Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !

Featured Replies

ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !  

 

04-rajiv-gandhi-assasination.jpgஅடையாளம் தெரியாள அளவிற்கு துண்டு துண்டாகப் பிய்த்தெறியப்பட்டு ராஜீவ்காந்தி அழித்தொழிக்கப்பட்டு விட்டார். அவரது எலும்புகளையும் சதைகளையும் மூவர்ணக் கொடியில் மூட்டை கட்டி அள்ளிப் போட்டுத்தான் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. நாட்டையே சூறையாடிய ஒரு ஊதாரியும் பீரங்கித் திருடனும் ஏகாதிபத்திய அடிவருடியும் கொலைகார பாசிஸ்டுமான ஒரு நபர் இப்படி சாகடிக்கப்படுவது பொருத்தமானதுதான். அதைக் கண்டிப்பதோ, அதற்காக அனுதாபப்படுவதோ அவசியமில்லை. அதேவேளையில், ஒரு தனிநபரைக் கொன்று விடுவதன் மூலம் அவர் சார்ந்த அமைப்பையோ, அதன் வர்க்கத் தன்மையையோ மாற்றிவிட முடியாது; அவ்வமைப்பை அம்பலப்படுத்தி, பரந்துபட்ட மக்களை அரசியல்படையாக திரட்டி மட்டுமே ஒழிக்க முடியும் என்பதே வரலாற்று அனுபவமாகும்.

ராஜீவ் நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவர்; அவரது பரம்பரையே தியாகப் பரம்பரை; சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர்; அவரது இழப்பு ஈடு செய்ய முடியாது என்றெல்லாம் அரசின் ஊதுகுழல்களான வானொலி, வானொளி முதல் அனைத்து வோட்டுக் கட்சிகளும் தரகு முதலாளித்துவ, பார்ப்பன-பனியா பத்திரிகைகளும் ராஜீவை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றன. இறுதி ஊர்வலம், அஸ்தி கலச ஊர்வலம் ஆகியவை பிரமாதமாக விளம்பரம் செய்யப்படுகின்றன. இவைகளின் மூலம் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்ட மாபெரும் தலைவர் ஒருவர் மறைந்து விட்டதைப் போன்ற பிரமை ஊட்டப்பட்டு வருகின்றது.

விமான ஓட்டியாக இருந்த ராஜீவ்காந்தி அரசியலுக்கு கொண்டு வரப்பட்டதே பரம்பரை சர்வாதிகார ஆட்சியை நீட்டிக்கத்தான்; அவர் பிரதமர் ஆனதும் தாயின் பிணத்தைக் காட்டித்தான்; ஏழாண்டு கால அவரது அரசியல் வாழ்க்கை ராஜீவை மாபெரும் தேசியத் தலைவராக காட்டுகிறதா? இல்லவே இல்லை; மாறாக ராஜீவை பின்வருமாறே காட்டுகின்றன.

ஒரு பாசிஸ்ட் கொடுங்கோலரே ராஜீவ். 1975 அவசர நிலை பாசிசத்தை நியாயப்படுத்தி பேசியதோடு தேவைப்பட்டால் அப்படி ஒரு ஆட்சியைக் கொண்டு வருவேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர்; தன்னைச் சுற்றி ஒரு பாசிச கும்பலை உருவாக்கி மக்களை அடக்கி ஒடுக்க பல கருப்புச் சட்டங்களைக் கொண்டு வந்தவர்; தனது ஆட்சியை நிரந்தரமாக்கிக் கொள்ள பாசிச ஆட்சியைக் கொண்டு வரவும் தயாராக இருந்தவர்; அதற்கான தயாரிப்புகளைச் செய்தவர்.

பாசிச இந்திராவின் கொலையைத் தொடர்ந்து டெல்லியிலும் வட இந்தியத் தலைநகரங்களிலும் 5000-க்கும் மேற்பட்ட அப்பாவி சீக்கியர்களைக் கொன்று ஆட்சிக்கு வந்தவர். அக்கொலைக் குற்றவாளிகளுக்கு அமைச்சர் பதவிகள் அளித்து பாராட்டியவர். பெற்ற தாயின் முன்னே மகனை உயிரோடு கொளுத்தியது; மனைவி முன்னே கணவனை வெட்டிக் கொன்றது, கற்பழித்தது போன்ற கொடுமைகளை செய்யத் தூண்டிப் பேசியவர்; ‘ஒரு பெரிய மரம் விழும் போது சில இழப்புகள் ஏற்படுவது இயல்பே’ என்று அதை நியாயப்படுத்திய கிரிமினல் குற்றவாளிதான் ராஜீவ். பழிவாங்கும் வெறியோடு இந்திரா கொலைக்கு அறவே தொடர்பில்லாத நிரபராதி கேஹார்சிங்கை தூக்கிலிட்டு சிம்ரஞ்சித்சிங் மான், அதீந்தர் பால்சிங் ஆகியோர் மீது சதிக்குற்றம் சாட்டி வழக்கே இல்லாமல் தனிமைக் கொட்டடியில் அடைத்து சித்திரவதை செய்த அரக்கர்தான் ராஜீவ்.

ஒரு இலட்சம் மக்களை நிரந்தர நோயாளிகளுக்கி 10,000 பேரை காவு கொண்ட போபால் விஷவாயு ‘விபத்து’க்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் இரகசிய பேரங்கள் நடத்தி குற்றவாளிகளை தப்புவிக்கச் செய்த மக்கள் விரோதிதான் ராஜீவ்காந்தி; நட்ட ஈடு கேட்டு போராடிய மக்களை அடக்கி ஒடுக்கியவர்தான் ராஜீவ்.

சீக்கிய சமுதாயத்தையே பழிவாங்கும் வெறியோடு பஞ்சாபில் அரச பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, உளவுப்படை “ரா” மூலம் பல சதிகளையும் கொலைகளையும் அரங்கேற்றி பழியை சீக்கிய தீவிரவாதிகள் மீது சுமத்தி பஞ்சாபையே இரத்தக்களறியாக்கிய ராட்சசன்தான் ராஜீவ்காந்தி. பஞ்சாபிலும் காஷ்மீரிலும் கிரிமினல் கேடிகளையும் போலீஸ் ரவுடிகளையும் கொண்ட இரகசிய கொலைப்படைகளைக் கட்டி மாதத்திற்கு இவ்வளவு பேரைக் கொல்ல வேண்டும் என்று இலக்கு வைத்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை கொன்றொழித்த கொடுங்கோலரே ராஜீவ்காந்தி. திரிபுரா இனவெறி தீவிரவாதிகளுடன் கள்ளக் கூட்டு சேர்ந்தும் அசாம், போடாலாந்து கிளர்ச்சியை சீர்குலைத்தும் உளவுப்படை “ரா” மூலம் சதிகளையும் இனப்படுகொலைகளையும் தனது குறுகிய அரசியல் ஆதரவுக்காக கட்டவிழ்த்து விட்டார் ராஜீவ்.

தனது பதவியைப் பாதுகாத்துக் கொள்ள இந்து – முஸ்லீம் மதவெறியர்களுடன் கள்ளக் கூட்டுச் சேர்ந்து மதவெறியைக் கிளறி விட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை பலியிட்டார். இதேபோல குஜராத்திலும், ஆந்திராவிலும் இடஒதுக்கீடு சாதிக் கலவரங்களை திட்டமிட்டே தூண்டினார்.

போபார்ஸ் பீரங்கி ஊழலில் கோடிகோடியாக பணம் கொள்ளையடித்தவர்; போபார்ஸ் ஊழல் வெளியானதும் அதை மூடி மறைப்பதற்காக எண்ணற்ற சதிவேலைகளை ஸ்வீடன் அரசுடன் உடன்பாடு செய்து கொண்டு ஊழலை அமுக்கியதோடு பொய்யான ஆதாரங்கள், வதந்திகளை அயோக்கியத்தனமாக பரப்பினார்.

நாடாளுமன்றத்தில் தனது மிகை பலத்தை வைத்து எதிர்க்கட்சியினரின் ஊழல் குற்றச்சாட்டுக்களை விவாதிக்கவே விடாமல் ரௌடித்தனமாக நடந்து கொண்டார். ஊழலில் ஊறித் திளைக்கும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான “லோக்பால்” மசோதாவை காலாவதியாக்கியதோடு ராஜீவ் கும்பலின் ஊழலை அம்பலப்படுத்தி பத்திரிகைகளின் குரல்வளையை நெறிக்க அவதூறு தடைச்சட்டத்தைக் கொண்டு வந்தும் பத்திரிகை காகிதத்தின் விலையை அநியாயமாக ஏற்றியும் அடக்கத் துடித்தார்.

அவசரநிலை பிறப்பிக்கும் 59-வது சட்ட திருத்தம், பயங்கரவாத தடைச்சட்டம், கலவரப்பகுதி தடைச் சட்டம் முதலான பல கருப்பு சட்டங்களைக் கொண்டு வந்தவர்தான் ராஜீவ்.

ஏகாதிபத்திய, பன்னாட்டு கம்பெனிகளுக்கு நாட்டைச் சூறையாட கதவுகளை அகலத் திறந்து விட்டும், தரகு அதிகார முதலாளிகள் கூடுதல் கொள்ளை அடிக்க கட்டுப்பாடுகளைத் தளர்த்தியும் விசுவாச ஊழியம் செய்து அதன் மூலம் ஆதாயம் அடைந்தவர்.

தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பத்துக்கு மேற்பட்ட தடவை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கலைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவதில் முன்னின்றவர்; இந்தித் திணிப்பை என்றுமில்லாத அளவுக்கு புகுத்தியவர்.

தரகு முதலாளி அம்பானிக்கு அரசு நிதி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி தாராள உதவி செய்ததோடு, அம்பானியின் பங்கு மார்க்கெட் மோசடிக்கு உடந்தையாகவும் ராஜீவ் காலத்தில் செயல்படுத்தப்பட்டன. அரசின் சட்டங்களும் கொள்கைகளும் இம்மோசடிக்கு வளைந்து முறுக்கப்பட்டதோடு, நீதிமன்றமே அதை நியாயப்படுத்தியது.

ராஜீவ்காந்தி குடும்பத்தினரும் அவரது இத்தாலிய உறவினர்களும், அமிதாப்-அஜிதாப் குடும்பத்தினரும் மக்களின் சொத்தை சூறையாடி குவித்து ரூ 650 கோடி மூலதனத்தில் இத்தாலியில் தொழில் துவங்கியுள்ளனர்.

ராஜீவ் பாசிச கும்பலின் கள்ளக் கூட்டுடன் ஏராளமான அளவு வரிஏய்ப்பு, அன்னிய செலாவணி மோசடிகள் நடந்துள்ளன. இவைகளின் மூலம் இந்திய தரகு முதலாளிகள், பெரும் வியாபாரிகள் மற்றும் பாசிச ராஜீவ் கும்பலின் முக்கிய புள்ளிகளால் சுவிஸ் வங்கிகளில் 20,000 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 15,000 கோடி ரூபாயும் குவிக்கப்பட்டுள்ளது. இப்படி நாட்டையே சூறையாட உதவியவர்தான் ராஜீவ்காந்தி !

ஊதாரி பிரதமர் என்று முதலாளித்துவ பத்திரிகைகளே தூற்றுமளவிற்கு பெயரெடுத்தவர்; அடிக்கடி வெளிநாடுகளுக்கு தனிச்சிறப்பான விமானங்களில் சென்று ஊர் சுற்றியவர். ஆடம்பர உல்லாச வாழ்க்கை நடத்தியவர்; இலட்சத் தீவில் அவர் விடுமுறையை அனுபவித்த போது கேரளாவிலிருந்து தனி விமானத்தில் அவருக்கு பாயாசம் கொண்டு செல்லப்பட்டது; அவரது மனைவி சோனியாவிடம் 6,000 பட்டுப் புடவைகள் இருப்பது ஆகியவை இதற்கு சில உதாரணங்கள்.

சர்வதேச ‘மாமா’ சந்திராசாமி, சர்வதேச ஆயுதபேர தரகன் ஆதனன் கஷோகியின் நெருங்கிய கூட்டாளியானவர் ராஜீவ்.

ஏர்பஸ் ஏ-320 விமானங்கள் ரூ 2,500 கோடிக்கு ராஜீவ் அரசு வாங்கியதில் ஊழல் செய்தவர்; அவற்றில் 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகி 250 பேருக்கு மேல் மாண்டுள்ளனர்.

இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் உள்நாட்டு வெளிநாட்டுக் கடன் ஒவ்வொன்றும் இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தாண்டின.

IPKF1.jpgபிராந்திய மேலாதிக்கத்தை காப்பாற்ற அண்டை நாடுகளை மிரட்டியவர்; அந்நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டவர்; நேபாளத்தை நெருக்கி இந்தியாவின் ஆதிக்கப் பிடிக்குள் கொண்டு வர முயன்றவர்; இலங்கையில் நடக்கின்ற ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கையை பிராந்திய மேலாதிக்கத்திற்குள் கொண்டு வர முயன்றவர்; இந்திய – இலங்கை ஒப்பந்தம் போட்டு இந்திய இராணுவத்தை அனுப்பி 20,000 தமிழர்களைக் கொன்று குவித்தவர்; ஈழத்துரோக அமைப்புகளை “ரா” மூலம் உருவாக்கி ஈழத்தமிழர்களின் போராட்டங்களை சீர்குலைத்தவர்.

இவ்வாறு ராஜீவ் செய்த கிரிமினல் குற்றங்கள், படுகொலைகள், பாசிச அடக்குமுறைகள், நாட்டையே சுரண்டி சூறையாடியது ஆகியவை எண்ணிலடங்கா. இவை சாதாரண குற்றங்களல்ல; மறக்கக் கூடியவையோ, மன்னிக்கப்படக் கூடியவையோ அல்ல; இவை மன்னிக்க முடியாத அரசியல், பொருளாதாரக் கிரிமினல் குற்றங்கள்; தேசத் துரோக, மக்கள் விரோத படுபாதகங்கள்; தலைமுறை தலைமுறையாக வடுக்களை ஏற்படுத்திய குற்றங்களாகும். மேலும் தனது கிரிமினல் குற்றங்களை மறைக்கவும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் அரசு எந்திரத்தையே தனது விசுவாச படையாக மாற்றி ஆட்டம் போட்ட அரக்கர் ஆவார். சொந்தத் தேசத்தை சூறையாடிய மார்க்கோஸ் – டுவாலியர் வகையைச் சேர்ந்தவர்தான் ராஜீவ்.

சொந்தநாட்டு மக்களைக் கொன்று இரத்தம் குடித்த காட்டேரிதான் ராஜீவ்காந்தி; சொந்த நாட்டையே சூறையாடியவர்; பஞ்சாப், அசாம் மாநிலத்து மக்கள், ஈழத்தமிழர்கள் – இப்படி தனது உயிருக்கு குறி வைக்கும் பல கொலைகாரர்களை உருவாக்கிக் கொண்டார். இது தவிர்க்க முடியாதது; அவர் திட்டமிட்டுக் கொல்லப்படலாம் என்று எதிர்பார்த்ததுதான்; எனவே ‘வசீகரமானவர், இளையவர், இனிமையானவர், அன்புக்குரிய தலைவன் கொடியவர்களின் குண்டுக்கு இரையாகி விட்டார்’ என்று குட்டி முதலாளித்துவ கூட்டம் புலம்புவது கடைந்தெடுத்த அயோக்கியத் தனமாகும்.

கொலைவெறியின் குறியிலிருந்து தப்பிக்கவே குண்டு துளைக்காத கார், குண்டு துளைக்காத கண்ணாடி மேடை, குண்டு துளைக்காத கோட்டு, அதிரடிப்படை, உலோக கண்டுபிடிப்புக் கருவி என்றெல்லாம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடமாடிக் கொண்டிருந்தார். இத்தனை பாதுகாப்புகள் இருந்தும் தான் கொல்லப்படலாம் என்ற நிரந்தர அச்சத்திலேயே அவர் காலம் தள்ளிக் கொண்டிருந்தார்; ஆனால், இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்காவிட்டால் இனி என்றைக்குமே அவரது அரசிய்ல வாழ்வு அஸ்தமித்து விடும் என்ற நிலையில் இருந்தது. ஆகவே இந்த கடைசி வாய்ப்பில் எப்பாடுபட்டாலும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி மக்களிடையே சென்று மாலைகள் வாங்கினார்; கை குலுக்கினார்; சிரித்துப் பேசினார்; இதன் மூலம், தான் கடந்த காலத்தில் புரிந்த கிரிமினல் குற்றங்களை மக்கள் மறந்து விட்டு தனக்கு வோட்டளிப்பர் என்று நம்பினார்; இதுவே அவரைக் கொல்ல சாதகமாக இருந்தது.

ராஜீவின் அந்த அழித்தொழிப்பு, வோட்டுப் பொறுக்கி முதலாளித்துவக் கட்சித் தலைவர்களின் முதுகெலும்பை சில்லிட வைத்துள்ளது. இனி இவர்கள் மிருகங்களைப் போல கூண்டுகளில் இருந்துதான் பேசுவார்கள்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளில்தான் உலா வருவர்; சிறு சிறு சலசலப்பு கண்டு எல்லாம் நடுங்கிச் சாவர்; ஆனாலும் அவர்களும் முதலாளித்துவப் பத்திரிகைகளும் கிசுகிசு பத்திரிகைகளும் பாசிச ராஜீவை அழித்தொழித்த செயல் கோழைத்தனமானது என்று சொல்வது வேடிக்கையானது; நிச்சயமாக இது கோழைத்தனமான செயல் அல்ல; ஒரு பாசிஸ்டைக் கொல்ல தன்னையே அர்ப்பணித்துக் கொண்டது கோழைத்தனமானதா? தனது அம்மா கொல்லப்பட்ட பின்னும் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்த பின்னும் நாட்டுக்காக பணியாற்ற முன் வந்தவர் என்று ராஜீவைப் புகழ்கின்றனர். ஆனால், பரம்பரை சர்வாதிகார ஆட்சியை தொடரும் பேராசையுடன் பாசிஸ்டுகளுக்கே உரிய ‘தன்மையுடன்’தான் ராஜீவ் உலவி வந்தார் என்பதே உண்மை !

எனவே, இப்படிப்பட்ட ஒரு பாசிஸ்ட் கொடுங்கோலன், இந்திய மார்க்கோஸ் கொல்லப்பட்டதில் பரிதாபப்படவோ, பசப்புவதற்கோ இடமில்லை. ராஜீவ் தமிழக மண்ணில் கொல்லப்பட்டது தமிழ்நாட்டுக்கு அவமானம் என்று மா.பொ.சி போன்ற செல்லாத ‘நோட்டு’களும் அரசியல் சீக்கு ஜெயலலிதாவும் குட்டி முதலாளித்துவ பெரிய மனிதர்களும் பிதற்றி வருகிறார்கள். பாசிஸ்டும் தேசவிரோதியுமான ராஜீவ் தமிழ்நாட்டில் கொல்லப்பபட்டது குறித்து தமிழர்கள் அவமானப்படவோ, வெட்கப்படவோ என்ன இருக்கிறது?

நேரு பரம்பரையைச் சேர்ந்தவர்; ஆசியஜோதியின் பேரன்; முன்னாள் பிரதமர், தியாகப் பரம்பரை என்றெல்லாம் சிலர் ராஜீவின் பெருமையைப் பேசுகின்றனர். ஆனால், நேரு பரம்பரையே தேச துரோகமானது; மக்கள் விரோதமானது; நாட்டையை கொள்ளையடித்த பரம்பரையாகும். மேலும் பிரதமர் பதவி என்பதற்கும் வர்க்கத் தன்மை உண்டு. அது எல்லோருக்கும் பொதுவான பதவி அல்ல. தரகுப் பெருமுதலாளிகள், நிலப்பிரபுக்கள், ஏகாதிபத்தியங்கள், அதிகார வர்க்கம் ஆகியோருக்கு சேவை செய்த, அவர்களது பிரதமராகத்தான் ராஜீவ் செயல்பட்டார். உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை அவர் ஒரு பிரதமரல்ல; பிணந்தின்னியே; ஆளும் வர்க்கங்களில் காவல் நாயே; எனவே, அவரது மரணத்திற்கு உழைக்கும் மக்கள் அஞ்சலி செலுத்த முடியாது; கூடாது.

ராஜீவ் காந்தியின் அழித்தொழிப்பை ஒட்டி அகில இந்திய அரசியல் நிலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி என்ற பாசிஸ்ட் கிரிமினல் ஒழித்துக் கட்டப்பட்டது உழைக்கும் மக்களுக்கு சாதகமானதுதான்; சோனியாகாந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க இறுதியாக மறுத்து நரசிம்மராவ் தலைவராக ‘தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்’. சோனியா மறுத்ததற்கு முக்கிய காரணம் தானும் கொல்லப்படலாம் என்பதாகும். எனவே, நேரு பரம்பரை ஆட்சியை ஒரு முடிவுக்கு கொண்டு வந்த பெருமையும், காங்கிரஸ் சிதற அடியெடுத்துக் கொடுத்த பெருமையும் ராஜீவ் கொலைகாரர்களுக்கு போய்ச் சேருகிறது. நாமும் இப்படி அழிக்கப்படலாம் என்ற அச்சத்தை வோட்டுப் பொறுக்கித் தலைவர்களிடம் ராஜீவின் மரணம் ஏற்படுத்தியுள்ளது. எனினும், தானே நேர்மறையான அடிப்படையில் இது உழைக்கும் மக்களுக்கு நன்மையை கொண்டு வராது. ஏனெனில் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி பலவீனமாக இருக்கின்ற இன்றைய நிலையில் ஆளும் வர்க்கக் கட்சிகளில் ஒன்றே அல்லது கூட்டுச் சேர்ந்தோ, அவைகளே பதவியில் அமரும். மேலும் காங்கிரசு பதவிக்கு வர சாதகமாக அனுதாப அலை ஒன்றையும் ராஜீவ் மரணம் உருவாக்கியுள்ளது.

ராஜீவின் மரணத்தால் அவர் தலைமை தாங்கிய கும்பல் நிலைகுலைந்து போயுள்ளது. சோனியாகாந்தி தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்ட நிலையில் ஒரு குழுவாகவே நீடிக்க வாய்ப்பில்லை; வெகு விரைவில் அது சிதறும்; மேலும் காங்கிரஸ் சிதறுவதும் உறுதி; பதவிக்கு வராவிட்டால் விரைவிலும், பதவிக்கு வந்தால் சற்று காலம் தள்ளியும் சிதறுவது உறுதி. தான் மட்டுமே நிலையான ஆட்சியைத் தர முடியும் என்று மார் தட்டிய காங்கிரசு, இன்று அதன் தலைவர் இறந்தவுடனேயே நிலைகுலைந்து போய் விட்ட பரிதாப நிலையைப் பார்க்கிறோம். நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட கட்சி, காந்தி-நேரு போன்ற ‘மாபெரும்’ தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி இன்று உடைந்து சிதறுவது உறுதியாகி விட்டது.

மூழ்குகிற கப்பலில் அள்ளுவது வரை ஆதாயம் என்று காங்கிரஸ் கோஷ்டிகளை தம்பக்கம் இழுக்க வி.பி.சிங், சந்திரசேகர், பி.ஜே.பி ஆகியோர் நாக்கில் எச்சில் வடிய சதிவலை பின்ன ஆரம்பித்து விட்டனர். இதனால் கட்சித் தாவல்கள், குதிரை வியாபாரம் எப்போதையும் விட அப்பட்டமானதாக, அருவெறுப்பானதாக நடைபெற போகின்றது. இன்றைய சூழ்நிலையில் ஒன்று, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்குநிலை பாராளுமன்ற நிலை வரலாம்; அல்லது காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று பதவிக்கு வரலாம்; காங்கிரஸ் பதவிக்கு வந்தாலும் வெடித்து சிதறுமாதலால், குதிரை வியாபாரமும் நாடாளுமன்ற அரசாஜகமும் தலைவிரித்தாடப் போவது நிச்சயம். இதனால் நாடாளுமன்ற ஆட்சிமுறை மேலும் நாறி அம்பலப்படுவது என்ற போக்கே நடக்கும்.

இந்த குழப்ப நிலையை எதிர்பார்த்து பாரதீய ஜனதா கட்சி தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ள உடனடியாக செயலில் இறங்கி விட்டது. ‘பாராண்ட ராமனுக்கு கோயில்; பரதேசி ராமனுக்கு ரொட்டி’ என்ற தனது பழைய கோஷத்தை தூக்கி எறிந்து விட்டு ராஜீவின் கோஷமான நிலையான ஆட்சியை தான் மட்டுமே தர முடியும் என்று முழங்கத் தொடங்கி விட்டது. பிராந்திய கட்சிகள் சிலவற்றைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டும் காங்கிரசிலிருந்து சிலரை விலைக்கு வாங்கியும் எப்படியாவது இந்த வாய்ப்பில் பதவியில் அமர்ந்துவிட பகீரத பிரயத்தனங்களில் இறங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக, ஜெயலலிதாவை தன்பக்கம் கொண்டுவர தூதுவரை அனுப்பியுள்ளது.

காங்கிரசு கட்சிக்குள்ளேயும் இந்துமத வெறி சக்திகள் கணிசமாக உள்ளன; இந்திராவின் கடைசி காலத்திலும் ராஜீவ்காந்தி காலத்திலும் இந்துக்களின் வோட்டைக் கவர இந்துமதவெறி நிலைப்பாடுகள் காங்கிரசால் மேற்கொள்ளப்பட்டன. மீரட் போன்ற இடங்களில் திட்டமிட்டு முஸ்லீம்கள் மேல் கலவரங்கள் தூண்டிவிட்டது; ஜம்மு காஷ்மீர் தேர்தலின் போது இந்துமத ஆதரவு நிலை எடுத்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது போன்றவைகள் எடுத்துக்காட்டுகள். ‘காங்கிரசு கோஷ்டிகளாக சிதறும்போது ஆதாயம் அடைய அல்லது அதை உடைக்க பி.ஜே.பி.க்கு இந்த அம்சம் சாதகமாக உள்ளது.

போபால் விஷவாயு கசிவு

எனவே, பாசிச ராஜீவ் கும்பல் சிதறியுள்ள இந்த நாடாளுமன்ற அராஜகத்தைக் காட்டியே இந்து மதவெறி பாசிசத்தைக் கொண்டு வர துடிக்கின்றன, இந்துமத வெறி அமைப்புகள்; அவைகளே பிரதான அபாயமாக மாறியுள்ள இன்றைய நிலையில் இந்த அமைப்புகள் பற்றி விரிவாகும் கூர்மையாகவும் பரவலாகவும் புரட்சியாளர்கள் பிரச்சாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும்; இந்த சக்திகளை முறியடிப்பதை முதன்மையான பணியாக எடுத்து தீவிரமாக செயலாற்ற வேண்டும்.

ராஜீவின் அழித்தொழிப்பை பூதாகரமாக்கி எல்லா இலங்கை தமிழரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று டெல்லி காங்கிரசின் தமிழக பொதிமாடு இராமமூர்த்தியும் அரசியல் சீக்கு ஜெயலலிதாவும் ஊளையிட்டுள்ளனர்; விடுதலைப் புலிகள் தமது எஜமானர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிப் போன எரிச்சலும் மீண்டும் அதை தமது எஜமானனின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசியல் நிர்ப்பந்தமும்தான் வேண்டுமென்றே இவர்கள் விடுதலைப் புலிகள் மீது தொடர்ந்து அவதூறு செய்து வருவதன் நோக்கமாகும்; அதன் ஒரு பகுதியாகத்தான் எல்லா இலங்கைத் தமிழர்கள் மீதும் இவர்கள் தமது ஆத்திரத்தைக் கக்கியுள்ளனர்.

ராஜீவ் கொலையை கருவியாக்கி வோட்டுப் பொறுக்க ஜெயலலிதா – வாழப்பாடி கோஷ்டிகள் ஏற்கனவே களத்தில் இறங்கி விட்டன. திட்டமிட்டு தி.மு.க. தேசிய முன்னணி-’இடது’ சாரி கட்சிகளின் விளம்பர தட்டிகள், பேனர்கள், அலுவலகங்கள் ஆகியவைகளை ஒன்று விடாமல் தமிழகம் முழுவதும் கொளுத்தி விட்டனர். தி.மு.க., ஜனதா தள, ‘இடது சாரி’ கட்சி வேட்பாளர்களின் வீடு புகுந்து தாக்கியும் சூறையாடியுள்ளனர். பிரச்சார வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் இக்கட்சிகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகளை ஊக்ககுவித்ததன் மூலம் ராஜீவ் கொலைக்கு தி.மு.க.தான் காரணம் என்று பொய்யையும் அவிழ்த்து விட்டனர். வாழப்பாடி இன்னும் ஒரு படி மேலே சென்று ராஜீவை கொலை செய்தது கருணாநிதி – தி.மு.க.தான் என்றே புளுகியுள்ளார். இவைகளின் மூலம் அக்கட்சிகளை தனிமைப்படுத்துவதில் கணிசமான அளவு வெற்றி ஈட்டியுள்ளனர். மேலும் ராஜீவின் பிணப்பெட்டியைக் காட்டி அனுதாப அலையை எழுப்பி வோட்டு கேட்டு வருவர்.

04-bhopal-tragedy.jpgராஜீவின் கொலையையொட்டி அ.தி.மு.க.-காங்கிரஸ் காலிகள் நடத்திய வெறியாட்டத்தையும், தி.மு.க. மீதான திட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தையும் தி.மு.க.-தே.மு.-’இடது சாரி’ தலைவர்கள் போர்க்குணத்துடன் எதிர்த்து முறியடிக்கவில்லை; மாறாக பீதி கொண்டு செயலற்ற தற்காப்பு நிலையை எடுத்துள்ளனர்; ‘இராணுவத்தை வரவழைத்தாவது அமைதியை நிலைநாட்டுங்கள்’ என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி ஓலமிட்டது பீதியினால்தான்; இதனால், அவர்களது அணிகள் சோர்வுற்று போயுள்ளனர்; அல்லது ஆத்திரமுற்று ஆங்காங்கே எதிர்த்துத் தாக்குகின்றனர்.

ஆனால், காங்கிரசில் ஏற்படும் பிளவுகள் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். மூப்பனார், வாழப்பாடி கோஷ்டிகள் தனித்தனியே செல்ல வாய்ப்புண்டு. தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவரான மூப்பனாருக்குத்தான் தமிழக காங்கிரசில் அதிக செல்வாக்கு உண்டு. எனவே வாழப்பாடி ஓரம் கட்டப்படலாம்; மேலும் அகில இந்திய அளவில் காங்கிரஸ் சிதறி பலவீனமடையது பாரதீய ஜனதா கட்சி வலுப்பெற்றால், பார்ப்பன ஜெயலலிதா தனது விசுவாச வாழப்பாடியை உதறி விட்டு பாரதீய ஜனதா படகில் ஏறிக் கொள்ளலாம். அந்நிலையில் மூப்பனார் பிரிவு காங்கிரசு – தி.மு.க. கூட்டு கூட ஏற்படலாம்.

இந்த மாதிரி அரசியல் விசுவாசங்கள் உடைதல்; புதிய விசுவாசங்கள் அடிப்படையில் புதிய சந்தர்ப்பவாத கூட்டணிகள் ஏற்படுதல்; மீண்டும் அவை உடைதல்; மீண்டும் உருவாதல்; குதிரை வியாபாரம்; ஆட்சிக் கவிழ்ப்புகள் நடக்கும்; நாடாளுமன்ற அராஜகம் இப்படி தலைவிரித்தாடும். இதுதான் அண்மை எதிர்காலத்தில் நடக்கப் போகின்றது.

நாடாளுமன்ற போலி ஜனநாயகம் நடைமுறையில் இப்படித்தான் இழிந்து போகும். அதற்கு விதிக்கப்பட்ட விதி இதுதான்; இதற்கு மாற்று புதிய ஜனநாயகப் புரட்சியில் மலரும் மக்கள் ஜனநாயக அமைப்பே; இதன் அவசியமும் தேவையும் என்றுமில்லாத அளவுக்கு இன்று முன்னணிக்கு வந்துள்ளது.

_____________________________________________________

புதிய ஜனநாயகம் – ஜூன் 1991

http://inioru.com/?p=36214

//ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் ! //

"முள்ளிவாய்க்கால் ராஜீவ் கொலைக்குப் பழிக்குப் பழிதான்"

முள்ளிவாய்காலுக்குப் பழிக்குப் பழி என்ன? அதற்கான எதிர்வினைப் பழிக்குப் பழி என்ன என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.