Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்முக்குட்டியின் முகப்புத்தகம்:- சோபாசக்தி:-

Featured Replies

21 ஜனவரி 2014

 

Ammu_CI.jpg

 அண்மையில் அகால மரணமடைந்த  யாழ்ப்பல்கலைக்கழக மாணவியான வித்தியா(அம்முக்குட்டி) அவர்களின் நினைவாக எழுத்தாளர் சோபாசக்தி எழுதிய குறிப்பிது.


இளம் வயதில் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிற படைப்பாளிகளின் உணர்வுகளின் போராட்டமும் மரணத்தை நோக்கிய அவர்களின் நகர்வுக்கான காரணங்களும் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.


ஓவியர் பாடகர் கவிஞர் எனப்பலபரிமாணங்களைக் கொண்ட வித்தியாவின் மரணம் சிவரமணியின் மரணத்தை நினைவூட்டுகிறது.


சமூக உளவியல் பற்றியும் தனிமனித உளவியல் பற்றியும் மன வடுக்கள் பற்றியும்  ஆழமான அறிவும் பிரக்ஞையும் வளர்த்தெடுக்கப்படும் போது இத்தகைய  இளவயது மரணங்களை குறிப்பாக மனிதர்களின் தற்கொலை முனைப்புணர்வுகளைப் (Suicidal ideation) பற்றிப் புரிந்து கொள்வது சாத்தியமாகலாம்.

ஆர்

அம்முக்குட்டி என்ற வித்யாவிடமிருந்து  இரு வருடங்களிற்கு முன்பு எனக்கு முகநூல் நட்பு அழைப்பு வந்தபோது, அம்முக்குட்டியின்  முகநூல் பக்கத்தில் கவிஞர், ஓவியர், ஃபோட்டோகிராபர், பாடகர் எனச் சுய விபரங்கள் இருந்தன. அம்முக்குட்டி யாழ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பிரிவு மாணவி என்ற குறிப்புமிருந்தது. நான் அம்முக்குட்டியின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். சில மாதங்களிற்குப் பின்பு ‘அல்லையூர் இணையத்தளம்’ சிவாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, நண்பன் ரத்தினம் குறித்த பேச்சுவந்தது. ரத்தினத்தின் மகளே அம்முக்குட்டி எனத் தெரியவந்தது.

 

இறந்தவர்களின் முகநூல் பக்கங்கள்

அஞ்சலிகளால் நிரம்புகின்றன

துயரம்

நண்பர்களைக் கீறி

ஞாபகரத்தம் ஒரு கவிதையென

வழிகிறது

புகைப்படங்களை

மறுபடி மறுபடி பார்த்துக்கொண்டும்

வார்த்தைகளை

மறுபடி மறுபடி கிளறிக்கொண்டும்

நாட்களோடும்.

பின்னொரு நாள்

வசிப்பிடங்களுக்கப்பால் தனிமையில்

ஒரு நெகிழிக் காகிதம் போல

துடித்துக்கொண்டிருக்கும் இறந்தவனின் முகநூல் பக்கம்.

- மேகவண்ணன்

ரத்தினம் என்னிலும் நான்கு வயதுகள் மூத்தவன். கிராமத்தில் எங்களுடைய குடிசை வீடுகள் அருகருகாக இருந்தன. ரத்தினத்திற்கும் எனக்கும் எப்போது நட்புத் தொடங்கியது எனக் காலத்தைக் குறித்துச் சொல்ல இயலவில்லை. பிறந்ததிலிருந்தே நட்பு என்றுதான் சொல்ல வேண்டும். ரத்தினத்தை ஒருநாள் பார்க்காவிட்டாலும் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.

ரத்தினம் படிப்பில் மகா கெட்டிக்காரன். திறமையான விளையாட்டுவீரன். சினிமா, நாடகம் என்றால் அவனுக்குக் கிறுக்கு. சினிமாப் பாடல்களை அருமையாகப் பாடுவான். வேட்டைக்காரன். நீச்சல்காரன். கிராமத்திற்குள் ஏதாவது பிரச்சினையென்றால் கம்பும் கையுமாக முன்னுக்கு நிற்பான். இதுபோதாதா அவனைச் சிநேகிக்க.

எங்களது பதின்ம வயதுகளில் வட்டார ‘நட்டாமுட்டிகள்’ குழுவிற்கு ரத்தினம்தான் தலைவன். சுவர்களில் தமிழீழ முழக்கங்களை எழுதுவது, கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தை வரைவது, பாடசாலைப் பகிஸ்கரிப்புப் போராட்ட நாட்களில் காலையிலேயே கல்லும் கையுமாக நிற்பது, சுயதயாரிப்பில் வெடிகுண்டுகளைச் செய்து நிடுநிசியில் வெடிக்க வைத்துச் சனங்களைக் குழப்பிவிடுவது என்பவற்றோடு அந்த வயதுக்குரிய எல்லாக் குழப்படிகளையும் செய்துகொண்டு இருபத்துநான்கு மணிநேரமும் நாங்கள் பிஸியாக இருந்த காலமது. 1983 யூலை வன்செயல்கள் நிகழாதுவிட்டிருந்தால்  ரத்தினம் ஒரு முக்கியமான அரசு அதிகாரியாக வந்திருக்கலாம். நான் இந்தியா போய் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குனராக முயற்சித்திருப்பேன். இவை எங்களது இளவயதுத் திட்டங்கள்.

1983 யூலை வன்செயல்கள் சிறுவர்களான எங்களை ஒரேநாளில் வளர்ந்தவர்களாக்கிவிட்டன. சிறுவயதுக் குழப்படிகள் காணமாற்போய் இரகசியங்களும் இலட்சியங்களும் உள்ள மனிதர்களாக மாறிவிட்டோம். எனக்குப் புலிகள் இயக்கத்தோடு தொடர்பு கிடைத்து. ரத்தினத்துக்கு தமிழீழ மக்கள்  விடுதலைக் கழகத்தோடு தொடர்பு. ஆனால் ஒருவருக்கு மற்றவருடைய தொடர்பு தெரியாது. எனக்கு ரத்தினத்தையும் புலிகளோடு இணைக்க உள்ளுக்குள் விருப்பமிருந்தது. அவனுக்கும் என்னைக் கழகத்தோடு இணைக்க விருப்பமிருந்ததாகப் பிறகொருநாள் சொன்னான். ரத்தினத்தோடு இது குறித்துப் பேசுவதற்குத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென  ஒருநாள் அவன் காணாமற்போனான்.

இரண்டு வருடங்களிற்குப் பின்புதான் நாங்கள் திரும்பவும் சந்தித்தோம். ஒன்றுக்கொன்று வரலாற்றுப் பகைகொண்ட இரண்டு முரட்டு இயக்கங்களின் போராளிகளாக இடுப்புகளில் மறைக்கப்பட்டிருந்த ஆயுதங்களோடு சந்தித்துக் கொண்டோம். இருவருமே இயக்கங்களிலிருந்து வெளியேறும் காலமும் வந்தது. மறுபடியும் சாரைப்பாம்புகள் போல ஒருவரையொருவர் பின்னிக்கொண்டோம். ரத்தினத்திற்கு அரசியல் ஈடுபாடு இல்லாமலேயே போய்விட்டது.  அவன் காதலித்துத் திருமணம் செய்துகொண்டான். ஒரு பெண்குழந்தையும் பிறந்தது. இந்திய அமைதிப் படைக் காலத்தில் நான் நாட்டைவிட்டு வெளியேறியதன் பின்பாக, 1990ல் அம்முக்குட்டி பிறந்தாள். வெளிநாடு வந்ததன் பின்பாக ரத்தினத்துக்கு ஒரு கடிதம் போட்டேன். அவனிடமிருந்து பதில் வரவில்லை. யுத்தத்தால் அவன் குடும்பத்தோடு ஊர் ஊராக ஓடிக்கொண்டிருந்தான். எனது கடிதம் அவனுக்குக் கிடைத்திருக்காது என நினைத்துக்கொண்டேன். பின்பு ரத்தினத்திற்கு எங்களது கிராமத்தின் ‘கிராம சேவையாளர்’ வேலை கிடைத்தது. ஊரிலிருந்து பிரான்ஸ் வருபவர்களிடம் அவ்வப்போது அவன் குறித்து விசாரித்துக்கொள்வேன்.

ரத்தினத்தின் இரண்டாவது மகள்தான் அம்முக்குட்டி என நான் அறிந்ததும் நான் அவளுக்கு முகப்புத்தகத்தில் ஒரு ‘மெசேஜ்’ அனுப்பினேன். அதற்கு உடனடியாக அவள் பதில் அனுப்பினாள்.

அம்முக்குட்டியுடன் நான் பரிமாறிக்கொண்ட மெசேஜ்களை இன்று வரிவரியாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். எங்களது உரையாடல்களை இங்கே இறக்கி வைத்துவிட மனது அடித்துக்கொள்கிறது. 20ம் தேதி டிசம்பர் 2012ல் நான் அவளுக்கு முதல் ‘மெசேஜ்’ அனுப்பினேன்.

***

நான்: மகள்! நான் ஷோபாசக்தி என்ற அன்ரனி. உங்கள் அப்பாவின் பால்ய கால சிநேகிதன். நீங்கள் பல்கலைக்கழகத்தில் கற்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் அப்பா அந்தக் காலத்தில் அல்லைப்பிட்டிக்குள்ளேயே படிப்பில் பெரிய கெட்டிக்காரன். நீங்களும் அப்படித்தான் இருப்பீர்கள். அப்பாவையும் அம்மாவையும் அக்காவையும் (அவர் பெயர் சிந்து என ஞாபகம்) கேட்டதாகச் சொல்லுங்கள்.

அம்மு: என்னால் நம்ப முடியவில்லை…. நன்றி நன்றி… அப்பா தங்களை பற்றி நிறைய சொல்லி இருக்கிறேர். தங்களை தொடர்புகொள்ள முடியவில்லை. மிக்க மகிழ்ச்சி… தாங்கள் நலமா? நாங்கள் இங்கு நலமாக இருக்கிறோம். அம்மா தான் அடிக்கடி தங்களை பற்றி கூறிக்கொண்டே இருப்பார்..சிந்து அக்கா வாய் பேச முடியாதவர். இப்போது 25 வயது.

நான்: நான் ஊர் திரும்பும் காலம் விரைவில் வரட்டும். எல்லோரும் நேரில் சந்திப்போம்.

***

நான்: உங்களது ஓவியங்களை எல்லாம் ரசித்தேன். வாழ்த்துகள். அந்தக் காலத்தில் உங்கள் அப்பா வீடியோ படம் ஓட விளம்பர சுவரொட்டி தயாரித்தபோது அதற்கு நான் ஓவியங்கள் வரைந்திருந்தேன்.

அம்மு : அட..நான் சாதாரணமாகத்தான் வரைந்திருக்கிறேன்.

நான்: இப்போது எங்கேயிருக்கிறீர்கள்? வீட்டிலா? அப்பா அருகிலுண்டா?

அம்மு: அப்பா குளித்துக்கொண்டிருக்கிறார்

நான்: எனக்கு தெரிஞ்சு உங்கிட அப்பா கடலில மட்டும்தான் குளிப்பார்.

அம்மு: ஈஈஈஈஈஈஈஈஈ… எங்கிட வீட்டில கடலில்லை

நான்: இண்டைக்கு ஞாயிறுதானே விதானையாருடன் போன் பேசலாமா?

அம்மு: 15 நிமிடம்..

நான்: சரி..

அம்மு: இந்தியாவில் மாணவர்கள் எமக்காக போராடுவது பயன் உள்ளதா? இங்கே சற்று குரலை உயர்த்தி பேசினாலும் உள்ளே தூக்கி போடுகிறார்கள். அப்படி இருக்க எந்தத் துணிவில் எம்மால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க முடியும்?

நான்: இந்திய மாணவர்கள் போராட்டம் பயனின்றிப் போகும்.

அம்மு: என்னுடைய கருத்தும் அதுவே. நன்றி.

***

அம்மு: ஏன் மகளோடு பேச மாட்டீங்களா?

நான்: சரியாக 25 வருடங்களுக்குப் பிறகு நண்பன் ரத்தினத்தோடு பேசியதில் கடும் உணர்ச்சிக் கொந்தளிப்பு. பழைய ஞாபகங்கள் எல்லாம் என்னை வதைக்கின்றன. இறந்துபோன உங்கள் பெரியப்பாக்கள் நேசன், சீலன் எல்லோரது ஞாபகங்களும் மனதில் துக்கத்தை கிளப்புகின்றன. தவிரவும் கட்டுமஸ்தாக நான் பார்த்த ரத்தினத்தின் குரல் முதுமையாகயுள்ளது. எல்லாம் சேர்ந்து மண்டை ஸ்ரக்காகிவிட்டது மகளே. இந்த  தருணத்தை ஏற்படுத்திக்கொடுத்த உங்களுக்கு நன்றி.  நான் உங்களோடு இன்னொருநாள் பேசுவேன்.

அம்மு: ம்…காத்திருக்கிறேன்.

***

அம்மு: ஹாய்..உங்களோட லெட்டர் ஒன்று கிடக்கு வீட்டில. நீங்க வெளிநாடு போய் அப்பாவுக்கு எழுதின லெட்டர். பிறகு கொப்பி அனுப்புறேன்.

நான்: ஓ அப்படியா. மகிழ்ச்சி. நீங்கள் நலமா?

அம்மு: நலம்..எப்ப ஸ்ரீலங்கா வாறீங்க?

நான்: 2015

அம்மு : எனது பட்டமளிப்பு விழாவுக்கா..

நான்: ஆம்

அம்மு: தாங்க்ஸ்

***

அம்மு: ஹாய்.. நான் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட நினைக்கிறேன். முன்னுரை எழுதித் தர முடியுமா?

நான்: மகளே, நான் கவிஞனல்ல. அ.யேசுராசா, கருணாகரன், நிலாந்தன் போன்ற கவிஞர்களிடம் முன்னுரை பெறுவதே நல்லது.

அம்மு: எனக்கு தங்களிடம் வாங்க ஆசை

நான்: சரி, எழுதிக்கொடுக்கிறேன்.

இந்தக் கடைசி உரையாடல் 2013 யூன் 9ம் தேதி நடந்தது. அதற்குப் பின்பு உரையாடலில்லை. இரண்டு மாதங்களிற்கு முன்பு, ‘வர்ணம் பண்பலை’ வானொலியில் அவள் கவிதை வாசித்திருந்த ஒலிப்பதிவை எனக்கு அனுப்பியிருந்தாள். ஏனோ எனக்கு அதை அப்போது கேட்கத் தோன்றவில்லை. இன்றுதான் அந்த ஒலிப்பதிவைக் கேட்டேன்.

இன்று காலையில் எழுத்தாளர் பொ. கருணாகரமூர்த்தியுடன் எனக்கொரு சந்திப்பு இருந்தது. அதற்காகக் காலையில் சீக்கிரமாக எழுந்து தயாராகிவிட்டு, வெளியே போவதற்கு முன்பாக ஒருதடவை அவசர அவசரமாக முகப்புத்தகத்தை மேய்ந்தேன். சேலைகட்டியிருந்த அம்முக்குட்டியின் அழகிய நிழற்படமொன்று அவளது பக்கத்தில் அப்போதுதான் பதிவேற்றப்பட்டிருந்தது. ‘மிக அழகாக இருக்கிறாய்’ என்றொரு ‘கொமென்ட்’ போட நினைத்தேன். ஏனோ போடவில்லை.

அடுத்த ஒருமணிநேரத்தில், கருணாகரமூர்த்தியைச் சந்திப்பதற்கு இடம் குறித்திருந்த ‘அறிவாலயம்’ புத்தகக்கடைக்கு முன்னால் காத்திருந்தேன். அப்போது தெருவால் வந்த, எங்களது கிராமத்தைச் சேர்ந்த தம்பி நேசன்  பதற்றத்தோடு என்னிடம் வந்து “அண்ணே அம்முக்குட்டி செத்துப் போச்சாம்” என்றான். அவனது கைத்தொலைபேசியில் ஊருக்கு ரத்தினத்திடம் தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தான். நான் அவனிடம் ‘இனி எதைப் பேசுவது?’ என்று கேட்டேன். ‘ரத்தினத்திடம் நான் இங்கிருப்பதைச் சொல்லாதே’ என்றேன். அவன் தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

சற்று நேரத்தில் சுகன் வந்தார். அம்முக்குட்டி யாரெனச் சொல்லி, செய்தியை அவருக்குச் சொன்னேன். அவர் அவரது இயல்புப்படியே கலங்கிப் போய்ப் பேசினார். நான் மட்டும் கல்நெஞ்சக்காரனாக இறுகிப்போன முகத்துடன் இருந்தேன். பின்பு கருணாகரமூர்த்தி வந்து சேர்ந்தார். அவருடன் இதுகுறித்து எதுவும் பேசவில்லை. அவருடனான சந்திப்பு முடிந்ததும் வீட்டிற்குத் திரும்பிவந்து கணினி முன்பு உட்கார்ந்திருக்கின்றேன்.

அம்முவின் முகப்புத்தகப் பக்கத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவளது பக்கத்தில் கடந்த சிலமாதங்களாகவே தற்கொலை குறித்த குறிப்புகளும் கேள்விகளும் இருக்கின்றன. ‘நான் இறந்தால் எனக்கு யார் அஞ்சலி செலுத்துவீர்கள்?’ எனக் கேட்டிருக்கிறாள். அவள் தன்னை மாய்த்துக்கொள்வதற்குச் சில மணிநேரங்களிற்கு முன்புதான் “அரியவாய்ப்பு, இறந்தபின்னும் ஃபேஸ்புக் பார்க்கவேண்டுமா? கண்தானம் செய்வோம்.” என்ற செய்தியைப் பதிவு செய்திருக்கிறாள். அவள் கடைசியாகப் பதிவு செய்த செய்தி ஒரு ‘முற்றுப்புள்ளி’ மட்டுமே. எனது தங்கையைக் கூப்பிட்டு அந்த முற்றுப்புள்ளியைக் காட்டி “இதைப் பார்” என்று கத்தினேன். அந்தக் கணத்தில்தான் அவ்வளவு நேரமும் துக்கமா கோபமா ஆற்றாமையா கழிவிரக்கமா என உருத்தெரியாமல் என்னை இறுக்கமாக வைத்திருந்த மனநிலை அப்படியே சிதறிப்போனது. மனதில் வெறுமை மட்டுமே இருந்தது.  அந்த வெறுமையைக் கண்ணீராலோ வாய்விட்டு அழுவதாலோ கடக்க முடியும். ஆனால் நான்தான் கல்நெஞ்சக்காரனாயிற்றே. ஒருதுளி கண்ணீரும் சுரக்கமாட்டேன் என்கிறதே. எழுதினால் மட்டுமே என்னால் இந்த வெறுமையைக் கடக்க முடியும்.

அவளை நான் பார்த்ததில்லை. தொலைபேசியில் கூட உரையாடியதில்லை. 2015ல் நேரில் சந்திக்கலாம் என முகப்புத்தகத்தில் செய்தி அனுப்பியதற்கு, காத்துக்கொண்டிருக்கிறேன் என்றாள். இப்போது அவளது முகப்புத்தகப் பக்கம் மட்டுமே என்னோடிருக்கிறது. அவளைக் குறித்து நான் எழுதிய இந்தக் குறிப்புகளை நான் அவளது முகநூல் சுவரில் பதிவிடுவேன். அவளது முகநூல் பக்கமும் ஒருநாள் செயலிழந்து போகும்.

நான் அவளது கவிதைகளுக்குத் தருவதாகச் சொல்லியிருந்த முன்னுரையும் அவள் என்னை வரைந்த இந்தப் படமுமே என்னிடமிருந்து அவளுக்கும் அவளிடமிருந்து எனக்கும் எஞ்சியுள்ளன.

 

-20.01.2014

Paris.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/102010/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அம்முக்கு கண்ணீரஞ்சலி.

 

இவங்க எல்லார் மேலும் ஒரு சந்தேகமா இருக்குது. அம்முட சாவில இவங்க பங்களிப்புகளும் இருக்குமோன்னு..??! ஏன்னா அம்மு ஏன் சாகனும்..????????! அதுக்கு காரணம்.. யாரும் சொன்னதில உள்ளதாகத் தெரியல்ல. ஆனால் கண்டறிஞ்சாக வேண்டிய பொறுப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தை சாரும். ஏன்னா.. இப்படி இனி ஒரு மரணம்.. நிகழக் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.