Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை : இராணுவமயமாதலின் பரிமாணங்கள் - அ.மார்க்ஸ்

Featured Replies

dambulla-mosque.jpg

இந்தமுறை நான் இலங்கை சென்றிருந்தபோதுகல்வி சார்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி செய்து கொண்டுள்ள நண்பர் ஒருவர் இலங்கையின் கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் ஒரு மாற்றத்தைக் கவனிக்குமாறு அறிவுறுத்தினார். கல்வித்துறையில் இராணுவத் தலையீடு குறித்துத்தான் அவரது கவன ஈர்ப்பு அமைந்தது. ‘தலையீடு’ என்கிற சொல்அதன் முழுமையான பரிமாணத்தை உணர்த்தப் போதுமானதல்ல. இலங்கை அரசமைவும் சமூகமும் பல்வேறுஅம்சங்களில் இராணுவமயப்பட்டு வரும் நிலை கல்வித்துறையில் வெளிப்படும் தன்மை என்றுதான் அதைச் சொல்லவேண்டும். இது குறித்து நான் ஏற்கனவே சற்று வாசித்திருந்தபோதிலும் முழுமையாகஅறிந்திராததால் அவரிடமும் கல்வித்துறை சார்ந்த பிற நண்பர்களிடமும் கேட்டறிந்தபோது சற்றுவியப்பாகவும் கவலையாகவும் இருந்தது.

பல்வேறு வகையான அரசுகள் (states)மற்றும் ஆட்சிகள் (regimes) குறித்து விரிவாகஆய்வு செய்யும் மார்க்சியர்களுக்கே இன்றைய இலங்கை அரசை ஏற்கனவே இவ்வாறு வரையறுக்கப்பட்ட வகையினம் ஒன்றுக்குள் பொருத்துவது சிக்கல்தான்.நடப்பது ஒரு ஜனநாயாக ஆட்சி அல்ல என்று மட்டுந்தான் சொல்ல இயலுமே ஒழிய இன்றைய இனவாதஅரசை சென்ற நூற்றாண்டின் பாசிசம் என்றோ, இல்லை நேரடியான இராணுவ ஆட்சி என்றோ சொல்லிவிடஇயலாது. ஆனால் அதே நேரத்தில் எந்த ஒரு ஜனநாயக அல்லது சர்வாதிகாரஆட்சியிலும் காண இயலாத அளவிற்கு இன்றுஇலங்கை இராணுவ மயமாக்கப் பட்டுள்ளது.ஒரு சின்னஞ் சிறிய நாட்டால் சுமக்கஇயலாத அளவு இராணுவச் சுமையை அது இன்று தாங்கியுள்ளது. உள்நாட்டுப் போர் துவங்கிய காலத்தில்(1980கள்) முப்படைகளும் சேர்த்து வெறும் 30,000 ஆக இருந்த இராணுவத்தின் எண்ணிக்கை இன்று15 மடங்கு உயர்ந்துள்ளது என்கிறார் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் ஜனாதிபதி ராஜபக்‌ஷேவின்தம்பியுமான கோத்தபயா (Indian Defence Review, April-June, 2010). “மகிந்த ஆட்சிக்குவந்தபோது (2005) முப்படைகளின் எண்ணிக்கை 1,50,000. 2005-2009 காலகட்டத்தில் அது4,50,000 ஆக அதிகரிக்கப்பட்டது. இதில் தரைப்படை மட்டும் 3,00,000” என்று மேற்குறித்தநேர்காணலில் அவர் கூறியுள்ளார். பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவர், “2009 இறுதி வாக்கில்அதற்கு முன் 9ஆக இருந்த படைப் பிரிவுகள் 20 ஆகவும்,, 44 பிரிகேட்கள் 71 ஆகவும்,149 படாலியன்கள் 284 ஆகவும் அதிகரித்தன” என அவர் பெருமிதப்பட்டுக் கொண்டார் (TheSunday Times, June 5, 2011). ‘இது தவிர சிவில் பாதுகாப்புப் படையில் (CDF)’45,000 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் போர்க்காலத்தில் போரில் பங்கு பெற்றவர்கள்தான்.இன்றும் வடக்கிலும் கிழக்கிலும் இப்படைப் பிரிவு நிறுத்தப்பட்டுள்ளது. இவர்களில்5000 பேர் 2009ல் இராணுவத்தில் உள்வாங்கப்பட்டனர். இது தவிர காவல்துறையின் எண்ணிக்கை85,128. அதிரடிப்படையின் (STF) எண்ணிக்கை 8000. இது காவல் துறையின் கணக்கில் சேருமாஎன்பது விளங்கவில்லை. காவல்துறையும் பாதுகாப்புத்துறையின் அதாவது கோதபயாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புத் துறைக்கான அமைச்சர் வேறு யாருமல்ல மகிந்ததான்.

இந்தப் பெரும்படையைப் பெருந்தீனிபோட்டுத்தானே காப்பாற்றியாக வேண்டும். இந்த ஆண்டுக்கான (2013) நிதி ஒதுக்கீட்டில் ஒருபெருந்தொகை, 290 பில்லியன் ரூபாய்கள் கோத்தபயாவின் ‘பாதுகாப்பு மற்றும் நகர வளர்ச்சித்துறை’க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கும் நகர வளர்ச்சிக்கும் என்ன தொடர்பு?ராஜபக்க்ஷேக்களின் குடும்ப ஆட்சியில் அது அப்படித்தான். இராணுவத்தின் பணி புற மற்றும்அக எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பது என்கிற பழைய வரையறைக்கு இன்றைய இலங்கையில்இடமில்லை. ‘நாட்டு வளர்ச்சி’ (development) என்பதும் இன்று இலங்கை இராணுவத்தின் பொறுப்பாகக்கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு வருகிறது. போருக்குப் பிந்திய இன்றைய இலங்கை அரசு என்பதுவளர்ச்சியை மையமாகக் கொண்டதாக உள்ளது. போர்க்காலத்திய அழிவுகளைச் சீரமைத்தல், போரால்பாதிக்கப்பட்டவர்களின் மறு வாழ்வு, போரின் ஆறாத புண்களயும் வடுக்களையும் மண்ணிலிருந்துமட்டுமின்றி மக்களின் மனங்களிலிருந்தும் நீக்குவது, போர்ப்பகுதிகளில் இராணுவச் செறிவைக்குறைப்பது என்பவற்றிற்குப் பதிலாக இலங்கை அரசு துறைமுகங்கள், விமான நிலையங்கள், அதிவேகப்போக்குவரத்துகள், மின் திட்டங்கள் ஆகியவற்றிற்கு முதன்மை அளிக்கிறது. போர்க்காலத்தியகெடுபிடிகள், அச்சம், உயிராபத்துக்கள், நாட்டுக்குள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச்செல்வதற்கான தடைகள் முதலானவை பெரிய அளவு குறைந்துள்ளதையும் இந்த வளர்ச்சித் திட்டங்களையுமேபோர் முடிவின் பயன்களாக (dividends) இன்று இலங்கை அரசு மக்கள் முன் நிறுத்துகிறது.

இந்தப் ‘பலன்களுக்குப்’ பிரதியாகமக்கள் அரசுக்கு விசுவாசமாகவும், கட்டுப்பாடாகவும், தமது உரிமைகள் குறித்தோ, பொருளாதாரப்பிரச்சினைகள் குறித்தோ மக்கள் கவலைபடாமலும் எதிர்ப்புக் காட்டாமலும் இருக்க வேண்டுமெனஅது எதிர்பார்க்கிறது. இலங்கையின் இந்த ஊதிப் பெருத்த இராணுவம் குறித்து எல்லோருக்கும்தெரிந்த ஒரு உண்மையை நாம் எந்தக் காலத்திலும் மறந்து விடக் கூடாது. இலங்கை இராணுவம்என நாம் அழைத்தபோதும் அது முழுக்க முழுக்க சிங்கள இராணுவம் என்பதுதான் அது. போர்க்காலத்தியப்பொருளாதாரச் சீரழிவு, வேலை இல்லாத் திண்டாட்டம் ஆகிய பின்னணியில் தென்னிலங்கைக் கிராமப்புறசிங்கள இளைஞர்களுக்குப் பெரிய அளவில் வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனமாக இலங்கை இராணுவம்தான்இருந்தது. தவிரவும் அது வெற்றி பெற்ற இராணுவம், உள் நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்துகுடிமக்களின், அதாவது சிங்கள மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்ற இராணுவம்.ஆமாம், இன்றைய இலங்கை அரசைப் பொருத்த மட்டில் குடிமக்கள் என்றால் அது சிங்கள மக்கள்தான்.இந்த இராணுவம் குறித்த கொடிய அச்சம் இதர தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு உள்ளதுகுறித்த கவலை அரசுக்குக் கிடையாது. தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகச் சிறுபான்மை மக்களின்ஆதரவையோ, நம்பிக்கையையோ பெற வேண்டிய அவசியமும் இன்று அதற்கில்லை.

தென்னிலங்கைப் பெரும்பான்மைச்சிங்கள மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்ற இராணுவத்தின் உதவி இன்றைய வளர்ச்சித்திட்டங்களை,குறிப்பாக நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு அரசுக்குத் தேவைப்படுகிறது.எடுத்துக்காட்டாக சாலை விரிவாக்கத்திற்காக நடைபாதைக் கடைகளையோ இல்லை கட்டிடங்களையோஅகற்ற வேண்டுமானால் இராணுவத்தின் மூலம் அதைச் செய்வது அரசுக்கு எளிதாகிவிடுகிறது.

இராணுவத்திற்கு ஒதுக்கப்படும்இந்தப் பெரு நிதியைக் குறித்து நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் பெரும்பகுதிபடைவீரர்களின் ஊதியம் மற்றும் இதர சலுகைகளுக்காகவே செலவிடப்பட்டுகிறது. ஆக இது திரும்பத்திரும்ப மேற்கொள்ளப்படும் செலவு (recurring expenditure). ஆண்டுக்காண்டு இது அதிகரிக்கத்தான்போகிறதே ஒழியக் குறையப் போவதில்லை. மேலே குரிப்பிட்டுள்ள தொகை சென்ற ஆண்டைக் காட்டிலும்29.5 சதம் அதிகம். பாதுகாப்புக்காக இவ்வளவு செலவா என யாரும் கேட்கவும் இயலாது. “பயங்கரவாதத்தைஆதரிப்பவர்கள்தான் இராணுவச் செலவைக் குறைக்க வேண்டும் என்பார்கள்” என்று மகிந்தவின்இன்னொரு சகோதரரும் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷே. ஒரு முறை கூறியது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய செலவை இன்று அரசு விரும்பினாலும் குறைக்க இயலாது. கிராமப்புறச்சிங்கள இளைஞர்கள் மத்தியில் வேலையின்மையைக் குறைத்துள்ள இந்நிறுவனம் அப்படியொன்றும்திடீரென ஆட்குறைப்புச் செய்துவிட இயலாது.

அதே நேரத்தில் இத்தனை பெரிய இராணுவத்தைப்போரில்லாச் சூழலில் சும்மா வைத்திருக்கவும் இயலாது. இந்தப் பின்னணியில்தான் இன்று இலங்கைஇராணுவம், சாலை அமைப்பதிலிருந்து, சுற்றுலாத் தலங்களையும் பூங்காக்களையும் காப்பதிலிருந்து(Maintenance), ரிசார்ட்ஸ் மற்றும் ட்ராவெல்ஸ் சேவை ஆற்றுவதிலிருந்து, ஆக்ரமிக்கப்பட்டதமிழர் நிலங்களில் விவசாயம் செய்வதிலிருந்து, சாலை ஒரக் கடைகள் நடத்துவதிலிருந்து,மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் ‘தலைமைப் பயிற்சி’ அளிப்பதிலிருந்து எல்லாவளர்ச்சிப் பணிகளும் ஈடுபடுத்தப்.படுகிறது. வன்னியில் இராணுவம் சாலை அமைக்கிறது, பள்ளிகள்கட்டுகிறது,மெடிகல் கேம்ப்கள் நடத்துகிறது. தொண்டு நிறுவனங்களைப் (NGOs) பதிவு செய்து,கண்காணித்து, வழி நடத்துகிறது நேரடியான ஆளுகையிலும் இராணுவம்ஈடுபடுத்தப்படுகிறது. ஓய்வு பெறும் இராணுவ உயர் அதிகாரிகள் மாநில ஆளுநர்களாக நியமிக்கப்படுகின்றனர்.இலங்கை அரசியல் சட்டத்தின்படி இந்திய ஆளுநர்களைக் காட்டிலும் இலங்கை ஆளுநர்களுக்குக்கூடுதல் அதிகாரம் உண்டு என்பது மனங்கொள்ளத் தக்கது. மாநிலத் தேர்தல்கள் நடத்தப்படாமல்தட்டிக் கழிக்கப்படும் வடக்குப் பகுதியில் இப்படியான ஒரு இராணுவ அதிகாரியின் ஆட்சிதான்நடக்கிறது. ஏற்கனவே அவர் இதே பகுதியில் இராணுவக் கட்டளை அதிகாரியாக இருந்தவர். சிவில்அதிகாரிகள், அதிலும் குறிப்பாகத் தமிழ்ச் சிவில் அதிகாரிகள் இத்தகைய இராணுவ அதிகாரத்தால்எத்தகைய நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பதை மார்ச் 2012ல் வெளியிடப்பட்ட‘பன்னாட்டு நெருக்கடிக் குழு” (International Crisis Group) வெளியிட்டுள்ள அறிக்கைசுட்டிக் காட்டியுள்ளது. இராணுவத் தலையீட்டிற்கு இவர்கள் ஏதும் எதிர்ப்புக் காட்டினால்அவர்களை விடுதலைப் புலிகள் என முத்திரை குத்துவது, இடமாற்றம் செய்வது அல்லது கட்டாயப்படுத்திப்பணிய வைப்பது என்கிற நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதையும் அவ்வறிக்கை பதிவு செய்துள்ளது.

தவிரவும் காவல்துறையும் இராணுவஅமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதால் பெரும்பாலும் வடக்கு, கிழக்கில் சட்டம் ஒழுங்குஇராணுவத்தின் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. காவல்துறையினர் கண்ணில் படுவதே அபூர்வம்.எங்கு நோக்கினும் இராணுவத்தின் இருப்பு, சிவில் வெளி எங்கும் இராணுவம் என்பதாகத்தான்தமிழர்களின் பாரம்பரிய வடக்கு மாகாணம் இன்று காட்சியளிக்கிறது.

ராஜபக்‌ஷேக்களின் இராணுவ மயமாக்கல்நடவடிக்கைகளின் பின்னணியாக இன்னொரு காரணத்தைச் சுட்டுகிறார் புகழ்பெற்ற கட்டுரையாளரும்ஆய்வாளருமான திஸராணி குணசேகர (EPW, Feb 16, 2013). ராஜபக்‌ஷேகளின் ஸ்ரீலங்கா சுதந்திராக்கட்சி அது தோன்றி வளர்ந்த இந்த 63 ஆண்டுகளில், 57 ஆண்டுகள் வேறொரு குடும்பத்தின் கையில்இருந்தது. எஸ்.டபிள்யூ.ஆர் பண்டாரநாயகாவால் உருவாக்கப்பட்ட அக்கட்சி, பின்னர் அவரதுமனைவி, அதற்குப்பின் அவர்களின் மகள் ஆகியோரின் செல்வாக்கில் இருந்தது. அதற்குப் பின்தகுதியான வாரிசு இல்லாத காரணத்தால் அது ராஜபக்ஷேக்களின் கைகளுக்கு நழுவியது. எனினும்இன்னும்கூட கட்சி மீது சந்திரிகா குடும்பத்திற்கு ஒரு பிடி இருக்கிறது என்கிற அச்சம்ராஜபக்‌ஷேக்களுக்கு உள்ளது என்கிறார் திஸரணி.

எனவே ஏதும் எசகு பிசகாக நடந்துவிட்டால் தங்களது ஆட்சியைத் தக்க வைப்பதில் தங்களின் கட்சியைக் காட்டிலும் இராணுவத்தைநம்ப வேண்டிய கட்டாயம் ராஜபக்‌ஷேக்களுக்கு உள்ளது. எனவேதான் போர் முடிந்த கையோடு இராணுவத்தைத்தம் கைகளுக்குள் கொண்டு வரும் முயற்சியில் அவர்கள் இறங்கினர். ஃபொன்சேகா போன்ற ஆளுமைமிக்க ஜெனரல்களைத் தூக்கி எறிந்ததோடு குற்றஞ்சாட்டிச் சிறையில் அடைத்தனர். ஃபொன்சேகாவிற்குவேண்டிய அதிகாரிகள் சகல மட்டங்களிலும் களை எடுக்கப்பட்டனர். அந்த இடங்கள் ராஜபக்‌ஷேக்களுக்குவிசுவாசமான அதிகாரிகளால் நிரப்பப்பட்டன. போர் முடிந்த கையோடு ஃபொன்சேகா மேலும் ஒருஇலட்சம் பேரை படையில் சேர்த்து இராணுவத்தைப் பலப்படுத்த வேண்டுமென்றார். ஆட்சியைக்கவிழ்த்து இராணுவ ஆட்சியை நிறுவுதல் என்கிற நிலையை அவர் எடுக்காத போதும் சம அளவு அதிகாரமிக்கஒரு வலுவான சக்தியாக இராணுவம் இருக்க வேண்டுமென்பது அவரது திட்டமாக இருந்தது. ஆனால்ராஜபக்‌ஷேக்களின் திட்டம் வேறுவிதமாக இருந்தது. இராணுவத்தைப் பலப்படுத்த வேண்டும்.ஆனால் அது தங்களின் குடும்பத்தின் கட்டுப்பாட்டிலும், அதற்கு விசுவாசமாகவும் இருக்கவேண்டும் என அவர்கள் நினைத்தனர். ஃபொன்சேகாவைப் பந்தாடி மற்றவர்களுக்கு எச்சரிக்கையும்விடுத்தனர்.

ராஜபக்‌ஷே குடும்பம் இன்று அதிகாரமில்லாமல்வாழ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார் மூத்த அரசியல் விமர்சகர் குமார் டேவிட்(EPW, Feb 16, 2013). இதற்கு மூன்று காரணங்களை அவர் குறிப்பிடுகிறார். முதலாவதாகப்பெரிய அளவில் ஆள் கடத்தல், வரலாறு காணாத ஊழல் ஆகியவற்றை அவர்கள் செய்துள்ளனர். அரசதிகாரத்தைஇழந்தால் இது குறித்த உள்நாட்டு விசாரணைகளுக்கு அவர்கள் பதிலளித்தாக வேண்டும். இரண்டாவதாகதலைக்கு மேல் கத்தியாகத் தொங்கும் பன்னாட்டுப்போர்க்குற்ற விசாரணையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத்தலைவர் என்கிற நிலை அவர்களுக்கு உதவும். மூன்றாவதாக வெளிநாட்டிலிருக்கும் விடுதலைப்புலி ஆதரவாளர்களின் பழி வாங்கல் நடவடிக்கைகளிலிருந்துத் தற்காத்துக் கொள்ளவும் அரசபதவி உதவும். அரசதிகாரத்தை விடுவதற்கு அவர்கள் விரும்பவில்லை என்பதைக் காட்டிலும் அவர்களால்அதை விட இயலாது என்பதுதான் உண்மை என்கிறார் குமார். எனவே என்ன விலை கொடுத்தும் இந்தஇராணுவத்தையும் அதன் மூலம் தம் பதவியையும் தக்க வைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது.

அரசதிகாரத்தைத் தக்க வைப்பதில்இராணுவத்திற்கு அடுத்தபடியாக அவர்கள் நம்புவது அவர்கள் உருவாக்கியிருக்கும் “புரவலர்-பயன் பெறுவோர் உறவு” (patron client relationship). பல மட்டங்களில் இது அமைந்துள்ளதுஎன்கிறார் குமார். காவல் நிலையத்திற்கு ஒரு ‘போன்’ பண்ணுவது, ஒரு அறிமுகக் கடிதம் கொடுப்பது,ஒரு அரசுப் பணியில் முறை மீறி ஒருவரைப் பணியமர்த்துவது, ஒரு ‘டென்டர்’ அல்லது ‘கான்ட்ராக்ட்’பெறுவது அல்லது ஒரு நில மோசடியைச் சட்ட பூர்வமாக்குவது என்றெல்லாம் இது அமைகிறது. நினைவிருக்கட்டும்இப்படிப் பயனடைவோர்கள் எல்லோரும் சிங்களர்கள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.இது எல்லா நாடுகளிலும் வழக்கம்தான்என்ற போதிலும் அளவிலும் தன்மையிலும் இது இலங்கையில் அதிகமாக உள்ளது. திட்டமிட்டு எல்லோரும்ஊழலில் பங்கு பெறுபவர்களாக ஆக்கப்பட்டு யாரும் யாருடைய குற்றங்களையும் கேட்பதற்குத்தகுதியற்றவர்களாக்கப் படுகின்றனர். சுமார் ஒரு மில்லியன் பேர் கொண்ட ஒரு பாதுகாப்புவலயம் இவ்வாறு ராஜபக்‌ஷேக்களைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் குமார் டேவிட்.

வடக்கில் இராணுவ மயமாக்கலின் அளவும் விளைவும்

யாழ்ப்பாணம், முல்லைத் தீவு, கிளிநொச்சி,வவுனியா என நான்கு முக்கிய இராணுவத் தலைமையகங்கள் வடக்கில் உள்ளன. 21, 53, 54, 56,57, 58, 59, 61, 64, 65, 66, 68 ஆகிய 12 படைப் பிரிவுகள் வன்னியிலும் 51, 52, 55 என்கிற3 படைப் பிரிவுகள் யாழ் மற்றும் தீவுப் பகுதிகளில்நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளன. இது தவிர மொத்தமுள்ள 8 அதிரடிப் படைப்பிரிவுகளில் குறைந்தபட்சம் மூன்று (2,3,7) வடக்கில் உள்ளன. இதில் அடங்காத வேறு சில ரெஜிமென்ட் பிரிவுகளும்இரண்டு மிகப் பெரிய கடற் படைத் தளங்களும், இரண்டு முக்கிய விமானப் படைத் தளங்களும்இன்று வடக்கிலுள்ளன.

வடக்கு மாகாணம் இலங்கையின் மொத்தப்பரப்பில் 14 சதத்தில் (8894 ச.கிமீ) அமைந்துள்ளது. இதில் இந்தப் 15 படைப் பிரிவுகளும்நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளன. 2011ம் ஆண்டுக் கணக்குப்படி வட மாகாணத்தின் மொத்த மக்கள்தொகை 9,97,754. பொதுவாக ஒரு படைப் பிரிவில் 10,000 லிருந்து 20,000 வீரர்கள் வரை இருப்பர்.இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஒரு கணக்கீட்டின்படி மொத்தத் தரைப்படையில் 60 சதம்,அதாவது 1,80,000 பேர் வடமாகாணத்தில் உள்ளனர். இவர்களோடு கடல், விமானப் படை வீரர்களையும்,அதிரடிப் படையினரையும், சிவில் பாதுகாப்புப் படையினரையும், உளவுத் துறையினரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவர்கள் தரைப்படையின் எண்ணிக்கையில் சுமார் 10 சத அளவு உள்ளனர் என்னக்கொண்டால், மொத்தம் வடக்கில் மட்டும் 1,98,000 இராணுவத்தினர் உள்ளனர் எனலாம். அதாவது வடக்கின் படைச் செறிவு (troupe density)1000 குடிமக்களுக்கு 198.4 என்றாகிறது. அல்லது ஒவ்வொரு 5 சிவிலியன்களுக்கு ஒரு இராணுவ வீரன் என்கிற வீதத்தில்இன்று அங்கு சிங்களப் படை நிறுத்தப்பட்டுள்ளது. பன்னாட்டு அனுபவங்களுடனும் ஆய்வுகளுடனும்ஒப்பிடும்போது இது மிக மிக அதிகம்.

அமெரிக்க இராணுவத் துறையின் சார்பாக‘பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனம்’ எனும் அமைப்பு (IDA) உலக அளவில் நடைபெற்ற 41 உள்நாட்டுப்போர்களை ஆய்வு செய்து அளித்துள்ள அறிக்கை இதை உறுதி செய்கிறது. இத்தகைய போர்களை பெரியஅளவில் வெற்றிகரமாக (அதாவது 80சதத்துக்கு மேலாகச் சாதகமாக)க் கையாள 1000 பேருக்கு40லிருந்து 50 என்கிற அளவில் படைச் செறிவு இருந்தால் போதும் என அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த அளவைக் காட்டிலும் 4 அல்லது 5 மடங்கு படைச் செறிவு இன்று வடக்கில்உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் இந்த 40 முதல் 50 வீரர்கள் போதும்என்கிற கணக்கு போர் நடந்து கொண்டுள்ளபோது தேவையான படைச் செறிவின் கணக்கு. போர் முடிந்துள்ளசூழலில் இன்றும் 200 என்கிற படைச் செறிவு தக்கவைக்கப் படுவதை எந்த நியாயத்தின் அடிப்படையிலும்விளக்க இயலாது. ஈராக்கில் உச்சகட்டப் போர் நடந்து கொண்டிருந்த போதுகூட (2007) அங்கிருந்த படைச் செறிவு 20 தான்; 1970ல் வட அயர்லாந்தில்பயன்படுத்தப்பட்டப் படைச் செறிவு 23. பிரான்சு அரசு அல்ஜீரியப் போரில் பயன்படுத்தியபடைச் செறிவு 60; செசன்யா போரில் பங்குபெற்ற ருசியப் படைச் செறிவு 150. இவை எல்லாமும்கூட போர் நடந்துகொண்டிருந்தபோது ஈடுபடுத்தப்பட்ட படைச் செறிவுகள். இவை எல்லாவற்றையும்விட இன்று அதிகமாகவும் நிரந்தரமாகவும் வட மாகாணத்தில் சிங்களப் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.மேற்குறித்த அயர்லாந்துப் போரின் படைச் செறிவை ஆய்வு செய்த இங்கிலாந்துப் பாதுகாப்புத்துறையின் கூற்றுப்படி 2008 வரையிலும் கூட வன்னியில் போரில் பங்கு பெற்ற சிங்களப் படைச்செறிவு 60 ஆகத்தான் இருந்தது. அதன் பின்னரே 198 என்கிற அளவிற்கு இது அதிகரிக்கப்பட்டது.

தற்போது வடக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளபடைகளின் அளவைப் பாதியாகக் குறைத்தால் கூட, பிறகும் அங்கிருக்கக் கூடிய படைச் செறிவு1000 சிவிலியன்களுக்கு 100 படை வீரர் என்கிற அளவில் இருக்கும். அதுவே சர்வதேசச் சராசரியைக்காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

http://tamilworldtoday.com/archives/7968

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ சார்பற்ற இராணுவமாக ஏறக்குறைய அனைத்துச் சிங்கள மக்களும் இன்று மாற்றப்பட்டுள்ளனர். இதுவே நிதர்சனமாகும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
ஆனால்ராஜபக்‌ஷேக்களின் திட்டம் வேறுவிதமாக இருந்தது. இராணுவத்தைப் பலப்படுத்த வேண்டும்.ஆனால் அது தங்களின் குடும்பத்தின் கட்டுப்பாட்டிலும், அதற்கு விசுவாசமாகவும் இருக்கவேண்டும் என அவர்கள் நினைத்தனர். ஃபொன்சேகாவைப் பந்தாடி மற்றவர்களுக்கு எச்சரிக்கையும்விடுத்தனர்.
ஐயோ சிங்களவனுக்கிடையிலயும் ஒற்றுமை இல்லை போல கிடக்கு......
  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

2.இராணுவத்தின் நில ஆக்ரமிப்பு

நிரந்தரமாக வடக்கில் இப்படிக் குடியமர்த்தப்பட்ட இராணுவம் பெரிய அளவில் இன்று வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது. இது குறித்த குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படும்போது தாங்கள் கைப்பற்றியுள்ள நிலங்கள் யாவும் அரசுக்குச் சொந்தமானவை அல்லது ஏற்கனவே விடுதலைப் புலிகள் வசம் இருந்தவைதான் என இராணுவத் தரப்பில் பதிலளிக்கப்படுகிறது. அது உண்மை எனக் கொண்டாலுங்கூட, அவையும் பெரும்பாலும் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டவைதான்.

தமிழ்த் தேசக் கூட்டமைப்பின் சார்பாகச் சென்ற அக்டோபர் 21, 2011 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த ஒரு அறிக்கையின்படி வடக்கிலும் கிழக்கிலும் இலங்கை இராணுவம் 7000 ச.கிமீ பரப்பை ஆக்ரமித்துள்ளது. ‘மாற்றுக் கொள்கைகளுக்கான மையம்’ (CPA) 2011ல் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை மற்றும் முன் குறிப்பிட்ட ‘பன்னாட்டு நெருக்கடிக் குழு’வின் (ICG) அறிக்கை ஆகியன இந் நில ஆக்ரமிப்பு குறித்த பிரச்சினைகளாகக் கீழ்க் கண்டவற்றைப் பட்டியலிடுகின்றன: 1) இராணுவ இருப்புகளுக்காகவும், உயர் பாதுகாப்பு வலயங்களுக்காகவும் நிலங்கள் பறிக்கப்படுதல் 2) இத்தகைய நில அபகரிப்புகளின்போது சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகள் மற்றும் அகற்றப்பட்ட மக்களை மறு குடியமர்த்துதல் ஆகியன மேற்கொள்ளப் படுவதில்லை. 3) கட்டாய இடப்பெயர்வு 4) தமது நிலங்களை உரிமையாளர்களும், சில நேரங்களில் அரசு அதிகாரிகளும் சென்று பயன்படுத்தவும் பார்வையிடவும் அநுமதி மறுக்கப்படுதல் 5) பாரம்பரியமாக இந் நிலங்களுடன் தொடர்பில்லாத சிங்கள மக்களைக் கொண்டு வந்து குடியமர்த்துதல்.

2011ல் வெளியிடப்பட்ட அரசுச் சுற்றறிக்கை ஒன்று நிலப் பிரச்சினைகளை இராணுவத் தலையீட்டின் மூலம் தீர்ப்பது குறித்துப் பேசுகிறது. அரசு ஆதரவு செய்தித் தாள் ஒன்றில் மே 2012ல் வெளிவந்த ஒரு அறிக்கையின்படி, மன்னார், கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணப்ப் பகுதிகளில் இராணுவம் சாகுபடி செய்வதை ஏற்றுக் கொள்கிறது. முன் குறிப்பிட்ட ICG அறிக்கை இது தொடர்பான இன்னொரு பிரச்சினையைச் சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு இராணுவ உழைப்பில் விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கு விவசாயக் கூலி கொடுக்கப்பட வேண்டியதில்லை என்பதால், இவை சந்தையில் குறைந்த விலையில் கொண்டு வந்து குவிக்கப்படுகின்றன. இது அப்பகுதியின் ஏழைச் சிறு விவசாயிகளின் வருமானத்தைப் பெரிய அளவில் பாதிக்கிறது (Crisis Group Asia Report, No 220, March 16, 2012).

இது தவிர வெற்றிகண்ட பெருமிதத்துடன் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான ஆக்ரமிப்புகளுக்கு எடுத்துக்காட்டாக புலிகளின் மாவீரர் கல்லறைகளின் அழிப்பையும் ஆக்ரமிப்பையும் கூறலாம். யாழ்ப்பாணம் கோப்பாயில் அமைந்திருந்த மிகப்பெரிய மாவீரர் கல்லறை இன்று தகர்க்கப்பட்டு அவ்விடத்தில் 51வது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது. பிற மாவீரர் கல்லறைகள், திலீபன் நினைவுத் தூண் உட்பட பிற நினைவுச் சின்னங்கள் தகற்கப்பட்டு சாலை விரிவாக்கம் முதலான அகக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக எங்கு நோக்கினும் இராணுவத்தின் பார்வையில் நனைந்தவாறுதான் தமிழ் மக்கள் நடமாட இயலும். 2012ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை அளித்து பசில் ராஜபக்‌ஷே பேசும்போது, “(இலங்கைத் தீவை) ஒரே நாடாக உணர வைக்கும் பொருட்டு நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இராணுவ முகாம்களை அமைப்பது அவசியமாகிறது” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது. சிங்கள மக்கள் மத்தியில் இராணுவ முகாம்கள் இருப்பது குறித்து அவர்களுக்கு இப்போதைக்குப் பெரிய கவலை இல்லை. அவர்களைப் பொருத்தமட்டில் இராணுவ வீரர்கள் என்போர் “நம்ம பசங்க”. ஒரு பன்மைச் சமூக அமைப்பில் ஒற்றை இன இராணுவத்தின் இருப்பு பிற இனங்கள் மத்தியில் ஏற்படுத்தும் உணர்வுகள் பாரதூரமானவை. வடக்கைத் தன் நாடாக நினைத்து இராணுவம் அதிகாரம் செலுத்தும் அதே நேரத்தில் அந்நிலத்தின் மக்களை அது தன் மக்களாக நினைப்பதில்லை.

2012ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் 3000 மில்லியன் ரூபாய்கள் இராணுவத்திற்கான நிரந்தரக் குடியிருப்புகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டது. தமிழ் மக்களின் பாரம்பரியமான வடக்கில் சிங்கள அரசு முன்னின்று நடத்தும் இந்த இராணுவக் குடியேற்றம் ஒரு “சனப் பரவல் மறு பொறியியல்” (demographic re-engineering) என்கிறார் திஸராணி குணசேகரா. ஆங்காங்கு உருவாக்கப்படும் இத்தகைய இராணுவக் கன்டோன்மென்ட்களும் குடியிருப்புகளும் தமிழ்ப் பகுதியின் தொடர்ச்சியை (contiguity) அறுக்கின்றன. கட்டுப்பாட்டு மையங்களாகவும் ஆதிக்கக் குறியீடுகளாகவும் அவை ஆங்காங்கு முளைத்து நிற்கின்றன. சுருங்கிவரும் தமிழ்க் கடலுக்குள் விரிந்து வரும் சிங்களத் தீவுக் கூட்டமாய்த் திமிர்த்து நிற்கின்றன. பலஸ்தீனியத் தொடர்ச்சியை எவ்வாறு இஸ்ரேல் அறுத்தெறிந்ததோ அதே தந்திரோபாயம் இங்கும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் திஸராணி. ஏதேனும் உரிமைப் போராட்டத்தை இனி தமிழர்கள் தொடங்க நேர்ந்தால் உடனடியான முதற்கட்டப் பாதுகாப்புக் கவசமாக இப்படிக் குடியமர்த்தப்பட்ட சிங்கள இராணுவ வீரகளும் அவர்களது குடும்பத்தினரும் அமைவர்.

சென்ற ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இனி மூன்றாவது குழந்தையைப் பெறுகின்ற ஒவ்வொரு இராணுவ வீரனுக்கும் ஒரு இலட்ச ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு இச் சலுகை காவல்துறைக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. சிங்கள இராணுவக் குடும்பங்கள் பெரிதாக அமைவது அரசால் இவ்வாறு ஊக்குவிக்கப்படுகிறது.

இவ்வாறு வடபகுதி இராணுவமயப்படுத்தப் படுதலை நியாயப்படுத்த இலங்கை அரசு மூன்று காரணங்களைச் சொல்லுகிறது, 1) விடுதலைப் புலிகளால் வடபகுதி கடுமையாக இராணுவமயமாக்கப்பட்டிருந்தது. போர் முடிந்த பின்னுங்கூட இதில் பெரும்பகுதி இன்னும் கண்ணி வெடி வயல்களாகவே உள்ளது. இந்த வெடிக்காத ஆயுதங்களைக் (Unexploded Ordinance – UXO) கெல்லி எடுத்து இபகுதியை மக்கள் பாதுகாப்பாக வாழும் பகுதியாக மாற்றுவதற்கு இராணுவ இருப்பு அவசியமாகிறது. இது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. கண்ணி வெடிகள் முதலானவற்றை நீக்குவதற்கு இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி நீக்கப் பிரிவைத் தவிர வேறு எட்டு வெளிநாட்டு மனிதாபிமான நிறுவனங்கள் தற்போது வடபகுதியில் செயல்படுகின்றன, தற்போது பெரும்பகுதி கண்ணிவெடி நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. வெகு விரைவில் முழுமையாகக் கண்ணிவெடி நீக்கம் செய்யப்பட்டுவிடும் என்கிறபோது இந்தக் காரணத்தைச் சொல்லி ஒரு பெரும்படையை நிரந்தரமாகக் கொண்டுவந்து குடியமர்த்துவது என்ன நியாயம்?

2) போர் முடிந்துவிட்ட போதும் போரினால் ஏற்பட்ட பாதுகாப்பின்மை இங்கு தொடரவே செய்கிறது. எடுத்துக்காட்டாக், 22 ஆண்டுகளுக்கு முன் விடுதலைப் புலிகளால் 48 மணி நேர அவகாசம் கொடுத்து இங்கிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 80,000 முஸ்லிம்கள் இன்னும் திரும்பவில்லை. திரும்பி வருபவர்களது நிலங்கள் பல இடங்களில் பிறர் வசம் உள்ளது. இது போன்ற பிரச்சினைகள், போரின் ஊடான பல்வேறு பகைகள் ஆகியவற்றைச் சமாளிக்க நிரந்தரமாகப் படைகளைத் தங்க வைக்க வேண்டியுள்ளது. இதையும் ஏற்றுக்கொள்ள இயலாது. இப்படியான பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன என்ற போதிலும் இவற்றைச் சிவில் நிர்வாகத்தின் கீழ் காவல்துறையைக் கொண்டே எதிர் கொள்ள இயலும். அப்படி எதிர்கொள்வதுதான் சரியாகவும் இருக்கும். மாறாகக் காவல்துறையின் இருப்பைக் குறைத்துவிட்டு, இருக்கிற காவல்துறையையும் இராணுவ அமைச்சகத்தின் கீழ்க் கொண்டு வருவது ஜனநாயக ஆளுகைக்கு ஏற்றதல்ல.

3) போரினால் அழிந்துள்ள வடபகுதியில் இன்னும் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.. இராணுவ இருப்பு இதைச் சாத்தியமாக்கும். இது முற்றாக மறுக்கப்படவேண்டிய ஒரு கருத்து. இராணுவத்தின் பணி இதுவன்று. இராணுவம் இதற்கான நிறுவனமும் அல்ல. இராணுவம் இதுபோன்ற பணிகளை சிறப்பாகவும் ஊழலில்லாமலும் நிறைவேற்றும் எகிற கருத்து அபாயகரமானது மட்டுமல்ல அபத்தமானதும் கூட. கல்வி மற்றும் மருத்துவ நலத் துறைகளில் இலங்கை முன்னதாகச் சாதித்துள்ள சாதனைகளெல்லாம் சிவில் நிர்வாகத்தின் கீழ் இத்துறைகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடும், உரிய அதிகாரங்களும் கொடுத்து நிறைவேற்றப்பட்டவைதான். இந்தோனேசியா, எகிப்து, பாகிஸ்தான் முதலான நாடுகளில் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவியுள்ளன.

அன்றாட சிவில் நிர்வாகப் பணிகளில் இராணுவத் தலையீடு என்பது சகித்துக் கொள்ள இயலாத ஒன்று. சாலைகளில் ஏற்படும் சிறு விபத்துக்களில் தலையிட்டு அதே இடத்தில் பிரசினையைத் தீர்ப்பது, அல்லது நகரத்தில் ஏதேனும் ஒரு பகுதி தூய்மையற்றுக் கிடந்தால் அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்களுக்கு ஆணையிட்டு அவற்றைத் தூய்மை செய்யச் சொல்லுவது, அரசுப்பணியில் இருப்பவர்களை, அவர்களது பணியல்லாத வேறொன்றைக் கூடுதலாகச் செய்யச் சொல்லுவது என அன்றாடம் எரிச்சலூட்டும் சம்பவங்கள் குறித்துப் பலரும் எழுதியுள்ளனர்.

சென்ற ஆண்டு நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது ஒரு வானில் நண்பர் தேவா குடும்பத்துடன் தீவுப் பகுதிக்குச் சென்றேன். கடற்பாலத்தில் ஏறுமிடத்தில் நின்றிருந்த ஒரு இராணுவ வீரன் வண்டியை நிறுத்தி எங்கே போகிரீர்கள் என விசாரித்தான். நாங்கள் சொன்னோம். இரண்டு சாப்பாட்டுக் கேரியர்களைக் கொடுத்து அல்லப்பிட்டியிலுள்ள செக்போஸ்டில் கொடுத்து விடுமாறு சொன்னான். நாங்கள் அதை வாங்கி வைத்துக் கொண்டோம். அவன் இதை மிக்க மரியாதையுடன்தான் சொன்னான். அவன் ஒரு இராணுவ வீரனாக இல்லாமல் சாதாரண ஒருவராக இருந்து இந்த உதவியைக் கேட்டிருந்தாலும் நாம் செய்திருப்போம். மிக அடிப்படையான ஒரு மனிதாபிமான உதவிதான் இது. எனினும் இந்த மரியாதைகளுக்கு அப்பால் அதில் ஒரு இராணுவ அதிகாரம் இருக்கத்தான் செய்தது. ஒரு வேளை நாங்கள் அதைச் செய்ய இயலாவிட்டாலோ அல்லது விரும்பாவிட்டாலோ எங்களுக்கு அதை மறுக்க உரிமையில்லை. அதை வாங்கிச் செல்வதா இல்லையா என்கிற தேர்வுச் சுதந்திரம் (choice) அங்கே எங்களுக்குக் கிடையாது. நாங்கள் அன்று செய்தது ஒரு மனிதாபிமான உதவி அல்ல. தேர்வுச் சுதந்திரமிருந்து நாங்கள் அதைச் செய்திருந்தால்தான் அது உதவி. அப்படி இல்லாதபோது அது ஒரு கட்டளைக்குக் கீழ்ப்படிதல் மட்டுமே.


http://amarx.org/?p=864


3.இலங்கையில் இப்போது மேற்கொள்ளப்படும் வளர்ச்சி- சில பிரச்சினைகள்

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் மக்களுக்கு மறுக்கப்படுகிற சுதந்திரத்திற்கு ஈடாக பிருமாண்டமான வளர்ச்சித் திட்டங்கள் முன்வைக்கப்படுதல் (Developmental State – Chalmers Jhonson) குறித்து முன்பே சொன்னேன். இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து குமார் டேவிட் சில முக்கிய கருத்துக்களைச் சொல்கிறார்.

(சோழப்) பேரரசோடு எவ்வாறு ஒரு பெருந்தத்துவமும் (சைவம்), பேரிலக்கியங்களும், பெருங்கோயில்களும் உருவாயின என மறைந்த பேராசிரியர்கள் கைலாசபதி (“பேரரசும் பெருந்தத்துவமும்”), சிவத்தம்பி ஆகியோர் குறிப்பிடுவர். வரலாறு காணாத பெருந்தலைவனாகவும், பெரு வெற்றி ஒன்றைக் கொண்டவனாகவும், இலங்கையின் எதிர்காலம் குறித்த மகிந்த சிந்தனை ஒன்றை வரித்துக் கொண்டவனாகவும் தன்னை முன் நிறுத்திக் கொள்ளும் மகிந்த ராஜபக்‌ஷே தனது பெருஞ்சாதனைகளாக முன்வைப்பவற்றுள் போருக்குப் பிந்திய வளர்ச்சித் திட்டங்களான அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்பாதைகள், நோரோச்சோலையில் நிறுவப்படும் மின்நிலையம், சொந்த ஊரான அம்பாந்தோட்டையில் நிறுவப்பட்டுள்ள துறைமுகம் மற்றும் விமான தளம், மெக்கல்லம் சாலையில் கட்ட இருக்கும் பிரும்மாண்டமான அடுக்குமாடிக் கோபுரம் மற்றும் தாமரை வடிவ நெல்லும் இசையரங்கம் ஆகியவை அடங்கும்,

மிகப் பெரிய அளவு வெளிநாட்டுக் கடன் மற்றும் உதவிகளுடன் இவை கட்டப்பட உள்ளன. இவற்றில் பல அவற்றின் பிரும்மாண்டங்களின் அளவிற்குத் தகுந்த பயனளிக்கத் தக்கவையல்ல என்கிறார் குமார். நோரோசோலையில் கட்டப்படும் மின்நிலையம் (450 மில்லியன் டாலர்), தென்னிலங்கை நெடுஞ்சாலை (600 மில்லியன் டாலர்) முதலியன உடனடியாகப் பயன் தரக்கூடியவை என்பது உண்மையே. எனினும் முன்னது அதற்குரிய முழு ஆற்றலுடன் செயல்படுவதில்லை. பின்னது முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. பொதுவில் மின் உற்பத்தி மற்றும் நெடுஞ்சாலை முயற்சிகள் மக்களுக்குத் தேவையானவை என்ற போதிலும் அம்பாந்தோட்டையில் உருவாக்கப்பட்டுள்ள துறைமுகமும் விமான நிலையமும் தோல்வியடைந்த திட்டங்கள் என்கிறார் குமார். மலைகளை உடைத்துக் கடலைக் குடைந்து உருவாக்கப்பட்ட இத்துறைமுகம் இன்று முழுப் பயன்பாடின்றிக் கிடக்கிறது. தொழிற்துறையினரும் வணிகர்களும் அவர்களது விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயமாக அங்கே செல்ல நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். உலகத் தரமான துறைமுகந்தான் அது ஆனால் உல்கத் தரமான வணிகம் அதையொட்டி இல்லாதபோது அதனால் என்ன பயன்?

அம்பாந்தோட்டையில் நிறுவப்பட்டுள்ள பன்னாட்டு விமான முனையமும் பெரும் பயனில்லாத ஒன்றுதான், அம்பாந்தோட்டைக்கு ஒரு நடுத்தரமான உள்நாட்டு முனையமே போதுமானது. ஏராளமான பொருட் செலவில் உலகத் தரமான தொழில்நுட்பத்துடன் திகழ்ந்தபோதும் பன்னாட்டு விமானச் சேவைகள் அம்பாந்தோட்டையைத் தேர்வுசெய்வதில்லை. அரசு கட்டாயப்படுத்தும் நிலையை எடுத்தால் விமானச் சேவைகள் இலங்கை வழியையே புறக்கணிக்கத் தயாராக உள்ளன. மெக்கல்லும் சாலைக் கோபுரமும் நெல்லும் இசையரங்கும் கூட அப்படித்தான்.

இவற்றிற்காகப் பெறப்பட்டுள்ள மிகப் பெரிய அளவிலான வெளிநாட்டுக் கடன் சுமை அடுத்த தலைமுறையினரின் தலைகளில் ஏற்றப்பட உள்ளது. துறைமுகம் 1.3 பில்லியன் டாலர், விமான நிலையம் 230 மில்லியன் டாலர், இசையரங்கு 26 மி டாலர், அடுக்குமாடிக் கோபுரம் 105 மி டாலர் செலவில் கட்டப்படுகின்றன. இவையும் முன் குறிப்பிட்ட மின்நிலையம், நெடுஞ்சாலை ஆகியனவும் சீனக் கடன் மற்றும் தொழில் நுட்ப உதவியுடன் கட்டப்படுகின்றன. இது தவிர 750மி டாலர் செலவில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நவீனமயமாக்கல் திட்டமும். சீன உதவியுடந்தான் நடை பெறுகிறது.

இவற்றில் எவ்வளவு கடன், எவ்வளவு கடனில்லா உதவி (grants)) எனத் தெரியவில்லை.மொத்தத்தில் 2015 வாக்கில் இத் திட்டங்களுக்கான மொத்த சீனக் கடனின் அளவு சுமார் 4.5 பில்லியன் டாலராக இருக்கும். அதாவது 600 பில்லியன் இலங்கை ரூபாய்கள். வெறும் 5 சத வட்டி என்று கொண்டாலும் கூட இலங்கை அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் சீனாவுக்கு மட்டும் 300 மில்லியன் டாலர் செலுத்த வேண்டி இருக்கும்.

 

http://amarx.org/?p=864

 

  • கருத்துக்கள உறவுகள்

4.கல்வித்துறையில் இராணுவமயமாதல்

இந்தக் கட்டுரையைக் கல்வித் துறையிலிருந்துதான் தொடங்கினோம். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இராணுவத்தின் மூலம் சில வாரக் கட்டாயப் பயிற்சி அளிக்கப்படுவதைத்தான் அந்த நண்பர் குறிப்பிட்டார். அவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்ட இலங்கையின் முக்கியமான தேசியப் பள்ளிகளின் முதல்வர்கள் (principals) 23 பேருக்குச் சென்ற (2012) அக்டோபர் முதல் வாரத்தில் கர்னல் (brevet colonels) பட்டம் வழங்கப் பட்டது. பட்டத்தை வழங்கி உரையாற்றிய பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபயா, அதற்கு முந்திய நாள் நடைபெற்ற உலகக் கோப்பைப் பந்தயத்தில் இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியுற்றதைப் பற்றிக் கூறி, ”தலைமைத்துவப் பயிற்சியின்மைதான் இத்தகையத் தோல்விகளுக்குக் காரணம்” என்றார்.

சகல துறைகளையும் அதி வேகமாக இராணுவமயமாக்கும் பணியை முன்னெடுத்து வரும் கோத்தபயாவுக்கு இந்தத் ‘தலைமைத்துவப் பயிற்சி’ குறித்து ஒரு சிந்தனை உண்டு. இதற்கு முந்திய ஆண்டுதான் (2011) இனி பல்கலைக் கழகங்களில் சேரும் மாணவர்கள் அனைவரும் மூன்று வாரம் இராணுவ முகாம்களுக்குச் சென்று இராணுவப் பயிற்சி பெறுவதை அவர் கட்டாயமாக்கியிருந்தார். ஆங்கில மொழி மற்றும் கணினிப் பயன்பாடுகளில் பயிற்சி அளித்தல், கிராமப்புற மாணவர்களுக்கு உயர் நாகரீக வழமைகளைக் கற்றுக் கொடுத்தல் என்றெல்லாம் இதற்குப் பல நோக்கங்களும் நியாயங்களும் முன்வைக்கப்பட்டன. “தலைமைத்துவப் பயிற்சி” (leadership training)) என இதற்குப் பெயரும் சூட்டப்பட்டது. ஆங்கிலம், கணினி முதலியவற்றில் பயிற்சி அளிக்க இராணுவத்திற்கு என்ன தகுதி உள்ளது என யாரும் கேட்டுவிட இயலாது.

மேனிலைப் பள்ளி மாணவர்கள் சிலர், ஆளும் கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எல்லோருக்கும் கூட அடுத்தடுத்து இத்தகைய ’தலைமைத்துவப் பயிற்சி’ அளிக்கப்பட்டது.

கோத்தபயாவின் இந்தத் தலைமைத்துவப் பயிற்சி என்பது உண்மையில் தலைமைப் பண்புகளைக் காட்டிலும் தலைமைக்குப் பணிந்து போகும் பண்பைத்தான் கற்பித்தது. இராணுவம் வேறென்ன சொல்லித் தரும். தலைமைக்கும், கட்டளைக்கும் அடி பணிவதுதான் இராணுவத்தின் அடிப்படை விழுமியம். கல்வித் துறையின் விழுமியங்களுக்கு இது முற்றிலும் எதிரானது என்பதை விளக்க வேண்டியதில்லை. சமத்துவம், அறிவுத்துறைச் சுதந்திரம், எல்லாவற்றையும் கேள்வி கேட்பது என்பவைதான் கல்விதுறை விழுமியங்கள். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் கூட ஏற்றத் தாழ்வான உறவு இருக்கலாகாது என்பதுதான் பாவ்லோ ஃப்ரெய்ரே போன்ற கல்வியாளர்கள் முன்வைத்த கோட்பாடு. இத்தகைய கல்வி விழுமியத்திற்கும் படிநிலை அதிகார அமைப்பு (hierarchy). மற்றும் கேள்வியின்றிப் பணிதல் என்கிற இராணுவ ‘அறங்களுக்கும்’ என்ன தொடர்பு? ஒரு “நல்ல” படை வீரன் என்போன் எப்போதும் கொல்வதற்கும் கொல்லப்படுவதற்கும் தயாராக உள்ளவன். அவன் சமூகப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் ‘மோதலாக’ (conflict)) அணுகுவான். இந்த மோதலை ஒடுக்கிக் கட்டுப்படுத்தும் கருவியாக அவன் வன்முறையை வழிபடுவான்.

கல்விச்சாலை இதற்கு நேரெதிரானது. இங்கே regimentation க்கு இடமில்லை. நமது மாணிக்க வாசகர், “கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்” என்று கூறுவது நினைவுக்கு வருகிறது.. தன்னை இறைவழியிலிருந்து பிறழ்த்திச் செல்லத் தக்க ஆபத்துக்களான ‘ஈர்க்கிடை புகா இளமுலை மாதர் தம் கூர்த்த நயனக் கொள்ளை” முதலானவற்றிலிருந்து அவர் தப்பிப் பிழைத்த கதையைச் சொல்லி வரும்போதுதான் இவ்வரிசையில் அவர் கல்வி என்னும் பல்கடலிலிருந்து தப்பித்ததையும் சொல்லி வைப்பார். சரியான கல்வி முறை ‘விசுவாசத்திற்கு’ எதிராகிவிடும் என்பதுதான் இதன் பொருள்.

இன்று ராஜபக்‌ஷேக்களுக்கும் அதுதான் கவலை. தங்கள் மீதான கேள்விமுறையற்ற விசுவாசத்திற்கு கல்விமுறை கேடு விளைவித்து விடக் கூடாது என்பது அவர்களின் அச்சங்களில் ஒன்று. இந்தப் பின்ணணியிலிருந்துதான். இளம் உள்ளங்களில் எல்லையற்ற விசுவாசம், அதிகாரத்திற்குப் பணிதல் முதலான இராணுவ விழுமியங்களைப் பதிக்கும் தலைமைத்துவப் பயிற்சிக்கு அழுத்தம் கொடுக்கப் படுகிறது.

இன்று கல்வி நிறுவனங்களுக்குள் இராணுவத்தின் இருப்பு, குறிப்பாக உயர் கல்வி நிறுவனங்களில் அதன் இருப்பு அதிகமாகியுள்ளது என்பது மேலோட்டமாகப் பார்த்தாலே தெரியும். இராணுவ அதிகாரிகள் அடிக்கடி வந்து செல்லுதல், வளாகங்களுக்குள் இராணுவ வாகனங்கள் நிறுத்தி வைக்கப் படுதல், இராணுவப் பிரச்சாரக் கருத்தரங்குகள் நடத்துதல் முதலியன சில எடுத்துக்காட்டுகள். பல்கலைக் கழகங்கள் எப்போதும் கண்காணிக்கப்பட வேண்டியவையாகவும், கலகம் உருவெடுக்கக்கூடிய களங்களாகவும் கருதி அணுகப்படுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு வளாகங்களுக்குள் ‘பாதுகாப்புச் சேவைகள்’ (security services) பெரிய அளவில் பணியமர்த்தப் பட்டிருப்பது. இத்தகைய சேவைகள் இராணுவத்துடன் நெருக்கமாக உறவைப் பேணுபவை. முன்னாள் இராணுவ வீரர்களைக் கொண்டே இவை இயக்கப்படுகின்றன. ‘டென்டர்’ மூலம், குறைந்த ஊதியத்தைக் கோரும் சேவைகளைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்கிற அரசு விதியிலிருந்து இதற்கு மட்டும் விலக்கு உண்டு என்கிறார் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயம் குறித்து அரிய தகவல்களுடன் கூடிய கட்டுரை ஒன்றை எழுதியுள்ள ஷமலா குமார் (EPW, feb 16, 2013)..

அப்படியும் மாணவர்கள் ஏதும் போராட்டங்களைத் தொடங்குவார்களாயின் அதை ஒரு உள்நாட்டுக் கலவரம் (insurgency) என்கிற அளவில் அரசு எதிர்கொள்கிறது. ‘ராகிங்’ (ragging) குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அளித்த பேட்டி ஒன்றில், “பல்கலைக் கழகங்களில் பயங்கரவாத அச்சத்தை உருவாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்… இராணுவத்தைக் கொண்டுவந்து மாணவர்களைக் கட்டுப்படுத்த அரசு விரும்பவில்லை. வடக்கில் எப்படிச் செய்தோமோ அதேபோல (இங்கும்) ஜனநாயகத்தை நாங்கள் பாதுகாத்தாக வேண்டும். இன்று பல்கலக் கழகங்கள் (கண்ணிவெடி) நீக்கப்படாத பகுதிகளாக (uncleared areas) உள்ளன. நாம் அவற்றை விடுதலை செய்தாக வேண்டும்…” எனக் கூறியதை ஷமலா சுட்டிக் காட்டுகிறார் (Sunday Observer, July, 2010). மாணவர் அதிருப்தி குறித்துப் பேசுவதற்கு அமைச்சர் எத்தகைய மொழியைத் தேர்வு செய்துள்ளார் எனப் பாருங்கள்.

பேச்சோடு நிற்கவில்லை. போராடும் மாணவர்கள் மீது கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு அமைச்சர் வந்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். உயர் கல்வியில் சீர்திருத்தம் செய்வது என்கிற பெயரில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மிகவும் இரகசியமாக திட்டம் ஒன்றை அரசு உருவாக்கியது. இந்த இரகசியத் திட்டம் பல்கலைக் கழக ஆசிரியர் மன்றத்தால் அம்பலப்படுத்தப்பட்டது. 1940ல் உருவாக்கப்பட்ட பல ஜனநாயகக் கூறுகளைக் கொண்ட உயர் கல்விக் கொள்கையுடன் இது பல அம்சங்களில் முரண்பட்டிருந்தது. மாணவர் சங்கம் இதற்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியவுடன் பெரிய அளவில் இராணுவம் கொணர்ந்து வளாகத்தில் குவிக்கப்பட்டது. போராடிய மாணவர் சங்கத் தலைவர்களின் பெற்றோர்களை இராணுவத்தினர் நேரடியாகவும் இடைத் தரகர்கள் மூலமாகவும் அச்சுறுத்தினர்.

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துச் சமீபத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘பல்கலைக் கழக ஆசிரியர் கூட்டமைப்பு” (FUTA) நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாகப் ‘பல்கலைக் கழக மாணவர் கூட்டமைப்பு’ (IUSF) களத்தில் இறங்கியபோதும் இவ்வாறே மாணவர் மற்றும் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மிரட்டப்பட்டனர். சஞ்சீவ் பண்டாரா என்கிற மாணவத் தலைவர் கைதும் செய்யப்பட்டார். போராடிய பல்கலைக் கழக ஆசிரியர் கூட்டமைப்பை அரசு தனது ‘எதிரி’யாகச் சித்திரித்தது. ஆசிரியர்களுக்கு வெளிநாட்டுத் தொடர்பு உள்ளது எனவும், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டியது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊடகங்களில் போராட்டத்திற்கு எதிராகப் பிரச்சரம் செய்தது. தொழிற்சங்கம் நடத்துபவர்களுடன் எல்லாம் நான் பேசமாட்டேன் என்றார் ஜனாதிபதி.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்தில் சென்ற ஆண்டு ‘மாவீரர் தின’ (நவம்பர் 27, 2012) அஞ்சலி செலுத்துவதற்காக அமைதியாகக் கூடியிருந்த மாணவர்கள் மீது இராணுவம் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளை அனைவரும் அறிவோம். கந்தர்மடம் தர்ஷநாத், கனக சுந்தரசாமி ஜெனமே ஜெயன், சண்முகம் சாலமன், வி.பவானந்தன் என நான்கு பேர் அன்று கைது செய்யப்பட்டு வெளிக்கடை இராணுவத் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) பிரயோகிக்கப் பட்டது. வாய்மொழியாக அனுமதி மறுக்கப்பட்ட பின்னும் மாணவர்கள் ஊர்வலம் செல்ல முயன்றதாலேயே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேடியதாகியது என பி.பி.சி செய்தியாளரிடம் யாழ்ப்பாணப் பகுதி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனெரல் ஹத்ருசிங்க கூறினார். ஏன் அவர்களுக்கு தியாகிகள் நினைவைப் போற்ற அனுமதி மறுக்கப்பட்டது என வினவியபோது “தேச நலனுக்காக (For the betterment of the country) அப்படிச் செய்ய நேரிட்டது என அவர் பதிலுரைத்தார். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமென மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். சில வாரங்களுக்குப் பின் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கட்டளைத் தளபதியை அணுகி கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியபோது அவர், “அம் மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனக் கனவு காணாதீர்கள்” எனப் பதிலுரைத்தார். பல்கலைக் கழகத்தை விரைவாகத் திறக்குமாறு நிர்வாகத்தை எச்சரிக்கவும் செய்தார் (The Independant, Dec 22, 2012). கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

ருகுமா மற்றும் சபரகமுவ பல்கலைக் கழகங்களில் ‘ராகிங்’ பிரச்சினை எழுந்த போதும் அதைக் கடுமையாக எதிர்கொண்ட அரசு அதிக அளவில் மாணவர்களைக் கைதும் செய்தது.

எல்லாவற்றையும் ‘பாதுகாப்பு’ என்கிற கண்ணாடி வழியே பார்ப்பது என்கிற நிலை இப்போது பல்கலைக் கழக நிர்வாகம், மாணவர் சங்கம் ஆகியவற்றிலும் ஊடுருவி விட்டது என்கிறார் ஷமலா. மாணவர் அமைப்புக்கள் மேலிருந்து கீழான அதிகார அமைப்புகளாகவும், முடிவெடுப்பதில் ஜனநாயகத் தன்மையற்றவையாகவும் உள்ளன.. ‘ராகிங்’ முறை, புதிதாக வரும் மாணவர்களை வழிக்குக் கொண்டுவந்து, அவர்களைப் பல்கலைக் கழகக் கலாச்சாரத்திற்குத் தகவமைப்பதாக உள்ளது. மாணவிகள் குறித்த அணுகுமுறை மரபு வழிப்பட்ட ஆணாதிக்கப் பார்வையின்பாற்பட்டதாகவே உள்ளது என்கிறார் ஷமலா. மரபு வழிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்குள்ளேயே நிற்க வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் வழிமுறையாகவே ‘ராகிங்’ அமைகிறது.

கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி குறைவானபோதிலும் இராணுவம் சார்ந்த பள்ளிகளுக்கு மிகத் தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சமீபத்தில் கொழும்பில் திறக்கப்பட்ட ‘பாதுகாப்புச் சேவைப் பள்ளி’ (Defence Service School) இனி எதிர்காலத்தில் தேசியப் பள்ளிகளுக்கு ஒரு மாதிரியாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் வேறு பல நகரங்களிலும் இதன் கிளைகள் திறக்கப்படுமாம், இராணுவ அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதற்காக 1980 களில் கட்டப்பட்ட ‘கொத்தலவாலா பாதுகாப்புக் கல்விக் கழகம்’ (Kothalavala Defence Academy) இப்போது பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டுள்ளது. இராணுவக் கல்வியுடன் தொடர்பில்லாத மேலாண்மைக் கல்வி (Management studies) மற்றும் மொழிப் பாடங்கள் முதலியனவும் இங்கே பயிற்றுவிக்கப்படுகின்றன. தவிரவும் இதில் இராணுவத்தினர் தவிர பொதுமக்களும் பயிலலாம். இலங்கை அரசு பள்ளிக் கல்விக்காக ஒதுக்கும் நிதியில் 80 சதம் பெருமைக்குரிய 350 தேசியப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படுகிறது மீதியுள்ள 20 சத நிதியில்தான் 9,000 மாகாணப் பள்ளிகள் செயல்படுகின்றன. முன் குறித்த தேசியப் பள்ளிகளில் இராணுவத்தினரின் பிள்ளைகளுக்குச் சிறப்பு ஒதுக்கீடுகள் அளிக்கப்படுகின்றன.

மொத்தத்தில் அனைத்து அம்சங்களிலும் இராணுவ நிலையங்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் மிக விரைவாக அழிந்து வருகிறது.

எனவே…

ராஜபக்‌ஷேக்களின் குடும்ப அதிகார ஆட்சி குறித்து விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை. ஆசிய நாடுகள் பலவற்றிலும் வாரிசு அரசியல் காணப்பட்டபோதிலும் இவற்றிலிருந்து பல அம்சங்களில் இலங்கையின் குடும்ப அரசியல் வேறுபடுகிறது. சகோதரர்கள் நால்வர் இப்படி முக்கியமான அதிகாரப்புள்ளிகளைக் கையகப் படுத்திள்ளது, அவர்களது வாரிசுகள் இன்று வெகு வேகமாக அதிகாரங்களை நோக்கி நகர்வது, அமைச்சர்கள் சுமார் நூறு பேர் இருந்தபோதிலும் அரசுச் செலவினங்களில் மூன்றில் இரு பகுதி ராஜபக்‌ஷே சகோதரர்களின் கையில் குவிவது என்பதற்கெல்லாம் வரலாற்றில் எடுத்துக்காட்டுகள் குறைவு.

மாகாண அரசுகள் மூலமாக நிறைவேற்றப்படுகிற ஏழை மக்களுக்கன நிவாரண நடவடிக்கைகள் எல்லாவற்றையும் மத்திய நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷேயின் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘திவி நெகுமா’வின் கீழ் கொண்டு செல்வதற்கான மசோதா சட்டமாக்கப்படும் பட்சத்தில் மகிந்த, கோத்தபய மற்றும் பசில் ராஜபக்‌ஷேக்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் மேற்கொள்ளப்படும் மொத்த அரசுச் செலவு (Capital and Recurrent Expenditure) 64 சதமாக இருக்கும். வேறெந்த ஜனநாயக நாட்டிலும் இது சாத்தியமில்லை.

மாகாணங்களிடம் எஞ்சியுள்ள கொஞ்ச நஞ்ச நிதி அதிகாரங்களையும் பறிக்கிற இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்ததற்காகத்தான் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயகா பதவி இறக்கப்பட்டு ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். போர் வெற்றியச் சாதித்துக் காட்டியவர் எனப் புகழீட்டிய இராணுவத் தளபதி ஃபொன்சேகாவிற்கு நேர்ந்த கதி எல்லோருக்கும் தெரியும்.

ஆட்கடத்தல்கள், காணாமலடிக்கப்படுதல்கள் என்பவை தவிர நீதித் துறைப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவரைப் பொது இடத்தில் ரவுடிகளைக் கொண்டு தாக்குவது, அரசு ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து ஒரு துணை அமைச்சரே சாட்டையால் அடிப்பது, அமைச்சரின் மகன் ஒரு இராணுவ அதிகாரியைப் பொது இடத்தில் அவமதிப்பது என்பதெல்லாம் ராஜபக்‌ஷேக்களின் ஆட்சியில் சகஜமாகிவிட்டன.

உள்நாட்டுப் போர் முடிந்து நான்காண்டுகள் ஆகியும் பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது பெரு முதலாளிகளை அயற்சிக்குள்ளாகியிருக்கிறது. பெரிய அளவு வெலிநாட்டுக் கடன்களின் மூலம் உருவாக்கபபடும் பிருமாண்டமான வளர்ச்சித் திட்டங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. குடும்ப அதிகார ஆட்சி, சொல்லிக் கொள்கிற அளவிற்குப் பயன் எதையும் தந்திடாத வளர்ச்சித்திட்டங்கள் ஆகியவற்றின் விளைவாக எதிர்பார்த்த அளவிற்கு வெளிநாட்டு மூலதனமும் வந்து குவியவில்லை. கடும் விலைவாசி ஏற்றம், தேங்கிப்போன ஊதியம் ஆகியவற்றின் விளைவாக மாத ஊதியம் பெறும் நடுத்தர வர்க்கம் தொடர்ந்து ஒன்று மாற்றி ஒன்றாகப் போராட்டக் களத்தில் இருக்கிறது. தங்கு தடையற்ற போக்கு வரத்தும், அதனூடான வணிகமும் மட்டுமே இன்று மக்களுக்குக் கையகப்பட்டுள்ள போர் ஓய்வின் பலன்கள். சிறு வணிகர்கள், சிறு முதலாளிகள், விவசாயிகள் ஆகியோர் மட்டும்தான் இதனால் ஓரளவு பயன்பெற்றுள்ள்னர். இனச் சிறுபான்மையினர், மாத ஊதியம் பெறுவோர், தொழிலாளிகள், அடித்தள மக்கள், இவர்களோடு பெரு முதலாளிகளும் இன்று அதிருப்தியிலுள்ளனர்.

ஊதிப் பெருத்த இந்த இராணுவத்தின் உதவியின்றி இன்று ராஜபக்‌ஷேக்கள் ஆட்சியில் தொடர இயலாது. இராணுவத்திற்குச் சிறப்பு அதிகாரங்கள், சிறப்புச் சலுகைகள் ஒரு பக்கம் என்ற போதிலும், இராணுவத்திற்குள் முக்கிய பொறுப்புகள் எல்லாம் ராஜபக்‌ஷேக்களின் விசுவாசிகளால் நிரப்பப்பட்டுள்ளன. வேறெந்த ஜனநாயக நாட்டிலும் இல்லாத அளவிற்கு இராணுவத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்த போதிலும் இன்றளவும் ராஜபக்‌ஷேக்களின் அதிகாரத்திற்குட்பட்டதாகவே இராணுவம் உள்ளது. போர் வெற்றியின் மூலம் ஈட்டிய பெரும்பான்மை இனத்தின் பேராதரவு இன்று ராஜபக்‌ஷேக்களின் முக்கிய பலமாக உள்ளது. எனினும் வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடியின் முன் எத்தனை காலம் இந்த ஆதரவு நிலைக்கும்? ஊட்டி வளர்க்கப்பட்டுப் பலதுறைகளிலும் கால் பதித்து, தனது இன்றியமையாமை குறித்த செருக்குடன் நிற்கும் இராணுவம் எத்தனை காலம் இந்த நிலையிலேயே தன்னை நிறுத்திக் கொள்ளும். ராஜபக்‌ஷேக்களுக்கு நெருக்கடிகள் முற்றும்போது இந்த இராணுவம் என்ன நிலை எடுக்கும்?

நன்றிகளுடன்…….
Ameer Ali, ‘The Sri Lankan Ethnic Morass and China – India Geopolitical Manoeuvres’, EPW, Aug 20, 2011.
A Correspondent, ‘Notes on the Military Presence in Sri Lanka’s Northern Province’, EPW, July 14, 2012.
Fonseka, Bhavani and Mirak Raheem, ‘Land in the Northern Province: Post War Politics, policy and Practices’, Centre for Policy Alternatives.
Rajasingham – Senanayake, Darini, ‘Is Post War Sri Lanka Following the Military Business Model?’, EPW, April 2, 2011.
Kumar David, ‘Modalities of an Emergent Dictator’, EPW, Feb 16, 2013.
Tisaranee Gunasekara, ‘Militarisation, Lanka Style’, EPW, Feb 16, 2013.
Shamala Kumar, ‘The Military Expansion into Education’, EPW, Feb 16, 2013.
Ruki, ‘Three Years after the War in Sri Lanka: To Celebrate or Mourn?’, Groundviews, May 19, 2012.




http://amarx.org/?p=864

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.