Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்புள்ள சரத் பொன்சேகா என...

Featured Replies

Sarath%2520Fonseka%2520-%2520Anoma.jpg

சரத்பொன்சேகா!

உங்களை அன்பிற்குரியவராகவோ, மரியாதைக்குரியவராகவோ, இதுவரை என்னால்

காண முடியாவில்லை. அதனால் அன்பிற்குரிய அல்லது மரியாதைக்குரிய சர்தபொன்சேகா என விழித்துத் தொடக்க முடியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்.

விடுதலையின் மகிழ்வை, மதிப்பை உணர்ந்த ஒரு நாள் பொழுதினை நீங்கள் கடந்திருக்கின்றீர்கள். ஆதரவாளர்கள், உறவினர்கள், அன்பு மகள்கள், மனைவி,, என அத்தனை பேரின் அன்பிலும், ஆரத் தழுவலிலும் நிச்சயம் இன்புற்றிருப்பீர்கள்.

குடும்பத்துடன் சேர்ந்து விருந்துண்டு மகிழ்ந்திருப்பீர்கள். விரும்பாவிட்டாலும் சிறைச்சாலை உணவை ஒப்பிட்டுப் பேசியிருப்பீர்கள். அதற்கும் மேலாக அனுபவங்களைப் பகிர்ந்திருப்பீர்கள். உங்கள் விடுதலைக்காய் தேங்காய் உடைத்துப் பிரார்த்தித்த, தேவைப்பட்ட இடங்களில் பேச்சுவார்த்தை செய்த அனோமாவின் அன்பை, தனிமையில் பாராட்டி மகிழ்ந்திருப்பீர்கள். ஆக விடுதலையின் சுகம் தெரிந்த ஒரு பொழுதாக கடந்த 24 மணிநேரங்களைக் கடந்திருக்கின்றீர்கள்.

இரண்டு வருடச் சிறைவாழ்வின் பின்னான விடுதலை உங்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்றால், பல இரண்டு வருடங்களாக சிறைக் கம்பிகளின் பின்னே வாடும் என் தந்தையின் விடுதலை எங்களுக்கு எவ்வளவு மகிழ்வைத் தரும் என்று எண்ணிப்பாருங்கள்.

நீங்கள் சிறைசெல்ல அரசியற் காரணம் என்கிறார்கள். ஊழல் காரணம் என்கிறார்கள். ஆனால் என் தந்தை சிறை செல்ல ஏது காரணமும் இல்லை என்பதை அறிவீர்களா..?

நம்ப முடியவில்லையா..? ஆனால் உண்மை அதுதான். இல்லையென்றால் கைது செய்யப்பட்ட இத்தனை வருடங்களில், எத்தனை தடவைகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போதும், குற்றம் நிரூபிக்க காலஅவகாசம் கேட்கப்படுவது மட்டுமே நிகழ்வது ஏன்..?

நீங்கள் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் கைது செய்யப்படவர் என் தந்தை. விடுதலைப்புலிகளுக்கு உதவினார் என்பது மட்டுமே காரணம். வேடிக்கை என்னவென்றால் அவர் யாருக்கு உதவினார் எனக் கைது செய்யப்பட்டாரோ, அந்த உறுப்பினர் தற்போது அரசியலில் முக்கியமானவர். அவரை மன்னித்து அரசியல்வாதியாக்கிய, உங்களை மன்னித்து விடுதலை செய்த ஜனாதிபதிக்கோ, இந்நாட்டுச் சட்ட அமைப்புக்கோ எந்தக் குற்றமுமற்ற என் அப்பாவை விடுதலைச் செய்ய வகையும் தெரியவில்லை. வழியும் இருக்கவில்லை. காரணம் என்னவென்றும் எனக்குப் புரியவில்லை.

விடுதலைபெற்று அரசியல்வாதியாகிவிட்ட அவரது விடுதலையிலும், உங்களது விடுதலையிலும், வெளிநாடுகளின் அழுத்தங்கள் இருந்ததாகச் சொல்கின்றார்கள். அப்படியானால் என் அப்பாவின் விடுதலைக்கு எந்த நாட்டிடம் கேட்கவேண்டும் என்றெனக்குச் சொல்லுங்கள். கூடவே இந்நாட்டுப் பிரஜைகளின் விடுதலைக்கு வெளிநாட்டின் செல்வாக்குத் தேவையென்றால், நாம் இலங்கையாரா..? என்பதையும் சொல்லுங்கள்.

Sarath%2520Fonseka1.jpg

விடுதலையின் மகிழ்வில் மனம் மகிழ்ந்திருக்கும் உங்களிடம் நான் விரும்பிக் கேட்பதெல்லாம் ஒன்றுதான். விடுதலையின் சுகத்தை, அனுபவமென உணர்ந்திருக்கும் நீங்கள் புறாக்களைப் பறக்கவிடுவது படங்களுக்காக இல்லையெனில், உங்கள் இராணுவ அதிகாரத்தில் சிறைப்பிடிக்கப்பட்டுச் சிறைகளின் வாடும் என் அப்பா போன்ற குற்றமற்றவர்களை விடுவிக்க ஏதாவது செய்யுங்கள்.

Sarath%2520Fonseka.jpg

ஏனெனில்; உங்கள் மகள்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் என் அப்பாவோடு சேர்ந்து உண்பதற்கு ரொம்பப் பிடிக்கும்.அதை நீங்கள் செய்வீர்களானால், எண்ணற்ற தமிழர்களின் மறைவுக் காரணமாய் நீங்கள் இருப்பினும், அப்போது நான் அழைப்பேன்.

அன்புள்ள சரத் பொன்சேகா என...

இப்படிக்கு

சிறிலங்காவின் சிறைக் கூடத்திலிருந்து அப்பாவை விடுவிக்கத் தெரியாது ஏங்கும் ஒரு ஏழைத் தமிழ் மகள்

http://www.4tamilmedia.com/special/news-review/5515-2012-05-22-08-57-09

  • கருத்துக்கள உறவுகள்

1996 செம்மணியில் கொன்று புதைத்த பல நூறு மனிதர்களுக்கு மேலதிகமாக.. முள்ளிவாய்க்காலில் 40,000 மனிதர்களின் உயிரை ஒரே இரவில் பறித்த கொடுமைச் செய்தவர்களில் இவரும் ஒருவர்.

இவருக்கு எப்படி மனித ஆசாபாசங்கள் இருக்குமோ.. அதேதான் அந்த 40,000 பேருக்கும் இருந்திருக்கும் என்பதை சிங்கள பெளத்த இனவெறியில் மறந்து.. இராணுவ மேலாதிக்க வெறியில் கிடந்து மனித இனமே வெட்கித் தலைகுனியக் கூடிய ஒரு இழி செயலைச் செய்தவர்.

இவரிடத்திலான.. இந்த தமிழ் மகளின் கெஞ்சல்.. சிங்கள பெளத்த பேரின இராணுவ வெற்றிக் களிப்பை கூட்டுமே தவிர குறைக்காது.

சரத் பொன்சேகா மானுடத்திற்கு எதிரான குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கொடுமையான ஆள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

1990ல் அம்பாறை மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்களின் கொலை இடம்பெற்றது, அது இவரது கட்டளையின் கீழேயே நடந்திருந்தது. சமீபத்தில்கூட சில ஊடகவியலாளர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பொன்சேகாவின் கைக்கும் தொடர்புள்ளதாக சந்தேகம் எழுப்பப்பட்டது. ஜானக பெரேராவை போல சரத் பொன்சேகாவின் பெயரும் பல மதிப்பான மனித உரிமைகள்; அமைப்புகள் மற்றும் விசாரணக் குழுக்களின்; அறிக்கைகளிலும் சுட்டிக்காட்டப் பட்டிருந்தது. ஜானக மற்றும் சரத் ஆகியோர் ஒருவரை ஒருவர் வெறுத்தாலும்,அவர்கள் இருவரினதும் போக்கு ஒரே படகிலேயே பயணம் செய்வதைப் போலவே இருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sarath%2520Fonseka%2520-%2520Anoma.jpg

Sarath%2520Fonseka1.jpg

Sarath%2520Fonseka.jpg

அன்பின் அடையாளம் அல்லவா இவர்?பஞ்சமாபாதகர்கள் இவரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி விட்டார்கள்.

விடுதலைப் புலிகளை, அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர், புலிகளின் அனுதாபிகள் விடயத்தில் எந்தவித இரக்கத்தையும் வெளிக்காண்பிக்காமல் எந்த எல்லைக்கும் சென்று புலிகளைத் தண்டிக்கும் குணம் படைத்தவர் சரத் பொன்சேகா.

தமிழ் மக்கள் தொடர்பில் மிகுந்த வெறுப்பையும், தமிழ் மக்கள் உரிமை கேட்கத் தகுதியற்றவர்கள் என்கின்ற நிலைப்பாட்டையும் தனதாகக் கொண்டவர்தான் சரத் பொன்சேகா.

எனவே, தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை அடக்குவது என்று வந்ததும், மிக மூர்க்கமாக, முரட்டுத்தனமாக தனது வீரத்தை வெளிப்படுத்தும் ஒரு குணத்தைக் கொண்டவர்- சரத் பொன்சேகா.

1985ம் ஆண்டு மே மாதம் 9ம் திகதி யாழ் குடாவில் ஒரு சம்பவம் நடைபெற்றது.

யாழ் கரவெட்டிப் பிரதேசத்தில் வீதி உலா சென்றுகொண்டிருந்த சிறிலங்கா இராணுவ அணி மீது விடுதலைப் போராளிகள் நடாத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் சிறிமால் மெண்டிஸ் என்பவர் கொல்லப்பட்டார்.

இது யாழ் குடாவில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இராணுவ முகாமை விட்டு வெளியே வருவதற்கு அவர்கள் தயங்கினார்கள்.

அந்த நேரத்தில், வல்வெட்டித்துறை இராணுவ முகாமில் சிங்க ரெஜிமெனட் படைப்பிரிவு நிலைகொண்டிருந்தது. அந்தப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் சரத் பொன்சேகா. அப்பொழுது அவர் மேஜர் தர அதிகாரியாகக் கடமையாற்றிக்;கொண்டிருந்தார்.

மேஜர் தர அதிகாரியான சிறிமால்; மெண்டிஸ் மீதான தாக்குதலால் யாழ் குடாவில் நிலைகொண்டிருந்த மற்றைய இராணுவ அதிகாரிகள் வெளியே நடமாட அச்சம் கொண்டிருந்த நிலையில், மேஜர் சரத் பொண்சேகா தனது படைப்பிரிவின் சிலரை அழைத்துக்கொண்டு துணிகரமாக வெளியே கிளம்பினர்.

உடுப்பிட்டி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை போன்ற பிரதேசங்கள் அடுத்தடுத்து பாரிய சுற்றிவளைப்பிற்கு உள்ளாகின. அந்தப் பிரதேசங்களை ஒவ்வொன்றாகச் சுற்றி வளைத்த சிறிலங்கா இராணுவத்தினர் இளைஞர்கள், மாணவர்கள் என்று பலரைக் கைது செய்தார்கள்.

அப்படிக் கைதுசெய்யப்பட்ட சுமார் 75 தமிழர்கள் பல்வேறு இடங்களில் வைத்து அன்றைய தினம் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

சர்வதேச மன்னிப்பச் சபையின் கூற்றுப்படி, 1985ம் ஆண்டு மே மாதம் 9ம் திகதி சிறிலங்கா இராணுவம் வல்வெட்டித்துறையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்ட 40 தமிழர்கள், வல்வெட்டித்துறை வைத்தியசாலையை அண்டிய இரண்டு இடங்களில் வைத்து சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.

இதில் 12 இளைஞர்கள் தங்களுடைய கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் வரிசையில் நிற்கவைத்து தலைகளில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். மேலும் 25 தமிழர்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சனசமூக வாசிகசாலைக்குள் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அடைத்து வைக்கப்பட்ட நிலையில் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதன் பின்னர் அந்த சனசமூக நிலையம் தீவைத்து எரியூட்டப்பட்டது.

சிறிலங்கா இராணுவ மேஜர் மீதான தமிழ் போராளிகளின் தாக்குதலுக்குப் பழி தீர்க்கும் முகமாகவும், இராணுவ மேஜர் மீதான தாக்குதலால் சிங்களப் படைவீரர்கள் மனங்களில் ஏற்பட்டிருந்த அச்ச நிலையை நீக்கவும், தமிழ் மக்கள் மனங்களில் ஒரு உளவியல் பீதியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும்- இந்தக் கோராமான படுகொலைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்தப் படுகொலைகள் அந்த நேரத்தில் வல்வெட்டித்துறையில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரியாகக் கடமையாற்றிக்கொண்டிருந்த மேஜர் சரத் பொன்சேகாவின் நேரடி வழிநடத்தலில் நடைபெற்றது என்பதுதான்.

சிறிலங்காவின் இராணுவ அதிகாரியான சரத் பொண்சேகா என்பவர், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை அடக்குவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஒரு அதிகாரியாகவே சிறிலங்கா இராணுவத்தில் இருந்து வந்திருக்கின்றார்.

ஒரு இரணுவத் தந்திரோபாயம் என்று வருகின்ற பொழுது, அப்பாவிகள், பொதுமக்கள் என்ற எந்தவித இரக்கமும் இல்லாமல் சிறிலங்கா இராணுவத்தின் நலன்- வெற்றி இவைகளை மாத்திரம் கவனத்தில் எடுத்து அவர் பயணித்த வரலாற்றைத்தான் பதிவுகளில் காணக்கூடியதாக இருக்கின்றது.

சரத் பொன்சேகாவிடம் இயல்பாகவே காணப்பட்ட தமிழ் விரோத உணர்வு, விடுதலைப் போராட்டத்தை அடக்கும் மூர்க்கம்- என்பன, முக்கியமான இராணுவ நடவடிக்கைகளை சரத் பொண்சேகா தலைமையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை, சிங்களத் தலைமைகள் மத்தியில் ஏற்படுத்திவிட்டிருந்தது.

சிறிலங்காவின் இராணுவத் தளபதியாகப் பதவியேற்றதும், ஈழ யுத்தத்தை தான் தன்னைத் தொடர்ந்து பதவிக்கு வரும் தளபதிக்கு ஒப்படைத்துச் செல்லமாட்டேன் என்று சூளுரைக்கும் அளவிற்கு, தமிழ் மக்களின் போராட்டத்தை அடக்குவதில் அதிக தீவிரம் வெளிப்படுத்தி, அதில் வெற்றியையும் கண்டிருந்தவர்- சரத் பொன்சேகா.

ஈழத் தமிழர்களின் கதாநாயகன்?

கடந்த 21.05.2012 அன்று சரத் பொன்சேகா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சரத் பொன்சேகாவிற்கு ஒரு கதாநாயகன் அந்தஸ்து வழங்கப்பட்டு தமிழ் ஊடகங்களில் வெளியாகி வருகின்ற செய்திகளைப் பார்த்தபோதுதான் சரத் பொன்சேகா பற்றிய ஒரு பார்வையை ஈழத்தமிழரின் கோணத்தில் இருந்து நாம் பார்த்தாகவேண்டிய தேவையை நான் உணர்ந்தேன்.

தமிழ் தேசியம் பற்றிய தெளிவான பார்வையைக் கொண்டவரும், இலங்கையில் தற்பொழுது வசித்து வருபவருமான எனது நண்பர் ஒருவர் தனது Face Book இல் சரத் பொன்சேகாவின் விடுதலை பற்றிய செய்தியை தனது status ஆகப் பதிவு செய்துவைத்திருப்பதைப் பார்த்ததும், ஈழத் தமிழர் விடயத்தில் சரத் பொன்சேகா என்ற நபரின் வகிபாகம் பற்றிய ஒரு பதிவை மேற்கொண்டேயாக வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்.

ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் பற்றி சரத் பொன்சேகாவிடமும் பேசுங்கள் என்று சில புலம் பெயர் அமைப்புக்களின் தலைமைகளிடம் சில மேற்குலக இராஜதந்திரிகள் ஆலோசனை வழங்கியதாக அறிந்த பொழுது, ஒரு தமிழ் ஊடகவியலாளனாக எனது பார்வையை வெளிப்படுத்தியேயாக வேண்டிய கடமையை உணர்ந்தேன்.

இலங்கையின் அரசியலில் இன்று தவிர்விக்கமுடியாதவராகி விட்டுள்ள சரத் பொன்சேகா பற்றிப் பிரஸ்தாபிப்பதோ, அவருடன் அரசியல் இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணுவதோ தவறு என்று நான் இங்கு கூறவரவில்லை.

சரத் பொன்சேகாவுடன் நாம் தாராளமாக அரசியல் பேசலாம். அவர் மீதான பழிவாங்கல்களுக்காக நாம் பச்சாத்தாபப்படலாம். அவரைப் பற்றி செய்திகளையும், கட்டுரைகளையும் தாராளமாக எழுதலாம். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் ஜனாதிபதித் தேர்தலில் நின்றால் அவருக்கு நாம் வாக்கும் அளிக்கலாம். இவைகளெல்லாம் தவறல்ல.

ஆனால் ஒரு முக்கிய விடயத்தை எமது மனங்களில் ஆழப் பதித்துக்கொண்டு இவைகளை மேற்கொள்ளுவதுதான் நல்லது.

ஈழத் தமிழர்களையும், அவர்களின் அரசியல் உரிமைகளையும், அந்த உரிமைகளை அடைவதற்கான ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டங்களையும் மிக மோசமாக வெறுக்கின்ற ஒரு சிங்களத் தலைவரே சரத் பொன்சேகா என்பதை கருத்தில் வைத்துக்கொண்டு சரத் பொன்சேகா சம்பந்தமான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளுவதே சாலச் சிறந்தது என்பதுதான் எனது தாழ்மையான அபிப்பிராயம்.

சரத் பொன்சேகா என்கின்ற நபர் சிங்களவர்களின் ஒரு மீட்பராக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அவர் ஈழத் தமிழர்களின் ஒரு கதாநாயகன் அல்ல.

நவீனகாலத் துட்டகெமுனுக்களாகத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள மகிந்த மற்று கோத்தபாயக் கூட்டணிக்கு நிகராக ஈழத் தமிழருக்கு கேடு விளைவித்த ஒரு சிங்களத் தலைவரே சரத் பொன்சேகா.

இந்த யதார்த்தங்களை உள்மனத்தில் வைத்துக்கொண்டு வெளியே நகர்வெடுப்பதுதான் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் வெற்றிகரமான அரசியலாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.

nirajdavid@bluewin.ch

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.