Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதம் காக்கச் சீறி எழுந்த மாணவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதம் காக்கச் சீறி எழுந்த மாணவர்கள்
எஸ்.கோபாலகிருஷ்ணன்


ஈழத்தில் வதைபடும் தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை மாணவர்கள் கையிலெடுத்துள்ளனர். இதுவரை தனித் தமிழீழ ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இப்போது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் கோரிக்கைகளாக உருப்பெற்றுள்ளன. இதன் தாக்கத்தையும் வீரியத்தையும் அலசும் முன் போராட்டத்தின் பின்னணியைப் பார்த்துவிடுவோம்.

இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழிக்கும் முகாந்திரத்தில் தமிழர்களைக் கொன்று எஞ்சியவர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடிய ராஜபட்சே அரசு, 2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவித்தது. அதன் பிறகு போர் முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் போன்ற மாபெரும் இனப்படுகொலைகளும் அதே சமயத்தில் அரங்கேறின. சர்வதேச சமூகம் வாய்மூடி மௌனமாக இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தது. தமிழகத்தில் மக்கள் மத்தியில் போரின் அழிவுகள் குறித்த பெருங்கவலை இருந்தாலும் அரசியல் ரீதியான போராட்டமாக அவை முன்னெடுக்கப்படவில்லை.

கடந்த மூன்றாண்டுகளாக இலங்கைத் தமிழர்களுக்காகத் தமிழீழ ஆதரவாளர்கள் மட்டுமே போராடியும் குரெலுழுப்பியும் வந்தார்கள். போர்க்குற்றங்களை விசாரிக்கவும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வை மறு சீரமைக்கவும் பரிந்துரைத்த ஐ.நா. தீர்மானங்களை இலங்கை அரசு உதாசீனப்படுத்தி வருகிறது. இன்றுவரை ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் வதைபட்டு வருகிறார்கள். இது போதாதென்று தமிழர் பகுதிகளில் இந்துக் கோவில்களை அழித்து பவுத்த விகாரைகளை அமைப்பது, தமிழ்ப் பகுதிகளுக்குச் சிங்களப் பெயர் சூட்டுவது, ராணுவத்தினர் அதே பகுதிகளில் முகாமிட்டுப் பெண்களைப் பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்துவது உள்ளிட்ட கொடுமைகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியா அண்டை நாட்டில் நடக்கும் அட்டூழியங்களைப் பார்த்து சில அறிக்கைகளை விடுப்பதோடு சரி. அந்த அறிக்கைகளிலும் இலங்கை நம் நட்பு நாடு என்று சொல்லிக்கொள்ள எந்த இந்திய வெளியுறவு அமைச்சரும் தயங்கியதில்லை.

இந்நிலையில் மார்ச் மாதம் ஸ்விட்சர்லாந்து தேசத்தின் ஜெனீவா நகரத்தில் கூடிய ஐ.நா மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை எதிர்த்து அமெரிக்க அரசு ஒரு தீர்மானம் கொண்டுவர முனைந்தது. ஏற்கனவே அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் இரண்டு தீர்மானங்களில் எந்தப் பெரிய பயனும் விளைந்திடவில்லை. ஏனெனில் அந்த இரு தீர்மானங்களும் இலங்கை அரசே தன் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரத்தை வழங்குகின்றன. மூன்றாவது தீர்மானம் முதல் இரண்டு தீர்மானங்களை விட வலிமை குறைந்ததாகவே இருந்தது.

மேலும் இலங்கைக்கெதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவருவதில் இலங்கை அரசைத் தனக்கு அடிபணிய வைக்கும் நோக்கம் அமெரிக்காவுக்கு இருப்பதும் அனைவரும் அறிந்ததே. ஆயினும் இந்தத் தீர்மானத்தை சில ஈழ ஆதரவாளர்கள் ஆதரிக்கவே செய்தார்கள். காரணம் இலங்கை அரசுக்கெதிரான ஒரு சிறு நகர்வையும் அவர்கள் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.

ஆனால் சென்னை இலயோலாக் கல்லூரியில் மார்ச் 8ஆம் திகதி முதல் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் அமர்ந்த 8 மாணவர்கள் வைத்த முதல் கோரிக்கை 'இலங்கை அரசுக்கெதிரான அமெரிகாவின் தீர்மானம் ஒரு கண் துடைப்பு. அதை நிராகரித்து இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் தீர்மானத்தை இந்திய அரசு தன்னிச்சையாகக் கொண்டுவர வேண்டும் என்பதுதான்.

முதல் மூன்று நாட்களுக்கு மாணவர் போராட்டத்தை ஈழ ஆதரவு சக்திகளும் அரசியல் கட்சிகளும் மட்டுமே ஆதரித்துவந்தன. வை.கோ, பழ.நெடுமாறன் ஆகியோர் போராடும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் இந்தப் போராட்டத்தை தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மாணவர்களைக் கையிலெடுக்கச் செய்த பெருமை தமிழக அரசையே சாரும்(!).

கல்லூரி நிர்வாகம் போராட்டத்தைத் தொடர அனுமதி மறுத்துவிட்டதால் சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தில் உண்ணாநிலையைத் தொடர்ந்த மாணவர்களை ஒரு நள்ளிரவில் குற்றவாளிகளைப் பிடிப்பதுபோல் தமிழகக் காவல்துறை பிடித்தது. வாயிற்கதவை உடைத்து ஆதரவாகத் திரண்டிருந்த கூட்டத்தினர் மீது தடியடி நடத்தி கைது செய்து மருத்துவமனையில் அடைத்தது காவல்துறை. சென்னை இராயப்பேட்டை அரசும் மருத்துவமனையில் இவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினரால் காக்க வைக்கப்பட்டார்கள். பார்வையாளர் நேரத்தில் மட்டுமே மாணவர்களைப் பார்க்க முடியும் என்று காவல்துறையினர் அறிவித்தார்கள்.

இலயோலா மாணவர்கள் கைது செய்யப்பட்டதும் சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தைக் கையிலெடுத்தார்கள். ஒரு மாணவி மற்றும் எட்டு மாணவர்கள் கல்லூரி வாசலில் உண்ணாநிலைப் போராட்டத்தில் அமர்ந்தார்கள். முதலில் நட்டநடு சாலையில் அமர்ந்த இந்த மாணவ மாணவிகள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படக் கூடாது என்று கேட்டுக்கொண்ட பின் அருகில் இருந்த நடைபாதையில் அமர்ந்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள்.

இந்தப் போராட்டத்தில் உண்ணாநிலையைக் கடைபிடித்த முதல் மாணவி மோனிஷா. கோயம்பத்தூரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இவர் தமிழரல்ல. ஆனால் இலங்கையில் வதைபடும் அப்பாவித் தமிழர்களின் துயரத்தை நன்கு புரிந்துகொண்டு அதற்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உணர்வு கொண்டவராக இருக்கிறார் இவர். சென்னை மாநிலக் கல்லூரி, நந்தனம் ஆடவர் கல்லூரி ஆகிய கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தார்கள். தமிழகத்தின் மற்ற நகரங்களான திருச்சி, கரூர், ராஜபாளையம், மன்னார்குடி போன்ற நகரங்களின் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தைத் தொடங்கினார்கள். நாளுக்கு நாள் வளர்ந்த இந்தப் போராட்டம் தீப்பொறி போல் தமிழகமெங்கும் பரவியது. தமிழகத்தில் மற்ற மாநிலங்களின் கல்லூரி மாணவ மாணவியரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அவர்களுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றித் தெரியவந்ததே தமிழக மாணவர்கள் போராட்டத்தால்தான் என்று சொல்வது மிகையல்ல. அந்த அளவு இலங்கைத் தமிழர் விவகாரத்தை இந்திய தேசிய ஊடக நிறுவனங்கள் இருட்டடிப்பு செய்தன. மாணவர் போராட்டம் பற்றி எரிந்துகொண்டிருந்தபோது கூட பல தேசிய ஊடகங்கள் அவற்றை முறையாகப் பதிவு செய்யவில்லை. பதிவு செய்தவர்கள் போராடும் மாணவர்களை ஏளனப்படுத்தும் வகையிலேயே செய்தார்கள்.

ஆனால் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது, பொதுவாக கலைக் கல்லூரி மாணவகர்ளும் சட்டக் கல்லூரி மாணவர்களும் வீதியில் இறங்கிப் போராடுவதை அனைவரும் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் போராட்டத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், படிப்பதற்கான அனுமதி கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும் ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள். முத்தாய்ப்பாக மாணவர்களால் ஊக்கம் பெற்று "சேவ் தமிழ்ஸ்" என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பில் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களும் பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்களும் மனிதச் சங்கிலிப் போராட்டம், தொடர் முழக்கப் போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்றார்கள். தங்கள் சம்பள உயர்வுக்காக்கூடப் போராட்டக் கொடி தூக்காதவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டம் மற்ற மாணவர்கள் மத்தியில் பரவியதை அடுத்து இலயோலா மாணவர்கள் உண்ணாநிலையைக் கைவிட்டார்கள். அம்பேத்கர் சட்டப் பல்கலை மாணவர்களும், அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களும் தமிழகத்தின் வேறு சில நகரங்களின் கல்லூரி மாணவர்களும் பத்து நாட்களுக்கு மேல் உண்ணா நிலையைக் கடைப்பிடித்தார்கள். பிறகு அவர்களும் உண்ணாநிலையைக் கைவிட்டார்கள்.

உண்ணாநிலை தவிர ராஜபட்சே உருவ பொம்மை எரிப்பு, மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, சாலை மறியல், தொடர் முழக்கப் போராட்டம் என்று பல்வேறு வழிகளில் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சில மாணவர்கள் தீக்குளித்தார்கள்.

திரைத் துறையினரும் போராடும் மாணவர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். தமிழ்த் திரை இயக்குநர்கள் சங்கமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் நடத்தின. நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிலம்பரசன், தனுஷ், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ராதாரவி. வாகை சந்திரசேகர், ராதிகா, ரம்யா கிருஷ்ணன், த்ரிஷா, வரலட்சுமி உட்பட பல்வேறு முன்னணி நடிக நடிகையர் பங்கேற்றார்கள்.

நடிகை நடிகையரின் உண்ணாநிலையை முடித்துவைக்க போராட்டத்தைத் துவக்கிய இலயோலா கல்லூரி மாணவர்கள் அழைத்து கௌரவப்படுத்தப்பட்டார்கள்.

போராட்டம் உச்சக்கட்டமாக இருந்த நாட்களில் தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளும் மூடப்பட்டன. இப்போது கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. போராட்டம் நடந்துகொண்டிருந்த வேளையில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்துவிட்டது. ஐ.நாவில் அமெரிக்கத் தீர்மானத்தை வலுபெறச் செய்யும் வாக்கியங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுப்போம் என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். ஆனால் அது போன்ற வாக்கியங்கள் சேர்க்கப்படவில்லை. நேரம் கிடைக்கவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது. தீர்மானம் தன்னளவிலேயே நிறைவேறியது.

மாணவர் போராட்டம் ஓரளவுக்குத் தணிந்துவிட்ட சூழ்நிலை உருவாகியிருப்பதால் கல்லூரிகள் திறக்கப்பட்டன. போராட்டத்தை வெளிப்படையாக ஆதரிக்காமல் இருந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். அனைவரையும் ஆச்சரியம் கொள்ளவைக்கும் விதமாக இலங்கையில் தனித் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். போராடும் மாணவர்கள் கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. மாணவர்களை மனதாரப் பாராட்டிப் பேசிய தமிழக முதல்வர் அவர்களைப் போராட்டத்தைக் கைவிடக் கோரினார்.

கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில் மாணவர்கள் தொடர்ந்து போராட உத்தேசித்துள்ளார்கள். அனைத்து மாணவர்களும் தினமும் எங்கு எந்த வேலையில் இருந்தாலும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

பல ஆண்டுகளுக்குப் பின் எழுச்சி பெற்றிருக்கும் மாணவர்கள் போராட்டம் அறிவுஜீவிகளையும் மனித உரிமை ஆர்வலர்களையும் புத்துணர்வு கொள்ளச் செய்திருக்கிறது. மாணவர்கள் போராட்டத்தால் நம்பிக்கை பெற்ற ஈழ ஆதரவாளர்கள் அமெரிக்கத் தீர்மானத்தின் ஓட்டைகளை எதிர்க்க ஆரம்பித்தார்கள். மாணவர்களின் தனி ஈழத்துக்கான் கோரிக்கைகள் சில அறிவு ஜீவிகளின் விமர்சனத்தைப் பெற்றிருப்பதை மறுப்பதற்கில்லை. மாணவர்களுக்கு முறையான வாசிப்பு இல்லை, ஈழப் பிரச்சினை குறித்த சரியான புரிதல் இல்லை என்ற விமர்சனங்களில் நியாயமும் இருக்கிறது.

ஆனால் இவை அனைத்தும் வருங்காலத்தில் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான அறிவுரையாக இருக்கலாமே அன்றி தன்னலம் பாராமல் அண்டை நாட்டவர்கள் நசுக்கப்படுவதற்கு எதிராக இத்தனை ஆயிரம் இளைஞர்கள் போராடுவதைச் சிறுமைபடுத்தப் பயன்பட்டுவிடக்கூடாது என்பதில் இந்த விமர்சகர்கள் கவனம் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

இது முழுக்க முழுக்க மாணவர்கள் போராட்டமாகவே நீடிப்பதையும் உணர்ச்சிப் பிழம்பாக இருக்ககூடிய இளைய தலைமுறை சிறிய அளவில்கூட வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதையும் பாராட்டக்கூட அவர்களுக்கு மனம்வரவில்லை.

தங்கள் போராட்டத்தை அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்குப் பயன்படுத்திவிடக்கூடாது என்பதிலும் கூடுமானவரை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்ட வழிமுறைகளைத் திட்டமிடுவதிலும் மாணவர்கள் குழுவினருக்கு இருக்கும் தெளிவும் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

இறுதி இலக்கை அடையும்வரை இதே தெளிவுடன் போராட்டம் தொடர வேண்டும், முறையான வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு பிரச்சினையின் ஆழத்தையும் பன்முக விளைவுகளையும் புரிந்துகொண்டால் இன்னும் வீரியமாக போராட முடியும் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவை இரண்டுமே தமிழர்கள் மீதும் மனித உரிமை மீதும் உண்மையான அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=11&contentid=b3a5a2de-15bd-47de-a1cb-beb48ef3f37b

தமிழின விரோதிகளின் கைக்கூலிகள் ஆனந்தசொங்கிரி, டக்லஸ், யோகேஸ்வரி பற்குணராஜா போன்றோரின் துணையுடன்  தமிழக மாணவர் போராட்டத்தால் எந்தப்பயனும் இல்லை என்ற ஒரு மாயையை உருவாக்க சோ என்ற கைக்கூலிப் பத்திர்கையாளர் துக்களக்கில் (கடந்த இதழில்) முயன்றுள்ளதாக தெரிய வருகிறது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.