Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத அடிப்படைவாதமும் ஏகாதிபத்தியமும் : மோகனராஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மத அடிப்படைவாதமும் ஏகாதிபத்தியமும் : மோகனராஜன்

 
 
 

us-imperialism-292x300.jpg

 

இன்றைய உலகில் மக்களை பிளவுபடுத்தி ஏமாற்றி சுரண்டி, துன்படுத்தி இலாபம் சேர்க்கும் இரண்டு அரசியல் கருத்தேற்புகளாக மத அடிப்படைவாதமும் ஏகாதிபத்தியமும் காணப்படுகின்றன. இவை ஒன்றை ஒன்று பயன்படுத்திக் கொண்டு ஒன்றின் மேல் மற்றொன்று பயணிக்கின்றன. இவை மக்களை அடையவும், மக்களுடைய புரட்சிகரமான எண்ணத்தை மழுங்கடிக்கவும் உலகமயமாதல் நவ-தாராண்மைவாதம், பின்நவீனத்துவம் எனும் மாயைகளின் ஊடாக மக்களை தம்வசப்படுத்தல், அடிமைத்தனமான எண்ணங்களையும் சுயநலத்தினையும் கொண்ட பண்பாட்டு சீரழிவான சமூகத்தை கட்டியெழுப்புதல் என்பவற்றில் வெற்றி பெற்றுள்ளன என்றே கூற வேண்டும்.

 

மதம் எங்கு சமூகத்திற்கு எதிராக செயற்பட தொடங்குகின்றதோ அங்கு மத அடிப்படைவாதம் தோன்றுகின்றது. வர்க்கம் தோன்ற முன் உள்ள சமூகத்தில் மனிதன் காட்டு மிராண்டியாக வாழ்ந்தான். பின் இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டான.; படிப்படியாக உற்பத்திகள் வளர்ச்சியடையாத நிலையில் மாய வித்தைகளை பாவிக்க தொடங்கி, மாயவித்தைகளை ஆளும் வர்க்கத்திற்காக பயன்படுத்த முற்பட்டான். மாயவித்தைகளைக் கொண்டு தனக்கும் தனது எசமானனான ஆளும் வர்க்கத்தினரும் தெய்வீக சக்தி இருப்பதாக காட்டி ஏமாற்றுகின்றனர் இந்த சந்தர்ப்பத்திலே. உழைக்கும் மக்கள் அடிமைப்படுத்தபடுகின்றோம் எனத் தெரியாமலே அதை ஏற்றுக்கொள்கின்றனர்.1

 

மிகப்பழங்குடி காட்டு மிராண்டிகளுக்கு கடவுள், வழிபாடு, பலியிடல் என ஒன்றுமே இருந்ததில்லை. எப்போது இயற்கைக்கும் மிருகங்களுக்கும் பயப்படத் தொடங்கினானோ அன்று வழிபடத் தொடங்கினான். இதனால் சூரியன், நெருப்பு, பாம்பு போன்ற பயங்கரமானவற்றை வழிபடத்தொடங்கினான்.

 

ஆதிகால நாடோடிகள் தமக்கு குறிப்பான கடவுளை கொண்டிருக்கவில்லை, நடுகல் வழிபாட்டிற்கும் வாய்ப்பில்லை. பின்பு வேளாண்மை செய்ய தொடங்கிய போது குறிப்பாக பெண்கள் இவற்றில் ஈடுபாடு கொண்டு தெய்வமேற்று ஆடுதல், பேய் மகளீர் என்பன தோன்றின இவற்றினை தமிழர் வரலாற்றிலும் ஒரே காலத்தில் எகிப்திய மொசபத்தேமிய, ஹரபா நாகரீகங்களிலும் காணலாம்.

 

மாய வித்தைகளினாலேயே சமூகத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலையும், தம்மை தலைவனாகவும் பிரகடனப்படுத்திக் கொண்டு மக்களை ஆளுகின்ற சந்தர்ப்பத்திலேயே தெய்வீக வழி யுரிமைக்கோட்பாடு போன்ற கோட்பாடுகள் முக்கியத்துவமடைகின்றன. இவைகள் கோட்பாடு வடிவம் பெற காலங்கள் எடுந்தன எனினும் ஆட்சிமுறை காணப்பட்டது. 2

 

குழுத்தலைவனாக ஒவ்வொரு குழுவையும் வழிப்படுத்தும் அதிகாரத்தினை மாயவித்தைகாரர்கள் பெற்றுக் கொண்டனர். பின்னர் வழிபாட்டு சடங்கு முறைகள் அமையலாயின. தலைவனின் செயல், சொல் என்பன கடவுளின் சித்தம் எனும் கருத்தேற்புகளை ஏற்படுத்தி ஏழைகளையும், உழவர்களையும் சுரண்டத்தொடங்கினான். நிலங்களும், செல்வமும், பெண்களும் கொடையாக பலியிடப்பட்டனர்.

 

காட்டு மிராண்டியான வாழ்விலிருந்து நாகரீக வாழ்க்கைக்கு முன்னேற்றமடைய அடியெடுத்து வைக்க வேளாண்மை காரணமாகியது. விவசாய நிலங்களிலும், ஆற்றங்கரையிகளிலும், குளக்கரைகளிலும் கடவுள் உருவாக்கிக்கொண்டனர். இவை பெண் தெய்வங்களாக இருந்தன. அவர்களுக்கு துணையாக ஆண் தெய்வங்கள் வந்தன. பெண்களே வேளாண்மையில் ஈடுபட்டனர்.

 

stone_age-300x187.jpg

 

ஆண்கள் வேட்டையாடுதல், மந்தை மேய்த்தல், எனும் தொழில்களை செய்ய பெண்டிர் தினைக்காத்தல், தேன், நெய் சேகரித்தல் எனும் தொழில்களை செய்தனர். பெண்களிடத்தே மாயவித்தைகள் பலிக்கத்துவங்கியதுடன் அதிகமாக இதற்குள் ஈர்க்கப்பட்டனர். இதனால் கன்னிப்பெண்கள் மாயவித்தைக்காரர்களுக்கு பலியிடப்பட்டனர். சொத்துக்களும், உணவுப்பொருட்களும் அவர்களுக்கு பெண்களாலேயே வழங்கப்பட்டன.

 

உற்பத்தி முறைமையின் வளர்ச்சி, சனத்தொகையின் வளர்ச்சி, போட்டி முறைமை, பாதுகாப்பின் தேவை போன்ற காரணங்களினால் உருவான போர்களிலே ஆண்களே தலைமை ஏற்றதுடன் அதிகமாக போர் செய்தனர் .

 

இதன் போது செல்வங்களையும், நிலங்களையும் சூரையாடியும,; சுரண்டியும் கைப்பற்றியும் கொண்டு செல்வந்தர்களாயினர். செல்வந்தர்களாகி தமது சமூக அந்தஸ்த்து மேலோங்கியதன் காரணமாக பெண் தெய்வங்கள் துணை தெய்வங்களாகவும் ஆண் தெய்வங்கள் பிரதான தலைமை தெய்வங்களாகவும் மாற தொடங்கின இவற்றினை மொசப்பத்தேமியா, சிந்துவெளி, மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகங்களிலும் முற்பட்ட நாகரீகங்களிலும் காணலாம்.

 

பின்னர் மக்கள் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தமது குழுவுக்கும் ஏற்ப வெவ்வேறு கடவுளர்களை உருவாக்கிக் கொண்டனர் இவர்கள் பலவந்த கோட்பாடு, தெய்வீக வழியுரிமை கோட்பாடு ரீதியில் பார்க்கப்பட்டனர். இயற்கைக்கு முன்னால் ஆதிகால மனிதனுக்கு முகம்கொடுக்கமுடியாமல் கைகொடுத்தது மாயவித்தை என்றால் நவீன சமூகத்தின் முன்னால் நாகரீக மனிதனுக்கு இருக்கும் பலவீனத்தின் வெளிபாடு சமயமாக தோன்றியது. மனித நாகரீகத்தில் மதம் ஆன்மீக இயக்கமாக தொடங்கி பின் அரசு நிறுவனமாக வளர்த்து ஆதிக்கத்தினை நிலைநிறுத்தியுள்ளது.

 

வணிகத்தின் வளர்ச்சியானது சுதந்திரமான வணிகத்தினை மேற்கொள்ள முனைந்தது. ஆயினும் மதம் இதற்கு தடையாக அமைந்தது. எனவே மனசாட்சியினடிப்படையில் நடக்கும் உரிமையினை வணிகர்கள் கோரினர்.

அவர்கள் மதத்தின் மீது தமது தாக்குதலை மேற்கொண்டனர். சமய குருக்களின் ஊழல் ஆடம்பர வாழ்க்கை முறையினை அம்பலப்படுத்தினர். இதனால் மதத்தினருக்கும் வணிகத்தினருக்கும் சண்டை மூண்டது. ஐரோப்பியா முழுவதும் கிளர்ச்சிகள் வெடித்தன. வணிகர்களுக்கு சார்பாக அரசு வந்ததால் அரசுக்கும் சமயத்தினருக்கும் இடையிலான போட்டியாக வளர்ந்தது இது உழவர்களுக்கும் ஏழைகளுக்கும் எதிரான ஒடுக்கு முறையாக மாறியது.

 

தாராண்மைவாதம் வர்த்தக ஏகபோகம் கட்டற்ற வியாபாரம் எனும் கருத்தேற்புகள் மக்கள் மத்தியில் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்தமையால் கிறிஸ்தவ மத ஆட்சி தூக்கி எறியப்பட்டது.

 

தேவாலயத்தின் செயற்பாட்டினை பாராளுமன்றமும், குருக்களின் அதிகாரம் அரச அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் சென்றது. இவ்வாறு ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவ சாம்ராஜ்ஜியத்தில் இருந்து விலகி சென்றதனால் பாப்பரசர் பைபிள் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்தார் அதன்படி செயற்பட உறுதி பூண்டனர்.

 

அதை “Integrisme” என்றனர். அது ஐரோப்பாவை கிறிஸ்தவ மயமாக்குதல் எனும் குறிக்கோளை கொண்டு இயங்கத் தொடங்கியது. புரட்டஸ்தாந்துக்காரர் பைபிளின் படி வாழ்வதே கிறிஸ்தவனின் கடமை எனவே அதை மீட்க “the fundamentalist” இயக்கம் 1910-1915 எனும் பெயரில் துண்டுப்பிரசுர இயக்கத்தினை தொடங்கினர். இந்த புரட்டஸ்தாந்து கடும் போக்காளர்களை ‘அடிப்படைவாதிகள்’ என அடையாளப்படுத்தினர். 3

 

அடிப்படை வாதத்தின் தோற்றமாக நாம் கிறிஸ்தவ அடிப்படை வாதிகளை சுட்டிகாட்டினாலும், வரலாற்றில் முஸ்லீம் மக்களின் மதச்சிந்தனைகள் அடிப்படைவாதத்தினை செயற்படுத்தி வந்துள்ளது. முகம்மது நபி ஓர் சீர்திருத்தவாதியாக இருந்து அல்லா ஒருவரை தவிர ஏனைய கடவுளர் இல்லை என ஒதுக்கிய போது புனிதப்போரை மேற்கொண்டப்போது அடிப்படைவாதம் தோன்றியது.

 

ஆக எப்போதும் ஒரு மதம் இன்னொரு மதத்தினை எதிர்த்து போர்குணமுடையதாக, வக்கிரமாக வெறித்தனமாக மாறுகின்றதோ? அப்போது மத அடிப்படைவாதம் தோன்றியது.

 

ஹெகலின் சீடரான Bewer Park மதம் பற்றி கூறும் போது ‘மதம் மனிதனை அவனிடமிருந்து வேறுபடுத்தி வருகின்றது மனிதன் மதத்தின் மூலம் கடவுளை தனது எதிரியின் உருவத்தில் தன்முன்னே வைத்துகொள்கின்றான். கடவுள் என்பவர் மனிதனல்ல மனிதன் என்பவன் கடவுளல்ல கடவுளும் மனிதனும் இரு வேறு எல்லைகளாவர் கடவுள் முழுமையாக நிறைவுக்கும் சின்னமானால் மனிதன் குறைகளின் மொத்த வடிவமாவான்’ என்கிறார்.

 

தோழர் கார்ல் மார்க்ஸ் ‘மதம் இதயமற்ற உலகின் எண்ணம்’ எனவும் ‘மதம் ஒரு பிரம்மை’ எனவும் ‘மனிதன் மதத்தினைப் படைக்கின்றான் மதம் மனிதனைப் படைப்பதில்லை இந்த சமுதாயமும் அரசும் மதத்தை உற்பத்தி செய்கின்றன. ஆகவே மதத்திற்கு எதிராகப் போராடுவதானது மறைமுகமாக ஆன்மீக ஒளிக்கதிராக மத்தினைப் பெற்றுள்ள உலகத்திறகு எதிராக போராடுவதாகும்’ எனக் கூறுகின்றார்.

 

மதத்தினை மனிதனே உருவாக்குகின்றான் என்பதற்கு கிருஸ்தவ மதத்தின் புதிய பிரிவுகளின் தோற்றத்தினையும் இந்து மதத்தின் புதிய பிரிவுகளையும் உதாரணமாக குறிப்பிடலாம்.

 

மத அடிப்படை வாதம் ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சிநிரல் ஏகாதிபத்தியம் கடவுள் மூடநம்பிக்கைகளின் மீது ஆதாரப்பட்டுள்ளது. 20ம் நூற்றாண்டிலிருந்து உலகை அச்சுறுத்தும் விடயமாக இஸ்லாமிய அடிப்படைவாதம் அல்லது இஸ்லாமிசம் வளர்ந்து வந்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தினது தோற்றுவாயாக எகிப்தினையும், சவுதி அரேபியாவையும் கூறுகின்றோம் எகிப்தில் முகமது பின் அப்துல் வஹாபின் உலகம் பூராக புனித யாத்திரையின் பின்னர் குர்ஆனை முழுமையாக ஏற்றுக் கொண்டதுடன் முஸ்லீம்களின் ஒரு சில பிரிவினர் வெவ்வேறு வழிபாட்டு வழக்கததினை மறுத்ததுடன் முகமது நபியின் கல்லறை வழிபாட்டை எதிர்த்து அதை உடைத்து எறிந்தார் .

 

Osama-bin-Laden-300x211.jpg

 

அவர் இஸ்லாமிய வர்க்க ஆயுதக்குழுவை அமைத்தனர் பிற நாடுகளுக்கும எகிப்திய அரசின் உதவியுடன் தமது அமைப்பினை வளர்த்தார் முஜாகிதீன் குழு, பின்லேடனின் அல்குவைதா, சூடானின் துரபி மத அடிப்படைவாத அமைப்பு என்பவை எகிப்திய முஸ்லீம் சகோதரத்துவ இயக்கத்தின் அகண்ட இஸ்லாமிய இராச்சியக் கனவின் கூலிப்படைகள் அல்லது பயங்கரவாத அமைப்புக்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வியக்கம் ஹசன் அல் பண்ணா எனும் ஆசிரியரால் 1928ல் உருவாக்கப்பட்டது. கிறிஸ்துவுக்கு எதிரான கலவரங்களை ஏவிவிட்டு தமது நாசிச பாதையை இஸ்லாம் சகோதரத்துவ இயக்கம் ஆரம்பித்தது. ஹசன் அல் பன்னாவின் மரணத்தின் பின்பு ஜிகாத் அல் இஸ்லாமி- பாலஸ்தீனம், தக்பீர் வா ஹஜ்ரா என இரண்டாக பிளவுற்றதுடன் தமது செயற்பாடுகளை உலக இஸ்லாமிய இராச்சியத்தை நோக்கி விரிவுபடுத்தியது.

 

சவுதி அரேபியா பல விடயங்களின் கருவறை அங்கே வணிகர்களிடமிருந்து தோன்றிய மதமாகவே இஸ்லாமிய மதத்தினை அடையாளப்படுத்துகின்றனர். சந்தைப்படுத்தல் வணிகம் எனபனவற்றுக்கு இஸ்லாம் தடையற்றது. இஸ்லாமிய இறைத்தூதர் முகமது நபி சந்தையின் விலை நிர்ணயம், கேள்வியை பொருத்து விலையேற்றம் எனும் பொருளாதார கொள்கையை கூறியுள்ளார்.

 

மிக முக்கியமாக இஸ்லாம் முதலாளித்துவத்தினை தன்னுள் அதிகமாக ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் ஏகாதிபத்திய தலைமை அமெரிக்காவிடமும் மேற்கு நாடுகளிடம் சென்றதை ஏற்றுக் கொள்ள முடியாமல் செயற்படுவதையும் நாம் அவதானிக்கலாம். கிறிஸ்தவ தேவாலயங்கள் நில பிரபுத்துவத்தினையும், இஸ்லாமிய பொருளாதாரத்தையும், பின்பற்றுகின்றன. எதிர்கால இஸ்லாமிய இராச்சியமும் கூட வர்க்க சமூகமாக அரச குடும்பம் மேட்டுக்குடி பிரபுத்துவம், மது மாது என பொழுதை கழித்து மக்களை சுரண்டும் அமைப்பாகவே இருக்கப் போகின்றது.4.  இது ஆபத்தானது.

 

பாகிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேசியா, சிரியா, சவுதி அரேபியா, சூடான் உட்பட நாடுகள் அனைத்துமே மதஅடிப்படை வாதத்துள் மூழ்கியுள்ளன. இந்தியா-பாகிஸ்தான் எனபன இதனை நன்கு பயன்படுத்துகின்றன. Shia- Sunny முஸ்லிம்களுக்கிடையிலேயும் வெளியேயும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பாகிஸ்தானில் நன்கு வளர்க்கப்படுகின்றது. காஸ்மீர் பிரச்சினை, 2008 மும்பை தாக்குதல், குஜராத் ரயில் எரிப்பு சிவசேனை இயக்கம் பால் தாக்கரேயின் மரண சடங்குக்கான மக்கள் கூட்டம் என்பன இந்துத்துவத்தின் வெறியினை சுட்டிக்காட்டுகின்றது.

 

பாரதிய சனதாகட்சி வெறுமனே மதஅடிப்படைவாதத்தினை மையமாக கொண்டு அரசியல் நடாத்தும் கட்சியாக காணப்படுகன்றது. பாபர் மசூதி உடைப்பும் அதன் பின்பு உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பும் மதமும் இந்திய அரசியலில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பதை உணரலாம். நீதிமன்றங்கள் என்றுமே மக்களுக்கானது அல்ல என்பதை பாபர் மசூதியின் தீர்ப்பு எமக்கு உணர்த்துகின்றது. இது போலவே இந்திய அரசியலில் சந்திரா சாமி, சாய்பாபா, குருஜி என்போரும் தமது மத அடிப்படை வாதத்தினால் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.

 

nithi-300x258.jpg

 

நித்தியாநந்தா என்னதான் பிழை செய்தாலும் மக்கள் பிழையாக ஏற்பதாய் இல்லை. இது மத அடிப்படை வாதம் மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் பிரதிபலிப்பு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு என்பவற்றில் வெளிப்படுத்துகின்றது.


இலங்கையில் பௌத்த அடிப்படை வாதம் அஸ்கிரிய, மகாநாயக்க தேரர்களாலும், ஜாதிகஎல உறுமய கட்சியினாலும், அரசாங்க அமைச்சர்களாலும் நன்கு வளர்க்கப்பட்டுள்ளது. பௌத்த அடிப்படை வாதம் இலங்கையின் தேசிய இயக்கத்தின் தோற்றத்துடனே தோன்றியது என்றாலும் அதன் உச்சக் கட்டம் புனித பூமி பெயரால் நிலம் சுவீகரிப்பு, தமிழ் முஸ்லிம் சிறுபான்மையினர் பகுதிகள் பௌத்தமதமாக்கத்தினால் பிரதிபலிக்கின்றது, Karen Armstrong அடிப்படைவாதத்திற்கு சனநாயகம், பன்மைத்துவம், மத சகிப்புத்தன்மை, சமத்துவமான சமய கொள்கை, சமாதானம், பேச்சுசுதந்திரம், தனியரசுபற்றி பேசுவதற்கு நேரம் இல்லை’ என்கிறார்.

 

மத அடிப்படைவாதிகள் தனியான ஒரு செயற்திட்ட முறைமையுடன் செயற்படுகின்றனர். ஏழைகள், ஊனமுற்றோர், முகாம்களில் தங்கி வாழ்கையை வெறுத்தோர், வேலையில்லா இளைஞர், யுவதி, நாடற்றோர் என பிரச்சினையுடையோரையே மதஅடிப்படைவாதிகள் பயன்படுத்தி தூண்டுகின்றார்கள் eg: பின்லேடன் 10 வயதில் தன் தந்தையை இழந்தவர், இட்லர் ஒரு தோற்றுப்போன ஓவியர் எனவே இது போலவே எல்லா மதங்களும் செயற்படுகின்றனர்.

 

 

முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாதல்

 

தொழிற்புரட்சி, அரசியல் வளர்ச்சியின் பிரதிபலனாக அதிகரித்த உற்பத்தி சமனற்ற வணியம் முதலாளிகளுக்கிடையிலான போட்டி, அதன்பயனாக நட்டம் அதிக உற்பத்தியினால் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இவற்றுக்கு தீர்வாக முதலாளிகள் ஒன்றிணைந்து கார்ட்டல்களை கொண்டுவந்தனர் எல்லாவிதமான உற்பத்தி, சேவைதுறைகளை மட்டுப்படுத்தப்பட்ட வாணிப்பத்திற்க்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். எனவே ஏகபோனமான நிலைமை தோன்றி பெரும் முதலாளித்துவம் சிறு உற்பத்தியாளர், தரகர் என்றோரை நசுக்கியது. மூல வளம், சந்தை என்பன கார்ட்டல்களின் கட்டுப்பாட்டுக்குள் வர வங்கிகளிலும் பக்கபலமாய் இருந்தன. இதனால் மூலதனக்கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டது வங்கிகள் பெருகி உற்பத்தியும் மூல வளமும், சந்தையும் ஓரிடத்திலிருந்து குவிந்தது. விலை நிர்ணயம் உட்பட நுகர்வையும் ஏகபோகமாக தீர்மானிக்கும் நிலையை ஏற்படுத்தியது.

 

முதலாளித்துவ பல்தேசிய கம்பனிகளும் trust நிதிக் கம்பனிகள், வங்கிகள், NGO உலக நாடுகளிலிருந்து வளங்களையும் உற்பத்தி உழைப்பிலிருந்து நிதியினையும் சில நாடுகள் மாத்திரமே சம்பாதித்து ஆதிக்கம் செலுத்தின. ஓரிடத்தில் நிதி குவிந்தது. இதனால் நிதி ஏற்றுமதியும் சுரண்டலும் எங்கும் அதிகரித்து, வேலையில்லா பிரச்சினையும், பசி, பட்டினி துஸ்பிரயோகம் விபச்சாரம், அறிவுச்சுரண்டல், குற்றச்செயல்கள் அதிகரிப்பு, போர் என்பன அதிகரித்துள்ளன. ஏகாதிபத்தியம் உலகின் எல்லா மூலை முடுக்கிலும் ஏகத்துவ உலகமயமாதல், பின்நவீனத்துவம் நவ-தாராண்மைவாதம், ஊடாக சென்று கலாசார, அரசியல், கல்வி ரீதியாக சீரழிவுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

 

ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான போட்டி உலகை தமது வர்த்தக நிலையமாக்க முனைந்தது. இதனால் அரசுகளை விட வர்த்தக நிறுவனங்கள் முக்கியத்துவமடைந்தன. எதிராக செயற்ப்படும் நிறுவனங்களை அடக்க அரசு படைகளின் உதவியை பெறத்தொடங்கின.6,7. இதனால் நவ காலனியாக்கத்தின் தாக்கம் மக்களுக்கு உணரத்தொடங்கியது. இதனை மறைக்க உலகமயமாதல் செயற்பட்டது ஏகாதிபத்தியம் அரசை நிர்வகித்தது. உலக அரசுகளை நிர்வகிக்க உலக நிதி நிறுவனங்கள் N.G.O என்பவற்றை உருவாக்கியது. அவை உலகின் இயக்கத்தினை தீர்மானித்தன.

 

கற்பனா வர்த்தகம், அதிக முதலீடுகளை ஒரு துறையில் இடச்செய்து தோல்வியடைந்தாலும் உலகம் அதை பின்பற்றயே செய்தது. நூற்றுக்கணக்கான வங்கிகள் பிழையான பொருளாதாரக் கோட்பாட்டினால் மூடப்பட்டன. எனினும் சலுகைகளயும் சில சுகங்களையும் தொழிலாளர்களுக்கு வழங்கி தமக்கு எதிரான போராட்டங்களை அவை மடக்குகின்றன. உலகபாட்டாளி வர்க்கத்தை பல நுட்பங்களின் அடிப்படையில் பிளவுப்படுத்துகின்றன. இதற்கு பதவி சாதி, சலுகை, மது , மாது, என பல வித நுட்ப்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்நுட்ப்பங்களில் மிகவும் முக்கியமான பாத்திரத்தினை மதமும் மத அடிப்படை வாதமும் பெற்றுள்ளது.

 

மத அடிப்படைவாதம் பாட்டாளி வர்க்க ஒற்றுமை, போராட்டம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பவற்றை உருவாக்குவதற்கான பாதையை அமைக்க பாரிய தடையாய் உள்ளது. கிறிஸ்தவம், முஸ்லிம், இந்து, பௌத்தம், இன்னும் பல மதங்கள் ஒவ்வொன்றும் தன்மை தனித்துவமாக கருதுவதன் காரணமாக இன்னொரு சமய பிரிவினருக்கும் எதிராக செயற்பட ஆரம்பிக்கினறன.

 

இங்கே மத அடிப்படைவாதம் பயங்கரவாதமாக மாறுகின்றது. கிறிஸ்தவ மத மிசனரிகள் உலகம் முழுதும் பல்லாயிரக்கணக்காக செயற்படுகின்றன. இவை மக்களை மதத்தின் பால் ஈர்த்து பிரச்சினைகள் யாவும் இயேசுவிடம் முறையிடப்பட வேண்டியவை. தீர்வுகள் அவனாலேயே கிட்டும் என பிழையாக வழிநடத்துகின்றனர் மக்களை அநீதிக்கு எதிராக வேறுபாடாகவும் எதிரிகளை தண்டிக்கவும், அடிக்கவும் இடமளிக்காது வழிபாடு செய்தல், பைபிள் வாசித்து. வேண்டுதல் செய்தல் எனும் முறைகளை வளர்த்துள்ளன. உதாரணமாக ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நடக்கும் அநீதிக்கு எதிரான செயற்பாடு தேவாலய ஆராதனை செய்தல் அல்லது இறைவனிடம் முறையிடுவோம் என்பதே பாதிரிமார்களால் செயற்படுத்தப்படுகின்றதேயொழிய மக்களின் போராட்ட குணாம்சங்கள் இல்லாதொளிக்கினறன.

 

வடக்கில் மக்கள் பிரச்சினைகளை பயன்படுத்தி மிசனரிகள் பல்லாயிரக்கணக்கானோரை மதம் மாற்றியதோடு அறிக்கைகள் விடுத்துக் கொண்டு மக்களை தமது பால் ஈர்த்துக் கொண்டுள்ளது அதற்கெதிராக மக்களை சிந்திக்க விடுவதில்லை.

 

இஸ்லாமிய அடிப்படைவாதம். மக்களை மதத்தின் பேரால் இயங்க செய்கின்றதேயொழிய மூட நம்பிக்கைகள், அடிமைதன்மை, ஏமாற்றம், சுரண்டல், பெண்அடக்குமுறைகள், பாவித்து சுகபோகங்களை தலைமை வகிப்போருக்கு வழங்குகின்றது. இது எப்போது ஒரு வர்க்க போராட்டத்திற்கு இட்டுச் செல்லாது என்பதுடன் வர்க்கங்களின் ஐக்கியம் இஸ்லாமிய சமயத்தினையும், மக்களையும், அவர்களின் பொருளாதாரத்தினையும் பாதிக்கும் எனும் கண்னோட்டத்திலே ஒரு சிலரால் சுயநலத்திற்கு எல்லோரையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைக்கவே முனைகின்றனர்.

 

இந்துத்துவ மத அடிப்படைவாதம் இன்று பல கிளை நிறுவனங்களின் தோற்றத்துடன் தீவிரமடைந்துள்ளது இது ஆன்மீகம், யோகா என்ற நிலையில் வளர்ச்சியடைகிறது. பெரும்முதலாளித்துவத்தினை வளர்க்கின்றது. இந்துமதமே மேட்டுக்குடி சித்தாந்த பின்னணியில் வளர்க்கப்பட்டுள்ளது என்றாலும் அம்மா பகவான். நித்தியாநந்தா சுவாமி சாய்பாவா, குருஜி, பிரம்ம குமாரிகள் இன்னும் நூற்றுக்கணக்கான அமைப்புகள் மக்களை அசடுகளாகவும் உணர்வுகள் அற்ற மந்தைகளாகவும் மாற்றவே முனைகின்றனர் அதில் பல இடங்களில் வெற்றியும் கண்டுள்ளனர். இன்று பல வெற்றியாளர்கள் கற்றோரும் இதில் ஈடுபடுவதும் குறிப்பிடத்ததக்கது. கற்றோரும் தமது வர்க்க நிலையில் இருந்து நழுவி எதிர்த்தரப்பிற்கு செல்வதே உகந்தது என்ற மாயையும் இந்த மதங்களே தோற்றுவிக்கின்றன.

 

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது அரசியல் சுயநலத்துக்காக நூற்றுக்கணக்கான யாத்திரிகளை கோத்ரா இரயிலில் வைத்து எரித்தார். நீதிமன்றம் அவரின் சம்பந்தம் எதும் இல்லை என கூறியது. அரசாங்கமும் நீதிமன்றமும் இவ்வாறு மத அடிப்படைவாதத்திற்கு சார்பாக செற்படுமாயின் மக்கள் நீதியை பெற முடியாது. மத அடிப்படைவாதம் அரசையும் மக்களையும் தன்பால் இழுத்துக்கொண்டிருக்கையில் ஏகாதிபத்தியமும் மக்களை தம்வசப்படுத்துவதற்காக மதஅடிப்படைவாதத்தினை தமது ஆயுதமாக ஆக்கிக்கொண்டுள்ளது. இது ஏகாதிபத்தியம் தமது எல்லையை மேலும் விஸ்த்தரிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.

 

‘உலகமயமாதல் என்பது வேகமான ஏகாதிபத்தியம்’ என அமெரிக்கா கம்யூனிசக்கட்சி தலைவர்களில் ஒருவரான Javis Tyner கூறுவார் . இங்கே நாம் cultural relativism or moral relativism என்பவற்றை ஏற்க முடியாது. இது ஒரு பிழையான இணக்கப்பாடாக முதலாளித்துவ பாதையில் எம்மை இட்டுச்செல்லும். எனவே தான் எவ்வாறு மத அடிப்படை வாதத்தினையும் மூல வளமும், சந்தையும் ஏகாதிபத்தியத்தினையும் எதிர்க்க போகின்றோம், இதுபற்றி மக்களுக்கு அறிவூட்டப்போகின்றோம், என்பது முக்கியமான சவாலாக காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்டவை தனியான ஒரு கருத்தேற்புகளாக வளர்த்திருந்தாலும் நிலையற்றது என்பதையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எதிர்ப்பு மத அடிப்படை வாதத்தின் எதிர்ப்பாக நிச்சயமாக அமையவேண்டும் என்பதையும் நினைவூட்ட வேண்டும். அது நிச்சயமாக லெனின் சொன்ன பாதையில்தான் சாத்தியமாகும்.

 

இன்று சமயமும் அரசும் ஒன்றாய் கலந்துள்ளது. இது தமது ஆளும் வர்க்க கருத்தோற்புகளை. மாயைகளை மக்கள் மத்தியில் விரிவாக விதைக்க ஊடகங்களை பயன்படுத்துகின்றன. (உதாரணமாக அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தானில் முஸ்லிம் தொலைகாட்சிகள்).

 

இது போலவே ஏகாதிபத்தியம் தமது இலக்கினை அடைவதற்காக மத அடிப்படைவாதத்தின் பயங்கரவாதத்தினை தூண்டிவிடும் Innocence of Muslim திரைப்பட ஒரு அமெரிக்க பாதிரியாரான டெரி ஜோன்ஸ் எனும் குரானை 2011 மார்ச் மாதம் எரித்த அடிப்படை வாதியினுடைய உருவாக்கப்படுவதற்கு இயக்குனர் பெகிலியுடன் சேர்ந்து சில யூத அமைப்புகளும் உதவி செய்துள்ளன.

இது ஏகாதிபத்தியத்தில் நிகழ்ச்சி நிரல் உலகெங்கும் கலவரங்களும், எல்லை போராட்டங்களும், பங்களாதேசில் பௌத்த விகாரைகள் உடைக்கப்பட்டமையும் மத அடிப்படைவாதத்தினைதூண்டிவிட்டது ஏகாதிபத்தியத்தியம்.


அந்த இடத்தினை பிடிக்க நடத்தும் தந்திரோபாயம். ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், என எங்கும் தமது கால்களை பதிக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் மதஅடிப்படைவாத ஆயுதத்தினை சரியாக பாவிக்கின்றன. மதஅடிப்படைவாதிகள் எல்லாம் செல்வந்தர்களாகவும், பிரபுக்களாகவும், அரசாங்கத்தின் ஆதரவாளர்களாகவுமேயுள்ளனர். ஆயின் இந்துவும், முஸ்லீமும், சியாவும் சன்னியும் மோதிக்கொள்கின்றனர்.

 

Facebook-Addiction.jpg

 

அதற்கான ஆயுதங்களை ஏகாதிபத்திய நாடுகள் விற்பனை செய்கின்றன. முஸ்லிம் நாடுகள் பலவற்றின் நேச நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளே. இஸ்லாமிய பொருளாதார எல்லைக்குள் அமெரிக்க ஏகாதிபத்திய கலாசாரம், கல்வி, தொழிற்நுட்பம் நுழைவதற்கு சந்தைப்போட்டியே காரணம் இன்றைய முஸ்லிம்கள் மேற்கு நாடுகள், அமெரிக்க உடைகள், காலணிகள் phone, facebook, google என ஈர்க்கப்பட்டுள்ளனர்.

 

முதாலாளித்துவம் மின்னணுவியல், உயிரியல், இணையத்தளங்கள் காட்டு பிரயோத்தின் காரணமாக ஊடகங்களும், மேற்கு நாடுகளும் முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசம் இல்லை மத அடிப்படை வாதமே எனும் கருத்தேற்பினை ஏற்படுத்தியுள்ளன எனினும் முதலாளித்துவம் மிகவும் இலாபமாக மதஅடிப்படை வாதத்தினை பயன்படுத்துகின்றது என்பதே அவதானிக்கதக்கது. இதுவே மத்தியகிழக்கு நாடுகளுக்கு எதிரான போர், மதம் மீதான தாக்குதல், சீண்டல் செய்வதன் நோக்கமாகும் ஆக மக்களை மடையர்களாக்கி தாம் சாதிக்கவே இந்த உத்தியை ஏகாதிபத்தியம் பிரயோகிக்கின்றது.

 

தகவல் ஏகபோகம் ஏகாதிபதியிடம் உள்ளது பிழையான தகவலை சரியாக திரிக்கவும், திணிக்கவும் மாற்றமும் அது சாதகமான செயற்பாடுகளை செய்யும் வல்லமையுடையது இதை பகுத்தறிவில் மார்சிய விஞ்ஞான கண்ணோட்டத்தில் நோக்க வேண்டியது அவசியம்.

 

ஏகாதிபத்தியம், மத அடிப்படைவாதங்களுக்கு எதிராக நாம் பகிரங்கமான எதிர்ப்பினைக் காட்ட வேண்டும் ipad, Green card, Coca Cola, tobacco, டெனிம் ,பாலியல் படங்கள, cartoon, cinema என அனைத்தையும் பகிஸ்கரிக்கவும் பல்வேறு வகையில் நம்மை சூழ்ந்தகொள்ளும் தீய பழக்க வழக்கங்கள் தீய எண்ணங்கள், போதை, ஏமாற்றங்களை மார்க்சிய நோக்கம் கண்டுகொள்ளவும், மறுக்கவும் தோற்கடிக்கவும். பழக வேண்டும் நாகரிகம் என்பது அடுத்தவனை பின்பற்றி சீரழிவதன்று.

 

மேற்குலக உடை, உடல், அலங்காரங்கள் யாவற்றையும் ஏற்க வேண்டும் அவர்கள் போல வாழவும், வீணாக சூதாட்டம், மது, மாது என நேரத்தினை கழிக்கவோ மூடநம்பிக்கைகளில் மூழ்கிவிடவோக் கூடாது. இதற்கு நாம் உலகமயமாதல் உத்திகளையும், விளைவுகளையும், விளங்கிக் கொள்ள வேண்டும். இதற்காக புதிய பண்பாடுகளை நாம் வளர்க்கவும், பின்பற்றவும் வேண்டும் கூட்டு உழைப்பு, கலந்துரையாடல், வாசிப்பு, விவாதித்து மார்கிய நூல்களை கற்றல், நூலகங்களை அமைத்து பயன்பெறுதல் மக்கள் விழிப்புனர்வூட்டல், ஏகாதிபத்யத்தின் இணையத்தளங்களை மறுத்தும் போராடுதல் என்பவற்றை மேற்கொள்ளலாம்.

 

வெறுமனே மேற்குலகில் தங்கியிருக்காமல், நாட்டினை வெளிநாட்டவர் உல்லாச விடுதிகளாக்காமல், சுய உற்பத்தியை மேம்படுத்தல் எல்லாத்துறைகளையும் வளர்த்தல் பல்தேசிய கம்பனி 10 அரசு 10 ஆயுதப்படை எனும் முச்சக்தியை உடைத்தல், புதிய பண்பாட்டு இடங்களை உருவாக்கி பண்பாட்டினை கற்பித்தல், சிறுவர்களை வழிப்படுத்தல் துஸ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்தும், சத்தியூட்டல் நம்பிக்கையூட்டல், சிறு சோசலிச குழுக்கள், கிராமங்களை உருவாக்குதல் புரட்சிகரமான பாட்டாளி வர்க்கங்களை கட்டியெழுப்புதல், மார்க்சிய வழியில் போராடுதல் அதற்காக வியூகங்களை உருவாக்குதல் என்பவற்றால் ஏகாதிபத்தியத்தையும், மத அடிப்படைவாதத்தினையும் நாம் வெற்றி காணலாம்.

 

 

உதவியவை :


1. சமயம் பற்றி- Gordge Thompson ப 16- 17 தமிழாக்கம் நேத்ரா விடியல் பதிப்பகம்
2. பண்டைய தமிழர் வாழ்வும் வழிபாடும்- பேரா. க.கைலாசபதி
3. மதஅடிப்படைவாதம் ஒரு மேலைத்தேய இறக்குமதி http//seasonsnidur.wordpress.com
4. இஸ்லாம் மத அரசியலின் தோற்றம் – கலையகம் http//kalai.blogspot.com
5. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்- லெனின் நூல் 4 பக் 37- 227
6. கடவுள் கற்பனையே – பரட்சிகர மனித வரலாறு யு.ளு.மு பக் 78- 87 2001
7. விஞ்ஞான லோகாயத வாதம்- ராகுல் சாங்கிருத்யாயன்
8. உலகமய சித்தார்ந்த போராட்டம்- தேவ. பேரின்பன்
9. வகுப்புவாதமும் மதச்சார்பின்மைக்கான போராட்டமும் 3- சவுத் விஷன் 1998
10. இஸ்ரேலின் உருவாக்கம் ஞா. சிறிமனோகரன் 2011
11. Globalization and Neoliberalism- Dr. Fidel Castro Ruz 2006 july
12. உலக மக்களை மேலாதிக்கத்துக்கு உட்படுத்தும் ஏகாதிபத்திய கருவியாக பண்பாடு- தோழர்.இ.தம்பையா. இனியொரு வலை
13. மதஅடிப்படைவாதம்- விடுதலை வலை
14. Fundamentalism and Terrorism – Robert M. Young
15. Islamic Fundamentalism A tool in Imperialism’s hand –IPFG
16. Imperialism & Religious Fundamentalism – Mary Davis
17. Fundamentalism – Reactionary, pro- Capitalist Populism –Revolutionary Communist Group

 

வழக்குரைஞரும் சட்டவல்லுனருமான இளைஞர் மோகனராஜன் மலையகத்தைச் சேர்ந்த எழுதாளர்.

 

 

http://inioru.com/?p=32723

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புக்கு நன்றிகள் கிருபன்..... இந்த கட்டுரையை எவ்வளவு பேர் வாசிக்கப்போகிறார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இனைப்புக்கு நன்றிகள் கிருபன்..... இந்த கட்டுரையை எவ்வளவு பேர் வாசிக்கப்போகிறார்கள்?

 

வாசிப்பவர்கள் குறைவுதான்.. எனினும் தேடல் உள்ளவர்கள் வாசிப்பார்கள்தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.