Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் இரவுகளும் வெள்ளைவான் கடத்தல்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இரவுகளும் வெள்ளைவான் கடத்தல்களும்

கருணாகரன்

f9e6d9ff-57ab-43c5-a789-33d4672c4a9b1.jp

லீனா மணிமேகலையின் 'White Van Stories' (வெள்ளைவான் கதைகள்) - கொடிய வாழ்க்கையின் நேரடிச்சாட்சியம்

வயதை மீறி, ஒடுங்கிய கன்னங்களோடும் ஒளிமங்கிய கண்களோடும் ஓர் இளம் பெண், கையிலே தன்னுடைய கணவரின் படத்தை ஏந்திக் கண்ணீர் விட்டபடி கதறி அழுது கொண்டிருக்கிறாள். அவளின் இடுப்பில் ஒரு குழந்தை. அவளுடைய கால்களைப் பற்றி அணைத்தபடி இன்னும் இரண்டு பிள்ளைகள். ஐந்து ஆண்டுகளாக தன்னுடைய கணவரைத் தேடிக்கொண்டிருக்கிறாள். 2009 இல் ஒரு முன்னிரவில் திடீரென அவர்களின் வீட்டுக்கு வந்த யாரோ அவளுடைய கணவரைக் கடத்திக் கொண்டு போனார்கள். அவள் அழுது புலம்பினாள். காற்றிலே அவளுடைய குரலும் அவளுடைய கணவரைக் கடத்திச் சென்ற 'வாகனத்தின்' சத்தமும் கரைந்தடங்கியதே தவிர, கணவர் மீளவில்லை. அன்று தொடக்கம் அவளுக்குக் கிடைத்த ஒரே பதில், 'இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்' என்பது மட்டுமே. அவளுடைய பிள்ளைகள் அவளைத் தினமும் கேட்கின்றன - 'இன்றிரவு இரவுச்சாப்பாட்டுக்கு அப்பா வருவாரா?' என்று. அதற்கு அவளால் பதிலளிக்க முடியவில்லை. இந்த மாதிரிக் கண்ணீருடன் வாழும் வாழ்க்கை கொடியது. இந்த கொடிய வாழ்க்கையையும், இந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்ற மனிதர்களையும் உலகத்தின் முன்னே காட்சி ரூபமாக நிறுத்தியிருக்கிறார் லீனா மணிமேகலை.

'வெள்ளைவான் கதைகள் (White Van Stories) என்ற ஆவணப்படம் (Documentry Film) மூலமாக இலங்கையில் கண்ணீருடன் வாழும் மனிதர்களையும், அவர்களுடைய தீராத் துயரக் கதைகளையும், அவர்களின் வாழ்க்கையையும் லீனா தருகிறார். பல ஆண்டுகளாகக் காணாமல்போன உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களின் கதையே White Van Stories (வெள்ளைவான் கதைகள்). கடந்த நாற்பது ஆண்டுகளாக இலங்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் கிளர்ச்சிகள், புரட்சிகள், போராட்டங்கள், மோதல்கள், ஒடுக்குமுறைகள், அதிகாரப் போட்டிகள் மற்றும் உள்நாட்டுப் போர் என்பவற்றினால் ஏராளமான மனிதர்கள் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் இது முடிவில்லாக் கதைதான். புரட்சியாளர்கள், போராட்டத் தலைவர்கள் மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகள், சாதாரண மக்கள், மதகுருக்கள், பெண்கள், சிறுவர்கள் ஏன் படையினர் எனப் பலரும் காணாமற்போனோரின் பட்டியலில் சேர்த்தி. இதை இன்னொரு வகையாகவும் சொல்ல முடியும். கணவன்மார், மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள், தந்தையர்கள், சகோதரர்கள் என்று உறவு நிலையில் இது உள்ளது. இதுதான் தாக்கத்தை அதிகம் உண்டுபண்ணுவது.

பொதுவெளியில் போராளியாகவோ, புத்திஜீவியாகவோ, பத்திரிகையாளராகவோ, மதகுருவாகவோ, போராட்டத் தலைவராகவோ, படையினராகவோ உணரப்படும் ஒருவர் குடும்பத்திலும் உறவுகளிடத்திலும் வேறு விதமாகவே உணரப்படுகின்றார். பொதுவெளியில் இத்தகைய ஒருவரின் காணாமற் போதல் உண்டாக்கும் தாக்கம் ஒரு வகையாகவும் குடும்பத்தில் அது இன்னொரு வகையாகவும் உள்ளது. பல வேளைகளிலும் குடும்பத்தில் இந்தக் காணாமற் போதல் உண்டாக்கும் பாதிப்பு மிக மிக அதிகம். அதிகம் என்பதை விட உச்சம். காணாமற் போனவர்களினால் பொதுவெளியில் உண்டாகும் பாதிப்பை இன்னொரு தரப்போ, காலநீட்சியோ சில வேளைகளில் மங்க வைத்து விடக்கூடும். ஆனால், குடும்பத்தில் அப்படியல்ல. அது தலைமுறைகளாக நீடிக்கிறது. முடிவற்ற துயராக, எதனாலும் எளிதிற் கடந்துவிட முடியாத கடினமான ஒரு நிலையாக அந்தக் குடும்பத்தை அது வாட்டி வதைக்கிறது. தலைமுறைத் துயராக, தனிமையாக, பிரிவின் கொடிய வலியாக, முடிவே தெரியாத தவிப்பாக தொடரும் இந்த விவகாரத்தை எவரும் தீர்த்து வைக்கவில்லை. எவராலும் தீர்த்து வைக்கவும் முடியாது. ஆனால், இந்தத் துயரத்துக்கு முற்றுப்புள்ளியை எப்படி வைப்பது? அதை யார் வைப்பது? இந்த இழப்புக்கு நிவாரணம் என்ன? அதை எப்படி, யார் வழங்குவது? இது இழப்புத்தானா? அப்படியென்றால் இதை இழப்புத்தான் என்று உறுதியளிப்பது யார்? இந்தக் கேள்விகளையே லீனா மணிமேகலை 'வெள்ளைவான் கதைகளில்' கவனப்படுத்தியிருக்கிறார்.

சுதந்திர இலங்கையில் 40 ஆண்டுகளாகக் காணாமற் போனோரைத் தேடிக்கொண்டிருக்கும் கதைகள் ஏராளம். 1971இல் ஜே.வி.பி என்ற மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது கிளர்ச்சியின்போது இந்தக் காணாமல் போகும் துயரக்கதை தொடங்கியது. அப்பொழுது சிறிமாவோ பண்டாரநாயக்கா உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெயரோடு ஆட்சியிலிருந்தார். ஏற்பட்ட கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார் சிறிமாவோ. ஒரு பெண்மணி இப்படிக் கொடூரமாக இரத்தம் சிந்த வைப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், அரசும் ஆட்சியும் என்று வந்துவிட்டால், அதன் மேல் யார் இருந்தாலும் இப்படித்தான் ஒடுக்கும் இயந்திரம் செயற்படும் என்பது நிரூபிக்கப்பட்டது. கொலைகளும் காணாமற்போதல்களும் பாலியல் வன்முறைகளும் கேட்பாரின்றித் தடுப்பாரின்றித் தாராளமாக நடந்தன. அழகி மனம்பெரி சிதைக்கப்பட்டதும் இந்தச் சந்தர்ப்பத்தில்தான். அப்படியெல்லாம் நடந்தாற்தான் புரட்சியை ஒடுக்கலாம் என்பது அரச இயந்திரத்துக்குத் தெரியும். எனவே அதன்படியே அனைத்தும் நடந்தன.

அதற்குப் பிறகு, தமிழ்ப்போராளிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் தொடங்கிய போராட்டமும் மோதல்களும் பலிகளையும் கொலைகளையும் காணாமற்போதல்களையும் பாலியல் வன்முறைகளையும் தாராளமாக்கியது. இடையில் போராளி இயக்கங்களுக்கிடையில் நடந்த மோதல்கள் வேறு ஏராளம் கொலைகளையும் பல ஆயிரக்கணக்கான காணாமற்போதல்களையும் உண்டாக்கின. 80களின் நடுப்பகுதியில் இது உச்சம். தமிழ் இயக்கங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல்களும் முரண்பாடுகளும் இன்னொரு நிலையில் கொலை, பலி, ஆட்கடத்தல், காணாமற்போதல் என்றாக்கியது. அரச ஒடுக்குமுறைக்கு எதிராக எழுதிய, பேசிய, செயற்பட்டவர்களிற் பலரும் கூட இப்படித்தான் கொல்லப்பட்டனர். கடத்தப்பட்டுக் காணாமற்போயினர். இப்படியெல்லாம் காணாமற்போனவர்கள் இன்னும் காணாமல் போனவர்களாகவே உள்ளனர். இவர்களை எங்கே தேடுவது? இவர்களைப் பற்றிய தகவல்களை யாரிடம் கேட்பது? என்பது ஒரு நீளும் தடுமாற்றம். யாரிடம் கேட்டாலும் பதிலற்ற கேள்விகளே மிஞ்சுகின்றன. எங்கே தேடினாலும் அதெல்லாம் தகவலற்ற தேடுதல்களாகவே இருக்கின்றன. அரசாங்கத்திடம் கேட்கலாம். அரசாங்கத்திடம்தான் கேட்கவும் வேணும். ஆனால், அதற்குப் பதில் கிடையாது.

1971 இற்குப் பிறகு ஆட்சிக்கதிரையில் பலர் ஏறி இறங்கி விட்டார்கள். பல காட்சிகள் மாறி விட்டன. ஆனால், எவரும் இந்தத் துயரத்துக்கு முடிவைக் காணவில்லை. எவரும் இதைக் குறித்துச் சிந்திக்கவுமில்லை. எவரும் இதைப் பொறுப்பெடுக்கவுமில்லை. அதற்கு யாரும் தயாராகவும் இல்லை. இந்த நிலையைப்பற்றிச் சிந்திக்காமலே மக்களும் ஒவ்வொரு தடவையும் ஆட்சியாளர்களைத் தெரிவு செய்கிறார்கள். புதிதாக ஆட்சிக்கு வருகின்றவர்கள், தங்கள் பங்குக்கும் பலியெடுக்கிறார்கள். கொலை செய்கிறார்கள். ஆட்கடத்தலை நடத்துகிறார்கள். இதற்கெல்லாம் முடிவும் இல்லை. பதிலும் இல்லை. இந்தக் கொலைகளில், பலிகளில், கடத்தல்கள், காணாமற்போகடிக்கப்பட்ட செயல்களில் அரசாங்கத்துக்கு மட்டுமின்றி, இயக்கங்கள், ஆயுதக்குழுக்கள் எனப் பலவற்றுக்கும் பங்குண்டு என்றபோதும் எந்த அமைப்பும் இதைக் குறித்து எந்தப் பதிலையும் தருவதற்கில்லை. எந்தத் தலைவரும் இதைப் பொறுப்பெடுப்பதாகவும் இல்லை. இந்த நிலையில் காணாமற்போனோரின் உறவினர் ஆண்டுக்கணக்காகத் தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாகத் தெருத்தெருவாக அலைகின்றனர். குருட்டு நம்பிக்கைகளோடு இரவும் பகலும் கனவுகளைக் காண்கின்றனர். காணாமற்போன பிள்ளையோ புருசனோ சகோதரனோ எங்கேனும் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் கோயில்களில் பூக்களை வைத்துப் பிரார்த்திக்கின்றனர். சுடரேற்றி மன்றாடுகின்றனர். சாத்திரிகளிடம் தங்களைக் கொடுத்துக் காத்திருக்கின்றனர். வருவோர், போவோரிடமெல்லாம் எங்கள் உறவுகளைத் தேடித்தாருங்கள் என்று கெஞ்சி மன்றாடுகின்றனர். விண்ணப்பங்களாகவும் கடிதங்களாகவும் எல்லோருக்கும் எழுதிக்கொண்டிருக்கின்றனர். என்றாலும் எதற்கும் எவரிடத்திலும் பதிலில்லை.

பலியிலும் கொலையிலும் ஒருவரைப்பற்றிய முடிவு தெளிவாகத் தெரிந்து விடும். நடந்தது குரூரமான கொலையாக இருந்தாலும், அது பேரிழப்பாக இருந்தாலும் அதற்குப் பிறகு அவரைத் தேடும் அவசியம் கிடையாது. ஆனால், காணாமற்போதலின் நிலை அப்படியல்ல. அது முடிவில்லாத பல கேள்விகளையும் அந்தரிப்புகளையும் உண்டாக்கும் பெருவலியுடையது. காணாமற்போனவர் உயிரோடிருக்கிறாரா இல்லையா என்று தெரியாத நிலை பேரவலத்திற்குரியது. எந்த முடிவுக்கும் வரமுடியாமல் தினமும் வருவார், வருவார் என்று வாசலைப் பார்த்துக்கொண்டிருக்கும் பதற்றமான நிலை கொடுமையானதன்றி வேறெப்படி இருக்க முடியும்?

'இந்த மலர் வளையம்

எந்தப் பெயரையும் கொண்டிருக்கவில்லை

இது உனக்கானது

உனக்கு எந்தக் கல்லறையுமில்லை

பூமியின் உன் இடத்தை

ஒருவராலும் அறிந்து கொள்ள முடியவில்லை

இந்த மலர் வளையம்

உனக்காக வீதியோரத்தில் வைக்கப்பட்டுள்ளது

என்னை மன்னித்து விடு

வீதியோரத்தில் உன் நினைவுகளை நிறுத்தியதற்காக...

பொறுப்பாகப் பதிலளிக்க வேண்டிய அரசும் ஆயுதப்போராளிகளும் அந்தப் பதிலைச் சொல்லாத நிலையில் ஒரு சகமனிதனின் மன்னிப்புக்கோரலாக 1972 எழுதப்பட்ட இந்தக் கவிதை இன்னும் அப்படியே பொருத்தமாகவே உள்ளது.

போரும் அரசியற் பகையும் முரண்பாடுகளும் இத்தனை இழிவான முறையில் பழிதீர்த்துக் கொள்ளப்படுவது கொடுமையிலும் கொடுமை. கீழ்மையிலும் கீழ்மை. அதிலும் இப்படிக் காணாமற்போகடிக்கப்படுவது பெரும்பாலும் சாதாரணர்களே. அவர்கள் எத்தகைய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்களாக இருந்தாலென்ன, சந்தேகத்தின்பேரில் கடத்தப்பட்டவர்களாக இருந்தாலென்ன, எதிர்த்து நிற்கக்கூடிய பெருவலிமையற்றவர்கள். எனவேதான், இப்படி இலகுவில் காணாமற்போகும் நிலைக்காளானார்கள். இன்னும் அப்படிக் காணாமற்போகும் நிலையிலிருக்கிறார்கள்.

இத்தகைய ஒரு பின்புலத்திலிருந்தே, இத்தகைய ஒரு களத்திலும் காலத்திலுமிருந்தே 'வெள்ளைவான் கதை'களை லீனா கொண்டுவந்திருக்கிறார். இது மிகச் சவாலானது. இலங்கை அரசியல் மற்றும் மன அமைப்புச் சூழலில் எத்தகைய விவகாரங்களைப் பற்றியும் எவரும் வெளிப்படையாகப் பேச முடியாது. செயற்படவும் முடியாது. 'ஏறச்சொன்னால் எருதுக்குக் கோவம். இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோவம்' என்ற ஊர் வழக்கைப்போல இந்த விவகாரத்தைப்பற்றிப் பேச முற்பட்டால் நிச்சயம் ஏதாவது ஒரு தரப்பில் முட்டியே ஆக வேணும். அது அரசாக இருக்கும். அல்லது இயக்கங்களாக இருக்கும். அல்லது ஆயுதம்தாங்கிய ஏதாவது ஒரு தரப்பாக இருக்கும். ஏனென்றால், எல்லோருடைய மடியிலும் கனமுண்டு. எல்லாத்தரப்பின் கைகளிலும் கறையுண்டு. எனவே எவருக்கும் இந்த மாதிரி விசயங்களைப் பற்றி யாரும் பேசுவது பிடிப்பதில்லை. இந்த நிலையில் காணாமற்போன உறவுகளைத் தேடித் திரியும் உறவினரை இப்படி உலகத்தின் முன்னே அவர்களுடைய கேள்விகளோடும் துயரத்தோடும் கொண்டு வந்திருப்பதென்பது சாதாரணமானதல்ல. மிகச் சவாலுக்கும் சர்ச்சைக்குமுரிய இந்த விவகாரத்தை ஆரம்பித்த நாட்களிலிருந்து இந்த ஆவணப்படத்தைத் திரையிடும்தோறும் லீனா சந்தித்து வரும் நெருக்கடிகள் இத்தகையனதான். இந்த நெருக்கடிகளும் எதிர்ப்பும் சவால்களும் இலங்கைக்குள் மட்டும் என்றில்லை. இலங்கைக்கு வெளியில் இந்தியாவில் தொடங்கி உலகெங்கும் உண்டு. எங்கெல்லாம் தவறாக ஒன்றைப் புரிந்து கொள்ளுவோர் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் நியாயமாகப் பேசும் எதற்கும் நெருக்கடிகளிருக்கும். இதேவேளை லீனாவின் இந்தப் படத்திற்கு உச்சமான வரவேற்புண்டு என்பதையும் கவனிக்கலாம். எந்த நியாயத்திற்கும் இதுபோன்ற எதிர்ப்பும் வரவேற்பும் இருப்பதுண்டு. லீனாவும் இந்த இரண்டையும் சந்தித்தும் சமாளித்தும் தீரவே வேண்டும்.

ஆனால் 'வெள்ளைவான் கதைகள்' பாரபட்சமின்றிப் படமாக்கப்பட்டுள்ளது. போராளியாக (விடுதலைப்புலிகள் உறுப்பினராக) இருந்ததால் காணாமற்போன மகனைத் தேடும் தாயும் தன்னுடைய சக போராளித் தோழிகள் காணாமற்போனதைப்பற்றி இன்னொரு பெண் போராளி (வெற்றிச்செல்வி)யும் கூறுகின்ற கதைகள் முதலிரண்டு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் காணாமற்போதல்களுக்கு அரசாங்கத்தரப்பே காரணம் என நேரடியாகச் சொல்லப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் முதல் சாட்சியமாக வரும் ஜெயா லங்கா ரத்னம் இலங்கை அரசாங்கத்தோடு சேர்த்து, உலக நாடுகளையும், இந்தியாவையும், ஐ.நாவை யும் கூட குற்றம் சாட்டுகிறார்.

மூன்றாவது கட்டத்தில், 1990 இல் ஜே.வி.பியின் இரண்டாம் கட்டக் கிளர்ச்சியின் விளைவாகக் காணாமற்போன செயற்பாட்டாளர் விஜிதாஸவின் மகள் தன்னுடைய தந்தை காணாமல்போன கதையை, இன்னும் அவரைப்பற்றிய தகவலேதும் கிடைக்காத நிலையைச் சொல்கிறார். நான்காவது பகுதி, வன்னியில் 2008 -2009 காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பின் விளைவாகக் காணாமற் போன மகளை நினைத்து இளந்தாயொருவர் கண்ணீர் விடுகிறார். ஐந்தாவது பகுதியில் முஸ்லிம் செயற்பாட்டாளர் ஒருவர் காணாமற்போனதைப்பற்றி அவருடைய மனைவி சொல்கிறார். ஏழு ஆண்டுகளாக எந்த முடிவும் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கும் தன்னுடைய அலைச்சல்களைச் சொல்கிறார். ஆறாவது கட்டம் போர் முடிந்தபிறகு, மகளைத் தேடும் தாயின் துயரத்தைப் பேசுகிறது. அடுத்து, போருக்குப் பின் காணாமல் போனவர் மகள் லக்ஷயாவும் அவரின் அம்மாவும் தன் சாட்சியங்களைத் தருகிறார்கள். ஏழாவது பகுதி மிகப்பிரபலமான ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனதைப் பற்றிய அவருடைய மனைவி சந்தியா எக்னெலிகொடவின் துயரமும் குமுறலும் பேசப்படுகின்றன.

இந்த மாதிரி இன மத மொழி பிரதேச வேறுபாடுகளில்லாமல் எல்லாத் தரப்பிலும் காணாமற்போனவர்களைப் பற்றி 'வெள்ளைவான் கதைகள்' பேசுகிறது. இதேவேளை, அரசு, புலிகள், பிற இயக்கங்கள், ஆயுதக்குழுக்கள், முஸ்லிம் அமைப்புகள் எனப் பல தரப்பினராலும் காணாமற் போகடிக்கப்பட்டவர்களைப் பற்றியும் அது பேசுகிறது. ஆகவே இங்கே சார்புநிலை தவிர்க்கப்பட்டு, உண்மையும் சமநிலையும் பேணப்படுகிறது. குற்றமிழைத்த எல்லோரின் மீதும் கத்திகள் விழுகின்றன. இப்படிச் சமனிலையாகப் பேசுவதன்மூலம் உள்ளரசியலையும் சார்பரசியலையும் தவிர்க்க முனைகிறார் லீனா. ஆனால், 'வெள்ளைவான் கதைகள்' வெளியிடப்பட்டிருக்கும் சூழலில் லீனா எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் சார்பு நிலைப்பட்டனவாகவே உள்ளன. ஒரு பக்கத்தில் இலங்கை அரச தரப்பு இந்தப்படத்தை தனக்கு எதிராகப் பார்க்கிறது. இதேவேளை புலிகளின் ஆதரவாளர்களும் இதை எதிர்க்கின்றனர். இதற்குக் காரணம், இந்த இரண்டு தரப்பின் குற்றங்களையும் லீனா ஆதாரப்படுத்த முற்பட்டிருப்பதே. ஆனால், இதைத் தனியே இந்த இரண்டு தரப்புக்கும் எதிரானதாக லீனா செய்யவில்லை என்பதை இவர்கள் உணரத் தவறுகின்றனர். இது ஒரு மோசமான நிலை மட்டுமல்ல, புரிந்தும் புரியாத புதிரே. முன்னரே குறிப்பிட்டிருப்பதைப்போல, 'இலங்கை அரசியல் (தமிழ்த்தேசிய அரசியல் உட்பட) மற்றும் மன அமைப்புச் சூழலில்' இதைத் தவிர வேறு கிடைப்பனவுகளுக்கு வழியுமில்லை. இதையெல்லாம் சந்தித்தே இந்தப் படமும் லீனாவும் முன்னகர வேண்டியுள்ளது.

காணாமற்போனவர்களை விடவும் அவர்களின் முடிவு என்ன? அவர்களைப் பற்றிய தகவல்கள் என்ன என்று தெரியாமல் தவிப்பும் தத்தளிப்புமாக வாழ்வோரின் மிகக் கொடிய நிலையை முப்பது ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிகக் கொடியது விதியிது. இந்த விதியை மாற்றுவதற்காக எவ்வளவு போராட்டங்கள் நடந்திருக்கின்றன! எத்தனை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன? ஒன்றுக்கும் உலகத்தின் மனச்சாட்சி இடம்கொடுக்கவில்லை. உலக மனதில் இதற்கெல்லாம் இடமேயில்லை. இந்தக் காணாமற்போதல்கள் ஒன்றும் இரகசிய நிகழ்ச்சிகளோ ஒன்றிரண்டு சம்பவங்களோ அல்ல. உலகறிய தொடர்ந்து நடந்த அத்துமீறல்கள், அச்சுறுத்தல்கள், கொடுமைகள், உரிமை மீறல்கள். ஆயிரக்கணக்கான சம்பவங்கள். ஆயிரக்கணக்கான மனித உயிர்களின் மறைத்தல். இதெல்லாம் தாராளமாக நடந்த பிறகு, இப்பொழுது இவற்றைப் பற்றிப் பேசுவது நகைப்பிற்குரியது. ஆனால், உலகம் அப்படித்தானிருக்கும். அது தன் நலன்களின் அடிப்படையிலேயே தராசைக் கையிலெடுக்கும். தனக்குத் தேவையானபோதே அது விழிகளைத் திறக்கும். லீனா இதையும் புரிந்து கொண்டே செயற்பட்டிருக்கிறார். என்றாலும் ஒரு படைப்பாளி என்ற வகையில் தன்னுடைய அகநிலையைத் தளர்வடைய விடாமல் அவர் செயற்பட்டிருப்பது முக்கியமானது.

கண்ணீருடன் வாழும் இந்த மனிதர்களைப் பேச வைப்பது என்பது மீண்டும் அவர்களையுடைய காயங்களைக் கிளறி, வலிகளை மீளுருவாக்கி விடுமோ என்ற உளக்குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியது. எனினும் இவர்களைப் பேச வைப்பதை விட வேறு வழியில்லை. காயங்களை அவற்றின் இரத்தப்பெருக்கோடுதான் உலகின் முன் வைக்க வேணும் என்ற விதியையும் இந்த உலகம்தானே விதித்திருக்கிறது. எனவே இப்படியிருக்கும்போது வேறு என்னதான் செய்ய முடியும்? நெருக்கடிகளின் மத்தியில், நெருக்கடிச் சூழலில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளர் நவிப்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது, காணாமற்போனவர்களின் உறவினர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடத்திய அமைதிப்போராட்டங்களையும் அகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் சமகால உயிர்ப்பையும் ஐ.நா உட்பட அனைத்துத் தரப்பினரும் பொறுப்புச்சொல்ல வேண்டிய பொறுப்பையும் குவிக்கிறது வெள்ளைவான் கதைகள்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, கொழும்பு, புத்தளம், திருகோணமலை, கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் என இலங்கையின் பல இடங்களிலும் உள்ள காணாமற்போன உறவுகளைத் தேடிச் சென்றிருக்கிறார் லீனா. ஆனால், இந்தப்படத்தில் தங்கள் (வெள்ளைவான்) கதைகளைச் சொல்வோரின் பாதுகாப்புப்பற்றி லீனா சிந்திக்கத் தவறி விட்டார் என்ற குற்றச்சாட்டு பலரால் முன்வைக்கப்படுகிறது. ஊடக முறையியற்படி இது தவறு என்பது அவர்களுடைய வாதம். பாதிக்கப்பட்ட காரணத்தினால் தங்கள் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தவேண்டும் என்ற ஆவேசத்தில் தங்களைச் சுற்றியிருக்கும் பாதுகாப்பின்மையைப்பற்றி இந்தப் படங்களில் பேசுவோர் சிந்திக்கமாட்டார்கள். அவர்களுடைய பாதுகாப்பைப்பற்றி படத்தின் நெறியாளரே சிந்தித்திருக்க வேண்டும். அவரே இந்தப் பாதுகாப்பை பேணவேண்டும் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். சிலர் வெளிப்படையாக தங்களுக்கு நேர்ந்திருக்கும் கொடுமைகளைப் பற்றிப் பேச முன்வந்திருக்கின்றனர் என்பது உண்மையே ஆயினும், இதைக்குறித்துச் சிந்தித்திருக்கலாம் என்றே படுகிறது.

இது தொடர்பாக லீனாவின் பதில் 'ஒரு ஆவணப்பட இயக்குனரும் சாட்சியங்களோடு ஒரு சாட்சியமாக ஆகிறார் என்பது ஆவணப்படக் கலையின் அறம். சாட்சியங்களின் ஒப்புதலோ புரிதலோ இல்லாமல் இரண்டு மணி நேர முழு நீளப் படத்தை எடுப்பதற்கு எந்த சாத்தியமும் இல்லை. படத்தில் பங்கு கொண்டவர்கள் மறைந்து வாழ்பவர்கள் அல்ல. பொது வெளியில் போராடுபவர்கள், எழுதுபவர்கள். இந்தப்படத்தில் வருபவர்கள் இதற்கு முன்னர் பல போராட்டங்களில் பங்கு பெற்றும் இன்னும் ஓயாமல் போராடிக்கொண்டிருப்பவர்களே. சேனல் 4, ஜெனிவா- ஆம்நெஸ்டி - மனித உரிமை கண்காணிப்பு நிறுவனம் எல்லாவற்றுக்கும் படம் எடுத்து செல்லப்பட்டு ஒளிபரப்பானது காணாமல் போன குடும்பங்களின் பாதுகாப்புக்கும் போராட்டங்களுக்கும் வலு சேர்ப்பவையே தவிர, வேறில்லை. கடுமையான கெடுபிடிகளுக்கு இடையில் படமாக்கியதோடு, ராணுவக் கண்காணிப்புகளை படத்திலும் இடம்பெறச் செய்ததின் நோக்கம் ஆபத்துக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதை உணர்த்துவதன் பொருட்டே' என்றிருக்கிறது.

'வெள்ளைவான்கள்' ஒரு காலம் இலங்கையை உறைய வைத்தன. வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களை நிரப்பிய வெள்ளைவான்கள், இருண்ட யுகமொன்றில் இரத்தக் கொடியேற்றின. இந்த அநீதிச் செயலை இன்று உலகரங்கில் சாட்சியமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் லீனா மணிமேகலை. யாழ்ப்பாணப் பொதுநூலக எரிப்பையும் அதன் பாதிப்பையும் அந்தத் துயர வரலாற்று நிகழ்ச்சிகளையும் Burning memories மூலம் சாட்சியாக்கிக் காட்சிப்படுத்திய சோமிதரனுக்கு அடுத்த படியாக இன்னொரு சீரியஸான பக்கத்தைப் பேசும் லீனா, இன்றைய சர்ச்சைகளின் நாயகி. வெள்ளைவான் கதைகளைப் பேசுவதன்மூலமாக வெள்ளைவான் யுகத்தை அழிக்க முனைகிறார்: மீண்டும் வெள்ளைவான்கள் முளைக்கவிடாமலிக்க முயற்சிக்கிறார். கண்ணீரைத் துடைக்க முடியாது விட்டாலும் கண்ணீருடன் வாழும் வாழ்க்கையொன்றை இனி வேண்டாம் என்று எண்ணுவது முக்கியமானது. அதனை வெள்ளைவான்கதைகள் சொல்கின்றன.

பின்னிணைப்பு -

காணாமற்போனவனின் மனைவியின் சொல்

என்னுடைய தூங்காத இரவுகள்

என்று முடிவுறும்?

போரின் இறுதிக் கணத்தில்

தோற்று நீ சரணடைந்த போதிருந்து

இக்கணம்வரை நான் தூங்கவில்லை.

தோல்வி ஒரு நிரந்தரத் துக்கமாகி

என் தூக்கத்தை உன்னுடன் எடுத்துச் சென்றது.

உனைப்பற்றிய சேதியேதுமின்றி

ஆண்டுகள் பல ஓடிவிட்டன

இன்னுமுன் பிள்ளைகளின் கேள்விக்கு

என்னிடமில்லைப் பதிலேதும்

யாரிடமுமில்லை.

நீ எங்கே யென்று

நானும்தான் கேட்கிறேன்

சரணடையும் போது உன்னையேற்ற

படையினரும் கேட்கிறார்கள்

நீ எங்கே என்று

அவர்களுடைய அரசும்தான் கேட்கிறது

நீ எங்கே என்று

இந்த உலகமும்தான் கேட்கிறது

நீ எங்கே என்று.

உனைத்தேடும் இந்தக் கேள்வியின்

வலி எனக்கன்றி வேறெவருக்குமில்லை

தூங்காத இரவுகளும் பிரிவும்

எனக்கன்றி வேறெவர்க்குமில்லை

தூங்கமுடியாத

கேள்விகளோடு தவிக்கும் குழந்தைகளுக்குப் பதிலளிக்க முடியாத

இந்த வலியிலிருந்து

என்று நான் வெளிச்செல்வேன்

எப்படிச் செல்வேன்?

00

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=f9e6d9ff-57ab-43c5-a789-33d4672c4a9b

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.