Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட அனைத்துலக ‘வஞ்சக அரசியல்’ துணையானது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tamil-in-Camp-AFP.jpg

மேற்குலகு, அதற்கு போட்டியாகும் எழும் சீனா, இந்திய மாக்கடல் வல்லரசாகும் கனவோடு உலக அரசியலில் எத்தனிக்கும் இந்தியா என இம்மூன்று சக்திகளின் கரங்கள் இத்தோல்வியின் பின்னால் தொழிற்பட்டன -குணா.கவியழகன்*. 


01. 

ஈழப்போராட்டத்தில் ஆயுதப்போரின் தோல்வி வெறும் உள்நாட்டுப் பரிமாணம் கொண்டதல்ல. இருதரப்பு மோதல்களின் முடிவாய் நிகழ்ந்த வெற்றி தோல்விகளும் அல்ல. இத்தோல்வியின் பின்னணியில் அனைத்துலக அரசியல் பரிமாணம் உண்டு. 

பொதுப்புத்தியில் இதற்கு அனைத்துலக காரணிகள் உண்டு எனத் தெரிந்தாலும் அதன் பரிமாணம் என்ன? எதற்காக நிகழ்ந்தது? எப்படி நிகழ்ந்தது? என்ன காரணத்திற்காக நிகழ்ந்தது? என்பது வெகுசன அறிவுக்கு எட்டவில்லை. ஆனால் எட்டவேண்டியது அவசியம். போர் தோற்றாலும் தமிழர்கள் போராட்டத்தில் தோற்றுப்போகாமல் இருப்பதற்கும் பயணிப்பதற்கும் இந்த அறிவு இன்றும் இன்றியமையாததாகவே உள்ளது. 

இத்தோல்வியின் பின்னாலுள்ள அனைத்துலக அரசியல் பரிமாணமும்கூட ஒற்றைத் தன்மையாய் இருக்கவில்லை. அனைத்துலக அரசியலில் எழுந்த உலக சக்திகளின் ஆதிக்கப் போட்டியில் இலங்கை அரசியல் முக்கியம் பெற்றது. இதனால் இப்போட்டிச் சக்திகளின் வெவ்வேறு நோக்கு நிலையிலான அணுகுமுறைகள் இப்போராட்டத்தை அழிவை நோக்கி இழுத்துவந்தன. போட்டிச் சக்திகளின் அரசியல் எதிரும் புதிருமாய் இருந்தபோதும் அவையாவற்றினதும் நலன்கள் ஈழப்போராட்ட விடுதலைக்கு எதிரானதாகவே இருந்தமை, உலக அரசியலிலேயே விந்தையான அனுபவமாக இருக்கின்றது. 

மேற்குலகு, அதற்கு போட்டியாகும் எழும் சீனா, இந்திய மாக்கடல் வல்லரசாகும் கனவோடு உலக அரசியலில் எத்தனிக்கும் இந்தியா என இம்மூன்று சக்திகளின் கரங்கள் இத்தோல்வியின் பின்னால் தொழிற்பட்டன. தமக்குள் முரண்படும் இச்சக்திகள், எப்படி ஈழப்போரின் தோல்வியில் மட்டும் ஒருசேர பங்களிக்க முடிந்தது என்பது மிகவும் புதிரான அரசியல் பாடத்தை தந்திருக்கின்றது. 

இந்த விசித்திரமான பாடத்தை நுணுக்கமாக கண்டறிந்துகொள்வதற்கான முயற்சிகளை தமிழ் அறிவுலகம் எடுத்தே தீரவேண்டும். இந்த அரசியல் பின்னணியின் நூதனமான முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டு, அலசப்பட்டு பொதுப்புத்திக்கு எட்டச் செய்யப்பட வேண்டும். அப்போதே எதிர்காலத்தில் அரசியல் விழிப்புணர்வுள்ள மக்களால் தூண்டப்படும் அரசியல் போராட்டமாக ஈழத்தமிழ் அரசியல் மாறும். 

நோர்வேயின் சமாதான முயற்சி ‘ஜெயசிக்குறு’ என்ற வன்னிப் போரின் அரச படையின் தோல்வியோடுதான் நிகழ்ந்தது. சந்திரிகாவின் காலத்தில் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டு வன்னியில் அரச படைகள் முன்னேறிக்கொண்டிருந்தபோது, புலிகளின் இறுதி அழிவு மிகமிக அண்மித்துவிட்டதாகவே நம்பப்பட்டது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலுங்கூட சந்திரிகாவின் யுத்தத்திற்குக் கிடைத்த இராணுவ, அரசியல் உதவிகள் ஈழப்போராட்டத்தைத் தோற்கடிப்பதற்காகவே கிடைத்தன. 

அமெரிக்கா உட்பட சில நாடுகளின் புலிகள் மீதான தடை, பயங்கரவாதப் பட்டியலுக்குள் புலிகள் இழுத்துவிடப்பட்டமை, சிறிலங்கா இராணுவத்திற்கான இயலுமைகள் அனைத்துலக ஆதரவோடு வளர்க்கப்பட்டமை, அனைத்துலக களத்தில் புலிகளின் செயற்பாடுகளை முடக்குவதற்கான எத்தனிப்புகள் என எல்லாமே அதற்காகத்தான் நிகழ்ந்தன. 

ஆயினும் இவற்றையெல்லாம் மீறி புலிகள் வன்னிப்போரில் மிகவும் மகத்தான வெற்றிகளை எட்டியதுடன் இப்போர் வெல்லப்பட முடியாத போர் என்ற புரிதலை உலகிற்கு ஏற்படுத்தினர். இக்கட்டத்தில்தான் புலிகளின் மேலதிக படைமுன்னேற்றத்தைத் தடுக்கும் பொருட்டும் யுத்தத்தை முடக்குவதற்கான வேறு மார்க்கத்தை திறக்கும் பொருட்டும் அனைத்துலகத் தலையீடாக நோர்வேயின் சமாதான முயற்சி உள்நுழைந்தது. 

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்கும் அந்த முயற்சி முதிர முடியாமல் போனபோதே 2001 இல் பின்லாடனின் அமெரிக்கா மீதான தாக்குதலோடு உலகில் புதிய அரசியல் புறநிலை உருவாகிற்று. மேற்குலகு காத்திருந்த “ஆசியாவை மறுசீராக்கம் செய்தல்” என்ற புதிய செயற்றிட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான அரசியல்வழி பிறந்தது. 

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பதாகையின்கீழ் இவ்வரசியல் முன்னெடுக்கப்படுவதாயிற்று. இந்த வலிமைமிகு அரசியல் முன்னெடுப்பில் உலக அரசியல் நலனுக்குப் பாதகமாக இருந்த ஈழவிடுதலைப் போர் தப்பிப்பிழைப்பது இலகுவானதாக இருக்கவில்லை. 

சீனாவை முடக்கும் கொள்கைக்கும் இந்தியாவுடனான பங்காளி அரசியலுக்கும் ஈழப்போராட்டம் மேற்குலகுக்குத் தேவையானதாக இருக்கவில்லை. மேலும் இதுவரை மேற்குலகு வளர்த்தெடுத்த கெரில்லா எதிர்ப்புப் போருபாயத்தை மேவி, புலிகள் கெரில்லாப்போர் உபாயங்களை புதிய வடிவங்களில் வளர்த்தெடுத்து வந்தமை உலகிற்கு ஒரு கெட்ட முன்னுதாரணமாகவேறு இருந்தது. 

இவற்றையும்விட சீனாவை முடக்குவதற்காக சீனாவிற்கு நட்புக்கரம் நீட்டக்கூடியதும் உலகின் உற்பத்திக்கான எரிசக்தியின் ஊற்றுக்கண்ணாகவும் இருக்கும் வளைகுடாவை தம் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான யுத்தம் மேற்குலகால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இந்த யுத்தம் முழு அளவிலானதாக இல்லாமல் வரையறுக்கப்பட்ட யுத்தத்தின் மூலம் வெற்றி பெறுவதாக அமைக்கவேண்டியது மிகமிக அவசியமானது. எனவே யுத்தத்திற்கான முன்னாயத்தங்களும் சுற்றிவளைப்புகளுமே வரையறுக்கப்பட்ட யுத்தத்திற்குள் வெற்றியைத் தர வல்லன. அத்தகைய ஒரு யுத்தத்திற்கு ஏவுதளமாக அமையக்கூடிய ‘இருதய நிலம்’ என அழைக்கப்படும் ஆப்கானிஸ்தான் ஒரு முஸ்லீம் நாடாக இருப்பதாலும் அதனைச் சூழ முஸ்லீம் நாடுகள் நிலத்தொடர்புடன் இருப்பதாலும் இதற்குப் பிரதியீடாக ஒரு மாற்று நிலத்தையும் தயார்செய்துகொள்வது அவசியமானது. அதற்கான ஒரேயொரு தெரிவாக பொருந்தி அமையக்கூடியது இலங்கைத் தீவே என மேற்குலகு கண்டறிந்தது. 

இலங்கைத் தீவில் உறுதியான அரசியலும் தமக்குச் சார்பான அரசாங்கமும் இக்காலத்தில் இருக்கவேண்டியது மேற்குலகினது கட்டாய தேவை. இலங்கையில் கொந்தளிப்பான, உறுதியற்ற அரசியல் மிக ஆபத்தானது. உள்நாட்டு யுத்தம் எப்போதுமே இதற்குத் தடையானது. எனவே இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் அதற்கான முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டு புலிகள் யுத்தத்தில் வெற்றிமுகம் கண்டு வருகையில் வேறு மார்க்கத்தை யுத்தத்தின் முடிவுக்கு மேற்குலகு தேடவேண்டியதாயிற்று. 

சீனாவை முடக்குவதற்கான மேற்குலகின் முயற்சி, இந்தியாவின் நலன்களையும் பிரதியீடு செய்யக்கூடியது. எனவே இந்தப் பொதுச் செயற்றிட்டத்தில் இவையிரண்டிற்கும் ஒருவகையான இசைவுண்டு. சீனா இந்த அரசியலுக்கு எதிர்நிலையில் நிற்கின்றது. 

அனைத்துலக சமூகத்தின் இலங்கைக்கான சமாதான முயற்சியின் பின்னணி அரசியல் இப்படித்தான் இருந்தது. இதன் இலட்சியம் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி, ஐ.தே.க. அரசாங்கத்தை பதவியில் அமர்த்துதல் என அமைந்தது. இதில் முற்றுப்புள்ளி என்பதில் ஈழவிடுதலை அமையவில்லை. ஆனால் யுத்தத்தை முடிக்கும்பொருட்டு ஒரு பொது உடன்பாட்டுக்குள் புலிகளை இழுத்து வருவதில் இச்செயற்றிட்டம் முனைப்புடன் இயங்கியது. 

இதைச் சுற்றி அமைந்த மூன்று சக்திகளுக்கு இடையிலான முரணும் இசைவுக்கும் ஏற்ப, இச்சக்திகள் கைக்கொண்ட அணுகுமுறைகள் போரின் அழிவுவரை தமிழர்களை இட்டுவந்தது. இவ்வணுகுமுறைகளின் காரண காரியங்களைத் தெளிவாக தமிழ் பொதுப்புத்திக்கு எட்டச் செய்வது இன்றைய நெருக்கடியில் தமிழர்களின் எதிர்காலத்துக்கு மிகமிக அவசியம். 

தொடரும்.. 

*இக்கட்டுரையாளர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த North east monthly ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20131015109256

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Robert-blake-2012.jpg

பயங்கரவாதத்தைக் கைவிடவேண்டும் என எதிர்மறையாக தமிழ்த்தரப்பை அணுகிய மேற்குலகு கொள்கையளவில் தானும் தமிழர்களின் தாயகம், தேசியம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரச தரப்பிற்குக் கோரிக்கைகூட விடுக்கவில்லை –குணா.கவியழகன்.

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட அனைத்துலகின் 'வஞ்சக அரசியல்' துணையானது – 01

02. 

மேற்குலகு: 

நோர்வேயின் அனுசரணையுடன் மேற்குலக ஆதரவுகொண்டு முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சியின் பின்னாலிருந்த அனைத்துலக மறை நிகழ்ச்சிநிரல் எவ்வாறு தொழிற்பட்டது என்பது ஆராய்ந்து தெளிந்துகொள்ளப்பட வேண்டியது அவசியம். 

இறுதி அழிவுக்கு முதற்காரணமாயிருந்த சமாதானத்தின் தோல்வியும் இத்தோல்விக்குக் காராணமாயிருந்த மறை நிகழ்ச்சிநிரலும் வெகுசன அறிவுக்கு எட்டப்படவேண்டும். 

ஏனெனில் யுத்தம் மீள வெடித்தபோது சமாதானத்தின் ஆரம்பத்திலிருந்த புலிகளின் இராணுவ, அரசியல் இயலுமைகள் முறியடிக்கப்பட்டிருந்தது தற்செயலானதல்ல. திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் பகுதி விளைவாகவே அது இருந்தது. 

01. 

புலிகளுக்கும் ரணில் அரசாங்கத்திற்கும் இடையில் நடந்த ஒப்பந்தம் இருதரப்பையும் சமதரப்பாக ஏற்றுக்கொள்ளும் அங்கீகாரத்தைக் கொண்டிருந்தது. 

மூன்றாந்தரப்பு அனுசரணை, அனைத்துலக கண்காணிப்புப் பொறிமுறை, பல்வேறு நாடுகளின் அரங்கில் நிகழும் பேச்சுவார்த்தை என்ற வகையில் ஈழப்போராட்டம் அனைத்துலக கவனத்தை ஈர்க்கும் அனைத்துலக அரசியலுக்கு உட்படும் தகமையைப் பெற்றது. 

ஆனால் மறுவளமாக எந்த ஒரு வஞ்சக வலையிலிருந்தும் மீண்டு போராட்டத்திற்குத் திரும்ப முடியாத பொறியாகவே அந்த அங்கீகாரம் அமைந்தது. அந்த அங்கீகாரத்தை இதற்கான கருவியாக்கிக்கொள்வதுதான் மறைநிகழ்ச்சி நிரலின் இலக்கு. 

இராணுவ வலுச் சமநிலையில் ஆதாரம் கொண்டு அமைந்த யுத்த நிறுத்த ஒப்பந்தமே பேச்சுக்கான தளம். ஆனால் அந்த வலுச்சமநிலையை தொடர்ந்து பாதுகாக்க முடியாதவாறு ஒப்பந்தம் புலிகளை முடக்கியது. 

அரச தரப்பு தன் இராணுவ பொறிமுறையை மேலும் பலப்படுத்தி வளப்படுத்த வழிசமைத்தும் கொடுத்தது. புலிகள் தமது படையை தொடர் பயிற்சியில் பராமரிக்கவோ படைத்திறனை மேம்பாடு செய்யவோ முடிவதற்கான வெடிபொருள் ஆயுத, தளபாட விநியோகத்தை ஒப்பந்தம் மறைமுகமாகத் தடைசெய்தது. ஆனால் அரசு என்ற வகையில் இலங்கை அரசு தனது படைகளை நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் இது வழிசமைத்துக் கொடுத்தது. 

இக்காலத்தில் படைத்துறை வளர்ச்சியில் பயிற்சிரீதியாகவும் தொழிநுட்பம், தந்திரோபாயம், விநியோக ரீதியாகவும் அனைத்துலக நாடுகள் இலங்கை அரசுக்கு உதவின. சமாதானப் பேச்சில் இணைத் தலைமையாக இருந்த அமெரிக்கா கூட இவ்வுதவிகளில் முன்னணிப் பங்கை வகித்தது. இந்த வஞ்சக அரசியல் பேச்சின் அடித்தளத்தையே ஆட்டங்காணவைக்கும் காரணியாயிற்று. 

02. 

இருதரப்பு உடன்பாட்டில் எட்டப்பட்ட இயல்புநிலையைத் தோற்றுவிப்பதற்கான விடயங்களை அரசதரப்பு நிறைவேற்றவில்லை. இராணுவ நிலைகளை மக்கள் குடியிருப்புகளில் இருந்து விலக்குதல், மீள் குடியமர்வு, புனர்நிர்மாணம், மீன்பிடித் தடை நீக்கல் போன்றவற்றை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. 

ரணில் அரசாங்கம் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்த இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்தவும் பின்னர் மனங்கொள்ளவில்லை. அது ஒரு வஞ்சக உத்தியாக இருந்ததே தவிர சமாதானத்திற்கான வழியாக மனதளவில் கொள்ளவில்லை. 

மக்களுக்கு சமாதானத்தின் பலாபலங்களை கிடைக்கச்செய்து வாழ்நிலை நெருக்கடியிலிருந்து மீட்டு நம்பிக்கையடையச் செய்வதே அனைத்துலக அனுசரணைப் பாத்திரத்தின் முன் முயற்சியாக இருந்திருக்க வேண்டும். முதற்கட்டப் பேச்சுக்களில் இவ்விடயம் ஏற்றுக்கொள்ளவும் பட்டிருந்தது. 

ஆனால் இராண்டாம் கட்டப் பேச்சுக்களின்போது இந்த மக்களின் மனிதாபிமானப் பிரச்சினையை பின்தள்ளி புலிகளை அரசியல் கோரிக்கையிலிருந்து பின்தள்ள வைப்பதற்கான முயற்சிகள் மட்டுமே அனைத்துலக அரங்கிற்குக் கொண்டுவரப்பட்டது. 

எவ்வாறெனில் இக்கட்டப் பேச்சுக்களில் உடனடி மனிதாபிமான விடயங்களுக்கு ஒரு உப குழுவும் போர் நெருக்கடிகளைத் தணித்து இயல்பு நிலையை உருவாக்குவதற்கு ஒரு உப குழுவும் அரசியல் விவகாரத்திற்கு ஒரு உப குழுவும் நிறுவப்பட்டது. 

மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைக்கான பேச்சுக்கள் அனைத்துலக அரங்கிற்கு எட்டாதவாறு பின்தள்ளப்பட்டு உள்நாட்டு மட்டத்திலான பேச்சுக்களுக்குள் முடக்கிவிடும் தந்திரத்தினை இது உருவாக்கிற்று. அரசியல் விவகாரம் மட்டும் அனைத்துலக அரங்கிற்கு உரித்தானதாக ஆகியது. 

இதன்மூலம் பேச்சில் புலிகளை அனைத்துலக அளவில் அரசியல் வழிமுறைகளைச் சுற்றிவளைப்பதாகவும் படைத்துறை வலிமையை நீர்த்துப்போகச் செய்வதாகவும் இருந்தது. அல்லாமல் மக்களின் மனிதாபிமானத் தேவைகளுக்கு உதவவில்லை. அவற்றிற்கான குரல் கூட அரங்கிலிருந்து அப்புறப்படுத்தப்படுவதாகவே இந்நிகழ்ச்சி அமைக்கப்பட்டது. 

உடனடி மனிதாபிமான தேவைகளுக்கான புனர் நிர்மாணக் குழு அதிகாரமும் இன்றி நிதியும் இன்றி முடங்கியது. இது ஒரு தோற்றப்பாட்டிற்காக அமைக்கப்பட்டதாக இருந்ததேயொழிய செயற்பாட்டிற்கானதாகத் தோன்றவில்லை. 

மக்களின் மீள்குடியேற்றப் பிரச்சினை நெருக்கடியைத் தணிவிக்கும் உபகுழுவின் நிகழ்ச்சிநிரலுக்கு உட்படுத்தப்பட்டு இராணுவவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது. தேவைப்பட்டது மனிதாபிமானக் கண்ணோட்டம். கிடைக்கப்பெற்றதோ இராணுவக் கண்ணோட்டம். 

இதனால் அரச படைத்தரப்பு மக்களின் மீள்குடியேற்றத்திற்கு புலிகள் தம் நெடுந்தூரவீச்சு ஆயுதங்களைக் கையளிக்க நிபந்தனையிட்டது மட்டுமல்ல ஒப்பந்தத்தின் நிமித்தம் மக்கள் மீள்குடியேறினால் புலிகள் அரசியல் செல்வாக்கை அடைந்திடுவார்கள் என்ற படைத்தரப்பு வாதமுங்கூட முன்வைக்கப்பட்டது. இந்நிலைப்பாடு குறித்த கண்காணிப்புக் குழுவின் குரலும் இதனை ஆமோதிப்பதாகவே அமைந்தது. 

மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அவர்களின் நிலங்களை இராணுவம் கையளிப்பது போர் வலுச்சமநிலையை பாதிக்கும். வலுச்சமநிலை பாதிப்படைந்தால் பேச்சின் அடித்தளமே ஈடாடுமென அறிக்கையிட்டார் கண்காணிப்புக் குழுத் தலைவர். 

இதன் உள்நோக்கம் வலுச்சமநிலையைப் பேணுவதுதான் என்றால் அரச படைத்தரப்பு படைகளை மேம்பாடு செய்வதையிட்டு பேசியிருக்கவேண்டும். புலிகள் தமது படைகளைப் பராமரிப்பதற்கான அவசியம், அதற்குத் தேவையான விநியோக வளங்கள் பற்றியும் பேசியிருக்க வேண்டும். ஆனால் கண்காணிப்புக்குழு இவற்றைக் கருத்திற்கொள்ளவில்லை. ஏனெனில் அது கருத்தூன்றிய இடம் உண்மையில் வலுச்சமநிலை அல்ல. 

03. 

புனர் நிர்மாணப் பணிகளுக்கு அனைத்துலக அளவில் நிதி திரட்டும் மாநாடாக ஒஸ்லோ மாநாடு கூட்டப்பட்டது. ஆனால் அடிப்படையில் அனைத்துலக அரசியலுடன் சமாதான முயற்சி இணைக்கப்படுவதற்கான உள்நோக்கத்தின் அங்குரார்ப்பணமாகவே இது அமைக்கப்பட்டது. உண்மையில் இதன் உள்நோக்கம் புனர் நிர்மாணத்திற்கு உதவுவதற்கான அனைத்துலக முயற்சியாக அமையவில்லை. பேச்சு முயற்சியை அனைத்துலக அரசியலுடன் இணைப்பதற்கான நிகழ்ச்சி நிரலே. 

உலகின் சக்திவாய்ந்த நாடுகளினுடைய மூத்த இராசதந்திரிகள் உட்பட பலநாட்டு இராசதந்திரிகள் இதில் பங்குகொண்டனர். மாநாட்டில் விடுதலைப் புலிகள் பிரிவினையையும் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தையும் கைவிடுவதாக அனைத்துலக நாடுகளுக்கு பகிரங்க பிரகடனத்தை வெளியிட வேண்டுமென வற்புறுத்தப்பட்டனர். 

இதற்கான மறைமுக அனைத்துலக அழுத்தமாகவே ஒஸ்லோவின் நிதி மாநாடும் அங்கு நிகழ்ந்த மூன்றாம் சுற்றுப் பேச்சும் அமைந்தது. இந்த அழுத்தத்தின் விளைவாக புலிகள் சமஸ்டித் தீர்வொன்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு இணக்கம் தெரிவித்தனர். 

முப்பது ஆண்டுகாலமாகப் போராடிய இனம் ஒடுக்குமுறையிலிருந்து மீண்டுகொள்வதற்கு அனைத்துலகம் உதவுவதாயின் ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று ஒடுக்கியவரின் பக்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதுதான் நியாயமானது. தார்மீகக் கடமையுங்கூட. 

தனிநாடு என்பது அனைத்துலக அரசியலின் சக்திமிக்க நாடுகளின் நலனாக இல்லாத பட்சத்தில் குறைந்தபட்சம் அரச தரப்பை தமிழர்கள் இலங்கையில் தேசிய இனம் என்பதையும் வடக்குக் கிழக்கு அவர்களின் தாயகம் என்பதையுமாவது ஏற்றுக்கொள்ள வேண்டுமென அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். 

பயங்கரவாதத்தைக் கைவிடவேண்டும் என எதிர்மறையாக தமிழ்த்தரப்பை அணுகிய மேற்குலகு கொள்கையளவில் தானும் தமிழர்களின் தாயகம், தேசியம் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என அரச தரப்பிற்குக் கோரிக்கைகூட விடுக்கவில்லை. 

பின்னாளில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நோர்வே, யப்பான் ஆகியன பேச்சிற்கான இணைத்தலைமைகளாகின. இதனால் அனைத்துலக அரசியலுக்குள் இழுத்துவரப்பட்ட சமாதான முயற்சி ஒடுக்குமுறையாளர்களை வலுப்படுத்தியதே தவிர ஒடுக்கப்பட்டவர்களை பாதுகாப்பதாக அமையவில்லை. 

முப்பதாண்டுகாலம் தமிழர் தம் சொந்தக் குருதியில் அடைந்த பாதுகாப்பை, பேரத்தை சிதைத்து அழித்துவிடவே முனைந்தது. சமாதானம் என்பது சிங்கள அரசு இழந்த அரசியல் சமநிலைச் சரிவை மாற்றுவழியில் சரிசெய்துகொள்வதற்கான நிகழ்ச்சியே என்ற தெளிவான அச்சத்தை தமிழர்களுக்குள் உருவாக்கிற்று. 


04. 

அமெரிக்க அரசு டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டிற்கு முன்னதாக வோசிங்டனில் உதவி வழங்கும் மாநாடு ஒன்றைக் கூட்டியது. இம்மாநாட்டிற்கு விடுதலைப்புலிகள் அழைக்கப்படவில்லை. உண்மையில் இத்தகைய ஒரு மாநாடே அவசியப்பட்டிருக்கவும் இல்லை என்றுதான் கொள்ளவேண்டும். 

டோக்கியோவில் முக்கிய திருப்புமுனையாக அமையப்போகும் மாநாட்டிற்கு முன்னதாக அரசதரப்பும் விடுதலைப்புலிகளும் சம அந்தஸ்தான தரப்பு அல்ல, புலிகள் பயங்கரவாத முத்திரையைச் சுமந்துகொண்டே அனைத்துலக அரங்கில் நிற்க வேண்டும் என்பதை நடைமுறையிடுவதற்காகவே வோசிங்டன் மாநாடு கூட்டப்பட்டு புலிகள் பயங்கரவாதப் பட்டியலில் இருப்பதனால் இதிலிருந்து புறக்கணிக்கப்பட்டதாக கூறப்பட்டனர். 

இது ஏற்கனவே இருதரப்பும் இணங்கிய விடயமான அனைத்துலக நிதியுதவி கோரும் மாநாடுகளில் இருதரப்பும் இணைந்து பங்கெடுப்பது என்ற உடன்பாட்டை மீறுவதாகவும் இருந்தது. ஆக ஒருபுறம் புலிகளின் அரசியல் தகமையை கீழிறக்குவதாக இது இருந்தது. மறுபுறம் இது ஏற்கனவே உடன்பட்ட விடயத்தை அரசதரப்பு முறித்துக்கொள்வதற்கான அனைத்துலக அங்கீகாரமாகவும் அமைந்தது. 

இணைத்தலைமை நாடுகளால் கூட்டப்படும் டோக்கியோ மாநாட்டில் நடப்பிலுள்ள உலகின் சக்திவாய்ந்த நாடுகள் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கெடுக்க இருந்தன. இத்தகையை மிகப்பெரிய அரங்கில் உதவி வழங்கும் நிதிமாநாடு என்ற போர்வையில் சமாதானத்திற்கான செயல்முறைத் திட்ட ஒப்பந்தம் ஒன்றில் புலிகளை கைச்சாத்திட வைப்பதுதான் அதன் மறை நிகழ்ச்சிநிரலாக இருந்தது. 

அனைத்துலக சமூகம் யுத்தத்திற்கு முடிவான முற்றுப்புள்ளி வைப்பதுடன் சமாதானம் என்ற வழியில்தான் நகரவேண்டும் என நிபந்தனையிடுவதற்காகவே இந்த மாநாட்டைக் கூட்டியது. தவிரவும் இது புலிகளின் ஆயுத ஒப்படைப்பு வரை அடக்கப்பட்டுமிருந்தது. 

மக்களின் அவசர மனிதாபிமான பிரச்சினையில் அக்கறை காட்டாத மேற்குலகு, உடன்பட்ட விடயத்தை அமுலாக்குவதில் அக்கறை காட்டாத மேற்குலகு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில் அக்கறை காட்டாத மேற்குலகு, அம்மக்களுக்கு ஒரு நாசகார பொறியை விரிப்பதில் மிகப்பெரும் உலக நிகழ்ச்சிநிரலாக டோக்கியோ மாநாட்டை உருவாக்கியது. 

இது விடுதலைப்புலிகளை முற்றாக அச்சங்கொள்ள வைத்ததேதவிர சமாதானத்தில் ஆர்வமூட்ட உதவவில்லை. புலிகளை மாநாட்டை புறக்கணிக்கவும் பேச்சை இடைநிறுத்தவும் தூண்டியது இந்த மறைநிகழ்ச்சி நிரலே. 

ஆயினுங்கூட டோக்கியோ பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்தச் சூழ்நிலைகளால் சிங்கள வெகுசன மட்டத்தில் அனைத்துலக ஆதரவு தமிழர்களுக்கு இசைவாக இல்லையென்பதும் அதற்கு எதிராக இருக்கிறது என்பதும் அரசு தன்னை மறு பலக்கட்டமைப்பை உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற மனக்போக்கைக் கொடுத்தது. 

தெற்கில் இவ்வாறு உருவாகிய பொதுமனப்போக்கு இனவாத உணர்வாக எழுச்சியுற முக்கிய தூண்டுகோலாக மேற்கின் இந்த அணுகுமுறையே அமைந்தது. ஏற்கனவே அதிகாரப்போட்டியில் ஈடுபட்ட இனவாத சிங்களத் தலைமைகள் தெற்கில் பலமடைந்தன. இதனைப் பயன்படுத்தயுங்கொண்டன. 

05. 

புலிகளை மீளவும் சமாதானத்திற்குள் இழுக்கும் முயற்சியில் அனைத்துலக அழுத்தத்தின் பிரகாரம் புலிகள் ஒரு இடைக்கால நிர்வாக கட்டமைப்பை உருவாக்குதவற்கான பேச்சில் பங்குகொள்ளத் தயாரென அறிவித்தனர். இதன் இறுதி விளைவாக புலிகள் ஒரு இடைக்கால நிர்வாக வரைவை முன்வைத்தபோது அதிபர் சந்திரிக்கா அரசாங்கத்தைக் கலைக்கும் அறிவிப்பை விடுத்தார். 

இதற்கு அடிப்படையான காரணம் மேற்குலகின் அபத்தமான அணுகுமுறை சிங்கள மக்கள் மத்தியில் இனவாதிகளுக்கு சாதகமாக உருவாக்கிய உணர்வலையே அன்றி வேறல்ல. 

புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டபோது ரணில் அரசாங்கத்தில் இருந்த மூத்த தலைவர்கள் தாம் சமாதானப்பேச்சில் புலிகளுக்கு எதிரான ‘அனைத்துலக பாதுகாப்பு வலைப்பின்னலை’ உருவாக்கிவிட்டதை தமது முக்கிய அடைவாக பரப்புரையாக்கினர். இனவாதத்திற்கு தீனி போடும் பரப்புரையையே ரணில் அரசும் செய்தது. புலிகள் ஏற்கனவே கொண்டிருந்த ‘அனைத்துலக சதிவலைப்பின்னல்’ என்ற ஆழமான சந்தேகத்தை இது அப்பட்டமாகவே அறிவிப்பதாக இருந்தது. 

இத்தருணத்தில் அரசாங்கத்தில் இருந்த மூத்த தலைவர்களின் இக்கூற்றுக்கு மேற்குலகு இராசதந்திர மறுப்பையோ ஆட்சேபணையையோகூட தெரிவிக்கவும் இல்லை. இதனால் சமாதானம் மேற்கொண்டு நீடிக்கப்படுவதற்கான உளவிருப்பத்தை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கத் தவறியது. இவற்றின் மொத்த விளைவாகவே மகிந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது. 

அரசியலில் இத்தகைய அச்சமூட்டும் போக்கை தமிழ்ர்கள் எதிர்கொண்டு நின்றநேரம் தமிழ்த் தரப்பைப் பாதுகாக்கும் ஆதரவூட்டும் அணுகுமுறைக்குப் பதிலாக மேற்குலகு ஐரோப்பிய யூனியனில் புலிகள் மீதான தடையை அறிவித்தது. 

அனைத்துலக ஈடுபாட்டோடு நடக்கும் பேச்சு என்ற கருப்பொருள்தான் தமிழ்மக்களின் மனதில் சமாதானத்திற்கான ஆதரவைப் பெருக்கியது. ஆனால் நிகழ்ந்த சமாதானத்தில் மேற்குலக அணுகுமுறையும் அதன் பெறுபேறும் அச்சமூட்டியதே தவிர ஊக்கம் தர தவறியது. 

தேவையற்றதும் பொருத்தமற்றதுமான சூழலில் குறிப்பாக யுத்த காலத்தில் அறிவிக்கப்படாத புலிகள் தடை அனைத்துலக ஈடுபாட்டோடு சமாதானத்தில் ஈடுபட்டபோது அறிவிக்கப்பட்டது. அனைத்துலக ஆதரவில் ஆறுதல் கொண்டிருந்த தமிழ் மனதை சமாதானத்தில் இருந்து தளம்ப வைத்தது இவ்வணுகுமுறை. 

உலகின் இந்த அணுகுமுறை சிங்களத் தரப்பை யுத்தத்தின்மீது ஆர்வமுறவைக்கும் சமாதான வழிமுறையில் தமிழர்களுக்கு எதையும் தரத் தேவையில்லை என்ற மன உலகை உருவாக்கியது. 

அதேநேரம் சமாதானம் தமிழர்களின் பேரப்பலத்தை பலியிடப்போகின்றது என்ற மன உலகை தமிழத் தரப்புக்கு உருவாக்கியது. ஆக சமாதானம் முறிந்துபோவதற்கான இருதரப்பு மனநிலை உருவாகியதும் முறிய வைத்ததும் மேற்குலகுதான். 

முறித்தது புலிகளா என்ற விடயத்தைவிட முறிந்துபோகக் காரணமாக இருந்தது மேற்குலகின் இந்த அபத்த அணுகுமுறைதான். 

மேற்குலகு இலங்கையில் கொண்டிருந்த நிகழ்ச்சிநிரல் சிதைக்கப்பட்டு அதன் நலனிற்கு கேடுவிளைந்தது அதன் சொந்த அணுகுமுறையினாலேயே அன்றி வேறு விடயம் முக்கியமானதல்ல. [தார்மீக நியாயத்தை கடைப்பிடிக்காது பொருத்தமற்ற, புரிதலற்ற இராசதந்திர நியாயமே அதன் தோல்விக்கும் காரணமாகியது.] 

-தொடரும் 

*இக்கட்டுரையாளர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த North east monthly ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20131019109278

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட அனைத்துலக ‘வஞ்சக அரசியல்’ துணையானது – 03
[ வெள்ளிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2013, 07:28 GMT ] [ புதினப் பணிமனை ]


அனைத்துலக அரங்கில் மேற்குலக நிகழ்ச்சிநிரலாக இயங்கும் இந்தச் சமாதானத்தை வெறுமனே ஒரு தரப்பு மட்டும் முறித்து விடுவது முழுமையாக நிகழக்கூடியதல்ல என்பதை சீனா உணர்ந்திருந்தது - குணா.கவியழகன்.

சீனா:


உலக அரசியலில் சீனா இருதுருவ உலக ஒழுங்கை உருவாக்கும் இலட்சியத்தோடு தன் மூலோபாயத்தை முன்னகர்த்தி வருகின்றது.

அமெரிக்கா தொடர்ந்தும் ஏகதலைமைத்துவத்தை பேணிவிட புதிய எதிர்மூலோபாயத்தை முன்னெடுக்கின்றது.

அமெரிக்காவின் ‘ஆசியாவை மறுசீராக்கம் செய்தல்’ என்ற கொள்கைத்திட்டம் சீனாவை மேலும் விரிவடைய விடாது தென்கிழக்காசியாவுக்குள் முடக்குவதற்காக ஆசிய வலு மையங்களை தன் மூலோபாயத் தேவைக்கேற்ப மாற்றியமைப்பதுதான் .

இந்தப் புதிய உலக அரசியல் போக்கிற்கான செயல்திட்டத்தின் ஒருபகுதியாகவே இலங்கையில் மேற்குலகத் தலையீட்டுடனான சமாதானம் உருவாகியது.

ஆக இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வருதல், ஐ.தே.க. பதவியில் இருத்தல் என்ற மேற்குலகத் தேவை சீன நலனுக்கு முற்றிலும் எதிரானது. இங்கிருந்துதான் இலங்கை தொடர்பான சீன அணுகுமுறையை 2001 பின்னான காலத்தில் புரிந்துகொள்ளவேண்டும்.

சமாதானம் நெருக்கடிக்குள்ளாகி அதன் உள்நாட்டு விளைவாக புதிய தேர்தல் உருவாகிய போது தேர்தலில் இனவாத கூட்டாக அமைந்த சமாதானத்திற்கெதிரான மக்கள் ஐக்கிய முன்னணியை பதவிக்குக் கொண்டுவர சீனா தன் மறைகரங்களை பயன்படுத்திக் கொண்டது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சீன செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தது என்பதும் அது சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச்சேர சீனா பின்னணியில் செல்வாக்கு செலுத்தியது என்பதும் ஒருமட்டத்தில் பரவலாக நம்பப்பட்ட விடயம்.

மேலும் பொதுத்தேர்தல், அதிபர் தேர்தல் என்பனவற்றில் சீனாவின் கரங்கள் ஆளும் மக்கள் ஐக்கிய முன்னணிக்கு உதவின என்றும் தகவல்கள் கசிந்திருந்தன.

இத்தகவல்களை புறந்தள்ளிப் பார்த்தாலும் இலங்கையில் யுத்தம் தொடர்வதும் ஐ.தே.க. பதவியில் இருந்து இறங்குவதும் சீனாவின் மூலாபாயத் தேவைக்கு அவசியமாகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

முன்னாள் அதிபர் சந்திரிகா அரசாங்கத்தைக் கலைத்தபோது மேற்குலகு இதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது சந்திரிகாவிற்கு தெரியாததல்ல. ஆனால் அவற்றைச் சமாளிக்கக்கூடிய வலுவை, வளத்தை சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்பதே அவரின் ஒரேயொரு நம்பிக்கையாக இருந்திருக்க முடியும்.

பொதுத்தேர்தலிலும் பின்னர் அதிபர் தேர்தலிலும் மக்கள் ஐக்கிய முன்னணி வெற்றிபெற்றமை சமாதானத்திற்கு எதிரான முழக்கதிற்காகத்தான். இனவாதிகளின் கூட்டாக அமைந்த இம்முன்னணிக்கு ‘மக்கள் ஆணை’ யுத்தத்திற்காகவே சிங்கள மக்களால் வழங்கப்பட்டது.

ஆனால் மேற்கத்தைய நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக, மேலும் நடைமுறையில் அனைத்துலக கண்காணிப்புக்குழு யுத்தநிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் நிலைமையைத் தாண்டி யுத்தத்திற்கு செல்வது ஆட்சியாளர்களுக்கு சாதாரணமான முடிவல்ல. யுத்தத்திற்குச் செல்லும் மிகத் துணிகரமான முடிவை அரசு எடுப்பதற்கான பலம் எங்கிருந்து கிடைத்தது?

மேற்குலகு தமது ஆட்சியை விரும்பவில்லை என்பது ம.ஐ.முன்னணிக்குத் தெரியும். எனவே எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தாம் மீண்டும் கவிழ்க்கப்படவே வாய்ப்புண்டு என்ற யதார்த்தத்தை மகிந்த அரசாங்கம் புரிந்துகொண்டது.

எனவே மேற்குலக நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியே வரவேண்டும் என்பது அவசியம். யுத்தத்திற்குத் திரும்பினால் யுத்தத்தில் வெற்றிமுகம் நோக்கி பயணிக்காவிட்டால் அது அரசியல் தோல்வியாக மாறி ஆட்சி பறிபோகும்.

ஆயினும் யுத்த அரசியலைவிட வேறு அரசியல் செய்வதற்கு புதிய அரசாங்கத்திற்கு வழி இருக்கவில்லை.

இந்தத் தருணத்தில் சீனா தன் பொருளாதார, படைத்துறை வளத்தைக் கொடுத்து புதிய அரசாங்கத்தை யுத்த அரசியலுக்கு ஊக்குவித்தது.

தன்னையோ தனது அரசாங்கத்தையோ மேற்குலகு கவிழ்க்க முற்றுகையிட்டால் சீனாவின் உதவியின் மூலம் அதனை எதிர்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையை ராஜபக்சவிற்கு சீனா கொடுத்தது.

இந்தப் பின்னணியில் தான் மகிந்த அரசாங்கம் அனைத்துலக சமூகத்தின் கருத்தைச் செவிமடுக்காது மேற்குலகைப் பகைத்துக்கொண்டு அதன் நிகழ்ச்சி நிரலிலிருந்து வெளியேறும் பொருட்டு யுத்த அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தது.

சீனா, பொருளாதார ரீதியாகவும் படைத்துறை ரீதியாகவும் புதிய அரசாங்கத்திற்கு உதவி இலங்கையில் மேற்குலக நிகழ்ச்சி நிரலைக் குழப்பி தனது மூலாபாய நலனை முன்னெடுப்பதில் முன்னகர்ந்து நின்றது.

அதேசமயம் சமாதானத்தின் மறுதரப்பான விடுதலைப் புலிகளையும் யுத்தத்தை நோக்கி இழுத்துவருவது சீனாவுக்கு முக்கியம்.

அனைத்துலக அரங்கில் மேற்குலக நிகழ்ச்சிநிரலாக இயங்கும் இந்தச் சமாதானத்தை வெறுமனே ஒரு தரப்பு மட்டும் முறித்து விடுவது முழுமையாக நிகழக்கூடியதல்ல என்பதை சீனா உணர்ந்திருந்தது.

எனவே இருதரப்பையும் யுத்தத்திற்குள் இழுத்தாலே தவிர மேற்குலக சமாதான தலையீட்டை நிறுத்திட முடியாது. எனவே சமாதானத்தில் நல்விளைவை காணமுடியாமல் விரக்தி நிலையிலிருக்கும் புலிகளுக்கு சீனா தன் ஆயுத கறுப்புச் சந்தையை அகலத் திறந்துவிட்டது.

யுத்தத்தின் வெற்றிமுகம் காணமுடியும் என்ற நம்பிக்கையை ஊட்ட சீனா கறுப்புச் சந்தையை அகலத் திறந்து புலிகளை யுத்தத்திற்கு ஊக்கப்படுத்தியது.

சீனாவின் நவீன ஆயுதங்களின் கறுப்புச் சந்தை புலிகளுக்காக திறக்கப்பட்டதை அமெரிக்கப் புலனாய்வுத்துறை அமெரிக்க காங்கிரசிற்கு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இப்புலனாய்வுத் தகவலை அமெரிக்க காங்கிரஸ் உடனடியாகவே இந்திய அரசோடு பகிர்ந்துகொண்டது. இத்தகவலை அமெரிக்க ஊடகமொன்று பின்னர் பதிவுசெய்திருந்தது. சீனாவின் இம்முயற்சியை முறியடிப்பதற்காகவே இவ்விரு அரசுகளுக்கிடையில் இத்தகவல் பற்றி பேச்சுக்கள் நடந்தன.

சமாதானத்தில் தாம் அனைத்துலக சதிவலைக்குள் அகப்படுவதாக அச்சமடைந்த விடுதலைப் புலிகள் அரசியல் சமநிலையில் தமது நிலை மோசமாக சரிக்கப்படுவதை உணர்ந்திருந்தனர். இந்நிலையை தமது அகப்பலத்தையாவது உறுதிநிலைக்குக் கொண்டுவந்த பின்னர் சமாதானத்தைத் தொடர்வது பாதுகாப்பானது என புலிகள் எண்ணத் தலைப்பட்டனர்.

இதன்பொருட்டு வரையறுக்கப்பட்ட யுத்தமொன்று ஈழப்போராட்டத்தில் அரசியல் கேந்திரமாக இருக்ககூடிய யாழ் குடாநாட்டையோ இராணுவக்கேந்திரமாக இருக்கக்கூடிய திருகோணமலையையோ கைப்பற்றிவிட்டு அல்லது முடிந்தால் இரண்டையும் கைப்பற்றிய பின் சமாதானத்துக்கு திரும்புவதென்ற வழிமுறையை நாடத் தலைப்பட்டனர். அதற்கான நம்பிக்கையை சீனா புலிகளுக்கு தன் அணுகுமுறையால் உருவாக்கியது எனலாம்.

இங்கு சீனா யுத்தத்தை விரும்பியதே அன்றி புலிகளின் வெற்றியை அல்ல. அல்லது வெற்றியையும் அல்ல. இலங்கையின் மேற்குலக நலனுக்கு எதிராக இருக்கக்கூடிய யுத்த அரசியல் இருக்கும்வரை ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் சீனாவையே தங்கி இருக்கவேண்டி வரும்.

இது இப்பிராந்தியத்தில் சீனாவின் மூலோபாயத் தேவையை நிறைவுசெய்வதற்கான வாய்ப்பை கையில் சேர்க்கும். யுத்தத்திற்கு புலிகளை ஊக்கப்படுத்துவது ஆனால் அரசதரப்பு தோல்விமுகம் காணாததாலோ தனது அனைத்து ஆதரவையும் அரசுக்கே வழங்கிக்கொண்டது. ஆக இலங்கையில் யுத்த அரசியலே சீனாவின் அப்போதைய உடனடித் தேவையாக இருந்தது.

இலங்கைத் தீவில் இனி யுத்தம் வெடிக்காது என்று அநேகமாக எல்லா அரசியல் ஆய்வாளர்களாலும் கருதப்பட்டபோதும் யுத்தம் வெடித்தபின் அதற்கான பின்னணி அரசியல் அனைத்துலக பரிமாணம் கொண்டதாக இருந்ததை உணர முடிந்தது. சீனாவின் மறைகரங்கள் அந்த வெடிப்பிற்கான விசையைக் கொடுத்தன.

*இக்கட்டுரையாளர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த North east monthly ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்.


http://www.puthinappalakai.com/view.php?20131025109311

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட அனைத்துலக வஞ்சக அரசியல் துணையானது – 04
[ சனிக்கிழமை, 02 நவம்பர் 2013, 09:20 GMT ] [ புதினப் பணிமனை ]


சமாதான முயற்சிமூலம் ஒரு தீர்வோ குறைந்த பட்சம் இடைக்கால நிர்வாக ஏற்பாடோ எட்டப்பட்டு விடுதலைப்புலிகள் அதன் அதிகாரத்திற்கு வந்திடக்கூடாது என்பதற்காக இந்தியா இச்சமாதானத்தை மேற்கொண்டு ஆதரிக்க விரும்பவில்லை - குணா.கவியழகன்



இந்தியா :


இந்தியாவின் எதிர்காலத்தை பயங்கரமாக அச்சுறுத்தியவாறு சீனா மேலெழுந்து வருகிறது. இந்திய மாக்கடலில் தன் சிறகுகளை பரப்பிவரும் சீனாவால் தாம் முற்றுகையிடப்பட்டு விடுவோமோ என்ற பீதி இந்தியாவுக்கு உண்டு. ஏனெனில் ஏற்கனவே இந்தியா தென்முனை தவிர்ந்த ஏனைய முனைகளில் சீனாவால் நேரடியாகவும் அண்டை நாடுகளுடனான கேந்திர உறவுகள் மூலமாகவும் தன் சுற்றிவளைப்பை இறுக்கி வருகிறது.

இந்திய மாக்கடலில் சீனா நிலையெடுத்துவிட்டால் இந்தியா சுற்றிவளைக்கப்பட்டுவிடும். ஆனால் இத்தகைய சீன முயற்சியில் உடனடி நேரடி எதிராளியாக தொழிற்படுவது அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு தான். இலங்கையை சீனாவிடமிருந்து காப்பாற்றுவதே இன்று இந்தியாவின், அமெரிக்காவின் இந்திய மாக்கடலின் கேந்திர அரசியல்.

இதனால் மேற்குலகினுடைய சீன விரிவாக்கத்திற்கெதிரான முடக்கல் கொள்கைத் திட்டத்திற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கின்றது. சீனாவிற்கெதிரான முடக்கற்கொள்கையின் தேவைக்கு, இலங்கை அரசியல் மீதான மேற்குலக தலையீட்டிற்கும் இந்திய நலனுக்கும் இசைவு உண்டு.

இவ்வாறே சீனாவிற்கு எதிரான முடக்கற்கொள்கைக்கு இந்தியாவின் ஆதரவோ பங்களிப்போ இன்றி மேற்குலகால் அதனைச் சாதித்துவிட முடியாது.

புவிசார் அரசியலின்படி மட்டுமல்ல சந்தைப் பொருளாதார முறைமையின் படியும் இந்தியாவே இதற்கான மிகப்பெரும் பங்காளி. எனவே இலங்கை அரசியலில் மேற்குலகின் தலையீடு இலங்கை பற்றி இந்தியா கொண்டிருக்கும் நலனுக்கு இசைவாக இருக்கவேண்டும். அல்லாதுவிடின் இந்தியா ஒத்துழைக்காது.

இந்தியா ஒத்துக்கொள்ளாத எந்தத் திட்டத்தையும் அதன் பகைமையுடன் இலங்கையில் மேற்குலகால் நிறைவேற்றிவிட முடியாது. இதுவே இவ் அரசியலின் மிகச்சுருக்கமான அடிப்படை.

வன்னிப்போரில் புலிகள் மகத்தான வெற்றியீட்டி இராணுவ வலுச்சமநிலையை நிலைநாட்டியமை இந்தியாவுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. புலிகளின் தொடர் நிலமீட்பு முன்னேற்றத்தை தடுக்க அப்போது சந்திரிகாவின் அரசு வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரை அனுப்பி இந்தியாவின் காலில் பணிந்தது. இந்தியக் கரங்கள் மறைமுகத்தில் பங்களித்தன.

இதன் தொடர்ச்சி 2011ல் அமெரிக்கா ஏவிய ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற அரசியல் முன்னெடுப்பு இந்தியாவுக்கும் இசைவானதே. ‘ஆசிய மறுசீராக்கல் கொள்கை’ என்ற அமெரிக்கத் திட்டத்தின் செயல்வடிவாக இருந்த இம்முன்னெடுப்பு சீனாவை முடக்குவதற்கான தேவையின் பொருட்டு இலங்கையில் தலையீடு என ஒருபுறமும் மறுபுறம் புலிகளின் தனிநாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி என்பதுமாக இணைந்து இருதரப்பு நலனுக்கும் இசைவானதாகியது.

ஆனால் இந்தியா எதிர்பாராதவாறு சமாதானம் அரங்க முக்கியத்துவத்தைப் பெறுவதை வெறுப்புடன் பார்த்தது. விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்படும் அனைத்துலக அரசியல் முக்கியத்துவம் அவர்களுக்கான அரசியல் அங்கீகாரமாக வளர்ந்துவருவதை இந்தியாவால் ஜீரணிக்க முடியவில்லை.

மறுபுறம் சமாதானத்தின் பெயரால் நோர்வே அனுசரணை பாத்திரம் என்பதை மீறி மேற்குலகு இலங்கை அரசியலில் நேரடியாக தலையீடு செய்யும் போக்கை இந்தியா ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. தன் பிராந்தியத்தில் தன்னை மீறி வெளித்தரப்பின் நேரடித் தலையீடு எதிர்காலத்துக்குப் பிழையான கெட்ட முன்னுதாரண நடைமுறையாகிவிடும் என இந்தியா அஞ்சியது.

ஒஸ்லோவில் கூடிய நிதிமாநாடு மேற்குலக சக்திகள் இலங்கை விவகாரத்தில் சங்கமமாகும் தொடக்கமாகவே அமைந்தது. பின்னாளில் சமாதானத்தின் இணைத் தலைமைகளாகத் தம்மை அறிவித்து ஐரோப்பிய யூனியன், நோர்வே, யப்பான், அமெரிக்கா ஆகியன தொழிற்படத் தொடங்கின.

தன் மண்டலத்தில் வெளிச்சக்திகள் தன்னை மீறி அரசியல் தலையீடு செய்வதை வெறுத்த இந்தியா இச்சமாதான முயற்சியை உள்ளளவில் ஆதரிக்காமல் போனது. மறுபுறம் சமாதான முயற்சிமூலம் ஒரு தீர்வோ குறைந்த பட்சம் இடைக்கால நிர்வாக ஏற்பாடோ எட்டப்பட்டு விடுதலைப்புலிகள் அதன் அதிகாரத்திற்கு வந்திடக்கூடாது என்பதற்காக இந்தியா இச்சமாதானத்தை மேற்கொண்டு ஆதரிக்க விரும்பவில்லை.

இலங்கையில் தமிழ் தேசிய இருப்பிற்கு புலிகள் வலுவான தலைமைத்துவம் கொடுத்துவிடுவது இந்தியா தன் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான அச்சுறுத்தலாகிவிடும் என அஞ்சியதே காரணம்.

கடந்த நூற்றாண்டின் இறுதியில் சீனாவுடன் கைகோர்த்து நின்ற மேற்குலகு, இப்போ சீனாவை முடக்குவதற்கு இந்தியாவுடன் இணைந்து நிற்பதுபோல எதிர்காலத்தில் இந்தியா இந்திய மாக்கடல் வல்லரசு நிலையை எட்டும்போது இந்தியாவை முடக்கும் கொள்கையை செயற்படுத்த முனையவே செய்யும். அப்போது இலங்கையில் ஈழத்தமிழ் தேசியத்தின் இருப்பை இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக வெளித்தரப்பால் பயன்படுத்த முடியும் என்ற அச்சமும் இந்தியாவிற்கு எழுந்திருப்பதாகவே தெரிகின்றது.

இந்திய-இலங்கை உடன்பாட்டை முறித்து வடக்கு, கிழக்கு இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டபோது ஒப்பந்தத்தின் மறுதரப்பான இந்தியா எந்த எதிர்வினையும் ஆற்றாது மௌனம் காத்தது இக்கண்ணோட்டத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது. இக்காரணங்களால் இந்தியா சமாதானத்தின் எதிர்நிலையில் மறைமுகத்தில் தொழிற்படத் தொடங்கியது.

விடுதலைப் புலிகளின் மீதான தன் அச்சத்தை மறு ஆய்வு செய்வதற்கோ அன்றி சமாதானத்தில் தன் கரங்களை இணைத்துக்கொள்வதற்கோ இந்தியா விடுதலைப் புலிகளுடன் ஏற்படுத்த முனைந்த தொடர்பாடல்கள் கெடுவாய்ப்பாக விடுதலைப் புலிகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமையவில்லை.

இம்முயற்சிகள் புலனாய்வு அதிகாரிகள் மட்டத்திலும் மற்றும் புலிகளின் அனுதாபிகள் மட்டத்திலும் தான் அமைந்தன. அரசியல் இராசதந்திர மட்டத்தில் மேற்கொள்ளப்படாத இம்முயற்சிகள் புலிகளுக்கு இந்தியாவின் அணுகுமுறையில் சந்தேகத்தையும் அச்சத்தையும் தான் உருவாக்கியது. இவ்வழியில் புலிகளை இந்தியாவுடன் இசைவான வழியில் உறவை ஏற்படுத்த இந்தியாவால் முடியவில்லை.

சமாதானத்தை அச்சத்துடன் பார்க்கும் இந்தியாவின் நிலைப்பாடு இலங்கையில் அதிகாரப்போட்டியில் ஈடுபடும் எதிர்க்கட்சிகளுக்கு உவப்பான செய்தியாக இருந்தது. அதிபர் சந்திரிக்கா ரணில் அரசாங்கத்தை கலைப்பதற்கான துணிவை இது தந்தது எனலாம். அதேசமயம் இவ்வாட்சிக் கலைப்பு இந்தியாவை மகிழ்ச்சிப்படுத்திற்று. இதிலிருந்து இந்தியாவின் கரங்கள் இலங்கையில் சமாதானத்திற்கு எதிரான கரங்களோடு இணைந்து செயற்படத் தொடங்கின.

விடுதலைப் புலிகளின் விநியோகத்தை கடல்வழியில் முற்றுகையிடுவதை இந்தியா பூரணமாக நிறைவேற்றியது. தொடங்கப்பட்ட யுத்தத்தில் புலிகள் வெற்றிமுகம் கண்டுவிடக்கூடாது என்ற மேற்குலக நலனும் இந்தியாவின் முயற்சியும் இசைவானதாகியது. இருதரப்பும் புலிகளின் வெளித்தொடர்பை முற்றுகையிட்டு முறியடித்து அழிப்பதில் பங்கெடுத்தன.

யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்திற்கு மாற்றுவலுவை இலங்கை சீனாவிடமிருந்து பெற்றபோது அதை இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானதாக இந்தியா எண்ணியது. உதாரணத்திற்கு புலிகளின் விமானத்தாக்குதலுக்கு எதிரான ராடர் மற்றும் விமான எதிர்ப்பு பொறிமுறையைக் கொள்ளலாம். எனவே இதனை தானே வழங்க முற்பட்டதன் மூலம் இந்தியா யுத்தத்தில் நேரடியாகவும் பங்குகொண்டது.

அரசியல் இராணுவ வழிமுறையில் வெளித்தொடர்வு இன்றி முற்றுகையிடப்பட்ட புலிகள் தோல்விமுகம் கண்டுவருகையில் இந்தியா உற்சாகம் அடைந்தது. புலிகள் தமது வலுச் சமநிலையை இழந்துவிட்டபோது மேற்குலகு யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான இராசதந்திர முயற்சியை எடுத்தது.

மேற்குலக விருப்பு புலிகள் தமது பேரப்பலத்தை இழந்து சமாதானத் தீர்வுக்கு இசைவாக பேச்சுக்குத் திரும்பவேண்டும் என்பது தான். ஆனால் இந்தியா விடுதலைப் புலிகளை முற்றாக தமிழ் மக்களின் அரசியலில் இருந்து அழித்துவிடுவதற்கான மிக அரிய சந்தர்ப்பமாக இதனைக் கருதியது.

இலங்கையின் இராணுவத் தளபதிக்கு இந்தியாவில் செங்கம்பள அரச வரவேற்பு அளிக்கப்பட்டது இந்தியாவின் இவ்விருப்பைப் பூர்த்திசெய்வதற்கான நிகழ்ச்சி நிரலுக்கு உடன்பட வைப்பதே.

யுத்தத்தின் இறுதி குரூரமான கணங்களில் யுத்தத்தை நிறுத்த மேற்குலகு மேற்கொண்ட கடும் இரசதந்திர முயற்சிகள் கூட வெற்றியளிக்கவில்லை. அனைத்துலக அரசுகளின் எதிர்ப்பிலிருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்கான கவசமாக இந்தியா தொழிற்பட்டது. இந்தியாவுடன் உலக அரசியலில் இருந்த கேந்திர உறவு காரணமாக மேற்குலகால் எதுவும் முடியாமல் போனது.

இந்த நூற்றாண்டின் அரையிறுதிப் பகுதி காணாத மனிதப் பேரழிவை நிகழ்த்தி இனப்படுகொலை மூலம் ஈழத்தின் போர் அரசியல் அழிக்கப்பட்டது.



http://www.puthinappalakai.com/view.php?20131102109357

//ஏனெனில் யுத்தம் மீள வெடித்தபோது சமாதானத்தின் ஆரம்பத்திலிருந்த புலிகளின் இராணுவ, அரசியல் இயலுமைகள் முறியடிக்கப்பட்டிருந்தது தற்செயலானதல்ல. திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் பகுதி விளைவாகவே அது இருந்தது. //

 

சமாதானகாலப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இதே யாழ்க் களத்தில் இதனைச் சொல்லியே பலருடன் வாதிட்டுஇருக்கிறேன்.

 

இவர்களில் சிலர் இப்போதும் வேறு முகமூடிகளில் வருகிறார்களோ தெரியாது. சமாதானம் என ஒருவர் வருவார்.மற்றவர் ஜூட். அவர்களுடன் பொயட் என்னும் செயபாலனும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட அனைத்துலக வஞ்சக அரசியல் துணையானது – 05
[ வெள்ளிக்கிழமை, 08 நவம்பர் 2013, 09:38 GMT ] [ புதினப் பணிமனை ]


யுத்தம் மனிதாபிமான சிக்கல்களை உருவாக்கி பேரழிவுப் பாதையில் சென்று மனித அவலத்தைத் தோற்றுவித்தபோது அனைத்துலக சமூகத்தின் அழுத்தக் கரங்களில் இருந்து சிங்கள அரசைப் பாதுகாத்து அனைத்து வழிகளிலும் உதவி புலிகளின் அழிவை இந்தியா நிச்சயப்படுத்திக்கொண்டது – குணா.கவியழகன்



முடிவுரை:

01.

ஈழத்தமிழர்களின் ஆயுத வழிமுறை முயற்சியின் தோல்வி அதன் எதிர்த்தரப்பான சிறிலங்கா அரச இயந்திரத்தினால் நிகழ்த்தப்பட்டதல்ல. மாறாக இதனைச் சாத்தியப்படுத்தியது அனைத்துலக சக்திகளின் தேவைகளும் இயலுமைகளும் தான். நடப்பில் உள்ள அனைத்துலக சக்திகளின் ஆதிக்கத்திற்கான பயன்படு நிலமாக இலங்கைத் தீவு அமைந்ததுதான் இதற்கான அடிப்படைக் காரணம்.

நீண்ட வரலாற்று ஒடுக்குமுறைக்கு உட்பட்ட ஈழத்தமிழர்கள் தம் முப்பது ஆண்டு ஆயுதப் போரில் தம் சொந்தக் கண்ணீராலும் குருதியாலும் கட்டிய பேரப் புள்ளிதான் சமாதான வழிமுறைமூலம் அரசியல் தீர்வு எட்டப்படுவதற்கான ஒரு தருணத்தைக் கனிய வைத்தது.

தமக்காக அழுவதற்கேனும் யாருமற்றபோதுங்கூட ஈழத்தமிழர்கள் போரின் விதியை தம் குருதி கொண்டு தாமே மாற்றினர்.

இது ஒரு வெல்லப்பட முடியாத யுத்தம் என்ற கருத்தாக்கத்தை பலவானாக இருந்த சிங்களத் தரப்பு மனவுலகில் ஏற்படுத்தியது வன்னிப்போர் அரச தரப்பின் தோல்விதான். வன்னிப்போரும் (ஜெயசிக்குறு) அதன் தோல்வியும் சிங்களத் தரப்புக்கு ஏற்படுத்திய களைப்பும் சலிப்பும் சேதமும் அச்சமுமே சமாதான வழிமுறைக்கு ஆதாரமாக அமைந்தது.

தமிழர்கள் சிந்திய குருதியின் விலைமதிக்க முடியாத அடைவும் அதுவே. இந்த அடைவை சமாதான அரங்கில் வைத்து சரித்து வீழ்த்தியது மேற்குலகுதான். அதன் பொருத்தமற்ற அணுகுமுறைகளும் தவறான புரிதல்களுமே தமிழத்தரப்பை தானெட்டிய அரசியல் சமநிலையில் இருந்து சரிக்க வழிசெய்தது.

சமாதானத்திற்கு ஆதாரமான இச்சமநிலையை சீரழித்தது மேற்குலக அணுகுமுறைதான். இவ்வணுகுமுறைகள் வன்முறை அரசியலில் ஈடுபட்ட தரப்பை சமாதான வழிமுறைக்கு ஊக்கப்படுத்துவதாக பாதுகாப்பு அளிப்பதாக அமையவில்லை. மாறாக சமாதான வழிமுறை மீது அச்சமூட்டுவதாகவே அமைந்தன.

அதேநேரம் சிங்கள அரச தரப்போடு மேற்குலகு பேணிவந்த தொடர்பாடல் சமாதானத்தை நோக்கி மாறிவந்த சிங்கள மனவுலகை மீண்டும் கடும்போக்குவாதத்திற்குள் தள்ளிவிட்டது. ரணில் கைக்கொண்ட ‘புலிகளுக்கெதிரான அனைத்துலக பாதுகாப்பு வலைப்பின்னல்’ என்ற நிகழ்ச்சித் திட்டமும், இனவாத கடும்போக்காளர்கள் தெற்கின் வெகுசன ஆதரவு பெற்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் மேற்குலகினுடைய அணுகுமுறைத் தவறுகளினால் தான்.

ஆக சமாதானத்தின் தோல்விக்கான பொறுப்பு அதிகமும் மேற்குலகின் கரங்களினுடையதே. ஆயினும் விசித்திரம் என்னவெனில் மேற்குலகு தமிழ்த்தரப்பின் பேரத்தை சரிக்க விரும்பியதே தவிர நாடு மீண்டும் யுத்தத்திற்கு திரும்புவதையல்ல.

02.

இலங்கையில் முடிவுறும் உள்நாட்டு யுத்தமும் மாற்றமுறும் அரசாங்கமும் மேற்குலக நிகழ்ச்சிக்கு அமைவானவை என்பது சீனாவுக்குத் தெரிந்திருந்தது. இது சீனாவிற்கான மேற்குலகின் முடக்கற் கொள்கையின் ஒரு அங்கம் என்பதும் தெரியும்.

சீனா இலங்கையுடன் தொடுத்த மூலாபாய உறவின் இழைகளை அறுக்கும் உள்நோக்கமே இந்நிகழ்ச்சியின் அடிநாதம். எனவே சீனா இதற்கு எதிர்நிலை அரசியலை இலங்கையில் பேணுவதற்கான செயற்றிட்டத்தை முன்னெடுப்பது அதன் நலனும் நிர்ப்பந்தமும் ஆகியது.

மீண்டும் யுத்தத்தில் நம்பிக்கை அடைந்து வந்த சிங்களத் தரப்பை சீனா ஊக்கமுறச் செய்தது. மேலெழுந்து வந்த கடும்போக்குவாதிகளை பதவிக்குக் கொண்டுவர அது அனைத்து வழிகளிலும் முயற்சி எடுத்துக்கொண்டது.

தொடர்ந்து சமாதான வழிமுறையில் அச்சமடைந்து வந்த தமிழ்த்தரப்பையும் அது யுத்தத்திற்கு ஊக்கியது. மேற்குலகக் கரங்களின் அரசியல் விளையாட்டால் இலங்கையில் யுத்த அரசியலைப் பேணுவதற்கான சீனாவின் நலன், யுத்தத்தை தவிர்க்க இயலாத ஒன்றாக்கிவிட்டது.

சமாதானத்தின் தோல்விக்கான பொறுப்பு மேற்குலகினுடையது எனின் மீண்டும் இலங்கையில் யுத்தம் வெடித்ததற்கான பொறுப்பு சீனாவின் கரங்களுக்குரியனவே. ஆனால் சீனா இலங்கையுடன் மூலோபாய உறவைப் பேணும்பொருட்டு யுத்தத்தை விரும்பியதே தவிர யுத்தம் இலங்கை அரசால் வெல்லப்படுவதை விரும்பியிருக்கவில்லை.

03.

இலங்கையில் மேற்குலகின் நிகழ்ச்சிநிரல் சீனாவிற்கு எதிரானது என்பது இந்தியாவுக்கு இசைவுண்டு. ஆனால் அதன் பெயரால் தன் பிராந்தியத்தில் அந்நியச் சக்திகளின் தலையீடு இந்தியாவுக்கு உவப்பானதாக இருக்கவில்லை.

மேலும் விடுதலைப் புலிகள் தமிழ்மக்களின் தலைமைத்துவமாக அங்கீகாரம் பெறுவது உவப்பானதல்ல. எனவே தொடங்கப்பட்ட யுத்தத்தில் புலிகளின் அழிவை சாத்தியப்படுத்துவதே இந்தியாவினுடைய நலனும் முயற்சியும் ஆயிற்று.

இதற்காக யுத்தத்தில் புலிகள் தோற்று தம் பேரப்பலத்தை இழக்கவேண்டும் என்ற மேற்குலக ஆர்வத்தை இந்தியா பயன்படுத்திக்கொண்டது.

ஆனால் யுத்தம் மனிதாபிமான சிக்கல்களை உருவாக்கி பேரழிவுப் பாதையில் சென்று மனித அவலத்தைத் தோற்றுவித்தபோது அனைத்துலக சமூகத்தின் அழுத்தக் கரங்களில் இருந்து சிங்கள அரசைப் பாதுகாத்து அனைத்து வழிகளிலும் உதவி புலிகளின் அழிவை இந்தியா நிச்சயப்படுத்திக்கொண்டது.

எனவே, இறுதி அழிவுக்கும் மனித அவலத்துக்கும் பெரிதும் பொறுப்பான கரங்கள் இந்தியாவினுடையதே. ஆனால் இந்தியா புலிகளின் அழிவை விரும்பியதே தவிர இலங்கையில் தமிழர்களின் அரசியல் அழிவை அல்ல.

ஆக அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு, சீனா மற்றும் இந்தியா ஆகிய சக்திகள் தத்தம் நலன்களின் பொருட்டு 2011ன் பின்னான உலகச் சூழலில் இலங்கை அரசியலைக் கையாண்டன.

இக்கையாளல்களின் முடிவான விளைவே தமிழ்மக்களின் விலைமதிக்க முடியாத ஆயுதப் போர் தோற்று பேரழிவை தோற்றுவித்தது மட்டுமல்ல தமிழ்மக்கள் நிர்க்கதியாக்கப்பட்டனர்.

யுத்த வெற்றியின் பின்னான சிங்கள இராசதந்திரம் இலங்கைத் தீவில் தமிழ் இனத்துவ அரசியலையே இல்லாமல் செய்துவிடுவதற்கான அடுத்தகட்ட முயற்சியில் இயங்கிவருகின்றது.

இதில் வேடிக்கை என்னவெனில் மேற்குலகு புலிகளின் பேரத்தை சரிக்க விரும்பியது. ஆனால் அதற்கான கையாளல் யுத்தத்தில் கொண்டுபோய் விழுத்தியது.

சீனா இலங்கையை யுத்தத்திற்குள் வீழ்த்த விரும்பியது. ஆனால் அதுவே யுத்தம் முடிவடைய வழியமைத்துவிட்டது.

இந்தியாவும் புலிகளை அழிக்க விரும்பியது. ஆனால் அதன் தவிர்க்கவியலா வளர்ச்சி தமிழ் இனத்துவ அரசியலே அழியும் அபாயத்துக்குள் தள்ளியது.

பெரும் வல்லரசுகளின் அரசியல் சாணக்கிய முடிவுகளையே பகடையாக்கி சிங்களப் பேரினவாதம் முன்னேறிக்கொண்டது.

இது அவ்வலரசுகளின் அரசியல் தோல்வி மட்டுமல்ல. அவமானமுங்கூட ஆகிவிட்டது. இங்கிருந்துதான் இலங்கைக்கான இப்போதைய அனைத்துலக உறவை தெளிந்து கொள்ள முற்பட வேண்டும்.

இப்போது தமிழ் மக்களின் கவனத்துக்குரியது சிங்கள அரசு எட்டிய யுத்த வெற்றி முடிவானதல்ல. காரணம் இவ்வலரசுகளின் நலன்கள் இத்தகைய யுத்த வெற்றியினால் பூர்த்திசெய்யப்படவில்லை.

இலங்கைத் தீவில் தேவைப்பட்ட அவற்றின் நலன் இப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றது. எனவே இவற்றின் போட்டி அரசியல் வியூகங்கள் இலங்கையைச் சுற்றியபடியே இருக்கின்றன. இவற்றிற்கு இடையிலான இசைவும் முரணுக்குள்ளுந்தான் தமிழர்களுக்கான பாதையைக் கண்டுபிடித்து திறக்கவேண்டும்.

சீனாவை இலங்கையில் முறிக்கும் அமெரிக்க முயற்சியில் இந்தியாவுக்கு இசைவுண்டு. ஆனால் நேரடி அரசியல் தலையீட்டில் முரண் இருக்கின்றது.

இந்தியா தனது பிராந்தியத்தில் கையோங்கி இருப்பதில் அமெரிக்காவுக்கு இசைவுண்டு. ஆனால் இலங்கையில் இப்போதும் கடும்போக்கு மகிந்த அரசாங்கத்தைப் இந்தியா பாதுகாப்பதில் முரண் உண்டு.

ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவோ மேற்குலகோ தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் நலன்கேடு இல்லை. ஆனால் ஆட்சியிலுள்ள அரசை மாற்றுவதில் முரண் இருக்கின்றது.

சுருக்கமாகச் சொல்லக்கூடிய உடனடி முரணும் இசைவும் இவைதான்.

இதைவிட நீண்ட கால நோக்கில் இந்தியா இந்திராகாந்தி அரசாங்க காலத்தில் இருந்து இலங்கையில் தமிழீழம் அமைவதை விரும்பாவிடினும் தமிழ் தேசிய இருப்பு அவசியம் என்றே கருதியது. ஆனால் மிகப் பின்னான காலத்தில் இந்தியா இக்கொள்கையில் தளம்பி வருவதாகத் தெரிகின்றது.

இந்தியாவால் உருவாக்கப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முறிப்பதாக வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட போது இந்தியா எதிர்வினை ஏதும் ஆற்றாதது இதனை நம்பத் தூண்டுகின்றது.

சமாதான காலத்தில் மேற்குலகு தமிழ் தேசிய இருப்புக்கு ஆட்சேபனை இன்றி நடந்துகொண்டதான தோற்றப்பாடு இந்தியாவை நீண்ட காலம் குறித்த மறுசிந்தனைக்கு உட்படுத்தத் தூண்டியிருக்கலாம்.

இலங்கையில் இரு தேசியம் இருப்பதால் எதிர்காலத்தில் முரண்பாட்டு இன அரசியல் பேணப்பட்டு வரும்போது நீண்ட காலத்தில் இந்தியாவை முடக்க விரும்பும் சக்திகளின் செல்வாக்கிற்கு இவை உட்பட கதவு திறந்துவிடும். இது இந்தியப் பாதுகாப்பை அச்சுறுத்தக்கூடியது என இந்தியா சிந்திப்பதாகவே அச்சம் தருகின்றது.

இந்தியா இலங்கை ஆட்சியாளர்களின் மீது செல்வாக்குச் செலுத்த அழுத்தக் காரணியாக தமிழ் அரசியலை பேண விரும்புகிறதே தவிர தமிழர்கள் தம் தாயகத்தில் தேசிய இருப்பை வலுப்படுத்த இந்தியா எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

ஆனால் இலங்கையைக் கையாள்வதற்கு தமிழ் தேசிய இருப்பைப் புறக்கணித்து சிந்தித்த இந்தியாவுக்கு சிங்களப் பேரினவாதம் இப்போது புகட்டி வரும் பாடம் இந்தியாவை தம் மூலோபாயம் குறித்து ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியிருக்கின்றது.

ஆயுதப் போரை முறியடித்துவிட்டு சிங்களப் பேரினவாதம் அடுத்த கட்டத்தில் இந்தியாவிடமிருந்து தன்னைப் பாதுகாக்கும் பொருட்டே தன் இராசதந்திர முயற்சியின் சக்தியை செலவு செய்யும். இம்முயற்சி இந்தியப் பாதுகாப்பையே அச்சுறுத்துவதாக அமைகின்றது.

இந்தியாவிற்கு இலங்கையைக் கையாள தமிழ்த் தேசிய இருப்பும் தலையீட்டுக்கு வேண்டிய மேற்குலக ஆதரவும் அவசியப்படலாம். அல்லது சீனாவை இலங்கையில் இதற்குமேல் அனுமதிப்பது ஆபத்து என்ற இறுதித்தருணம் வரும்போது மேற்குலக ஆதரவுடனான அனைத்துலகத் தலையீட்டிற்கு இந்தியா அனுசரணை வழங்க உடன்படலாம்.

[இத்தலையீடு தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட போர் அநீதிகளின் பெயரால் தான் நிகழக்கூடியது.]

இந்த இடத்தில் மேற்குலகும் இந்தியாவும் தம் முரண்களை சமன் செய்யக்கூடிய ஒரு புள்ளி தோன்றவே வாய்ப்புண்டு.

இத்தகைய ஒரு நெருக்கடி இலங்கையை மெதுவாக நெருங்கிவருகின்றது. இலங்கை அரசு இதற்கு எதிர்வினையாற்ற புதிய வியூகங்களில் பாதைகளைத் தேடி வகுத்தும் வருகின்றது.

இம்முயற்சியில் சிங்கள அரசு தோற்றால் உருவாகும் அரசியல் நெருக்கடியில் சிங்கள அரசுக்கு எதிரான தமிழர்களின் பேரம் உச்சத்தில் இருக்கும். இதிலிருந்து பாதைகளை அமைத்து முன்னேற வேண்டியது தமிழ்த் தலைமைகளினதும் தமிழ் அறிவினதும் பொறுப்பு.



http://www.puthinappalakai.com/view.php?20131108109394

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.