Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகோவும் சீமானும் என்ன செய்யப்போகிறார்கள்?

Featured Replies

மூலம்: http://amudhavan.blogspot.de/2013/03/blog-post.html

மீண்டும் டெசோ ஆரம்பிக்கப்பட்டு சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

இந்தியப் பாராளுமன்றத்தில் இதுபற்றிய விவாதம் நடைபெற்று எல்லாக்கட்சிகளையும் சார்ந்த எம்பிக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின்றனர். தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சரும் அவரைத் தொடர்ந்து பிரதமரும் இந்திய அரசின் நிலைகுறித்து விளக்கியிருக்கிறார்கள். இவர்களின் விளக்கெண்ணெய் விளக்கம் என்னவென்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். இனப்படுகொலைக்குத் துணையாக நின்றவர்கள் இப்போது உலக அரங்கின் முன் தங்கள் சுயரூபம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அண்டை நாடு, வெளியுறவுக்கொள்கை, இறையாண்மை, பேச்சுவார்த்தை நடத்துவோம், விசாரணை நடத்த வற்புறுத்துவோம் என்று என்னென்னமோ சொல்லி பிரச்சினையை இப்போதைக்கு நீர்த்துபோகச் செய்வதற்கு படாதபாடு படுகிறார்கள்.

திமுகவையும் கருணாநிதியையும் ஆயிரம்தான் இந்த விஷயத்தில் குறை சொன்னாலும் தற்போது மொத்த இந்தியாவின் கவனத்தையும் பாரதிய ஜனதா உள்பட மொத்தக் கட்சிகளின் கவனத்தையும் மத்திய அரசாங்கத்தின் கவனத்தையும் இந்த அளவுக்குக் கொண்டுவந்திருப்பது டெசோவின் சாதனைதான். மற்ற கட்சிகளெல்லாம் எத்தனைக் கூப்பாடு போட்டாலும் நடைபெறாத ஒன்று (அப்படி எந்தக் கட்சியும் கூப்பாடு போடவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்) இப்போது இவர்களின் முயற்சியால் நடைபெற்றிருக்கிறது.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களில் கலந்துகொண்டவர்கள் சரியான, முறையான விவாதங்களையே வைத்திருக்கிறார்கள். திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பேசும்போது “தமிழர்களுக்கு எதிராக இலங்கை தொடுத்த போரில் 90 ஆயிரம் தமிழ்ப்பெண்கள் தங்களது கணவன்மாரை இழந்துள்ளனர். இலங்கை அரசு இனப்படுகொலை செய்தது. தமிழ்ப்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

இலங்கைப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டும். மத்திய அரசு உறுதியான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும்.

நாங்கள் கேட்பது தமிழ் ஈழம்தான்!

இலங்கைப் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் மட்டும்தான் தீர்வாக அமையும்” என்று பேசியிருக்கிறார். இது தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு முட்டுச்சந்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சு இல்லை. பாராளுமன்றத்தில் அவர் சார்ந்த கட்சியின் கருத்தாக இந்தக் கருத்தை முன்வைத்திருக்கிறார் பாலு.

அதிமுகவின் எம்பி தம்பித்துரை பேசும்போது “இலங்கைத் தமிழர்களைக் காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. உண்மையிலேயே இது இனப்படுகொலைதான். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும்” என்றிருக்கிறார்.

தயாநிதி மாறன் பேசும்போது “இலங்கைப் பிரச்சினையில் எவ்வளவோ பேசியும் எழுதியும்கூட பல்லாண்டு காலமாக நிலைமை அப்படியேதான் உள்ளது” என்றார்.

காங்கிரசைச் சேர்ந்த அழகிரி, இடதுசாரிக்கட்சிகளைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜன், லிங்கம், மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்று பேசினர்.

விடுதலை சிறுத்தைகளின் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது “நாம் நினைக்கிறபடி ஒருநாளும் இலங்கை நட்புநாடாக இருந்ததில்லை. இலங்கை நமது நட்பு நாடு என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். இந்தியா இலங்கை மீதான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது. “பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றைக் கொரித்துக்கொண்டிருந்த காட்சியும் அதன்பிறகு சிறிது நேரத்தில் அவன் சுட்டு படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்துகிடக்கும் காட்சியும் அனைவரையும் உறைய வைக்கும். இலங்கையில் எப்படியான படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அந்த ஒரே படம் சொல்லும்…..2009-ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இத்தகைய தாக்குதல் இலங்கை அரசின் கொள்கையாகிவிட்டது. தேவைப்பட்டபோது இந்தியா செயல்படத் தவறிவிட்டது. இனப்படுகொலை நடந்தபோது மத்திய அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. இந்திய அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. இலங்கைத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது. புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது.

தீர்மானத்தின் மீது இந்தியா வெறுமனே ஓட்டுப்போடுவதோடு நின்றுவிடக்கூடாது. அந்த தீர்மானத்தை வரைவதில் முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும். இனப்படுகொலைகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்” என்று கடுமையாகப் பேசியிருக்கிறார் பாரதிய ஜனதாவின் யஷ்வந்த் சின்ஹா.

பிரதமர் கனவில் இருக்கும் தலைவர்களில் ஒருவரான சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசுகையில் “தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூர செயல்களுக்கு எதிராக நீங்கள்(மத்திய அரசு) எதிர்ப்பு தெரிவித்தீர்களா? ‘மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியா பேசும்’ என்று ஜவஹர்லால் நேரு கூறியிருக்கிறார். இந்தக் கொள்கையை மத்திய அரசு பின்பற்றத் தவறியதன் விளைவுதான் இலங்கையில் தமிழர்களுக்கு இந்தக் கதி நேர்ந்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் குழப்பம் இருக்கிறது. இதைத் தெளிவு படுத்துங்கள். (காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைப் பார்த்து) சோனியாஜி, நீங்கள் ஏன் மவுனம் காக்கிறீர்கள்? உங்களிடம் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக ஏடுத்த நடவடிக்கை என்ன என்பதை உங்களுக்குப் பின்னால் அமர்ந்திருக்கிற பிரதமரையும், வெளியுறவுத் துறை மந்திரியையும் கேளுங்கள். அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவு தேவைதான். அதற்காக நமது சொந்த மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் உரித்தான விஷயங்களை நாம் எடுத்துச் சொல்லக்கூடாது என்பதல்ல” என்று குறிப்பிட்டார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்பி சவுக்கத்தா ராய் நேரடியாக திமுக எம்பிக்களை நோக்கி இந்தக் கேள்வியை முன்வைத்தார். “சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு, டீசல் விலைஉயர்வு போன்றவற்றில் அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே நாங்கள் அரசில் இருந்து விலகினோம். நீங்கள் ஏன் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் உண்மையிலேயே காங்கிரசுடன் தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும்” என்று நாம் நினைக்கும் கருத்தை முகத்துக்கு நேராகவே திமுக எம்பிக்களைப் பார்த்துக்கூறினார் அவர்.

ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலுபிரசாத் பேசும்போது “இலங்கை தமிழர்களுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் பரிதவிக்கிறது. இந்த விஷயத்தில் அரசு கண்டிப்பாக ஏதாவது செய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

பகுஜன் சமாஜ் கட்சி எம்பி தாராசிங் பேசும்போது “இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. இந்தப் பிரச்சினையத் தீவிரமாக எடுத்துக்கொண்டு தலையிடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

ஆக, இந்தியாவின் அத்தனைப் பெரிய அரசியல்கட்சிகளின் கவனத்திற்கும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை உணர்த்தப்பட்டு, அங்கு நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பது சொல்லப்பட்டு, இத்தகைய கொடுமைகளுக்கும் இலங்கை அரசின் அநீதிகளுக்கும் எதிராக இந்திய அரசாங்கம் செயல்பட வேண்டும் என்பதை அந்தந்த கட்சிகளின் பிரதிநிதிகளே நாடாளுமன்றத்தில் சொல்லும் அளவுக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுவந்தது நிச்சயம் ஸ்டாலினும் பாலுவும் திருச்சி சிவாவும் டிகேஎஸ் இளங்கோவனும் அவர்கள் சார்ந்துள்ள திமுகவும்தான் என்பதை நாம் மறந்துவிடுவதற்கில்லை.

அட்டூழியமும் கொடுமையும் இனப்படுகொலையும் நடைபெறும்போதெல்லாம் பேசாமல் இருந்துவிட்டு இப்போது இது என்ன நாடகம்? என்று திமுகவைப் பார்த்துக் கேள்வி எழுப்பினால் நிச்சயம் அதற்கு பதிலில்லை.

அன்று முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றபோது கருணாநிதி என்ன செய்துகொண்டிருந்தார்? என்ற கோபக்கேள்விகளுக்கும் நம்மால் உரிய பதிலை நிச்சயம் சொல்வதற்கில்லை.

இது சம்பந்தமாய் இத்தனை நாட்கள் கழித்து அவர் கொடுத்துள்ள நீண்ட விளக்கமும் (போரை நிறுத்திவிட்டதாக ராஜபட்சே பொய் சொன்னதும் ஒரு போர்க்குற்றமே) எந்தத் தமிழ் உணர்வாளரையும் திருப்திப்படுத்தவில்லை.

நடந்துமுடிந்துவிட்ட கொடுந்துயரம் ஈடுசெய்ய முடியாதது என்பதிலும் எந்தவித மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. ஆனால் இதையே சொல்லிக்கொண்டு காலாகாலத்திற்கும் இப்படியே பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பதனால் ஒரு பிரயோசனமும் கிடையாது.

‘கருணாநிதி துரோகி, கட்டுமரக்காரனை நம்புவதற்கில்லை, குடும்பத்தைத்தவிர வேறு சிந்தனை தாத்தாவுக்கு இல்லை. ஏ! பெரிசு நீ ஒதுங்கிக்கோ மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்றெல்லாம் இணையத்தில் கமெண்ட் போட்டுவிட்டு விலகிவிடுவதனால் ஒரு புல்லும் இங்கே அசைந்துவிடுவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் அரங்கில் அடுத்த நிலைக்குப் போவது என்பது தவிர்க்கமுடியாத ஒன்று.

இனிமேலாவது எல்லாரும் ஒன்று சேர்ந்து ஏற்கெனவே நடைபெற்றதுபோன்ற அக்கிரமங்கள் நடைபெறாமல் தடுக்கவும் கைக்கெட்டும் தூரத்தில் வாழும் நம் தொப்புள்கொடி சமூகம் அங்கே உயிர் பயம் இன்றி வலம்வரவும், பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுத்தப்படாமல் மானத்துடன் வாழவும், அவர்களுக்கு உறைவிடம் உணவு போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக குடிமக்களுக்கான அனைத்து உரிமைகளுடன் வாழவும் வழி ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் அதற்காக அந்த கொடுங்கோல் அரசாங்கத்தைப் பணியவைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் கடமையை நமது நாட்டிற்கும் நாட்டை ஆளுகிறவர்களுக்கும் உடனடியாக உணர்த்தும் நிகழ்வுகளை நாம் செய்யவேண்டியவர்களாக இருக்கிறோம். அத்தகைய ஒரு நிகழ்வாக இந்த நாடாளுமன்றத்தின் விவாதம் நடைபெற்றிருக்கிறது.

இரண்டாவதாக-

இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.

மூன்றாவதாக-

திமுக நாடாளுமன்றத்தில் அறிவித்தபடி “நாங்கள் கேட்பது தமிழ் ஈழம்தான். இலங்கைப் பிரச்சினைக்குத் தமிழ் ஈழம் மட்டும்தான் தீர்வாக அமைய முடியும்” என்பதை நோக்கி நகரவேண்டும்!

இந்த அறிவிப்பை ஏதோ டி.ஆர்.பாலு சொன்னதாக எடுத்துக்கொள்ளாமல் திமுகவின் தலைவர் கலைஞர் கருணாநிதி சொன்னதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அவருடைய ஒப்புதல் இல்லாமல் சாதாரண டி.ஆர்.பாலுவால் இவ்வளவு பெரிய ‘ஸ்டேட்மெண்ட்டை’ நாடாளுமன்றத்தின் முக்கிய விவாதத்தின்போது இவ்வளவு அழுத்தம் திருத்தமாக உரத்த குரலில் சொல்லியிருக்கமுடியாது.

ஆகவே அது கலைஞரின் அறிவிப்புதான்!

இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துவிடாமல் தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக டெசோ அமைப்பு எடுத்துச் செல்லவிருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவையெல்லாமே மத்திய அரசாங்கத்தை ‘மிரட்டுவதற்கு’ திமுக கைக்கொள்ளும் உத்தியாகக்கூட இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டுமே………………..

மத்திய அரசாங்கத்தை ஏதோ ஒரு வழியில் மிரட்டி சரியான திசைக்கு அவர்களைக் கொண்டுசெல்லும் எந்த உத்தியும் இந்த காலகட்டத்தில் வரவேற்கப்படவேண்டியதே!

டெல்லியில் டெசோ சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் என்ன விளைவுகளை ஏற்படுத்திற்று என்று பார்த்தோமானால் தமிழ்நாட்டில் சில பத்திரிகைகளும் வெறும் பத்துப்பதினோரு பேர் மட்டுமே பேசிக்கொண்டிருந்த விவகாரம் இன்றைக்கு தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயமாகியிருக்கிறது என்பதே ஒருவகையில் வெற்றிதான்.

குலாம்நபி ஆசாத் போன்ற காங்கிரசைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மனித உரிமை ஆர்வலரான சுவாமி அக்னிவேஷ், சர்வதேச பொதுமன்னிப்பு அவையின் இந்தியச் சார்பாளர் அனந்த பத்மநாபன் போன்றவர்கள் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசினர் என்பது முக்கியமான ஒன்று.

இதனால் உடனடி லாபம் என்று பார்த்தோமானால் முன்பெல்லாம் செய்ததைப்போல அண்டை நாடு இறையாண்மை என்றெல்லாம் போலி வெளியுறவுக் கொள்கை பேசிக்கொண்டு தமிழர்களைக் கொல்ல ஆயுதம் கொடுப்பதும் மேலும் இன அழிவை நடத்துவதும் கொடூரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் நிச்சயம் முடியாது.

அதேபோல ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள் ‘தமிழ்த்தீவிர வாதிகள் கொல்லப்பட்டனர். தமிழர்கள் மகிழ்ச்சி’ என்பது போன்ற பொறுக்கித்தனமான செய்திகளை ஒளிபரப்ப நிச்சயம் தயங்குவார்கள்.

இது கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கி எழுதப்படும் பதிவு அல்ல;

2009-ல் நடைபெற்ற பேரழிவைத் தடுத்து நிறுத்தும் கடமை அவருக்கு நிச்சயம் இருந்தது.

அப்படி அந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்தும் நிலைமை அன்றைக்கு இல்லாமல் போயிருக்கும் நிலையில் உடனடியாகப் பதவியைத் துறந்துவிட்டு தெருவில் இறங்கிப் போராடியிருக்கவேண்டும் அவர் என்பதுதான் நம்முடைய நிலைப்பாடு. அதனை அவர் செய்யவில்லை.

அதற்கான பலனை அவர் அனுபவித்தார்.

மக்கள் அவரை மிகவும் கேவலமாகத் தோற்கடித்தனர். கடந்த எழுபது ஆண்டுகளாக உலகத் தமிழர்களிடம் அவர் சேர்த்துவைத்திருந்த புகழ் ஒரே வாரத்தில் அதல பாதாளத்தில் விழுந்தது. ஊடகங்கள் அவரை உண்டு இல்லையென்று ஆக்கின. உலகத் தமிழர்கள் சொல்லக்கூசும் வார்த்தைகளால் அவரை அர்ச்சித்தனர். இணையத்தில் அவருக்கு எதிராக எழுதப்படும் விமரிசனங்களை எந்த அச்சு ஊடகமும் பிரசுரிக்க முடியாது. அத்தனை ஆபாச வார்த்தைகள்…………

சரி; இந்த நிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால் என்ன ஆகும்? ஒரு கணம் யோசியுங்கள்.

ஆயிரம்தான் இருந்தாலும் ‘இலங்கைத் தமிழர்’ பிரச்சினைக்கோ அல்லது ‘ஈழத்தமிழர்’ பிரச்சினைக்கோ இந்தியாவிலுள்ள மத்திய அரசாங்கத்தின் துணையுடன்தான் எந்த ஒரு தீர்வும் கண்டாகவேண்டும். இப்போதைக்கு இதைத்தவிர வேறு வழியே இல்லை.

நினைவில் வையுங்கள். மத்திய அரசை அடிபணியச் செய்ய மக்கள் சக்தி அவசியம்.

பெரும்பாலான தொண்டர்களைக் கொண்ட ஒரு கட்சி இந்தப் பிரச்சினையைத் தீவிரமாகக் கையிலெடுத்தால் மட்டுமே அடிப்படையான சில நகர்வுகளாவது சாத்தியம். வெறும் வாய்க்கூச்சல் போடும் ஆயிரம் உணர்ச்சிகரப் பேச்சாளர்களை வைத்து திரும்பத்திரும்ப கூட்டங்கள் போட்டு கூடிக்கொண்டும் ராஜபட்சேவையும் கருணாநிதியையும் சோனியாவையும் திட்டிக்கொண்டிருப்பதனால் மட்டும் ஒரு துரும்பு கூட அசையாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மிகப்பெரும் மக்கள் திரளை வைத்துள்ள இயக்கங்கள் தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் மட்டுமே.

இவர்கள் மட்டும்தான் இருபது சதவிகிதத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை வைத்திருக்கும் மக்களைக்கொண்ட இயக்கங்கள். மற்றவை எல்லாம் ஐந்து, நான்கு, இரண்டு, ஒன்று என்ற சதவிகித மக்கள் ஆதரவு கொண்ட இயக்கங்கள் மட்டும்தாம்.

அதிமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆ,ர் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் எம்ஜிஆர் ஆதரவாக இருந்தாரே தவிர அந்த இயக்கமோ அல்லது அந்த இயக்கத்தொண்டர்களோ ஆதரவாக இருந்தார்கள் என்று சொல்லமுடியாது. இன்னமும் சொல்லப்போனால் தீவிரமான ஒரு அதிமுக தொண்டனுக்கு ஈழப்பிரச்சினை என்னவென்பதும் அதன் அடிநாதம் என்னவென்பதும் தெரியுமா என்பதே சந்தேகத்திற்குரியது.

ஆனால் திமுகவின் நிலைமை அப்படியல்ல;

திமுகவின் தொண்டன் என்பவன் ஒரு தீவிரமான உணர்வுமயமான மொழி ஆதரவாளன். கட்சியில் சேர்ந்த நாளிலிருந்தே தமிழ்மொழியின் காதலன் அவன். இலங்கை விவகாரத்தில்கூட ‘தலைவர் எதுக்கு இப்படி நடந்துக்கறார்?’ என்று தொண்ணூறு சதம் தொண்டன் மனதிற்குள்ளேயே புழுங்கித் தவித்தவன்தான். தங்கள் தலைவன் மேற்கொண்டிருக்கிற தவறான பாதையை வெளியில் சொல்லமுடியாமல் வேதனையில் தவித்தவன்தான் அவன். அதானால்தான் இன்றைக்கு டெசோ என்று கலைஞர் குரல் கொடுத்ததும் இருக்கிற வேலையை எல்லாம் போட்டுவிட்டுத் தெருவில் இறங்கி நிற்கிறான் அவன். இல்லையென்றால் இத்தனைக்கூட்டம் எங்கிருந்து வந்தது?

இலங்கை விவகாரத்தில் தலைவர்கள் தவறாக நடந்துகொண்டார்களே தவிர திமுகவின் தொண்டர்கள் தவறான எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.

இங்கே இன்னொரு முக்கியமான கோணமும் உள்ளது. கலைஞர் தவறான முடிவை எடுத்து மத்திய அரசின் நடவடிக்கை எல்லாவற்றிற்கும் வாய்பேசாது மௌனியாக இருந்தாரே தவிர, இதுநாள்வரையிலும் ஈழத்தமிழர்களைப் பற்றியோ அந்தத் தமிழர்களுக்காகப் போராடிய போராளிகளைப் பற்றியோ தப்பித்தவறி ஒரு வார்த்தைக்கூடப் பேசாதவர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும் நண்பர்களே.

ஆனால் மற்றொரு பெரிய இயக்கமான அதிமுக அப்படி அல்ல; அதன் தலைவியான ஜெயலலிதா என்றைக்குமே ஈழம் பற்றியோ அதற்குப் போராடிய போராளிகளைப் பற்றியோ உயர்வான கருத்தையோ நல்ல கருத்தையோ கொண்டிருந்தவர் அல்ல; அவரை வளர்த்து ஆளாக்கிய எம்ஜிஆரால் போற்றப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, உதவிகள் புரிந்து பேணப்பட்ட பிரபாரன் மீது என்றைக்குமே நல்ல அபிப்பிராயத்தை அந்த அம்மையார் சொன்னதே இல்லை.

வாயைத் திறந்தாலேயே பிரபாகரனைப் பிடித்துவரவேண்டும்; கோர்ட்டிலே நிறுத்தவேண்டும்; தண்டனை தரவேண்டும்; தூக்கிலே போடவேண்டும் என்றுதான் பேசியிருக்கிறார். “ஸ்ரீலங்காவிலே நடைபெற்றுவரும் செயல்கள், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் சர்வதேசப் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தது……இந்தச் செயல்கள் அனைத்துமே இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக சம்பந்தம் உள்ளவை. இது குறித்துத் தமிழக மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளார்கள்.”

“நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான எல்டிடியின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து இங்கே கொண்டுவந்து சேர்த்து ராஜிவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டுமென்று திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தேன். 20-9-1991 அன்று பி.வி.நரசிம்மராவுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்ரீலங்கா அரசினுடைய அனுமதி பெற்று நம்முடைய ராணுவத்தை அனுப்பியேனும் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். படுகொலையைப் புரிந்ததற்காக பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டுமென்று கோரியிருந்தேன். அதன்பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வற்புறுத்தினேன்.”

அம்மையாரின் ஆவேசம் இன்னும் தொடர்கிறது. “தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது”

“என்னுடைய பெருமுயற்சியின் காரணமாகத்தான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் இயக்கம் 14-5-1992 அன்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.”

“எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ஆதரவுப்பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன” (‘நமது எம்ஜிஆர்’ 3-10-2008)

“14-10-2008 அன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பார்த்தால் ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி’ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது” (16-10-2008) இறுதிப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் இவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “போரை நிறுத்தவேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி விடுதலைப்புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.”

இறுதிக்கட்ட போரின்போது அம்மையார் என்ன திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் பார்ப்போமா?

நிருபர் ; “ஈழத்தமிழர்கள் போரில் கொல்லப்படுகிறார்களே?”

ஜெயலலிதா ; “அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியில் அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்லவேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் – ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். ஆனால் இப்போது என்ன நடைபெறுகிறது என்றால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்துவைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களைக் கேடயமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்”

ஆக, ஈழம் பற்றியும் ஈழப்பிரச்சினைப் பற்றியும் ஈழத்தமிழர்கள் பற்றியும் ஈழப்போராளிகள் பற்றியும் ஜெயலலிதாவின் ‘நிரந்தர’ நிலைப்பாடு என்பது இதுதான்.

ஆட்சிக்கு வந்தால் ஈழம் வாங்கித்தருவேன் என்றும் கச்சத்தீவை மீட்டுத்தருவேன் என்றும் வீராவேசம் பேசியதெல்லாம் தேர்தலுக்காகத்தான் என்பதையும் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். இலங்கை அரசைக் கண்டித்து சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் போட்டதும், கச்சத்தீவை மீட்டுத்தரவேண்டுமென்று பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியதும் போதும் என்பதுபோல் பேசாமல் அமைந்துவிட்டார் அம்மையார்.

“இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று வாக்கு சேகரித்த சீமான்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

உள்ளத்தில் தமிழ் உணர்வு எதுவுமே இல்லாமல் எப்போதோ ஆட்சிக்கு வருவதற்காக இரண்டொரு கூட்டங்களில் மட்டும் ‘மெக்கானிகலாக’ தமிழ் உணர்வு பற்றிப் பேசும் ஒருவரையும், தமிழ் உணர்வாலேயே வளர்ந்துவிட்டு, தமிழ் உணர்வை லட்சோப லட்சம் இளைஞர்களின் மனதில் விதைத்துவிட்டு வேறு ஏதோ நிர்ப்பந்தங்களுக்காக இன்றைக்கு வாய்மூடி மௌனியாக இருந்து இப்போது மீண்டும் தமிழ் உணர்வைக் கையில் எடுத்திருக்கும் ஒருவரையும் தலைவராகக் கொண்ட இருவேறு இயக்கங்கள்தாம் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

ஆயிரம்தான் பேசினாலும் இந்த இரு இயக்கங்கள்தாம் தமிழ்நாட்டின் அரசியலை நகர்த்தும் இயக்கங்களாக இருக்கின்றன.

இவற்றில் ஒன்று தீவிரமாக களத்தில் இறங்கி செயலாற்றினால் மட்டுமே மத்திய அரசாங்கத்தை சில விஷயங்களிலாவது பணியவைக்க முடியும்.

காரணம் மக்கள் சக்தி.

மக்கள் சக்திக்கு மட்டுமே அரசுகள் செவிமடுக்கும்.

இந்த இரு இயக்கங்களைத் தவிர்த்துவிட்டு தமிழ் உணர்வுபேசும் மற்ற இயக்கங்களையோ தமிழ்த் தலைவர்களையோ பார்த்தோமானால் எந்தத் தலைவரும் சொல்லிக்கொள்கிறமாதிரியான மக்கள்சக்தியைத் தமக்குப் பின்னால் கொண்டவர்கள் அல்ல; அதுவும் ஈழப்பிரச்சினையை எடுத்துக்கொண்டால் பழ.நெடுமாறனிலிருந்துதான் பட்டியல் ஆரம்பிக்கிறது. மற்ற தலைவர்களைக் காட்டிலும் ஈழத்தமிழர்களுக்காக இரவு பகல் பாராமல் தம்மை அர்ப்பணித்துச் செயலாற்றிவரும் மூத்த தலைவர் இவர்தாம். ஈழத்தமிழர் ஆதரவுக்கூட்டமும் இளைஞர்கள் கூட்டமும் ஓரளவு இவர் பின்னே அணிதிரளுமே தவிர இவருக்கென்று தனியான கூட்டமெல்லாம் இல்லை. இவர் பின்னால் திரளும் கூட்டம்தான் வைகோவுக்கும் போகும். அதில் ஒரு பகுதிதான் சீமான் அழைத்தாலும் போகும்.

திருமா அழைத்தாலும் போகும் கூட்டமும் இது மட்டும்தான்.

திமுகவிலிருந்த தமிழ் உணர்வும் ஈழ ஆதரவு மனப்பான்மையும் கொண்ட பெருவாரியான இளைஞர்கள் ஈழ ஆதரவு விஷயத்தில் கலைஞர் எடுத்த தவறான முடிவுகள் காரணமாக அல்லது தீவிரமான ஆதரவு எடுக்கவில்லையென்பதனால்தான் வைகோ பின்னால் அணிதிரண்டார்களே தவிர வைகோ புதிய கொள்கைகளையும் புதிய சிந்தனைகளையும் அமைத்து இயக்கம் ஆரம்பித்தார் புதிய சமுதாயம் படைக்க இருந்தார் என்பதானால் எல்லாம் அவர்பின்னால் யாரும் சென்று சேரவில்லை.

சீமான் மிகவும் உணர்ச்சிவசமாகப் பேசக்கூடிய இளைய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். மிகப்பெரும் புரட்சி இவரால் நடைபெற இருக்கிறது என்பது போன்ற பிம்பம் இவர் அரசியல்கட்சி ஆரம்பித்ததும் கட்டமைக்கப்பட்டது.

ஆனால் சிறிது நாட்களிலேயே அது கலகலத்துவிட்டது.

பெரியார் தொண்டர்களுக்கும் இவருக்கும் நடைபெறும் கொள்கை விளக்கங்களிலேயே இளைஞர் கூட்டம் நாளுக்கு நாள் இவரைவிட்டு அகன்றுகொண்டிருக்கிறது.

வைகோ ஒருவர்தான் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதுபோன்ற தோற்றம் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டாலும் அந்த நம்பிக்கையை உடனடியாகச் சிதற அடிக்கும் காரியத்தை வைகோவே கச்சிதமாக செய்துமுடித்துவிடுவார்.

ஒவ்வொரு பெரிய இயக்கங்களிலும் ஒவ்வொரு விஷயம் பற்றிப்பேச ஒவ்வொருவரை வைத்திருப்பார்கள். அப்படி ஈழம் பற்றிப் பேச திமுகவின் போர்வாளாக, கலைஞரின் போர்வாளாக நியமிக்கப்பட்டிருந்தவர் வைகோ. நாடாளுமன்றத்தில் ஈழம் பற்றிப்பேசவும், ஈழம் பற்றிய பல்வேறு கருத்தரங்குகளில் திமுகவின் ‘குரலைப்’ பேசவும் பரிந்துரைக்கப்பட்டவர், கட்சி சார்பாக அனுப்பிவைக்கப்பட்டவர் வைகோ. ஒரே சீராகப் போய்க்கொண்டிருக்கும் இம்மாதிரியான செயல்பாடுகள் எங்கோ ஒரு சமயத்தில் ஏதோ ஒரு நிலையில் இடறும். கட்சித்தலைமைக்கும் சம்பந்தப்பட்டவருக்கும் கருத்து வேறுபாடுகள் முளைக்கும். இனிமேலும் இந்தத் தலைமையின் கீழ் இந்த இயக்கத்துக்குக் கட்டுப்பட்டு நம்மால் செயல்பட முடியாது என்று தோன்றும். அப்போது வெளியேறிப்போய் இன்னொரு இயக்கத்தில் சேருவதோ அல்லது புதிய இயக்கம் ஆரம்பிப்பதோ நடைபெறும். அதுதான் வைகோ விஷயத்திலும் நடந்தது. வைகோவின் செயல்பாடுகளை ஆரம்பத்திலிருந்து கவனித்து வருபவர்கள், அவர் பேச்சுக்களைத் தொடர்ந்து வருபவர்கள் ஒன்றை கவனிக்கத் தவறமாட்டார்கள்.

அது கலைஞர் வைகோவுக்குக் கொடுத்திருந்த இடமும் முக்கியத்துவமும்.

திமுகவில் அவ்வளவு வருடங்களுக்குத் தொடர்ந்து நியமன எம்பியாக யாரையும் கட்சி நியமித்தது இல்லை. தன்னுடைய தம்பிகளில் வைகோவுக்குத் தனியிடம் கொடுத்து அழகு பார்த்தவர் கலைஞர். கட்சியை விட்டுப்போய் வேறுகட்சி அமைத்து எதிரணிக்குப் போய்விட்ட பின்னாலும் மறுபடி தம்மிடம் வந்தபோது அதே முக்கியத்துவத்தை அவருக்குத் தந்தார். இதே இலங்கைப் பிரச்சினைக்காக வைகோ சிறை படுத்தப்பட்டபோது வேலூருக்கு ஓடிச்சென்று சிறையில் சென்று பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்தவர் அவர்.

இவற்றையெல்லாம் மக்கள் கவனத்தில் வைத்தபடிதான் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவருடன் வைகோ எப்படி நடந்துகொள்கிறார் என்பதையெல்லாம் ‘அரசியலுக்கு அப்பாற்பட்டு’ கவனிக்கிறார்கள். ‘நான் அவருக்காகத் தூங்காமல் ரயில் பயணம் செய்தேன்; அதிமுக அமைச்சர் கலைஞர் பயணம் செய்த ரயில் கோச்தான் தனக்கு ஒதுக்கப்படவேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தபோது நான் தூங்காமல் அந்தப் பெட்டிக்கு வெளியே காவலிருந்தேன்’ என்பதெல்லாம் ஒரு பெரிய தலைவனுக்குச் செய்த ஒப்பற்ற தியாகம் என்று மக்கள் நினைக்கவேண்டும் என்று வைகோ நினைப்பது பரிதாபத்திற்குரியதுதான்.

இதுதான் மிகப்பெரிய தியாகம் என்று வைகோ நினைத்தாரென்றால் இதைவிடவும் பெரிய தியாகங்களை ‘இன்னோவா கார் புகழ்’ நாஞ்சில் சம்பத் வைகோவுக்குச் செய்திருக்கிறார் என்பதையும் அவருக்கு ஏன் உரிய முக்கியத்துவத்தை வைகோ தரவில்லை என்பதையும் சம்பத் இவரைவிட்டுவிட்டு ஏன் போனார் என்பதையும் மக்களுக்குச் சொல்லவேண்டிய நிலையில்தான் வைகோ இருக்கிறார்.

கலைஞர் மீதான மிக அதிகபட்ச முறைப்பையும் விறைப்பையும் சரி; பாதையோர ஒரு நிமிட விசாரணைக்காக ஜெயலலிதா மீதான மிக அதிக பட்சக் குழைவையும் பணிவையும் சரி மக்கள் ரசிப்பதில்லை என்பதை புரிந்துகொள்ளும் நிலையில் வைகோ இருக்கிறாரா என்பதே சந்தேகத்துக்குரியது.

இதுமாதிரியான தலைவர்கள்தாம் நம்மைச் சுற்றிலும் இருக்க இந்திய அரசும் சரி இலங்கை அரசும் சரி தங்களின் செயல்பாடுகளுக்கு மக்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதை வைத்துத்தான் தங்களின் அடுத்தகட்ட நகர்வு பற்றித் தீர்மானிக்கிறார்கள்.

‘திரளான மக்களிடமிருந்து எவ்விதமான எதிர்வினையும் வரவில்லையா? தொடர்ந்து செய்; மக்கள் பெருவாரியாக எதிர்க்கிறார்களா? நிறுத்திவிடு’ என்பதுதான் அரசுகள் செயல்படும் முறை.

மத்திய அரசுக்கும் சரி இலங்கை அரசுக்கும் சரி மண்டபக்கூட்டங்கள், எரிதழல் அறிக்கைகள், ‘ஏ ராஜபட்சே எங்களிடமிருந்து நீ தப்பிக்கமுடியாது; நாங்கள் ஒன்றுதிரண்டால் என்ன ஆகும் தெரியுமா?’ என்பது போன்ற வாய்ச்சவடால்கள் எல்லாம் எந்தவித துரும்பையும் அசைக்காது என்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

மிகப்பெரும் மக்கள் சக்தியைக்கொண்ட எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்களும், அரசியல் ரீதியான அணுகுமுறைகளும், நிர்வாக ரீதியான காய் நகர்த்தல்களும்தாம் ஈழப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச்செல்ல உதவும்.

ஐநா சபையிலும், மனித உரிமைக் கழகத்திலும் அதன் தீர்மானங்களை நேரில் ஒப்படைத்தது, வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சென்று அவற்றின் தூதர்களைச் சந்தித்து பிரச்சினை என்ன என்பதை எடுத்துச்சொல்லி விளக்கம் அளித்தது, நாட்டில் இருக்கிற எல்லா அரசியல் கட்சித்தலைவர்களையும் சந்தித்து இதுபற்றிப் பேசுமாறு கேட்டுக்கொண்டது என்று சரியான திசையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது டெசோ.

இம்மாதிரியான காரியங்களையெல்லாம் சிறு கட்சிகளோ சிறு குழுக்களோ அதன் தலைவர்களோ செய்துவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

சிறு குழுக்களின் தலைவர்கள் அவ்வளவு சுலபமாக தூதரகங்களுக்குள் சென்று வெளிநாட்டுத் தூதுவர்களையெல்லாம் சந்தித்துத் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திவிட்டெல்லாம் வரமுடியாது.

ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து ஈழம் தொடர்பாகப் பேசியிருக்கிறது ஸ்டாலின் தலைமையிலான குழு.

இதை இவ்வளவு நாட்கள் ஏன் செய்யவில்லை என்ற கேள்வி வருமானால் நிச்சயம் அந்தக் கேள்விக்கு பதிலில்லை. இப்போதாவது செய்கிறார்களே என்று திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

டெசோவின் இந்தச் செயல்கள் எல்லாம் கலைஞர் நடத்தும் ‘போலிநாடகம்’ என்றிருக்கிறார் வைகோ. ஏறக்குறைய இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறார்கள் பழ.நெடுமாறனும் சீமானும்.

இருந்துவிட்டுப் போகட்டுமே, உங்களின் ‘நிஜநாடகங்களில்’ நடைபெறாத ஒன்று இவரின் ‘போலி நாடகத்தால்’ நடைபெறுகிறது என்றால் நடந்துவிட்டுப் போகட்டுமே.

உள்ளூர் அரசியலுக்காக, இந்தச் செயல்பாடுகளுக்கு எதிராக இங்கே குளறுபடிகள் செய்து ‘எந்த விஷயத்திலும் நாங்கள் ஒன்றுபட மாட்டோம்’ என்பதை உலகுக்கு உணர்த்தினால் அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் எதிர்காலத்தில் மிக மோசமான பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

இத்தனைச் செய்தும் மத்திய அரசாங்கத்தின் பதில் சாதகமாக இல்லை. இதனைக் கலைஞரும் உணர்ந்திருக்கிறார். வழக்கம்போல் அடிபணிந்து இருந்துவிடப்போவதில்லை என்பது அவர் அறிவித்திருக்கும் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. ‘காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் ஒவ்வொரு நாளும் ஈழப்பிரச்சினையில் வெவ்வேறு மாறுபட்ட நிலைகளை எடுத்து ஒருவது கவலை தருவதாக உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஐநா அவையில் வரவிருக்கும் அமெரிக்க தீர்மானம் குறித்து உறுதியாகவும் தெளிவாகவும் யாதொன்றும் கூறவில்லை. ஆனால் அன்று மாலை டெசோ கருத்தரங்கில் கலந்துகொண்ட குலாம்நபி ஆசாத் “அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிப்போம்” என்பதாக உரையாற்றினார். ஆனால் மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் எந்த உறுதியும் வழங்காமல் தமிழ் ஈழத்தலைவர்களோடு இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய அரசின் இப்போக்கினை தொடர்ந்து மவுனமாகப் பார்த்துக்கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக்கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் டெசோ தன் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காது என்பதை இந்தத் தருணத்தில் வெளிப்படுத்துகின்றோம். எனவே இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தர பொது வேலை நிறுத்தம் நடைபெற்றே தீரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வைகோவும் சீமானும் பழ.நெடுமாறன் ஐயாவும் என்ன செய்யப்போகிறார்கள்?

மக்கள் திரள் அதிகரிக்கும்போது அதில் இணைந்துகொள்ளப்போகிறார்களா, அல்லது குறுக்குசால் ஓட்டப்போகிறார்களா அல்லது ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலையெடுத்து அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதனைச் செய்யப்போகிறார்களா, அல்லது பேசாமல் இருந்துவிடப்போகிறார்களா என்பது இந்த நேரத்தின் மிக முக்கியமான கேள்வி.

இதற்கு முந்தைய கட்டம் எப்படியோ கலைஞரின் இன்றைய நிலைப்பாடுகள் சரியானவையாகத்தான் இருக்கின்றன. இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சரியான திசையில் பயணம் செய்ய அவருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

அவர் இப்படி அப்படி நழுவிவிடாமல் தமிழர்களுக்காகப் பாடுபடவேண்டிய அழுத்தத்தையும் நிர்ப்பந்தத்தையும் அவருக்குத் தரவேண்டும். இன்றைய காலகட்டத்தில் இதுதான் சரியான வழிமுறையாக இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது.

இந்தமுறை இவ்வளவு தீவிரமான ஒரு நிலைப்பாட்டை எடுத்தபின்னர் வேறு காரணங்களுக்காக அதிலிருந்து மாறுவார் என்று சொல்வதற்கில்லை.

அப்படி மாறினாரென்றால் தமிழ்ச்சமுதாயம் அவரை மன்னிக்காது!

இந்த நேரத்தில் உள்ளடி வேலைகள் செய்து அவரைப் பணி செய்யவிடாமல் தடுத்தால் அப்படித் தடுப்பவர்களையும் தமிழ்ச்சமுதாயம் மன்னிக்காது.

Edited by சபேசன்

  • தொடங்கியவர்

சற்று நீளமான கட்டுரைதான். ஆயினும் நேரம் எடுத்து வாசித்துப் பாருங்கள். தமிழ்நாட்டின் இன்றைக்கு நடக்கும் ஈழ ஆதரவு அரசியலை பெரும்பாலும் சரியாக பேசுகிறது. சில இடங்களில் எனக்கும் முரண்பாடு உண்டு. ஆயினும் பயனுள்ள கட்டுரை

ஏன் ஆளும் கட்சியில் இன்றும் திமுக கூட்டணி வைத்துள்ளது  என்ற முக்கிய விடயம் வேண்டுமென்றே எழுதப்படவில்லை.

 

மிகப்பெரும் மக்கள் திரளை வைத்துள்ள இயக்கங்கள் தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் மட்டுமே.

 

இவர்கள் மட்டும்தான் இருபது சதவிகிதத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை வைத்திருக்கும் மக்களைக்கொண்ட இயக்கங்கள். மற்றவை எல்லாம் ஐந்து, நான்கு, இரண்டு, ஒன்று என்ற சதவிகித மக்கள் ஆதரவு கொண்ட இயக்கங்கள் மட்டும்தாம்.

 

தமது கட்சி மூன்றாம் இடத்திற்கு சென்றுவிடக்கூடாது என்பதே கட்டுரையின் நோக்கம் என தோன்றுகின்றது  ^_^

  • தொடங்கியவர்

டெசோவின் இந்தச் செயல்கள் எல்லாம் கலைஞர் நடத்தும் ‘போலிநாடகம்’ என்றிருக்கிறார் வைகோ. ஏறக்குறைய இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறார்கள் பழ.நெடுமாறனும் சீமானும்.

இருந்துவிட்டுப் போகட்டுமே, உங்களின் ‘நிஜநாடகங்களில்’ நடைபெறாத ஒன்று இவரின் ‘போலி நாடகத்தால்’ நடைபெறுகிறது என்றால் நடந்துவிட்டுப் போகட்டுமே.

 

கட்டுரையில் மிகவும் ரசித்த இடம் இது.

அதே வேளை விடுதலைப் புலிகள் எதிர்ப்புத்தான் ஜெயலலிதாவின் நிரந்தர நிலைப்பாடு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஈழம் பற்றியோ புலிகள் பற்றியோ நிரந்தர நிலைப்பாடு இல்லை என்பதுதான் ஜெயலலிதாவின் நிரந்தர நிலைப்பாடு

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாலியல் தொழிலாளி சந்தியில் நின்று தனிமனித ஒழுக்கத்தைப் பற்றிப் பேசினால் நாலுபேர் நின்று கேட்கத்தான் செய்வார்கள்..! அது அவளின் பேச்சைக் கேட்பதற்காக இருக்காது.. :D

Edited by இசைக்கலைஞன்

கருநாநிதி தான் விட்ட அரசியல் பிழையை மீண்டும் ஈழத்தமிழனை வைத்து சரிப்படுத்த நினைக்கிறார்..

எல்லாம் அழிந்தபின்  இனி என்ன அவர் செய்ய இருக்கு.

 

யார் விரும்பியோ விரும்பாமலோ ஒரு எலும்புத்துண்டு அரசியல் தீர்வு வரும். ஈழமும் இல்லை  தன்னாட்சியும் இல்லை.

இதற்கு கருநாநிதி தேவை இல்லை எல்லாரும் கத்தலாம்.

 

இப்பதானே  எல்லாரும்  அழுகினம், கத்துகினம். போராடும் போது சொன்ன போது ஒருத்தரும் சிங்களனை பற்றி  சொன்ன கதைகளை ஏற்கவில்லை.

மிகப்பெரும் மக்கள் திரளை வைத்துள்ள இயக்கங்கள் தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் மட்டுமே.


இவர்கள் மட்டும்தான் இருபது சதவிகிதத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை வைத்திருக்கும் மக்களைக்கொண்ட இயக்கங்கள். மற்றவை எல்லாம் ஐந்து, நான்கு, இரண்டு, ஒன்று என்ற சதவிகித மக்கள் ஆதரவு கொண்ட இயக்கங்கள் மட்டும்தாம்.

 

முறையான தலைப்பாக " திமுக வும் அதிமுகவும் என்ன செய்யப்போகின்றன? "என தலைப்பிட்டு இருக்கவேண்டும்!

  • தொடங்கியவர்

ஆம், திமுக அதிமுக என்ன செய்யப் போகின்றன என்பதுதான் சரி. அதிமுக டெசோ போன்ற இன்னொரு அமைப்பை உருவாக்க வேண்டும். அத்தோடு தன்னுடைய தொண்டர்களுக்கு ஈழத் தமிழர் பிரச்சனை பற்றிய பயிற்சிப் பாசறைகளை நடத்த வேண்டும்.

கட்சிக்கு அப்பால் இந்த இந்த இரண்டு அமைப்புக்களும் ஒரு புரிந்துணர்வோடு செயற்பட வேண்டும்.

காங்கிரசும் கருணாநிதியும் நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள். இதனால் பலவற்றில் மாட்டிக்கொண்டும் இருக்கிறார்கள். வழமைபோல வடக்கிலிருக்கும் காங்கிரஸ் பா.ஜ.க. வந்தாலும் தப்பிவிடும். ஆனால் பா.ஜ.க வந்தாலும் காங்கிரஸ் வந்தாலும் இனி கருணாநிதிபாடு, கஸ்டமே. கட்டுரை ஒன்றைத்தெளிவாக சொல்கிறது கொஞ்சம் மக்கள் பலமிருந்தால்தான் இதிலிருந்து கருணாநிதி தப்பலாம். மத்திய தேர்தலில் கருணாநிதி ஒதுக்குப்பட்டால் கனிமொழியின் பிற்கால வாழ்க்கை டெல்கியில், திகாரில் முடிவடைந்துவிடும்.

 

இதனால் ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்வதற்கு தொடர்ந்து பேச்சு வார்த்தையில் இறங்க முயல்கிறது. கட்டுரை. ஆனால் அதில் ஒரு சொல்லு ஈழத்தமிழருக்கு நடந்த அவலம் பற்றிக் குறிப்பிடவில்லை.

 

ஈழத்தமிழர்  பிரச்சணையில் எல்லாக்கட்சிகளையும் இணைப்பதற்கு பதிலாக  எல்லா கட்சிகளுக்கும் இடையில் அவர் அவர் பக்கங்களிலிருந்து ஆப்பிறுக்கி ஒருவரையும் ஒன்று சேராமல் பார்த்துக்கொள்ள முயல்கிறது. அதே நேரம்  தந்திரமாக தனிப்பட்ட குரோதம் போல ஆரம்பகாலம் தொடக்கம் ஆண்டாண்டக தலைவர் பிரபாகரனை இலக்கு வைத்து திரிந்த கருணாநிதியை மன்னித்து விடுங்கள் என்கிறது. போர் நேரம் புலிகளுக்குஎந்த உதவியும்  கிடைக்கக்கூடாது என்று தமிழகத்தை சுற்றி பாதுகாப்பு போட்டிருந்த கருணாநிதியை அரிசந்திரனாக சோடிக்கிறது. பிரபாகரனின் வாழ்நாள் முழுவதும் பழிவாங்க துடித்துவிட்டு விட்ட தவறுஒன்று மட்டும்தான் என்று ஏமாற்றுகிறது. அதற்கு கூட ஒரு விளக்கம் என்றால் அது மட்டும்தான் தர முடியாது என்கிறது. (என் எனில் அவர் மட்டும்தான் பழிவாங்கள் செய்தவர்-நடித்து நம்பவைத்து கெடுத்து துரோகம் செய்தவர்). அதே தந்திரத்தோடு மற்றவர்கள் செய்த பிழைகளை சொல்லிவிட்டு அவர்களை மட்டும் மன்னித்து விடாதீர்கள் என்கிறது. 

 

இப்படி ஒரு கட்டுரைக்கு அவசியம் எழுந்த இரகசியம் 250  மேற்பட்ட பிரமுகர்களை அழைத்த டெல்கி டெசொ மகாநாடு 32 பேருடன் பிசுபிசுத்து போவிட்டதே. இதை மூடி மறக்க வேண்டும். அப்போ ஏன் கணக்குப் பாராமல் இப்படி ஒரு தவறு விட்டார்கள் என்ற கேள்வி எழுகிறது.  இது நம்ம மோசகார வைகோ செய்த வேலைகளால் தானைத்தலைவன் கருணாநிதிக்கு வந்த அவலங்களாக காட்டப்படுகிறது.

 

உண்மையில் வைகோ கருணாநிதிக்கு எதிராக அண்மையில் ஏதாவது சதி செய்திருந்தால் அது இதுதான். . சில மாதங்களுக்கு முன்னர் மத்தியப்பிரதேச மாநிலம் ராஜபசாவை அங்கே அழைத்திருந்தது. 1000 மாக அங்கே சென்ற வைகோவின் கூட்டாளிகள்  தடுக்க முயன்ற மாநில பொலிசாருக்கு டிமிக்கு கொடுத்து சந்து பொந்துகளுக்குள்ளால் எல்லாம் ஓடித்திரியும் பெருசளிகள் போல் கட்டுப்படுத்த முயன்ற பொலிசாரை படுத்தாதபாடு படுத்திவிட்டார்கள். தெருவை மறித்து இந்த கூட்டம் போட்ட சத்தம் உறக்கத்திலிருந்த மானிலத்தை அன்று விழிக்க செய்தது. அது போதாதென்று 

மகிந்தா பிகாருக்கு போக வைகோ டெல்கி போய் மன்மோகன் சிங்கின் வாசஸ்த்தலத்தை மூட முயன்றார்.

 

சன் டிவியும் கலைஞர் டிவிவும் போட்டி போடுக்கொண்டு சிங்கள கிரிக்கெட்டுகளை மக்களுக்கு வலோற்காரமாக திணித்துக்கொண்டிருந்த போது Headlines Today வடக்கில் செய்திகள் வாசித்துகோண்டிருந்தது. அதன் கண்ணில் காலம் மக்ரே தன் உடல் ஆவி பொருள் கொடுத்து தயாரித்த ஆவணங்களான இலங்கையின் கொலைகளங்கள் பட்டது. "ஆகா இதுவல்லவா மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அத்திய அவசிய செய்திகள்" என்று கூறிவிட்டு தான் சனெல்-4 இன் ஆவணங்களை ஒளிபரப்பியது மட்டுமின்றி தானும் இலங்கயில் திருட்டுதனமாக புகுந்து தன் ஊடகவியலாரின் உயிர் ஆபத்துக்களையும் பாராமல் தானும் ஆவணங்கள் தயாரித்து ஒளிபரப்பியது. சனெல் -4 ஆலும் Headlines Todayயாலும் எழுப்பி  விடப்பட்ட பாலசந்திரனின் ஆவி பல வடக்கு அரசியல் வாதிகளின் வீட்டுகதவுகளை இரவில் சென்று தட்டி அவர்களின் மனசாட்சியை தனக்காக கோடேறி வழக்கு பேசவேண்டும் என்று கேட்டது. இவற்றை சிதம்பர சக்கரத்தை பேய் பார்ப்பது போல பார்த்து ஒன்றும் விளங்காமல் தவித்துக்கொண்டிருந்த வடக்கில் வை கோ எடுத்து சென்ற செய்தி ஒரு பொருளைக் கொடுத்தது. இதனால் இன்று வடக்கில் ஒரு விழிப்பு வந்து பலர் காங்கிரசிடம் "இனியும் நீ உன் மோசங்கள் நாசங்களை செய்யாதே" என்று கூப்பாடுபோடுகிறார்கள். வடக்கில் விழிப்புக்களை ஏற்படுத்திய இந்த உழைப்புக்களை  லாவகமா திருடப் போட்ட திட்டமான டெசோ கூட்டம்தான் அன்று டெல்கியில் படு தோல்வி கண்டது. இதனைத்தான் கட்டுரை முழு பலத்தையும் போடு மூடி மறைத்து கருணாநிதி ஒருவரால்தான் வடக்கில் சாதிக்க முடியும் என்கிறது. இந்த திருட்டு நடக்க தமிழ் மக்கள் இடம் கொடுத்தால் இனி எவருக்கும் நல்லது என்று ஒன்று செய்ய மனமே வராமல் போய்விடும். எல்லோருமே உயிரைக்கொடுத்து இந்த விடையத்தில் கருணாநிதியின் கொள்ளையைத் தடுக்க வேண்டும்.

 

தமிழரின் போறத கலத்தில் நடந்த சிலவற்றை புலிகள் மீது போடுவதில் பலன் இல்லை. அப்படி போறாத

நடந்தவற்றில் ஒன்றுதான் அரைவாழ்வில் அண்ணவின் உயிரை காலன் கான்சர் என்ற பேரில் வந்து குடித்ததும், இந்த கோடரி காம்புகளை தீர்க்காயிசுக்கு விட்டு வைத்திருப்பதும். இதையெல்லாம் புலிகளின் திட்டமிடலில் விட்ட பிழை என்று கூறிவிட முடியுமா? 

 

ஆனால் தமிழர் யாரையும் இனிச் சாட்ட முடியாது. அவர்கள் துரோகிகளை ஒதுக்க வேண்டும். திரும்ப திரும்ப மகிந்தா சொலவது போன்ற பொய்களை சொல்லும் கருணாநிதியை இனி எள்ளவும் நம்பக்கூடாது.(போரில் இலனகையை நம்பி உதவிய பிளேக் எப்படி அமெரிக்கா எமாந்துவிட்டது என்று அமெரிக்க காங்கிசரில் அறிக்கை கொடுத்தாரோ அதை தமிழ் மக்கள் தங்களுக்கான பாடமாக கொள்ளவேண்டும். கருணாநிதி தமிழரை ஏமாறிவிட்டார் என்று அவர்கள் ஒன்று சேர்ந்து அறிக்கைவிட வேண்டும்.) கழகம் கலைக்கப்பட்டு தமிழ் நாட்டுமக்களையும் உலகத்தமிழரையும் காக்கத்தக்க இன்னொரு இயக்கம் உருவாக்கப் படவேண்டும். இது அண்ணா, மலை மாதிரி இருந்த காங்கிரசை டெல்கிக்கு ஓட்டிக்கலைத்தது போன்ற ஒரு சாதனைச் செயலாக அமைய வேண்டும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.