிலைமை உருவாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது - வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் | Virakesari.lk
-
எச்சரிக்கை ! களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயரும் அபாயம்
களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் : வெள்ளத்தில் மூழ்கவுள்ள கொழும்பின் சில பகுதிகள் ! 29 Nov, 2025 | 07:54 PM களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால், பாரிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதன் படி, மாலம்பே – கடுவல பிரதான வீதிக்கிடையே உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்போர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தற்போதைய காலநிலை காரணமாக மேல் பகுதியிலான மழைப்பொழிவுகள் அதிகரித்து வருவதால், நீர்மட்ட உயர்வு மேலும் தீவிரமடையக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், அதிகாரிகள் வெளியிடும் மேலதிக அறிவுறுத்தல்களை கவனத்துடன் பின்பற்றவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது. களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் : வெள்ளத்தில் மூழ்கவுள்ள கொழும்பின் சில பகுதிகள் ! | Virakesari.lk