Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குட்டி ரேவதி சந்திப்பு – பிரிவினை கோஷங்களும் முற்போக்கு அரசியலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி ரேவதி சந்திப்பு – பிரிவினை கோஷங்களும் முற்போக்கு அரசியலும்

ரா.கிரிதரன்

கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி, லண்டன் தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் அமைப்பின் அழைப்பின் பெயரில், கவிஞர் குட்டி ரேவதி `பெண் கவிதையும் சமூக மாற்றமும்` என்ற தலைப்பில் உரையாடினார். கவிஞர் மாதுமை வழிப்படுத்திய இக்கூட்டத்தில், எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் மற்றும் பல இலங்கைத் தமிழ் வாசகர்கள் கலந்துகொண்டனர். வரலாற்றுப் பிரக்ஞை என்றால் வீசை என்ன விலை, நம்மைச் சுற்றியிருக்கும் அதிகார மதங்களின் உலகளாவிய அழித்தொழித்தல் பற்றிய அறியாமை, இந்தியப் பண்பாடு மற்றும் மதச் சிந்தனைகள் பற்றிய அவதூறு, `முற்போக்கு அறிவுஜீவி` எனும் பட்டத்துடன் பன்முக இந்திய மரபு பற்றிய அற்பத்தனமான இழிச்சொற்கள், `மூத்தகுடிக்கு முன்னால் தோன்றிய` பார்ப்பனியத்தைப் பற்றிய கண்டுபிடிப்புகள் என வழக்கமான சூழலில் கூட்டம் இனிதே நடந்தேறியது. கொடுக்கப்பட்ட கட்டுரைத் தலைப்புக்கு கிஞ்சித்தும் சம்பந்தமில்லாது நடந்த கூட்டத்தில் உண்மையான பெண் கவிதை உலகம் தப்பித்தது தான் ஒரே நன்மை.

லண்டன் நகரில் தமிழ் கலைவளங்கள் சார்ந்து நடக்கும் கூட்டங்கள் அதிகமில்லை. நான் பார்த்தவரை மிகக் குறைவான கலை இலக்கிய ஆர்வலர்கள் இக்கூட்டங்களுக்கு வருகிறார்கள். லண்டனில் வாழும் இலங்கைத் தமிழர்களிடையே அரசியல் விவாதங்களுக்கு இருக்கும் வரவேற்பு, கலை இலக்கிய சங்கதிகளுக்குக் கிடையாது. ஆனால் அப்படிப்பட்ட அரசியல் விவாத அரங்குகளும் இந்திய அரசுக்கு எதிரான கருத்தியல் கோஷங்களுக்கான இடமாகவே இருப்பதைப் பார்க்கிறேன். முன்பு பி.ஏ.கிருஷ்ணன் வந்தபோதும் இதுதான் நிலை. போலி முற்போக்கு விவாதங்களும், இந்திய இறையாண்மை குறித்த கிண்டலும் மலிந்துகிடக்கும் இக்கூட்டங்களை நம்பி செல்லும் பார்வையாளர்கள் பாவப்பட்டவர்கள். பிழைப்புக்காக ஓடிக்கொண்டிருக்கும் நம்மவர்கள் ஏதோ மிச்சசொச்சம் இருக்கும் ரசனை உணர்வைக் கூர்தீட்டிக்கொள்ளவும், சக நண்பர்களோடு கலந்துரையாடலாம் எனும் எதிர்பார்ப்போடும் வருபவர்கள் ஏமாறும் நிலை ஏற்படுகிறது.

பலவிதமான கூட்டங்கள் நடக்கும் தமிழகத்தில் உண்மையான ஆர்வலர்கள் ஒதுங்கக்கூடிய கூரைகள் இன்றும் கொஞ்சம் மிச்சமிருக்கின்றன. அவர்களது நிலை பரவாயில்லை. ஆனால், லண்டன், பெர்லின் போன்ற இடங்களில் வாழும் தமிழர்கள் இந்திய மூலப்பண்பாடு பற்றிய அவதூறு கோஷங்களை மட்டுமே எழுப்பும் இப்படிப்பட்ட கூட்டங்களினால் குழம்பிப்போகிறார்கள். ஐரோப்பிய நாகரிகத்தையும் தழுவிக்கொள்ள முடியாது எனும் நிதர்சனம் ஒரு புறம், சொந்தப் பண்பாடு பற்றி அறிவிலிக் கருத்துரைகள் மறுபுறம் என கொஞ்சம் கலை இலக்கிய ஆர்வம் இருப்பவர்களையும் இப்படிப்பட்ட கூட்டங்கள் துரத்திவிடுகின்றன.

சமீபத்தில் நடந்த பெண் எழுத்தாளர்கள் சர்ச்சயைப் பற்றி ஆரம்பத்தில் குட்டி ரேவதி பேசும்போது, பிற்போக்கு எழுத்தாளர்கள் என்று தீர்ப்பளித்துவிட்ட ஜெயமோகன், நாஞ்சில் நாடன் ஆகியோர்களைப் பற்றிய தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் குறைவில்லை. இந்த வரிசையில் புதிதாக வைரமுத்துவையும் சேர்த்திருப்பது தான் புரியாத ஆச்சர்யம்.

“நாஞ்சில் நாடன் நம்பிக்கைத் தரும் இளம் எழுத்தாளர் எனும் பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்த்திருக்கிறாரே?”, எனக் கேட்டதற்கு, “நான் பதினைந்து வருடங்களாக எழுதிவருகிறேன். பத்துக்கும் மேற்பட்ட தொகுப்புகள் போட்டிருக்கிறேன். என்னைப் போய் நம்பிக்கை தரும் இளம் எழுத்தாளர் எனச் சொல்வது எத்தனை வன்மம் மிகுந்த செயல்”, என்றார்.

நாஞ்சில் நாடன் பட்டியலை முன்வைத்து ஜெயமோகன் பேசியது தனக்கு ஒன்றும் ஆச்சரியம் இல்லை எனக்கூறிய குட்டி ரேவதி, “அவரை தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை. ஆனால் பொதுவாக இலக்கிய உலகமே ஆணாதிக்கக்கூட்டம் தான். ஜெயமோகன் ஒரு பிரதிநிதி “, எனச் சொன்னார். இவ்விவாதம் குறித்து ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளையோ, நாஞ்சில் நாடனின் பட்டியலின் அடிப்படையையோ அவர் சிறிதும் புரிந்துகொள்ளவில்லை எனத் தோன்றியது.

“வைரமுத்துவும் உங்களது கவிதைகளைப் பாராட்டியுள்ளாரே?”, எனக் கேட்டதற்கு “அவர் யார் என்னை பாராட்ட?”, எனக் கேட்டு கூட்டத்தில் எல்லாரையும் திகைப்பில் ஆழ்த்தினார். இதற்கு மேல் என்ன கேள்வி கேட்பது எனத் தெரியாமல் கூட்டத்தினர் சற்று தடுமாறித்தான் போனார்கள். ‘

தொடர்ந்து இருட்டடிக்கபடுவதாகக் கூறிக்கொள்ளும்போது இலக்கிய ஆளுமைகளால் கவனிக்கப்படுகின்ற சம்பவங்களை இகழ்வதன் தாத்பரியம் புரியவில்லை. நாஞ்சில் பற்றிப் பேசும்போது, இலங்கைத் தமிழர்களிடையே வரவேற்பைப் பெற்ற “பரதேசி” படம் பற்றி விவாதம் திரும்பியது. டேனியல் எழுதிய The Red Tea நாவலைப் படித்தால் பரதேசி எத்தனை வக்கிரமான பார்ப்பனியத்தைத் தூக்கிக்பிடிக்கும் படம் என யமுனா ராஜேந்திரனும், குட்டி ரேவதியும் பேசினர். இதற்கு பதிலளிக்கும் முகமாக ஒரு இலங்கைத் தமிழர் “நான் இலங்கையில் இருந்தபோது கிறிஸ்துவ மிசனரிகள் செய்த வன்முறைகளை நேரில் பார்த்தவன். அங்கு நடந்த கட்டாய மதமாற்றமும் கொடுமைகளும் இலங்கைத் தமிழர்களுக்குப் புது செய்தியல்ல”, என்றார். இதை மறுத்துப் பேசிய யமுனா ராஜேந்திரன் “ஒரு கவளம் சோறு கிடைத்தால் போதுமென இருக்கும் கூட்டம். சாதி இந்துக்கள் சேர்த்துக்கொள்ளாவிட்டால் எங்கே போவார்கள்? வாழ்நாள் முழுக்க இப்படிப்பட்ட வர்க்க பிரச்சனைகளையும், பார்ப்பனிய தந்திரத்தையும் மீண்டும் மீண்டும் பேசிய கார்ல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கார் மூவரும் தமிழ் இனத்துக்கு நெருக்கமான தலைவர்கள்”, என்றார்.

சொந்த அனுபவங்களையும், கொடுமைகளையும் முன்வைக்கும் மக்களிடையே தங்கள் மேதாவித்தனத்தை முன்வைத்து, உண்மையைக் கவனிக்கவொட்டாமல் திசை திருப்பி, தமிழ் மக்களிடையே பிரிவினையை ஊட்டும் கொடுமைக்கு இதை விட கச்சிதமான உதாரணக்கூட்டம் இருக்க முடியாது.

”இந்திய அரசியல் சட்டக்கட்டமைப்பு சனாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. காலங்காலமாக இந்து தர்மங்கள் பிற சமயங்களை வெளியே தள்ளியிருக்கின்றன. இந்திய அரசியலமைப்பும் பார்ப்பனியத்தை கையிலெடுக்கிறது. இதனாலேயே இந்திய இறையாண்மை பிற மதங்களை ஒடுக்குகிறது. காலங்காலமாக தீண்டாமையினால் இந்து சமுதாயத்துள் சேர முடியாத பிறர் பெளத்தத்தை தழுவினர்”- கணிதச் சமன்பாடு போல் என்றும் மாறா கோஷங்களான இவற்றின் பல்வேறு வேடம் தரித்த கருத்துகள் இப்படிப்பட்ட கூட்டங்களில் வாழையடி வாழையாகப் பரப்பப்படுகின்றன. இந்திய இறையாண்மைச் சிந்தனைகளின் அடிப்படை மட்டுமே தெரிந்தவர்களுக்குக் கூட இவையனைத்தும் பொய் எனத் தெரிந்தும் இவை ஒவ்வொரு மேடையிலும் ஏன் பரப்படுகின்றன?

இந்திய சட்ட அமைப்பை உருவாக்கியவர் பாபா சாகேப் அம்பேத்கர் எனக் கூறும் அதே வாயால் தான் அது சனாதன தர்மத்தை வலியுறுத்தும் விஷம் என்றும் சொல்கிறார்கள். காலங்காலமாக அடிமைப்படுத்தப்பட்ட தலித் சமூகம் எனத் தீர்மானமாக சமூக விஞ்ஞானிகளைப் போலப் பேசும் அடுத்த வாக்கியத்தில் தலித்களிடமிருந்த சித்த மருத்துவ ஞானத்தை சைவக்கழகம் கைப்பற்றி வரலாற்றை மறைத்தது என முரணாகச் சொல்ல முடிகிறது. கிறிஸ்துவம், மார்க்ஸிசம், இஸ்லாம் போன்ற பிற கருத்துகளின் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்த அம்பேத்கரை இந்து மத எதிர்ப்பாளராக மட்டுமே கட்டமைக்கும் புரட்சியாளர்கள், க.அயோத்திதாசர் அமைத்த திராவிட மகாஜன சபை, தென்னிந்திய சாக்கிய சங்கம் போன்ற அமைப்புகளின் அடிப்படைகளைத் தங்களுடையதாக மாற்றிக் கொண்டதோடு மட்டுமல்லாது அக்குழுக்களை தங்களுடன் சேர்க்க மறுத்து விலக்கி வைத்த நீதிக் கட்சி மற்றும் திராவிடக் கட்சிகளை அரவணைக்க துடிக்கின்றனர். இந்திய சிந்தனை மரபுக்கு மாற்றாக மேலை சுதந்தரச் சிந்தனையை ஏற்கத் துடிக்கும் இவர்களது உரைகள், மேற்கத்திய இன-நிறவாதம், காலனியாதிக்கப் பெருங்கொள்ளை, கீழை தேசங்களின் அனைத்து வளங்களையும் பல நூறாண்டுகளாக அபகரித்த ஆட்சிமுறை, பன்னெடுங்காலமாக மார்க்ஸியம்/கிறிஸ்துவ/இஸ்லாம் மதங்களின் பெயரால் பல நிலப்பரப்புகளில் ஆயிரமாயிரமாண்டுகளாக நிலவிய பண்பாடுகளை வேரோடு அழித்தொழித்தல் போன்றவற்றைக் கண்டும்காணாமல் இருப்பதோடு அவற்றை முன்னேற்றப்பாதையாக பரிந்துரைக்கும்.

சுதந்திர இந்தியாவில் கடந்த அறுபது ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்களை மீட்டெடுக்க முனைவதைவிட சாதியத்தை பார்ப்பனர்களின் திட்டமிட்ட சதி மட்டுமே எனப் பழி சாட்டும் பிரச்சாரம் செய்வதையே இந்திய எதிர்ப்பாளர்கள் செய்துவருகிறார்கள். பார்வையாளரில் ஒருவர் இதை முன்வைத்து கவிஞர் குட்டிரேவதியிடம் – `பாபா சாகேப் அம்பேத்கார் அவர்கள் தொடங்கிய போராட்டத்தை இன்று தொடர்ந்து செய்பவர்கள் யாரார்? ` எனக்கேட்டார். தமிழகத்தில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக தாழ்த்தப்பட்டவர்களது உரிமைக்காகப் போராடுவதாகச் சொல்லும் கவிஞர் குட்டி ரேவதிக்குத் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்குப் பாடுபடும் அடிமட்ட செயற்பாட்டாளர்கள் யாரையும் தெரியவில்லை. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ தத்துவ முதல்வர் ராமானுஜர் முதற்கொண்டு ராஜா ராம் மோகன்ராய், விவேகானந்தர், நந்தனார் பள்ளியைத் தொடங்கிய சுவாமி சகஜானந்தர், பிரம்மானந்த சிவயோகி என தொடர்ந்து பல இந்து சமயவாதிகள் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட இனத்தவரது உரிமைக்காக பல போராட்டங்களைச் செய்தவர்கள்.. தலித் மக்களுக்காகப் பாடுபடுபவர்கள் இன்றும் பெருவாரியாக அடிமட்ட செயல்பாட்டாளர்களாக மட்டுமே இருக்கின்றனர். எவ்விதமான அரசியல் அமைப்போ, கட்சிகளோ தாழ்த்தப்பட்டவர்களது முழுச் சுதந்திரத்தை நோக்கி அடியெடுத்தும் வைக்கவில்லை. இந்த உண்மையை முழுக்க மறைப்பதோடு மட்டுமல்லாது இந்திய பண்பாட்டின் மீது அப்பழியைப் போடுகின்றனர். இந்தியா ஒரு பல்லினக் குழுவினர் வாழும் நாடு என்பதை மறந்துவிட்டு, இந்திய பண்பாட்டையும், கலை ஞானச் செல்வங்களையும் இழிவுபடுத்தி மக்களை திசை திருப்புவது இவர்களது முதல் கடமையாக இருக்கிறது.

கவிஞராக, எழுத்தாளராக அறியப்படுவதற்கும் சமூகச் செயற்பாட்டாளராக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் மிக முக்கியமான வித்தியாசங்கள் உண்டு. கலை சார்ந்த அழகியல் ஒரு முன்னோக்கிய சமூகத்துக்கான அற விழுமியங்களை கேள்விகளாக முன்வைக்கிறது. தீர்வுகள் எனும் மாயலோகத்தில் அது உட்புகுவதில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்காக எழுதப்பட்ட ஒரு வரிகூட தமிழ் இலக்கியத்தில் இல்லை என நம்பும் எதிர் மனநிலை இலக்கியத்தையும் அரசியல் அறைகூவலாகப் பார்க்கிறது. அது கலையை நம்புவதில்லை. வசதிக்கும், தற்காலிக அரசியல் லாபத்துக்கும் மட்டுமே குரல் கொடுக்கும் நபர்கள் நேர்மையான நிலைபாட்டை ஒரு போதும் கையிலெடுக்க மாட்டார்கள். அதிகாரப் பறிப்பு ஒன்றை மட்டுமே குறிவைக்கும் சாதாரண அரசியல்வாதிகள் இப்படி தமக்கு ஆதாயம் வரும்பக்கம் மட்டும் ஆதரவு கொடுத்துக் கொண்டு, உண்மையைத் தொடாமல் மக்களின் சிந்தனையைத் திசை திருப்பிக் கொண்டிருப்பார்கள்.

வரலாற்றின் வண்டலில் அழுகுவாடையோடு கரை ஒதுங்கிக் கிடக்கும் மனித நேயமற்றப் எல்லா அரசியல் கருதுகோள்களையும் தனது விமர்சனக் கைப்பொருளாகக் கொள்ளும் துணிவு ஒரு சமூக செயற்பாட்டாளருக்கு வேண்டும். அரசியல் செயற்பாட்டாளர்களும் உண்மையான முன்னேற்றச் சிந்தனை உள்ளவர்களும் எதையும் வரலாற்று நேர்மை எனும் கல்லில் உரசிப்பார்த்துக்கொள்வதோடு மட்டுமல்லாது தன்னைச் சுற்றி பல நாடுகளில் நடக்கும் பாசிச, அதிகார மதவெறி ஆட்டங்களை வெளிக்கொணரவும், அவற்றைக் கொண்டு தனது அடிப்படை நேர்மையைக் சதா கேள்விகேட்கும் மனநிலையும் வேண்டும். அதற்கு முதல்கட்டமாக நமது பண்பாட்டு விழுமியங்கள், சிந்தனைச் செல்வங்கள், பண்பாட்டு உள்ளடுக்குகள் போன்றவற்றின் மீது இழிவுப்பார்வையை அகற்ற வேண்டியது அவசியம். இப்படிப்பட்ட பிரிவினை அமைப்புகளுக்கு வரும் வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் பலதும் வெளியானாலும், அவற்றின் அழித்தொழில் எந்தளவு பலங்கொண்ட கருவியாக நம்நாட்டில் ஊடுருவியுள்ளது என்பதை இக்கட்டுரையில் படிக்கலாம்.

`லண்டனில் உள்ள தமிழர்கள் தங்களது சிந்தனைக்காகவும், முன்னேற்றப் பாதைக்காகவும் இந்தியாவை எதிர்பார்த்திருப்பதையும், காத்திருப்பதையும் நிறுத்த வேண்டும். மாறாக, இங்குள்ள முற்போக்கு சிந்தனைகளையும், சுதந்திர சிந்தனைகளையும் தமதாக்கிக்கொள்ள வேண்டும்` – எனும் உயரிய சிந்தனை இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தங்களது பொருளாதார சுதந்திரத்தை மீட்டுக்கொள்ள இங்கிலாந்துக்கு வந்திருக்கும் பலருக்கும் இது பெரிய கண் திறப்பாக இருந்திருக்கும். மிகச் சிறந்த தீர்வாகவும் இது தோன்றியிருக்கும். அதாவது ’பார்ப்பனிய இந்து இறையாண்மை நாடான’ இந்தியாவை எதற்கும் நம்பாமல், ஐரோப்பிய சமூகத்திலிருந்து சுதந்தர சிந்தனையையும், கிறிஸ்துவ இறையாண்மையையுமே கைத்தடியாக உபயோகிக்க வேண்டும் எனும் தீர்வு வழங்கப்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் குரல்கொடுக்கும்போது இதுபோன்ற `கைதூக்கிவிடும்` ஒரு ’உயரிய’ காலனிய மனோபாவத்தை இந்திய முற்போக்குகளும், புரட்சியாளர்களும் கைக்கொள்கிறார்கள். முதலியத்தை மட்டுமே மையமாகக்கொண்டிருக்கும் மேலைச் சமூகத்தின் முழுப் பரிணாமத்தைப் புரிந்துகொள்ளாமல் இப்படிப்பட்ட தீர்வுகள் வழங்கப்படுவது நகைப்புக்குரியது. மேலைச் சிந்தனையை விடுதலைக்கு வழியாகப் பரிந்துரைப்பது முதலியத்தை, காலனியத்தை, இனவெறியை, யூரோப்பிய மையவாதத்தை உயர்த்திப் பிடித்து, சொந்த நாட்டை இழிவு செய்யும் அடாத செயலாகும். அந்த எளிய தேற்றத்தை இவர்கள் இன்னுமே புரிந்து கொள்ளச் சக்தி அற்றவர்களாக இருக்கிறார்கள்.

சொல்லித் தீர்க்க முடியாத அளவுக்கு ஏற்கனவே துன்பப்பட்டு பிழைப்பு தேடி வேற்று நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்து கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து வாழும் ஈழத்தமிழர்களிடையே இன/மொழி வெறியைத் தூண்டிவிட்டு, இந்துமதத்துக்கும் இந்தியாவுக்கும் எதிராக அவர்களைத் திருப்பிவிட்டு ஈழத்தமிழர்களை அவர்களின் பண்பாட்டு வேரில் இருந்து பிடுங்கி எறிந்து மேற்கின் நாகரிகத்தின் முன் மண்டியிடச்சொல்லி கலாச்சார அனாதைகளாக ஆக்கும் இந்த முற்போக்கு அறிவுஜீவிகள் இலக்கியம் என்ற முலாமை பூசிக்கொள்வதை விட அவமானதொரு நிலைமை வேறேதும் இல்லை. பல்லாண்டுகளாக, புலம்பெயர்ந்த சமூகத்தில் அந்நியனாக நின்றுகொண்டு, பற்றுக்கோட்டுக்காக தாய் மொழியை நம்பியிருக்கும் பார்வையாளர்களின் அனுபவங்களைக் கேலி செய்வது போலவும் இருந்தது.இப்போக்கினால் இலக்கியமும் சரி, தாழ்த்தப்பட்டவர்கள் நிலையும் சரி கிஞ்சித்தும் மாறப்போவதில்லை என்பது நிதர்சனம்.

வளமானச் சூழியல் பார்வை , மூலப் பண்பாடு சார்ந்த தொழில்கள், இயற்கை விவசாயம் போன்றவற்றை சமூகத்தின் மையச் சக்திகளாக வலியுறுத்தாமல் பிரிவினை கோஷங்களும், சுயநலத்தை மட்டுமே பேணும் அரசியலும் இப்படிப்பட்ட முற்போக்கு குழுக்களுக்கு அச்சாணியாக அமைந்துள்ளன. இவ்விதழில் வந்திருக்கும் திருப்பூர் நகர தொழில்வளம் பற்றி சுப்ரபாரதிமணியனின் கட்டுரை நமது சுயநலத்தின் அழிவுச்செயலுக்கு ஒரு சான்று.

மனித வெறுப்பு அரசியலின் பொய்யுரைகளையும், குழு சார்ந்து அக்கறை கொள்பவர்களாகக் கூறிக்கொள்ளும் அமைப்புகளின் போலித்தனங்களையும் உணரவேண்டியது அவசியம். பிரிவினையை மட்டுமே முன்வைக்கும் புரிதலற்ற அரசியல், துளியளவும் மனித மேம்பாட்டுக்கு நன்மை தராது. நம்மைச் சுற்றியிருக்கும் நாடுகளில் நடந்துகொண்டிருக்கும் ஒடுக்குமுறை அரசியலையும், மனிதநேயமற்ற மதப் பிரச்சாரங்களையும், இயற்கை வளச் சுரண்டல் அழிவு சக்திகளையும் ஒருசேரப் பார்த்து அவை அனைத்துமே இந்தியாவின் நலன்களுக்கும், இந்தியருக்கும் எதிரானவை என்ற எளிய உண்மையை அறிந்துகொள்ளும் சமூகப்பிரக்ஞை எந்தொரு சுதந்திர விழைவுக்கும் அடிப்படை. இந்தப் புரிதலில்லாது நடத்தப்படும் முற்போக்குக் கூட்டங்களுக்கு ஆதரவு தரும் பார்வையாளர்கள் வெளிச்சம் என நம்பி வந்து, திட்டமிட்ட வன்மத்துக்குத் தம்மைப் பலிகொடுத்த இரைகள்.

.- See more at: http://solvanam.com/?p=35074#sthash.DdB5rNyQ.dpuf

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் சொல்லவருவது என்னவென்றால் இந்தியா தமிழ்த்தேசியத்துக்கு எதிராக எதைச்செய்தாலும் தமிழர்கள் பொறுத்துக்கொண்டு இருக்க வேணும்.விமர்சனம் செய்யக்கூடாது.இந்தியாவை மேவி எந்தநாட்டின் உதவியையம் பெறக்கூடாது.இதலெல்லாம் ஆண்மையுள்ளவன் செய்யிறவேலை(அமெரிக்கா,ரஸ்யா.சீனா)ஆண்மையில்லாத இந்தியா வாய்ச்சவடால்மட்டும்தான் செய்ய முடியும்.இந்தியா தமிழருக்கு செய்த துரோகத்தை வாய்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சொல்வவோம்.அப்பதான் எங்கள் எதிர்கால சந்ததி இந்;தியா பற்றி விளிப்பாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.