Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. வடமராட்சி கடற்பகுதியில் கரையொதுங்கிய மிதவை! வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்பகுதியில் மிதவை ஒன்று நேற்று கரையொதுங்கியுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் குறித்த மிதவை கடலில் மிதந்துவருவதை அவதானித்திருந்தனர் சிவப்பு நிறமுடைய கூம்பு வடிவிலான மிதவை ஒன்று கரையொதுங்கி இருப்பதாக அப்பகுதி மீனவர்கள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.[ஒ] வடமராட்சி கடற்பகுதியில் கரையொதுங்கிய மிதவை!
  2. வசாவிளான், குட்டியப்புலம் பகுதியில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளைத் தகர்த்துக் கொண்டு உள்ளே சென்ற முச்சக்கரவண்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ். வலிகாமம் வடக்குப் பகுதியில் நேற்று அதிகாலை வேளை பயணித்த ஓட்டோவே இவ்வாறு இராணுவத்தினரின் தடுப்பு வேலிகள், அலங்காரத் தொட்டிகளைத் தகர்த்து உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளது. இதன்போது காவல் பணியில் இருந்த இராணுவச் சிப்பாய் பதற்றமடைந்துள்ளதுடன் தெரு நாய் ஒன்று ஓட்டோவின் குறுக்கே சென்றபோது அதனை விலகிச் செல்ல முற்பட்ட சமயமே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் இந்தச் சம்பவத்தில் முச்சக்கரவண்டி கடும் சேதமடைந்ததுடன் அதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[ஒ] யாழில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளை தகர்த்த முச்சக்கரவண்டி!
  3. 09 Jan, 2025 | 03:28 PM யாழ்ப்பாணக் குடாநாடு கடலாலும், கடல் நீரேரிகளாலும் சூழப்பட்ட ஒரு தீபகற்பம். பூமி வெப்பமடைவதன் விளைவாக ஏற்பட்டுவரும் கடல்மட்ட உயர்வு குடாநாட்டைப் பெருமளவு பாதிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டுப்பாடற்ற சட்டவிரோத சுண்ணாம்பு அகழ்வு காலநிலை மாற்றத்தால் ஏற்படவுள்ள பாதகங்களை மேலும் விரைவுபடுத்தும், அதிகப்படுத்தும். இவற்றைக் கருத்திற்கொண்டு விவசாய நடவடிக்கையைப் பாதிக்காத வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வை நெறிப்படுத்துவதோடு, இதில் நிலவக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாண ஆளுநரிடம் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வை முடிவுறுத்தக்கோரி பொ.ஐங்கரநேசன் வியாழக்கிழமை (09) மனுவொன்றைச் சமர்ப்பித்த பின்னர் நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் சுண்ணாம்புக்கல் வடமேற்கு மாகாணத்திலும், வடக்கு மாகாணத்திலும் கரையோரத்தை அண்டிக் காணப்படும் ஒரு இயற்கை வளமாகும். புவிச்சரித வரலாற்றில் பல மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட மயோசின் காலத்தில் கடலின் அடித்தளப் படிவுகளாகத் தோற்றம்பெற்ற இப்பாறைகள் சீமெந்து தயாரிப்பிலும், இதர கட்டுமானங்களிலும் பிரதான மூலப் பொருளாக விளங்குகின்றது. கூடவே, சூழலியல் ரீதியாகக் கடல் நீர் நிலத்தடி நீருடன் கலப்பதைத் தடைசெய்வதிலும், நிலத்தடி நீரோட்டத்திலும் மிகவும் இன்றியமையாத பங்களிப்பையும் வழங்கி வருகிறது. சமீப நாட்களாகச் சுண்ணாம்புக்கல் அகழ்வும் அதனை வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதும் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. சுண்ணாம்புக்கல் அகழ்வு பயிர்ச் செய்கைக்காக இரண்டடி ஆழம் வரையில் கிளறி எடுத்தல் என்ற நிலையில் இருந்து, இன்று சீமெந்து தயாரிப்புக்காகக் கனரக வாகனங்களைக் கொண்டு அகழ்ந்தெடுத்தல் என்ற நிலைக்கு மாறியுள்ளது. குறிப்பாக, தென்மராட்சி சரசாலையில் அனுமதியின்றிச் சட்டவிரோதமாக அரச காணிகளிலும், தனியார் காணிகளிலும் பாரிய அளவில் சுண்ணாம்புக்கல் அகழ்வு இரவு நேரங்களில் இடம்பெற்று வருகிறது. காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை இயக்கப்படாதிருப்பதற்குச் சுண்ணாம்புக் கல்லைப் பெறுவதில் உள்ள இடர்பாடுகளே காரணம். கீரிமலையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஏற்பட்ட பிரமாண்ட குழிகள் இன்னமும் மூடப்படாத நிலையில் இனிமேலும் அகழ்வைத் தொடர்வது சூழல் ரீதியாகப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் கிளிங்கர்களை எடுத்துவந்து, சீமெந்துத் தொழிற்சாலையை மீள இயக்க முடியும் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிருந்து வேறு மாவட்டங்களுக்குச் சுண்ணாம்புக்கல்லை எடுத்துச்செல்வது மக்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. நொறுக்கப்பட்ட சுண்ணாம்புக்கற்களை அரைத் தயாரிப்பாகவோ அல்லது முடிக்கப்பட்ட தயாரிப்புகளாகவோ கருதமுடியாது என்பதால் இதனை எடுத்துச் செல்வதற்குப் போக்குவரத்து உரிமம் அவசியம் எனப் புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் யாழ். மாவட்டச் செயலருக்குத் தெளிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து சுண்ணாம்புக்கல் வெளிமாட்டங்களுக்குத் தங்கு தடையில்லாமல் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆளுநர் உடனடியாக சுண்ணக்கல் அகழ்வில் நிலவும் சட்டவிரோத செயற்பாடுகளைக் களைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். சுண்ணாம்புக்கல் அகழ்வில் சட்டவிரோத செயற்பாடுகள் யாவும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் - பொ. ஐங்கரநேசன் கோரிக்கை! | Virakesari.lk
  4. 09 Jan, 2025 | 06:47 PM யாழ்ப்பாணத்தில் மணல் ஏற்றுவதற்காக போலி அனுமதிப் பத்திரத்தை தயாரித்த குற்றச்சாட்டில் கைதானவர் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தை போலியாக தயாரித்து, அதன் மூலம் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நபரொருவர் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். அதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து போலி அனுமதிப் பத்திரத்தை பொலிஸார் மீட்டிருந்தனர். கைதான நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்றைய தினம் புதன்கிழமை (8) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. யாழில் மணல் அகழ்வுக்காக போலி அனுமதிப் பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு விளக்கமறியல் | Virakesari.lk
  5. கைதான 10 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்! 09 Jan, 2025 | 07:14 PM இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் நேற்று (8) இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் நேற்றிரவு யாழ்ப்பாணம் - காரைநகர், கோவளம் கலங்கரை விளக்கத்தில் நடத்திய விசேட நடவடிக்கையின்போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகை கைப்பற்றியதுடன் 10 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ். கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார். கைதான 10 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்! | Virakesari.lk
  6. ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக, இலங்கை 7 ஜனவரி 2025, 06:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள 'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டமானது, அடிமட்ட மக்களை நேரடியாக பாதித்துள்ளதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். முச்சக்கரவண்டி, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கடவுள் சிலைகள் உள்ளிட்ட மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு போலீஸார் வற்புறுத்துவதாக மக்கள் கூறுகின்றனர் தேங்காய், அரிசி தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டிருந்தனர். இந்த நிலையில், ஜனவரி மாதம் முதலாம் தேதி 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், விசேட வாகன தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பதில் போலீஸ் மாஅதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார். 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி, பதில் போலீஸ் மாஅதிபரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் போக்குவரத்து தேடுதல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்து தெளிவூட்டப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையானது, மறு அறிவித்தல் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்கெல்லாம் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது? இதன்படி, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பல்வேறு சத்தங்களுடனான ஒலி பெருக்கி, தோரணை போன்ற மின்விளக்குகள், அதிக சத்தத்துடனான சைலன்ஸர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பெரும்பாலான பஸ்களின் முன் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள தமது இஷ்ட தெய்வங்களின் சிலைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள பஸ்கள், முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில், வாகனங்களை அழகுப்படுத்துவதற்கான மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு கடந்த காலங்களில் உரிய தரப்பினர் அறிவுறுத்தல் பிறப்பித்திருந்த போதிலும், அவ்வாறான பாகங்களுடன் தற்போதும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதை காண முடிகின்றது. குறிப்பாக பஸ் மற்றும் முச்சக்கரவண்டிகளின் முன்பக்கத்தில் பிளாஸ்டிக் பூக்கள், கடவுள்களின் சிலைகள், அழகுப்படுத்தும் வகையிலான மின்விளக்குகள் உள்ளிட்ட மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. காவல்துறையினர் கூறுவது என்ன? இந்த நிலையில், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள இவ்வாறான மேலதிக பாகங்களினால் விபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், வாகனத்திற்குள் பயணிப்போருக்கு அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், வீதிகளில் பயணிப்போருக்கும் இடையூறு ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர். இந்த நிலையில், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் சாரதிகள் விடுக்கும் தவறுகளை கண்டறியும் வகையில் போலீஸார் சிவில் உடைகளில் பயணித்து, வீடியோ பதிவு செய்து வழக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர். இவ்வாறான போலீஸாரின் நடவடிக்கை காரணமாக தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பஸ் உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நடவடிக்கைகளை போலீஸார் நிறுத்தாத பட்சத்தில், தாம் வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பஸ் உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறித்த விடயம் தொடர்பில் பதில் போலீஸ் மாஅதிபருடன் கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைத்தளங்களின் ஊடாகவும், நேரடியாகவும் தற்போது கடும் எதிர்ப்புக்களை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் எதிர்ப்பு முச்சக்கரவண்டிகளில் மேலதிகமாக பொருத்துவதற்கு சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ள சுமார் 50 மேலதிக பாகங்கள் உள்ள போதிலும், அதனையும் போலீஸார் அப்புறப்படுத்துமாறு வலியுறுத்தி வருவதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ''கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை, வாகனங்களில் பொருத்தியுள்ள மேலதிக பாகங்களை அப்புறப்படுத்த பயன்படுத்துகின்றனர். முச்சக்கரவண்டியில் பொருத்தக்கூடிய பாகங்கள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியின் முன்பக்கத்திலுள்ள சூரிய ஒளி படாத வகையிலுள்ள பாகத்தையும் அப்புறப்படுத்துமாறு கூறுகின்றனர். அரசாங்கத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானியில் சுமார் 50 பாகங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன. அதை முதலில் பார்த்தவிட்டு சட்டத்தை அமல்படுத்த வருமாறு போலீஸாரிடம் கேட்டுக்கொள்கின்றேன்." என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடவுள் சிலைகளை அகற்ற உத்தரவு? வாகனங்களில் வைக்கப்பட்டுள்ள கடவுள் சிலையை கூட அகற்றுவதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர். ''மழை நீர் உட்பிரவேசிக்காத வகையிலான பாதுகாப்பு கவசத்தை பொருத்த சட்டத்தில் அனுமதியுள்ளது. போலீஸார் அதையும் அப்புறப்படுத்துகின்றனர். மழை காலத்தில் பாதுகாப்பிற்காகவே இந்த பாகம் வைக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையையும் அப்புறப்படுத்துகின்றனர். தமது இஷ்ட தெய்வமாக அந்தந்த மதங்களை சார்ந்தவர்கள் வைத்துள்ள புத்தர் சிலை, இயேசு சிலை, சிவன் சிலை, குரானிலுள்ள அடையாளங்கள் என்பவற்றை அகற்றுமாறு கூறுகின்றனர்" என்கிறார் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் எல்.ரோஹண பெரேரா. ''இப்போது நாங்கள் வழக்கு பதிவு எதுவும் செய்யவில்லை. சாரதிகளுக்கு தெளிவுப்படுத்திக்கொண்டிருக்கிறோம்'' என போலீஸ் ஊடக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார். அனைத்து செயற்பாடுகளையும் சரி செய்வதே கிளீன் ஸ்ரீலங்காவின் நோக்கம் என அமைச்சர் கே.டீ.லால் காந்த தெரிவிக்கின்றார். ''கிளீன் ஸ்ரீலங்கா என்பது தொடர்பில் தெளிவூட்டல் வேண்டும். சிலந்தி வலைகளை சுத்தம் செய்தல், வடிகாண்களை சுத்தம் செய்தல் போன்றதல்ல. அனைத்தையும் சரி செய்ய வேண்டும். சரியான நேரத்தில் வேலைகளை ஆரம்பித்தல். அரசு அலுவலகத்தில் வேலைகளை சரியான நேரத்தில் நிறைவு செய்தல் போன்றதும் இதில் உள்ளடங்குகின்றது." என அமைச்சர் கே.டீ.லால் காந்த ஊடகங்களிடம் தெரிவித்தார். கிளீன் ஸ்ரீலங்கா: இலங்கையில் பேருந்து, முச்சக்கர வண்டிகளில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? - BBC News தமிழ்
  7. யாழில் மீண்டும் சோதனைச் சாவடி அச்சத்தில் மக்கள்! யாழ்ப்பாணத்தில் மீண்டும் திடீரென சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளமை அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போர் முடிவுற்ற பின்னர் சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்திருந்தனர். இந்நிலையில் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்ற பின்னர் இங்கு இருந்த பல சோதனைச் சாவடிகள் உடனடியாக அகற்றப்பட்டன. ஆனாலும் அந்தச் சோதனைச் சாவடிகள் தற்போது மீண்டும் அதே இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. மேலும் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அநுர அரசு சோதனைச் சாவடிகளைத் தாமே அகற்றுவதும் மீண்டும் தாமே அமைப்பதுமான இந்த நடவடிக்கை தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நீண்ட காலமாகப் பருத்தித்துறையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமை அகற்றுவதாக அநுர அரசு உறுதியளித்திருந்த போதிலும் இதுவரையில் அது அகற்றப்படாமலே இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.[ஒ] யாழில் மீண்டும் சோதனைச் சாவடி அச்சத்தில் மக்கள்!
  8. யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்குதல் – ஐந்து பேர் கைது! யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக கொண்டு கோப்பாய் பொலிஸாரினால் மூன்று பேரும் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இரண்டு பேரும் என ஜவர் நேற்று கைது செய்யப்பட்டனர். கடந்த வாரம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகமொன்றுக்கு வந்த ஒருவர் அப்பகுதியில் நிலத்தில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கியுள்ளார். சில தினங்களுக்கு பின்னர் அடிக்கடி நகை உரியவர்களிடம் வழங்கப்பட்டதா என வெதுப்பகத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில் வெதுப்பகத்தில் இருந்த இளைஞர் குழு குறித்த நபரை கட்டிவைத்து தாக்கி காணொளியை வெளியிட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள கோப்பாய் பொலிஸார் கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளார். யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்குதல் – ஐந்து பேர் கைது! யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்குதல் – ஐந்து பேர் கைது!
  9. இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கையர்கள் தம்மை மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கையளித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து படகு வழியாக சட்ட விரோதமான முறையில் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைய தொடங்கினர். இது வரை 309 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் கடல் வழியாக அகதிகளாக தஞ்சமடைந்து மண்டபம் ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் பொருளாதார நெருக்கடி காரணமாக தஞ்சமடைந்த இலங்கை தமிழர்களை அகதிகளாக இந்திய அரசு இதுவரை பதிவு செய்யாத காரணத்தினால் அவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் எந்த விதமான நிவாரணமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வருவாய் இன்றி தவித்த இலங்கை தமிழர்கள் அடங்கிய ஐந்து குடும்பத்தினர் மீண்டும் சட்டவிரோதமாக கடல் வழியாக அண்மையில் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், அகதிகளாக பதிவு செய்யாமல் உள்ள இலங்கை தமிழர்களான 13 குடும்பத்தினர் தங்களை படகு மூலம் அல்லது விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு நேற்று திங்கட்கிழமை (6) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாதிக்கப்பட்ட மனு கையளித்துள்ளனர். இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தமிழகம் சென்ற 13 குடும்பங்கள் தம்மை மீண்டும் நாட்டுக்கு அனுப்புமாறு கோரி மனு கையளிப்பு | Virakesari.lk
  10. Published By: Digital Desk 2 07 Jan, 2025 | 04:51 PM (நமது நிருபர்) வருடமொன்றில் வாகன இறக்குமதிகள் 1.5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்தாலும், அதனால் நாட்டின் கையிருப்புக்கோ அல்லது கடன் மீள்செலுத்துகைக்கோ பாதிப்பு ஏற்படாது என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உத்தரவாதமளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இந்த வாகன இறக்குமதிகள் நடைமுறைக்கணக்கு மீதியில் மிகச்சொற்பளவு பற்றாக்குறையைத் தோற்றுவித்தாலும், கடந்த காலங்களைப்போன்று மிகையான பற்றாக்குறையைத் தோற்றுவிக்காது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி கடன்மறுசீரமைப்பு செயன்முறை முழுமையாகப் பூர்த்தியடைந்ததன் பின்னர் வாகன இறக்குமதிகள் 1.5 பில்லியன் டொலர் வரை உயர்வடைந்தாலும், அரசாங்கத்தினால் கையிருப்பைப் பேணவும், அவசியமான மீள்செலுத்துகைகளை மேற்கொள்வதற்கும், அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கும் இயலும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார். அதேவேளை பணச்சுருக்கம் மற்றும் உயர் பெறுமதிசேர் வரி என்பவற்றின் விளைவாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புதிய பெறுமதி உயர்வடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாகன இறக்குமதிகள் அதிகரித்தாலும் கையிருப்புக்குப் பாதிப்பு ஏற்படாது - மத்திய வங்கி ஆளுநர் | Virakesari.lk
  11. அரிசி பிரச்சினைக்கான தீர்வினையே நாமும் தேடிக் கொண்டிருக்கின்றோம் - அரசாங்கம் 07 Jan, 2025 | 06:15 PM (எம்.மனோசித்ரா) அரிசி பிரச்சினைக்கான தீர்வினையே நாமும் தேடிக் கொண்டிருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் ஒரு இலட்சத்து 6000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிக அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன்னும் அதிக உள்நாட்டு அரிசியும் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டிலுள்ள தரவுகள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. தகவல்களுக்கிடையில் பரஸ்பர தன்மை காணப்படுகிறது. அவை சரியானவையாகவும் இல்லை. தற்போது வரை ஒரு இலட்சத்து 6000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாயக்கிழமை (7) மேலும் 10 000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட 60 000 மெட்ரிக் தொன் நாட்டரிசியும் காணப்படுகிறது. அது மாத்திரமின்றி தேசிய அரிசி ஆலை உரிமையாளர்களாலும் தற்போது அரிசி விநியோகிக்கப்படுகிறது. இனியும் அரிசியை மறைத்து வைத்திருப்பதால் எவ்வித பயனும் இல்லை. எவ்வாறிருப்பினும் சில பிரதேசங்களில் எதிர்பார்க்குமளவுக்கு அரிசி விநியோகிப்படுவதில்லை என்ற தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே அரிசி விநியோ கட்டமைப்பை பலப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். இம்மாதம் மூன்றாம் வாரமளவில் உள்நாட்டில் உற்பத்தியான அரிசி சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும். சுமார் இரண்டரை இலட்சம் மெட்ரிக் தொன் முதல் 4 இலட்சம் மெட்ரிக் தொன் வரை அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நாமும் தீர்வினைத் தேடிக் கொண்டிருக்கின்றோம். தட்டுப்பாடு நிலவுகிறது என்று கூறப்படுவது எவ்வாறு தவறான தகவல் இல்லையோ, அதேபோன்று அரிசி மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தவறானதல்ல. உள்நாட்டில் அரிசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நம்பிக்கை வைத்து தான் கடன் வழங்கப்படுகிறது. அமைச்சரவை அங்கீகாரத்துடன் வங்கிகள் ஊடாக இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவர்கள் கடன் பெறும் போது இணங்கியுள்ள நிபந்தனைகளை மீறினால் கருப்பு பட்டியலுக்குள் உள்வாங்கப்படுவார்கள். மீண்டும் எந்தவொரு கடனும் வழங்கப்பட மாட்டாது. இதற்கு முன்னர் இருந்தவர்களுடன் செயற்பட்டதைப் போன்று எம்முடன் விளையாட முடியாது என்றார். அரிசி பிரச்சினைக்கான தீர்வினையே நாமும் தேடிக் கொண்டிருக்கின்றோம் - அரசாங்கம் | Virakesari.lk
  12. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு - என்ன காரணம்? பட மூலாதாரம்,CPAC 6 ஜனவரி 2025, 16:23 GMT புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் கனடாவில் எதிர்பார்க்கப்பட்டபடியே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் புதன்கிழமை கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடவிருந்த நிலையில், ட்ரூடோ தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள தனது வீட்டில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2015-ஆம் ஆண்டில் பிரதமரான கணம் முதலே கனடாவுக்காகவும் கனேடிய மக்களுக்காகவும் பாடுபட்டு வந்துள்ளேன். நடுத்தர மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளேன். கொரோனா தொற்று காலத்தில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்ததை கண்ணுற்றேன். வட அமெரிக்க கண்டத்தில் தடையில்லா வர்த்தகம் நீடிக்க உழைத்தேன்" என்றார். தனது கடந்த கால செயல்பாடுகளை விவரித்த பிறகு அவர் தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக அறிவித்த அவர், அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்போதைய பதவியில் நீடிப்பேன் என்றார். குடும்பத்துடன் நடத்திய நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பதவி விலகும் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். தனது வெற்றிக்கு அவர்களது ஆதரவே காரணம் என்று அவர் கூறினார். தனது பதவி விலகல் முடிவு குறித்து நேற்றைய இரவு உணவின் போது குழந்தைகளிடம் தெரிவித்ததாக அவர் கூறினார். ட்ரூடோ பதவி விலக என்ன காரணம்? ட்ரூடோவின் பதவி விலகல் கனடா அரசியல் களத்தில் ஒரு சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. அவர் யாரும் எதிர்பாராத சமயத்தில், 2015 இல் தனது கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். அப்போது 43 வயதாக இருந்த ட்ரூடோ, அரசியலில் புதிய முகமாகவும் இளம் தலைவராகவும் இருந்தார். வெளிப்படையான குடியேற்றக் கொள்கையை மையமாகக் கொண்ட ஒரு புதிய வகையான அரசியலை உறுதியளித்தார். செல்வந்தர்கள் மீதான வரிகளை அதிகரித்தார் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டங்களுக்கு ஆதரவளித்தார். ஆனால் அவரது முதல் பதவிக்காலத்தில் ஊழல் புகார்கள் எழுந்தன. மிக சமீபத்திய ஆண்டுகளில், கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் மற்றும் அவரது ஆட்சி மீதான விரக்தி காரணமாக அவரின் செல்வாக்கு குறைந்து வருகிறது. கியூபெக், ஒன்டோரியோ மற்றும் அட்லாண்டிக் கனேடிய மாகாணங்களைச் சேர்ந்த டஜன்கணக்கான, ட்ரூடோவின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர். கருத்துக்கணிப்புகளில் பங்கேற்ற மூன்றில் இரு பங்கு பேர் ட்ரூடோ மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். செப்டம்பர் மாதம் `Ipsos' தளத்திற்கு பதிலளித்தவர்களில் 26% பேர் மட்டுமே ட்ரூடோ பிரதமருக்கான சிறந்த தேர்வு என்று கூறினர். அந்த கருத்துக்கணிப்பில் கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரேவை விட 19 புள்ளிகள் பின்தங்கி இருந்தார் ட்ரூடோ. கனேடிய அரசியல் வரலாறும் ட்ரூடோவுக்கு சாதகமாக இல்லை. கனடாவில் இதுவரை இரண்டு பிரதமர்கள் மட்டுமே தொடர்ந்து நான்கு முறை பதவி வகித்துள்ளனர். வரிகளைக் குறைப்பது, பண வீக்கத்தைச் சமாளிப்பது மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பது போன்ற வாக்குறுதியின் பேரில் 2022 இல் பொய்லிவ்ரே (Poilievre) தனது கட்சியின் உயர்மட்டத்திற்கு உயர்ந்தார். 45 வயதான அவர் கோவிட் ஆணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஃப்ரீடம் கான்வாய் டிரக்கர்களுக்குப் பின்னால் ஆதரவைத் திரட்டினார் - இது ஒட்டாவா உள்ளிட்ட கனேடிய நகரங்களை ஸ்தம்பிக்கச் செய்த முற்றுகை ஆகும். கனடாவின் அடுத்த பிரதமர் டிரம்பின் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண வேண்டும். ஒழுங்கற்ற குடியேற்றம், சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக, அமெரிக்காவுடனான தனது எல்லையை கனடா பாதுகாக்கவில்லை என்றால் கனேடியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இது "கடுமையான சவால்" என முன்னாள் கனடா நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டின் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனது வருடாந்திர பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு பதவி விலகினார். "நான் ட்ரூடோ அரசாங்கத்தின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகராக இருப்பதை அவர் விரும்பவில்லை என என்னிடம் தெரிவித்தார்" என்றும் கிறிஸ்டியா கூறினார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு - என்ன காரணம்? - BBC News தமிழ்
  13. டாம் ஜியோகெகன் பதவி,பிபிசி செய்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடுத்த சில நாட்களில் தனது பதவி விலகலை அறிவிக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்து அவர் பரிசீலித்து வருகிறார், இது அவரது ஒன்பது ஆண்டு கால பிரதமர் பதவி காலத்தையும் முடிவுக்கு கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. கனேடிய பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான வரிகளை விதிக்கும் என்ற டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தலை எவ்வாறு சமாளிப்பது என்ற விவகாரம் உட்பட சில கருத்துவேறுபாடுகளை மேற்கோள் காட்டி கடந்த மாதம் அவரது நிதி அமைச்சர் பதவி விலகினார். ட்ரூடோவின் புகழ் கனடா மக்கள் மத்தியில் சரிந்துள்ளது. அவரது கட்சி இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஓரிரு நாட்களில் பதவி விலகலா? ட்ரூடோ தனது சொந்த எம்.பி.க்களால் கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பது போன்ற ஒரு பிம்பம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, புதன்கிழமை நடக்கவுள்ள தனது கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு முன்பே பதவி விலகுவது குறித்து அவர் அறிவிப்பு வெளியிடலாம் என்று `குளோப் அண்ட் மெயில்' நாளிதழ் தெரிவித்துள்ளது. `குளோப் அண்ட் மெயில்' தகவலின்படி, ட்ரூடோ உடனடியாக பதவி விலகுவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் தனது எதிர்காலம் குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ட்ரூடோவுக்குப் பிறகு யார் பொறுப்பேற்றாலும், அமெரிக்காவுடன் சாத்தியமான வர்த்தகப் போரை எதிர்கொள்ளும் அதேவேளையில், வலுவான பிரசாரத்தின் மூலம் தேர்தலில் கட்சியை வழிநடத்தவும் வேண்டியிருக்கும். கனடாவில் பொதுத்தேர்தல் அக்டோபர் மாதத்திற்கு முன் நடக்க வேண்டும். ஆனால் லிபரல் கட்சியின் தலைமையில் ஏற்படும் மாற்றம் வரவிருக்கும் மாதங்களிலேயே தேர்தல் நடப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கலாம். ட்ரூடோ மீது சொந்தக் கட்சியிலேயே அதிருப்தி ட்ரூடோவின் பதவி விலகல் என்பது கனடா அரசியல் களத்தில் ஒரு சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும். அவர் யாரும் எதிர்பாராத சமயத்தில், 2015 இல் தனது கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். அப்போது 43 வயதாக இருந்த ட்ரூடோ, அரசியலில் புதிய முகமாகவும் இளம் தலைவராகவும் இருந்தார். வெளிப்படையான குடியேற்றக் கொள்கையை மையமாகக் கொண்ட ஒரு புதிய வகையான அரசியலை உறுதியளித்தார். செல்வந்தர்கள் மீதான வரிகளை அதிகரித்தார் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டங்களுக்கு ஆதரவளித்தார். ஆனால் அவரது முதல் பதவிக்காலத்தில் ஊழல் புகார்கள் எழுந்தன. மிக சமீபத்திய ஆண்டுகளில், கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் மற்றும் அவரது ஆட்சி மீதான விரக்தி காரணமாக அவரின் செல்வாக்கு குறைந்து வருகிறது. கியூபெக், ஒன்டோரியோ மற்றும் அட்லாண்டிக் கனேடிய மாகாணங்களைச் சேர்ந்த டஜன்கணக்கான, ட்ரூடோவின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர். கருத்துக்கணிப்புகளில் பங்கேற்ற மூன்றில் இரு பங்கு பேர் ட்ரூடோ மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். செப்டம்பர் மாதம் `Ipsos' தளத்திற்கு பதிலளித்தவர்களில் 26% பேர் மட்டுமே ட்ரூடோ பிரதமருக்கான சிறந்த தேர்வு என்று கூறினர். அந்த கருத்துக்கணிப்பில் கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரேவை விட 19 புள்ளிகள் பின்தங்கி இருந்தார் ட்ரூடோ. கனேடிய அரசியல் வரலாறும் ட்ரூடோவுக்கு சாதகமாக இல்லை. கனடாவில் இதுவரை இரண்டு பிரதமர்கள் மட்டுமே தொடர்ந்து நான்கு முறை பதவி வகித்துள்ளனர். வரிகளைக் குறைப்பது, பண வீக்கத்தைச் சமாளிப்பது மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பது போன்ற வாக்குறுதியின் பேரில் 2022 இல் பொய்லிவ்ரே (Poilievre) தனது கட்சியின் உயர்மட்டத்திற்கு உயர்ந்தார். 45 வயதான அவர் கோவிட் ஆணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஃப்ரீடம் கான்வாய் டிரக்கர்களுக்குப் பின்னால் ஆதரவைத் திரட்டினார் - இது ஒட்டாவா உள்ளிட்ட கனேடிய நகரங்களை ஸ்தம்பிக்கச் செய்த முற்றுகை ஆகும். கனடாவின் அடுத்த பிரதமர் டிரம்பின் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண வேண்டும். ஒழுங்கற்ற குடியேற்றம், சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக, அமெரிக்காவுடனான தனது எல்லையை கனடா பாதுகாக்கவில்லை என்றால் கனேடியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இது "கடுமையான சவால்" என முன்னாள் கனடா நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டின் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனது வருடாந்திர பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு பதவி விலகினார். "நான் ட்ரூடோ அரசாங்கத்தின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகராக இருப்பதை அவர் விரும்பவில்லை என என்னிடம் தெரிவித்தார்" என்றும் கிறிஸ்டியா கூறினார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஓரிரு நாட்களில் பதவி விலகலா? புதிய தகவல்கள் - BBC News தமிழ்
  14. புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்காத நிலையில், கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடருமானால், இலங்கையர்கள் பணி நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது. எதிர்வரும் சில வாரங்களில் நடைபெறவுள்ள கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இலங்கையர்களிடமிருந்து அதிகளவான கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் குவியும் எனவும், கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் தோற்றுவதற்கு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவது கட்டாயம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அடுத்த சில வாரங்களில் சுமார் 30,000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கையர்கள் கடவுச்சீட்டு பெறுவதில் தொடர்ந்தும் சிக்கல்கள் ஏற்படுமானால், இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வேறு நாடுகளுக்கு திருப்பி விடப்படும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. R Tamilmirror Online || மீண்டும் தலை தூக்கும் கடவுச்சீட்டு பிரச்சினை
  15. யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்தவ கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில் இளைஞர் குழு அவரை கட்டிவைத்து தாக்கி வீடியோ காணொளி பதிவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு சென்ற நிலையில், தங்க நகை போன்ற ஆபரணம் கீழே விழுந்து கிடப்பதை அவதானித்தேன். அதனை எடுத்து அந்த வெதுப்பகத்தில் ஒப்படைத்ததுடன் அது தங்க ஆபரணமா என ஆராய்ந்து உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என கடந்த 24ஆம் திகதி வழங்கினேன். இரண்டு நாட்கள் கடந்த நிலையில் குறித்த வீதியில் செல்லும்போது குறித்த வெதுப்பகத்திற்கு சென்று நான் வழங்கிய ஆபரணத்தை உரியவரிடம் ஒப்படைத்தீர்களான கேட்டேன். அதற்கு அவர்கள் இன்னும் உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை என கூறினர். மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து குறித்த வெதுப்பகத்துக்கு சென்ற நிலையில் அந்தப் பொருளை உரியவர்களிடம் ஒப்படைத்தீர்களா? என கேட்ட நிலையில் ஒப்படைக்கவில்லை என பதில் வழங்கினர். இந்நிலையில் குறித்த பொருளைத் தாருங்கள் ஏதாவது சிறுவர் இல்லத்திற்கு அதை வழங்கி வைப்போம் என கேட்டேன். இதன்போது குறித்த வெதுப்பகத்தில் நின்ற இருவர் என் கழுத்தைப் பிடித்து தாக்கினர். “நான் சொல்வதை கேளுங்கள் ஏன்? தாக்குகிறீர்கள் என கத்தினேன் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் என்னை தாக்கியதுடன் கம்பத்தில் கட்டிவைத்து தாறுமாறாக தாக்கினர்”. வீதியால் சென்ற சிலர் என்னை தாக்குவதை அவதானித்த நிலையில் எனது நியாயத்தை கேட்டு என்னை மீட்டனர். முகத்திலும் உடலிலும் அடி காயங்களுக்கு உள்ளாகிய நான் கோப்பாய் பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் தெரிவித்து விட்டு வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் சென்றுவிட்டேன். வைத்திய சாலையில் இருந்து வீடு திரும்பியபின் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்றேன் என்னை தாக்கியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை. பொலிஸ் நிலையம் வந்த சட்டத்தரணி ஒருவர் சமாதானமாக செல்லுங்கள் என்றார். ”எனக்கு நியாயம் வேண்டும் என்னை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும், இல்லாவிட்டால் உயிர் மாய்ப்பேன்” என அவர் மேலும் தெரிவித்தார். பு.கஜிந்தன் Tamilmirror Online || “தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால் உயிர் மாய்ப்பேன்”
  16. Simrith / 2025 ஜனவரி 06 , பி.ப. 05:22 - 0 - 56 இலங்கை பிரஜைகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து மக்கள் போராட்ட முன்னணி கவலை வெளியிட்டுள்ளது. அமைச்சர் விஜித ஹேரத்துக்கு எழுதிய கடிதத்தில், தற்போதைய ஜனாதிபதியின் இந்திய அரச சுற்றுப்பயணத்தின் போது செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் அதிகாரம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், இது தொடர்பிலான இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் 2025 ஜனவரியில் இறுதி செய்யும் அவர் அண்மையில் கூறியதை கட்சி முன்னிலைப்படுத்தியுள்ளது. “இந்த ஒப்பந்தம் ஜனநாயக உரிமைகள், தேசிய பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு, தேசத்தின் பொருளாதாரம் மற்றும் அரசு மற்றும் அதன் மக்களின் இறையாண்மைக்கு தவிர்க்க முடியாத ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். ஒரு இந்திய நிறுவனம் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க அனுமதித்த வரலாற்றை மறு ஆய்வு செய்வது மிகவும் முக்கியமானது,” என்று கட்சி மேலும் கூறியது. மக்கள் போராட்டக் முன்னணி மேலும் தெரிவிக்கையில்; "நாம் தகவல்களின் சகாப்தத்தில் வாழ்கிறோம், மேலும் ஒரு நாடு தனது மக்களின் தகவல்களையும் தரவுகளையும் மற்றொரு வெளிநாட்டு நாட்டிற்கு வழங்குவது பாரிய ஆபத்து. ஒரு தேசம் தனது மக்களின் தகவல்களை வேறொரு நாட்டிலிருந்து பெறுவதன் மூலம் கூட அடிபணிய வைக்க முடியும். அந்த மூலோபாயத் தலையீட்டை இந்தியா இன்று இலங்கையில் செய்து வருகிறது. இந்த நிலையில், இலங்கை மக்களின் பொது பாதுகாப்பு பெரும் ஆபத்தில் உள்ளது. புதிய தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்களைப் பெறும் அதே வேளையில், இந்திய நிறுவனத்திடம் டிஜிட்டல் அடையாள அட்டை பணியை ஒப்படைக்கும் முடிவை உடனடியாக திரும்பப் பெறுவதற்கான முன்மொழிவை பாராளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்று கட்சி வலியுறுத்தியது. Tamilmirror Online || ”இலங்கை மக்களின் பொது பாதுகாப்பு பெரும் ஆபத்தில் உள்ளது”
  17. இன்னும் ஒரு வாரத்துக்குப் பிறகு வரும் தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தயார் செய்ய முடியாமல் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை அரிசி மொத்த வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை விதித்தல், அரிசியை இறக்குமதி செய்தல், அரிசி விற்பனை செய்பவர்கள் மற்றும் கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் கையிருப்பு பதுக்கி வைத்திருப்பவர்களை கண்டறிய விசாரணைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. மேலும், அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததுடன், அதற்கேற்ப 88,000 மெற்றிக் தொன் அரிசி இன்றுவரை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த பண்டிகை காலத்தை போன்று இன்றும் சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் உள்ளுர் கச்சா மற்றும் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்களும் நுகர்வோரும் குற்றம் சுமத்துகின்றனர். இதேவேளை, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மரக்கறிகளின் விலை கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தயார் செய்ய அரிசி தட்டுப்பாடு - புறக்கோட்டை அரிசி மொத்த வியாபாரிகள் | Virakesari.lk
  18. (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகளில் 60 இற்கும் அதிகமானோர் உத்தேச மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட கட்சி மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு கட்சிகளுக்கு வலியுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் புதிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளில் போட்டியிட்டு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த சுமார் 60 இற்கும் மேற்பட்டோர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து கட்சி மட்டத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் பல சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் கடந்த காலங்களில் மாகாண சபை முதலமைச்சர் பதவிகளை வகித்துள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டவரைவு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள நிலையில் ,சட்ட வரைவினை விடயதானத்துக்கு பொறுப்பான மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் இந்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் நடத்துவது அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில் குறித்த திருத்தச் சட்டமூலத்தை வெகுவிரைவாக நிறைவேற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தியதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில், மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். மாகாணசபைத் தேர்தல் முறைமையில் சட்ட சிக்கலால் தேர்தலை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு எதிர்வரும் காலப்பகுதியில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகள் ; மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட கலந்துரையாடல் | Virakesari.lk
  19. யாழ்ப்பாணத்தில் திருட்டு தொழிலா? ஒழித்தே தீருவோம் - அமைச்சர் சந்திரசேகரன் சூளுரை! Published By: Digital Desk 7 06 Jan, 2025 | 10:01 AM சுண்ணக்கல் ஏற்றி வந்த பார ஊர்தி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் செயல்பட்டது பரவாயில்லை அல்லது நல்லது. கல் அகழ்வு விடயத்தில் அதிகாரிகளின் அசமந்த போக்கு காணப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (05) யாழ்ப்பாணம் சரசாலை பகுதியில் கல் அகழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு லொறியில் சுண்ணக்கல் ஏற்றி சென்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வழிமறித்து அந்த லொறியை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த விடயமானது கடந்த சில தினங்களாக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் நீங்கள் செய்தது தவறு, குற்றச்செயல்கள் இடம்பெறும்போது அவற்றினை பொலிஸாருக்கு தெரியப்படுத்தி, அவர்கள் மூலமாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் இளங்குமரனுக்கு அறிவுறுத்தினேன். ஆனால் தற்போது பார்க்கும் பொழுது இளங்குமரன் செய்தது பரவாயில்லை அல்லது நல்லது என்று தோன்றுகிறது. இளங்குமரனின் இந்த வேலையால் அனைவரும் கலக்கமடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. வெட்ட வெட்ட பூதம் கிளம்பியது போல இன்று பல பிரச்சினைகள் வெளிவருகின்றன. சரசாலை பகுதியில் சட்டரீதியான வேலைகள், சட்ட ரீதியற்ற வேலைகள் இடம்பெறுகின்றன. தனியார் காணிகளில் அகழ்வுகள் இடம்பெறுகின்றன, அதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு அருகாமையில் அரச காணிகள் உள்ளன அதில் அனுமதி பெறப்படாமல் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் வேளையில் சட்ட விரோதமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றது என்பதை ஊகித்துக் கொள்ள முடிகின்றது. இந்த விடயத்தில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் இந்த தொழிலை புரிகின்ற வியாபாரிகளோ, தொழில்புரிகின்ற ஊழியர்களோ அல்ல. மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலர், கிராம செயலர், புவிசரிதவியல் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரே இதற்கு பொறுப்பு கூற வேண்டும். அரசு அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். அத்துடன் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் விளைகிறேன். சரசாலையில் உள்ள சுண்ணக்கல்லுக்கும் இளங்குமரன் எம்.பி மறித்த லொறியில் இருந்த சுண்ணக்கல்லுக்கும் இடையே வித்தியாசம் இருக்கின்றது. அப்படியாயின் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் இந்த திருட்டுத் தொழில் இடம்பெறுகின்றதா என்று கேள்வி எழுகின்றது. ஒரு சிலர் வந்து, இவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பதால் தொழில் இல்லாமல் போகின்றது, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள். ஆனால் இவ்வாறான அகழ்வுகள் மூலமாக ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கு பல பரம்பரைகள் பலியாகும் என்ற விடயத்தை நாங்கள் மறந்து விடக்கூடாது. ஒரு சில வியாபாரிகளின் பணப் பசியை போக்கும் தேவைக்காக இந்த செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால் எமது அரசாங்கத்தில் இது தடுத்து நிறுத்தப்படும் என மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் திருட்டு தொழிலா? ஒழித்தே தீருவோம் - அமைச்சர் சந்திரசேகரன் சூளுரை! | Virakesari.lk
  20. ஈழத்தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு ஆக்கபூர்வமான அல்லது மனச்சுத்தியுடனான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அறிகுறிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என பேராசிரியர் ரகுராம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவுப்பேருரையை ஆற்றிய பேராசிரியர் ரகுராம் இதனை தெரிவித்துள்ளார். இன்றைக்கு எங்களின் மிக முக்கியமான பிரச்சினைகளாகயிருக்கின்ற வலிந்து காணாமலாக்கபட்டோர்,தொடர்பான நிலை, படைகளிடம் கையளிக்கப்பட்டோர் தொடர்பான நிலை,பற்றிய வெளிப்படையான பிரகடனம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினாலே வெளிப்படுத்தப்படவேண்டும். இன்றைக்கு மீதமாகவுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்.பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள பேராசிரியர் ரகுராம் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது. விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருந்தபோது கொழும்பிலிருந்து குமார் பொன்னம்பலம் ஆற்றிய பணிகள் மாத்திரமல்ல,போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற ஆரம்ப காலகட்டங்களிலும், அந்த போராட்டத்தினுடைய நேர்மையை தாற்பரியத்தை உணர்ந்தவராக அவர் ஆற்றிய பணிகளும் எடுத்த முடிவுகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக கொழும்பிலே விடுதலைப்போராட்டத்தை மிக நியாயத்துடன் உச்சகுரலிலே எடுத்துச்சொல்லி,அந்த நியாயத்தை உலகெங்கும் பரப்புவதற்கும் விடுதலைப்போராட்டத்திற்கு தன்னால் இயன்ற தார்மீக அந்தஸ்த்தை பெற்றுதருவதிலும் அவர் முனைப்புடன் செயற்பட்;டுள்ளார். குறிப்பிட்ட காலப்பகுதியில் நாங்கள் வன்னிப்பகுதியில் ஊடகத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது,அவருடைய பேச்சுக்கள் அவர் அளிக்கின்ற விளக்கங்கள் எல்லாம் எமக்கு கிடைக்கின்ற போது அவரை பற்றிய மிகப்பெரிய பிரமிப்பு எங்களிற்கு ஏற்பட்டது. சாதரணமாக அரசியல்வாதிகள் தமிழ் தலைவர்கள் என சொல்லப்படுபவர்கள் அவ்வாறான சூழலிலே எப்படி செயலாற்றவேண்டும்எப்படி தங்கள் குரல்களை வெளிப்படுத்தவேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக குமார்பொன்னம்பலம் விளங்கினார். உண்மையில் இன்று மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவுப்பேருரையை ஆற்றுவதற்கு எனக்கு அழைப்பு கிடைத்தபோது.எனக்குள் என்னுடைய வாழ்க்கையிலே முதல் தடவையாக 1982 ம் ஆண்டு எனது 9 வயதிலே சந்தித்த முதலாவது அரசியல்வாதி அவர்தான் என்ற நினைப்பு எழுந்தது. திருகோணமலையிலே எங்கள் குடும்பம் வாழ்ந்துகொண்டிருந்தபோது 82ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் திருகோணமலைக்கு வந்திருந்தார். அப்போதுதான் அவரை நான் முதலில் பார்த்தேன். எனது வாழ்க்கையில் நான் கண்ட முதலாவது அரசியல்வாதி அவர்தான்.அப்படி அறிமுகத்தை தந்தவரின் 25வது ஆண்டு நினைவுதினத்தில் உரையாற்ற வாய்ப்பு கிடைத்த காலப்பொருத்தத்தை நான் எண்ணிப்பார்க்கின்றேன். இன்று மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுகளை நாங்கள் மீட்டுக்கொண்டிருக்கின்றபோது , அவர் தனது பிரதிநிதித்துவத்தை, ஒரு போராட்டம் மிக வேகமாக தியாகங்களுடன் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது பொதுமகனாகயிருந்து மக்கள் பிரதிநிதியாகயிருந்து தனது கடமைகளை செய்தார் என்பதை இன்றைக்கு இந்த வரலாற்று சந்திப்பிலே இன்றைய பொழுதுகளில் நாங்கள் மீட்டிப்பார்க்கவேண்டியுள்ளது. அந்த வகையிலேதான் எனது நினைவுப்பேருரையை மக்கள் மயப்படுத்தவேண்டிய அரசியல் என்ற தலைப்பிலே நான் நிகழ்த்தவுள்ளேன். இந்த நினைவுப்பேருரையிலே ஐந்து விடயங்களை நான் முக்கியமாக தொட்டுச்செல்லலாம் என நான் நினைக்கின்றேன். ஒன்று தமிழ் மக்களுடைய ஈழத்தமிழ் மக்களுடைய அடிப்படை கோரிக்கைகள்,அவற்றை பற்றிய புரிதல்கள் எண்ணக்கருக்கல் முதலாவதாகவும், இரண்டாவது எங்களிற்கு தற்போது பேசுபொருளாக மாறியிருக்க கூடிய அரசியலமைப்பு நகல்வடிவத்தில் காணப்படும் பிரச்சினைகள் பற்றியும்,இதற்கு மாற்றாக நாங்கள் முன்னெடுக்கப்படுவதாக பரிந்துரைத்து ,பார்க்ககூடிய தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டம் அது பற்றிய கரிசனைகள் குறித்தும். எவ்வாறு இருந்தாலும் இன்றைய பொழுதுகளில் ஈழத் தமிழர்களின் மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு ஆட்சியில் இருக்ககூடிய தேசிய மக்கள் சக்தி,ஜேவிபியின் பார்வை அவர்களுக்கு ஊடாக நாங்கள் பெறக்கூடிய சாத்தியங்கள் குறித்தும்,அதன் ஊடாக மக்கள் மயப்படுத்தவேண்டிய ஈழத்தமிழர் அரசியலை ,தேர்தல்களிற்கு அப்பால், அரசியல் கட்சிகளிற்கு அப்பால் கட்டமைக்கப்படவேண்டிய அரசியலை,பற்றி பேசுவதாக எனது இறுதி பகுதியும் அமைந்திருக்கும். ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளிற்கான அடிப்படை கோட்பாடுகளை நாங்கள் இந்த கட்டத்திலே நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டிய ஒரு கடப்பாட்டில் இருக்கின்றோம். இன்றைக்கு புதிய அரசாங்கம் பதவியேற்று அதிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற்றிருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலிலே மிகக்கணிசமான வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறான பின்னணியிலே நீண்டு தொடரும் எங்களுடைய பிரச்சினையை எங்களுடைய போராட்ட வரலாற்றின் தீர்வை நோக்கி நாங்கள் நகரவேண்டுமாகயிருந்தால்,அந்த தீர்விற்காக கொழும்பிலிருந்து வெளிப்படுத்தப்படவேண்டிய சமிக்ஞைகள் குறித்து நாங்கள் மிக கவனமாகயிருக்கவேண்டும். வெறுமனே எங்களது கோரிக்கைகளை அபிலாசைகளை நாங்கள் தன்னியல்பாக முன்வைப்பதை விட ,அவ்வாறான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதற்கான கவனத்தில் எடுக்கப்படுவதற்கான ஏதுநிலைகளை கொழும்பிலிருந்து அறிகுறிகளாக சமிக்ஞைகளாக எதிர்பார்த்திருக்கவேண்டிய இடத்திலிருக்கின்றோம். இன்றைக்கு பதவியேற்றிருக்ககூடிய தேசிய மக்கள் சக்தி மிகவும் வலுவான கட்டத்திலிருந்தாலும் கூட கொழும்பிலிருந்து கிடைக்ககூடிய செய்திகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது வலுவான பிரதிநிதித்துவம் ஊடாக எதனை சாதிக்கப்போகி;ன்றது என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டேயுள்ளது. கட்டமைப்பு மாற்றத்தை முன்வைத்து வந்த அரசாங்கத்தினால் அந்த கட்டமைப்பு மாற்றத்தை முழுமையாக எடுத்துச்செல்ல முடியுமா கட்டமைப்பு மாற்றத்தை மேலிருந்து கீழாக எடுத்துச்செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மிகக்குறைந்த காலப்பகுதி தான்அவர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது அவர்கள் தங்கள் போக்கினை அல்லது நிருபிக்கவேண்டிய காலப்பகுதி என்பது ஒப்பீட்டளவில் குறுகியது என நாங்கள் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அரசியல் வாழ்வு என்பதும் கடந்தகாலத்தில் ஸ்ரீலங்காஅரசாங்கத்தை ஆண்டுகொண்டிருந்தவர்கள் விட்டுச்சென்ற பாதைகளில் இருந்து மிகவித்தியாசமானவர்களாக அவர்கள் தங்களை காட்டவேண்டிய தேவையிருப்பதை வைத்து பார்க்கும்போதும்,இந்த நாட்கள் மிக முக்;கியமானவையாக உள்ளன. தனியே தமிழ்மக்கள் மத்தியில் மாத்திரம் அல்லாது தெற்கிலிருந்தும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது குவிந்திருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான அதீத எதிர்பார்ப்பு தான் அவர்களிற்கான பெரிய அச்சமாகவும் இன்று மாறிவருகின்றது. ஒரு எதிர்பார்ப்பு என்பது அதி உச்ச அளவிலே இருக்கும்போது,அந்த எதிர்பார்ப்பை எப்படி திருப்தி செய்து கொள்வது என்பதிலே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு முனைப்பான முன்நகர்வை எடுத்து வருவதாக இன்னமும் உறுதிப்படுத்தக்சூடிய தடயங்கள் எங்களிற்கு கிடைக்கவில்லை. அவ்வாறான பொழுதிலே ஆகக்குறைந்தது ஈழத்தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு அரசியல் நல்லெண்ணத்தை எடுத்துக்காட்டும் முயற்சிகளை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இதுவரைக்கும் அவ்வாறான முயற்சிகள் எங்கள் கண்களிற்கே எங்கள் அறிவுபுலத்திற்கோ தெரிவதாக கிடைக்கப்பெறவில்லை. குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு ஆக்கபூர்வமான அல்லது மனச்சுத்தியுடனான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அறிகுறிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும். இன்றைக்கு எங்களின் மிக முக்கியமான பிரச்சினைகளாகயிருக்கின்ற வலிந்து காணாமலாக்கபட்டோர்,தொடர்பான நிலை, படைகளிடம் கையளிக்கப்பட்டோர் தொடர்பான நிலை,பற்றிய வெளிப்படையான பிரகடனம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினாலே வெளிப்படுத்தப்படவேண்டும். இன்றைக்கு மீதமாகவுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்.பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும். Local News | Virakesari
  21. அரிசி விவகாரம் தொடர்பில் வட மாகாணத்தில் 774 விசேட சுற்றி வளைப்புககள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்துள்ளார். அரிசி விற்பனை தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரிசி விலை மற்றும் பதுக்கல் தொடர்பில் கவனம் செலுத்தி 2024 ஆம் ஆண்டு அரிசி விற்பனை தொடர்பான வட மாகாணத்தில் 774 விசேட சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா மாவட்டத்தில் அரிசி தொடர்பில் 126 விசேட சுற்றிவளைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டது. எனினும், வட மாகாணத்தில் பெரியளவிலான பதுக்கல்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தார். அரிசி விவகாரம் ; வட மாகாணத்தில் 774 சுற்றிவளைப்புக்கள் | Virakesari.lk
  22. “பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்தின் உண்மையான செலவு” என்ற தலைப்பில் 2024.12.29 ஆம் திகதி ஞாயிறு சிங்கள மொழிப் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் பாராளுமன்றம் விளக்கம் அளித்துள்ளது. பாராளுமன்ற செலவுத் தலைப்பின் கீழ் சம்பிரதாயமாக நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் தேநீர் விருந்துபசாரத்திற்காக ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வில் 287,340 ரூபாவும், பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசராத்திற்கு 339,628.55 ரூபாவும் செலவு செய்யப்பட்டிருப்பதாக குறித்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பம் 2020.08.20ஆம் திகதியும், பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பம் 2024.11.21ஆம் திகதியும் இடம்பெற்றன. இதற்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றம் மற்றும் பத்தாவது பாராளுமன்றத்தின் முதல்நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசாரங்களுக்கான செலவுகள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களினால் வேறுபடுகின்றன என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றோம். ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாராளுமன்றங்களின் முதல்நாள் அமர்வுகளுக்கிடையில் 4 வருட கால இடைவெளி காணப்படுகின்றது. இக்கால இடைவெளியில் சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்ற இறக்கங்கள் விருந்துபசாரத்துக்கான செலவுகள் உள்ளிட்ட ஏனைய செலவினங்கள் அதிகரிப்பதற்குப் பிரதான காரணமாக அமைந்தது. இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவினால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்தமையால் உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான செலவுகள் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் அண்ணளவாக 100 வீதத்தினால் அதிகரித்துள்ளன என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றோம். மேலும், இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி, இராஜதந்திரிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் பாராளுமன்ற உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம் என பாராளுமன்றம் விளக்கமளித்துள்ளது. பாராளுமன்ற தேநீர் விருந்தின் செலவு விபரம் குறித்து விளக்கம் | Virakesari.lk
  23. ஆர்.ராம் ரஷ்யப்படையில் வடபகுதி இளைஞர்கள் வலிந்து இணைக்கப்பட்டுள்ளமை உட்பட இலங்கையர்கள் போரில் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பில் ரஷ்ய வெளிவிவார அமைச்சருடன் அமைச்சர் விஜித ஹேரத் விரைவில் உத்தியோகபூர்வமான பேச்சுக்களை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா போராட்டக்காரர்களுடனான கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த முகவர்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணையொன்றை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு முன்னாலுள்ள சுற்றுவட்டத்தில் ரஷ்யப்படையில் தமது உறவுகள் வலிந்து இணைக்கப்பட்டு போரில் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவித்து நான்கு தாய்மார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சிவில் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் இணைந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும், பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரவுக்கும் இடையிலான சந்திப்பு வெளிவிவகார அமைச்சின் பிரதி அமைச்சர் அலுவலகத்தில் இன்று (6) நண்பகலளவில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ரஷ்ய படையில் இலங்கையர்கள் வலிந்து இணைப்பு குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் விரைவில் பேச்சு - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா | Virakesari.lk
  24. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காற்றுமாசு உயர்வடைந்திருந்த நிலையில், அது தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்ததாவது: நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் வளித்தரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் மாதம் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காற்றுமாசு நிலை (சுட்டெண்) அதிகளவில் ஏற்பட்டிருந்த நிலையில், டிசெம்பர் மாதம் 2ஆம் திகதிமுதல் நிலைமை மெல்லமெல்ல இயல்புக்குத் திரும்புகின்றது. காற்றின் வடிவம் மாறி வீசுகின்றபோது (மாறுபட்ட சுழற்சி நிலை) அயல் நாடுகளில் இருந்து மாசுத் துணிக்கைகள் அதிகளவில் எடுத்து வரப்படுகின்றன. இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையே காற்றுமாசை அதிகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் வருகின்றது. காற்றின் வழித்தரச் சுட்டெண் 50க்கு உட்பட்டதாக இருந்தால் அது ஆரோக்கியமான நிலையாகக் காணப்படும். 50 தொடக்கம் 100 வரை ஓரளவு பாதிப்பு நிலையாகவும், 100 தொடக்கம் 150 வரை கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் நிலையாகவும் காணப்படும். இலங்கையில் இத்தகைய காற்றுமாசே ஏற்பட்டிருந்தது. காற்றுமாசு அதிகரிக்கின்றபோது, அதனை எதிர்கொண்டு மக்களை சுகாதார நிலையில் பேணிப் பாதுகாக்க சர்வதேச நிறுவனங்கள், தேசிய நிறுவனங்களுடன் இணைந்து நாம் பணியாற்றுகின்றோம். மேலும் வளியின் தரத்தைக் கண்காணிக்க வளித்தர உணரிகளை மையமாக வைத்து செயற்பாடுகளை மேற்கொள்கின்றோம் - என்றார். (ப) யாழ்ப்பாணத்தில் காற்று மாசு கட்டுக்குள்!
  25. 03 Jan, 2025 | 03:43 PM (எம்.மனோசித்ரா) நாட்டு மக்களின் 76 ஆண்டு கால சாபம் குறித்து பேசிய தேசிய மக்கள் சக்தியே இன்று மக்களுக்கு பெரும் சாபமாகியிருக்கிறது. 100 நாட்களில் அரிசியின் விலையை நூறு ரூபாவால் அதிகரிக்கச் செய்திருக்கிறது. 24 மணித்தியாலங்களில் செய்து காட்டுவதாகக் கூறிய விடயங்களில் ஒன்றையேனும் 100 நாட்கள் கடந்தும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (3) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 76 ஆண்டுகளின் பின்னர் இம்முறை அதிக விலையில் பாற்சோற்றை உண்ணவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த அரசாங்கம் பதவியேற்கும்போது 170 ரூபாவாகக் காணப்பட்ட சிவப்பரிசியின் விலை தற்போது 280 ரூபா வரை உயர்வடைந்துள்ளது. 100 நாட்களில் அரிசியின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அறவிடப்படும் 65 ரூபா வரியைக் குறைத்து, உள்நாட்டு சந்தையில் போட்டித்தன்மையை ஏற்படுத்தி குறைந்த விலையில் மக்களுக்கு அரிசியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக அரிசி ஆலை உரிமையாளர்களை பாதுகாத்துக்கொண்டிருக்கிறது. விலை சூத்திரம் இருந்தால் அரசாங்கம் என்ற ஒன்று எதற்கு என கேள்வியெழுப்பிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இவ்வாண்டிலிருந்து எரிபொருளுக்கான வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரண விலையில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்று எதிர்பார்த்த மக்கள் இன்று அமைச்சர்களின் பிரச்சினைகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். மக்கள் இதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கவில்லை. விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியை மறுசீரமைத்து பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியிலும் மக்களுக்கான சேவையை ஆற்றுவோம் என்றார். மக்களுக்கு பெரும் சாபமாகியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் - ஜே.சி.அலவத்துவல | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.