Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண் மழை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் மழை

எஸ். ராமகிருஷ்ணன்

வெளியே மழை பெய்யத் துவங்கியிருந்தது. இன்று விடுமுறை நாள். சுனந்தாவும் வீட்டி லிருந்தாள். ஜன்னலுக்கு அப்பால் தெரியும் கருத்தமேகங்களைப் பார்த்த படியே அவசரமாக வீட்டின் வெளியே சென்று மழையை அளப்பதற்கான மழைமானியை வைத்தேன். சிறிய தோட்டமது. சுனந்தா நிறைய பூச்செடிகளை வைத்து வளர்த்து வருகிறாள். வானிலிருந்து மழைத் துளிகள் வேகமாக இறங்கத் துவங்கின.

அப்பாவிடமிருந்து நான் கற்றுக் கொண்ட ஒன்றே ஒன்று, மழை பெய் யும்போது அதை அளவிட வேண்டும் என்பது தான். எனக்கு இந்தப் பழக்கம் திருமணத்தின் பிறகுதான் துவங்கியது. எதற்காக இப்படி மழையை அளவிடுகிறேன் என்று புரியவில்லை. ஆனால் அதில் இனம் புரியாத ஈடுபாடு குவிந்து விட்டது.

அப்பா தான் வேலை பார்த்த ஊர்களில் பெய்த மழையை அளவு எடுத்துப் பதிந்து வைப்பதை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து வந்திருக்கிறார். ஏன் மழையை அளவு எடுத்தார் என வீட்டில் யாருக்கும் தெரியாது.

வீட்டில் இருக்கும் நாட்களில் கூட மழை பெய்யும் போது ஏதாவது ஒரு பாத்திரத்தை எடுத்துப் போய் வைத்து மழை எவ்வளவு பெய்திருக்கிறது என்று கணக்கிடுவார். யாரும் இதை எதற்காகச் செய்கிறார் என்று கேட்டுக் கொண்டது கிடையாது.

அப்பா மழையின் அளவுகளைக் குறித்து வைப்பதற் கென்றே தனியான குறிப்பேடு ஒன்றை வைத்திருந்தார். சிவப்பு நிற லெதர் உறையிட்ட நோட்டு. இது போன்ற நோட்டுகள் பல அவரிடமிருந்தன. இந்த மழைக் கணக்குகளை யாரிடமும் காட்டியதும் கிடையாது.

ஒவ்வொரு மனிதனிடமும் மற்றவர்களால் புரிந்து கொள்ளமுடியாத பழக்கம் ஒன்று நிச்சயம் இருக்கத்தான் செய்யும் என்பதைத்தான் அப்பாவின் இச்செயல் வழியே புரிந்து கொண்டேன்.

நானும் அவரைப்போல மழையை அளவிடுகிறேன் என்பது அவருக்குத் தெரியாது. மழை குறித்து நாங்கள் பேசிக் கொண்டது கூட கிடையாது, ஆனால் ஏனோ அவரது இந்தப் பழக்கத்தை நானும் தொடர விரும்பினேன். உண்மையில் அப்பாவின் எந்தப் பழக்கமும் எனக்கு வந்துவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருப்பவன். ஆனால் இந்த ஒரு விஷயம் ஏனோ விட மனமின்றி ஒட்டிக் கொண்டு விட்டது

ஆரம்ப நாட்களில் மழையை அளவிட்டு என்ன செய்யப்போகிறோம் என்றுதான் தோன்றியது, இப்போதோ மழை பெய்து முடித்தவுடன் அதன் அளவைத் தெரிந்து கொள்ளப்போகிற நிமிசத்தில் மனதில் விவரிக்கமுடியாத சந்தோஷம் பீறிடுகிறது. அதை டைரியில் பதிவு செய்து கொண்டவுடன் இதே அளவு மழை பெய்த நாள் எப்போது எனத் தேடிப்பார்க்கவும் மனது விரும்புகிறது. அப்படி பொருந்துகின்ற நாட்களுக்குள் ஏதாவது பொதுமை இருக்கிறதா எனவும் யோசிப்பேன்.

ஒரே அளவுள்ள வேறுவேறு மழைநாட்களுக்குள் சில அபூர்வமான ஒற்றுமைகளை நான் உணர்ந்திருக்கிறேன், மழையை அளப்பது என்பது வெறும் விளையாட்டில்லை. அது ஒரு அபூர்வமான ஈடுபாடு என்பதை நான் இப்போது உணர்ந்திருக்கிறேன்.

அமெரிக்காவிற்கு வந்த பிறகு தான் பருவகால மாற்றங்களைத் தீவிரமாக உணரத்துவங்கினேன். நான் படித்து வளர்ந்த மதுரையில் பருவகாலத்தைப் பெரிதாக உணர முடியாது. கோடை மட்டுமே அங்கே உக்கிரமானது, காற்றடி காலமும் மழைநாட்களும் குறைவானவை. மிதமான மழையும், மிதமான குளிரும் கொண்ட நகரம். அந்த ஊரில் புதியது என எதுவுமில்லை. எல்லாமும் பழமையின் மிச்சங்கள், மனிதர்கள் உள்பட.

வைகை ஆற்றில் வெள்ளம் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஆறு இருப்பதையே யாரும் கவனம் கொண்டதில்லை. இடைவிடாமல் நாட்கணக்கில் மழை பெய்து நான் கண்டதேயில்லை. ஆனால் அமெரிக்க வாழ்க்கை அப்படியானதில்லை.

இங்கே ஒவ்வொரு நாளும் சீதோஷ்ணமாற்றம் முக்கியமானது. வீட்டில் இருந்து கிளம்பும்போது இருக்கும் வானிலை, அலுவலகம் போன போது இருக் காது. காற்றின் வேகமும், மழையின் உக்கிரமும், கொட் டும் பனியும், வசந்த கால நறுமணத்தையும் இங்கேதான் முழுமையாக அனுபவித்தேன். ஆனாலும் எனக்கு மழையின் மீதுதான் நாட்டம் அதிகமாகயிருக்கிறது.

சியாட்டிலில் மாலைநேரங்களில் இப்படியான மழை பெய்வது வழக்கம்தான். இந்த மழை எவ்வளவு நேரம் பெய்யும், எப்போது வெறிக்கும் என்றெல்லாம் வானிலை மையம் துல்லியமாக அறிவிக்கத்தான் செய்கிறது. ஆனால் சட்டென மழையை எதிர்கொள்ளும்போது மனநிலை மாறிவிடத்தானே செய்கிறது.

மழை என்னவோ செய்கிறது. இத்தனை ஆண்டுகளாக அதை எதிர்கொண்டும் என்ன செய்கிறது எனத் துல்லிய மாக என்னால் சொல்லமுடியவில்லை. அமெரிக்கா வந்த புதிதில் என் மனைவி சுனந்தா அடிக்கடி சொல்வாள்:

‘இந்த மழை நம் ஊரின் மழையைப் போலவே யில்லை.’

‘அப்படி ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லையே’ என்பேன்.

‘இல்லை சுகு, இந்த மழையைப் பார்க்க பயமாக இருக்கிறது. இது ஆண்மழை.’

‘வேகமாக இருப்பதால் பயப்படுகிறாயா?’ எனக் கேட்டேன்.

‘இல்லை, இந்த மழையை எனக்குப் பிடிக்கவில்லை. இது நிதானமற்ற மழை’ என்றாள்.

சுனந்தா இப்படித்தான். சில சொற்களின் வழியே முழு அனுபவத்தையும் உணரச்செய்துவிடுவாள். அவள் நிறைய படிக்கக் கூடியவள், நான் ஸ்போர்ட்ஸ் இதழ்களை வாசிப்பதோடு சரி. அவள் சொன்னது போல நான் அமெரிக்காவில் எதிர் கொண்டது நிதானமற்ற மழையை. இந்த மழையைப் பார்க்கும் போது உள்ளூர கலக்கமாக இருக்கச் செய்கிறது. ஆனாலும் அமெரிக்க மழையை எனக்குப் பிடித்திருந்தது,

பல நாட்கள் நான் கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழையை வேடிக்கை பார்த்தபடியே இருப்பேன்.காரில் மழைக்குள்ளாக பயணம் செய்யும்போது சாலை யில் கொட்டும் மழையின் வேகத்தை ரசிக்கவே செய்வேன். ஒவ்வொரு முறையும் இந்த மழை என்னவோ செய்யப்போகிறது என்று உள்ளூர தோன்றும். மழை இயல்புவாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடக்கூடியது, எந்த அளவு என்பது மழையின் தீவிரத்தைப் பொறுத்தது.

சரிதானில்லையா?

மழைக்குள் ரகசியம் இருக்கிறது. என்ன ரகசியம் எனத் தெரியவில்லை. ஆனால் மழை தனது ரகசியத்தை சொற்களின் உதவியின்றியே உணரச்செய்கிறது. பலமுறை ஊரில் இருக்கும்போது அதை உணர்ந்திருக்கிறேன்.

மழையைத் தொடர்ந்து பார்த்துக் கொண் டிருக்க முடியாது. அப்படி இருந்தால் மனது நழுவத் துவங்கி விடும். நம் வசமிருக்காது.மெல்ல அது ஒரு தாவரம் போல தன்னை முழுமையாக மழையிடம் ஒப்புக் கொடுத்து விடுவதை உணர்ந்திருக்கிறேன். அந்த நேரத்தில் வீட்டிற்குள் இருக்கும்போதும் தலையில் மழை கொட்டுவதைப் போலிருக்கும். இதயத்தில் மழைதண்ணீர் நிரம்பித் ததும்புவது போலவும் தோன்றும்.

மழையை ஏன் புரிந்துகொள்ள முடியவே யில்லை.

மழை என்பது புறநிகழ்வு மட்டு மில்லையா?

நனைதல் ஏன் இத்தனை சுகம் தருகிறது?

மழை நம் உடலில் மூடிக்கிடக்கும் கண்களைத் திறந்துவிட்டுவிடுகிறது. ஆம், உடல் விழித்துக் கொள்கிறது. உடலால் மழையை வெல்லமுடியாது.மழை உடலை ஆட்டுவிக்கிறது. தளரச்செய்கிறது. இன்னொரு உடலைத் தேட வைக்கிறது, உடலைக் கிளர்ச்சியுற செய்கிறது. மழை ஒரு தந்திரம். மழை ஒரு மாயவலை. இல்லை, மழை என்பது பூமியைக் கட்டிக் கொள்ளும் நீரின் நூறாயிரம் கைகள்.

இப்படித்தான் மழை என்னை என்னவோ செய்து விடுகிறது. என் சிந்தையைக் கொப் பளிக்க வைக்கிறது. நான் திடீரென மின்சாரம் அதிகம் பாய்கையில் ஒளிரும் மின்சார பல்பு போலாகிவிடுகிறேன்.

இன்றைக்கும் நான் அப்படியே உணர்கிறேன்.

இப்போது தான் மழையை முதன்முறை யாகப் பார்க்கிறவனைப் போல ஆச்சரியத்து டன் பார்த்தபடியே தான் தோட்டத்திற்குள் ஓடி மழைமானியைப் பொருத்தி விட்டு வந்தேன்.

சுனந்தா ஒரு டவலைக் கொண்டுவந்து நீட்டியபடியே தலைதுவட்டிக் கொள்ளச்சொன்னாள். கையில் வாங்கிக் கொண்டபோதும் நனைந்த உடலைத் துவட்டிக் கொள்ளத் தோன்றவில்லை. டவலைப் பிடுங்கி அவளே தலையைத் துவட்டிவிட்டபடியே சொன்னாள்:

‘நீ தவளையைப் போன்றவன். மழை பெய்யப்போகிறது என்றால் உன் இயல்பு மாறிவிடுகிறது. கூடுதல் சந்தோஷம் வந்துவிடுகிறது.’’

டவலை முகத்தைப் படரவிட்டபடியே சொன்னேன்:

‘நீ கூடத்தான் மாறிவிடுகிறாய். மழை நாட்களில்தான் நீ அதிகமாகப் பேசுகிறாய். பத்துவயது சிறுமியைப் போல இனம் புரியாமல் நடந்து கொள்கிறாய், நான் கவனித்திருக்கிறேன்.’’

சுனந்தா என்முகத்தை மூடிய டவலை உருவி எடுத்து விட்டபடியே வியப்போடு கேட்டாள்:

‘நிஜமாவா! அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது, மழை நேரத்தில் நான் தனிமையை அதிகம் உணர்வது கூட காரணமாக இருக்கலாம்.’

‘மழையின் இயல்பே அதுதானே’ என்றேன்.

‘இல்லை சுகு. மழையின் இயல்பு தனிமைப்படுத்துவ தில்லை. அது பிரிந்து கிடப்பதை ஒன்று சேர்க்கிறது. மழை தான் இந்த உலகின் மாபெரும் முத்தம். ஒவ்வொரு துளியும் ஒன்றை முத்தமிடுகிறது. அது மரமோ, செடியோ, பாறையோ, கூரையோ ஏதோவொன்று. ஆனால் மழைத்துளி ஆசையாக முத்தமிடவே செய்கிறது. அதை நான் உணர்ந்திருக்கிறேன்’ என்றாள் சுனந்தா.

‘பார்த்தாயா, உன் பேச்சு மாறிவிட்டது’ என பரிகசித்தேன். வெளியே மழையின் வேகம் கூடியிருந்தது. சுனந்தா மழையைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.நானும் பேச்சற்று மழையை வேடிக்கை பார்த்தபடியே இருந்தேன்.

சுனந்தா சொன்னாள்:

‘ஊரில் இருக்கும் போது மழைக்காலம் எப்போது வரும் எனக் காத்துக்கிடப்பேன். எதற்குத் தெரியுமா? அப்போது தான் வீட்டின் கதகதப்பை, மனிதர்களின் நெருக்கத்தை, இரவு வெளிச்சத்தை முழுமையாக உணர முடியும், தூக்கத்தின் ஊடே மழைச்சப்தம் கேட்பது எனக்குப் பிடிக்கும். யாரோ மந்திரம் சொல்வது போலவே இருக்கும். இங்கே வந்த பிறகு ஏனோ மழை யோடு என்னால் ஒட்டவே முடியவில்லை. உண்மையைச் சொன்னால் சுகு, மழை பெய்யும்போது எதிர்பாராமல் ஏதோ நடந்துவிடும் என பயமாக இருக்கிறது.’

‘என்ன நடந்துவிடப்போகிறது? எதற்காக பயப்படு கிறாய்?’ எனக்கேட்டேன்.

‘தெரியவில்லை. துல்லியமான காரணம் தெரிய வில்லை. ஆனால் அந்த பயம் நிஜமானது. உன்னைப் பார்க்கும்போது கூட யாரோ பழக்கமேயில்லாத ஆளுடன் தனியாக இருப்பது போல தான் உணர்கிறேன்’

‘நான் பழக்கமில்லாதவன்தானே. கல்யாணம்தானே நம்மை ஒன்று சேர்த்து வைத்திருக்கிறது’ என்றேன்.

‘பெரும்பான்மை நேரங்களில் நான் அப்படி உணர்வதேயில்லை. உன்னை சிறுவயதில் இருந்தே தெரிந்தவளைப் போல தான் நினைத்துக் கொள்கிறேன். உன்னை எப்போதோ சிறுவனாக நான் கண்டிருப்பதாகக் கூடத் தோன்றும். ஆனால் மழை பெய்யத்துவங்கியதும் நீ வேறு ஆள், அந்நியன் என்ற நினைப்பு வந்துவிடுகிறது. நானாக மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வேன் அல்லது வேகமாக படுக்கைக்கு ஓடி படுத்து கண்களை மூடிக் கொள்வேன். இப்படி ஏன் நடக்கிறது சுகு?’ என்றாள் சுனந்தா.

‘இதற்கு நேர் மாறாக எனக்கு நேர்கிறது சுனந்தா. மழை பெய்யும்போது தான் நீ என் மனைவி என்ற நெருக்கத்தை நான் அதிகம் உணர்கிறேன். நீ எனக்கான வள். என் பொருட்டு மட்டுமே இங்கே வந்திருக்கிறாய். உனக்குப் பிடித்தமான மனிதர்கள், வசிப்பிடம், ஆசைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருக்கிறாய். உன்னை அதிக சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்கிறேன். மழைக்காலத்தில் உன்னை முத்தமிடும்போது அது குழந்தையை முத்தமிடுவதைப் போல இருக்கிறது. நீ மிருதுவாகி விடுகிறாய். நுரையைப் போல எடையற்றுவிடுகிறாய்.’

‘நீயும் என்னைப் போலவே பேச ஆரம்பித்துவிட்டாய் சுகு’ என செல்லமாகத் தோளில் தட்டினாள் சுனந்தா.

காற்றோடு பெய்யும் மழையின் வேகம் தாளமுடியாமல் மரங்கள் ஆடிக் கொண்டிருந்தன. இடைவெட்டாக மின்னல் தோன்றி மறைந்தது.

‘சூடாக நாம் காபி சாப்பிடலாமா?’ எனக் கேட்டேன்.

‘நீதான் காபி போட வேண்டும்’ என சுனந்தா சொன்னாள்.

‘மழையில்தான் ஆண்களுக்குப் பசி அதிகமாகி விடுகிறது’ என்றேன் நான்.

அவள் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்ட படியே ‘அப்படியானால் நீயே ஏதாவது செய்து குடு. சேர்ந்து சாப்பிடுவோம்’ என்றாள்.

இப்படி ஏதாவது சில நாட்கள்தான் அவளாகக் கேட்கிறாள். அது போன்ற நாட்களில் சமைப்பது எனக்கும் பிடித்தமானது. மற்ற நேரங்களில் நான் சமையலில் உதவி செய்யப்போனால் கூட அவள் விடுவதில்லை. வீட்டுவேலைகளுக்கு மட்டும் உதவி செய் என்பாள்.

ரொட்டித்துண்டுகளும் வெங்காயமும் முட்டையும் கலந்து இதுவரை பெயரிடப்படாத ஒரு உப்புமா போன்ற ஒன்றைத் தயார்செய்தேன், வெளியே மழை பெய்து கொண்டுதானிருந்தது. மழை மனிதர்களின் விசித்திர மனநிலையைத் திறந்துவிடுகிறது. கோடை காலத்தில் இப்படி ஒரு நாள் வாய்க்கவே வாய்க்காது.

சூடான காபியும் ரொட்டி உப்புமாவும் கொண்டு போய் அவள் முன்னே வைத்தபோது அவள் அதை எடுத்து சாப்பிட்டபடியே சொன்னாள்:

‘ஆண்கள் சமைக்கும் போது ருசி மாறிவிடுகிறது.’

‘இந்த ருசிக்குக் காரணம் வெளியே பெய்யும் மழை. சூடுதான் உணவின் உண்மையான ருசி’ என்றேன்.

சுனந்தா சிரித்தபடியே கேட்டாள்:

‘உன் அம்மாவும் அப்பாவும் மழையைப் பற்றி இப்படிப் பேசிக் கொள்வார்களா என்ன?’

மறுத்து தலையாட்டியபடியே சொன்னேன்:

‘என் அப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்ட நிமிஷங்கள் மிகக்குறைவு. அப்பா ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றியவர். அவரது பணிக்காலத்தில் பாதி கேரளாவிலும், பாதி தமிழகத்திலுமாக வேலை செய்தார். ரயில்வே ஒதுக்கிய வீட்டில் அவர் எங்களை அழைத்துக் கொண்டு போய் தங்க வைத்தது கிடையாது. ஒற்றை ஆளாகத் தான் வசித்தார்.

நாங்கள் மதுரையில் இருந்த அப்பாவின் பூர்வீக வீட்டில் வசித்து வந்தோம். வாரவிடுமுறை நாளில்தான் வீட்டிற்கு வருவார். எதற்காக அவர் வீட்டிற்கு வருகிறார் என்றே எனக்கெல்லாம் கேள்வியாக இருக்கும், அம்மா தான் வீட்டினை நிர்வாகம் செய்தாள். அவள்தான் எங்களைப் படிக்க வைத்தாள். நோயுற்ற நாட்களில் மருத்துவமனைக்கு அழைத்துப் போய் இரவெல்லாம் கூடவே இருந்தாள். அப்பா மாதச் சம்பளம் மட்டும் தான் கொடுத்தார்.’

‘உன் அப்பா எப்போதாவது உன் அம்மாவை அடித்திருக்கிறாரா?’ எனக்கேட்டாள் சுனந்தா.

‘அப்படி நினைவேயில்லை. அப்பா யாரிடமும் கோபம் கொண்டதேயில்லை. பேசிக் கொள்வதே அபூர்வம். எனக்குப் பொறியியல் படிக்க சீட் கிடைத்துள் ளது என்று சொன்னபோது அப்பா முதன்முறையாக, சந்தோஷம் என்று சொன்னார். அந்த ஒற்றை வார்த்தைதான் அவரது வெளிப்பாடு.

என்னை ஒருமுறை கூட ஹாஸ்டலில் வந்து பார்த்தது கிடையாது. உன்னைப் பெண் பார்த்துவந்து விட்டு வந்தநாளில் என்னிடம் கேட்டார் உனக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது இல்லையா? இவ்வளவு தான் அவரது அக்கறை.’

‘நீ உன் அப்பாவை வெறுக்கிறயா?’

‘வெறுக்கவில்லை. மாறாக, அவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என யோசிக்கிறேன், பல நேரங்களில் அவர் எங்களுக்குத் தெரிந்த ஒரு மனிதர் அவ்வளவே. அவரை அப்பா என்ற பிம்பத்தோடு பொருத்திக் கொள்ள முடியவில்லை’ என்றேன்.

சுனந்தா தீவிரமாக எதையோ யோசிப்பவளைப் போலிருந்தாள், பிறகு காபியை உறிஞ்சியபடியே சொன்னாள்:

‘உன் அப்பாவிற்கு எதிரானவர் என்னுடைய அப்பா. அவருக்கு வகை வகையாக சமைத்துப் போட வேண்டும், ஒரு கர்ச்சீப்பைக் கூட அவராகத் துவைத்துக் கொள்ள மாட்டார். பிள்ளைகளின் வீட்டுப்பாடம் துவங்கி சாமிக்கு விளக்கு ஏற்றுவது வரை அவரது ஆலோசனைப் படி தான் நடக்க வேண்டும். கடைக்குப் போய் தேங்காய் வாங்குவது முதல் பட்டுப்புடவை வாங்குவது வரை அவர்தான் தேர்வு செய்வார். அவர் கொஞ்சநாள் எங்காவது போய் இருக்க மாட்டாரா என ஆதங்கமாக இருக்கும். அப்பா எங்கே போனாலும் இரவு வீடு திரும்பிவிடுவார். அம்மாவிற்கு ஓய்வே கிடையாது. அப்பா பகலிரவாக யாரையாவது திட்டிக் கொண்டே யிருப்பார். அவருக்கு எதிலும் ரசனை கிடையாது. யார் சிரமத்தையும் அவர் உணர்ந்து கொண்டதேயில்லை. வீடு என்பது அவரது சாம்ராஜ்யம். அவர் அதன் ஏகசக்ரவர்த்தி. நாங்கள் அவரது பணியாட்கள்.’

‘கஷ்டம் இல்லையா?’ என்றேன்.

‘ஒரு ஆள் மட்டும் அனுபவிக்கவில்லையே. அதனால் பழகிவிட்டது’ என்றாள் சுனந்தா.

‘நாம் ஏன் இப்போது அப்பாக்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். மழைதான் நம்மை இப்படி பேசச்செய்கிறதா?’ எனக்கேட்டேன்.

‘மழையாவது அவர்களை நினைவூட்டுகிறதே’ என சொன்னாள் சுனந்தா.

அவள் சொன்னது நிஜம். மழை புதைந்த நினைவுகளைக் கிளறிவிடுகிறது. உண்மையில் மழை, ஆழமான பெருமூச்சு ஒன்றை நமக்குள் உருவாக்கிவிடுகிறது. அந்தப் பெருமூச்சின் காரணத்தை மற்றவர்களுக்குச் சொல்லமுடியாது.

‘எதை எதையோ மழை நினைவூட்டத்தான் செய்கிறது’ என்றேன்.

‘நமக்குக் குழந்தைகள் இல்லை என்பதையும்தானே’ எனக்கேட்டாள் சுனந்தா.

‘இல்லையே’ என்றேன்.

‘எனக்கு மழை பெய்யத்துவங்கியதும் குழந்தைகள் இல்லை என்ற விஷயம் மனதை உறுத்தத் துவங்கி விடுகிறது.’

‘நீயாக ஏன் அப்படி நினைத்துக் கொள்கிறாய்?’ என்றேன்.

‘அந்தக் குற்றவுணர்ச்சி எனக்கு நிறைய இருக்கிறது சுகு. நீ எப்போதாவது நான்தான் அதற்குக்காரணம் என உணர்ந்திருக்கிறாயா?’

‘ஒரு போதும் நீ காரணமில்லை. நாம் இதைப்பற்றிப் பேச வேண்டாம்.’

‘இல்லை. மழையின்போது தான் இது போல பேச விரும்பாதவற்றைப் பேச வேண்டும். அப்போது நமக்குள் வார்த்தைகள் தடித்துப் போகாது. கோபம் அடையாமல் பேசவிட முடியும்.’

‘இப்போது எதற்கு இந்தப்பேச்சு?’

‘குழந்தை இல்லாதது பற்றி நீ வருத்தப்படுகிறயா?’

‘எனக்குக் குழந்தைகள் வேண்டும்தான். ஆனால் அதைப் பற்றியே நினைத்து வருந்திக் கொண்டிருக்க மாட்டேன்’ என்றேன்.

‘நாம் இருவருமே ஆரோக்கியமாகத்தானிருக்கிறோம். சந்தோஷமாக உறவு கொள்கிறோம். ஆனால் குழந்தை உருவாகவேயில்லை. இது எதனால் சுகு?’ எனக்கேட்டாள் சுனந்தா.

‘மருத்துவர்கள்தான் சொல்ல வேண்டும்’ என்றேன்.

‘மருத்துவர் இருவருக்கும் உடல் நலமாகத்தானிருக்கிறது. மனதில்தான் வெறுமை இருக்கிறது. அதைப் போக்கிக் கொள்ளுங்கள் என்கிறார். அப்படியானால் வெறுமை தான் இதற்குக் காரணமா-?’ எனக்கேட்டாள்.

‘அப்படி எல்லாம் இல்லை. நாம் சந்தோஷமாகத்தானே இருக்கிறோம்’ என்றேன்.

‘மழையைப் பார்த்துச் சொல். நாம் சந்தோஷமாத்தான் இருக்கிறோமா?’ என்றாள் சுனந்தா.

‘சந்தோஷமாகவும் இருக்கிறோம்’ என்றேன்.

‘வருத்தமாகவும் இருக்கிறோம்’ என்றாள்.

‘வருத்தப்படுவதால் ஒன்றும் தவறில்லை’ என்றேன்.

‘வருத்தப்படுவதற்கு யார் காரணம் என யோசிக்கவே மாட்டாயா?’ எனக்கேட்டாள் சுனந்தா.

‘யோசித்தால் தேவையற்ற வீண்கற்பனை தான் உருவாகும்’ என்றேன்.

‘உண்மையில் நமது உடல்கள் மட்டும்தான் ஒன்றுசேர்கின்றன. மனதில் ஒரு கொந்தளிப்பும் இல்லை. கல்லும் கல்லும் உரசும் போது நெருப்பு பீறிட வேண்டும் தானே. நமது உறவு கூழாங்கல் ஒன்றோடு ஒன்று உரசுவது போலத்தானிருக்கிறது’ என்றாள் சுனந்தா.

‘படுக்கையை நான் ஆராய்வது கிடையாது’ என்றேன்.

‘நானும் அப்படித்தானிருந்தேன். ஆனால் இப்போது வீண்கற்பனைகளை வளர்த்துக் கொண்டுவிட்டேன் சுகு. எனக்கு என்னைப் பிடிக்கவேயில்லை. அதை இந்த மழை நினைவுபடுத்துகிறது. மழை என்னைத் தொந்தரவு செய்கிறது. நான்தான் காரணம் என ஊர் அறியச் சொல்வது போலிருக்கிறது.’

‘இவை எல்லாம் உன் பிரம்மைகள். எதைஎதையோ நீயாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்.’

‘இல்லை சுகு. எனக்கு என்னவோ ஆகிவிட்டது. உன்னிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.’

‘நாம் இதைப்பற்றிப் பேச வேண்டாம் சுனந்தா. எனக்குப் பிடிக்கவில்லை’ என கடிந்த குரலில் சொன் னேன்.

‘எப்போதாவது இதைப் பற்றி பேசத்தானே வேண்டும்’ எனக்கேட்டாள் சுனந்தா.

‘எதற்காகப் பேச வேண்டும். குழந்தைகள் பெற்றுக் கொள்வது மட்டும்தானா வாழ்க்கை. வேற விஷயமேயில்லையா?’

‘எனக்குக் குழந்தைகள் வேண்டும். ஆனால் என்னால் பெற்றுக் கொள்ளமுடியவில்லை. என்னவோ பிரச்சினை. தீராத பிரச்சினை.’

‘ஒரு பிரச்சினையுமில்லை. நிச்சயம் நமக்குக் குழந்தைகள் பிறக்கும்.’

‘ஆறுவருஷமாக நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை யாரும் என்னிடம் இது பற்றி பேசியதே கிடையாது, ஆனால் திடீரென இன்று அதைப்பற்றிப் பேச வேண்டும் போலிருக்கிறது, நாம் பேசுவோம் சுகு.’

‘பேசி என்ன நடந்துவிடப்போகிறது?’

‘பேசினாலாவது ஒரு ஆறுதல் கிடைத்து விடாதா?’

‘என்ன சுனந்தா இப்படியிருக்கிறாய். எனக்கு நீதான் முக்கியம். குழந்தைகள் பிறந்தால் பிறக்கட்டும். இல்லா விட்டாலும் கவலையில்லை.’

‘இப்படியே இருந்துவிட முடியுமா என்ன?’

‘நான் வயதான காலம் பற்றி எல்லாம் யோசிப்பதே யில்லை. அது வெறும் கற்பனை. இப்போது தான் என் வயது முப்பதியாறு நடக்கிறது.’

‘உன்னால் என்னைப் புரிந்து கொள்ளமுடியவில்லை சுகு.’ என சுனந்தா சப்தமாக அழத்துவங்கினாள்.

அவளது தோளைத் தொட்டு ஆறுதல் படுத்தினேன். சோபாவில் சுருண்டு படுத்துக் கொண்டு அவள் தேம்பித் தேம்பி அழத்துவங்கினாள்.

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மாலை யடங்கி இரவாகியிருந்தது. வெளிச்சத்தைக் கரைத்துக் கொண்டு ஓடுகிறது தண்ணீர்.

எழுந்து தோட்டத்தில் போய் நிற்கலாமா எனத் தோன்றியது.

நனைவதால் மட்டுமே ஒருவனால் மழையை அறிந்து விட முடியாது. மழையை முழுதாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு நனைந்து பிரயோசன மில்லை.

சுனந்தாவின் அழுகை ஒலி அடங்கத் துவங்கி யிருந்தது.

ஏதாவது இசை கேட்கலாம் என நினைத்தபடியே ஷுபர்ட்டின் வயலினை ஒலிக்க விட்டேன். ஷுபர்ட் எனக்கு விருப்பமான இசையமைப்பாளர். அவரது குறுந்தகடுகளை காரில் எப்போதும் வைத்திருக்கிறேன். நீண்ட தூரப் பயணங்களில் அவரது இசை மட்டுமே துணை. பீதோவன், மொசார்ட், விவால்டி, வாக்னர் எல்லாம் அமெரிக்கா வந்தபிறகு கேட்கப் பழகியது, ஆனால் மனதிற்கு மிகவும் நெருக்கமாகி விட்டிருக் கிறது.

ஷுபர்ட்டின் இசை வீடெங்கும் நிரம்பத் துவங்கியது, சுனந்தா அடங்கியிருந்தாள். அவளிடம் அழுகையில்லை. அருகில் போய் உட்கார்ந்து அவளது நெற்றியில் கைவைத்து தடவினேன். என் கைகளை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு ‘சாரி’ என்றாள்.

‘குளிர்கிறதா?’ எனக்கேட்டேன்.

‘இரவுக்கு என்ன சமைப்பது?’ எனக் கேட்டாள்.

‘உனக்கு எது சுலபமானதோ அதைச் செய்’ என்றேன்.

‘நிறைய சமைக்க வேண்டும் போல தோன்றுகிறது. மனதில் கஷ்டமோ சந்தோஷமோ எது அதிகமானலும் நான் நிறைய சமைப்பேன்’ என்றாள்.

‘உன் விருப்பம். நான் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்’ என்றேன்.

‘கிச்சனில் வந்து நின்று கொண்டு ஏதாவது ஒரு கதைசொல்லு’ என்றாள்

‘கதையா, நானா? எனக்குக் கதைகள் எல்லாம் தெரியாதே’ என்றேன்.

‘எப்போதோ கேட்டு மறந்து போன கதைகளில் ஒன்றை நினைவுபடுத்திச் சொல்லு, நான் கதை கேட்க ஆசைப்படுகிறேன்.’

‘யோசித்துச் சொல்கிறேன். வெளியே மழை நிற்கப்போகிறது’ என்றேன்.

சுனந்தா எழுந்து கொண்டு முகம் கழுவச் சென்றாள். பிரிஜ்ஜை திறந்து காய்கறிகளை வெளியே எடுத்துக் கழுவும் சப்தம் கேட்டது. நான் கண்ணாடியில் வழியும் மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கிச்சனில் இருந்தபடியே சுனந்தா பாடத் துவங்கினாள்.

‘கண்ணன் என்னும மன்னன் பேரைச் சொல்ல சொல்லÕ என்ற Ôவெண்ணிற ஆடைÕ படத்தின் பாடல்.

அவளுக்கு ரொம்பவும் பிடித்தமான பாடல். அவள் பாடுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கூடவே பாட வேண்டும் போல தோன்றியது. கூச்சம் தடுத்த காரணத் தால் அவள் பாட்டினைக் கேட்பதற்காக ஷுபர்ட்டினை அணைத்து வைத்தேன்.

அவள் தன்னை மறந்து சப்தமாகப் பாடிக் கொண்டிருக்கிறாள். வெளியே மழையின் வேகம் தணிந்துவிட்டது. இன்னமும் சில நிமிசங்களில் மழை நின்றுவிடும்.

இன்றைக்கு எவ்வளவு மழை பெய்தது என்று தெரிய வில்லை. சுனந்தாவிற்குக் கதை சொல்வதற்காக மனதிற் குள் கதையைத் தேடினேன். காக்கா நரி கதைகளைத் தவிர ஒன்று கூட நினைவில் இல்லை, அலுவலகத்தில் மேலாண்மை பயிற்சி நடைபெற்றபோது சொன்ன ஒரு கதை நினைவிற்கு வந்தது.

அதைச் சொல்வது என்ற முடிவோடு சுனந்தா அருகில் போனேன். அவள் சமையலின் மணம் கமகமத்துக் கொண்டிருந்தது.

‘கதை கேட்கிறாயா?’ எனக்கேட்டேன்.

‘என்னைப் பற்றி ஏதாவது ஒரு கதை சொல். கேட்கிறேன்.’

‘உன்னைப் பற்றியா? என்ன கதை சொல்வது?’

‘ஏதாவது சொல்.’

‘திடீரென உன் உடல் முழுவதும் பனியாக மாறி விடுகிறது. நீ ஒரு பனிதேவதை ஆகிவிடுகிறாய். உன்னை மறுபடியும் பெண்ணாக மாற்றுவதற்கு நான் ஏழு கடல் ஏழு தலை தாண்டி அரக்கனைக் கொன்று மீட்சி பெற்று வருகிறேன். எப்படி இருக்கிறது கதை?’ என்றேன்.

‘நான் பனிதேவதையாகவே இருக்க விரும்புகிறேன். வா, வந்து என் கைகளைத் தொட்டுப்பார்’ என்றாள்.

சுனந்தாவின் கைகளைத் தொட்டுபார்த்தேன். ஜில்லென இருந்தது.

‘நீயும் பனிமனிதனாக மாறிவிடு’ என்றாள்.

‘இன்றைக்கு உன் பேச்சு, செயல் எல்லாமே என்னவோ போல இருக்கிறது சுனந்தா’ என்றேன்.

வெளியே மழை ஓய்ந்து விட்டது,

‘உன் மழைமானி என்ன சொல்கிறது பார்?’ என்றாள்.

நான் தோட்டத்திற்குப் போய் மழைமானியை எடுத்து வந்து பார்த்தேன். 109 மி.மீ. மழை பெய்திருந்தது. பதிவேட்டில் இதே அளவு மழை பெய்த நாள் எப்போது என புரட்டிப் பார்த்தேன். ஐந்து வேறு தேதிகள் பொருந்தி வந்தன.

இந்த மழை விபரம் பற்றி அப்பாவிற்கு ஏன் ஒரு மெயில் அனுப்பக் கூடாது என்று திடீரெனத் தோணியது.

அப்பா ஓய்வு பெற்ற நாளில் இருந்தே வீட்டிற்குள் ளாகவே இருக்கிறார். அவரது ஒரே துணை கம்ப்யூட்டர் மட்டுமே. அதுவும் அம்மா இறந்துபோன பிறகு அவரைத் தங்கையின் குடும்பம்தான் கவனித்துக் கொள்கிறது. நான் ஊருக்குப் போகிற நாட்களில் அப்பாவை அமெரிக்கா வரும்படி பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் மறுத்துவிட்டார்.

வழக்கத்தை விட அன்று சுனந்தாவின் சமையல் மிகச்சுவையாக இருந்தது. இருவரும் நிறைய சாப்பிட்டோம். ‘நல்ல பசி’ என்றாள் சுனந்தா. பிறகு இருவரும் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது என முடிவு செய்து Springtime in a Small Town என்ற படம் பார்த்தோம். படம் நடந்து கொண்டிருக்கும்போதே சுனந்தா என்னை நெருங்கி முத்தமிட்டாள். அழுத்தமான முத்தம். ஒரு பேரலை இழுத்துக் கொள்வது போல காமம் தலைக்கேறியது. அன்றிரவு நாங்கள் காரணமேயில்லாமல் சிரித்துக் கொண்டேயிருந்தோம்.

மறுநாள் காலை அலுவலகம் கிளம்பும் முன்பு அப்பாவிற்கு ஒரு மெயில் அனுப்பினேன். அதில் நேற்று பெய்த மழையின் அளவைக் குறிப்பிட்டு நானும் உங்களைப் போல மழையை அளவிடுகிறேன் என்று எழுதியிருந்தேன்.

மாலை வீடு திரும்பியபோது அப்பாவின் பதில் வந்திருந்தது. அழகான ஆங்கிலத்தில் அப்பா எழுதியிருந்தார்.

Ôநீயும் மழையைப் பின்தொடர்வது சந்தோஷமே. நீ குறிப்பிட்ட அளவு மழையை நான் பதினாறு முறை எதிர்கொண்டிருக்கிறேன். அதன் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டிருக்கின்றன. உன்னையும் என்னையும் மழையாவது இணைத்து வைக்கட்டும்Õ என்று அப்பா எழுதியிருந்தார்.

அப்பாவின் மெயிலை சுனந்தாவும் வாசித்துப் பார்த்தாள்.

‘உன் அப்பா மழையை அளவிட்டதற்குப் பின்னால் ஆழமான ஏதோவொரு மனநிலையிருக்கிறது. நீயாவது அதைப் புரிந்து கொள்ளப்பாரேன்’ என்றாள்.

‘எங்களை மழை இணைத்து வைக்கிறது என்பது வியப்பாகத்தானிருக்கிறது’ என்றேன்.

சுனந்தா சொன்னாள்:

‘என்னால் நேற்றைய மழையை மறக்கமுடியாது.’

அதன்பிறகு நான் அலுவலகப் பணி காரணமாக ஐந்து நாட்கள் வெளியூர் சென்றிருந்தேன். ஊரிலிருந்து அப்பா ஒருமுறை போனில் பேசினார் என்று சுனந்தா சொன்னாள். எதற்காக எனக் கேட்டுக் கொள்ள வில்லை,

அப்பாவிற்கு விரிவாக ஒரு மெயில் போடுவது என கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன்.

‘அப்பா, உங்களை ஒரு போதும் நான் விரும்பியவன் கிடையாது. நீங்களும் என்னை விரும்பியதாக நான் உணரவேயில்லை. ஆனால் இப்போது அடிக்கடி உங்களை நினைத்துக் கொள்கிறேன். உங்களிடம் ஏதோ வொரு மர்மம் இருப்பது போலவே உணர்கிறேன்.

நீங்கள் ரயில்வேயில் வேலை செய்தபோதும் எங்களை வெளியூர்களுக்கு ரயிலில் அதிகம் அழைத்துப் போனது கிடையாது. உங்களுக்குக் குடும்பம் என்பது வெறும் ஓய்விடம். உங்கள் ஆண்மையை நிரூபித்துக் கொண்டதன் அடையாளம்.

ஆனால் நீங்கள் எங்களைக் கோபித்துக் கொண்டது கிடையாது. உங்களது வேலையைப் பற்றி வீட்டில் ஒரு புகார் சொன்னது கிடையாது. உங்கள் உடல் நலம் பற்றியோ, உங்கள் வருவாய் பற்றியோ எதுவும் பகிர்ந்து கொண்டதேயில்லை.

நீங்கள் பிடிவாதம் அதிகமான மனிதர்.

அப்பா, முதுமையாலும் உங்களை மாற்றமுடியவில்லை. நீங்கள் வைராக்கியமான மனதுடையவர். உங்களிடம் எப்படி இந்த மழையை அளக்கும் பழக்கம் உருவானது எனத்தெரியவில்லை. ஆனால் இதன் வழியே நீங்கள் வேறுவகையான மனிதர் என்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அந்தத் தோற்றம்தான் இப்போது உங்களை நோக்கி என்னை நகர்த்துகிறது.

நான் உங்களைப் போல ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதற்காக ஒவ்வொரு சிறு செயலையும் மனதிற்குள் உங்களோடு ஒப்பிட்டுக் கொள்வேன். ஆனால் திடீரென ஒரு நாள் நானும் உங்களைப் போல மழையை அளவிடத்துவங்கினேன். நேற்றுவரை அதை ரகசியமாக செய்துவந்தேன். என்னால் அதை விளக்க முடியவில்லை. ஆனால் மழை எனக்கு எதையோ புரிய வைக்கிறது. நீங்கள் அனுப்பிய மழைப் பதிவுகளைக் காணும்போது நான் நேற்று சந்தித்த மழையின் சகோதரர்களை நீங்கள் முன்பாகவே சந்தித்து இருப்பது போலவே தோன்றுகிறது.

உங்களின் மழைக்குறிப்புகள் கொண்ட டைரியைப் படிக்க ஆசையாக இருக்கிறது. அவற்றைத் தபாலில் அனுப்பி வைக்க முடியுமா?

இப்படிக்கு உங்கள் மகன்’ என எழுதி மின்னஞ்சலை அவருக்கு அனுப்பி வைத்துவிட்டு கணினியின் வெற்றுத் திரையைப் பார்த்தபடியே இருந்தேன். இதைப்படிக்கும் போது அப்பாவின் முகம் எப்படியிருக்கும்? எவ்வளவு யோசித்தும் மனதில் அப்பாவின் முகம் வரவே யில்லை.

அன்றிரவு படுக்கையில் சுனந்தா கேட்டாள்:

‘உங்கப்பாவை நம்மோடு வந்து இருக்கச் சொல்லலாம் தானே?’

‘அவர் வரமாட்டார்’ என்றபடியே படுக்கையில் புரண்டுபடுத்தேன். சுனந்தா எனது தலையைத் தடவிய படியே சொன்னாள்:

‘உன் அப்பாவின் குரல் உன் குரல் போலவே இருக்கிறது. போனில் வேறுபாடே தெரியவில்லை.’

நான் பதில் சொல்லவில்லை. அவர் அனுப்பிய மழைக்குறிப்புகள் பற்றியே நினைத்துக் கொண் டிருந்தேன்.

அப்பா அன்றிரவே பதில் அனுப்பியிருந்தார். இது சற்று நீண்ட கடிதம்.

‘அன்பு சுகுமார்.

மழையை நீயாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். அதன்போக்கில் விட்டுவிடு. என் வாழ்க்கையை நான் அப்படிதான் அமைத்துக் கொண்டேன். மழைதான் எனது ஆசான். மாபெரும் ஒற்றைத்துளிதான் சிதறி மழையாக மாறுகிறது. மழையைப் பார்க்க கற்றுக் கொண்டவனுக்கு சஞ்சலங்கள் இருக்காது. துக்கம் அவனை ஒன்றும் செய்யாது. நான் அப்படித்தான் எனது தனிமையைக் கடந்து சென்றேன்.

ஆள் அற்ற ரயில் நிலையத்தின் இரவுகளைத் தனிமையில் கடப்பது எளிதானதில்லை. மழை என்னை ஆறுதல்படுத்தியிருக்கிறது. நான் மழையிடம் என்னை ஒப்படைத்துக் கொண்டுவிட்டேன். அது போதுமான தாகயிருக்கிறது. நீயும் நானும் முடிவில்லாத மழையின் பெரும்பயணத்தின் சிறுசாட்சிகள். நான் அதன் ஒருகாட்சியையும் நீ மறுகாட்சியையும் காண்கிறாய். மழையை அளவிடு. அப்போது மழையை மட்டுமில்லை, உன்னையும் நீ அறியத்துவங்குவாய்.

நீ அடுத்த பயணத்தில் ஊர் வரும்வரை நான் உயிரோடு இருக்கமாட்டேன். எனது மழைக்குறிப்புகள் எதுவும் யாரும் படிப்பதற்கானதில்லை. அவை எனக்கானது. என்னோடு அவை அழிந்து போகட்டும். எவ்வளவு பெரிய மிகுமழை பெய்த நாளாக இருந்தாலும் அதை யார் நினைவு வைத்துக் கொள்ளப் போகிறார்கள்?

உனக்காக ஒன்றை மட்டும் விட்டுச் செல்கிறேன். அது நான் பயன்படுத்திய மழைமானி. அதை நீ என்றாவது எனது பேரனோ,பேத்தியோ கேட்டால் பரிசாகத் தந்துவிடு. அந்த ஒற்றை சந்தோஷம் மட்டும்தான் நான் உன்னிடம் யாசிப்பது.

உனக்காக ஒரு ரகசியம் ஒன்றைச் சொல்கிறேன். உன் அம்மாவைத் தவிர எனக்கு வேறு ஒரு பெண்ணோடு நெருக்கம் உண்டு. அவள் கேரளாவில் நான் வேலை பார்த்த இடத்தில் அறிமுகமானவள். அவளையும் நான் திருமணம் செய்து கொண்டிருந்தேன். அவளுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. அது உன் அம்மாவிற்கும் தெரியும். அதனால்தான் நான் உங்களோடு அதிகம் வீட்டில் இருக்கவில்லை. உன் அம்மா மகத்தான மனுஷி. நான் அருகதையற்ற மனிதன். எனது தவறுகளை, குற்றவுணர்ச்சியை நான் மழையில் கரைத்துவிட முயன்றேன். என்னால் முடியவில்லை. மழைதான் என்ன செய்யும்?

ஆண்களால் கேட்கமுடியாத மழையின் ரகசியத்தைப் பெண்கள் கேட்டுவிடுவார்கள். மழையால் மட்டுமே உலகை வாழ வைக்கமுடியும். பெண்களும் அப்படித் தான்.

உன் மனைவிக்கு எனது அன்பும் ஆசிகளும்.

இப்படிக்கு உன் அப்பா.’

அந்த மெயிலைப் படித்து அதிர்ந்து போனேன். அப்பாவிற்கு இன்னொரு குடும்பம் இருந்த தடயம் கூட எங்கள் யாருக்கும் தெரியாது. அம்மா எப்படி இதை ஏற்றுக் கொண்டாள்? ஏன் கோபம் கொள்ளவேயில்லை? அப்பாவின் பலவீனங்களை அம்மா ஏன் மன்னித்தாள்? அம்மாவின்மீது ஆத்திரமாக வந்தது.

நான் சுனந்தாவை அழைத்து மெயிலைப் படிக்கச் சொன்னேன். அவள் படித்துவிட்டுச் சொன்னாள்:

‘இதை எல்லாம் உன் அம்மா என்னிடம் முன்னமே சொல்லியிருக்கிறார். நான்தான் உன்னிடம் சொல்ல வில்லை.’

‘எதற்காக?’ எனக் கேட்டேன்.

‘நிறைய விஷயங்களை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த ஊர் மழை அதைத்தானே கற்றுத்தருகிறது’ என்றாள்.

நான் மௌனமாக சுனந்தாவைப் பார்த்துக் கொண் டிருந்தேன். அவள் பேசுவது ஆழமான உண்மை என்று எனக்குப் புரிந்திருந்தது.

http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=6520

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு கதை. எப்படிடி இவ்வளளவு துல்லியமாக ஒரு விடயத்தை எழுத முடிகிறது. பிரமிப்பாக இருக்கிறது. நான் இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதைக் கதை என்னும் ஒரு சொல்லில் அடக்கமுடியாது. மழை இறங்குமுன் பூமியை முத்தமிடக் கவிழ்ந்து இருக்கும் கார்மேகம்போல்...!

 

சுமே ! எஸ் . இராமகிருஷ்னன் ஒரு விடயத்தை எழுத்துக்கு கொண்டுவரும் முன்  அது சம்பந்தமான இடங்கள் ,தளங்கள் என்று மாதங்கள் , வருடங்கள்  மினக்கட்டு தகவல்கள் சேகரிப்பவர். அதனால் அவரது எழுத்துக்கள் அவரது சுவாசமாய் வெளிப்படுகின்றது. அவரது கதைகளைத் தேடிப் படித்தீர்கள் என்றால் புரியும். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.