Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடைந்த போத்தல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடைந்த போத்தல்கள்

 
mathupuddi.jpeg
ஏனோ அவள் மனம் மீண்டும் மீண்டும் ஒன்றையே சுற்றி சுற்றி வந்தது. பொன் கிரகணங்களை மெதுவாக வீசி வந்த சூரியன் தன் கைகளை தென்னம் கீற்றுகளுக்கிடையில் விட்டு அவள் கன்னத்தை தொட்டதைகூட அவளால் உணர முடியாமல் இருந்தது.
 
adaikkoli.jpegஅருகே கொட்டிலில் கட்டியிருந்த ஆடு கட்டையில் சுற்றி சுற்றி வர அதன் சின்னஞ்சிறு  குட்டிகள் இரண்டும் " ம்...மே... ம்...மே..." என்று தங்கள் கிச்சுகுரலில் தாயை கூப்பிட்டபடி பின்னே ஓடின. இவளைக் கண்டதும் ஏதாவது தீனி போடுவாளோ என்ற நினைப்பில் தன் புதிய குஞ்சுகளை "கொக்... கொக்..." என அழைத்துக்கொண்டு ஓடி வந்த அடைக்கோழி (அதுதான் அதற்கு அவள் வைத்த பேர்)அவள், அதனைக் கவனிக்காத ஏமாற்றத்துடன் அவளை தலையை சரித்து ஒரு பார்வை பார்த்த பின்னர் தன் குஞ்சுகளுடன் மீண்டும் குப்பை மேட்டை நோக்கி சென்றது.
 
அவள் அமர்ந்திருந்த கிணற்று ஒட்டை ஒட்டினால் போல் வளர்ந்திருந்த கொய்யா மரத்தின் உச்சிகொப்பில் இருந்த பழத்தைக் கொறித்த அணில் இவளை கண்டுவிட்டு தன் நீண்ட வாலை உயர்த்தி உலுக்கியபடியே தன் கீச்சுக்குரலில் கத்தியது. தென்னம் ஓலைகளில் அமர்ந்திருந்த கிளிகள் சப்திக்க போட்டிக்கு எங்கிருந்தோ ஒரு குயிலும் குரல் கொடுத்தது.
 
தூரத்தில் வாசல்ப்படியின் ஓரத்தில் இருந்த ஈரலிப்பில் பள்ளம் தோண்டி அதனுள் படுத்திருந்த டைகர் இவளின் சிந்தை ஓட்டம் தன்னையும் தொட்டுவிட்டது என்பதுபோல் இவளையே பாவமாக பார்த்தபடி சோகமாக பாதி கண் மூடியபடி காதுகளை தொங்கப்போட்டபடி படுத்திருந்தது. இவளின் பூனை மட்டும் தான் இவளை விட்டு எங்கும் போகவில்லை, என்பது போல வாலை சிலிர்த்தபடி முதுகை கூனிய படி இவள் கால்களில் உரசியபடி கால்களைச் சுற்றி வந்தது.
 
சாதாரண நாளாக இருந்திருந்தால் செல்வி இவற்றை அணு அணுவாக இரசித்திருப்பாள். இன்று அவள் மனது அவளிடம் இல்லை; தேசம் விட்டு தேசம் பாய்ந்திருந்தது.
 
செல்வி சிறு வயது முதலே துருதுரு என்று இருப்பவள். நல்ல அழகான முகவெட்டு. அப்போதுதான் எட்டாம் தரம் முடித்து ஒன்பதாம் தரத்தினுள் நுழைந்திருந்தாள். பாடசாலைக்கு வருகையில் இரட்டைப் பின்னல் பின்னி கறுத்த ரிப்பன் முடித்து, நீலம் போட்டு தோய்த்து, நீட்டாக அயன் செய்த வெள்ளைச் சட்டையுமாக அவள் வருகையில், அவள் கிண்கிணிச் சிரிப்பொலி கேட்டு திரும்பியவர்கள் அவள் மேல் வைத்த கண்ணை சுலபத்தில் எடுத்து விட முடியாது.
 
saikkil.jpeg
அழகானவள் மட்டுமல்ல, படிப்பிலும் படு சுட்டி செல்வி. எட்டாம் தர இறுதிப்பரீட்சையில் வகுப்பில் முதாலாம் பிள்ளையாக வந்திருந்தாள். அதையே காரணமாக காட்டி தந்தையிடம் அடம்பிடித்து (தந்தையர் எல்லாம் மகள்மாருக்காக உருகி விடுவதும் தாய்மார் எல்லாம் மகன்களுக்காக உருகுவதும் வழமைதானே.) ஒரு லுமாலா சைக்கிளை பரிசாக பெற்றிருந்தாள்.
 
 
புத்தம் புது வகுப்பு, புதுச் சைக்கிள்! அவளுக்கு பெருமை பிடிபடவில்லை. சைக்கிளில் போவதாகவே தோன்றவில்லை. தேரில் செல்வதுபோல் அந்தச் சைக்கிளில் ஜம்மென்று அமர்ந்து சென்றாள். முன்பு அவள் வகுப்பில் சில மாணவியர் சைக்கிளில் வரும்போது ஏக்கமாகப் பார்த்தவள், இப்போது அவர்கள் சைக்கிளை விட தனது சைக்கிள் புதிது எனும் பெருமையோடு தன் சைக்கிள் புராணத்தை வகுப்பில் மற்றவர்களுக்கு அவிழ்த்து விட்டாள் செல்வி. அனேகமாக இப்போதெல்லாம் செல்வி வாய் திறப்பதே தன் சைக்கிள் பற்றி பேசுவதற்காகவே இருக்கிறது.
 
road.JPGஇப்படி சென்ற செல்வியின் சைக்கிள் புராணம் நான்காம் நாளே அடி வாங்கிக் கொண்டது. வேறு ஒன்றுமில்லை. தாயகப் பகுதிகள் எங்கும் குண்டு மழைகளினாலும், நீண்ட காலங்கள் யுத்தம் காரணம் காட்டப்பட்டு வேண்டுமென்றே அரசு அபிவிருத்திப் பணிகளை புறக்கணித்திருந்ததாலும் ரோடுகள் பேரளவில் மட்டுமே ரோடுகளாக காணப்பட்டனவே ஒழிய அவை குண்டும் குழியுமாகவே காணப்பட்டன. அப்பப்போ ஊரவர் மக்கி கொண்டு குழிகளை நிரப்புவதும் அது அடுத்த மழைக்கே உடைந்து கொள்வதும் என காணப்படுவது வழமையாக இருந்தது. ஏனெனில் இது தமிழன் பகுதி ரோடுகளாச்சே.

வகுப்பில் சைக்கிள் புராணம் படித்தபடி இருந்த செல்வி பாடசாலை விட்டதும்

வகுப்பில் இருந்து, வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல சர்ரென சைக்கிள் பார்க் வந்து சேர்ந்தவளது உற்சாகம், காற்றற்ற பலூன் போலானது. ஆம். அவள் சைக்கிளின் பின் சக்கரத்தில் முற்றாக காற்று இறங்கியிருந்தது.

சைக்கிள் ஓட்டுவதற்கே இப்போதுதான் பழகி இருந்தவள், அதை இன்று உருட்டிக்கொண்டு ஒரு கிலோமீட்டர் செல்லவேண்டும். அங்குதான் சைக்கிளுக்கு ஒட்டுபோட முடியும். புதுச் சைக்கிள் காற்று போனது ஒருபக்கம் அவள் மனதை கொன்றாலும், அதை விட பள்ளிவிட்டிருக்கின்ற நேரம் எல்லாரும் வீடு செல்கின்ற நேரம், வகுப்பில் இவள் அடித்த ஜம்பங்களை கேட்டு கொண்டிருந்தவர்கள் எல்லோரும் இவள் சைக்கிள் உருட்டிக்கொண்டு செல்வதை பார்க்கப்போகின்றனர்; என்பதை நினைக்கையில் இவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. மனதுக்குள் வீதி அபிவிருத்தி அதிகார சபையையும் , கடவுளையும் நன்கு திட்டி தீர்த்தபடி கண்ணோரம் எப்போதும் விழுந்துவிடுவேன் என சொல்லியபடி முட்டி நின்ற கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, முதுகை அழுத்திக்கொண்டு இருந்த புத்தகப் பையையும் சுமந்தபடி தள்ள முடியாமல் சைக்கிளை தள்ளிக்கொண்டு பாடசாலையை விட்டு வெளியே வந்து ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள்.

சைக்கிள் ஓட்டுவது போல உருட்டுவது ஒன்றும் இலகுவாக தெரியவில்லை அவளுக்கு. முதுகில் புத்தகச்சுமை, மனதில் மற்றவர் என்ன நினைப்பரோ என்பதால் வந்த சுமை, என எல்லாம் அவளை கலங்கடித்தன. யாரிடமும் உதவி கேட்கவும் முடியவில்லை. வெட்கம் பிடுங்கி தின்றது. அப்போது அந்த வழியாக வந்தான் செந்தமிழ்.

செந்தமிழ் பாடசாலையின் முதல் மாணவன். அது மட்டும் அல்ல அவனது பத்தாம் தரத்திலும் அவனே முதலாம் பிள்ளை வந்திருந்தவன் இப்போது பதினோராம் தரம். பக்கமாக படிய வாரிய தலை. அரும்பு மீசை. சிரிக்கும் போது குழிவிழும் கன்னம். பரந்த நெற்றி என வசீகரமான் தோற்றத்தில் வெள்ளைச் சேட் வெள்ளை பாண்ட் அணிந்து முதல் மாணவர் தலைவன் என்கின்ற பாடசாலை சின்னத்தினை மார்பில் அணிந்து வரும் அவன் மிடுக்கில் அனைவரும் சொக்கித்தான் போவார்கள்.

செல்லவி கஷ்டப்பட்டு சைக்கிள் உருட்டுவதை தூரத்தில் இருந்து பார்த்தபடி வந்த செந்தமிழ் அவள் அருகில் வந்ததும் தன் ஹீரோ சைக்கிளை நிறுத்தி 

"என்ன தங்கச்சி சைக்கிள் ஓட்டை போல? கன தூரமில்லே சைக்கிள் கடைக்கு. நான் வேணுமெண்டால் சைக்கிள கொண்டே கடையில விடுறன். அங்க அவை ஒட்டி வைப்பினம். நீங்கள் நடந்து வரயிக்க சைக்கிள் ரெடியா இருக்கும். நீங்கள் எடுத்துக்கொண்டு வீட்டை போகலாம். என்ன கொண்டு போகட்டே?..."

என்றான். அவனுக்கு தெரியுமா அவன் கொண்டு சென்று சைக்கிளை விட்டாலும் அவளிடம் பணமில்லை சைக்கிளை எடுப்பதற்கு என்று.

"இல்லை அண்ணா... அது வந்து... ... ... நான் காசு... ... ..."

என இழுத்தாள் செல்வி.உடனடியாக நிலைமையை புரிந்து கொண்டவனாக

"பரவாயில்லை தங்கச்சி. என்னட்டை காசிருக்கு. நான் குடுத்திட்டு போறன் நீங்கள் போய் சைக்கிளை எடுங்கோ."

என்றபடி செந்தமிழ் அவள் சைக்கிளை வாங்கிக் கொண்டான். மிகுந்த நன்றி வாஞ்சையோடு ஒரு பார்வையை அவன் மேல் செலுத்தியபடி சைக்கிளை கையளித்தாள் செல்வி.

இந்த சந்தர்ப்பத்தின் பின்னர் செந்தமிழின் பார்வையை சந்திக்கும் போதெல்லாம் நட்பாக புன்னகைக்க ஆரம்பித்திருந்தாள் செல்வி. செந்தமிழ் வேறு இவள் வகுப்பை கவனிக்கும் மாணவ முதல்வனாகி இருந்தான். எனவே காலையில் பாடசாலை ஆரம்பிக்கும் போதும் மாலையில் பாடசாலை முடியும் போதும் இருவரும் சந்தித்துக்கொள்ள வேண்டி வந்தது.

kaathal+jodi.jpg
கண்களில் ஆரம்பித்த இந்த சந்திப்பு இதயத்தில் ரீங்காரமிட காதலாக மலர்ந்தது. இந்த பள்ளி காதல் கோயில் வீதி, ஐஸ்கிரீம் கடை என பல இடங்களுக்கு விரிந்தது. இருவரது மனப்பறவைகளும் வான வீதியில் சிறகு விரித்து பறக்க தொடங்கின.

இலங்கையில் பறந்த எந்த தமிழ்ப் பறவையும் கடந்த  35 வருடங்களாக நிம்மதியாக மூச்சு விட்டதாக சரித்திரம் இல்லையே! இந்த பறவைகள் மட்டும் என்ன விதிவிலக்கா? 2006 இல் இவர்கள் மீது கொடூர யுத்தம் திணிக்கப்பட்டது.

யுத்தம் தன் கோர முகத்தைக் காட்டி நிறைத்தபோது இவர்களில் பலரும் பல முட்கம்பிகளின் பின்னே இருந்தனர்.

mudkampi.jpegஆனாலும் செல்வியையும் செந்தமிழையும் ஒரே முட்கம்பிகளின் பின்னால்  கொண்டு வந்து நிறுத்தி இருந்தது, அவர்கள் முன் வினைப்பயன். ஆனாலும் செந்தமிழ் தன் பெற்ற தாயையும் சகோதரனையும் இழந்து தந்தையுடன் மட்டும் வந்திருந்தான். செல்வி தன் பெற்றவர் இருவரையும் காவு கொடுத்திருந்தாள்.

முகாமிற்குள் தஞ்சமடைந்திருந்த செந்தமிழையும் அவன் தந்தையையும் கூட சும்மா விடவில்லை இராட்சத படைகள். அடிக்கடி அவர்களை வந்து கைது செய்து அழைத்து சென்றன படைகள். திருப்பி அவர்கள் முகாமுக்குள் கொண்டு வரப்படும் பொழுது அவர்கள் மேனிகளில் பல இடங்களில் இரத்த கசிவுகளும் இரத்த கண்டல்களும் காணப்படும், அவ்வளவு சித்திரவதை அனுபவித்திருப்பார்கள். இது அவர்களுக்கு மட்டுமல்ல. இன்னும் பலருக்கும் இதே நிலைதான். ஆனாலும் உலகுக்கு தெரிந்திருக்கவில்லை இந்த நிலை. முகாமுக்குள் தான் யாரும் பார்வையாளர் அனுமதிக்கப்படுவதில்லையே!

செந்தமிழின் தந்தை தன் புலத்து உறவுகளிடம் கையேந்தி சில இலட்சங்கள் புரட்டினார். இலட்சங்கள் கை மாறின. பலன் செந்தமிழ், தந்தை இருவரும் முகாமில் இருந்து களவாக வெளியகற்றப்பட்டனர்.

முகாமை விட்டு வெளியேறிய போது செல்வியைச் சந்தித்து செந்தமிழ் வாக்களித்திருந்தான், மிக விரைவிலேயே தான் புலம் பெயர் நாடொன்றுக்கு சென்று பின் அவளை அழைத்துக் கொள்வதாக.   அதை அவள் முழுமையாக நம்பினாள்.

இந்திய சென்ற சில நாளிலேயே அவளுக்கு என ஒரு கைத்தொலைபேசி அனுப்பி இருந்தான் செந்தமிழ். அதன் மூலம் அவர்கள் தினசரி அளவலாவிக்கொண்டனர். தாங்கள் தாங்கள் படும் கஷ்டங்களையும் பகிர்ந்து ஒருவருக்கொருவர் ஆறுதலும் தேறுதலும் தேடிக்கொண்டனர்.

இவள் வணங்கிய தெய்வங்களோ நோற்ற நோன்போ அவனின் விடா முயற்சியோ என்னவோ ஒன்று அவன் மிக விரைவில் புலம்பெயர் நாடொன்றை அடைந்திருந்தான். இவளும் தெய்வங்களுக்கு நன்றி சொல்லி ஆறுதல் பெருமூச்சு விட்டுகொண்டாள்.

வருடங்கள் உருண்டோடின. செல்விகூட இப்போது முகாம் விட்டு வந்து தன் தூரத்து உறவினர்கள் விட்டில் இருக்கிறாள். வெளிநாடு என்று செந்தமிழ் சென்று இரண்டரை வருடங்கள் ஆகி விட்டன. வெளிநாட்டில் தான் நன்கு உழைப்பதாகவும் மிக விரைவிலேயே தனக்கு வழக்கு சாதகமாக முடியும் என்றும் அதன் பின் அவளை இந்தியா வந்து மணம்முடித்து தான் ஸ்பொன்சர் செய்வதாகவும் சொன்னான் செந்தமிழ். தினமும் அவர்கள் தொலைபேசியில் உரையாடத் தவறுவதே இல்லை.

தினமும் அவளோடு பேசி வந்த செந்தமிழ் கடந்த மூன்று மாதமாக அவளுடன் தொடர்புகள் இல்லை. அவளும் பல முறை தொடர்பு கொண்டு பார்த்துவிட்டாள். ம்ஹும்... பலன் எதுவுமில்லை. சாப்பாடு  தண்ணி மறந்தாள் செல்வி. கோயில்  கோயில் என்று சுற்றி வந்தால். எல்லா விரதங்களுமிருந்தாள். அவனுக்கு என்ன நடந்ததோ என அங்கலாய்த்தாள். 'அவருக்கு ஒண்டும் ஆகி இருக்க கூடாது..' என்பதே அவள் வேண்டுதலாக இருந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா?

இன்று மாலையில் கொழும்பில் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. இவள் வகுப்பு தோழி கொழும்பில் இருந்து பேசினாள்.

"அடியே செல்வி உனக்கு விசியம் தெரியுமே? உண்ட செந்தமிழுக்கு என்ன நடந்தது எண்டு. "

கேட்டு நிறுத்தினால் தோழி. என்னவோ ஏதோ என பதறிய செல்வி மனத்தினும் உள்ள கடவுள்களை துணைக்கு அழைத்தபடி

"எ... என்னடி என்ன ஆச்ச? அவர் நல்ல இருக்கிறார் தானே?  கெரிஎண்டு விசியத்த சொல்லு. எனக்குஎன்னவோ செய்யுது..."

 படபடத்தாள் செல்வி.

thaali.jpeg

"ம்... அவனுக்கென்ன நல்லத்தான் இருக்கிறான். இப்ப மூண்டு மாதத்துக்கு முதல்ல வழக்கு நடந்ததாம். கேஸ் ரியக்டாம். அதால இப்ப அங்க என்டா சித்திட மகளை கலியாணம் கட்டியாச்சாம். அவள் அங்கேயே பிறந்ததால ஸ்பொன்சர் பண்ணலாமாம்.  நேற்றுதான் கலியாணமாம். பேஸ்புக்கில படம் போட்டிருக்கு...."

மேலே ஏதேதோ தொடர்ந்துகொண்டிருந்தால் தோழி. இவள் காதில் எதுவும் விழவில்லை. பித்து பிடித்தவள் போல மரமாகி வீட்டின் பின் பக்கம் நகர்ந்து வந்து கிணத்து ஒட்டில் அமர்ந்தாள். எண்ணங்கள் பழைய காலத்தை புரட்டி கொண்டிருந்தது.

அவனுக்கு என்ன கலியாண வயதா? இந்த இடப்பெயர்வும், தமிழனின் நிலையும் சிறுவர் விவாகத்தை ஊக்கிவிக்கிறதா? பண்டை தமிழ் சொன்ன காதல் என்ன ஆனது? எப்படி என்னை மறந்தான்? இன்னொருத்தி கழுத்தில் எப்படி தாலி கட்டினான்? என் நிலை என்ன? அவனில்லாத வாழ்வு எனக்கு எதற்கு? விடைதெரியா விடை காண முடியா கேள்விகள் அவளுள் எழுந்து கொண்டே இருந்தது. வாழ்வு சூனியமாக தெரிந்தது.

bottles5.jpg
புலத்தில் கலியாண விருந்து தடல்புடல்பட்டது. விருந்தில் போத்தல்கள் உடைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.  இங்கே செல்விக்கு பக்கமிருந்த அந்த ஆழமான கிணறு அந்த  மாலைப் பொழுதில் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தது, செல்வி எனும் இந்த அழகை  அணைப்பதற்கு.

raththa+ithayam.jpg
வல்வையூரான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை .... தொடருங்கள் உங்கள் படைப்பை

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நீங்கள் கதையை நன்றாக நகர்த்திவிட்டு கடைசியில் அந்தப் படத்தைப் போட்டு ஒன்றையும் இல்லாதடித்துவிட்டீர்களே

உப்பிடிக் கதையை முடிச்சுப் போட்டீர்களே! 

 

நீங்கள் கதையை நகர்த்திய விதம் மிக அழகு. தொடரந்து எழுதுங்கள் வாசிக்க மிக ஆவல்!!

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்று சில இடங்களில் கிராமத்து  வழக்கு .

 

இறுதிப்படம் துயரம். மேலும் உங்கள் படைப்புக்கள் வரவேண்டும். 

இன்னும் கதைகளுக்கு உயிர் இருப்பது இப்படியான படைப்புகளால் தான் நன்றி தொடருங்க அண்ணா .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கதை .... தொடருங்கள் உங்கள் படைப்பை

 

 

நன்றிகள் புத்தன்.

 

என்ன நீங்கள் கதையை நன்றாக நகர்த்திவிட்டு கடைசியில் அந்தப் படத்தைப் போட்டு ஒன்றையும் இல்லாதடித்துவிட்டீர்களே

 

இந்த கதை எங்கோ சில நிஜங்களையும் சேர்த்து கற்பனை கலந்தது.... சுமேரியர்.

 

உப்பிடிக் கதையை முடிச்சுப் போட்டீர்களே! 

 

நீங்கள் கதையை நகர்த்திய விதம் மிக அழகு. தொடரந்து எழுதுங்கள் வாசிக்க மிக ஆவல்!!

நன்றிகள் அலைமகள்.

 

கதை நன்று சில இடங்களில் கிராமத்து  வழக்கு .

 

இறுதிப்படம் துயரம். மேலும் உங்கள் படைப்புக்கள் வரவேண்டும். 

நன்றிகள் நிலா மதி

 

 

இன்னும் கதைகளுக்கு உயிர் இருப்பது இப்படியான படைப்புகளால் தான் நன்றி தொடருங்க அண்ணா .

நன்றிகள் அஞ்சரன். உங்கள் போன்ற ஊக்குவிப்பளர்கள் இருந்தால் தொடலராம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.