Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயுமாய் சுமைதாங்கியுமாய் நின்றவர்: பாலா அண்ணா நினைவுகளில் ஒரு துளிப் பதிவு! - சர்வே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயுமாய் சுமைதாங்கியுமாய் நின்றவர்: பாலா அண்ணா நினைவுகளில் ஒரு துளிப் பதிவு!

- சர்வே

 

 

2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடுப்பகுதி என நினைக்கிறேன். பாலா அண்ணாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பொன்று வருகிறது.

 

'எப்படி இருக்கிறாயடாப்பா' என்று சுகம் விசாரித்த பின்னர் மிகச் சாதாரணமாகச் சொன்னார். "பாலா அண்ணா கெதியா மேலே போகப் போறார்"

 

எனக்குத் திக்கென்றது. என்னைச் சுதாகரித்துக் கொள்ள முடிவதற்கு முன்னர் பாலா அண்ணா தொடர்ந்தார்

 

"எனக்குப் புற்று நோய் முத்திட்டுது. உடம்லெ;லாம் புற்றுக்கள் பரவியிட்டுதாம். கன நாளைக்குத் தாக்குப் பிடிக்கிறது கஸ்டம் எண்டு டொக்டேர்ஸ் சொல்லிப் போட்டினம். இப்ப எனக்கு சாவைப் பத்தியில்லை நோவைப் பத்தித்தான் கவலையாயிருக்கு" எனக்கூறிச் சிரித்தார் பாலா அண்ணை.

 

நான் அதிர்ந்து போய் விட்டேன். வாயில் இருந்து வார்த்தைகள் வெளிவர மறுத்தன. பாலா அண்ணாவை இழக்கப் போகிறோமா? எமது தேசத்துக்கு இவரது சேவை தேவைப்படும் ஒரு முக்கிய தருணத்தில் பாலா அண்ணாவை இழக்கப் போகிறோமா

 

'என்னண்ணை சொல்லுறியள்?' என்று நான் நா தழுதழுத்துச் சொல்ல பாலா அண்ணா சொன்னார்

 

"எல்லாச் சோதனைகளும் செய்து பாத்தாச்சுது. அதுக்குப் பிறகுதான் என்னோடை நெருங்கிப் பழகின ஆக்களுக்குச் சொல்லத் தொடங்கியிருக்கிறன். பாலா அண்ணை போற ஆள்தானே.. எண்டு சொல்லி ரெலிபோன் எடுக்காமல் விட்டுடாதே. பேந்து எடு" என்று தனக்கேயுரிய நகைச்சுவையுணர்வுடன் கூறியவாறு தொலைபேசியை வைத்தார் பாலா அண்ணா.

 

பாலா அண்ணாவை உடன் போய்ப் பார்க்க வேண்டும் என விரும்பினேன். முன்னைய போராட்டச் செயற்பாடு காரணமாக இருந்த பயணத்தடை அதற்கு இடம் தரவில்லை. இது கவலையை மேலும் அதிகரிக்கச் செய்தது.

 

நோர்வேயில் இருந்து ஓரிரு நண்பர்கள் பாலா அண்ணாவை நேரடியாகப் போய்ப் பார்த்தார்கள்.

 

"நான் சாவதைப் பத்திக் கவலைப்படவில்லை. எமது மக்கள் படப்போகிற துன்பத்தைக் காணாமல் போய்ச் சேருகிறேன் என்பது ஒரு வகையில் ஆறுதல்" என பாலா அண்ணா மனமுருகிச் சொல்லியிருக்கிறார்.

 

2006 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 14 ஆம் நாள் பாலா அண்ணா நம்மை விட்டுப் பிரிந்த துயரச் செய்தி நம்மை வந்தடைகிறது.

 

தமிழீழ தேசமும் உலகத் தமிழ் சமூகமும் சோகித்து நின்றது.

 

தலைவர் தேசத்தின் குரல் என பாலா அண்ணாவுக்கு மதிப்பளித்தார். இலண்டன் மாநகரில் தமிழீழ மக்கள் அலையலையாகத் திரண்டு வந்து மரியாதை செய்ய பாலா அண்ணாவின் இறுதி நிகழ்வு நடைபெற்றது.

 

வன்னியில் இருந்து தளபதிகளும் தலைவர்களும் செய்மதியால் இணைக்கப்பட்ட காணொளி ஊடாக பாலா அண்ணாவுக்கு இறுதி வணக்க உரை நிகழ்த்தினார்கள். அப்போது நோர்வேயின் அனைத்துலக மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த எரிக் சூல்கெய்ம் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு மரியாதை செய்தார். பாலா அண்ணை அனைத்துலக சமூகத்தின் மத்தியில் ஒரு பொய்யராக இருக்கவில்லை எனவும் இவர் தனது உரையின் போது தெரிவித்தார். நாம் முன்னர் பார்த்திராத வகையிலாக சிறப்புடன் பாலா அண்ணாவின் இறுதி நிகழ்வுகள் நடைபெற்று முடிவடைந்தன.

 

இவற்றையெல்லாம் இறுதிநிகழ்வில் கலந்து கொள்ள முடியாத கவலையுடன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் ஊடாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

***

 

பாலா அண்ணா எம்மை விட்டுப் பிரிந்து 6 வருடங்கள் ஆகிவிட்டன.

 

பாலா அண்ணா தொடர்பான நினைவுகள் அடிக்கடி மனதில் வந்து போகும். பாலா அண்ணா தொடர்பாக ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற விருப்பமும் மனதில் இருந்து வருகிறது..

 

இந்தப் பதிவு பாலா அண்ணாவின் நினைவுகளில் இருந்து எழுந்துவரும் ஒரு துளிப் பதிவு.

 

பாலா அண்ணாவினை நான் முதன் முதலில் 1987 இல் ஈழமுரசு பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியபோது சந்தித்திருக்கிறேன். இருந்த போதும் இது நமக்கிடையிலான பழக்கமாக வளரவில்லை. பின்னர் நான் நோர்வேக்கு புலம்பெயர்ந்த புதிதில் 1988 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் பாலா அண்ணா அடேல் அன்ரியுடன் வந்திருந்தார். அப்போதும் அவரைச் சந்தித்திருக்கிறேன். அப்போதும் பழக்கமாக அது வளர்ந்திருக்கவில்லை.

 

பாலா அண்ணாவுடன் நான் நெருங்கிப் பழகத் தொடங்கியது அவர் 1999 ஆம் ஆண்டு இலண்டனுக்கு வருகை தந்த பின்னர்தான்.

 

உண்மையில் பாலா அண்ணா இலண்டனுக்கு வருவதற்கு முன்னரே பாலா அண்ணா தொடர்பான ஒரு தொடர்பு ஏற்பட்டு விட்டது.

 

1998 ஆம் ஆண்டின் நடுப்பகுதி என்று நினைவு. அப்போது வெளிநாட்டுக் கிளைக் கட்டமைப்புகளின் மேலாண்மைப் பொறுப்பில் இருந்த கே.பி. அண்ணர் ஊடாகத் தகவல் ஒன்று கிடைக்கப் பெறுகிறது.

 

பாலா அண்ணாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. சிறுநீரகங்கள் பெரிதும் செயலிழந்து விட்டன. மாரடைப்பு வந்து விடுமோ என்ற அச்சமும் இருக்கிறது. அங்குள்ள வசதிகளை வைத்து அவரைப் பாதுகாப்பது சாத்தியம் இல்லை. 'தமிழ்நாட்டுக்கு கொண்டு வாருங்கள். நாங்கள் பொறுப்பேற்று மருத்துவ வசதி அளிக்கிறோம்' என நமது ஆதரவுத் தலைவர்கள் கூறுகிறார்கள். எந்தவித பாதுகாப்பு உத்திரவாதமுமின்றி பாலா அண்ணாவை தமிழ்நாட்டுக்கு அனுப்பத் தலைவருக்கு விருப்பம் இல்லை. தலைவர் மிகவும் கவலையாக இருக்கிறார். பாலா அண்ணாவினை எவ்வாறாவது காப்பாற்ற வேண்டும். என்ன செய்யலாம் என்ற ஆலோசனையினை வேண்டி நின்றது அச் செய்தி.

 

மனிதாபிமான அடிப்படையில் பாலா அண்ணாவை பொறுப்பேற்று மருத்துவவசதி அளிக்குமாறு நோர்வே அரசிடம் கோரலாம். உலகில் சமாதான முயற்சிகளில் ஈடுபடும் விருப்பம் நோர்வேக்கு இருப்பதால் அவர்கள் சம்மதிக்கவும்கூடும் - என நாம் கருத்துத் தெரிவித்தோம்.

 

தலைவரிடம் இதனைத் தெரிவித்து அவரது பதில் அறிந்து சொல்வதாக கே.பி. அண்ணர் தெரிவித்தார். தலைவரிடம் இருந்தும் சாதகமான பதில் வந்தது.

 

எமது தொடர்புகள் ஊடாக நோர்வே அரசிடம் பேசினோம். விடயத்தை சாதகமாகப் பரிசீலிப்பதாகச் சொன்னார்கள். விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து ஏதாவது நல்லெண்ணச் சமிஞ்சை காட்டினால் சிறிலங்கா அரசுடன் இது குறித்துக் கதைப்பது இலகுவாக இருக்கும் எனத் தெரிவித்தார்கள். நோர்வே அரசின் கருத்தை அமைப்புக்குத் தெரிவித்தோம்.

 

விடுதலைப்புலிகள் அமைப்பு தாம் போர்க் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த மூன்று சிறிலங்கா படையினரை நல்லெண்ண நடவடிக்கையாக விடுதலை செய்வதாக நோர்வேக்குத் தெரிவித்தது. விடுதலையும் செய்தது. நோர்வேயும் பாலா அண்ணா விடயத்தை சிறிலங்கா அரசுடன் பேசியது.

 

சிறிலங்கா அரசு உடனடியாக எதிர்மறையாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் புலிகள் சொல்வதை எப்படி நம்புவது என்ற கேள்வியை எழுப்பியது.

 

இதற்குத் தீர்வாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் நோர்வேஜிய வைத்தியர்கள் வன்னி சென்று பாலா அண்ணாவை பரிசோதிப்பது என முடிவாகியது. பரிசோதனையின் பின்னர் புலிகள் கூறியவை உண்மையானவை. பாலா அண்ணாவுக்கு மேலதிக மருத்துவச் சிகிச்சை தேவை. அதற்குரிய வசதிகள் வன்னியில் இல்லை என்பது தெளிவாகியது.

 

இதன் பின்னர் சிறிலங்கா அரசு பாலா அண்ணையினை சிகிச்சைக்காக நோர்வேக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் அளித்தது. நோர்வேயும் இதற்குரிய பாதுகாப்பான பயண ஏற்பாடுகள் குறித்த திட்டம் தொடர்பான செயற்பாடுகளில் இறங்கியது. பாலா அண்ணாவுக்கான மருத்துவ ஏற்பாட்டை செய்து முடிக்க வேண்டும் என்ற துடிப்படன் நாமும் தகவல்களை இரண்டு பக்கமும் பரிமாறிக் கொண்டிருந்தோம்.

 

விடயங்கள் முன்னேறிக் கொண்டிருக்கும்போது திடீரென சிறிலங்கா அரசிடம் இருந்து நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. தாம் மனிதாபிமான அடிப்படையில் பாலா அண்ணாவின் மருத்துவ ஏற்பாட்டுக்கு சம்மதித்துள்ளதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு விடுதலைப்புலிகளும் சிறிலங்கா அரசின் 5 மனிதாபிமான கோரிக்கைகளுக்கு சம்மதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

 

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சிறிலங்கா அரசின் நிர்வாகத்துக்கு விடுதலைப்புலிகள் இடையூறு எதும் ஏற்படுத்தக்கூடாது என்ற நிபந்தனை உட்பட 5 முழுமையான அரசியல் கோரிக்கைகள் நிபந்தனையாக சிறிலங்கா அரசால் முன்வைக்கப்பட்டிருந்தன.

 

தனது மருத்துவ ஏற்பாட்டுக்காக முன்வைக்கப்பட்ட இந்த 5 நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள பாலா அண்ணா மறுத்து விட்டார்.

 

சிங்களப் பேரினவாதம் கொடியது என எமக்குத் தெரியும். ஆனால் உயிருக்காகப் போராடும் ஒரு மனிதனின் உயிரை வைத்து அரசியல் பேரம் நடாத்தும் அளவுக்கு கொடியதாக இருக்கிறதே என்று கோபத்துடன் கூறியிருக்கிறார் தலைவர் பிரபாகரன்.

 

'இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. பாலா அண்ணாவின் சிகிச்சை முயற்சியினைக் கைவிடுங்கள். நாம் எமது முயற்சியில் பாலா அண்ணாவை வெளியில் கொண்டுவந்து சிகிச்சை அளிப்போம். அப்போது தகவல் தருகிறோம். வந்து சந்தியுங்கள்' - என நோர்வேக்கு புலிகள் அமைப்பு தெரிவித்தது.

 

இதனுடன் நோர்வேயின் இந்த முயற்சி முடிவுக்கு வந்தது.

 

இதன் பின்னர் பாலா அண்ணா விடுதலைப்புலிகள் அமைப்பின் கப்பல் பயணம் மூலம் தென்கிழக்காசிய நாடொன்றுக்கு வந்து சேரந்தார். அவரது சிறுநீரகம் ஒன்று மிகவும் பழுதடைந்திருந்த காரணத்தால் அங்கு வைத்து அது அகற்றப்பட்டது. மற்றைய சிறுசீரகமும் 30 வீதம் வரையிலான செயற்பாட்டைத்தான் கொண்டிருந்தது.

 

அங்கிருந்து நண்பர்கள் உதவியால் தனது காலாவதியாகியிருந்த பிரித்தானிய கடவுச்சீட்டினைப் புதுப்பித்துக் கொண்டு பாலா அண்ணா இலண்டன் வந்து சேர்ந்தார். நாமும் பாலா அண்ணாவைச் சந்தித்து அவருடன் இணைந்து செயற்படத் தொடங்கினோம். படிப்படியாக செயற்பாடுகளின் பாலா அண்ணாவுடன் புரிந்துணர்வும் நட்புறவும் ஏற்படுகிறது.

 

இதற்கிடையில் பாலா அண்ணா இலண்டன் வந்து சேர்ந்த தகவல் நோர்வேக்கும் தெரிவிக்கப்பட நோர்வே அரசின் பிரதிநிதி இலண்டன் வந்து பாலா அண்ணாவை சந்தித்தார்.

 

பாலா அண்ணாவின் சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சையினை நோர்வேயில் வைத்து மேற்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக நோர்வே தெரிவித்தது.

 

இலண்டனில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனைகளின் பின் நோர்வேயில் வைத்து சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சையினை மேற்கொள்வது என பாலா அண்ணா முடிவெடுக்கிறார்.

 

ஒரு நாள் நான் சுவிஸில் அமைப்புப் பணிகளில் நின்றபோது, பாலா அண்ணாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு குறிப்பிட்ட திகதியினைத் தெரிவித்து தனக்கு ஒஸ்லோவில் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை நடைபெற இருப்பதாகத் தெரிவித்தார்.

 

'இது பெரிய ஒப்பிறேசன். எனக்கு ஏதாவது நடந்தால் அன்ரி தனிச்சுப் போயிடுவா. இரண்டு கிழமை உன்னாலை ஒஸ்லோவிலை நிக்க முடியுமோ?' என பாலா அண்ணா கேட்டார்.

 

'ஓம் அண்ணை' என உடன் பதில் கூறினேன். ஏற்கனவே திட்டமிட்டிருந்த வேலைகளைப் பிற்போட்டு விட்டு உரிய திகதியில் ஒஸ்லோ சென்றேன். சத்திர சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அன்ரிக்கு உதவியாக நின்று என்னால் முடிந்த பணிவிடைகளை பாலா அண்ணாவுக்குச் செய்தேன்.

 

தந்தைக்கு மகன் ஆற்றும் கடமை போல் அதனை உணர்ந்தேன். மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

 

***

 

2002 ஆம் ஆண்டு புரிந்துணர்வு உடன்பாடு ஏற்பட்டு யுத்தநிறுத்தமும் பேச்சுவார்த்தைகளும் வருவதில் பாலா அண்ணாவின் பங்கு முக்கியமானது.

 

இச் சூழல் தொடர்பாக பாலா அண்ணாவின் புரிதல் தெளிவாக இருந்தது. இது வாய்ப்புக்களையும் ஆபத்துக்களையும் தாங்கி வரக்கூடியதொரு முயற்சி. இதனை வெற்றிகரமாகக் கையாண்டால் நமது போராட்டம் முன்னோக்கி நகரும். இல்லாவிடின் நாம் பெரும் அழிவைச் சந்திக்கவேண்டி வரும் என பாலா அண்ணா கருதினார்.

 

எக் காரணம் கொண்டும் இயக்கம் சண்டைப் பாதையினைத் தேர்ந்தெடுத்தால் உலகம் சிறிலங்கா அரசினை ஆதரிக்கும். இந் நிலை விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அழிவுக்கு கொண்டு வந்து விடும் என பாலா அண்ணா கருதினார்.

 

இதனால் சிங்களம் சமாதான முயற்சிகளைக் குழப்பும்வரை சண்டைப் பாதைக்குத் திரும்பாது சமாதானப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றே பாலா அண்ணா விரும்பினார்.

 

இதற்கான தந்திரோபாய உத்தியாக சுயநிர்ணய உரிமையினை உள்ளக சுயநிர்ணய உரிமை - வெளியக சுயநிர்ணய உரிமை எனப் பாகுபடுத்தப்படும் அணுகுமுறையினைப் பயன்படுத்துவது தொடர்பாக தலைவருடன் நீண்ட விவாதம் செய்து அதில் வெற்றியும் கண்டார்.

 

இது தலைவரின் 2002 ஆம் ஆண்டு மாவீரர் நாள் செய்தியில் வெளிப்பட்டது.

 

உள்ளக சுயநிர்ணயம் குறித்துப் பேச்சுக்களைத் தொடரும் போது ஒரு கட்டத்தில் சிங்களம் சமாதானப் பேச்சுக்களை குழப்பும். இதில் இருந்து அடுத்த கட்டத்துக்கு அனைத்துலச சமூகத்தின் ஆதரவை வென்று முன்னேற வாய்ப்புக்கள் கிடைக்கும் என பாலா அண்ணா கருதினார்.

 

இந்த அடிப்படையில் 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நோர்வேயில் நடைபெற்ற பேச்சுக்களில் சமஸ்டி முறையைப் பரிசீலிப்பது குறித்துப் பேசப்பட்டது.

 

சமஸ்டி சிங்களத்துக்கு ஒவ்வாத சொல். சிறிது காலம் சமஸ்டியினைப் பரிசீலனை செய்வது பற்றிப் பேசும் போது சிங்களப்பகுதிகளில் இதற்கெதிராக இனவாதிகள் வெகுண்டெழுந்து போராடுவார்கள். இந் நடைமுறையினை சற்றுப்பொறுமையுடன் கையாண்டால் நமக்குச் சாதகமான மாற்றங்களை அனைத்துலக சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தலாம் என பாலா அண்ணா கருதினார்.

 

ஆனால் சமஸ்டி என்பது சிங்களத்துக்கு மட்டுமல்ல, விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தந்திரோபாயக் காரணத்துக்காகக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத ஒவ்வாத சொல்லாக இருந்தது. உள்ளக சுயநிர்ணயம் என்று கூறியபோது ஏற்படாத குழப்பம் இதனை சமஸ்டி என்று குறிப்பிட்டவுடன் ஏற்பட்டிருக்கிறது.

 

'இயக்கம் தமிழீழத்தைக் கைவிட்டிட்டு சமஸ்டி பற்றி கதைக்கத் தொடங்கிட்டுது எண்டு போராளிகளுக்குள் குழப்பம் வந்திட்டுது எண்டு சொல்லுறாங்கள். இதுகள் தொடர்பாக அவைக்கு விளங்கப்படுத்த கெதியா வன்னிக்கு போக இருக்கிறன்' என்று 2003 இன் ஆரம்பத்தில் என்னுடன் பேசும்போது பாலா அண்ணா தெரிவித்தார்.

 

இச் சூழல் சமாதான முயற்சிகளை தான் விரும்பிய இலக்குக்கு நகர்த்திச் செல்வதில் பாலா அண்ணாவுக்கு சிரமத்தைக் கொடுத்தது.

 

இந்த சமாதான காலத்தில் இயக்கத்துக்கும் போராட்டத்துக்கும் சாதகமான விளைவுகளைப் பெறுவதற்கு பாலா அண்ணா எடுத்துக்கொண்ட இன்னொரு முயற்சி விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான இந்தியாவின் கோபத்தைத் தணிப்பதாகும். இந்தியாவின் கோபம் தணிக்கப்படாவிட்டால் அது அழிவுக்கு இட்டுச் செல்லும் என பாலா அண்ணா கருதினார்.

 

இந்த முயற்சியின் பாற்பட்டு இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பாலா அண்ணா செவ்வியொன்றை வழங்கியிருந்தார். இச் செவ்வியும் வன்னியில் அவ்வளவாக இரசிக்கப்படவில்லை.

 

இது குறித்து தமிழ்ச்செல்வன் 'இவை பாலா அண்ணாவின் தனிப்பட்ட கருத்துக்கள்'; எனப் பகிரங்கமாக கருத்துத் தெரிவிக்க அது பாலா அண்ணாவை வேதனைப்படுத்தியது.

 

'மார்த்தாண்டருக்கு (தலைவரை பாலா அண்ணா மார்த்தாண்டர் எனவும் அழைப்பார்) அருகிலை இருக்காமல் விசயங்களை நகர்த்திறது சரியான கஸ்டம். என்ரை உடல்நிலையாலை வன்னியிலை கனகாலம் நிக்க முடியாமல் இருக்கு' என பாலா அண்ணா கவலையுடன் என்னிடம் தெரிவித்ததுண்டு.

 

இதற்கிடையில் சிங்களமும் விடுதலைப்புலிகளை அரசியல் அரங்கிலும் இராணுவ அரங்கிலும் வெற்றிகொள்வதற்கான வியூகங்களை வகுத்துச் செயற்பட நிலைமைகள் முறுகி 2006 ஓகஸ்ட் மாதம் மீண்டும் போர் ஆரம்பித்து விட்டது.

 

மீண்டும் ஆரம்பித்த போர் இயக்கத்தையும் மக்களையும் பெரும் துன்பத்துக்கு ஆளாக்கப் போகிறது என பாலா அண்ணா அஞ்சினார்.

 

"நான் சாவதைப் பத்திக் கவலைப்படவில்லை. எமது மக்கள் படப்போகிற துன்பத்தைக் காணாமல் போய்ச் சேருகிறேன் என்பது ஒரு வகையில் ஆறுதல்" என பாலா அண்ணா நண்பர்களிடம் கூறியது இந்த அச்சத்தின் பாற்பட்டுத்தான் எழுந்திருக்கிறது.

 

மீண்டும் யுத்தம் ஆரம்பித்து 4 மாதங்களுக்குள் பாலா அண்ணா எம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.

 

பாலா அண்ணா உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் இயக்கத்தையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான வியூகங்களைத் தலைவருடன் விவாதித்து வகுத்து, நமக்கு நிகழ்ந்த அழிவில் இருந்து நம்மைப் பாதுகாத்திருப்பார் என்றே நான் நம்புகிறேன்.

 

இதனை எண்ணும்போது பாலா அண்ணாவின் இழப்பின் வலி மிகப் பெரிதாகிறது,

 

***

 

'விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தலைவர் பிரபாகரன் அப்பா. பாலா அண்ணா அம்மா. பிள்ளைகள் தங்கடை பிரச்சனைகளை அப்பாவை விட அம்மாவிட்டை இலகுவாகச் சொல்லுவினம். அம்மா அதை உரிய நேரம் பார்த்து அப்பாவிட்டை சொல்லுவா. நாங்களும் தலைவரிட்டை சொல்ல வேண்டிய கன விசயங்களை பாலா அண்ணையிட்டைதான் சொல்லுவம். அதை அவர் உரிய நேரத்திலை உரிய முறையிலை தலைவரிட்டைச் சொல்லுவார்' பாலா அண்ணாவின் மறைவின் பின்னர் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் யோகி இவ்வாறு தெரிவித்திருந்தார்.

 

விடுதலைப்புலிகள் குடும்பத்தில் பாலா அண்ணாவின் பாத்திரத்தினை இதனை விட அழகாக எவரும் கூறியிருக்க முடியாது.

 

ஒரு குறிப்புடன் இப் பதிவினை நிறைவு செய்கிறேன்.

 

2005 ஆண்டின் இறுதியில் பாலா அண்ணா எனக்கு அனுப்பி வைத்த பண்டிகை வாழ்த்து (Seasons greeting) அட்டையில், அவர் குறிப்பிட்டிருந்த வார்த்தைகள் பாலா அண்ணாவின் நிiனைவுகளின் இன்றும் எனது மனதை மிகவும் தொட்டுக் கொண்டிருக்கிறது.

 

'காலத்தால் சாகாத பாசத்துடன் பாலா அண்ணா' எனத் தனது வாழ்த்தை நிறைவு செய்திருந்தார்.

 

தான் காலம் ஆகப் போவதை முன்னுணர்ந்துதான் அப்படி எழுதினாரோ!

 

  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணா, கருதினார், சிந்தித்தார் என்று பிறர் சொல்ல முனைவதில் எனக்கு உடன்பாடில்லை. அவர் பற்றி சிந்தனையை இவர் புரிந்து கொண்டளவு, இயக்கம் புரியவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துகின்றது. கட்டுரையாளர் அந்த நோக்கத்தில் எழுதவில்லை என்றே நினைக்கின்றேன். ஆயினும் பாலா அண்ணா தான் சிந்திப்பதை, செயற்படுத்த முனைவதை எல்லாம் மற்றவர்களிடம் தொடர்ச்சியாகப் பகிர்ந்து கொண்டிருந்தாரா என்ன?

எம் இறுதிப் போரில் 3 பேரின் இழப்புக்கள் எம் போராட்டத்தில் ஏற்பட்ட பலமான அடிகள்.

பாலா அண்ணா இல்லாது போனதால், சர்வதேசத்தில் எம் அழிவு நடந்தபோது தடுக்க யாருமில்லாது போனது. தமிழ்ச் செல்வன் அண்ணாவும் எதிரியின் சதியில் சாவடைந்தபோது, கடைசியாக நாம் கொண்டிருந்த பெரும்பாலான தொடர்புகள் இல்லாது போயின. பிற்பாடு பால்ராஜ் அண்ணா... பால்ராஜ் அண்ணா இருக்கும்வரை எதிரியால் மடுவைத் தாண்ட முடியவில்லை. அவர் மறைந்து சரியாக ஒரு வருடத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக எல்லாம் முடிந்து போயின.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

சர்வே துரோகி விலை போயிட்டார்  கே.பி யின் ஆள்.    :)    பிரச்சனை முடிஞ்சுது :lol:

சர்வே துரோகி விலை போயிட்டார்  கே.பி யின் ஆள்.    :)    பிரச்சனை முடிஞ்சுது :lol:

 

 

1998 ஆம் ஆண்டின் நடுப்பகுதி என்று நினைவு. அப்போது வெளிநாட்டுக் கிளைக் கட்டமைப்புகளின் மேலாண்மைப் பொறுப்பில் இருந்த கே.பி. அண்ணர் ஊடாகத் தகவல் ஒன்று கிடைக்கப் பெறுகிறது.

 

 

 

 

 

 

உண்மையும் அது தான் கேபியை  அண்னர் எண்டு சொல்லி இருக்கார்.

அரசியல் வெற்றியே ஒரு இராணுவத்தின் இலக்கு. அந்த இலக்கில் ஒரு பகுதியை 2002இல் தமிழர் தரப்பு பெற்றது.

 

 

பாலா அண்ணாவின் அரசியல் சாதுரியம் வெளிப்பட்டதற்கு காரணமானது புலிகளின் இராணுவ வெற்றிகள்.
 

அந்த வெற்றிகள் தந்த பேச்சுவார்த்தைகள் இன்று எமது மக்கள் பிரச்னையை உலகம் முழுவதும் கூறி,

எமது மக்கள்  ஒரு நியாயமான நிரந்தர தீர்வை எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர்.


அதை பெற்றுக்கொடுக்க நாமும் கை கொடுப்பதே பாலா அண்ணாவிற்கு கொடுக்கும் மரியாதை.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.