Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனம் சாய்ந்து போனால்........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனம் சாய்ந்து போனால்........
'டேய் மச்சான் ஏதும் பிரச்சினை வராது தானே?'
ஜந்தாவது தடவையாக கண்ணனிடமிருந்து கேட்கப்பட்ட அதே கேள்வியால் சிறிது எரிச்சலடைந்த ரமேஸ்,
'டேய் சும்மா இரடா, இதோட எத்தனையாவது தடவையா இதே கேள்வியை கேட்பாய்?' என்றான் சலிப்புடன்,
'உனக்கென்னடா? எனக்கு பயமா இருக்கடா '
'பயமா, இது எப்பவோ இருந்திருக்க வேண்டியது, இப்ப பயந்தா வேலைக்காகாது.
மாப்பிளையா இலட்சணமா இரு'
'சொன்ன மாதிரி கவிதா வந்திருவாளாடா?'
'இங்க பாரடா, நீயும் ரென்சனாகி எங்களையும் ரென்சனாக்காத, ஆனந் வரும்போது
கவிதாவோடதான் வருவான்'
'எதுக்கும் ஒருக்கா போன் பண்ணிப் பாரடா'
கண்ணன் முள்மேல் நிற்பதுபோல் அவஸ்தைப்படுவதை அவதானித்த ரமேஸ்
'சரி சரி நான் போன் பண்ணுறன் நீ ரென்சனாகாத'
'டேய் ஆனந் என்னடா? எங்க நிற்கிறாய்?
'ஒன்றும் பிரச்சினை இல்லையடா, கோயிலுக்கு கிட்ட வந்திட்டம்'
'ஓகேடா, இவன் கண்ணனின் தொல்லை தாங்க முடியாமத்தான் போன் எடுத்தனான். எதுக்கும் கவனமா கெதியா வாங்கோ'
நண்பர்கள் இருவரும் அந்த அம்மன் கோவிலடியில் நின்று இப்படி பதட்டமாகப் பேசுவதற்கு காரணம் இல்லாமலில்லை.
கண்ணனுக்கும் கவிதாவுக்கும் இன்று திருமணம்.
திருமணமென்றால் மேள தாளம் முழங்க, உறவுகள் சூழ நின்று வாழ்த்துரைக்க, மந்திரமோத, பட்டுப் புடவை சரசரக்க, இப்படி எதுவுமே இல்லை. நெருங்கிய இரு நண்பர்கள், பெண் தனியாக கையில் ஒரு சிறு பையில் திணிக்கப்பட்ட ஓரிரு மாற்றுடைகளுடன்.
மாலை மாற்றி ஊரை விட்டு ஓடிப்போவதுதான் அவர்களது திட்டம். ரியூசன் வகுப்பில் பாடம் படித்தார்களோ என்னவோ காதல் பாடம் நன்றாகவே படித்தார்கள்.
நண்பர்கள் ரமேசும் ஆனந்தும் இக் காதலுக்கு துணை போனவர்கள்.
பயமறியா வயது. துள்ளுகின்ற இளமை. சாதி மதம் அந்தஸ்து எதுவுமே தங்கள் காதலைப் பிரிக்க முடியாதென்ற நம்பிக்கையுடன் காதல் கோட்டையை பலமாகக் கட்டி வைத்திருந்தனர். இரு வீட்டிற்கும் தெரியாமல்தான் இத் திருமணம் அரங்கேறுகிறது.
கவிதாவின் கண்களில் பயத்தின் ரேகைகள். மனம் பல வித குழப்பமான நிலையிலிருந்தாலும் தன் காதலனுடன் இணைந்துவாழ மனம் துணிந்து விட்டாள்.
கொஞ்சம் குழப்பம், கொஞ்சம் பயம், கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் துயரம் என பல வித உணர்வுகளினால் உந்;தப்பட்டவளாய் மெல்ல மெல்ல அந்த அம்மன் கோவில் படிகளில் தன் அடி பதித்தாள். எப்படியோ ஒருவர் கண்களிலும் படாமல்  மாலை மாற்றி போட்டோ எடுத்து நண்பர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட வாகனத்தில் மணமக்களை ஏற்றி ஊரை விட்டு வெகு தூரத்திற்கு அனுப்பி விட்டார்கள்.
ஊர் எல்லை தாண்டியதும் ஏதோ தாம் பெரிய சாதனை செய்து விட்டதுபோல் சந்தோசத்தில் மிதந்தனர். கையில்;  எடுத்து வந்த பணமும் சிறிதளவு நகைகளும்கைப்பையில் பத்திரமாக இருந்தது.
இனி என்ன? கருத்தொருமித்த காதலர்கள் கண்காணாத ஊரில் 'சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு என்று சிறகடித்து பறந்து திரிந்தார்கள். நாட்கள் வாரங்களாகி மாதங்களாகியது.
கையிலிருந்த பணம் கழுத்தில் இருந்த சங்கிலி என்று ஒவ்வொன்றாக மாயமாக மனதிற்குள் எதிர்காலம் பற்றிய பயமும் பெற்றவரைப் பிரிந்த துயரும் மனதுக்குள்மெல்ல எட்டிப் பார்க்கத் தொடங்கின.
இடைக்கிடை நண்பர்கள் மூலம் ஊர் நிலமைகளையும் குடும்ப நிலமைகளையும் போன் மூலம் விசாரித்து அறிந்து கொண்டனர்.
கவிதாவின் பெற்றவர்கள் பெண்ணைப் பெற்றவர்கள.; என்ன செய்வது? மகள் எப்படியாவது நல்லா இருந்தால் சரிதான் என்ற நிலைக்கு மனம் பக்குவப்பட்ட நிலையில் இருப்பதாக அறிந்ததும் கவிதாவுக்கு தாம் பெற்றவரிடம் திரும்பச் சென்றால் என்ன? என்ற எண்ணம் அடி மனதில் விதைவிடத் தொடங்கியது.
மெதுவாகக் கண்ணனிடம் 'கண்ணா இப்படியே தனிய இருந்து கஸ்ரப்படாமல் எங்கட அம்மா அப்பாவோட போயிருந்தால் எங்களுக்கு நல்லதென நினைக்கிறன். நீங்களும் ஒரு வேலை தேடிக் கொள்ளலாம்'
முதலில் சம்மதிக்க மறுத்த கண்ணன் 'கவிதா உம்மட அப்பா அம்மா சம்மதிச்சாலும் என்ர அப்பா அம்மா இதுக்கு சம்மதிக்க மாட்டினம்'
'கண்ணா இப்படி வேலையும் இல்லாம எத்தனை நாளைக்கு இருக்க ஏலும்'
கண்ணன் சிந்தனையில் ஆழ்ந்தான்
கவிதாவின் பொறுமையும் எல்லை மீறும் நிலை ஏற்பட்டது.
பசி வந்திடப் பத்தும் பறந்திடும் எ;ன்பார்கள்.
இறுதியில் நண்பர்கள் உதவியுடன் கவிதாவின் வீட்டிற்கு கண்ணனும் வரச் சம்மதித்தான்.
கண்ணனின் பெற்றவர்க்கோ கண்ணனை கவிதா வீட்டில் இருக்க அனுமதிப்பது கௌரவக் குறைச்சல். எனவே கண்ணன் கவிதா இருவரையும் தங்கள் வீட்டில் சேர்த்துக் கொள்வது என்று முடிவு செய்தனர்.
ஓருநாள் இருவருமாக கண்ணன் வீட்டிற்கு வந்தனர்.
கண்ணனின் அம்மா ஏதோ ஒப்புக்காக வரவேற்றார். இவர்களை சந்தோசமாக வரவேற்க அவர்களுக்கு மனம் பரந்ததாயில்லை.
பெற்றவர்களுக்கு உரிய மதிப்பளிக்க தவறிய இவர்களாலும் மரியாதையை எதிர்பார்க்க முடியவில்லை.
காதலிக்கும் பொழுது சினிமாப் பாணியில் உலகமே சொர்க்கமாய் தெரிந்த நிலை மாறி இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உலகம் புரியத் தொடங்கியது.
வாழ்க்கை சோலையாய் இராது. அங்கு முட்களும் புதர்களும் பாறைகளும் இருக்கும் என்ற வாழ்வின் யதார்த்தத்தை கவிதா உணரத் தொடங்கினாள்.
பெற்றவரை  மதிக்காமல் கண்ணனே உலகமென்று எல்லோரையும் தூக்கி எறிந்தது எத்தனை கொடுமை என்றும் பெற்றவரின் மனதை நோக வைத்தது எத்தனை வேதனையான விடயம் என்றும் விளங்கத் தொடங்கியது.
'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?'
புகுந்த வீட்டில் அவளை ஒரு பொருட்டாகவே மதிக்க மறுத்தார்கள்.
கவிதாவும் பொறுமையுடன் எத்தனையோ சொற்களையும் செயல்களையும் தாங்கிக் கொண்டாலும் பெற்றவர்களுடன் சேர்ந்து கண்ணனும் அவளை உதாசீனப் படுத்துவதைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
'கண்ணா, காலையிலிருந்து எனக்கு தலை சுற்றுது'
'பேசாம படுத்திரும். கொஞ்ச நேரத்தில சுகமாகி விடும்'
கவிதாவுக்கு உடம்பு மட்டுமல்ல மனமும் வலித்தது.
காதலிக்கும் பொழுது தலையிடி என்று சொன்னாலே தாங்கிப் பிடித்தவன்
இப்பொழுது இவ்வளவு இயலாத நிலையில் இருக்கும் பொழுதுகூட அன்பா ஆதரவா ஒரு ஆறுதல் வார்த்தைகூட சொல்ல மனமில்லாதவனாகி விட்டானே?
தொடர்ந்தும் ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் வைத்தியரை அணுகினர்.
கவிதாவைப் பரிசோதித்த வைத்தியர் கவிதா கர்ப்பமாக இருப்பதாகவும் உடல் மிகவும் பெலவீனமான நிலையில் இருப்பதால் அவளை கவனமாக பார்த்துக்கொள்ளும்படியும் கூறி அனுப்பினார்.
கவனமாகப் பார்த்தால் மட்டும் போதுமா? அல்லது போசாக்கான உணவு கொடுத்தால் மட்டும் போதுமா?
அவளின் மனம் தன் பெற்றவர்களின் அருகாமையை விரும்பியது.
ஆனால் கண்ணன் வீட்டிலோ கவிதாவை அவளது வீட்டிற்கு அனுப்புவதற்கு சம்மதமில்லை.
எத்தனையோ நாள் எப்படி எப்படியோ கண்ணனிடம் அனுமதி பெற்று குழந்தை பிறக்கும் வரை தன் தாய் வீட்டில் இருந்து விட்டு வருவதாகக் கூறி விடை பெற்று தாய் வீட்டிற்கு வந்து விட்டாள்.
கவிதா தாய்மை அடைந்த நிலையில மீண்டும் வந்ததும் பெற்றவர்கள் பழசெல்லாம் மறந்து பாசத்துடன் வரவேற்றனர்.
கவிதாவும் தான் பெற்றவர்களுக்குச் செய்த அவமானத்தை நினைத்து மனம் நொந்து மன்னிப்புக் கேட்டாள்.
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று சும்மாவா சொன்னார்கள்.
கண்ணனைப் பிரிந்து வந்திருந்தாலும் கவிதா பெற்றவரின் அன்பிலும் பாசத்திலும் மன நிறைவுடன் இருந்தாள்.
நாட்கள் மாதங்களாகின.
'கவிதா கண்ணன் கொழும்பு போறதாக சொல்லி அனுப்பி இருக்கிறான்.'
நண்பன் வந்து சொன்ன செய்தியை அம்மா கூறியதும்  கவிதாவால் நம்ப
முடியவில்லை
என்னிடம் நேரில் வந்து சொல்லக்கூடவா முடியவில்லை
மறுநாளே கவிதா கண்ணன் வீட்டிற்குச் சென்று
'கண்ணா ஏன் திடீரென்று இந்த முடிவு எடுத்தனீங்கள்'
'வேலையில்;லாமல் இங்கையிருந்து என்ன செய்யிறது' வேண்டா வெறுப்பாகவே பதில் வந்தது.
'வேலை தேடத்தான் வேணும். ஆனால் இன்னும் இரண்டு மாதம் பொறுத்து குழந்தை பிறந்த பிறகு போகலாமே' ஆதங்கத்துடன் கவிதா கேட்டாள்
'கவிதா இது என்ன எங்கட சொந்தக் கொம்பனியா? இது வெளிநாடு போற ஏஜன்சி. அம்மா அப்பா காசு கட்டினம் நான் இப்ப போனால்தான் சரி.'
'எப்ப பயணம்?'
'நாளைக்கு' ஒற்றைச் சொல்;லில் வந்த பதிலைக் கேட்ட கவிதா விக்கித்துப் போனாள்.
'என்ன நாளைக்கா?'
'ஏன் நாளைக்கு நாள் நல்;லதி;;ல்லையா?'
கவிதா வாயடைத்துப் போனாள். மெல்ல தன்னை சுதாகரித்துக் கொண்டு
'சரி சுகமா போயிற்று வாங்க' வாய் வார்த்தையாகச் சொன்னாலும் மனதின் வேதனை கண்களில் கண்ணீராக வெளிப்பட்டது.
'இப்ப ஏன் அழுகிறீர். அம்மா வீட்டிலதானே இருக்கிறீர்'
மனதின் பாரம் வயிற்றின் பாரத்தை விட அதிகமாக இருந்தது.
பயணம் செல்லும் பொழுது அழக்கூடாது என்ற முடிவுடன் வேதனைகளை விழுங்கிக் கொண்டாள்.
கொழும்பு சென்ற பின் இரண்டு முறை போனில் கதைத்தான். ;
ஒரு வாரத்தின் பின் அடுத்தநாள் பயணம் என்றும் சொன்னான்.
இரண்டு வாரம் பறந்தோடியது. குட்டிக் கண்ணனின் 'குவா குவா' சத்தம் வீட்டை
நிறைத்தது.
பேரக் குழந்தையைக் கண்ட பெற்றவருக்கோ பேரானந்தம். ஆனால் கண்ணனின் பெற்றவர்கள் குழந்தையை பார்க்கக் கூட வரவில்லை.
சுhதி அந்தஸ்து என்ற பல வேலிகள் அவர்களைப் பிரித்து வைத்திருந்தது.
பல மாதங்களாகியும் கண்ணனின் தொடர்பு கவிதாவுக்குக் கிடைக்கவில்லை.
கண்ணனை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் யாவும் கைகூடாமல் போனது.
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
கண்ணன் ஜேர்மனியில் வேறு ஒரு பெண்ணுடன் வசிப்பதாக வந்த செய்தி நம்ப முடியாததாக இருந்தாலும் நம்பித்தான் ஆகவேண்டுமென கண்ணனின் உதாசீனம் வெளிப்படுத்தியது.
குழந்தை கமலுடன் அவளது காலம் வேகமாக ஓடத் தொடங்கியது.
பெற்றவரிடம் பிள்ளையைக் கொடுத்து விட்டு கவிதா தாதிகள் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தாள்.
இன்று அவள் ஒரு மருத்துவத் தாதி. கமலுக்கு நான்கு வயதாகிவிட்டது.
கமலுக்கு அம்மாவாகவும் அப்பாவாகவும் இருந்து தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க தன்னைத் தயாராக்கிக் கொண்டாள்.
கவிதாவின் பெரியப்பாவின் மகன் விடுமுறையில் தன் பெற்றவர்களைப் பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து வந்திருந்தார்.
அவர் கவிதா வீட்டிற்கு வந்த பொழுது கமலின் எதிர்காலம் கருதி கவிதா அமெரிக்கா வந்தால் அவளது எதிர்காலம் முன்னேற்றமாக அமையுமென்றும் தான் அங்கு சென்றபின் கவிதாவை அங்கு அழைப்பதற்கு உதவி செய்வதாகவும் கூறியதோடு நிற்காமல் கவிதாவும் கமலும் அமெரிக்கா வருவதற்கான ஆயத்தங்களை எல்லாம் செய்தார்.
விரைவிலேயே கவிதாவும் கமலும் அமெரிக்க பிரஜைகளாயினர்.
இங்கு வந்த கவிதா முயற்சியை கைவிடாமல் பயிற்சி செய்து அமெரிக்க வைத்தியசாலை ஒன்றில் மருத்துவத்தாதியாக சேவையாற்றத் தொடங்கினாள்.
தன் மகனின் உயர்வான எதிர்காலம் ஒன்றே அவளின் வாழ்வின் குறிக்கோளாக இருந்தது.
காலம் வேகமாகச் சுழன்றோட கமலும் பதினெட்டு வயது வாலிபனாக படிப்பிலும்கெட்டித்தனத்திலும் சிறந்தவனாக அன்னைக்கு உகந்த நற்பண்புள்ள பிள்ளையாக வளர்ந்தான்.
கமலின் உயர்வுகளும் திறமைகளும் கண்டு மனம் பூரித்தவளாய் கவிதா கமலை பல்கலைக் கழகத்திற்கு அனுப்பிவிட்டு எதிர்காலக் கனவுகளில் மூழ்கி இருந்தாள்.
ஒருநாள் உறவினர் ஒருவர் மூலம் கண்ணன் விடுமுறையை கழிக்க அமெரிக்கா வந்திருக்கும் செய்தி கிடைத்தது.
கமல் எப்பொழுதும் கண்ணனைப்பற்றிக் கேட்டால் கவிதா மழுப்பலாகப் பதில் கூறி விடுவாள்.
கண்ணன் என்ன இன்னும் குழந்தையா இவளின் பதிலை புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு.
இன்று கண்ணன் வந்திருப்பதைக் கேள்விப்பட்டதும் முதன்முறையாக கமலும் கண்ணனைச் சந்திக்க விரும்வினான்.
எனவே உறவினரைத் தொடர்பு கொண்டு ஓரு கோப்பிக் கடையில் கண்ணனைச் சந்திக்க கமல் நேரம் குறித்திருந்தான்.
பெற்றவளைப் பிரிந்து பிறந்த குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க விரும்பாத அந்த பொல்லாத மனிதனைப் பார்த்து நாலு கேள்வியாவது கேட்க வேண்டுமென்ற உறுதியுடன் கமல் கண்ணனை எதிர் கொள்ளத் துணிந்தான்.
கண்ணனுக்கோ கண்முன் வாட்டசாட்டமான வாலிபனாக அரும்பு மீசையுடன் அழகான தோற்றமுடன் நிற்கும் தன் ஒரே வாரிசை அணைத்து மகிழ ஆசைதான் ஆனால் கமலோ யாரோ ஒரு புது மனிதனைப் பார்ப்பது போல அதுவும் ஒரு புழுவைப் பார்ப்பது போல தன் உடலுக்கு உயிர் கொடுத்தவனைப் பார்த்தான். ஒரு வார்த்தைகூட பேச வரவில்லை. பேச முடியாத உணர்வுகளுடன் இரவரும் பிரிந்து  விட்டனர்.
இரு வருடங்கள் உருண்டோடின. இப்பொழுது கமல் பல்கலைக்கழக இறுதி வருட மாணவன்.
காலைச்செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த கவிதாவை இறுதியாக ஒளிபரப்பப்பட்ட விசேட செய்தி நிலை குலைய வைத்தது.
கமல் படிக்கும் அதே பல்கலைக் கழகத்தினுள் புகுந்த ஒரு மனநோயாளி சரமாரியாக ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் பலர் பலியாகியதுடன் பல மாணவர்கள் கவலைக்கிடமான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் அறிவித்தார்கள்.
 கவிதா கமலின் கைக் தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தாள். அது மௌனித்துக் கிடந்தது.
நெருக்கமான நண்பர்களை அழைத்தாள்.
உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இறுதியில் ஒரு நண்பன் சொன்ன செய்தி கிடைத்ததும் சுற்றும் பூமி ஒருகணம்
சூனியமானது.
உள்ளுக்குள் யாரோ கந்தகத்கை காய்ச்சி ஊற்றுவது போன்ற உணர்வு.
தொலை பேசி இடைவிடாமல் ஒலித்தது.
ஊறவினர்கள் வந்தனர்
நண்பர்கள் வந்தனர்.
இறுதிக்கிரிகைகள் நடந்தன.
மலர் வளையங்கள் மலர்க் காடாய்க் கிடந்தன.
அனைவரும் துடித்தனர் துவண்டனர்.
வாய் ஓயாது கமலின் திறமை பேசினர்.
கவிதை பாடினர்.
கவிதாவின் கண்களிலே ஒரு புது ஒளி
ஒரு பூகம்பத்தின் முன் உண்டாகும் மௌனம்.
ஒரு புயலுக்கு முன் நிலவும் அமைதி.
தந்திகளைத் தெலைத்துவிட்ட வீணையின் சோகம்.
தொட்டுத் துடைக்கவொரு சுட்டு விரலில்லை.
மௌனங்களை மொழி பெயர்த்த ஏகாந்கப் பெரு வெளியில்; அவளும்
அவளது கமலம் மட்டுமே.
'கமல் நேரமாச்சு எழும்பு'
'கமல் உனக்கு பிடிச்ச சாப்பாடு செய்திருக்கிறன் சாப்பிட வா'
'கமல் இண்டைக்கு கோயிலுக்கு போக வேணும் நேரத்துக்கு வீட்டுக்கு வா'
கமலுடன் நாள் முழுவதும் அவள் பேசிக் கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருந்தாள்.
அனைத்தையும் கடந்த ஆழ் மனதி;ன் சூனியத்திற்குள் வாழும் கவிதாவை
இனி எந்த இழப்புக்களோ இனிமைகளோ எதுவும் செய்துவிடப் போவதில்லை.

'மலர் சாய்ந்து போனால் சரமாகலாம்
மனம் சாய்ந்து போனால்?'

 

                                            ---xxx-----xxx---xxx---
 

  • கருத்துக்கள உறவுகள்

'மலர் சாய்ந்து போனால் சரமாகலாம்
மனம் சாய்ந்து போனால்?'

:(  :(  :( 


எவருக்கும் இந்நிலை  வரக்கூடாது......

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி போராடி தன் மகனின் வாழ்வை நிமிர்த்திய ஒரு தாயிற்கு அவள் மகனிடம் இருந்து அதிகபட்ச எதிர்பார்ப்பாய் நேசம் ததும்ப ஒரு சொல் அவள் நாளை அழகாக்க ஒரு புன்னகை அவள் வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்கவென கொஞ்சமே கொஞ்சம் பிரியம் தவிர வேறொன்றுமே இருந்திருக்காது...அவற்றை தொலைத்த அந்த தாயின் மனநிலை எதைக்கொண்டு உரைப்பேன்.... மனசு முழுக்க வலி... :(

  • கருத்துக்கள உறவுகள்

'மலர் சாய்ந்து போனால் சரமாகலாம்
மனம் சாய்ந்து போனால்?'.......வெறுமையோடு பிதற்ற மட்டுமே முடியும் இல்லை பேசாமல் பேச மட்டுமே முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.