Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது உறவிலும் ஒரு புதிய பாதை உலக உறவிலும் ஒரு புதிய பாதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது உறவிலும் ஒரு புதிய பாதை உலக உறவிலும் ஒரு புதிய பாதை

தத்தர்
 

வீழ்ந்தோம் ஆயினும் வெல்வோம் வீழ்ச்சியின் அளவையும் தன்மையையும் விளங்கிக் கொண்டால்.

 

நாம்பட்ட இன்னலாலும் எமக்கு ஏற்பட்ட அளப்பெரும் தோல்வியாலும், துயரத்தாலும் எம்மை ஒட்டி இணைக்க முடியவில்லை என்றால் வளம் பொருந்திய எமது பண்பாட்டின் அர்த்தந்தான் என்ன?

 

இந்து மாகடலை செந்நீராக்கிய இரத்தத்தாலும் எம் இதயத்தை கழுவமுடியாது போனதா? ஆறாய்ப் பெருகிய கண்ணீராலும் எம் வேறுபாடுகளைக் கழுவிச் சுத்தம் செய்ய முடியாது போனதா? வரலாறு எழுப்பும் இக் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும்.

 

வீழ்ச்சியிலிருந்து நாம் மீழ்ச்சி பெறப் போவது எப்போ என்ற கேள்விக்கான பதில் மிகவும் இலகுவானது. எப்போது நாம் எம் வேறுபாடுகளைக் கடந்து துயரப்பட்ட எமது மக்களின் பெயரால் ஒன்றினைகின்றோமோ அப்போதே நாம் மீழ்ச்சி அடைந்துவிடுவோம்.

 

எங்களுக்குள் நாங்கள் பரஸ்பரம் 'துரோகிகள்' எனப் பட்டம் சூட்டிக்கொண்டிருப்பதில் எங்கள் சக்தியும் பொழுதும் கழிகின்றது. இந்த இடைவெளியில் எதிரி குதிரை வேகத்தில் முன்னேறுகிறான்.

 

எதிரியைப் பார்த்துக் கேள்விகேட்பது இலகுவானது எம்மைப் பார்த்து நாம் கேள்விகேட்பது கடினமானது என்பது மட்டுமல்ல, கேட்பதே இல்லை என்பதுதான் உண்மை.

 

நாம் பெருவீழ்ச்சி அடைந்து நான்கு ஆண்டுகளை எட்டப் போகிறோம். ஆனால் இன்னும் எம்மத்தியில் ஒரு புரிந்துணர்வும் கைகோர்த்துச் செயற்படும் மனப்பாங்கும் ஏற்படவில்லை. ஆறாத புண்ணாயும் மாறாத வடுவாயும் இருக்கக் கூடிய தோல்வி எமக்கு ஏற்பட்டுள்ளது. இப்போது இதிலிருந்து மீள எல்லோரும் ஒன்றாய் கரம் கோர்த்துச் செயற்பட்டு ஆகவேண்டும்.

 

தோல்விக்குப் பின் எம்மை ஓர் ஐக்கியப்பட்ட அமைப்பாக உருவாக்குவதிலும் தோல்வியைச் சுதாகரித்து நிமிர்வதிலும் நாம் இன்னும் முதலடியைக்கூட எடுத்து வைக்கவில்லை. 1967ஆம் ஆண்டு அரபு-ஸ்ரேலிய யுத்தத்தில் நாஸார் தலைமையில் அரபுக்கள் வெற்றி பெறுவர் என முழு அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் ஸ்ரேலியப் படை எதிர்பாராத பெரு வெற்றியை ஈட்டி அரபுக்களின் கூட்டுப்படையைப் பெரிதும் தோற்கடித்தது.

 

அரபுக்களின் தோல்வி ஏற்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன் அரபுக்களின் வெற்றி பெருமளவு ஊர்ஜிதம் போல் தோன்றியது. முன்னேறிய அரபுப் படைகளைக் கண்டு நாஸார் பின்வருமாறு கூறினார். 'இன்னும் சிலமணி நேரங்களுக்குள் இஸ்ரவேல் என்கின்ற ஒரு நாடு உலகப்படத்திலிருந்து அழிறபரால் அழிக்கப்பட்டுவிடும்' ஆனால் இறுதி நேரத்தில் அனைத்து வளங்களையும் ஒருங்கினைத்த குறுங்கால முழு அளவிலான தாக்குதல் யூதர்களின் புதிய இராணுவ உத்தியினால் அரபுப் படைகள் எதிர்பாராத அளவு மூர்க்கமாய் தாக்கி அழிக்கப்பட்டனர். அரபு-ஸ்ரேலிய யுத்தம் யூதர்களின் வெற்றியில் முடிந்தது. அப்போது மோசே தயான் பின்வருமாறு கூறினார். 'நாஸார் தனது விழுப்புண்ணை நக்க எழும்புவதற்கு குறைந்தது இன்னும் 15ஆண்டுகளாவது எடுக்கும்' சிங்கள அரசு இப்படிப்பட்ட ஓர் எண்ணத்தோடுதான் எம்மீது ஒரு மூர்க்கமான தாக்குதல் நடத்தி நாம் எமது விழுப்புண்ணை நக்க எழும்ப முடியாது செய்யவேண்டும் என்று எண்ணிச் செயற்படுகின்றது.

 

ஆனால் நாமோ எம்மை அழிக்க எதிரி தேவையில்லை நாமே எம்மை அழித்து விடுவோம் என்ற ரீதியில் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாய் ஒருவரை ஒருவர் வசைபாடுவதிலும் திட்டித்தீர்ப்பதிலும் ஒருவரைஒருவர் எதிரிக்கு அடையாளங் காட்டும் வகையிலும் தெரிந்தோ தெரியாமலோ செயற்பட்டு வருகிறோம்.

 

எமது தோல்வியாலும் துயரத்தாலும், வலியாலும் வேதனையாலும், செந்நீராலும் கண்ணீராலும் எம்மை ஒட்டி இணைக்க முடியவில்லை என்றால் நாம் எழுந்து முதலில் எம் விழுப்புண்ணை நக்கிட முடியவில்லை என்றால் எம் பயணத்தையும் விடுதலையையும் பற்றி எப்படித்தான் கற்பனை செய்ய முடியும்?

 

அரவணைப்பிற்குத் தயாராகுங்கள். வேற்றுமையில் ஒற்றுமையைக் காண சித்தமாகுங்கள். எமது தந்தையர் நாட்டினையும் அன்னையர் பூமியையும் எம் பிள்ளைகளின் தொட்டிலையும் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கான பால்புட்டிகளையும் நாம் பாதுகாத்து ஆகவேண்டும். எல்லாவற்றுக்கும் அடிப்படையாக புத்திபூர்வமான அரசியல் பார்வையும் நடைமுறைக்குப் பொருத்தமான அரசியல் தீர்மானங்களும் யதார்த்தத்திற்கு ஏற்ற செயல்முறைத் திட்டங்களும் கொண்டு ஒரு புதிய யுகத்திற்கான ஒரு புதிய பாதையில் நாம் நடைபோட்டு ஆகவேண்டும்.

 

விடுதலையும் சுதந்திரமும் ஒரு நேர்கோட்டுப் பயணமோ தங்கத்தாம்பாள விருந்துப் பொருளோ அல்ல. யாரும் தங்கத் தாம்பாளத்தில் எமக்கு எதனையும் நீட்டமாட்டார்கள். எல்லா அரசுகளும் தத்தம் அரச நலன்களுக்காகவே செயற்படும். எமக்காக குரல்கொடுக்க இந்த பூமியில் ஓர் அரசும் இல்லை. ஆனால் ஓர் அரசனும் தத்தமக்கு இடையேயான போட்டிகளின் நிமிர்த்தம் பரஸ்பர தேவை என்னும் ஒரு புள்ளியில் நட்பாகவோ, கூட்டாகவோ, அணியாகவோ மாறுகின்றன. கற்புள்ள அரசென்று எதுவுமில்லை. இலட்சியத்திற்காகத் தோள் கொடுக்கும் அரசென்றும் எதுவுமில்லை. ஆதாலால் பரஸ்பர நலனென்னும் ஒரு புள்ளியில் அரசுகள் சந்திப்பதே யதார்த்தம் என்பதனால் அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நாம் எமக்கான உறவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

இதில் நீண்ட கால நட்பு, குறுங்கால நட்பு, உடனடி நட்பு, பாதிவழி நட்பு என நட்புக்களின் அளவுகள் வேறுபடலாம். நேற்றைய எதிரி இன்றைய நண்பனாகலாம். இன்றைய நண்பன் நாளைய எதிரியும் ஆகலாம். ஆனால் எமக்குத் தேவைப்படுவது உடனடி அர்த்தத்தில் யாரையெல்லாம் நண்பராக்க முடியுமோ அவரை எல்லாம் நண்பராக்குவதுதான். இதுதான் சர்வதேச உறவில் நட்புப் பற்றிய கோட்பாடு ஆகும். இது சர்வதேச அரசியலுக்கு மட்டுமல்ல உள்நாட்டு அரசியல் சக்திகளுக்கும் பொருந்தும். இப்போது எம்மத்தியிலும், வெளிநாட்டிலும் எமக்குத் தேவையான நட்பு வட்டத்தை உள்ளும் புறமும் எனப் பரந்தளவில் உருவாக்க வேண்டும். இதற்கு ஒரு செழிப்பான பண்பாடும் வளமான மனப்பாங்கும் வேண்டும். கூடவே கூர்மதியும் வேண்டும். எல்லாவற்றையும் எமது மக்களின் விடுதலைக்கு கீழ்ப்படுத்துவோம். கோபத்தையும் தாபத்தையும் இரண்டாம் பட்சமாக்குவோம்.

 

நேற்றைய எதிரியுடன் இன்று கைகோர்க்கக் கற்றுக்கொள்ளாதவன் எவனோ அவன் அரசியல் அகரவரிசையே தெரியாதவன் ஆவான்.

 

கர்வம், அகங்காரம், தான்தோன்றித் தனம் என எல்லாவற்றையும் வெட்டிப் புதைத்து விடுதலைக்கு உரமாக்குவோம்.

 

தெளிந்த பார்வையும் ஆகக் குறைந்த ஒத்த புள்ளியில் ஆகக் கூடிய ஐக்கியமும் யதார்த்தம் பற்றிய நுண்ணுனர்வும் கொண்டு விடுதலைக்கு வழிசமைக்க வேண்டும். ஆடைக்குள் சிலந்தி நுழைந்துவிட்டால் மாமி என்ன மருமகன் என்ன அண்ணன் என்ன தங்கை என்ன சபை என்ன சந்து என்ன தூயஒழுக்கம் பேசாது ஆடையை மீறி சிலந்தியை அகற்ற வேண்டியதுதான் யதார்த்தம். யதார்த்தம் என்ற சிந்தனை நடைமுறை சார்ந்த சரியையே போதிக்கிறது. எமது விடுதலைக்குப் பொருத்தமான யதார்த்தபூர்வ செயல்கள் எமக்கு வேண்டுமே தவிர நடைமுறைக்குப் பொருந்தாத தூய்மைவாதம் அல்ல. எல்லா தூய்மைவாதிகளும் இறுதி அர்த்தத்தில் சாத்தானின் நண்பர்கள்தான்.

 

நான் லெனினை அதிகம் மதிக்கிறேன். ஏனெனில் அவர் தத்துவத்தை நடைமுறைக்குப் பொருத்தமாக யதார்த்தத்தில் வடிவமைத்தவர். 'ஓரடி பின்னால் ஈரடி முன்னால்' என்று ஈரடியை முன்னால் வைப்பதற்காக ஓரடியைப் பின்னால் எடுத்தவர். இவ்வாறானவனே நடைமுறைக்கான வழிகாட்டி ஆவான். ஓரடி பின்னால் இழுத்ததிலும் ஈரடி முன்னால் எடுத்ததிலும் முன்னும் பின்னுமென மூன்றடி நகர்வுகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இதில் ஓரடி முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது என்பதே யதார்த்தத்தில் மிஞ்சும் பொருளாகும். ஓரடி மிஞ்ச மூன்றடி நகரவேண்டி இருந்த இந்த அரசியல் யாதார்த்தத்தை எல்லோரும் கருத்தில் எடுத்தாக வேண்டும். எமது நிலையில் இவ்வாறான பார்வை மிகவும் முக்கியம். எடுத்த எடுப்பில் மூன்றடி நகர்ந்து மூன்றடி மிஞ்சுமெனக் கனவுகாணக் கூடாது.

 

சாணக்கியன், கவுண் கவூர், பிஸ்மார்க் என தமது இராஜதந்திர நகர்வுகளால் தத்தமது அரசுகளுக்கு வெற்றிதேடிக் கொடுத்த இராஜதந்திரிகளையும் முதலமைச்சர்களையும் வரலாறு எம் கண்முன் காட்டுகிறது.

 

குறைந்தபட்சப் புள்ளியில் கூடியபட்ச ஐக்;கியத்தை உருவாக்கி சோசலிசப் புரட்சியை வெற்றி ஆக்கியவர் லெனின். 1917ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சி நடக்கும் போதும் லெனின் 21அமைப்புக்களுடன் கூட்டுச் சேர்ந்து புரட்சியை வெற்றியில் முடித்தார். ஆனால் பின்பு அவர் 1924ஆம் ஆண்டு மறைவதற்கு முன் படிப்படியாக முரண் உள்ளோர் அகற்றப்பட்டு பொல்சிவிக் கட்சி தனிப்பெருங் கட்சியாய் விளங்கியது. இங்கு கூட்டும் பிரிவும் வெற்றியையும் குறித்த இலக்கையும் மையமாகக் கொண்டு நிகழ்ந்துள்ளது. லெனின் கூட்டுச் சேரும் போது எதிரிக்கெதிராக ஒன்றிணையக்கூடிய அனைவரையும் ஒருபக்கம் கொண்டுவந்தார். புரட்சி வெற்றி பெற்றதும் புரட்சி இல்லத்தில் பிறளக் கூடியவர்களைவிட்டு இலக்கு நோக்கிய பயணத்தைப் பலப்படுத்தினார். எனவே இங்கு கூட்டிலும் பிரிவிலும் இலக்குப் பிசகாமலே இருந்தது. இலக்கைக் காப்பதற்கு காலத்தின் கட்டளையாக எவ்வளவு அதிகபட்ச உறவைத் தேட முடியுமோ அவ்வளவு அதிகபட்ச உறவைத் தேடவேண்டும்.

 

முன்னேறினால் ஒரே பிடியில் மூன்று அடிதான் முன்னேறுவேன் என்று பிடித்த பிடியில் நின்றால் ஓர் அங்குலம் கூட முன்னேறாமல் போகநேர்வது துர்ப்பாக்கியம். ஆனால் மூன்றடி நகர்ந்து ஓரடி முன்னேறக் கூடிய நிலமைதான் யதார்த்தத்தில் சாத்தியம். இந்த அரசியல் யதார்த்தம் ஈழத்தமிழருக்கு விதிவிலக்கானதல்ல. திட்டமில்லாதவன் பிறரைத் திட்டுவதிலேயே பொழுதைக் கழிப்பான். ஆதலால் திட்டுவதை நிறுத்தி திட்டங்களை முதன்மைப்படுத்த வேண்டும்.

 

இன்று நாம் துரோகிகள் என்று முத்திரை குத்தும் பலர் நேற்று எம்முடன் தோளோடு தோள் நின்றவர்கள். அவர்கள் எமக்கெதிராக ஏன் எதிரியின் பாசறையில் இணைந்து கொண்டார்கள் என்பதற்கான பதிலைக் கண்டு எதிரிகள் பக்கம் போவதற்கான வாய்ப்பு நிலையை உருவாக்குவதற்குப் பதிலாக நாம் அவர்களைத் திட்டி எதிர்க்க ஆள் சேர்த்துக் கொடுக்கும் பணியை அதிகரித்து எமது நேரத்தையும் வலுவையும் வீணாக்கி எம்மை மேலும் மேலும் பலவீனப்படுத்துகிறோம். அழுகிற பிள்ளைக்கு அடித்து அழுகையை அதிகரிப்பதற்குப் பதிலாக அது அழுவதற்கான காரணத்தைக் கண்டு அதனைத் தீர்க்க முயல்வதுதான் சரியான அணுகுமுறை ஆகும். அழுகின்ற பிள்ளைக்கு அடிப்பதன் மூலம் எமது ஆத்திரம் தீரலாம் ஆனால் அழுகை அதிகரிக்கும் அல்லது வன்மம் வளரும். சிறிய இனம் என்ற குறைந்தபட்ச முன்னறிவுடன் அதிகபட்ச அதிகரிப்பை முதன்மைப்படுத்த வேண்டும். ஏன் எம்மத்தியிலிருந்து எம்மோடு தோளோடு தோள் கோர்த்து நின்று ஒருகோப்பையில் சோறுண்டு ஒன்றாகவே இரத்தம் சிந்திய எமது தோழர்கள் ஏன் எதிரியின் பாசறைக்கு திசை மாறுகின்றார்கள் என்ற கேள்வியை பொறுப்புடன் நாம் கேட்டு அதனைத் தனிக்க பாடுபடவேண்டும். எல்லா நோக்கும் அறுவைச் சிகிச்சை தீர்வாகாது.

 

சங்க காலத்திலிருந்து சங்கமருவிய காலம் தோன்றியது போல அன்பும் அறமும் சொல்லவல்ல எம்மத்தியிலான ஓர் அரவணைப்பு வேண்டும். இப்படி திட்டித்தீர்ப்பதில் சுயதிருப்தி அடைகிறோமே தவிர பொறுப்பான முறையில் தேவைகளைக் கருத்தில் கொண்டு திட்டமிடல்களையும் செயற்பாடுகளையும் மேற்கொள்வதாயில்லை.
 
சிறிய சனத்தொகையினராகிய நாம் எமக்குள் திட்டுப்பட்டு எமக்குள் துண்டுபடுவதற்குப் பதிலாக, இப்போது எம்மத்தியிலும் அதிகபட்ச ஐக்கியத்தை உருவாக்க வேண்டிய வரலாற்றுக் கட்டளை உண்டு. சர்வதேச அரசுகள் மத்தியிலும் அதிகபட்ச நட்பைத் தேடவேண்டிய வரலாற்றுக் கட்டம் எழுந்துள்ளது.
 
எதிரியிடமிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வோம். முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது அமெரிக்காவை இராஜபட்சாக்கள் தமது நண்பராக்கினர். ஆனால் முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்ததும் அவர்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முரண்பாடு வளரத்தொடங்கியது. அமெரிக்காவை நண்பராக்கிய போதும் அமெரிக்காவை எதிரியாக்கிய போதும் அவர்களது இலக்கு ஒன்றாகவே இருந்தது. தமிழினத்தை ஒடுக்குவது என்பதே அந்த ஒரே இலக்கு. எனவே தமக்குத் தேவைப்பட்ட போது நண்பராகவும் தேவைப்படாத போது எதிரியாகவும் கையாளக் கூடிய கலையில் அவர்கள் விற்பனர்கள். அமெரிக்காவும் ஈரானும் ஒன்றுக்கொன்று எதிரி நாடுகள். ஆனால் எதிரும் புதிருமான அந்த இரண்டு நாடுகளையும் முள்ளிவாய்க்கால் என்ற ஒரு புத்தப்புள்ளியில் இராஜபட்சாக்களால் தம் பக்கம் வைத்திருக்க முடிந்தது. இவ்வாறு உலகின் எதிரும் புதிருமான நாடுகளைக்கூட இராஜபட்சாக்கள் தமது அண்டையில் ஒன்றினைத்து வைத்திருந்தார்கள். நாளை எதிரி இன்றைய நண்பர்களாக பேணக்கூடிய கலையை சிங்கள இராஜதந்திரிகளிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது.
 
முள்ளிவாய்க்கால்ப் படுகொலை-சர்வதேச விசாரணை என்ற ஒரு சூத்திரத்தில், இந்த ஒரு புள்ளியில் அனைத்துத் தமிழர்களும் ஒன்றுசேரக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த சூத்திரத்தில் ஆகக் குறைந்த பட்சம் குரல் எழுப்புவோர், கூடிய பட்சம் குரல் எழுப்புவோர் என அனைத்துச் சக்திகளுடனும் கூட்டுச் சேர்ந்து கோரிக்கையை மேல் மட்டத்திற்கு எடுத்துச் செல்ல அனைவரும் பாடுபட வேண்டும்.
 
இதில் குறைந்த பட்சக் குரல் எழுப்புவோரை தூண்டி முன்னேற்றவும் கூடிய பட்சக் குரல் எழுப்புவோரோடு சேர்ந்து பயணிக்கவும் தயாராக வேண்டும். எங்கள் இலக்குவரை அவர்கள் அனைவரும் எம்முடன் சேர்ந்து வருவார்கள் என்றில்லை. ஆனால் அவர்கள் எங்களுடன் இணைந்து வரக்கூடிய புள்ளிவரை அவர்களுடன் இணைந்து சென்று காலம் தரும் மறுகட்ட சந்தர்ப்பத்தைக் கையிலெடுத்து நம் பயணத்தைத் தொடரவேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் நாம் முன்னேறவென்று எமக்கென்று ஏதோ ஓர் அளவில் ஓர் இடமிருக்கும். அந்த ஓர் அளவை அந்தந்த அளவில் தீர்மானித்து எமது மொத்த அளவை நாம் அடையவேண்டும்.
 
கூடு குலைந்து காடு கலைந்து வாழும் எமது மக்களின் வாழ்வை ஒருகணம் எம் கண்முன் நிறுத்துவோம். மட்டக்களப்பில் மட்டும் பதியப்பட்டோரில் எண்பதாயிரம் இளம் விதவைகள் உண்டு. இதைவிட கிழகின் ஏனைய பகுதிகள், வன்னி, யாழ்ப்பாணம் என இப்புள்ளி விபரத்தின் பட்டியல் நீழும். தாயற்ற பிள்ளைகள், தந்தையற்ற பிள்ளைகள், பெற்றோர் அற்ற பிள்ளைகள், உழைப்பாளி அற்ற குடும்பங்கள் ஒன்றுக்குப் பலவென சாவீடு கண்ட குடும்பங்கள் ஊனமுற்றோர் குடும்பங்கள், இறந்தோரின் நினைவை துயராய் சுமக்கும் குடும்பங்கள் என ஈழத்தமிழரின் சீர் குழைந்த வாழ்வை ஒருகணம் முன்நிறுத்துவோம். ஈழத்தில் அகதிகள் இந்தியாவில் ஒன்றரை இலட்சம் அகதிகள் உலகம் முழுவதும் அகதிகளாய் அலைவோர் என எமது துயர்தோய்ந்த பட்டியல் நீண்டு செல்கிறது.
 
இந்தியாவில் மட்டும் அகதிமுகாம்களில் 60ஆயிரம் அகதிகளும் வெளிப்பதிவில் 90ஆயிரம் அகதிகளும் வாழ்கின்றனர். இந்த அகதிகளில் பெரும்பாலான பெண்களும் தாய்மார்களும் செங்கல் சூலைகளிலும், கொத்தனார் தொழில்களிலும் ஈடுபடுகிறார்கள். பெருமளவு குடும்ப நிறுவனமும் உறவினருடனான வாழ்க்கைத் தொடர்புகளும் துண்டித்து வாழ்கிறார்கள்.
 
இப்போது அவசர அவசரமாய் ஈழத்திலும் தமிழகத்திலும் அடிப்படை வாழ்வாதாரம் இன்றி அல்லலுறும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய செயற் திட்டங்களில் நாம் ஈடுபட வேண்டும்.
 
இதற்கென ஒரு நம்பிக்கைக்குரிய நிதியத்தை உருவாக்கி நிதிதிரட்டி இந்த மக்களுக்கு உதவவேண்டிய அவசியமுண்டு. நிதியைக் காட்டாறாக்காமலும் கேட்போருக்கெல்லாம் நிதி நீட்டாமலும் ஒரு நிதியத்திற்குள்ளாக நிதியைத் திரட்டி பொறுப்பான முறையில் வேண்டியவர்களை நிதி சென்றடைய வேண்டும். இப்படியொரு நம்பிக்கை நிதியத்தை உருவாக்கவேண்டிய முக்கியமான ஒரு பணி புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உண்டு. நிதியைத் தமிழர்களிடம்தான் சேர்க்கவேண்டுமென்பதில்லை. கொடையாளிகள், நீதிமான்கள், வசதிபடைத்தோர் என நிதியை வழங்கக்கூடிய அனைவரிடமும் நிதியைத் திரட்டலாம்.
 
அடுத்து எல்லாவற்றிற்கும் அடிப்படையான தகவல்கள் தேவை. இந்தவகையில் ஒரு தகவல் மையத்தை உருவாக்கி சிறப்பாக, விஞ்ஞான பூர்வமாக தகவல்களைச் சேகரித்து பேணவேண்டும். குறைந்த பட்சம் இந்த விடயங்களிலாவது ஒன்றுபட்டு செயற்பட அனைவரும் முன்வர வேண்டும். எல்லாவற்றிலும் தேர்ந்தெடுத்தல் என்பதை முதன்மைப்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் நலன்களைப் பேண பல்வேறு மட்டங்களிலும் தேர்ந்தெடுத்த அமைப்புக்களை உருவாக்க வேண்டும். முதலில் நாமொரு கருத்துரிமைக்கு வருவோம். அதாவது கைவிடப்பட்ட கேட்பாரின்றிக் கொல்லப்பட்ட துயருறும் எமது மக்களுக்காக எம்மிடையேயுள்ள பேதங்களை மறந்து குறைந்த பட்ச புள்ளியில் கூடியபட்ச ஐக்கியமடைவது.
 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=7&contentid=eb734779-e78e-445f-ab6c-3af214463584

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.