Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரப்புயர (விவசாயம்/கைத்தொழில் சார்ந்த பதிவுகள்)

Featured Replies

  • தொடங்கியவர்

பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்

 

grass.jpg

 

பசுக்கள் வளர்க்கும் விவசாயிகள் கம்பி நேப்பியர் ஒட்டுப்புல் என அழைக்கப்படும் சி.என். 4 ரக புல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதால் பால் உற்பத்தியை எளிதாகப் பெருக்கலாம்.
 
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இந்த ரகம், குறைந்த பரப்பில் அதிக மகசூல் தரும் புல் ரகமாகும்.
 
இந்த தீவனப் பயிரை உற்பத்தி செய்வதால் குறைந்த இடத்தில் அதிக பசுந்தீவன புல்லை உற்பத்தி செய்து பால் உற்பத்தியைப் பெருக்கலாம் என காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் தெரிவித்துள்ளார்.
 
அவரது தகவல்கள்: கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், அதிகத் தூர்களுடன் வளரக்கூடிய ஒரு பல்லாண்டு தீவனப் பயிராகும். தண்டுகள் மிகவும் மிருதுவான, இனிப்பான, சாறு நிறைந்த, குறைந்த நார்ச்சத்தைக் கொண்டவை.
 
அதிக தூர்களுடன் (செடிக்கு 30 முதல் 35 தூர்கள்) சாயாத் தன்மை கொண்டது. அகலமான, மிருதுவான இலைகள் அதிக இலை தண்டு விகிதம் கொண்டவை.
 
இவ்வகை பயிரை எளிதில் பூச்சிகள், நோய்கள் தாக்காது. அதிக உலர் தீவன மகசூல், புரதச்சத்து கொண்டவை. ஆண்டுக்கு ஏழு முறை அறுவடை செய்யலாம். இதனால் ஏக்கருக்கு 350 முதல் 400 டன் அளவுக்கு மகசூல் பெறலாம்.
 
 
 
பசுந்தீவனத்தின் முக்கியத்துவம்: கால்நடைகளுக்குப் பசுந்தீவனப் புற்கள் கொடுப்பதால் பால் உற்பத்திக்கு தேவையான வைட்டமின் ஏ எனும் உயிர்ச்சத்து கிடைக்க வழிவகை ஏற்படுகிறது. கால்நடைகளின் கண்பார்வை, சுவாச மண்டலத்தின் செயல்பாடுகள் மேம்படுகிறது. மேலும், கால்நடைகளின் கரு உருவாவதற்கும், உருவான கருவைத் தக்க வைப்பதற்கும் பசுந்தீவனப் புற்கள் வழிவகை செய்கின்றன.
 
 
 
சாகுபடி தொழில்நுட்பம்: ஆண்டு முழுவதும் எல்லா வகை மண் வகைகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் புல்லைப் பயிரிடலாம். நிலத்தை இரும்புக் கலப்பையைக் கொண்டு 2 அல்லது 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். நிலத்தைப் பண்படுத்திய பிறகு 60 செ.மீ. இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும்.
 
மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரங்களை இட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால், 1 ஏக்கருக்கு அடியுரமாக 25 டன் மக்கிய தொழுஉரம், 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதால் மகசூலை நிலை நிறுத்தலாம்.
 
பாத்திகள் அமைக்கப்பட்ட நிலத்தில் நன்கு நீர்ப் பாய்ச்சிய பின் தண்டுக்கரணையை 60-க்கும் 50 செ.மீ. இடைவெளியில் செங்குத்தாக நடவு செய்ய வேண்டும்.
 
இவ்வாறு நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 33 ஆயிரத்து 333 கரணைகள் தேவைப்படும். கரணை நட்ட 3ஆவது நாளில் உயிர் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.
 
பிறகு 10 நாள்களுக்கு 1 முறை நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.
 
கரணை நட்ட 20ஆவது நாள் ஒரு கைக்களை எடுக்க வேண்டும். நடவுக்குப் பின் 75 முதல் 80 நாள்களில் முதல் அறுவடையும், அடுத்தடுத்து 45 நாள்களிலும் தீவனப் பயிர்களை அறுவடை செய்யலாம்.
 
இவ்வாறு சாகுபடி மேற்கொண்டால், 1 ஹெக்டேரில் 1 ஆண்டுக்கு 7 அறுவடைகளில் 350 முதல் 400 டன் பசுந்தீவன மகசூல் உற்பத்தி செய்யலாம். எனவே கறவைமாடு வளர்க்கும் விவசாயிகள் குறைந்தபட்ச நிலத்திலாவது, கோ (சிஎன்) 4 ரக புல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் பால் உற்பத்தியை எளிதாக பெருக்கலாம். மேலும் நகர்புற அருகில் உள்ள விவசாயிகள் இப்புல்லை உற்பத்தி செய்து, பசும்புல்லை, ஒரு கிலோ ரூ. 3 வரையில் விற்பனை செய்யலாம். இந்தப் புல்லில் தண்டுக்கரணை உற்பத்தி செய்து விற்பதன் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம்.
 
மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியரை 98844 02613 என்ற கைப்பேசி எண்ணிலோ, 044 - 2745 2371 என்ற தரைவழி தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார் முருகன்.
 
  • 3 weeks later...
  • Replies 162
  • Views 93.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அக்ரிடோன் 4.5' இயற்கை உரம் அறிமுகம்

 

ms.jpg

"அக்ரிடோன் 4.5' இயற்கை உரத்தை அறிமுகப்படுத்துகிறார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். உடன் (இடமிருந்து) எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜய்குமார் பரிடா, தேசிய ஆராய்ச்சி, வளர்ச்சி நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் லட்சுமிநாராயணன், பி.எம்.பயோ எனர்ஜி நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன்.

 

பயிர் விளைச்சலை அதிகரிக்க உதவும் "அக்ரிடோன் 4.5' என்ற இயற்கை உரத்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினார்.
 
இதுதொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் "பி.எம்.பயோ எனர்ஜி' நிறுவனம் தயாரித்த "அக்ரிடோன் 4.5' இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியது:
 
மண் வளத்தை இயற்கை முறையில் மேம்படுத்த தகுந்த உரத் தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
 
மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் காற்றிலுள்ள தழைச் சத்தை உள்வாங்கி மண்ணில் நிலை நிறுத்தி பயிர்களுக்கு அளிக்கின்றன.
 
இயற்கையாக மட்கும் பொருள்கள் இல்லாவிட்டால் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறையும்.
 
எனவே, அதன் வளம் குன்றாமல் பாதுகாப்பது விவசாயிகளின் கடமையாகும்.
 
 இதை ஐ.நா. சபை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "அக்ரிடோன் 4.5' உரம் அனைத்து வகையான காய்கறிகள், பருவநிலைக்கு ஏற்றதாகும்.
 
தோட்டப் பயிர்கள், தானியங்கள், எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள், நாற்றங்கால் பண்ணைகள் ஆகியவற்றுக்கு இதைப் பயன்படுத்தலாம் என்றார் அவர்.
 
பூமிக்கடியில் உள்ள பழுப்பு நிலக்கரியில் இருந்து எடுக்கப்படும் கழிவுப் பொருளான "அக்ரிடோன் 4.5' இயற்கையான தண்ணீரில் கரையக் கூடியது. இந்த உரத்துக்கான தொழில்நுட்பத்தை நெய்வேலி பழுப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.
 
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பரிசோதித்து விளைச்சலை அதிகரிக்கவும், தரமான பொருள்களை உற்பத்தி செய்யவும் உதவும் என சான்றிதழ் வழங்கியுள்ளது என "பி.எம்.பயோ எனர்ஜி' நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
 
  • தொடங்கியவர்

வட மாகாண  திருநாள் போட்டியில் சிறந்த கோழி வளர்ப்பாளருக்கான விருதை பெற்ற பெண்

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/147320-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?p=1079869//

  • தொடங்கியவர்

மகசூல் கொழிக்கும் ‘கோலியாஸ்’ ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வருமானம்

 

 

  • asok_2296026g.jpg
    விவசாயி அசோக்
 
name1_2296027g.jpg

தமிழக நெற்களஞ்சியத்துக்குச் சொந்தக் காரர்களான தஞ்சைப் பகுதி விவசாயிகள் ’கோலியாஸ்’ கிழங்கு விவசாயத்தில் இப்போது கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

 
கேரட் வடிவில் பழுப்பு நிறத்தில் இருக்கும் ’கோலியாஸ்’ மருத்துவக் குணம் கொண்டது. கோலியாஸ் செடியின் இலை, தண்டு, கிழங்கு மூன்றிலிருந்தும் ஃபோர்ஸ்கோலி (Forskohlii) என்ற மருத்துவ மூலப்பொருள் எடுக்கப்பட்டு, குறிப்பிட்ட சில மாத்திரை, மருந்துகள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தைச் சுத்திகரித்தல், ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்காகத் தரப்படும் மாத்திரைகளில் கோலியாஸ் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
தமிழகம் முழுவதும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு சேலம் ஆத்தூர் பகுதியில் முதன்முதலாகப் பயிரிடப்பட்ட கோலியாஸ், இப்போது ஈரோடு, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. ஓரளவு தண்ணீர் வசதியும் எளிமையான பராமரிப்பும் இருந்தால்போதும் என்பதால் இப்போது தஞ்சை பகுதி விவசாயிகளும் கோலியாஸை பயிரிட ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
’’நெல், கரும்புக்குப் போடுற மாதிரி அதிகமா உரம் போடத் தேவையில்லை. ஆடு, மாடு எதுவும் இந்த இலையைக் கடிக்காது. இருபது நாளைக்கு ஒரு தடவ லேசா தண்ணீர் விட்டா போதும். ஆறு மாசத்துல மகசூல் எடுத்துடலாம். ஏக்கருக்குச் சுமார் 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். பத்து டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். டன்னுக்குப் பதினஞ்சாயிரம் கிடைக்கிறதால, எல்லாச் செலவும் போக ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் நமக்கு நிக்கும்’’ என்கிறார் வல்லம் அருகே அய்யாசாமிபட்டியில் கோலியாஸ் பயிரிட்டிருக்கும் விவசாயி அசோக்.
 
செலவும் மானியமும்
 
“நாத்துகள் மூலமே கோலியாஸ் மறு உற்பத்தி செய்யப்படுகிறது. அறுவடைக்கு முன்னதாகப் பதியன் முறையில் இந்த நாத்துகளை நாமே உருவாக்கிக்கொள்ள முடியும். தேவைப்பட்டால் சேலத்திலிருந்து நாங்களே நேரடியாக நாத்துகளை சப்ளை செய்வோம்’’ என்கிறார் அருள் ஹெர்பல் நிறுவனத்தின் சேலம் மண்டல மேலாளர் செல்வம்.
 
ஒரு ஏக்கரில் 16 ஆயிரம் நாத்துகளை நட முடியும். இதன் மொத்த விலை 3,500 ரூபாய்தான். நாற்று விற்பனை செய்யும் நர்சரி நிறுவனங்களே விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கிழங்கு, தண்டு, இலைகளை நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்கின்றன. இதனால், விளைச்சலை வண்டி ஏற்றி விற்க வேண்டிய அவசியமும் விவசாயிகளுக்கு இல்லை. கோலியாஸ் பயிரிட ஏக்கருக்கு ரூ. 3,450 அரசு மானியம் தருகிறது என்பது கூடுதல் தகவல்.
 
விவசாயி அசோக்,
 
தொடர்புக்கு: 9047542854
 

 

 

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

புளிய மரங்கள் நட உதவுங்கள்! 

Tamil_News_large_1177126.jpg

 

ஏரி, குளம் கரையோரங் களில் புளிய மரங்களை நட்டு, கரைகளை பலப்படுத்தியதோடு, ஊராட்சிக்கும் வருமானம் பெற வைத்திருக்கும் ஊராட்சி முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியன்:

 

புதுக்கோட்டை மாவட்டம் மாஞ்சான் விடுதி யில், நான்கு முறை ஊராட்சி தலைவராக இருந்துள்ளேன். இப்போது பஞ்சாயத்துக்களுக்கு தேவையான நிதி, அரசின் மூலம் கிடைக்கிறது. அப்போதெல்லாம் நிதி கிடைப்பது பெரும்பாடு. அரசை நம்பாமல் நிதியை உருவாக்குவதற்காக, முதல்கட்டமாக, 1971ல், 400 தென்னை மரங்களை, சாலை ஓரங்களில் முழுமையான திட்டமிடலுடன் நடவு செய்தேன். அதாவது, முறையான குழி, அதில் கரையான் அரிக்காமல் இருக்க, ஈரப்பதத்தை தக்க வைக்க சோற்றுக் கற்றாழை, எப்போதும் தண்ணீர் கிடைக்க ஒரு பானையை வைத்து, அதில் சிறு துளை இட்டு வைத்தோம். அது, எப்போதும் மரத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்தபடி இருந்தது. இவ்வாறு முறையாக பராமரித்ததால், சில ஆண்டுகளிலேயே அந்த மரங்கள் பலன் தர ஆரம்பித்தன.

 

அதன் மூலம் ஓரளவு நிதி ஆதாரம் கிடைக்க ஆரம்பித்தது. தென்னை மரங்கள் தந்த ஊக்கத்தின் காரணமாக, 1986ம் ஆண்டிலிருந்து எங்கள் ஊரில் பலமற்று இருந்த ஏரி மற்றும் குளங்களின் கரைகளில், புளிய மரங்களை நட ஆரம்பித்தேன்.

 

இவ்வாறு, 1,330 தென்னை, பலா, புளிய மரக்கன்றுகளை நடவு செய்தேன். தொடர் பராமரிப்பு காரணமாக, ஐந்து ஆண்டுகளில் இம்மரங்கள் காய்க்கத் துவங்கின. இதன் மூலமாக பெரும் அளவில் நிதி கிடைக்க ஆரம்பித்தது. இவ்வாறு மரங்கள் நட்டு வளர்த்ததால், ஏரி மற்றும் கண்மாய்களின் கரைகள் பலப்பட்டு, அதிக அளவில் தண்ணீர் தேக்க முடிந்தது. இதனால், விவசாயமும் செழித்தது. இதன் மூலம் சூழலுக்கும் நலன் கிடைத்ததோடு, நிதியும் கிடைத்தது. இதனால், பல்வேறு நலத் திட்டங்களை அரசை நம்பாமல் நிறைவேற்ற முடிந்தது. எங்கள் பஞ்சாயத்தின் நிதியிலிருந்து நாங்களே, ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டினோம்.

 

இன்று, அந்த மரங்கள் அனைத்தும் பெரிய அளவில் வளர்ந்து, இந்தக் கண்மாய்களின் கரைகளை பலப்படுத்தி உள்ளது. மேலும், புளிய மரங்களின் மூலமாக, இப்போது லட்சக்கணக்கில் வருமானமும் கிடைக்கிறது. நான் நடவு செய்த, 400 தென்னை மரங்களில், பாதிக்கும் மேற்பட்டவை வறட்சி மற்றும் போதிய பராமரிப்பின்றி, இப்போது அழிந்து விட்டன. இருந்தாலும், மீதி மரங்கள் பலன் தருகின்றன. பெற்றோர் - ஆசிரியர் கழகத்தலைவராகவும் இருப்பதால், மாஞ்சான் விடுதி பள்ளி மற்றும் தரிசு நிலங்களிலும் பலா, தென்னை மற்றும் புளிய மரங்களை வளர்த்து வருவது, ஊருக்கும், சூழலுக்கும் நன்மை தருகிறது. மரங்கள் நட்டு வளர்க்க, மக்கள் அனைவரும் பெரும் உதவி செய்ததால் தான், இந்த சாதனை சாத்தியமானது.

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

புளியமரங்கள் வரட்சியை நன்கு தாக்குப்பிடிக்கும். ஆழமான மண்படை தேவையில்லை. யாழ் தீவுப் பகுதிக்கு மிகவும் பொருத்தமானவை. சாலையின் இரு புறமும் நட்டு விட்டால் குளிர்மையாகவும் இருக்கும். விளைச்சலும் கிடைக்கும்.
 
திருச்சியில் இருந்து தஞ்சாவூர் போகும் போது சாலை நெடுகிலும்  இரு புறமும் புளிய மரங்களை நட்டிருந்தார்கள். அழகாகவும் இருந்தது. 
  • கருத்துக்கள உறவுகள்

 

புளியமரங்கள் வரட்சியை நன்கு தாக்குப்பிடிக்கும். ஆழமான மண்படை தேவையில்லை. யாழ் தீவுப் பகுதிக்கு மிகவும் பொருத்தமானவை. சாலையின் இரு புறமும் நட்டு விட்டால் குளிர்மையாகவும் இருக்கும். விளைச்சலும் கிடைக்கும்.
 
திருச்சியில் இருந்து தஞ்சாவூர் போகும் போது சாலை நெடுகிலும்  இரு புறமும் புளிய மரங்களை நட்டிருந்தார்கள். அழகாகவும் இருந்தது. 

 

 

புளியமிலை நல்ல பசலை. ஊரில் இதற்கு நல்ல மவுசு,

  • கருத்துக்கள உறவுகள்

 

எளிய காய்கறித் தோட்டம்

 

vegetable_2274891f.jpg

 

வீட்டில் சிறிய திறந்தவெளிப் பகுதி இருந்தாலும் நிறைய செடிகளை, ஆரோக்கியமாக வளர்க்க முடியும். வீட்டில் சிறிய அளவு மண் தரைதான் இருக்கிறது. அதில் பூச்செடி வளர்ப்பதில் ஆர்வம் உங்களுக்கு இருந்தாலும், வீட்டுக்குப் பயன் தரும் எளிய காய்கறிச் செடிகளையும் வளர்க்கலாம். எந்தச் செடியென்றாலும் ஆரோக்கியமாக வளர்க்க வீட்டுக் கழிவுகளைக் கொண்டு நாமே உரம் தயாரிக்கலாம்.
 
கீழே உள்ள முறைக்கு வளையத் தோட்டம் என்று பெயர்.
 
இதை எப்படித் தயாரிப்பது?
 
$ முதலில் நிலத்தை வட்டமாகத் தோண்டவும். இதன் சுற்றளவு 3 அடிவரை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். நடுவில் மட்டும் ஒன்றரை அடி ஆழத்துக்குத் தோண்டிக் கொள்ள வேண்டும்.
 
$ தோண்டப்பட்ட குழி, பார்ப்பதற்கு வாணலிச் சட்டியைப் போல இருக்க வேண்டும். இதில் தோட்டம், சமையலறைக் கழிவுகள் என மக்கக்கூடிய எந்தக் கழிவாக இருந்தாலும் இடவும். மாட்டுச் சாணம் கிடைத்தாலும் சேர்க்கவும்.
 
$ இதன் மேல் தண்ணீர் தெளித்துவிட வேண்டும். இந்தக் குழிக்குள் அன்றாடம் கழிவுகளைக் கொட்டிவாருங்கள். அடியில் உள்ள கழிவு மக்க ஆரம்பிப்பதால், குழி சீக்கிரத்தில் நிறையாது.
 
$ பதினைந்து நாட்களுக்குப் பிறகு இதைச் சுற்றிலும் குவிந்திருக்கும் மண்ணில் வெண்டை, கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற எளிய காய்கறிச் செடிகளை நட்டு வளர்க்கலாம். இயற்கை உரம் தரும் ஊட்டத்தில் அமோகமாக வளரும்.
 
நன்றி: பினாங்கு பயனீட்டாளர் சங்க இயற்கை வேளாண்மை வழிகாட்டி
 

 

 

இது ஒரு நல்ல முறை. நான் அடுப்படி தண்ணீர் குழாய்க்கு பக்கத்தில் ஒரு சின்ன பாத்திரம் வைத்துள்ளேன். மரக்கறி, மற்ற கழிவுகளை அதற்குள் போட்டுவிட்டு ஒவ்வொரு மரத்துக்கும் அடியில் கொட்டிவிடுவேன், செயற்கை உரமே தேவையில்லை.

 

கழிவுகளை சின்ன கிடங்காக மரத்துக்கு பக்கத்தில் கிட்டிவிட்டு கொட்டி மூடிவிட்டால் இன்னும் நல்லது (அடிக்கடி வீட்டில் பார்ட்டி வைப்பவர்களுக்கு இந்த முறை நல்லது), ஈலையான்கள் வராது

  • தொடங்கியவர்

ஒரு ஏக்கரில் 6,130 கிலோ நெல் விளைச்சல் காட்டிய ஈரோடு விவசாயி: மாநில விருது பெற்றவர் சாதித்தது எப்படி?

 

Tamil_News_large_1181844.jpg

 

''இயற்கை விவசாயம் மூலம் தான், நம் முன்னோர், அதிகளவில் பயிர் விளைச்சல் அடைந்துள்ளனர்; அதே போல, நாமும் இயற்கை விவசாயத்திற்கு திரும்பினால் சாதிக்கலாம்,'' என, தமிழக அரசு விருது பெற்ற, ஈரோடு விவசாயி, துரைசாமி கூறியுள்ளார்.

 
தமிழக அரசு மூலம் ஆண்டுதோறும், பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்படும். நெற்பயிர் சாகுபடி செய்து, அதிகளவில் விளைச்சல் காட்டும் விவசாயிக்கு, ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்படும்.இந்த ஆண்டுக்கான பயிர் விளைச்சல் பரிசை, ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், தாதராகாடு கிராமத்தை சேர்ந்த விவசாயி துரைசாமி பெற்றுள்ளார்.'அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனோஸ்' ஆகிய நுண்ணுயிர் உரங்களை, இவர் பயன்படுத்தி உள்ளார். இவற்றை, அரசு தான் தயாரித்து தருகிறது. இந்த உரங்கள், காற்றில் உள்ள சத்துகளை இழுத்து, மண்ணுக்குஉரமாக அளிக்கும். 
 
பயிர் விளைச்சலில் சாதித்தது குறித்து, விவசாயி துரைசாமி கூறிய தாவது: இப்போட்டியில் பங்குபெற, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்தேன். ஒரு ஏக்கரில், மூன்று கிலோ, சி.ஆர்., 1,009 ரக நெல்லை பயிரிட விரும்பினேன். 
 
*பத்து சென்ட் நிலத்தில் நாற்று நட்டேன்.
 
*நாற்று வளர்ப்பதற்கு முன், விதை நெல்லை, 200 கிராம் அசோஸ்பைரில்லம், அரை லிட்டர் அரிசி கஞ்சி, 200 கிராம் நாட்டு சர்க்கரையில் கலந்து, 40 நிமிடம் ஊற வைத்தேன். 
 
*பயிரிட வேண்டிய நிலத்தில், 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன், இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் கலந்து தூவினேன். 
 
*நாற்றை பிடுங்கி, 60 லிட்டர் தண்ணீரில், ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போ பாக்டீரியா, கலந்து அதில் நனைத்து, 30 நிமிடங்கள் கழித்து நடவு செய்தேன். 
 
*நூறு கிலோ தொழு உரம், இரண்டு கிலோ பாஸ்போ பாக்டீரியாவை கலந்து, நிழலில், ஈரப்பதத்துடன் வைத்திருந்து வயலில் தெளித்தேன். 
 
*நாற்று நட்ட, 15 - 30 - 40வது நாளில், இயந்திரம் மூலம் களையெடுப்பு செய்தேன். 
 
*அதன்பின், 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 50 கிலோ, 'சூடோமோனஸ்' என்ற உயிர் உரத்தை நிலத்தில் தெளித்தேன்.
 
*மூன்றாவது முறை களை எடுத்த பின், பூச்சிமருந்து மற்றும் பூஞ்சாண மருந்து அடிக்கப்பட்டது; இரண்டு டன் கோழி கழிவு உரம் இடப்பட்டது; என்.பி.கே., பொட்டாஷ் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு, 25 சதவீதம் செயற்கை உரம், 75 சதவீதம் இயற்கை உரத்தை பயன்படுத்தியதால், என் நிலத்தில் பயிர் விளைச்சல் அதிகரித்தது.
 
மகாராஷ்டிராவில் இருந்து வந்த வேளாண் விஞ்ஞானி ஒருவர் மூலம், 'பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்' ஆகியவற்றுடன் சர்க்கரை அல்லது இளநீர் கலந்து, கோமியம் சேர்த்து, நிலத்திற்கு சத்து வழங்கும் விவரங்களை கற்றுக் கொண்டேன்.
 
இந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினேன்.நான் சாகுபடி செய்த நெல் ரகத்தில், சராசரியாக ஏக்கருக்கு, 4,000 கிலோ விளைச்சல் கிடைக்கும். இயற்கை உரங்களை பயன்படுத்தியதால், 6,130 கிலோ விளைச்சல் கிடைத்தது. அறுவடைக்கு முன், வேளாண் இணை இயக்குனரகத்திற்கு தகவல்தெரிவித்தேன்.என் மாவட்ட வேளாண் அதிகாரி, மற்றொரு மாவட்ட வேளாண் அதிகாரி, மாவட்ட கலெக்டர் உதவியாளர் அடங்கிய குழு, அறுவடையை ஆய்வு செய்தது. 
 
சாகுபடிக்காக, 
*ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவிட்டு உள்ளேன்.
*தொழு உரத்தை, வீட்டில் உள்ள மாடுகள் மூலமேதயாரித்தேன்.நம் முன்னோர், இயற்கை விவசாயம் மூலம், அதிகளவு மகசூல் பெற்றுள்ளனர். காவிரி டெல்டா விவசாயிகள், ஏக்கருக்கு, ஐந்து டன்; ராமநாதபுரம், எட்டு டன்; கோவை, ஐந்து டன் விளைச்சல் பெற்றுள்ளதாக, ஆவணங்கள் மூலம் தெரிகிறது. நாமும், இயற்கை விவசாயத்திற்கு திரும்பினால், அதிகளவு விளைச்சல் பெற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
 
நான்காவது முறை:
 
விவசாயி துரைசாமி இதற்கு முன், கருணாநிதி முதல்முறையாக முதல்வராக இருந்தபோது, மாவட்ட பயிர் விளைச்சல் போட்டியில் முதல் பரிசு; 1969 - -70ல், மாநில அளவில் முதல் பரிசு; 1970 - -71ல் மூன்றாவது பரிசு பெற்றுள்ளார். அப்போது, மோட்டார் பரிசாக வழங்கப்பட்டது. கடந்த, 2011க்கு பின், பரிசுத் தொகை ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் தங்கப் பதக்கம் என, உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, நான்காவது முறையாக, துரைசாமி பரிசு பெற்றுள்ளார்.
 
 

Edited by Athavan CH

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ரசாயன பூச்சிக்கொல்லிகள் வேண்டாம்!

 

Tamil_News_large_1189217.jpg

 

ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை புதுவை விவசாயிகள் குறைத்தது குறித்து கூறும்,புதுவை, பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையபூச்சியியல் வல்லுனரும், ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகத் திட்டத்தின் முதன்மை பயிற்றுனருமான முனைவர் விஜயகுமார்:

 

உணவுப் பற்றாக்குறையைப் போக்க, அறிமுகம் செய்யப்பட்ட பசுமைப் புரட்சியில், ரசாயன உரங்கள் மூலம், விளைச்சலை அதிகரிக்கச் செய்து, விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.அதிக உற்பத்தி என்ற இலக்கு மட்டுமே, பிரதானமாக இருந்ததால், உணவுப் பொருட்களில் ரசாயனக் கலப்பு அதிகரித்தது.

 

இதையடுத்து, இதற்குத் தீர்வு காணும் விதமாக, மகசூல் மட்டுமல்லாது, பயிர்களை தரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் உருவாக்க வேண்டுமென்ற நோக்கில், ரசாயனப் பயன்பாடு அல்லாத பயிர்களை சாகுபடி செய்ய, இரண்டாவது பசுமைப் புரட்சி, 1992ல் அமல்படுத்தப்பட்டது.

 

மேலும், குறைவான செலவில், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, அதிக மகசூலை விவசாயிகள் பெற, ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகத் திட்டத்தை, பிராந்திய வாரியாக உள்ள வேளாண் அறிவியல் மையம் மற்றும் வேளாண்துறை அறிமுகம் செய்தது.கிராமங்கள்தோறும், 30 விவசாயிகளை குழுவாக இணைத்து, உழவர் வயல்வெளிப் பள்ளி துவக்கப்பட்டது. இதன் மூலம், 10 முதல், 14 வாரங்களுக்கு, வாரம் ஒருமறை, மாதிரிப் பண்ணைகள் மூலம், பயிர் தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கு கற்றுத் தந்தோம்.

 

குறிப்பாக, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்து, ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம் மூலம், பூச்சிக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் விளக்கினோம்.மேலும், பூச்சிகளை முழுவதுமாக அழிக்காமல், அதை கட்டுப்படுத்தும் விதமாக, பூச்சிபொறிகளை வயலில் பொருத்தி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல் பூச்சிகளை, ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம் மூலம் கட்டுப்படுத்தவும் பயிற்சி தரப்பட்டது.

 

கடந்த, 17 ஆண்டுகளுக்கு முன், 164 டன்னாக இருந்த ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை தற்போது, 40டன்னாக குறைத்து உள்ளோம். அதன் மூலம், 95.74 சதவீதம் உயிரி உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி களை, தற்போது புதுவை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், புதுவையில் உள்ள சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், எங்களதுவேளாண் அறிவியல் நிலையத்தின் முயற்சியால்,இயற்கை வேளாண்மைக்கு முழுவதுமாக திரும்பி உள்ளனர். இந்த கிராமத்தைச் சார்ந்த மக்கள், தொழு உரம் மற்றும் நகரப் பகுதிகளில் கொட்டப்படும் குப்பையை, பயிர்களுக்கு உரமாக இட்டு வருகின்றனர்.

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

  • தொடங்கியவர்

பஞ்சகவ்யத்தால் தழைக்கும் பசுமை: இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி

 

 

Tamil_News_large_1190890.jpg

 

பெ.நா.பாளையம்:கோவை, துடியலூர் அருகே பன்னிமடையில் வசிக்கும் விவசாயி மணி, ரசாயன உரங்கள் எதுவுமின்றி, இயற்கை விவசாயம் செய்து தென்னை, வாழை, பாக்கு உள்ளிட்ட காய்கறி ரகங்களை பயிரிட்டு அசத்தி வருகிறார்.

 
விவசாயத்தில் ரசாயன உரங்களை தொடர்ந்து பயிரிடுவதால், குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு, மண்ணில் அடங்கியுள்ள நன்மை தரும் சத்துக்கள் படிப்படியாக அழிந்து விடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. உரங்களை இயற்கையான முறையில் தயாரித்து, பயிர்களை வளர்க்க, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வேளாண் துறை சார்பில் செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், ரசாயன உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளை விட கூடுதல் சத்து இருப்பதும், வேதியியல் கலப்பு இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.துடியலூர் அருகே பன்னிமடை கொய்யாமரத்தோட்டத்தில் வசிக்கும் விவசாயி மணி, 5 ஏக்கர் நிலத்தில் தென்னை, பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை இயற்கை முறையில் பயிர் செய்து வருகிறார்.
 
விவசாயி மணி கூறியதாவது:தென்னை, பாக்கு மரங்கள் மற்றும் வாழைகளுக்கு, 'பஞ்சகவ்யம்' என்ற இயற்கை திரவ கரைசலை உரமாக இடுகிறேன். இதற்காக கரும்பு சர்க்கரை, கடலை மாவு, ஆடு, மாடுகளின் கழிவுகளை குறிப்பிட்ட அளவு நீரில் கரைத்து, 2 நாள் ஊற வைத்து, அதன் கரைசலை சொட்டு நீர் பாசனம் வாயிலாக, குறிப்பிட்ட மரங்களுக்கு தேவையான அளவு செலுத்துகிறேன். இக்கரைசலுடன் எருக்கலை செடியை பொடிப்பொடியாக துண்டாக்கி, அதை, 50 கிலோ சாதாரண உப்பு மற்றும் குறிப்பிட்ட அளவு நீருடன் கலந்து செலுத்துவதால் பயிர்களுக்கு நல்ல இரும்புசத்து கிடைக்கிறது. மேலும் இது சிறந்த பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.என்னுடைய விவசாய நிலத்தில் மண்ணின் வளத்தை காக்க, 'மூடாக்கு' என்ற இயற்கை தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறேன். இதன்படி, தென்னந்தோப்பில் கீழே விழும் தென்னை மர ஓலைகள் மற்றும் இலை, தழைகளை அகற்றாமல் அப்படியே விட்டுவிடுவேன். அவை மழை, வெயில், பனிக்கு மக்கி சிறந்த உரமாக மாறிவிடும். இதனால், மண்ணில் இயற்கையாக உள்ள நுண்கிருமிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் அவை நீடித்து வளரும்.
எக்காரணத்தை கொண்டும் விவசாய நிலத்தில் குப்பைகளை போட்டு தீ வைத்தல் கூடாது. அவை மண்ணின் வளத்தை அடியோடு பாதித்துவிடும்.
 
இங்கு பயிரிட்டுள்ள வாழை கடந்த, 8 ஆண்டுகளாக வெட்டாமல் அப்படியே உள்ளது. ஒரு முறை வாழை குலை தள்ளியவுடன் வாழைக்குலையை மட்டும் வெட்டி விட்டு, வெட்டப்பட்ட வாழைக்கு பின்புறம் உள்ள ஒரு கன்றை மட்டும் அப்படியே விட்டுவிடுவேன். வெட்டப்பட்ட குலையில் உள்ள கம்பத்தில் இருக்கும் திரவச்சத்துகள் படிப்படியாக புதியதாக தோன்றும் வாழைக்கன்றுக்கு சென்றுவிடும். பழைய வாழை காய்ந்து விழுந்து மக்கிவிடும். இதனால் புதியதாக வாழைக்கன்று நட வேண்டிய அவசியம் இல்லை.இத்தொழில்நுட்ப பயன்படுத்தி பயிரிட்டுள்ள பூவன், கற்புரவல்லி, நாடன், கதளி வாழைகள் கடந்த, எட்டு ஆண்டுகாலமாக வாழைத்தோப்பில் இருந்து வருகிறது.
 
இங்கு இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் தேங்காய், பாக்கு, வாழைப்பழம், பப்பாளி, கருவேப்பிலை, வல்லாரை, சுக்குட்டி கீரை ரகங்கள் இயற்கை விளைபொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.எங்கள் பண்ணையில் இயற்கை முறையில்தான் விளை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த, தமிழ்நாடு வேளாண் பல்கலை எங்கள் விளைபொருட்களை பரிசோதனை செய்து சான்று வழங்கியுள்ளனர்.இவ்வாறு, விவசாயி மணி கூறினார்.
 
  • தொடங்கியவர்

கழிவுகளை செல்வமாக பாருங்கள்!

 

Tamil_News_large_1193914.jpg

 

 

டென்மார்க் துாதரகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து, விருப்ப ஓய்வு பெற்று, வீடு வீடாக சென்று கழிவுகளை சேகரிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மங்களம் பாலசுப்ரமணியன்:

 

நம்மை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி வைத்துக் கொள்ள, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கணும். ஓய்வுக் காலத்தை உருப்படியாக கழிக்க, நல்ல வழி இதுதான் என, தோன்றியது. உடனடியாக நாங்கள் வசிக்கும் சென்னை, பம்மல் பகுதியில் இரண்டு, மூன்று பேருடன் களம் இறங்கினேன்.

 

ஒரு பிரபல குளிர்பான நிறுவனமும், எக்ஸ்னோராவும் எங்கள் முயற்சிக்கு ஊக்கம் தந்தன. என்னுடைய தலைமையில் இயங்கும், 'பசுமைத் துாதுவர்கள்' என்று சொல்லப்படும் குழுவினர், பம்மலை சுற்றியுள்ள சில தெருக்களில், வீடு வீடாகப் போய் குப்பைகளை சேகரிக்கின்றனர். அரசிடம் கடுமையாக முயற்சி செய்து பெற்ற இடத்தில், மக்கும் குப்பைகளை உரமாக்கும் பணி நடக்கிறது. கேரி பேக், ஷாம்பு பாக்கெட் போன்ற பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து, அவற்றை, 'ரீ-சைக்கிளிங்' செய்து, இயந்திரத்தின் மூலம் துணி போல் நெய்கிறோம். அதை மூலப் பொருளாக கொண்டு, 'வால் ஹேங்கிக், பென் ஸ்டாண்ட், ஸ்கிரீன் என, பல்வேறு பொருட்களை செய்து விற்கிறோம்.

 

மிக சமீபமாகத் தான், குப்பை - துாய்மைன்னு இந்த விஷயத்தில் மக்களிடம் ஒரு விழிப்புணர்வு வந்துள்ளது. ஆனால், எங்கள் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன்பே, இதை துவங்கிவிட்டோம். ஆரம்பத்தில், கூட்டங்கள் போட்டு தான் மக்களுக்கும் புரிய வைக்க வேண்டி இருந்தது.
 
இப்போது பல வீடுகளில், மக்கும் குப்பை, மக்காத குப்பைன்னு அவர்களே பிரித்து கொடுத்து விடுகின்றனர். தங்கள் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள பழகி விட்டனர். நாம் துவங்கிய பணி, நல்ல முடிவை கொடுத்துள்ளதை நினைக்கும் போது, மனதுக்கு நிறைவாக உள்ளது. கலெக்டர், கவர்னர் என, பல தரப்பிலிருந்தும் எங்க களப் பணியை பார்த்து பாராட்டுகின்றனர். கழிவுகளை அருவருப்பாக பார்க்காமல், செல்வமாக நினைத்தது தான், இதற்கெல்லாம் காரணம்.
 
சுற்றுவட்டார ஓட்டல்களில் இருந்து, உணவுக் கழிவுகளை சேகரித்து நொதிக்க வைத்து, காஸ் தயாரிக்கிறோம். இதற்காக, பயோ காஸ் உற்பத்தி மையமும் செயல்படுகிறது. இங்கிருந்து பெறப்படும் காஸ் மூலம், ஜெனரேட்டர் இயக்கி அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தால், 50க்கும் மேற்பட்ட தெருவிளக்குகளை எரியச் செய்கிறோம். குரோம்பேட்டை ஏரியாவில், ஏராளமான தோல் தொழிற்சாலைகள் உள்ளன. அங்கிருந்து டன் கணக்கில் கழிவுகள் வெளியேற்றப்படும். அவற்றை ஒரே இடத்தில் சேமித்து, மறு சுழற்சி செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
நச்சு இல்லா உணவு உற்பத்திக்குஉறுதுணை!
 
Tamil_News_large_1199908.jpg
 
தன்னார்வ தொண்டு நிறுவனமான, சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையத்தின் நிறுவனர் கணேஷ்: உலகில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, உற்பத்தியை அதிகரிக்க, ரசாயன உரங்களை விஞ்ஞானிகள் உருவாக்கி, அதன் மூலம் உற்பத்தியைப் பெருக்கினர். அதேபோல், இந்தியாவிலும் பசுமைப் புரட்சி ஏற்பட்ட பின், பெரும்பாலான விவசாயிகள், ரசாயன உரங்களைப் பயன்படுத்தி, பயிர் சாகுபடி செய்தனர். இதனால், மண் வளம் குறைந்து, நச்சுத்தன்மை அதிகரித்ததோடு, கடுமையான நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதற்கு தீர்வு காணவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்நிறுவனத்தை நிறுவி, விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.
இந்நிலையில், 2015ம் ஆண்டை, உலக மண் வள ஆண்டாக, கடந்த டிசம்பரில், ஐ.நா., சபையில் அறிவிக்கப்பட்டது. எனவே, எங்கள் அமைப்பின் சார்பில், பொலிவிழந்த மண்ணின் வளத்தை அதிகரிப்பது குறித்து, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கத் துவங்கியுள்ளோம். விவசாயிகளை, 20 - 30 நபர்கள் அடங்கிய குழுவாக உருவாக்கி, அவர்களை இந்தியாவில் உள்ள தலைசிறந்த மண் வள ஆராய்ச்சி மையங்களுக்கு அழைத்துச் சென்று, மண்ணின் வளத்தை அதிகரிக்கும் முறைகளை கற்றுத் தர உள்ளோம்.மேலும் ஒவ்வொரு மாதமும், 5ம் தேதி, எங்கள் மையத்தின் மண் வள மையங்களில் விவசாயிகளுக்கு கலந்தாய்வுக் கூட்டமும் நடத்த உள்ளோம். இதனால், ஒவ்வொரு கிராமத்திலும் மண் வளம் அதிகரிக்கும்; அதன் மூலம் நீர்வளமும் பெருகி, விவசாயப் பணிகள் செழிக்கும். மண் வளப் பாதுகாப்பிற்காக, அரசு அறிமுகப்படுத்தி உள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்படுகிறது.முதற்கட்டமாக, புதுவையில் சாரம் பகுதியிலும், கடலுாரில் மாளிகைமேடு பகுதியிலும், மண் வள மையங்களை அமைத்துள்ளோம். மண் வளத்தைப் பெருக்கி, மண் வள மாதிரிக் கிராமங்களை அமைக்க உள்ளோம். 
இதன் மூலமாக, இயற்கை விவசாய முறையை விவசாயிகளிடையே அதிகரிக்கச் செய்து, நச்சுத் தன்மை இல்லாத உணவுகளை உற்பத்தி செய்ய உறுதுணையாக, எங்கள் அமைப்பு அமையும். இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், எங்கள் அமைப்பின் சார்பில், மண் வள மையங்களை உருவாக்க உள்ளோம். மேலும், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வரும் இந்தப் பயிற்சியில், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் பங்கு பெறலாம்.புதுச்சேரி அலுவலகம் - 0413 - 4202435, கடலுார் அலுவலகம் - 99409 73567 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 
  • தொடங்கியவர்

இயற்கை வழி வேளாண்மை முழுமையாக அறிய சில வழிகள்

 

ங்கு பார்த்தாலும் இயற்கை விவசாயம் எனும் அங்கக விவசாயம் பற்றிய பேச்சாக இருக்கிறது. கேரள அரசு 2016ல் தங்கள் மாநிலம் ""இயற்கை விவசாய மாநிலம்'' ஆகும் என அறிவித்து விட்டது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இயற்கை விவசாய பயிற்சிகள் அளிக்க தொடங்கி விட்டது.

இந்த இயற்கை வழி விவசாயம் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும். இதன் நுட்பங்கள் எவை? என அறிவோம். இதன் பிரிவுகள்.
இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள், உயிராற்றல் வேளாண்மை, மக்கு உர உத்தி கள், உரம் அல்லது எருவிடுதல், பயிர் பாதுகாப்பு, அங்கக சான்றளிப்பு, அறுவடை சார் தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்துதல் என பல பிரிவுகள் உள்ளன.
 
முழுமையாக அறிய : www.agritech.tnau.ac.in பாருங்கள். அகில இந்திய அங்கக விவசாயிகள் சங்கம் www.aiosindia.com பார்த்து உறுப்பினர் ஆகிடுங்கள்.
 
www.tnucd.net
 
www.ofai.org
 
www.ams.usda.gov
 
www.docnet.nic.in
 
www.ota.com
 
www.nabard.org
 
ஆகிய வலைதளம் பாருங்கள். பயிற்சி பெறுங்கள். இயற்கை வழி வேளாண்மை தொடங்குங்கள்.
- எம்.ஞானசேகர்,
விவசாய ஆலோசகர்
93807 55629
 
  • தொடங்கியவர்

மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் முன்மாதிரி திட்டம்: லாப நோக்கமின்றி சேவை செய்யும் டவுன் பஞ்., நிர்வாகம்

 

Tamil_News_large_1206067.jpg

 

ப.வேலூர்: மக்கும் குப்பையில் இருந்து மண்புழு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பதில், தமிழக அளவில் முன்மாதிரியாக, ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் செயல்படுவதால், மற்ற மாவட்ட அதிகாரிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 
நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகளில், 25,000 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு, வெற்றிலை, வாழை, தேங்காய் சாகுபடி, விவசாய இயந்திரங்கள் உற்பத்தி, கால்நடைகள் வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களில், முன்னிலையில் வகிக்கிறது. தினமும், டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம், வீடு மற்றும் வணிக நிறுவனங்களில், எட்டு டன் மக்கும் மற்றும் மக்காத குப்பை தனித்தனியாக சேகரிக்கப்படுகிறது.இவை, ப.வேலூர், பழைய பைபாஸ் ரோட்டில் உள்ள குப்பை கிடங்கில், தினமும், மக்கும் மற்றும் மக்காத குப்பையாக பிரித்து வைக்கப்படும். மக்கும் குப்பைகளான, காய்கறி கழிவுகள், உணவு கழிவுகள், வேளாண் கழிவுகள், கால்நடை கழிவுகள் ஆகியவற்றை, ஒன்றாக கலக்கி, சாணம் தண்ணீர் தெளித்து, 15 நாள் வெளியில் ஊறவைக்கின்றனர்.அதன்பின், ஊறவைக்கப்பட்ட மக்கும் குப்பைகளை, இதற்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட தொட்டியில் கொட்டி, 45 நாள் நிழலில் போட்டு, சாணி தண்ணீர் தெளித்து பராமரித்து வருகின்றனர். தொடர்ந்து, 45 நள் கழித்து, மக்கும் குப்பையாக இருந்த கழிவுகள், மண்ணாக மாறி உரமாகி விடுகிறது. இதை, மணல் சளிக்கும் சல்லடையில் போட்டு, சலிக்கின்றனர். அதில் கிடைக்கும் இயற்கை உரத்தை, கிலோ, ஒரு ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கின்றனர்.
 
சலிக்கும் போது மீதாமான குப்பை மற்றும் கழிவுகளை, மீண்டும் தொட்டியில் போட்டு ஊறவைக்கின்றனர். அதில், மண் புழுவை விடுகின்றனர். அந்த மண் புழுக்கள் குப்பையை சாப்பிட்டு, அது வெளியிடும் மலக்கழிவில், மண்புழு உரமாக மாறுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் மண்புழு உரம், கிலோ, மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டில் வளர்க்கும் பூ மற்றும் காய்கறி செடிகள் வளர்ப்போர், மண்புழு உரத்தை பெருமளவு வாங்கிச் செல்கின்றனர். டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், ஐந்து தொட்டிகள் அமைத்து, இயற்கை மற்றும் மண்புழு உரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. தற்போது, மேற்கண்ட உரங்களின் தேவை அதிகரித்து விட்டதால், 32 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கலன் அமைக்கும் பணி, அதேபகுதியில் நடக்கிறது.
 
செயல் அலுவலர் சந்திரன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ராஜகணபதி கூறியதாவது: தமிழகத்தில், பத்து டவுன் பஞ்சாயத்தில் மட்டுமே, மக்கும் குப்பையில் இருந்து மண்புழு மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. அதில், அதிகப்படியான உற்பத்தி மற்றும் விற்பனையில், ப.வேலூர் முதலிடத்தில் உள்ளது. மாதம் தோறும், இயற்கை மற்றும் மண்புழு உரம், 1.50 டன் அளவிற்கு உற்பத்தி செய்யப்பட்டு, லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையோடு விற்பனையாகிறது.ப.வேலூர் மட்டுமல்லாது, கரூர், ஈரோடு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும், உரங்களை வாங்கிச் செல்கின்றனர். முன்மாதிரியான திட்டம் என்பதால், பல உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள், தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து செல்கின்றனர். குறைந்த ஆட்களை கொண்டே, உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி ஆதவன். விவசாயமே எமது தாயகத்தின் முக்கிய தொழில். ஆனால் நீர்பற்றாக் குறை காரணமாக நலிவடைந்து வருகிறது.ஆண்டு தொறும் பெய்யும் மழைநீரைத் தேக்கினலாலே போதும்.எமக்குத் தேவையான நீர் கிடைத்து விடும் .இதற்கான திட்டங்களை உரியவர் நடைமுறைப் படுத்த முன்வரவேண்டும்.

  • தொடங்கியவர்

மகசூல் அதிகரிக்கப் புதுமைத் திட்டம்: ஆராய்ச்சி மண் வள அட்டை அறிமுகம்

 

landresource_2334016f.jpg

 

விவசாயிகளின் நிலங்களை அளவிட்டு, மண்ணை வகைப்படுத்தி, மகசூலை அதிகரிக்கும் பயிர்களைச் சாகுபடி செய்யும் ஆராய்ச்சி மூலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் வேளாண் துறையும் புதிய மாற்றத்துக்கு வித்திட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக மண் வகையை அறிந்து, மகசூலைப் பெருக்க மண் வள அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 
பிரிட்டிஷ் ஆட்சியில் வரி வசூலிக்கக் கிராமங்கள் வாரியாக நில அளவீடு செய்து, புல எண் வாரியாகக் கிராம வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவில் இந்த வரைபடங்களைக் கொண்டே நில அளவீடும், புல எண் வாரியாகக் கிராம வரைபடங்களும் கையாளப்பட்டு வருகின்றன.
 
முதுகெலும்பு
 
இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் நலனைக் காக்கவும், அவர்களுடைய தொழில் வளர்ச்சி பெறுவதற்கான மேம்பாட்டு வசதிகளையும் அறிவியல்பூர்வமாகத் திட்டமிட்டுச் செய்வது கானல் நீராகவே இருந்து வந்தது. இந்நிலையை மாற்றக் கிராமங்களில் புல எண் வாரியாக விவசாய நிலங்களைப் பிரித்து, மண்ணை வகைப்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் தற்போது புதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் வேளாண் துறையும் இணைந்து, தமிழகத்தில் உள்ள 385 ஒன்றியங்களில் 18 ஒன்றியங்களில் கிராமம் வாரியாக, புல எண் வாரியாக மண் வகையீட்டைச் செய்துள்ளன.
 
முதல்கட்டமாகச் சேலம் மாவட்டம் வீரபாண்டி, வாழப்பாடி மற்றும் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆகிய பகுதியில் 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை மண் வள ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
 
ஆராய்ச்சியின் முடிவு
 
ஆராய்ச்சி முடிவில் முன்னோர் கையாண்ட விவசாய முறைகளைப் புறக்கணித்ததே, தரிசு நிலங்கள் அதிகரித்ததற்கு முக்கியக் காரணம் என்பது கண்டறியப்பட்டது. தற்போது விவசாய நிலங்களில் மண் வளத்தை அறிந்து, அதற்குத் தகுந்த உரம், பயிர்களைச் சாகுபடி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
 
இதன்படி விவசாய நிலங்கள் புல எண் வாரியாக நிலத்தின் சரிவு, ஆழம், வறட்சி, சரளை கற்கள், கூழாங் கற்கள், மண் நயம், சுண்ணாம்பு சத்துயாக ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுக்கு மண் எடுக்கப்பட்டது. குழி தோண்டி அடி மண், மேல் மண், பாசன நீர் மாதிரிகளைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
 
ஆய்வின் முடிவில், ஒரே மாதிரியான மண் வகைகள் கொண்ட கிராமங்களைப் பிரித்து, மண் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. கணினி மூலம் புல எண் வாரியாக மண் வள வரைபடங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
பட்டியல் தயாரிப்பு
 
இந்த மண்ணுக்குப் பொருந்தக்கூடிய பயிர்கள், பொருந்தாத பயிர்கள், குறைவாகப் பொருந்தும் பயிர்கள், மண்ணில் உள்ள சத்துகள், தேவையான தழைச் சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்து, தாமிரம், துத்தநாகம், தாமிரம், இரும்பு, மாங்கனீசு உள்ளிட்ட சத்துகளின் அளவீடுகள் பதிவு செய்யப்பட்ட மண் வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவருகின்றன.
 
இதுகுறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக உதவி இயக்குநர் ப.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
 
தங்களுடைய விளை நிலங்களுக்குத் தேவையான சத்துள்ள உரங்கள், பயிரிட வேண்டிய பயிர்கள், ஒவ்வாத பயிர்கள், பாசன மாதிரி, உப்பு அளவு, மண் மேலாண்மை, பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் புதிய மண் வள அட்டை மூலம் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் சாகுபடி முறையை மாற்றி அதிக மகசூல் பெற்று, தொழில் முன்னேற்றம் காண முடியும் என்கிறார்.
 
 
  • தொடங்கியவர்

அணை தண்ணீர் திறக்காவிட்டாலும் பாதிப்பில்லை!

Tamil_News_large_1213223.jpg

 

 

கடந்த ஐந்து ஆண்டு களாக, இயற்கை உரம் பயன்படுத்தி நெல் சாகுபடி செய்து வரும், விவசாயி செந்தில்: மதுரை, குலமங்கலத்தைச் சேர்ந்தவன் நான். ராமநாத புரத்திற்கு கதிர் அடிக்கும் இயந்திரத்தைக் கொண்டு செல்லும் போது, அங்கே மானாவாரி முறையைத் தெரிந்து கொண்டேன்.
கடந்த ஐந்து ஆண்டு களாக மழையில்லாமலும், அணையில் தண் ணீர் திறக்காததாலும், விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் பலரும் தத்தளித்தனர். ஆனால், அப்போதும் நான், மானாவாரி முறையில், என் குடும்பத்திற்கு தேவையான அரிசியை அறுவடை செய்தேன்.
 
நிலத்தில் ஆட்டுச் சாணம், மாட்டுச்சாணம், மண்புழு உரம், தொழு உரம், தக்கப்பூண்டு, நெட்டி போன்ற உரங்களைப் போட்டு உழ வேண்டும். இவையெல்லாம் மண்ணோடு மண்ணாக மக்கி, மண்ணிற்கு ஏற்ற சத்தான உரமாக மாறிவிடும். பின், விதையை ஊற வைக்காமல், புழுதி உழவு மட்டும் செய்து, 30 கிலோ விதையை கைவாக்கில் துாவி விடுவேன். மறுபடியும் உழும்போது, விதையெல்லாம் மண்ணுக்குள் மறைந்து விடும். அடுத்து எப்போது மழை வருமோ, அப்போது விதை முளைக்கும்; 20 நாள் கழித்து கூட விதை முளைக்கும். இந்த முறை, ஒரு வாரத்திலே மழை பெய்தது. யூரியா போன்ற செயற்கை உரங்களைப் போாடாமல், 30 நாள் கழித்து, முழுவதும் இயற்கை முறையில் தயாரான கடல் பாசி உரத்தைப் பயன்படுத்துவேன். ஒரு ஏக்கருக்கு, எட்டு கிலோ கடல் பாசி உரம் தேவை; செயற்கை உரங்களைத் தொடவே மாட்டேன். தனியாக நாற்றங்கால் போட்டு நடுவது, அதற்கான கூலி ஆட்கள், ரசாயன மருந்து அடிப்பது போன்ற வழக்கமாகச் செய்யும் எந்தச் செலவும் இதில் கிடையாது. நாற்றங்கால் போட்டு அறுவடை செய்வதற்கு, 135 நாளாகும். ஆனால், நேரடி விதைப்பில் இதற்கு, 20 நாள் முன்கூட்டியே அறுவடை செய்து விடலாம். நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, 25 ஆயிரம் லாபம் பார்ப்பர். ஆனால், நான் ஒரு ஏக்கருக்கு, 7,000 ரூபாய் மட்டுமே செலவு செய்து, 25 ஆயிரம் லாபம் பார்க்கிறேன். இதில் கூடுதல் பலன், ரசாயனப் பாதிப்பு இல்லாத ஆரோக்கியமான அரிசி. ஒரு போக சாகுபடி செய்கிற இடத்தில், இரண்டு போக சாகுபடி செய்கிறேன். 20 நாள் முன்கூட்டியே அறுவடை செய்து விடுவதால், மாற்றுப்பயிராக உளுந்து போட முடிகிறது.
 
மானாவாரி முறையில் தண்ணீர் பயன்பாடும் குறைவு. ஆற்றில் தண்ணீர் வந்தாலும், வராவிட்டாலும் என் நிலத்தில் பயிர்களுக்கு, எந்தவிதப் பாதிப்பும் இல்லை. ஏனென்றால், புழுதி உழவு செய்வதால், மண்ணில் புழுதி விழும்போது நன்றாகத் தண்ணீரை உள்வாங்கி வைத்துக் கொள்ளும். ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால், என் நிலத்தின் மண்வளம், சத்துள்ளதாக மாறிவிட்டது.
 
  • தொடங்கியவர்

போன் செய்தால் வீட்டுச் சாப்பாடு கொடுக்கும்  'பிரம் ஹோம்'

 

Tamil_News_large_1217906.jpg

 

நண்பர்களின்ஊக்கமே காரணம்!போன் செய்தால் வீட்டுச் சாப்பாடு கொடுக்கும் வகையில், 'பிரம் ஹோம்' என்ற இணையதள சேவை நடத்தி வரும், வினோத் சுப்ரமணியன்: பி.டெக்., படித்த நான், கடந்த ஆண்டு வரை, சென்னையிலுள்ள எம்.என்.சி., கம்பெனியில் பணியாற்றி வந்தேன்.ஓசூர் சொந்த ஊர் என்பதால், இங்கு தங்கியபடியே பணியாற்ற வேண்டிய நிர்பந்தம். வீட்டுச் சாப்பாடு கிடைக்காது. உடல் நலன் கெடுவதுடன், ஓட்டல் சாப்பாடு, பாஸ்ட் புட் என்றாலே வெறுத்து விட்டது.

 

இந்நிலையில், என்னைப் போல் வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்குபவர்களுக்காக, வேலையை விட்டு விட்டு, 'பிரம் ஹோம்' என்ற சேவையை, கடந்த பிப்., 24ம் தேதி, மேடவாக்கம் பகுதியில் துவங்கினோம்.எங்களிடம் பணியாற்ற, 45 இல்லத்தரசிகள் விருப்பம் தெரிவித்தனர்.

 

எங்களுடைய ஆறு பேர் குழு, அவர்களுடைய சமையல் அறை, பயன்படுத்தும் பொருட்கள், ருசி ஆகியவற்றை ஆய்வு செய்து, இறுதியாக, 15 பேரைத் தேர்வு செய்தது.இவர்கள் சைவம், அசைவம் இரண்டிலும் கைதேர்ந்தவர்கள். இவர்கள் என்னென்ன உணவு வகைகளைத் தயார் செய்வர் என்ற விளக்கத்துடன், இணையதளத்தில் தெரிவித்தோம்.

 

வாடிக்கையாளர்கள் எங்களிடம் போனில் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட இல்லத்தரசியிடம் செய்ய சொல்லி, அதைப் பெற்றுக் கொடுக்கிறோம்.அதுவும், 3:00 மணி நேரத்துக்கு முன், எங்களுக்கு தகவல் சொல்ல வேண்டும். தாமதமாக தகவல் சொன்னால், 'ஆர்டர்'களை ஏற்றுக்கொள்ள இயலாது.

 

உணவை, 'பேக்' செய்வதற்குத் தேவையான பொருட்களை, இல்லத்தரசிகளுக்கு நாங்களே வாங்கி கொடுத்து விடுவதோடு, நாள் ஒன்றுக்கு வாங்கும் உணவுக்கான பணத்தையும் கொடுத்து விடுவோம்.எங்களது போக்குவரத்துச் செலவு, 'பேக்' செய்யப் பயன்படும் பொருட்களின் செலவு என, கூடுதலாக, 25 முதல், 30 ரூபாய் வரை அதிக விலை சேர்த்து, வாடிக்கையாளரிடம் பெற்று விடுவோம். மூன்று வேளையும் எங்களுடைய சேவை உண்டு. தற்போது, 20 பேர், ரெகுலர் வாடிக்கையாளர்கள் ஆகிவிட்டனர்.

 

இணையதளத்தைப் பார்த்து, பல பகுதிகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் போன் செய்து, 'டெலிவரி சார்ஜ் எவ்வளவு வேண்டுமோ வாங்கிக் கொள்ளுங்கள்' என்கின்றனர். சென்னை முழுவதும் இந்தத் திட்டத்தை நடைமுறைபடுத்த, முதலீடு தேவைப்படுவதால், அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம். மேலும் என்னுடன் பணியாற்றும் ஆறு பேரும், ஊழியர்கள் அல்ல; அனைவருமே நண்பர்கள். அவர்கள் தரும் ஊக்கத்தில் தான், என்னால் இதைத் துவங்கி நடத்த முடிகிறது!

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

  • தொடங்கியவர்

விளைநிலங்கள் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வு

 

vivasayam_2362148f.jpg

 

விவசாயம் தொடர்ந்து பொய்த்துக்கொண்டிருக்கும் சூழலில் அறிவியல் ஆய்வுகள் சில நம்பிக்கையளிக்கின்றன
 
நம் நாட்டின் எல்லா நகரங்களும் விரிவுபடுத்தப்படும்போது காடுகளும் தோட்டங்களும் விவசாய விளைநிலங்களுமே ஆக்கிரமிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலைப் பாது காப்பதில் நாட்டமுள்ள சிலரின் ஆட்சேபங்கள் பொருட்படுத்தப் படுவதில்லை. ஏதோ பெயருக்குச் சில மரங்களை நட்டுவிட்டுச் சமாதானமாகிவிடுகிறார்கள்.
 
நதிகளின் டெல்டாப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகத் தீவிரமான விவசாயத்தை மேற்கொண்டதால் அங்குள்ள மண் வளம் குறைந்து, விளைச்சலும் குறைந்திருக்கிறது. அணைகள் கட்டப்பட்டதால் விவசாய நிலங்களில் புதிய வண்டல் படிவதும் தடுக்கப்பட்டுவிட்டது. மண் வளமிழந்து போவது பல நாடுகளிலும் நடைபெறுகிற நிகழ்வு. விவசாய விஞ்ஞானிகள் அவ்வாறான நிலங்களுக்குப் புத்துயிரூட்டி அவற்றுக்கு வளத்தை மீட்டுத்தரப் பலவித உத்திகளைக் கையாளுகிறார்கள்.
 
அளவுக்கு மீறிச் சாகுபடி செய்யப்பட்டுச் சக்தியிழந்து போன மண்ணுக்குத் திரும்பவும் விளைச்சல் திறனை உண்டாக்கப் பழுப்பு நிலக்கரியையும் மரபு மாற்றம் செய்யப்பட்ட நுண்ணுயிரிகளையும் மண்ணில் கலக்கும் ஓர் உத்தியை ரஷ்ய விவசாய விஞ்ஞானி கள் உருவாக்கியிருக்கிறார்கள். அந்த உத்தி வியப் பூட்டும் வகையில் எளிமையானதாகவும் மிகுந்த பலனளிப் பதாகவும் உள்ளது.
 
பழுப்பு நிலக்கரித் தூள்
 
இந்த உத்தி தற்செயலாகக் கண்டறியப்பட்டதுதான். வளமிழந்த தோட்டங்களில் சுற்றுவட்டாரத்தில் கிடைத்த பழுப்பு நிலக்கரித் தூள் கலந்த மண்ணைப் பயன்படுத்தி ஆய்வுப் பாத்திகளை உருவாக்கி ஆராய்ச்சி செய்தபோது எதிர்பாராத விதமாக, அந்தப் பாத்திகளில் பயிரிடப்பட்ட தாவரங்கள் கூடுதலான பலன்களை அளித்தன.
 
பயிர்கள் மண்ணிலிருந்து ஊட்டச் சத்துகளை உட்கவர்ந்து வளர்கின்றன. அவை மடியும்போது அந்தச் சத்துகள் மீண்டும் மண்ணுக்கே போய்ச் சேர்ந்து விடுகின்றன. இது இயற்கையின் இயல்பான செயல் சுழல். தாவரங்கள் மண்ணில் புதைந்து மக்குகிறபோது பல வகையான நுண்ணுயிரிகள் அதில் உருவாகிப் பெருகிப் பழைய தாவரங்களைச் சிதைத்து அடுத்த தலைமுறைப் பயிர்களுக்கு ஊட்டச்சத்துகளாக விளங் கக்கூடிய சேர்மங்களாக மாற்றுகின்றன. ஆனால், தீவிரமான விவசாய நடவடிக்கைகளின்போது மண்ணுக்குத் திருப்பியளிக்கப்படுவதைவிட அதிகமான ஊட்டச்சத்துகளை அதிலிருந்து வெளியேற்றிக்கொண்டே யிருந்தால் சில ஆண்டுகளுக்குப் பிறகு மண் வளமற்றுப்போகும்.
 
அதன் பிறகு பெரும் பொருட்செலவில் செயற்கையான ரசாயன உரங்களைச் சரியான அளவிலும் சரியான காலங் களிலும் இட்டுத்தொடர்ந்து விவசாயம் செய்ய வேண்டும். அந்த ரசாயன உரங்கள் ஓரளவுக்கு மேல் பலனளிப்ப தில்லை. அவை சுற்றுச்சூழலையும் நீர் நிலைகளையும் மாசுபடுத்திவிடும். பாரம்பரியமான தானியங்களின் சுவையையும் மணத்தையும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட தானியங்களில் காண முடிவதில்லை. தொழு உரங்கள் ரசாயன உரங்களைவிடச் சிறந்தவை என்றாலும், அவற்றைச் சேகரிப்பது, மக்க வைப்பது போன்ற செயல்பாடுகள் காலம் பிடிப்பதுடன் கூடுதலான உழைப்பும் தேவைப்படுகிறவை.
 
பழுப்பு நிலக்கரி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்துபோன தாவரங்களிலிருந்து உருவானது. விவசாயப் பயிர்களையும் தோட்டப் பயிர் களையும் வளர்க்கத் தேவையான இன்றியமையாத எல்லாச் சத்துகளும் அதில் உள்ளன. அதில் நைட்ரஜன், கார்பன் போன்ற இயற்கையான ரசாயனங்கள் மிகுதியாக இருந்தாலும் உயிரிச் சேர்மங்கள் மட்டும் இல்லை. பழுப்பு நிலக்கரியை உண்டு ஜீரணித்து வளரக்கூடிய நுண்ணுயிரிகளைப் பழுப்பு நிலக்கரித் துகள்களில் வளரவிட்டு அவற்றில் உயிரியல் சத்துகளை உண்டாக்க முடியுமென ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 
பன்மடங்கு செயல்வேகம்
 
ஓர் எஃகுத் தொட்டியில் பழுப்பு நிலக்கரித் தூள்களை நீரில் கலந்து அதனுடன் சில வகை நுண்ணியிரிகளையும் சேர்த்தபோது ஆறு மணி நேரம் கழித்து அந்தக் கலவை கருப்பான ஒரு கூழாக மாறிவிட்டது. அது இயற்கையான மண்ணுக்குச் சமானமாக எல்லாப் பண்புகளையும் பெற்று வளமான விவசாய நிலங்களில் காணப்படும் கரிசல் மண்ணை ஒத்திருக்கும்.
 
அந்த மண்ணில் பூச்செடிகளும் காய்கறிச் செடிகளும் வேகமாக வளர்ந்து கூடுதலான விளைச்சலையும் தருகின்றன. பூச்செடிகள் ஒரு மாதம் முன்னதாகவே பூக்கத் தொடங்குகின்றன. வெள்ளரிச் செடிகளில் இரு மடங்கு அதிகமான காய்கள் காய்க்கின்றன. இயற்கையில் காணப்படும் நுண்ணுயிரிகளைப் போலவே செயற் கையாகச் சேர்க்கப்பட்ட நுண்ணுயிரிகளும் மண்ணைப் பதப்படுத்துகின்றன. ஆனால், அவற்றின் செயல்வேகம் பன்மடங்கு அதிகமாயிருக்கிறது. நம் நாட்டில் பழுப்பு நிலக்கரித் துகள்கள் கலந்த மண்ணுள்ள நிலங்களில் அத்தகைய நுண்ணுயிரிகளைக் கலந்து வளப்படுத்தலாம்.
 
விண்வெளி மண்
 
ரஷ்ய விஞ்ஞானிகள் அயோனைட் தாதுக்களிலிருந்து மஞ்சள் நிறமுள்ள மணலை உருவாக்கி, அதில் பயிர் களுக்குத் தேவையான பதினைந்து ஊட்டச் சத்துகளைக் கலந்து செயற்கை மண்ணைத் தயாரித்திருக்கிறார்கள். இந்த மண்ணை விண்வெளிக் கலங்களில் உணவுப் பயிர்களை வளர்க்கப் பயன்படுத்த முடியுமென நிரூபிக்கப் பட்டிருக்கிறது.
 
இந்த மண்ணில் தாவரங்கள் மிக விரைவாக முதிர்ந்து, குறுகிய காலத்தில் பலன் தருகின்றன. சாதாரண மண்ணிலுள்ள மாசுகள் அதில் இல்லாததால் கலப்படமில்லாத தாவரங்களை வளர்க்க முடிகிறது. அந்த மண்ணை முடிவேயில்லாமல் திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம். மண்ணை உருவாக்கும்போதே ஊட்டச் சத்துகளையும் நோயெதிர்ப்பு ரசாயனங்களையும் கலந்து விடுவதால் அவ்வப்போது தண்ணீர் மட்டும் விட்டால் போதும். லெட்டூஸ், பார்லி, தண்டுக்கீரை, முள்ளங்கி போன்ற 30 வகைத் தாவரங்களை வெற்றிகரமாகப் பயிரிட்டுச் சாதனை படைத்திருக்கிறார்கள். விண்வெளி மண் பரப்பப்பட்ட ஒரு சதுர மீட்டர் பரப்புள்ள பாத்தியில் முள்ளங்கி பயிரிட்டபோது 21 நாட்களில் 10 கிலோ முள்ளங்கி விளைந்தது. சாதாரண மண் பாத்தியில் 70 நாட்களுக்குப் பிறகு ஒரு கிலோ மட்டுமே கிடைத்தது.
 
விண்வெளிப் பயணங்களின்போதும், நீண்ட கடற்பயணங்களின்போதும் புதிய காய்கறிகளை அளிக்கும் செடிகளை வளர்க்க இத்தகைய செயற்கை மண் உதவும். ஒரு தாவரத்துக்கு 20 சென்டிமீட்டர் ஆழமுள்ள தொட்டியில் செயற்கை மண்ணை நிரப்பி, உயர்ந்து வளர 70 சென்டிமீட்டர் உயரமுள்ள இடமும் தந்தால் போதும். இவ்வாறான தாவரக் கூண்டுகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கித் தாவரங்களைப் பயிரிட்டு வளர்ப்பதன் மூலமாகத் தேவையான காய்கறி மற்றும் கீரை வகைகளைத் தினமும் பசுமை மாறாமல் பறித்து உண்ணும் வகையில் காய்கறித் தொழிற்சாலைகளாக உருவாக்கலாம். அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு இது மிகவும் ஏற்றது. வெயில் குறைவாக அடிக்கிற துருவப் பிரதேசங்களில் கூடச் செயற்கை ஒளியைப் பயன்படுத்தித் தாவரங்களை வளர்க்க முடியும்.
 
பயிர் ஆய்வாளர்களுக்கு இந்தச் செயற்கை மண் பெரிதும் உதவுகிறது. குறிப்பிட்ட பண்புகளைக் கொண்ட ஓர் இனத் தாவரத்தை வளர்த்து ஆராய்வதற்கு சுத்தமான, சுயம் மாறாத மண் அவசியம். அதன் மூலம் தாவரத்தின் செயல்களைத் திட்டமிட்டுக் கட்டுப்படுத்த இயலும். வேறு எந்தத் தாவரமும் வளர்ந்திருக்காத கன்னித்தன்மையுள்ள மண்ணாகச் செயற்கை மண் அமைகிறது.
 
- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).
 
 
  • தொடங்கியவர்

அதிக லாபம் தரும் நவீன தொழில்நுட்பம் - பாலி ஹவுஸ்' 

 

Tamil_News_large_1224756.jpg

 

'பாலி ஹவுஸ்' எனப்படும் நவீன பசுமைக்குடில் முறையில் பயிர் செய்து வரும் சீதாராமன்: திருவாரூர் மாவட்டம், ராயப்பன் சாவடியைச் சேர்ந்தவன் நான். லண்டனில் வணிகவியல் படித்த நான், விவசாயம் மீதான ஆர்வத்தால், புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, விவசாயம் செய்து வருகிறேன்.

 

நான், 25 சென்ட் நிலத்தில், நவீன பசுமைக்குடில் அமைத்து உள்ளேன். இதற்கு, 12 லட்சம் ரூபாய் செலவானது; இதற்கு, அரசின் மானியமும் கிடைக்கிறது.நவீன முறையிலான இந்த பசுமைக் குடில், ஆண்டு முழுவதும் வெளிப்புறத்தில் எந்த மாதிரியான தட்பவெப்ப நிலை மாறினாலும், உட்புறத்தில் ஒரே மாதிரியான வெப்ப நிலை, ஈரப்பதத்தை தக்க வைத்து, எல்லா காலநிலைகளி லும் பயிர்கள் வளர உதவுகிறது.இந்த முறையில் அனைத்துச் செடிகளும், பாலித்தீன் பைகளில் தென்னை நார்கழிவு மற்றும் மண் கலந்த கலவையில் நடவு செய்துள்ளேன். இதனால், எவ்வளவு செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன;

 

அதில் எங்கெங்கு என்னென்ன பூச்சிகள் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன; எந்தச் செடியில் எவ்வளவு மகசூல் பெற முடியும் என, நம்மால் எளிதில் கணக்கிடலாம்.இந்தக் குடிலின் உள்ளேயே வெப்ப நிலை, ஈரப்பதம் உள்ளிட்ட காலநிலைகளை அளவிடும் கருவிகள் உள்ளதால், தட்ப வெப்பம் மாறும்போது, நம்மால் அதற்குத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.

 

அதுமட்டுமின்றி, இந்தக் குடிலில் தட்பவெட்ப நிலை சீராக இருப்பதால், நாம் செடிகளுக்குச் செலுத்தும் தண்ணீர், எளிதில் ஆவியாவதில்லை. மேலும், சொட்டு நீர்ப் பாசன முறையை பயன்படுத்துவதால், மிக மிகக் குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு, அதிக அளவில் சாகுபடி செய்யலாம்.இந்தக் குடிலில் வெள்ளரி, மலர்கள், காய்கறிகள், காளான் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் செய்யலாம். எல்லா நேரமும் சந்தை வாய்ப்பு இருக்கும் என்பதால், வெள்ளரி பயிர் செய்தேன்.ஒரு பாலித்தீன் பையில், மூன்று செடிகள் வளர்க்கலாம். இவ்வாறு மொத்தம், 3,312 செடிகள் வைத்துள்ளேன். இந்தப் பயிரில், எந்த ரசாயன உரமும் பயன்படுத்தாமல், இயற்கை இடுபொருட்களை மட்டும் இடுவதால், நல்ல மகசூல் கிடைக்கிறது.பாலி ஹவுஸ் முறையில் செய்வதால், குறைந்த அளவு இடத்தில், குறைந்த ஆள் மற்றும் தண்ணீர் செலவில் அதிக லாபம் ஈட்ட முடிகிறது. இந்தப் பசுமைக் குடிலின் வெள்ளரி சாகுபடி மூலமாக, ஆண்டுக்கு, 7 - 8 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில், வெள்ளரியுடன், காளான் மற்றும் மலர்கள் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளேன்!தொடர்புக்கு: 96007 72360.

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

புத்துயிர் தந்த பால் காளான் வளர்ப்பு: மாதம் ரூ. 2 1/2 லட்சம் வருமானம்

 

mushroom_2378227g.jpg

 

“பதினைந்து சென்ட் இடமும் ஏழு லட்ச ரூபாய் முதலீடும் இருந்தால் மாதம் ரெண்டரை லட்சம்வரை சம்பாதிக்கலாம்’’ என்கிறார் காளான் உற்பத்தியில் சாதித்திருக்கும் மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த ராஜ்குமார்.
 
எம்.காம்., பட்டதாரியான ராஜ்குமாரும் பி.பி.இ., படித்த ஸ்ரீ பிரியாவும் காதலித்துக் கரம்பிடித்தவர்கள். பொற்கொல்லரான ராஜ்குமார், பத்து வருடங்களுக்கு முன்பு நகைத் தொழில் நலிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கியபோது பெரிதும் பாதிக்கப்பட்டார். வீட்டிலிருந்த பொருட்களை விற்றுச் சாப்பிடும் அளவுக்கு, அவரது பொருளாதார நிலை சுருங்கியது. கடன் தொல்லை தந்த நெருக்கடியால் இருவரும் தற்கொலைக்கு முயற்சித்தார்கள். சரியான நேரத்தில் மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதால் பிழைத்தார்கள்.
 
புத்துயிர் தந்தது
 
இந்தப் பின்னணியில் ‘நம்மாலும் வாழ முடியும்’ என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்தது பால் காளான் வளர்ப்பு. “அந்தச் சம்பவத்துக்குப் பிறகு வாழ்ந்து காட்டணுங்கிற வெறி எங்களுக்குள்ள ஏற்பட்டுச்சு. நண்பர்கள் ஆறு பேரைச் சேர்த்துக்கிட்டு கொடி முருங்கையை விலைக்கு வாங்கி, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பிச்சேன். வீட்டுச் செலவு போக, கூடுதலா கொஞ்சம் வருமானம் கிடைச்சுது. அதை மூலதனமா வைச்சு, அடுத்து என்ன பண்ணலாம்னு நாங்க யோசிச்சப்ப காளான் உற்பத்தியைப் பத்தி கேள்விப்பட்டேன்.
 
பட்டன் காளான், சிப்பிக் காளான், பால் காளான் என மூணு காளான் வகைகள் சந்தையில் இருக்கு. பால் காளான் பத்து நாள் வரைக்கும் கெட்டுப் போகாது. மத்த ரெண்டுக்கும் ஆயுசு ஒருநாள்தான்.
 
தமிழ்நாட்டோட தட்பவெட்ப நிலைக்கு ஏற்றதாக இருக்கிறது மட்டுமில்லாம, உற்பத்தி செலவும் பால் காளானுக்குக் குறைவு. அதனால, பால் காளான் உற்பத்தியைக் கத்துக்கிட்டோம். இது தொடர்பான பயிற்சி வகுப்புகள்ல ரெண்டு பேருமே கலந்துக்கிட்டோம். பால் காளான் வளர்க்க ஆரம்பிச்சபோது, நஷ்டம்தான் கிடைச்சது.
 
இருந்தாலும் மனம் தளராம எங்களுடைய அனுபவங்களையே பாடமாக்கி உழைக்க ஆரம்பிச்சோம். உழைப்பு வீண் போகல. பயிற்சியின்போது பதினொன்றுக்கு முப்பத்து மூன்று அடி ஷெட்டுல 10 கிலோ காளான் உற்பத்தி பண்ணலாம்னு சொல்லிக் குடுத்தாங்க. ஆனா, நாங்க அதே ஷெட்டில் 30 கிலோ காளான் உற்பத்தி பண்ற அளவுக்கு நுணுக்கத்தைக் கத்துக்கிட்டோம்’’ முகம் பிரகாசிக்கச் சொல்கிறார் ராஜ்குமார்.
 
எப்படி வளர்ப்பது?
 
பால் காளான் விதைத்த 35-வது நாளிலிருந்து மகசூல் கொடுக்கும். ஒரு விதைப்புக்கு மூன்று முறை அறுவடை எடுக்கலாம். விதைத்த அறுபதாவது நாளில் மொத்த அறுவடையும் எடுத்துவிட்டு, அடுத்த விதைப்புக்குத் தயாராக வேண்டும். 350 கிராம் எடை கொண்ட பால் காளான் பாக்கெட் விதை 40 ரூபாய்.
 
ஒரு கிலோ பால் காளான் 150 ரூபாய். 50 கிலோ பால் காளான் உற்பத்தி செய்வதற்கு 500 லிட்டர் தண்ணீரும், 60 யூனிட் மின்சாரமும் தேவை. வேலை ஆட்களும் அதிகம் தேவையில்லை. இவர்களுடைய பண்ணையில் நிறுவிய 3 பேர் தவிர, வேலைக்குத் தனியாக மூன்று பேர் இருக்கிறார்கள்.
 
’’கடினமான வேலை இல்லைன்னாலும், இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தையைப் போல் காளானை ரொம்ப கவனமா வளர்க்கணும். காளான் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட வைக்கோலுடன் வெல்லம் சேர்த்துக் கால்நடைகளுக்குக் கொடுத்தால் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். இயற்கை உரமாகவும் பயன்படுத்தலாம். காளான்களுக்குச் சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறதால, இன்னும் பத்து வருஷத்துக்கு இந்தத் தொழிலில் போட்டியே இருக்காது.
 
நிச்சய வருமானம்
 
நாங்கள் உருவாக்கிக் கொடுத்த காளான் பண்ணைகளை வைத்து, மாநிலம் முழுக்க 40 குடும்பங்கள் பிழைத்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாகச் சென்னை ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் காளான் வளர்ப்பில் அதிக ஆர்வமாய் இருக்கிறார்கள்.
 
காலத்துக்கேற்ப நவீன உத்திகளையும் கையாண்டு வருவதால், உற்பத்தி செலவு இன்னும் குறையும். இப்போது மாசம் 2000 கிலோவரை பால் காளான் உற்பத்தி செய்கிறோம். இதுல ரூ. 3 லட்சம் வருமானம் கிடைக்கும். எல்லாச் செலவுகளும் போக, எங்களுக்கு மாசம் ரூ. 2 1/2 லட்சம் கையில தங்கும்.
 
15 சென்ட் இடமும் ஏழு லட்ச ரூபாயும் இருந்தால் இதே வருமானத்தைப் பெறமுடியும். அது மாத்திரமில்லாமல், ஆறே மாதத்தில் போட்ட முதலீட்டை எடுத்துடலாம்’’ உத்தரவாதமாகச் சொல்கிறார் ராஜ்குமாரின் மனைவி ஸ்ரீ பிரியா.
 
ராஜ்குமார் தொடர்புக்கு: 99524 93556
 
priya_2378226g.jpg
 
  • 3 weeks later...
  • தொடங்கியவர்
வறட்சிக்குப் பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் பழத்தோட்டம்: வளமான பூமியாக மாற்றிய பஞ்சாப் விவசாயிகள்
 
 
நன்றி பெருமாள்
  • தொடங்கியவர்

தேனீ வளர்ப்பில் புதுமை சாதிக்கும் முன்னாள் பொறியாளர்

 

bee_2400562f.jpg

 

பல ஆயிரம் சம்பளம், பதவி உயர்வு, வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஆகியவற்றை அளித்த மென்பொருள் துறையைக் கைவிட்டுவிட்டு, தேனீ வளர்ப்பில் பல புதுமைகளைச் செய்துவருகிறார் கிருஷ்ணமூர்த்தி.
 
கரூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பொறியியல் பட்டதாரி. படித்து முடித்ததும், பெங்களூரு, சென்னை ஆகிய பெருநகரங்களில் மென்பொருள் துறையில் பல ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றிவந்தார். பெருநகர வாழ்க்கை, மென்பொருள் துறையின் அழுத்தம் காரணமாக வேலையைத் தொடர அவருக்கு விருப்பமில்லை. குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி வேலையைத் துறந்தார். மனம் தளராமல், தனது தேடுதலைத் தொடர்ந்தார்.
 
தேடல் நிறைவு
 
ஓராண்டு காலத் தேடலில் அவருக்குக் கிடைத்ததுதான் தேனீ வளர்ப்பு. வெளிநாடுகளில் வேலை பார்க்கும் அவருடைய நண்பர்கள் மூலம், இது தொடர்பான பல்வேறு தகவல்களைத் திரட்டினார். எந்த முன்அனுபவமும் இல்லாமல் மூன்று ஆண்டுகளுக்கு முன் தேனீ வளர்ப்பில் இறங்கினார். அதில் அவர் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளுக்கு யாரும் தீர்வு தரவில்லை. தனக்குக் கிடைத்த அனுபவத்தில் இருந்து, அவரே ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வைக் கண்டறிந்தார்.
 
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில் தேன் உற்பத்தி மேற்கொண்டுவருகிறார். இதற்காக இத்தாலியத் தேனீக்களை வாங்கியிருக்கிறார்.
 
பல வகை தேன்
 
தேனீ வளர்ப்பில் தனித்தன்மையை விரும்பிய அவர், ஒரே வகையான மலர்களில் இருந்து பெறப்படும் தனித்தன்மை வாய்ந்த தேனை உற்பத்தி செய்ய முடிவெடுத்தார். ஒரே வகை மலர் தேனைப் பெறுவதற்காகக் கொத்தமல்லி, செங்காந்தாள், மா, முருங்கை, சூரியகாந்தி, வேம்பு உள்ளிட்ட பல வகையான தேனைத் தற்போது உற்பத்தி செய்துவருகிறார்.
 
ஒவ்வொரு வகை மலரில் இருந்து பெறப்படும் தேனுக்கும் வித்தியாசமான மணம், நிறம், சுவை இருக்கும். எந்த வகை மலர்களில் இருந்து தேனைச் சேகரிக்க விரும்புகிறாரோ, அந்தத் தாவரம் அதிகமுள்ள தோட்டங்களில் தேனீ வளர்க்கும் பெட்டிகளை வைத்துத் தேனைச் சேகரிக்கிறார்.
 
இதன் மூலம் பயிர் உற்பத்தி 30 சதவீதம்வரை அதிகரிக்கிறது. தேனீக்கள் மகரந்தச் சேர்க்கைக்குப் பெரிதும் உறுதுணையாக இருப்பதால், தங்கள் தோட்டத்தில் தேனீ பெட்டியை வைக்க விவசாயிகள் விருப்பம் தெரிவிக்கிறார்கள். தேனீ வளர்ப்பு குறித்துப் பயிற்சியும் வழங்கி வருகிறார்.
 
நல்ல விலை
 
பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட தேன், பாரம்பரிய மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கான சிறப்புத் தேனையும் கிருஷ்ணமூர்த்தி உற்பத்தி செய்துவருகிறார். தரமான தேன் என்றால் நல்ல விலை கொடுக்க வாடிக்கையாளர்கள் தயங்குவதில்லை.
 
மக்களுக்கு நியாயமான விலையில் தேனை வழங்கவும், உற்பத்திச் செலவு கட்டுப்படியாகவும் தானே நேரடியாகத் தேன் விற்பனையை மேற்கொண்டுள்ளார். தேன் கிலோ விலை ரூ. 716. ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்குப் பார்சல் மூலம் தேனை வீட்டுக்கு அனுப்புகிறார்.
 
இணையதளம்: www.honeykart.com
 
கிருஷ்ணமூர்த்தி தொடர்புக்கு: 91503 70525
 
  • தொடங்கியவர்

வெற்றிலை சாகுபடி தரும் மாதம் ரூ. 70 ஆயிரம்

 

vetrilai_2408351f.jpg

 

சுப நிகழ்ச்சிகளிலும் கோவில் பூஜைகளிலும் கமகமக்கும் வெற்றிலைக்கு முக்கியப் பங்கு உண்டு. முதியோர்கள் பலரைப் போலவே, கிராமத்து இளைஞர்களிடமும் வெற்றிலை போடும் பழக்கம் இருந்துவருகிறது. சித்த வைத்தியத்திலும் வெற்றிலை பயன்படுத்தப்பட்டுவருகிறது. இப்படிப் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிலை, தேனி மாவட்டத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.
 
சப்பை தண்ணீரில்
 
வெற்றிலையில் இரண்டு வகை உண்டு. முதல் வகையான திருச்சி கொடி வெற்றிலை வெள்ளை நிறத்தில் இருக்கும், இரண்டாவது வகையான நாட்டு வெற்றிலை, கறுப்பு நிறத்தில் இருப்பதால் கறுப்பு வெற்றிலை என்று அழைக்கப்படுகிறது.
 
வெள்ளை வெற்றிலை சாகுபடிக்கு நல்ல தண்ணீர் மட்டுமே தேவைப்படும். சப்பை தண்ணீரில் விளைச்சல் இருக்காது. ஆனால் நாட்டு வெற்றிலைக்குச் சப்பை தண்ணீரே போதும் என்கிறார் சின்னமனூர் வெற்றிலை விவசாயி பாப்புராஜ். கடந்த 25ஆண்டுகளுக்கு மேலாக நாட்டு வெற்றிலை சாகுபடி செய்துவரும் இவர், வெற்றிலை சாகுபடிக்குக் கரம்பை மண் ஏற்றது என்கிறார். வெற்றிலை சாகுபடி நுட்பங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டது:
 
அகத்தி மரத்துடன்
 
முதலில் அகத்தி விதையை விதைத்துச் செடி வளர்க்க வேண்டும். 60 நாட்கள் கழித்துச் செடி சுமார் அரை அடி உயரம்வரை வளர்ந்த பின், வெற்றிலை கொடி பதியம் போட்டு ஒவ்வொரு அகத்திச் செடிக்கும் ஒரு அடி இடைவெளியில் இயற்கை உரம் இட்டு நடவு செய்ய வேண்டும். கடுமையான வெயில் அடித்தால் வெற்றிலைக் கொடி கருகிவிடும். காற்று பலமாக வீசினாலும் கொடி சேதமடைந்துவிடும். அதனால் கொடி நன்கு வளர்ந்து அகத்தி மரத்தின் மீது படரும்வரை, வெற்றிலை கொடிக்காலைத் (தோட்டம்) சுற்றிச் சூரிய ஒளி மற்றும் காற்று புகாதவாறு தென்னங்கீற்றால் வேலி அமைக்க வேண்டும்.
 
ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 120 நாட்கள் கழித்துக் கிள்ளத் (பறிக்க) தொடங்கிவிடலாம். மூன்று ஆண்டுகள்வரை 30 நாட்களுக்கு ஒருமுறை பறித்துக்கொண்டே இருக்கலாம். நோய் தாக்காமல் இருக்க, ஒவ்வொரு முறை பறித்த பின் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டும்.
 
ரூ. 70 ஆயிரம்
 
அகத்தி மரம் வளர்ந்த பின் அகத்திக் கீரையை வெட்டி வெற்றிலை கொடிக்கு உரமாக இடலாம். அது மண்ணில் மக்கி இயற்கை உரமாக மாறிவிடும். மேலும் ஊடுபயிராக வாழை, பச்சை மிளகாய் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்ய ரூ. 2.50 லட்சம் செலவு ஆகிறது. நடவு செய்த பின்னர் 30 நாட்களுக்கு ஒருமுறை ஆயிரத்து 500 கிலோவரை வெற்றிலை பறிக்க முடியும்.
 
சராசரியாக ஒரு கிலோ நாட்டு வெற்றிலை ரூ.60-க்கும், வெள்ளை வெற்றிலை ரூ.100-க்கும் விற்பனையாகிறது. முகூர்த்தக் காலங்களில் இன்னும் கூடுதலாக விலை கிடைக்கும். செலவு செய்தது போக மாதத்துக்கு ரூ. 70 ஆயிரம்வரை லாபம் கிடைக்கும். பல மாவட்டங்களில் சப்பை தண்ணீர் மட்டுமே கிடைப்பதால், நாட்டு வெற்றிலை சாகுபடி சிறந்தது.
 
- விவசாயி பாப்புராஜ்
தொடர்புக்கு: 94865 03491
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.