Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீந்திக்கடந்த நெருப்பாறு - தொடர் நவீனம் அங்கம் 1-5

Featured Replies

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 01

 

 

 

neenthikkadanthaneruppaaru-922x1024.jpgமெல்ல மெல்லக் கிழக்கு வெளித்துக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில் வேலிக்கரை வேம்பில் ஒரு குச்சியை முறித்து பற்களைத் தீட்டியவாறே தென் கிழக்குப் பக்கமாக காட்டு மரங்களுக்கு மேல் தெரிந்த வானத்தைப் பார்த்தார் பரமசிவம் அண்ணாவியார். அது வழமை போலவே மங்கலான ஒரு நீல நிறத்திலேயே படர்ந்து கிடந்தது. ஆனால் மெல்ல மெல்ல அது செந்நிறமடையும் போதே சூரியன் உதிக்கும் என்பதையும் காட்டுமரங்கள் செவ்வண்ணம் படரும் என்பதையும் அவர் அறிவார்.

 

ஆனால் தென்கிழக்குத் திசையின் பற்றைகளும், மரங்களும் அடர்ந்த நிலப்பகுதி சூரியனின் வரவின் பல மணி நேரம் முன்பே கொட்டப்பட்ட குருதியால் சிவந்துபோயிருக்கும் என்றே அவர் கருதினார். முள்ளிக்குளம் பக்கமாக இரவு இரண்டு மணியளவில் தொடங்கிய தொடர் எறிகணை வீச்சு அதிகாலை ஐந்து மணிக்குத்தான் ஓய்ந்தது. நடுக்காட்டுக்குள் போகும் போது பல்லாயிரக்கணக்கான சில் வண்டுகள் ஒரே நேரத்தில் ரீங்காரம் செய்துவிட்டு திடீரென அத்தனையும் ஒரே நேரத்தில் நிறுத்திவிடும். அப்போ ஏற்படும் ஒரு நிசப்தம் எந்த ஒரு அனுபவசாலியையும் சில வினாடிகள் இனம் புரியாத பயத்திற்குள் தள்ளிவிடும். பரமசிவத்தைச் சுற்றியும் எறிகணைச் சத்தங்கள் ஓய்ந்த பின்பு அப்படி ஒரு அமைதி தான் நிலவியது. சில நாட்களாக விடிகாலையில் துயிலெழுப்பும் புள்ளினங்களின் கலகலப்புக் கூடக் காணாமற் போய்விட்டது. காட்டு மரங்களின் இலைகள் கூடத் தமது அசைவுகளை நிறுத்திவிட்டது போலவே தோன்றியது.

அவர் கிணற்றடியில் போய் வாய் கொப்புளித்து முகத்தைக் கழுவி விட்டு நிமிர்ந்த போது “அம்மா..” என்ற செங்காரிப் பசுவின் கத்தல் ஒலி காதில் விழுந்தது. அது பால் கறக்கும் நேரம் நெருங்கிவிட்டதை அவருக்கு அறிவிக்கும் அழைப்பு மணி.

 

“வாறன் பொறு!” என்று அதைப் பார்த்து உரத்துக் கூறிவிட்டு தோளில் கிடந்த துண்டால் முகத்தைத் துடைத்துவிட்டு, அடுக்களைப் பக்கம் சென்று செம்பை எடுத்துக் கொண்டு வந்தார். செம்பில் நீரை எடுத்துக் கொண்டு கன்றை அவிழ்த்து விட்டார். அது துள்ளிக்குதித்து ஓடி தாயின் மடியில் பால் குடிக்கத் தொடங்கியது. கன்றைப்பிடித்து மாட்டுக்கு முன்பாகக் கட்டிவிட்டுக் கொண்டுவந்த நீரால் மடியை நன்றாகக் கழுவிவிட்டுப் பாலைக் கறக்க ஆரம்பித்தார். செங்காரியும் கன்றை இதமாக நக்கிக் கொடுத்தவாறே நின்றது.

 

ஏனோ வழமையை விட அன்று பால் குறைவாகவே கிடைத்தது. இரவு கேட்ட எறிகணை ஒலிகள் மாட்டில் கூட பாதிப்பை ஏற்படுத்திவிட்டதோ என அஞ்சினார். கன்றை மீண்டும் அவிழ்த்து விட்டுவிட்டு பாலைக் கொண்டுபோய் மனைவியிடம் கொடுத்தார்.

 

மனைவி பார்வதி “தேத்தண்ணி ஊத்தட்டே?”, எனக் கேட்டாள்; “இண்டைக்கு என்ன கிழமை.. திங்களல்லே! குளிச்சிட்டு அம்மனுக்கு விளக்கு வைச்சுப்போட்டு வாறன்” என்றுவிட்டு கிணற்றடியை நோக்கி நடந்தார் பரமசிவம்.


அவர் காத்தவராயன் கூத்து ஆடத்தொடங்கிய காலத்திலிருந்து, காணியின் ஒரு மூலையில் ஒரு கொட்டில் போட்டு ஒரு சூலமும், முத்துமாரியம்மன் படமும் வைத்து ஒவ்வொரு திங்களும் விளக்கு வைத்து வந்தார். தனது திறமைக்கும் குரல் வளத்துக்கும் முத்துமாரியம்மன் அருளே காரணம் எனத் திடமாக நம்பினார்.
அவர் விளக்கு வைத்துவிட்டு வர பார்வதி தேநீர் ஊற்றி தயாராக வைத்திருந்தாள். அவர் குடித்து முடித்ததும் போத்தலில் நிறைத்து வைத்திருந்த பாலை அவரிடம் நீட்டினாள்.

 

“முத்தையா.. பாலுக்குப் பாத்துக்கொண்டிருப்பன்.. நான் கடையடிக்குப் போட்டுவாறன்.. தம்பிய பட்டியத் திறந்து மாடுகளக் கொண்டுபோய் தரவையில விட்டிட்டு தோட்டத்துக்கு வரச் சொல்லு! நான் அங்க வருவனாம் எண்டு விடு” என்று விட்டு பால் போத்தலைக் கையில் வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.

 

பாலம்பிட்டியில் உள்ள ஒரே தேநீர் கடை முத்தையா கபே மட்டும்தான். அதை கடை என்று சொல்வதை விட அரசியல் மேடை என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும். நாட்டு நடப்புக்கள் முதற்கொண்டு அரசியல் ஆய்வுகள் வரை அரங்கேறுவது அங்கு தான். முதலில் எந்தச் செய்தியும் அந்த மையத்துக்கே வந்து சேரும். பின்பு அது அங்கிருந்து ஊரெல்லாம் பரவிவிடும்.

 

பரமசிவம் கடையடிக்குப் போன போது முத்தையாவின் பால் தேநீருக்காக இரண்டு மூன்று பேர் காத்திருந்தார்கள். முத்தையா பரமசிவத்தைக் கண்டதும் ஓடிவந்து பாலை வாங்கி மண் சட்டியில் ஊற்றிச் சுடவைத்தான். பரமசிவம் வாங்கின் ஒரு கரையில் அமர்ந்தவாறே “இரா முழுவதும் ஒரே செல் சத்தமாய்க் கிடந்தது. என்ன நடந்ததோ தெரியேல்ல” என்றார்.


“அதண்ணை… முள்ளிக் குளத்துக்கை ஆமி இறங்கீட்டாங்களாம்..” என்றான் கந்தசாமி.

 

பரமசிவம் திகைப்புடன், “என்ன.. இறங்கியிட்டானோ…? ஆர் சென்னது…?” எனக் கேட்டார்.


“இப்ப தான் பாண் கொண்டுவாற பொடியன் சொல்லிப் போட்டுப் போறான்”


பாண் கொண்டுவரும் பொடியன் சொன்னால் அதில உண்மை இருக்கும் என்றே பரமசிவம் நம்பினார். அது மட்டுமன்றி இராணுவம் ஒரு நகர்வை மேற்கொள்வதற்கு முன்னால் அப்பகுதியை நோக்கி சரமாரியாக எறிகணை வீச்சை நடத்துவதும் வழமை தான். இரவு கேட்ட தொடர் எறிகணை ஒலிகள் அப்படியான ஒரு நகர்வின் அறிகுறியாக இருக்குமென்றே அவர் நம்பினார். ஆனால் அவரின் மகன் சங்கரசிவம் முள்ளிக்குளம் களமுனையில் தான் நிற்கிறான் என்பதை நினைத்தபோது நெஞ்சு ஒரு முறை நடுங்கியது.

 

சொந்த மண்ணைக் காக்க ஒவ்வொருவரும் போராட்டத்தில் பங்கு கொள்ளவேண்டும் என்பதில் அவர் எப்போதுமே உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். ஆனால் மகனுக்கு ஏதாவது நடந்தால் என்று நினைக்கும் போது மனம் சங்கடப்படுவதை தவிர்க்கமுடியவில்லை.

 

“எங்கட பொடியள் என்னண்டு அவங்கள முன்னேற விட்டாங்கள் எண்டுதான் தெரியேல்ல” என்றான் கந்தசாமி.

 

“ம்.. சண்டையெண்டால் முன்னேறுவதும் பின் வாங்கிறதும் நடக்கிறது தானே…” என்று விட்டு வெறும் போத்தலையும் வாங்கிக் கொண்டு அவசரவசரமாக வீடு நோக்கிப் புறப்பட்டார் பரமசிவம்.

 

வீட்டு முற்றத்தில் நின்றவாறே “இஞ்சரப்பா… நான் ஒருக்கால் மடுப்பக்கம் போட்டு வாறன்” என்றார்.

 

“ஏன் இப்ப மடுவுக்கு…இளையவனல்லே தோட்டத்தில நீங்கள் வருவியள் எண்டு பாத்துக் கொண்டு நிப்பன்”

“ஓ.. நீ போய் அவனுக்கு உதவி செய்… முள்ளிக்குளத்தில சண்டையாம்… மடுப்பக்கம் போனால் தான் விபரம் தெரியும்”

 

அதைக் கேட்டதும் “ஐயோ.. பெரியவன் முள்ளிக்குளத்திலையல்லே” என அங்கலாய்த்தாள் பார்வதி.

“அது தான் என்னண்டு போய் அறிஞ்சு கொண்டு வாறன்” என்றுவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் பரமசிவம்.

 

காயப்பட்ட போராளிகளையும் வீரச்சாவடைந்த போராளிகளையும் முதலில் பெரிய பண்டிவிரிச்சானில் இருந்த மருத்துவ முகாமுக்கு கொண்டு வருவார்கள். பெருங்காயம் பட்டவர்களைப் பின்பு இலுப்பைக்கடவைக்கோ கிளிநொச்சிக்கோ கொண்டுபோவதுண்டு.

 

எனவே மடுவிற்குப் போனாலே களநிலைமை பற்றி அறிந்துவிடலாம் என அவர் நம்பினார். அப்படி சரியான விபரம் கிடைக்காவிட்டால் பண்டிவிரிச்சானிலேயே போய் விசாரிப்பது என முடிவு செய்து கொண்டு சைக்கிளை வேகமாக மிதித்தார் அவர்.

 

அவர் தன் மகனைப் பற்றிய தவிப்புடன் மடு நோக்கிப் போய்க்கொண்டிருக்க, அவனோ களமுனையில் பெரும் குழப்பமான மனதுடன் கொதித்துக்கொண்டிருந்தான். கட்டளைத் தளபதியின் மேல் கோபம் கோபமாகச் சங்கரசிவத்துக்கு வந்த போதும் எதுவும் செய்ய முடியாத நிலையில் சங்கரசிவம் தவித்தான். ஒரு பெரும் வெற்றியை வேண்டுமென்றே விட்டுக் கொடுத்து தோல்வியைத் தாங்கள் விலையாகப் பெற்றுவிட்டதாகவே அவன் கருதினான். ஏன் தளபதி அப்படி பின் வாங்கும்படி கட்டளையிட்டார் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

 

பின்னிரவு இரண்டு மணியளவில் எறிகணை வீச்சு ஆரம்பமானபோது உடனடியாகவே காவலரண்களை விட்டுப் பின் வாங்கும்படி தளபதியிடமிருந்து கட்டளை வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக செல் விழும் எல்லை முன்னேறி காவலரண்களை நெருங்கு முன்பே போராளிகள் ஏறக்குறைய நூறு மீற்றர்கள் பின்வாங்கிவிட்டனர். சங்கரன் அது ஒரு தந்திரோபாய பின்னகர்வு என்றே கருதினான். மேலும் இன்னொரு கட்டம் பின்வாங்கும் படி மேலிடத்திலிருந்து கட்டளை வந்த போது அவனால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் களமுனையில் கட்டளைகளைக் கேள்விக்கிடமின்றி நிறைவேற்றுவது கட்டாயமானது என்ற வகையில் அவன் அப்படியே செயற்பட்டான்.

 

நான்கு மணியளவில் எறிகணை வீச்சு முற்றாக ஓய்ந்த பின்பும் மேலிடத்தில் இருந்து எந்தக் கட்டளைகளும் வரவில்லை. சக போராளிகள் “என்னண்ண செய்யிறது?” என மாறி மாறிக் கேள்வி எழுப்பிய போது அவனால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.

 

நன்றாக விடிந்த பின்பு பற்றைகளின் இடைவெளிகளால் மறைந்து நின்று பார்த்த போது போராளிகளின் காவலரண்களெங்கும் படையினரின் நடமாட்டம் தென்பட்டது.

 

வோக்கியை செயல்படுத்தி அந்த விடயத்தை தளபதிக்கு தெரியப்படுத்தினான்.

“தெரியும்! நீ நான் சொல்லுறத மட்டும் செய்தால் போதும்”, என்ற கடுமையான கட்டளை பதிலாக வந்தது.


(தொடரும்)

 

தமிழ்லீடருக்காக

அரவிந்தகுமாரன்

 

 

Edited by ஊர்பூராயம்

  • தொடங்கியவர்
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 02
 
பண்டிவிரிச்சானுக்குச் சென்ற பரமசிவத்தால் எதையுமே திடமாக அறிய முடியவில்லை. போராளிகளிடம் விசாரித்த போது எவரும் காயப்பட்டோ, வீரச்சாவடைந்தோ வரவில்லை எனவும் முள்ளிக்குளத்துக்குள் இராணுவம் இறங்கிவிட்டது என்பதையும் மட்டும் அறிய முடிந்தது.அப்படியானால் சண்டை எதுவும் நடைபெறாமலே இராணுவம் முன்னேறியிருக்க வேண்டும் என்றே கருதவேண்டியிருந்தது. ஆனால் இரவு, பகலாக மழை, வெயில், பனி என்பவற்றைப் பொருட்படுத்தாமல் எல்லை காக்கும் போராளிகள் எந்தவித எதிர்ப்புமின்றிப் படையினரை முன்னேற விட்டிருப்பார்கள் என்பதை அவரால் நம்பமுடியவில்லை.
 
பல்லாயிரம் சில் வண்டுகள் ஒன்றாக ஒலித்துவிட்டு திடீரென நிறுத்தும் போது ஏற்படும் ஒரு விதமான இனம்புரியாத பயம் போன்ற ஒரு உணர்வே அவரை ஆட்கொண்டிருந்தது.
 
பலவிதமான கேள்விகளால் குழம்பிப் போயிருந்த மனதுடன் அவர் தனது சைக்கிளை மீண்டும் மடுவை நோக்கி மிதித்தார். முள்ளிக்குளம் மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்து மடுவிலும் தட்சணாமருத மடுவிலும் தங்கியிருந்தனர். முள்ளிக்குளம், குஞ்சுக்குளம் பிரதேசங்கள் அடிக்கடி சண்டைகள் நடக்கும் இடங்களாகவே விளங்கின.
அவர் மடுவைத் தாண்டி தட்சணா மருதமடுவை நோக்கி வந்த போது முள்ளிக்குளம் முருகப்பரைக் கண்டதும் சைக்கிளை நிறுத்தினார்.
 
முருகப்பருக்குத் தெரியாத காட்டுப் பாதைகளே கிடையாது. காடுகளில் கேட்கும் சிறு அசைவுகளில் ஒலியையும் அவர் காதுகள் துல்லியமாகக் கிரகித்து அது எப்படிப்பட்டது எனக் கண்டுபிடித்துவிடும். அது போன்றே அவரின் நுகர்வு சக்தியும் அற்புதமானது. வாசனையை கிரகித்தே சுற்று வட்டாரத்தில் என்ன மிருகங்கள் என்று கண்டுபிடித்துவிடுவார். அவர் கையில் வேட்டைக்கட்டு கட்டப்பட்ட உடும்புக்கள் இரண்டைக் கொண்டு வந்த போதே காட்டுக்கு வேட்டைக்குப் போயிருக்கிறார் என்பதை பரமசிவம் புரிந்து கொண்டார்.
 
சைக்கிளை நிறுத்திய பரமசிவம் “என்ன.. ராத்திரி காட்டுக்க இறங்கியிருக்கிறாய் போல கிடக்குது!” என முருகப்பரைப் பார்த்துக் கேட்டார்.
 
“ஓ.. ஒண்டும் அணையேல்ல.. ஒரே செல்லடி.. அதில காட்டுக்கை கனதூரம் உள்ள இறங்கவும் முடியேல்ல. திரும்பி வரேக்கை தான் நாயள் ரண்டு உடும்புகளைக் கௌவிச்சுதுகள்”
 
உடும்புகளை நன்றாகப் பார்த்துவிட்டு பரமசிவம் “ஒண்டைத்தாவன்”, எனக் கேட்டார்.
 
முருகப்பர் பெரிதாக இருந்த உடும்பைத் தூக்கி பரமசிவத்திடம் கொடுத்தார். விலை பேசுவது உடனே காசை எதிர்பார்ப்பது போன்ற பழக்கமெல்லாம் அவர்களிடம் இல்லை. மாலையோ அல்லது அடுத்த நாளோ முருகப்பரைச் சந்திக்கும் போது ஏதோ தான் விரும்பும் பணத்தைக் கொடுப்பார் பரமசிவம். முருக்கப்பரும் விரித்துப்பார்க்காமலேயே வாங்கி இடுப்பில் சொருகிக் கொள்வார்.
 
“முள்ளிக்குளம் பக்கம் ஏதும் விசேசமே?”
 
“ஒண்டுமாய் விளங்கேல்ல.. விடியப் புறமாய் நாலைஞ்சு பெரிய வாகனங்களில பொடியள் முள்ளிக்குளம் பக்கமாய் போனாங்கள்... ராத்திரியும் ஒரே செல்லடி” என்றார் முருகப்பர்.
 
முள்ளிக்குளம் நோக்கிப் போராளிகள் போகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட போது அவருக்கு சில விஷயங்கள் புரிவது போல் தோன்றியது. இப்போது நிலவுவது புயலுக்கு முன்பான அமைதியாகத் தான் இருப்பதாகவே அவருக்குத் தோன்றியது.
 
உடும்பை வாங்கி சைக்கிள் ஹான்டிலில் கொழுவிக் கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டார்.
 
தோட்டத்தில் மிளகாய்க் கண்டுகளுக்கு தண்ணீர் கட்டிக்கொண்டிருந்த பரமசிவத்தின் இளைய மகனுக்குப் பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது. பத்துப் பதினைந்து வருடம் பழமை வாய்ந்த “வூல்சிலி” நீரிறைக்கும் இயந்திரம் ஒரு சீரான ஒலியுடன் மோட்டையிலிருந்த நீரை வாரி இறைத்துக் கொண்டிருந்தது.
 
தண்ணீர் மாறுவதில் ஒரு சிறிய தாமதம் ஏற்பட்டாலும் நீர் வாய்க்கால்களே உடைத்துப் பாயத் தொடங்கிவிடும். வழமையாக ஏழரை எட்டு மணிக்கெல்லாம் வந்து தன்னிடம் மண்வெட்டியை வாங்கிக் கொண்டு தன்னைச் சாப்பிட விடும் பரமசிவம் ஒன்பது மணியாகியும் வராதது அவனுக்கு கோபத்தை மூட்டியது.
 
இறைப்பை நிறுத்துவது என முடிவு செய்தான். ஆனால் தண்ணீர் மாறுவதை விட்டு விட்டு இயந்திரத்தை நிறுத்தப் போனால் நீர் மேவிப்பாய்ந்து வாய்க்கால்கள், பாத்திகள் எல்லாவற்றையும் உடைத்துவிடும்.
 
தனது தாயுடன் மிளகாய்ப் பழம் பிடுங்கிக் கொண்டிருந்த முத்தம்மாளைக் கூப்பிட்டான் அவன். அவள் அருகில் வந்ததும், “இந்தத் தண்ணிய கொஞ்ச நேரம் மாறு, நான் போய் மிஷின நிப்பாட்டிப்போட்டு வாறன்”, என்றான் சுந்தரசிவம். அவள் எதுவும் பேசாமல் மண்வெட்டியை வாங்கிக் கொண்டாள்.
 
முத்தம்மாளின் தகப்பனான பெருமாளும், தாய் வேலம்மாவும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள், 1983 இன வன்முறைகளை அடுத்து முதலில் வவுனியாவிலும் பின் பூவசரன்குளத்திலும் குடியிருந்தனர். பின்பு இராணுவ நடவடிக்கை காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து மடுவுக்கு வந்தனர். இப்போ தட்சிணாமருத மடுவில் நிரந்தரமாகக் குடியிருந்தனர். கூலி வேலை செய்தே அவர்கள் சீவியம் போனது.. பெருமாள் ஒரு நல்ல தொழிலாளியாக இருந்த போதும் கசிப்பு அவனை நிரந்தர நோயாளியாக்கிவிட்டது. தகப்பனையும், நாலு பிள்ளைகளையும் வேலாயியும் மூத்த மகள் முத்தம்மாவுமே உழைத்துப் பார்க்க வேண்டியிருந்தது.
 
முத்தம்மா நன்றாகவே பாடுவாள். சில தடவைகள் காத்தவராயன் கூத்துப் பார்த்திருக்கின்றாள். அவளுக்கு அப்படியே முழுப்பாடல்களும் பாடமாகிவிட்டது. அவள் மிளகாய்ப்பழம் பிடுங்கும் போது காத்தான் பாட்டுக்களைப் பாடுவதைச் சுந்தரம் தன்னை மறந்து ரசித்திருக்கிறான். பரமசிவத்தாரின் கூத்தில் சுந்தரம் தான் ஆதிகாத்தானாக நடிப்பான்.
 
அவனின் வரவுப்பாட்டுக்கு மக்களிடம் ஒரு தனி மவுசு உண்டு. ஆரியப்புமாலையாக முத்தம்மாவை நடிக்க வைக்கவேண்டுமென அவனின் மனதுள் ஒரு ஆசை இருந்ததாலும் அவன் அதை வெளியே சொல்வதில்லை. ஏனெனில் பெண் பாத்திரங்களுக்கும் வழமையாக ஆண்களே நடிப்பார்கள்.
 
சுந்தரம் மண்வெட்டியை அவளிடம் கொடுத்தவாறே.“நீ பாடிப்பாடித் தண்ணி மாறு. நான் கேட்டுக்கொண்டே போய் மிசினை நிப்பாட்டுறன்” என்றான்.
 
“நீங்க பாடிக்கொண்டு போங்கோ.. நான் கேட்டுக்கொண்டே தண்ணி மாறுறன்” என்று விட்டு நீரைப் பாத்தி மாற்றி விட்டாள் அவள்.
 
“அப்படியே, போய்க்கொண்டே பாடுறன் கேள்” என்று விட்டு இயந்திரம் இருந்த மோட்டைக்கரையை நோக்கி நடந்தான்.
 
அவன் வாயில் “விடமாட்டேன்.... ஆரியமாலையை மாமணம் செய்யாமல் விடமாட்டேன்” என்ற பாடல் வரிகள் இனிமையாக வெளிவந்து அந்தத் தோட்டமெங்கும் நிறைத்தது.
 
அதற்கு எதிர்ப்பாட்டுப்பாட வேண்டும் என்ற உந்துதல் அவளுள் எழுந்த போதும் சிரமப்பட்டு அதை அடக்கிக் கொண்டாள். அவள் முகம் மட்டும் அவளையறியாமலே “குப்பென்று” சிவந்தது.
 
சுந்தரம் நீரிறைக்கும் இயந்திரத்தை நிறுத்திவிட்டுத் திரும்பிய போது பார்வதி சாப்பாட்டுடன்   வந்துகொண்டிருந்தாள்.
 
சுந்தரம் “ஐயா, எங்கையம்மா?” எனக் கேட்டான்.
 
“அவர் என்னை இஞ்சை போகச் சொல்லிப்போட்டு மடுப்பக்கம் போட்டார். நீ கையைக் கழுவிப் போட்டு சாப்பிட வா” என்றாள் அவள்.
அவன்“ தகரப்பட்டையில் எடுத்து தை்திருந்த நீரில் கை கழுவி விட்டுதாயின் அருகில் வந்தான்.
 
பார்வதி, “வேலாயி, முத்தியையும் கூட்டிக்கொண்டு வா.. ஒரு பிடி சாப்பிடுங்கோ” எனப் பலத்த குரலில் அழைத்தாள்.
 
“வேண்டாமம்மா.. நாங்க றொட்டி கட்டீற்று வந்தம்’ என்றாள் வேலாயி.
“அதைப் பிறகு தின்னுங்கோ.. இப்ப உங்களுக்கும் சேத்துத் தான் கொண்டந்தனான்”
 
வேலாயி மேற்கொண்டு எதுவும் பேசாமலேயே முத்தம்மாவுடன் அருகில் வந்தாள். பார்வதியின் பழம் சோற்றுக் குழையல் சாப்பிடுவதில் அவர்களுக்கு தனி விருப்பம் உண்டு.
 
பழைய விரால் மீன் குழம்புக்குள் போட்டுக் குழைத்த பழஞ்சோற்றைப் பிஞ்சு மிளகாயுடன் கடித்து உண்ட போது அது அவர்களுக்கு அமுதமாகவே தோன்றியது. எல்லோரும் வயிறு நிறையச் சாப்பிட்டனர். சுந்தரம், முத்தம்மா ஆவலுடன் சாப்பிடுவதை இடையிடையே பார்த்து ரசிக்கத் தவறவில்லை.
 
அவர்கள் இவ்வாறு சந்தோசமாக தோட்டத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அதே வேளையில் களமுனையில் இதுவரை குழம்பிய மனதுடன் தவித்துக் கொண்டிருந்த சங்கர சிவத்துக்கும் ஒரு மகிழ்ச்சி நிறைந்த தெளிவு பிறப்பது போலவே தோன்றியது.
 
புதிதாக இரண்டு அணிகள் களமுனைக்கு வந்ததுமே அடுத்த தாக்குதல் ஒன்று இடம்பெறப் போவதாகவே அவன் கருதினான். இரவு மேற்கொள்ளப்பட்ட பின் நகர்வில் ஒரு ஆழமான அர்த்தம் இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.
 
(தொடரும்)
 
தமிழ்லீடருக்காக
 
அரவிந்தகுமாரன்
 
 
 
 
 

Edited by ஊர்பூராயம்

இணைப்பிற்கு நன்றி உதயம் . தொடருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிகள் ஊர்பூராயம்

நீந்திக்கடந்த  நெருப்பாறு  தொடரை ஆவலோடு  வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு தந்தையின் மனநிலை , ஒரு போராளியின் மனநிலையை உணர்த்தியபடி எழுதப்பட்டுள்ள இந்த  தொடர் நன்றாக  உள்ளது....
தொடருங்கள்...
  • தொடங்கியவர்
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 03
 
அன்று மதிய உணவு முடிந்த பின்பு அணித்தலைவர்களையும் குழுக்களுக்குப் பொறுப்பானவர்களையும் தளபதி அழைத்திருந்தார். அவர் தாக்குதல் திட்டங்களை வரைபடம் மூலம் விளக்கினார். “இண்டைக்கு நாங்கள் எதிரி எதிர்பார்க்காத நேரத்திலை, அவன் எதிர்பாராத விதமான ஒரு தாக்குதலை நடத்தப்போறம்” அவர் இப்படிச் சொல்லிவிட்டு இடைநிறுத்தியபோது அனைவரும் அவரின் முகத்தை ஆவலுடன் நோக்கினர்.
 
அவர் தாக்குதல் திட்டம் வரையப்பட்டிருந்த படத்தை ஒரு தடியால் குறிப்பிட்டுக் காட்டியவாறு கூற ஆரம்பித்தார்.
 
“எதிரி தன்ர பிரதான முகாமிலயிருந்து ஒரு வால் போன்ற வடிவத்திலை முன்னேறி அரண் அமைச்சிருக்கிறான். முதல் தாக்குதல் இப்ப நாங்கள் நிக்கிற பக்கத்தால கடுமையாகவும் வேகமாகவும் பெரிய அளவிலயும் ஆரம்பிக்கும். இந்தத் தாக்குதலில எதிரியின்ர கவனம் முழுக்கப் பதிஞ்சிருக்க முகாமிலயிருந்து வால் ஆரம்பிக்கிற பகுதியில வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் இரண்டு அணிகள் உள்ள உடைச்சுக்கொண்டு போகும். ஒண்டு முகாம் பக்கம் தாக்குதலை நடத்தி அங்கயிருந்து உதவி வராமல் தடுக்க மற்ற அணி வால் பக்கம் கடுமையான தாக்குதலை நடத்தும். எதிரிக்கு ஒரே நேரத்தில முன்பக்கமும் பின்பக்கமும் அடி விழுற அதே நேரம் வலப்பக்கமும் இப்பக்கமும் ஒவ்வொரு அணியளும் தாக்குதலத் தொடங்கும். அப்பிடி வால் பகுதிய முழுமையா அழிச்ச நிலையில முகாம் பக்கமிருக்கிற இரண்டு அணிகளும் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் விலகியிடவேணும். அந்த நேரத்தில முகாமிலயிருந்து உதவிக்கு வாற அணியை பொக்ஸ்சுக்கை இழுத்து அழிக்கவேண்டியதுதான். அந்த நேரம் முகாம் கணிசமானளவு பலவீனப்பட்டிடும். கட்டளை வந்ததோட முகாமை நோக்கிய தாக்குதலைத் தொடங்கவேண்டியதுதான். கிட்ட கிட்ட நிண்டு சண்டை பிடிக்கிறதால அவன்ரை செல்லடிய சமாளிக்கவேண்டிய தேவை இல்லை. ஆனால் நாங்கள் இஞ்சாலை சண்டை நடக்க உள் முகாமுக்குச் செல் போட்டுக்கொண்டிருப்பம். முகாமில தாக்குதல் தொடங்கினதும் நிப்பாட்டிப்போடுவம்” தளபதி சொல்லி முடித்ததும் எல்லோர் மனதிலும் ஒரு பெரும் உற்சாகம் பொங்க ஆரம்பித்தது. அனைவரும் அமைதியுடனும் ஆர்வத்துடனும் தங்களுக்குள் கற்பனையில் தாக்குதல் வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர்.
 
“சரி.. தாக்குதலுக்கான நேரத்தைப் பிறகு அறிவிப்பம். நீங்கள் இப்பவே போய் உரிய தயாரிப்புக்களைச் செய்து எல்லாத்துக்கும் தயாராயிருங்கோ!”
 
எல்லோரும் தங்கள் இடங்களை  நோக்கிப் புறப்பட்டனர். சக போராளியான மயூரன் சொன்னான்,
 
“சிவமண்ண! திட்டமெண்டால் திட்டம் தான்… வெற்றி நிச்சயம் மட்டுமில்ல ஏராளமான ஆயுதங்களும் அள்ளலாம்”
 
“திட்டம் திறம் தான்… ஆனால் இது எத்தினை பேர் சிந்தின ரத்தத்தில வகுத்த திட்டமெண்டு தெரியுமே? எனக் கேட்டான் சங்கரசிவம்.
 
“நீங்கள் என்னண்ணை சொல்லுறியள்?’’
 
“எங்கட “வேவு” போராளியள் இரவு, பகல் பாராமல் ஆபத்தான இடங்களுக்கையெல்லாம் புகுந்து எடுத்த தகவல்களை வைச்சுத்தானே திட்டங்கள் தீட்டுறது. இந்தப் பணியில எத்தினை பேர் உயிர் குடுத்திருப்பினம் தெரியுமே?”
 
“ஓம்.. ஓம்… எதிரியின்ரை கோட்டையளுக்கை புகுந்து தகவல் எடுக்கிறது எண்டால் அது பயங்கர ஆபத்துத்தான வேலை தானே” என ஆமோதித்தான் மயூரன்.
 
சங்கரசிவத்தின் அணியினருக்கு முன்பக்கப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பக்கதையே எப்போதும் எதிரி எதிர்பார்திருப்பானாகையால் அவனின் கடுமையான தாக்குதலுக்கு முகம் கொடுத்தே முன் செல்ல வேண்டிவரும். அவர்கள் அன்று காலையில் தான் காவலரண்களை அமைத்திருந்தபடியால் அவற்றை உடைப்பது வழமையை விடச் சுலபமாயிருக்கும் எனவே நம்பினான்.
 
எப்படியிருந்த போதும் ஒரு பெரிய வெற்றியை ஈட்டப்போகிறோம் என்ற நம்பிக்கை மட்டும் மிக உறுதியாக அவனுள் பதிந்திருந்தது.
 
பரமசிவம் தான் கொண்டு வந்த உடும்பை உரித்து, வெட்டி பார்வதியிடம் கொடுத்துவிட்டு தோட்டத்தை நோக்கிப் புறப்பட்டார்.
 
அவர் அங்கு போன போது சுந்தரம் மீண்டும் நீரிறைத்து மிளகாய்க் கன்றுகளுக்குப் பாய்ச்சிக்கொண்டிருந்தான்.
 
மிளகாய் கன்றுகள் செழிப்பாகவும் இடைப்பழமும் காயுமாக நிமிர்ந்து நின்றிருந்தன. வேலாத்தையும் முத்தமாம்மாவும் முற்றிய பிஞ்சு மிளாய்களையும், இடைப்பழங்களையும் பறித்துக் கொண்டிருந்தனர். இம்முறை பாரிய விளைச்சல் ஏற்படுமென்ற அறிகுறிகள் தென்பட்டன.
 
இம்முறை காவிளாய் குழை தாட்டதுடன் பட்டியெரு போட்டிருந்தார். அந்தப் பசளைகள் மிளகாய் கன்றுகளை நல்ல செழிப்பாக எழுப்பியிருந்தன. மிளகாய்கள் கூட மிக நீண்டவையாகவும் பொலிவாயும் காணப்பட்டன.
 
சுந்தரத்தின் மிக அருகில் சென்ற அவர், “தம்பி… நீ வீட்டை போய் ஆறு.. நான் இறைச்சு முடிச்சுப்போட்டு வாறன்..” என்றார் பரமசிவம்.
 
அவனோ முத்தம்மாவுடன் நிற்பதற்காக எவ்வளவு நேரமும் தோட்டத்தில் வேலை செய்யத் தயாராயிருந்தான்.
 
“இல்லையய்யா… நான் இறைக்கிறன்..” என்றான் அவன்.
 
“நீ விடியத்துடக்கம் தண்ணி மாறுறாய்.. களைச்சுப் போனாய்… போய் ஆறுதலாய் இரு” என்றுவிட்டு மண்வெட்டியை வாங்கினார் பரமசிவம்.
 
எதுவுமே செய்ய முடியாத நிலையில் மண்வெட்டியைக் கொடுத்துவிட்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டான் சுந்தரம். நடு வாய்க்காலுக்கால் வந்தபோது ஒரு முறை திரும்பி முத்தம்மாவைப் பார்த்தான். அப்பொழுது அவளும் அவனையே பார்த்ததைக் கண்டுகொண்டான். அவன், தான் பார்த்ததைக் கண்டுவிட்டான் எனத் தெரிந்ததும் முத்தம்மா தலையைக் குனிந்து கொண்டு மிளகாய் பிடுங்க ஆரம்பித்தாள்.
 
சுந்தரம், “போக விடை தாருமணை பெற்றவளே தாயே! அந்தப் பொற்கொடியாள் மாலையிடம் பெற்றவளே தாயே” எனப் பாடிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான். அவன் மனதில் பாட்டு, “போக விடை தாருமணை ஆரியப்பூமாலை எந்தன் பெற்றவளாம் தாயிடமே ஆரியப்பூமாலை”, என்று அமைந்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் போல ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது.
 
அவன் வீட்டுக் கடப்படிக்கு வந்தபோது அவனின் நண்பன் செல்வம் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அவன் சுந்தரத்தைக் கண்டதும் சைக்கிளை நிறுத்திவிட்டு, “நீ போகேல்லயே…? என்று கேட்டான்.
 
“எங்கை?”
 
“இயக்கம் ஏதோ கூட்டமெண்டு தட்சிணாமருதமடு பொதுநோக்கு மண்டபத்துக்கு வரச்சொல்லியிருக்குது”, என்றான் அவன்.
 
“என்ன கூட்டமாம்?”
 
“என்னண்டு தெரியேல்ல… வாவன் போவம்..”, எனக் கேட்டான் செல்வம்.
 
“ம்.. இயக்கம் கூப்பிட்டால் போகத்தானே வேணும்.. போகேக்க இதால வாவன் நானும் வாறன்!” என்றான் சுந்தரம்.
 
“ஓ.. இரண்டு பேரும் போவம்”, என்றுவிட்டுப் புறப்பட்டான் செல்வம்.
 
அன்று மாலை பொது நோக்கு மண்டபத்துக்கு அவர்கள் போனபோது அங்கு ஏற்கனவே முப்பது, நாற்பது வாலிபர்கள் கூடிநின்றனர். எவருக்குமே என்ன கூட்டம் என்பது தெரிந்திருக்கவில்லை. சிறிது நேரத்தில் வட்டப் பொறுப்பாளர் வந்து கூட்டத்தை ஆரம்பித்தார். அவர் ஒரு முக்கிய விஷயமாக கொஞ்சப் போர் தேவைப்படுவதாகவும், அடுத்த நாள்தான் திரும்ப முடியும் எனவும் விருப்பமானவர்கள் வரும்படியும் கேட்டுக்கொண்டார்.
 
பெரும்பாலானவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
 
செல்வம், “வீட்டை சொல்லிப்போட்டு வாறம்!” என்றான்.
 
“அது தேவையில்லை.. நாங்கள் அறிவிச்சு விடுறம்!” என்றார் பொறுப்பாளர்.
 
செல்வமும் சுந்தரமும் அவர்களுடன் போக முடிவெடுத்தனர். சிறிது நேரத்தில் வந்த வாகனத்ததில் அனைவரும் ஏறிக்கொண்டனர். பாலம்பிட்டி நோக்கிய பாதையில் போன வாகனம் சிறிது தூரம் சென்ற பின்பு ஒரு காட்டுப்பாதையில் இறங்கியது.
 
அந்தச் சுற்றாடலே இருளில் கனத்துப் போய்க்கிடந்தது. எங்கும் ஒரே நிசப்தம். வழமையாகக் கோஷ்டி கானமிசைக்கும் சில் வண்டுகள் கூட அன்று அமைதி பூண்டுவிட்டன.
 
போராளிகள் வரப்போகும் கட்டளையை எதிர்பார்த்து உருமறைப்புச் செய்து படுத்திருந்தனர்.
 
எங்கோ தொலை தூரத்தில் ஆட்காட்டியின் குரல் ஒரு முறை ஒலித்து ஓய்ந்தது. சங்கரசிவம் அவசரமாக இரவுப் பார்வைச் சாதனத்தை எடுத்து அதனூடாக சுற்றும் முற்றும் பார்த்தான். எவ்வித அசைவும் தென்படவில்லை.
 
கிழக்குத் திசையில் சந்திரன் தலை நீட்டவே மிக மங்கலான ஒரு ஒளி பரவ ஆரம்பித்தது.
 
போராளிகள் முகாமின் பக்கமிருந்து போன எறிகணை முகாமுக்குள் வீழ்ந்து வெடிக்க முகாமின் சகல விளக்குகளும் அணைந்தன. செல், மின் பிறப்பாக்கியின் மீது விழுந்திருக்க வேண்டும். கட்டளை வெடியதிரவே சிவத்தின் அணியினர் படையினரின் நிலைகளை நோக்கிப் பாய்ந்தனர். படையினர் விளக்குகள் அணைந்த அதிர்ச்சியிலிருந்து மீள முன்பே அவர்களை நோக்கி ரவைகள் பாய ஆரம்பித்தன…
 
(தொடரும்)
 
தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்.
 
  • தொடங்கியவர்

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 04

 

சங்கரசிவம் ஏற்கனவே எதிர்பார்த்ததுபோன்று முன்னரங்கத் தாக்குதல்கள் இலகுவாக இருக்கவில்லை. திடீரென விளக்குகள் அணைந்ததாலும், அதேவேளையில் ரவைகள் அடர்த்தியாக வந்து கொண்டிருந்ததாலும் சில நிமிடங்கள் தடுமாறிப் போன படையினர் சில நிமிடங்களில் தம்மை சுதாகரித்துக்கொண்டு திரும்பித் தாக்க ஆரம்பித்தனர். அந்தச் சில நிமிடங்களில் காயப்பட்டவர்களையும் இறந்தவர்களையும் தூக்கிக் கொண்டு சிலர் ஓடுவது மங்கிய நிலவொளியில் அவனின் கண்களில் பட்டது.

 

கண்ணிவெடிகளை அடையாளம் கண்டு அவற்றினை செயலிழக்கச் செய்தவாறே துரிதமாக போராளிகள் முன்னேற ஆரம்பித்தனர். முன்னரங்கில் நின்ற படையினர் முழுமையாகவே பின் வாங்கிவிட்டனர். எனினும் அந்த வரிசையில் நின்றவர்கள் கடுமையாக எதிர்த்தாக்குதல் தொடுத்தனர். சண்டை சற்று உக்கிரமாகவே நடந்தது.

 

படையினருக்குப் பின்னால் ஒரு பற்றை அசைவது போல தோன்றவே அவர்களுக்கு ஆதரவாக டாங்கி வந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். உடனடியாக ஆர்.பி.ஜி. போராளிகளுக்குக் கட்டளை கொடுத்தான். ஆனால் டாங்கி ஆர்.பி.ஜியின் சூட்டெல்லைக்கு வெளியே தான் நின்றது.

 

படையினருக்குப்பின்னால் வந்து கொண்டிருந்த ரவைகள் மத்தியில் ஆர்.பி.ஜியைக் கையாண்ட கமலுக்கு முன் செல்ல முடியவில்லை. ஆனால் டாங்கியைச் செயலிழக்கச் செய்யாவிடில் போராளிகளுக்கு அதிக இழப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே கமல் ஊர்ந்தவாறே தனது நிலையை இன்னொரு திசைக்கு மாற்றிக்கொண்டான். அது கூட அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. எங்கிருந்தோ பாய்ந்து வந்த ரவையொன்று அவனின் காதருகால் அவனைக் கடந்து சென்றது. அவனுக்கு அதைப் பெரிதுபடுத்த நேரமிருக்கவில்லை. தன்னிலிருந்து சில அடிகள் தொலைவில் படுத்திருந்து ஒரு படையினன் சுடுவதையும், அருகில் பல சடலங்கள் சிதறிக்கிடப்பதையும் உருமறைப்பிலிருந்த பாலன் கண்டுகொண்டான். மெல்லத் தனது டொங்கானை எடுத்து சுட்டுக்கொண்டிருந்த படையினனைக் குறிவைத்தான். அவன் அசைவு ஓய்ந்தது.

 

அந்த இடைவெளியை வேறு படையினர் நிரப்பு முன்பாக வேகமாக முன்னேறி டாங்கியின் சுடுகுழலை நோக்கி ஆர்.பி.ஜியை செலுத்தினான் கமல். குறிதவறாத அந்தத் தாக்குதலில் டாங்கி செயலிழந்தது. டாங்கி செயலிழந்த நிலையில் போராளிகள் வேகமாக முன்னேற ஆரம்பித்தனர். இரண்டாவது வரிசையும் ஈடாட்டம் காண ஆரம்பித்தது.

 

பிரதான படைமுகாமிலிருந்து உதவிக்கு வரமுடியாமல் குட்டிசிறீ அணியினர் முகாம் வாசல், வேலிப்பகுதிகளை நோக்கி மோட்டார்களைப் போட்டுக் கொண்டிருந்தனர். மோட்டார் நிலைகளை நோக்கி எறிகணைகள் வந்து கொண்டிருந்ததால் ஓடி ஓடி மோட்டார் நிலைகளை மாற்றி மாற்றி அமைத்து தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தனர்.

 

மோட்டார் தாக்குதல் நிறுத்தப்படவே முகாமை அண்டிய பகுதிகளில் வலப்புறமாக ஒரு அணியும், இடப்புறமாக ஒரு அணியும் தாக்குதலை மேற்கொண்டவாறே உள்ளே இறங்கினர். தாங்கள் சுற்றிவளைக்கப்படப்போகும் அபாயத்தைப் புரிந்து கொண்ட படையினர், இறந்தவர்களையும் காயப்பட்டவர்களையும் தூக்கிக்கொண்டு பிரதான படைமுகாமை நோக்கி பின்வாங்க ஆரம்பித்தனர்.

சிவத்தின்  அணியினர் தொடர்ந்தும் முன்னேறினர்.

ஏறக்குறைய இப்போ பிரதான முகாம் மூன்று பக்கங்களாலும் சுற்றிவளைக்கப்பட்டு விட்டது. போராளிகளின் எறிகணைகள் தொடர்ச்சியாக முகாமுக்குள் விழ ஆரம்பித்தன.

 

போராளிகள் மீதான படையினரின் தாக்குதல்கள் பலவீனமடைந்ததிலிருந்தே சிவம் படையினர் குழப்பமடைய ஆரம்பித்துவிட்டனர் என்பதைப் புரிந்து கொண்டான். சக போராளிகளுக்கு மேலும் மேலும் கட்டளைகளை வழங்கி தாக்குதலை வேகப்படுத்தினான்.

போராளிகளின் எறிகணை வீச்சு மெல்ல மெல்ல முகாமின் பின்பக்கத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. அதே நேரத்தில் கட்டளைத் தலைமையிடமிருந்து உடனடியாகவே முகாமுக்குள் இறங்கும்படி கட்டளை வந்தது.

ஏற்கனவே பல இடங்களில் வேவுப் போராளிகள் கம்பி வேலிகளை வெட்டி ஏற்படுத்தியிருந்த பாதைகளைத் திறந்துவிட போராளிகள் புற்றீசல் போல முகாமிற்குள் பாய்ந்தனர்.

 

சண்டை, கைகலப்பு எனச் சொல்லக்கூடிய வகையில் இரு பகுதியினருக்கும் இடையே நெருக்கமாக நடந்துகொண்டிருந்தது.

தாக்குதல்கள் மும்முரமாக இடம்பெற்ற அதேவேளையில் விநியோகப் போராளிகள் பாயும் ரவைகளுக்கு மத்தியிலும், வந்து விழும் குண்டுகளுக்கிடையேயும் சண்டையிடும் போராளிகளுக்கு ரவைகளையும் குண்டுகளையும் வழங்கிக்கொண்டிருந்தனர். அத்துடன் காயமடையும் போராளிகளையும் வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்களையும் அவர்களே உடனுக்குடன் களத்தைவிட்டு வெளியெ  கொண்டுவந்து சேர்த்தனர். சண்டையிடுவதை விட அதுவே பெரும் ஆபத்தான பணியாக இருந்த போதும் அவர்கள் சளைக்காமல் ஓடியோடி தங்கள் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

 

மருத்துவப் போராளிகள் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவியை மேற்கொண்டுவிட்டு, உதவிக்கு வந்த இளைஞர்கள்  மூலம் பண்டிவிரிச்சான் மருத்துவ முகாமுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

 

சுந்தரத்துக்கு களமுனை நிலைமைகள் சற்று பயத்தை நெஞ்சில் இழையோட விட்ட போதிலும் அப்பணிகளைச் செய்வதில் ஒரு உற்சாகமும் நிறைவும் இருப்பதாகவே தோன்றியது. செல்வமும் ஏனைய இளைஞர்களும் கூட ஆர்வத்துடனேயே பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

 

அதிகாலை ஐந்து மணியளவில் இராணுவத்தினர் முற்றாகவே முகாமைவிட்டுப் பின்வாங்கி வெளியேறிவிடவே முகாம் முழுமையாக போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது.

 

இராணுவத்தினரால் கைவிடப்பட்ட துப்பாக்கிகள், ஐம்பது கலிபர்கள், பி.கே.எல்.எம்.ஜி.கள் என்பன சண்டையின் இறுதி நேரத்தின் போதே விநியோகப் போராளிகளால் களத்துக்கு வெளியே கொண்டுவரப்பட்டுவிட்டன. இரு பீரங்கிகளையும் சற்றுச் சிரமப்பட்டே தளங்களிலிருந்து அகற்ற முடிந்தது.

 

பொழுது விடிந்த போது சண்டை நடந்த பிரதேசத்தைவிட்டுப் போராளிகள் வெளியேறிவிட்டனர். வலையன்கட்டு முகாமிலிருந்து எறிகணைகள் வந்து அப்பகுதியெங்கும் வெடித்துக்கொண்டிருந்தன. கிபிர்களும் இரு தடவைகள் வந்து குண்டுகளைப் பொழிந்துவிட்டுப் போய்விட்டன.

 

போராளிகளின் ஒரு பகுதியினர் முகாமிலிருந்து மேலும் சிறிது தூரம் வலையன்கட்டுப் பகுதியை நோக்கி முன்னேறி காடுகளுக்குள் காவல் நிலைகளை அமைக்க ஆரம்பித்தனர்.

 

அள்ளப்பட்ட ஆயுதங்களைக் கீரிசுட்டானில் உள்ள போராளிகளின் முகாமுக்குக் கொண்டுவந்து சேர்ப்பதில் செல்வம், சுந்தரம் உட்பட்ட இளைஞர்கள் வெகு உற்சாகத்துடன் ஈடுபட்டனர்.

 

சுந்தரம் ஐம்பது கலிபரைத் தடவிப் பார்த்துவிட்டு, “மச்சான்.. இதால, எடுத்துச் சுட்டுப்பாக்க வேணும் போல கிடக்குது”, என்றான்.

செல்வம் சிரித்துக்கொண்டே, “கொண்ணையைப் போல வெளிக்கிட்டால் நீயும் சுடலாம் தானே” என்றான். சுந்தரம் எதுவும் பேசவில்லை! ஆனால் மனதில் ஏதோ ஒரு வித சலனம் ஏற்படுவதை மட்டும் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

 

சுந்தரசிவம் வீடு வந்து சேர மதியம் மூன்று மணியாகிவிட்டது. அன்று மதிய உணவு உண்ட பின்பே அவனுக்கு வீட்டுக்கு வரமுடிந்தது.

முள்ளிகுளத்தில் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த போது முருகர் வேட்டைக்காக கீரிசுட்டான் காட்டுக்குள் இறங்கிவிட்டார். அங்கு வெடிச்சத்தங்கள் கேட்க மிருகங்கள் கலைபட்டுக் கீரிசுட்டான் காட்டில் இறங்கும் என்பது அவரின் கணிப்பு. அவரின் அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. நல்ல தாட்டான் மரையொன்று அவரின் கண்ணில் பட்டுவிட்டது. ஒரே நெற்றி வெடியில் மரை தலையைக்குத்திக்கொண்டு அப்படியே விழுந்துவிட்டது. முருகப்பரும் சுப்பையாவும் காவுதடியில் போட்டு மரையை வீதிக்குக் கொண்டுவந்தனர். அது அவ்வளவு இலகுவாக இல்லாத போதிலும் வேட்டை மிருகங்களைக் காவு தடியில் போட்டுக்கொண்டுவருவது அவர்களுக்குப் பழகிப்போன விஷயமாகிவிட்டது.

 

வீதிக்கு வந்ததும் முருகப்பர், ஒரு மரக்குத்தியில் இருந்து கொண்டு, “சுப்பையா.. பொடியளின்ர பேஸில போய் வாகனத்தைக் கொண்டு வந்து இதைக் கொண்டுபோகச் சொல்லு” என்றா்.

சுப்பையா… அவரின் முகத்தைப் பார்துவிட்டு,“அப்ப… எங்களுக்கு..?, என இழுத்தான்.

“டேய்… நாங்கள் நெடுகத்தானே தின்னிறம்.. பொடியள் இரவிரவாய் சண்டை பிடிக்கிறாங்கள்.. நாளைக்கு களை தீர வடிவாய்த்தின்னட்டன்” என்றார் அவர்.

சுப்பையாவும் எதுவும்  பேசவில்லை. போராளிகளின் முகாமை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

 

சுந்தரசிவமும் ஏனைய இளைஞர்களும் கூட அந்த மரை இறைச்சியுடனான சாப்பாட்டை முடித்துவிட்டே புறப்பட்டனர்.

அது ஒரு பெரும் வெற்றியெனவே எல்லோராலும் நம்பப்பட்டது. அப்படியே விட்டிருந்தால் அடுத்து கீரிசுட்டான் பின் பாலம்பிட்டி, தட்சிணாமருதமடு, மடு எனத் தொடர்ந்து இராணுவம் முன்னேற ஒரு வாய்ப்பான சூழல் ஏற்பட்டிருக்கும். இந்த முள்ளிக்குளம் முகாம் தகர்க்கப்பட்ட வெற்றிகரத் தாக்குதல் படையினரின் அந்த திட்டத்தையே தகர்த்துவிட்டது.

 

சங்கரசிவத்தின் மனம் மட்டும், அந்தச் சந்தோஷத்தில் முழுமையாக இறங்க மறுத்தது. அவனின் நீண்டகால தோழனான கணேஸ் படுகாயமடைந்திருந்தான். அவனுக்கு எதுவும் நடந்துவிடுமோ என நினைத்த போது அவனால் அதைத் தாங்கவே முடியவில்லை. ஆனால் அவன் மருத்துவத்திற்காக கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், அவன் தப்பிவிடுவான் என சிவம் நம்பவில்லை.

(தொடரும்)

 

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்.

 

http://tamilleader.com/2013/01/24/neenthikkadanthanerupaaru04/

Edited by ஊர்பூராயம்

  • தொடங்கியவர்

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 05

சிவமும் கணேசும் நீண்டகாலமாகவே ஒரே அணியில் போராட்டங்களில் கலந்துகொண்டதாலோ என்னவோ இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக விளங்கினர். இருவரும் ஒரே விதமான சிந்தனைப் போக்குக் கொண்டவர்களாகவும், ஒரே விதமான ரசனை உள்ளவர்களாகவுமிருந்தனர்.

குடாரப்பு மாபெரும் தரையிறக்கத்தின் போது இருவருமே ஒன்றாக களமிறங்கினர். வெற்றிலைக்கேணியிலிருந்து கொந்தளித்துக்கொண்டிருந்த  கடலில் படகுமூலம் குடாரப்பு நோக்கிப் பயணித்தபோது கடல் பற்றிய எந்த ஒரு அனுபவமும் இல்லாத சிவத்துக்கு கணேஸ்தான் தைரியமூட்டினான்.

ஒரு புறம் ஆனையிறவு இராணுவத்தின் முன்னேற்ற முயற்சி, மறுபுறம் முகமாலை இராணுவத்தின் நகர்வு நடவடிக்கைகள், எறிகணை வீச்சுக்கள், கிபிர் தாக்குதல்கள் எனப் பேராபத்துக்களின் மத்தியில் முப்பது நாட்கள் அவர்கள் ஈட்டிய சாதனைகள் ஏராளம். பக்கத்தில் நின்ற போராளி வீரச்சாவடைய அவனுக்காக அஞ்சலிக்கவே நேரமின்றி அடுத்த தரம் துப்பாக்கி தூக்கும் அவலத்தை அவர்கள் எத்தனையோ தரம் சந்தித்தனர். கைகலப்பாக நெருங்கிய சண்டைகள் இடம்பெறும் போது எத்தனையோ தரம் கணேசை சிவமும், சிவத்தை கணேசும் காப்பாற்றியிருக்கிறார்கள்.

ஆனையிறவு வெற்றிகொண்டு கொடியேற்றிய போது இருவருமே அருகருகே நின்று கொடிவணக்கம் செய்ததை இருவரும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி மகிழ்ச்சியடைவதுண்டு.

இருவரும் ஒருவரிடம் ஒருவர் எதையும் மறைத்ததில்லை. கணேஸ் தன் காதலைப்பற்றி சிவத்திடம் தான் மனம் திறந்து கதைப்பதுண்டு.

முல்லைத்தீவு படைத்தளத் தாக்குதலின் போது தான் கணேஸ் ரூபாவை முதன் முதல் சந்தித்தான். அளம்பிலில் தரையிறங்கிய இராணுவத்தினர் மேல் நடத்தப்பட்ட தாக்குதலின் போது கடலில் ஏவப்பட்ட ஒரு எறிகணையால் ரூபா காயமடைந்துவிட்டாள். அதைக் கண்டுவிட்ட கணேஸ் அவளைத் தோளில் கொண்டுவந்து மெடிக்ஸ் போராளிகளிடம் ஒப்படைத்தான். அந்தச் சம்பவத்துடன் அவர்களுக்குள் ஏற்பட்ட தொடர்பு காதலாக மாறிவிட்டது.

கணேஸ் – ரூபா எழுதிய கடிதங்களை சிவத்துக்கு வாசித்துக்காட்டுவான். தான் எழுதும் கடிதங்களையும் அவன் படிக்கக்கொடுத்ததுண்டு. சிவத்தால் மதிய உணவைக் கூடச் சரியாகச் சாப்பிட முடியவில்லை. பொறுப்பாளரிடம் அனுமதி பெற்றுவிட்டு பண்டிவிரிச்சானை நோக்கிப் புறப்பட்டான் சிவம்.

அவன் தட்சிணாமருதமடுவை வந்தடைந்தபோது பொதுநோக்கு மண்டபம் மஞ்சள், சிவப்பு கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.

முள்ளிக்குளம் சண்டையில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். அவர்களின் அஞ்சலி நிகழ்வுக்காக மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது என்பதை சிவம் புரிந்துகொண்டான்.

அந்தச் சண்டையின் வெற்றி மூலம் தங்கள் பகுதிக்குள் இராணுவம் ஊடுருவுவது தவிர்க்கப்பட்டு விட்டதாகவே அம் மக்கள் மனமார நம்பினர். எனவே வீரச்சாவடைந்த போராளிகள் தங்களுக்காகவே உயிரைத் தியாகம் செய்தவர்கள் எனக் கருதிய காரணத்தால் எல்லையற்ற ஒரு வித மதிப்புடன் அவர்கள் அஞ்சலி செய்யக் காத்திருந்தனர்.

தற்சமயம் போராளிகளின் வித்துடல்கள் அவர்களின் வீடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும், அஞ்சலிக்காக அங்கு நான்கு மணிக்கு கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அங்கு ஒரு மாலையுடன் நின்றிருந்த முத்தம்மா அவனைக் கண்டதும் அவனை நோக்கி வந்தாள்.

சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு காலை நிலத்தில் ஊன்றியவாறு நின்ற சிவம் அவளைப் பார்த்து, “எங்கட வீட்டையிருந்து ஒருதரும் வரயில்லையே?” எனக் கேட்டான்.

“ஐயா, முதலே வந்திட்டார். அம்மா இனித்தான் வருவா” என்றாள் முத்தம்மா!

“நான் இஞ்சாலை பண்டிவிரிச்சானுக்குப் போறன், அம்மாட்டைச் சொல்லிவிடு”, என்றுவிட்டுச் சைக்கிளை மிதித்தான் சிவம்.

அவன் பண்டிவிரிச்சானில் உள்ள மருத்துவமுகாமில், மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று உள்ளே போன போது, கணேசுக்கு செயற்கைச் சுவாசம் ஏற்றப்பட்டிருந்தது.

அரவம் கேட்டு மிகவும் சிரமப்பட்டுக் கண்களைத் திறந்தான் கணேஸ், சிவம் மெல்ல அவன் கைகளைப் பற்றிக்கொண்டான். கணேசின் முகத்தில் மெல்லிய புன்னகை படர்ந்தது.

அவனின் வாய் மெல்ல அசைந்தது. குரல் வெளிவரவில்லை.

அந்த அசைவைப் பொறுத்து அவன் “ரூபா” என்று அழைக்கிறான் என்பதை சிவம் புரிந்து கொண்டான். ரூபாவோ, மத்தியானம் அறிவிச்சனான். எப்பிடியும் வந்திடுவாள், என்றான் சிவம்.

ஒரு முறை கண்களை மூடிய அவன் சில விநாடிகளின் பின் அவற்றைத் திறந்திருந்தான். மீண்டும் அவன் ரூபா என்று சொல்வதைப் போல் வாயை அசைத்துவிட்டு, கையை மெல்ல உயர்த்தி சிவத்தை நோக்கி விரலை நீட்டினான்.

அவன் என்ன சொல்ல முனைகிறான் என்பதைச் சிவத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை. கணேசனின் கண்களிலிருந்து எதையாவது அறிந்துகொள்ள முடியுமா? என அவன் முயற்சித்த போதும் அதுவும் முடியவில்லை.

சிவம் மெல்ல கணேசின் தலையை வருடிவிட்டான்.

ஏதோ ஒரு உத்வேகத்தில் திடீரென செயற்கைச் சுவாச மூடியை கையில் எடுத்த கணேஸ், “ரூபாவ நீ.. கை.. விட்டுடாத..’ என வெகு சிரமப்பட்டுச் சொல்லிவிட்டு மீண்டும் அதனை மூடிக்கொண்டான். அவனின் வயிறு அதிகமாக மேலெழும்பி இறங்க ஆரம்பித்தது.

சிவம் பயந்துவிட்டான். அவன் ஓடிப்போய் மருத்துவப் போராளியைக் கூட்டி வந்தான். அவர், உடனடியாகவே நேரில் பார்த்தவரைப் போல், “செயற்கை சுவாசத்தை கழட்டினவரே?” எனக் கேட்டார்.

அவன், ஆமெனத் தலையசைத்தான்.

“நல்ல வேளை, இன்னும் இரண்டு நிமிஷம் அப்பிடியே கழட்டி விட்டிருந்தால் பெரிய ஆபத்திலை முடிஞ்சிருக்கும். நாங்கள் இதால தான் பாக்கிறதுக்கு ஆக்கள விடுறதில்லை” என்றார் மருத்துவர் சற்றுக் கடுமையாக.

“நான், அப்பிடிச் செய்வாரெண்டு எதிர்பார்க்கேல்ல”, என்றான் சிவம் ஒருவித குற்ற உணர்வுடன்.

மருத்துவர், “சரி, சரி.. இனி நீங்கள் போங்கோ.. அவர் அமைதியாக தூங்க வேணும்” என்றார்.

சிவம் குனிந்து தலையை ஆட்டி கணேசிடம் விடைபெற்றுவிட்டு வெளியே வந்தான். கூடவே வந்த மருத்துவரிடம் “என்ன மாதிரி டொக்டர் நிலைமை இருக்குது”, எனக் கேட்டான்.

மருத்துவர் சற்று நிதானித்துவிட்டு, “இப்ப ஒண்டும் சொல்ல முடியாது. இருதயம் வலு பலவீனமாகத் தான் வேலை செய்யுது. நாங்கள் எல்லா முயற்சியும் செய்து கொண்டிருக்கிறம்”, என்றார்.

“கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக ஏலாதே?”, “அங்க இருக்கிற எல்லா வசதியும் இங்கயும் இருக்குது. மற்றது இப்ப பயணம் செய்யிற நிலைமையில அவர் இல்லை”

சிவம் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான்.

கணேஸ், “ரூபாவைக் கைவிட்டுடாதை” என்று சொன்ன வார்த்தைகள் அவனைப் பெருங்குழப்பத்தில் ஆழ்த்திவிட்டன.

ஒரு நாள் முகாமில் ஓய்வாயிருந்த போது இருவரும் பேசிக் கொண்டது சிவத்தின் நினைவுக்கு வந்தது,

கணேஸ் ரூபாவின் கடிதத்தை சிவத்துக்கு வாசித்துக் காட்டிவிட்டு, “சிவம்.. இப்படி என்னிலை உயிரையே வைச்சிருக்கிறாள். நான் வீரச்சாவடைஞ்சதால் என்ன செய்வாள்?” எனக் கேட்டான்.

சிவம் மெல்லச் சிரித்துக் கொண்டே, “மாவீரன்ரை மனைவி எண்ட பெருமையோட வாழ வேண்டியது தான்”, என்றான்.

திடீரென அவனின் முகம் இறுகியது.

“இல்லை.. அவளை இந்தச் சமூகம் விதவை எண்டு சொல்லக் கூடாது..’

“அப்பிடியெண்டால்…”

“அவள் இன்னொருதனைக் கலியாணம் கட்ட வேணும். அது கட்டாயம் நீயாத் தான் இருக்க வேணும்”

சிவம் அதிர்ந்தே போய்விட்டான்.

அவன் பின்பு சுதாகரித்துக் கொண்டு, “என்ன விசர்க்கதை கதைக்கிறாய்… அவள் உன்ரை காதலியல்லே”, என்றான்.

“அவன் அழுத்தமாகச் சொன்னான், “அதாலை தான் சொல்லுறன். என்னையும் அவளையும் நன்றாய்ப் புரிஞ்சு வைச்சிருக்கிற உன்னைவிட அவளுக்கு வேறை பொருத்தமானவன் இருக்க முடியாது”,

சிவம் ஒரு முறை தடுமாறிப் போனான். நட்பைப் பொறுத்தவரையில் அவனும் கணேஸைப் போலவே கருதினான். ஆனால் ரூபா விஷயத்தை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

“உன்ரை இப்பிடியான மடத்தனமான யோசினையை ரூபாவிட்ட சொன்னியெண்டால் உன்ரை காதலே வேண்டாமெண்டு கை கழுவி விட்டிடுவாள்”

“சொன்னனான், அவள் உங்களுக்கு முதல் நான் வீரச்சாவடைஞ்சிடுவன் எண்டு ஒரே வசனத்தில கதையை முடிச்சுப்போட்டாள்”, என்றுவிட்டு புன்னகைத்தான் கணேஸ்.

“நானும் அப்பிடித்தான், உனக்கு முன்னால வீரச்சாவடைஞ்சிடுவன்”, என்றான் சிவம்.

அந்த நினைவுகளைத் தூக்கியெறிய முனைந்த போதும் ஏனோ முடியவில்லை. ஆனால் கணேசுக்கு எந்த ஆபத்தும் வராது எனத் திடமாக நம்பினான் அவன்.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்.

http://tamilleader.com/2013/01/27/neenthikkadanthanerupaaru05/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.