Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டேவிட் கமரூனின் யாழ் பயணமும் பயன்படுத்தத் தெரியாத தமிழ்த்தரப்பும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டேவிட் கமரூனின் யாழ் பயணமும் பயன்படுத்தத் தெரியாத தமிழ்த்தரப்பும்!
முத்துக்குமார்

பொதுநலவாய அமைப்பு என்பது காலனித்துவ முடிவிற்குப் பின்னரும் தனது செல்வாக்கினை அந்நாடுகளில் நிலைநிறுத்துவதற்காக பிரித்தானியாவினால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். பிரித்தானிய மகாராணியாரே அதன் தலைவராக விளங்குகின்றார். பிரித்தானியாவால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்ற வகையில் அம்மாநாட்டிற்குச் செல்லாமல் இருக்க அதனால் முடியாது. இதைவிட அமெரிக்க தலைமையிலான மேற்குலகத்திடம் நேர்மறை அணுகுமுறை மூலம் இலங்கையைப் பணியவைத்தல் என்ற கொள்கை நிலைப்பாடும் இருந்தது. இந்த இரண்டும் தான் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் எழுந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் மாநாட்டில் கலந்துகொண்டதற்கு காரணம்.

மறுபக்கத்தில் எதிர்ப்புக்களையும் ஒருவகையில் தணிக்க வேண்டிய தேவை அதற்கிருந்தது. குறிப்பாக புலம்பெயர் தமிழ்மக்களின் அபிலாஷைகளை குறைந்த மட்டத்திலாவது பேணவேண்டிய தேவை இருந்தது. பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழ்மக்கள் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பிரித்தானிய மக்கள் மட்டத்தில் பொதுக்கருத்தினை உருவாக்குவதில் வெற்றிகண்டிருந்தனர். இதற்கான அவர்களின் உழைப்பு மகத்தானது. ஒவ்வொரு தேர்தல் தொகுதியாகச் சென்று மக்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து தமது பக்க நியாயங்களை முன்வைத்தனர். ஆயிரக்கணக்கில் கையெழுத்துக்களையும் வாங்கி அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்தனர்.

இவ்வாறான அவர்களின் கடும் உழைப்பே டேவிற் கமரூன் யாழ்ப்பாணம் பயணம் செய்தமைக்கு காரணம். இச் செயற்பாட்டில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எந்தப் பங்கும் இருக்கவில்லை. இது முழுக்க முழுக்க பிரித்தானிய வாழ் தமிழ்மக்களினது உழைப்பின் விளைவு. அந்த உழைப்பினைத் தகுந்த வகையில் அறுவடை செய்ய வேண்டிய பொறுப்புத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்தது. இதில் ஒரு நம்பிக்கை பொறுப்பாளர் என்ற பாத்திரத்தை வகிக்கவேண்டிய கடமை கூட்டமைப்புக்கு இருந்தது. ஆனால் இந்தக் கடமையை கூட்டமைப்பு செய்யவில்லை என்பதுதான் மிகப்பெரும் சோகம். பத்துவீதம் கூட செய்யவில்லை என்றே நான் கூறுவேன். பொதுநலவாய அமைப்பின் மாநாடு நடந்த நாட்கள் முழுவதும் நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். மாவிட்டபுரம் போராட்டத்திலும் யாழ் பொதுநூலகம் முன்னால் இடம்பெற்ற போராட்டத்திலும் நானும் நேரடியாகக் கலந்துகொண்டிருந்தேன்.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் மனித உரிமை விவகாரங்களையே முன்னிலைப்படுத்துவதால் அதுபற்றிய விடயங்களை டேவிற் கமரூன் நேரடியாகத் தரிசிப்பதற்கு வாய்ப்புக்களை கொடுத்திருக்க வேண்டும். இதில் காணி அபகரிப்பு விவகாரமும், காணமல் போனவர்களது விவகாரமுமே முக்கியமானதாக இருந்தன. இது தொடர்பாக இரண்டு போராட்டங்களும் இடம்பெற்றன. மாவிட்டபுரத்தில் காணி அபகரிப்புக்கெதிரான போராட்டமும், யாழ். பொதுநூலகம் அருகில் காணமல் போனவர்களின் உறவுகள் நடாத்திய போராட்டமும் இடம்பெற்றது. இரண்டுமே கமரூன் கவனிப்பைப் பெறவில்லை. குறைந்தபட்சம் அவர்களது பிரதிநிதிகளாவது கமரூனைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கவில்லை. அதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. மாவிட்டபுரம் போராட்டமும் முழுக்கமுழுக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தமையினாலும் கமரூன் பயணம் செய்யும் பாதையில் இடம்பெறாமையினாலும் கமரூனின் கவனத்தை மட்டுமல்ல அவருடன் வருகை தந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் கவனத்தையும் பெறவில்லை. காணமல் போனவர்களது உறவினர்களின் போராட்டம் கமரூனின் கவனத்தை பெறாவிட்டாலும் ஊடகங்களின் கவனத்தையாவது பெற்றிருந்தது. பிரத்தானிய ஊடகங்கள் மிகப் பெரும் முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தன.

காணமல் போனவர்களை கண்டறியும் சங்கத்தில் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி முக்கிய பொறுப்பில் இருக்கின்றார். அவர் குறைந்தபட்சம் தான் சந்திப்பதற்காகவாவது ஏற்பாடு செய்துதாருங்கள் என்று கேட்டிருந்தார். கூட்டமைப்பின் மும்மூர்த்திகளினால் அவர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கமரூனின் பயணம் முழுக்க முழுக்க பிரித்தானிய தூதுவராலயத்தாலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினராலுமே திட்டமிடப்பட்டது. அவரது நிகழ்ச்சி நிரல் முழுமையாக கூட்டமைப்பின் மும்மூர்த்திகள் எனப்படுகின்ற சம்பந்தன், சுமந்திரன், விக்கினேஷ்வரன் ஆகியோருக்கு முன்கூட்டியே தெரியும். கமரூனின் பாதுகாப்புப் பிரிவினர் நான்கு நாட்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு சென்றிருக்கின்றனர். அவரது நிகழ்ச்சிநிரலில் மாவிட்டபுரப் பயணம் இருக்கவில்லை. ஆனால் அவர் வருவார் என்ற நம்பிக்கையூட்டப்பட்டு மாலை ஐந்து மணிவரை ஆயிரக்கணக்கான மக்கள் மாவிட்டபுரத்தில் திட்டமிட்டு முடக்கப்பட்டிருந்தனர்.

இறுதி நாள் போராட்டத்தினை காணமல்போன உறவுகளுடன் இணைந்து யாழ் நகரில் நடாத்துவோம் எனக் கேட்கப்பட்டது. கூட்டமைப்பு அதனை நிராகரித்து அவர் மாவிட்டபுரத்திற்கும் வருவார் என நம்பிக்கையூட்டப்பட்டது.

காணமல்போன உறவுகளது போராட்டத்தை அனந்தி தலைமையிலான காணாமல் போனவர்களைக் கண்டறியும் சங்கம், காணாமல்போன உறவுகளைத் தேடும் அமைப்பு, மன்னார் பிரஜைகள்குழு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. காலையில் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு கமரூன் வருகை தருவார் எனச் செய்திகள் வந்ததனால் அவர்கள் அங்கு போராட்டத்தினை நடத்தினர். சம்பந்தனும், மாவையும் வீதியில் நின்று அனந்தியுடன் பேசிவிட்டு சென்றுவிட்டனர். விக்கினேஸ்வரன் கலந்துகொள்வதற்கு தனக்கு நேரமில்லை எனக் கூறியிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சரவணபவன் மட்டுமே அங்கு வருகை தந்திருந்தார். வேறு எவரும் வரவில்லை. மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் வந்திருந்தனர். தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமாரும், செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் வருகை தந்திருந்தனர். காணாமல் போனவர்களது உறவுகள் புகைப்படங்களுடன் கதறி அழுதனர்.

காலை 10 மணியளவில் நல்லூருக்கு வரமாட்டார். 2 மணியளவில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இறங்குவார் என செய்திவந்தது. இதன் பின்னர் போராட்டம் துரையப்பா விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள யாழ் முனியப்பர் கோவிலுக்கு மாற்றப்பட்டது. பிற்பகல் 2.15 மணியளவில் ஹெலிகொப்ரர் ஒன்று தரையிறங்கியது. மக்கள் கமரூன் தான் என நினைத்து அதனை நோக்கி ஓடினர். ஆனால் வந்தவர்கள் நியூசிலாந்து வெளிநாட்டமைச்சைச் சேர்ந்தவர்கள் என பின்னர் தெரியவந்தது. மக்கள் அவர்களின் முன்னும் தமது நிலமைகளை எடுத்துக்கூறினர்.

அதே நேரம் கமரூன் பலாலி விமான நிலையத்திலிருந்து வாகனங்கள் மூலம் யாழ் பொது நூல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார். மக்களின் கவனத்தை துரையப்பா விளையாட்டரங்கு பக்கம் திசைதிருப்பிவிட்டு திட்டமிட்டு வாகனம் மூலம் அவர் கொண்டு வரப்பட்டிருக்கிறார். நூலகவாசலில் சுப்பிரமணியம் பூங்காப் பக்கம் அரசுக்கு ஆதரவானவர்கள் 35 பேர் சுலோகங்கள் ஏந்தியபடி நின்றிருந்தனர். கமரூனின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையிலேயே நிறுத்தினர்.

சுலோகங்களும் கணணியில் வடிவமைக்கப்பட்டு நேர்த்தியாகவே இருந்தன. பொலீசார் பொருத்தமான இடத்தில் அவர்கள் நிற்பதற்கு அனுமதித்திருந்தனர்.

பொதுநூலகத்திற்கு கமரூன் வந்ததை அறிந்த மக்கள் அதனை நோக்கி ஓடினர். நூலகத்திற்கு செல்லும் பாதையில் தந்தைசெல்வா நினைவுத்தூபி அருகே பொலீசார் அவர்களை வழிமறித்தனர். இங்குதான் மக்களுக்கும், பொலிசாருக்குமிடையே வாக்குவாதங்களும தள்ளுமுள்ளுகளும் இடம்பெற்றன. பொலீசார் தமது வாகனங்களை குறுக்கே நிறுத்தியதுமல்லாமல் கைகோர்த்து வரிசையில் நின்று வழிமறித்தனர். மக்கள் முன்னேற முயல்வதும், பொலீசார் தள்ளுவதுமாக நிலைமைகள் இருந்தன. மீறி முன்னேற முற்பட்டவர்களை பொலீசார் தாக்கவும் தயங்கவில்லை. ஒருகட்டத்தில் மக்களின் முயற்சி அதிகரிக்கவே பொலீசார் வாகனத்தில் இருந்த பொல்லுகளை கையில் எடுத்தனர்.

இந்நேரத்தில் கமரூனின் வாகனம் வெளியேறுவது தெரிந்தது. மக்கள் தடுப்பை உடைத்துக்கொண்டு வாகனத்தை நோக்கி ஓடினர். பொலீசாரும் பின்னால் ஓடினர். இதற்கிடையில் கமரூனின் வாகனம் சென்றுவிட்டது. இரண்டாவதாக வந்த விக்கினேஸ்வரனின் வாகனம் மக்கள் ஓடிவருவதைக் கண்டவுடன் பின்நகர்த்தி மணிக்கூட்டு வீதியால் சென்றுவிட்டது. மூன்றாவதாக ஊடகவியலாளர்கள் வாகனம் வந்தது. மக்கள் அதனை வழிமறித்து வீதியில் அமர்ந்து காணமல் போனவர்களின் புகைப்படங்களையும் ஏந்தியபடி கதறி அழுதனர். அவர்களில் சிலர் வெளியே வந்து மக்களுடன் பேசினர். மக்கள் கொடுத்த மகஜர்களையும் பிரதமருக்குக் கொடுப்பதாக பெற்றுக்கொண்டனர். இந்த இடத்திலும் பொலீசார் மக்களைத் தாக்கினர். கத்தோலிக்க மதகுரு ஒருவர் கீழே விழும் அளவிற்கு தாக்குதல் நடந்தது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனுக்கும் வயிற்றில் குத்துவிழுந்தது. பொலீசார் ஒருவாறு மக்களை அகற்றி வாகனத்தைச் செல்லவிட்டனர்.

கடைசியாக ஒருவாகனம் வந்தது. வெளிநாட்டுப் பிரமுகர் என நினைத்து மக்கள் அதை நோக்கியும் ஓடினர். வாகனத்தை வழிமறித்தனர். வாகனத்தின் கண்ணாடியைத் தூக்கிப் பார்த்தபோது அதிலிருந்தவர் சம்பந்தன். அவரை இறங்கி மக்களுடன் பேசுமாறு கத்தோலிக்க மதகுரு வேண்டினார். சம்பந்தன் மறுத்துவிட்டார். மக்களின் கோபம் அதிகரித்தது. அவர்கள் தங்கள் கைகளினால் வாகனத்தைத் தாக்கினர். கேட்கக்கூடாத வசனங்கள் மக்களது வாயிலிருந்து வந்தன. இறுதியில் பொலீசாரால் வாகனம் பின் நகர்த்தப்பட்டு நூலகத்தின் பின்பக்கத்தால் செல்வதற்கு வழிசெய்யப்பட்டது. மக்கள் சம்பந்தன் வந்து தங்களை சந்திக்கும்வரை வீதியை விட்டு அகலமாட்டோம் என நூலக கேற் வாசலில் அமந்தனர். இறுதியில் சமாதானம் கூறி அனந்தி மக்களை அனுப்பிவைத்தார்.

உண்மையில் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டம் தமிழ்தேசியக் கூட்டமைபின் தலைவருக்கு எதிரான போராட்டமாக முடிவடைந்தது.

இப்போராட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்களில் சிவசக்தி ஆனந்தன் மட்டுமே வந்திருந்தார். வேறு எவரும் வரவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காலைதொடக்கம் மாலை வரை போராட்டக்காரர்களுடனேயே நின்றார்.

பொதுநூலக நிகழ்வைத் தொடர்ந்து கமரூன் உதயன் பத்திரிகைக் காரியாலத்திற்குச் சென்று, அதன் முன்னைய அழிவுகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து சுன்னாகத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த சபாபதிப்பிள்ளை முகாமைப் பார்வையிட்டார். இதன்போதும் கே.கே.எஸ் பிரதான வீதியிலிருந்து முகாமிற்குத் திரும்பும் ஒழுங்கையின் மூலையில் அரசுக்கு ஆதரவானவர்கள் கமரூனுக்கு எதிராக சுலோகங்களைத் தாங்கியபடி நின்றனர். கமரூன் முகாமிற்குச் சென்றபோது, அங்கிருந்தவர்களில் பெரும்பான்மையோர் மாவிட்டபுரம் போராட்டத்திற்குச் சென்றுவிட்டனர். முகாமில் இருந்தவர்களுக்கு முன்கூட்டியே கமரூன் வருவார் என்பது தெரிவிக்கப்படவில்லை. இதன் பின்னர் கமரூன் கொழும்பிற்குத் திரும்பிவிட்டார். ஆனால் சுமார் இரண்டாயிரம் வரையான மக்கள் கமரூன் மாவிட்டபுரத்திற்கு வருவாரெனக் காத்துநின்றனர். கடைசி நேரத்தில் கமரூன் வரமாட்டார் என மாவை அறிவித்போது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். குளிர்பானத்தையும் அருந்தாமல் பலர் வெளியேறினர்.

பொதுநூலகத்தில் கூட்டமைப்பினருக்கும், கமரூனுக்கும் இடையேதான் சந்திப்பு நடைபெற்றது. கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன், விக்கினேஸ்வரன், சுமந்திரன் என்போரே கலந்துகொண்டனர். கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் எவரும் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. முதலமைச்சருடனான சந்திப்பு என்றே இந்நிகழ்வு பற்றிக் கூறப்பட்டது. இதில் சுமந்திரனுக்கு எப்படி விசேட சலுகைகள் கிடைத்ததோ தெரியாது. இச் சந்திப்பில் முதலமைச்சர் மாகாணசபை பற்றி மட்டுமே பேசினார். காணிப்பறிப்பு, காணாமல்போனோர் விவகாரம், சிறையில் உள்ளவர்கள் விவகாரம், சிங்களக் குடியேற்றம், அரசியல் தீர்வு என்பன பற்றி வாயே திறக்கவில்லை.

கமரூன் நாடு திரும்பியதும், பொதுமக்கள் சபையில் தன்னுடைய பயணம் பற்றி உரையாற்றினார். அதில் உதயன் பத்திரிகைக் காரியாலயம் தாக்கப்பட்டமை பற்றியும், சபாபதிப்பிள்ளை முகாமில் இடம்பெயர்ந்தவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடி பற்றியும் கூறியிருக்கின்றார். அவர் காணாமல் போனவர்களின் உறவினர்களையும் சந்தித்து, காணி அபகரிப்பிற்கு எதிராக போராடியவர்களையும் சந்தித்திருந்தால் அவரது பயணம் மேலும் பூரணமானதாக இருந்திருக்கும். பொதுமக்கள் சபையில் அவர் ஆற்றிய உரையும், விரிவடைந்ததாக இருந்திருக்கும்.

வரலாறு இடைக்கிடைதான் சந்தர்ப்பங்களை உருவாக்கித்தரும். அதனை சரியாகப் பயன்படுத்தத் தெரியாத முட்டாள்களாக தமிழ்த்தரப்பு இருப்பதுதான் மிகப்பெரும் சோகம்.


http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=cf23a338-832b-4fe8-b394-32809e3e8a26

  • கருத்துக்கள உறவுகள்

இம்மூவரும் இவ்வாறான சந்தர்பத்தில் நடந்து கொண்டவிதம் கூட்டமைப்பு ஏதோ செய்து எங்களுக்கு குறைந்த பட்ச்ச தீர்வையாவது 

பெற்றுதருவார்கள் என நம்பிய என்னைமாதிரிபல்லாயிரக்கணக்கோரை ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.நன்றி கிருபன் இனைப்பிற்க்கு சம்மந்தர் சனங்களிடம் வேண்டி கட்டும் காணொளி இங்கு இணைத்தால் எம்மையே தாழ்த்திகொள்வது போல் உள்ளபடியால் என்னுடைய வலைபூவில் உள்ளது அதில் சனங்களிடம் அடியும் பேச்சும் வேண்டின சம்மந்தரின் வயது போன முகத்தை பார்க்கவே பாவமாயிருக்கு இந்த வயதில் இது இவருக்கு தேவையா?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் கிழடு என்னசெய்யும். சோனியாவும் அவளின் தீட்சிதர்களும் மேனன்களும் சொல்லிகொடுப்பதை செய்வதைத்தவிர.
கிழடுக்கு கோமணம் காவிரதுக்கும் கொஞ்சபேர் லண்டனில் இருக்கினம்.

பெருமாள் அண்ணா நானும் அந்த காணொளி பார்த்தேன். அதை இங்கு இணைத்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் கிழடு என்னசெய்யும். சோனியாவும் அவளின் தீட்சிதர்களும் மேனன்களும் சொல்லிகொடுப்பதை செய்வதைத்தவிர.

கிழடுக்கு கோமணம் காவிரதுக்கும் கொஞ்சபேர் லண்டனில் இருக்கினம்.

தன்னுடைய சொந்த நாட்டு 550 மேற்பட்ட மீனவர்களை கொலை செய்யும் இலங்கையை தட்டிக்கேட்க்க வக்கில்லை இந்த விண்ணாணத்துக்குள்ளை எங்களுக்கு இந்தியா சொல்லி  தீர்வாம் இதுதான் நம்மைடை மேட்டுகுடி தலைமையின் நம்பிக்கையாம் கடவுளே வந்து தமீழீழம் தருகிறன் என்றாலும் நம்மூவரும் கோரசாக எதுக்கும் பக்கத்து நாட்டை கேட்டு அனுசரிச்சு செய்வம் என்பார்கள் இது நாங்கள் தலையிலை ஏத்தின காவடிகள் எங்கு போய் முடியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
சிலவேளைகளில் நாம், முக்கியமாக இதை எழுதியவர், யதார்த்தத்துக்கு அப்பால் நின்று சிந்திகின்றாரா / றோமோ என்று தோன்றுகின்றது.
 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.