Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரையுலகில் பொங்கும் உற்சாகத்துடன் தொடங்கிய 2014

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரையுலகில் பொங்கும் உற்சாகத்துடன் தொடங்கிய 2014

எஸ். கோபாலன்

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ் வணிக சினிமாவின் இருபெரும் நாயகர்களாக நிலைபெற்றுவிட்ட நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் படங்கள் வெளியாகின. கடந்த 20 ஆண்டுகளில் வெற்றி தோல்விகளை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் உழைத்து முன்னேறி இன்று வணிக சினிமா சூழலை தீர்மானிக்கும் ஆளுமைகளாக உயர்ந்துவிட்ட இவ்விருவரின் படம் வெளியானதால் மற்றவர்கள் பொங்கல் விடுமுறைக்குப் படத்தை வெளியிட்டுப் பணம் பார்க்கும் யோசனையைக் கைவிட்டனர்.

தர அளவுகோல்களின்படி ஜில்லா, வீரம் ஆகிய இரு படங்களுமே சுமாரான படங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். விஜய், அஜித் ஆகியோரின் தீவிர ரசிகர்களிடமிருந்துகூட தங்கள் நடிகரின் படம் அத்தனை மோசமில்லை என்று திருப்திப்பட்டுக்கொள்ளும் குரல்கள்தான் வெளிப்படுகின்றன.

 

ஜில்லா விஜய் ரசிகர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்ட வழக்கமான மசாலா படம். டி.இமான் நல்ல மெட்டுக்களைப் போட்டுவிட்டார். விஜயின் நடனத் திறமைக்கும் இடமிருக்கிறது. தவிர, விஜயுடன் இந்தப் படத்தில் மலையாளத்தின் முதல் தர நாயகனும் இந்திய திரைத்துறையின் முக்கியமான நடிகர்களில் ஒருவருமான மோகன்லாலும் சேர்ந்துகொண்டதால் படத்துக்கான எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. விஜய்-லால் கூட்டணியே ரசிகர்களைத் திரையரங்குகளில் அலைமோத வைத்துவிட்டது. படத்தில் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாத்திரம் அவரது நடிப்புத் திறமைக்கும் அவரது மதிப்புக்கும் ஈடு செய்யக்கூடியது அல்ல என்ற கருத்து வெறும் விமர்சனமாக மட்டுமே பதிவாகப் போகிறது.

 

மூன்று மணி நேரம் நீண்ட ஜில்லா நீளமாக இருப்பதாக சில விமர்சகர்கள் சொன்னதைக் கேட்டு படத்தின் 10 நிமிடங்களை நீக்கிவிட்டார்கள். எனவே நீளமும் பெரிய பிரச்சினையாக இருக்கப் போவதில்லை. மொத்தத்தில் 2013இல் அரசியல் சர்ச்சையில் சிக்கி மீண்டு, தாமதமாக வெளியான தலைவா படத்தின் தோல்வியால் சற்றே இறக்கம் கண்ட விஜய்யின் சந்தை மதிப்பு மீண்டும் உச்சத்துக்குச் செல்ல ஜில்லா உதவி செய்யும் என்பதில் ஐயமில்லை.

 

அஜித்தின் வீரம் அஜித் ரசிகர்களுக்கேற்ற பஞ்ச் வசனங்கள், சண்டைக் காட்சிகள் ஆகியவற்றோடு நகைச்சுவை, காதல், செண்டிமெண்ட் உள்ளிட்ட குடும்பப் படத்துக்கான அம்சங்களுடன் கலந்து வந்திருக்கிறது. கதையில் புதிதாக ஒன்றுமில்லை. முதல் பாதி சந்தானத்தின் நகைச்சுவையையும் இரண்டாம் பாதி அஜித்தின் சண்டைபோடும் திறனையும் மிகை நாயக பிம்பத்தையும் நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது. அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான ரசிகர்களும் எதிர்பார்க்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிய அளவில் திருப்திப்படுத்தும் வகையில் இல்லை என்றாலும் எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்திருப்பதால் படத்தின் வணிக வெற்றிக்கு உத்தரவாதம் கிடைத்திருக்கிறது. 2013 தீபாவளியில் ஆரம்பம் படத்தின் மூலம் வெற்றிக்கொடி நாட்டிய அஜித் பொங்கலில் வீரம் மூலம் வெற்றியைத் தொடர்கிறார். நீண்ட காலத்துக்குப் பிறகு குறைந்த இடைவெளியில் அஜித்தின் இரண்டு படங்கள் வெளியாவதும் இரண்டு படங்களுமே வணிக வெற்றியைப் பெற்றிருப்பதும் அவர் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அஜித்துக்கேகூட உற்சாகத்தை தந்திருக்கிறது.

பெரும் திரளான ரசிகர்களைக் கொண்ட இந்த இரு நட்சத்திரங்களின் படங்களைப் பொதுவான பார்வையாளர்களும் கவனித்து வருகிறார்கள். எனவே இவர்கள் படங்கள் குறைந்தபட்ச உத்தரவாதத்தைப் பெற்றுவிடுகின்றன. இந்த உத்தரவாதத்தை வைத்துக்கொண்டு தமிழ் சினிமாவைச் சற்றேனும் முன்னோக்கி எடுத்துச் செல்லும் முயற்சியில் இவர்கள் இருவரும் எப்போடு ஈடுபடுவார்கள்? அந்தக்கால எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், போன தலைமுறையில் முன்னணியில் இருந்த கமல்ஹாஸன், ரஜினிகாந்த் ஆகியோர் வணிக முயற்சிகளுக்கு மத்தியில் அவ்வப்போதேனும் காத்திரமான முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். இவர்களில் கமல், வணிக ரீதியான போராட்டத்தில் பின்தங்கிவிடாமலேயே பல பரிசோதனைகளைச் செய்து தமிழ் சினிமாவின் தரம் உயரப் பங்களித்திருக்கிறார். விஜய்க்கும் அஜித்துக்கும் அப்படிப்பட்ட ஆசை ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதற்கான திறமை இருக்கிறதா என்ற கேள்வி தேவையற்றது. காத்திரமான முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய இயக்குநர்களிடம் தங்களை ஒப்புக்கொடுத்துக்கொண்டால் போதும். அதற்கான பார்வையும் துணிச்சலும் இவர்களுக்கு இருக்கிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி.

 

பொங்கலுக்குப் பின்

2014ஆம் ஆண்டின் முதல் மாதத்திலேயே எதிரெதிர் துருவங்களான அஜித் மற்றும் விஜயின் படங்கள் வெளியானதோடு அவை இரண்டுமே வெற்றிபெற்றுவிடும் சாத்தியங்கள் அதிகரித்திருப்பதால் தமிழ் திரைப்பட உலகே உற்சாகமடைந்திருக்கிறது என்று சொல்லலாம். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நூற்றுக் கணக்கான படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. அவற்றில் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் படங்களை மட்டும் பார்க்கலாம்.

கடந்த ஆண்டு ரஜினி, சிம்பு ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைத்து முன்னணி நாயகர்களின் படமும் வெளியாகிவிட்டது. இந்த ஆண்டு இவர்களையும் சேர்ந்து அனைத்து நாயகர்களின் படங்களும் வெளியாகவிருக்கின்றன. இந்த நாயகர்களுக்கும் அவர்களின் ரசிகர்களுக்கும் இந்த ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பின்வரும் தகவல்களை வைத்து ஊகிக்கலாம்.

 

காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள்

2010இல் வெளியான எந்திரனுக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடித்திராத ரஜினிகாந்த், அவரது இரண்டாவது மகளான சௌந்தர்யா இயக்கும் கோச்சடையான் படத்தில் நடிக்கத் தொடங்கினார். 2012இல் தொடங்கிய இந்தப் படம் 2013ஆம் ஆண்டு, டிசம்பர் 12ஆம் தேதி ரஜினி பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நவம்பர் மாதம் அந்த தேதியில் படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த பாடல்கள் வெளியாகும் என்றும், படம் 2014ஆம் ஆண்டின் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தயாரிப்பு தரப்பு தெரிவித்தது. ஆனால் பொங்கலும் கடந்துவிட்ட பின் படத்தின் பாடல்கள் கூட வெளியாகவில்லை.

அடுத்த தலைமுறை நாயகர்களான அஜித்துக்கும் விஜய்க்கும் வழிவிட்டு ரஜினி ஒதுங்கிக்கொண்டார் என்று சொல்லப்பட்டாலும் கோச்சடையானின் தாமதத்துக்கு நிதிப் பிரச்சினையே காரணம் என்று சொல்லப்படுகிறது. எல்லாம் சரிசெய்யப்பட்டுத் தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 அன்று படம் வெளியாகிவிடும் என்று நம்பப்படுகிறது. அந்தத் தேதி தள்ளிப்போனால் கூட எப்படியாவது 2014ஆம் ஆண்டுக்குள் கோச்சடையான் வெளியாகிவிடும் என்று நம்பலாம்.

இந்திய சினிமாவில் மோஷன் கேப்சர் (Motion Capture) என்ற தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் படம் என்று சொல்லப்படும் கோச்சடையானில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார். அப்பா ரஜினிக்கு 80களின் கனவுக்கன்னி ஷோபனாவும். மகன் ரஜினிக்கு இந்தி திரையுலகில் முதல் இடத்துக்கான போட்டியில் முன்னிலை வகிக்கும் தீபிகா படுகோனும் ஜோடியாகியிருக்கிறார்கள். தவிர, சரத்குமார், சுமன், ஆதி, ருக்மணி விஜயகுமார் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

2013இல் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை 2014இல் வெளியாகும் கோச்சடையான் ஈடு செய்யுமா?

மீண்டும் விஸ்வரூபம்?

ரஜினியின் சமகால நடிகரும் திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டவருமான கமல்ஹாசனுக்கு 2013ஆம் ஆண்டில் வெளியான விஸ்வரூபம் திரைப்படம் அவ்வாண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாகவும் கமல்ஹாசனின் திரைவாழ்வின் மிக அதிக வசூலைக் குவித்த படமாகவும் அமைந்தது.

இந்த ஆண்டு விஸ்வரூபத்தின் இரண்டாம் பகுதியை வெளியிட இருக்கிறார் கமல்ஹாசன். முதல் பாகத்தை அவரே தயாரித்திருந்தார். இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமான படங்களுக்குப் பேர்போன ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். நாயகியராக ஆண்டிரியாவும் பூஜா குமாரும் தொடர்கிறார்கள். முதல் பாகத்துக்கு சங்கர்-எசான்-லாய் என்ற மூவர் கூட்டணி அமைத்த பின்னணி இசையும் பாடல்களும் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தாலும் இரண்டாம் பாகத்துக்கு தமிழ்த் திரையுலகின் வித்தியாசமான பாடல்களைக் கொடுத்து முன்னேறிக் கொண்டிருக்கும் கிப்ரான் இசையமைக்கிறார்.

விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி எந்த தகவலும் இல்லை என்றாலும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் இந்தப் படம் வெளியாகிவிடும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய கூட்டணிகள்

நீண்ட நாட்களாகத் தள்ளிப் போய்க்கொண்டிருந்த அஜித் இயக்குனர் கவுதம் மேனன் கூட்டணி இணைந்திருக்கிறது. ஆரம்பம் படத்தைத் தயாரித்த ஏ.எம்.ரத்னம் இந்தக் கூட்டணியை சாத்தியப்படுத்திய புண்ணியத்தைக் கட்டிக்கொண்டார். அவரே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா அல்லது த்ரிஷா நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. இசை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

 

நேர்த்தியான ஆக்ஷன் படங்களை இயக்குவதில் தேர்ந்தவரான கவுதம் மேனனும் ஆக்ஷனுக்குப் பேர்போன அஜித்துடன் இணையும் இந்தப் படம் இந்த ஆண்டில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கப்போவதில் ஆச்சரியமில்லை. வேறெந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் ஃபிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தீபாவளிக்கு படத்தைக் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

2013இல் சிங்கம் 2 என்ற ஒரே படத்தைக் கொடுத்தாலும் வெற்றிப்படமாகக் கொடுத்தார் சூர்யா, முதல் பாகத்தைப் போலவே இரண்டாவது பாகத்தையும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் குறைவின்றி அமைத்திருந்தார் இயக்குனர் ஹரி.

 

இப்போது சூர்யா லிங்குசாமியுடன் இணைந்திருக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சமந்தா நாயகியாக நடிக்கிறார். படத்தின் கணிசமான பகுதிகள் மும்பையில் படமாக்கப்பட்டுவிட்டன. எனவே இந்த ஆண்டும் சூர்யா ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது.

 

வெற்றிக் கூட்டணிகளிகளின் மறுபிரவேசம்

விஜய் ரசிகர்களுக்கும் நல்ல செய்தி இருக்கிறது. 2012இல் விஜயும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸும் இணைந்து வழங்கிய துப்பாக்கி விஜய்யின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்ததோடு அவரால் நவீனமயமான பாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்தது. அதோடு மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட வெகுஜன திரைப்படங்களில் ஒன்றாகவும் நிலைபெற்றது. இப்போது விஜய்யும் முருகதாஸும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். 2013இல் தமிழில் எந்தப் படத்திலும் நடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றிய சமந்தா இந்தப் படத்தில் மறுவருகை தர வாய்ப்பிருக்கிறது. இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

 

துப்பாக்கி மும்பை நகரில் நடப்பதுபோல இருந்ததை அடுத்து இந்தப் படம் மற்றொரு இந்தியப் பெருநகரமான கொல்கத்தாவில் மையம்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

 

விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இந்தப் பெயரிடப்படாத படம் 2014இல் வெளியாகலாம். 2014 பொங்கலைப் போலவே 2014 தீபாவளிக்கும் அஜித்-விஜய் படங்கள் மோதவும் வாய்ப்பிருக்கிறது.

 

2005இல் விக்ரமும் ஷங்கரும் இணைந்து கொடுத்த அந்நியன் படம் மாபெரும் வெற்றிபெற்றது. எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் விக்ரமுக்கு அதற்குப் பிறகு 2011இல் வெளியான தெய்வத் திருமகள் என்ற ஒரு படம் மட்டுமே வணிக வெற்றியாகவும் நல்ல பெயரை வாங்கித் தந்த படமாகவும் அமைந்தது. 2010இல் வெளியான மணிரத்னத்தின் ராவணன் விக்ரமின் நடிப்புக்காக ஓரளவு நல்ல பெயரும் வசூலையும் ஈட்டினாலும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

 

இந்நிலையில் மீண்டும் ஷங்கரின் கடைக்கண் பார்வை விக்ரம் மீது விழுந்திருக்கிறது. இருவரும் இணைந்து 'ஐ' என்ற படத்தை கடந்த ஆண்டு தொடங்கினார்கள். நாயகியாக மதராஸபட்டினம் படத்தில் நடித்து புகழ்பெற்ற ஆங்கிலேய நடிகை ஏமி ஜாக்ஸன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளராகக் கருதப்படும் பி.சி.ஸ்ரீராம் ஷங்கருடன் முதல்முறையாகக் கைகோர்த்திருக்கிறார்.

 

இந்தப் படத்துக்காக் விக்ரம் உடல் எடையை கணிசமாகக் குறைத்துக் கல்லூரி மாணவரைப் போல் காட்சியளிக்கிறார். விக்ரம் ஏற்கும் பாத்திரத்தின் ஒப்பனைக்காக ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய அமெரிக்க நிறுவனம் ஒன்றை நியமித்திருக்கிறார் ஷங்கர். படத்தில் விக்ரம் மனிதனா மிருகமா என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் மேக்கப் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

 

ஷங்கர் என்றாலே பிரம்மாண்டத்துக்கும் ஆச்சரியத்துக்கும் குறையிருக்காது. இந்தப் படத்தில் அவை இன்னும் பெரிய உயரங்களைத் தொட்டிருக்கும் என்று இதுவரை வெளியான தகவல்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த வகையில் 'ஐ' படத்தை 2014ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் படங்களில் முதல் இடத்தில் வைக்கலாம்.

 

சிம்புவின் கண்ணாமூச்சி

 

2013இல் சிம்புவின் எந்தப் படமும் வெளியாகவில்லை. இத்தனைக்கு அவர் நடிக்கும் வேட்டை மன்னன் படம் 2011இலிருந்தும் வாலு படம் 2012இலிருந்தும் படப்பிடிப்பில் இருந்துவருகின்றன. இவ்விரு படங்களும் நிறுத்தப்பட்டுவிட்டதாக வதந்திகள் கிளம்பிக் கொண்டிருக்கும் வேளையில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் படத்தை சொந்தமாக தயாரித்து நடித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. தன் தம்பி குறளரசனை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறார்.

 

எல்லாவற்றையும் விட பெரிய ஆச்சரியமாக நிஜ வாழ்க்கையில் சிம்புவின் காதலராக இருந்து பிரிந்தவரான நயன்தாரா 2006இல் வெளியான வல்லவனுக்குப் பிறகு இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் இந்தப் படத்தின் பெயரும் இடம்பெற இந்த ஒரு காரணம் போதாதா.

 

2013இல் சிம்புவின் படம் இல்லாததற்கு 2014ஆம் ஆண்டு ஈடு செய்யவிருக்கிறது. விண்ணைத் தாண்டி வருவாயா என்ற வெற்றிப் படத்துக்குப் பின் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறார் சிம்பு. பல்லவி சுபாஷ் இந்தப் படத்தின் நாயகி. ஏ.ஆர். ரகுமான் இசை. மிக வேகமாக வளர்ந்துவரும் இந்தப் படம் இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

 

கௌதம், பாண்டிராஜ் ஆகிய இரண்டு முன்னணி இயக்குனர்களின் படத்தில் ஒரே நேரத்தில் நடித்துவருகிறார் சிம்பு. இவ்விரு படங்களுமே ரசிகர்களுக்கான விருந்தாக அமையப் போகிறது.

 

வெற்றிக்குக் காத்திருக்கும் நட்சத்திரங்கள்

 

மரியான், அம்பிகாபதி, நய்யாண்டி என 2013ஆம் ஆண்டில் மூன்று படங்களில் நடித்த தனுஷ் இற்கு ஒரு படம்கூட வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. இந்த ஆண்டு வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகமிருக்கின்றன. கே.வி. ஆனந்த் இயக்கும் அனேகன் படத்திலும் ஆடுகளம் படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் வேலையில்லா பட்டதாரி படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு படங்களுமே இந்த ஆண்டில் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தொடர் தோல்வியில் இருந்த கார்த்தியின் சந்தை மதிப்பு 2013ஆம் ஆண்டில் வெளியான வெங்கட் பிரபுவின் பிரியாணியால் காப்பாற்றப்பட்டிருக்கிறது, இப்போது அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ரஞ்சித்தின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்த வெற்றிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் ஹரியுடன் அடுத்தப் படத்தில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

 

2013 தீபாவளிக்கு வெளியான பாண்டியநாடு படத்தின் மூலம் தன் நீண்ட காலமாக தள்ளிப் போய்க்கொண்டிருந்த வெற்றியை ருசித்துவிட்ட விஷால் இப்போது திரு இயக்கும் நான் சிகப்பு மனிதன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பாண்டியநாடு பெற்ற வெற்றி விஷாலின் அடுத்த படத்தின் மீது எதிர்பார்ப்பைக் குவித்திருக்கிறது. பாண்டியநாட்டில் விஷாலுடன் ஜோடி சேர்ந்த லட்சுமி மேனன் இந்தப் படத்திலும் அவருடன் இணைந்திருக்கிறார். பாண்டியநாடு படத்தின் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்த விஷால் அதன் வெற்றி கொடுத்த உற்சாகத்தால் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். ஏப்ரல் 14 அன்று வெளியீடு என்ற இலக்கை அறிவித்துவிட்டு படப்பிடிப்பை வேகமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

மொத்தத்தில் இந்த ஆண்டு பொங்கலுக்குப் பிறகும் ரசிகர்களுக்கு திரைவிருந்து காத்திருக்கிறது. பொங்கல் படங்களைப் போல் இந்தப் படங்களும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=5&contentid=b075e764-9b1e-49e4-8375-7f99fa271ded

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

arju_zps0332d612.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்...!  :D

 

ஜில்லா படத்தினை முதல் 15 நிமிடங்கள் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. என் மகனால் 10 நிமிடங்கள் கூட பார்க்க முடியவில்லை. மகா கொடுமையான படம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1525488_231308310382396_1956920826_n.jpg

1555613_449875455113987_1768493086_n.jpg

1524947_231330747046819_248720417_a.jpg

1520600_192010677660772_1764614968_n.jpg

1517562_597321356988954_106324605_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.