Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆரிய பவுத்த சிங்கள பேரின வாதமும் தீர்வும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆரிய பவுத்த சிங்கள பேரின வாதமும் தீர்வும்

 ராஜசங்கர்


வெகு நாட்களாக என் மனதை அரித்த கேள்விகளான ஏன் ஒரு சாதாரண மனிதர்கள் கொடும் கொடூரச்செயலில் ஈடுபடவேண்டும் என்பதற்கான விடையை இக்கட்டுரை மூலம் தேடுகின்றேன். இலங்கையின் போர்க்குற்ற காணொளிகள் காட்டும் கொடூர காட்சிகள் மனதை பதற வைக்கும் இந்நேரத்தில் ஏன் அந்த சாதாரண சிங்கள் சிப்பாய்கள் இந்த கொடூரங்களில் ஈடுபடவேண்டும்? அவர்கள் வெறுமனே உத்தரவுகளை நிறைவேற்றினார்களா? அப்படி கொன்று சுகம் காண ஏது காரணம்?


வெறுமனே சிங்களவர்கள் அனைவரும் காடையர்கள், இனவெறி கொண்ட மிருகங்கள் என்று ஒரு வரியில் பதில் சொல்லி தாண்டிப்போக என்னால் முடியவில்லை. மூன்றுவேளை உணவுக்கு உழைக்கும் சிப்பாய்களிடம் என்ன காரணம் இருந்துவிட முடியும்? அந்த காரணம் ஆரிய பவுத்த-சிங்கள பேரினவாதம். மதவெறியும் இனவாதமும் சேர்ந்தால் என்ன செய்யமுடியும் என்பதற்கு உதாரணம் இலங்கை இன அழிப்புப்படுகொலை. அப்பாவிகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த படுகொலைகள் மனித வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல. ஹிட்லரின் யூதப்படுகொலையும் இந்திய பிரிவினை படுகொலையும் மனித மனத்தின் கொடூரத்திற்கு என்றென்றும் அழியா சாட்சிகளாக நிற்கினறன. இலங்கையின் அந்த படுகொலையின் விதை கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஊனப்படுகிறது. ஊன்றியவர் தேரவாத பவுத்தத்திற்கு உயிர் கொடுத்தவர் எனவும் இந்தியாவில் பவுத்தத்தை தட்டி எழுப்பியவர் எனவும் அறியப்படும் தர்மத்தின் வீடற்ற பாதுகாவலன் என்று பொருள்படும் பெயரை கொண்ட அநாகரிக தர்மபாலா.


6287835-golden-buddha-at-dambulla-buddhi

 

ஆறுமுக நாவலரின் பிற்காலத்தவர் ஆன தர்மபாலாவின் இயற்பெயர் டான் டேவிட் ஹேவவித்ரனே. அப்போதைய இலங்கையின் பணக்காரவியாபாரியின் மகனாக இவர் தேரவாத பவுத்தத்தை தழுவி தன்னுடைய பெயரை மாற்றம் செய்து கொண்டார். இவருடைய காலகட்டத்திலே இலங்கையில் கிறிஸ்துவ மினஷரிகள் பெரும் அளவிலான மதமாற்ற பரப்புரையை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாணத்தின் ஆறுமுக நாவலர் போன்றோர் சைவ / இந்து மறுமலர்ச்சியை முன்னெடுத்தார்கள். ஆனால் இலங்கையின் பவுத்தமோ அப்படி ஒரு முன்னெடுப்பு நிலையில் இல்லை. பல பவுத்த விகாரங்களும் சாதீய சிக்கல்களும் பவுத்தம் ஒரு மதம் என்பதையே மறக்கடித்திருந்தன. பவுத்தத்தின் சடங்குகளும் வழிபாட்டு முறைகளும் இந்து மதத்தில் வேறுபடுத்தி அறிய முடியாதவையாக இருந்தன. இந்த சூழ்நிலையில் தியாசாபிகல் சொசைட்டியை நிறுவிய பிளாவட்ஸ்கியும் ஆல்காட்டும் இலங்கைக்கு வருகிறார்கள். தங்களை பவுத்தர்களாக அறிவித்துக்கொண்டு பெளத்த விரதங்களை மேற்கொள்கிறார்கள். இந்த காலகட்டதில் தான் தர்மபாலா ஆல்காட்டிடம் சீடராக சேர்ந்து பவுத்த கொள்கைகளை பரப்புகிறார்கள். தர்மபாலாவுடைய பவுத்தம் சீர்திருத்த பவுத்தம் (சீர்திருத்த கிறிஸ்துவம் போல்) என அறியப்படுகிறது. சீர்திருத்த கிறிஸ்துவத்தின் பல செயல்பாடுகளை அப்படியே முன்னெடுக்கிறார்கள். உதாரணத்திற்கு யங் மென் கிறிஸ்டியன் அசோசியேஷன் என்பது போல் யங் மென் புத்திஸ்ட் அசோசியேஷன் எனவும் ஆரம்பிக்கிறார். இந்தியாவில் பல இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். பவுத்த நூல்கள் பலவற்றை எழுதுகிறார்.


கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு மாற்றாக பவுத்தத்தை முன்வைத்ததோடு மட்டுமல்லாது சிங்கள மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். இந்தியாவில் பவுத்தத்தின் வீழ்ச்சிக்கு முஸ்லீம்களே காரணம் என்ற முடிவுக்கு வருகிறார். இப்படியாக இருக்கும் போது ஆல்காட்டும் பிளாவட்ஸ்கியும் சொன்ன எல்லா மதங்களும் ஒன்று போன்றவையே என்ற கருத்தில் வேறு பட்டு பவுத்தமே உயர்ந்தது என்று சொல்லி தியாபிசி என்பது கிருஷ்ணர் வழிபாடு மட்டுமே என்று சொல்லி பிரிகிறார். கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய மதமே சிறந்தது என்ற நஞ்சு வேரூன்றுகிறது. முதல் பலி முஸ்லீம்கள். முஸ்லீம்கள் ஏமாற்றி சம்பாதிக்கிறார்கள், மண்ணின் மைந்தர்களான சிங்களவர்கள் ஏமாற்றபடுகிறார்கள் என எழுதுகிறார். விளைவாக முஸ்லீம் வணிகர்கள் தாக்கப்படுகின்றனர். அடுத்த இலக்கு வேறு யார்? தமிழர்கள் தான். ஆரிய சிங்களவர்களின் புனித பூமியான இலங்கை இந்துக்களாலும் கிறிஸ்துவர்களாலும் அழித்தொழிக்கப்பட்டது எனவும் அதைக் காப்பது கடமை எனவும் எழுதுகிறார்.


இனவெறியை கட்டமைத்தல்


பொதுவாக வெறியை கட்டமைப்பது என்பது கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றும்.


1. தன்னுடைய பண்பாடு/நாடு/மொழி/மதம் இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது பலதோ உயர்ந்தது என நம்புவது, பரப்புரை செய்வது


2. அது அழிகிறது அல்லது அழியும் தருவாயில் உள்ளது அதை காப்பாற்றவேண்டும் என சொல்வது


3. அழிய காரணம் என இன்னோர் மக்களின் மீது பழி போடுவது அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது


4. தன்னுடைய பண்பாடு/நாடு/மொழி/மதம் காப்பாற்ற பட்டால் மக்களுக்கு விடிவு காலம் வந்துவிடும், பாலாறும் தேனாறும் ஓடும் பூலோக சொர்க்கம் வரும் என பரப்புரை செய்வது


ஹிட்லரில் இருந்து பலரும் பின்பற்றிய இந்த வழிமுறையையே பின்பற்றுகிறார். அது பின்வருமாறு


1. ஆரிய சிங்கள பவுத்த பண்பாடே உயர்ந்து, எல்லா வகையிலும் சிறந்தது.


2. ஆரிய சிங்கள பவுத்த நாடான இலங்கையில் தமிழர்களும், முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும் வந்தேறிகள்


3. புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட நாடான இலங்கை வந்தேறிகளின் வருகைக்கு முன் பூலோக சொர்க்கமாக இருந்தது


4. வந்தேறிகளால் அழிக்கப்பட்ட சுத்தமான பவுத்தத்தை மீட்டெடுக்கவேண்டும்.


இதிலே சிங்களர்களே பவுத்ததின் பாதுகாவலர்கள். சிங்களவர்களின் மொழியும் மதமும் எந்த சூழ்நிலையிலும் பாதுகாக்கப்படவேண்டும் ஏனென்றால் சிங்களவர்கள் பவுத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதையும் கட்டமைத்தார். இந்த நாங்களே உயர்ந்தவர்கள் என்பது இன அழிவுக்கு கொண்டு போய் விடும் என்பது வரலாற்றில் பல இடங்களில் உதாரணமாக இருக்கிறது.

 

319246319-199x300.jpg

இப்படியாக கட்டமைக்கப்பட்ட இனவெறியின் விளைவு என்ன? முதல் விளைவு சிங்கள மொழியை ஆட்சிமொழி ஆக்குதல். ஆங்கிலேயரின் ஆட்சியில் இருந்த இலங்கையில் ஆட்சிமொழியாக ஆங்கிலமே இருந்தது. சிங்களமும் தமிழும் ஆட்சிமொழி ஆக்கப்பட்டன. இங்கு தமிழர்களின் வேண்டிய கம்யூனல் அவார்டு முதலியவற்றை விரிவாக பேசமுடியாது என்பதால் இந்த இனவெறியின் அடுத்த கட்டத்தைப் பார்க்கலாம்.


ஆக்கிரமிக்கப்பட்ட பண்பாட்டின் காவலர் வித்தியாசமான பட்டம் அல்லவா? ஆனால் பண்பாட்டின் காவலர், மதத்தை பாதுகாப்பவர் என்று பட்டம் சூட்டிக்கொள்வது எல்லாம் வழக்கமே. யாருக்கு? மதவாதிகளுக்கு தான். நம்பிக்கையின் பாதுகாவலர் எனும் பட்டத்தை ஐரோப்பிய அரசர்களும் முக்கியமாக ஆங்கிலேய அரசர்களும் சூட்டிக்கொள்வது வழக்கம். ஆங்கிலேயர்களின் பழக்கங்களை அப்படியே பின்பற்றிய நாட்டில் இதுவும் சாதாரணமாக இருக்கலாம் ஆனால் சூட்டிக்கொண்டவர் நாட்டின் பிரதமர் என்பதை தவிர. அவர், சாலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டரனைகே(பண்டாரநாயக்கா). சுருக்கமாக சா.வெ.ரி.ட பண்டரனைகே. இலங்கையின் நான்காவது பிரதமரும் முதன் முதலில் தேர்தலில் பெரு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவரும் ஆன பண்டரனைகே, கொழும்புவின் அதிகாரமிக்க கிறிஸ்துவ பண்டரனைகே குடும்பத்தில் பிறந்து கண்டியின் அதிகாரமிக்க குடும்பமான ரத்வாட்டே குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார் (இதன் மூலம் கண்டியர்களின் ஆதரவை பெறுகிறார்). அரசியலில் சேர்வதற்காக தேரவாத பவுத்தத்தை தழுவுகிறார். எப்போதுமே புதிதாக மதம் மாறுகிறவர்கள், அலுவலகத்தில் சேருகிறவர்கள், நாட்டில் குடியேறுபவர்கள் என பலரும் அவர்களுடைய விசுவாசத்தை சேர்ந்தவுடன் காண்பிப்பதில் தீவிரமாக இருப்பார்கள். அதற்கு பண்டரனைகே விதிவிலக்கு அல்ல. சிங்கள பவுத்தமே உயர்ந்தது என சொல்லும் இலங்கை சுதந்திர கட்சியை ஆரம்பிக்கிறார். இப்போதும் இலங்கையை ஆட்சி புரிவது இந்த இலங்கை சுதந்திர கட்சி தான். 1956 இல் நடந்த பொதுத்தேர்தலில் சிங்களமே ஆட்சி மொழியாக வேண்டும் எனும் பரப்புரையை முன்னெடுத்து ஆட்சியை பிடிக்கிறார். இந்த தேர்தல்தான் முதன் முதலில் மொழிவெறியை தூண்டிவிடுகிறது. தூண்டிவிட்டது தனக்குத் தானே ”ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கள பண்பாட்டின் காவலர்” என பட்டம் சூட்டிக்கொண்ட பண்டரனைகே. சிங்களமும் பவுத்தமும் அழிவில் இருக்கின்றன என சொல்லி ஆட்சியைப் பிடிக்கிறார். ஆட்சிக்கு வந்தவுடன் சிங்களமே ஆட்சி மொழி எனும் சட்டத்தை கொண்டுவருகிறார். பின்பு தமிழர் தலைவரான செல்வநாயகத்தோடு பேசி தமிழும் ஆட்சி மொழி என ஒரு ஒப்பந்தத்திற்கு வருகிறார். அப்போது பவுத்த பிரதமராகவே புத்தர் சொன்ன மத்திய வழியை பின்பற்றி இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டேன் என சொல்கிறார். சிங்கள பவுத்த துறவிகளின் கடும் எதிர்ப்புக்கு பிறகு இந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்படுகிறது. இந்த ஒப்பந்தததின் விளைவு, இருபது ஆண்டுகளில் தமிழர்கள் முழுவதுமாக இலங்கை ஆட்சிப்பணியில் இல்லாமல் போவது. சா.வெ.ரி.ட பண்டரனைகே ஆட்சி பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் பவுத்த துறவியால் கொலை செய்யப்படுகிறார்.


விதை மரமாதல்


B.S.Jayawardana-300x298.jpg

 

தமிழர்களுக்கு எதிரான கலவரம் 1958 இல் நடக்கிறது. அடுத்த கலவரம் 1977 இல் தான் நடக்கிறது. நடுவில் ஏன் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் இடைவெளி? இந்த இடைவெளியில் சிங்கள கட்சிகள் தங்களுக்கு சண்டையிடுதலும் யார் அதிகமாக வெறுப்பு பரப்புரையை செய்ய முடியும் என போட்டியில் ஈடுபட்டிருந்தன. சா.வெ.ரி.ட பண்டரனைகேவின் மரணத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்த சிரிமாவோ பண்டரனைகேவும் எதிராக இருந்த டுட்லி சேனாநாயகேவும் யார் ஆட்சியை பிடிப்பது எனவும் எந்த பரப்புரையின் மூலம் ஆட்சியை கைப்பற்ற முடியும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இலங்கை அரசியல் களம் பெரும்பாலும் சில குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. சேனாநாயகே, பண்டரனைகே, திசநாயகே என சில சிங்கள குடும்பங்களே ஆட்சியை கையில் வைத்திருந்தன. இந்த இருபதாண்டுகளில் இலங்கை குடியரசாக மாறி சிலோன் என்பதை இலங்கை என பெயர் மாற்றம் செய்துகொள்கிறது. புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குகிறது, புதிதாக குடியரசு தலைவர் பதவியை உருவாக்கி பாராளுமன்ற ஜனநாயகத்தை நேரடி தேர்தல் ஜனநாயகமாக மாற்றுகிறது. இதிலெல்லாம் தமிழர்களின் இடம் திட்டமிட்டே ஒழிக்கப்படுகிறது. தமிழர்களின் பண்பாடு, மொழி, அறிவு என அனைத்தும் ஒழிக்கப்படுகிறது. அப்படி ஒழித்தலை முன் நின்று நடத்தியவர் இலங்கையின் பத்தாவது பிரதமரும் இரண்டாவது குடியரசுத்தலைவருமான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா, பண்டரனைகே போல் இவரும் கிறிஸ்துவராக இருந்து பவுத்தராக மதம் மாறியவர். ஐயவர்தனா இருந்த ஐக்கிய தேசிய கட்சி (யுனைடைட் நேஷனல் பார்ட்டி) ஆட்சிக்கு வரமுடியாததற்கு காரணமாக இருந்தது தமிழர்களின் உரிமையை ஆதரிப்பதே என கருதினார். இலங்கை சுதந்திரா கட்சி போல் நாமும் சிங்கள இனவாதத்தை முன்னெடுத்தால் ஆட்சியை பிடித்துவிடலாம் என கருதினார். இக்கருத்துகளை ஒத்துக்கொள்ளாத சேனாநாயகே இருந்தவரை அது முடியவில்லை ஆனால் அவருக்கு பிறகு ஐயவர்தனா முன்னுக்கு வருகிறார். இவர் சூட்டிக்கொண்ட பட்டம் ”சரியான பவுத்தர்”. அதுவரையிலும் ஒரு கட்சி மட்டுமே கைக்கொண்டிருந்த இனவாதம், இந்த ”சரியான பவுத்த” ஜயவர்தனாவின் மாற்றத்தால் முக்கிய இரண்டு கட்சிகளாலும் முன்னெடுக்கப்படுகிறது.


stock-photo-sitting-buddha-in-polonnaruw

 

சரியான பவுத்தரின் நியாயமான போர் தொன்று தொட்டே மனித குலத்தில் வன்முறையையும் அழிவையும் போரையும் நியாப்படுத்தி சரி என்று சொல்லும் வாதங்கள் முன்வைக்கப்பட்டே வந்திருக்கின்றன. வென்றவர்களால் எழுதப்படும் வரலாறு இவற்றை சரி என்று சொல்லும் காரணிகளை உள்ளடக்கியே இருக்கிறது. அப்படிப்பட்ட வரலாற்றையே தன்னுடைய இனவாதத்திற்கு கைக்கொள்கிறார் இந்த ”சரியான பவுத்தர்”. அவர் சொன்ன கதை, இலங்கையின் அரசனான சங்கபோ என்பவனுடைய கதை. கதைப்படி பவுத்தனான சங்கபோ ஆட்சிக்கு வந்தவுடன் கைதிகளாக இருந்த குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்கிறான். செய்தவுடன் அக்குற்றவாளிகள் திரும்பவும் குற்றங்களை புரிய தொடங்குகின்றனர். மக்கள் சங்கபோவை ஆட்சியை விட்டு துரத்துகின்றனர். (சங்கபோவுக்கு பின்வரும் கோத்பாயவின் மகன் தான் சிங்களர்கள் புகழும் மகாசேனன். இப்போதைய இன அழிப்பை முன் நின்று நடத்தியவனின் பெயரும் கோத்பாய என்று இருப்பதில் ஏதேனும் ஆச்சரியம் உண்டா?)


இந்தக் கதையை சொல்லித்தான் அப்படி ஆட்சியை இழக்க போவதில்லை என்றும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கபோகிறேன் எனவும் சொன்ன ஜயவர்தனா சொன்னபடியே செய்தார். இங்கு குற்றவாளிகள் யார்? வேறு யாராக இருக்கமுடியும், தமிழர்கள் தான். தீவிரவாத தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டு காவலர்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அத்தோடு நிற்கவில்லை. ஆட்சிப்பணியில் இருந்து தமிழர்களை ஒழித்தது போல் அரசியலில் இருந்து தமிழர்களை ஒழிக்க “பிரிவினை வாதம் பேசும் யாரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகமுடியாது” எனும் சட்டம் கொண்டுவந்தார். கூடவே யார் அதிக வாக்குகள் பெறுகிறாரோ அவரே வெற்றி பெற்றவர் எனும் தேர்தல் முறையை மாற்றி விகிதாச்சார முறையை கொண்டு வந்தார். அத்தோடு தமிழர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த முறையும் ஒழிந்தது. தமிழர்களின் உரிமையும் ஒழிந்தது.


1977 தேர்தலின் பிறகு பிரதமர் ஆகிறார். அப்போது தமிழர்களுக்கு எதிராக கலவரம் நடக்கிறது. அதை ஒடுக்க ஐயவர்தனா எந்த முயற்சியும் எடுக்கவில்லை.


நாடாளுமன்றத்தில் அமிர்தலிங்கம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது “நீங்கள் இப்போது வன்முறையை கையில் எடுக்கவில்லை. பின்பு எடுப்பீர்கள் என உத்தரவாதம் உண்டா? நாட்டை பிரிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கும்போது சாதாரண மக்கள் வன்முறையை கையில் எடுப்பதை தவிர்க்க முடியாது” என பதில் அளிக்கிறார். இனவெறியின் அடுத்தகட்டமாக பிரிவினை வாதம் பேசுபவர்களை ஒடுக்க செய்யும் போர் நியாயமானது எனவும் தர்மத்தின் அரசன் என பொருள் படும் தர்மிஸ்த்தா அரசானது மக்களை பாதுகாக்க போர் செய்யலாம் அதை பவுத்தம் அனுமதிக்கிறது எனவும் பரப்புரை செய்தார். இதைத்தவிர சிங்கள மக்கள் விழித்தெழுந்து சிங்கள இன மேம்பான்மையும் சிங்கள மொழியையும் காக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


பின்பு நடந்த கலவரங்களில் எல்லாம் இவருடைய பங்கு அபரிமிதமானது. 1983 இன அழிப்பு கலவரம் இவருடைய மேற்பார்வையிலோ அல்லது ஆதரவிலோ நடந்திருக்கவேண்டும் என சொல்வோரும் உண்டு. ஆனால் இதைப்பற்றிய எந்த மேற்கோளும் வெளியுலகுக்குத் தெரியவில்லை. ஏன்? ஐயவர்தனாவின் கபட நாடகம் தான். வெளியுலகுக்கு சமாதானத் தூதுவர் எனும் முகமூடியை போட்டுக்கொண்டே உள்நாட்டிலே போரை முன்னெடுத்தார். அவருடைய நியாயமானப் போர் இருபது வருடங்கள் கழித்து ஐயவர்தனாவின் விருப்பங்களை நிறைவேற்றி முடிவுக்கு வந்துள்ளது. தமிழர்களை பட்டினி போட்டால் சிங்களவர்கள் மகிழ்வார்கள் என்பது ஐயவர்தனாவின் விருப்பம்.


ஐயவர்தனாவிற்கு பிறகு யாரும் ஏதும் செய்யமுடியவில்லை. ஆற்றின் போக்கில் கட்டை போவது போல் அதன் பின்பு நடந்தவற்றை யாராலும் மாற்றமுடியவில்லை.


தீர்வு என்ன?


இதற்கு என்ன தான் தீர்வு? தனி ஈழம் தீர்வாக அமைந்துவிடுமா என்றால் இருக்காது. ஈழம் அமைந்தாலும் இந்தியா-பாகிஸ்தான் போல் சண்டை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். நாம் செய்யும் தவறு இது தான். இனவெறியை இன்னோர் இனவெறி கொண்டு தீர்க்க முயல்கிறோம். முள்ளை முள்ளால் எடுக்கலாம், வைரத்தை வைரத்தால் அறுக்கலாம் ஆனால் தீயை தீயால் அணைக்கமுடியாது, விஷத்தை விஷத்தால் முறிக்க முடியாது, ஒரு தவறை இன்னோர் தவறைக்கொண்டு சரி செய்ய முடியாது.


சிங்கள இனவாதிகளின் பரப்புரைக்கு பதிலாக தமிழர்கள் எடுத்த பரப்புரையும் இனவாதமாகவே இருந்தது. குடும்ப அரசியலையும் பொருளாதார சிக்கலையும் பேசுவதற்கு பதிலாக சிங்கள இனவாதிகள் விரித்த வலையில் எளிதாக தமிழ் தலைவர்கள் விழுந்தார்கள். விளைவு, அரசியல் செய்வதற்கு பதிலாக சிங்களவர்கள் கையாளாகிப் போனார்கள். உலக நாடுகளிடம் சிங்களவர்களின் கபட நாடகத்தை எடுத்துரைப்பதற்கு பதிலாக ஏதேதோ பேசி காட்சிப்பொருளாகிப்போனார்கள். தமிழ் தேசியம் என்ற வாதத்தின் மூலம் தமிழ் இனப்பெருமையையும் வீரத்தையும் பேசி அனாகரிக தர்மபாலாவின் நகலாகிப்போனார்கள். சிரிமாவோவும் ஜயவர்தனாவும் எதிர்த்துப்பேசியவர்களை அழித்தொழித்தது போல் தமிழர் தலைவர்கள் அழித்தொழித்து தலைமை தாங்க யாருமில்லாத வெற்றிடத்தை ஏற்படுத்திப்போனார்கள். கொள்கையை எதிர்க்காமல் ஆட்களை மட்டும் எதிர்த்து புற்றீசலை கத்தி கொண்டு வெட்டும் வேலை செய்தார்கள். நன்மைக்கும் தீமைக்குமான போராட்டமாக இருப்பது போய் இரண்டு தீமைகளுக்கு இடையேயான போராட்டமாக தமிழர் வாழ்வுரிமைப் போராட்டம் மாறிப்போனது.


அநாகரிக தர்மபாலாவினால் ஊன்றப்பட்ட விஷமரத்தை வெட்டியெறிவதே இதற்கு தீர்வாக இருக்கமுடியும். சாதாரண சிங்களவர்களின் மனதில் இருக்கும் நச்சு பரப்புரைகளை துடைத்தெறிவதே நீண்டநாள் தீர்வாக, இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏதுவாகும். தமிழர்களை சித்ரவதை செய்து கொல்லும் ஒவ்வொரு சிங்களவனின் மனதிலும் மகாவம்சத்தின் போதனையான ”சிங்களவர் அல்லாதோர் யாரும் மனிதர்கள் அல்ல” என்பது ஆழமாக பதியப்பட்டிருக்கிறது என்பது நினைவில் கொள்ள வேண்டும். இந்த இனவாத போதனைகளை வெளி உலகுக்கு எடுத்துச்சொல்லி அதை மாற்றும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும்.


அதுவே தீர்வாக அமையும். இது நிறைவேற கருணையே உருவான புத்தர் அருள்புரிவாராக.


நூல்கள்
1. In defense of Dharma: just-war ideology in Buddhist Sri Lanka By Tessa J. Bartholomeusz
2. J.R. Jayewardene of Sri Lanka: 1906-1956 By K. M. De Silva, William Howard Wriggins
3. Colors of the robe: religion, identity, and difference By Ananda Abeysekara
4. http://www.blackjuly83.com/Quotes.htm
5. http://en.wikipedia.org/wiki/Ceylonese_parliamentary_election,_1956 (References from this page)
6. http://countrystudies.us/sri-lanka/24.htm
7. Perspectives on Modern South Asia: A Reader in Culture, History, and Representation By Kamala Visweswaran
8. http://www.sangam.org/2010/11/Tamil_Struggle_14.php
9. http://mahavamsa.org/2008/05/king-siri-sangha-bo-jetta-tissa/
10. http://tamilnation.co/forum/sachisrikantha/061027rajapakse.htm


படங்களுக்கு நன்றி:


http://www.buddhisttimes.net/2009/07/01/the-founder-of-all-ceylon-women%E2%80%99s-buddhist-congress-mrs-b-s-jayawardena/


http://www.ebay.com/itm/1876-Buddhist-Ordination-Ceylon-Religion-Buddha-Statue-/160258927875#ht_500wt_922


http://www.123rf.com/photo_6287835_golden-buddha-at-dambulla–buddhist-cave-temple-complex-in-ceylon-world-heritage.htm


http://www.vallamai.com/literature/articles/19118/

 

  • கருத்துக்கள உறவுகள்

....சிங்களவர்களின் மனதில் இருக்கும் நச்சு பரப்புரைகளை துடைத்தெறிவதே நீண்டநாள் தீர்வாக, இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏதுவாகும்....

 

 

பூனைக்கு மணி யாரு கட்டுவது?
 
வாய் திறக்கும் முன்னால் வெள்ளை வான் வந்து அள்ளிக் கொண்டு போய் விடுமே.
 
பசி வந்தால் பத்தும் பறக்கும்.
 
பொருளாதார தடை கண்ணைத் திறக்க, இந்த இனவாதிகள் எறியப் படுவர். அப்போது தீர்வுக்கு வழி வரலாம்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை வென்ற மமதையில் இருக்கும் சிங்கள இனம் இலங்கைத் தீவு முழுவதையும் சிங்கள மயமாக்கும் திட்டத்தை விரைவாகவும் உறுதியாகவும் செயற்படுத்துகின்றது. வெளியுலக அழுத்தங்களை முழுமூச்சோடு எதிர்கொண்டு தமது செயற்பாடுகளுக்குப் பங்கம் வராமல் பாதுகாக்கின்றது. 

 

சிங்களக்  கட்சி அரசியல்களில் வேறுபாடுகளின்றி  இனவாதம்  தாண்டவமாடுவதாலும், ஊக்கப்படுத்தப்படுவதாலும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப்ப் பூர்த்தி செய்யும் நிலைமை சிங்களவர்களிடம் இருந்து இப்போதைக்கு வராது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பொருத்தங்கள் பார்த்து, நிச்சயிக்கப்படும் திருமணங்கள் கூட முறிந்து போகின்றன! 

 

திருமணம் நடக்க முன்பு,  அல்லது நடந்து முடிந்த சிலவருடங்களுக்கு எல்லாமே நன்றாகத் தானே இருந்தது!

 

இப்போது மட்டும் என்ன மாறிவிட்டது? நாங்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டுத் திருமணம் கட்டமுன்பு இருந்த நிலைக்குப் போவோம்! அப்போது முன்புபோலவே, இருவரிடமும் காதலும் அன்பும் பழையபடி, பீறிட்டுப்பாயும் என்பது கட்டுரையின் சாராம்சம்!

 

இனவாதிகளைத் தான் விடுவோம்! ஆனால், இவ்வளவு நடந்து முடிந்த பின்னும், இனவாதிகளுக்குத் தான் ஆதரவு இருக்கின்றது என்றால், அதன் கருத்து பெரும்பாலான சிங்களவர் இனவாதிகள் என்பது தானே!

 

புத்தம் ஒரு மிகவும் அழகிய மதம்! இந்து மதத்தின் பெயரால் நடந்த அநியாயங்களை, முதலில் தட்டிக்கேட்டவன் புத்தன்! அதனால் தான், புத்த மதம் , சாதீயம் மலிந்த வட இந்தியாவில் வளர முடியவில்லை. இதன் அழிவில் முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய பங்கு இருந்தாலும், முக்கிய காரணம் இந்துக்களே! ஆயினும் தென்னிந்தியாவில் புத்தம் செழித்தது என்பதற்குச், சிலப்பதிகாரமே சான்று பகரும்! 'மகாவம்சம்' எழுதப்படுவதற்கு, வழி செய்து கொடுத்தவனும் எல்லாளன் என்ற தமிழ் மன்னனே!

 

புத்த மதம், ஒரு கருவியே தவிரக் கர்த்தாக்கள் சிங்கள இனவாதிகளே! இவர்களின் இனவாதம் இன்று பெருவிருட்சமாகி நிற்கின்றது! இனங்களை அரவணைத்துச் செல்லாத, இன்றைய இலங்கையின் போக்கு, இலங்கை முழுவதையும் ஒரு புத்த மடமாக ஆக்கியபின்பு தான் அடங்கும்! அப்போது அங்கே 'பிச்சை' எடுத்து வாழ்ந்த புத்தன் இருக்கமாட்டான்! நல்லூர்ர்க்கந்தனைப் போன்று ஒரு பணக்காரப்புத்தன் மட்டுமே இருப்பான்! அவனின் கொள்கைகள் முற்றாக மறக்கடிக்கப் பட்டிருக்கும்!தமிழர்களின் சொத்துக்களும், உழைப்பின் விளைவுகளும், சிங்கள இனவாதிகளின் கையிலிருக்கும்!

 

சிங்கள இனவாதிகளின் மனமாற்றம் நடக்கும் வரை, தமிழினம் காத்திருக்க வேண்டுமெனின், இறுதியில் மிஞ்சப்போவது 'தமிழினம்' இங்கு வாழ்ந்தது என்று மகாவம்சத்தின் கடைசிப் பக்கத்தில் சில வரிகள் மட்டுமே!

Edited by புங்கையூரன்

இனவெறியை கட்டமைத்தல்

 

பொதுவாக வெறியை கட்டமைப்பது என்பது கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றும்.

 

1. தன்னுடைய பண்பாடு/நாடு/மொழி/மதம் இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது பலதோ உயர்ந்தது என நம்புவது, பரப்புரை செய்வது

 

2. அது அழிகிறது அல்லது அழியும் தருவாயில் உள்ளது அதை காப்பாற்றவேண்டும் என சொல்வது

 

3. அழிய காரணம் என இன்னோர் மக்களின் மீது பழி போடுவது அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது

 

4. தன்னுடைய பண்பாடு/நாடு/மொழி/மதம் காப்பாற்ற பட்டால் மக்களுக்கு விடிவு காலம் வந்துவிடும், பாலாறும் தேனாறும் ஓடும் பூலோக சொர்க்கம் வரும் என பரப்புரை செய்வது

 

ஹிட்லரில் இருந்து பலரும் பின்பற்றிய இந்த வழிமுறையையே பின்பற்றுகிறார். அது பின்வருமாறு

 

1. ஆரிய சிங்கள பவுத்த பண்பாடே உயர்ந்து, எல்லா வகையிலும் சிறந்தது.

 

2. ஆரிய சிங்கள பவுத்த நாடான இலங்கையில் தமிழர்களும், முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும் வந்தேறிகள்

 

3. புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட நாடான இலங்கை வந்தேறிகளின் வருகைக்கு முன் பூலோக சொர்க்கமாக இருந்தது

 

4. வந்தேறிகளால் அழிக்கப்பட்ட சுத்தமான பவுத்தத்தை மீட்டெடுக்கவேண்டும்.

 

இதிலே சிங்களர்களே பவுத்ததின் பாதுகாவலர்கள். சிங்களவர்களின் மொழியும் மதமும் எந்த சூழ்நிலையிலும் பாதுகாக்கப்படவேண்டும் ஏனென்றால் சிங்களவர்கள் பவுத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதையும் கட்டமைத்தார். இந்த நாங்களே உயர்ந்தவர்கள் என்பது இன அழிவுக்கு கொண்டு போய் விடும் என்பது வரலாற்றில் பல இடங்களில் உதாரணமாக இருக்கிறது.

 

 

ஒரு தேசீய இனத்தை சிங்களவர்கள் இவ்வாறு கட்டியமைத்தார்கள். இது சிங்களவர்களுக்கு மட்டுமல்ல ஏனையவர்களுக்கும் பொரு்ந்தும். இந்தியாவில் ஆரியர்கள் தம்மை பிரம்மனின் நெற்றியில் இருந்து பிறந்த உயர்குடிகள் என்று கட்டுக்கதைகளை பரப்பி காலப்போக்கில் இந்திய மைய அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள். இங்கிலாந்துக்காரரும் தம்மை உயர்வானவர் என்றே உலகமெங்கும் படையெடுத்து பல மில்லியன் உயிர்களை எடுத்தார்கள். அமரிக்கனும் செவ்விந்தியர்களும் அவுஸ்திரேலியப் பழங்குடிகளும் இதே சிந்தனை முறையிலான உயிரெடுப்புத்தான். 

 

தர்மபாலாவின் ஆரம்ப கருத்தானது சிங்களவருக்கு  அடிமை ரத்தம் இல்லை என்பதில் தொடங்கி கிருத்துவத்துக்கு எதிரானபோக்கு பின்னர் முஸ்லீம் தமிழர்களுக்கு எதிராக மாற்றடைகின்றது. இதற்காக மகாவம்ச கட்டுக்கதைகள் தொடக்கம் ஏராளமான முயற்ச்சிகள். ஆனால் இதன் நோக்கம் சிங்கள பெருந்தேசீயவாதத்தை பொதுப்பட கட்டியெழுப்புவதே. இதே காலப்பகுதியில் தமிழர்களுக்குள்ளும் இதே உயர்குடிக்கருத்து இருந்தது. அது தமிழர்களை சிதைக்கும் நோக்கில் சாதிவாரியாக இருந்தது. சாதீய ஏற்றதாழ்வைக் கடந்த ஒரு சமுதாயத்தை தமிழர்கள் கட்டியெழுப்புவதுக்கு எதிராக உயர்குடி என்ற கருத்தியல் இருந்தது. சிங்களவர் புனைவுகள் ஊடாக இனத்தை பலப்படுத்தினார்கள் தமிழர்கள் புனைவுகள் ஊடாக இனத்தை சிதைத்தார்கள். இன்றுவரை தமிழர்களின் போக்கில் மாற்றம் இல்லை.

 

இன்று இதை வெறி என்கின்றோம். ஆனால் இது விதையிட்டு விருட்சமாகி விழுங்கும் வரை தமிழர்களுக்கு இது புரியவில்லை ஏனெனில் அவர்கள் என்னுமொரு மகா வெறியில் இருந்தார்கள். சிங்களவர்கள் வெளியில் வேட்டையாட தயார்ப்படுத்திக்கொண்டார்கள் தமிழர்கள் தங்களுக்குள் வேட்டையாடுவதில் இருந்து வெளிவர மறுத்தார்கள். மனிதன் அடிப்படையில் விலங்கு. பலவீனமான விலங்குகளை பலமான விலங்குகள் அடித்து இரையாக்கும். நேற்றய கொலைகாரர்கள் இன்று மனித உரிமை பேசுகின்றார்கள் அவர்களிடம் நீதி கேட்டு நிற்கி்ன்றோம்.

 

 

சிங்களவர்களின் மனதில் இருக்கும் நச்சு பரப்புரைகளை துடைத்தெறிவதே நீண்டநாள் தீர்வாக, இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏதுவாகும்....

 

 

 

இதந்தக் கருத்தின் அடிப்படையில் தான் முயற்சிகள் இருப்பது மாற்றத்தை தரும். பெளத்த மார்க்கத்துக்கும் படுகொலைகளுக்குமான பெருத்தமற்ற தன்மையை ஆயுதமாக கையில் எடுத்து உலகெங்கும்  பரப்பும்போது எந்த பெளத்தத்தை மையக்கருத்தாக வைத்து சிங்களம் பலம்பெறுகின்றதோ அங்கே சிதைவுகள் வரும். பெளத்தத்தின் புனிதத்தில் இருந்து சிங்களவர்களை அந்நியப்படுத்தும் முயற்சி. உன்னிடம் இருப்பது இனவெறி என்று கத்துவதால் என்ன பிரயோசனம்? ஏனெனில் கேட்பவன் என்னுமொரு வெறியன். ஆதலால் பெளத்த புனிதத்தை கையிலெடுத்து இனவெறியை சுட்டிக்காட்டுவது சரியான வழியாக இருக்கும். படுகொலைகளுக்கு எதிரான பரப்புரை என்பது மிக சமயோசிதமானது அதில் ஒரு பங்கை தனிலும் தமிழர்களால் செய்ய முடியவில்லை. எசமானர்களுக்கு பெட்டிசம்போட்டு பழக்கப்பட்ட தலமைகள் அதையே இந்த விடயத்திலும் செய்ய முற்படுகின்றது. விதி விட்ட வழி.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் புத்தமதத்தைச் சரியாகப் புரிந்து கொண்டேனோ தெரியவில்லை!

 

மகாஜான பௌத்ததில் கொல்லாமை முன்னிலைப் படுத்தப் படுகின்றது! பெண்களைப் புத்த ஆச்சிரமங்களில் சேர்ப்பதும் தவிர்க்கப் பட்டிருந்தது!

 

தேரவாதம் தலை தூக்கியபோது, புத்தர் கூட அதை ஏற்றுக்கொள்ளவில்லை! ஆனந்தா, நாலாந்தா போன்ற ஒரு நாலுபேருடன் தான் அவர் தனிமைப்படுத்தப் பட்டு விடுகிறார்.இறுதிவரை அவர் தேரவாதத்தைப் புத்தமாக ஏற்றுக்கொண்ட ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை! இந்தக் காலகட்டத்தில் தேரவாதம் முற்றாகவே அழிந்து போனது. அப்போது இலங்கையிலிருந்து சில 'திரிபிடகங்கள்' சீனாவுக்கு ஒரு யாத்திரீகரால் எடுத்துச் செல்லப் பட்டுத் தான் தேரவாத புத்தம் மீண்டும் உயிர்ப்பிக்கப் பட்டது!

 

தேரவாதம் கொல்லாமையை வேறு விதமாக நியாயப் படுத்தியது! ஒருவர் ஒரு முட்டையை உடைத்தால் அதனுள் வளரும் கருவொன்று கொல்லப்படுகின்றது! ஆனால் அதை ஒரு பிக்கு உடைத்தால், அது 'கொல்லாமை'! ஆனால் அந்த முட்டையை இன்னொருவர் உடைத்துக் கொடுத்தால், அதை ஒரு பிக்கு சாப்பிடலாம்! இது தான் இலங்கையில் அனுசரிக்கப்படுகின்றது. ஒரு பிக்கு கொன்றால் அது பாவம், ஆனால், அதை ஒரு இராணுவத்தினன் கொன்றால், அந்தப் பாவம் புத்தமதம் அனுசரிப்பவர் ஒருவரைச் சேராது! இது தான் அவர்கள் தங்கள் செயல்களை நியாயப் படுத்தும் காரணம்!

 

சிங்களம் முழுவதுமே 'அன்குலிமாலாக்களால்' நிரம்பி வழிகின்றது!

 

இந்த நிலையில் எங்கே தெரிகிறது, தமிழனுக்கு மீட்சி? :wub:

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.