Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி இளைத்தால் எலி…..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலி இளைத்தால் எலி…..?

slider-puliilaiththal.jpg

அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள இளம் அரசியல் செயற்பாட்டாளரொருவரின் மின்னஞ்சல் வந்திருந்தது. இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 16ம் திகதி கோப்பாயில் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பனுப்பியிருந்தார், அந்த மின்னஞ்சலின் தலைப்பு மக்கள் போராட்டம் என்றிருந்தது.

இதற்கு முன்னர் முல்லைத்தீவில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் நடத்திய போராட்டத்தின் போதும், இதேவிதமான அழைப்பொன்றை மற்றுமொருவர் அனுப்பியிருந்தார். அப்பொழுது அவரிடம் சொன்னேன்- இது மக்கள் போராட்டமல்ல காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் நடத்தும் போராட்டம் என சொல்லுங்கள் என. அவரிற்கு கோபம் வந்துவிட்டது. காணாமல் போனவர்களின் குடும்பத்தினரையும், அந்த விவகாரத்தையும் கொச்சைப்படுத்துவதாக சினந்தார்.

கடந்த ஐந்து வருடங்களில்- நந்திக்கடல் தோல்வியின் பின்னர்- ஈழத்தமிழர்களில் ஏற்பட்டுள்ள முக்கிய பண்பு மாற்றங்களில் ஒன்று இது. எதற்கெடுத்தாலும் ஒன்றில் விக்கிவிக்கி அழுகிறார்கள், அல்லது முகம் சிவக்க கோபப்படுகிறார்கள். இந்த கோபம் எப்படிப்பட்டதெனில், எனக்கு மூக்குப் போனலும் பரவாயில்லை, எதிராளிக்கு சகுனம் பிழைத்தாலே போதும் என்ற வகையானது. இதனாலேயே விடயங்களில் நிதானித்து செயற்பட முடியாதவர்களாகிவிட்டார்கள். நந்திக்கடலோரத் தோல்வி நினைவுகளில் செரிமானம் அடையுமட்டும் இந்த நிலை நீடிக்கலாம்.

உண்மையில் வடக்கில் இப்பொழுது நடப்பவை பொது மக்கள் போராட்டமா என்பது சிந்தனைக்குரியது. இந்தப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளையும், சமூக வலைத்தள உரையாடல்களையும் நோக்கினால் ஒரு அரபு வசந்தம் போல பொது மக்கள் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து விட்டார்களோ என்று தோன்றும். ஆனால் உண்மை தலைகீழானது. அரசினால் காணாமல்ப் போகச் செய்யப்பட்ட தங்கள் உறவுகளின் விடுதலைக்காக எதையாவது செய்துவிடத் துடிக்கும் உறவுகளின்(இரத்த உறவினர்களின்) பரிதாப நிலையை தமிழ் அரசியல் வாதிகள் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள ஊறுகாயாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. இந்தப் போராட்டங்கள் பற்றிய சுயமதிப்பீடுகளெதுவும், போராட்டத்திற்காக அறைகூவல் விடுக்கும் அரசியல் தலைமைகளிடம் இல்லை. நமது அரசியல்வாதிகள் இந்த வகையான போராட்டங்களை, அரசியல் இருப்பிற்காக அல்லாமல், விடுதலை நோக்குநிலையிலிருந்து அணுகும் வரை இந்தவகையான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அரசியல் வாதிகளுக்கு அடுத்தநாள் பத்திரிகையில் மைக்கும் வாயுமாக போட்டோ வந்தால் போதும், அப்படியே அதை வைத்து பிக்கப் பண்ணி வெளிநாடுகளில் எழுச்சி உரைகள், போர்க்குற்ற மாநாடுகள் சில பல பேட்டிகள் எண்டு கொஞ்சநாள் தாக்காட்டலாம். ஆனால் அப்பாவிச் சனங்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதே உண்மை.

கடந்த ஐந்து வருடங்களில் வடக்கில் அல்லது கிழக்கில் அல்லது தமிழ் அரசியல் தலைமைகளினால் செய்யப்பட்ட போராட்டங்கள் எத்தனை? காணாமல் போனவர்கள் பற்றிய உண்மைநிலையை வெளிப்படுத்தக் கோரி, காணாமல் போனவர்களின் குடும்பத்தினரும், அரசியல்கட்சிகளும் சேர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். மீள்குடியேற்றச் சொல்லி, அந்த அந்த பகுதி மக்கள், அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இடையில், முன்னிலை சோசலிசக்கட்சி போன்ற திடீர்ப்புரட்சிக்காரர்கள் தோன்றி, லலித்,குகன் என்ற இரண்டு பேரை பலிகொடுத்தார்கள். பின்னர், அவர்களின் விடுதலைக்காக, அவர்களது குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தினார்கள். இப்பொழுது கட்சி மீண்டும் தலைமறைவாகிவிட்டது. அதில் இருந்த ஓரிரண்டு பேர், இப்பொழுது பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனைவிட்டால், நமது தம்பிராசா அண்ணர்தான் மிச்சம். அவர் கூட அண்மையில் இலேசாக சேம் சைட் கோல் ஒண்டு போட்டிருக்கிறார். ஏதோ போராட்டமென யாழ்ப்பாண கச்சேரிக்கு முன்னால் படுத்திருந்த தம்பிராசா அண்ணை, ஒருநாள் இரவு எழும்பி அலறியடித்தபடி ஓடினார், அடுத்தநாள் பார்த்தால் யாரோ தீயசக்திகள் தன்னை துரத்தியதாகவும், அந்த பகுதியில் சிவிலுடையில் நின்ற இராணுவப்புலனாய்வாளர்கள்தான் தன்னை காப்பாற்றியதாகவும் குண்டைத்தூக்கிப் போட்டார். தீயசக்திகளிடமிருந்து விடுதலை என்ற சுவரொட்டி அண்மை நாட்களாக யாழ்ப்பாணமெல்லாம் ஒட்டப்பட்டுள்ளது. யாரோ சுவிசேசக்காரர்கள். அவர்கள் விரட்டிய தீயசக்தியொன்றுதான் தம்பியண்ணரில் தொற்ற முயன்றிருக்க வெண்டும். நல்லவேளையாக இராணுவத்தினர் காப்பாற்றி விட்டனர். இவைதான் வடக்கில் நடந்த, நடக்கும் போராட்டங்கள்.

இந்த போராட்டங்களில் எத்தனை மக்கள் கலந்து கொள்கிறார்கள்? அவர்களெல்லாம் யார்? போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கைதான் அந்த போராட்டத்தின் ஆத்மார்த்தமான வீரியத்தை மெய்ப்பிக்கும் என்பதல்ல. தனிமனிதர்களின் போராட்டங்களும் சரித்திரம் படைக்கவல்லவையே. இது பற்றிய தெளிவான புரிதல்களுடன்தான் இந்த போராட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை பற்றிய கேள்வியை எழுப்புகிறோம். அதற்கு வேறு காரணமுண்டு.

எதிலும் பார்வையாளராக இருந்து லைக் செய்யும் விடுப்பு மனோபாவம் ஈழத்தமிழர்களின் பரம்பரை இயல்பு. ஆனால் ஒவ்வொரு ஈழத்தமிழனும் தன்னையொரு சேகுவேராவாகவோ, ஒமர் முக்தராகவோ, பகத்சிங்காவோதான் கற்பனை செய்து வைத்துள்ளான், அல்லது வெளியுலகிற்கு தன்னை அவ்வாறு வெளிப்படுத்துவதையே விரும்புகிறான். புலி இளைச்சா எலி எதுக்கோ கூப்பிடுமாம் என்பது போல.. இயக்கம் பங்கர் வெட்டக் கூப்பிட்டாலே எகிறிப் பின்வளவால ஓடினவனங்களெல்லாம் இப்ப புலிவேசம் கட்டி ஆடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் இரட்டை மனோபாவம் பற்றிய கேள்விகளை எழுப்புவதற்காகவே, நாம் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை மையப்படுத்தி உரையாடுகிறோம்.

இந்த போராட்டங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை என்றாவது நூறை, ஆயிரத்தை தொட்டதா? அதிகமேன், வடக்கு மாகாணசபை தேர்தலில் பெருவெற்றிபெற்ற தமிழ்தேசிய கூட்மைப்பு தனித்துச் செய்த முதலாவது மேதினம் இந்த வருட மேதினம். சாவகச்சேரியில் நடந்த அவர்களின் பிரதான நிகழ்வில் எத்தனை பேர் கலந்து கொண்டனர்? ஒரு நூற்றைம்பது பேர் என கொள்ளலாம். காணாமல் போனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் போராட்டங்களிலெல்லாம் குறிப்பிடத்தக்க அளவில்த்தான் மக்கள் கலந்து கொள்கிறார்கள். இன்னும் சொன்னால் இடங்கள்தான் மாறுமே தவிர, முகங்கள் மாறாது. காணாமல் போனவர் போராட்டம் எங்கு நடந்தாலும், ஒரே ஆட்களே எல்லா இடமும் சென்று போராட வேண்டிய நிலை. யாழ்ப்பாணத்தில் கமரூன் வந்தாலும் அவர்கள்தான். முள்ளிவாய்க்காலில் நவிப்பிள்ளையை சந்திக்க வேண்டுமென்றாலும் அவர்கள்தான். ஒரு ஊடகவியலாளர் சொன்னார் இந்தப் போராட்டங்களை நடத்துகின்ற இரண்டு தமிழ் பிரதான அரசியல் அமைப்புகளிடமும் ஒரு லிஸ்டே இருக்கிறதாம். போராட்டத்திற்கு முதல்நாள் எல்லாருக்கும் இருந்து போனடிச்சுச் சொல்லுவார்களாம் நாளைக்கு போராட்டம் மறக்காம வந்திருங்கோ எண்டு. இதிலென்ன வேடிக்கை என்றால் கிட்டத்தட்ட இவர்கள் எங்கெல்லாம் போகிறார்களோ அங்கெல்லாம் போகிற இன்னொரு குரூப்பும் இருக்குது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்தப்பக்கம் இராணுவம் எங்கள் பிள்ளைகளைக் காணாமல் போகச் செய்தது என்று பதாகை பிடிக்க, அந்தப்பக்கமாக இரண்டாவது குரூப் புலிகள் பிடித்தார்கள், நவி பிள்ளையே வெளியேறு என்று பதாகை பிடித்தபடி நிற்கும். எண்ணிக்கைகளில் சில வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் எங்க போராட்டம் நடந்தாலும் இரண்டு குரூப்பும் ஆஜராகுறது என்னமோ உண்மை. ஆனா இரண்டாவது குரூப்புக்கு இது வருமானம். முதலாவது குரூப்புக்கு வாழ்க்கை. மைக் பிடிக்கிறவைக்குத் தான் விளம்பரம். உண்மையில் மைக்பிடிக்கிறவைக்கு இந்த போராட்டங்கள் பற்றி ஏதேனும் திட்டமிடல் இருக்கிறதா? இவற்றை வளர்த்துச் செல்வது அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது குறித்து சிந்திக்கிறார்களா? என்றால் அது கேள்விக்குறிதான்?

நேரடியாக பாதிக்கப்பட்ட கொஞ்ச மக்கள், நிறைய அரசியல் பிரமுகர்கள், கலந்து கொள்ளும் மக்களிலும் சற்றே எண்ணிக்கையில் குறைந்து ஊடகவியலாளர்கள். இந்த கலவைதான் எல்லா இடங்களிலும் நடக்கும் போராட்டங்களிலும் காணும் முகங்கள். இந்த வகையான போராட்டங்கள், கிட்டத்தட்ட ஒரு இலக்கியக்கூட்டத்தை ஒத்ததாகிவிட்டது. இலக்கிய கூட்டங்களும் இப்படித்தான். ஒரு குறிப்பிட்ட வட்டத்தினர்தான் வருவார்கள் அவர்களுக்குள்ளே பேசிக் கலைந்துசெல்வார்கள். அவர்கள் தங்கள் நோக்குநிலையிலிருந்து எல்லாவற்றையும் மற்றவர்களுடன் பேசிக்கொள்ள முடியாதென நினைக்கிறார்கள். அதனால் இந்த வகையான கூட்டங்களிற்கு வந்து நண்பர்களுடன் மனம் திறந்து கதைத்துப் போகிறார்கள். இந்த கூட்டத்திற்கு இன்ன இன்ன ஆட்கள் வருவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். காணாமல் போனவர் போராட்டங்களும் இப்படிப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. நிறைய காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஒரே குடும்பமாக, நெருக்கமானவர்களாக மாறிவிட்டனர். அவர்கள் தங்களிற்குள் சுகதுக்கங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முல்லைத்தீவு போராட்டத்தில், வயதான பெண்மணியொருவர், அவர்கள் வீட்டில் ஆடு ஈன்றதாக கடந்தமுறை சொன்ன ஆட்டுக்குட்டிகள் பற்றி இன்னொரு பெண்மணியிடம் விசாரித்து கொண்டிருந்ததை கேட்டேன்.

இதனை ஏன் குறிப்பிடுகிறேன் எனில், போராட்டங்களில் மிகக்குறைந்தளவிலான ஒரு குறிப்பிட்ட தரப்பினரே பங்குகொண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே.

ஆனாலும் இந்த போராட்டங்கள் நடப்பது பெரும்பாலானவர்களிற்கு உவப்பானதே. இந்த வசனம் கூட உண்மையில் பொருத்தமானதல்ல. இப்படியான போராட்டங்கள் நடப்பதை பலர் உளமார விரும்புகிறார்கள் என்பதே சரி. பெருவாரியான தமிழர்கள் அரசிற்கெதிரான, அரசை சங்கடப்படுத்தும் விதமான போராட்டங்கள் எவ்வளவிற்கெவ்வளவு அதிகமாக நடக்கிறதோ அவ்வளவிற்கு அவ்வளவு அதிகமாக சந்தோசப்படுவார்கள். இந்தப் போராட்டங்கள் முற்றி, என்றோ ஒருநாள் மகிந்தவின் சங்கு அறுக்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். அல்லது அப்படியாக தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையில் போராட்டங்களில் பங்குபற்றுகிறவர்களை விட போராட்டம் நடைபெற்றபின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்கிறவர்களின் எண்ணிக்கை அதிகம். வெளிநாட்டில இருக்கிறவையை நான் இதில சொல்லயில்லை அது தனி டிப்பார்ட் மெண்ட. இது இங்கினயை கோயில் திருவிழாவில குத்துவெட்டுப்படுகிற குரூப்பைத்தான் சொல்லுறன்.

ஈழத்தமிழர்களின் மரபான இயல்பது. விடுதலைப்புலிகளின் காலத்திலும், இது தான் நடந்தது. பெரும்பாலான தமிழர்கள் படிக்க விரும்பினார்கள், பட்டம் பெற விரும்பினார்கள், வெளிநாடு செல்ல விரும்பினார்கள், தோல் சிவந்த பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து பிள்ளை குட்டி பெற்றுக் கொள்ள விரும்பினார்கள். நேரங்கிடைத்த நேரத்தில் ஓயாத அலைகள் வீடீயோக் கேசட்டை வீட்டு வரவேற்பறையில் பார்த்தபடி தாக்குதல் திட்டங்களைக் கூடத் தீட்டினார்கள், தமிழீழத்தையும் விரும்பினார்கள்.

இயக்கம் முதலில் மக்கள் போராட்டத்திற்கு என்ன விதமாகவும் பங்களிப்புச் செய்யலாம் உதாரணத்துக்கு காசு தாறவை காசு தரலாம், போராட வாறவை போராட வரலாம், தோசை சுட்டுத்தாறவை தோசை சுட்டுத் தரலாம் எண்டு சொன்னபோது. அனேகம் பேர் புத்திசாலித்தனமா போராடப் போன ஆற்றையேனும் பிள்ளையளுக்கு பசியாத்தும் புனிதப்பணியைச் செய்து, முடிஞ்சா சாப்பிட்டவன்ர நாக்கில இருந்து சுவை மறைய முதல் நைசா ஒரு பிணையில்லாத பாசுக்கு அப்பிளிக்கேசனைப் போட்ட ஆக்கள்தான்.

அதே தமிழர்கள்தானே இன்றும் உள்ளவர்கள். கணனித்திரைகளிற்குட்பட்ட போராட்டங்களைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். இதனால்த்தான் இவை மக்கள் போராட்டங்கள் அல்ல, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் போராட்டம் என்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் மக்கள் தான் ஆனால் என்னுடைய குடும்ப உறுப்பினருக்காக நான் போராடுவது வேறு? என்னுடைய சக மனிதனின் பிரச்சினையை உணர்ந்து அவனுக்காக தானும் களத்தில் இறங்குவது வேறு. இங்கே இந்தப் போராட்டங்களில் அரசுக்கு எதிராகக் கொடிபிடித்த, கோசம் போட்ட ஒரு பக்கத்து வீட்டுக்காரனையாவது காட்டமுடியாது என்பதே நிதர்சனம். தனக்கு நிகழும் வரை காத்திருந்து காத்திருந்தே நந்திகடலில் கைவிடப்பட்ட எக்கச்சக்கம் கனவுகள் தான் நினைவுக்கு வருகிறது. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல கொஞ்சம் பாதிக்கப்பட்டவர்கள், கொஞ்சம் ஊடகவியலாளர்கள், நிறைய அரசியல்வாதிகள் மற்றும் புலனாய்வுத்துறையினர்தானே எல்லாப் போராட்டங்களிலும் கலந்து கொள்கிறார்கள். ( சில இடங்களில் போராட்டத்துக்கு வருகிற மக்கள் எண்ணிக்கையை விடவும் புலனாய்வாளர்களில் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதாக அலுத்துக்கொண்டார் ஒரு ஊடகவியலாளர்)

IMG_5923_zps02b9b09c.jpg

கடந்த ஐந்து வருடங்களில் நடந்த இந்த ஜனநாயகவழிப் போராட்டங்கள் ஒன்றிலாவது, நான் குறிப்பிட்ட தரப்பை விட வேறு யாராவது கலந்து கொண்டதை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? வடக்கில் எத்தனை கிராமச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், விளையாட்டு அமைப்புக்கள், சமூக நோக்கமுடைய அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் உள்ளன. இவர்களில் யாராவது போராட்டங்களில் கலந்து கொண்டார்களா? வருடாந்தம், ஊர்க்கோயில் திருவிழா, நல்லூர்த் திருவிழா, பெறாமக்களின் சமாத்திய சடங்கு, கலியாணவீடு என எத்தனை தமிழர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து செல்கிறார்கள். அவர்களில் யாராவது போராட்டங்களில் கலந்து கொண்டுவிட்டு சென்றார்களா?

எந்த காணாமல் போனவர்கள் போராட்டத்திலாவது, காணாமல் போனவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் கலந்து கொண்டார்களா? இடம்பெயர்ந்தவர்களின் போராட்டத்தில், இடம்பெயர்ந்தவர்கள் தற்போது இருக்குமிடத்தின் பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது இடம்பெயர்க்கப்பட்ட கிராமத்தின் பக்கத்து கிராமத்தவர் கலந்து கொண்டிருக்கிறார்களா? முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வுகளில், கொல்லப்பட்டவர்களின் பக்கத்துவீட்டுக்காரர் எங்காவது கலந்து கொண்டிருக்கிறாரா? ஒரு பக்கத்து வீட்டுக்காரனைக்கூட திரட்டமுடியாத நிலையில் உள்ள இந்தப் போராட்டங்களை மக்கள் போராட்டம் என கொள்ள முடியுமா என்பதே எனது கேள்வி.

பக்கத்து வீட்டுக்காரனை விடலாம். சொந்த மாமன் மச்சானாவது கலந்து கொண்டிருப்பார்களா? குறிப்பாக காணாமல் போனவர்களின் போராட்டங்களை கவனியுங்கள். அதிகமாக பெண்கள்தான் கலந்து கொள்கிறார்கள். சரணடைந்தவர்கள், கடத்தப்பட்டவர்கள் அனேகமானவர்கள் ஆண்கள்தான் என்பதால், அவர்களின் மனைவிகள்தான் கலந்து கொள்கிறார்கள். சரணடைந்தவர்களிற்கு சகோதரர்கள், மாமன், மச்சான் இல்லையா? கணவன் என்றால் மனைவி, பிள்ளையென்றால் பெற்றோர் என்ற நேரடியான உரித்து சொந்தம் தவிர்ந்த வேறு யாரும் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.

இதற்கு உடனடியாக எல்லோரும் ஒரு காரணம் சொல்லக்கூடும். அரசபடைகளின் அச்சுறுத்தல் இருக்கிறது எனக்கூறி தப்பித்து கொள்ள முனையலாம். இது மிக வெளிப்படையான உண்மைதான். ஆனால், இன்று போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருமா கடத்தப்பட்டுள்ளனர்? அச்சுறுத்தப்பட்டுள்ளனர்? மீண்டும் மீண்டும் ஒரே ஆட்கள்தானே போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு காணாமல் போகச் செய்யும் அரசிற்கு தொண்டைத் தண்ணியை வத்திப் போகச் செய்யவேண்டாமா? இதன் அர்த்தம் என்னவென்றால், சக மனிதனின் துயரத்தில் அவனது பக்கத்துவீட்டுக்காரனே பங்கெடுக்கவில்லை என்பதுதானே? மக்களைத் திரட்டமுடியாத அமைப்புக்கள் பாரிய போராட்டங்களைச் செய்வதாக ஊடகங்களில் கப்சாவிட்டுக்கொண்டிருப்பது அவர்களது விளம்பரத்துக்குமட்டுமே உதவும். தோசை சுட்டுக் கொடுக்க மட்டுமே விரும்புகிற திருவாளர் பொதுசனமும் இந்தப் போராட்டங்கள்தான் உலகத்தை திரும்பிப்பார்க்க வைக்கப்போகிற போராட்டங்கள் என்று நம்புவதாக நடிப்பார். கேட்டால் அதுதான் அவர்கள் போராடுகிறார்களே என்று கையைக்காட்டித் தப்பித்துக்கொள்ளும். இப்படியே போனால் எப்போதும் போல இப்போதும் தமிழினம் போராட்ட உரைகளில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் நின்று கொண்டே இருக்க வேண்டியதுதான். அதற்கடுத்த கட்டம் என்று ஒன்று வரவே போவதில்லை இந்த உண்மை தமிழர் தரப்பில் மைக்பிடிக்கிற அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான் ஆனாலும் அவர்கள் விரும்புவதும் அதுதானே இப்படியே இருக்கவேண்டும் பேசிப் பேசியே நாம் பிழைக்கவேண்டும். என்றைக்கு தன் பக்கத்து வீட்டுக்காரனின் துயரத்திற்காகத் தமிழன் வீதிக்கிறங்குவானே அன்றைக்கே தொடங்கும் மெய்யான மக்கள் போராட்டம் அதுவரைக்கும் நடப்பதெல்லாம் அய்யா நீங்க அடியுங்கோ நாங்க போராடுறம் என்பதுதான். குத்துங்க எசமான் குத்துங்க?

- அப்பாத்துரை அபூபக்கர்

http://pagetamil.com/?p=7280

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொன்னாலும் தமிழ் மக்கள் சிந்தித்து தமது இருப்பை பாதுகாத்து வருபவர்கள். புலிகளை ஆதரித்து அரவணைத்ததும் அவர்கள்தான். பொங்கு தமிழில் மக்கள் எப்படி கலந்து கொண்டார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் உண்மை புலனாகும். இப்போது அரபு வசந்தம் மாதிரி எல்லாம் போராட முடியாது. அது சிந்தனை வளர்ச்சியற்ற வட ஆபிரிக்க இனத்தவர் செய்யும் வேலை. அரபு வசந்தத்தின் பின்பு இப்ப என்ன வசந்தம் நிலவுகிறது என்பதை ஆராய்ந்தால் உண்மை வெளித்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொன்னாலும் தமிழ் மக்கள் சிந்தித்து தமது இருப்பை பாதுகாத்து வருபவர்கள். புலிகளை ஆதரித்து அரவணைத்ததும் அவர்கள்தான். பொங்கு தமிழில் மக்கள் எப்படி கலந்து கொண்டார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் உண்மை புலனாகும். இப்போது அரபு வசந்தம் மாதிரி எல்லாம் போராட முடியாது. அது சிந்தனை வளர்ச்சியற்ற வட ஆபிரிக்க இனத்தவர் செய்யும் வேலை. அரபு வசந்தத்தின் பின்பு இப்ப என்ன வசந்தம் நிலவுகிறது என்பதை ஆராய்ந்தால் உண்மை வெளித்துவிடும்.

 

 

இவர் மக்களைத்தேடுகிறார்

மக்களுக்குத்தெரியும் 

யார் கவனிக்கிறார்கள்

எப்படி நிலையெடுக்கணும்

எப்ப  வரணும்  என்று

 

வந்தார்கள்

மாகாணசபைக்கு வாக்களிக்க.........

 

சிறிதரன் எம்பி  சொன்னார்

கூட்டம் போட்டோம்

கத்தினோம்

தெருத்தெருவாகத்திரிந்தோம்

கேட்க 

பார்க்க  ஒரு நாதியில்லை

ஆனால்

வந்தார்கள்

குத்தினார்கள்

எல்லா  இடமும் வென்றோம்

நாமே நினைத்துக்கூட  பார்க்கவில்லை

 

இவ்வளவு பேர் வந்து குத்துவார்கள்

இவ்வளவு  வெல்லுவோம்

இன்னாருக்கு

இவ்வளவு வாக்கு என்று கணித்து குத்துவார்கள் என்று.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.