Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டில் அவலநிலையில் இலங்கை அகதிகளின் முகாம்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் அவலநிலையில் இலங்கை அகதிகளின் முகாம்கள்

விடைகொடு எங்கள் நாடே....

பனைமரக் காடே... பறவைகள் கூடே... மறுமுறை ஒருமுறை பார்ப்போமோ? புலம்பெயர் வாழ்வின் துயரங்களை வலியோடு பதிவு செய்த பாடல் இது.

இதோ மறுபடியும் இலங்கையில் யுத்தம் ஆரம்பமாகி விட்டது. உயிர்பயம் உந்தித்துள்ள தங்களின் ஆதி சொந்தங்களைத் தேடி, கள்ளத்தோணியில் கடல் கடந்து, அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள்.

நாளுக்கு நாள் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. ஆனால், ஏற்கனவே இங்கிருக்கும் அகதிகள் முகாம்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தடுமாறித் தத்தளித்து கொண்டிருக்கின்றன. இதுபற்றி அகதிகள் முகாம்களுக்கு நேரில் சென்று பார்த்து வந்து அறிக்கைக் கொடுக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ.வும் எழுத்தாளருமான ரவிக்குமாரிடம் சொல்லியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

இந்நிலையில்தான் ஒரு சாம்பிளுக்கு திருச்சி வாளவந்தான் கோட்டையிலிருக்கும் அகதிகள் முகாமுக்கு சென்றோம். திருச்சி - தஞ்சைசாலையில் துவாக்குடி அருகே ஐந்து கிலோமீற்றர் உள்ளடங்கி இருக்கிறது வாளவந்தான் கோட்டை அகதிகள் முகாம். இங்கே சுமார் 320 குடும்பங்களில் `ஆயிரம் பேர்' வசிக்கின்றனர்.

இந்த முகாம், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இலங்கை அகதிகள் முகாம்களில் உபரியாக இருந்தவர்களை தங்க வைப்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக முகாம். அந்த தற்காலிக முகாமுக்கும் இப்போது வயது பதினாறு ஆகிவிட்டது.

உள்ளே போகும் பாதையே முகாமின் நிலைமையை நமக்குச் சொல்லி விடுகிறது. கருவேலமுட்காடுகள், அதற்கு நடுவே தெரியும் சின்னச் சின்ன குடிசைகள், சாரம் (கைலியை இப்படித்தான் அழைப்பார்கள்.) பனியனில் நடமாடும் ஆண்கள், நைட்டிகளில் வளையவரும் பெண்கள் என்று பரிதாபமாய் இருக்கிறது முகாம்.

ஆனாலும், இருக்கும் வசதிகளுக்குள் வாழ்ந்து கொண்டு அரட்டை, கேலி, தமாசு எனத் தங்களது நிரந்தர கஷ்டங்களைத் தற்காலிக சந்தோஷங்களுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

முதலில் முகாமின் தலைவரான சுப்பிரமணியனிடம் பேசினோம். "நாங்க 90 ஆம் ஆண்டு வரைக்கும் புழல் முகாம்ல இருந்துட்டு இங்க வந்தம். ஆரம்பத்தில் இங்க சௌகரியமாத்தான் இருந்தம். கடந்த ஜெயலலிதா ஆட்சியில்தான் கெடுபிடிகள் அதிகமாயிட்டு. ஒரு நபருக்கு மாதம் இருநூறு ரூபா பண உதவியும், ஆறு கிலோ அரிசியும் கொடுக்கிறாங்கள். அந்த இருநூறு ரூபாயுலயும் நாங்க அதிகப்படியா உபயோகிக்கிற மின்சாரத்துக்கென்டு தலைக்குத் தொண்ணூறு ரூபா வரை பிடிக்கிறாங்கள். காரணம், இங்கே இருக்கிற மொத்த வீடுகளுக்கும் ரெண்டே மின்சார மீற்றர்தான் இருக்குது. இதில் கணக்கிடப்படும்போது மொத்த யூனிட்டுகளுக்கும் விலை ஏறி இப்பிடி ஆகிப்போச்சு. உயிர் தப்பி வந்தவர்கள். இங்க அரசு 320 வீடுகள் கட்டிகுடுத்திருக்கு. அந்த வீடு பத்துக்குப் பத்து அளவுள்ளது. மேலே ஆஸ்பெஸ்டால் சீட் போட்டது. வெயில் காலத்துல ரொம்ப வெக்கையா இருக்கும். வேற குறைகள் இருந்தாலும் சொல்வதற்கு வாய் வர மாட்டேன்கிறது. காரணம் நாங்கள் இங்க வாழ வந்தவர்கள்.

திருகோணமலையில் விவசாயம் செய்து கொண்டு இருந்த என் மனைவியை ஆர்மி கொலை செய்தது. அதன் பிறகு அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் நாட்கள் மறைந்து வாழ்ந்து விட்டு, இங்கே புலம்பெயர்ந்து வந்தம். வந்தன்னைக்கு எங்களுக்கு இடம் கொடுத்து ஆதரவு கொடுத்த நாட்டை குறை சொல்லக் கூடாதுதானே. திரும்ப ஊருக்கே போகலாம் என்டு பதிவு செஞ்சிருந்தன். ஆனால், திரும்ப அங்க போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால் ஒரே யோசனையாயிருக்கு.

இங்க இருக்கிற எங்க மக்கள் ஏதோ கிடைக்கிற கூலி வேலைகளைச் செய்யுறாங்கள். குறிப்பா, இங்க பக்கத்துல உள்ள குவாரிகள்ல கல் உடைக்கும் வேலை பாத்து பிழைப்பு நடத்துறாங்கள். அப்படிச் சம்பாதிச்சு தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பி படிக்க வைக்கிறாங்கள். எங்கட பிள்ளைகள் நல்லா படிக்கும்" என்றார் அவர்.

அடுத்து பேசினார் விக்கி என்கிற விக்கினேஸ்வரன். "நாங்க இலங்கை முல்லைத்தீவிலிருந்து வந்தம். 90 ஆம் ஆண்டில் இருந்து இங்க வாளவந்தான் கோட்டையில் இருக்கிறம். இங்கே எங்கட பிள்ளைகளோட படிப்புக்கு ரொம்பச் சிரமமாக் கிடக்கு. முதல்ல கலைஞர் பீரியட்ல மருத்துவம், பொறியியல் படிப்புக்களில் இலங்கை அகதிப் பிள்ளைகளுக்கென்டு கோட்டா இருந்தது. கடந்த சில வருடங்களாக அதை நீக்கிட்டாங்கள். இப்ப திரும்பவும் கலைஞர் அரசு அதைக் குடுக்குமென்டு எதிர்பார்க்குறம்.

எங்கட பிள்ளைகள் படிக்கும் வசதி இல்லாம கூலி வேலைக்குப் போய், சின்ன வயசுலேயே கல்யாணமும் பண்ணிக் கொண்டு கஷ்டப்படுறாங்கள். எங்களுக்குச் சீக்கிரம் ஊருக்குப் போய், எங்கட நிலத்துல விவசாயம் செஞ்சு வாழ்க்கை நடத்த வேணும் என்டுதான் ஆசை. என்னைக்குப் போவமோ தெரியல்ல" என்றவரின் கண்களில் ஏக்கம் தெரிந்தது.

நம்முன் வந்த புவனா ஆக்னஸ் என்ற பெண்மணி, "ஆடிக்குழாயில தண்ணி அடிச்சு கொதிக்க வச்சுக் குடிச்சாலும், அந்தப் பாத்திரத்துல அடியில சுண்ணாம்பு படியுது. நாங்களும் கலெக்டர், கமிஷனர் என்று அதிகாரிகளுக்கு மனு குடுத்தம். ஆனா, அவங்க எதுவுமே கண்டுக்கலை. பதினாறு வருசமா கல்லுடைச்சு காசு சேர்த்து பிள்ளைகள வளத்தன். இப்ப தைமாசம் மூணாந்தேதி என்ட இருபத்து மூணு வயசு மகன் இறந்து போயிட்டான். காரணம் கிட்னி பிரச்சினை.

இங்க முகாமுக்குள் இருக்கிற நிறையப் பேருக்கு அடிக்கடி உடம்பு சுகமில்லாமப் போகும். டாக்டர்கிட்ட போனா கிட்னியில் பிரச்சினை என்டு சொல்லுவார். அப்பிடி கிட்னி பிரச்சினை வந்து கணக்க (நிறைய) பேர் செத்துப் போயிட்டாங்கள். ஆபீஸ்மார் உங்களப் போல வந்து கேக்குறாங்கள்... எதுவும் செய்யிறதில்லை. இந்த வெயில் காலத்திலயும் மாலை ஆறு மணியில இருந்து காலை ஆறு மணி வரைதான் மின்சாரம் தர்றாங்கள். காரணம், நாங்க பாவிக்க சொன்ன அளவைவிட, அதிகமாக மின்சாரம் பயன்படுத்துறோம் என்டு சொல்றாங்க" என்றார் பரிதாபமாக.

அப்போது நம்முன் அழைத்து வந்து நிறுத்தப்பட்ட ஜெகன் என்பவருக்குச் சிறுநீரகக் கல் தொடர்பாக அறுவைச் சிகிச்சை செய்திருந்தார்கள். அவரது வலது இடுப்பில் ஒரு நீண்ட தழும்பு இருந்தது. இப்படி இடுப்பில் தழும்புடன் பலர் முகாமுக்குள் உள்ளனர்.

அடுத்து நாம் சந்தித்த சக்திவேல் மிகவும் ஈனமான குரலில் பேசினார். "எனக்கு 52 வயசு ஆகுது. இங்க உள்ள தண்ணியைக் குடிச்சு எனக்குக் கிட்னியில் பிரச்சினை வந்தது. டாக்டர் கிட்ட மருந்து எடுத்தன். டாக்டர் கிட்னி மாத்தணும் என்டு சொல்லிட்டாங்கள். ஆனால், அதுக்கு ரொம்பச் செலவாகும். அதனால நாட்டு மருந்து சாப்பிட்டுக் கொண்டு அப்பிடியே இருக்கிறன். சின்ன வேல கூட என்னால செய்ய ஏலாது என்று சொல்லிட்டாங்கள்" என்றார் சோகம் நிரம்பிய வார்த்தைகளில்.

அன்னலட்சுமி என்ற பெண் பேசும்போது. "இங்கட டாய்லெட் வசதிகள் இல்ல. கருவேலக் காட்டுக்குள்ள தான் போகணும். நாங்க வந்தபோது பரவாயில்லை. இப்ப இங்கட ஃபேக்டரிகளும், தொழிற்சாலைகளும், கல்குவாரிகளும் அதிகமா வந்தாச்சு. அதுனால ஆள் நடமாட்டம் அதிகமாயிட்டு. பெண்களுக்கு டாய்லெட் போவது மிகவும் கஷ்டமான விஷயமாகிட்டு. எங்களுக்கு டாய்லெட் கட்டிக் குடுத்தால் நல்லது. இதுதான் எங்களுக்கு முக்கியமான பிரச்சினை.

அதேபோல, பதினாறு வருசத்துக்கு முன் அரசாங்கம் கட்டிக் குடுத்த வீடுகள் இடிஞ்சு போச்சு. ஒவ்வொரு ஆண்டும் நாங்க அதைச் சீரமைச்சுத்தான் இருக்குறம்" என்றார்.

இங்கே நிலை இப்பிடியென்றால் திருச்சி ஏர்போட்டுக்கு மிக அருகிலிருக்கும் கொட்டப்பட்டு அகதிகள் முகாமின் நிலை சற்றே பரவாயில்லை. நகருக்கு வெகு அருகில் அமைந்துள்ள இந்த முகாம் பர்மாவிலிருந்து வந்த அகதிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்டது. அதுவே பின்னர் இலங்கை அகதிகளுக்காகப் பயன்பட்டது.

இங்கே நானூறு குடும்பங்களில் சுமார் 1,500 பேர் வசிக்கிறார்கள். வாளவந்தான் கோட்டையில் குடிசைகள் என்றால், இங்கே ஹவுசிங் யூனிட் வீடுகள் போன்ற கட்டிடங்களில் வாழ்க்கை. ஆனால், பொலிஸ் மற்றும் க்யூ பிராஞ்ச் கண்காணிப்பு இங்கே அதிகம். இங்குள்ள பிள்ளைகளுக்கு படிப்பு என்பது அவ்வளவு சிரமமில்லை. இங்கும் முக்கியக்குறை கழிப்பிட வசதிதான். இருக்கும் சொற்ப எண்ணிக்கையிலான கழிப்பிடங்களையே எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்பதால் பெரும் சுகாதாரக் கேடு நிலவுகிறது.

இப்படி நாம் பார்த்த விஷயங்களைத் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷிஷ் வச்சானியிடம் தெரிவித்தோம். நாம் சொன்னவற்றை நிதானமாகக் கேட்டுக் கொண்ட அவர். "அகதிகள் என்றாலும், அவர்களும் மனிதர்களே... நீங்கள் நாளை மாலை என்னைச் சந்தியுங்கள்" என்று சஸ்பென்ஸாகச் சொல்லிவிட்டு அதிகாரிகளை அழைத்துக் கொண்டு இரண்டு முகாம்களையும் சுற்றி வந்தார்.

அடுத்த நாள் மாலை நமக்கு கலெக்டர் அலுவலகத்திலிருந்து அவசர அழைப்பு. உடனே அங்கே விரைந்தோம். நம்மிடம் பேசிய கலெக்டர் "நீங்கள் சொன்னபடி வாளவந்தான் கோட்டையில் மின்கட்டணத்தில் பிரச்சினை இருப்பது உண்மைதான். அதற்கு இரண்டு மீற்றர்கள் மட்டுமே இருப்பதும் ஒரு காரணம். அது குறித்து மின்வாரிய அதிகாரிகளுடன் பேசி முடிவு எடுக்கிறேன். அதேசமயம், அதிகமான மின் கருவிகளைப் பயன்படுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படாவண்ணம் அங்குள்ள மக்களும் பார்த்துக் கொள்ள வேண்டும். சுகாதார மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

சுண்ணாம்புப் படிவு இல்லாத காவிரி நீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூபா 10.67 இலட்ச ரூபாவில் குடிநீர் கொண்டு வரும் திட்டம் வெகுவிரைவில் செயல்படுத்தப்படும். அதேபோல், திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமுக்குக் கழிப்பிட வசதி செய்ய 7.98 இலட்ச ரூபாவில் இன்னொரு திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்" என்றார். குமுதம் ரிப்போர்ட்டரின் சார்பில் அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்றோம்.

"எங்கட சொந்தங்கள் எங்களைக் கைவிட மாட்டாங்கள்" என்று மிகுந்த நம்பிக்கையோடு தாயகம் திரும்பும் தமிழர்கள். எந்தச் சூழ்நிலையையும் சகித்துக் கொண்டு வாழப் பழகி விட்டார்கள். என்றாலும், அவர்களின் நாளைய பொழுதாவது நல்லபடியாக விடிய வேண்டும் என்பதே நமது ஆசை. - குமுதம் -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது உறவுகளின் கதைகளினைக் கேக்க கவலையாக இருக்கிறது.

ஆளும் கட்சியாக இருந்தாலென்ன

எதிர்கட்சியாக இருந்தாலென்ன

பதவியில் இருந்தால் என்ன?

பதவி இல்லாவிட்டால் என்ன?

மனமிருந்தால்

அவர்களால் இந்த அகதிகளை பார்த்திருக்கலாம்.

பார்க்கலாம்............

அரசியல் தனமான

சுயநலமான

மேடைப் பேச்சுகளும்

வீர வசனம்களும்

இணைந்து எடுத்து பிரசுரிக்கும் புகைப்படங்களும்

இப்படியான அப்பாவிகளை காப்பாற்றாது.

ஒரு நாடு

அகதியாக மக்களை ஏற்றுக் கொள்கிறதென்றால்

அவர்களது

அடிப்படை வசதிகளான

உணவு - உடை - இருப்பிடம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை

செய்து கொடுக்க வேண்டும்.

அல்லது

அவர்களை ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனத்திடம்

பராமரிப்பதற்கு ஒப்படைக்க வேண்டும்.

ஒரு நாடு

அங்கு வரும் அகதிகளை முறையாக பராமரிக்க முடியாது

என்று சொல்லும் போது

அதே நாட்டில் வைத்தோ

அல்லது

ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம்

அகதிகளை ஏற்றுக் கொள்ளும் நாட்டொன்றுக்கோ

அனுப்பி அகதிகளை

ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம்

பாதுகாத்தே ஆகவேண்டும்.

(அது இயற்கை அனர்த்தமாக இருந்தாலென்ன

யுத்தமாக இருந்தாலென்ன...................)

ஐ.நா

இதற்கான மானியமொன்றை

அகதிகளை பராமரிக்கும் நாடுகளுக்கு வழங்குகிறது.

இங்கே எழுதும்

இந்திய சகோதரர்களே

முடிந்தால் அதை உங்கள் ஊடகங்களில்

எழுதுங்கள்.................

அது உங்களுக்கு ஒரு பெரிய புண்ணியம்.

பின்னர்

இங்கே இணையுங்கள்.

இவை உலக நாடுகளில் வாழும் மனிதாபிமான மக்களை சிந்திக்க வைக்கும்.

முக்கியமாக

இந்திய அரசியல்வாதிகளுக்கு

இது ஒரு புதிய தகவலாக இருக்கும்.

அவர்களும் சற்று சிந்திப்பார்கள்?

சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் போலவே

இதுவும் ஒரு பாரிய

பலரது கண்களுக்கு புலப்படாத

அனர்த்தமே...............

இது பற்றி சில வேளைகள்

உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

யாழ்கள உறவுகளே

இது பற்றிய மேலதிக தகவல்களை

இங்கே இணையுங்கள்.............

அவை ஆங்கிலத்தில் இருந்தாலும் நல்லதே.

(தயவு செய்து

தேவையற்ற வாதங்களை

அல்லது வெறுப்பேற்றும் வசனங்களை தவிருங்கள்.

அது தேவைகளை திசை மாற்றி விடும்.

- நன்றி)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.