Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜின்னா - காந்தி இரு தேசப்பிதாக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 
ஜின்னா - காந்தி 
இரு தேசப்பிதாக்கள்
ரொடெரிக் மாத்யூஸ்

தமிழில்: கண்ணன் Gandhi-Jinnah-image-1.jpgகாந்தி, ஜின்னா இருவருமே தேசத் ‘தந்தை’களாக பாராட்டப்பட்டுள்ளனர். ஆனால் தந்தைமை இருவருக்கும் சுகமானதாக அமையவில்லை. அதிக பணிச்சுமையால் ஜின்னா தன் உடல்நலத்தை இழந்தார். வரலாற்றில் அதிகம் அறியப்பட்ட இந்திய ஆளுமையான காந்தி, ஒரு ‘தேசபக்த’னின் கருத்தில், குறைபட்ட இந்தியத்தன்மை கொண்ட இந்தியாவை உருவாக்கியதற்காகச் சுட்டுக் கொல்லப்பட்டார். தந்தைமை இருவரையுமே பலிவாங்கியது. ஆனால் அதுவே பிற்காலத்தில் அவர்களுக்குப் புத்துயிர்ப்பும் அளித்து திருஉருக்களாக்கியது. அவர்கள் இருவருக்கும் இடையில் உருப்பெற்ற எல்லைக் கோட்டின் தம் பக்கத்தில் அவர்கள் புகழப்பட்டார்கள். இரு தலைவர்களும் எப்படிப் பார்க்கப்படுகிறார்கள் என்பதை பார்ப்பவரின் தேசம் மற்றும் மதத்தை வைத்து எளிதில் ஊகித்துவிட முடியும்.

பாகிஸ்தானை ஜின்னாவின் கொடை என்று சொல்ல முடியுமா? ஜின்னா இல்லாமலும் பாகிஸ்தான் தோன்றியிருக்கும் என்று முடிவு செய்வது கடினம். பாகிஸ்தானுக்கான கோரிக்கை மிக வலுவாக இருந்தமையால் பாகிஸ்தான் எப்படியும் தோன்றித்தான் இருக்கும் என்று வாதிப்பவர்கள் உள்ளனர். ஆனால் அது அதிகமும் கற்பனாவாதம்தான். ஒரு முஸ்லிம் அரசியல் ‘தேசத்தை’ ஒன்றுபடுத்தி ஒழுங்குபடுத்தியதில் ஜின்னா மேற்கொண்ட அசாதாரணமான பணியைப் பார்க்கையில் இது தெளிவுபெறுகிறது. பாகிஸ்தான் கோரிக்கை ஏற்கனவே வேகம் பெற்றுவிட்டது என்பது உண்மையெனில் அவர் ஏன் இவ்வளவு கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது?

பாகிஸ்தானை உருவாக்க ஜின்னா முயற்சிக்கவில்லை என்றால் இந்தியா ஒரு கூட்டமைப்பாக உருப்பெறும் சாத்தியம் அதிகமாக இருந்திருக்கும். முஸ்லிம்களின் பிராந்தியத் தலைவர்கள் இந்தத் திட்டத்தோடு முரண்படவில்லை. கூட்டமைப்பு அவர்களுக்கு உவப்பானது. அவர்கள் கூட்டுப் பாதுகாப்பை விரும்பியிருந்தால் தம்மில் ஒருவரின் தலைமையின் கீழ் திரண்டிருப்பார்கள். ஆனால் அவ்வாறு நடப்பதற்கான எந்த சமிக்ஞையும் இருக்கவில்லை. வட்டமேசை மாநாட்டில் ஒருங்கிணைக்கும் தலைவராகச் செயல்பட ஜின்னா விரும்பியதைப் போல் வேறு எவரும் முன்வருவதற்கான சமிக்ஞைகள் இருக்கவில்லை. ‘முஸ்லிம்கள் ஒரு தேசம்’ என்ற சிந்தனையை வளர்த்தெடுத்தவர் ஜின்னாதான்.

உண்மையில் துவக்கத்தில் அந்த சிந்தனைக்கு குறிப்பிட்ட அளவு ஆதரவே இருந்தது. இயல்பாக உருவான தொண்டர்களும் இருக்கவில்லை. இச்சிந்தனை அறிஞர்களை கவரவில்லை. மௌலானா அஸாத் அரசியல் ரீதியாக இச்சிந்தனையை மறுத்தார். முஸ்லிம் பிராந்தியத் தலைவர்களுக்கு இதில் நன்மை இருக்கவில்லை. அவர்கள் தத்தமது ராஜ்ஜியங்களின் தலைமையில் பாதுகாப்பாக இருந்தார்கள். ஹைதராபாத் நிஜாம், பஞ்சாப் மற்றும் உத்திரப்பிரதேச நிலக்கிழார்கள் போல. வங்காள முஸ்லிம்கள் மற்றொரு பெரிய கூட்டத்துடன் இணைவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இறுதிவரை அவர்கள் தம் வழியில் செல்லவே விரும்பினார்கள். ஜின்னா முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பான ஒரு மேல் கட்டுமானத்தைக் கற்பனை செய்தார். பிராந்தியத் தலைவர்களுக்கு அது தேவைப்படவில்லை. 1930களில் முஸ்லிம் தேசத்தைக் கோரியவர்கள் கல்வியாளர்களும் விளிம்பில் இருந்த பற்றாளர்களும்தான். 1930இல் முகமது இக்பால் இதுபோன்ற ஒரு திட்டத்தை முன்வைத்தார் என்பதாலேயே அதற்கு ஆதரவு இருந்தது என்றோ, அது நடைமுறைச் சாத்தியமானது என்றோ கொள்ள முடியாது. ஜின்னாவின் செயல்பாடுதான் அதை நடைமுறைச் சாத்தியமானதாக மாற்றியது.

Gandhi-Jinnah-image-2.jpgஒரு கணம் நாம் களத்திலிருந்து ஜின்னாவை விலக்கி வைத்தால் இதை இன்னும் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். ஒருகால் அவர் 1937இல் காலமாகியிருந்தால், 1937 தேர்தலில் முஸ்லிம் லீகின் தோல்வி தேசியக் கட்சியாக அதன் எதிர் காலத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவந்திருக்கும். ஒருகால் ஜின்னா 1946இல் காபினட் மிஷனின் வருகைக்கு முன்னால் மரித்திருந்தாலும்கூட வேறுவிதமான முடிவு ஏற்பட்டிருக்கக்கூடும். காபினட் மிஷனின் சிக்கலான திட்டங்களை ஒப்பற்ற தலைவராக இருந்து கையாள ஜின்னாவே கஷ்டப்பட்டார். அவர் இல்லாதிருந்தால் முஸ்லிம் லீகில் பிளவுகள் ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகளே அதிகம். தனது அணியை ஒருங்கிணைத்து கட்டுப்பாட்டில் வைக்கும் பணியை ஜின்னா வெகு சிறப்பாகக் கையாண்டார். அவர் விரும்பிய தீர்வு அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால் தனது அணியை சிக்கலான கட்டங்களில் ஒருங்கிணைத்துவைக்கும் அபாரத் திறன் அவரிடமிருந்தது. இந்தச் சமன்பாட்டிலிருந்து ஜின்னாவை எந்தக் கட்டத்தில் நீக்கிப் பார்த்தாலும் பாகிஸ்தான் உருவாகும் வாய்ப்பு மங்கியிருக்கும். பாகிஸ்தான் பிரதிநிதித்துவப்படுத்திய இரட்டை விடுதலையை, பிரிட்டிஷாரிடமிருந்தும் காங்கிரசிடமிருந்தும் கையாளும் திறன் கொண்ட இந்திய முஸ்லிம்கள் மிகக் குறைவாகவே இருந்தார்கள்.

காங்கிரசை விலக்கி வைத்தபடியே ஒரு சக்திவாய்ந்த பேரரசை ஜின்னா எதிர்த்து நின்றார். இது ஓர் அபாரமான அரசியல் சாதனை. ஒரு பெரும் விலங்கின்மீது சவாரி செய்து சரியான நேரத்தில் கீழே குதித்தார். வேறு எந்த சுதந்திரப் போராட்டத்திலும் இத்தகைய இருபடித்தான நிலை இருக்கவில்லை. இந்தத் துணிச்சலும் எதிரியை எடைபோடும் திறனும் அவருக்கு விமர்சனப்பூர்வமான அங்கீகாரத்தை ஈட்டவில்லை என்பது சோகமானது. நேர்மாறாகத் தான் நடந்தது. அவர் சாத்தியப்படுத்திய விடுதலையின் தனித் தன்மையால் அவர் ஆகச் சிறந்தவராகவோ அல்லது மிக மோசமானவராகவோதான் பார்க்கப்பட்டார்; இரண்டுக்கும் இடையில் வைத்து அல்ல.

இந்திய நாடு காந்தியின் கொடையா? அதன் எல்லைகளை அவர் முடிவு செய்யவில்லை. ஆனால் இந்திய சுதந்திரத்திற்கான கோரிக்கையை தெளிவான, சாத்தியமான - ஜனநாயக, சமத்துவ - வடிவத்தில் ஒன்றுதிரட்டியதில் அவருடைய பங்களிப்பு பிரதானமானது. அரசியல் துருவங்களில் செயல்பட்டவர்கள் பலர் தனிமனித விடுதலை பற்றிய அவருடைய கருத்துகளை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால் இந்தியா சுதந்திரமடைய வேண்டும் - ஒரு தூய இந்து சமூகமாகவோ, சுய நிர்ணயத்திற்கான செயல்முறையாகவோ, சமத்துவமான சமூகத்தை நோக்கிய முதல் படியாகவோ - என்பதில் அவருடன் உடன்பட்டிருப்பார்கள்.

எந்த இந்தியத் தலைவருக்கும், சுபாஷ் சந்திர போஸ் உட்பட, காந்தி ஒருங்கிணைத்த நிலைப்பாடுகளின் வீச்சு சாத்தியப்பட்டிருக்காது. அதிக மக்கள் போஸைவிட காந்தியின் வழிமுறைகளுடனேயே உடன்பட்டார்கள். தனது ராணுவம் பக்க சார்பானதாக இருக்கக்கூடாது என்பதில் போஸ் மிகக் கவனமாக இருந்தாலும் போஸின் விடுதலைப் பாதையின் முக்கிய பிரச்சனை அதில் தவிர்க்க இயலாமல் போஸ் இருப்பார் என்பதுதான். காந்தியின் இந்தியாவை காந்தி ஆளவேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனால் பெரும் அரசியல் தலைவர்கள் காங்கிரசிலேயே இருந்தார்கள். மக்களுக்கு அவர் உருவாக்க விரும்பும் இந்தியா மேலானதாகவும் சுவாதீனமானதாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. பிற பல காலனியாதிக்க நாடுகளில் ஏற்பட்டதுபோல இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர், விசுவாசங்களையும் வழிபாட்டுணர்வையும் வேண்டிய ஒரு லட்சியவாதி அல்ல.

இன்றைய இந்தியக் குடியரசு அதற்கான தனித்துவமான பண்புகளைக் கொண்டது. இதில் பலதரப்பட்ட வழிமுறைகள் மற்றும் அரசியல் தேர்வுகளை கலந்து காந்தி உருவாக்கிய செயல்முறையின் தாக்கம் கணிசமானது. நேருவின் பார்வையில் காந்தி ஏற்படுத்திய தாக்கத்தை வரையறுப்பது கடினம். ஆனால் இந்தியா பின்பற்றிய நேருவின் அணிசேரா வெளியுறவுக் கொள்கையில் காந்தியின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியுமா? அக்கொள்கையில் காந்தியின் முக்கியமான இரண்டு நம்பிக்கைகள் கலந்திருந்தன. அதிகாரத்தில் இருந்து அகலவே நிற்பது மற்றும் முரண்பாடுகளுக்கு வெளியே நின்று அதைத் தீர்க்க முயல்வது. இவை காந்தியின் ஆகச்சிறந்த கொள்கைகள். நேரு காந்தியை மதித்தார். எனவே அவருடைய கொள்கைகளில் கரிசனம் கொண்ட அதிகாரம் மிக்க வாரிசாக விளங்கினார். இதனால்தான் மகாத்மாவின் கொள்கைகளும் முன்னுரிமைகளும் நவீன உலகில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தின.

Gandhi-Jinnah-image-3.jpgநுகரும் கலாச்சாரத்தில் திளைக்கும், அதிநவீன, அணுகுண்டு தரித்த இன்றைய இந்தியாவை காந்தி ஏற்கமாட்டார். தமது இன்னல்களுக்கான தீர்வாக பெரும்பான்மையான இந்தியர்கள் ஆன்மீக எழுச்சியைவிட பொருள் வளர்ச்சியையே தேர்வு செய்தார்கள். அவர்களுடைய தலைவர்கள் அவர்களுக்கு ஆசை காட்டியதும் இதைத்தான். உலகின் பிற மக்களைப் போலவே அவர்களும் கார்கள், குளிர் சாதனங்கள், தொலைக்காட்சிகளின் ஈர்ப்பிற்கு பணிந்தார்கள். காந்தியத் தூய்மை வாதத்தை இன்றும் தனிமனிதர்கள் தேர்வு செய்யலாம். ஆனால் பெரும் ஜனத்திறளை உள்ளடக்கிய வெகு மக்கள் ஜனநாயகமான இந்தியாவால் அதன் பொதுநலச் செயல்பாடுகளை ஏழ்மையில் வாழ்ந்திடும் லட்சியத்தின் அடிப்படையில் கொண்டு செல்ல முடியவில்லை.

ஜின்னாவையும் காந்தியையும் பற்றிய இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு இப்போது பதிலைச் சுருக்கமாக கண்டடைவோம். ஜின்னா தனது அரசியல் வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கட்டத்தில் தடம்மாறினாரா? இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். அவர் தன்னுடைய தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களை மாற்றிக்கொண்டார் என்பதைவிட அவரைச் சுற்றி உலகம் மாறியது என்பதே உண்மை. இரண்டாவது: காந்தியைப் போன்ற ஒருவர் இத்தனை முக்கியத்துவத்தையும் அதிகாரத்தையும் பெற்றது எப்படி? வழமையான அரசியல் மறுக்கப்பட்ட ஒரு நாட்டிற்கு அவர் அறவாழ்வு, மதம் மற்றும் நாட்டின் சுதந்திரம் ஆகியனவற்றின் தனித்துவமான ஒரு சேர்க்கையை வழங்கினார்.

இன்னொரு கேள்வியும் எஞ்சியிருக்கிறது: தனிப்பட்ட முறையிலும் வரலாற்றுப் பார்வையிலும் இருவரின் மகாத்மியங்கள் என்ன? இருவரும் குஜராத்தி வியாபாரக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். இருவரும் லண்டனில் பட்டம் பெற்ற வழக்கறிஞர்கள். இருவரும் தேசியவாதிகள். ஆனால் இந்தப் பொதுப் பண்புகள் மிக மேலோட்டமானவை. எந்த வேறு இருவரும் இதைவிட மாறுபட்டவர்களாக இருந்திருக்க முடியாது - இந்து, முஸ்லிம் அடிப்படையில் மட்டுமல்ல. மனித வளர்ச்சி, அரசியல் சார்ந்தும் அவர்களின் அணுகுமுறை முற்றிலும் வேறாக இருந்தது. ஜின்னா மேலிருந்து தலைமையேற்க விழைந்தார். காந்தி கீழிருந்தே தலைமை ஏற்றார். தனது தொண்டர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஜின்னா குறுக்கிடவே இல்லை. காந்தி தனிப்பட்ட அக்கறைகளை தனது அனைத்துச் செயல்பாடுகளின் மையத்திலேயே வைத்தார். இப்படி வருணிக்கும்போது காந்தியின் அக்கறைகள் மேலோட்டமானவையாகத் தோன்றலாம். ஆனால் ஜின்னா சாத்தியம் என எண்ணியதைவிட காந்தியின் செயல்திட்டம் அதிரடியானது.

காந்தியின் அரசியல் மற்றும் ஆன்மீகக் கொடைதான் அதிக முக்கியத்துவம் பெற வேண்டும். ஜின்னா ஒரு நாட்டை உருவாக்கியிருக்கலாம். ஆனால் எந்த விவாதத்தையும் அவர் நிறைவுசெய்யவில்லை. மாறாக அவர் பல புதிய சர்ச்சைகளுக்கே வழி வகுத்தார். ஜின்னா மீது காந்தி ஏற்படுத்திய தாக்கத்தையும் நாம் காண முடிகிறது. உதாரணத்திற்கு உடை மற்றும் கட்சி அமைப்பு. ஆனால் காந்தி மீது ஜின்னா செலுத்திய தாக்கமாக எதையும் பார்க்க முடியவில்லை. காரணம் காந்தியின் சிந்தனைகள் அவரினுள் இருந்தே எழுந்தன. அவர் மரபின் மீது மரியாதை கொண்டிருந்தாலும் அவர் ஒரு தனித்துவமான சுய சிந்தனையாளர். அரூபமான கோட்பாடுகளையும் நடைமுறைச் சிந்தனைகளையும் இணைத்தவர். அவரைப்போல அவருக்குப் பின் எவரும் தோன்றவில்லை. ஜின்னா ஓர் அரசியல்வாதியைப் போல தனக்கான சிந்தனைகளை தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்தே எடுத்துக்கொண்டார். அவர் தன் சமூகத்தின் அபிலாஷைகளில் தன்னை ஆழ்த்திக்கொண்டு அதன் தேவைகளை வடிகட்டி அவற்றை அரசியல் கோரிக்கைகளாக மாற்றினார். காந்தி தனது ‘கதையாடலை’ தன்னுள்ளிருந்து தானே உருவாக்கினார். ஜின்னா அவருடையதை சுற்றத்திலிருந்து கண்டடைந்தார்.

ஜின்னாவிடம் காந்தியைவிட மன உறுதி அதிகம். காந்தி சமயங்களில் பிரச்சனைகளைத் தவிர்த்துவிடுவார். தான் விரும்பியது நடக்காதபோது அவர் உண்ணாவிரதம் இருந்தார் அல்லது பிரிவினைக் காலகட்டத்தைப் போல, விலகிக்கொள்வார். மக்கள் விருப்பத்திற்கு எதிராக நான் என்ன செய்ய முடியும் என்பார். இது வசதிக்கு ஏற்ப அவர் தன் நிலைபாடுகளை மாற்றிக்கொள்வதற்கு எடுத்துக்காட்டு.

ஆனால் கொள்கைப் பிடிப்பு என்று பார்க்கையில் காந்திக்குத்தான் மகுடம் சூட்டவேண்டும். தனது ஆன்மீக அரசியல் நோக்கங்களை 1909 ‘ஹிந்த் சுவராஜ்’ நூலில் பதிவு செய்த பின்னர் அவர் எப்போதும் அதிலிருந்து பின்வாங்கவில்லை. மேற்கத்திய மருத்துவத்தை நிராகரித்தல் போன்ற அவருடைய வினோதமான கொள்கைகளிலும் உறுதியோடு இருந்தார். இதில் குறிப்பிடத்தகுந்த விதிவிலக்கு 1924இல் ஒரு மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தது. அப்பண்டிசைட்டிஸ் வலி ஒருவரின் மருத்துவப் பார்வையில் தடாலடியான - தற்காலிகமானதாக இருந்தாலும் - மாற்றத்தை ஏற்படுத்தவல்லது!

ஆனால் தீண்டாமை ஒழிப்பு, அகிம்சையில் பற்றுறுதி, இந்தியாவின் ஒருமைப்பாடு போன்ற விஷயங்களில் அவர் எப்போதும் கொள்கைப் பிடிப்போடு இருந்தார். சுயராஜ்ஜியத்தின் பண்புகளுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்திலும் மாற்றமிருக்கவில்லை. முழு இந்தியாவையும் அதன் ஒருங்கிணைப்பை பாதுகாப்பதற்காக ஜின்னாவின் கைகளில் ஒப்படைக்க அவர் 1942இல் தயாராக இருந்தது போலவே 1947இலும் இருந்தார்.

Gandhi-Jinnah-image-4.jpgஜின்னாவிடம் பற்றுறுதி கொஞ்சம் மட்டுதான். காந்தியைவிட தந்திரோபாயங்களில் அவர் அதிகம் ஈடுபட வேண்டியிருந்தது என்பது இதற்கு பகுதி காரணம். மறுபகுதி, பாகிஸ்தான் என்ற சிந்தனை அவர் அரசியல் வாழ்க்கையின் பிற்பகுதியிலேயே - அரசியலுக்கு வந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகே - உருவான காரணத்தினால் தவறான எண்ணத்தை ஏற்படுத்தியது. அவருடைய செயல்திட்டத்தின் நிறைவுதான் பாகிஸ்தான், பிறழ்வு அல்ல. தனது மக்களுக்கு அவர் விரும்பிய விடுதலையையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய பாகிஸ்தானே ஒரே தீர்வாக இருந்தது.

ஜின்னா ஒரு போர் வீரர். காந்தியோ துறவி. முன்னவர் நகரத்தவர், தருக்கபூர்வமானவர். காந்தி கிராமத்தவர், உள்ளுணர்வாளர். ஒரு விவாதத்தை அதில் வெற்றிபெறத் துடிக்காமல் ஜின்னாவால் கடந்து செல்ல முடியாது. ஆனால் காந்தி முரண்பாடுகளைக்களைய விரும்பியவர். இருவருமே அரசியலை தன்மயப்படுத்தினார்கள், ஆனால் வெவ்வேறு விதங்களில். நாம் யாராக இருக்கிறோம் என்பதை ஜின்னா முக்கியத்துவப்படுத்தினார். காந்திக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். காந்தி ஒரு நம்பிக்கைவாதி, கடைசி வரை அவர் நம்பிக்கை இழக்கவில்லை. ஜின்னாவும் ஒரு நம்பிக்கைவாதிதான். ஆனால் இறுதியில் நம்பிக்கை இழந்தார்.

இந்தியப் பொது வாழ்க்கையில் இருவரும் செயல்பட்ட தளங்கள் வேறானவை. அவர்கள் ஒரே காலத்தில் ஜொலிப்பது கடினமானதாக அல்லது சாத்தியமற்றதாகவே இருந்தது. காந்தியின் தாக்கம் மிகுந்திருந்த காலகட்டங்கள் 1919 - 1922, 1929 - 1934 மற்றும் 1942 - 45. ஜின்னாவினுடையவை 1913 - 18, 1927 - 29 மற்றும் 1945 - 48. மக்கள் ஆதரவை முதலில் பெற்றவர் காந்திதான். ஜின்னாவுக்கு வெகுஜன ஆதரவைப் பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. 1940களில் இந்திய மக்கள் பல போராட்டங்களின் வழி அரசியல்மயப்பட்டிருந்தார்கள். இக் காலகட்டத்தில்தான் இருவருக்குமே தேசிய அரசியலில் வலுவான பிடிப்பு ஏற்பட்டது.

1945க்குப் பின், இந்திய சுதந்திரத்தின் கடைசிக்கட்ட காய்நகர்த்தல்களில், அதிகமும் சம்பிரதாயமான பேச்சுவார்த்தைகள் மிகுந்திருந்த காலத்தில், காந்தி ஒதுக்கிவைக்கப்பட்டார். சிம்லா மாநாட்டுக்குப் பிறகு காந்தியின் தலைமைத்துவத்திற்கான சாத்தியம் குறைந்துபோனது. எனவே இருவருக்கும் இடையில், 1920, 1931 அல்லது 1939இல், நெருக்கடியான காலங்களில் காணமுடிந்த தனிநபர் முரண்பாடு மெதுமெதுவாக மறைந்துபோனது. காந்தியும் ஜின்னாவும் 1947 மே மாதத்தில் டில்லியில், ஜின்னாவின் பங்களாவில் அந்தரங்கமான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இது உச்சிமாநாடு அல்ல. அவற்றிலிருந்து முக்கியமான திருப்பம் எதுவும் ஏற்படும் என்ற நம்பிக்கையும் இருக்கவில்லை. காந்தி வைஸ்ராய் அலுவலகத்தில் 1947 ஜூன் 2ஆம் தேதி அமர்ந்திருக்கையில் இந்தியா எவ்வளவு விலகிச் சென்றுவிட்டது என்பதும் தன்னுடைய அணுகுமுறை தற்போது எவ்வளவுக்கு விசித்திரமானதாக தோன்றுகிறது என்பதும் அவருக்குத் தெளிவாகப் புலப்பட்டிருக்கும். இதன் பிறகு இந்திய அரசியல்வாதிகள் வெறுங்காலோடு புழுதிபடிந்த தெருக்களில் நடக்கமாட்டார்கள். பக்கத்து ரயில் நிலையத்திலிருந்து பல மைல் தொலைவிலிருக்கும் ஆசிரமங்களில் வாழமாட்டார்கள்.

மானுடரின் உயரிய பண்புகளைத் தட்டி எழுப்பும் முயற்சிகள் புதிய தேசத்தின் கட்டுமானத்திற்கு போதுமானதாக இருக்கவில்லை. காந்தியையும் அவர் கொள்கைகளையும் ஜின்னா ஒருமுறை “இந்தியா எதிர்கொள்ள வேண்டிய யதார்த்தங்களுக்கும் நவீன காலத்திற்கும் முற்றிலும் பொருத்தமற்றது” என்றார். 1929இல் இதை அவர் கூறியபோது அது உண்மையல்ல. ஜூன் 1947இல் அது உண்மையாகிவிட்டது.

இந்த இரு தலைவர்களுக்கும் இணையான உதாரணங்களை மேற்கில் தேட விரும்பினாலும் அதனால் பயனில்லை. இவர்கள் உருவாக்கிய மேற்கின் தத்துவ அடிப்படையிலான பார்வைகள் எல்லாக் காலங்களிலும் இந்தியத் தன்மையுடையவையாகவே இருந்தன. அவை உள்நாட்டுத் தேவைகளிலிருந்து உருப்பெற்றவை. வெள்ளையரின் இருப்பின் காரணமாக அவர்கள் முரண்படும் கொள்கைகளோடு போராட வேண்டியிருந்தது. வெள்ளையருக்குப் பிந்தைய தீர்வுகளை நோக்கிச் செயல்பட வேண்டியிருந்தது.

காந்தி ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால் அதைச் செயல்படுத்த அவர் அனுமதிக்கப்படவில்லை. மாறாக சாத்தியமான எல்லா இந்திய வழிமுறைகளையும் அவர் கையாண்டார். ஹர்தால், தர்ணா மற்றும் அகிம்சை. ஆங்கிலேயரின் பார்வையில் அவர் ஒரு தேசியவாதி. ஆனால் அவருடைய சிந்தனைப்போக்கில், அறத்தூய்மையுடைய ஒரு சமூகத்தை உருவாக்க, தேசியம் ஒரு வழிமுறை மட்டும்தான். ஒருமுறை அவர் எழுதினார். “எனது நாட்டுப்பற்று எனது மதத்திற்குக் கட்டுப்பட்டது.” மேற்கின் தாக்கங்களை நிராகரிப்பதில் அவர் உண்மையுணர்ச்சியுடன் இயங்கினார். செய்திப் படத்தை பிரமாதமாகப் பயன்படுத்தியது நீங்கலாக மேற்கின் கண்டுபிடிப்புகளை நிராகரிப்பதிலும் பெருமளவுக்குத் தெளிவாக இருந்தார். காரில் பயணித்ததற்காக அவரைப் பழிப்பது அபத்தம். சூழ்நிலைகள் அவர்மீது திணிக்கப்பட்டன. அவர் வாழ்ந்த காலம் ஆங்கிலேயரின் தாக்கத்தை உள்வாங்கியிருந்த யதார்த்த நிலைமையை அவர் ஏற்றுக் கொண்டார். இந்தியச் சமூகத்தின் அறச் சட்டகத்தில் இத்தாக்கத்தால் ஏற்பட்ட பிறழ்வுகளை நீக்குவதே அவருடைய இலக்கு. வழிமுறை இலக்கைச் சிதைக்காத வரையிலும் இந்தியாவிலிருந்து ஏகாதிபத்திய எஜமானர்களை விரட்டுவதற்காக சில சமரசங்களை மேற்கொள்ள அவர் தயாராக இருந்தார். கார்களையும் ரயில்களையும் நல்ல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த முடியும்தான்.

ஜின்னா தேர்வுசெய்ய முடியாத சாத்தியங்களை எதிர்கொண்ட ஒரு இந்தியர். இந்திய அரச அமைப்பினுள் முஸ்லிம்களை பாதுகாக்கப் பொருத்தமானதாக அவரால் பிரித்தானிய முறை பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்க முடியவில்லை. மாறாக தேசியம் அல்லது இஸ்லாம் சார்ந்து நிற்பது எதிர்பாராத பிரச்சனைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தும். இது போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கும் மனிதரல்ல அவர். அவர் ஒரு வழக்கறிஞரைப் போல இருப்பிலுள்ள சட்டங்களின் வரையறைக்குள் இயங்கியவர். புதிய சட்டங்களை உருவாக்க அவர் மிகவும் தயங்கினார். அவர் உருவாக்கிய பாகிஸ்தானை இன்று பீடித்துவரும் எல்லா முரண்பாடுகளும் அதன் உருவாக்கத்திலேயே இருந்தன. அந்த தேசம் முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அதினுள் இஸ்லாம் ஒரு தனித்த அடையாளமாக இருக்கும் நிலை காலப்போக்கில் மறைந்துவிடும் என்று அவர் நம்பினார். இஸ்லாமும் தேசியமும் பொருந்திப் போவதில்லை. பாகிஸ்தானினுள் பிராந்திய வேறுபாடுகள் இருந்தன. பொருளாதார அடித்தளம் சமனற்றதாக இருந்தது. ஆக ஜின்னா எதிர்கொள்ள வேண்டிய தீவிரமான பிரச்சனைகள் இருந்தன. ஆனால் இந்தப் பிரச்சனைகள் பிற்காலத்தில் கவனிப்பிற்காக தள்ளி வைக்கப்பட்டன. ஜின்னாவின் முதல் நோக்கம் முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பது. இந்த முதல் நோக்கம் எட்டப்படாதவரை பிற எல்லாமே இரண்டாம் பட்சம்தான்.

காந்தியின் இலக்கு இந்தியர்களின் விடுதலை. ஜின்னாவின் நோக்கம் முஸ்லிம்களைப் பாதுகாப்பது. காந்திக்கு ஒரு தேசம் இருந்தது. மாறாக ஜின்னாவுக்கு ஒரு புதிய தேசத்தைப் பிரித்து எடுக்க வேண்டியிருந்தது. இது ஒரு கடினமான பணி. முதல்தரமான அரசியல் பண்புகளை - உறுதிப்பாடு, வேகம், அமைப்பாக்கம் - கோரும் பணி. அவருடைய இந்தத் திறன்கள் பாகிஸ்தானின் உருவாக்கத்திற்குத் துணை நின்றன. பாகிஸ்தானின் உருவாக்கம் ஜின்னாவின் வாழ்க்கையின் பல கட்டங்களிலிருந்து பார்க்கும் போதுகூட ஒரு அசாத்தியமான நிகழ்வு. ஆனால் ஜின்னாவின் இந்த உயரிய பண்புகள் ஒரு பரந்துபட்ட தரிசனமாக விரிவடையவில்லை. அது காந்தியிடம் நிகழ்ந்தது. இந்த வேறுபாடு மேலும் ஆராயப்பட வேண்டும்.

ஜின்னாவை, பாகிஸ்தானுக்காக, பல வழக்குகளில் வாதாடி அவர் வென்றதுபோலவே, வாதாடி வென்ற வழக்கறிஞராகப் பார்ப்பது எளிது. தனக்கு ஒரு பதவியை உருவாக்க விரும்பிய அரசியல் தலைவராகப் பார்ப்பது மேலும் எளிது. இந்த இரண்டு பார்வைகளிலும், அவற்றில் சாரம் இல்லாமலில்லை, அவருடைய அரசியல் வாழ்க்கையின் ஒரு பரிணாமம் மட்டுமே மதிப்பிடப்படுகிறது. அவர் பிறப்பித்த நாட்டைப் பற்றிய நம் பார்வையின் வழி அவரைப் பற்றிய பார்வையை கட்டமைக்கிறோம். பாகிஸ்தானின் உருவாக்கம் ஒரு இமாலய அபத்தம் - அல்லது அதனுள் கொஞ்சம் இமயத்தைக் கொண்டிருக்கும் அபத்தம் - என்பதை நாம் எல்லோரும் ஏற்கும் காலம்வரை ஜின்னா பற்றிய இறுதித் தீர்ப்பை எட்ட முடியாது. அவர் வேறொரு லட்சியத்தை தேர்வு செய்திருந்தால் அவரை அதிகம் புகழ காரணமிருந்திருக்கும்.

காந்தி திருஉருவாக்கப்பட்டுவிட்டவர். அவருக்கு ஆஸ்கார்கூட வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் பாகிஸ்தானின் காரணகர்த்தா மீது கறுநிழல் படிந்து கிடக்கிறது. ஜின்னா பாகிஸ்தானில் மட்டுமே போற்றப்படுகிறார். வேறெங்கும் இல்லை. காந்தி உலகெங்கும் மெச்சப்படுகிறார். பிரபஞ்ச உண்மைகளை தனது உடனடி அரசியல் நோக்கங்களுக்கும் ஏற்ற வகையில் எடுத்துரைப்பதில் மகாத்மா வெற்றி கண்டிருக்கிறார். சிந்தனையாளராகவும் செயல்வீரராகவும் திகழும் அபூர்வமான இணைப்பு அவரில் ஏற்பட்டது. ஆங்கிலேயரின் ஒடுக்கும் அரசியலில் சிக்கி மட்டுப்படுத்தப்பட்ட ஜின்னா, காந்தியின் உலகளாவிய சிந்தனையின் முன் சுருங்கிப்போகிறார். இஸ்லாமிய சமூகங்களுக்கு அப்பால் அவரை தீர்க்கதரிசனமுடைய தலைவராக யாரும் பார்க்கவில்லை. காந்தி எப்போதும் புத்தருடனோ யேசுவுடனோ ஒப்பிடப்படுகிறார். ஜின்னாவை கொஞ்சம் வலிந்து அடாடர்க் கெமால் பாஷாவுடனோ மசானியுடனோ ஒப்பிடலாம்.

பாகிஸ்தானின் எதிர்காலத்திற்கு ஜின்னா முன்வரைவுத் திட்டம் எதையும் விட்டுச்செல்லவில்லை. அவருடைய கோரிக்கையின் இறுதி இலக்கு பற்றி அவரிடம் உறுதியான திட்டம் இருக்கவில்லை என்றும் கொள்ளலாம். அல்லது அவருடைய இறுதி நாட்களில் பாகிஸ்தானின் அரசியல் சட்டத்தின் இறுதி வடிவத்தை உருவாக்குவது தன்னுடைய பொறுப்பு அல்ல, அது பாகிஸ்தானின்அரசியல் நிர்ணய சபையின் பொறுப்பு என்று அவர் உணர்ந்ததால் விலகி நின்றதாகவும் கொள்ளலாம். பிரிவினைத் திட்டத்தில் முஸ்லிம் லீக்கை இணைக்காதிருப்பதற்காக மவுண்ட்பாட்டனிடம் ஜுன்2, 1947இல் அவர் சொன்ன ‘அரசியல் சட்ட’ச் சிக்கல் போன்றது தான் இதுவும்.

யாரிடம் எப்போது சொல்கிறோம் என்பதற்கு ஏற்ப விஷயத்தை தகவமைக்கும் நுண்ணுணர்வு கொண்ட அரசியல்வாதி அவர். இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் சட்ட அமைப்பு பற்றிய சுதந்திரத்திற்குப் பிந்தைய அவருடைய கூற்றுகள் அதிகமும் மதவாதிகளை நோக்கி கூறப்பட்டவை. அவை ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் பின்விளைவுகளை ஏற்படுத்தாதவாறு பொத்தம் பொதுவாகப் கூறப்பட்டவை. இந்தக் கூற்றுகள் எவையுமே துல்லியமானவையாக இல்லை. அசௌகரியமான நேரங்களில் விவரங்களைத் தவிர்ப்பதில் ஜின்னா சமர்த்தர்.

அவரிடம் தெளிவான பார்வை இருந்தது என வலியுறுத்துபவர்கள் அவற்றை அவர் ஏன் வெளிப்படுத்தவில்லை என்பதை விளக்க வேண்டும். பாகிஸ்தானின் பிறப்பு அதற்குப் பொருத்தமான தருணம் இல்லையெனில் எதுதான் சரியான நேரம்? பாகிஸ்தான் கோரிக்கை நிறை வேறுமா, எந்த அளவுக்குச் சாத்தியப்படும், அதன் அதிகாரம் எத்தகையதாக இருக்கும் என்பது தெளிவாகாமல் பாகிஸ்தானின் அரசியல் சட்டத்தை விவரங்களுடன் அவர் முன்திட்டமிடுதல் கடினமல்லவா என்ற வாதம் நியாயமானதுதான். அத்தகைய ஒரு செயல்திட்டத்தை மேற்கொள்வது அவரிடம் எஞ்சியிருந்த பெருமதிமிக்க ஊக்கத்தை வீணடிப்பதாகும் என்றும் கூறுகிறார்கள். இருக்கலாம். அவர் பெருந்தலைவர் என்பதால் தனது ஆதரவாளர்களைவிட தொலை நோக்கோடு செயல்பட்டிருக்க வேண்டும். எனவே மேற்படி விளக்கங்கள் ஜின்னா தன் கடமையில் தவறியதற்கான சாக்குப்போக்குகள்தான்.

Gandhi-Jinnah-image-7.jpgபாகிஸ்தானுக்கு ஒரு தெளிவான திட்டம் இருக்கவில்லை என்பது ஒரு மோசமான விடுதல். தனது வருங்காலத் திட்டத்தைத் தெளிவுற முன்வைத்தால் அவர் ஏற்படுத்திய கூட்டணி சிதறிவிடும் என்பதை உணர்ந்திருந்தார் என்பதற்கான ஆதாரம் இது என்றும் வாதிடலாம். இப்படிப் பார்க்கும்போது பாகிஸ்தான் ஒரு கோரிக்கைதான், துல்லியமான விவரணைகள் கொண்ட ஒரு திட்டம் அல்ல. அவருடைய உண்மையான எண்ணங்கள் பிறர் அவருடைய எண்ணங்களாக நம்பியவை அல்ல என்றால் அல்லது அவற்றை முன்வைக்கும் துணிச்சல் அவரிடம் இருக்கவில்லை என்றால் பலர் சூட்ட விரும்பிய இராஜதந்திரி பட்டத்திற்கு அவர் தகுதியானவர் அல்ல.

பின்நோக்குப் பார்வையில், காந்தி தான் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த கோட்பாட்டு நம்பிக்கைகளை முன்வைத்திருக்கிறார். அவருக்கு விதிக்கப்பட்டது நவீன இந்திய அரசமைப்பை நுண்மையாகத் திட்டமிட்டு உருவாக்கும் பணி அல்ல. மாறாக அது உருவாக ஒரு செயல்முறை கண்டுபிடித்து அதை மக்களிடம் பரப்புவது. அதன் முக்கியமான குணாம்சங்களை - உதாரணமாக வேற்றுமைகளில் ஒருமைகாணுதல் - கையளிப்பது.

அவர் அகிம்சையை பிரபலப்படுத்தி விரிவுபடுத்தியதில் ஏற்பட்ட வீச்சு உலகை மாற்றியிருக்கிறது. காந்திக்கு முன்னர் விடுதலைப் போர்கள் நடந்துள்ளன. தேசியத்தின், சுதந்திரத்தின் பெயரால் பெருமளவுக்கு ரத்தம் சிந்தப்பட்ட போராட்டங்கள். இந்தப் போராட்டங்கள் தொடர்ச்சியான வன் முறைக்கும் பிளவுகளுக்கும் வழி வகுக்கும் என்று காந்தி சரியாக அடையாளங்கண்டார். இத்தகைய ஒரு பாரம்பரியத்தை அவர் முற்றாக தவிர்க்க விரும்பினார்.

புதிய இந்தியா அமைதியாகப் பிறந்து பொறுப்பான தலைவர்கள் அதற்குத் தலைமையேற்க வேண்டும், தர்மத்தின் வங்கிக் கணக்கில் நாட்டுக்கு வரவாக இருக்க வேண்டும் என விரும்பினார். இந்த அணுகு முறையின் உயர் தார்மீக நிலை அபாரமானது, அசாத்தியமானது. ஆனால் அது வெற்றியாக அமைந்தது. இந்தியாவின் விடுதலை அமைதியானது. போர்க்களங்கள் இருக்கவில்லை. காந்தியினுடைய மூன்று முக்கிய போராட்டங்களிலும் இரண்டு தரப்பிலும் மரணங்கள் ஏற்பட்டபோதிலும் காயமடைந்தவர்கள் மற்றும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்த ஜனத் தொகையைப் பார்க்கையில் மிகக் குறைவுதான்.

ஆனால் பெரும் சோகம் என்னவென்றால் இறுதியில் ஏற்பட்ட பெரும் ரத்தக்களறிக்கு முதன்மையான காரணம் வெளியேறிக்கொண்டிருந்த காலனியாதிக்கவாதிகள் அல்ல, விடுதலை பெற்றுவிட்ட முன்னாள் காலனியாதிக்கப் பிரஜைகள்தான். இதில் ஜின்னா பெருமளவுக்குப் பொறுப்பேற்க வேண்டும். தொடர்ந்து இந்து ராஜ்ஜியம் பற்றி முஸ்லிம்களிடம் பெரும் பீதியைப் பரப்பினார். ‘நேரடி நடவடிக்கை’யை போதிய கட்டுப்பாடின்றி ஏவிவிட்டார். 1946, 47இல் பஞ்சாபின் கிஸார் யூனியனிஸ்ட் அரசை கவிழ்க்க நடத்தப்பட்ட தொடர் வன்முறை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தத் தவறினார். இது பற்றி அவர் அறிந்திருந்தார். இந்த நடவடிக்கைகளுக்கு அவருடைய ஒப்புதலும் இருந்ததாகவே தெரிகிறது.

மேன்மையான அற மதிப்பீடுகளின் வெற்றியாக இந்திய விடுதலைப் போராட்டம் ஒரு முன்னுதாரணம், ஒரு மாபெரும் வெற்றி. காந்தி பலவீனங்களை பலங்களாக்கினார். ஆங்கில அதிகார வர்க்கத்தை, தமது அறவீழ்ச்சி அம்பலமாகாமல் அதிகாரத்தை ஏவ சவால் விடுத்தார். வெள்ளையர்கள் ஆயுதம் ஏந்தாத போராளிகளை சுட்டு வீழ்த்துவார்களேயானால் இந்தியர்களைப் பண்படுத்தி மேம்படுத்தும் அவர்களின் அறிவிக்கப்பட்ட நோக்கம் போலியாகிவிடும். காலனியாதிக்க எஜமானர்களின் கேடுகளை வெளிச்சமிட்டு காட்டியதில் இது ஒரு பிரமாதமான, வெற்றிகரமான அணுகுமுறை.

படையினரும் போலீசாரும் நிராயுதபாணியான போராளிகளை அடித்து நொறுக்கியதில் இருந்த கொடுமையைக் காண உலகம் தவறவில்லை.

இந்த தரிசனம்தான், ஒரு தேசம் பற்றியது மட்டுமல்ல மாறாக அற நோக்கங்களின் விடுவிக்கும் பண்பு பற்றியது, காந்தியை அபாரமான போராட்டத் தலைவராக வெளிச்ச மிட்டுக் காட்டியது. ஜின்னாவிடம் தனது செயல்திட்டத்தை நிறைவேற்றும் திறமை இருந்தது. அவருடைய சாதுர்யங்களும் கேள்விக்கு அப்பாற்பட்டவை. பற்பல வேற்றுமைகளுடைய ஒன்பது கோடி முஸ்லிம்கள் சார்பாக தான் பேசுவதாக அவர் அவ்வப்போது முன்வைத்த கோரிக்கைகள் சிறிதும் ஆதாரமற்றவை. இத்தகைய மிகைப்படுத்தப்பட்ட, எதிர்தரப்பை ஆயாசப்படுத்திவிடும் கோரிக்கைகளை முன்வைப்பது பேச்சுவார்த்தையில் அவர் நிபுணத்துவத்திற்கு சான்றாகிறது. ஆனால் அவருடைய எல்லா முயற்சிகளையும் தாண்டி வரலாறு நமக்கு காட்டுவது அவர் ஒரு வெற்றிகரமான உடன்படிக்கையாளர் அல்ல என்பதைதான். அவருக்கு பேச்சுவார்த்தையில் ஈடுபடுதல் மிக விருப்பமானது. ஆனால் 1916இல் லக்நௌ உடன்படிக்கையை எட்டிய பிறகு எந்தவொரு உடன்படிக்கையிலும் அவர் விரும்பியதை அடையமுடியவில்லை. 1927, 1929, 1937, 1942 மற்றும் 1947 ஆகிய முக்கியமான உடன்படிக்கைகள் அவருக்கு கைகூடவில்லை, அவர் விரும்பியதை அவரால் எட்ட முடியவில்லை. அவர் தன்னைத் தவிர வேறு யாரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவருடைய எதிர்த்தரப்பினர் நம்பவில்லை. பல சமயங்களில் அவர் மிக அதிகமாகக் கேட்டு வாங்க முயன்றார், போதிய அளவு விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. ஆக நாம் இப்படிக் கேட்கலாம்: அவரிடம் ஒரு உடன்படிக்கையை எட்டும் சாதுரியம் இருந்ததா? அல்லது பிரச்சனையை நீட்டிக்கொண்டே சென்றால் எப்படியாவது வெற்றியைக் கொய்துவிடலாம் என அவர் நம்பினாரா?

அவருடைய ஆகச் சிறந்த திறன், வழக்காடும் ஆற்றல்தான். அதாவது மேலதிகாரத்திடம் வேண்டுவது, சட்டப்பணியில் நீதிபதியிடமும் அரசியலில் ஆங்கிலேயரிடமும். ஆனால் பேச்சுவார்த்தைகளில், சமமட்டத்தில் செயல்படுகையில், அவருடைய கணிப்புகள் பிழைபட்டன. அவருக்கு பாகிஸ்தானில் உச்சக்கட்ட அதிகாரம் கொடுக்கப்பட்டது. அவருக்குமேல் எந்த அதிகாரமும் இருக்கவில்லை, சமமாக யாரும் இருக்கவில்லை. எதிர்க்கட்சியிலும், போட்டாபோட்டியிலும், சிறுபான்மை நிலையிலும் செலவழிந்த அவருடைய நீண்ட பொதுவாழ்க்கை முடிவுக்கு வந்ததும் அவர் நோக்கமற்றவராகக் காணப்பட்டார்.

ஒருவிதத்தில் அவர் உள்ளூர் பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடும் உள்ளூர் மனிதர். பிரச்சனையின் நுட்பங்களை புரிந்துகொள்வதில் அவரிடம் குறைபாடு இல்லை. ஆனால் காந்தியிடமோ முற்றிலும் வேறொரு தளத்திலான பார்வை, நோக்கு வெளிப்படுகிறது. பிரச்சனையின் உள் விவகாரங்களில் காந்தியின் கவனம் இருப்பதில்லை. ஜின்னா உட்பட அரசியல் ஆளுமைகளின் மையத்தில் இருக்கும் தன் முனைப்புக்குப் பாலூட்டுதலில் அவருக்கு அக்கறையே இல்லை. ஏப்ரல் 1947இல் இடைக்கால அரசின் பொறுப்பை அவர் ஜின்னாவிடம் கொடுக்க விரும்பியபோது அவருடைய நம்பிக்கைகள் முழுவதுமாக வெளிப்பட்டன. ஜின்னாவுக்கு உச்சமான பொறுப்பைத் தருவதுதான் காங்கிரசிடம் இஸ்லாமிய விரோதச் செயல்திட்டம் எதுவும் இல்லை என்பதைத் தெளிவாக நிறுவிடச் சிறந்த வழி என அவர் உண்மையிலேயே நம்பினார். ஆனால் அவருடைய சகாக்கள் அத்தகையதொரு பெரும் சலுகைக்கு இணங்கமாட்டார்கள் என்பதை உணரத் தவறிவிட்டார். அவர்கள் அதிகாரத்தை அடைய பல ஆண்டுகளாகக் காத்திருப்பவர்கள், பற்பல நாட்களைச் சிறையில் செலவிட்டவர்கள். உதாரணத்திற்கு நேரு 3000 நாட்கள் சிறையில் காத்திருந்தவர். காந்திக்கு தனது இந்த அதிரடியான யோசனையை ஜின்னா எவ்வாறு எதிர்கொள்ளக்கூடும் என்பதும் தெரிந்திருந்தது. காந்தியின் யோசனையைக் கேட்டு வியப்படைந்த மவுண்ட் பாட்டன், ஜின்னாவைப் பிரதமராக்கும் யோசனையின் மூலவர் யார் என்பதை ஜின்னா அறிய நேர்ந்தால் எவ்வாறு எதிர் வினையாற்றுவார் என்று காந்தியைக் கேட்டபோது, “ஆகா, அந்த தந்திரி காந்தியின் யோசனையா! என்பார் ஜின்னா” என்று காந்தி கூறினார். மகாத்மா தனது உயர்தர அரசியல் திட்டங்களின் வேறுபட்ட பண்புகளை அறிந்திருந்தார். ஆனால் அவருடைய உள்ளுணர்வு அவருடைய எதிர்தரப்பினரை சாந்தப்படுத்த விரும்பியது. தனக்கு அதிகாரத்தில் நாட்டமில்லை என்பதைத் தெளிவுபடுத்தி, தனது எதிராளிகளுக்கு மேன்மையான மனிதராகும் வாய்ப்பை காந்தி வழங்கினார். தமது ஆக ஆபத்தான எதிரிகள் பல சமயங்களில் தமதுதரப்பிலேயே இருப்பார்கள் என்ற தொழில்முறை அரசியல்வாதிகளின் விழிப்புணர்வை அவர் பகிர்ந்துகொள்ளவில்லை.

காந்தியின் தொலைநோக்கின் வீச்சின் காரணமாகத்தான் காந்தியமும் காந்திகிரியும் இருக்கின்றன, காந்தியவாதிகளும் உள்ளனர். ஆனால் ஜின்னாயிசம் என்ற ஒன்று இல்லை. ஏனெனில் ஜின்னாவின் முக்கிய ஆதரவாளர்கள் அவருடைய நம்பிக்கைகளுக்கு இஸ்லாமிய நெறிப்படி விளக்கமளிக்கத் தலைப்படுகிறார்கள். எனவே ஜின்னாவின் சிந்தனைகளுக்கு தனிப் பெயர் இல்லை. ஜின்னாயிசம் என்ற சொல் பயன்படுத்தப்படும்போதெல்லாம் அது பொதுவாக எதிர்மறையான பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. ஜின்னாவின் எதிரிகள் அவருக்கு அரசியல் சிந்தனையாளர்களின் வரிசையில் சிறப்பிடத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். அரசியல் நோக்கங்களுக்காக மேலோட்டமாக மத அடையாளத்தை பயன்படுத்தப்படுவதை ஜின்னாயிசம் என்கிறார்கள். தேசிய தரிசனம் உடையவர்கள் அல்ல, இஸ்லாமிய அடையாளத்தைப் போர்த்திக்கொள்ளும் விஸ்கி குடிக்கும் அரசியல்வாதிகள்தான் ஜின்னாவாதிகள். இது ஒரு நேர்மையான புத்திசாலியான மனிதருக்கு விதிக்கப்பட்ட கொடுமை. உண்மையிலேயே அவர் நேர்மையானவர். அந்த அரணும் ஆதரவும் அவருக்கு மறுக்கப்படக் கூடாது. அவர் இல்லாவிட்டால் ஏற்பட்டிருக்கும் வாய்ப்பே இல்லாத பாகிஸ்தான் கோரிக்கைக்காக அவர் ஏன் உயிரைக் கரைத்து பணியாற்ற வேண்டும்? 1948இல் அவரே தன்னை பாகிஸ்தானை உருவாக்கும் நோக்கில்தான் ஒரு ‘தீவிரவாதி’ என்றார். ஆனால் உண்மையுணர்ச்சியுடன் இருப்பதால் செய்வதெல்லாம் பிழையில்லை என்றாகிவிடாது. தனது வாதத்தை அவர் படுபயங்கரமாக மிகைப்படுத்திய பிழையிலிருந்து இதன் காரணம் அவரை விடுவிக்க முடியாது. முஸ்லிம்களுக்கும் இஸ்லாமுக்கும் அவர் விவரித்ததுபோன்ற பேராபத்து இந்தியாவில் இருக்கவில்லை - காந்தி மற்றும் நேரு தலைமைத்துவத்தில் நிச்சயமாக இல்லை.

Gandhi-Jinnah-image-8.jpgஜின்னாவின் அரசியல் வாழ்க்கையின் உண்மையான கொடை ஒரு இசத்தைவிட மிகக் குறைந்த ஒன்றுதான். எதிர்ப்பில் ஒருங்கிணைந்து நிற்பவர்கள் அதிகாரத்தைப் பெற்ற பின்னர் ஒருங்கிணைப்பைத் தொடர முடியாது என்ற பாடம் அல்லது எச்சரிக்கைதான் அவர் அரசியல் வாழ்விலிருந்து பெறப்படுகிறது. உருவகமாகச் சொன்னால் அவர் ஒரு படையைத் திரட்டி போருக்குச் சென்றார். அதன் ஒரே நோக்கம் தனது முதலும் கடைசியுமான போரில் வெல்வதுதான். அதன்பின் சண்டைகள் இருக்காது. பின்னர் பிரச்சனைகள் தாமாகவே தீர்ந்துவிடும். அவருடைய படை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் திரட்டப்பட்ட ஒன்றுதான். முஸ்லிம் லீக், காங்கிரசைப் போல அகலமான ஆழமான புனல் அல்ல. தன் உட்கிடையில், பெயரளவிலும்கூட, அது ஒருசாராரின் அமைப்புதான். அது ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒற்றைப் படைத்தான அமைப்பு. பிற தேசத்து முஸ்லிம்களின் விடுதலையில் ஜின்னாவுக்கு அக்கறையோ ஈடுபாடோ இருந்ததில்லை. அவருடைய முன்னாள் சகா எம்.சி. சாக்லாவின் கூற்றுப்படி இந்தியாவில் எஞ்சிய முஸ்லிம்களின் நிலையைப் பற்றிக்கூட அவருக்கு அக்கறை இருக்கவில்லை. ஐரோப்பிய ஆதிக்கத்திற்கு அப்பால் மூன்றாம் உலக நாடுகளுக்கான ஒரு பன்னாட்டு தரிசனம் நேருவிடம் இருந்தது. ஜின்னாவிடம் இருக்கவில்லை.

தனது உடனடி தேவைகளைத் தாண்டிய அரசியல் நோக்கில் அவருக்கு அக்கறை இருக்கவில்லை. அவர் தனக்கான ஒரு மினி காங்கிரசை, ஒரு பன்முகக் கூட்டணியை உருவாக்கினார். அதை தனது தலைமையின் கீழ் இணைத்தார். தனது தலைமையைத் தவிர பிற விவரங்களை துல்லியமாக முன்வைப்பதைத் தவிர்த்தார். இது அவர் ஒரு வெற்றிகரமான அரசியல்வாதி என்பதைக் காட்டுகிறது. பல சமயங்களில் தனது தனிப்பட்ட நோக்கங்களுக்காக அவரால் பிறரைத் தூண்டி செயல்பட வைக்க முடிந்தமை அவரது சாமர்த்தியம். ஆனால் இது, அவரைப் போன்ற சந்தர்ப்பவாதிகள் கூட்டணியின் ஒரு வெற்றுத் தலைவராக ஆகும்படியாக அவரைச் சுருக்கியது. பாகிஸ்தான் இயக்கத்திலிருந்த பலருக்கு அவருடைய பார்வையிலும் நோக்கிலும் அக்கறை இருக்கவில்லை. பலர் அவற்றுக்கு எதிராக இருந்தார்கள். தாராளவாதப் பார்வை சிறிது மற்ற உறுப்பினர்கள் பலரைக் கொண்ட இயக்கத்தின் தாராளவாதத் தலைவராக அவர் இருந்தார்.

காந்தியும் தனது அரசியலாக்கத்தில் அமிழ்ந்துதான் இருந்தார். ஆனால் அவரால் தனது அரசியலாக்கத்தை, நோக்கத்தை அடைவதற்கான வழிமுறையாக மட்டும் பார்க்காமல், தன்னளவில் முக்கியாமானதாகவும், அறம் சார்ந்ததாகவும் அது இருக்கவேண்டியதன் அவசியத்தையும் பார்க்க முடிந்தது. தனது செயல்பாடுகளில் தொலைதூரப் பின் விளைவுகளைப் பற்றிய ஆழ்ந்த அக்கறை காந்தியிடம் இருந்தது. இதுதான் இருவரில் காந்தியை தீர்க்க தரிசனம் கொண்டவராக்குகிறது.

காந்தி அவரது சாதனைகளைவிட கொள்கைகளின், வழிமுறைகளின் அடிப்படையில் தான் மதிப்பிடப்பட்டார். அவர் காண விரும்பிய உலகளாவிய அறப் புரட்சியை அவர் ஏற்படுத்தவே இல்லை. ஆனால் அவரது ஆதரவாளர்கள் அதை உயரிய தோல்வியாகப் போற்றினார்கள். அவருடைய மரணத்திற்குப் பிந்திய நற்பெயருக்கு முக்கிய காரணம் அவர் எந்த அமைப்புக்கும் தலைமை தாங்கவில்லை, எந்த அதிகாரப்பூர்வமான திட்டத்திற்கும் பொறுப்பேற்கவில்லை என்பதுதான். அவர்தான் ஆகச் சிறந்த எதிரணித் தலைவர். எந்தப் பதவியையும் வகிக்காததன் வழி மிகையான எதிர்பார்ப்புகளைத் தவிர்த்தார். அவருடைய தரிசனத்தை நிறை வேற்றும் கடப்பாடுகூட அவருக்கு இருக்கவில்லை.

பாகிஸ்தானில் நடந்ததற்கெல்லாம் நாம் ஜின்னாவைப் பொறுப்பாக்க முடியாது. ஆனால் அது உருவாக வேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறியதால், அதன் பல சீரழிவுகளுக்கு அவர் காரணியாகப் பார்க்கப்படுகிறார். சமமாக இருவரையும் மதிப்பிடும் நோக்கில் நாம் யதார்த்தத்திற்கு முரணான ஒரு கற்பனை விளையாட்டில் ஈடுபட வேண்டும். காந்தி அவருடைய இந்தியாவை - கிராமங்கள், ராட்டை, பிரம்மச்சாரிய திருமணங்கள், மதுவிலக்கு - அடைந்திருந்தால் அவரை எப்படிப் பார்த்திருப்போம்? அல்லது ஜின்னாவைப் போல அவர் துன்புற்றிருந்தால், எலி கருவியது போன்ற ஒரு காந்திய இந்தியா அதன் எல்லா சாத்தியமான குறைபாடுகளுடனும் எந்த சாதகங்களும் இன்றி அவருக்குக் கிடைத்திருந்தால்? விதி மகாத்மாவிற்கு கருணை காட்டியது. அவரது நோக்கத்தை அவர் அடையவில்லை என்பதால் ஜின்னாவைப் போலன்றி அவரது லட்சியம் கறைபடாமல் இருக்கிறது.

ஓர் ஆன்மீகத் தலைவர், சமூக விமர்சகர், எதிரணித் தலைவர் எனப் பார்க்கையில் காந்தியின் முக்கிய சாதனை அரசியல்தளத்தில்தான் என்பது ஆச்சரியம். மேற்கத்திய கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசைக் கையிலெடுத்து அதை ஓர் அசலான இந்திய அமைப்பாக மாற்றினார். கூட்டுத் தலைமை, வேறுபட்ட சிந்தனைகளை அகப்படுத்துதல் போன்ற அதன் உள்ளார்ந்த பண்புகள், காந்தியின் ஆகச் சிறந்த லட்சியங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இந்தியர்களுக்கு வழங்கியது. காந்தியின் வாரிசான நேரு இதை மிகச் சிறப்பாக நிறைவேற்றியதால் இப்போது புதிய இந்தியாவை உருவாக்கிய சாதனை காந்தியுடையதாகிறது. ஒரு தலைவராக ஜின்னாவிடம் இதுபோல ஒன்றைச் சாதிக்கும் திறமை இருக்கவில்லை. ஏனெனில் அவர் ஒரு போராளி, விதிகளைப் படைப்பவர் அல்ல. முஸ்லிம்லீக் மேட்டிமை தளத்திலிருந்து உருவான ஒரு கட்சி. அதற்கு தலைமையேற்றதன் வழி அவரும் உயர்குடியில் இணைந்தார். அதே நேரம் பாகிஸ்தான் கோரிக்கை அவரது பரந்த தாராளவாதப் பார்வையைக் குறுக்கியது. அவரால் ஒரு புதிய இஸ்லாத்தை உருவாக்க முடியவில்லை. அவரது ஆதரவாளர்களுக்கு புழக்கத்திலிருந்த இஸ்லாமே போதுமானதாக இருந்தது. பாகிஸ்தானின் சோகம் இதுவேதான்: அதன் காரணகர்த்தா இலக்கைப் பற்றி எண்ணாமல் நடைமுறைகளிலேயே மூழ்கியிருந்தார். ஆகையினால் அவரால் அன்றைய சூழலுக்குப் பொருத்தமான நெறிமுறைகளை உருவாக்க முடியவில்லை.

மேலும் அவரது தன்முனைப்பின் காரணமாக அவரது சிறப்பான தாராளவாதப் பார்வையை பாதுகாத்து முன்னெடுக்க நேரு போன்ற ஆளுமைகள் யாரும் அவருடன் இருக்கவில்லை.

ஜின்னா சாத்தியமான அளவுக்கு பரந்த ஆதரவுத் தளத்தை உருவாக்கினார். ஆனால் அவரது தலைமை ஒரு வேகத்தில் திரண்டெழுந்த ஒன்றுதான், தொலைநோக்குடையது அல்ல. ஒரு தேசத்தைக் கட்டி எழுப்புவதில் இன்றியமையாத கூறு ஒன்றை அவர் பலிகொடுத்தார். அதாவது அதன் வருங்காலத்திற்கான பொதுத் தளத்தை உருவாக்குவது. அரசியல் இஸ்லாம் தெளிவாக வரையறுக்கப்படாத ஒன்று. முஸ்லிம்கள் பலதரப்பட்டவர்கள், தெளிவான வலுவான நோக்கங்கள் இல்லாதவர்கள். ஒருகால் அவர் தாராளவாதமே - விடுதலையில் நாட்டம் - போதுமென நினைத்திருக்கலாம். ஆனால் தாராளவாதத்திற்கு நடைமுறையில் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு அவசியம். பாகிஸ்தானில் கடுமையான பாதுகாப்பின்மை - ராணுவம், பொருளாதாரம், பணப்புழக்கம் சார்ந்து - இருந்தது. இச்சிக்கல்களின் இருப்பை ஒப்புக்கொள்ள தயங்கிய ஜின்னா, அவற்றை எதிர்கொள்ளத் தவறினார். சிறிய பிரச்சனைகளில் கவனத்தைக் குவித்து பெரியவற்றைக் கோட்டைவிட்டார். தனது பாதுகாப்பை, தனது கடமைகளில் சமரசம் செய்யாமல், உறுதிசெய்ய முடியாத மனப்பிராந்துடைய நாடானது பாகிஸ்தான். இது ஜின்னாவிடம் பல முறை கூறப்பட்டது, விரைவிலேயே அது நிஜமானது. நாட்டின் முதல் பட்ஜெட்டிலேயே குறைவான வரிகளின் அடிப்படையில் அசாத்தியமான ராணுவச் செலவு திட்டமிடப்பட்டது. ஆனால் தமது வாழ்க்கைமுறையில் இஸ்லாம் உடனடி மேம்பாட்டை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த மக்களால் உந்தப்பட்டு அவர் முன்னேறினார். இங்கேதான் ஜின்னா அவரது ஆதரவாளர்கள் நினைப்பதைவிட சாதுர்யம் குறைந்த சராசரியான தலைவராக வெளிப்படுகிறார்.

ஒரு தேசத்தை நிறுவிட அவசியமான பண்புகள் காந்தியிடம் இருந்தன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் ஜின்னாவிடம் இவை இல்லை.

(இந்தக் கட்டுரை Jinnah vs Gandhi (Roderick Matthews, Hachette India, 2012) நூலில் இடம்பெற்றிருக்கும் முடிவுரையின் தமிழாக்கம்.)

ரொடெரிக் மாத்யூஸ் பற்றிய குறிப்பு:Jinna---Gandhii-Author-Roderick.jpg

ரொடெரிக் மாத்யூஸ் (1956) இந்திய வரலாறு பற்றி எழுதுவதில் ஆர்வம்கொண்ட, சுதந்திர எழுத்தாளர். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் லண்டனில் வசிக்கிறார். ஆக்ஸ்போர்டின் பால்லியொல் கல்லூரியில் நவீன வரலாறு படித்தவர். பல இந்திய மற்றும் இங்கிலாந்து இதழ்களுக்கு எழுதியிருக்கிறார். அவரது சொந்த வலைதளத்தை historydetox.com இல் பார்க்கலாம்.

ரொடெரிக்கின் முதல் நூல் The Flaws in the Jewel: Challenging the Myths of British India.

 

http://www.kalachuvadu.com/issue-160/page20.asp

பந்தயத்தில் றேஸ் ஓடியது குதிரை மட்டுமே. ஆனல் பரிசை பெற்றுக்கொண்டது அதன் மீது முதுகு மீது சவாரிவிட்ட ஜொக்கியே

 

 

இந்திய அரச அமைப்பினுள் முஸ்லிம்களை பாதுகாக்கப் பொருத்தமானதாக அவரால் பிரித்தானிய முறை பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்க முடியவில்லை. மாறாக தேசியம் அல்லது இஸ்லாம் சார்ந்து நிற்பது எதிர்பாராத பிரச்சனைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தும். இது போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கும் மனிதரல்ல அவர். அவர் ஒரு வழக்கறிஞரைப் போல இருப்பிலுள்ள சட்டங்களின் வரையறைக்குள் இயங்கியவர். புதிய சட்டங்களை உருவாக்க அவர் மிகவும் தயங்கினார். அவர் உருவாக்கிய பாகிஸ்தானை இன்று பீடித்துவரும் எல்லா முரண்பாடுகளும் அதன் உருவாக்கத்திலேயே இருந்தன.

 

 

காந்தியின் இலக்கு இந்தியர்களின் விடுதலை. ஜின்னாவின் நோக்கம் முஸ்லிம்களைப் பாதுகாப்பது

அவர் பிறப்பித்த நாட்டைப் பற்றிய நம் பார்வையின் வழி அவரைப் பற்றிய பார்வையை கட்டமைக்கிறோம். பாகிஸ்தானின் உருவாக்கம் ஒரு இமாலய அபத்தம் - அல்லது அதனுள் கொஞ்சம் இமயத்தைக் கொண்டிருக்கும் அபத்தம் - என்பதை நாம் எல்லோரும் ஏற்கும் காலம்வரை ஜின்னா பற்றிய இறுதித் தீர்ப்பை எட்ட முடியாது.

 

 

 

இஸ்லாமிய அடையாளத்தைப் போர்த்திக்கொள்ளும் விஸ்கி குடிக்கும் அரசியல்வாதிகள்தான் ஜின்னாவாதிகள்

 

 

 

தனது வாதத்தை அவர் படுபயங்கரமாக மிகைப்படுத்திய பிழையிலிருந்து இதன் காரணம் அவரை விடுவிக்க முடியாது. முஸ்லிம்களுக்கும் இஸ்லாமுக்கும் அவர் விவரித்ததுபோன்ற பேராபத்து இந்தியாவில் இருக்கவில்லை - காந்தி மற்றும் நேரு தலைமைத்துவத்தில் நிச்சயமாக இல்லை.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.