Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேட்டுக்குடி உறவுகளைத் துறப்பாரா விக்னேஸ்வரன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேட்டுக்குடி உறவுகளைத் துறப்பாரா விக்னேஸ்வரன்?
முத்துக்குமார்

இந்திய அரசின் புண்ணியத்தில் வடமாகாணத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. ஊடகங்கள் பரபரப்பாகச் செய்திகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. ஆனால் அரசியற் கட்சிகள்தான் இன்னமும் வேட்பாளர் பட்டியலை நிறைவு செய்யவில்லை. இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணிக்குள்ளும் உள் இழுபறிகள் முடிவுக்கு வரவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள கட்சிகள் சில தனித்துப் போட்டியிடுவதா? கூட்டணிச் சின்னத்தில் போட்டியிடுவதா? என இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கூட்டணியில் பிரதான கட்சியாக விளங்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடும் விருப்பிலேயே உள்ளது. வடமாகாணத் தேர்தல் நடைபெறலாம் என்ற செய்தி வந்த காலத்திலேயே டக்ளஸ் தேவானந்தா இந்த விருப்பத்தை ஜனாதிபதியிடம் தெரிவித்துவிட்டார். 'நான் வெற்றியடைய வேண்டும் என விரும்பினால், என்னைத் தனித்துவிடுங்கள்' என ஜனாதிபதியிடம் அவர் கேட்டிருக்கின்றார்.

ஆனால் ஜனாதிபதி அவருக்குப் பச்சைக்கொடி காட்டுவார் என எதிர்பார்ப்பதற்கில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கென ஒரு வாக்குவங்கி வடக்கில் கிடையாது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்குத்தான் குறிப்பிட்ட வாக்குவங்கி உண்டு. இதனால் தனித்துக்கேட்கும் டக்ளஸின் எண்ணம் ஈடேறுவது கடினம். இந்நிலை ஏற்பட்டால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கியதைப் போல இந்தத் தடவையும், ஆளுங்கட்சியில் தனித்துத் தமது வேட்பாளர்களை நிறுத்துவதற்கு டக்ளஸ் முனையலாம். ஆனால் இதற்கும் ஜனாதிபதி சம்மதிப்பார் எனக் கூறமுடியாது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர்களுக்கு நேர்முகத் தேர்வுகள் நடாத்தியமை, தேர்தல் கால வேலைவாய்ப்புகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கூடாகவே வழங்கியமை, ரெமீடியஸ், தயா மாஸ்டர் ஆகியோரையும் வேட்பாளர் பட்டியலில் சேர்த்தமை, முதலமைச்சர் யார் எனக் கூறாமல் தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்தமை எல்லாம் டக்ளஸின் தனித்த ஓட்டத்திற்கு இடங்கொடுக்கப் போவதில்லை என்பதையே காட்டுகின்றன.

டக்ளசுடன் இணைந்துதான் ஆளுங்கட்சி தேர்தலில் போட்டியிடுமானால், வேட்பாளர் பட்டியல் தயார் செய்வது தொடக்கம் பிரச்சாரம் வரை பல்வேறு பிரச்சினைகள் தோன்றலாம். டக்ளஸ் வேட்பாளர் பட்டியல் முழுவதும் தனக்குக் கிடைக்கவில்லை என்றால், மூன்றிலிரண்டு பங்கு வேட்பாளர்களாவது தனது கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என அழுத்தம் கொடுக்கப் பார்ப்பார். தன்னை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் எனவும் கேட்கப் பார்ப்பார். இவற்றிற்கு ஆளுங்கட்சி எவ்வளவு தூரம் இணங்கிப்போகும் எனக்கூறுவது கடினம்.

பிரச்சாரச் செயற்பாடுகளிலும் ஐக்கியமான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது. வடக்கில் டக்ளசும், அங்கஜன் இராமநாதனும் கீரியும், பாம்பும்போலவே இருக்கின்றனர். பிரச்சாரக் கூட்டங்களையும், கடந்த பொதுத்தேர்தல் போல தனித்து, தனித்து நடாத்த அவர்கள் முனையலாம்.

முஸ்லிம் காங்கிரசும் வடக்கில் தனித்துக் கேட்கப்போவதாகவே கூறியிருக்கின்றது. இது முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் உண்மையான பேச்சா? அல்லது பேரம் பேசலுக்கான உத்தியா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 13வது திருத்தத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை, மாகாணசபையில் வரும் தீர்மானங்களுக்கு எதிர்த்தே வாக்களிப்போம் எனக் கர்ச்சித்த முஸ்லிம் காங்கிரஸ் மேல்மாகாண சபையில் பதுங்கிக்கொண்டுள்ளது. அங்கு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனரா என்பதும் சந்தேகமே!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வேட்பாளர் பிரச்சினை இன்னமும் உருவாகவில்லை. கட்சிகளுக்கு வேட்பாளர்களை ஒதுக்கும்போது பிரச்சினைகள் தோன்றலாம். கிழக்கு மாகாணம் வேறு, வடக்கு மாகாணம் வேறு என்பதால் தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளுடன் சற்று அனுசரித்துப்போகவே தற்போது முயற்சிப்பது போல தெரிகின்றது. எல்லாக் கட்சிகளையும் சம அளவில் இணைத்த உயர்பீடமும், வேட்பாளர் தெரிவுக்குழுவும் உருவாக்கப்பட இருக்கின்றது. இந்த உயர்குழு உருவாக்க முயற்சிகள்பற்றி தமிழரசுக்கட்சிக்குள் சற்றுப் புகைச்சல் காணப்பட்டாலும், தேர்தல் காலமாகையால், அதனைச் சற்று அடக்கி வாசிக்கின்றது.

முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாகத்தான் கூட்டமைப்புக்குள் போட்டியொன்று உருவாகியிருக்கின்றது. இங்கு இப்போட்டி கூட்டமைப்புக்குள் உருவாகியிருக்கிறது என்பதை விட, வெளியிலிருந்துதான் அதிகம் வருகின்றது போல தெரிகின்றது. கூட்டமைப்புக்குள் முதலமைச்சர் கனவோடு நீண்டநாளாதத் திரிந்த வித்தியாதரன் தற்போது அடங்கிப்போயுள்ளார். மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என யாழ் தமிழரசுக் கிளை தீர்மானம் நிறைவேற்றினாலும், சம்பந்தன் அதில் போதிய அக்கறையைக் காட்டவில்லை. கூட்டணிக் கட்சிகள் கூட மாவையை முதலமைச்சர் வேட்பாளராக்குவதற்கு பச்சைக்கொடி காட்டியிருந்தன. இந்தப் பச்சைக்கொடியைக்கூட சம்பந்தன் கணக்கெடுக்கவில்லை.

சம்பந்தன், முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அல்லது சுமந்திரன் அல்லது கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பீடாதிபதி தமிழ்மாறன் என்போரில் ஒருவரையே முதலமைச்சர் வேட்பாளராக்குவதில் அக்கறைகாட்டி வருகின்றார். அவரது முதலாவது தெரிவு விக்னேஸ்வரனாகவே உள்ளது. விக்னேஸ்வரனும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றாகத் தனக்கு அழைப்பு விடுத்தால், வேட்பாளராக நிற்பதை பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார். இறுதியாக வந்த செய்திகளின்படி, விக்னேஸ்வரனே வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதுபோல தெரிகின்றது.

கொழும்புத் தமிழ் உயர்குழாமினரும் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும் வகையில் காய்களை நகர்த்தி வருகின்றனர். சட்டத்தரணி நீலகண்டன், தமிழர் ஆய்வுமையச் செயற்பாட்டாளர் காண்டீபன், கம்பவாரிதி ஜெயராஜ் ஆகியோர் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டமைப்பிலுள்ள கட்சிகளிலிருந்து இது தொடர்பான அபிப்பிராயங்கள் பெரியளவிற்கு வரவில்லை.

கொழும்புத் தமிழ் உயர்குழாமின் முயற்சிகள், தமிழ் அரசியலை தங்கள் கைகளில் எடுக்கும் செயற்பாடா என்ற கேள்வியையும் எழுப்பிவிட்டிருக்கின்றது. விடுதலை இயக்கங்கள் எழுச்சியடைவதற்கு முன்னர் தமிழ் அரசியல் கொழும்புத் தமிழ் உயர்குழாமின் செல்வாக்கின் கீழ்தான் இருந்தது. தமிழரசுக்கட்சி வட - கிழக்கில் தமிழ் மத்தியதர வர்க்கத்தை ஓரணியாக இணைத்திருந்தாலும் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கொழும்புத் தமிழ் உயர்குழாமிடமே இருந்தது. இதனைச் சாதாரண மக்களின் கைகளுக்கு மாற்றியது விடுதலை இயக்கங்களே. விடுதலை இயக்கங்களின் தோற்றத்தின் பின்னர்தான், சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அரசியலில் பங்கேற்கவும், தலைவர்களாக வரவும் முடிந்தது. தமிழ் அரசியல் ஆயுதப் போராட்டம் என்ற கட்டத்திற்கு வளர்ந்த பின்னர், கொழும்புத் தமிழ் உயர்குழாமினரால் அதனை முன்கொண்டு செல்லமுடியவில்லை. தமிழ் அரசியல் இயல்பாகவே இயக்கங்களின் கைகளுக்குச் சென்றது.

விடுதலை இயக்கங்களின் ஆயுதப் போராட்டத்திற்கு கொழும்புத் தமிழ் உயர்குழாம் ஆதரவாக இருந்தது எனவும் கூறிவிடமுடியாது. எதிர்க்க முடியாத நிலையில் சகித்துக்கொண்டிருந்தது எனக் கூறலாம். ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் எதிராகச் செயற்படவும் அவை பின்னிற்கவில்லை. ஆதரவாகச் செயற்படுவதற்கு மேட்டுக்குடி நலன்கள் அவர்களுக்குத் தடையாக இருந்தன. தங்களுக்கான சந்தர்ப்பத்திற்காக அவர்கள் காத்துக்கொண்டிருந்தனர். ஒருவகையில் புலிகள் அழிக்கப்படுவதற்கு அவர்களும் ஒரு காரணியாக இருந்தார்கள் எனக் கூறலாம். அரசியல் தீர்விற்குப் புலிகள்தான் தடையாக இருக்கின்றனர் என்கின்ற ஒரு பிம்பம் சர்வதேச ரீதியாக கட்டியெழுப்பப்பட்டபோது இவர்களும் அதற்குத் துணைபோயினர்.

இதைவிட கொழும்புத் தமிழ் உயர்குழாம் - சம்பந்தன் கூட்டு, புலிகள் முன்வைத்த அரசியல் தீர்விற்குக் குறைவான, தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை எந்தவகையிலும் பிரதிபலிக்காத 13வது திருத்தத்தை ஏற்பதற்குத் தயாராக இருந்தனர். இதனால்தான் சர்வதேச சக்திகளும், புலிகளை அழிக்கத் துணைபோயினர். புலிகளின் அரசியல் நிலைப்பாட்டில் இந்தக் கூட்டமும் இருந்திருக்குமானால் புலிகளை வைத்துக்கொண்டே பிரச்சினையைத் தீர்க்க சர்வதேச சமூகம் முற்பட்டிருக்கும்.

தற்போது கூட சம்பந்தன், சுமந்திரன் நடாத்துகின்ற அரசியலுக்கும், கூட்டமைப்பின் ஏனையவர்கள் நடாத்தும் அரசியலுக்குமிடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. இவர்கள் இருவரும் 13வது திருத்தத்துடன் திருப்திப்படுகின்ற நிலையிலேயே உள்ளனர். தமிழ்த் தேசியத்திற்கு அடிப்படையாக உள்ள தாயகம், தேசியம், சுயநிர்ணம் என்பவற்றைக் கைவிடுவதற்கும் தயாராகவுள்ளனர்.

இந்தநிலைப்பாட்டினால் மிகவும் இலகுவாக சிங்கக்கொடியேற்ற சம்பந்தனால் முடிந்தது. ஆளுங்கட்சியினரோடு கிறிக்கற் விளையாடவும், ஐக்கியதேசியக் கட்சி முன்வைத்த ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வை வரவேற்கவும் சுமந்திரனால் முடிந்தது. மக்களுடன் நேரடித்தொடர்பு இல்லாததினால் தமது செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்குப் பொறுப்புச் சொல்லவேண்டிய தேவையும் இவர்களுக்கு இருப்பதில்லை.

ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களினது நிலை அவ்வாறில்லை. அவர்கள் மக்களோடு நிற்பவர்கள், மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியவர்கள். இதனால்தான் சம்பந்தன் சிங்கக்கொடி ஏற்றியபோதும், சுமந்திரன் ஐக்கியதேசியக் கட்சியின் தீர்வு யோசனையை வரவேற்றபோதும், மாவை எதிரப்புத் தெரிவித்தார். சிறீதரன் தனது கிராம யாத்திரையில் 13வது திருத்தம் அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகவோ, இடைக்கால ஏற்பாடாகவோ, நிரந்தரத் தீர்வாகவோ இருக்கமுடியாது எனக் கூறியிருக்கின்றார். சுரேஷ் பிரேமச்சந்திரன் மாகாணசபை முறை தமிழ்மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்காததனால் அதனோடு என்னைத் தொடர்புபடுத்த விரும்பவில்லை என ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியிருக்கின்றார். எனினும் தமது இருப்பை பாதுகாப்பதற்காக, சம்பந்தன் தலைமைக்குப் பின்னால் இழுபட்டுச் செல்வதைத் தவிர இவர்களுக்கு வேறு தெரிவு எதுவும் இருக்கவில்லை.

உண்மையில் மிகவும் சோகமான விடயம் என்னவென்றால், கூட்டமைப்புக்குள் மக்களுக்குப் பொறுப்புச் சொல்லவேண்டிய நிலையில் இருக்கும் சம்பந்தன், சுமந்திரன் தவிர்ந்த ஏனைய தலைவர்களுக்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இல்லை என்பதே. இது டொனமூர் யாப்புப் போல அதிகாரம் உள்ள இடத்தில் பொறுப்பு இருக்கவில்லை, பொறுப்பு உள்ள இடத்தில் அதிகாரம் இருக்கவில்லை என்ற நிலையையே உருவாக்கியிருக்கின்றது. தீர்மானங்களை சம்பந்தனும், சுமந்திரனும் மட்டுமே எடுக்கின்றனர். பெயருக்குக்கூட ஏனையவர்களுடன் கலந்தாலோசிப்பதில்லை. சிலவேளைகளில் சம்பந்தன் மட்டுமே எடுக்கின்றார். இது விடயத்தில் ஏனையவர்களின் எதிர்பபுக்கள் வெறும் புகைச்சலோடு அடங்கிவிடுகின்றது.

தீர்மானங்களை ஜனநாயக ரீதியில் எடுப்பதற்கு கூட்டமைப்புக்குள் எந்த அமைப்புப் பொறிமுறைகளும் கிடையாது. தமிழரசுக் கட்சிக்குள் அமைப்புப் பொறிமுறைகள் இருப்பதாக ஒரு தோற்றநிலை இருந்தாலும், சம்பந்தன் தலைமை அதனை மதிப்பதில்லை. பேராசிரியர் சிற்றம்பலம், தான் செயற்குழுவில் அங்கத்தவனாக இருக்கின்றபோதும் கூட்டமைப்புக்குள் உயர்பீடம் அமைப்பது பற்றி தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

இந்த அரசியல் போக்கின் மத்தியில்தான் நீதியரசர் விக்னேஸ்வரனை உள்ளே இழுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அவரது வருகை பற்றி பல கேள்விகள் எழுகின்றன. அவர் ஒரு கல்விமான், நேர்மையானவர், தமிழ்த்தேசியத்தில் மிகுந்த பற்றுக்கொண்டவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஒரு போராட்டம் நிறைந்த தமிழ் அரசியலில் அரசியல்வாதியாகுவதற்கு இவை மட்டும் போதுமானதா? என்ற கேள்வி எழுவது இங்கு தவிர்க்கமுடியாததாகின்றது.

முதலாவது, நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு தமிழ் அரசியல் பற்றி கேள்வி ஞானம் மட்டுமே உண்டு. நேரடி அனுபவம் ஏதுவும் கிடையாது. நேரடி அனுபவத்தைப் பெறுவதற்கு அவரது வாழ்விடம், குடும்பப் பின்னணி, தொழில் என்பன இடங்கொடுக்கவில்லை. நீண்டகால அனுபவமுள்ளவர்களே ஆபத்து நிறைந்த தமிழ் அரசியலை முன்னெடுக்கத் திணறும்போது எந்தவித அனுபமும் இல்லாத நீதியரசரினால் நின்றுபிடிக்க முடியுமா? இவரைப்போன்ற கல்விமான்களுக்கு, அவரவர் தளத்திலிருந்து தமிழ்த்தேசியம் தொடர்பாக பங்களிக்கப் பல பணிகள் இருக்கின்றன. நேரடி அரசியலில் ஈடுபட்டுதான் அதனை நிறைவேற்றவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் கல்விமான் என்பதற்காக இறக்கப்பட்டவர் பெரியளவிற்கு சோபிக்கவில்லை. விக்னேஸ்வரன் அனுபவமில்லாத தொழிலில் இறங்கி தன்னுடைய பெயரைக் கீழிறக்க வேண்டுமா?

இரண்டாவது, அவர் கொழும்புத் தமிழ் உயர்குழாமினரின் பிரதிநிதியாக இருந்துகொண்டு மேட்டுக்குடி அரசியலை நகர்த்தப்போகின்றாரா? அல்லது சாதாரண மக்கள் மட்டத்திற்கு கீழிறங்கி மக்களுக்கான உண்மையான அரசியல் போராட்டத்தை நடாத்தப் போகின்றாரா? என்பதற்கு விடைதெரிய வேண்டும். 13வது திருத்தம் உட்பட, தமிழ் மக்களின் பிரச்சினைகள் வெறும் சட்டரீதியான பிரச்சினைகள் அல்ல. அவை அரசியல் பிரச்சினைகள். மக்களை இணைத்த அரசியல் போராட்டங்களை நடாத்துவதன் மூலமே இவற்றை முன்கொண்டு செல்லமுடியும். வெறும் கனவான் அரசியல் தமிழ் அரசியலை நகர்த்த ஒருபோதும் உதவப்போவதில்லை.

சுமந்திரன் போல காணிப்பறிப்புப் பிரச்சினையை நீதிமன்றத்தில் பொறுப்பித்துவிட்டு, தனது அரசியல் பொறுப்பை தட்டிக்கழித்ததுபோல, விக்னேஸ்வரனும் மாகாணசபை அதிகாரப் பிரச்சினைகளை நீதிமன்றத்தில் பாரப்படுத்திவிட்டு சும்மா இருப்பாரேயானால் எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை. நீதிமன்றம் இதுவிடயத்தில் எவ்வாறு நடந்துகொள்ளும் என நாம் அவருக்குக் கூறத் தேவையில்லை.

மூன்றாவது, தமிழ்த்தேசிய அரசியல் தொடர்பாக அவரது கொள்கை நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெளிவாக விளக்கவேண்டும். சம்பந்தனையும், சுமந்திரனையும் போல 13வது திருத்தம்தான் தீர்வு என அவரும் செயற்படுவாராக இருந்தால், மிகப் பெருந்திரளான தமிழ்த்தேசிய ஆர்வலர்களிடமிருந்து அவர் அந்நியப்படவேண்டி ஏற்படும். மாறாக 13வது திருத்தம், அரசியல்தீர்வின் ஆரம்பப் புள்ளியாகவும் இருக்கப்போவதில்லை என்பதைக் கொள்கையாக வைத்துக்கொண்டு, மாகாணசபையை அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான வலுவான அரசியல் தளமாக பயன்படுத்த முனைவராக இருந்தால், தமிழ்த்தேசிய ஆர்வலர்களும் அவரை நோக்கிக் கவரப்படுவர்.

தமிழ் அரசியல் சர்வதேச ரீதியாக பரிணாமவளர்ச்சி பெற்றபின்னர், தாயகம் மட்டும் ஒரு அரசியல் களமாக இல்லை. புலம்பெயர் களம், தமிழகக் களம் என்கின்ற இரு வலுவான களங்கள் வேறு இருக்கின்றன. தாயகம், புலம், தமிழகம் ஆகிய மூன்று களங்களையும், ஒரே நேர்கோட்டில் கொண்டுவர முயல்பவர்களே தமிழ்த்தேசிய ஆர்வலர்களின் நட்புச்சக்தியாக இருப்பர். உலகத் தமிழர்களை ஒரு சக்தியாக இணைக்கும் போதே வலுவான அரசியலாக தமிழ் அரசியலை முன்கொண்டு செல்லமுடியும்.

துரதிஸ்டவசமாக சம்பந்தன் தலைமை பின்பற்றும் கொள்கை நிலைப்பாட்டிற்கும், புலம், தமிழகம் என்பன பின்பற்றும் கொள்கை நிலைப்பாட்டிற்கும் இடையே பாரிய இடைவெளி இருப்பதனால், ஒரே நேர்கோட்டில் வருவது இன்னமும் சாத்தியமாகவில்லை. சிங்கக்கொடி பிடிப்பவர்களோடு நேர்மையான தேசிய சக்திகள் நல்லுறவுகளைப் பேண முன்வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது.

நான்காவது, மாகாணசபையை வென்றெடுத்த பின்னர் தமிழ்மக்களின் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கு விக்னேஸ்வரன் என்ன வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்போகின்றார் என்பதை தேர்தலுக்கு முன்னரே அவர் தெளிவாக முன்வைக்கவேண்டும். கூட்டமைப்புத் தலைமையின் கொள்கையும், வேலைத்திட்டமுமே என்னுடையதாக இருக்கும் எனக் கூறிவிட்டு அவர் வாழாவிருக்க முடியாது. ஏனெனில் கூட்டமைப்பிற்கென ஒருகொள்கைத் திட்டமும் கிடையாது, ஒரு வேலைத்திட்டமும் கிடையாது. எல்லாவற்றிற்கும் இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருப்பது மட்டுமே அதன் செயற்பாடு.

இந்தத் துரதிஸ்டநிலையை கிழக்கு மாகாணசபையில் தெளிவாகவே தரிசிக்க முடிந்தது. அங்கு ஒரு சமூகமே எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தமிழ்மக்களின் பிரச்சினைகள் பெரியளவிற்குப் பேசுபொருளாக வரவில்லை. தமிழ் உறுப்பினர்கள் மாகாணசபையை தமிழ்மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வலுவான அரசியல் களமாகவும் மாற்றவில்லை. முஸ்லிம் உறுப்பினர்கள் பயன்படுத்திய அளவிற்காவது இவர்கள் பயன்படுத்தினார்களா என்பது சந்தேகமே. தமிழ் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இங்கு இருக்கின்றார் என்பதுகூட வெளியில் பெரிதாகத் தெரியவில்லை. முறையான வேலைத்திட்டமோ, கொள்கைத் திட்டமோ, வழிகாட்டும் தலைமையோ இல்லாததுதான் இதற்குக் காரணம். ஆளுநரின் அடாவடித்தனத்திற்கு எதிராக முஸ்லிம்கள் தான் போராடுகின்றார்களே தவிர, தமிழ் உறுப்பினர்கள் அதில் எந்தவிதப் பங்கினையும் எடுக்கவில்லை. ஆளுநருக்கு எதிராக முஸ்லிம்கள் மாகாணசபை அமர்வுகளைப் புறக்கணித்தபோது, இவர்கள் கலந்துகொண்டு காட்டிக்கொடுத்தனர்.

13வது திருத்தமும், மாகாணசபை முறையும் வெறும் தோற்றப்பாட்டுத் தீர்வுகளே தவிர, உண்மைத் தீர்வுகள் அல்ல. தோற்றப்பாட்டுத் தீர்வுகளில் அதிகாரம் இருப்பதுபோல தெரியும், ஆனால் உண்மையில் இருப்பதில்லை. தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மத்தியில்தான் இருக்கும். மத்தி தயவுபண்ணினால் மட்டும் ஏதாவது கிடைக்கும். இது பிச்சைக்காரனுக்கு பிச்சைகொடுப்பது போன்றது. கொடுக்கப்பட்ட அதிகாரங்களை பின்கதவால் பறிக்கின்ற பொறிமுறை இருக்கும். வழுவி வருகின்ற அதிகாரங்கள் முதலமைச்சரிடம் வராமல் ஆளுநரிடம் தங்கிநிற்கும். கிழக்கு மாகாணசபை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

இந்நிலையில் சிறிய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வது கூட கல்லில் நார் உரிப்பதற்குச் சமமாகவிருக்கும். இந்நிலை ஏற்படும்போது விக்னேஸ்வரன் என்ன செய்வார்? மாற்றுப்பாதை ஒன்றைத் தெரிவுசெய்வதற்கு ஒத்துழைப்பாரா? மாற்றுப்பாதை என்பது புவிசார் அரசியலைப் பயன்படுத்தும் சர்வதேசப் பாதையே. சர்வதேசத்துடன் நீதி கேட்கின்ற அந்தப்பாதையைத் திறப்பதற்கு விக்னேஸ்வரன் தயாராக இருப்பாரா? சர்வதேச ஆதரவில் அதன் பாதுகாப்புடன் இடைக்கால நிர்வாகம் ஒன்றினை நோக்கிச் செல்வதே அப்பாதையின் முதல் படியாகவிருக்கும்.

விக்னேஸ்வரன் கொழும்பு மேட்டுக்குடியைச் சேர்ந்தவர் என்பதை மறுப்பதற்கில்லை. இதற்காக அவர் சிறந்த அரசியல் போராளியாக வரமாட்டார் எனவும் கூறிவிடமுடியாது. வரலாற்றில் பலர் வந்திருக்கின்றனர். விக்னேஸ்வரனும் வரக்கூடும்.

தமிழ் அரசியலில் கஜேந்திரகுமார் கொழும்பு மேட்டுக்குடியைச் சேர்ந்தவர். இன்று தீவிர அரசியல் போராளியாக வந்திருக்கின்றார். அவருக்கும், அவரது தந்தையார், பாட்டனாருக்கும் இடையிலான வேறுபாடு, முன்னவர்கள் கொழும்பு மேட்டுக்குடி உறவுகளை முறிக்காது அங்கிருந்துகொண்டு தமிழ் அரசியலைச் செய்தனர். ஆனால் கஜேந்திரகுமார் அதனை முறித்துக்கொண்டு தாயகத்தில் நின்று தமிழ் அரசியலைச் செய்கின்றார். இன்று அவரது நண்பர்கள் கொழும்பு மேட்டுக்குடியினர் அல்ல. மாறாக யாழ்ப்பாண மத்தியதர வர்க்க இளைஞர்களே.

கஜேந்திரகுமாரினது வரலாற்றுப் பங்களிப்பு தமிழ் அரசியலுக்கான ஒரு மாற்றுப்பாதையை புவிசார் அரசியல் நிலைக்கேற்ப உருவாக்கி, அதில் உறுதியாக நிற்பதுதான். இந்தக் கொள்கை நிலைப்பாட்டிற்காக பதவிகளைத் தூக்கி எறிவதற்கும் அவர் தயங்கியதில்லை.

தமிழ் அரசியலுக்கு இன்றைய தேவை தேர்தலில் கூத்தடிக்கும் தலைவர்கள் அல்ல. மாறாக ஒரு தேசிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பக்கூடிய அர்ப்பணமுள்ள தலைவர்களே!

விக்னேஸ்வரன் மேட்டுக்குடி உறவுகளை துறப்பாரா?

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=7c52eea5-b8a5-48b2-b8dd-6565b430fd85

ஒரு நல்ல நீதியாளனை. எந்த ஒரு அரசியல் அழுத்தத்திற்கும் பணியாது தீர்ப்புகள் பல வழங்கிய நீதிபதிய முதலமைச்சரா வர விடாமல் மேட்டுக்குடி போட்டுக்குடு எண்டு கூச்சல் செய்பவர்கள் இந்தியா வை போல எம் தேசமும் ஜாதிகளின் பெயரால் அழிய வேண்டும் என்று எதிர்பார்க்குரார்கள் போல. இந்திய,இலங்கை ஜால்ராக்கள் முதலமைச்சரா வராமல் விக்கினேஸ்வரன் போன்ற துணிவான இனப்பற்றுள்ள  தமிழர்கள் முதலமைச்சராக வரவேண்டும் 

மேட்டுக்குடி என்றால் என்ன? சாதிவெறியர்கள் இனவாதிகளுக்கு மட்டுமே இப்படியான பிரிவுகள் தோன்றும்.

தமிழின விரோத இந்திய, சிங்கள கைக்கூலிகளின் ஊளையிடுதல்கள் விரைவில் அடங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
வெறும் கனவான் அரசியல் தமிழ் அரசியலை நகர்த்த ஒருபோதும் உதவப்போவதில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம்...கட்டுரை பல நல்லவிடயங்களை எடுத்துக்காட்டியுள்ளது

இப்படி ஒரு ஆள் முன்வருவது எங்களுக்கு எவ்வளவு பலம் ,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.