Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலப்பயணம் சாத்தியமா ??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

((இதில் வரும் சில விடயங்கள் சினிமாவுக்காக இலகு பன்னி மொழிமாற்றம் செய்ய இலகுவாகவும் மூல சாரங்களை அசைப்பது போலும் எழுதபட்டுள்ளது கருந்துளைகளை பற்றி ஆங்கிலத்தில் படிப்போர் தயவு செய்து நேரடியாக கட்டுரையாளரை நோக்கி கேள்வி எழுப்புதல் நன்று படித்ததில் பிடித்துள்ளது எனவே இங்கு இனைக்கின்றேன் நன்றி.))

 

 

காலப்பயணம் சாத்தியமா என்று விளக்கும் அவரது கட்டுரை ஒன்றில் ஸ்டீஃபன் ஹாக்கிங் சொல்லியிருப்பதுதான் மேலே இருக்கும் மேற்கோள். பலப்பல ஆண்டுகளாக புத்தகங்கள், திரைப்படங்கள், கட்டுரைகள் ஆகியவற்றில் தவறாமல் இடம்பெறுவது இந்த காலப்பயணம் என்ற வஸ்து. வேறொரு காலத்தில் மூக்கை நுழைப்பது என்பது மனிதனின் ஆழ்மன ஆசைகளில் ஒன்று. எக்கச்சக்கமான வேலைகளை செய்யலாம் என்பதே காரணம். போதாக்குறைக்கு திரைப்படங்கள் இந்த ஆசையை நன்றாகவே தூண்டிவிட்டிருக்கின்றன. ஆனால், காலப்பயணம் என்பது முற்றிலும் கற்பனையானது என்பது சராசரி மனிதர்களாகிய நமக்கே தெரிந்திருக்கும்போது, ஹாக்கிங் போன்ற விஞ்ஞானிகள் ஏன் அவ்வப்போது எதையாவது இப்படிப் பேசி நம் ஆசையைத் தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்?

காரணம் இருக்கிறது. அதற்கு முன்னர், காலப்பயணத்துக்கு இன்றியமையாத தேவையாக இருக்கும் இன்னொரு வஸ்துவையும் பார்க்கவேண்டும். அதுதான் Wormhole.

மிக மிக எளிமையாக சொல்லப்போனால், நாம் தற்போது நம் ஊரில் அமர்ந்துகொண்டு கணினித் திரையை நோக்கியவாறே எதையாவது நோண்டிக்கொண்டிருக்கிறோம். அப்போது திடீரென நமக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. ‘இன்னும் அரை மணி நேரத்தில் அண்டார்ட்டிகாவில் வந்து முதலில் என்னைச் சந்திப்பவர்களுக்கு 500 கோடி அளிக்கப்படும்’ என்று பில் கேட்ஸ் அறிவித்திருக்கிறார். இது முற்றிலும் நம்பகமான உண்மை என்று வைத்துக்கொள்ளலாம். எப்படி அரை மணி நேரத்தில் அண்டார்ட்டிகாவுக்குச் செல்வது?

இருக்கும் இடத்தை விட்டு எழுகிறோம். ஜாலியாக நமது அறையில் இருக்கும் ஒரு கதவைத் திறக்கிறோம். கதவின் மறுபக்கத்தில் அன்டார்ட்டிகா. தொலைவில் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டு பில் கேட்ஸ் நிற்கிறார். அடுத்த நிமிடம் நம் கையில் 500 கோடி. இதுதான் Wormhole. இரண்டு இடங்களை இணைக்கும் ஒருவித பாலம் போன்ற அமைப்பு. அந்த இரண்டு இடங்களுக்கும் இடையே இருக்கும் தூரம், மனித மனதால் கற்பனையே செய்யமுடியாத ஒரு மிகப்பெரிய தூரமாகவும் இருக்கலாம்.

இப்போது, இதோ இந்தக் குறும்படத்தை ஒருமுறை பாருங்கள். Wormhole கான்ஸெப்ட்டில் நாளைய இயக்குநரில் வெளிவந்த படம் இது. இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கையில், பளிச்சென்று இன்றும் நினைவு வரும் படம். இயக்குநர் – ரவிகுமார். திரைக்கதை, நலன் குமரசாமி, ரவிகுமார் & மணிகண்டன். Wormhole என்றால் என்ன என்று எளிதில் இந்தப் படத்தைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்.

 

படத்தைப் பார்த்தாயிற்றா? இது சாத்தியமா?

அவசியம் சாத்தியம்தான் என்பதுதான் ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருத்து. இன்னும் சொல்லப்போனால், தற்போதுகூட நம்மைச் சுற்றிலும் எக்கச்சக்கமான wormholeகள் உள்ளன என்று சொல்கிறார் ஹாக்கிங். அப்படியென்றால் எளிதில் இதுபோன்று எங்குவேண்டுமானாலும் செல்லலாமே? அங்குதான் கதையில் ட்விஸ்ட். தற்போது இருக்கும் wormholeகள் அளவில் மிக மிகச் சிறியவை. எந்த அளவு என்றால், ஒரு சென்டிமீட்டரில், ட்ரில்லியனில் ட்ரில்லியனில் பில்லியன் பாக அளவே இவை இருக்கின்றன. இதை வைத்துக்கொண்டு எதுவுமே செய்யமுடியாது. இவ்வளவு சிறிய வஸ்துக்களுக்குள் எப்படி மனிதன் நுழைய முடியும்?

Wormhole-stephen-hawking.jpg?resize=500%

இவை எங்கே இருக்கின்றன? க்வாண்டம் மெகானிக்ஸில் Quantum Foam என்ற ஒரு பதம் உண்டு. எந்தப் பொருளுக்குள்ளும் அடிப்படையாக இருக்கும் ஒரு துகள். இதனை எப்படி அளப்பது? மனிதர்களால் அளக்கக்கூடிய அளவைகளில் இதுவரை இருப்பதிலேயே சிறிய அளவு ஒன்றை, Planck Length என்று அழைப்பார்கள். இதை எண்ணிக்கையில் சொல்லவேண்டும் என்றால், 0.00000000000000000000000000000000001 என்று அதனைக் குறிக்கலாம் (டெஸிமல் பாயிண்ட்டுக்குப் பின்னர் 34 ஸைஃபர்கள்). எனவே, இத்தனை சிறிய ஒரு வஸ்துவை நாம் wormholeஆக உபயோகிக்க முடியாது. கூடவே, இந்த வார்ம்ஹோல்கள் உருவானவுடனே அழிந்துவிடுபவை.

சரி. எப்படியாவது ஒரு வார்ம்ஹோலைப் பிடித்து, அதனை பலப்பல மடங்குகள் பெரிதாக்கினால், அப்போது மனிதன் அதனுள் செல்ல இயலும். அதேபோல், இப்படிச் செய்வதன்மூலம் நம்மாலேயே சொந்தமாகப் பெரிய வார்ம்ஹோல்களை உருவாக்கலாம். அப்படி நடந்தால்?

பூமியின் அருகே இந்த வார்ம்ஹோலின் ஒரு பகுதி. அதன் மற்றொரு பகுதி, எங்கோ தொலைதூரத்தில், நம்மால் கற்பனையே செய்துபார்க்கமுடியாத விண்வெளியின் மற்றொரு இடத்தில் இருக்கும். எனவே, இதனுள் நுழைந்தால், குறுகிய காலத்தில் அந்த இன்னொரு பகுதிக்குப் போய்விடமுடியும். இதனால் தூரம் என்பது குறுகிவிடுகிறது. மனிதன் விண்வெளியின் பலப்பல இடங்களை ஆராயமுடியும்.

இது, தூரம் என்பதை மனதில்கொண்டு உருவான தியரி. அதுவே, இந்த வார்ம்ஹோலின் இரண்டு முனைகளும், ‘காலம்’ என்ற அளவையால் பிரிக்கப்பட்டால்? அதாவது, வார்ம்ஹோலின் இரு முனைகளுமே பூமியை நோக்கியே குவிக்கப்பட்டால், ஒரு முனையில் நுழைந்து, மற்றொரு முனையின் வழியாக நாம் வெளியேறும்போது பல்லாயிரக்கணக்கான வருடங்கள் முன்போ பின்போ பூமியை நாம் பார்க்கலாம். இதுதான் விஞ்ஞானத்தின் பார்வையில் காலப்பயணம். ஆனால், இதற்கான சில முன்னேற்பாடுகள் இருக்கின்றன. நாம் பயணிக்கும் தூரம் என்பது ஒரு மணி நேரத்துக்கு ஐந்துகோடி கிலோமீட்டர்களாக இருக்கவேண்டும். அதேசமயம், இதில் உள்ள ஒரு சிக்கல் – இதன்மூலம் நம்மையே கடந்தகாலத்தில் நாம் பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். அப்போது ஒரு துப்பாக்கியை எடுத்து நாம் நம்மையே சுட்டுவிட்டால் என்ன ஆகும்? இத்தகைய ஒரு சிச்சுவேஷன் தான் paradox. நடக்குமா நடக்காதா என்று சொல்ல இயலாத ஒன்று. உண்மையில் Grandfather Paradox என்பது விஞ்ஞானத்தில் புகழ்பெற்ற ஒன்று. கடந்த காலத்தில் நமது தாத்தாவை பேச்சிலராக சந்தித்து, அவரைக் கொன்றுவிட்டால், தற்காலத்தில் நாம் உயிரோடு இருக்கமுடியுமா?

இதனால்தான் – இப்படிப்பட்ட குழப்படிகள் நேரலாம் என்பதால்தான், காலப்பயணம் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்றும் விஞ்ஞானிகளால் சொல்லப்படுகிறது. Cause & Effect என்பது நமக்கெல்லாம் தெரியும். ஒரு செயல் நடந்தபின்னர்தான் அதன் விளைவு நடக்கிறது. ஆனால், இப்படிப்பட்ட ஒரு கால இயந்திரத்தை நாம் கண்டுபிடித்து, நம்மையே கடந்தகாலத்தில் சென்று சுட்டுக்கொண்டால், விளைவு என்பது ஒரு செயல் நடப்பதற்கு முன்னரே நடந்துவிடுகிறது அல்லவா? இப்படி நடக்கலாமா? இத்தனை கோடி ஆண்டுகளாக இந்த ப்பிரபஞ்சம் எதுவோ ஒரு விதியைப் பின்பற்றித்தான் செயல்பட்டுக்கொண்டிருப்பதால், அப்படி ஒரு சம்பவம் நடப்பதை எப்படியாவது பிரபஞ்சம் தடுத்துவிடும் என்பது ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்து. கூடவே, அப்படி ஒரு வார்ம்ஹோல் உருவாக்கப்பட்டாலும்., இயல்பான ரேடியேஷன் அதனுள் புகுந்து, அந்த வார்ம்ஹோலையே அழித்தும் விடும். இதனால், வார்ம்ஹோல்கள் உருவாக்கப்படும் சாத்தியம் இல்லை.

ஆனால், காலப்பயணம் என்பது முற்றிலும் சாத்தியப்படாத விஷயமும் இல்லை. எப்படி? காலம் என்பது எல்லா இடங்களிலும் ஒரே போன்று இல்லை. பூமியில் இருக்கும் காலம், எங்கோ விண்வெளியில் இருக்கும் காலத்தைவிட வேறானது. ஒரு பொருளின் mass – நிறை என்பது அதிகமாக ஆக, அங்கே காலம் மெதுவாக ஆகிறது என்பது ஐன்ஸ்டைன் சொன்னது. இப்போது, மேலே மேற்கோளில் சொல்லப்படும் கருந்துளை என்பதைப் பற்றி யோசித்தால், நமது Milky Way நட்சத்திர மண்டலத்தின் நட்டநடுவே, இருபத்தாறாயிரம் ஒளி வருடங்களுக்கப்பால், மிகப்பெரிய கருந்துளை ஒன்று உள்ளது. கிட்டத்தட்ட னாஙு மில்லியன் சூரியன்களின் நிறையை ஒரு மிகச்சிறிய புள்ளியில் பெற்றிருக்கும் வஸ்து இது. இந்தக் கருந்துளையில்தான் காலம் என்பது குறைகிறது. அதாவது, ஒரு விண்கப்பல் இந்தக் கருந்துளையை சுற்ற ஆரம்பித்தால், காலம் என்பது அந்தக் கப்பலில் இருப்பவர்களுக்குப் பாதியாகக் குறைகிறது. இதனால், எவ்வளவு காலம் அந்தக் கப்பல் கருந்துளையை சுற்றுகிறதோ, பூமியின் காலம் அதைப்போல் இரண்டு மடங்காகிவிடும். அவர்கள் பத்து வருடங்கள் சுற்றிவிட்டு பூமிக்கு வந்தால், இங்கே 20 வருடங்கள் முடிந்திருக்கும். இதுதான் காலப்பயணம்.

இதேபோல் இன்னொருவிதமாகவும் காலப்பயணத்தை மேற்கொள்ளலாம். அது- ஒளியின் வேகத்தில் பயணிப்பது. ஒளியின் வேகம் – ஒரு செகண்டுக்கு 186,000 மைல்கள். விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, இந்த வேகத்தை மிஞ்சவே முடியாது. அது சாத்தியமற்றது. ஆனால், இந்த வேகத்துக்கு அருகே – இதில் 99.99% அளவு வேகத்தை ஒரு விண்கப்பல் அடைந்தால், அப்போது காலப்பயணம் சாத்தியம். அப்படி மட்டும் நடந்தால், இந்த வேகத்தில் பயணிக்கும் விண்கப்பலில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு வருடம் (பிரம்மாவின் ஒரு நாள் என்பதற்கு ஹிந்து மதம் கொடுத்திருக்கும் கணக்குகளையும் அப்படியே ஒருமுறை இங்கே பார்த்துவிடுங்கள்). இப்படி மட்டும் நடந்தால், நமது நட்சத்திர மண்டலமான மில்க்கி வேயின் எல்லையை பூமியில் இருந்து எட்டிப்பிடிக்க வெறும் 80 வருடங்கள்தான் ஆகும். மட்டுமில்லாமல், பூமிக்கு நாம் திரும்பிவரும்போது கணக்கிலடங்கா வருடங்கள் கழிந்திருக்கும். இதுதான் ரிலேட்டிவிடி தியரி.

 

இப்போது, இதுவரை நாம் பார்த்தவற்றில் முக்கியமான விஷயங்களான காலப்பயணம், கருந்துளையை விண்கலம் சுற்றுவது, Wormhole ஆகியவற்றை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். இணையத்தில் லீக் செய்யப்பட்ட இண்டர்ஸ்டெல்லார் திரைக்கதையைப் படித்தால், இந்த மூன்றும் அந்தப் படத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன என்று தெரிகிறது. இந்தத் திரைக்கதை உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால், படிக்கப்படிக்க அதில் நோலன் சகோதரர்களின் முத்திரை நன்றாகவே தெரிகிறது. இந்தத் திரைக்கதைக்கும் Inception திரைக்கதைக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.

திரைக்கதையின்படி, வார்ம்ஹோல் ஒன்றுதான் ஒட்டுமொத்தத் திரைக்கதையிலும் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. வேறு எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், நாம் மேலே பார்த்த காலப்பயணம் இதில் இருக்கிறது. அதாவது, ஒரு கருந்துளையை சுற்றும் விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது எக்கச்சக்கமான வருடங்கள் கழிந்திருப்பது. கூடவே, மெலிதான காதல் ஒன்றும் இதில் இருக்கிறது. திரைக்கதையின் இரண்டாம் பகுதி படுவேகமாக செல்கிறது. முதல் பாதி கொஞ்சம் மெதுவாக. படத்தின் முதல் டீஸரைப் பார்த்தாலும், அதற்கும் இந்தத் திரைக்கதைக்கும் சம்மந்தம் இருக்கிறது என்பது தெரிகிறது. ஆனால் இணையத்தில், இந்தத் திரைக்கதையை மாற்றித்தான் நோலன் படமாக எடுத்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது எடிட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. படத்தை எங்கெல்லாம் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கும், திரைக்கதையில் வரும் லொகேஷன்களுக்கும் தொடர்பு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக இந்தத் திரைக்கதையைப் படித்துவிட்டுப் பார்த்தால், சென்ற ஆண்டு வெளிவந்த Gravity படத்தைப் போல, இந்த ஆண்டின் இறுதியில் இண்டர்ஸ்டெல்லார் இருக்கப்போவது உறுதி. க்ராவிடி, இண்டர்ஸ்டெல்லருக்கான ஒரு ட்ரெய்லராக அமையும் என்று தோன்றுகிறது.

விண்வெளி என்ற புதிர் இன்னும் விஞ்ஞானிகளின் மனதை ஆட்டுவித்துக்கொண்டுதான் இருக்கிறது. உதாரணமாக: விண்வெளியின் எல்லை எது? அந்த எல்லைக்கப்பால் வேறொரு விண்வெளி இருக்கிறதா? இதுபோன்ற விஷயங்களை ஆராய்ந்தறியவேண்டும் என்றால் வார்ம்ஹோல்கள் அவசியம் தேவை. இந்தக் கேள்விக்கே பதில் இந்தத் திரைக்கதையில் இருக்கிறது. கூடவே, நிலவுக்கு ஆர்ம்ஸ்ட்ராங் சென்றதே ஒரு கட்டுக்கதை என்றும் திரைக்கதையில் வருகிறது. பல கற்பனைக்கெட்டாத பிரம்மாண்டங்கள் (கான்ஸெப்ட்களாக) இந்தத் திரைக்கதையில் வருகின்றன. இதனால்தான் இந்தத் திரைக்கதை (இதேபோன்று எடுக்கப்பட்டிருந்தால்) அனைவருக்கும் பிடிக்கும் என்பது என் கருத்து.

பொதுவாக விண்வெளிப்பயணத்தைப் பற்றிய படங்கள் அத்தனையிலும் கிட்டத்தட்ட ஒரேபோன்ற கான்ஸெப்ட்களே இருக்கும். உதாரணமாக, 2012ல் வெளிவந்த Prometheus படத்தை எடுத்துக்கொண்டால், வேற்று நட்சத்திரம் ஒன்றுக்குச் செல்லும் சில பயணிகள் என்பதுதான் அதன் கரு. அதில் உபயோகப்படுத்தப்பட்ட கான்ஸெப்ட்டின் பெயர் – Stasis.  விண்கலத்தின் crew, தூக்கத்தில் ஆழ்த்தப்பட்டு காலத்தைக் கடப்பதே இந்த ஸ்டாஸிஸ். அந்தப் படத்தில் ஒரு ஆண்ட்ராய்ட் ரோபோ வருகிறது. அதேபோல் இண்டெர்ஸ்டெல்லார் திரைக்கதையிலும் ரோபோக்கள் வருகின்றன. ஆனால் ப்ராமிதியஸ் போன்ற திராபையாக இது இல்லை. முதல் பகுதி மிகவும் மெதுவாகச் சென்றாலும், இரண்டாம் பாதி அட்டகாசமான வேகத்தில் சென்றது.  இந்தத் திரைக்கதையைப் படித்தபோது, Event Horizon படம் நினைவு வந்தது. எனக்கு மிகவும் பிடித்த ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் அது ஒன்று.  ஈவெண்ட் ஹொரைஸன் படத்திலும் வார்ம்ஹோல் வருகிறது. ஆனால் அந்தப் படத்தில், செயற்கையான கருந்துளையை உருவாக்கி, அதன்மூலம் ஒரு வார்ம்ஹோலை உருவாக்குவது பற்றி இருக்கும்.  இதன்மூலம் அந்த விண்கலம், விண்வெளியின் இன்னொரு எல்லைக்குச் சென்றுவிடும். அங்கு இருப்பது – நரகம்.  மிகவும் வித்தியாசமான கற்பனையில் எடுக்கப்பட்ட படம் அது.  ஆனால், சரியாக ஓடவில்லை.  கிட்டத்தட்ட இண்டர்ஸ்டெல்லார் மற்றும் ஈவண்ட் ஹொரைஸன் படங்களின் கரு ஒன்றுதான். ஆனால், இண்டர்ஸ்டெல்லார், நோலன் சகோதரர்களால் வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கிறது.  நோலன் சகோதரர்களின் முத்திரையான முன்னும் பின்னும் திரைக்கதையில் லிங்க் செய்வது இதில் இருக்கிறது. அப்படி இணைக்கப்படுபவைதான் திரைக்கதையின் ட்விஸ்ட்களில் ஒன்று.

இதேபோல், இந்த வார்ம்ஹோல் கான்ஸெப்ட், 2006ல் வெளிவந்த Déjà Vu படத்திலும் லேசாக உபயோகிக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் வரும் Snow white கருவியின் மூலம், கதாநாயகன் கடந்தகாலத்துக்குச் செல்வது (மேலே நாம் பார்த்த வார்ம்ஹோலின் இரண்டு முனைகளும் பூமியில் இருந்தால் என்ன ஆகும் என்பதற்கு இது உதாரணம்). பஸிஃபிக் ரிம் படத்திலும் இப்படி ஒரு வார்ம்ஹோல் கடலின் அடியில் இருக்கும்.

பொறுத்துப் பார்ப்போம். இன்னும் ஒன்பதே மாதங்கள்தான். வேறு ட்ரெய்லர்கள் வரட்டும். அப்போது இந்தத் திரைக்கதையின் நம்பகத்தன்மையை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

http://karundhel.com/2014/02/interstellar-time-travel.html


சென்ற கட்டுரையில் இண்டெர்ஸ்டெல்லார் படத்தின் லீக் செய்யப்பட்ட திரைக்கதையில் என்னவெல்லாம் வருகின்றன என்று பார்த்தோம். நோலன், திரைக்கதை லீக் செய்யப்பட்டது தெரிந்ததுமே அவரது திரைக்கதையை மாற்ற ஆரம்பித்துவிட்டார் என்றும், இப்போது படப்பிடிப்பை முடித்தது மாற்றிய திரைக்கதையை வைத்துதான் என்றும் இணைய செய்திகள் சொல்கின்றன. எது எப்படி இருந்தாலும், முழுத் திரைக்கதையை மாற்றுவது கடினம். எப்படியும் ஒரிஜினல் திரைக்கதையில் 60% அப்படியே இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

 

ஓகே. Black Hole என்பது என்ன என்று பார்ப்பதற்கு முன்னர், அந்த வார்த்தையைப் பற்றிப் பார்ப்போம். சில வார்த்தைகள் அளிக்கும் அர்த்தத்துக்கும், அந்தப் பொருளைப் பார்க்கும்போது நமக்குக் கிடைக்கும் நேரடி அர்த்தத்துக்கும் சில வேறுபாடுகள் இருக்கும். விமானத்தில் இருக்கும் Black Box என்பது அப்படிப்பட்டதுதான். இதைப்போன்றதுதான் Black Hole. இந்த வார்த்தையை உருவாக்கியவர், ஜான் வீலர் என்ற அமெரிக்க விஞ்ஞானி (John Wheeler). உருவாக்கிய ஆண்டு – 1969. அதற்கு முன்னர், கருந்துளை என்ற கான்ஸெப்ட் உருவான காலத்தில் அது Dark Star என்று அழைக்கப்பட்டது.

1783ல், ஜான் மிஷெல் (John Michell) என்ற ஜியாலஜிஸ்ட், Philosophical Transactions in the Royal society of London என்ற பத்திரிகையில்தான் முதன்முதலில் கருந்துளைகளைப் பற்றி எழுதினார். பொதுவாக ஒளி என்பது முற்றிலும் துகள்களால் ஆனது என்றும் (ந்யூட்டன் இதற்கு ஆதரவளித்தார்), ஒளி என்பது அலைகளால் ஆனது என்றும் இரண்டு தியரிகள் அப்போது இருந்தன. தற்போதைய விஞ்ஞானம், எல்லா துகள்களுக்கும் அலைகளாலான ஒரு வடிவமும் உண்டு என்று சொல்கிறது. ஆனால் அக்காலத்தில் இந்த இரண்டில் எது உண்மை என்று நிரூபிக்க கடும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. அப்படி ஒரு காலத்தில், ‘ஒளி என்பது ஒருவேளை துகள்களால் ஆனது என்பது உண்மையானால், அந்தத் துகள்கள் புவியீர்ப்பு விசையால் எப்படியும் பாதிக்கப்படும்’ என்று ஒரு கருத்தை முன்வைத்து ஜான் மிஷெல் ஒரு பேப்பரை எழுதினார்.

தனது நிறை மிக அதிகமாகவும், வடிவம் மிகச் சிறியதாகவும் இருக்கும் ஒரு நட்சத்திரம், தன்னிடமிருந்து வெளியேறும் ஒளியைக் கூட தப்பிக்க விடாது; அந்த ஒளியை உள்ளே இழுத்துக்கொள்ளக்கூடிய கடுமையான ஈர்ப்பு விசை அந்த நட்சத்திரத்துக்கு உண்டு என்பதே ஜான் மிஷெல் சொன்ன கருத்து. இதுபோன்ற நட்சத்திரங்கள் எக்கச்சக்கமாக விண்வெளியில் இருக்கலாம் என்றும் அவர் சொன்னார். அப்போதைய காலத்தில் அவை யார் கண்ணுக்கும் தெரியாமல் இருந்தன. காரணம் நட்சத்திரங்களுக்கும் பூமிக்கும் இருக்கும் கற்பனைக்கெட்டாத தூரங்கள். அந்த தூரங்களில், நட்சத்திரங்களின் ஒளி நம்மை எட்டாமலும் போகலாம். ஆனால், இத்தகைய நட்சத்திரங்களை, அவைகளின் ஈர்ப்பு விசையை வைத்துக் கண்டுகொள்ளலாம். அதாவது, இந்த நட்சத்திரம் பக்கத்தில் இருக்கும் இன்னொரு நட்சத்திரத்தின்மீது செலுத்தும் ஈர்ப்பு விசையால் அந்த இன்னொரு நட்சத்திரம் இதனைச் சுற்றும். அப்போது இந்த நட்சத்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்படித்தான் கருந்துளைகளைப் பற்றிய ஆராய்ச்சி துவங்கியது.

Black Hole என்பது இதுதானா?

ஒரு நட்சத்திரம் உருவாகும் முறையைப் பார்த்தால், கருந்துளையின் கான்ஸெப்ட்டை எளிதில் புரிந்துகொண்டுவிடலாம். அதிக அளவிலான வாயுக்கள் (பெரும்பாலும் ஹைட்ரஜன்) ஒன்றுசேர்ந்து, அதன் அணுக்கள் ஹீலியத்தை உருவாக்குகின்றன. இப்படி உருவாக்கப்படுவதுதான் நட்சத்திரம். எரிந்துகொண்டிருக்கும் ஹீலியம், அந்த நட்சத்திரத்திரத்தின் உள்ளிருக்கும் அழுத்தத்தை சமன் செய்கிறது. ஒருவேளை ஹீலியம் எரியவில்லை என்றால் அந்த நட்சத்திரம் சுருங்கிவிடும். எரியும் ஹீலியம், அப்படி அது சுருங்கிவிடாமல் பாதுகாக்கிறது. ஆனால் எத்தனை காலம்தான் இப்படி அந்த நட்சத்திரம் எரிந்துகொண்டே இருக்கமுடியும்?

தன்னிடம் இருக்கும் வாயுக்கள் தீர்ந்தவுடன், அந்த நட்சத்திரத்தின் கதி என்ன?

இது தெளிவாக உலகுக்குப் புரிந்த காலம், 1920க்களின் இறுதி. ஒரு இந்தியரின் மூலமாக. அவரது பெயர் – சுப்ரமண்யம் சந்திரசேகர். இதைச் சொல்லும்போது அன்னாரின் வயது – 19.

தன்னிடமிருக்கும் எல்லா எரிபொருளும் தீர்ந்தபின்னரும், ஒரு நட்சத்திரம் தன்னை தன்னிடம் இருக்கும் ஈர்ப்பு சக்தியிடமிருந்தே எப்படிக் காத்துக்கொள்ளமுடியும் என்று அவர் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். ஈர்ப்பு சக்திக்கும் எரிபொருளின் அழுத்தத்துக்கும்தான் நேரடிப் போட்டி என்பதைப் பார்த்தோம். ஈர்ப்பு சக்தி என்பது தீரவே தீராதது. எரிபொருள் என்பது எப்படியும் தீர்ந்துவிடும். எனவே, எரிபொருள் தீர்ந்ததும் அந்த நட்சத்திரத்தின் கதி என்னாகும் என்பதற்கு சந்திரசேகர் ஒரு தியரியைக் கண்டுபிடித்தார். எரிபொருள் தீர்ந்த ஒரு நட்சத்திரத்தின் மொத்த நிறை, சூரியனின் நிறையை விட ஒண்ணரை மடங்கு குறைவாக இருந்தால் (உண்மையில் அது சூரியனின் நிறையில் 1.4 பங்கு. இதுதான் ’சந்திரசேகர் லிமிட்’ – சந்திரசேகர் கணக்கிட்ட எண்), அந்த நட்சத்திரம் சுருங்குவதை நிறுத்திவிட்டு, White Dwarf என்ற ஒரு குறிப்பிட்ட நட்சத்திரமாக ஆகிறது. இதன் சுற்றளவு சில ஆயிரம் மைல்களாகவும், நிறை, ஒரு cubic inchல் பல நூறு டன்களாகவும் இருக்கும். இதனால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அதுபாட்டுக்கு அப்படியே இருந்துவிட்டுப் போகிறது. சந்திரசேகர் லிமிட்டை விடக் குறைவாக ஒரு நட்சத்திரத்தின் நிறை இருந்தால் பிரச்னை இல்லை என்பது சுருக்கம்.

ஆனால், ஒருவேளை இப்படி எரிபொருளைத் தீர்த்துவிட்ட நட்சத்திரத்தின் நிறை, சூரியனின் நிறையைப் போல் ஒண்ணரை மடங்கு அதிகமாக இருந்துவிட்டால்? அதாவது சந்திரசேகர் லிமிட் என்ற எண்ணைவிட அதிகமாக இருந்துவிட்டால்?

அப்படிப்பட்ட நட்சத்திரத்துக்கு, அதன் சொந்த ஈர்ப்புவிசையில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு கிடையாது. சிலமுறை அவை வெடிக்கலாம். அல்லது அதன் பரப்பளவிலிருந்து எக்ஸ்ட்ரா எடையை வெளியே வெடிப்புகள் மூலமாக வீசியெறிந்து, சந்திரசேகர் லிமிட்டுக்குள் வந்துவிடலாம். ஆனால், இதெல்லாம் அதற்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள்? ஒரு நட்சத்திரத்துக்கு, தன் எடையைக் குறைத்தால்தான் அழிவிலிருந்து தப்பலாம் என்பது எப்படித் தெரியும்? சில முறை இவை ஆக்ஸிடெண்ட்டலாக நடக்க வாய்ப்பு இருக்கிறது.

பெரும்பாலும், இப்படிப்பட்ட நட்சத்திரங்கள் ஒரு கட்டத்தில் ந்யூட்ரான் நட்சத்திரங்களாகவோ (அளவில் மிகமிகச் சிறிய, ஆனால் நிறையில் மிகமிகப் பெரிய நட்சத்திரங்கள்), அல்லது டுமீலென்று எக்கச்சக்கமாக சுருங்கி, கருந்துளைகளாகவோ மாறுகின்றன என்பதே சந்திரசேகர் சொல்லிய புதிய தியரி. இதைக் கேட்டவுடன், முப்பதுகளின் விஞ்ஞானிகள் எரிச்சல் அடைந்தனர். ‘என்னய்யா இந்தாள் பாட்டுக்கு நட்சத்திரம்ன்றான், புள்ளியா மறையும்ன்றான்? இதெல்லாம் எப்படி சாத்தியம்? பிஸிக்ஸ் உலகில் இதெல்லாம் நடக்காது. எதாவது ஒரு சக்தி (???!!) அப்படி நடக்காமல் தடுத்துவிடும்’ என்றே அந்த விஞ்ஞானிகள் பேசினர். ஐன்ஸ்டைன் கூட, அந்தக்காலத்தில் அப்படி நடக்கச் சாத்தியமில்லை என்று ஒரு பேப்பர் எழுத, சுப்ரமண்யம் சந்திரசேகர் விஞ்ஞான உலகால் உதாசீனப்படுத்தப்பட்டார். முடிந்தவரை மென்மையாக தனது வாதத்தை நிரூபித்த சந்திரசேகரை ஒருவரும் கண்டுகொள்ளாததால், மனமுடைந்து வேறு சில ஆராய்ச்சிகளில் ஈடுபடத் துவங்கினார். முப்பதுகளில் அவர் propose செய்த இந்தக் கருத்துக்கு 1983ல் நோபல் பரிசு கிடைத்தபோதுதான் அவரைப்பற்றியே பலருக்கும் தெரிந்தது.

சரி. இதுவரை பார்த்ததை வைத்து, கருந்துளைகள் எப்படி இருக்கும் என்பதை கவனிப்போம். எல்லா எரிபொருளும் தீர்ந்துபோன ஒரு நட்சத்திரம், தனது நிறை, சூரியனின் நிறையில் ஒண்ணரை மடங்குக்கும் மேலாக இருந்தால், படபடவென்று சுருங்க ஆரம்பிக்கிறது. அதே சமயத்தில் அதன் ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பிக்கிறது. எரிபொருள் தீர்ந்தபின்னர் அந்த நட்சத்திரம் வெடித்தும் சிதறும். அப்படி வெடித்தபின்னர், நட்சத்திரத்தில் என்ன பாக்கி இருக்கும்? Core என்று நாம் அழைக்கும் அதன் உட்புறம். இந்த உட்புறம்தான் சுருங்கிக்கொண்டே வருகிறது. அதேசமயம் ஈர்ப்பு விசை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுதான் கருந்துளை. கருந்துளைக்கு உள்ளே எதுவும் இல்லாத பாழ்வெளி என்பது உண்மையில்லை. உள்ளே இருப்பது முன்பு ஒரு காலத்தில் இருந்த நட்சத்திரத்தின் core. இப்போதும் அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் என்ன? அதன் சைஸ் சுருங்கிக்கொண்டே வருகிறது. எதுவரை இந்த சைஸ் சுருங்கும்? இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் அளவைகளில் மிகச்சிறியது Planck Length என்பதை சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்த சைஸ் வரை சுருங்குவதை அளவிடலாம். ஆனால் இதற்கு மேல் சுருங்கிவிட்டால் அதை அளவிடமுடியாது. அதேசமயம், அத்தனைக்கத்தனை அதன் ஈர்ப்பு அதிகமாகவே இருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு வஸ்து, தன்னருகே எது இருந்தாலும் லபக்கென்று உள்ளே இழுத்துக்கொண்டுவிடும். அதேசமயம் உள்ளே சென்ற அந்தப் பொருள், பீஸ் பீஸாகக் கிழிக்கப்படும். காரணம், உச்சபட்ச ஈர்ப்பு. இந்தக் coreல் இருந்து ஒளி வெளியேறுகிறது என்றால், அதுவும் உள்ளே இழுத்துக்கொள்ளப்பட்டுவிடும். இதுதான் கருந்துளையின் இயல்பு. ஆகவே, கருந்துளை என்பது பாழ்வெளி என்று யாராவது சொன்னால், அவர்கள் தலையில் குட்டி, உள்ளே இருப்பது பழைய நட்சத்திரத்தின் core என்று சொல்லலாம்.

இந்தக் கருந்துளையின் தன்மைகள் என்னென்ன?

முதலாவதாக, பழைய நட்சத்திரம் சுற்றிக்கொண்டு இருந்தால் இந்தக் கருந்துளையும் சுற்றும். அதன் கோர் சிறியதாக ஆக, சுற்றும் வேகம் மிக அதிகம் ஆகும். கருந்துளைக்கு வெளியே, ஈவண்ட் ஹொரைஸன் (Event Horizon) என்று அதன் எல்லைக்குப் பெயர். இந்த எல்லைக்கும் வெளியே, Ergosphere என்று ஒரு ஏரியா, கருந்துளையின் சுழற்சியால் உருவாகும். இந்த எர்கோஸ்பியரில் நாம் சென்று ஜம்மென்று அமர்கிறோம் என்றால், நாம் பார்க்கும் காட்சிகள் அருமையாக இருக்கும். இந்த இடத்தில் இருந்து காலம் கண்டபடி மாறுகிறது. கருந்துளையின் சுழற்சி, நாம் சென்ற கட்டுரையில் பார்த்தபடி, நமது காலத்தைக் குறைக்கிறது. காரணம் இங்கே ஒளியின் வேகத்துக்கு மேல்தான் எதுவுமே நடக்கும். இதனால் பூமியில் இருக்கும் காலத்தைவிட நம் காலம் மிகவும் குறைகிறது. ஒளியின் வேகத்தைத் தாண்டினால், இங்கே ஒரு நாள் என்பது பூமியில் ஒரு வருடம்.

கூடவே, கருந்துளை என்றால் இருண்டுபோய் இருக்கும் என்பதும் இல்லை. கருந்துளை எக்கச்சக்கமான வெளிச்சத்தை உமிழக்கூடிய தன்மையுடையது. கருந்துளைக்குள்ளிருந்து ஒளியே வெளியே வர முடியாது என்றால், இந்த வெளிச்சம் எங்கிருந்து வரும்? அதன் வெளி எல்லையான ஈவண்ட் ஹொரைஸனிலிருந்துதான். சில முறை, நேரடியாக கருந்துளைக்குள்ளே விழாமல், அதனைச் சுற்றியும் பொருள்கள் விழுவது உண்டு. இப்படிப்பட்ட பொருட்கள் ஒன்றோடொன்று சுழற்சியில் உராய்ந்து ஒளி பிறக்கும். அந்த ஒளியும், ஈவண்ட் ஹொரைஸனில் இதேபோன்று உருவாகும் ஒளியும் சேர்ந்து அந்தக் கருந்துளையை பிரகாசமாக ஒளிரவும் வைக்கும்.

இப்படிப்பட்ட ஒரு கருந்துளையில் நிகழும் ஒரு பிரம்மாண்ட ந்யூட்ரான் நட்சத்திரத்தின் வெடிப்பில் இருந்து கிளம்பும் அலைகள், அங்கிருக்கும் ஒரு Wormhole மூலமாக பூமிக்கு வருவதில் இருந்துதான் இண்டெர்ஸ்டெல்லாரின் திரைக்கதை துவங்குகிறது. இதன்பின் பூமியில் இருந்து கிளம்பும் விண்கலம், இந்தக் கருந்துளையின் சுழற்சியில் சிக்கிக்கொண்டு அதனால் அவர்களின் காலம் மாறுவதைப் பற்றியும் திரைக்கதையில் இருக்கிறது.

கருந்துளைகளில் எழுபதுகளில் இருந்து குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளைச் செய்துவந்திருப்பவர் ஸ்டீஃபன் ஹாக்கிங். இவரால்தான் கருந்துளைகளைப் பற்றிய ஒரு awareness எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் நிகழ்ந்தேறியது. இவர் எழுதிய A Brief History of Time என்ற புத்தகத்தில் கருந்துளைகளைப் பற்றிய எக்கச்சக்கமான தகவல்கள் உள்ளன. இவரது வேறு பல ஆராய்ச்சிக்கட்டுரைகளுமே கருந்துளைகளைப் பற்றிய பல தகவல்களைத் தருவன.

இண்டர்ஸ்டெல்லார் படத்தில், ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் சக விஞ்ஞானியான Kip Thorne கருந்துளைகளைப் பற்றி முன்வைத்த சில கருத்துகள் இருக்கின்றன. இவருமே கருந்துளைகளைப் பற்றி எக்கச்சக்கமான ஆராய்ச்சிகளைச் செய்த நபர். குறிப்பாக அண்டவெளியின் சில வஸ்துக்களை கருந்துளைகள் இயங்க வைக்கின்றன என்ற இவரது கருத்து பிரசித்தமானது (Membrane Paradigm). கூடவே, இண்டெர்ஸ்டெல்லார் படத்தில் wormholeகளைப் பற்றி வருவது எல்லாமே கிப் தார்னின் ஆராய்ச்சிகள்தான்.

சில நாட்களுக்கு முன்னர், ஹாக்கிங் ஒரு ஆராய்ச்சிக்குறிப்பை வெளியிட்டார். அதன்படி, கருந்துளைகள் என்பதே இல்லை என்று ஹாக்கிங் சொல்லிவிட்டதாக உலகெங்கும் உள்ள மீடியாக்கள் பிரச்னையைக் கிளப்பின. (இந்தியாவில் இது வரவே இல்லை என்று நினைக்கிறேன். நமக்கு அரசியலே போதும்). ஆனால் உண்மை அதுவல்ல. மிக மிக எளிதாக இதை அறிய முயற்சிக்கலாம்.

எழுபதுகளில், ஹாக்கிங் இந்தக் கருந்துளைகளைப் பற்றி ஒரு பேப்பர் எழுதினார். அதில், கருந்துளைகளின் core சுருங்கிக்கொண்டே வந்து, சிறுகச்சிறுக ஒரு கட்டத்தில் மாயமாகிவிடும் என்று சொல்லியிருந்தார். அப்படியென்றால், அதுவரை அந்தக் கருந்துளைக்குள் ஈர்க்கப்பட்ட வஸ்துக்களின் நிலை? அந்த வஸ்துக்கள் உடனடியாகவே அழிந்துவிடும் என்றாலும், அவற்றின் தன்மைகள் – அவற்றின் ரசாயன வடிவங்கள், அவற்றின் structure போன்றவை – உள்ளேயேதான் இருந்துகொண்டிருக்கும். அப்படி அந்தக் கருந்துளை இறுதியில் அழியும்போது இவையும் சேர்ந்து மறைந்துவிடும். இதுதான் ஹாக்கிங் எழுபதுகளில் சொல்லியிருந்தது.

இது, ஒரு சிறிய குழப்பத்தை அப்போது தோற்றுவித்திருந்தது. இது சாத்தியமா? கருந்துளைக்குள் சென்ற வஸ்துக்களின் நிலை என்ன என்பது இப்போதுவரை குழப்பம்தான். அந்தக் குழப்பத்தின் பெயர் – Information Paradox.

தனது பல்லாண்டுகளின் கருந்துளை ஆராய்ச்சியின் விளைவாக அவ்வப்போது பேப்பர்களை எழுதுவது ஹாக்கிங்கின் வழக்கம். தற்போது அவர் எழுதியிருக்கும் லேட்டஸ்ட் பேப்பரில், இந்தப் பிரச்னைக்கு வழி சொல்ல முயன்றிருக்கிறார். என்ன சொல்லியிருக்கிறார் என்றால், அப்படி ஒரு கருந்துளை அழியும்போது அந்தச் செய்திகள் அழியாமல், தற்காலிகமாக ஒரு இடத்தில் சேமித்து வைக்கப்படுகின்றன. அந்தச் செய்திகள் அதன்பின் வெளியே அனுப்பவும் படுகின்றன. இதனால், எப்போதோ கருந்துளைக்குள் சென்று அழிந்த ஒரு வஸ்துவின் விபரங்கள், கருந்துளை அழிந்தபின் அதனால் வெளியேற்றப்பட்ட செய்திகளை ஆராய்ந்தால் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அப்படி அந்தச் செய்திகள் சேமித்து வைக்கப்படும் இடம்தான் Apparent Horizon. ஏற்கெனவே நாம் பார்த்த ஈவண்ட் ஹொரைஸன் என்பது இல்லை.

இப்படி ஹாக்கிங் சொல்லியிருப்பதால், எல்லாவற்றையும் கபளீகரம் செய்து அமுக்கி வைத்திருக்கும் கருந்துளைகள் என்றில்லாமல், உள்ளே சென்றதை வெளியேற்றும் கருந்துளைகள் என்று அவை மாறியிருக்கின்றன என்பதுதான் ஹாக்கிங்கின் ஆராய்ச்சி முடிவு. ஆனால் அவரது பல முடிவுகளைப் போல் இது தற்காலிகமானதாகக்கூட இருக்கலாம். காரணம் அவ்வப்போது அவர் பதிப்பித்து வரும் ஆராய்ச்சி முடிவுகள்தான். எனவே, வருங்காலத்தில் இந்தத் தியரியை அவர் மாற்றக்கூடும். எது எப்படி இருந்தாலும், அவரது ஆராய்ச்சி முடிவுகள் வெளிவருவது நமக்கு நல்லதுதான். இதெல்லாம் உண்மையா என்று கருந்துளைக்குப் பக்கத்தில் சென்று ஆராய இன்னும் பல நூறு வருடங்கள் ஆகலாம். அப்போது ஆராய்ந்துகொண்டிருக்கும் விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது அதன் காலமே முடிந்து மனித இனமே அழிந்திருக்கலாம் (கருந்துளையைச் சுற்றும் விண்கலத்தின் ஒரு வருடம், பூமியில் நூறு வருடத்துக்குச் சமம்). இதுதான் இண்டர்ஸ்டெல்லாரின் கரு.

கருந்துளைகளைப் பற்றி எனக்குத் தெரியும் என்றாலும், என் கருத்தை இன்னும் தெளிவாக்கிக்கொள்ளும் பொருட்டு, இந்தக் கட்டுரைக்காக A Brief History of Time புத்தகத்தை முழுமையாக மறுபடியும் படித்தேன். வைரல் ஃபீவரில் எப்போதும் படுத்துக்கொண்டே இருந்ததால் அது எளிதாக முடிந்தது. மேலும் உதவிய referenceகளை இங்கே கொடுத்திருக்கிறேன். காரணம், அது படிப்பவர்களுக்கு அவசியம் உதவலாம்.

References:

1. A Brief History of Time by Stephen Hawking
2. Chandrasekhar Limit – Wikipedia and the internet
3. What Hawking meant when he said ‘There are no black holes’
4. Hawking: Black Holes do Exist. Now the complicated part – Time magazine

http://karundhel.com/2014/02/interstellar-black-holes.html

அரியதொரு பகிர்வு. நன்றி பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.