Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கோ - தங்கம், வைரம், இனப்படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காங்கோ - தங்கம், வைரம், இனப்படுகொலை

 
மீண்டும் ஆப்பிரிக்கா கண்டம். மீண்டும் ஒரு ஆப்பிரிக்க நாடு. மீண்டும் பசி, பஞ்சம், படுகொலை தேசம். உலகில் இனப்படுகொலை பழியான உயிர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் பாதிக்கு மேல் இறந்தவர்கள் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிட முடியும். அந்த அளவிற்கு வறுமை, வெறுமை அவர்களை ஆட்டிப்படைக்கிறது. ஒருவர் அழித்து இன்னொருவர் வாழ முடியும் என்ற நிலைமை. எல்லாம் ஐரோப்பிய காலனி நாடாக இருந்த பலன்.

ஆப்பிரிக்க நாடுகளில் “காங்கோ” மிகவும் வித்தியாசமானவை. மற்ற ஆப்பிரிக்க நாடுகள் போல் இல்லை. தங்கம், வைரம், செம்பு என்று எல்லா வளங்கள் கொண்ட நாடு. சூர்யா நடித்த “அயன்” படம் பார்த்தீர்களா ? ஒரு ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வைரத்தை கடத்தி இந்தியாவுக்கு வருவாரே ! சிறுவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டு இருப்பார்கள். திடீர் தூப்பாக்கி சுடு நடக்கும். இறந்த சடலங்களை சர்வ சாதாரணமாக அப்புரப்படுத்திவிட்டு மீண்டும் விளையாடுவார்கள். அது தான் ‘காங்கோ’. இன்னொரு பாவப்பட்ட ஆப்பிரிக்க தேசம்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கட்டபொம்மனுக்கும், மருது சகோதரர்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு. இருவருமே வெள்ளையர்களால் கொல்லப்பட்டவர்கள். அது தவிர இன்னொரு தொடர்பு உண்டு. அது “ஊமைத்துரை” என்பவரால் ஏற்பட்ட தொடர்பு.

கட்டபொம்மன் வெள்ளையர்கள் கைது செய்யும் போது அவரின் தம்பி ஊமைத்துரை தப்பித்து மருது பாண்டியர்களிடம் தஞ்சமடைந்தார். அதையே காரணமாக வைத்து வெள்ளையர்கள் மருது சகோதரர்கள் அரசு தலையீட்டு, பின்பு போராக மாறியது. காங்கோ இனப்படுகொலை அத்தியாயத்தில் கட்டபொம்மனுக்கும், மருது சகோதரர்களுக்கும் என்ன வேலை என்று தோன்றலாம். வெள்ளையர்கள் கட்டபொம்மன் மேல் தொடுத்த யுத்தத்தின் தொடர்ச்சி தான் மருது சகோதர்கள் மீது யுத்தம். அதேப் போல் ருவாண்டா இனப்படுகொலையின் தொடர்ச்சி தான் காங்கோவில் நடந்த இனப்படுகொலை !!!

1.jpg

 
 ஒரு லட்சம், இரண்டு லட்சம் அல்ல…. 54 லட்சம் மக்கள் மேல் இறந்திருக்கிறார்கள். முதலாம் காங்கோ யுத்தம், இரண்டாம் காங்கோ யுத்தம் வன்முறையை பற்ற வைக்க…. ருவாண்டா, சிம்பாவே, சூடான், அங்கோலா, நபீபியா, சந்த், லிப்யா போன்ற நாடுகள் இராணுவத்தையோ அல்லது பணத்தையோ காங்கோவில் முதலீட்டாக போட்டார்கள். ஆம் ! யுத்தம் வல்லரசுக்கு மட்டுமல்ல…. வளமே இல்லாதவர்களுக்கும் வியாபாரம் தான். இதை ‘ஆப்பிரிக்க உலக யுத்தம்’ என்று அழைத்தனர். பின்ன சும்மாவா !! தங்கம், வைரம் விளையும் நாடாயிற்றே !!!

டெமோகிரட்டிக் ரிப்பப்ளிக் ஆப் காங்கோ… சுருக்கமாக DRC என்று அழைக்கப்படும் காங்கோ ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் மத்திய நாடு. வடக்கில் சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, கிழக்கில் உகாண்டா, ருவாண்டா, புருண்டி, தன்ஸனியா நாடுகள், தெற்கில் சாம்பியா, அங்கோலா நாடுகள் இருக்கிறது. 90,000 சதுர மைல் மேற்பட்ட இடம். 6 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகை. அங்கு இருக்கும் தங்கம், வைரம், செம்பு போன்ற இயற்கை வளங்களில் மதிப்பு பல கோடி அமெரிக்க டாலர் இருக்கும். ஆனால், உலகில் ஏழை நாடு பட்டியலில் முதல் இடத்தில் 'காங்கோ' தான் இருக்கிறது. 

எல்லா ஆப்பிக்க நாடுகளைப் போல் காங்கோவும் ஐரோப்பிய நாடுகளுக்கு காலனியாக தான் இருந்தது, இந்த இடத்தில் பிரிட்டனுக்கு பதிலாக பெல்ஜியம் காங்கோ மீது ஆதிக்கம் செலுத்தியது. ஆறுபது ஆண்டுகள் காங்கோ பெல்ஜியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

சுருட்டுவதையெல்லாம் சுருட்டி விட்டு, ‘விடுதலை’ என்ற பெயரில் ஜூலை, 1960 ஆம் ஆண்டு பெல்ஜியம் காங்கோவை விட்டு வெளியேறியது. காங்கோ சுதந்திரமடைந்தது. காங்கோவின் முதல் பிரதமராக பாட்ரீஸ் லுமும்பா பொறுப்பெற்றார். இவர் இடது சாரி சிந்தனையுள்ளவர். ஆனால், குடியரசு தலைவராக இருந்த கசாவுபு ஒரு அமெரிக்க ஆதரவாளர். ஒரு சுதந்திர தேசத்தில் இரண்டு முரணான சிந்தனையுள்ள தலைவர்கள். குழப்பத்திற்கு பஞ்சமே இல்லை.

அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ, காங்கோ சோவியத் நட்பு நாடாக மாறிவிடக் கூடாது என்று நினைத்தது. லுமும்பாவின் கட்சி முக்கியப் பொருப்பில் இருக்கும் மொபூட்டு துணையோடு 1961ல் லுமும்பாவை படுகொலை செய்தனர். லுமும்பாவின் மரணத்திற்கு பிறகு, காங்கோ மேலும் குழப்பமான தேசமாக மாறியது. இதை, மொபூட்டு நன்றாக பயண்படுத்துக் கொண்டு தந்திரமாக 1965ல் காங்கோவின் தலைவரானார். அன்று முதல் காங்கோ சாபப் பூமியாக மாறியது. (அதற்கு முன் மட்டும் என்னவாம் !!!)

Mobutu.jpg

அடுத்த 32 ஆண்டுகள் காங்கோவில் பல கூத்துகள் நடந்தது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல். சர்வதிகாரம். கட்சி நடத்துவதற்கு தடை. ஏன் ? நாட்டின் பெயரையே காங்கோவில் இருந்து ‘ஸெயர்’ என்று மாற்றிவிட்டார். அமெரிக்க – சோவியத் பனிப்போர் அரசியல், மொபூட்டுவுக்கு சாதகமாக இருந்தது. அமெரிக்க நினைத்தப் போதெல்லாம் மொபூட்டுக்கு உதவியது. அரசுக்கு வர வேண்டிய பணத்தை எல்லாம், தன் பெயரிலும், தன் சொந்தக்காரர்கள் பெயரில் வெளிநாட்டு வங்கியில் போட்டு வைத்தார். ‘வளர்ச்சி’ என்ற பெயரில் உதவாத திட்டங்கள் போட்டு அதிலும் அரசு பணத்தை வீணாக்கினார். ஒரு கட்டத்தில், உலக வங்கிக் கூட காங்கோவுக்கு கடன் தர மறுத்தது.

இந்நிலையில், சோவியத் நாடுகள் உடைந்து தனித்தனி நாடுகளாக மாற, உலகளவில் அமெரிக்க வல்லரசு கை ஓங்கத் தொடங்கியது. காங்கோவின் ஆதரவும் அவர்களுக்கு தேவையில்லாமல் போனது. இது வரை அமெரிக்காவின் ஆதரவோடு செயல்பட்ட மொபூட்டு அரசு, அவர்களின் ஆதரவில்லாமல் ஒன்றும் செய்ய முடியவில்லை. பல தலைவர்கள், போட்டியாளர்கள் வளர்ச்சியால், மொபூட்டு அதிபர் பதவியில் இருந்து விலகினார். அந்த சமயத்தில் முதல் காங்கோ யுத்தம் தொடங்கியிருந்ததால், தன் குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். (மொபூட்டு தன் சர்வதிகார ஆட்சியில் அரசிடம் இருந்து அவர் கொள்ளையடித்தது ஐந்து பில்லியன் டாலர் மேல் !)

மொபூட்டு அத்தியாயம் முடிந்தாலும், காங்கோவுக்கு சாப விமோச்சனம் கிடைக்கவில்லை. !!

 

ருவாண்டாவில் இனப்படுகொலை அத்தியாயத்துக்கு கொஞ்சம் பின் நோக்கி செல்வோம். அதில் ருவாண்டாவில் இனப்படுகொலை முடிந்து, டூட்சியின் ஆர்.பி.எஃப் ஆட்சி அமர அங்கு வாழ்ந்த 20 லட்ச ஹூட்டு இன மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள காங்கோவுக்கு அகதிகளாக வந்தனர்.

 எதிரிகள் நாட்டை விட்டு விரட்டி அடித்தாலும், எல்லைப்பகுதியில் இருப்பது அவர்களுக்கு ஆபத்து என்று ருவாண்டா இராணுவம் நினைத்தது. ஹூட்டு மக்களை ஆர்.பி.எஃப் இராணுவம் அவ்வப் போது காங்கோ எல்லையில் இருக்கும் அகதிகளை தாக்கியது. மொபுடு ஊழல் ஆட்சி, மற்ற ஆப்பிரிக்க நாடுகளின் தலையீடு எல்லாம் சேர்த்து முதல் காங்கோ யுத்தம் (நவம்பர் 1996 – மே 1997) தொடங்கியது.

முதல் யுத்த முடிவில் ஊழல் மொபுடு தூக்கி ஏறியப்பட, லெப்டணட் கபிலா என்பவர் காங்கோ ஆட்சிப் பொருப்பேற்றுக் கொண்டார். ஆனால், ஆட்சிக்கு வந்து ஒரு வருட முடியும் முன்பே இரண்டாவது காங்கோ யுத்தம் தொடங்கியது. (2 ஆகஸ்ட் 1998 – 18 ஜூலை 2003).

congo-crowds.jpg

  

 2003ல் சட்டப்பூர்வமாக இரண்டாம் காங்கோ யுத்தம் முடிந்ததாக அறிவித்தாலும், காங்கோவின் கிழக்கு பகுதியாக கிவு பகுதியில் அமைதியில்லாமல் யுத்தம் நடந்துக் கொண்டே இருந்தது. அதற்கு காரணம் Democratic Forces for the Liberation of Rwanda (DFLR). காங்கோவில் இருந்து ருவாண்டா எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தும் தீவிரவாத அமைப்பு.

காங்கோவில் இருந்துக் கொண்டு DFLR ஏன் ருவாண்டாவை தாக்க வேண்டும் என்று குழம்ப வேண்டாம். DFLR ஹூட்டு புரட்சிப் போராளி அமைப்பு. ருவாண்டாவில் இருப்பது டூட்சியினர் ஆட்சி. ருவாண்டாவில் இருந்து அகதிகளாக வந்து ஹூட்டு இனத்தினர், மீண்டும் ருவாண்டாவில் ஹூட்டு ஆட்சி அமைக்கவே போராடி வருகிறார்கள். ஆரம்பத்தில் காங்கோ அரசு DFLR ஆதரவாக இருந்தாலும், லெப்ட்ரென்ட் குன்டாவின் தூண்டுதலால் காங்கோ ருவாண்டாவுடன் கைக் கோர்த்தது. இரண்டு நாடுகளும் சேர்ந்து DFLR ஒழிக்க நினைத்தும், DFLR போராட்டத்தை ஒழிக்க முடியவில்லை. ஐ.நாவின் அமைதிப்படை காங்கோ இராணுவத்திற்கு உதவியும் அவர்களின் போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை.

அதுவும் கிழக்கு பகுதியில் பல இயற்கை வளங்கள் இருப்பதால் அதை வைத்தே பல சண்டைகள் DFLR வுக்கும், காங்கோ இராணுவத்திற்கும் நடந்து வருகிறது.

 நல்ல இயற்கை வளம் உள்ள நாட்டில் போர் என்றால் ஐ.நாவுக்கும், அமெரிக்காவுக்கும் அந்த அன்பு தானாய் வந்துவிடும். நல்ல சுப முகூர்த்த தினத்தில் ஐ.நா அமைதிப்படை காங்கோவில் கூடாரம் அமைத்து அமைதி ஏற்படுத்த வந்தனர். காங்கோவில் ஐ.நாவின் அமைதிப்படையாக பதிமூன்று வருடங்களாக காங்கோவில் இருக்கிறார்கள். (ஐ.நா படை அதிக நாட்கள் தங்கியிருக்கும் நாடு ‘காங்கோ’ என்பது குறிப்பிட தக்கது.)

இன்று வரை அமைதிக்கான ஒரு அறிக்குறிக்கூட அவர்களால் தேட முடியவில்லை. அதே சமயம் அமைதிப்படை நல்ல நாள், நேரம் பார்த்து வந்திருப்பது போல், பதிமூன்று வருடங்களாக அமைதிப்படையின் கூடாரத்தை யாராலும் அசைக்க முடியவில்லை.

பல புரட்சி பயணம் மேற்கொண்ட சே குவேரா, மொபுடுவுக்கு எதிராக காங்கோவில் புரட்சி ஏற்படுத்த செய்த பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. "போராடும் குணமில்லாதவர்களை வைத்து அந்த நாட்டில் புரட்சி ஏற்படுத்த முடியாது" என்று தன் தோல்வியை ஏற்றுக் கொண்டு போலிவியாவுக்கு பயணம் செய்தார். (அதுவே அவரது இறுதி பயணமாக இருந்தது என்பது வேறு கதை.)

DRC_art.jpg

 32 வருட மொபுடுவின் ஊழல் ஆட்சி, இராணுவ சர்வதிகாரம், கொள்ளையடிக்கும் போராட்ட குழுக்கள், முதல் காங்கோ யுத்தம், இரண்டாம் காங்கோ யுத்தம், தங்கள் நாட்டு வளங்களை யார் கொள்ளையடிப்பதில் போட்டி, பல வருடங்களாக அங்கையே கூடாரம் போட்டுக் கொண்டு அமைதி ஏற்படுத்தாமல் இருக்கும் அமைதிப்படை.... என்று காங்கோவின் ஏழ்மை நிலைக்கு காரணம் என்று பட்டியல் போட்டு சொல்லலாம். உலகில் சபிக்கப்பட்ட கண்டம் ஆப்பிரிக்க என்றால், சபிக்கப்பட்ட ஆப்பிரிக்க தேசங்களில் மிகவும் மோசமாக சபிக்கப்பட்ட நாடு ‘காங்கோ’ தான். 

காங்கோவில் இடைவிடாமல் தாக்குதலும், கொள்ளையும் எதோ ஒரு உருவத்தில் நடந்துக் கொண்டே இருந்தது. இன்றும் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது. தொடர்ந்தாப்போல் இரண்டு வருடம் அந்த நாடு அமைதியாக இருந்ததில்லை. அகதிகளாக எல்லையோர பகுதிகளை கடந்து பக்கத்து நாடுகளுக்கு சென்றார்கள்.

பிரச்சனைகளுக்கு நடுவில் வாழ்வதால் பசி, பஞ்சம் அங்கு அதிகமானது. விபச்சாரம், கொள்ளை தொழிலானது. முன்னேற்றம் அவர்களுக்கு கேள்விக்குறியானது.

உலக பணக்கார நாடுகளில் பட்டியலில் ஒவ்வொரு நாடின் பெயர் வருடம் வருடம் மாறாலம். ஆனால், இன்று வரை எல்லோர் பட்டியலிலும் கடைசி இடத்தில் இருப்பது 'காங்கோ' மட்டும் தான்.

References

http://www.drcga.org/

http://worldwithoutgenocide.org/genocides-and-conflicts/congo

http://www.genocidewatch.org/drofcongo.html

http://en.wikipedia.org/wiki/Second_Congo_War

http://guhankatturai.blogspot.ca/2013/01/2_17.html

  • கருத்துக்கள உறவுகள்

காலனியம் நடத்திய மூன்றாம் உலகப்போர்

 

நீங்கள் பின்வரும் மின்னணு சாதனங்களில் ஏதேனும் ஒன்றையாவது உபயோகிக்கிறீர்களா? செல்ஃபோன், டிவிடி ப்ளேயர், வீடியோ கேம் சாதனம், கம்ப்யூட்டர். ‘ஆம்’ என்றால் உங்களுக்கும் காங்கோவில் பல லட்சம் மக்கள் கொல்லப்பட்ட ஒரு உள்நாட்டுக் கலவரத்துக்கும் அணு அளவேனும் தொடர்பிருக்கும் வாய்ப்பு உண்டு. என்ன திகைத்துவிட்டீர்கள்? இந்த எல்லா மின்னணு சாதனங்களிலுமே கோல்டான் (Columbite-Tantalite =coltan) என்றொரு முக்கியமான கனிமப்பொருள் உபயோகிக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் இந்த கோல்டான் கனிமப்பொருள் கிடைத்தாலும், காங்கோவிலிருந்து இது உள்நாட்டு ருவாண்டா தீவிரவாதிகளால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தக் கனிமப்பொருட்களை சுரங்கத்திலிருந்து சேகரிப்பதற்காகப் பல போர்க்கைதிகளையும், வயது முதிர்ந்தவர்களையும், பெண்களையும், ஏன் குழந்தைகளையும் கூடத் துப்பாக்கிமுனையில் மிரட்டி வேலை வாங்கிக்கொண்டிருக்கிறது இந்தத் தீவிரவாதக் கும்பல். இவற்றில் உகாண்டா, புருண்டி ஆகிய அண்டை நாட்டு கொரில்லாக் குழுக்களும் அடக்கம்.

பல பிரபலமான பன்னாட்டு மின்னணு நிறுவனங்களுக்கு இந்த காங்கோலியன் சுரங்கங்களிலிருந்து கோல்டான் சப்ளை செய்யப்பட்டிருக்கிறது. இதைக் குறித்து ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கையிலிருந்து ஒரு சிறு குறிப்பை மட்டும் படித்தால் கூட நிலைமையின் தீவிரம் எளிதில் புரியும்.

“1999-2000ஆம் வருடங்களில் உலகெங்கும் கோல்டானின் தேவை அதிகரித்து, சப்ளை குறைந்தபோது கோல்டானின் விலை மிக அதிகமாகி, ஒரு கிலோவுக்கு 200 டாலர் என்றிருந்தது. ருவாண்டா ராணுவம் ஒரு மாதத்துக்கு நூறு டன்கள் கோல்டானை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. இப்படி கோல்டான் விற்றது மூலமாக மட்டுமே மாதம் ஒன்றுக்கு 20 மில்லியன் டாலர்கள் ருவாண்டா ராணுவத்துக்கு வருமானமாகக் கிடைத்து வந்தது. ருவாண்டா ராணுவம் காங்கோலியக் குடியரசில் நிலைத்து விடப் பேருதவியாக இருந்தது இந்தக் கோல்டான் என்ற கனிமப்பொருள். கோல்டானைப் பிரித்தெடுக்கும் நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் ருவாண்டா ராணுவம் பாதுகாப்பு வழங்கியது. அந்த நிறுவனங்கள் ராணுவத்தோடுத் தன் வருமானத்தைப் பங்கு போட்டுக் கொண்டன.”

ஒரு நாட்டின் ராணுவம் தன் நாட்டின் கனிமப்பொருள் ஏற்றுமதிக்குப் பாதுகாப்பாக இருந்து அதன் மூலம் வருவாய் ஈட்டுவதில் என்ன தவறு இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா? ஒரே ஒரு தவறுதான் உள்ளது. ருவாண்டா ராணுவம் தன் நாட்டில் பாதுகாப்பு தரவில்லை. பக்கத்து நாடான காங்கோவுக்குள் நுழைந்து அங்கிருந்த சுரங்கங்களைக் கைப்பற்றி கோல்டானை ஏற்றுமதி செய்து சம்பாதித்தது. ராணுவம் என்று குறிப்பிடப்பட்டாலும் ருவாண்டா ராணுவம் விதிகளுக்குக் கட்டுப்பட்ட ஒரு அமைப்பெல்லாம் இல்லை; உண்மையில் அது ஒரு தீவிரவாதக் கும்பல். அது சரி, ருவாண்டா ராணுவம் காங்கோவுக்குள் எப்படி நுழைந்தது? அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் ஹூட்டு, டூட்சி பிரிவினரைப் பற்றியும், அவர்களுக்கிடையே இருக்கும் நெடுங்காலப் பிரச்சினை குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.

ஹூட்டு, டூட்சி – இவை ஆப்பிரிக்கப் பழங்குடி இனப்பிரிவுகள். ஆப்பிரிக்காவில் ஹூட்டு இனத்தினர் பெரும்பான்மையினர். டூட்சி இனமக்கள் சிறுபான்மையினர். நெடுங்காலமாக அருகருகே வசித்த மக்களே. ஆனால் டூட்ஸி மக்கள் எதியோப்பிய குஷ்டிப் பேரரசில், யூதத்தின் வாய்மொழி மரபில் இருந்த மக்கள். 19ஆம் நூற்றாண்டின் பெரும் கதோலிக்க மத மாற்ற முயற்சிகளுக்கு இடம் கொடுக்க மறுத்ததால், ஜெர்மன் படைகளால் தோற்கடிக்கப்பட்டு, அண்மையிலிருந்த, கிருஸ்தவத்தை ஏற்றுக் கொண்ட ஹூட்டு இன மக்களிடம் தம் நிலங்களை இழந்து அகதிகளாகப் பல நாடுகளுக்குப் போனார்கள் என்று ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. [i]  ஆனால் காலனியாகப் பல்லாண்டுகள் இருந்த ஒரு நாட்டின் வரலாற்றை முறையாகத் தெரிந்து கொள்வது அத்தனை எளிதான விஷயமில்லை. காலனி அரசுகள் தங்கள் வசதிக்கேற்ப வரலாற்றைத் திருத்தி எழுதுவது சகஜம். (இந்தக் குழப்பங்களைப் பற்றி ஒரு புறக் கதையாகச் சொல்லும் கட்டுரையை சான்ஃப்ரான்சிஸ்கோவிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை எழுதுவதை இங்கே படிக்கலாம்.[ii] ) 1994க்கு முன்  ருவாண்டாவில் ஹுட்டு இனப்போராளிகள் டூட்சிக்கு எதிராக நடத்திய இனப்போராட்டத்தில் பத்து லட்சம் மக்கள் கொல்லப் பட்டனர்.இதில் எட்டு லட்சம் டூட்சி இனத்தை சேர்ந்தவர்கள். அப்போது ஹூட்டு இனத்தவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தனர். பிறகு டூட்சி இனத்தவர்கள் உகாண்டாவுடன் சேர்ந்து ஆட்சியை பிடித்தார்கள்.

tutsi-men-110331-sw.jpg

ருவாண்டாவின் அதிபர் பெளல் ககாமே  (Paul Kagame) டூட்சி இனத்தை சேர்ந்தவர்.  ககாமெவின் டூட்சி படையும் காங்கோவில் உள்ள சிறு சிறு போராளிக் குழுக்களும் இணைந்து, காங்கோ அரசுடன் ஒரு மாபெரும் யுத்தத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். இதற்குக்  ககாமே கூறும் காரணம்: “ருவாண்டாவிற்கு ஹூட்டு போர்க் குழுக்களால் ஆபத்து, ஹூட்டு இனத் தீவிரவாதிகள் 1994-இல் ருவாண்டாவில் இனப் படுகொலைகளை நடத்தினார்கள்”. இன்று வரை அமெரிக்காவும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் ருவாண்டாவிற்குச் சாதகமாகத்தான் நடந்து வருகிறார்கள், காரணம் ருவாண்டா ராணுவத்துக்கு உதவி செய்வதன் மூலம் காங்கோவில் உள்ள கனிமவளத்தை அவர்கள்  அதிக அளவில் குறைந்த அட்க்க விலைக்குப் பெறலாம். நிலைத்த அரசின் வரிகள், சூழல் கட்டுப்பாடுகள், சுரங்கங்க்ளில் தொழிலாளர் பாதுகாப்புச் செலவு போன்ற பிடுங்கல்கள் இராதே!

போரின் மூலகாரணமாகச் சொல்லப்படும் ‘ஹூட்டு தீவிரவாதிகளால் ருவாண்டாவிற்கு அச்சுறுத்தல்’ என்பது விவாதத்திற்குரியதே. டூட்ஸிக்கள் பல நாடுகளிலும் சிறுபான்மையினராக வாழ்கிறார்கள்.  ஹூட்டுக்கள் இந்த நாடுகளில் பெரும்பான்மையினர். இந்த இரு குழுக்களிடையே பெரும் உறவுச் சிக்கல் ஏற்பட ஒரு காரணம் காலனிய ஆட்சி.  காலனிய ஆட்சித் தந்திரங்களில் ஒரு முக்கிய உத்தி என்னவென்றால், காலனியாக்கப்பட்ட  நாட்டில் உள்ள பல சமூகக் குழுக்களில் ஒரு குழுவை அதிகாரத்தில் அமர்த்தி இதர சமூகக் குழுக்களை அடக்குவது.  இந்த உத்தியில் ஒரே நாட்டினர் தமக்குள் போரிடும் அல்லது வெறுப்பு கொள்ளும் பல குழுக்களாக உதிரி நெல்லிக்காய்கள் போல ஆகி விடுவார்கள். பின் அவர்கள் ஒன்று கூடி காலனியத்தை எதிர்க்கும் வாய்ப்பு குறையும்.

சிறுபான்மையினரான டூட்ஸிக்கள் படிப்பறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் என்பதாலும், ஹூட்டுக்களோடு அவர்கள் பிணக்கு கொள்ள எளிய காரணங்கள் இருந்ததாலும், பெல்ஜிய அரசு இவர்களைத் தன் காலனிய நிர்வாகத்தில் அமர்த்தி அவர்கள் மூலம் ருவாண்டாவில் ஹுட்டு மக்களைப் பல்லாண்டு காலமாக அடக்கி ஆண்டது. காலனிய ஆட்சி முடிந்தவுடன்,  இந்த அடக்கு முறைக் காலத்திற்கான பழி பெல்ஜியத்து யூரோப்பியரின் மீது விழுந்ததை விடப் பலமடங்கு கூடுதலாக பெல்ஜியரின் வெளி முகமாகத் தெரிய வந்த டூட்ஸிக்களின் மேல்தான் விழுந்தது.

பின்னாளில் டூட்ஸியினர் ருவாண்ட தேசியத்தைப் பேசத் துவங்கியதும், பெல்ஜியக் காலனி அரசு அவர்களைப் பதவியில் இருந்து கீழிறக்கி, ஹூட்டுக்களிடம் அதிகாரத்தைக் கொடுத்து ஏராளமான படுகொலைகளுக்கு வித்திட்டது. இதைப் படிக்கும்போதே இந்தியாவில் இந்து- முஸ்லிம், ‘ஆரிய/ திராவிட, வட/தென் இந்தியப் பிரிவினைகளுக்கான் வித்து எங்கிருந்து வந்தது என்று வாசகர்களுக்குப் புரியலாம்.

இதே போன்ற பிரிவினைவாத அரசியலை இலங்கையிலும், ஆஃப்கனிஸ்தான், பாலஸ்தைன், தென்னாப்பிரிக்கா என்று உலகில் பல முன்னாள் காலனிகளில் காணலாம்.  தாம் வளம் பெறப் பிறரை அழித்துப் போவது யுரோப்பிய காலனியம்; அதன் ஏகாதிபத்திய ஆசை.  காலனி நாடுகள் என்றும் தம் காலடியிலேயே இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய அடங்காத ஆசை.

காலனிய ஆட்சியால்தான் உலகின் பல பகுதி மக்கள் ‘நாகரிக’ உலகுக்கு இட்டு வரப்பட்டனர், நவீன அறிவியல், பொறியியல், ரயில், பஸ், விமானம் இவையெல்லாம் கிடைத்தன என்று இன்றும் பல மேற்குலகின் ‘அறிவுஜீவிகள்’  வரலாற்று நூல்களை எழுதி வருகின்றனர்.  அவர்கள் கச்சேரிக்கு ஜால்ரா தட்ட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் பல ‘அறிவுஜீவிகள்’ இருக்கிறார்கள். அவர்களில் பாதிப்பேர் விலைக்கு வாங்கப்பட்டவர்கள்; மீதிப்பேர் அடிமுட்டாள்கள்.

யூரோப்பியர்களுடைய பல நூற்றாண்டு படையெடுப்புகள், வன்முறை, கொலைகள், கொள்ளை, பொருளாதாரச் சுரண்டல், அடிமை உழைப்பு, இனவெறி போன்ற கொடுமைகளை எல்லாம் மறக்க, மறுக்க  ‘உலகுக்கே நாங்கள்தான் நாகரிகம் சொல்லிக் கொடுத்தோம்’ என்ற நியாயப்படுத்தல் அங்கு தொடர்ந்து ஊறி வெளியே பரப்பப்படுகிறது.  உலக மனித உரிமைக் காவலர் என்று தமக்குத் தாமே பட்டம் சூட்டிக் கொண்டு இன்றும் அவர்கள் முன்னாள் காலனிகளில் பலவகைப் பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

 

paul_kagame_500px-300x295.jpg

பால் ககாமே

 

முன்பே சொன்னபடி, ருவாண்டாவிலும், காங்கோவிலும்  டூட்ஸிகளுக்கும் ஹூட்டுக்களுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரில் பத்து லட்சம் மக்கள் மடிந்தனர். அந்தப் போரில் கிட்டத்தட்ட எட்டு லட்சம் டூட்ஸி இனத்தவர் கொல்லப்பட்டனர்.   1994 இல் ககாமேவின் ருவாண்டா விடுதலை முன்னணி உகண்டாவிலிருந்து முன்னேறி ருவாண்டாவைக் கைப்பற்றியது.  இதற்கு முன் இருபது லட்சம் ஹூட்டு இன மக்கள் கிழக்குக் காங்கோவில் இருந்த ஐக்கிய நாட்டு அகதிகள் முகாமிற்கு ஓடினார்கள். அங்கேயும் ருவாண்டாவிலிருந்து குண்டுகள் வீசி ஹூட்டுக்களை ஓட ஓட விரட்டியது ககாமேவின் படை. ககாமேவின் வாழ்க்கை அவர் அகதியாகத் துவங்கிய சிறுபிள்ளைப் பிராயத்தில் இருந்தே வன்முறைச் சூழலிலேயே இருந்திருக்கிறது.  வாழ்நாள் பூராவுமே இவர் ராணுவங்களோடு இருந்திருக்கிறார் என்கிறது பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் (BBC).

இவருடைய ரத்தம் தோய்ந்த வரலாற்றையும் இவர் மீது சர்வ தேச நீதி மன்றங்கள் அளித்துள்ள கண்டனத் தீர்ப்புகளையும் பற்றிப் பல செய்தி அறிக்கைகள் நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன.  விகிபீடியாவில் இவரைப் பற்றி நிறைய குறை சொல்லும் பக்கத்தைக் காணலாம்.  இதற்கு எதிராக, ககாமே எப்படி இனவெறியை ருவாண்டாவில் இருந்து களை எடுத்து அழிக்க முயலும் தேசியவாதி என்று சொல்லும் பக்கங்களை / விடியோக்களை இங்கு  காணலாம்.[iii] நமக்கு இன்று புரிவது ககாமே போகுமிடமெல்லாம் சர்ச்சை தொடரும் என்பதே. அவருடைய பேட்டிகளைப் பார்த்தால் அவர் ஒரு படித்த, அமைதியாகச் சிந்திக்கும் ஒரு அதிபர் என்று தோன்றும். இதில் குறிப்பாக பிபிசியின் பேட்டியைப் பார்த்தால் மேற்கு எப்படித் தொடர்ந்து ஒரு புனைகதையை ஆப்பிரிக்கா மீதும் ஆசியா மீதும் சுமத்த முயல்கிறது என்பதும் புரியும்.

இவருக்கு சீனாவும் இன்னும் உதவுகிறது. ருவாண்டாவின் அயல்நாட்டு உறவுக்கான அலுவலகத்தையே சீனாதான் கட்டிக் கொடுத்திருக்கிறது.  இந்தியா ஆப்பிரிக்காவைக் கவனிக்காமல் விட்டு, அதைச் சீனாவுக்குத் தாரை வார்த்து விட்டது என்று தோன்றுகிறது.  உலகின் பெருவாரி உலோகத் தாதுவகைகள், கனிமங்களெல்லாம் ஆப்பிரிக்காவில்தான் இருக்கின்றன என்று யோசித்தால் தொழில் துறையில் பெரு முன்னேற்றம் காண விரும்பும் இந்தியாவும், இந்தியத் தொழில்துறையும், இந்திய மத்திய வர்க்கமும் ஏன் இப்படி உலகெங்கும் மெத்தனமாக இருக்கின்றன என்றுதான் கேட்கத் தோன்றும். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நம் அரசு ஒரே மாதிரியான செயலற்ற அறிவு மங்கிய தன்மையைத்தான் தொடர்ந்து காட்டுகிறது.

ஹூட்டு இன மக்கள் அகதிகளாகக் காங்கோவில் கிழக்கு பகுதியில் கிவு பிராந்தியத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதி முகாம்களுக்குச் சென்றார்கள். இந்த கிவு மாநிலத்தில்தான் ஏராளமான கனிமங்கள் கிடைக்கின்றன. இங்கு ருவாண்டாவின் டூட்ஸி இனத்தவர்கள் கனிமச் சுரங்கங்களுக்கு அதிபர்களாகவும் நில உடமையாளர்களாகவும் இருந்தார்கள்.

மொபுட்டு ஹூட்டு இனப் போராளிகளுக்கு அடைக்கலம் தருவதாக கூறி, ககாமேவின் படை, லாஹொன் கபிலாவுடன் இணைந்து ஆட்சியைக் கைப் பற்றியது. இதற்கு அமெரிக்காவும் உதவி செய்தது. இதற்குப் பின் கபிலா ககாமேவின் படையை வெளியேறச் சொன்னபின் பொங்கி எழுந்ததுதான் ஆப்பிரிக்காவின் மஹா யுத்தம். இந்த யுத்தத்தில் மிகவும் பயனடைந்தது ருவாண்டா மூலமாக முன்னேறிய நாடுகள்.

காங்கோவின் ஏராளமான கனிம வளத்தைக் ககாமேவின் படை சூறையாடியது. ஆப்பிரிக்காவின் பெரும் போர் முடிவுக்கு வரும் வேளையில் ககாமேவின் ஆதரவு, லுரெட் நகுண்டு என்னும் டூட்ஸி தீவிரவாதப் படையை காங்கோவின் ஹூட்டுக்கள் அகதிகளாக வசிக்கும்  பகுதியில் இறக்கிப் படுபாதகச் செயல்களை கட்டவிழ்த்துவிட்டது.

காங்கோவின் இயற்கை வளம் யுத்தத்தைக் கொழுந்து விட்டு எரிய வைத்தது. கோல்டான், தங்கம், தகரம், வைரம் என ஏகப்பட்டதை ககாமே படையினர் காங்கோவிலிருந்து  சூறையாடினர். இதனால் ருவாண்டாவிற்கு ஏதேனும் லாபமா என்றால் அதுதான் இல்லை, அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் அப்படியேதான் இருக்கிறது. அவர்கள் கையில் துப்பாக்கிகளைக் கொடுத்து விட்டுத் தங்களுக்கு வேண்டியதை மேலை நாடுகள் எடுத்து கொள்கின்றன.

jn_congo_01.jpg

குறைந்தபட்சம் நாற்பதாயிரம் பெண்கள் இப்போரில் பல ‘போராளிக்குழுக்களால்’ பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள். (பல அகதி முகாம்களில் சிகிச்சைக்காக வந்த பெண்களின் எண்ணிக்கை மட்டும்தான் இது. அதிகாரபூர்வமான, முறையான ஆய்வு இந்த எண்ணிக்கையைப் பன்மடங்கு உயர்த்தலாம்). கூட்டம் கூட்டமாக நடந்த வன்புணர்வுகள் பெருமளவில் எயிட்ஸ் நோயையும் விட்டுச் சென்றிருக்கின்றன. இப்போரின்போது பல பிக்மிக்கள் விரட்டி, விரட்டி வேட்டையாடப்பட்டுக் கொன்று தின்னப்பட்டார்கள். பிக்மிக்களைத் தின்றால் பல மாயசக்திகள் கிடைக்கும் என்ற வதந்தி இக்கொலைகளைப் பெருமளவு அதிகரித்தது.

2003-இல் ஆப்பிரிக்கப் பெரும் யுத்தத்தின் சீற்றம் முடிவுக்கு வந்துவிட்டாலும் அதன் தாக்கம் இன்றுவரை இருக்கிறது. இப்போர் ஏற்படுத்திய பஞ்சம், நோய் இவற்றால் இப்போதும் மாதம் நாற்பத்தைந்தாயிரம் மக்கள் இறப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

தண்ணீருக்காக, கனிமங்களுக்காக, பல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்காக, பல்வேறு சர்வதேச வியாபார நிறுவனங்களின் கொழிப்புக்காக 1998  முதல் நடந்த  இந்த யுத்தத்தில் 54 லட்சம் மக்கள் கொல்லப்படிருக்கிறார்கள். பெரும்பாலான மக்கள்( 80%)  யுத்த காலத் தாக்குதல்களை விட மலேரியா, நிமோனியா, போஷாக்கின்மை போன்ற எளிதே தவிர்த்திருக்கக் கூடிய, சரி செய்திருக்கக் கூடிய காரணங்களால் இறந்தனர். சாதாரணச் சூழலில் நிச்சயம் சாவு எண்ணிக்கை குறைந்திருக்கும். இறந்ததில் பாதிக்குப் பாதி குழந்தைகள். இன்னமும் 15 லட்சம் பேர் அகதிகளாய் இருக்கிறார்கள்.

இந்த அதிர்ச்சி எண்ணிக்கை ஊடகங்களும், உலக நாடுகளும் காங்கோ பக்கம் திரும்பப் போதுமானது. ஆனால் மேலை நாடுகள் காங்கோவின் வளங்களை அனுபவிப்பது என்ற எண்ணத்தால்,  கண்மூடி, வாய் பொத்திக், காதடைத்து நிற்கின்றன. ஆசிய நாடுகளும் ஒன்றும் செய்து கிழிக்கவில்லை.  சீனா சர்வாதிகாரிகளுக்கும், அடக்குமுறை ராணுவங்களுககும் உதவி, கனிமங்களைக் கையகப் படுத்த முயல்கிறது.  இந்தியா போன்ற சில நாடுகள் ஐ.நா அமைப்பின் அமைதிப் படைக்குத் தம் ராணுவ வீரர்களைக் கடனாகக் கொடுத்து உதவுவதோடு நிறுத்திக் கொண்டுள்ளன. இத்தனை காலம் கழித்து லாயத்தை விட்டுக் குதிரையெல்லாம் ஓடிவிட்ட பின்னர் இந்தியா கதவைப் பூட்டலாமா என்று யோசிக்கிறது.  அதாவது ஆகஸ்டு, 2008ல் நடந்த ஒரு ஆப்பிரிக்க சம்மேளனத்தில் இந்தியப் பிரதமர், மன்மோஹன் சிங், 5 பிலியன் டாலர் உதவி அளிக்க முன்வந்தார்.  இதுவும் கடனாகவும், இதர வகை உதவியாகவும்தான்.  ஒப்பீட்டில் சீனாவுடைய ‘உதவி’  பலமடங்கு அதிகம் என்று இந்திய அரசே ஒத்துக் கொள்வதாக கார்டியன் பத்திரிகை எழுதுகிறது.

2008 டிசம்பரில் ஐக்கிய நாடுகள் அமைப்பும் நகுண்டு-ககாமேவின் உறவைப்   பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையினால் சுவீடனும், நெதர்லாந்தும் ருவாண்டாவிற்கு அளித்து வந்த உதவியை நிறுத்திக் கொண்டன. அமெரிக்காவும் இங்கிலாந்தும் ககாமேவை எச்சரித்தனர். இதைச் சமாளிக்க வீறு கொண்டு எழுந்தார் ககாமே.  கிழக்கு காங்கோவில் ருவாண்டாவிற்கு எதிராக ருவாண்டா விடுதலை அமைப்பு என்ற ஹூட்டு போராளிக் குழு ஒன்று சில பல காலமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது.

2009 ஜனவரியில் ஜோசப் கபிலாவும், பௌல் ககாமேவும் ஒரு ரகசிய ஒப்பந்தம்  போட்டுக் கொண்டனர். அதன்படி ருவாண்டா விடுதலை அமைப்பை காங்கோலிய படை ஒடுக்க வேண்டும். லுரெட் நகுண்டுவை ருவாண்டா சமாளிக்கும் என்று. ருவாண்டா அரசுப் படை காங்கோவில் நுகுண்டாவை வீட்டுக்காவலில் வைத்தது (தாலிபான்களை பாக்கிஸ்தான் எதிர்ப்பது போல). காங்கோலிய அரசுப்படை ருவாண்டா விடுதலை அமைப்பின் போராளிகள் 150 பேரை தீர்த்துவிட்டோம், 1000 பேரை வளைத்துவிட்டோம் என்று கூறினாலும், ஒரு ஆட்டுக் குட்டியைக் கூட அவர்கள் கொல்லவில்லை என்கின்றனர் ஐக்கிய நாட்டு அதிகாரிகள். ருவாண்டா படை காங்கோவில்  இருந்த போது கொஞ்சம் பின்வாங்கிய ருவாண்டா விடுதலை அமைப்புப் போராளிகள், ருவாண்டா படைகள் திரும்பிச் சென்ற பின் கிழக்குப் பகுதியை மீண்டும் ஆக்கிரமித்துள்ளார்கள். இதனால் காங்கோலிய மக்கள் மறுபடியும் அல்லாடுகிறார்கள். மக்களோடு சேர்ந்து ஐக்கிய நாட்டுப் படையும் போராளிகளை ஒடுக்க அல்லாடுகிறார்கள். இதில் முரணானது என்னவென்றால், ருவாண்டாவை காங்கோலிய மக்கள் எவ்வளவு வெறுத்தார்களோ இப்போது அவர்கள் இருந்தால் நல்லது, அமைதி கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

இப்போதும் காங்கோவில் அமைதி ஒரு கண்ணாடி போலிருக்கிறது  எந்நேரமும் சுக்கல் சுக்கலாக உடையலாம்.

பொதுவாகவே காலனியம் வந்து போன நிலப்பரப்புகளில் மனிதர்கள் பல குரோதக் குழுக்களாக உடைந்து போய், தம்மிடையே பெரும் போர்களில் இறங்கித் தம்மைத் தாமே அழித்துக் கொள்வார்கள் என்பது காங்கோ போரிலிருந்தும், டூட்ஸி-ஹூட்டு மோதல்களிலிருந்தும் நாம் பெறக்கூடிய எளிமையான பாடம்.  காலனியம் வெளித்தோற்றத்தில் அந்தப் பகுதிகளில் இருந்து ஒழிந்தாலும், காலனிய விஷம் விட்டுச் சென்ற இனப் பிரிவினைவாதங்கள் சுலபத்தில் மடிவதில்லை.  முன்னாள் காலனிகளான, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் எல்லாம் இனப் பிளவுகளால் உந்தப்படும் போர்கள் கடந்த ஐம்பதாண்டுகளில் எத்தனை மிலியன் மக்களைக் கொன்றிருக்கின்றன என்பதையும், இந்தப் போர்களை நடத்த ஆயுதங்களை விற்றவர்கள் யாரென்பதையும் பார்த்தால்,  காலனியம் புறத்தில் போனாலும் அகத்தில் வீற்றிருந்து முன்னாள் காலனிய அடிமைகளான நம்மை நின்று கொல்கிறது என்பது புரியும்.

குறிப்புகள்:

 http://www.kulanu.org/tutsi/jews-africa.html

http://rabbibrant.com/2008/06/18/on-tutsis-jews-and-palestinians/

[ii] http://www.sfbayview.com/2009/critic-of-murderous-kagame-regime-in-rwanda-killed-in-crash-of-continental-flight-3407/

[iii]  http://www.orwelltoday.com/rwandakagame.shtml

http://www.youtube.com/watch?v=wc5a6P6VDGc&feature=related

http://solvanam.com/?p=3365

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.