Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணசபை தேர்தலும் கூட்டமைப்பின் உள்நெருக்கடிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணசபை தேர்தலும் கூட்டமைப்பின் உள்நெருக்கடிகளும்
முத்துக்குமார்

வடமாகாணசபை தேர்தலுக்கான திகதியை தேர்தல் திணைக்களம் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. அரசாங்கத்திடம் இருந்து அதற்கான உத்தரவு கிடைக்கவில்லை என்றே தேர்தல் ஆணையாளர் குறிப்பிடுகின்றார். சர்வதேச அழுத்தங்களின் வீரியத்தைப் பொறுத்து தேர்தல் அறிவிப்புதினம் வெளியாகலாம். சர்வதேச அழுத்தங்கள் இல்லாவிட்டால் தேர்தல் நடைபெறாமலும் போகலாம்.

மாகாணசபை முறையில் தமிழ் மக்களுக்கு தீர்வு எதுவும் இல்லை. வெறும் தோற்றப்பாட்டளவிலேயே சில விடயங்கள் அங்குள்ளன. காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம், மாகாணசபை முறையில் உண்டு எனக் கூறப்படுபவை எல்லாம் வெறும் தோற்றப்பாடுகளே. இந்த தோற்றப்பாட்டு நிலையில் இருப்பவற்றை முழுமையாக நீக்கிய பின்னர்தான் தேர்தல் நடத்தப்படவேண்டும் என ஹெலஉறுமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் கூக்குரலிடத் தொடங்கியுள்ளன. உண்மையில் அக் கூக்குரல்கள் அக்கட்சிகளின் உடையவை என கூறுவதை விட அரசாங்கத்தின் குரல்கள் என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும். ஜனாதிபதி மகிந்தர் தான் வெளியில் கூறமுடியாதவற்றை இக் கட்சிகளைக் கொண்டு கூறுவிக்கின்றார்.

மகிந்தர் இரண்டு காரணங்களுக்காக இத்தேர்தலை விரும்பவில்லை. ஒன்று, முன்னர் கூறியது போல தோற்றப்பாட்டுத் தீர்வைக்கூட அவர் விரும்பாமையாகும். இவ்வாறு தோற்றப்பாட்டுநிலைத் தீர்வைக்கூட விரும்பாத போக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் மரபு ரீதியாக வளர்ந்த ஒன்றாகும். அதனால் தான் 1965 ஆம் ஆண்டு டட்லி - செல்வா ஒப்பந்தம், 1981ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தல் என்பவற்றையும் அது நிராகரித்திருந்தது.

மாகாணசபை முறையை விரும்பாவிட்டாலும் ஏனைய மாகாணங்களில் அதனை சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றிருந்தது. தோற்றப்பாட்டுத் தீர்வுகள் அங்கு இருப்பதில் அதற்கு பிரச்சனை பெரிதாக இருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் தான் வெற்றி பெறக்கூடியதாக இருந்ததால் அங்கும் பெரிய பிரச்சனை இருக்கவில்லை. மாகாணசபை நிர்வாகம் அரசாங்கத்திடம் இருந்ததே இதற்கு காரணமாகும்.

இரண்டாவது, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டது போல, மாகாணசபை முறை இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் தொங்கிக்கொண்டு இருக்கின்றமையாகும். இலங்கை, இந்திய ஒப்பந்தம் இந்திய ஆதிக்கத்திற்கு வழிவகுப்பதாக இருப்பதால் அதனை நீக்கவே ஜனாதிபதி விரும்புகிறார். ஆனால் எவ்வாறு நீக்குவது என்பதில்தான் வழிதெரியாமல் திணறுகின்றார்.

அரசாங்கம் தேர்தலை நடத்துவதா இல்லையா என முடிவெடுப்பதற்கு முன்னரே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு தேர்தல் காய்ச்சல் உருவாகத் தொடங்கிவிட்டது. முதலமைச்சர் பதவிக்காக பலர் அடிபடத் தொடங்கியுள்ளனர். முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் பெயர் பலமாக அடிபட்டபோது அவர் நாகரீகமாக ஒதுங்கிவிட்டார். தற்போது மாவை, வித்தியாதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் என மும்முனைப்போட்டி நிலவுவதுபோல் தெரிகின்றது.

வித்தியாதரனுக்கு இது விடயத்தில் பெரிய அதிருப்தி. சில வருடங்களுக்கு முன்னரேயே அவர் முதலமைச்சர் கனவில் மிதக்கத் தொடங்கி விட்டார். கொழும்புத் தமிழ்ப் பத்திரிகையாளர்களை சம்பந்தனிடம் அழைத்துச் சென்று அவர்கள் மூலம் தன்னை சிபார்சு செய்யுமாறும் வேண்டியிருந்தார். இந்தப் பத்திரிகையாளர் குழுவில் பல மூத்த பத்திரிகையாளர்கள் உள்ளடங்கியிருந்தனர். இக்குழுவில் வீரகேசரி வாரமலர் முன்னாள் ஆசிரியர் தேவராஜ் பங்கு கொள்ள மறுத்தமை வேறு கதை.

பத்திரிகையாளர்களை ஓர் அணியாக தனக்குப் பின்னால் திரட்டி வைத்திருந்ததற்குப் புறம்பாக கொழும்பு தமிழ்ச் சங்கத்தினையும் ஓரு பிரச்சாரத் தளமாக அவர் பயன்படுத்தினார். தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையைத் திறந்து அதற்கு செயலாளராகவும் பொறுப்பேற்றார். தந்தை செல்வா நினைவுப் பேருரையையும் தொடக்கிவைத்தார். இந்தியாவும் அவரை முன்னிலைப்படுத்தியதாக ஒரு தகவல்.

இன்று அந்த முயற்சிகள் எல்லாம் கானல் நீராகிப் போய்விடுமா? என்ற கவலை அவருக்கு எழுந்துள்ளது. மாவை ஒரு போட்டியாளராக வந்துள்ளமையே அதற்குக் காரணம். முதலமைச்சராக வரவிரும்புகின்ற வித்தியாதரன் சென்ற உள்ளூராட்சிச் சபை தேர்தலில் போட்டியிட்டு தனது ஆற்றலைக் காட்டியிருக்கலாம். சில அனுபவங்களைக்கூட பெற்றிருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் அவர் தயாராக இருக்கவில்லை. எடுத்தவுடனையே பெரிய பதவி கிடைக்கவேண்டும் என்ற ஆசை அவரைத் தொற்றியிருக்கின்றது.

சுரேஸ் பிரேமச்சந்திரன் முதலமைச்சர் பதவிக்கு வருவதை தமிழரசுக் கட்சியின் வெள்ளை முடி படைத்த எவரும் அறவே விரும்பவில்லை. அவர்கள் கூட்டமைப்பிலிருந்து சுரேசை முழுமையாகக் கழற்றி விடுவதிலேயே அக்கறையாக உள்ளனர். தற்போது சுரேஸ் பிரேமச்சந்திரன், தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் சேர்ந்து முதலமைச்சரை தெரிவு செய்யட்டும் என புதிய குண்டொன்றை தூக்கிப் போட்டிருக்கின்றார்.

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களே அதிகளவில் தெரிவு செய்யப்பட வாய்ப்புண்டு. கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாண மாவட்டங்களிலும் கணிசமாக தனக்குச் சார்பான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர் என சுரேஸ் பிரேமச்சந்திரன் கருதுகின்றார். இவர்களை வைத்துக் கொண்டு தமது முதலமைச்சர் இலக்கை நிறைவேற்றலாம் என்றும் நினைக்கின்றார்.

தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் இறுதி நேரத்தில் தனக்குக் குழிபறித்து விடுவார்களோ என்ற அச்சம் மாவைக்கு வந்துள்ளது. வவுனியா, மன்னார் மாவட்டங்களில் தனக்குப் பெரிய செல்வாக்கு இல்லை என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இதனால் அவர் நன்கு குழம்பிப் போயிருக்கின்றார். கிளிநொச்சி மேதினக் கூட்டத்திற்கு மக்கள் பெரியளவில் வராமையும் அவரது அச்சத்தை அதிகரித்துள்ளது.

தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக பதியவேண்டும் என்பதை காலம் அறிந்து மாகாணசபை தேர்தல் காலத்தில் உறுதியாக தூக்கத் தொடங்கியுள்ளனர். இதற்காக வவுனியாவிலும், மன்னாரிலும், முல்லைத்தீவிலும் பிரஜைகள் குழுக்களை உருவாக்கி அழுத்தம் கொடுக்க முனைந்துள்ளனர். மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பிடமும் முறையிட்டுள்ளனர்.

மாகாணசபை தேர்தல் காலத்தில் இந்தப் பிரச்சனையை தூக்கியிருப்பது தமிழரசுக் கட்சித் தலைமைக்கு பலத்த சங்கடங்களைக் கொடுத்துள்ளது. விவகாரம் பல மட்டங்களிலும் பேசுபொருளாவதை பெரும் தொல்லையாக அவர்கள் பார்க்கின்றனர்.

தற்போது இரு குழுவினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவைப் பெற முனைகின்றனர். 'இரு தேசங்கள் ஒரு நாடு' என்ற கொள்கை நிலைப்பாட்டில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுதியாக இருப்பதால் இவர்களுடைய விருப்பங்கள் எடுபடுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை. இரு தரப்பினரும் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரவேண்டும் என விரும்புகின்றனரே தவிர அதன் கொள்கை நிலைப்பாட்டிற்கு தாங்கள் செல்ல விரும்பவில்லை. எனவே என்னதான் இரு தரப்பும் முயற்சிகளைச் செய்தாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவற்றுடன் இணையக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை என்று கூற வேண்டும்.

கடந்த மேதினக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ் விடயத்தை மிகவும் தெளிவாகவே கூறியிருந்தார். 'எமக்கு கட்சியின் பெயர் முக்கியமில்லை. சின்னம் முக்கியமில்லை. பதவியும் முக்கியமில்லை, கொள்கைதான் முக்கியம். கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களுடன் மட்டுமே இணைந்து செயற்பட முடியும்.' என்று கூறியிருந்தார்.

மேதினக் கூட்டத்தில் '2009க்கு முன்னரான அரசியல் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும் என கஜேந்திரகுமார் கூறிய கூற்று தாயகம், தேசியம், சுயநிரணயம் என்கின்ற அடிப்படைக் கொள்கைகளை கைவிடமுடியாது' என்பதையே குறிக்கின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை நிலைப்பாட்டிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இரு பிரிவினரும் ஒரு போதும் வரப்போவதில்லை. ஏனெனில் இவ் இரு பிரிவினரும் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்கள். சிலவேளை பூகோள அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக இந்தியா இருதேச நிலைப்பாட்டிற்கு வந்தால் இந்த பிரிவினரும் வரக்கூடும்

கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை கொள்கை ரீதியானதல்ல. அவர்களின் இருப்புச் சம்பந்தப்பட்டது. கொள்கை ரீதியான வேறுபாடு அவர்களுக்குள் எதுவும் கிடையாது. இரு பிரிவினருக்கும் தலைமை தாங்கும் சம்பந்தனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் அதனை பல தடவை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதன் மூலமே தமது இருப்பு பாதுகாக்கப்படும் என்பதால் பதிவு விடயத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவசரம் காட்டுகின்றார். ஆனால் தமிழரசுக் கட்சியினரோ பதிவு தமது முதன்மை நிலையினை இல்லாமல் செய்துவிடும் என்பதால் அதனை கடுமையாக எதிர்க்கின்றனர்.

சுரேஸ் பிரிவினர் தமது நிலைப்பாட்டிற்கு ஒரு வெகுஜன ஆதரவினை எடுப்பதற்காகவே பிரஜைகள் குழுக்கள் உருவாக்கியதுடன் மன்னார் ஆயரையும் சந்தித்துள்ளனர். மன்னாரில் மேதினக் கூட்டத்தையும் வெற்றிகரமாக நடாத்தியுள்ளனர். கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சி நடாத்திய மேதினக் கூட்டத்தை விட மன்னாரில் ஏனைய கட்சிகளின் கூட்டு நடாத்திய மேதினத்திற்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தது.

மக்களின் ஆதரவு ஒரளவுக்காவது கிடைக்கும் என்ற நிலை உருவாகுமானால் ஏனைய கட்சிகள் இணைந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பதிவு செய்ய முற்படலாம். தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தை தமது சின்னமாகவும் கொள்ளலாம். ஆனந்தசங்கரிக்குப் பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகும் எண்ணமும் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு உண்டு.

ஏனைய கட்சிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இணைந்து கொண்டால் அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையேதான் தேர்தல் கூட்டு இடம்பெற முடியும். இது இடம்பெறுமானால் பேரம்பேசும் ஆற்றல் தற்போதுள்ளதைவிட ஏனைய கட்சிகளுக்கு அதிகமாக இருக்கும்.

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போட்டியிடப் போவதில்லை. இரு காரணங்களுக்காக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போட்டியிடாது. மாகாணசபை முறை தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பதை நிராகரித்து சிங்கள தேசத்தின் அதிகார கட்டமைப்பான ஒற்றையாட்சிக்குள் தமிழ்த்தேசத்தை முடக்குகின்ற முறை. இந்த முறை தமிழ்த்தேசத்தின் ஆன்மாவினையே சிதைத்துவிடும்.

இரண்டாவது, தாயகத்தின் கூட்டிருப்பை சிதறடித்து வடக்கு, கிழக்கு பிரிப்பினை இது நிரந்தரமாக்கிவிடும். தமிழ் மக்களின் கூட்டிருப்பையும் கூட்டுரிமையையும். பாதுகாக்க தாயகத்தின் நில ஒருமைப்பாடு அவசியமாகும். எனினும் இக் கொள்கை நிலைப்பாட்டினை ஏற்றபோதும் தவறானவர்களின் கைகளில் மாகாண நிர்வாகம் போகக்கூடாது என்ற அடிப்படையில் சுயேட்சைக் குழுவை இறக்குவார்களேயானால் அதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆதரவினைக் கொடுக்கும். ஆனால் அந்த நிலைப்பாட்டினை எடுக்கும் நிலையில் கூட்டமைப்பிலுள்ள எந்தக் கட்சிகளும் இல்லை.

மாகாணசபை முறை தமிழர் தரப்புக்கு ஒரு வலுவான அரசியல் களத்தை கொடுக்கும் என்ற வாதம் சிலரால் முன்வைக்கப்படுகிறது. அது மிகவும் தவறானது. சிங்கள அரசின் அதிகார கட்டமைப்புக்குள் உள்ள எந்த ஒரு களமும் வலுவானதாக இருக்க முடியாது. அப்படியானால் பாராளுமன்றம், கிழக்கு மாகாணசபை, கூட்டமைப்பின் நிர்வாகத்திலுள்ள உள்ளுராட்சி சபைகள் என்பன வலுவான அரசியல் களமாக இருந்திருக்க வேண்டும். வரலாற்றில் இவை பெரியளவிற்கு இருக்கவில்லை.

ஒரு பேச்சுக்கு அவை அரசியல் களமாக இருக்கும் என ஏற்றுக்கொண்டால் கூட, அதனை அரசியல் களமாக்கும் ஆற்றல் கூட்டமைப்புக்குள்ளதா? என்கின்ற கேள்வி எழுகின்றது தற்போதைய பாராளுமன்றத்தையும் கிழக்கு மாகாணசபையையும் உள்ளூராட்சி சபைகளையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றார்களா? அங்குள்ள கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு கூட்டமைப்பின் தலைமை ஒரு ஒழுங்கான தலைமையை கொடுத்ததா? இதற்கான விடை கவலையளிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கும்.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு பங்குபற்றியபோது மாகாணசபை முறையை புறக்கணியுங்கள் அல்லது சுயேட்சைப் பட்டியலில் போட்டியிடுங்கள் என தமிழ் சிவில் சமூகம் கூட்டமைப்பு தலமையை வேண்டியிருந்தது. இந்த வேண்டுகோள்கள் கணக்கெடுக்கப்படவில்லை. குறைந்த பட்சம் தேர்தல் விஞ்ஞாபனத்திலாவது மாகாணசபை முறையினை ஏற்கவில்லை என குறிப்பிடுங்கள் என கேட்கப்பட்டது. அதுவும் உதாசீனம் செய்யப்பட்டது. இறுதியில் பிள்ளையானிடம் இருந்த முதலமைச்சர் பதவியை முஸ்லிம் ஒருவரிடம் கொடுத்ததைத் தவிர வேறு ஏதும் நடக்கவில்லை. முஸ்லிம் - சிங்கள கூட்டு தமிழர் தேசத்தை பச்சையாக ஆக்கிரமிப்பதற்கு வழிசெய்து கொடுக்கப்பட்டது. முஸ்லிம்களிடம் அதிகாரம் செல்வது தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அது தமிழ் - முஸ்லிம் உடன்பாட்டுடன் நடந்தேறவேண்டிய விடயம். அந்த உடன்பாடு இங்கு எட்டப்படவில்லை.

தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கின்றதோ இல்லையோ, தமிழ்தேசிய அரசியல் உயிர்ப்புடன் நகர்கின்றதோ இல்லையோ, தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு கூத்தாட மட்டும் தேர்தல் களம் அடிக்கடி கிடைத்து விடுகின்றது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=8b0c5f18-ef84-4e6c-bc68-acbd91829779
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

பல விடயங்களை ஆராய்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.