Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத் தவிர்ப்பு வலயம் - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத் தவிர்ப்பு வலயம்
யமுனா ராஜேந்திரன்

மூன்று பாகங்களிலான ‘இலங்கையின் கொலைக் களம்’ ஆவணப்படங்களின் இயக்குனர் ஹாலும் மக்ரே இலங்கையின் பொது எதிரியாகப் பிரகட னப்படுத்தப்பட்டிருக்கிறார். பொதுநலவாய மாநாட்டுக்காக அவர் இலங்கை சென்று சேர்ந்து விமான நிலையத்தை விட்டு வெளியேறும் முன்பாகவே அவருக்கு எதிரான இலங்கை அரச ஆதரவாளர்களின் ‘சுயாதீனமான, தன்னெழுச்சியான’ போராட்டங்கள் ‘திட்டமிட்டபடி’ துவங்கிவிட்டன. அவரும் அவரது குழுவினரான ஜொனாதன் மில்லர், ஜோன் ஸ்னோ போன்றவர்கள் தங்கியிருந்த கொழும்பு தங்குவிடுதியின் முன்னால் கல்லெறிந்திருக்கிறார்கள் மகிந்த ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள். யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற அவர்களது புகையிரதப் பயணம் அனுராதபுரத்தில் ஆர்ப்பாட்டக் காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, காவல்துறையினர் பலவந்தமாக ஹாலும் மக்ரே குழுவினரை கொழும்புக்குத் திருப்பி அனுப்பியிருக்கின்றனர்.

போர்க் குற்றங்கள் குறித்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவிடம் ஜொனாதன் மில்லர் கேள்வி எழுப்பியதற் காக, அந்த நிகழ்வு குறித்து விசாரிக்க இலங்கை அரசு ஆணையிட்டிருக்கிறது. பொதுநலவாய நாடுகளின் பிரதான அமர்வை அறிக்கையிட அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டிருக்கிறது. அரசு வெளிநாட்டு ஆவணப்பட இயக்குனர் ஒருவர்மீதும் அதனை வெளியிட்டதற்காக ஒரு குறிப்பிட்ட தொலைக் காட்சியின் ஊடகவியலாளர்கள் மீதும் வன்மம் கொண்டு செயல்பட்டிருக்கிறது. உளவுத்துறையினராலும் காவல்துறையினராலும் சதா கண்காணிக்கப்பட்ட நிலையில், அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப் பட்ட நிலையில் ஹாலும் மக்ரேவும் அவரது சக ஊடகவியலாளர்களும் மாநாட்டுக்கு இறுதி நாளுக்கு முன்பாகவே இலங்கையிலிருந்து வெளியேறியிருக்கி றார்கள். பொதுநலவாய மாநாட்டில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து ஹாலும் மக்ரே ஒரு கட்டுரையும், ஜொனாதன் மில்லர் இலங்கையின் ஊடகவியலாளருக்கு அவர்களது தீரத்திற்காக அவர்களைப் பாராட்டி ஒரு திறந்த கடிதத்தினையும் எழுதியிருக்கிறார்கள். எத்தகைய கொலைகாரச் சூழலில் இலங்கையின் ஊடகவியலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்குத் தமது அனுபவமே சாட்சியாக இருக்கிறது என்பதனை அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

“உண்மையைத் தேடிச் செல்பவர்கள் திறந்த மனத்து டன் இருப்பார்கள். சாட்சிகளை அழிக்க நினைக்க மாட்டார்கள். குறிப்பாக, உண்மை குறித்த தேடலைத் தடுத்து நிறுத்த மாட்டார்கள். இலங்கையில் தமிழர்கள் இதனைச் செய்யவில்லை. இலங்கை அரசுதான் இதனைச் செய்கிறது. குற்றம் யாரிடம் இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சியாக இருக்கிறது” என்கிறார் ஹாலும் மக்ரே. “நாற்பதனாயிரம் முதல் எழுபதினாயிரம் வரை வெகுமக்கள் இலங்கை அரசு படுகொலை செய்திருக்கிறது என்பது குற்றச்சாட்டு. சித்திரவதைகளையும் வல்லுறவையும் இலங்கை ராணுவம் செய்திருக்கிறது என்பது குற்றச்சாட்டு. யுத்தக் கைதிகளை இலங்கை அரசு திட்டமிட்டுப் படுகொலை செய்திருக்கிறது என்பது குற்றச்சாட்டு. இப்போதும் வடக்கு கிழக்கை ராணுவ மயமாக்கி தமிழ் மக்களை இலங்கை அரசு அச்சுறுத்தி வருகிறது என்பது குற்றச்சாட்டு. இதற்குப் பதில் சொல்லாமல், ‘நாங்கள் சாலைகள் போட்டிருக்கிறோம், கட்டிடங்கள் கட்டியிருக்கிறோம், விளக்குகள் பொறுத்தியி ருக்கிறோம், ஆவணப்படங்கள் அனைத்தும் நாடகம்’ என்கிறது இலங்கை அரசு.

விடுதலைப் புலிகள் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்தமை, தற்கொலைத் தாக்குதலில் வெகு மக்களைக் கொன்றமை போன்ற போர்க்குற்றங்கள் குறித்து எமது ஆவணப்படங்களில் நாங்கள் பேசியிருக்கி றோம். அதனைப் பற்றிக் கொஞ்சமும் கவனம் கொள் ளாமல், என்னை விடுதலைப்புலிகளின் பிரச்சாரகன் என முத்திரை குத்துகிறது இலங்கை அரசு. நான் அச்சுறுத்தல்களுக்கும் என்மீது தொடுக்கப்பட்ட தாக்கு தல்களுக்கும் அஞ்சப் போவதில்லை. தொடர்ந்து இலங்கையின் மனித குலத்திற்கு எதிரான போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தவே போகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் ஹாலும் மக்ரே. “ஊடகவி யலாளர்களை இவ்வளவு அச்சுறுத்திவிட்டு எவ்வாறு நான் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பேன் எனத் தனது பொதுநலவாய மாநாட்டு உரையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே பேசுகிறாரோ எனத் தனக்குப் புரியவில்லை” என எழுதியிருக்கிறார் ஜொனாதன் மில்லர்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்துச் செய்தியி டுவதற்கு இங்கிலாந்து ஊடகவியலாளர்கள் இலங்கையில் போராடிக் கொண்டிருக்கையில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது 65 ஆவது பிறந்த நாளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் குடும்பத்தினருடன் கொண்டாடி யிருக்கிறார். ஓன்றுபட்ட இலங்கைச் சங்க நிகழ்வில் அதனது வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் கலந்து கொண்டிருக்கிறார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரூன் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேசுவரனைச் சந்தித்திருக்கிறார். அவருக்காகக் காத்திருந்த, காணாமல் போனோருக்காகத் திரண்டிருந்த வெகுமக்களை அவர் சந்திக்கவில்லை. ஆனால், எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் சுயாதீன விசாரணை இல்லாவிட்டால் சர்வதேசிய விசார ணைக்கான அழுத்தத்தைச் செய்ய நேரிடும் என அவர் தெரிவித்திருக்கிறார். இதை அச்சுறுத்தல் என வர்ணித்திருக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இதற்கு அடிபணியப்போவதில்லை எனவும் அறிவித்து விட்டார். ஹாலும் மக்ரே, கட்டாயம் மார்ச் ஜெனிவா மனித உரிமை அமர்வில் இலங்கை அரசு நெருக்கடியை எதிர்கொள்ளப் போகிறது எனத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே, இலங்கை அரச நிதியைக் கையாளும் அமைச்சரான இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்சே போன்றோர் என்ன சொல்கிறார்கள்? சேனல் நான்கு ஊடகவியலாளர்களது குரலும் இங்கிலாந்துப் பிரதமரது குரலும் ஒரே குரல்தான் எனும் சித்திரத்தை இலங்கையின் சிங்கள மக்களிடம் உருவாக்க அவர்கள் முனைகிறார்கள். தமது முன்னாள் காலனிய எஜமானன் இப்போதும் தம்மைக் காலனிய நாடாகக் கருதிப் பேசுவதாக அவர்கள் சொல்கிறார்கள். காலனியாதிக்க எதிர்ப்பு தேசபக்தப் போர்வீரர்களாகத் தம்மைக் கட்டமைத்துக் கொள்கிறார்கள். ‘இங்கிலாந்து ஈராக்கில் புரிந்த போர்க்குற்றங்கள் இன்னும் முழுமையாக விசாரிக்கப்படவில்லைÕ என்கிறார் கோத்தபாய ராஜபக்சே. கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிய வேண்டாம் என்கிறார் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே.

இந்த இடத்தில் இங்கிலாந்தில் செயல்படும் சேனல் நான்கு ஊடகவியலாளர்களுக்கும், இங்கிலாந்துப் பிரதமருக்கும் இருக்கும் வித்தியாசங்களை நாம் வரையறுத்துக் கொள்ள வேண்டும். இந்த வரையறை என்பது ஒரு வகையில் மேற்கத்திய, கனடிய, அமெரிக்க அரசுகளுக்கும் இந்த நாடுகளில் செயல்படும் சுயாதீன ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான வித்தியாசமும் கூடத்தான். ஜனநாயகம், ஊடக சுதந்திரம், மாற்றுக் கருத்துகளுக்கான சுதந்திரம் என்பதற்கான போராட்டம் பிரெஞ்சுப் புரட்சி துவங்கி மேலைத்தேய நாடுகளில் வளர்ந்து வருகிறது. பத்திரிகைத்துறை சார்ந்த அமைப்பை அவர்கள் நான்காவது சமூகவர்க்கம் அல்லது போர்த் எஸ்டேட் எனும் வகையில் முக்கியத்துவப்படுத்தி யிருக்கிறார்கள்.

மேற்குலகு, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளின் மக்கள் விரோத அரசுக் கொள்கைகள், ஊழல்கள், வெளிநாட்டுப் படையெடுப்புகளின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை வெளிக்கொணர்ந்த வர்கள் இந்த நாடுகளின் ஆளுமை மிக்க சில ஊடகவியலாளர்களும், சில சுயாதீன ஊடகங்களும்தான். நியூயார்க்கர், கார்டியன், லெ மாந்தே டிப்ளமெடிக் போன்ற பத்திரிகைகள் சேனல் நான்கு, ஆர்த்தே, டெமாக்ரசி நவ் போன்ற தொலைக் காட்சிகளின் வரலாறு இதனைத் தெளிவுபடுத்தும். செய்மோர் ஹெர்ஸ், அசாஞ்சே, ஸ்நோடன், ஜான் பில்ஜர், ஹாலும் மக்ரே போன்ற பெயர்களின் செயல்பாடுகள் இதனைத் தெளிவுபடுத்தும். சோசலிசம் நிலவிய நாடுகளான ரஸ்யா, கிழக்கு ஐரோப்பா, இன்றைய கியூபா, முதலாளித்துவ செஞ்சீனா போன்ற நாடுகளோடு ஒப்பிட ஊடக சுதந்திரத்தை மேற்கத்திய, கனடிய, அமெரிக்க சமூகங்க ளின் அரசுகள் ‘சகித்துக் கொண்டு‘ வந்திருக்கின்றன.

சேனல் நான்கு ஏற்கனவே இங்கிலாந்து, அமெரிக்க அரசுகள் ஈராக்கில் புரிந்த மனித உரிமை மீறல்களை ஆவணப்படங்களாகக் கொண்டு வந்திருக்கின்றன. மைலாய், அபுகாரிப், குன்டனாமோ பிரச்சினைகளை வெளியில் கொணர்ந்தவர்கள் அமெரிக்க ஊடகவியலாளர் கள்தான். இந்த நாடுகளின் ஊடகவியலாளர்கள் உலக மக்களின் மனித உரிமைகள் குறித்துப் பேசிக் கொண்டிருக்க, இங்கிலாந்துப் பிரதமர் ஐரோப்பிய யூனியனின் மனித உரிமையை எங்களால் ஒப்ப முடியாது என்கிறார். ஆகவே, அரசு மற்றும் ஊடகவியலாளர்களின் கடப்பாடு போன்றவற்றுக்கு இருக்கும் வித்தியாசங்கள் குறித்த புரிதலுடன்தான் எவரும் ஹாலும் மக்ரேவையும் அவரது இலங்கை தொடர்பான ஆவணப்படங்களையும், சேனல் நான்கு ஊடகவியலாளர்கள் இலங்கையில் எதிர்கொண்ட தடைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.

***



யுத்தத் தவிர்ப்பு வலயம் ஆவணப்படம் முதன் முதலாக இரண்டாயிரத்துப் பதின்மூன்றாம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் அமர்வு நடைபெற்றபோது திரையிடப்பட்டது. பத்து மாதங்களின் பின் கொழும்பு பொதுநலவாய மாநாட்டை ஓட்டி நவம்பர் முதல் வாரத்தில் சேனல்நான்கு தொலைக்காட்சியில் திரையிடப்பட்டது. இடைப்பட்ட மாதங்களில் இங்கிலாந்து பிரன்ட்லைன் ஊடகச் செயல்பாட்டு நிறுவனத்திலும் உலகின் பல்வேறு மனித உரிமை அமர்வுகளிலும் இப்படம் திரையிடப்பட்டது.

சர்வதேச மனித உரிமைச்சபை, மனித உரிமைக் கண்காணிப்பகம், மனித உரிமைத் திரைப்படவிழா அமைப்பு போன்றவை இணைந்து ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடத்தும் ஜெனிவா சர்வதேச மனித உரிமைத் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்ட போது, ஐநா மனித உரிமைச் சபைக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆர்யா சிங்கா இத்திரைப் படத்தை ஜெனிவாவில் திரையிடப்படாமல் தடுப்பதற் கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். ஐநா மனித உரிமை அவைக்கு அதிகாரபூர்வமாக இப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என ஒரு நீண்ட விளக்க அறிக்கையையும் அவர் கையளித்தார்.

இந்தப் படத்தில் விவரணையாளராக இடம்பெறும் வாணி விஜி, இப்படத்தின் முக்கிய ஆளுமையாக இடபெறும், வல்லுறவின் பின் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா போன்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என ஆர்யசிங்கா விவாதித்தார். ஜனநாயகத்திற்கான இலங்கை ஊடகவிய லாளர்களின் ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டதாக இந்த ஆவணப்படம் இருக்கிறது என்றார் அவர். படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சிறுவன் பாலச்சந்திரன் தொடர்பாகத் தனது அறிக் கையில் ஆர்யசிங்கா மறந்தும் குறிப்பிட வில்லை. ஆர்யசிங்காவை நிராகரித்தபடி இந்தப் படத்தைத் தாங்கள் தடை செய்ய முடியாது என அறிவித்தது ஐநா மனித உரிமை அவை. அன்று முதல் இந்தத் திரைப்படம் திரையிட முயற்சிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் ராஜதந்திர வகையில் நெருக்கடிகள் தருவதைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது இலங்கை அரசு.

மலேசியாவில் இந்தப் படம் திரையிடப்பட்டபோது இலங்கை அரசின் கோரிக்கையை அடுத்து மலேசிய தணிக்கைக்குழு அதிகாரிகள் முப்பது பேர் திரையரங்கில் நுழைந்து படத்தைத் திரையிடுவதனைத் தடை செய்ய முயன்றார்கள். அதனையும் மீறிப் படம் முழுமையாகத் திரையிடப்பட்டது. ஏற்பாட்டாளர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மலேசியத் தண்டனைச் சட்டங்களின்படி மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படக் கூடிய நிலைமையில் இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து நவம்பர் முதல் வாரத்தில் புதுதில்லியில் இப்படத்தைத் திரையிட வரவிருந்த ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரேவுக்கு இந்திய நுழைவு விசா மறுக்கப்பட்டது. என்றாலும் ஹாலும் மக்ரே இல்லாமலேயே திட்டமிட்டபடி புதுதில்லியில் படம் திரையிடப்பட்டது. ஊர்வசி புட்டாலியா போன்ற பெண்ணிலைவாதிகள் இந்நிகழ்வில் பங்கு பற்றிப் பேசினர்.

“இந்திய அரசியல்வாதிகள் இப்பிரச்சினையை வெறுமனே தமிழர்கள் பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறார்கள். இலங்கை ஒரு நேசநாடு என்னும் வெளி நாட்டுக் கொள்கை அடிப்படையில் இப்பிரச்சினையைப் பார்க்கிறார்கள். தெற்காசியாவில் நடந்த, உலகின் மிகப் பெரிய மானுடக் கொலை ஈழத்தமிழர் பிரச்சினை என்பது இந்தத் திரையிடலில் முன்வைத்து விவாதிக்கப்பட்ட கருத்தாக இருந்தது” என்கிறார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சத்யா சிவராமன்.

இத்தனை சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கும் யுத்தத் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் மூலவடிவம் முழுமையாக 96 நிமிடங்கள் வருகிறது. நவம்பர் 3, 2013 ஆம் நாள் இங்கிலாந்து சேனல் நான்கு தொலைக்காட்சியில் திரையிடப்பட்ட வடிவம் பதினைந்து நிமிட விளம்பரங்களுடன் 58 நிமிடங்கள் வருகிறது. மூலவடி வத்திலிருந்து 43 நிமிடங்கள் வெட்டிக் குறைக்கப்பட்ட தாகவே சேனல் நான்கு வடிவம் இருக்கிறது. மூலவடிவம் நான்கு பவுன்கள் கட்டண அடிப்படையில் இங்கிலாந்தில் வாழ்பவர்களுக்கு மட்டுமென டிஸ்ட்ரிபி சுயாதீன திரைப்பட விநியோகஸ்தர்களின் இணையதளத்தில் பார்வையாளருக்குப் பார்க்கக் கிடைக்கிறது. சேனல்போர் ஆன் டிமான்ட் தொலைக்காட்சி இணையதளத்தில் விளம்பர இடைவேளைகளுடனான 43 நிமிடங்கள் எடிட் செய்யப்பட்ட வடிவம் பார்க்கக் கிடைக்கிறது.

இலங்கையின் கொலைக் களங்கள் (Sri Lanka’s Killing Fields:June 2011) ஆவணப்படத்தின் மூன்றாம் பாகம் என யுத்தத் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தைக் குறிப்பிட வேண்டும். இலங்கை அரசின் மீதான ஆதாரமான மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்கள் ஆவணப்பட வரிசையின் முதல் பாகத்தில் ஆவணப்படுத்தப்பட்டது. முதல் பாகத்தில் சுட்டிக்காட்டப்பட்ட குற்றங்கள் ஐக்கிய நாடுகள் சபையினால் தண்டிக்கப்படாத சூழலில், அதற்கான காரணங்களை சர்வதேசிய அரசியல் நிலைமையில் முன்வைத்து விளக்குவதாக தண்டிக்கப்படாத குற்றங்கள் (Crimes Unpunished: Sri Lanka’s Killing Fields : March 2012) எனும் இரண்டாம் ஆவணப்படம் வெளியானது. இரண்டு ஆவணப்படங்கள் வெளியான நிலையிலும் தம் மீதான குற்றங்கள் குறிப்பானதாக, ஆதாரங்கள் கொண்டதாக இல்லை என இலங்கை அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தது. இதோ குறிப்பான ஆதாரங்கள் என யுத்தத் தவிர்ப்பு வலயம் (No Fire Zone : Sri Lanka’s Killind Fields : March 2013) ஆவணப்படம் வெளியாகியிருக்கிறது.

பிரபாகரனின் புதல்வன் சிறுவன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகளின் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சிக் கலைஞர் இசைப்பிரியா, விடுதலைப் புலிகள் தளபதி கர்னல் ரமேஷ் ஆகியோர் இலங்கை ராணுவத்தினால் உயிருடன் பிடிக்கப்பட்டுச் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்கள் என்பதனைக் காட்சி ஆதாரங் களுடன் இந்த மூன்றாம் பாகம் முன்வைத்திருக்கிறது.

மூலவடிவத்திலிருந்து 43 நிமிடங்கள் வெட்டிக்குறைக்கப் பட்ட சேனல் நான்கு வடிவ ஆவணப்படத்தில் தவறிய விஷயங்கள் என்னென்ன? இரண்டு வடிவங்களுக்கும் அப்படி என்னதான் வித்தியாசம்?

மூலவடிவத்தில் இசைப்பிரியா இலங்கை ராணு வத்தினால் உயிருடன் பிடிக்கப்படும் காட்சிகள் இல்லை. சேனல்நான்கு தொலைக்காட்சி வடிவத்தில் மட்டுமே அக்காட்சி இருக்கிறது. காரணமாக, அக்காட்சிகள் மூல ஆவணப்படம் தயாரிக்கப்பட்ட வேளையில் அவர் களுக்குக் கிடைத்திருக்காமல் இருக்கக் கூடும்; சேனல் நான்கு செய்தி அலைவரிசையில் ஓலிபரப்பப்பட்ட பின்பே அது எடிட் செய்யப்பட்ட வடிவத்தில் சேனல் நான்கு வடிவ ஆவணப்படத்தில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அரசியல் செய்தி சொல்லும் ஆவணப்படம் என்பது அடிப்படையில் வெறுமனே கலைவடிவம் மட்டுமல்ல, அது செயல்பாடு எனும் அளவில் தனது இலக்கில் சமூகதளத்தில் ஆற்றும் எழுச்சியே அதனது முழுமைக்குச் சாட்சியமாக ஆகிறது.

இலங்கையின் கொலைக்களங்கள் மே 18-29 உடன் முடிவு பெற்றுவிடவில்லை. அது வேறு வேறு ரூபங்களில் இன்றும் தொடர்கிறது. இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்பட வரிசையும் இன்னும் வேறு வேறு வடிவங் களில் வந்து கொண்டேதான் இருக்கும்.

மூலவடிவத்தில் இருக்கும், சேனல் நான்கு வடிவத்தில் இல்லாத இன்னும் இரண்டு காட்சித்தாரைகளில் ஒன்று வாணி விஜி தொடர்பான தனிப்பட்ட வாழ்க்கைச் சித்திரம். முன்னைய பாகத்தில் விவாகரத்துப் பெற்ற பெண்ணாக இருந்த வாணி விஜி இப்பாகத்தில் மறுமணம் செய்து கொண்ட பெண்ணாக இருக்கிறார். சொந்த வாழ்வு, குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு என அனைத்திலும் இழப்புகளைச் சந்தித்த ஒரு பெண்ணின் மீள்நினைவுகளாக, தன் அடையாளமும் இருப்பும் தேடிய தாயக யாத்திரையாக யுத்தத் தவிர்ப்பு வலயம் மூல ஆவணப்படம் விரிகிறது. வாணி விஜியின் சொந்தவாழ்வு தொடர்பான விரிவான இக்காட்சிகள் சேனல் நான்கு வடிவத்தில் இல்லை.

இரண்டாவதாக, யுத்தத் தவிர்ப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட நகர்களில் செயல்பட்ட தற்காலிக ஐநா செயலகங்களின்மீதும், உணவு விநியோக மையங்களின்மீதும், செஞ்சிலுவைச் சங்கத்தினால் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனைகளின்மீதும் எவ்வாறு இலங்கை ராணுவம் திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடத்தியது என்பது குறித்த காட்சிகளும், மரண ஓலங்களும் விரிவான காட்சிகளாக மூலப்படத்தில் இருக்கின்றன. இதைப்போலவே, இலங்கை அரசை இந்தக் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்காக விமர்சித்த அன்றைய மருத்துவர்கள் பின்னாளில் இலங்கை அரசின் நிலைபாட்டுக்கு ஏற்ப பேசுபவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்கிற காட்சிகளும் மூலப் படத்தில் விரிவாக இருக்கின்றன.

ஓரு வகையில் யுத்தத் தவிர்ப்பு வலயத் தாக்குதல் காட்சிகளும், மருத்துவர்கள் குறித்த காட்சிகளும் இரண்டாம் பாகமான தண்டிக்கப்படாத குற்றங்கள் ஆவணப்படத்தி லேயே இடம்பெற்றிருந்தன என்றாலும், யுத்தத் தவிர்ப்பு வலயம் மூல ஆவணப்படத்தில் இவை இன்னும் விரிவாகவும் குறிப்பாகவும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த விரிவான காட்சிகளே அதிக அளவில் சேனல் நான்கு தொலைக்காட்சி ஒலிபரப்பு வடிவத்தில் வெட்டிக் குறைக்கப்பட்ட காட்சிகளாக இருக்கின்றன.

43 நிமிடங்கள் எடிட் செய்யப்பட்ட வடிவம் என்பது கச்சிதமாக மூன்று விஷயங்களை மையப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெற இருக்கும் சூழலில், அந்த மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், இளவரசர் சார்லஸ் போன்றோர் கலந்து கொள்ள இருக்கும் சூழலில், பொதுநலவாய நாடுகளின் அடுத்த தலைமைப் பதவி இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஏற்க இருக்கும் சூழலில், முள்ளிவாய்க்கால் வரையிலுமான இலங்கை நிலைமைகளை விளக்கி, இந்த நபர் ஒரு போர்க்குற்றவாளி, இந்த நபரின் கைகளை இவர்கள் குலுக்கப் போகிறார்கள் என்பதை முதன்மையான பிரச்சினையாக ஆவணப்படம் முன்வைக்கிறது.

இரண்டாவதாக, யுத்தத் தவிர்ப்பு வலயத்தில் இலங்கை ராணுவம் குண்டுத் தாக்குதல் நடத்தி எழுபதி னாயிரம் வெகுமக்களைக் கொன்றமை போர்க்குற்றம் என்பதனைக் காட்சிப்படுத்தலின் மூலம் ஆவணப்படம் முன்வைக்கிறது. மூன்றாவதாக, சரணடைந்தவர்களையும், கைது செய்தவர்களையும் திட்டமிட்டுச் சித்திரவதை செய்து படுகொலை செய்தமை யுத்தக்குற்றம் என்பதனை ஆவணப்படம் பதிவு செய்கிறது.

இலங்கை அரசுக்கு விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. தமிழ் மக்களுடனான யுத்தம் தொடர்கிறது என்கிறது ஆவணப்படம். சிங்களக் கலாச்சாரக் காலனியாக ஆக்கப்படும் வடகிழக்குப் பிரதேச மக்கள், பௌத்தக் கடும்போக்காளர்களின் தாக்குதலுக்கு ஆளாகும் முஸ்லிம் மக்கள் என சிங்கள இனவாதம் தீவு முழுக்க எரிந்து கொண்டிருக்கிறது என்கிறது ஆவணப்படம். சிங்கள ராணுவ அணுவகுப்பை ஏற்கும் மகிந்த ராஜபக்சேவை அதிகாரபூர்வமாக வணங்கி மரியாதை செலுத்துகிறார் தமையனும் பாதுகாப்பு அமைச்சருமான கோத்தபாய ராஜபக்சே. யுத்தக் குற்றவாளியான சவேந்திரா சில்வா ஐநா சபையில் பதவி பெறுகிறார். இலங்கை முப்படைகள் யுத்தப் பிரதே சங்களில் சுற்றுலாப் பயணங்களை நிகழ்த்துகிறது.

இறுதியாக, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும் இளவரசர் சார்லசும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்று போர்க்குற்றவாளியின் கைபிடித்துக் குலுக்க, இலங்கை விஜயம் மேற்கொள்ளப் போகிறார்கள் என முடிகிறது ஆவணப்படம்.

***

இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்பட வரிசையில் முதலிரண்டு படங்களும் வெளியான நிலையில், இந்த மூன்றாவது ஆவணப்படத்தில் வரலாற்றுத் தொடர்ச்சியின் பொருட்டுத் திரும்பவும் கூறுதல் எனும் அடிப்படையில்தான் முள்ளிவாய்க்கால் பேரழிவு வரையிலான இலங்கை அரசின் இனவெறி அரசியல் விவரிக்கப்படுகிறது. அதனோடு யுத்தத் தவிர்ப்பு வலயத்தில் நடந்த இலங்கை ராணுவத்தின் திட்டமிட்ட தாக்குதலும் படுகொலைகளும் விவரிக்கப்படுகிறது. இதனது தொடர்ச்சியாகவே இலங்கைப் போரின் இறுதி நாட்களில் ஐக்கிய நாடுகள் சபை வெகு மக்களின் மரணங்களைத் தவிர்க்கும் முகமாகப் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டும் ஆவணப்படத்தில் வைக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவு துவங்கிக் கடந்த நான்கு ஆண்டுகளின் நடப்புகளைத் தொடர்ந்து அவதானித்து வருகிற எவரும் அறிந்திருக்கக் கூடிய செய்திகளே இவையனைத்தும். எனில், இந்த ஆவணப்படம் புதிதாகவும், மேலதிகமாகவும், குறிப்பாகவும் எதனை முன்வைத்திருக்கிறது?

மிகக் குறிப்பாக மூன்று யுத்தக் குற்ற ஆதாரங்களை இந்த ஆவணப்படம் முன்வைத்திருக்கிறது.

பாலச்சந்திரன், இசைப்பிரியா, ரமேஷ் மூவரும் குண்டுதுளைக்கக் கொல்லப்பட்ட படங்களே முன்னர் கிடைக்கப்பெற்றிருந்தது. அவர்கள் உயிருடன் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த ஆதாரங்கள் எதுவும் முன்பாகக் கிடைத்தி ருக்கவில்லை. ரமேஷைப் பொறுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் ஒளிப்பட ஆதாரங்களும் படுகொலை செய்யப்பட்ட புகைப்பட ஆதாரங்களும் முன்பு கிடைத்திருந்தன. அவர் விசாரணை செய்யப் பட்டமை, சுட்டுக் கொல்லப்பட்டமை, அவரது உடல் தகனம் செய்யப்படுவதற்காக அவரது உடலைச் சுற்றிலும் மரக்கட்டைகள் அடுக்கப்பட்டமை, எரியூட்டப்பட்டு எரிந்து முடிந்தமை, எரியூட்டப்பட்ட இடத்தில் ஒரு இலங்கை ராணுவத்தினன் நிற்பவை போன்றவை என முழுமையான ஒரு சித்திரம், இரண்டாவது ஆவணப்பட மான தண்டிக்கப்படாத குற்றங்கள் வெளியானதன் பின்னரே கோர்டன் வைசினால் கொலம்போ இன்போ இணையதளத்தில் ஒரு கட்டுரையாக எழுதப்பட்டது. அதன் முழுமையான காட்சிவடிவம் போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தில்தான் இடம்பெற்றிருக்கிறது.

பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் மிக அருகிலிருந்து அவர் பார்த்துக் கொண்டிருக்கவே சுட்டுக் கொல்லப்பட்டதான, அவரது வெற்றுடம்பில் துப்பாக்கி ரவைகள் துளைத்ததான புகைப்பட பிம்பங்களும், இசைப்பிரியா மேலாடையற்ற நிலையில் வல்லுறவுக் குட்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட பிம்பங்களும் இரண்டாவது ஆவணப்படத்திலேயே இடம்பெற்றிருந்தது. பாலச்சந்திரன் மரணம் குறித்து எதுவுமே சொல்லியிராத இலங்கை அரசு, இசைப்பிரியா விடுதலைப்புலிகள் உறுப்பினர் எனவும் அவர் ஆயுத மோதலிலேயே கொல்லப்பட்டதாகவும் அறிவித்தது.

இந்த மூன்றாவது படம் இலங்கை அரசு பொய்யர்க ளின் கூடாரம் என்பதனைக் காட்சி ஆதாரங்களுடன் மெய்ப்பித்திருக்கிறது.

எதிரி இனத்தின் குழந்தைகளைக் கொல்வது என்பதனையும் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்துவது என்பதனையும் ஒரு திட்டமாகவே இலங்கை அரசு முன்னெடுத்திருக்கிறது என்பதனையே இந்த ஆவணப்படம் முன்வைத்திருக்கிறது. சிறுவன் பாலச்சந்தி ரன் உயிருடன் பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப் பட்டிருக்கிறார். இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு வல்லுறவின் பின் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். பெண்போராளிகள் கூட்டமாகப் படுகொலை செய்யப்படும் காட்சியொன்றில் ஒரு இலங்கை ராணு வத்தினன் அதிலொரு உடலைப் பார்த்து இதனோடு மறுபடியும் உறவுகொள்ள வேண்டும் போல இருக்கிறது என்கிறான். வாகனமொன்றில் தொகையாக ஏற்றிச் செல்லப்படும் தமிழ் இளம் பெண்களுக்கு என்ன நேர்ந் தது என்பது தெரியாது என்கிறது ஆவணப்படம்.

சரணடைந்தவர்களைக் கொல்வது, வல்லுறவு புரிவது, குழந்தைகளைக் கொல்வது போன்றன ஐநா மனித உரிமைச் சாசனத்தின்படி போர்க்குற்றங்கள் என்கிறது ஆவணப்படம். ‘‘இதோ ஆதாரம்! எங்கே விசாரணை” என சர்வதேசத்தின் மனசாட்சியின் முன்பு இதுவரையிலும் பதிலற்ற கேள்விகளைக் காட்சி ஆதாரங்களுடன் ஆணித்தரமாக முன்வைக்கிறது ஆவணப்படம். இதுவே இந்த யுத்தத் தவிர்ப்பு வலயம் எனும் ஆவணப்படத்தின் முக்கியத்துவம்.

***

யுத்தத் தவிர்ப்பு வலயம் ஆவணப்படம் வெளியானதையொட்டி இதனைச் சுற்றி பல்வேறு விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இதுவரை வெளியான மூன்று பாகங்களிலான இலங்கைக் கொலைக்களங்கள் ஆவணப்படங்களில் முன்வைக்கப் பட்ட இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், பாலியல் வல்லுறவுகள், போர்க் குற்றங்கள் குறித்து, விடுதலைப்புலிகளை விமர்சித்துவரும் இலங்கையின் இடதுசாரிகள், தலித்தியர்கள், பெண்ணிலைவாதிகள், கடும்போக்கு இஸ்லாமியவாதிகள், ஜனநாயகவாதிகள் போன்றவர்கள் கனத்த மௌனத்தைக் கொண்டி ருக்கிறார்கள் என்பதனை இங்கு ஞாபகம் கொள்வோம். இவர்கள் நடத்துகிற இலக்கியச் சந்திப்புகள், பெண்நிலை வாத அரங்குகள், தலித்திய விவாத அரங்குகள் போன்றவற்றில் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள், வல்லுறவுகள், மனித உரிமை மீறல்கள் போன்றவை குறித்த கருத்துக்கள் எதுவுமே பேசப்படுவதில்லை. ஆனால், இவர்களது குறிப்பிட்ட எல்லா அமர்வுகளிலும் விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களும், படுகொலைகளும், போர்க் குற்றங்களும், சிறுவர் போராளிகள் குறித்த பிரச்சினைகளும், சக இயக்கப் படுகொலைகளும் குறித்து திரும்பத் திரும்பப் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஓரு கருத்து விவாதம் எனும் அளவிலேயே கூட இவர்கள் தமது முன்னைய நிலைபாட்டுக்கு நேர்மையாக இருக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் சாசனத்தின் துணைகொண்டும். சர்வதேசிய மன்னிப்புச் சபையின் துணை கொண்டும் இவர்கள் முன்பு விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களும், படுகொலைகளும், சிறுவர் போராளிகளும் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பு இவர்களின் இதே கருத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்த ஐநா சபையும், சர்வதேச மன்னிப்புச் சபையும் பிறிதொரு தரப்பையும் மனித உரிமை மீறல், போர்க்குற்றம், படுகொலைகள், அதனோடு பிரதானமாகக் குழந்தைக் கொலை, வல்லுறவு போன்றவற்றுக்காகச் சேர்த்துச் சொன்னது, அந்தத் தரப்பு இலங்கை அரசு மற்றும் இலங்கை ராணுவம். இலங்கையில் நடந்த எண்பது சதவீதமான படுகொலை களுக்கு இலங்கை அரசே காரணம் என ஐநா சபையின் இலங்கைச் செயல்பாட்டாளர்கள் சொல்கிறார்கள். குழந்தைக் கொலை, வல்லுறவு, போர்க்குற்றம் போன்றவற்றைப் பாரிய அளவில் நிகழ்த்தியது, அதுவும் திட்டமிட்ட வகையில் நிகழ்த்தியது இலங்கை அரசு மற்றும் இலங்கை ராணுவம் என புகைப்படம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு எனக் காட்சி ஆதாரங்களுடன் அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள், இலங்கை அரசு என இருவரையும் விமர்சிக்கும் இவர்கள் கூடுதலான படுகொலைகளை, வல்லுறவுகளை, போர்க் குற்றங்களை நிகழ்த்தியது இலங்கை அரசு மற்றும் இலங்கை ராணுவம் என்கிறார்கள். இப்போது விடுதலைப்புலிகளை மட்டும் விமர்சிக்கும் இடதுசாரிகளும், தலித்தியர்களும், பெண்ணிலைவாதிகளும், கடும்போக்கு இஸ்லாமியர்களும் ஒன்று அடர்ந்த மௌ னத்தைப் பதிலாக வைத்திருக்கிறார்கள் அல்லது மனித உரிமைப் பிரச்சினை என்பதே ஏகாதிபத்திய, மேற்கத்திய, முதலாளியச் சதி என்று தத்துவம் பேசக் கிளம்பி விடுகிறார்கள்.

விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, ஒரு ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட உலகின் அனைத்து விடுதலை இயக்கங்களும் விமர்சனத்துக்கு உரியவைதான். எந்த மக்களுக்காகப் போராடுவதாக ஒரு இயக்கம் சொன்னதோ அந்த மக்களின்பால் அந்த விடுதலை இயக்கம் என்ன பார்வை கொண்டிருக்க வேண்டும் எனும் அறத்தோடு தொடர்புடையது இப்பிரச்சினை. விமர்சகர்கள், குழந்தைகள், பெண்கள், புரட்சிகர ஸ்தாபன வடிவம், தலைமை, நேசசக்திகள், அரசியல் புரிதல்கள், கலைஞர்கள், படுகொலைகள் என விடுதலைப்புலிகள் மிகப்பெரும் வரலாற்றுத் தவறுகளை இழைத்திருக்கிறார்கள். இது குறித்த விமர்சனம் என்பது அடுத்து உருவாகப் போகும் அல்லது விமர்சகர்கள் உருவாக்கப் போகும் அரசியல் அமைப்புக்கான உரமாக அமைய வேண்டுமேயொழிய, இலங்கை அரசின் ஒடுக்குமுறையைப் போஷித்து வளர்க்கிற உரமாக ஆகமுடியாது. வாய்ப்புக் கேடாக, விடுதலைப்புலிகள், அமைப்பு மற்றும் அரசியல் வடிவில் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் இலங்கை அரசு குறித்து மௌனம் காப்பதும், விடுதலைப் புலிகளை மட்டுமே விமர்சித்துக் கொண்டிருப்பதும் அரசியல் தூரதரிசனமாக அல்ல, அழிவு அரசியலாகவே இருக்க முடியும்.

கடும்போக்கு இஸ்லாமியர்கள் இசைப்பிரியா தொடர் பான சேனல்நான்கு விவாதங்கள் முன்னெடுக்கப் பட்டபோது, தம்மீது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட யாழ் வெளியேற்றம் மற்றும் காத்தான்குடி படுகொலைகள் பற்றிப் பிரஸ்தாபித்து இசைப்பிரியா குறித்த பிரச்சினையையே மறுதலிக்கும் எல்லைக்கும் சென்றார்கள். இதே மனநிலை விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட இயக்கங்கள் சார்ந்தவர்கள் பலரதும் அடிமனப் பிரக்ஞையாக இருக்கிறது. இவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளின் நியாயத்தை இனிவரும் தமிழ் மக்களின் விமோசன அரசியலை அவாவும் எவரும் ஒப்ப வேண்டும். அதே வேளை இவர்கள் இலங்கை அரசு தொடர்பாகக் கடைப்பிடிக்கும் மௌனம் பாசிச அரசு வடிவமொன்றுக்கு இவர்கள் தரும் ஒப்புதல் என்பதனையும் இவர்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

அரச வன்முறைக்கும், அரச வன்முறைக்கு எதிராகப் போராடப் புறப்பட்ட போராளி அமைப்புகள் அல்லது எதிர்ப்பியக்கங்கள் செலுத்தும் வன்முறைக்கும் இடையிலான வித்தியாசங்களை விடுதலை அரசியல் பேசுகிறவர்கள் கவனம் கொள்ள வேண்டும். போராளி அமைப்புகள் விட்ட பிழைகள், பயங்கரவாதச் செயல்பாடுகள் போன்றவற்றை விமர்சிக்கும்போது எவரும் இனிவரும் எதிர்ப்பு அமைப்பு எந்தச் செயல்பாடுகளை அவர்கள் விட்டொழிக்க வேண்டும் என்பதாகவே இருந்து வந்திருக்கிறது. இன்னும் போராளி அமைப்புக்குள் நிலவிய ஒடுக்குமுறை அரசு மற்றும் சமூக அமைப்பு உருவாக்கி வைத்த மரபுகளையும், அறங்களையும், நியமங்களையும் அது மீறித்தான் தோற்றம் பெறுகிறது. சர்வதேசிய அல்லது தேசிய நியமங்கள் செயல்படுத்துவேன் எனும் ஒப்பந்தத்தை இவர்கள் எந்த தேசிய, சர்வதேசிய நிறுவனத்துடனும் செய்துகொள்வதில்லை. காலப்போக்கில் போராட்டத்தின் குறைந்தபட்ச நியாயத்தினை தேசிய, சர்வதேசிய அரசுகள் ஒப்பும்போதுதான் அது பேச்சுவார்த்தைகளுக்கும் ஒப்பந்தங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுகிறது.

ஒரு அரசு அப்படிப்பட்டது அல்ல. அது தனது குடிமக்களைப் பாதுகாப்பது, அவர்களுக்கு அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்துவது, அவர்களின் உயிர் களை மதிப்பது எனும் அடிப்படையில் ஐநா உள்பட பல சர்வதேசிய அமைப்புக்களின் சாசனங்களை ஒப்பிக் கையெழுத்திடுகிறது. சர்வதேசிய, தேசிய சட்டங்களுக்கும் ஒப்பந்தங்களுக்கும் இயைபாகச் செயல்படுவதாக உறுதி எடுத்துக் கொள்கிறது. இதனை ஒரு அரசு செயல்படுத்தாதபோது, தனது குடிமக்களின் உயிரைப் பறிக்கிறபோது, குடிமக்களைக் காணாமல் போகச் செய்கிறபோது, உரிமைகளைப் பறிக்கிறபோது அதனைக் கேட்பதற்காகவே போராளி அமைப்புகள் தோற்றம் பெறுகின்றன. ஈழத்தின் எல்லாப் போராளி அமைப்பு களும் இந்த நிலைமையில்தான் ஆயுதப் போராட்டமே வழி என அந்தப் பாதையைத் தேர்ந்தன. எனில், கடந்த முப்பது ஆண்டுகளில் இலங்கை அரசின் ஒடுக்குமுறைக்கும், இன்றைய அரசின் ஒடுக்குமுறைகளுக்கும் என்ன வித்தியாசம்? ராணுவம், காவல்துறை அதிகாரம், நிறைவேற்று அதிகாரம், காணி அதிகாரம் எல்லாமும் பெரும்பான்மை சிங்கள இனத்தவரின் கையில் எனில், அதனை அவர்கள் பிற சிறுபான்மை இனங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை எனில் அது சிங்கள பௌத்த பாசிச அரசு அல்லாது வேறு என்ன வகையிலான அரசு? அரை நூற்றாண்டுகளாக அனைத்து வன்முறை யினதும் ஆதாரமாக இருக்கிற இலங்கை அரசை முதன்மைப்படுத்திப் பார்க்காமல், அதன் விளைவாக எழுந்த எதிர் வன்முறையையும் அதில் நேர்ந்த பிழை களையும் மீறல்களையும் திருகல்களையும் திரிபுகளையும் மட்டுமே முதன்மைப்படுத்திப் பேசிக் கொண்டிருப்பது என்னவிதமான விடுதலை அரசியலாக இருக்க முடியும்?

இலங்கை அரசு வடிவம் என்பதும், அவர்களது சிவில் சமூகம் என்பதும், ஆயுதப் படை நிறுவனமும் சிங்கள பௌத்த இனவாத விஷம் ஏறிய நிலையில் அரைநூற்றாண்டாக இருந்தது; அந்த நிலையே இன்னும் இருக்கிறது. அது பள்ளிவாசல்களை உடைக்கிறது. கோயில்களை இடிக்கிறது. புத்த விகாரைகளை புதிது புதிதாக தீவெங்கிலும் எழுப்புகிறது. தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இனத்தவருடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள அது விரும்பவில்லை. தனது அதிகாரத்தின் கீழ் இருந்தால் இரு; அல்லவெனில் அழிப்போம் என வன்முறை கொண்டு, ஆயுதப் படைகொண்டு அச்சுறுத்து கிறது அது. படுகொலை அரசியலின் ஆயுதமுனை அரசியலின் ஊற்று மூலாதாரம் அதுதான். அது அவ்வாறு இல்லை என இஸ்லாமியக் கடும்போக்காளர் களாலும் சொல்ல முடியாது. வேறுபட்ட அரசியல் கருத்துக் கொண்ட தமிழர்களாலும் சொல்ல முடியாது. விளைவாகத்தான் இலங்கை அரசுடன் இணக்க அரசியல் செய்கிற அமைச்சர் கூட இசைப்பிரியாவின் படுகொலை குறித்து சுயாதீன விசாரணை வேண்டும் எனக் கோர வேண்டியிருக்கிறது. விடுதலைப் புலிகளை வாழ்நாளெல்லாம் எதிர்த்து வந்த அவரை அவ்வாறு பேசுமாறு சூழல் நிர்ப்பந்திக்கிறது. இதுதான் இன்றைய இலங்கையின் அரசியல் யதார்த்தம்.

விடுதலைப்புலிகளையும் சரி, விடுதலைப்புலிகள் அல்லாத இயக்கத்தவர்களையும் சரி இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்த முப்பதாண்டுகளுக்கு முன்பான யதார்த்தமும் இதுதான். அது இன்னும் மாறவில்லை. ஆயுதப் படைகளின் வலிமை போலவே அதனது கருத்தியலும் மும்மடங்கு அதிகமாக இறுகிப் போயிருக்கிறது. இச்சூழலில், கடந்த காலம் குறித்த விமர்சனம் என்பது எதிர்காலத்திற்கான ஒடுக்கப்பட்ட சக்திகளின் ஒற்றுமை நோக்கியதாக இருக்க வேண்டுமேயல்லாது, ஒடுக்குமுறையாளர்களின் சப்பாத்துக் கால்களை வலிமைப்பட வைப்பதாக இருக்கமுடியாது.

***

யுத்தத் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தைப் பார்க்கிறபோது இலங்கை அரசும், இலங்கை ராணுவமும், அதனது அத்தனைக் கொடூரங்களை யும் போர்க்குற்றங்களையும் காத்து நிற்கும் அதனது அறிவுஜீவிகளும் பாவிக்கும் வார்த்தைகளும் சொற்களும் மிகுந்த மனக் கொந்தளிப்பை உருவாக்கியவாறு இருந்தது. எனக்கு பாலஸ்தீன இயக்கத்தின் அதிகாரபூர்வப் பேச்சாளரும் கவிஞருமான ஹனன் அஸ்ராவியின் இன்டிபாதா கிளர்ச்சி பற்றிய கட்டுரையொன்றின் மேற்கோள் ஒன்று ஞாபகம் வந்தபடியே இருந்தது.

“ எட்வர்ட் ஸைத் சொல்கிறபடி எமது சரிதைகளையும் எமது உரிமைகளையும், நேரடியாகவும், தெளிவாகவும், சொல்வதற்கான எமது உரிமை மறுக்கப்படுகிறது. பாலஸ்தீனியர்கள் எவ்வாறு புரிந்து கொள்ளப்பட வேண்டும். அவர்கள் சார்ந்த பிரச்சினைகளை எவ்வாறு நோக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானிப்பதற்கான எங்கள் உரிமையை, எங்கள் வார்த்தைகளை, எங்கள் வாக்கியங்களை, எங்கள் மொழியைக் கட்டுப்படுத்த, தத்தெடுத்துக் கொள்ள, ஆதிக்கம் செய்ய, எம்மீது சுமத்த இனி நாங்கள் இஸ்ரேலியர்களை அனுமதிக்க மாட்டோம். எம் உரிமையை எம் சொற்களில் எம் மொழியில் எம் கருத்தாக்கங்களில் நாம் சொல்வோம். பாலஸ்தீனியர்களை உலக தரிசனத்தில் இருந்து விலத்திவைக்க கிளிப்பிள்ளை மாதிரி செய்த பிரச்சாரங்களை, சுமத்தல்களை இனி எம்மீது சுமத்த நாங்கள் விடமாட்டோம். விவாதத்துக்கான பொருளடக்கத்தை உருவாக்குவதில் உள்ளார்ந்து பிரக்ஞையற்ற நிலைமையினூடே தனது நலன்களை இஸ்ரேல் திணிக்கிறது. உண்மையாகப் பேசவேண்டுமானால் இஸ்ரேலின் பாதுகாப்பு அல்ல என் அக்கறை, எனது மக்களின் நலன்தான் என் அக்கறை. இஸ்ரேல் கையாளும் மொழி பொய்யானது, போலியானது. இந்த மொழியை பாலஸ்தீனியர்கள் கையாள முடியாது.. ஒப்புக்கொள்ள முடியாது.“

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் ஈழத் தமிழ் மக்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘இன அழிப்புப் போரை‘ பவித்திரமான சொற்களில் ‘மனிதாபிமான யுத்தம், மனித மீட்பு நடவடிக்கை, பிணைக் கைதிகள்; மீட்பு’ எனத் தேனொழுக மகுடமிடுகிறார். ‘திட்ட மிடப்பட்டு குறுகிய நிலப்பரப்புகளில் கட்டம் கட்டிப் படுகொலை செய்யத் தேர்ந்தெடுத்த பிரதேசங்களை யுத்தத் தவிர்ப்பு வலயம்’ எனப் பெயரிடுகிறார்கள் இலங்கை ராணுவ அதிகாரிகள். சர்வதேசியப் போர் நியதிகளின்படி ‘சரணடைந்த யுத்தக்கைதிகளை, குழந்தைகளை பெண்களைப் படுகொலை’ செய்துவிட்டு ‘அவர்கள் விடுதலைப் புலிப்பயங்கரவாதிகள்’ என்று குதூகலம் தொனிக்கச் சொல்கிறார்கள்.

இவர்களது சொற்ஜாலத்துக்கான மிகப்பொறுத்தமான எதிர்வினையாக யுத்தத் தவிர்ப்பு வலயம் ஆவணப் படத்தின் இயக்குனர் ஹாலும் மக்ரேவின் வார்த்தைகள் இருக்கின்றன :

“இந்த ஆதாரங்கள் வழி முன்னெப்போதையும் செய்திராத வகையில் போரில் நாளுக்கு நாள் நடந்த கொடூரங்களைத் துல்லியமாக எங்களால் ஆவணப்படுத்த முடிந்திருக்கிறது. இந்த ஆதாரங்கள் பாதிக்கப்பட்ட வர்களாலும் பாதிப்புக்களை நிகழ்த்தியவர்களாலும் கைத்தொலைபேசிகளிலும் சிறிய கையடக்கக் கேமராக்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வெகுமக்களால் வெட்டப்பட்ட சிதைந்த பதுங்குகுழிகளில் இருந்து, தற்காலிகத் தகரக்கூரைகளின்கீழ் இயங்கிய மருத்துவமனைகளில் இருந்து, போர்க்களத்தின் கொடூரங்களை போர்க்களத்தின் உள்ளிருந்து உக்கிரமான வகையில் இந்த ஆதாரங்கள் பதிவு செய்திருக்கின்றன. இந்த ஆதாரங்கள், யுத்தக்குற்றங்கள், விசாரணையற்ற படுகொலைகள், சித்திரவதை, பாலியல் வன்முறை போன்றவற்றுக்கான நேரடியிலான சாட்சியங்களாக இருக்கின்றன.“

rajrosa@gmail.com



http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=6429

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.