Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்விற்கே இத்தனை இழுபறி தேர்தலில் வென்று என்ன சாதிக்கப்போகின்றார்கள்?

Featured Replies

26072013%20008.jpgவடக்கு மாகாணசபை தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கால இழுபறிகளும் கூடவே சூடு பிடித்திருக்கின்றது. முதலமைச்சர் வேட்பளார் இழுபறிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், மீண்டும் வேட்பாளர்கள் தெரிவில் இழுபறிகள் ஆரம்பித்திருப்பதே தமிழர் தாயகத்தின் வடபுலத்தின் சமகால அரசியல் போக்கில் நிறைந்திருப்பதை நாம் கண்டுணர்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தலை கூட்டமைப்பு எதிர்கொள்ளக் கூடாது, சுயேட்சையாக களமிறங்கி தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்ற விவாதங்களுக்கு அப்பால் கிழக்கு மாகாணத்தைப் போன்றே வடக்கிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாகத் தேர்தல் திருவிழாவில் கடைவிரித்திருக்கின்றது. இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாகாணசபைக்குரிய அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்த முடியாமல், இந்த மாகாணசபை மூலம் தமிழர்கள் அடையக் கூடியது எதுவுமில்லை.

13ம் திருத்தச் சட்டம் ஒருபோதும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை என்ற உண்மையினை இந்தியாவிற்கும், மேற்கு நாடுகளுக்கும் உணர்த்துவார். அதன் மூலம் தமிழர் அரசியலில் அது மிகப்பெரும் புரட்சியாக மாறும் என்றெல்லாம் உணர்ச்சிவசப்படுத்திக் கொண்டிருக்கின்றது கூட்டமைப்பு. ஆனால் ஒருவேளை முதலமைச்சராக, சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அரசாங்கத்தின் நிலைப்பாடுகளுடன் ஒத்துப்போகும், அல்லது நெகிழ்வுத் தன்மையுள்ள ஒருவராக முதலமைச்சர் மாறினால் என்ன செய்வது? வடக்கில் புரட்சி எப்படிச் சாத்தியம்? என்ற நியாயமான மறுபக்கம் பார்க்கும் கேள்விக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் நிச்சயமாக விடையில்லை. மற்றொரு பக்கம் தேர்தலுக்கு முன்னதாக வடக்கின் 5 மாவட்டங்களிலும் முஸ்லிம் மக்களை அரசு குடியேற்றி வருகின்றது.

அதைவிட கிராமங்கள் தோறும் நுழையும் அரசாங்கம் மக்களுக்கு தேர்தல் கால கொடுப்பனவுகளை அள்ளி வழங்கி, கொடுக்கல் வாங்கல் அரசியலை மிகவும் திறம்படச் செய்து கொண்டிருக்கின்றது. எனவே ஒருவேளை கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதைப் போன்றதொரு நிலை வடக்கில் ஏற்பட்டால் வடக்கில் ஏற்படப் போகும் புரட்சியின் நிலை என்ன? 13ம் திருத்தச் சட்டம் தமிழர்களுக்குத் தீர்வாகி, பூரண சமஷ்டி கேட்டு, தமிழீழ தனிநாடு கேட்டு 60 வருடம் இரத்தம் தோய்ந்த வரலாற்றைப் படைத்த தமிழர்கள் இறுதியில் இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ் மண்டியிடுவதா? இந்தக் கேள்விகளைக் கேட்டால் துரோகி என்பார்கள். சரி கூட்டமைப்பின் நம்பிக்கை விடயத்தில் நாம் தலையிட வேண்டாம். தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் இழுபறிப்பட்டார்கள், இப்போது போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தெரிவிலும், கூட்டமைப்பிற்குள் அங்கத்துவம் பெறும் கட்சிகளுக்கான ஆசனங்கள் தெரிவிலும் மீளவும் இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இழுபறிகள் நிறைவடையும் தருணத்தில் வேட்பு மனுத் தாக்கலும், அதன் பின்னர் தேர்தலும் வந்துவிடும். மக்கள் ஒரு பகுதியினர் வாக்களிப்பார்கள், மறு பகுதியினர் அமைதியாகவே இருந்து விடுவார்கள். வென்றவர்கள் வெல்ல, தோற்றவர்கள் தோற்றதுதான்.

தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது? தேர்தலில் மக்களை முழுமையாக எப்படி வாக்களிக்கச் செய்வது என்பது குறித்தெல்லாம் எவ்வித தீர்மானங்களும், முன்னெடுப்புக்களும் இல்லை. மக்களுக்கு என்ன சொல்லப்போகிறோம்? என்ன சட்ட மூலங்களை நிறைவேற்றப் போகிறோம்? ஆழுமையுள்ள மாகாணசபை அமைச்சரவை ஒன்றை எப்படி உருவாக்கப் போகின்றோம்? என்பது குறித்தெல்லாம் இதுவரை தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆலோசிப்பதாக தெரியவில்லை.

போனவன், வந்தவனுக்கெல்லாம் மாகாணசபையில் உனக்கும் இடம் என்று வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கின்றார். பெருந்தலைவர் மாவை சேனாதிராசா இப்போது 19 ஆசனங்களுக்கு 30 பேருக்கும் மேல் எங்களுக்கும் தருவதாகச் சொன்னீர்கள் எங்களுக்கும் தாருங்கள் என்று கேட்டு நிற்கின்றார்களாம். இந்தப் பரிதாபகரமான நிலைகண்டு தமிழ் தேசியவாதிகள் வெட்கித் தலை குனியவேண்டும்.

காயம்பட்ட ஒரு இனத்தின் பணியை காவிச் செல்லும் கூட்டமைப்பின் சமகால அரசியல் நிலைப்பாடு இதுவே. இந்த இலட்சணத்தில், மாவை சேனாதிராசாவை வேட்பாளராக நியமிக்காவிட்டால் தீ குளிப்பேன் என்கிறான் ஒருவன். மாகாணசபைத் தேர்தல் என்பது 5ம் கட்ட ஈழப்போர் என்கிறான் இன்னொருவன், என்ன கொடுமையப்பா? இதற்குள் மாவை சேனாதிராசா முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்படவேண்டும் எனக்

கோரி, கூட்டமைப்பிலுள்ளவர்கள் மாவை சேனாதிராசா முதலமைச்சராக போட்டியிடுவதற்கு தகுதியுள்ளவர் என்கு கூறிவிட்டு அவருடைய தகுதிகளாகச் சொன்ன விடயங்கள் இன்னும் கொடுமை. கூட்டமைப்பிலுள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னார் மாவை சேனாதிராசாவுக்கு வடக்கில் 5 மாவட்ட ங்களிலும் உள்ள சந்து பொந்து எல்லாம் தெரியும் என்று. இதை பத்திரிகையில் படித்த ஒரு பேருந்துச் சாரதி சொன்னார் எனக்கும் சந்து பொந்து எல்லாம் தெரியும், நானும் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்று. இதெல்லாம் எங்கள் இனத்தின் சாபக்

கேடுகள். இதுபோதாதென்று முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்திய ஆதரவுள்ள இந்தியாவின் ஆள் என்றும் ஒருவர் கூறினார்.

நாம் தெரியாமல் கேட்கிறோம் மாவை யாருடைய ஆள்? இந்தியாவின் வாய்ச் சொல்லை மீறி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு வார்த்தை பேசியிருக்குமா? ஒரு செயல் செய்திருக்குமா? இவை எல்லாவற்றையும் விட கேலி கூத்து என்னவென்றால், மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவில்லை என ஒரு பத்திரிகை விழுந்து விழுந்து எழுதியது. மறுபக்கம் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.க.சிற்றம்பலம் உடனடியாக மத்திய குழு கூட்டப்பட வேண்டும் என்று சம்மந்தருக்கு கடிதம் எழுதினார். அதோடு நின்று விடாமல் சம்மந்தருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணை கொண்டுவரப் போவதாகவும் கூச்சலிட்டார்.

நாம் இதையும் தெரியாமலேயே கேட்கிறோம். இதே சிற்றம்பலம் 2008ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரைக்கும் கொடுமையான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஆயிரக்கணக்கில் பூவும், பிஞ்சும் இரத்த வெள்ளத்தில் கிடந்தபோது மௌனியாக இருந்த சம்மந்தருக்கு எதிராக ஏன் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவில்லை? அது போகட்டும் யுத்தத்திற்குப் பின்னர் வடக்கில் எத்தனையோ கொரூரங்கள் நடத்தேறின. அப்போதெல்லாம் கூட்டமைப்புச் செய்வது தவறு, சம்மந்தன் செய்வது தவறு, சம்மந்தன் தலைவராக இருப்பதில் அர்த்தமில்லை என ஏன் கூச்சலிடவில்லை? ஏன் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவில்லை? எல்லோரும் ஆசனங்களுக்காக அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தங்கள் தங்கள் ஆசனங்களை தக்க வைத்துக் கொள்வதிலும், தங்களுக்கு புதிய ஆசனங்களை பறித்துக் கொள்வதிலும் மட்டும் குறியாக இருக்கின்றார்கள். இவர்களே காயம்பட்ட தமிழினத்தை காவிச் செல்லப் போகிறார்கள். பாவம் தமிழர்கள். தங்கள் கடைசி அத்தியாயம் கூட்டமைப்பினால் எழுதப்பட்டுக் கொண்டிருப்பது கூட தெரியாமல் வாக்களிக்கப் போகிறார்கள்.

நாங்கள் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் கூறியதை எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். மக்கள் ஒரு வெற்றுக் காகிதம். அதில் நீங்கள் எதனை ஆழமாக எழுதுகிறீர்களோ அதுவே மக்களுடைய நிலைப்பாடு.? நாங்கள் ஒருபோதும் மக்களை குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அல்ல, ஆனால் மக்கள் சுயமாக சிந்திக்கவேண்டும் என கூற முற்படுகிறோம். எல்லாம் செப்படி வித்தை, எப்போதோ (2009 இலேயே) முடிந்த காரியம். 

- தாயகத்தில் இருந்து இளங்கீரன்

நன்றி: ஈழமுரசு

 

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினையை வெற்றிகண்ட நாடுகளின் வழியில் தமிழர் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும்

“இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் சிறந்ததொரு தீர்வை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் அவற்றை எல்லாம் தவறவிட்டதுதான் இன்று உள்நாட்டுப்பிரச்சினை சர்வதேச அரங்கில் எதிரொலிக்கக் காரணமாக அமைந்தது” இவ்வாறு பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவிக்கிறார்.

இனப்பிரச்சினையின் வரலாற்றுப் பரிமாணம் தொடர்பிலும் சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் வீரகேசயின் வாரவெளியீட்டுக்கு அவரளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.Prof..Sittampalam.jpg

தமிழர் பிரச்சினையை அரசியல் வரலாறாக, நூல்கள் வடிவிலும் ஆய்வுக்கட்டுரைகள் வாயிலாகவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற மாநாடுகளில் வெளிக்கொண்டுவந்த யாழ் பல்கலைக்கழத்தின் வரலாற்றுதுறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தகை சால் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் வீரகேசரியின் வாரவெளியீட்டுக்கு அளித்த பேட்டியின் முழுமை வருமாறு:

கேள்வி: நீங்கள் ஒரு வரலாற்றத்துறைப் பேராசிரியர் என்ற வகையில் வரலாற்று ரீதியில் இலங்கையில் இனங்களுக்கிடையில் நிலவிவரும் முரண்பாடுகள் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் போன்றவற்றுடன் இன்றைய போருக்குப் பின்னரான காலகட்டத்தையும் நிலைமைகளையும் எவ்வாறாகப் பார்க்கின்றீர்கள்?

பதில்: இன்றைய இனமோதல்களுக்கு அடிப்படைக்காரணம் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை முன்வைக்காமையே ஆகும்.

அத்துடன் ஐதீகங்களின் அடிப்படையிலும் கட்டுக்கதைகளின் அடிப்படையிலும், வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள மக்களின் வரலாற்றுப் பாரம்பரியம் இன முரண்பாட்டுக்கோர் காரணமாகும்.

இன்றுள்ள சிங்கள மக்களின் மூதாதையர் என்று கருதப்படுகின்ற விஜயன் இந் நாட்டுக்கு வந்த மூத்தகுடி என்ற நம்பிக்கையும் பௌத்த பிக்குமாரால் இந்நாட்டில் புத்தபிரான் பற்றி வளர்த்தெடுக்கப்பட்ட ஐதீகம் இந்நாடு சிங்கள பௌத்த நாடு என்ற நம்பிக்கையை சிங்கள மக்கள் மத்தியில் வேரூன்ற வைத்துள்ளது. இன்றும் இக் கருத்து வளர்த்தெடுக்கப்பட்டே வருகின்றது.

ஐதீகங்களை அடியொற்றிவந்த வரலாற்று நூல்களிலும் இந்நாடு ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் தொடர்ச்சியாக அரசாட்சி செய்யப்பட்டது என்ற மற்றொரு மாயையும் கூறப்படுகின்றது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஏற்பட்ட சிங்கள, பௌத்த கலாசார மறுமலர்ச்சியும் சிங்கள பௌத்தர்களின் கைகளில் ஆட்சியதிகாரம் கைமாறுவதற்கான பின்புலத்தினையே அளித்திருந்தது.

பிரித்தானியர்களிடம் இருந்து சுதேசிகளின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் கைமாற்றப்பட்டபோது ஐதீக பின்புலத்தில் வாழ்ந்த அரசியல்வாதிகளாலும் இப் பின்புலத்தில் வளர்ந்த சிங்களப் பொது மக்களாலும் ஒற்றையாட்சி அமைப்பு அங்கீகரிக்கப்பட்ட அதாவது மாற்றமுடியாத ஒன்றாகவே வளர்த்தெடுக்கப்பட்டது.

இதனை நாம் பிரித்தானியர்களிடம் இருந்து நாடு சுதேசிகளுக்கு கைமாறிய பின்னர் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்புகளை வைத்து விளங்கலாம்.

இவ்வாறாகக் கொண்டுவரப்பட்ட கட்டமைப்புகளே நாட்டின் ஏனைய தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களை அங்கீகரித்து அவர்களையும் நாட்டின் அரசியல் பங்காளிகளாக மாற்றுவதில் தடையை ஏற்படுத்தியுள்ளது. பல்தேசிய இனங்கள் வாழும் இந் நாட்டில் தேசிய இனங்கள் தமது தனித்துவமான அடையாளத்துடன் அரசியல் அதிகாரத்தினைப் பகிர்ந்து கொள்வதற்கும் சகலரும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் வாழ்வதற்குமான சந்தர்ப்பத்தினை இது வழங்கவில்லை. மாறி மாறி ஆட்சிப்பீடமேறியவர்கள் ஐதீகப் பின்புலத்தினை தங்களது சுயநலத்திற்காக பயன்படுத்தினர்.

மாறாக நாம் எல்லோரும் இலங்கையர் என்ற கருத்துருவாக்கத்தினை கட்டியெழுப்புவதற்கு ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்கள் முயற்சிக்கவில்லை. இதனால் சுதந்திரத்திற்குப் பின்னர் இற்றை வரை இலங்கையர் என்ற அடையாளம் மேலோங்கவில்லை.

சுருங்கக் கூறினால் இன மோதலுக்கும் அமைதியின்மைக்கும் பிரதான காரணம் இவ்வாறாக சிங்கள மக்களிடத்தில் கட்டிவளர்க்கப்பட்டுள்ள ஐதீகமேயாகும்.

கேள்வி: ஒவ்வொரு நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் வரலாறு பற்றிய புதிய பார்வைகள், மீளாய்வுகள் நடைபெறுகின்றனவே. அது போன்று இலங்கையில் ஏதும் நடைபெற்றதா? இதில் உங்களின் பங்களிப்பு எத்தகையது?

பதில்: வரலாறு பற்றிய மீளாய்விலே இலங்கையைப் பொறுத்த வரையில், இரண்டு கூறுகள் இருக்கின்றன. அதில் ஒன்று ஆதிக் குடியேற்றம் (யார் முதல் குடிகள் என்ற போட்டி) இரண்டாவது ஒற்றையாட்சி பற்றிய தெளிவு.

1970 தொடக்கம் அதாவது சிங்கள, பௌத்த ஐதீகங்கள் முதன்மை பெறும் அனுராதபுரம் தொடங்கி இன்று வரை நாட்டில் நடைபெற்ற அகழ்வாராச்சிகள், சிங்கள, பௌத்த நூல்களில் கூறப்பட்ட நிகழ்வுகள் வெறும் கட்டுக்கதைகள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

இத்துடன் சிங்கள, தமிழ் மக்களின் மூதாதையர்கள் சம காலத்திலேயே தென் னிந்தியாவிலே இருந்து இலங்கைக்கு வருகை தந்ததுடன் ஆதிக் குடிகளான வேடர்களின் மூதாதையர்களான கற்கால மக்களுடன் இணைந்தே இந் நாட்டின் நாகரீகத்தினை வளர்த்தார்கள் என்பதும் தொல்லியல் ரீதியில் நிருபிக்கப்பட்டுள்ளது.

1980ஆம் ஆண்டில் நான் மேற்கொண்ட கலாநிதி பட்டத்திற்கான ஆய்விலும் இது பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளேன்.

இத்துடன் சிங்கள, தமிழ் கலாசாரத் தனித்துவங்கள் எவ்வாறு தென்னிந்திய பின்னணியில் இருந்து உருவாக்கம் பெற்றன என்பதும் நம்மால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

உண்மையிலேயே கி.மு 3 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் இங்கு அறிமுகமாகியதன் பின்னர்தான் சிங்கள மயமாக்கம் வளர்ச்சி கண்டது. சிங்களமொழியின் மூதாதைய மொழியான திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த “எலு’ பௌத்தத்தின் மொழியாகிய பாளியின் செல்வாக்கினால் நாளடைவில் சிங்களமொழியாக வளர்ச்சி பெற்றது.

இவ்விடத்தில் பின்வந்த பௌத்தத்தினை சிங்கள மக்களின் பெரும்பான்மையினர் அனுசரித்ததோடு இந்த நாட்டுக்குரிய பெயரான சிங்கள என்ற பதம் சிங்கள இனத்தினைக் குறிக்கும் பெயராகவும் வளர்ச்சி பெற்றதுடன் விஜயன் கட்டுக்கதையும் உருவாக்கப்பட்டது.

இதனையே சுதந்தா, குணதிலக போன்ற சிங்கள பேரறிஞர்கள் ( 1980 லங்கா கார்டியன்) எடுத்துரைத்துள்ளனர்.

மேலும், சிங்களதமிழ் மொழிகளிலே காணப்படுகின்ற அடிப்படை ஒற்றுமை என்னவெனில் சிங்கள மொழியின் மூதாதைய மொழியாகிய “எலு’ மொழியானது தமிழைப் போன்று தென்னிந்திய மொழிக் குழுமத்தைச் சேர்ந்தது என்பதாகும். இதனை சிங்கள, தமிழ் மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற முதலியார், குணவர்த்தன போன்றோரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையே சிங்கள தமிழ் இனங்களில் காணப்படும் இரத்த ஒற்றுமை, உறவுமுறைப் பெயர்கள், சமய கலாசார ஒற்றுமைகள் ஆகியவை எடுத்துக்காட்டுகின்றன.

சிங்கள தமிழ் கலாசாரங்கள் ஒரே திராவிட மூலத்தில் இருந்தே துளிர்த்தன என்பதையும் உறுதி செய்கின்றன. இருந்தும் சிங்கள மொழி வளர்ச்சியடைய முன்னரே தமிழரும் இனத்துவ அடையாளத்துடன் இங்கு வாழ்ந்தனர் என்பதை சங்க இலக்கியங்களில் காணப்படும் ஈழத்துப் பூதந்தேவனாருடைய பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட நாணயங்களிலும் கல்வெட்டுகளிலும் காணப்படும் தமிழ் பதங்கள் தமிழருடைய இருப்பினை உறுதி செய்கின்றன. அத்துடன் தமிழன் இனத்துவத்தை தமேட (தமிழ்) என்ற பதம் கிறிஸ்துவுக்கு முந்திய கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ளன. அனுராதபுரம், வவுனியா, திருகோணமலை, அம்பாறை ஆகிய இடங்களில் காணப்பட்ட கல் வெட்டுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

வரலாற்று ஆசியர்கள் மேற்கொண்ட மீள் பார்வை மூலம் இலங்கையின் வரலாறு பிராந்திய அரசுகளின் ஒரு வரலாறாகவும் இவற்றில் வலிமையுள்ள பிராந்தியம் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் இலங்கை ழுவதையும் ஆட்சிசெய்ததாகவும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அதுவும் போர்த்துக்கீசர் வரும் முன் நான்கே நான்கு சந்தர்ப்பங்களில் மட்டும்தான் இச் சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. சுருங்கக்கூறின் ஒற்றையாட்சி அமைப்பினைப் புகுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்தான். ஈழத்தவர் அல்ல.

கேள்வி: தமிழ் மக்கள் அதாவது வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் அவர்களது உரிமைகளைப் பெறுவதில் இடர்பாடுகளையும் ஏமாற்றத்தினையுமே வரலாற்று ரீதியாக எதிர்கொண்டு வருகின்றனர். இந் நிலையில் இன்று நாம் நிற்கின்ற நிலைமையினை எவ்வாறு நோக்குகின்றீர்கள்? தமிழ் மக்களுக்கு இன்றைய காலகட்டம் எவ்வாறு அமையும் என விமர்சிக்கின்றீர்கள்?

பதில்: 1948 ஆம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்தபோது, தமிழ்த் தேசிய இனத்தில் ஒரு கூறாகவுள்ள வடக்கு, கிழக்குக்கு அப்பால் வாழும் மலையகத் தமிழர்களுடைய பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. இத்தகைய பிரஜாவுரிமைப்பறிப்பு விடயத்தில் வடகிழக்கில் வாழ்ந்த சில தமிழ்ப் பிரதிநிதிகளும் பங்காளிகளாக இருந்தமை தமிழ் மக்களின் வரலாற்றில் ஓர் கறை படிந்த அத்தியாயமே.

இந் நிலையில்தான் தந்தை செல்வநாயம், வன்னியசிங்கம் போன்றவர்கள் மலையக மக்களின் பிரஜாவுரிமைப் பறிப்புக்கு எதிராக வாக்களித்துவிட்டு இன்று அவர்களுக்கு நாளை எமக்கு எனக் கூறி தமிழ் மக்கள் தமது உரிமையை நிலைநாட்டுவதற்கு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என உணர்ந்தனர்.

இதற்கென ஓர் இயக்கமாகவே இலங்கைத் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தனர். இந்த உரிமைப் போரில் இஸ்லாமியர்களையும் மலையகத் தமிழ் மக்களையும் இணைத்து தமிழ்ப் பேசும் இனம் என்ற ஓர் அடையாளத்தோடு இலங்கைத் தமிழரசுக் கட்சி செயற்பட்டது.

பின்னர் ஏற்படுத்தப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், திம்புப் பேச்சுவார்த்தை, பின்வந்த ஒஸ்லோ ஒப்பந்தம் போன்றன வட கிழக்கினைத் தாயகமாகக் கொண்ட தமிழ்த் தேசிய இனத்திற்கு சுய நிர்ணய உரிமை உண்டு என்ற அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன.

தமிழர்களது 60 வருடப் போராட்ட வரலாற்றில் முதல் முப்பது வருடங்கள் சாத்வீகப் போராட்டத்திற்கான காலகட்டமாகும்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் ஆயுதப் போராட்டத்தின் முடிவையும் குறிக்கின்றது. ஆயுதப்போராட்டம் முடிவுற்று தற்போது மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.

இந்த அறுபது வருடகாலத்தில் தமிழ் மக்கள் சந்தித்த உச்சக்கட்ட இழப்பாகவும் வேதனைக்குரிய சம்பவமாகவும் முள்ளிவாய்க்கால் அமைந்துள்ளது.

ஆயுதமுனையில் இப் போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவந்த அரசிற்கு வாழு, வாழவிடு என்ற பௌத்த கோட்பாட்டுக்கு அமைவாக, அறுபது வருட போராட்டத்திற்கு மூலகாரணமாக இருந்த இனப்பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் இருந்தது.

இதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தினை தீர்க்கப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் இருந்தது. எனினும், இவை எல்லாவற்றையும் தவற விட்டுவிட்டு விட்டது.

தமிழ் மக்களது அறுபது வருடப் போராட்டத்திற்கு உள்நாட்டில் ஒரு நீதியான அரசியல் தீர்வை அரசாங்கம் வழங்கத்தவறியதனால்தான் இன்று இவ் உள்நாட்டுப் பிரச்சினை சர்வதேச அரங்கிற்குச் சென்று விட்டது.

இலங்கைப் பிரச்சினையில் சர்வதேசம் கால் வைப்பதற்கான முதல் நடவடிக்கையாகத்தான் ஜெனீவா தீர்மானத்தினை நான் பார்க்கின்றேன்.

இன்று ஐக்கிய நாடுகள் சபையினையும் சர்வதேச வல்லரசுகளையும் பகைக்காது ஒரு நீதியான அரசியல் தீர்வை வழங்குவதா அல்லது அவற்றுக்குக் கட்டுப்பாடாது தனி வழி செல்வதா? என்பதே அரசாங்கத்தின் முன்னுள்ள முக்கிய பிரச்சினையாகும்.

இந்த இடத்தில் சர்வதேசத்தினை மதிக்காது நடந்தால் நாடு தனிமைப்படுத்தப்படும் என்பதை ஏனைய நாடுகளின் வரலாறுகள் மூலம் இலங்கை கற்று உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறாகத் தனிமைப்படுத்தப்படலாம் என்பதற்கு மியன்மார் நல்ல உதாரணமாகும். இதனை பிரான்ஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி ஜயன் ஜயதிலக்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால் எதிர்காலத்தில் இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டம் பற்றியோ அல்லது வேறு பல பிரச்சினைகள் பற்றியோ இங்கு கூடிய அழுத்தங்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்களே இருக்கின்றன என நான் நம்புகின்றேன்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் தேசிய இனங்களின் பிரச்சினைகள் வெற்றிகரமாக அணுகப்பட்டுள்ளன.

இதனைப் போன்று சர்வதேச மயமாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பிரச்சினையும் சர்வதேச எடுகோள்கள், நியமங்களின் அடிப்படையில் அணுகப்படவும் தீர்க்கப்படவும் வேண்டும்.

அதற்காக ஒரு நல்ல சந்தர்ப்பம் இலங்கை அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்துள்ளது.

சர்வதேச அரசியல் சூழலும் வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியும் சந்தர்ப்பத்தினை தமிழருக்கு நல்கியுள்ளன.

இந்த இடத்தில் தந்தை செல்வா சுட்டிக்காட்டிய விடயமொன்று எனது ஞாபகத்திற்கு வருகின்றது.

அதாவது 1949 இல் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்து தந்தை செல்வா ஆற்றிய தலைமைப் பேருரையில் எமது தேசிய இனத்தின் விடிவிற்கு, எவ்வாறு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு 2ஆவது உலக மகாயுத்தத்தின் முடிவு உந்து சக்தியாக இருந்ததோ அத்தகைய ஒரு சந்தர்ப்பம் இலங்கையிலும் ஏற்படும் என்றும் அதனை நாம் பக்குவமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இவ்வாறு அவர் தீர்க்கதசனமாகச் சொல்லியிருந்தை இன்று நாம் நடைமுறையில் காண்கின்றோம்.

இக்கால கட்டத்தில் சிங்கள தேசிய இனம் மட்டுமின்றி வடகிழக்கில் வாழும் தமிழ்த் தேசிய இனம் இஸ்லாமிய தேசிய இனம், மலையகத் தேசிய இனம் ஆகியவை ஒன்றிணைந்து அதிகாரச் சமநிலையைப் பெற்று தத்தமது தேசிய அடையாளத்தினைப் பேணி சுபீட்சமான ஓர் எதிர்காலத்தினை நோக்கி நடைபோடுவதற்கான நல்ல சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. இதற்கான ஓர் அரசியல் கட்டமைப்பாக பூரண சமஸ்டி ஆட்சி முறைமை அவசியமாகும்.

கேள்வி: சமஷ்டியே தீர்வெனக் கூறினீர்கள். அவ்வாறாயின் எவ்வாறான சமஷ்டியை குறித்துக்காட்டுகின்றீர்கள்?

பதில்: உதாரணமாக என்னைப் பொருத்தளவில் சுவிஸ் நாட்டில் உள்ள சமஷ்டி ஆட்சி முறை பல்வேறு தேசிய இனங்கள் சமமாக அரசியலில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பாகும்.

இதனை சமஷ்டி பற்றி பசீலிப்பதற்கான ஓர் கட்டமைப்பாகவே நான் முன்வைக்கின்றேன். இத்தகைய கட்டமைப்புத்தான் தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளத்தினைப் பாதுகாப்பதற்கும் முஸ்லிம் தேசிய இனம் கோரும் தனி அலகுக்கும் மலையகத்தவரின் தனித்தவத்தினைப் பேணுவதற்கும் சிறந்ததொரு தீர்வாக அமையும்.

நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்தினை கருத்திற் கொண்டு முக்கியமாக எல்லா தேசிய இனங்களும் ஓர் முடிவுக்கு வரவேண்டிய நிலையே இன்று காணப்படுகின்றது.

சமஷ்டி ஆட்சியை மறுத்த பாக்கிஸ்தான் தனியான வங்களாதேசம் பிறக்க வழிவகுத்தது. ஐரோப்பாவிலும் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆகவே, ஓரே நாட்டில் எவ்வாறு பிரச்சினையைத் தீர்ப்பது என்பது பற்றி முடிவெடுக்க வேண்டியது பெரும்பான்மை இனத்தவரைச் சார்ந்ததாகத்தான் இருக்கின்றது.

கேள்வி: வடக்குக் கிழக்கில் அண்மையில் தோற்றம் பெற்ற சிவில் சமூகக் குழுவில் நீங்களும் ஓர் முக்கிய இடத்தினைப் பெற்றிருந்தீர்கள். இன்றைய நிலையில் இவ்வாறானதோர் சிவில் சமூகத்தின் வாயிலாக தமிழ்த் தேசிய அரசியலுக்கு எவ்வாறான காத்திரமான பங்களிப்பினை வழங்க முடியும் என நினைக்கின்றீர்கள்?

பதில்: எமது சாத்தவீகப் போராட்டத்தில் மக்களை அரசியல் மயப்படுத்துவதில் இலங்கைத் தமிழரசுக்கட்சி வெற்றி கண்டது. தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைபற்றி பல்வேறு மாநாடுகளை வடகிழக்கின் பல்வேறு நகரங்களில் நடத்தியும் மாநாட்டின் தலைமைப் பொறுப்பினை வட கிழக்கினைச் சார்ந்த தலைவர்களிடம் கட்சி செயலாற்றியது. கட்சி உறுப்பினர்கள் மக்களோடு வாழ்ந்து, அவர்கள் மத்தியில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, கருத்துகளைப் பரிமாறி மக்களை அரசியல் மயமாக்குவதில் வெற்றி கண்டனர். இதனால் மக்களும் தமது விடிவைப்பற்றி தெளிவு கொண்டனர்.

துரதிர்ஷ்ட வசமாக ஆயுதப் போராட்ட காலத்தில் இத்தகைய அரசியல் மயமாக்கம் நடைபெறவில்லை. இதே பாணியில்தான் இன்றைய தமிழ் அரசியலும் சென்று கொண்டிருக்கின்றது. ஆதங்கத்தின் வெளிப்பாடே சிவில் சமூகத்தின் உருவாக்கமாகும்.

சுருங்கக் கூறின் தற்போதைய அரசியல்வாதிகளைக் காட்டிலும் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் வரலாறு அதன் எதிர்காலம் பற்றி தெளிவு பெற்ற பல புத்திஜீவிகள் இச் சிவில் சமூகத்தில் இணைந்துள்ளனர்.

தமிழ் மக்களின் எதிர் காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பினை அரசியல்வாதிகளிடம் மட்டும் விட்டுவிடாது சமூக மட்டத்தில் சகலரையும் இணைத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் இஸ்லாமிய, மலையகத் தேசிய இனங்களோடு இணைந்து இவ்வினங்களின் அடையாளத்தினை தக்க வைக்கவும் ஓர் ஆரோக்கியமான கலந்துரையாடல்களை நடத்தி இன்று சர்வதேச பிரச்சினையாகவுள்ள எமது தேசிய பிரச்சினைக்கு நல்ல தீர்வைப் பெறுவதற்கும் இச் சிவில் சமூகத்தின் வாயிலாக ஒத்துழைப்புக்கிட்டும் என்பது நமது நம்பிக்கையாகும்.

கேள்வி: இப்படியான ஓர் சிவில் சமூகம் சிங்கள சமூகத்தில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு எதாவது திட்டத்தினைக் கொண்டுள்ளதா?

பதில்: சிங்கள சமூகத்தின் மத்தியிலும் ஆக்கபூர்வமான சக்திகளாக பலர் இருக்கின்றனர். அவர்களுடனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஓர் சுபீட்சமான எதிர்காலத்தினை நோக்கிச் சிந்திப்பது சிவில் சமூகத்தினுடைய நிலைப்பாடுகளில் ஒன்றாகும். இதன் மூலம் ஈழத்தில் ஓர் பல்லினக் கலாசாரம் பேணப்பட்டு வலுப்பெறுவதற்கும் சந்தர்ப்பம் அமையும்.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச நிலைமைகளிலிலும் உள்நாட்டு நிலைமைகளிலும் கொண்டுள்ள நிலைப்பாடுகள் பற்றி என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

பதில்: சர்வதேச மயமாக்கப்பட்ட தமிழர் பிரச்சினையை தமிழ்த் தேசியம் வளர்ந்து வந்த வரலாற்றுப் பின்புலத்தில் தக்கவாறு அணுகி இதற்கான ஓர் தீர்வை முன்வைக்கின்ற பாரிய வரலாற்றுக் கடமை கூட்டமைப்பிற்கு உண்டு. தமிழ் மக்கள் நடந்து வந்த பாதையில் சந்தித்த இன்னல்களையும் சவால்களையும் மையப்படுத்தி ஒரு நிரந்தரத் தீர்வை நோக்கி பயணிப்பது அவசியமாகும். தமிழ் மக்களின் அபிலாஷையான தேசிய இன அடையாளத்தினை பேணிப் பாதுகாப்பதற்கான ஓர் தீர்வும் காலத்தின் தேவையாகும்.

இத்தனை தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்தார்கள் என்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர்கள் மீதோ அல்லது கட்சியின் மீதோ கொண்ட பறறுதல்களால் மட்டும் அல்ல.

மாறாக, கடந்த அறுபது வருட காலமாக தமிழ் மக்களிடத்தில் இருந்துவரும் அபிலாஷைகளை இன்றைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதிபலிக்கும் என்ற நம்பிக்கைதான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியப் போராட்டத்தின் வரலாற்றினையும் அதற்காக மக்கள் செலுத்திய விலையினையும் கருத்திற் கொள்ளாது ஓர் தெளிவற்ற உறுதியற்ற போக்கில் தற்போது செல்கின்றது என்ற அங்கலாய்ப்பும் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றது.

இதனால் மக்களிடத்தில் உள்ள இவ்வாறான ஆதங்கத்தினைப் போக்கி முஸ்லிம், மலையக தேசிய இனங்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்கவேண்டியது கூட்டமைப்பின் பொறுப்பாகும்.

இதேவேளை, கூட்டமைப்பினர் தாம் எவ்வாறான தீர்வினை நோக்கிப் பயணிக்கின்றனர் என்பதை வெளிப்படையாக முன்வைக்கவில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.

வெளிப்படையான தீர்வை வெளிப்படையாக முன் வைக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கின்றது.

கேள்வி: இலங்கை தொடர்பான இன்றைய சர்வதேச அணுகுமுறைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? இன்றுள்ளதைப் போன்ற நிலைமை வரலாற்றில் எப்போதாவது காணப்பட்டதா?

பதில்: இலங்கையில் நடைபெற்ற ஆயுதப் போராட்ட காலத்தின்போது பல்வேறு வழிகளில் சர்வதேசம் இலங்கையில் கால் கொண்டிருந்தது.

எனினும், இன்றைய நிலையிலேயே போரின் இறுதிக் கட்டம் பற்றியும் மனித உமை மீறல் பற்றியும் ஜனநாயக நல்லாட்சி பற்றியும் சர்வதேசம் அதிக அக்கறை கொண்டதாகக் காணப்படுகின்றது.

இதற்குக் காரணம் கடந்த மூன்று ஆண்டுகளிலே இலங்கை அரசாங்கம் தேசிய இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்பதனாலாகும்.

இதற்கும் அப்பால் இலங்கையில் சீன அரசாங்கத்தின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படுகின்றது என்பதனாலாகும். இந்த இடத்திலேயே இலங்கை அரசில் இருந்து அந்நியப்படுத்தப்படாது நீரோட்டத்தில் நின்று சீனாவின் ஆதிக்கப் படர்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டிய தேவை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உண்டு.

இலங்கை அரசாங்கத்திற்குச் சார்பாகவே இதுகாலவரை செயற்பட்ட இந்தியா ஜெனீவா தீர்மானத்தின்போது தமிழ் நாட்டின் தாக்கத்தினாலும் அமெரிக்கா முன்னெடுத்த திட்டத்தினை தான் ஆதரிக்காவிட்டால் தான் தனிமைப்படுத்தப்பட்டு இலங்கையில் மேற்குலகின் கையோங்கிவிடும் என்ற அங்கலாய்ப்பினாலும் இலங்கையை எதிர்த்து வாக்களிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்நிலையில் எமக்கான தீர்வாக இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து 13 ஆவது அரசியலமைப்புத் திட்டத்தினைத் திணிப்பதற்கான சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

இத்தகைய இடத்தில் நாம் பூரண சமஷ்டியைக் கோருவதே காலத்தின் கட்டாயம் ஆகும்.

கேள்வி: இன்றைய நிலையில் இனப் பிரச்சினைத் தீர்வு என்பதற்கு அப்பால் போரை அடுத்ததான விடயங்களான மீள் குடியேற்றம் மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன? வட, கிழக்கில் தொடர்ச்சியாக வசித்து வருகின்ற பேராசிரியர் என்ற வகையில் இவைகள் பற்றி என்ன கருதுகின்றீர்கள்? போரையடுத்து உடனடியாகக் கண்டுகொள்ளப்படவேண்டிய பிரச்சினைகள் உரிய வகையில் கண்டுகொள்ளப்பட்டதாக நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: முதன்மையாக மீள் குடியேற்றம் பூரணமான நிலையில் நடைபெறவில்லை. மக்கள் இயல்பு வாழ்க்கையினை மேற்கொள்வதற்கான அடிப்படை வசதிகள் மிகவும் பற்றாக்குறையாகவே காணப்படுக்கின்றன.

போர்ச் சூழ்நிலையில் அவயவங்களை இழந்தவர்களது நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. அவர்களை தக்கவாறு பராமரித்து அவர்களது வாழ்க்கையைத் துன்புறுத்தும் வகையில் பொறிமுறைகள் காணப்படவில்லை. பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளவர்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டவர்களைத் தாங்கி பராமரிப்பதற்கு வசதி வாய்ப்பற்றவர்களாகவே உள்ளனர். இவைகள் பற்றியெல்லாம் முழுமையான கவனம் செலுத்தப்படவில்லை.

இதற்கு அப்பால் நடைபெற்ற போரின் விளைவாக வட கிழக்கில் பல்லாயிரக்கணகான இளம் விதவைகள் உள்ளனர். இவர்களுக்கு வசதிகள் கிடைப்பதும் பெரும் சவாலாகவே உள்ளது.

இதற்கும் அப்பால் பெற்றோரை இழந்த அநாதைச் சிறுவர்களின் நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது.

மக்களுக்குரிய காணிகள் கேட்டுக் கேள்வியின்றி சுவீகரிக்கப்படுகின்றன. இதனால் மக்கள் பங்கு கொண்டு அவர்களது தேவைகளைக் கவனிக்கின்ற வகையிலான சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படுவது காலத்தின் தேவையாகும்.

நடைபெறும் சில அபிவிருத்திகள் கூட மக்களின் தேவைகளை மையமாகக் கொண்டு மக்களும் பங்காளிகளாக அமைகின்ற அபிவிருத்திகளாக் காணப்படவில்லை என்பதுவே எனது ஆதங்கமாகும்.

- பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்

ஆக்கம்: தியாகராஜா நிரோஷ்

மூலம்: வீரகேசரி – சித்திரை 8, 2012

 

  • கருத்துக்கள உறவுகள்

கனவான் அரசியல்தான் இன்று சர்வதேசத்தால் அங்கிகரிக்கப்படுகிறது......ஆகவே போரால் பாதிக்கப்பட்ட எம்மக்களுக்கு தேவையான ஒன்று என்பது என்கருத்து ..

ஆனால் ஒருவேளை முதலமைச்சராக, சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அரசாங்கத்தின் நிலைப்பாடுகளுடன் ஒத்துப்போகும், அல்லது நெகிழ்வுத் தன்மையுள்ள ஒருவராக முதலமைச்சர் மாறினால் என்ன செய்வது? வடக்கில் புரட்சி எப்படிச் சாத்தியம்?
இதை போன்றே பிரபாகரன் அவர்கள் அன்று நினைத்திருந்தால் அதாவது என்னுடன் வரும் கே.பிக்கள்,அம்மான் எல்லாம் அரசுடன் சேர்ந்தால் நான் என் செய்வேன் என்று,,,,,,அவர் போராட புறப்பட்டிருக்கமாட்டார்...தமிழ்மக்களின் உரிமைப்பிரசன்னை சர்வதேசமட்டத்திற்கு சென்றிருக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.