Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல்போன கடவுள்: ஈழப் போராட்டத்தில் கூடப் பிறந்த நாஸ்திகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போன கடவுள்: ஈழப் போராட்டத்தில் கூடப் பிறந்த நாஸ்திகம்

 

Hindu-temple.jpg
 
ஈழப்போர் நடந்த காலகட்டத்தில், மக்கள் மத்தியில் நாஸ்திக சிந்தனையும் துளிர் விட்டது. ஏற்கனவே, ஈழத் தமிழர்கள் மத்தியில் கணிசமான அளவு நாஸ்திகர்கள் இருந்தனர். உலகப் புகழ் பெற்ற நாஸ்திக அறிவுஜீவியான டாக்டர் கோவூர் இலங்கையில் வாழ்ந்து வந்தார். எழுபதுகளிலேயே, கடவுள் இல்லையென்பதை, பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், எளிமையாக விளக்கி வந்தார். அவரது நடவடிக்கைகள், அறிவியல் செயல்கள், பரபரப்புச் செய்தியாக பத்திரிகைகளில் வெளியாகும். அவற்றை வாசிக்கும், அல்லது வாசித்தவரிடம் கேட்டறியும் சாதாரண கூலித் தொழிலாளிகள் கூட,  "  கடவுள் இருக்கிறாரா, இல்லையா?"   என்று தமக்குள்ளே வாதிட்டுக் கொள்வார்கள். ஏழைப் பாட்டாளி மக்களின் வீடுகளில் நடக்கும், கடவுள் கொள்கை பற்றிய விவாதங்களை, நானே சிறுவனாக இருந்த காலங்களில் நேரடியாக கண்டிருக்கிறேன். 
 
religion.jpg "வறுமையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு மார்க்சியம் தெரியாது. எந்தவொரு இடதுசாரிக் கருத்தும் அவர்களைக் கவரவில்லை...." என்று பொய்யுரைக்கும் பலரை, அன்றாடம் சமூக வலைத் தளங்களில் சந்திக்கிறேன். அது அவர்களது மத்தியதர வர்க்க மனோபாவமே அன்றி, யதார்த்தத்தை உரைக்கும் கருத்து அல்ல. வசதி படைத்தவர்களுக்கும், படித்தவர்களுக்கும் மட்டும் தான் உலக ஞானம் இருப்பதாக நினைப்பது தவறு. எங்களது நெருங்கிய உறவினர்களுக்கு இடையே, ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு இருந்தது. அதனால், எனக்கு சிறு வயதிலிருந்தே, மக்களின் வர்க்க வேறுபாடுகள் குறித்தும், அந்த வர்க்கங்களின் அரசியல் சமூகப் பார்வை குறித்தும் அறியும் வாய்ப்புக் கிட்டியது. 
 
 
என்னுடன் நன்கு பழகிய ஏழைக் குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு, சோஷலிசம் பற்றிய அறிவிருந்தது. சோவியத் யூனியன், கியூபா போன்ற நாடுகளில் நடந்த அரசியல் மாற்றங்களை பற்றிக் கேள்விப் பட்டிருந்தார்கள். அதே போன்று, கடவுள் மறுப்புக் கொள்கையான நாஸ்திகக் கருத்துக்களும் அவர்களை சென்றடைந்தன. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். 
 
1. திராவிடக் கட்சிகள் செல்வாக்கு  செலுத்திய தமிழ் சினிமா. (பராசக்தி  போன்ற படங்களில் வந்த வசனங்களும், பல தத்துவப் பாடல்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தன.)
2. அன்று உலகில் பெருமளவு சோஷலிச நாடுகள் இருந்தன. அந்த நாடுகளில் அரச மதத்திற்கு பதிலாக நாஸ்திகம் கோலோச்சியது என்ற தகவல்.
3. தமிழர்கள் மத்தியில் களப் பணியாற்றிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்களிப்பு. ஏழை உழைப்பாளிகள், தாழ்த்தப் பட்ட சாதியினர் மத்தியில் அவர்களுக்கு நிறைய ஆதரவு இருந்தது.
4. அறுபதுகள், எழுபதுகளில் கூட, தாழ்த்தப் பட்ட சாதியினர் சைவக் கோயில்களுக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டனர். சாதி ஒழிப்புப் போராட்டம் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக, "உண்மையிலேயே கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இருந்தால் இந்த அக்கிரமங்களை ஏன்  பொறுத்துக் கொண்டிருக்கிறார்?"  என்று, ஏழைத் தலித் மக்களை கேள்வி கேட்க  வைத்தது.
5. டாக்டர் கோவூர் நடத்திய நாஸ்திக பிரச்சாரம். குறிப்பாக, உழைக்கும் மக்களால் விரும்பி வாசிக்கப் பட்ட, ஜனரஞ்சகப் பத்திரிகையான "மித்திரன்", அது பற்றிய தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. 
 
இவை யாவும், நான் வாழ்ந்த சூழலில், எனது கண்ணுக்கு தென்பட்ட காரணிகள். அன்று நடந்த நாட்டு நடப்புகளால், சுயமாகத் சிந்திக்கக் கூடிய இளைஞர்கள் உருவாகி இருந்தனர். மேற்குறிப்பிட்ட தகவல்களில் ஏதாவதொன்று விவாதப் பொருளாகும் நேரம், நாஸ்திகக் கருத்துக்களும் முன் வைக்கப் படும். அந்த  நிலைமை, ஈழப் போராட்டம் தொடங்கிய எண்பதுகளிலும் காணப் பட்டது. 
 
கொழும்பு மற்றும் தென்னிலங்கையில் நடந்த, தமிழர் விரோதக் கலவரங்கள், இன்னொரு பரிமாணத்தில் இருந்தும் பார்க்கப் பட்டது. கலவரங்களின் போது, சிங்களக் காடையரினால் பல சைவக் கோயில்கள் எரிக்கப் பட்டன. அவற்றைக் கேள்விப் பட்ட யாழ்ப்பாணத் தமிழ் மக்கள், தமக்குள் கேட்டுக் கொண்ட கேள்வி இது: " சிங்களக் காடையர்கள் கோயில்களை எரித்த நேரம், அங்கிருந்த சாமிகள் என்ன செய்து கொண்டிருந்தன? ஏன் அந்தக் காடையர்களை தடுத்து நிறுத்தவில்லை? தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியற்ற சாமிகள், தமிழ் மக்களை காப்பாற்றுமா?"
 
சிங்கள ஊடகங்கள் வெளிப்படையாகவே தமிழர்களின் சைவ மத நம்பிக்கைகளை கேலி செய்து வந்தன. அதே போன்று, தமிழ் தேசியத்தை முன்னெடுத்த தமிழ் ஊடகங்களும், சிங்களப் பௌத்தர்கள் வழிபடும் புத்தனை கேலி செய்யும் கேலிச் சித்திரங்களை  பிரசுரித்தன. ஊடக முதலாளிகள், மதவாதம் அல்லது இனவாதத்தை ஊக்குவிப்பதற்காக அவற்றை பிரசுரித்து வந்தனர். ஆனால், "  மதம், கடவுள் என்பன, ஒருநாளும் எதிர்க்கவே முடியாத புனிதமான கோட்பாடுகள் அல்ல."   என்ற உண்மையை மக்களுக்கு அறிவுறுத்தும் வகையிலும், அவர்களின் செயற்பாடுகள் அமைந்து விட்டன. அன்று, சிந்திக்கக் கூடிய இளைஞர்கள் சிலர் நேரடியாகவே கேட்டனர்: " அவர்கள் (சிங்களவர்கள்) எங்களது கடவுளரை கேலி செய்கிறார்கள். நாங்கள் அவர்களது கடவுளை கேலி செய்கிறோம். இதிலிருந்து ஒரு உண்மை தெரிய வருகின்றது. கடவுள் என்ற ஒன்று இல்லை..."
 
ஒரு தடவை, எங்கள் ஊரில் ஒரு விடுதலை இயக்கம் கூட்டம் நடத்தியது. அதில் பேசிய பேச்சாளர் பின்வருமாறு கூறினார்: " சிங்கள- பௌத்தர்களின் மதம் அஹிம்சையை போதிக்கிறது. அவர்களின் கடவுளின் கையில் ஆயுதம் கிடையாது. ஆனால், சிங்கள பௌத்தர்கள் எம் மீது வன்முறை பிரயோகிக்கிறார்கள். எங்களுடைய கடவுள்கள் எல்லாம் ஆயுதங்கள் வைத்திருக்கின்றன. ஆனால், நாங்கள் அஹிம்சை வழியில் போராடிக் கொண்டிருக்கிறோம்..."  அன்று அது, கூட்டத்திற்கு வந்திருந்த தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்தில் இணைப்பதற்காக செய்யப் பட்ட பிரச்சாரம் தான். அதே நேரத்தில், " கடவுள், மதம் என்பன புனிதமானவை... கேள்விக்குட்படுத்த முடியாதவை..." என்று மக்கள் நம்பிய மாயையையும் கட்டுடைத்தது. 
 
1984 ம் ஆண்டு, ஒரு போர் நிறுத்தத்தை தொடர்ந்து, யாழ் குடா நாடு முழுவதும் போராளி இயக்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஸ்ரீலங்கா இராணுவம் முகாமுக்குள் முடங்கிக் கிடந்தது. அதனால் பல தடவைகள் விமானங்களில் வந்து குண்டு போட்டார்கள். முகாம்களில் இருந்து ஷெல் அடித்தார்கள். என்றாவது ஒரு இராணுவ நடவடிக்கை எடுக்கப் படுமானால், மக்களை கோயில்களில் (அல்லது தேவாலயங்களில்) சென்று தங்குமாறு, அரச வானொலி அடிக்கடி அறிவித்தது. 
 
பெரும்பான்மை தமிழ் மக்களும், கடவுள் நம்பிக்கையாளர்கள் என்பதால், கோயிலுக்குள் தமக்கு பாதுகாப்புக் கிடைக்கும் என்று நம்பினார்கள். ஆனால், விமானக் குண்டுவீச்சுக்கு கோயில்களும், தேவாலயங்களும் தப்பவில்லை. யாழ் நகரில் பிரபலமான பெருமாள் கோயிலின் கோபுரம் குண்டு வீச்சால் சேதமடைந்தது. போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று ஷெல் வீச்சால் சேதமடைந்தது. இப்படி நிறைய வழிபாட்டு ஸ்தலங்கள், ஒன்றில் விமானக் குண்டுவீச்சினால், அல்லது ஷெல் தாக்குதலில் சேதமுற்றன. அந்த சேதங்கள் எல்லாம் ஒரு பெரிய பட்டியலில் தொகுக்கப் பட்டுள்ளன.
 
ஸ்ரீலங்கா படையினர், வழிபாட்டு ஸ்தலங்களை தாக்கியதால், பொது மக்களும் பலியானார்கள். நவாலி தேவாலயம் விமானக் குண்டு வீச்சினால் தாக்கப் பட்டு, அங்கு தஞ்சம் புகுந்திருந்த நூற்றுக் கணக்கான மக்கள் பலியானார்கள். இது போன்ற சம்பவங்கள், பொது மக்களின் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள், உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் பரப்புரை செய்யப் பட்டன. அதன் விளைவாக ஏற்பட்ட, ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான மக்களின் கோபாவேசம் காரணமாக, பெருமளவு மக்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியதும் உண்மை தான். மேற்குறிப்பிட்ட சம்பவங்கள், இன்னொரு எதிர்பாராத விளைவையும் உண்டாக்கியது. நாஸ்திகக் கருத்துக்களின் உண்மைத் தன்மையை, ஈழத் தமிழ் மக்கள் போர் அனுபவம் மூலம் உணர்ந்து கொண்டனர். 
 
"  சிங்களப் படையினர் இதுவரையில் எத்தனை சைவக் கோயில்களை  உடைத்து விட்டார்கள்? எத்தனை தடவைகள், கோயில்கள், தேவாலயங்களில் தஞ்சம் புகுந்த மக்களையும் கொன்றிருக்கிறார்கள்? அப்போது இந்த சாமிகள் எல்லாம் எங்கே போயின? அதுகளும் வெளிநாடுகளுக்கு தப்பியோடி விட்டனவா? கடவுள் இருப்பது உண்மை என்றால், எதற்காக குண்டு போட்ட சிங்களவனை தண்டிக்கவில்லை?"   இப்படிப் பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்தன. இது போன்ற நாஸ்திகக் கேள்விகளை கேட்டவர்கள் எல்லோரும் படித்தவர்களும் அல்ல. சாதாரண பாமர மக்கள் மனதில் எழுந்த கேள்விகள் அவை. 
 
ஈழப் போராட்டம் நடந்த காலம் முழுவதும், கடவுள் நம்பிக்கை மிக்க ஆஸ்திகர்களுக்கு கஷ்டமான காலங்கள். அவர்களால் அந்த "நாஸ்திக கேள்விகளை" எதிர்கொள்ள முடியவில்லை. "  கடவுள் போராளிகள் மூலம் தண்டனை கொடுக்கிறார்."   "  சிங்களப் படையினருக்கு பலத்த இழப்புகள் உண்டாகின்றன..."    "  சிங்கள அரசை வெளிநாடுகள் தட்டிக் கேட்கின்றன..." என்று பதில் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அந்தப் பதில்கள் எல்லா தருணத்திற்கும் பொருந்தாது என்பதை, விரைவில் புரிந்து கொண்டனர். ஏனென்றால், போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும், கடவுளையும், மதத்தையும் மதித்து நடக்கவில்லை. மனித உரிமை நிறுவனங்களைப் பொறுத்த வரையில், அவை எல்லாம் மனித உரிமை மீறல்களுக்குள் அடங்கும். ஆனால், சாதாரண கடவுள் நம்பிக்கையாளர்களை பொறுத்த வரையில், அது அவர்களது நம்பிக்கையை தளர வைத்தது. 
 
சைவ மத வழிபாட்டு ஸ்தலங்கள் தமிழர்களுக்கு உரியவை என்பதால், சிங்களப் படையினருக்கு அவற்றை அழிப்பதில் மனச் சஞ்சலம் எதுவும் உண்டாகவில்லை.  பெரும்பாலும் பௌத்தர்களான சிங்களப் படையினர், சைவக் கோயில்களில் கடவுள் இருப்பதாக நம்பவில்லை. தங்களது கொடுஞ்செயலால் கோபமுறும் கடவுள் தங்களை தண்டித்து விடும் என்று ஒரு நாளும் நினைக்கவில்லை. மறு பக்கத்திலும், தமிழர் தரப்பிலும் அதே நிலைமை தான் காணப்பட்டது. பௌத்தர்கள் நம்பிய புத்தனுக்கோ, அல்லது இஸ்லாமியர் நம்பிய அல்லாவுக்கோ, புலிகள் அஞ்சியதாகத் தெரியவில்லை.   
 
ஈழப்போர் தொடங்கிய, 1984 ம் ஆண்டு, யாழ் நகரில் இருந்த ஒரேயொரு புத்த கோயிலை, புலிகள் கிரனேட் வீசி உடைத்தார்கள். கண்டியில் பௌத்தர்களின் மிகப் புனிதமான கோயிலான தலதா மாளிகைக்கு குண்டு வைத்தார்கள். காத்தான்குடியில் இஸ்லாமியர் தொழுத பள்ளிவாசலுக்குள் நுழைந்து சுட்டார்கள். அறந்தலாவையில் புத்த பிக்குகளை கொலை செய்தார்கள். அதனால், புலிகளை எந்தக் கடவுளும் தண்டிக்கவில்லை. மாறாக, தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்தார்கள். ஈழத்தில் மட்டுமல்லாது, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் புலிகளுக்கான ஆதரவு குறையவில்லை.
 
இதிலே வேடிக்கை என்னவென்றால், அறந்தலாவை புத்த பிக்குகளின் கொலைச் சம்பவத்திற்கு காரணமான கருணா அம்மான், இன்று ஸ்ரீலங்கா அரசினால் அமைச்சர் பதவி கொடுத்து கௌரவிக்கப் பட்டுள்ளார். ஸ்ரீலங்கா அரசு, ஒரு சிங்கள- பௌத்த பேரினவாத அரசாக இருந்த போதிலும், எல்லாக் காலங்களிலும் பௌத்த மதத்தை மதித்து நடக்கவில்லை. ஜேவிபி கிளர்ச்சி நடந்த காலங்களில், அரச படையினர், நூற்றுக் கணக்கான புத்த பிக்குகளை சுட்டுக் கொன்றார்கள். அரச படையினர் கைது செய்த மக்களை சித்திரவதை செய்யவும், கொன்று புதைக்கவும், புத்த கோயில்களை பயன்படுத்தினார்கள். 
 
ஈழப்போர் நடந்த காலகட்டத்தில், கடவுள் இல்லையெனும் நாஸ்திகவாதம், ஏராளமான தமிழ் மக்கள் மனதில் தானாகவே தோன்றியது. ஆனால், புலிகள் உட்பட, எந்தவொரு ஈழ விடுதலை இயக்கமும், ஈழத் தமிழர்கள் மத்தியில் நாஸ்திகவாதக் கருத்துக்களை வளர்த்தெடுக்கவில்லை. அதற்குக் காரணம் கடவுளோ, மதமோ அல்லது ஆன்மீகமோ அல்ல. இன்றைக்கும் மத நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் அரசியல் ஆதிக்கம் காரணம். அந்தப் பிரிவினர், சமூகத்தில் கடவுள், மதம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்து வந்தாலும், பொருளாதார பலம் மிக்கவர்களாக உள்ளனர். புலிகள் எந்தக் காலத்திலும், அந்த அரசியல்- பொருளாதார சக்தியை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. 
 
yuri-gagarin.jpg

http://kalaiy.blogspot.nl/2014/02/blog-post_21.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி நுணாவில்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.