Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  2. “கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்” - சீமான் சாடல் “கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்” - சீமான் சாடல் சென்னை: “கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது. நான் கூட்டணி வைக்க மறுத்துவிட்டேன். எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க நினைக்கிறேன். எந்தச் சூழலிலும் என் வாழ்நாளில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதை கருத்தில் கொண்டு புதிய சின்னத்தை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் பணியை நாம் தமிழர் கட்சி மேற்கொண்டது. அதன்படி, அனுப்பிய சின்னங்களில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று சின்னத்தை அறிமுகப்படுத்தி செய்தியாளர்களைச் சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். பின்னர் பேசிய அவர், “கடைசி நொடி வரை போராடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அதனால் தான் மைக் சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவெடுத்தோம். இவ்வளவு இடையூறுகளையும் தாங்கிக்கொண்டு நாங்கள் களத்தில் நிற்பது மக்களுக்காகதான். மக்கள் எங்களை கைவிட்டுவிட மாட்டார்கள் என்று நம்புகிறோம். கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது. நான் கூட்டணி வைக்க மறுத்துவிட்டேன். எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க நினைக்கிறேன். அதில் எந்தச் சூழலிலும் என் வாழ்நாளில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன். சின்னத்தில் மட்டும் விவசாயி அல்ல நான். உண்மையிலேயே விவசாயிதான். எனவே, நாங்கள் நம்பிக்கையோடு பயணிக்கிறோம். கொஞ்சம் தாமதம் தான். சின்னம் முதலிலேயே இருந்திருந்தால் பாதி தொகுதிக்கு சென்றிருப்பேன். இப்போது முதலில் இருந்து தொடங்க வேண்டும். நாளையில் இருந்து பிரச்சாரம் செல்கிறேன்.எங்களை சுயேச்சையாக நிறுத்தி, 40 தொகுதிகளுக்கும் 40 சின்னங்கள் கொடுக்க வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம். ஏழு சதவிகித வாக்குக்கே பயம் என்றால், இந்தத் தேர்தலில் நான் என்ன செய்வேன் என்று யாருக்கு தெரியும்.” என்றார். “கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்” - சீமான் சாடல் | “If I had a partnership I would have got the symbol I asked for” - Seeman - hindutamil.in
  3. `மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது!' - தேர்தல் ஆணையம் வைகோ-துரை வைகோ மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய விண்ணப்பத்தின் மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று, `ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், மதிமுக-வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது’ என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. Tamil News Live Today: தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மைக் சின்னத்தை ஏற்றுக்கொண்டது நா.த.க! | Tamil News Live Today live updates dated 27-03-2024 - Vikatan
  4. தந்தைமீது சபதம்; காரில் தொங்கிய பௌன்சர்கள்- புடைசூழ வேட்புமனு தாக்கல்செய்த வீரப்பன் மகள் வித்யா ராணி வீரப்பன் மகள் வித்யா ராணி கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராகக் களமிறங்கிய வீரப்பன் மகள் வித்யா ராணி இன்றைய தினம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக, மேட்டூர் மூலக்காட்டில் இருக்கின்ற வீரப்பன் நினைவிடத்துக்குச் சென்று வேட்பு மனுவை வைத்து வீரவணக்கம் செலுத்தினார். அப்போது, ‘‘மொழி காக்க, இனம் காக்க, மண் காக்க, மானம் காக்க... இன்னுயிர் நீத்த மாவீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்’’ என்று கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து உறுதி மொழியும் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு, வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக கிருஷ்ணகிரியில் இருக்கின்ற நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இருந்து புடைசூழ புறப்பட்டுச் சென்றார் வித்யா ராணி. வித்யா ராணி இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அணிவகுத்துச் செல்ல காரின் ‘சன் ரூஃப்’ வழியாக நின்றபடி கையெடுத்து கும்பிட்டபடியே பயணித்தார் வித்யா ராணி. காரின் இருபக்கமும் பௌன்சர்கள் தொங்கிக்கொண்டு வந்தனர். முன்பக்கம் வீரப்பன் பேனர் கட்டப்பட்டிருந்தது. மாமன்னன் அருண்மொழிச் சோழன் வேடம், திருவள்ளுவர் வேடம், அம்பேத்கர் வேடம் அணிந்தபடியும், வழிநெடுக பட்டாசு வெடித்தும், மேளத்தாளம் அடித்தும் நாம் தமிழர் கட்சியினர் அமர்க்களப்படுத்தி வித்யா ராணியை அழைத்து வந்தனர். வேட்பு மனுவை தாக்கல் செய்தபோதும், தனது தந்தை வீரப்பன் மீது சபதம் எடுத்துக்கொண்டார் வித்யா ராணி. தி.மு.க கூட்டணியை பொறுத்தமட்டில், இந்த தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிட்டிங் எம்.பி-யாக இருந்த செல்லகுமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ-வும், தொழில் அதிபருமான கோபிநாத் களமிறக்கப்பட்டிருக்கிறார். இன்றைய தினம் எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தனது குடும்பத்துடன் அமைதியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத். அவருடன் தி.மு.க மற்றும் கூட்டணியில் இருக்கின்ற வேறு எந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் வரவில்லை. ‘கூட்டணிக்குள் அதிருப்தியா..?’ என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, ‘அப்படியெல்லாம் இல்லை. முறைப்படி, கிருஷ்ணகிரி மேற்கு, கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர்கள் இருவரிடமும் தகவல் தெரிவித்துவிட்டுதான் வந்திருக்கிறேன்’ என்றார். வித்யா ராணி அ.தி.மு.க-வில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஜெயபிரகாஷ் களமிறங்கியிருக்கிறார். பா.ம.க-வில் பயணித்து வந்த ஜெயபிரகாஷ் கடந்த 2011-ம் ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க-வில் சேர்ந்தார். கிரானைட், டிரான்ஸ்போர்ட் தொழில் என வெயிட்டாக இருக்கும் ஜெயபிரகாஷ் களத்திலும் வேகம் காட்டுகிறார். பா.ஜ.க சார்பில் நரசிம்மன் போட்டியிடுகிறார். இன்று அவரும் பா.ம.க, ஓ.பி.எஸ் அணியினருடன் சேர்ந்துபோய் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். தமிழகத்தில் இருக்கின்ற மற்றத் தொகுதிகளைக் காட்டிலும், கிருஷ்ணகிரி தொகுதியில்தான் ஆளும் தரப்புக்கும், எதிர் தரப்பு வேட்பாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது நாம் தமிழர் கட்சி. ஒரே காரணம், வீரப்பனின் மகள் களமிறங்கியதுதான். தொகுதியில் வன்னியர் சமூக வாக்குகள் கணிசமாக இருக்கின்றன. வீரப்பன் மகள் என்பதால், அந்தச் சமூக வாக்குகள் ஓரளவு அறுவடையாகும். சமுதாய வாக்குகளை குறிவைத்தும் வித்யா ராணி களத்தில் வேகம் காட்டிக்கொண்டிருக்கிறார். களமும் சூடுபிடித்திருக்கிறது. தந்தைமீது சபதம்; காரில் தொங்கிய பௌன்சர்கள்- புடைசூழ வேட்புமனு தாக்கல்செய்த வீரப்பன் மகள் வித்யா ராணி | krishnagiri parliamentary constituency -ntk candidate veerappan's daughter filed nomination - Vikatan
  5. யாழ்ப்பாணம் 14 மணி நேரம் முன் சாவ. கடலேரி வற்றியதால் தொழில் இழந்த மீனவர்கள் (ஆதவன்) சாவகச்சேரி கடலேரி வற்றியுள்ளதால் அந்தப் பகுதில் கடற்றொழிலில் ஈடுபடும் நூற்றுக்கணக்கானோர் தொழில்களை இழந்துள்ளனர். கடலேரி வற்றி பல இடங்களில் மணல் திட்டுக்கள் காணப்படுகின்றமையால் படகுகள் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கடற்றொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். (ஏ) சாவ. கடலேரி வற்றியதால் தொழில் இழந்த மீனவர்கள் (newuthayan.com)
  6. வெளிநாடுகளின் நலன்களால் கவரப்பட்ட சில இலங்கை தலைவர்கள் தேசத்தின் இறைமையை அடகுவைக்கின்றனர்- கனடாவில் அனுரகுமார 25 MAR, 2024 | 02:44 PM இலங்கை வலுவான வெளிவிவகாரகொள்கையை பின்பற்றவேண்டியதன் அவசியத்தை ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வலியுறுத்தியுள்ளார் கனடாவின் வான்கூவரில் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர்இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்;டு உறவுகள் பயனுள்ள வெளிநாட்டு ஈடுபாட்டிற்கு தேவையான வலுவான தன்மையைகொண்டிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நலன்களால் கவரப்பட்ட சில இலங்கை தலைவர்கள் தேசத்தின் இறைமையை அடகுவைக்கின்றனர் என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார். தேசத்தின் நீண்டகால நலன்களிற்கு பதில் நிதிசார்ந்த நன்மைகளை அடிப்படையாக வைத்து தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் வெளிவிவகார கொள்கை நாட்டின் நலனிற்கு முக்கியத்துவம் வழங்குவதாக காணப்படவேண்டும் எனதெரிவித்துள்ள அனுரகுமார நாடு உலகஅதிகார போட்டியின் இடைநடுவில் சிக்குண்டுள்ளது வெளிநாட்டு சக்திகளின் அதிகார மோதல்களமாக இலங்கை மாறுவதை தடுப்பதற்கான வெளிவிவகார கொள்கை அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளின் நலன்களால் கவரப்பட்ட சில இலங்கை தலைவர்கள் தேசத்தின் இறைமையை அடகுவைக்கின்றனர்- கனடாவில் அனுரகுமார | Virakesari.lk
  7. குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் ஊடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பெண் பிள்ளைகளின் வயதை 14 வருடங்களாக குறைக்க மற்றும் ஆண் குற்றவாளிகளின் வயது 22க்கு குறைவாக இருந்தால் தண்டனையை தளர்த்த வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை பற்றி விசேட கவனம் செலுத்துவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இது தொடர்பான உரையாடல் பின்வருமாறு. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – 2024 பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட தண்டனைச் சட்டத்தின் 363 மற்றும் 364 ஆவது சரத்தின் 19 ஆம் அத்தியாயத்தின் திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்த மசோதாவின் மூலம், பாலியல் செயற்பாட்டிற்காக வயது குறைந்த சிறுமிகளின் வயதை 16 இலிருந்து 14 ஆகக் குறைப்பது, 22 வயதுக்குட்பட்ட ஆண் குற்றவாளிகளுக்கான தண்டனையைக் குறைப்பது, அது போல தண்டனைச் சட்டத்தின் பிரிவு 363 ஆண் மற்றும் பெண் பலாத்காரத்தை ஒன்றாக வைப்பதற்குப் பதிலாக , பெண் பலாத்காரத்திற்கான தனிச்சட்டங்களும் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி சட்டங்கள், தனித் திருத்தங்கள் மூலம் ஆண்களுக்கு இருக்க வேண்டிய சட்டங்களும் முன்வைக்க மிகவும் முக்கியமான விஷயங்களாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன். மேலும், குற்றவியல் சட்டத்தின் 363 மற்றும் 364 பிரிவுகளை திரும்பப் பெறுமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன். குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவரது விளக்கத்தை நீதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இது எதிர்க்கட்சிகளின் கருத்தா என்று எனக்குத் தெரியவில்லை. ஜே.வி.பி விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க முயற்சிப்பதால், அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. இது ஒரு சிக்கலான பிரச்சினை. இது கலந்தரையாட வேண்டிய விஷயம். எனவே, அதைச் செய்வதில் இரண்டு கதைகள் இல்லை. Tamilmirror Online || பாலியல் உறவில் ஈடுபடும் வயது குறைப்பு
  8. 22 MAR, 2024 | 07:05 AM மட்டக்களப்பில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளரான சிறிபாலு வியாழக்கிழமை (21) செங்கலடி பதுளை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி பலியாகியுள்ளார். செங்கலடி, கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த சிவில் செயற்பாட்டாளரான தம்பிநாயகம் சிறிபாலு வயது (54) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதியில் புலையவெளி என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே இவர் பலியாகியுள்ளார் . இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்காக நடைபெற்ற போராட்டங்கள் முதல் கொண்டு பல சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டவர் என்பதோடு மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பணியாற்றி வருகிறார். கரடியனாறு பகுதியில் இருந்து பதுளை வீதி வழியாக செங்கலடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதிய போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடாத்தியதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பின் இடம்பெற்ற வீதி விபத்தில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் பலி! | Virakesari.lk
  9. 22 MAR, 2024 | 07:16 AM கனடாவுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க விஜயம் மேற்கொண்டுள்ளார். கனடாவின் டொரன்டோ மற்றும் வான்கூவர் ஆகிய இரு பிரதான நகரங்களில் நாளை 23 சனிக்கிழமை மற்றும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிமைகளில் நடாத்தப்படவிருக்கும் இலங்கையர்களுடனான சந்திப்புக்களில் பங்கேற்பதற்காக அநுரகுமார திஸாநாயக்க கனடா சென்றுள்ளார். கனடாவுக்கு சென்றுள்ள அநுர குமார திசாநாயக்கவுக்கு டொரன்டோ விமான நிலையத்தில் கனடாவாழ் இலங்கையர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு ! | Virakesari.lk
  10. யாழ்ப்பாணத்துக்கு புதிய அமைப்பாளரை தெரிவு செய்யவில்லை - ஜனாதிபதி ரணில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அமைப்பாளர் ஒருவரை இன்னும் உத்தியோகப்பூர்வமாக தெரிவு செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐ.தே.க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த மறுசீரமைப்புகள் தொடர்பில் இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக தீர்மானங்கள் எடுக்கப்பட வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தனது யாழ்ப்பாண விஜயத்தில் அங்கஜன் ராமநாதன் கூட இருப்பார் என்றும், உத்தியோகப்பூர்வ நியமனங்கள் வழங்குவதற்கு முன்னர் எதிர்ப்புகள் காணப்படுமாயின் அவை கருத்தில் கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு புதிய அமைப்பாளரை தெரிவு செய்யவில்லை - ஜனாதிபதி ரணில் | Virakesari.lk
  11. 22 MAR, 2024 | 12:36 PM வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சிறுமி, தான் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக வியாழக்கிழமை (21) பாடசாலைக்குச் சென்று தனது ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், இவ்விடயம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்தால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் பிறகு, விரைந்து செயற்பட்ட பொலிஸார் சிறுமியை விசாரணை செய்ததில், தாய் வீட்டில் இல்லாதபோதே சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து, பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவு பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருவதோடு, கைதான சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை கைது : வவுனியாவில் சம்பவம் | Virakesari.lk
  12. டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு திடீரென மதுபானக் கொள்கை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டார். அவர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை கோர்ட் 10 நாள்கள் அமலாக்கப் பிரிவின் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு இருப்பதால் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. சிறையில் இருந்து கொண்டு கெஜ்ரிவால் ஆட்சியை நடத்துவார் என்று ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சிறையில் இருந்து கொண்டு ஆட்சியை நடத்துவது சாத்தியம் இல்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி கைதி வாரத்தில் இரண்டு முறை மட்டுமே உறவினர்களை அல்லது வேண்டப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்த முடியும். ஆளுநர் நினைத்தால் கெஜ்ரிவால் தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியும். அதாவது ஆளுநர் எந்த ஒரு கட்டடத்தையும் சிறையாக மாற்ற முடியும். அந்த வகையில் அர்விந்த் கெஜ்ரிவாலை வீட்டுக்காவலில் வைக்கும் பட்சத்தில், கெஜ்ரிவால் அன்றாட டெல்லி நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள முடியும். ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதுசெய்யப்படும்போது முதலில் அவர் ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். கைது செய்தவுடன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என்று டெல்லி அமைச்சர்கள் செளரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர். டெல்லி சபாநாயகர் ராம்நிவாஸ் கோயலும் இதையே தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை. ஆனால் சிறையில் இருந்து கொண்டு நிர்வாகம் செய்வது சிரமம் ஆகும். அது போன்ற ஒரு நிகழ்வு நாட்டில் இதற்கு முன்பு நடந்தது கிடையாது. இதையடுத்து கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால் அந்த இடத்திற்கு மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது. ஏற்கெனவே கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோசியா மற்றும் சத்யேந்தர் சிங் ஆகியோர் சிறையில் இருக்கின்றனர். எனவே கட்சியில் தலைவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தால் செளரப் பரத்பவாஜ், அதிஷி மர்லெனா மற்றும் கோபால் ராய் ஆகியோர் பெயர் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது.மதுபானக் கொள்கையில் மொத்தம் 600 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடத்திருப்பதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் 100 கோடி ரூபாய் சவுத் குரூப் கொடுத்திருக்கிறது. அதற்காகத்தான் கவிதா கைதுசெய்யப்பட்டுள்ளார். அர்விந்த் கெஜ்ரிவால் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ராஜு, மதுபானக் கொள்கையில் கிடைத்த லஞ்சப்பணத்தில் 45 கோடியை கோவா மற்றும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு செலவு செய்திருப்பதாக குறிப்பிட்டார். மேலும், ``இவ்ஊழலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அர்விந்த் கெஜ்ரிவால்தான். இதனால்தான் 9 முறை அமலாக்கப் பிரிவின் சம்மனை நிராகரித்துள்ளார்.'' என்று வாதிட்டார். அரவிந்த் கெஜ்ரிவாலை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி; டெல்லிக்கு அடுத்த முதல்வர் யார்?! |As Arvind Kejriwal has been arrested, the question has arisen as to who will be the next Chief Minister. - Vikatan
  13. `மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டதில் சீமான் அப்செட்? - மாற்றுச் சின்னம் கோரப்போகிறதா நாதக? சின்னம் இல்லாமல் காத்திருந்த நாம் தமிழர் கட்சிக்கு, `மைக்` சின்னம் ஒதுக்கியிருந்தது தேர்தல் ஆணையம். ஆனால் இச்சின்னத்தை நா.த.க ஏற்க தயாராக இல்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இது குறித்து விரிவாக விசாரித்தோம். 2019 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியின் வசமிருந்த கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சியின் புதுச்சின்னம் என்னவென்ற ஆவல் கட்சிக்குள்ளும், கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியிலும் அதீதமாக இருந்தது. இந்நிலையில் மார்ச் 21-ம் தேதி நா.த.க-வுக்கு `மைக்' சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இச்செய்தி மார்ச் 22-ம் தேதி வெளியாகவே... சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. ஆனால் நாம் தமிழர் கட்சி தரப்பிலோ, அதன் நிர்வாகிகளோ இது குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருப்பது, பேசுபொருளாகியிருக்கிறது. மைக் சின்னம் இது குறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ``நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் வழங்கப்படும் என நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இரு தினங்களாகவே ஆட்டோ, பேனா முனை, அரிக்கன் விளக்கு போன்ற சின்னங்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் அவை அனைத்தும் வதந்தியே. கட்சியின் தலைமை, அதிகாரபூர்வமாக அறிவிக்கும்வரை எதையும் நம்ப வேண்டாம் என நோட் அனுப்பியிருக்கிறது. இதற்கிடையில் அதிகாரபூர்வமாகவே தேர்தல் ஆணையம் `மைக்` சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கியது. இருந்தும் சீமானோ... தலைமை நிர்வாகிகளோ இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தனர். `தலைமை அறிவிக்கும்வரை காத்திருங்கள்’ என அதே மெசேஜைத்தான் மீண்டும் அனுப்பினர். இதனால் கட்சிக்குள் என்ன நடக்கிறதென்ற சந்தேகம் கிளம்பியிருக்கிறது” என்றனர் . சின்னம் போஸ்டர் தலைமைக்கு நெருக்கமான சிலரோ, ``நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது அதிகாரபூர்வமானதுதான். ஆனால் அதில் எங்களுக்கு ஏற்பில்லை. அன்றாடம் பயன்படுத்தும் மைக்போல் இல்லாமல் வேறு வடிவில் இருக்கிறது. இதனை வாக்குப்பெட்டியில் மக்களால் எளிதில் அடையாளம் காணமுடியுமா என்ற கேள்வி இருக்கிறது. அதேசமயம் `மைக்’ என்பது ஆங்கில சொல்... `ஒலிவாங்கி` என தமிழ்படுத்தி பேசினால் மக்கள் புரிந்துகொள்வது கடினம். மேலும் எங்கள் தலைமை ஒருங்கிணைப்பாளருக்கும் அதில் ஏற்பில்லை. எனவே தேர்தல் ஆணையத்தை ஆணுகி வேறு சின்னம் கோர முடிவெடுத்துள்ளோம். ஆங்கிலச் சொல்லாக இருந்தாலும் எளிதில் சென்றடையக்கூடிய ஆட்டோ சின்னமோ... தீப்பெட்டி சின்னமோ கேட்டிருக்கிறோம். இல்லாவிடில் படகு, கப்பல் போன்ற சின்னங்களுக்கும் தேர்வு செய்து வைத்திருக்கிறோம். மார்ச் 23-ம் தேதி மாலை வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் நடக்கவுள்ளது. அதற்குள் மாற்றுச் சின்னம் கிடைக்கும் என நம்புகிறோம், அப்படி எதுவுமே வொர்க்-அவுட் ஆகாத நிலையில் `மைக்’ சின்னத்தோடு பிரசாரத்துக்குக் கிளம்புவோம்” என்றனர். சீமான் தொடர்ந்து பேசியவர்கள், ``நாங்கள் கேட்கும் ஆட்டோ, தீப்பெட்டி ஆகிய சின்னங்கள் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன. ஆனால் இப்படித்தான் 2021 தேர்தலில் வேறு கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது, சம்பந்தபட்டவரிடம் தடையில்லா சான்று பெற்று தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கொடுத்ததும், `டார்ச் லைட்’ சின்னத்தை மீண்டும் அவர்களுக்கே ஒதுக்கினர். அதுபோல் ஆட்டோ, தீப்பெட்டி சின்னத்தைப் பெற முயல்வோம்” என்றனர். `மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டதில் சீமான் அப்செட்? - மாற்றுச் சின்னம் கோரப்போகிறதா நாதக? | Naam tamizhar Katchi dislikes Mike Symbol expects other symbol from ECI - Vikatan
  14. `ஆட்டோ... படகு... மைக்...' - நாதக-வின் புதுச் சின்னம் சாய்ஸ் என்ன? தேர்தல் நெருங்கிக் கொண்டே இருப்பதால், கட்சியின் சின்னம் என்ன என்ற ஆவல் கட்சிக்குள்ளும் நா.த.க ஆதராவாளர்கள் மத்தியிலும் கிளம்பியுள்ளது. அதே சமயம் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. Published:Today at 9 AMUpdated:Today at 9 AM சீமான் | நாம் தமிழர் கரும்பு விவசாயி சின்னம் வேறுக் கட்சிக்கு வழங்கப்பட்டிருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு என்ன சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு பொருந்தக்கூடிய மற்றும் எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்கக்கூடிய சின்னங்களின் பட்டியலில் என்னென்ன இருக்கிறதென விசாரித்தோம். படகில் சீமான் ட்விட்டர் 2019 மற்றும் 2021 தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தாமதமாக விண்ணபித்தார்கள் எனக் கூறி, அந்தச் சின்னம் வேறுக் கட்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரும்பு விவசாயி சின்னம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தை நா.த.க நாடியபோது, வழக்கு தள்ளுபடியானது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நா.த.க-வின் மனு விசாரிக்கப்படுவதில் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. எனவே கரும்பு விவசாயி சின்னம் இல்லை என்றாலும் பரவாயில்லை... ஏதாவது ஒரு சின்னத்தைப் பெறுவோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர் நா.த.க-வினர். புதிய சின்னத்தைத் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் வேலைகள் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ``கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காதபட்சத்தில் ஆட்டோ சின்னத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற பேச்சு, கட்சிக்குள் வலுவாக இருந்தது. ஆட்டோவைப் பெற்றுவிட்டால், சின்னத்தைக் கொண்டு சேர்ப்பதில் சிக்கல்கள் இருக்காது எனக் கட்சி நிர்வாகிகள் சொல்ல, சீமானும் இசைவு தெரிவித்திருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக அதனையும் வேறு கட்சிக்கு ஒதுக்கிவிட்டது தேர்தல் ஆணையம். இதனால் கட்சியினர் கடும் அப்செட்டாகிவிட்டனர். தேர்தலுக்கான நாள்கள்கூட மிக குறைவாக இருப்பதால், சின்னம் கிடைத்தால்தான் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரசாரத்தைத் தொடங்கக்கூடிய சூழலும் நிலவுகிறது. எனவே ஏதாவது ஒரு சின்னத்தைப் பெற்று களத்துக்குச் செல்வோம் என ஆயத்தமாகி வருகிறது நா.த.க” என்றனர். கட்சியின் உள்விவகாரமறிந்த சிலரோ, ``இந்த தேர்தலில் நா.த.க எதிர்பார்க்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் அவ்வளவு எளிதாக தந்துவிடாது. ஆட்டோ சின்னம் கிடைக்கும் என பெரிதும் நம்பினோம். அதனை மனதில் வைத்தே மஞ்சள் வண்ணத்தில் `நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்ன?' என போஸ்டரை ஊர் முழுக்க ஒட்டினோம். ஆனால் அதுவும் வேறு கட்சிக்குப் போய்விட்டது. தென்னந்தோப்பு, பேனா முனை சின்னங்களும் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுவிட்டன. விவசாயம் சம்பந்தப்பட்ட எந்தச் சின்னத்தையும் பட்டியலிலேயே வைக்கவில்லை தேர்தல் ஆணையம். இதுவரை யாரும் தேர்வு செய்யாத சின்னம் என்னவென தேடினால் படகு, கப்பல், மைக், தீப்பெட்டி, பழக்கூடை, வைரக்கல், தடி உள்ளிட்ட சின்னங்கள் இருக்கின்றன. மற்றபடி தலைகவசம், ஜன்னல், செருப்பு, கால்பந்து, ஆப்பிள், சிசிடிவி கேமரா எனத் துளியும் ஏற்கத்தக்க சின்னங்களே இல்லை. அதேசமயம் என்ன சின்னத்தை தேர்வு செய்யலாம்... அதன் நடைமுறைகள் என்னவென்ற ஆலோசனைகள் கட்சிக்குள் போய்க் கொண்டிருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னத்துக்கான வழக்கும் வரவுள்ளதால், நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்னவென ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றனர். சின்னம் தொடர்பான வழக்குகளில் அனுபவம்பெற்ற வழக்கறிஞர் சக்திவேலிடம் இது தொடர்பாகப் பேசினோம். ``உச்ச நீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான மனுமீதான விசாரணை எப்படி நடக்கும், அதன் தீர்ப்பு எப்படி இருக்குமென இப்போதே சொல்ல முடியாது. அதேசமயம் இந்த குறுகிய காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்குமா என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. வழக்கு ஒருபக்கம் நடந்தாலும், மறுபக்கம் பொதுச் சின்னம் கேட்டு கட்சி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம். 15 சின்னங்கள் அடங்கிய பட்டியலை அவர்கள் ஆணையத்திடம் வழங்க வேண்டும் அல்லது புதியவொரு சின்னத்தை டிசைன் செய்து அதனை ஒதுக்க வேண்டுமென்றுகூட கோரிக்கை வைக்கலாம். ஆனால் தேர்தல் நெருங்கிவருவதால் என்ன நடக்குமென பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்” என்றார். `ஆட்டோ... படகு... மைக்...' - நாதக-வின் புதுச் சின்னம் சாய்ஸ் என்ன? | What is the new symbol of Naam Tamilar party? - Vikatan
  15. நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறிகளின் விலை நிலவரம் Published By: DIGITAL DESK 3 13 MAR, 2024 | 12:56 PM நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை (13) விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், (முட்டைகோஸ்) கோவா 425 ரூபாவாக விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை நுவரெலியா கரட் கிலோ ஒன்றின் விற்பனை விலை 395 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல லீக்ஸ் 210 ரூபா, ராபு 80 ரூபாய், பீட்ரூட் (இலையுடன்) 220 ரூபாவாகவும், இலை வெட்டப்பட்ட பீட்ரூட் 270 ரூபாவாகவும் மொத்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் உருளை கிழங்கு (வெள்ளை) 355 ரூபாவாகவும், உருளை கிழங்கு (சிவப்பு) 375 ரூபாவாகவும், நோக்கோல் 170 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலங்களில் அதிக உச்ச விலை கண்ட நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர மரக்கறிகளின் விலைகளும் கணிசமாக சரிவு கண்டுள்ளது. அந்தவகையில் தக்காளி (பச்சை) 800 ரூபாவாகவும், கறிமிளகாய் 555 ரூபாவாக மொத்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், சிவப்பு கோவா 2100 ரூபாவாகவும், காலிஃப்ளவர் (நுவரெலியா) 650 ரூபாவாகவும், புரக்கோலி 550 ரூபாவாகவும் வில்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறிகளின் விலை நிலவரம் | Virakesari.lk
  16. 13 MAR, 2024 | 05:22 PM (எம்.மனோசித்ரா) தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான சீனி மற்றும் பால் மா பாவனையே இதற்கான பிரதான காரணமாகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். சீனி இறக்குமதிக்காக 300 மில்லியன் டொலரும், பால் மா இறக்குமதிக்காக 350 - 400 மில்லியன் டொலரும் ஒதுக்கப்படுகிறது. எனவே இவற்றின் பாவனையைக் குறைப்பதன் மூலம் சுகாதாரத்துறைக்கு மாத்திரமின்றி பொருளாதாரத்துக்கும் பாரிய ஒத்துழைப்பினை வழங்க முடியும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டினார். தேசிய உள்சாட்டு மருத்துவ தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் நாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இவை தொடர்பில் மக்களுக்கு தொடர்ந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். நாட்டில் சீனியின் பாவனை அதிகமாகக் காணப்படுகின்றமையே நீரிழிவு நோய்க்கான பிரதானமான காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. தாய்ப்பாலில் சீனி கிடையாது. எனினும் குழந்தைகள் பிறந்து சில மாதங்களின் பின்னர் பெற்றோர் குழந்தைகளுக்கு சீனி அடங்கிய உணவுகளை வழங்குகின்றனர். இதன் காரணமாக இன்று நீரிழிவு நோய் மட்டம் பாரியளவில் உயர்வடைந்துள்ளது. தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது. அதிகளவான சீனி பாவனை உடல் நலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, மறுபுறம் தேசிய பொருளாதாரத்திலும் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. காரணம் சீனி இறக்குமதிக்கு 300 மில்லியன் டொலர் ஒதுக்கப்படுகிறது. இதனைக் குறைத்துக் கொண்டால் எமது பொருளாதாரத்தைக் கூட வலுப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும். அத்தோடு பால் மாவையும் நாம் அதிகமாகப் பயன்படுத்துகின்றோம். உலகில் அதிகளவு பால் மாவினைப் பயன்படுத்தும் நாடாக இலங்கை காணப்படுகிறது. எம்மைப் போன்று பால் மாவினால் தயாரிக்கப்படும் பாலை அருந்துபவர்கள் உலகில் வேறு எவரும் இருக்கமாட்டார்கள். இந்தளவுக்கு பால் மாவை உபயோகிக்க வேண்டுமா என்பதை வைத்தியர்கள் தம்மிடம் வரும் நோயாளர்களிடம் கேட்க வேண்டும். இவ்வாறு பால் மா பாவனையைக் குறைத்தால் அது சுகாதாரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் நன்மையாகும். வேறு நாடுகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் 350 - 400 மில்லியன் டொலரை நாம் பால்மா இறக்குமதிகாக செலவிடுகின்றோம். இந்த தகவல்களை வைத்தியர்களும், ஊடகங்களும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றார். தென்னாசிய பிராந்தியத்தில் அதிக நீரிழிவு நோயாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை ; சீனி, பால் மா பாவனையே பிரதான காரணம் - ரமேஷ் பத்திரன | Virakesari.lk
  17. 13 MAR, 2024 | 05:27 PM மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (13) முற்பகல் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) பெற்றிக் பிக்கரிங்கும் (Patrick Pickering) தேசிய மக்கள் சக்தியின் சார்பாக விஜித ஹேரத்தும் பங்கேற்றனர். இலங்கையில் நிலவுகின்ற சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை பற்றி விரிவான உரையாடல் இதன்போது இடம்பெற்றது. அத்தோடு, தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் பற்றியும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. கனடாவில் வசிக்கின்ற இலங்கையரை சந்திப்பதற்கான அநுர குமார திசாநாயக்கவின் கனடா விஜயத்துக்கு உயர்ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்தார். கனடா உயர்ஸ்தானிகருக்கும் அநுர குமாரவுக்கும் இடையே சந்திப்பு | Virakesari.lk
  18. Published By: DIGITAL DESK 3 12 MAR, 2024 | 03:03 PM யாழ்ப்பாண கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர் படங்களை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (12) தீவகப் பகுதி தெற்கு வேணைப் பிரதேச கடைத் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் மஜகர் கையளித்ததுடன் கண்டன போராட்டத்தையும் முன்னெடுத்தனர். குறித்த மஜகரில் தெரிவிக்கப்பட்டதாவது தொடர்ச்சியாக இந்திய அத்துமீறிய ரோலர் படகுகளினால் தொடர்ச்சியாக எமது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இந்திய ஆத்துமையா ரோல் படகுகளை தடுத்து நிறுத்துமாறு இலங்கை மற்றும் இந்தியா அரச உயர் மட்டம் வரை மஜகர்களை கையளித்தது மட்டுமல்லாது கண்டன போராட்டங்களையும் மேற்கொண்டோம். ஆனால் எமது கோரிக்கை தொடர்பில் இந்திய அரச உயர் மட்டம் இதுவரை சாதகமான பதில் எதுவும் வழங்கவில்லை. ஆகவே எமது கோரிக்கை அடங்கிய மஜகரை நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் வழங்கியுள்ளோம். எமது மஜகருக்கான பதிலை இம் மாதம் 25 ஆம் திதிக்கு முன்னர் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் வழங்காத சந்தர்ப்பத்தில் 25ஆம் திகதிக்கு பின்னர் மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்காக திட்டமிட்டுள்ளோம் என குறித்த மகஜரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கண்டனப் போராட்டத்தில் அடிக்காதே அடிக்காதே மீனவர் வயிற்றில் அடிக்காதே இந்திய அரசே தமிழக ரோலரை தடுத்து நிறுத்து தொப்புள் கொடி உறவே நமது கடல் வளத்தை அழிக்காதே என்ற வாசகங்களை ஏந்தியவாறு கண்டன போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் தீவகம் தெற்கு கூட்டுறவு சமாசங்களின் தலைவர் ஆறுமுகம் கனகசபை யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழிலாளர் கிராமிய கூட்டுறவு சங்கங்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் யாழ் மாவட்ட கடை தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ் மற்றும் யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் உப தலைவர் அந்தோணி பிள்ளை பிரான்சிஸ் ரட்னகுமார் உட்பட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தியன் ரோலரை தடுத்து நிறுத்து ; பதில் இல்லையேல் 25 ஆம் திகதிக்கு பின் போராட்டம் - மீனவ சங்கங்கள் எச்சரிக்கை | Virakesari.lk
  19. யாழில் இளம் குடும்பஸ்தர் படுகொலை ; சந்தேகநபர்கள் மூவர் அடையாளம் Published By: DIGITAL DESK 3 12 MAR, 2024 | 03:22 PM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 23 வயதான இளம் குடும்பஸ்தர் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை சென்று விட்டு, வட்டுக்கோட்டை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளையில் , பொன்னாலை பாலத்திற்கு அருகில் இரண்டு வாகனங்களில் காத்திருந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் கணவன் மனைவி இருவரையும் வாகனத்தில் கடத்தி சென்றனர். கணவனை ஒரு வாகனத்திலும், மற்றைய வாகனத்தில் மனைவியையும் கடத்தி சென்ற வன்முறை கும்பல், மாணவியை அராலி பகுதியில் இறக்கி விட்டுள்ளனர். கணவனை கடத்தி சென்றவர்கள், வாகனத்தினுள் வைத்து சரமாரியாக தாக்குதல் மேற்கொன்டதுடன், வாள் வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டு விட்டு, வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் முன்பாக படுகாயங்களுடன் இளைஞனை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். இளைஞனை மீட்ட வைத்தியசாலை பணியாளர்கள், நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். அதேவேளை அராலி பகுதியில் இறக்கி விடப்பட்ட மனைவி அங்கிருந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னையும் , தனது கணவரையும் இரு வாகனங்களில் கடத்தி சென்றனர் என முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வட்டுக்கோட்டை பொலிஸார் , கடத்தலில் ஈடுபட்ட மூவரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை கொலை சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஆலயம் ஒன்றில் கடந்த வருடம் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இரு இளைஞர்கள் காயமடைந்திருந்தனர். படுகொலை செய்யப்பட்ட இளம் குடுபஸ்தரே அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் , அதற்கு பழி தீர்க்கும் வகையில் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. யாழில் இளம் குடும்பஸ்தர் படுகொலை ; சந்தேகநபர்கள் மூவர் அடையாளம் | Virakesari.lk
  20. குறைவடைந்த மரக்கறிகளின் விலைகள்! 12 MAR, 2024 | 04:04 PM கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் விலைகள் வார நாட்களை விட இன்று (12) குறைவடைந்துள்ளது. இதன்படி , சந்தைகளில் ஒரு கிலோ கரட் 400 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீன்ஸ் 400 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 450 ரூபாவாகவும் , ஒரு கிலோ தக்காளி 320 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ கறி மிளகாய் 600 ரூபாவாகவும் ,ஒரு கிலோ கத்தரிக்காய் 250 ரூபாவாகவும், ஒரு கிலோ பீட்ரூட் 500 ரூபாவாகவும் ,ஒரு கிலோ புடலங்காய் 220 ரூபாவாகவும் , ஒரு கிலோ பாவற.காய் 450 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டிக்காய் 160 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 600 ரூபாவாகவும், ஒரு கிலோ தேசிக்காய் 200 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன. மேலும் , கொழும்பு மெனிங்சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ கரட் 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ முட்டைக்கோஸ் 320 ரூபாவாகவும் , ஒரு கிலோ தக்காளி 300 ரூபாவாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 250 ரூபாவாகவும், ஒரு கிலோ தேசிக்காய் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 300 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன. குறைவடைந்த மரக்கறிகளின் விலைகள்! | Virakesari.lk
  21. Published By: VISHNU 12 MAR, 2024 | 07:33 PM மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் வாழும் குஞ்சங்குளம் ஆதிவாசி சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சிகைனகளுக்குத் தீர்வு காணும் செயல்திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் நிருவாக அலுவலர் கந்தன் நிர்மலா தெரிவித்தார். விழுது நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் ஸ்கோப் திட்டத்தின் மும்மத இளையோர் முன்வந்து ஓரம் கட்டப்பட்டுள்ள குஞ்சங்குளம் ஆதிவாசி சமூகத்தினரின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து ஏனைய சமூகத்துடன் அவர்களை ஒன்றிணைத்து வாய்ப்புக்கள் மற்றும் வளங்களையும் பெற்று நிலைபேறான நல்லிணக்கத்தினை மக்கள் மத்தியில் உருவாக்குதல் இத்திட்டத்தின் நோக்கம் என்று அவர் மேலும் தெரிவித்தார். “ஓரங்கட்டப்பட்ட குஞ்சங்குளம் ஆதிவாசி சமூகத்திற்கான இளையோரின் குரல்” எனும் நிகழ்ச்சித் திட்டம் செவ்வாய்க்கிழமை (12) மாலை குஞ்சங்குளம் ஆதிவாசிகள் கிராமத்தில் இடம்பெற்றது. விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய நிறுவனத்தின் சிரேஷ்ட சமூக ஊக்குவிப்பாளர் எஸ்.சுகிர்தவிழி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளரும் மாவட்ட காணி மத்தியஸ்த குழுத் தலைவரும் கிழக்குப் பல்கலைக்கழக நிபுணத்துவ ஆலோசகருமான கே.குருநாதன், வாகரைப் பிரதேச சிறுவர் மேம்பாட்டு உரிமைகள் அலுவலர் பி.எம்.எம்.காசிம், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.சதீஷ்காந்த், கே சசிதரன், போதைப்பொருள் முற்தடுப்பு அபிவிருத்தி அலுவலர் கே.சுவேந்திரகுமார், விழுது நிறுவன சமூக ஒருங்கிணைப்பாளர் பி.முரளீதரன் குஞ்சங்குளம் கிராம ஆதிவாசித் தலைவர் என்.வேலாயுதம் உள்ளிட்டோரும் ஆதிவாசி கிராம மக்களும் மும்மதங்களைச் சேர்ந்த இளையோரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் தமது குஞ்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் வேடுவ ஆதிவாசிகள் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தெரியப்படுத்திய அச்சமூகத் தலைவர் வேலாயுதம், அங்கு பூர்வீகமாக வேடுவ சமூகத்தினர் வசித்து வந்த காணிகளை வனவளத் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது. சுமார் 70 ஆதிவாசி வேடுவ சமூகக் குடும்பங்கள் வாழுகின்ற இந்தக் கிராமத்தில் 40 குடும்பங்களுக்கே காணிகளும் வீடுகளும் உள்ளன. பல்வேறுபட்ட சிரமங்களுடன் நாங்கள் வாழ்ந்து வருவதை இங்கு வந்துள்ள நீங்கள் கண்கூடாகக் காணமுடியும். காணியில்லாப் பிரச்சினை தொடக்கம் நாங்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் மாகாணத்திலுள்ள சகல அதிகாரிகளுக்கும் அறிவித்து வந்துள்ளோம் ஆனால் தீர்வுகள் தான் கிடைக்கவில்லை” என்றார். நிகழ்வில் குஞ்சங்குளம் வேடுவ ஆதிவாசிகள் கிராமத்திலுள்ள மக்களின் காணியில்லாப் பிரச்சினைகளுக்கு நிருவாக மட்டத்தில் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி மாகாண முன்னாள் காணி ஆணையாளர் குருநாதன் தெளிவுபடுத்தினார். தன்னார்வத்; தொண்டு நிறுவனமான விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் கடந்த பல தசாப்தங்களாக பின்தங்கிய, அடிமட்ட கிராம மக்களின் கல்வி, சுகாதாரம், போசாக்கு, தொழில் வாய்ப்பு, பெண்கள் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், நல்லாட்சி, சுகவாழ்வு போன்ற விடயங்களில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் செய்து வருகின்றது. வாகரையில் ஓரங்கட்டப்பட்ட ஆதிவாசி சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் | Virakesari.lk
  22. Published By: VISHNU 12 MAR, 2024 | 08:04 PM எமக்கான நீதியினை அடைவதற்கு வடகிழக்கு தழுவிய மக்கள் எழுச்சிப்போராட்டமே ஒரே வழி என்று சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் அறைகூவல் விடுத்துள்ளார். வெடுக்குநாறிமலை வழக்கைப் பார்வையிடுவதற்காகச் செவ்வாய்க்கிழமை (12) வவுனியா வருகைதந்த அவர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்; இலங்கை பொலிசாரின் அடாவடி அளவு கடந்து செல்கின்றது. கைது செய்யப்படுவதற்கான எந்தவிதமான நியாயமான காரணங்களும் இல்லாமல் பொய்யான வகையில் தொல்பொருட் திணைக்களத்தால் நீதிமன்றிற்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அத்துமீறல்களைச் செய்தது முழுதும் தொல்பொருட்திணைக்களத்தினரே. கைதுசெய்யப்பட்டவர்கள் சீரான உணவின்றி வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். அவர்களது உறவினர்கள் படும்பாட்டைப் பார்க்கும் போது வார்த்தைகள் வரவில்லை. இந்த சூழ்நிலையில் நாம் ஒரு மக்கள் எழுச்சிப்போராட்டத்தினை வடக்கு கிழக்கு தழுவிய வகையிலே விரைவில் ஒன்றுதிரண்டு ஏற்படுத்த வேண்டும். அதனூடகவே எமக்கான நீதியை நிலைநாட்ட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. எனவே வடகிழக்கின் அனைத்து உறவுகள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாதிக்கப்பட்ட தரப்புக்கள் என அனைவரும் ஒன்று திரண்டு பேரெழுச்சிப்போராட்டம் ஒன்று வவுனியா நகரில் விரைவில் நடாத்தப்படும். அதற்கு அனைவரது ஆரதவினையும் வேண்டிநிற்கின்றோம் என்றார். எமக்கான நீதியினை அடைய வடகிழக்கு தழுவிய மக்கள் எழுச்சிப்போராட்டமே ஒரே வழி - வேலன் சுவாமிகள் அறைகூவல் | Virakesari.lk
  23. சரப்ஜித் சிங் தலிவால் பதவி,பிபிசி செய்தியாளர், கனடாவிலிருந்து 11 மார்ச் 2024 "நான் இந்தியாவுக்குச் சென்று என் தந்தையைக் கட்டிப்பிடித்து அழ விரும்புகிறேன், எனக்கு அவர் அருகில் இருக்க வேண்டும் என ஏக்கமாக உள்ளது." இந்த வார்த்தைகளைச் சொன்னவுடனேயே அர்பன்-இன் கண்களில் கண்ணீர் வந்தது. பின் அவர் மௌனமாகி விட்டார். சில கணங்களில் அமைதியைக் கலைத்துவிட்டு, "இங்கே யாரும் யாருக்கும் சொந்தம் இல்லை, எல்லோரும் இங்கிருந்து ஓடிப் போகிறார்கள். கனடாவை பற்றி என்ன நினைத்திருந்தேனோ, இங்கே வந்த பிறகு அது தலைகீழாக மாறிவிட்டது," என்று அவர் கூறினார். தனது கனவுகளை நனவாக்கும் நோக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாணவியாக கனடா வந்தார் அர்பன். அர்பன் பஞ்சாபின் முக்த்சார் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அவருடைய பெற்றோர் ஆசிரியர்கள். இரண்டு வருட படிப்பை முடித்த அர்பன், தற்போது பணி அனுமதி பெற்று ‘செக்யூரிட்டி’யாக பணியாற்றி வருகிறார். மேல்படிப்புக்காக கல்வி விசாவில் கனடாவுக்கு வரும் ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களில் அர்பனும் ஒருவர். ஆனால், இங்குள்ள நிலைமைகள் அவர்களின் கனவுகளுக்கு மாறாக இருக்கிறது. தன் சோகம் குறித்துப் பகிர்ந்துகொண்ட அர்பன், "நான் என் பெற்றோரை மிகவும் `மிஸ்` செய்கிறேன். அம்மா உணவு தயார் செய்வார். நான் விளையாடுவேன். அப்போது எனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை," என்றார். "நீ சாப்பிட்டாயா மகளே, எனக் கேட்பதற்கு இங்கே யாரும் இல்லை. இங்கே நீங்கள்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்," என்கிறார் அவர். அர்பனின் கூற்றுப்படி, கனடாவுக்கு வரும் திட்டம் அவருக்கு இல்லை. உண்மையில், கனடா குறித்த பிரகாசமான காணொளிகளைப் பார்த்த பிறகே அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார். கனடா மிகவும் சுத்தமானது, மாணவர்களுக்குப் பெரிய கார்கள் மற்றும் வீடுகள் உள்ளன. மேலும் இந்த நாடு பெண்களுக்குப் பாதுகாப்பானது என, பஞ்சாபில் எல்லோரும் கனடாவை பற்றிப் பேசுவதை அர்பன் கவனித்தார். இளம் வயதில் இருக்கும் அர்பன் இதனால் மூலம் தான் மிகவும் கவரப்பட்டதாகவும், கனடாவுக்கு செல்ல முயல வேண்டும் என்று நினைத்ததாகவும் கூறுகிறார். "நான் எனது பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என்று என் பெற்றோர் விரும்பினர். ஆனால், நீங்கள் எவ்வளவு சீக்கிரம் கனடா செல்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் `செட்டில்` ஆகிவிடுவீர்கள் என சிலர் என்னிடம் சொன்னார்கள்.” அர்பனுக்கு 24 வயது ஆகிறது. அவர் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் கனடா சென்றார். “எனவே, நான் 12ஆம் வகுப்பு முடித்தவுடனே மிக இளம் வயதிலேயே இங்கு வந்தேன். கனடாவில் வசிக்கும் நண்பர்கள் சிலர் இங்குள்ள பிரச்னைகளை என்னிடம் சொன்னாலும் கனடா என்ற `பேய்` என் மனதில் இருந்ததால் அவர்கள் சொன்னதை நான் பொருட்படுத்தவில்லை." கனடா குறித்த கனவும் உண்மை நிலவரமும் கனடாவுக்கு 2021இல் முதன்முறையாக வந்தபோது, தான் நினைத்துப் பார்க்காத வேறொரு உலகத்திற்கு வந்திருப்பது போன்று உணர்ந்ததாகவும் டொரண்டோ தனது கனவுகளின் நகரமாகத் தோன்றியது என்றும் அர்பன் கூறுகிறார். "ஏஜெண்ட்டுக்கு அறிமுகமான நபர் ஒருவர் என்னை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்று ஒரு வீட்டின் கீழ்தளத்தில் தங்குவதற்கு வாடகைக்கு எடுத்தார், அங்கு நான் ஏழு மாதங்கள் தங்கினேன்," என்று அர்பன் கூறினார். "அந்த இடம் ஒரு மண்டபம் போன்று இருந்தது, அங்கு அறைகள் இல்லை, தரையில் வெறும் மெத்தைகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. வேறு சில பெண்களும் அங்கு தங்கியிருந்தனர். ஜன்னல்கள் இல்லை, முதல் ஏழு மாதங்கள் கனடாவில் எனது அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது." கனடாவை பற்றி இந்திய குழந்தைகளுக்குக் காட்டப்படுவது வெறும் கனவுதான் என்கிறார் அர்பன். யதார்த்தம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இத்தகைய ஓரிடத்தில் வசிக்க வேண்டும் என முகவர்கள் சொல்லவில்லை. படித்துக்கொண்டே எப்படி வேலை செய்ய வேண்டும், மாணவர்களிடம் எவ்வளவு சுரண்டப்படும் என்பது குறித்தெல்லாம் சொல்லவில்லை. இது பற்றி எந்தத் தகவலும் கொடுக்கப்படவில்லை. கனடாவை பற்றி எல்லாமே நன்றாகத்தான் சொல்லப்படுகிறது. அர்பன் கூறுகையில், மாணவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானது. மன உளைச்சல், குடும்பத்தை விட்டு விலகியிருப்பது, வேலை கிடைக்காததால் ஏற்படும் அழுத்தம், இவை அனைத்தும் மாணவர் வாழ்க்கையின் போராட்டத்தின் ஒரு பகுதி. தற்போது வேலைதான் பெரிய பிரச்னை என்று அர்பன் கூறினார். குளிர்காலத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு கண்காட்சிகளில், மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்று வேலை தேடுகிறார்கள். இந்த மாணவர்களில் சிலருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது, இந்தியாவில் கனடாவை பற்றி யாரும் இந்த உண்மையைச் சொல்வதில்லை. வாழ்க்கைச் செலவுகள், கல்லூரிக் கட்டணம், வேலை உறுதி இல்லாமை போன்றவற்றால் மனதில் எப்போதுமே மாணவர்களுக்குக் கவலை இருக்கும். என்னுடைய படிப்பை முடித்தது, வேலை கிடைத்தது, சம்பளம் வங்கிக் கணக்கில் வந்துவிட்டது என்பது போன்ற சில தகவல்களையே பெற்றோரிடம் தெரிவிப்பதாக அர்பன் கூறினார். மற்ற சிரமங்களை ஏன் சொல்லவில்லை என்று கேட்டால், அவர்கள் கவலைப்படுவார்கள், பெரும்பாலான மாணவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்று அவர் கூறினார். “நான் சாப்பிடாவிட்டாலும், நான் சாப்பிட்டதாக என் பெற்றோரிடம் பொய் சொல்கிறேன். நான் வேலையிலிருந்து தாமதமாக வந்ததால் இன்று சமைக்க முடியவில்லை என்று என்னால் சொல்ல முடியாது." சுமார் 24 வயதான அர்பன், தனக்குள் இருந்த குழந்தைமையை இளம் வயதிலேயே இழந்துவிட்டதாகவும் கனடாவில் தான் பெரிய பொறுப்புகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார். கனடா குடியுரிமை பெறுவதைத் தன் நோக்கமாகக் கொண்டுள்ளார் அர்பன். அதன் பிறகுதான் இந்தியா சென்று தன் பெற்றோருடன் இணையத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறார் அவர். அர்பனின் கூற்றுப்படி, கனடா ஒரு நல்ல நாடு, யாருக்கும் எந்தப் பாகுபாடும் இல்லை, முன்னேற சம வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மாணவர் வாழ்க்கை மிகவும் கடினம், இந்தியாவில் வாழும்போது அதைக் கற்பனை செய்து பார்க்க முடியாது என்றார். கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் (IRCC) 2023 தரவுகளின்படி, இந்த ஆண்டு சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி கற்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, சீன மாணவர்கள் இரண்டாவது இடத்திலும் பிலிப்பைன்ஸ் மாணவர்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்திய மாணவர்களில், பஞ்சாப் மற்றும் குஜராத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கனடா செல்கின்றனர். இது தவிர, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தற்போது கனடாவில் படித்து வருகின்றனர். இந்தியர்களில், கனடா செல்லும் மாணவர்களில் பஞ்சாபை சேர்ந்தவர்களே அதிகம். லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் பல ஆண்டுகளாக சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்த்து கனடா சென்றுள்ளனர். கிரேட்டர் டொரண்டோ ஏரியா (ஜிடிஏ) சர்வதேச மாணவர்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கான மையமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பிராம்ப்டன் `மினி பஞ்சாப்` என்று அழைக்கப்படுகிறது. அக்ரமின் கதை படக்குறிப்பு, அக்ரம் பஞ்சாபின் பர்னாலா மாவட்டத்தில் உள்ள துல்கோட் கிராமத்தைச் சேர்ந்த அக்ரமின் கதையும் அர்பனை போன்றது. 28 வயதான அக்ரம், 2023ஆம் ஆண்டு கல்வி அனுமதியின் பேரில் கனடாவுக்கு வந்து, தற்போது பிராம்ப்டனில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் திட்ட மேலாண்மை படித்து வருகிறார். தனது வகுப்பில் 32 மாணவர்கள் இருப்பதாக அக்ரம் கூறினார். இவர்களில் 25 பேர் இந்தியர்கள், மீதமுள்ளவர்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவரது வகுப்பில் கனடா வம்சாவளி மாணவர்கள் இல்லை. கனடா வாழ்க்கையை பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அக்ரம், "கனடா ஒரு அழகான சிறை, நீங்கள் எல்லாவற்றையும் பெறுவீர்கள், ஆனால் உங்கள் வாழ்நாள் முழுவதும் அதிலிருந்து உங்களால் வெளியேற முடியாது," என்று கூறுகிறார். அக்ரம் கூறுகையில், "தற்போது இங்கு எந்திரங்கள் போல் இருக்கிறோம், காலை முதல் மாலை வரை உழைக்கிறோம், சிலந்தி வலையில் இருந்து வெளியே வரமுடியாது," என்றார். அக்ரமின் கல்லூரி வாரத்தில் மூன்று நாட்கள் மாலை இரண்டு மணிநேரம் நடைபெறுகிறது. கூலித் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த அக்ரம் ரூ.22 லட்சம் கடனுடன் கனடா வந்துள்ளார். இந்த கடனைத் திருப்பிச் செலுத்துவதோடு, அவரது கனவுகளையும் நிறைவேற்ற, அவர் இரண்டு பணிநேரங்களில் கடுமையாக உழைக்க வேண்டும். அவரைப் பொறுத்தவரை, இந்தியாவில் கனடா குறித்து சொல்லப்படுவது முழு உண்மை இல்லை என்பதை அந்நாட்டுக்கு சென்றவுடன் அவர் அறிந்தார். அக்ரம் திறமையான, இலக்கியத்தில் ஆர்வமுடைய இளைஞர். பஞ்சாபிலேயே இலக்கியம் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்றார் அக்ரம். கனடா வந்த பிறகு அவருடைய கவிதைகளின் எழுத்துகள் மாறிவிட்டன. அக்ரமின் கவிதைகள் பஞ்சாப் நிலத்தின் மீதான அவரது ஏக்கத்தையும் கனடாவின் கடினமான சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கின்றன. 10 மார்ச் 2024 IND vs ENG: ஷுப்மன் கில், ஜெய்ஸ்வாலிடம் ரோஹித் ஷர்மா பின்பற்றும் தோனி அணுகுமுறை9 மார்ச் 2024 செலவுகளைச் சமாளிக்க எல்லா நேரமும் வேலை செய்வதும், எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் பொதுவாக அவர்களின் முகங்களிலும் வார்த்தைகளிலும் பிரதிபலிக்கின்றன. கடனைத் திருப்பிச் செலுத்துதல், கல்லூரிக் கட்டணம், வாழ்க்கைச் செலவுகளைச் சந்திக்க, அக்ரம் தற்போது இரண்டு இடங்களில் பகுதிநேர வேலை செய்கிறார். பகலில் கணினி மையத்திலும், இரவில் செக்யூரிட்டியாகவும் பணிபுரிகிறார். அவர் ஐந்து மணிநேரம் மட்டுமே தூங்குகிறார். அக்ரம் கூறுகையில், “ஒருபோதும் பதற்றம் குறையாது, குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவது மன அழுத்தத்தில் இருந்து எனக்கு கொஞ்சம் நிவாரணம் அளிக்கிறது" என்றார். அக்ரம், அர்பனை போலவே, கனடாவில் உள்ள பிரச்னைகள் பற்றி எதையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வதில்லை. அக்ரம் தற்போது தனது ஐந்து நண்பர்களுடன் கீழ்தளத்தில் வாடகைக்கு வசிக்கிறார். ஹல்லுன்மா கீழ்தளத்தில் இரண்டு படுக்கைகளும் தரையில் சில படுக்கை விரிப்புகளும் உள்ளன. ஒரு படுக்கை காலியாக உள்ளது, மே மாதம் இந்தியாவிலிருந்து வரும் மற்றொரு சர்வதேச மாணவருக்காக அப்படுக்கை காத்திருப்பதாக அக்ரம் கூறுகிறார். அக்ரம் தங்கியிருக்கும் கீழ்தளமும் திறந்த மண்டபம் போன்றே உள்ளது. மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள் படக்குறிப்பு, நிர்லெப் சிங் கில் நிர்லெப் சிங் கில் பிராம்ப்டனில் உள்ள பஞ்சாபி சமூக சுகாதார சேவைகள் தொடர்பாகப் பணிபுரிகிறார். இந்தியா, குறிப்பாக பஞ்சாபை சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கில் கையாள்கிறார். இதுகுறித்து நிர்லெப் கில் விளக்குகையில், "கனடாவில் உள்ள மாணவர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்வதால், பலரும் மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக மிக இளம் வயதில் (12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு) கனடாவுக்கு வரும் குழந்தைகள் அதிக சிக்கல்களைச் சந்திக்கின்றனர்," என்றார். நிர்லெப் சிங் கில் கூறுகையில், இந்த மாணவர்கள் இளம் வயதினராக இருப்பதால் அவர்கள் மனதளவில் முதிர்ச்சி அடையவில்லை. 8 மார்ச் 2024 பாகிஸ்தான்: மோதியின் வாழ்த்துக்கு ஷாபாஸ் ஷெரீப் ஒரே வரியில் கூறிய பதில் - புதிதாக வெடித்த விவாதம்8 மார்ச் 2024 அவர்களுக்கு மன அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. அவர்கள் தங்கள் பெற்றோரிடம் எதையாவது சொன்னாலும், பெற்றோர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது" என்றார். அவர் மேலும் கூறுகையில், "இந்தப் பிரச்னை அனைத்து சர்வதேச மாணவர்களிடமும் இல்லை, சிலர் இங்கு முன்னேறியுள்ளனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது" என்கிறார். சர்வதேச மாணவர்களிடையே மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று கேட்டால் அதற்குப் பல காரணங்கள் இருப்பதாகக் கூறுகிறார். "முதல் காரணம் எதிர்பாராத பொறுப்பு, இந்தியாவில் குழந்தைகள் வசதியான நிலையில் இருக்கிறார்கள், அதாவது அவர்களின் பெற்றோர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறார்கள், எந்தப் பொறுப்பும் இல்லை. ஆனால், கனடாவுக்கு வந்ததும் அவர்கள் உடனடியாக பல பொறுப்புகளைச் சந்திக்கின்றனர். இதற்கு அவர்கள் மனதளவில் தயாராக இல்லை." போதைப் பழக்கம் “கனடாவில் போதைப்பொருள் பரவி வருகிறது. இந்தியாவில் சில வகையான போதைப் பொருள்கள் மட்டுமே உள்ளன. ஆனால், கனடாவில் 55 முதல் 70 வகையான போதை பொருள்கள் கிடைக்கின்றன. போதைக்கு அடிமையாகி, மாணவர்கள் மன மற்றும் உடல் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்." இதுமட்டுமின்றி, போதைப்பொருளை அதிகளவில் உட்கொள்வதால் மாணவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலிருந்து அதிகமானோர் கனடாவில் வசிப்பதாகவும், சர்வதேச மாணவர்களின் இறப்பு எண்ணிக்கை மட்டும் ஏன் அதிகரித்து வருகிறது என்றும் நிர்லெப் சிங் கில் கூறினார். பெரும்பாலான இறப்புகள் மாரடைப்புடன் தொடர்புடையவை என்று கில் கூறினார். இத்துடன் பல்வேறு காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவர்கள் தற்கொலை செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது. மன அழுத்தம் - ஏன்? கனடாவில் அதிகான மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு இந்தச் சூழலை எவ்வாறு கையாள்வது என்று தெரியவில்லை என்றால், அவர்கள் விரக்தியடைகின்றார். இதுதவிர, அவர்கள் கனடா குடியுரிமை மற்றும் நிரந்தர குடியிருப்பு (PR) பெறுவது குறித்தும் மன அழுத்தத்தில் உள்ளனர். கனடாவில் மாணவர்கள் மரணம் சர்வதேச மாணவர் சமூகத்தில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் இன்னொரு விஷயம் கனடாவில் நிகழும் மாணவர்களின் மரணம். இதுகுறித்து அறிய பிராம்ப்டனில் இறுதிச் சடங்கு நடத்துவதற்கான தனியார் அமைப்பின் மேலாளர் ஹர்மிந்தர் ஹன்சியிடம் பிபிசி பேசியது. அவர் 15 ஆண்டுகளாக அந்த அமைப்பை நடத்தி வருகிறார். சர்வதேச மாணவர்களின் இறப்பு விகிதம் சமீப காலமாக கணிசமாக அதிகரித்துள்ளது என்று ஹர்மிந்தர் ஹன்சி கூறினார். இறப்புக்கான காரணங்களை பற்றிப் பேசுகையில், பெரும்பாலான இறப்புகளில், இயற்கை காரணங்களால் இறப்பது ஒன்றிரண்டு நிகழ்வுகள்தான் என்றும் பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணம் தற்கொலைதான் என்றும் ஹர்மிந்தர் ஹன்சி தெரிவித்தார். இதுமட்டுமின்றி, போதைப்பொருளை அதிகமாக உட்கொள்வதாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளும் சர்வதேச மாணவர்களிடையே மரணத்தை ஏற்படுத்துகின்றன. 6 மார்ச் 2024 ஆழ்கடலில் மூழ்கிய கப்பலில் ரூ.1.66 லட்சம் கோடி தங்கப் புதையல் - யாருக்குச் சொந்தம் என்பதில் போட்டாபோட்டி5 மார்ச் 2024 படக்குறிப்பு, ஹர்மிந்தர் ஹன்சி ஒவ்வொரு மாதமும் சுமார் நான்கு-ஐந்து இறந்த உடல்களை அவர்கள் இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். இதுதவிர சிலர் கனடாவிலும் அவற்றைத் தகனம் செய்கிறார்கள், அதன் தரவு கிடைக்கவில்லை என்று ஹன்சி கூறினார். ஹன்சியின் கூற்றுப்படி, தற்போது கிரேட்டர் டொரண்டோ ஏரியாவில் இத்தகைய அமைப்புகள் பல உள்ளன. கனடா முழுவதிலும் உள்ள தரவுகளை ஒருங்கிணைத்தால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றார். கடந்த 2023 டிசம்பரில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த போது, 2018 முதல் டிசம்பர் 2023 வரை 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் இறந்துள்ளனர், அதில் அதிகபட்சமாக கனடாவில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றில் சில மரணங்கள் இயற்கையானவை என்றும், சில விபத்துகளால் ஏற்பட்டவை என்றும் அவர் அந்த பதிலில் தெரிவித்தார். 2023 டிசம்பரில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஷி, இந்தியாவில் இருந்து கனடாவுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளைவிட மிக அதிகம் என்று கூறியிருந்தார். கனடாவில் படிப்பு அனுமதி பற்றிய உண்மை என்ன? ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் படிப்பு அனுமதியின் பேரில் கனடா செல்கின்றனர். கனடா அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் செயலில் உள்ள மாணவர் விசாக்களின் எண்ணிக்கை சுமார் 29 சதவீதம் அதிகரித்து சுமார் 10 லட்சத்து 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்களில் சுமார் நான்கு லட்சத்து 87 ஆயிரம் பேர் இந்திய மாணவர்கள். இது 2022ஐ விட 33.8 சதவீதம் அதிகம். சர்வதேச மாணவர்கள் கனடா மாணவர்களைவிட மூன்று மடங்கு அதிக கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கனடா அரசாங்கத்தின் 2022 அறிக்கையின்படி, சர்வதேச மாணவர்கள் இங்குள்ள பொருளாதாரத்திற்கு 22 பில்லியன் கனடா டாலர்களை பங்களித்துள்ளனர். கூடுதலாக 2.2 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாக, கனடா பொருளாதாரத்திற்கு சர்வதேச மாணவர்கள் அவசியமானவர்களாகத் தோன்றுகின்றனர். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் கனடாவுக்கு படிப்பதற்காக வருகிறார்கள். இதில் பெரும்பாலான மாணவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். இதன் காரணமாக, கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சர்வதேச மாணவர்களைச் சேர்க்க முன்னுரிமை அளித்து வருகின்றன. பல கல்லூரிகள் பெயருக்கு மட்டுமே கல்லூரிகள். பல கல்லூரிகளுக்கு வளாகமோ மைதானமோ கிடையாது. இரண்டு அறைகளில்தான் கல்லூரிகள் இயங்குகின்றன. இதுபோன்ற கல்லூரிகளுக்கு எதிராக கனடா அரசு இப்போது சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 2012 முதல் 2021 வரை, மாகாணத்தின் தனியார் கல்லூரிகளில் உள்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது என்று ஒன்டாரியோவின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. அதேநேரம், இந்தக் காலகட்டத்தில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் 342 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் 62 சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள். கனடாவில் கல்வி நிலை படக்குறிப்பு, ஜஸ்விர் ஷமீல் எல்லாவற்றுக்கும் மேலாக, கனடாவில் கல்வி நிலை என்ன? இதுகுறித்து டொரண்டோவில் நீண்டகாலமாக பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் ஜஸ்விர் ஷமீல் கூறுகையில், கடந்த பத்து ஆண்டுகளில் கனடாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பாக இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. “கனடாவுக்கு வருவதற்கான ஒரு வழி படிப்பு அனுமதி. இங்கு, படிப்பை முடித்த பின், பெரும்பாலான மாணவர்கள், லாரி ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள், டெலிவரி தொழிலாளர்கள், உணவகப் பணியாளர்கள் என பணிபுரிய துவங்குகின்றனர்." இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் இத்தகைய வேலைகளில் சிக்கித் தவிப்பதாக ஷமீல் கூறுகிறார். "படிப்புக்கு ஏற்ற வேலைகள் கிடைப்பது மிகவும் குறைவு. கனடாவின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மாணவர்களை விடுங்கள், இங்குள்ள குடிமக்களுக்குக்கூட வேலை கிடைக்கவில்லை" என்றார். கனடாவில் உள்ள தனியார் கல்லூரிகள் இந்திய மாணவர்களால் நிரம்பியுள்ளன. பல கல்லூரிகளில் 95 சதவீத இந்திய மாணவர்கள் உள்ளனர் என அவர் கூறினார். ஜனவரி 2024இல், கனடா அரசாங்கம் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் சில கட்டுப்பாடுகளை விதித்ததாக அவர் தெரிவித்தார். சர்வதேச மாணவர் சேர்க்கை வரம்புகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கனடா அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை 35 சதவீதம் குறைத்துள்ளது. இதுதவிர, முதுகலை அல்லது முனைவர் படிப்பைத் தொடர இங்கு வரும் சர்வதேச மாணவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கு குறைந்த படிப்புகளில் படிக்கும் மாணவர்கள், தங்களின் கணவர் அல்லது மனைவியை வாழ்க்கைத் துணை விசா மூலம் கனடாவுக்கு அழைத்துக்கொள்ள முடியாது. கனடா நாட்டில் தங்கும் இடங்களுக்கான பிரச்னை தலைதூக்கியிருப்பதாலேயே இந்த நடவடிக்கையை அந்நாடு எடுத்துள்ளது. கனடா முழுவதும் தற்போது 3 லட்சத்து 45 ஆயிரம் வீடுகள் பற்றாக்குறையாக இருப்பதாக கனடா அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மாணவர்கள் கீழ்தளங்களில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உணவு வங்கிகளின் ஆதரவு கனடாவில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் சர்வதேச மாணவர்கள் பலரால் வேலை தேட முடியவில்லை. வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருவதால், பல மாணவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்குக்கூட சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதனால் பல மாணவர்கள் சீக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உணவு வங்கிகளை நம்பியிருக்க வேண்டியுள்ளது. விஷால் கண்ணா பிராம்ப்டனில் உணவு வங்கி நடத்தி வருகிறார். "கல்லூரி கட்டணம், வீட்டு வாடகை மற்றும் வேலையின்மை காரணமாக பல மாணவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்," என்கிறார் கண்ணா. கண்ணாவின் கூற்றுப்படி, அவர்கள் ஒவ்வொரு மாதமும் 600 முதல் 700 மாணவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குகின்றனர். சர்வதேச மாணவர்களின் கூட்டத்தை குருத்வாராக்களிலும் பொதுவாகக் காணலாம். பெயர் தெரிவிக்க விரும்பாத மாணவர்கள் சிலர், தாங்கள் குருத்வாராக்களில் சாப்பிட செலவதாகத் தெரிவித்தனர். குருத்வாராக்களின் மேலாளர்களும் அத்தகைய மாணவர்களுக்கு உதவ முன்வருகிறார்கள். ஏன் இந்தியா திரும்பவில்லை? இங்கு வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தால் ஏன் இந்தியாவுக்கு திரும்பவில்லை என்று அக்ரமிடம் கேட்டதற்கு, "கிராம மக்கள் என்ன சொல்வார்கள்? உறவினர்கள் என்ன சொல்வார்கள்?" என்கிறார். "நாங்கள் விரும்பினாலும் நாடு திரும்ப முடியாது. உறவினர்கள் மற்றும் சமூகத்தின் அழுத்தம் காரணமாக நாங்கள் அவ்வாறு செய்ய முடியாது" என்று அவர் கூறினார். திரும்பிச் சென்றால் இந்தியாவில் கனடாவை பற்றிய கனவுகள் என்னவாகும் என்று இந்த மாணவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அக்ரம் கூறும்போது, “நாங்கள் நாடு திரும்பும்போது, மக்கள் நம்மை எதிர்மறையாகப் பார்ப்பார்கள். கனடாவில் குடியேறுவதற்கான பாதை மிகவும் கடினமானதாகவும் நீண்டதாகவும் தெரிகிறது, ஆனால் நாங்கள் எங்கள் இலக்கை நிச்சயம் அடைவோம்," என்கிறார். அர்பனும் கனடாவில் உள்ள வாழ்க்கையால் சோர்வடைந்து பஞ்சாவுக்கு திரும்பி தனது பெற்றோரைச் சந்திக்க விரும்புகிறார். ஆனால் கனடா குடியுரிமை பெறாதது இன்னும் பெரிய தடையாக இருக்கிறது. கனடா குடியுரிமை பெற்ற பிறகுதான் அர்பன் இந்தியா திரும்ப விரும்புகிறார். கனடா: இந்திய மாணவர்களை துன்புறுத்தும் மிக மோசமான சூழல் - அங்கு என்ன நடக்கிறது? - BBC News தமிழ்
  24. 07 MAR, 2024 | 04:59 PM நாட்டில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துவரும் நிலையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16 வயதுக்குட்பட்ட 112 சிறுமிகள் கருத்தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , கடந்த 2022 ஆம் ஆண்டில் 1,232 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டில் 1,497 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்களில் 16 வயதுக்குட்பட்ட 110 முதல் 112 வரையிலான சிறுமிகள் கருத்தரித்துள்ளனர். நீதிமன்றில் பதிவாகியுள்ள வழக்குகள் அடிப்படையில் 10 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளே அதிகளவில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளாகி வருவதாக தெரியவருகிறது. இந்நிலையில், பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர்களில் சிலர் அவர்களது தண்டனை காலம் முடிவைந்த பின்னர் மீண்டும் சமூகத்திற்குள் வந்து அந்த தவறுகளை தொடர்ந்தும் செய்து வருகின்றனர். ஆகவே இவ்வாறு தண்டனை பெற்று மீண்டும் சமூகத்திற்குள் வரும் நபர்களிடம் இருந்து சிறுமிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16 வயதுக்குட்பட்ட 112 சிறுமிகள் கருத்தரிப்பு | Virakesari.lk
  25. Published By: VISHNU 07 MAR, 2024 | 07:37 PM இலங்கையில் வருடாந்தம் 1,095 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இறப்பதாகவும் 5,475 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் டாக்டர் லங்கா ஜயசூரிய திஸாநாயக்க கூறுகிறார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கண்டியில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இந்திரா ஜயசூரிய புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் லங்கா ஜயசூரிய திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார். இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு 8 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த மார்பகப் புற்றுநோயால் எமது நாட்டில் தினமும் மூன்று பெண்கள் உயிரிழக்கின்றனர் என்றும் கூறினார். இலங்கையில் நாளாந்தம் 3 பெண்கள் மார்பகப் புற்றுநோயினால் உயிரிழக்கின்றனர்! -டாக்டர் லங்கா ஜயசூரிய திஸாநாயக்க | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.