Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. Published By: VISHNU 10 JAN, 2024 | 07:54 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணீரூற்று முள்ளியவளை பகுதியில் புடவையகத்தோடு கூடிய இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றிலேயே புதன்கிழமை (10) அதிகாலை தீ பரவியுள்ளது. புதன்கிழமை (10) அதிகாலை திடீரென தீ ஏற்ப்பட்டதை அவதானித்த அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று கூடி குறித்த வர்த்தகநிலையத்தில் பரவிய தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். இருப்பினும் குறித்த தீப்பரவல் காரணமாக வர்த்தகநிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களும் முற்று முழுதாக எரிந்து அழிவடைந்துள்ளது. பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் இவ்வாறு அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது எவ்வாறு குறித்த தீ ஏற்ப்பட்டது என்பது தொடர்பிலான விசாரணைகளையும் மேலதிக விசாரணைகளையும் முள்ளியவளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். முள்ளியவளையில் வர்த்தக நிலையம் தீயில் எரிந்து நாசம் | Virakesari.lk
  2. 08 JAN, 2024 | 02:06 PM முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட உடையார்க்கட்டு, குரவில் கிராமத்திலுள்ள வீடொன்றின் கிணற்றுக்குள் கிணற்று நீருடன் மண்ணெண்ணெயும் வெளியேறுவதாக நேற்று (07) கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த நாட்களில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் குரவில் கிராமத்தில் உள்ள இவ்வீட்டின் கிணற்றில் வெள்ள நீர் நிரம்பிய நிலையில், கிணற்றினை சுத்தம் செய்வதற்காக நேற்று கிணற்று நீரை நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு இறைத்துள்ளார்கள். அப்போதே கிணற்று நீருடன் மண்ணெண்ணெய் கலந்திருந்தமை கண்டறியப்பட்டு, அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் காணி உரிமையாளர் கூறுகையில், 2012ஆம் ஆண்டு மீள்குடியேறிய பின்னர், 23 அடி ஆழம் கொண்ட கிணறு தோண்டப்பட்டு கட்டப்பட்டுள்ளது. தற்போது கிணற்றினை சுத்தம் செய்யும்போது கிணற்று நீர் முதலில் கருநிறத்தில் காணப்பட்டுள்ளது. பின்னர், மண்ணெண்ணெய் மணம் வீசத் தொடங்கியுள்ளது. கிணற்று நீரின் மேற்படலத்தில் மண்ணெண்ணெய் தொடர்ச்சியாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில், வாளியால் தண்ணீரை அள்ளி, அதில் ஒரு இலையினை நனைத்து, அதனை பற்றவைத்தபோது அந்த இலை எரிந்துள்ளது. அந்த திரவத்தில் மண்ணெண்ணெய் மணம் வீசியது. வீட்டின் உரிமையாளர்கள் கிராம சேவையாளருக்கு தொடர்பினை ஏற்படுத்தி விடயம் குறித்து தெரியப்படுத்த, கிராம சேவையாளர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் கிணற்றினை பார்வையிட்டுள்ளனர். அவர்கள் கிணற்றில் எண்ணெய் கலந்த நீரின் மாதிரியை எடுத்துச் சென்றதுடன், இது தொடர்பில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு மேற்கொண்டு சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அயலவர்களை விசாரித்தபோது, காணிக்கு அருகில் விடுதலைப்புலிகள் காலத்தில் விடுதலைப்புலிகளின் முகாம் ஒன்று காணப்பட்டுள்ளதாகவும் அந்த காலத்தில் நிலத்தில் புதைக்கப்பட்ட மண்ணெண்ணெய் லீக்காகி தற்போது நிலத்தடி நீரில் கசிந்துள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்கள். தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயரமாக காணப்படுவதால் தொடர்ச்சியாக இறைத்து நீர்வரத்துப் பகுதியினை கண்டறிய முடியாத நிலை காணப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை, குடிநீர் மற்றும் வீட்டுத் தேவைக்காக பயன்படுத்தி வந்த கிணற்றில் மண்ணெண்ணெய் கலந்திருப்பதால் குடிநீரினை பெற்றுக்கொள்வதற்கும் குடித்தல், நீராடுதல் போன்ற தேவைகளுக்காக நீரை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், வீதிக்கு சென்று பொதுக்கிணற்றில் இருந்தே குடிநீரினை தாங்கள் பெற்றுக்கொள்வதாகவும் கிணறு அமைந்துள்ள வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். முல்லை. புதுக்குடியிருப்பு, உடையார்க்கட்டு வீட்டுக் கிணற்று நீரில் மண்ணெண்ணெய்! | Virakesari.lk
  3. 08 JAN, 2024 | 03:04 PM தொடர்ந்து மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாணம் பகுதியில் 1 கிலோ முருங்கைக்காயின் விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 1 கிலோ முருங்கைக்காயின் விலை 3,000 ரூபாவாக அதிகரிப்பு! | Virakesari.lk
  4. Published By: VISHNU 08 JAN, 2024 | 04:52 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (07) காலை முதல் மீண்டும் அடைமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லரிப்பு பிரதேசத்தில் வெள்ள நீர் வீடுகளுக்குள் உட் புகுந்ததினால் பாதிக்கப்பட்டவர்கள் இடைத் தங்கல் முகாம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் நலன் விரும்பிகளினால் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.சிலர் உயரமான இடங்களில் தங்களது கால் நடைகளை பாதுகாப்பதற்காக தற்காலிக கொட்டில் அமைத்துள்ளனர்.போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமையால் படகுகள் மூலம் தமது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை 10 மணி முதல் மீண்டும் மாவட்டத்தில் அடை மழை பெய்து வருகிறது. வயல் நிலங்கள்,சிறுதோட்டப் பயிர்கள் என்பன பாதிக்கப்பட்டுள்ளதாகவும்கால்நடைகளும் இறந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர்தெரிவிக்கினறனர். மருத்துவ சேவையும், குடிநீரும் தேவையாகவுள்ளதாக தெரிவிக்கினறனர். இன்று தமிழ் மக்கள் கூட்டணி கட்சியினர் சமைத்த உணவு வழங்கினார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழையினால் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில்! | Virakesari.lk
  5. Published By: VISHNU 08 JAN, 2024 | 03:57 PM ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாணத்தில் 20 இலட்சம் காணித்துண்டுகளுக்குரிய காணி உரிமம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் காணி உரிமம் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (07) மண்முனை பற்று – ஆரையம்பதி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதியின் பணிபுரைக் கமைவாக 20இலட்சம் காணித்துண்டுகளுக்குரிய காணி உரிமம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் நீண்ட காலமாக அரச காணிகளில் குடியிருந்து அவற்றை பராமரிப்பு செய்ததன் காரணமாக அவர்களுக்கு காணி உரிமம் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. மண்முனைபற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 28 பயனாளிகளுக்கு இதன்போது முதற்கட்டமாக காணி உரிமைம் வழங்கி வைக்கப்பட்டன. மண்முனைபற்று ஆரையம்பதி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ரோஜினி விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காணி உரிம ஆவணங்களை வழங்கி வைத்தார். பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன், மற்றும் பிரதேச செயலக காணி பிரிவு உயர் அதிகாரிகள் பயனாளிகள் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். கிழக்கு மாகாணத்தில் காணி உரிமம் வழங்கி வைப்பு! | Virakesari.lk
  6. Published By: RAJEEBAN 08 JAN, 2024 | 05:17 PM இலங்கையின் மனிதஉரிமை ஆணைக்குழு இலங்கையின் பொலிஸாரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் யுக்திய நடவடிக்கை குறித்து கரிசனம் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 17 ம் திகதி முதல் 31 ம் திகதி முதலான வரையான காலப்பகுதிக்குள் 20,000க்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள மனித உரிமை ஆணைக்குழுபோதைப்பொருளை திட்டமிட்ட குற்றச்செயல்களிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. திட்டமிட்ட குற்றச்செயல்களையும் ஆபத்தான போதைப்பொருட்களை கடத்துவதையும் தடுப்பது மிகவும் அவசியமான நோக்கம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள மனித உரிமை ஆணைக்குழு எனினும் யுக்திய நடவடிக்கையின்போது சித்திரவதைகள் ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற முறையில் நடத்துதல் கண்மூடித்தனமான கைதுகள் தடுத்துவைத்தல் என்பன காணப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. யுக்திய நடவடிக்கை குறித்து கடும் கரிசனையை வெளியிட்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த நடவடிக்கை பரந்துபட்ட நீதியுடன் இணங்காணப்படுவதாக மாறியுள்ளது யுக்திய என்ற சிங்கள சொல்லிற்கு பொருத்தமற்றதாக மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது இளைஞர்கள் உட்பட்டவர்களை ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்துதல் குறித்த அறிக்கைகளால் கலக்கமடைந்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யுக்திய நடவடிக்கையின்போது சித்திரவதைகள் ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற முறையில் நடத்துதல் கண்மூடித்தனமான கைதுகள் - மனித உரிமை ஆணைக்குழு கடும்கவலை | Virakesari.lk
  7. செங்கடல் பகுதிக்கு செல்வதற்கு தயாரான நிலையில் இலங்கை கடற்படையின் கப்பல்-கடற்படை பேச்சாளர் செங்கடல் பகுதியில் ஹெளத்திகிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளில் இருந்து சர்வதேச கப்பல்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இலங்கை கப்பலொன்று அந்த பகுதிக்கு செல்வதற்கு தயாராகவுள்ளது என கடற்படையின் பேச்சாளர் கயன்விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். சரக்குகப்பல்களை பாதுகாப்பதற்காக செங்கடல் அரபிக்கடல் ஏடன்வளைகுடா மற்றும் அதனை அண்டிய கடல்பாதைகளில் இந்த கப்பலை பயன்படுத்தவுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில்இலங்கைகடற்படை தனது கப்பல்களைஅனுப்புகின்றது ஆனால் அதற்கான திகதியை இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். புரொஸ்பெரிட்டி கார்டியன்ஸ் நடவடிக்கையின் கீழ் இலங்கை முதலில்ஒரு கப்பலை அனுப்பும் என தெரிவித்துள்ள கடற்படை பேச்சாளர் இது குறித்த கலந்துரையாடல் இடம்பெறும் கப்பலின் திறமையை அடிப்படையாக வைத்து அதனை பயன்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய தேவைகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மேலதிக கப்பல்களை செங்கடல் பகுதிக்கு அனுப்புவோம் எனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். செங்கடல் பகுதிக்கு செல்வதற்கு தயாரான நிலையில் இலங்கை கடற்படையின் கப்பல்-கடற்படை பேச்சாளர் | Virakesari.lk
  8. Published By: RAJEEBAN 05 JAN, 2024 | 11:58 AM செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிரான அமெரிக்கா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையினரும் இணைத்துக்கொள்வதுகுறித்து இலங்கை கடற்படை ஆராய்ந்து வருகின்றது. ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் பகுதிக்கு இலங்கை கடற்படையின் கப்பல்களை அனுப்புவதற்கு முன்னர் அது குறித்து தீவிரமாக ஆராயவேண்டும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் நடவடிக்கைகளில் இலங்கையும் இணைந்து கொள்ளக்கூடும் என மூன்றாம்திகதி ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டிருந்தார். செங்கடலில் ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் கப்பல்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களிற்கு எதிரான சர்வதேச படையணியில் இணைந்துகொள்ளுமாறு அமெரிக்கா விடு;த்த வேண்டுகோள்களை பல உலகநாடுகள் நிராகரித்துள்ளன. காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்களை தொடர்ந்து ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் இஸ்ரேலின் கப்பல்கள் உட்பட கப்பல்களை தாக்கிவருகின்றனர். ஹெளத்திகிளர்ச்சியாளர்களிற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு கப்பல்களை வழங்குமாறு இலங்கை உட்பட 20 நாடுகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. செங்கடலிற்கு இலங்கை கடற்படை கப்பலை அனுப்பினால் அதற்காக பெருந்தொகையை செலவிடவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள தொடர்புபட்ட வட்டாரங்கள் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையையும் கருத்தில்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளன. செங்கடலிற்கு கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை | Virakesari.lk
  9. கொள்ளுப்பிட்டியில் சோதனை என்ற பெயரில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியானதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பொலிஸாரின் நடவடிக்கைகளிற்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இரண்டு இளைஞர்களில் ஒருவரின் தந்தை தனது மகன் எதிர்கொண்ட துன்புறுத்தல்கள்குறித்த விபரங்களை சமூக ஊடகத்தில் விபரமாக பதிவிட்டுள்ளார். இரவு 8.45 மணியளவில் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களையும் யுவதியொருவரையும் கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மறித்துள்ளனர் பொலிஸார் மகனை கடும் சோதனைக்கு உட்படுத்தினார்கள் அவரது உடமைகளை வீசி எறிந்தார்கள் என தந்தை ஜெரால்ட் டி சேரம் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். ஏன் தாங்கள் மீது சோதனையை மேற்கொள்கின்றனர் என்பதற்கான காரணத்தை பொலிஸார் தெரிவிக்கவில்லை என தந்தை தெரிவித்துள்ளார். நான்கு பொலிஸார் தனது மகனை முழுமையாக ஆடைகளை அகற்றி சோதனையிட்டனர் அவரை தாக்கினர் என தெரிவித்துள்ள தந்தை கொழும்பின் மிகவும் மும்முரமான பகுதியில் இது இடம்பெற்றது என குறிப்பிட்டுள்ளார். பொலிஸாரின் இந்த நடவடிக்கையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலியபீரிஸ் சமூக ஊடகத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். சில பொலிஸாரினால் பொதுமக்கள் எவ்வாறு மிரட்டப்படுகின்றனர் மற்றும் மிருகத்தனமாக நடத்தப்படுகின்றனர் என்பதற்கான சிறிய உதாரணமே இந்த சம்பவம் என தெரிவித்துள்ள சாலியபீரிஸ் சில பொலிஸாரின் செயற்பாடுகள் பொலிஸ் திணைக்களத்திற்கே கரும்புள்ளியாக அமைகின்றன என குறிப்பிட்டுள்ளார். பொலிஸார் கட்டுப்பாடற்ற விதத்தில் கட்டுங்கடாத விதத்தில் செயற்படுவதற்கான மற்றுமொரு உதாரணம் இதுவென தெரிவித்துள்ள சாலியபீரிஸ் பொலிஸாரின் மிருகத்தனமான மற்றும் தண்டனையின்மை நடவடிக்கைகள் குடிமக்களின்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என தெரிவித்துள்ளார். துரதிஸ்டவசமாக உயர்பதவிகளில் உள்ள சில உயர் அதிகாரிகளின் செயற்பாடுகள் இந்த வகையான நடத்தையை கண்டித்து ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பலரிடம் தாங்கள் பொலிஸாரிடம் எந்த அநீதிகள் குறித்த விபரங்களை வெளியிடுவதற்கான வலுவோ அல்லது வழிமுறையோ இல்லை என தெரிவித்துள்ள சாலிய பீரிஸ் சட்ட அமுலாக்கல் தரப்பினரின் இந்த நடவடிக்கைகைள இந்த நாட்டின் மக்கள் கேள்வி கேட்காவிட்டால் சில மனவளர்ச்சி ஊழல் நிறைந்த காவல்துறை அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையிலிருந்து எவரும் தப்ப முடியாத காலம் உருவாகும் எனவும் எச்சரித்துள்ளார். கொள்ளுப்பிட்டியில் பொலிஸார் அடாவடித்தனமான சோதனை ; பொருட்களை வீசி எறிந்தனர் ; ஆடைகளை களைந்தனர் - சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு | Virakesari.lk
  10. 05 JAN, 2024 | 05:16 PM முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட தேராவில் குளம் நீர் நிரம்பி காணப்படுவதால் குளத்தினை அண்டிய மக்கள் இன்றும் தண்ணீருக்கு மத்தியில் வாழ்ந்து வருவதுடன் வீதிகள் குளத்துநீர் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதிலும் மக்கள் பெரும் இடர்களை எதிர் கொண்டுள்ளார்கள். தேராவில் குளக்கரையினை அண்டிய 10 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தேராவில் முதன்மை வீதி குளத்து நீரினால் மூழ்கி காணப்படுவதால் வீதியால் செல்லமுடியாத நிலை கிராமத்திற்கு செல்லும் சிறு வீதிகளும் குளத்து நீரினால் மூழ்கியுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தேராவில் குளம் விவசாய செய்கைக்கு உட்படாத மூங்கிலாறு, தேராவில் கிராமத்திற்கு பொதுவாக காணப்படும் ஒரு சிறிய குளமாகும். அண்மையில் பெய்த மழை வெள்ளத்தினால் குளம் நிரம்பி மக்களின் காணிகள், வீடுகள், வீதிகளுக்குள் குளத்து நீர் சென்றுள்ளதால் மக்கள் இன்றும் தங்கள் அன்றாட வாழ்வினை கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தேராவில் கிராமத்திற்கு செல்லும் முதன்மை வீதி மற்றும் மூங்கிலாறு கிராமத்திற்குள் செல்லும் சிறு வீதிகள் இரண்டு இரண்டு கோவில்கள் குளத்து நீரில் மூழ்கியுள்ளன. குளக்கரையில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்று முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன் குளத்திற்கு கிழக்காக கட்டப்பட்டுவரும் புதிய பிள்ளையார் கோவில் ஒன்றும் நீரில் மூழ்கியுள்ளன.குளத்து நீரினை வெளியேற்ற முடியாத நிலையில் குறித்த குளம் அமைந்துள்ளது. பாரிய மழைவெள்ளம் ஏற்பட்டு இன்று 15 நாட்களுக்கு மேலாக மக்கள் இவ்வாறான அவல வாழ்வினை வாழ்ந்து கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். நிலத்தடி நீருக்கும் கால்நடைகளுக்குமான நீரினை பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்ட குளத்தில் நன்னீர் மீன்பிடி நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளார்கள். குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றுவதற்கான எந்த பகுதியும் இல்லாத நிலையில் குளம் அமையப்பெற்றுள்ளது. குளத்தினை அண்மித்த கிழக்கு, தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் குளத்து நீர் புகுந்துள்ளதால் வீடுகளுக்குள் இருக்க முடியாத நிலையில் சில குடும்பங்கள் காணப்படுவதுடன் மலசகூடங்கள், கிணறுகள் அனைத்து நிரம்பிய நிலையில் காணப்படுகின்றன. இதனால் குடிதண்ணீரை பெற்றுக்கொள்வதில் கூட சிரமங்களை எதிர் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். மூன்று குடும்பங்கள் இன்றும் தங்கள் வீடுகளுக்குள் இருக்க முடியாத நிலையில் உறவினர்களின் வீடுகளில் தங்கி வாழ்கின்றார்கள் மேலும் பலமக்களின் காணிகளுக்குள் குளத்து நீர் நீரம்பி காணப்படுகின்றது. பாம்பு உள்ளிட்ட விச ஜந்துகளின் தொல்லை காணப்படுவதாகவும் இவ்வாறன நிலை இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரும் என்று தெரியாநிலையில் குளத்து நீர் வற்றுவதற்கு இரண்டு மூன்று மாதம் எடுக்கும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளார்கள். மக்களின் நிலை தொடர்பில் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு தெரியப்படுத்தியும் ஒருதடவை வந்து பார்வையிட்டு விட்டு சென்றவர்கள் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் தெரிவித்துள்ளார்கள். புதுக்குடியிருப்பு தோரவில் குளம் நிரம்பியதால் பல குடும்பங்கள் பாதிப்பு | Virakesari.lk
  11. பூநகரி பிரதேசத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம் 05 JAN, 2024 | 07:49 PM வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (05) பிற்பகல் பூநகரி பிரதேசத்திற்கு விஜயம் செய்தார். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட பூநகரி நகர அபிவிருத்தித் திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பூநகரி நகர அபிவிருத்திக்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தித் திட்டங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தினார். அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூநகரி கோட்டையை பார்வையிட்டார். மேலும், பூநகரி பிரதேசத்தில் இயங்கிவரும் உயர்தர முந்திரி உற்பத்தி நிறுவனமான "வன்னி கெசு" முந்திரி உற்பத்தி நிறுவனத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்து அதன் செயற்பாடுகளையும் அவதானித்தார். இயந்திரவியல் பொறியாளரான யுவதி ஒருவரால் நடத்தப்படும் இந்த கைத்தொழில் நிறுவனம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் இங்கு அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறுவதோடு, கஜு சுத்தப்படுத்தலில் இருந்து அதன் இறுதி செயற்பாடு வரையில் பயன்படுத்தப்படும் அனைத்து இயந்திரங்களும் குறித்த யுவதியால் தயாரிக்கப்பட்டிருக்கின்றமை சிறப்பம்சமாகும். இந்த தொழில் நிறுவனமானது தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி, இது நாட்டின் ஏனைய இளைஞர் யுவதிகளுக்கும் முன்னுதாரணமாகும் என்றும் குறிப்பிட்டார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் இக்கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்டனர். பூநகரி பிரதேசத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம் | Virakesari.lk
  12. நியூயார்க்: ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’, ஜெஃப்ரி எப்ஸ்டீன்... உலகம் முழுவதும் பரபரப்பான பேசுபொருளாக இவை மாறியுள்ளன. யார் இந்த ஜெஃப்ரி எஸ்டீன்? அது என்ன ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ என்ற ஆவல் பலர் மத்தியிலும் பரவியுள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்காவில் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் பரபரப்பாக அடிபட்ட நபர். அவர் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தபோது சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்னர் அந்த வழக்குகள் கைவிடப்பட்டன. அவர் தொடர்பான விசாரணையில் நீதிமன்றம் அறிந்துகொண்ட தகவல்களும் சீலிடப்பட்டு வைக்கப்பட்டன. அந்த வழக்கில் பெரும் புள்ளிகளின் பெயர்கள் அடிப்பட்டது அதற்கு ஒரு காரணம். ஆனால், அண்மையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண நீதிபதியான லொரட்டா ப்ரெஸ்கே ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். “இனியும் அந்த வழக்கு விசாரணையில் இடம்பெற்ற முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் தொடர்பாக ரகசியம் காக்க வேண்டிய அவசியமில்லை. ஜனவரி 1-க்குப் பின்னர் படிப்படியாக விசாரணை விவரங்களை வெளியிடலாம்” என்றார். ஏனெனில், இந்த விசாரணை விவரத்தில் பிரின்ஸ் ஆண்ட்ரூ முதல் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வரை பலரது பெயர்களும் இடம்பெற்றுள்ளதால் ‘ஜெஃப்ரி லீக்ஸ்’ பரபரப்பாகப் பேசப்படுகிறது. பிரச்சினையின் பின்னணி: கடந்த 2015-ஆம் ஆண்டு வர்ஜீனியா கிஃபர் என்ற அமெரிக்க பெண், பிரிட்டனைச் சேர்ந்த கிஷ்லெய்ன் மேக்ஸ்வெல் என்பவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பாலியல் தொழில் இடைத்தரகருடன் சேர்ந்து கிஷ்லெய்ன் பாலியல் தொழிலுக்காக ஆள் கடத்தலில் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார். தானும் அவ்வாறாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், 1999 முதல் 2022 வரை பாலுறவில் ஈடுபடும் வயதை எட்டாத தன்னை பலருடனும் கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட வைத்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார் அவர் மீதான வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோது 2019 ஆகஸ்டில் அவர் நியூயார்க் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அத்துடன் எல்லாம் முடிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், தற்போது இந்நாள், முன்னாள் பிரபலங்களை கலக்கம் கொள்ளச் செய்யும் வகையில் நீதிபதி உத்தரவு லீக்காகும் தகவல்களும் அமைந்துள்ளன. எப்ஸ்டீன் - பில் கிளின்டன் தொடர்பு: நீதிமன்ற ஆவணங்களில் பில் கிளின்டன் "Doe 36" என்று ரகசிய குறியீட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ளார். அந்த ரகசியக் குறியீடு 50 முறை ஆவணத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. வழக்கு தொடர்ந்த வர்ஜினியா, தான் பில் கிளின்டனை ஒரு தீவில் இரண்டு முறை பார்த்திருப்பதாகவும் அப்போது அவருடன் இளம் பெண்கள் இருந்ததாகவும் கூறியுள்ளார். அந்தத் தீவு எப்ஸ்டீனுக்கு சொந்தமானது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டை முன்னரே கிளின்டன் தரப்பு பலமுறை மறுத்துள்ளது. அது தொடர்பாக நடந்த விசாரணையில் பில் கிளின்டனின் விமானப் பயண ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. அப்போது, அவர் எப்ஸ்டீனின் விமானத்தைப் பயன்படுத்தி பாரிஸ், பாங்காக், ப்ரூனே ஆகிய இடங்களுக்குச் சென்றது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பயணங்களை அதிபர் பதவிக்காலத்துக்குப் பின்னர் கிளின்டன் மேற்கொண்டுள்ளார். நீதிமன்ற ஆவணங்களின்படி ஜொஹான ஸ்ஜோபெர்க் என்ற பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணும் கிளின்டன் சர்ச்சையை உறுதிப்படுத்தும் வகையில் சாட்சியம் கூறியுள்ளார். எப்ஸ்டீன் என்னிடம், “கிளின்டனுக்கு உங்களைப் போன்ற இளம் பெண்களையே பிடிக்கும் என்று கூறினார்” என சாட்சியம் கூறியிருக்கிறார். கிளின்டன் அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையைச் சேர்ந்த 22 வயது பணிப் பெண்ணுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டதாக சர்ச்சையில் சிக்கியது நினைவுகூரத்தக்கது. ஸ்டீபன் ஹாக்கிங் - ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பு: 2015-ல் வர்ஜினியா கிஃபரின் வழக்கையடுத்து எப்ஸ்டீன் அனுப்பிய மின்னஞ்சல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கிஷ்லெயின் மேக்ஸ்வெல்லுக்கு எப்ஸ்டீன் அனுப்பிய அந்த மின்னஞ்சலில், “ஸ்டீபன் ஹாக்கிங் பாலுறவுக்கான வயதை எட்டாத பெண்களுடன் உறவு கொண்டார் என்று வெர்ஜினியா கூறுவது பொய் என்று சொல்ல முன்வரும் அவரது நண்பர்கள், குடும்பத்தினர், தெரிந்தவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு பெரும் தொகையை சன்மானமாக வழங்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. இளவரசர் ஆண்ட்ரூவும்.. - இந்த பாலியல் குற்றச்சாட்டு வரிசையில் இடம்பெற்றுள்ள இன்னொரு பெரும்புள்ளி இளவரசர் ஆண்ட்ரூ. ராணி எலிச்பெத்தின் மகன்களில் ஒருவரான இளவரசர் ஆண்ட்ரூ, சட்டரீதியான வயதுக்கு கீழே இருந்த அமெரிக்கப் பெண் வர்ஜீனியாவுடன் பலவந்தமாக பாலியல் உறவு வைத்துக்கொண்டார் என்று நீதிமன்ற ஆவணங்களில் உள்ளது. இளவரசர் முறையற்ற வகையில் நடந்து கொண்டார் எனக் கூறும் வகையிலான இந்தக் கூற்றுகள் முற்றாக உண்மைக்கு புறம்பானவை என்று நீண்ட காலமாக பக்கிங்ஹாம் அரண்மனையும் மறுத்து வருகிறது. இருப்பினும், இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் நன்பர் ஜெஃப்ரி எப்ஸ்டைன் என்பது கவனிக்கத்தக்கது. எப்ஸ்டைனால், அவருடன் இருந்த இளவரசர் ஆண்ட்ரூ உட்பட பலருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு தான் நிர்பந்திக்கப்பட்டதாக வர்ஜீனியா கூறியிருக்கிறார். இவர்களைத் தவிர ஆல்ஃபபெட் இங்க் (Alphabet Inc) என்ற கூகுள் நிறுவனத்தின் தாய்க்கழகத்தின் இணை நிறுவருமான லாரி பேஜ் மீதும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பு பற்றி நீதிமன்ற ஆவணங்களில் இருக்கிறது. நோபல் பரிசு புகழ் லாரன்ஸ் க்ராஸ், மறைந்த பாப் கிங் மைக்கேல் ஜாக்சன், மேஜிக் கலைஞர் டேவிட் காப்பர்ஃபீல்டு, காமெடி நடிகர் கிறிஸ் டக்கர், நடிகர் கெவின் ஸ்பேசி ஆகியோரும் ஜெஃப்ரியின் வர்ஜின் தீவுகளில் நடந்த பாலியல் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. எப்ஸ்டீனின் வர்ஜின் தீவுகளில் நடந்த சிறுமிகள், இளம் பெண்களுடனான பார்ட்டி கொண்டாட்டங்களில் பில் கிளின்டன், ஸ்டீபன் ஹாக்கிங் உள்பட இத்தனை பெரும்புள்ளிகளும் ஈடுபட்டனரா என்ற வாத விவாதங்கள் இந்த ‘ஜெஃப்ரி லீக்ஸ்’ ஆவணங்களால் வலுத்துள்ளது. Epstein Files | பில் கிளின்டன் முதல் இளவரசர் ஆண்ட்ரூ வரை - பாலியல் விவகாரத்தில் அடிபடும் பிரபலங்கள்! | Bill Clinton, Donald Trump, Stephen Hawking: Who Are Named In Epstein Files - hindutamil.in
  13. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட முடியாது என மீண்டும் வலியுறுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு குழுவினரிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனது வேட்பாளரை தெரிவு செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன்என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து தனது கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வருடம் இடம்பெறக்கூடிய எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள பெரமுன தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு வேடிக்கையாக நான் இல்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் தேர்த்ல சட்டத்தின் கீழ்மகிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிடமுடியாது பல பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன யார் வேட்பாளர் என பார்ப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார் ? மகிந்த தெரிவித்திருப்பது என்ன? | Virakesari.lk
  14. கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதி 04 JAN, 2024 | 10:24 PM யாழில் நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் கூட்டத்தில் இந்தியாவின் zee தமிழ் சரிகமப நிகழ்வின் வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய கில்மிஷா உதயசீலனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்தார். கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதி | Virakesari.lk
  15. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பாதுகாப்பு உத்தியோகத்தரின் அநாகரிகமான செயல்! (இனியபாரதி) (03) இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சிறி என்று அழைக்கப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பார்வையாளர்களுடன் அநாகரிகமான முறையில் நடந்துள்ளதுடன் ஒருவரை தாக்கவும் முயன்றுள்ளார். இச்சம்பவம் யாழ்ப்பாணம் போதனாமருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் தனது தாயாரினை கண் சத்திர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். அவர் வீட்டுக்கு வந்து உணவு எடுத்துக் கொண்டு சென்று தாயாருக்கு வழங்கியுள்ளார். இதன்போது அங்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அந்த பெண்ணுடன் அநாகரிகமான முறையில் நடந்து நாகரீகமற்ற வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டார். இதன்போது குறித்த பெண், தான் தாயாரை விடுதியில் நின்று கவனித்து வருவதாகவும் சாப்பாடு கொடுக்க வந்ததாகவும் தெரிவித்தார். அந்த பெண் கூறியதை செவிமடுக்காத குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை வெளியே விரட்டியடித்தார். இவ்வாறு செய்துவிட்டு அருகில் இருந்த விடுதிக்கு சென்று வேறொரு ஆணொருவருடன் முரண்பட்டு அவரை தாக்குவதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது அவ்விடத்திற்கு வந்த மருத்துவர். அவரை தடுத்துள்ளார். குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் இதற்கு முன்னரும் பல தடவைகள் நோயாளிகளுடனும் பார்வையாளர்களுடனும் அநாகரீகமான முறையில் நடந்ததால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர் என்றும் இவர் தொடர்ந்தும் இவ்வாறே செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இவர் வைத்தியர் ஒருவரது உறவினர் என்பதால் இவருடன் ஏனையோர் பேசுவதற்கு பயப்படுவதாக கூறப்படுகிறது. அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகின்றது. இதற்கு முன்னரும் பார்வையாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவங்களும் பாதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அநாகரிகமான செயற்பாடுகளால் மக்களும் நோயாளிகளும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு செல்வதற்கு தயங்குகின்றனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பாதுகாப்பு உத்தியோகத்தரின் அநாகரிகமான செயல்! (newuthayan.com)
  16. யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ! 04 JAN, 2024 | 05:29 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை (4) மாலை 4 மணியளவில் சென்றடைந்தார். யாழ்ப்பாணம் சென்ஜேம்ஸ் பாடசாலை அருகே உள்ள மைதானத்தில் உலங்குவானூர்தி மூலம் சென்றடைந்த ஜனாதிபதி வாகன தொடரணியாக யாழ். மாவட்ட செயலகத்தை சென்றடைந்தார். வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயமாக சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். ஜனாதிபதியின் பங்கேற்புடன் யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பமானது. இதேவேளை, யாழ்ப்பாணம் பழைய பூங்காவுக்கு அருகில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. பழைய பூங்காவிற்கு அருகில் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து வைத்துள்ளனர். இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ! | Virakesari.lk
  17. 04 JAN, 2024 | 05:37 PM மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடி பகுதிகளில் வீதியோரமாக உள்ள வியாபார நிலையங்களை இன்று வியாழக்கிழமை (4) மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதன்போது 7 வியாபார நிலையங்களில் மனித பாவனைக்கு உதவாத கெரட், கருவா, வாழைப்பழம், தோடம்பழம், இனிப்புப் பண்டமான பூந்தி போன்ற பெருமளவிலான பொருட்களை கைப்பற்றியதாகவும், அவற்றை அழிக்கும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் த.மிதுன்ராஜ் தெரிவித்தார். மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலைமையிலான குழுவினரால் இன்று காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட முற்றுகையின்போது கல்லடி பொது சந்தை சதுக்கம், கல்லடி, திருகோணமலை வீதி, அரசடி, ஊரணி போன்ற பகுதிகளில் உள்ள வீதியோர வியாபார நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மரக்கறி வகைகள், பழ வகைகள், மீன்கள், கருவாடு போன்ற பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டன. மட்டக்களப்பில் வீதியோர வியாபார நிலையங்கள் திடீர் முற்றுகை : 7 கடைகளில் மனித பாவனைக்குதவாத பெருமளவு பொருட்கள் கைப்பற்றல் | Virakesari.lk
  18. (எம்.மனோசித்ரா) இலங்கை கடற்படையினரால் கடந்த ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 343 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய 715 கிலோ ஹெரோயின், 3711 கிலோ கேரள கஞ்சா, 50 கிலோ உள்நாட்டு கஞ்சா, 140 கிலோ அஷீஸ், 11 கிலோ ஐஸ் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு 92 572 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 18 உள்நாட்டு மீன்பிடி படகுகளுடன் 187 சந்தேக நபர்களும், ஈரான் படகுடன் 5 ஈரான் பிரஜைகளும், பாக்கிஸ்தான் பிரஜைகள் மூவரும், இரு இந்திய படகுகளுடன் 6 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு வைக்கப்பட்டிருந்த 191 மதுபான போத்தல்களுடன் 8 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர 41,380 சிகரட்டுக்களும், 1,016,755 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளதோடு, 2642 மதன மோதகம் எனப்படும் போதை வில்லைகளுடன் 42 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 11 கஜமுத்துக்கள் மற்றும் சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்படவிருந்த 14 கிலோ கிராம் தங்கம் என்பவற்றுடன் 3 உள்நாட்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இவற்றுடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று கடந்த ஆண்டு சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்படவிருந்த 36,910 கிலோ பீடி தொகையும், 878 கிலோ புகையிலைத் தூளும், 990 கிலோவுக்கும் அதிக மஞ்சளும், 4722 இரசாயன விவசாய திரவியங்களும், 12,907 பக்கட்டுக்களும், 45,418 அழகு சாதன பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 60 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவை தவிர ஆட்கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேக நபர்களும், சட்ட விரோதமாக இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட 9 பேரும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வர முற்பட்ட 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. கடல் மார்க்கமான போதைப்பொருள் கடத்தல் : 2023 இல் 715 கிலோ ஹெரோயின், 3711 கிலோ கேரள கஞ்சா மீட்பு | Virakesari.lk
  19. கெல்லி Ng பதவி,பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் எரிந்து கொண்டிருந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த பயணிகள், விமானப் பணியாளர்களின் அறிவுறுத்தலின்படி தங்கள் கைப்பைகளை விட்டுவிட்டு ஆபத்து கால வழிகளை நோக்கி ஓடினர். விமானப் பணியாளர்களின் பேச்சைக் கேட்டு, அவர்கள் தங்கள் பொருட்களை கைவிட்டு தப்பி ஓடியதே விமானத்திலிருந்த 379 பேரும் விரைந்து காப்பாற்றப்பட்டதற்கு முக்கியமான காரணம் என்கின்றனர் வல்லுநர்கள். பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. செவ்வாய்க்கிழமை (ஜனவரி 3) ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 516 தரையிறங்கிய போது ஒரு கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது. இந்தச் சிறிய விமானத்திலிருந்து 6 பேரில் 5 பேர் உயிரிழந்தனர். 379 பேரும் ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி? இவ்விபத்தில் ஒரு சிறு தடங்கலுமின்றி விமானத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டது உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. விமானவியல் நிபுணர்களும் விமானப் பணியாளர்களும் இது மிகச் சிறப்பாகப் பயிற்சியளிக்கப்பட்டிருந்த விமானப் பணியாளர்களாலும், அவர்களது பாதுகாப்பு அறிவுறுத்தலைக் கேட்டு அதன்படி நடந்த பயணிகளும்தான் இதற்குக் காரணம் என்று பிபிசியிடம் கூறினர். கிரீன்விச் பல்கலை கழகத்தின் தீவிபத்துப் பாதுகாப்புக் குழுவின் இயக்குநர் எட் கலீயா கூறுகையில், “நான் பார்த்தவரையில் தரையிலிருந்த ஒரு பயணியும் தங்களது கைப்பைகளைக் கொண்டுவரவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது பயணிகள் வெளியேற்றத்தை தாமதப்படுத்தி மிகப்பெரும் ஆபத்தை விளைவித்திருக்கும்,” என்கிறார் அவர். மேலும், “இந்த விபத்து மிகச் சிக்கலான முறையில் நடந்தது, விமானத்தின் மூக்கு கீழ்நோக்கி இருந்தது. இது பயணிகள் வெளியேறுவதைக் கடினமாக்கியது,” என்கிறார் அவர். வெளியேறுவதற்கான காற்று நிரம்பிய சறுக்குகள் மூன்று மட்டுமே பயன்படுத்த முடிந்தது. ஆனால், விமானம் நின்றிருந்த கோணத்தால் அவையும் சரியாகச் செயல்படுத்தப்பட முடியவில்லை. அது மிகவும் செங்குத்தாக இருந்திருக்கும். "விமானத்தின் அறிவிப்புப் பொறிமுறையும் செயல்படாமல் போனது. அதனால் விமானப் பணியாளர்கள் ஒலிபெருக்கிகள் மூலமும், சத்தமாகக் கத்துவதன் மூலமும் அறிவிப்புகளை வழங்கினர்" என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஒரு பயணிக்குச் சிராய்ப்புகள் ஏற்பட்டதாகவும், 13 பேர் உடல் அசௌகரியத்திற்காக மருத்துவ பரிசோதனையைக் கோரியிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. "பெரும விபத்து நேரிட்டிருந்தாலும் வெறும் ஐந்தே நிமிடங்களில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்" என்று அதில் பயணித்த யமகே என்ற பயணி கூறினார். தீ மளமளவென விமானம் முழுவதும் பரவ பத்து பதினைந்து நிமிடங்கள் ஆனதாக அவர் கூறினார். 28 வயதான சுபாசா சவாதா (Tsubasa Sawada) "இது ஒரு அதிசயம், ஒருவேளை நாங்கள் இறந்திருக்கக் கூடும்" என்றார். "தீ எப்படி ஏற்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன், பதில் கிடைக்கும் வரை எந்த விமானத்திலும் பயணிக்க மாட்டேன்" என்று சவாதா மேலும் கூறினார். விபத்துக்குள்ளான விமானம், ஜப்பானின் வடக்கிலிருக்கும் சப்போரோவின் நியூ சிடோஸ் விமான நிலையத்திலிருந்து இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்குக் கிளம்பியது. இரண்டு மணி நேரத்தில் ஹனேடாவில் தரையிறங்கியது. அவ்விடத்தில், புத்தாண்டன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்க ஒரு சிறிய கடலோரக் காவல்படை விமானம் நின்றிருந்தது. அதனோடு பெரிய விமானம் எப்படி மோதியது என்பதைப் பற்றிய விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. பட மூலாதாரம்,REUTERS ‘மிகவும் அதிர்ஷ்டசாலிகள்’ பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு பிபிசியிடம் பேசிய ஒரு முன்னாள் ஜப்பானிய விமானப் பணியாளர் தப்பித்த பயணிகள் ‘மிகவும் அதிர்ஷ்டசாலிகள்’ என்றார். “பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டதை அறிந்து நிம்மதியாக இருந்தது. ஆனால் ஆபத்து கால வெளியேற்ற வழிமுறைகளை நினைத்தால் பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது. இந்த விபத்தில் விமானங்கள் மோதிக்கொண்ட விதத்தையும், தீ பரவியதையும் பார்க்கையில் இந்த விபத்து மிக மோசமாக இருந்திருக்கக் கூடும்,” என்கிறார் அந்தப் பெண். நிஜத்தில் பயணிகளை பதற்றமடையாமல் இருக்க வைப்பது மிகக் கடினம் என்ற அவர், அவர்கள் காப்பாற்றப்பட்டது கற்பனை செய்ய முடியாத அளவு கடினமானது என்றார். “இது பணியாளர்களின் மிகச்சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் அவர்களின் அறிவுறுத்தலின்படி நடந்த பயணிகள் ஆகியவற்றால் சாத்தியப்பட்டது,” என்றார். கைகொடுத்த பயிற்சிகள் விமானப் பணிப்பெண்கள் மூன்று வார தீவிரப் பயிற்சிக்குப் பிறகே பணியமர்த்தப்படுவார்கள் என்றார் அவர். இது ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும். “எழுத்துத் தேர்வு, நிஜ சம்பவங்களைப் பற்றிய விவாதங்கள், செய்முறைப் பயிற்சிகள் ஆகியவை இதில் அடக்கம். விமானம் கடலில் விழுந்தால் என்ன செய்வது, விமானத்தில் தீப்பிடித்தால் என்ன செய்வது, போன்றவை கற்றுத்தரப்படும். பராமரிப்புப் பணியாளர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது,” என்றார் 10 வருடங்களுக்குமுன் பணியிலிருந்து விலகிய அந்தப்பெண். தென்கிழக்கு ஆசிய விமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் விமானியும் விமானப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்ட தீவிரமான பயிற்சிதான் இந்த மீட்புப் பணியில் உதவியது என்றார். “இங்கு பயிற்சி மிக முக்கியப் பங்காற்றியது என்று நினைக்கிறேன். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் யோசிப்பதற்கு நேரமே இருக்காது. பயிற்சியில் கற்றுக்கொண்டதைச் செயல்படுத்த மட்டுமே முடியும்,” என்றார் அவர். பயணிகள் விமானங்கள் சர்வதேச சான்றிதழ் பெறுவதற்கு, விமானத்தில் இருக்கும் அனைவரும் 90 வினாடிகளில் வெளியேற முடியும் என்று விமானத் தயாரிப்பாளர்கள் காண்பிக்க வேண்டும். சில சமயம் பரிசோதனை மீட்பு முயற்சிகள் உண்மையான பயணிகளை வைத்து செய்யப்படுகின்றன, என்கிறார் அவர். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தரையிலிருந்த ஒரு பயணியும் தங்களது கைப்பைகளைக் கொண்டுவரவில்லை கடந்த கால விபத்துகள் கடந்த கால விபத்துகளுக்குப் பிறகு விமானப் பாதுகாப்பு நெறிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் அந்த விமானி. உதாரணமாக, 1977-ஆம் ஆண்டு ஸ்பெயினில் இரண்டு போயிங் 747 ரக விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 583 பேர் கொல்லப்பட்டனர். இது விமான வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாகப் பார்க்கப்படுகிறது. இது விமானப் பணியாளர்கள் மற்றும் விமானப் போக்குவரத்து நிர்வாகிகள் ஆகியோரிடையே நடந்த தகவல் பரிமாற்றத்தில் இருந்த சிக்கல்தான் இதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானத்திலிருக்கும் விமானி அறை மற்றும் ரேடியோ தொலைதொடர்பு சாதனங்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டன. 1985-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸ் ஒரு விபத்தை எதிர்கொண்டது. டோக்கியோவிலிருந்து ஒசாகாவிற்குக் கிளம்பிச் சென்ற 123 என்ற விமானம், கிளம்பிய சற்றி நேரத்திலேயே ஒரு மலையில் மோதியது. அந்த விமானத்தில் பயணித்த 524 பேரில் 4 பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர். இவ்விபத்திற்கான காரணமாக போயிங் நிறுவனம் விமானத்தில் செய்த பழுதுவேலையைச் சரியாகச் செயவில்லை என்று சொல்லப்பட்டது. 2006-ஆம் ஆண்டு இந்த விபத்தின் இடிபாடுகளை வைத்து ஜப்பான் ஏர்லைன்ஸ் ஒரு அருங்காட்சியகம் அமைத்தது. இது பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது. “அந்த விபத்திற்குப் பின், குடும்பத்தாரை இழந்து தவித்தவர்களின் வலி, வேதனை ஆகியவற்றைப் பார்த்தபின், அதுபோன்ற ஒரு சம்பவத்தை மீண்டும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று சபதம் எடுத்துக்கொண்டோம்,” என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. ஜப்பான் விமானத்தில் இருந்த 379 பேரும் வெறும் ஐந்தே நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி? - BBC News தமிழ்
  20. நேற்று லெபனான், இன்று இரான்: இரட்டை குண்டுவெடிப்பில் 73 பேர் பலி - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? இரானின் புரட்சிகரப் படைகளின் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளில், அவரது கல்லறை அருகே நடத்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறுகிறது. ஊடகம் சார்பாக வெளியான காணொளியில், தெற்கு நகரமான கெர்மனில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகே நடந்த ஊர்வலத்தில் குண்டுகள் வெடித்துள்ளன எனவும், இந்த தாக்குதலில் 171 பேர் காயமடைந்ததாகவும் அரசு செய்தி தொடர்பாளர் இரிப் கூறினார். மேலும் இது ஒரு "பயங்கரவாத தாக்குதல்" என்று கெர்மனின் துணை ஆளுநர் அந்த காணொளியில் கூறியுள்ளார். இரானின் ஒரு சாலையில் பல உடல்கள் கிடப்பதை இணையத்தில் வைரலான அந்த காணொளியில் பார்க்க முடிகிறது. 2020இல் அண்டை நாடான இராக்கில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெனரல் சுலைமானியை நினைவுகூரும் நாளின் ஒரு பகுதியாக புதன்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் கல்லறையை நோக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு மிகவும் சக்தி வாய்ந்த நபராக சுலைமானி இருந்தார். புரட்சிகர படையின் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவான குட்ஸ் படையின் தளபதியாக, பிராந்தியம் முழுவதும் இரானியக் கொள்கைகளை செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். குத்ஸ் படையின் இரகசியப் பணிகள் மற்றும் அதன் வழிகாட்டுதல், நிதி, ஆயுதங்கள், உளவுத்துறை மற்றும் ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட நேச நாட்டு அரசாங்கங்கள் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கு தளவாட உதவிகளை வழங்குவதற்கு அவர் பொறுப்பாக இருந்தார். 2020-ம் ஆண்டில் அவரை கொல்ல உத்தரவிட்ட அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சுலைமானியை "உலகின் நம்பர் ஒன் பயங்கரவாதி" என்று குறிப்பிட்டார். காஸாவில் 2 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் மத்திய கிழக்கில் ஏற்கனவே உச்சக்கட்ட பதற்றம் நிலவி வரும் வேளையில், இரானில் நடந்துள்ள இந்த குண்டுவெடிப்பு அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இரான்: இரட்டை குண்டுவெடிப்பில் 73 பேர் பலி, 171 பேர் காயம் - யார் காரணம்? மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? - BBC News தமிழ்
  21. (ஆதவன்) கனடாவில் குடியுரிமைபெற்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வயோதிபர், கனடாவிலிருந்து தாயகத்துக்குத் திரும்பியிருந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். கனடா, மொன்றியேலைச் சேர்ந்தவரும், தற்போது வல்வெட்டித்துறை ரேவடியில் வசித்து வந்தவருமான வேலுப்பிள்ளைநந்தகுமார் (வயது-60) என்பவரே உயிரிழந்தவராவார். வாய் மற்றும் மூக்கில் இருந்து நுரை வெளியேறிய நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 29ஆம் திகதி சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்ட அவர் சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம் (01) திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். வல்வெட்டித்துறையில் இருந்து புலம்பெயர்ந்து கடந்த 40 வருடங்களாக அவர் கனடாவில் வசித்து வருகின்றார். கனடாவில் தற்போது குளிர்காலம் என்பதால், இலங்கைக்கு வந்து தங்கியிருந்துவிட்டுச் செல்வதற்காக வந்த வேளையிலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இறப்பு விசாரணைகளை பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா மேற்கொண்டார். கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம். (newuthayan.com)
  22. (புதியவன்) யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனக் கருதி 8 பேருக்கு எதிராகத் தடை உத்தரவு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கில் பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக நாளை யாழ்ப்பாணம் வருகின்றார். யாழில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தங்கியிருக்கும் அவர், வடக்கின் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான போராட்டத்தைத் தடுக்கும் வகையில் 8 பேருக்குத் தடை கட்டளை கோரி பொலிஸார் நீதிமன்றில் யெ விண்ணப்பித்துள்ளனர். இது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதிவான் தமிழ் நீதிமன்றில் இன்று முன்வைக்குமாறு நீதிமன்றம் பிரதி வாதிகளுக்குக் கட்டளையிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் உறுப்பினர்கள், பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராகத் இந்த தடை கட்டளை கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (ஐ) ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்கும் வகையில் கஜேந்திரகுமார், கஜேந்திரன் உட்பட 8 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் (newuthayan.com)
  23. ஒரேமாதிரியான சூழ்நிலைகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இடம்பெற்ற மரணங்கள் குறித்த விசாரணைகளைசிஐடியினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர்தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களிற்கு முன்னர் நஞ்சூட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆணினதும் பெண்ணினதும் உடல்களை பொலிஸார் மீட்டிருந்தனர். இவர்கள் இருவரும் ஒருமதப்பிரிவை சேர்ந்த போதகர் ஒருவரை பின்பற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது - இந்த போதகர் ஹோமகமவில் தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 21 வயது யுவதியின் உடல் யக்கலவில் உள்ள அவரது வீட்டில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அதேவேளை அம்பலாங்கொடையை சேர்ந்த 34 வயது நபர் அவர் தற்காலிகமாக தங்கியிருந்த மஹரமக விடுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை நாட்டின் பலபகுதிகளில் மதபோதiயில் ஈடுபட்ட ருவான் பிரசன்ன குணரட்ண தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிலநாட்களின் பின்;னர் இவரது மனைவி விசம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார் - கஹன்தோட்டமாலபேயில்இந்த சம்பவம் இடம்பெற்றது. தனது இரண்டு மகன்கள் மகளிற்கு நஞ்சூட்டிய பின்னர் இவர் தற்கொலை செய்துகொண்டார் 21 வயது யுவதியும் 34 வயது நபரும் இந்த மதபோதகரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டுள்ளனர்.. இவர்கள் அனைவரும் ஒரேவகையான விசத்தை அருந்தி உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தொடர்தற்கொலைகள் - ஏழு மரணங்கள் சிஐடியினர் விசாரணை- யார் அந்த மதபோகர் | Virakesari.lk
  24. இந்த வழக்கு நேற்று (02) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றது. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் உடலில் காணப்பட்டதாகவும் இதனால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் தோற்ற அடிப்படையில் இது மனித ஆட்கொலை என நீதிபதி தெரிவித்தார். மேலும், இரண்டாவது சாட்சி ஐந்து பொலிஸார் சித்திரவதை செய்ததாக தெரிவித்த நிலையில் மேலதிக சந்தேகநபரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு இந்த வழக்கின் விசாரணைப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார். மேலும், குறித்த குற்றத்தில் பொலிஸார் ஈடுபட்டிருப்பதால் நீதிமன்ற கட்டளையின் பிரதியை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்புமாறு மன்று கட்டளையிட்டது. இது சித்திரவதைக்கு உள்ளான மனித ஆட்கொலை வழக்கு என்பதால் மேல் நீதிமன்றத்திலேயே இறுதியான தீர்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்த நீதிபதி வழக்கின் குற்றப் பத்திரத்தினை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியதுடன் மூல வழக்கை சட்டமாஅதிபருக்கு அனுப்பி வைக்குமாறு மன்றின் பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டார். மேலும், சந்தேக நபர்கள் நாலவரையும் எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் அலெக்ஸ் மரணம் - நீதிமன்றத்தின் உத்தரவு | Virakesari.lk
  25. (நா.தனுஜா) இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை மூடுவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானத்துக்கு எதிராக நாட்டிலுள்ள ரோஹிங்கிய அகதிகள் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள அவ்வலுவலகத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுத்தனர். அதுமாத்திரமன்றி பிறிதொரு நாட்டில் தமக்குரிய நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உதவுமாறும், இதுவரை காலமும் தமக்கு வழங்கப்பட்டுவந்த மாதாந்தக் கொடுப்பனவை நிறுத்தவேண்டாம் எனவும் வலியுறுத்தி அவர்கள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர். மியன்மாரில் 2017 ஆம் ஆண்டளவில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் மற்றும் 'முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான இனவழிப்பு' என வர்ணிக்கப்படும் படுகொலைகள் போன்றவற்றால் அங்கிருந்து வெளியேறுவதற்கு நிர்பந்திக்கப்பட்ட ரோஹிங்கிய அகதிகள், பங்களாதேஷுக்குச் சென்றனர். இருப்பினும் பங்களாதேஷ் அகதி முகாம்களின் மிகமோசமான நிலை காரணமாக அங்கிருந்து தப்பிய அகதிகள் இலங்கைக் கடற்பிராந்தியத்துக்கு அண்மையில் கடற்படையினரால் மீட்கப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் இலங்கையில் தற்காலிகமாகத் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்குரிய மாதாந்த செலவுகளைப் பூர்த்திசெய்யக்கூடியவகையிலான மாதாந்தக்கொடுப்பனவொன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்பட்டுவந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையில் அவ்வலுவலகத்தை மூடப்போவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கையிலுள்ள ரோஹிங்கிய அகதிகள் ஏற்கனவே கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று (2) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட அகதிகள், கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மூடப்பட்டால் தமக்கு என்ன நேருமெனத் தெரியவில்லை என்று கவலை வெளியிட்டனர். 'எமக்கான உணவு, தங்குமிடம், உடைகள், தொடர்பாடல், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கு அவசியமான மாதாந்தக்கொடுப்பனவை ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் வழங்கிவந்தது' என்று சுட்டிக்காட்டிய அவர்கள், அவ்வலுவலகம் மூடப்படின் பிறிதொரு நாட்டில் தாம் குடியேறுவதற்கான வாய்ப்போ அல்லது தமக்கான நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்போ கேள்விக்குள்ளாகும் எனவும் தெரிவித்தனர். மேலும், மியன்மார் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தம்மை மீண்டும் அந்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பவேண்டும் அல்லது இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்நாட்டுப் பிரஜாவுரிமையைப் பெற்றுத்தரவேண்டும் அல்லது தாம் புதிய வாழ்வைத் தொடங்கக்கூடியவகையில் தம்மை மேற்குலக நாடொன்றுக்கு அனுப்பிவைக்கவேண்டும் எனவும், இம்மூன்றில் ஏதேனுமொரு தீர்வைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ரோஹிங்கிய அகதிகள் வலியுறுத்தினர். அத்தோடு இவ்விடயங்களை வலியுறுத்தி ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் அவர்கள் மகஜரொன்றையும் கையளித்தமை குறிப்பிடத்தக்கது. ஐ. நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மூடப்படின் எமது எதிர்காலம் என்னவாகும் ? - இலங்கையிலுள்ள ரோஹிங்கிய அகதிகள் கவலை | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.