Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அழியாத கோலங்கள்

Featured Replies

அழியாத கோலங்கள் அப்படிப் பட்ட கவிதை."அப்ப எனக்கு பதினஞ்சு வயதிருக்கும், என் அத்தை பொண்ணு எங்க கிராமத்து வீட்டுக்கு வந்திருந்தா. அவள் எங்க வீட்ல தங்கி இருந்த நாட்கள் ரொம்ப விஷேசமானது, அவள் தான் என் வாழ்க்கைல வந்த முதல் பெண். மெல்லிசா ஒரு குறுகுறுப்பு, ஈர்ப்பு, தயக்கம், வெட்கம், அவள் உடல் பற்றிய ஆர்வம், பாலுணர்வு பத்தின யோசனைகள் எல்லாம் சேர்த்து முதிராத இளம் மீசை ரோமங்கள் ஆக முகத்தில் எட்டிப் பார்த்த ஞாபகம் இன்னும் அப்படியே இருக்கு..." என்றார் பாலு மகேந்திரா.

நெஞ்சில் இட்ட கோலம் - "இன்னொருவனின் கனவு"சினிமா தொடரின் பத்தாம் அத்தியாயம்

- குமரகுருபரன்

எம் தமிழரின் கண்களில் இருந்து,உலக சினிமாவை,ஆரம்பிக்கும் தருணம், மறுபடியும், எப்போது, எங்கே வாய்க்கும்,என்று தெரியவில்லை, இந்தக் கனவுப் பயணத்தில்!

சில அற்புதமான தமிழ் சினிமா மனதுகளையும்,அவர் தம் மொழியையும்,காலங்கள் தாண்டி நிற்கும் அவர் படைப்புகளையும்,இந்தப் பருவத்தின் பயணத்தில் நாம் சந்திக்கப் போகிறோம். தாமே ததும்பும் தத்தம் விழிகளின் இரண்டு சொட்டுக்கள் அன்றி, வாழ்வின் முக்கிய இரண்டு வரிகளை நீங்களும், நானும்,யாரும் அவரவருக்கு எழுத இயலாது. ஆரம்பம் கண்ணுற்ற முதல் வரியும், மூழ்கு முன் முத்தெடுக்கும் கடைசி வரியும். யார் அல்ல யாவர் கண்ணிலும் நீர் வழியும் அப்போது.

மோப்பக் குழையும். இந்த இரண்டு வார்த்தைகளுக்கு, உலக இலக்கியங்களில், சினிமாவில், கலையில், இணையான அர்த்தம் இன்னும் அகப்படவில்லை. ஆக்கப் படவில்லை, தமிழ் தவிர.

அனிச்சம்..

மலர்களின்றி அமையாது இவ்வுலகு. சாமந்திகள், ரோஜாக்கள், மல்லிகைகள், சில சமயங்களில் வாடா மல்லியும், கனகாம்பரங்களும் கூட.முகர்ந்தால் வாடும் மென் மனமும், கொஞ்சம் முரட்டு உருவமும் கொண்ட காட்டுப் பூ அனிச்சம். தமிழ் மாதிரி முரண் மொழி எங்கும் காணோம். ஆச்சர்யம்! அனிச்சத்தின் சூடலைத் தாங்காது ஒடிந்திருக்கிறது அக் கால காதலுற்ற மகளிரின் இடை. தாழ்ந்திருக்கிறது அவர்தம் மார்புகள், சங்க காலத்தில்.

மோப்பக் குழையும் அனிச்சம். முகர்ந்தாலே வாடும் அனிச்சம்.

அனிச்ச நினைவுகள்.

பகிர்ந்தால் வாடும் அளவுக்கு மென்மையான, உடலும் மனமும் ஒருங்கே முயங்கும் பருவப் பூக்கள். பால்யங்கள் அவ்வாறே. பால்ய காலக் காதல்களும் அவ்வாறே. நாம் பொத்தி பொத்தி வைத்துக் கொள்ள விருப்பப்படும் நம் மல்லிகை மொட்டு. நுகர நுகர குழையும் நம் அனிச்சம் மலர். நம் மனதின் மொழி, நம் மலரின் மொழி. நம் உடலின் மன மொழி.

மலர்களில் ஆடும் இளமை என்று தான் நாம் அறிந்திருக்கிறோம் காதலை. அதுவும் உண்மை.

அனிச்சம் உடலின் மனமொழி.அதுவும் காதலே. தத்துவங்கள், துரோகங்கள், சாமர்த்தியங்கள், புரிதல்கள், சமாதானங்கள், இவை எவையும் நிகழக் காத்திருக்கா பருவத்தின் கானகத் தருணங்கள்.

நெஞ்சில் இட்ட கோலம்,அந்த நம் அனிச்ச நினைவுகள். அந்த கானகத் தருணங்கள். அவரவர் மட்டுமே தீண்டும் அதி ரகசியங்கள். ஆணும் பெண்ணும் ஆடும் கூடல் சபைகள். ஆடல் சபைகள்.

பால்யத்தைப் பற்றி அறிந்து கொள்ள, பால்ய காலக் காதல் நினைவுகளை மீட்டிக் கொள்ள, தமிழ் சினிமா உரையாட ஆரம்பித்து நாற்பத்தெட்டு வருடங்கள் ஆகின(காளிதாஸ்-1931). அதற்கப்புறம், அதே மாதிரி, ஒரு படத்தை எதிர்பார்த்து, இன்னும், இன்றும், காத்துக் காத்துப் பூத்திருக்கிறோம்!. பாலநாதன் மகேந்திரன்(அ) பெஞ்சமின், நமது பால்யத்தை, நமக்கு நினைவுறுத்தும் தமிழின் முதல் உலக சினிமாவைக் கனவு கண்ட போது, அவரின் வயது முப்பத்து மூன்று.

இலங்கையின் மட்டக் கிளப்பில் 1946-ல் பிறந்தவர். புனே பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ஒளிப்பதிவிற்கு தங்கம் பெற்றவர். தன்னுடைய இருபத்தி எட்டாம் வயதில்,நெல்லு- மலையாளப் படத்தின் ஒளிப்பதிவிற்கு கேரள அரசு விருது வென்றவர்.

தன்னுடைய பத்து படங்களுக்கும் மேல் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது வென்றவரும், ஐந்து தேசிய விருதுகளைத் தன் இயக்கத்திற்கும் வென்றவருமான அவரையும் அனிச்சம் மலருக்கு ஒப்பிடலாம்.

மோப்பக் குழையும் மென் மனம். கரடு முரடான ஆண் குணம்! உலக சினிமா, அவரை, பாலு மகேந்திரா என்றழைக்கிறது. அவரின், சிஷ்யர்கள் அவரை,அப்பா என்றழைக்கிறார்கள். இன்றும், என்றும், தமிழ் சினிமா அவரின் தாக்கங்கள்,அல்லது அவரது சிஷ்யர்களின் இருப்பு இன்றி அமையாது. இதை எழுதுகிறவன் உட்பட.

சினிமாவை நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். சினிமாவின் மொழியில் சினிமாவைச் சொன்னவர் பாலு மகேந்திரா. ஒளியின், காட்சியின், நிழலின், முகபாவங்களின், மன இருண்மையின், மழையின்,மலையின்,மனப் பிறழ்வுகளின், ஆணாதிக்கத்தின், பெண்ணியத்தின், காதலின், காமத்தின், இசையின், மௌனத்தின், இயற்கையின், அறையின் செயற்கையின், வசனங்களின், பேசா மொழியின்,வன் மனதின், மென் இயல்பின், தத்துவங்களின், விசாரங்களின், வாழ்க்கை விளையாட்டுக்களின், வன்ம விதியைத் தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் நிறுவியவர் பாலுமகேந்திரா.

தி பிரிட்ஜ் இன் தி ரிவர் குவாய் என்கிற டேவிட் லீனின் சினிமாவைத் தான் இலங்கையில் பள்ளிச் சுற்றுலா ஒன்றில் பார்க்க நேரிட்ட தருணமே சினிமா குறித்த தன் முதல் கனவு விரிந்த தருணம் என்கிறார் பாலு மகேந்திரா. ஆகச் சிறந்த, இந்திய சினிமாவின், மூன்று இயக்குனர்களின், முதல் பட ஒளிப்பதிவு இயக்குனர் பாலுமகேந்திரா என்கிற தகவல் திறந்த நம் வாயை இன்னும் விரிய வைக்கும் இன்றும்.

மகேந்திரன்-முள்ளும் மலரும், பரதன்-பிரயாணம்,மணிரத்னம்-பல்லவி அனுபல்லவி. இன்னொருவர் மிக முக்கியமானவர். அவர் பாலு மகேந்திராவிவிடம் ஒளிப்பதிவு நாடி வந்தபோது சொன்னார், "பாலு... நான் என் சிறந்த படம் ஒன்றைச் செய்ய இருக்கிறேன்,அதில் என் கூட, நீங்கள் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்". படம்: சங்கராபரணம். இயக்கம் கே..விஸ்வநாத். ஒளிப்பதிவு பாலுமகேந்திரா.

மொழிகளற்ற சினிமா கலைஞன் பாலுமகேந்திரா. கோகிலா என்கிற கன்னடப் படம் தான் அவர் இயக்கிய முதல் படம். அதற்காக வாங்கியதுதான் அவரின் முதல் தேசிய விருது.

கலைஞனின் மூலம் அன்றி,கலையின் மூலம்,கலையைக் காணச் சொல்லிக் கேட்ட அவரின் வகுப்புகளில் பங்குபெற்ற அபூர்வ தருணங்கள் இவனுக்கும் உண்டு. சினிமாவின் மேல் இருந்த இவனின் அனிச்சக் கனவுகளை வெளிக் கொணர்ந்த ஆன்ம வகுப்புகள் அவை. இத் தொடர் சினிமாவின் கனவல்ல, இன்னொருவனின் சினிமா கனவு. கனவின் பொழுதுகளைப் பதிவு செய்ய வேறெந்த காவல் தெய்வம் சாட்சியாய் சினிமாவில் இருக்க முடியும் இவரன்றி ?

இவன் அறிந்த முதல் கனவைக் கண்டவரைத் தவிர? இவன் அறிய நேர்ந்த பிற அற்புதக் கனவுகளையும்....!

நெல்லு, கோகிலா, மகேந்திரனின் முள்ளும் மலரும், மூடு பனி, கமல், ஸ்ரீ தேவியின் மூன்றாம் பிறை, மறுபடியும்,... இப்படி மிகச் சிறந்த மனதின் அருகாமையைப் பார்த்தவன், அதைப் பதிவு செய்ய பதினாறு வயதுக் காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது, தத்தம் முதல் காதலைப் போன்றே.

இவனது ஆசை குவிண்டின் தரண்டினோவை, பிரான்சிஸ் போர்ட் கொப்போலோவை, டோர்னடோரை, பெர்க்மானை, கிம்கி டுக்கை, தகேசி கிட்டானோவை, குப்ரிக்கை, சாம் மென்டிசை, அப்பாஸ் கியராஸ்டமியை,, மஜீத் மஜிதி, சோபியா கொப்பலாவை, தி ஆர்டிஸ்ட்டின் மிகைல் ஹசனா விசியசை, மார்டின் ஸ்கார்ஸிசியை, சந்தித்து பேச வேண்டும் என்பதாக இருந்தாலும், விதை பாலுமகேந்திராவே. அந்த மிகச் சிறந்த மனதும்.

சாலிகிராம சாலையில் அந்த சிறந்த மனிதனின் அருகாமை ஆரம்பித்தது. ஹிந்தியில், “அவுர் ஏக் பிரேம் கஹானி” பண்ணி முடித்திருந்த சமயம்(1997). அவரின் முதல் இயக்கமான கோகிலா கன்னடப் படத்தின் ரீமேக் அது. தொலைபேசி உபயோகிக்கும் பழக்கம் அவருக்கு அறவே இல்லை என்பதால், அந்த அருகாமை கிட்டத் தட்ட இரண்டு மூன்று வாரங்கள் தொடரும் வாய்ப்பு கிட்டியது.

பின்னரும். அநேகமாக, அவருக்கு பிடித்த மாலை நேரத்தில் அவை அமைந்தன. வெளிச்சம் போய் விடுமே என்று, அநேக இயக்குனர்கள் பதை பதைப்பில் மூழ்கும் நேரம்.

பிற்பகல் முடிந்து சாயந்திரம் ஆரம்பிக்கும் பொழுதுகளில் அவருடைய வீடு (அ)அலுவலகத்தில் இருந்து, பிரசாத் லேப்க்கு சின்ன நடை. அங்கிருந்து வடபழனிக்கு ஆட்டோ பயணம்,திரும்பி வரும்போது கொறிக்க கொஞ்சம் சூடான பகோடாக்கள்.

அவர் படங்களில் தொடர்ந்து காணப்படும் முதிராத, இளம் பருவ, அல்லது பால்ய காலக் காதல்கள் குறித்து பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார்...."நம்முடைய பால்ய கால நினைவுகளே நம்மை தொடர்ந்து வழி நடத்துகின்றன என்று நம்புபவன் நான். நமது மொத்த வாழ்க்கை காலத்திலும் அது குறித்த நினைவுகள் மிகக் கற்புடையதாக, அதிகம் பகிரப்படாத, அதற்கான தேவையையோ, சமமான மனதுகளோ நமக்கு கிடைக்காமல் பொத்தி வைக்கப் பட்டதாகவே இருந்திருக்கிறது. எனினும் அதுவே வாழ்வைக் கடக்க நமக்கு உதவும் அற்புத விசை. படைப்பாளிக்கு அதுவே ஆன்மா”... எழுதுவது போலவே இருக்கும் அவரது பேச்சும்,வார்த்தைப் பிரயோகங்களும்.

மிக மெதுவான, அழுத்தமான, ப்ரியம் ததும்பும் குரல். அழியாத கோலங்கள் என்னும் அவரது அற்புதமான ஒன்றரை மணி நேர உலக சினிமாவில், பிரதாப் போத்தனுக்கு அவர் தான் குரல் கொடுத்திருப்பார். "அது கிட்டத் தட்ட என்னோட பால்யம்,என்னோட ஆட்டோ பயக்ராபின்னு தான் சொல்லணும்"என்றார் அழியாத கோலங்கள் குறித்து...தமிழில்,அவர் இயக்கிய முதல் படம்(1979).

கோகிலாவின் வெற்றியும்,மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தின் ஒளிப் பதிவு(1978)ம் அவரைத் தமிழ் சினிமாவுக்கும், தமிழ் சினிமாவுக்கு, சினிமா மொழியையும் ஒருங்கே அறிமுகப்படுத்தி இருந்தது.

ஆடுகளத்திற்கு தேசிய விருது வாங்கிய கையுடன்,டிஎன் ஏ நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் தன் குருவைப் பற்றிச் சொல்லியிருப்பார்... "அவர் ஒரு கவிஞர்.காட்சிகளின்மூலம்,சின்ன சின்ன ப்ரேம்கள் மூலம்,ஒளியின் மூலம்,வார்த்தைகளற்ற கவிதைகளைஉருவாக்கும் கவிஞர்,சினிமா மொழியின் உன்னத வெளிப்பாடு அவரின் காலங்கள்" என்பதாக.

அழியாத கோலங்கள் அப்படிப் பட்ட கவிதை."அப்ப எனக்கு பதினஞ்சு வயதிருக்கும், என் அத்தை பொண்ணு எங்க கிராமத்து வீட்டுக்கு வந்திருந்தா. அவள் எங்க வீட்ல தங்கி இருந்த நாட்கள் ரொம்ப விஷேசமானது, அவள் தான் என் வாழ்க்கைல வந்த முதல் பெண். மெல்லிசா ஒரு குறுகுறுப்பு, ஈர்ப்பு, தயக்கம், வெட்கம், அவள் உடல் பற்றிய ஆர்வம், பாலுணர்வு பத்தின யோசனைகள் எல்லாம் சேர்த்து முதிராத இளம் மீசை ரோமங்கள் ஆக முகத்தில் எட்டிப் பார்த்த ஞாபகம் இன்னும் அப்படியே இருக்கு..." என்றார் பாலு மகேந்திரா.

அன்றைய அலுவல் யோசனைகளுடன் லிப்டில் ஏறும், கமல்ஹாசனின் மனதுடன் ஆரம்ப மாகிறது அழியாத கோலங்கள். ஒரு கடிதம் அந்த யோசனைகளைக் கலைக்கிறது.

"டேய் நான் பட்டாபி-டா. எப்படி இருக்க? என்ன ஞாபகம் இருக்கா? வருசத்துக்கு ஒரு தடவையாவது ஊருக்கு வந்துட்டுப் போகக் கூடாதா? நான் ஏன் இப்ப இத எழுதுறேனா , இந்து டீச்சர் இல்ல, நம்ம இந்து டீச்சர், அவங்க தவறிட்டாங்களாம்..."

அதிர்வுகள் நிறைந்த கமல்ஹாசனின் உதடுகள் மெல்ல முணுமுணுக் கின்றன "இந்து டீச்சர்".

"ஒரு கிராமம், மூன்று நண்பர்கள், ஒரு டீச்சர் ஊருக்கு வராங்க, அங்க ஆரம்பிக்குது, அந்த மூணு பேர்ல ஒரு பையன் செத்துப் போறதுல முடியுது" என்றார் பாலு மகேந்திரா அழியாத கோலங்கள் ஒன் லைன் குறித்து.நடுவிலே நாம் காண்பது, தமிழின், இந்தியாவின், இனி என்றும் எடுக்க இயலா சினிமா.

"கொஞ்சம் காம்ப்ரமைஸ் ஆகிட்டேன். ரெண்டு பாட்டு வச்சிட்டேன். ஒரு டைட்டில் சாங், ஒரு டூயட். பின்னாளில் டூயட் பத்தி நான் பேசும்போதெல்லாம் இது உறுத்தின விஷயம் எனக்கு. வீடு, சந்தியா ராகம் ரெண்டும் அதனாலயே இதுக்கு முன்னாடி என் படைப்பா தோணும், ஆனாலும், இதுவும். இது நான்." பாலுமகேந்திராவின் ஆதங்கம் அழியாத கோலங்கள் குறித்து.

பாடல்கள் அற்ற தமிழ்ப் படம் ஒன்றைக் கனவு காண முடியுமா என்பது இன்றும் மில்லியன் டாலர் ஆசைதான். அந்த இரண்டு பாடல்கள் மிக அற்புதமானவை. இசையிலும், வரிகளிலும், காட்சி அமைப்பிலும். சலில் சவுத்ரி, கங்கை அமரன், பாலு மகேந்திரா. “நெஞ்சில் இட்ட கோலம்..... பூவண்ணம் போல நெஞ்சே”.

கமல்ஹாசனின் 'இந்து டீச்சர்' என்கிற மெல்லிய உதடு பிரித்தல்களில் விரிகிறது பால்யம் அவரின் அழியாத கோலங்களாய். மூன்று பருவங்கள் திரைக் கதையில் கொண்டது அழியாத கோலங்கள்.

மூன்று விடலைகளின் நிலை நிறுத்தல், இந்து டீச்சரின் வருகை, இந்துவின் மனம் கவர் கள்வனின் வருகை என.

அந்த கிராமம், அந்த மனிதர்கள், நான், ரகு, பட்டாபி. என்கிற கமல்ஹாசனின் குரல் முதல் பருவத்தின் ஆரம்பம். பச்சை பசேல் என்று ஆரம்பிக்கும் அழியாத கோலங்களில், ஓடைக்கும், ஓடும் ரயிலுக்கும் நடுவே, அதன் ஓட்டத்துக்கு ஓடும் இந்த மூவரின் அலைதலுடன், அவர் தம் நீண்ட ஓட்டத்துடன் நீளும் அக் காட்சி, ஒவ்வொருவராய் ஓடையில் குதிக்கும் காட்சிகளுடன் நிலை பெறும்.

ரகு தன் கனத்த சரீரத்துடன் 'டேய் பாத்துக்கங்கடா' என்றபடி மெல்ல ஏறி குதிக்கும் போது, அந்த வேக உறைதலை உணர்வோம். அந்த ஓடைக்குள் நிகழும் பால்யத்தின் கொண்டாட்ட முக பாவங்களை ஷாட் பிரிக்க சினிமாவின் கடவுளர்களால் கூட முடியாது. it just happens like that!

அவர்கள் மூன்று பேர். இருவரில் ஒருவரை நமக்குத் தெரியும். இன்னொருவர் கடிதம் போட்ட பட்டாபி. இன்னொருவர் ரகுபதி என்கிற ரகு. ரகு இறப்பதில் கோலங்கள் முற்றுப் பெறுகின்றன.

"என் கூட, என் பால்ய காலத் தோழன், என் அண்டை வீட்டுக் காரன் இன்னொருவனும் உண்டு" என்றார் பாலு. அவரின் வழி நெருப்பு வரி. ஈழம் சுமக்கும் இதயம். கவியில் தமிழரின் மானம் உணர்த்துபவர். காசி ஆனந்தன் அவர் பெயர். அழியாத கோலங்களின் மூன்று சிறுவரில் ஒரு கதாபாத்திரம்.

அம்மூவரில் வயது குறைந்த, மற்ற இருவரின் சோதனை எலி ரகு. வெளேரென்று, வெண்ணெய் திரண்ட உடல் அமைப்புடன், பருத்து தொங்கும் மார்புகளுடன், வயதுக்கு மீறிய பார்வையுடன். பால்யத்தின் சூட்சமங்கள் இவர்கள். இவர்களின் சட்ஜம் காமம்.

அன்றைய கிராமம் ஒன்றின் சூட்சமதாரிகள் யாரேனும் இருக்கலாம் இவர்களில். போஸ்ட் மாஸ்டர், ரயில் நிலையம், தண்டவாளங்கள், பாழடைந்த கோயில், ரயில்வே கேட், ஓடைகள், வயல் வெளிகள், ஒற்றை வரப்புகள், ஊர் தாண்டிய கூத்தாடிகள் தங்கும் வீடு, கல்யாணம் ஆகாத யுவதிகள், அவர்களைச் சீண்டிப் பார்க்கும் முன் வழுக்கை மனங்கள், களவாடக் கிடக்கும் மாந்தோப்புகள், உப்பு பரப்பி, மாங்காய் குத்த எதுவாய் சாலையோர சிமெண்ட் அல்லது கல் பெஞ்சுகள், ஒற்றை மளிகைக் கடை, ராமாயணமும், கிருஷ்ண லீலாவும் மட்டுமே ஓட்டும் டூரிங் டாக்கிஸ்கள், பேருந்து அண்டா ஊர் எல்லைகள், காற்றும், புற்களும் மட்டுமே துணை இருக்கும் விடலைகளின் வானம் பார்த்த படுக்கை அறைகள், மற்றும் ஒரே ஒரு பள்ளிக் கூடம்.

இவை அனைத்தும் ததும்பி வழியும் அழியாத கோலங்களின் முதல் பகுதியில்.இந்து டீச்சரும் இம்மூவரும் தான் அடுத்த பகுதி. இதுவே அழியாத கோலங்களின் மய்யம்.

ஆட்டோவை, அனுப்பி விட்டு, அவர் அலுவலகத்தில் நுழைந்தவுடன் சொன்னார் பாலு, செந்நிற தூசி படர்ந்த அந்த சோபாவைக் காட்டி "இதான்....ஷோபா கடைசி வரைக்கும் அமர்ந்த சோபா” என்று.

“வந்தது தெரியாமல் நிறைத்து வெளியேறிய என் வாழ்வின் வசந்தம் அவள், அவளின் நினைவே மூன்றாம் பிறை" என்று பின்னாளில் கலை விமர்சகர் யமுனா ராஜேந்திரனுடனான நேர்காணல் ஒன்றில் சொல்லியிருப்பார்.

எப்பேர்ப்பட்ட பெண். கலை அரசி. பெண்ணும் விரும்பும் பேரிலக்கணம். ரஜினி, கமலுக்கப்புறம் கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவுக்கு செய்த நற்கண்டுபிடிப்புகளில் ஈடு இணையற்ற அற்புதம்.

ஷோபாதான் இந்து டீச்சர்.அழியாத கோலங்களின் துணை இயக்குனரும் கூட.

அந்த கிராம சிமெண்ட் பெஞ்ச் ஒன்றில், மாங்காய் உடைத்து தின்னும் மனோ பாவத்துடன், உப்பு நிரப்பி மாங்காய் பிளக்க கை ஓங்கும் ரகுவின், பின் மற்ற அனைவரின் பார்வையில் விரியும் இந்து டீச்சரின் வருகையை, உணர்த்தும் அக் காட்சியை எங்கனம் விவரிக்க? சலில்சவுத்ரியின் இசையை?

இனி எடுக்க இயலா சினிமா அழியாத கோலங்கள்.

அதன் ஆன்மாவுக்குள் நாம் பயணிக்கும் முன், ஒப்பிடாக ஒரு சினிமா வேணும் வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்பீடுகள் அவசியம். எந்த ஒரு வரையறுப்புக்கும்...

பெட்ரிகோ பெல்லினியின் அநேகப் படங்கள் பால்ய அவஸ்தைகளை சுமந்து அலைபவை. அமர்கார்ட்(amarcord-1974) அவற்றுள் மிக முக்கியமானது. பெல்லினியின் சாயல் சுமப்பவர் என்று இன்னொருவரையும் சொல்கிறார்கள் உலக சினிமா விமர்சகர்கள். சினிமா பாரடிசோவை நீங்கள் அறிவீர்கள்.

ஜூசெப்பிக் தொர்னதொரவை?(டோர்னடோர்?) இந்த இத்தாலிய இயக்குனரின் பால்ய காதல், உலக சினிமாவை? பதிமூன்று வயது சிறுவன் ஒருவனின் காதல் கொண்டேனை?

இன்னொருவனின் கனவு (நெஞ்சில் இட்ட கோலம்)-

via தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் fb page

https://www.facebook.com/settings#!/TCTVPAGE

பச்சைபுள்ளி இட்டுள்ளேன்.ஏன் தெரியுமா?ஒன்று சோபா தான் எனது முதல் கனவுக்கன்னி.ஒரு வயதில் என்னை பார்த்து பழகும் பேசும் பெண்கள் எல்லாம் சோபாவைப்போலத்தான் தோன்றும்.சோபாவை திரையில் பார்க்க முன்பு எனக்கு ஒரு ஆசிரியை இருந்தார் அவரின் மறு விம்பமாகத்தான் சோபாவைப்பார்த்தேன்.என் உணர்வுகள் தூண்டப்பட்டபோது நான் பாடசாலையில் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.