Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர்: யமுனா ராஜேந்திரன்

Featured Replies

ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

17 ஏப்ரல் 2012

sri%20vidya1_CI.jpg

திரைப்படம் என்பது அவர்தம் நினைவுப் பிரபஞ்சத்தின் பகுதியாக ஆகின எல்லாச் சமூகங்களிலும், அந்தந்தத் தலைமுறை யுவதிகளுக்கும் இளைஞர்களுக்கும் தமது ஆதர்ஷ திரைப்பட கதாநாயகியும் நாயகனும் இருக்கவே செய்கிறார்கள். அமெரிக்கா, இந்தியா, தமிழ்நாடு என கறுப்பு வெள்ளைத் திரைப்பட யுகம் என்பது பசுமையான நினைவுகளை, ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பிறந்த தலைமுறையின் நினைவு வெளியில் துயரங்களாகவும் சந்தோஷங்களாகவும் கண்ணீராகவும் மோகமாகவும் விட்டுச் சென்றிருக்கின்றன.

ஸ்ரீவித்யா எழுபதுகளில் பதின்ம வயதைக் கடந்த இளைஞர்களுக்கு மோகத்தையும் தாபத்தையும் வழிபாட்டுணர்வையும் அளித்த பெயர். எனது வாசிப்பு மேசைக்கு மேல் இரண்டு பெண்களின் கண்களை மட்டும் போஸ்டர் வடிவில் ஒட்டி வைத்திருந்தேன். அந்தக் கண்களுக்கு உரிய ஒருவர் தமது பிரசவத்தின் போது அகால மரணமுற்ற இந்திய மாற்றுச் சினிமாவின் அபூர்வ நடிகையான ஸ்மிதா பாடீல். பிறிதொருவர் ஸ்ரீவித்யா.

சமூக மாற்றம் தொடர்பான புரட்சிகர உணர்வென்பதும், தார்மீகக் கோபம் என்பதும் அந்த வயதில் மனோரதியமானதும் கனவு மயமானதும்தான். மோகமும் துயருமாக இந்த இரு பெண்களதும் கண்கள் எனக்குள் ஏற்படுத்திய கனவுமயமான, மங்கலான மனோரதிய உணர்வைத்தான், எனக்குக் கறுப்பு வெள்ளை வடிவத்தில் வந்த, பிடரிமயிர் சிலிர்த்தபடியிலான சே குவேராவின் தொப்பியில் ஜொலித்த நட்சத்திர பிம்பமும் உருவாக்கியது.

ஆபூர்வராகங்களின் கோபம் கொண்ட, வன்முறையில் நம்பிக்கை கொண்ட இளைஞனான கமல்ஹாஸன், தி.ஜானகிராமனின் மோகமுள் நாயகி யமுனா, 1978 ஆம் ஆண்டு வெளியாகின மலையாள இயக்குனர் பரதனின் ரதிநிர்வேதம் படநாயகி ஜெயபாரதி என இவர்கள் அனைவரின் பாலும் ஈரக்கப்படவனாகவே அந்தத் தலைமுறை இளைஞன் இருந்தான். மத்தியதர வர்க்க இளைஞன் இருந்தான் என வேண்டுமானால் இதனைத் துல்லியப்படுத்திக் கொள்ளலாம்.

இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவ மனையில் புற்று நோயினால் தமது 53 ஆம் வயதில் ஸ்ரீவித்யா மரணமுற்றபோது மனதுக்குள் மௌனமாக அழுகை வந்தது. ஸ்ரீவித்யா முதல் முதலாக முக்கியப் பாத்திரமேற்று, துடுக்குத்தனம் மிக்க கல்லூரி மாணவியாக நடித்த நூற்றுக்கு நூறு, காதலை மனதுக்குள் வைத்து உருகும் மத்தியதர வர்க்க குடும்பப் பெண்ணாக நடித்த சொல்லத்தான் நினைக்கிறேன், எழுபதுகளின் எந்த இளைஞனும் கடந்து போகமுடியாத, தன்னை விடவும் வயது குறைந்த இளைஞனால் காதலிக்கப்பட்ட அவனிலும் வயதுகூடிய மத்தியதரவயதுப் பெண்ணாக ஸ்ரீவித்யா தோன்றிய அபூர்வ ராகங்கள், இந்தப் பாத்திரங்களின் மறுப்பும், துடுக்கும், கடுமையும் மறைந்து, மனக்கனிவின் வடிவமாக, தாய்மையின் உன்னதமாக அவர் ஆகிய தளபதி, காதலுக்கு மரியாதை என அவரது திரைவாழ்வின் சுவடுகள் எனது நினைவில் புரண்டன

sri%20vidya2.jpgsri%20vidya3.jpg.

ஓரு போது மோகத்தினதும் தாபத்தினதும் வடிவம் அவர். பிறிதொரு போது தாய்மையின் வடிவம் அவர். புன்னகையை அவர் வேறு வேறு விதங்களில் பயன்படுத்தினார். சொல்லத்தான் நினைக்கிறேனில் கைத்த மனநிலையாக, அபூர்வராகங்களில் கறாரும் கண்டிப்புமாக, நூற்றுக்கு நூறில் வஞ்சக எண்ணமாக, தளபதியில் விரக்தியாக, காதலுக்கு மரியாதையில் தாயின் கனிவாக, மாப்பிள்ளையில் ஒரு போதும் தலைகுனியா பெருமித அலட்சியமாக அவர் புன்னகையை வெளிப்படுத்தினார்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி சென்னையில் பிறந்த ஸ்ரீவித்யாவின் தாயார் அன்று புகழ் பெற்ற பாடகியாக இருந்த எம்.எல். வசந்தகுமாரி. தந்தை திரைப்பட நகைச்சுவை நடிகரான விகடம் கிருஷ்ணமூர்த்தி. நடிப்பு, பாட்டு எனும் சூழலில் பிறந்த ஸ்ரீவித்யா தமது அண்டை வீட்டில் வாழ்ந்த திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்ட நடன நட்சத்திரங்களான பத்மினி, ராகினி, லலிதாங்கினி சகோதரியரில் ஆதர்ஷம்பெற்று நடனம் கற்றுக் கொண்டார். பாடுவதிலும் நடனத்திலும் முறைப்படியான பயிற்சி பெற்றார். என்றாலும், அவரது அடிப்படையான இந்த நடன, இசை ஆற்றல் வாழ்வில் வேறுவிதான பரிமாணமே எடுத்தது.

தமிழ் வெகுஜன உலகத்திற்கு ஸ்ரீவித்யாவை நடிகையாகவே தெரியும். பெரும்பாலுமானவர்கள் அவரது முதல் படம் என, 19 57 ஆம் ஆண்டில், அவரது 14 வது வயதில் நடித்த, ஏ.பி.நாகராஜன் இயக்கிய திருவருட்செல்வர் எனவே கருதுகிறார்கள். இப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே நடிகை பத்மினியின் ஏற்பாட்டில், எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்துக் கொண்டிருந்த ரகசியப் போலீஸ் 115 படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீவித்யா பரிந்துரைக்கப்பட்டார். 14 வயதில் சேலை கட்டிக் கொண்டு தம்முன் தோன்றிய அந்தப் பள்ளி மாணவி இயல்பில் சிரமப்பட்டதால், ரொம்பவும் சின்னப் பெண்ணாக இருக்கிறாள் என எம்.ஜி.ஆர். அந்தப் படத்தில் ஜெயலலிதாவையும் வெண்ணிற ஆடை நிர்மலாவையும் தனது கதாநாயகிகளாகத் தேர்ந்து கொண்டார்.

திருவருட் செல்வர் படத்தினையடுத்து, மூன்றெழுத்து, டெல்லி டு மெட்ராஸ், அன்னை வேளாங்கன்னி, காரைக்கால் அம்மைiயார் போன்று அவர் நடித்த படங்கள் அவரது ஆளுமையை வெளிக்கொண்டு வந்த படங்கள் எனச் சொல்ல முடியாது. பாலச்சந்தரின் நான்கு படங்கள், நூற்றுக்கு நூறு, வெள்ளி விழா, சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள் போன்றவைகள்தான் ஸ்ரீவித்யாவை ஒரு முழுமையான பன்முக ஆற்றல் கொண்ட நடிகையாக முன்னிறுத்தியது.

sri%20vidya2.jpg

ஆபூர்வ ராகங்கள் திரைப்படம் அந்தத் தலைமுறை இளைஞர்களின் தேவதையாக ஸ்ரீவித்யாவைக் கொண்டு நிறுத்தியது. ஆபூர்வ ராகங்கள் திரைப்படம் 1975 ஆம் ஆண்டு வெளியாகியது. இளம்பெண் ஒருவருக்குத் தாயாக, மத்தியதர வயதுப் பெண்ணாக அப்படத்தில் நடித்திருந்த ஸ்ரீவித்யாவுக்கு அப்போது 22 வயதே நிரம்பியிருந்தது.

ஆபூர்வ ராகங்கள் திரைப்படம் இளம் பெண்ணாக அவரது வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இருபத்திரண்டு வயதுக்கு முன்பான அவரது வாழ்வு தாத்தாவினதும் பாட்டியினதும் பராமரிப்பிலேயெ பெரும்பாலும் கழிந்தது. அவரது தந்தை கடுமையான தசைநரம்புத்தளர்வு நோயுற்றதன் பின்னால், அவரது குடும்பத்தின் பொருhளாதார நிலை என்பது அவரது தாயின் பாடலில் வரும் வருமானத்தில் மட்டுமே தங்கியிருந்தது. அவரது பொருளாதார நிலைமையினால் அவருக்கும் அமெரிக்காவில் வாழும் மருத்துவர் ஒருவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் இடையில் நின்று போனது. வளர் இளம்பெண்ணாக அவரது வாழ்வு என்பது தனிமையினால் சபிக்கப்பட்டதாக இருந்தது.

ஸ்ரீவித்யாவின் 22 வது வயதில், அபூர்வராகங்கள் திரைப்பட உருவாக்கத்தின் போது கமல்ஹாஸனும் ஸ்ரீவித்யாவும் காதலில் வீழ்ந்தார்கள். இதனை வாணியுடனான கமல்ஹாஸனின் காதல் முறிவின் பின்பும், ஜோர்ஜ் உடனான ஸ்ரீவித்யாவின் காதல் முறிவின் பின்பும், தனது நேர்காணல் ஒன்றிலும், தினமணிக் கதிரில் ஸ்ரீவித்யா எழுதிய வாழ்க்கைக் குறிப்புக்களிலும் அவர் பதிவு செய்தார்.

இவர்களது வாழ்க்கைக் கதை மலையாளத்தில் 2008 ஆம் ஆண்டு திரக்கதா எனும் திரைப்படமாகவும் வெளியானது. ரஞ்ஜித் இயக்கிய அப்படத்தில் அனுப் மேனன் கமல்ஹாஸனாகவும், பிரியாமணி ஸ்ரீவித்யாவாகவும் பாத்திரமேற்று நடித்திருந்தார்கள். அந்தப்படத்தின் திரைக்கதையின்படி ஸ்ரீவித்யா கமல்ஹாஸனைச் சந்திக்கும்போதே திரைப்பட உலகில் தனது பெயரை நிறுவியிருந்தார். கமல்ஹாஸன் அப்போது வளரும் நிலையிலேயே இருந்தார். நடிகரெனும் அளவில் கமல்ஹாஸனுக்கு அழுத்தமான அடையாளம் தந்த திரைப்படமாக அபூர்வ ராகங்கள் திரைப்படமே இருந்தது.

kamal-hassan-srividya-photos.jpg

திரக்கதா திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி புற்றுநோயினால் இறந்து கொண்டிருக்கும் கதாநாயகியின் இறுதி ஆசை தனது முன்னாள் காதலனான கதாநாயகனைச் சந்திப்பதாகவே அமைந்திருந்தது. அவரைச் சந்தித்த பின்னால் அவரது மரணம் அமைதியாக முழுமையடைவதாக அப்படத்தின் இறுதிக் காட்சி இருந்தது.

வாணி கணபதியுடனான கமல்ஹாஸனின் திருமணம் 1978 ஆம் ஆண்டு அவரது 24 ஆம் வயதில் நடந்தது. 1954 ஆம் ஆண்டு நவம்பரில் பிறந்த கமல்ஹாஸன் ஸ்ரீவித்யாவை விடவும் 16 மாதங்கள் மூத்தவர். ஸ்ரீவித்யா-கமல்ஹாஸன் காதல் வெளிப்படையான செய்தியாக ஆன அளவில் அவர்களது காதல் முறிவிற்கான காரணம் வெளிப்படையாக ஆகவில்லை. ஜோர்ஜூடனான ஸ்ரீவித்யாவின் திருமணம் ஜனவரி 7, 1978 ஆம் ஆண்டு கிறித்தவ முறைப்படி நடந்தது. அதற்காக அவர் கிறித்தவராகவும் மாறினார். அதே ஆண்டில் கமல்ஹாஸன்- வாணி திருமணமும் நடந்தது.

கமல்ஹாஸன் மீது கொண்ட கோபத்தினாலும், வாணியை கமல்ஹாஸன் மணந்துகொண்டதால் ஏற்பட்ட உடனடி உணர்ச்சிவசத்தினாலும், தமது பெற்றோரினதும் விருப்பமின்மையை மீறி, அவசரமாக நடந்த, தன் வாழ்வில் செய்த மிகப்பெரும் தவறு ஜோர்ஜூடனான தனது திருமணம் எனது தனது திருமணம் குறித்துப் பின்னாளில் பேசினார் ஸ்ரீவித்யா.

குடும்ப வாழ்வையும், குழந்தைகளையும், திருமண பந்தத்தையும் நேசித்த ஸ்ரீவித்யாவின் குடும்பவாழ்வு நரகமாக ஆனது. வன்முறை கொண்டதாகவும், சம்பாதிக்கும் இயந்திரமாகத் தனது வாழ்வு ஆனதாகவும் ஸ்ரீவித்யாவின் குடும்பவாழ்வு ஆகியது. திருமணத்தின் பின்பு தான் நடிப்பிலிருந்து விலக நினைத்தபோதும் கணவர் தமகு பெரும்செலவினத்தினால் உருவாக்கி வைத்த கடன்சுமைக்காக அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என அவரது கணவர் வற்புறுத்தினார். அவரது கணவர் திருமணம் மீறிய பெண்ணுறவொன்றினையும் கொண்டிருந்தார். வன்முறையும், காதலற்ற, அன்பற்ற வாழ்விலிருந்து அவர் வெளியேற நினைத்தார்.

அவரது பொருளாதாரக் கஷ்டங்களிலிருந்து சக கலைஞர்களான இயக்குனர் சக்தியும், நடிகர் செந்தாமரையும் பிணை நின்று அவரை மீட்டார்கள்.

ஸ்ரீவித்யாவிடம் இறுதியில் எஞ்சிய சென்னை வீட்டை தன் பெயருக்கு உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தார் கணவர் ஜோர்ஜ். இந்தச் சந்தர்ப்பத்தில் குழந்தைப் பருவம், அவரது காதல், அவரது திருமணம், சொத்து வழக்கு போன்றவை குறித்து தினமணிக் கதிரில் எழுதத் துவங்கினார். வழக்கில் வென்று தனது வீட்டை மீட்ட அவர், சென்னையிலிருந்து கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்தார்.

ஸ்ரீவித்யா கேரளத்துக்கு நகர்ந்ததற்கான உளவியல் காரணமாக அவரது நொறுங்கிய திருமண வாழவின் நினைவுகளிலிருந்து அவர் நிரந்தரமாக தன்னை விலக்கிக் கொள்ள விரும்பியதாக இருந்திருக்கும். பிறிதொரு முக்கியமான காரணம் கேரளத்திரையுலகு அவருக்கு அளித்த பாத்திரங்களும் கௌரவங்களும் என்பதாக இருக்கிறது.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஸ்ரீவித்யா நடித்த தெய்வத்திண்ட விக்ருதிகள், இடைவெளிகள், பவித்ரம் போன்ற திரைப்படங்கள் ஸ்ரீவித்யாவின் பண்பட்ட நடிப்பிற்குக் களம் அமைத்துக் கொடுத்தன. மம்முட்டி ஸ்ரீவித்யாவின் மரண அஞ்சலியில் அதனை இவ்வாறு குறிப்பிட்டார் : ஸ்ரீவித்யாவுக்கு நான் காதலனாக, சகோதரனாக, கணவனாக நடித்திருக்கிறேன். தந்தையாக மட்டும்தான் என்னால் நடிக்க முடியவில்லை.

கேரளம் ஸ்ரீவித்யாவின் மிது கொண்ட அன்பை கேரள முதல்வர் அச்சதானந்தன் வேறு வார்த்தைகளில் முன்வைத்தார் : தமிழகத்தில் பிறந்திருந்தாலும் ஸ்ரீவித்யாவை கேரளம் தனது மகளாகத் தத்து எடுத்துக் கொண்டது.

மரணமுறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னல் தனது இறுதி உயிலை எழுதிய ஸ்ரீவித்யா, தனது சகோதர்களின் குழந்தைகளுக்குத் தலா 5 இலட்சம் ரூபாய்களும், தனக்கு உதவிபுரிந்த தனது பணியாட்களுக்குத் தலா 1 இலட்ச ரூபாயும் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். தனது மிஞ்சிய சொத்துக்களை விற்றுவரும் பணத்தில் இசை-நடனம் கற்பிக்கும் பள்ளி ஒன்றினைத் துவங்குமாறும் அதில் பொருளாதார ரீதியில் நலிவுற்ற, வாயப்புக்கள் கிடைக்காத மாணவர்களுக்குக் கற்பிக்குமாறும், வறிய மாணவர்களின் கல்விக்கு உதவித் தொகை வழங்குமாறும். நலிவடைந்த கலைஞர்களுக்கு நிதி வழங்குமாறும், அதற்கென ஒரு கலைநிறுவனத்தை நிறுவுமாறும் எழுதி வைத்தார்.

இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் திகதி மாலை 07.55 மணிக்கு திருவனந்தபுரம் மருத்துவ மனையில் ஸ்ரீவித்யா மரணமுற்றார். தமிழ், மலையாள, தெலுங்கு மொழிகளில் 800 படங்களில் நடித்திருந்த ஸ்ரீவித்யாவுக்கு மரணமுறும்போது, 53 வயதே ஆகியிருந்தது.

ஸ்ரீவித்யாவை நினைக்கும் தோறும் லேசாக உதடு பிரிந்த அவரது புன்னகையே எவருக்கும் முதலில் ஞாபகம் வரும். ஆழந்து நோக்கும் போது அதன் பின் நிரவமுடியாத நிரந்தர சோகம் அவருக்குள் இருந்ததை எவரும் அறிய முடியும். அவரது வாழ்வை அறிந்தவருக்கு, அவரது மாளாத துயரை மறைத்துக் கிளரந்த கனிந்த இதயமே அவரது மாறாத புன்னகையாகப் பொலிந்தது எனவும் புரிந்து கொள்ள முடியும். ஸ்ரீவித்யா நிரந்தரத்தில் புன்னைகைக்கும் கண்ணீர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/76198/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த நடிகை, கடைசி நேரத்தில் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.