Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்தோர் இலக்கியம் புலம்பல் இலக்கியமா ?

Featured Replies

இலக்கியப் படைப்பு உணர்வுப் பூர்வமான உள்ளத்தின் வெளிப்பாடு. படைப்பாளனின் வாழ்க்கைக்கும் அவர் படைப்புகளுக்கும் நெருக்கமான உறவு உள்ளது. ஒரு படைப்பாளியால் உருவாக்கப்படும் எத்தகு படைப்பும் அவர் வாழ்க்கை முறையோடு தொடர்புடையது.

மக்கள், ஏதேனும் ஒரு காரணத்துக்காக தம் தாய்நாட்டைவிட்டு மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் பழக்க, வழக்கங்களாலும் முற்றிலும் மாறுபட்ட வேறொரு நாட்டுக்குக் குடிபெயர்வதே ‘புலம்பெயர்வு’. அவ்வாறு புலம்பெயர்ந்த மக்களைப் ‘புலம்பெயர்ந்தோர்’ என்று அழைக்கின்றனர். இவர்களுடைய படைப்புகள் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது.

இலங்கையிலிருந்து 1960களில் இருந்தே ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்கிவிட்டது. அவர்கள் படைத்த இலக்கியங்களைவிட 1983இல் இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாகப் புலம்பெயர்ந்தோரால் படைக்கப்படும் இலக்கியங்களே புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் முதன்மையானதாகக் கருதப்படுகின்றன.

அவர்களுடைய படைப்புகளில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கியப் புனைவுகள் முதன்மையாகக் கருதப்பட்டபோதிலும், கலைகள் சார்ந்த வெளிப்பாடுகள், சிற்றிதழ்கள், ஓவியம், குறும்படம், கூத்துக்கலை, தெருநாடகம், ஒலி மற்றும் ஒளிச் செயல்பாடுகள் அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவை போக, இந்தப் படைப்பாளிகள் பல்வேறுபட்ட இலக்கிய அமைப்புகளை ஏற்படுத்தி இலக்கிய அரங்குகளை நடத்துவதும் படைப்புகள்மீது விவாதத்தை ஏற்படுத்துவதும் குறிப்பிடத்தக்கன. மொழி, நிறம், பண்பாட்டுச் சிக்கல் பற்றியதாக இப் படைப்புகளின் மையங்களை அமைத்துக் கொள்கின்றனர். படைப்புகளை இதழ்கள், இணையதளம், வலைப்பூக்கள், நூல்கள், தொகுப்பு நூல்கள் வழியாக உடனுக்குடன் வெளிப்படுத்துகின்றனர்.

புலம்பெயர்ந்தோர் படைப்புகள் அவர்களின் தாய்நாடு குறித்த ஏக்கத்தையும், குடியேறிய நாடு அவர்களுக்கு அளித்துள்ள புதுவாழ்வில் சந்திக்கும் இடர்பாடுகளையும் விளக்கமாகக் கூறுகின்றன. இப்படைப்புகள் தாயகத்தின் உறவுகள், நினைவுகள் சார்ந்தும் புலம்பெயர்ந்தோர் பயணம், புகலிட அனுபவம், புகலிட மனிதனின் வாழ்வு குறித்த தேடலையும் முன்வைக்கின்றன. புனைகதையில் குறிப்பாகச் சிறுகதைகளில் புகலிடவாழ்வுதரும் துயர் கணிசமாகப் பதிவாகியுள்ளது. அப்புனைகதைகளின் பெரும்பகுதி நிஜமும் சிறுபகுதி புனைவுமாக அமைந்துள்ளன. புனைவினை நீக்கிவிட்டால் அவை உண்மைச் சம்பவக் கட்டுரைகளாக அமையக்கூடும்.

ஷோபா சக்தியின் ‘தேவதை சொன்ன கதை’ சடங்கு, சம்பிரதாயங்களோடு ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த திருமணத்தைப் போரும் அதனால் நிகழ்ந்த புலம்பெயர்வும் எவ்வாறு சர்வதேச அளவுக்குக் கொண்டு சென்றன என்பதைக் காட்டியுள்ளது. “பாரிசில் தான் உண்டு, தன் வேலை உண்டு, தங்கையின் லண்டன் மாப்பிள்ளைக்குக் கொடுத்த சீதனத்துக்குட்பட்ட கடனுக்கு வட்டியுண்டு என்று எட்டடிக்குப் பத்தடி அறையில் வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு லண்டன் தங்கைதான் முதல் வெடி வைத்தாள். பாரிஸ் அண்ணைக்கும் முப்பது வயசாப் போச்சுது. நான் லண்டனில், பெரிய அண்ணை ஜொர்மனியில், தம்பி சுவிஸில், பாரிஸ் அண்ணை தனியாளா கிடந்து போறதுக்குக்கான ‘சான்று’ வெளிநாடுகளில் கூடுதலா இருக்கு. அதால பாரிஸ் அண்ணைக்குக் கெதியா ஒரு கலியாணம் செய்து வைக்க வேணும் என்று தங்கை தொலைபேசியில் ஜெர்மனிக்கு வெடிக்க ஜெர்மனி ஊடாக கொழும்பு என்று இவனது திருமணம் பிரச்சினை சர்வதேச அளவில் வெடித்தது.” புலம்பெயர்வு, மனிதனை எவ்வாறு நாலா திசைகளிலும் வீசி எறிந்துள்ளது என்பதையும், திருமணம் குறித்த தமிழர்களின் மனநிலையினையும், அவை மனிதனிடம் ஏற்படுத்துகின்ற சிக்கல்களையும் இயல்பாக, எள்ளலோடு பதிவு செய்துள்ளது.

பொ. கருணாமூர்த்தியின் ‘போதிமரம்’ என்ற கதை புலம்பெயர் வாழ்வு தமிழர் மீது திணித்துள்ள பண்பாட்டுச் சிதைவினைக் குறிப்பிட்டுள்ளது. “ஒருமுறை சில நண்பர்களுடன் ஹம்போக்கில் வெளிநாட்டவர் குடியிருப்பு ஒன்றிற்கு இலங்கைத் தமிழர்களும் நிறையபோர் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு போனோம். எதேச்சையாக அவர்கள் குசினிக்குள் நுழைந்த எனக்குப் பேரதிர்ச்சி. எங்கள் பள்ளிக்கூடத்தில் என்னைவிட 2 வகுப்புகள் ஜூனியராகப் படித்த ஐயர் பொடியன் ஒருவன் பெரிய கோழியொன்றை மல்லாக்கப் போட்டு வகிர்ந்து கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் அசடு வழிந்து கொண்டே சொன்னான் ‘என்ன செய்யிறது இங்க வந்து எல்லாத்தையும் மாத்த வேண்டியதாய்ப் போச்சு’” என்ற பகுதி அந்தணர்குலத்துப் பையன் கோழி சமைப்பது, முட்டை சாப்பிடுவது எனப் புலம்பெயர்வு அவனை அந்த நிலைக்குத் தள்ளியுள்ளமையைச் சுட்டிக்காட்டுகின்றது.

புகல்சூழலில் யாசித்துப் பிழைக்கும் காளிமுத்து என்ற தமிழரைச் சை. பீர்முகம்மது ‘சிவப்பு விளக்கு’ என்ற சிறுகதையில் “காலையில் பெரிய மார்க்கெட்டில் கையேந்திக் கொண்டு நிற்பான். மத்தியான வேளையில் ஏதாவதொரு கடையின் பின்புறமாக இருக்கும் குப்பைத் தொட்டியில் தலையை நுழைத்துக் கொண்டு எதையாவது பொறுக்கிக் கொண்டிருப்பான். எது எப்படி இருந்தாலும் மாலை நாலரை மணிக்கு சௌக்கிட்ரோட் வெள்ளை மாளிகையில் ஒரு பயிண்ட் அடிக்க வந்துவிடுவான். பிறகு நேரே மேம்பால மாளிகைக்குத் தூங்க வந்துவிடுவான். மீண்டும் மறுநாள் காலையில் பெரிய மார்க்கெட, குப்பைத்தொட்டி, கள்ளுக்கடை” என்று அடையாளப்படுத்தியுள்ளார். புலம்பெயர்ந்த மக்களுள் உடல் வலிமையோடு இருக்கும் ஒருவன் உழைத்து முன்னேற விருப்பமில்லாமல் சோம்பேறியாய், பிச்சையெடுத்து உண்பதைப் பெரிதாக எண்ணி வாழ்ந்து அழியும் விதத்தினைக் காட்டியுள்ளார்.

லெ. முருகபூபதி ‘மழை’ என்ற சிறுகதையில் மனைவி, பிள்ளைகளை ஈழத்தில் விட்டுவிட்டு வந்திருக்கும் ஒருவர். அந்நியநாட்டுப் பெண்ணுடன் நட்புக்கொண்டு பாலியல் உறவுவரை செல்வதனைக் குறிப்பிட்டுள்ளார். “வாயை மூடு அங்ஜோலா, நான்காண்டுகளுக்கு மேலாக என் ஸ்பரிசம் இன்றி எனது உடல் சுகம் கிட்டாமல் துப்பாக்கி வேட்டுக்களுக்கும் செல்அடிகளுக்கும் பயந்துகொண்டு என் மனைவி என் செல்வங்களுடன் உயிரைப் பாதுகாக்க அங்கே போராடிக் கொண்டிருக்கிறாள். உனது வாதம் வேண்டுகோள் நியாயமாகப் பட்டால் என் மனைவியும் அங்கே இந்த சுகத்திற்காக உன்னைப் போல் ஒருவனைத் தேடி போயிருக்கலாம்” என்ற குறிப்பு, புலம்பெயர்ந்த மண்ணில் வாய்க்கும் பாலியல் தவறுகளைச் சுயநேர்மையுடன் வெளிப்படுத்தியுள்ளது.

‘அன்னையும் பிதாவும்’ என்ற கதையில், ரோகிணி வழியாகத் தம் மொழி, இனம், பண்பாடு போன்றவற்றை மறந்து அயல்நாட்டவர்களாக வாழத்துடிக்கும் தமிழ்ப்பெண்ணின் மனநிலையை மாத்தளை சோமு காட்டியுள்ளார். ரோகிணியின் தோற்ற வர்ணனை “தோள்பட்டை வரை தொங்குகிற முடியைக் குலுக்கிக் கொண்டு போனாள். அவள் இங்கு வருவதற்குமுன் இடுப்புவரை தொங்கியும் குறுகிவிட்டது. வெள்ளைக்காரர்களைப் போல் முடி வெட்டியதற்குச் சொன்ன காரணம், குளித்துவிட்டுத் தலைமுடி காய டைம் எடுக்குது. அடிக்கடி தலைவலி வருது என்பதுதான். ஆனால், வெள்ளைக்காரிகளின் ஹெர்ஸ்டைலில் அவள் மயங்கியதே உண்மையான காரணம்” என்று உண்மையோடு குறிப்பிடப்பட்டுள்ளது.

அ. முத்துலிங்கம் ‘கடன்’ என்ற கதையில் தன் தந்தையின் வயோதிக காலத்தில் அவரை முறையாகப் பராமரிக்காமல், மரணமடைய விட்டுவிடும் ஒரு மகனின் மனிதநேயமற்ற, சுயநலப்போக்கினைக் காட்டியுள்ளார். மகனும் மருமகளும் பணிக்குச்செல்வதால் பெரியவரைச் சரிவர கவனித்துக்கொள்ள இயலவில்லை. அவருக்கு அன்றாடம் உணவுப் பரிமாற நேரமில்லாத காரணத்தால் தனித்தனிப் பாத்திரத்தில் உணவினை வைத்து அப்பாத்திரத்தின் மேல்பகுதியில் கிழமைகளின் பெயர்களை எழுதிக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுகின்றனர். அப்பொரியவா; கிழமைகளின் அடிப்படையில் உணவுப் பாத்திரத்தைத் தானே தனக்குப் பரிமாறிக்கொண்டு உண்கிறார். அவசர உலகத்தில் முதியவர்கள் தனிமைப் படுத்தப்படுவதனை இக்கதை சுட்டிக்காட்டுகின்றது. அது மட்டும் இக்கதையின் மையம் அல்ல. அப்பொரியவரின் மகன், கிழமையின் பெயர் குறித்து வைக்கப்பட்ட உணவுப் பாத்திரங்கள் இரண்டு பயன்படுத்தப்படாததைக் கண்டு குழப்பமடைகிறார். தனிமையிலேயே வசித்த தன் தந்தையைப் பார்க்க அவரது நிலவறைக்குச் செல்கிறார். இரண்டு நாட்களாக உடல் விறைத்த நிலையில் உள்ள தன் தந்தையின் சடலத்தை மகன் காண்கிறார். பெற்றோரைக் கூடப் பேணிக்காக்க இயலாத அளவுக்கு நேரமின்மையும் பணிச்சுமையும் புலம்பெயர்ந்த மக்களின் தலைமுறைக்கு நேர்ந்துவிட்ட கொடுமையை அ. முத்துலிங்கம் காட்டியுள்ளார்.

புலம்பெயந்தோர் இலக்கியத்தைப் ‘புலம்பல் இலக்கியம்’ என்று எள்ளிநகையாடும் போக்கு தமிழ்ச்சூழலில் உள்ளது. புலம்பல் அற்ற வாழ்க்கை எத்தமிழனுக்கு வாய்த்தது? சங்கத்தமிழனின் வறுமை குறித்தப் புலம்பல்தானே பெரும்பான்மையான செவ்விலக்கியங்களின் மையமாக உள்ளன! புலம்பல்களில் புனைவின் வண்ணம் கலந்து புலம்பெயர்ந்தோரர் இலக்கியம் உருக்கொள்கின்றது. துயருராத மனிதனுக்கு இவை ‘புலம்பல் இலக்கியம்’. சராசரி மனிதனுக்கு இவை தீவிர இலக்கியம்தான். தன்வாழ்விலிருந்து இலக்கியம் படைக்கும் எப்படைப்பாளரும் வணங்கத்தக்கவரே. இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள புலம்பெயர்ந்த படைப்பாளர்கள் அறுவரையும் நான் வணங்குகின்றேன்

முனைவர் ப. சரவணன்

http://www.tamilpaper.net/?p=5795

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி. என்பார்கள். தமிழர்களின் புலப்பெயர்வு அவர்கள் விரும்பி ஏற்பட்டதல்ல. அவர்களுக்கு ஏற்பட்ட அவலங்களின் வெளிப்பாடே. அவலப்பட்டவன் தன் துன்பங்களை வெளிக்கொண்டு வருவது. இயல்பு. அதன் அடிப்படையில் தோன்றும் இலக்கியம் அந்தச் சூழ்நிலையின் தாக்கத்தால் ஏற்பட்டதாகத்தான் இருக்கும். சுமார் ஐம்பது வருடங்களுக்கு பின்னர் புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் என்ன நிலையில் வாழ்ந்தார்கள் என்பதற்கு இவைதான் சான்று.

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி. என்பார்கள். தமிழர்களின் புலப்பெயர்வு அவர்கள் விரும்பி ஏற்பட்டதல்ல. அவர்களுக்கு ஏற்பட்ட அவலங்களின் வெளிப்பாடே. அவலப்பட்டவன் தன் துன்பங்களை வெளிக்கொண்டு வருவது. இயல்பு. அதன் அடிப்படையில் தோன்றும் இலக்கியம் அந்தச் சூழ்நிலையின் தாக்கத்தால் ஏற்பட்டதாகத்தான் இருக்கும். சுமார் ஐம்பது வருடங்களுக்கு பின்னர் புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் என்ன நிலையில் வாழ்ந்தார்கள் என்பதற்கு இவைதான் சான்று.

எண்பதுகளில் இருந்த புல்பெயர்வின் வலிகளை இப்போது உள்ளவர்கள் அனுபவிக்கின்றார்களா செம்பகன் ? என்னைப் பொறுத்தவரையில் அப்போது இருந்தவர்களின் தியாகங்களைத்தான் இப்போது உள்ளவர்கள் அறுவடை செய்கின்றார்கள் . மிக்க நன்றிகள் அபராஜிதன் இணைப்பிற்கு .

ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் புலப்பெயர்வு பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்டுள்ளது. இதனை உள்நாட்டுக்குள்ளேயே; ஏற்பட்ட புலப்பெயர்வு, வெளிநாட்டுக்கான புலப்பெயர்வு என கருதலாம். இதில் வெளிநாட்டுக்கான புலப்பெயர்வு ஆரம்ப காலங்களில் தொழில் சார்ந்ததாகவும், உயர் கல்வி சார்ந்ததாகவும் இருந்தது. அதன் பின் ஏற்பட்ட புலப்பெயர்வுதான் அரசியில் சார்ந்ததாக இருந்தது. இதற்குள் பொருளாதார நலன் சார்ந்த புலப்பெயர்வும் உள்ளடங்கும். ஆரம்க காலங்களில் புலம்பெயர்ந்தவர்கில் பெரும்பாலானவர்கள் தங்களின் தேசிய அடையாளங்களைத் தொலைத்தவர்களாகவே காணப்பட்டனர். இப்படியானவர்கள் அன்றுதொடக்கம் இன்னனுவரை காணப்படுகிறார்கள். குறிப்பாக யேர்மனியில் தமிழ்மொழியை தமிழ்மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டுமென்றபோது, தமிழைப் படித்து என்ன பிரயோசனம் என்று கேட்ட பெற்றோர்கள் அதிகம். இவர்கள் எந்த வலியையும் சுமக்காதவர்கள். இப்படியானவர்களிடையே இருந்து எந்த இலக்கியச் சிதறல்களும் வெளியேறியதாக நான் கருதவில்லை.

ஒரு சமுதாயத்தில் ஒருசிலர் செய்யும் தியாகத்தில்தான் அச்சமுதாயம் செழிப்படைந்து வளருகிறது.

எமது விடுதலைப் போருக்கு வித்தானவர்கள் எத்தனை பேர்கள். அவர்களின் தியாகத்தால்தான், வல்லரசுகளே தமிழரின் நிலை பற்றி விவாதிக்கும் நிலை தோன்றியுள்ளது,

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லோருக்கும் பெய்யும் மழை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.