Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உஷார் தமிழா உஷார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உஷார் தமிழா உஷார்!
சதுரங்க வேட்டை மோசடிகள்
பி.ஆண்டனிராஜ், செ.சல்மான், ச.ஜெ.ரவி, ஓவியங்கள்: ஹரன்
 

மானாட மயிலாட, சூப்பர் சிங்கர்களுக்குப் போட்டியாக தமிழகத்தில் 'மோசடி’களும் ஏகப்பட்ட சீஸன்களைத் தாண்டி ஓடிக்கொண்டே இருக்கின்றன. பாரீஸில் ஈஃபிள் டவரை இரும்பு வியாபாரியிடம் விலைக்கு விற்ற 'அடேங்கப்பா டுபாக்கூர்’கள் உண்டு. அதற்குச் சற்றும் சளைக்காமல் சென்னையின் எல்.ஐ.சி கட்டடத்தை விலை பேசிய கில்லாடிகள் இங்கு உண்டு. செய்தி, சினிமா, அக்கம்பக்க அனுபவங்கள்... என எவ்வளவுதான் 'அலர்ட்’ செய்தாலும், ஏரியாவாரியாக வருடம் முழுக்க புதுப் புது பாணிகளில் நடந்துகொண்டே இருக்கின்றன 'சதுரங்க வேட்டை’ மோசடிகள். எந்த விஷயத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டுமே. அப்படி தமிழகம் தழுவிய மோசடிகளின் சமீபத்திய அப்டேட் இங்கே...

p88b.jpgசிங்கிள் அண்ட் ஐ'யம் யங்!

இது, 'நம்பினால் நம்புங்கள்’ பாணி மோசடி. கை-கால்களில் தங்க மினுமினுப்புடன், பளபள கார்களில் வலம்வரும் 'ரிச் ஓல்டு மேன்’தான் இந்த மோசடியின் டார்கெட். நண்பருக்கு நண்பர் மூலம் அறிமுகம் ஆகும் இந்தப் பேர்வழிகள், பேச்சுவாக்கில் ஒரு கதையை எடுத்துவிடுவார்கள். அதாவது, முதுமையைத் தடுக்கும் மூலிகையைத் தேடி சித்த வைத்தியர் ஒருவரும் அவரது உதவியாளரும் காட்டுக்குள் செல்கிறார்களாம். அந்த உதவியாளர் மிக வயதானவர். அதனால் ஓர் எல்லை வரை சென்றதும், உதவியாளரை சமையல் செய்யச் சொல்லிவிட்டு வைத்தியர் மட்டும் மூலிகையைத் தேடிப் போய்விட்டார். சாப்பாடு செய்துகொண்டிருந்த உதவியாளர், அதனைக் கிளறிவிட அருகில் கிடந்த ஒரு குச்சியைப் பயன்படுத்தியிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் சாதம் முழுவதும் கறுப்பாக மாறிவிடுகிறது. 'வைத்தியர் வந்தால் திட்டுவாரே’ என்ற பயத்தில் அந்த உதவியாளர் சாப்பாட்டை முழுமையாகச் சாப்பிட்டுவிட்டு, புதிதாகச் சமைத்துவைக்கிறார். சற்று நேரத்தில் அங்கு வந்த வைத்தியர், 'தம்பீ.. இங்கே ஒரு பெரியவர் இருந்தாரே!’ என்று கேட்டிருக்கிறார். அட, நம்புங்கள் சாமி... அந்த முதிய உதவியாளர்தான் இளமைப் பொலிவுடன் நின்றிருக்கிறார். தனக்கு என்ன நடந்தது என்று புரியாமல், உதவியாளர் நடந்ததைச் சொல்ல, சாதம் கிளறிய குச்சியே தாங்கள் தேடி வந்த மூலிகைச் செடி என்று பரவசமாகி, அந்தக் குச்சியின் மரத்தைத் தேடி, கண்டுபிடித்தும்விட்டார்கள். ஆனால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அடர்ந்த காட்டுக்குள் இருக்கிறது அந்த மரம். அதன் பேர்கூட மூன்று பேருக்கு மட்டும்தான் தெரியும். அப்படி ஒரு மரத்தில் இருந்து குச்சியைக் கொண்டுவந்திருக்கும் நபரைத் தனக்குத் தெரியும் என்று சொல்வார் அந்தப் பேர்வழி. அதைக் கேட்ட மாத்திரத்தில் உங்கள் உடல் சிலிர்த்தால், உள்ளம் குதூகலித்தால், நீங்கள் லட்சாதிபதியாக இருந்தால், அதில் பாதியாகிவிடுவீர்கள். 'காதும் காதும் வெச்ச மாதிரி பேரத்தை முடிச்சுக்குவோம்’ என்று  'எவர்கிரீன் யூத்து’ கனவை ஏற்றிவிட்டு சாத்து சாத்து என்று சாத்திக்கொண்டிருக்கிறது ஒரு கும்பல். ஏமாந்த சோணகிரிகள் கடைசி வரை கறுப்பு சாதத்தைச் சாப்பிட்டுக்கொண்டு, கண்ணாடியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்!

நடுக்கடலுல கப்பலை இறங்கித் தள்ள முடியுமா?    

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஏரியா. 'தோடா’ என்று வியக்கும் கெட்டப்பில் ஸ்கோடா காரில் வலம் வந்திருக்கிறார் ஒருவர். 'பழைய கப்பல்களை விலைக்கு வாங்கி, அதை உடைச்சு கோடிக்கோடியா பணம் சம்பாதிக்கிறேன்!’ என்று தங்க முலாமிட்ட 'விசிட்டிங் கார்டு’ நீட்டுவார். 'பில்கேட்ஸுக்கு பிரதரா இருப்பாரோ!’ எனப் பயந்து பயந்து ரெஸ்பெக்ட் கொடுத்திருக்கிறார்கள். 'ரஷ்யக் கப்பல் ஒண்ணு சல்லிசு விலைக்கு வந்திருக்கு. ஆனா, '2.5 c’ சொல்றான். உடைச்சு வித்தா '10 c’ தேத்திப்புடலாம். கையில கொஞ்சம் பணம் முடை. அதான் தெரிஞ்சவங்ககிட்ட கைமாத்தாக் கேக்கலாம்னு யோசிக்கிறேன். இப்போ ஒரு லட்சம் கொடுத்தா, அஞ்சு மாசம் கழிச்சு மூணு லட்சம் கொடுக்கிறேன்னு சொன்னா சொந்தக்காரங்க காசு கொடுப்பாங்களா?’ என்று ஊரின் பிரபலப் புள்ளிகளிடம் ஆலோசனை கேட்பதுபோல கேட்பார்.  'அப்பு... என்ன நீங்க... அவுங்ககிட்ட எதுக்கு கேட்டுக்கிட்டு? நானே தர்றேன்!’ என்று தூண்டிலில் ஆசை ஆசையாகப் போய் சிக்கிக்கொள்வார்கள். ஆரம்பத்தில் சிலர் ஒரு லட்சம் கொடுக்க, சொன்னபடி மூணு மடங்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார் தோடா பார்ட்டி. 'ஆஹா... நம்ம கண்ணு முன்னாடியே பக்கத்து வீட்டுக்காரன் பணக்காரன் ஆகுறானே!’ என்று பதற்றம் ஆகும் பலர், வீடு, நிலத்தை எல்லாம் விற்று லட்சத்தைக் கொட்ட, கோடிகள் சேர்ந்ததும் 'கப்பல் யாவாரி’ கம்பி நீட்டியிருப்பார். சொந்த வீட்டை விற்றுவிட்டதில், பலரும் இப்போது கவலையோடு வாடகை வீட்டில் வாழ ஆரம்பித்திருக்கிறார்கள்!

செம்பு வம்பு!

இது திகில் மர்மம் நிறைந்த வரலாற்றுப் பின்னணி கொண்ட மோசடி!

தேனி பங்களாமேடு பகுதியில் வியாபாரி ப்ளஸ் சம்சாரி முத்துப்பாண்டியனை அணுகி இருக்கிறது வெள்ளையும் சொள்ளையுமான ஒரு கும்பல். 'ராஜராஜ சோழன் காலத்து மந்திரச் செம்பும், அவர் பயன்படுத்தின பஞ்சாரக் கூடையும் எங்கிட்ட இருக்கு. (ராஜராஜ சோழனுக்கு எதுக்குய்யா பஞ்சாரக் கூடை?) மந்திரச் செம்பில் பணம் வைத்து பஞ்சாரக் கூடைக்குள் போட்டா, மறுநாளே ரெண்டு மடங்கு ஆகும். உங்க கண்ணு முன்னாடியே ரெட்டிப்பு ஆக்கிக் காட்டுறோம்’ என்று ஆசையைக் காட்ட, 35 லட்ச ரூபாயைக் பஞ்சாரக் கூடைக்குள் கொட்டியிருக்கிறார் முத்துப்பாண்டியன். பஞ்சாரக் கூடைக்கு சந்தனம் அப்பி, அத்தர், பன்னீர் தெளித்து பாலபிஷேகம் செய்து தீபம் காட்டி பூஜை செய்திருக்கிறார்கள். பூஜைக் கும்பலில் பட்டுச் சேலை கட்டிய குடும்பக் குத்துவிளக்குகளும் இருந்ததால் தங்கபாண்டிக்கு டவுட் வரவில்லை. ஏதேதோ செய்தும் பூஜை முடிவில் பஞ்சாரக் கூடைக்குள் பணம் வரவில்லை. 'இன்னைக்கு ஏதோ தடங்கல். நாளைக்கு ரிப்பீட் பண்ணுவோம்!’ என்று தாவா சொல்லி, பணத்தோடு பறந்தோடிவிட்டது கும்பல். 'ராஜராஜ சோழன் நான்...’ பாடலைக் கேட்டால் வெறியாகிக்கொண்டிருக்கிறார் முத்துப்பாண்டி.

p88c.jpg

இது க(£)ட்டுக் கதை!

நெல்லை மாவட்டம் களக்காடு மலைப்பகுதியில் வைடூரியம் கிடைப்பதாக எப்போதும் ஒரு வதந்தி நிலவுகிறது. இதனை நம்பி வனத் துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மலைக்குள் வைடூரியத்தைத் தேடி கும்பலாகப் போவதும், வனத் துறையில் பிடிபடுவதும் அவ்வப்போது நடக்கும் சடங்கு. இதையும் தங்கள் ஸ்கிரிப்டில் சேர்த்துவிட்டது மோசடி கோஷ்டி.

'களக்காடு மலையில் தோண்டி எடுத்த வைடூரியம் இருக்கு. கஷ்டப்பட்டு எடுத்து வந்தேன். இப்போ கொஞ்சம் பணமுடை. அவசரம்கிறதால கோடிகளில் விற்க வேண்டியதை லட்சத்துல விற்க வேண்டிய நிலைமை. சில லட்சங்கள் கொடுத்து வாங்கிக்கோங்க. சின்னச் சின்னதா அதை உடைச்சு வித்தா, கோடியைத் தொட்டுரலாம்!’ இப்படிப் பரிவாகப் பேசினால், பர்ஸில் கை வைப்போம்தானே? அப்படி ஆசைப்பட்டு பளபள வைடூரியம் வாங்கி, வீட்டின் ஸ்டோர் ரூமில் உட்காந்து உடைத்தால், அது சில்லு சில்லாக உடையும். 'கண்ணாடியைக் காமிச்சு ஏமாத்திட்டானுங்களே!’ என்று கண்ணு வியர்க்கிறார்கள் தெக்கத்திப் பணக்காரர்கள் சிலர்.  

எண்ணெயெல்லாம் எதுக்கு?  

மகளிர் சுயஉதவிக் குழு பெண்களை இலக்கு வைத்துக் கிளம்பியிருக்கிறது ஒரு கும்பல். 1,000 ரூபாய் விலை உள்ள சைனா மேடு குக்கர் ஒன்றை 10 ஆயிரம் ரூபாய் விலை சொல்வார்கள். 'இதுல சமைக்க எண்ணெயே தேவை இல்லை. இதனால வருஷத்துக்கு நீங்க எண்ணெய் வாங்குற பணம் 50 ஆயிரம் ரூபாய் மிச்சம் பண்ணலாம்!’ (அடேங்கப்பா!) என்று வழுக்கலாகப் பேசுவார்கள். கண் முன் மடமடவென எண்ணெய் இல்லாமலேயே மட்டன் குழம்பைச் சமைத்துப் பரிமாறுவார்கள். முடிந்தால் ஊட்டியும் விடுவார்கள். உண்ட மயக்கம் கண்களைச் சுழற்றும்போது இன்னொரு ஆஃபர் வரும். 'மூன்று குக்கர்களை விற்றுக்கொடுத்தால், ஒரு குக்கருக்கான விலையை நீங்கள் கமிஷனாக எடுத்துக்கொள்ளலாம்’. கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு லாபமாக வரும். தலையாட்டும் 'ஹோம் மேக்கர்’களை குக்கர் விற்கவைத்துவிடுவார்கள். சரியாக ஒரு வாரம். அவர்கள் ஊரைக் காலி பண்ணியதும், விற்ற குக்கர் மக்கர் பண்ண ஆரம்பிக்கும். 'சிக்கன் தீய்ஞ்சுபோச்சு... வெங்காயம் கருகிப்போச்சு!’ எனப் புகார் பறக்கும். அப்புறம் என்ன... உங்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சண்டைகள் சிறக்கும்.

செய்முறையின்போது பார்சல் மட்டன் குழம்பை நைஸாகக் கலந்துகொடுத்து சாப்பிட்ட மர்மம் பின்னர்தான் தெரிய வரும்!

ஆடு போச்சே!

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதிக்கு கேரளாவில் இருந்து ஆடு வியாபாரிகள் சிலர் லாரியில் வந்திருக்கிறார்கள். 'தமிழ்நாட்டு ஆடுகளுக்கு கேரளாவுல செம கிராக்கி. அங்க போதுமான ஆடு இல்லை. ரெண்டு மடங்கு விலை தர்றோம். தர்றேளா?’ என்று கேட்டால், மனசு கேட்குமா? மொத்த ஆட்டையும் கொடுத்துவிட்டார்கள் சம்சாரிகள். பேசினதுக்கு மேலாகவே அவர்கள் பணத்தைக் கொடுக்கும்போது, சந்தேகம் வந்திருக்க வேண்டும் அல்லவா? வராது! மறுநாள் வங்கியில் பணத்தைச் செலுத்தப்போனால், அத்தனையும் அச்சு அசல் கள்ள நோட்டுகள். ஆடுகள் இழப்பு போதாது என்று, கள்ள நோட்டைப் புழக்கத்தில்விட்ட குற்றத்துக்காக விவசாயிகளையும் போலீஸ் அள்ளிச் செல்ல, 'போச்சே... போச்சே’ என்று கண்ணைக் கசக்குகிறார்கள் விவசாயிகள்.

p88.jpgசங்குத் தேவன்கள்!

ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி பக்கம் நடக்கிறது இந்த மோசடி. கடலில் கிடைப்பதில் வலம்புரி சங்கு மிக அபூர்வம். இந்த வலம்புரி சங்கை வட இந்தியர்கள் கடவுளாக வழிபடுவார்கள். அதனால், நல்ல விலைபோகும். இந்தியக் கடல் பகுதியில் பிடிக்கப்படும் வலம்புரி சங்குகளுக்குத்தான் அவ்வளவு மதிப்பு. ஆனால், அதே சாயலில் இருக்கும் ஒரு வகையான சங்குகள் குவியல் குவியலாக ஆப்பிரிக்காவில் கிடைக்கின்றன. அதை இறக்குமதி செய்யும் வியாபாரிகள் கொஞ்சம் பாலீஷ் மாலீஷ் போட்டு, இந்திய வலம்புரி சங்கு என்று ஏமாற்றி விற்றுவிடுகிறார்கள். இதாவது பரவாயில்லை. இடம்புரி சங்குகளையே சில ஜிக்ஜாக் வேலைகள் செய்து வலம்புரி சங்கு என்றும் விற்கிறார்களாம் சில ஜித்தன்கள். ஏமாந்தது எல்லாம் வட இந்தியர்கள் என்பதால் இந்த டகால்ட்டி பிசினஸ், இப்போது வரை 100 சதவிகித லாப உத்தரவாதத்தோடு, சக்கைப்போடு போடுகிறது!

மல்லு லொள்ளு!

மலையாளிகளைக் குறிவைத்து சிவகங்கை பகுதியில் ஆட்டையைப் போடுகிறார்கள் சிலர். மலையாளப் பத்திரிகைகளில் 'தொழில்முனை வோர்களுக்குக் குறைந்த வட்டியில் நிதி உதவி செய்யப்படும்’ என்று விளம்பரம் கொடுப்பார்கள். அதையும் நம்பி சிலர் கிளம்பிவருவார்கள். காரைக்குடியில் இருக்கும் பிரமாண்ட பங்களாவை வாடகைக்குப் பிடித்து, கடன் கேட்டு வருபவர்களிடம் பிசினஸ் ஷோ காட்டுவார்கள். அறைகளில் 10, 15 லாக்கர்கள் இருக்கும். பார்ட்டி இருக்கும்போது அதில் இருந்து கத்தைக்கத்தையாக டூப்ளிகேட் பணத்தை எண்ணி, டூப்ளிக்கேட் தொழில்முனைவோருக்குக் கொடுப்பார்கள். ஒரு கோடிக்கு ஐந்து லட்சம் சர்வீஸ் சார்ஜ். அதையெல்லாம் கண் முன் பார்க்கும் நிஜத் தொழில்முனைவோர் பரவச நிலைக்குச் சென்றுவிடுவாரே! 'இத்தனை வருடத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்று அக்ரிமென்ட் எல்லாம் பக்காவாகப் போட்டுக்கொண்டு, எத்தனை கோடி கடனோ, அதற்கான சர்வீஸ் சார்ஜைப் பணமாகப் பெற்றுக்கொள்வார்கள். கடன் தொகையை செக் ஆகக் கொடுப்பார்கள். அதை வங்கியில் கொடுத்தால், 'யோவ்.. இது டூப்ளிக்கேட் செக்’ என்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவார்கள். திரும்ப காரைக்குடிக்கு வந்தால், காலி வீடு வரவேற்கும்!

தங்கமே தங்கம்!

தங்கப் புதையல் ஏமாற்று மோசடியில் லட்சங்களை ஏமாந்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் அனுபவம் இது. 'கொஞ்ச மாசம் முன்னாடி எங்க ஊர்ல ஒரு ஆளு சுத்திட்டு இருந்தான். கட்டட வேலை பாக்குறதா சொன்னான். ஒருநாள் 'ஒரு உதவி வேணும்’னு கேட்டான். 'மைசூர்ல நாங்க கட்டட வேலை பார்த்தப்போ, குழி தோண்டினோம். அப்போ தங்கப் புதையல் கிடைச்சது. அது மகாராஜா வசிச்ச பகுதி. அரண்மனைலாம் இருந்து இடிஞ்சு சிதிலமான பகுதி. அதனால எங்களுக்குப் புதையல் கிடைச்சதுபோல. அதை வித்துத் தர முடியுமா?’னு கேட்டான். முதல்ல நான் நம்பலை. 'நம்பலைனா இந்த  நியூஸ் பாருங்க’னு பேப்பர்ல தங்கப் புதையல் சம்பந்தமா வந்த செய்தி கட்டிங்கை எடுத்துக் காமிச்சான். அப்பவும் முழுசா நம்பலை. 'இன்னும் நம்பலைல... நாளைக்கு புதையல்ல இருந்து ஒரு காசு கொண்டுவர்றேன். நீங்க பாத்துட்டுச் சொல்லுங்க’னு போனான். சொன்ன மாதிரி, தங்கக் காசு ஒண்ணு கொண்டுவந்தான். ஏதோ ராஜா சின்னம், பட்டயம்லாம் போட்டு இருந்துச்சு. நான் நகைப் பட்டறையில கொண்டுபோய்க் கொடுத்தேன். சொக்கத் தங்கம்னு சொன்னாங்க. அப்போதான் அவனை நம்பினேன். 'என்கிட்ட ரெண்டு கிலோ நகை இருக்கு. உங்களுக்குனா கிராமுக்கு 750 கொடுத்தா போதும். 15 லட்சம் மட்டும் கொடுங்க’னு கேட்டான். அடிச்சுப் பிடிச்சு 10 லட்சத்துக்குப் பேசி முடிச்சேன். 3 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தேன். அன்னையில இருந்து... தோ இன்னைக்கு வரைக்கும் காத்துட்டு இருக்கேன். ஆளைக் காங்கலை!'' என்கிறார் சோகமான குரலில்.

p88a.jpgகல்லு கல்லு... தள்ளு தள்ளு!

என்றைக்குமான எவர்கிரீன் மோசடி நாகமாணிக்கக் கல்தான். இன்றும் அதை நம்பி ஏமாறும் ஆட்களுக்கும் குறைவு இல்லை. '100 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற பாம்பின் விஷம் அப்படியே உறைஞ்சு கல்லா மாறிடும். நிறைஞ்ச பௌர்ணமி அன்னைக்கு பாம்பு அதைக் கக்கிட்டுப் போயிரும். அந்தக் கல்லோட பிரகாசத்துக்கு, அதைக் கண்ணால பார்க்க முடியாது. சாணியால கல்லை மூடித்தான் கொண்டுவரணும். கையில காயம் இருக்கிறவங்க கல்லைத் தொட்டா உடனே செத்துருவாங்க. பார்த்துத் தொடணும். கல்லை எப்பவும் பால்லதான் போட்டு வைக்கணும்’ என டெரர் 'பில்ட்-அப்’ கொடுப்பார்கள். நாகமாணிக்கக் கல்லின் பெருமைகளைப் பற்றி அவர்களே எழுதிப் பதிந்திருக்கும் வலைப்பூவை (ப்ளாக்)  அப்போதுதான் தேடிப் பிடிப்பதைப்போல க்ளிக்கி படித்துக் காட்டுவார்கள். 'அட அமெரிக்காக்காரனே எழுதியிருக்கான்ப்பா’ என்று உங்களையும் சிலாகிக்கவைப்பார்கள். இன்னும் சில புத்தகங்களைக் காட்டுவார்கள். 'நாகமாணிக்க கல் வெச்சிருந்தா, அதோட சக்தியால எல்லா தீமையும் ஓடிப்போயிடும். தொழில் நல்லா நடக்கும். உடல் உபாதைகள் எதுவும் வராது’ என்று அடுக்குவார்கள். உங்களுக்கு முழு நம்பிக்கை வரும் நாளில், ஒரு காட்டுப் பகுதிக்கு வரச்சொல்லி பணத்தை வாங்கிக்கொண்டு பஞ்சு நிரப்பிய பெட்டியில் வைக்கப்பட்ட மினுங்கும் சிவப்பு நிறக் கல்லை மிகச் சில நொடிகள் மட்டும் கண்ணில் காட்டுவார்கள். (உபயம்: எல்.இ.டி பல்புகள்) காடு, இருட்டு, மினுங்கும் கல், பாம்பு எல்லாம் சேர்ந்து உங்களைக் குழப்பும். அப்போதும் நீங்கள் சுதாரிப்பாக இருந்தால், சைரன் ஒலியுடன் போலீஸ் வரும். அந்தப் பதற்றத்தில் நீங்கள் இருக்கும்போதே உங்களிடம் கல்லைத் திணித்துவிட்டு,  சிட்டாகப் பறந்துவிடுவார்கள். அந்தப் போலீஸும் அவர்களின் செட்டப்தான் என்று உங்களுக்குப் புரியும்போது, இன்னோர் ஊரில் இன்னொருவரிடம், '100 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற...’ என்று கதைசொல்ல ஆரம்பித்திருப்பார்கள்.

'குற்றவுணர்ச்சி இல்லாம செய்ற எதுவுமே தப்பு இல்லை’ - என 'சதுரங்க வேட்டை’ படத்தில் ஒரு வசனம் வரும். திட்டமிட்டு ஏமாற்றும் மோசடி பேர்வழிகளுக்கு, குற்றவுணர்ச்சி வர வாய்ப்பே இல்லை. அதனால், நீங்கதான் உஷாராக இருக்க வேண்டும் மக்களே!

இருப்பீர்களா, நீங்கள் இருப்பீர்களா?

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.