Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீ அறிவாளியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீ அறிவாளியா?

வா. மணிகண்டன்

சென்ற வாரத்தில் ஓசூரில் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. தேனிக்காரர். என்னைவிட இருமடங்கு வயதாவது இருக்கும். ஓசூரில் ஒரு நிறுவனம் நடத்துகிறார். ஆரம்பத்தில் எந்தப் பின்னணியும் இல்லை. பம்பாயிலும், பெங்களூரிலும் சில பட்டறைகளில் வேலை பார்த்திருக்கிறார். தொழில் பழகிய பிறகு பத்தாயிரம் ரூபாயில் தனது நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இப்பொழுது அது சாம்ராஜ்யம். ஜப்பானிலும் சிங்கப்பூரிலும் நியுஸிலாந்திலும் இருக்கும் நிறுவனங்களோடெல்லாம் டை-அப். பறந்து கொண்டிருக்கிறார். பல கோடி ரூபாய் புரள்கிறது. இத்தகைய மனிதர்களை எதிர்பாராமல் சந்திக்கும் போது என்ன பேசுவது என்ற குழப்பம் வந்துவிடும். எல்லோரும் தங்களின் தொழில் பற்றி பேசுவதில் விருப்பம் காட்டமாட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு மரக்கடைக்காரரைச் சந்தித்த போது தெரியாத்தனமாக ‘உங்க பிஸினஸ் பரவாயில்லீங்களா?’ என்று கேட்டுத் தொலைத்துவிட்டேன் ‘என்னங்க பெரிய பிஸினஸு? நாலு கோலும் குச்சியும் வித்து வாயும் வயிறும் வளர்க்கிறேன்..அத விடுங்க தம்பி’என்று பல்ப் கொடுத்துவிட்டார். அவருக்கு தலை முழுவதும் நரை. இந்தப் பொடியனிடம் எதைப் பேசுவது என்று நினைத்திருக்கக் கூடும். கொங்கு மண்டலம் முழுவதும் அவர் மரம் சப்ளை செய்கிறார் என்று தெரியும். கோடிக்கணக்கான ரூபாய்கள். கேட்டால் நாலு கோலும் குச்சியும் என்கிறார். இப்படிச் சொன்னவரிடம் வேறு என்ன பேசுவது? அடங்கிக் கொண்டேன்.

இந்தத் தேனிக்காரரிடமும் பல்ப் வாங்கத் தயாரில்லை. எனக்குத் தெரிந்த விவகாரங்களாகப் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டு புத்தகங்கள் என்று ஆரம்பித்தவுடன் ‘அதெல்லாம் நமக்கு பழக்கமேயில்லீங்க’ என்றார். சினிமா என்றவுடன் ‘சினிமா பார்த்து இருபத்தேழு வருஷம் ஆச்சுங்க’ என்றார். அவ்வளவுதான். பெரிய சிக்கலாகிவிட்டது. புத்தகம்தான் உலகம் என்று நம்பிக் கொண்டிருந்தால் இதுதான் பிரச்சினை. வாசிக்கிறவன் தான் அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருந்தால் நாம்தான் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். இந்த மனிதருக்கு புத்தகமும் எழுத்தும் ஒரு பொருட்டே இல்லை. அவரை முட்டாள் என்று சொல்ல முடியுமா என்ன? பல நூறு குடும்பங்களுக்கு வாழ்வளிக்கிறார்.

‘அவர் மட்டும் புத்தகங்கள் வாசிக்கிறவராக இருந்திருந்தால் அவரது வெற்றி பன்மடங்காக இருந்திருக்கும்’ என்று யாராவது முஷ்டியை மடக்க வேண்டாம். காலங்காலமாக புத்தகங்களோடு மாரடித்து நாசமாகப் போனவர்களின் பெரும்பட்டியலைத் தயாரிக்க முடியும். உண்மையில் புத்தகம், சினிமா, இணையம் ஆகியவற்றையெல்லாம் தாண்டி மிகப்பெரிய உலகம் இருக்கிறது. எழுத்து, ஃபேஸ்புக், வலைப்பதிவு, ட்விட்டர் என்று திரிபவர்கள்தான் தம்மை பெரிய அறிவாளியாகவும் மற்றவர்களை ஒன்றுமே தெரியாத பொக்கைகளாகவும் நினைத்துக் கொள்கிறோம்.

ஊருக்குச் செல்லும் வழியில் ஒரு மோட்டலில் பேருந்து நின்றது. இறங்கியிருந்தேன். அங்கு ஒரு லாரி பழுதடைந்து நிற்கிறது. அது பஞ்சாப் வண்டி. இரண்டு மூன்று லாரி டிரைவர்கள் என்னனென்னவோ செய்து பார்த்தார்கள். வேலைக்கு ஆகவேயில்லை. சில நிமிடங்களில் இன்னொரு லாரியிலிருந்து ஒரு ஓட்டுநர் இறங்கினார். அறுபது வயதைத் தொட்டிருந்தார். லுங்கியோடு இறங்கியவர் லாரியின் பேட்டரியில் கை வைத்து என்னென்னவோ செய்தார். ஐந்து நிமிடங்களுக்குள் வண்டி கிளம்பிவிட்டது. அவர் எதுவுமே காட்டிக் கொள்ளாமல் தனது வண்டியை எடுத்துச் சென்றார். நள்ளிரவில் இது நடந்தது. அதன் பிறகு எனக்குத் தூக்கமே வரவில்லை. அத்தகையை பெரிய ராட்சத இரும்பு வண்டியின் சூட்சுமங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார் அந்த எளிய மனிதர். நான் எம்.டெக் படித்திருக்கிறேன். பேரு பெத்த பேரு தாக நீலு லேது. கிரைண்டர் பழுதடைந்தால் பட்டர்பிளை ஷோரூமுக்குத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டியதாக இருக்கிறது.

ஊரில் கோவணம் கட்டிக் கொண்டு வெள்ளாடு மேய்த்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் சிலரிடம் பேசிப்பார்க்கலாம். செம்பூத்து பறக்கும் விதத்தை வைத்தே மழை வரும் என்று கணித்துவிடுவார்கள். அவர்களிடம் இல்லாத அறிவா நம்மிடம் இருக்கிறது?

இந்த எழுத்தை வாசிக்க ‘நீ அறிவாளியாக இருக்க வேண்டும்’ என்கிற ரீதியில் இன்று ஒருவரி கண்ணில்பட்டது. இத்தகைய வரிகள் உண்மையிலேயே disturb செய்கின்றன. சங்கடமாகவும் இருக்கிறது. தஸ்தாயோவ்ஸ்கியை வாசிக்கவில்லை என்றால் அவன் முட்டாள் என்று அர்த்தம் இல்லை. மாக்ஸிம் கார்க்கியை புரிந்து கொள்ளாதவன் மடையன் என்று அர்த்தம் இல்லை. இதையெல்லாம் வாசிக்கத் தெரிந்தவன் தான் அறிவாளி என்று ஸ்டேட்மெண்ட் விடுவதை எப்படி புரிந்து கொள்வது? இது ஒருவிதமான மிரட்டல். இதை புரிந்து கொண்டால்தான் நீ அறிவுஜீவி என்பது ஒருவிதமான ப்ளாக்மெயில்.

புத்தகங்களும் எழுத்தும் சிந்தையைக் கிளறுவதாக இருந்தால் போதும் (Thought provoking). அடிப்படையில் அதுதான் எழுத்தின் சித்தாந்தம் இல்லையா? அதில் மொழி விளையாட்டுக்களும், சிக்கலான வாக்கிய அமைப்புகளும், புதிய வார்த்தைகளையும் அள்ளிவிடுவது எழுத்தாளனுக்கான உரிமை. அவனது திறமை. இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் திருகித் திருகி எழுதிவிட்டு இதுதான் செறிவான எழுத்து; இதை வாசிக்கிறவன் தனி உலகத்தினன் என்றெல்லாம் சொல்வது வெளியில் இருந்து பார்க்கும் எளிய வாசகனிடம் ‘இதைப் படிக்கத் தெரியலைன்னா ஓடிப் போடா முட்டாப்பயலே’ என்பது போல இருக்கிறது. அவன் கொஞ்சம் விவரமானவனாக இருந்தால் தப்பித்துக் கொள்வான். ஏமாந்த சோனகிரியாக இருந்தால் ‘எதுக்கு வம்பு? படிக்கிறோமோ இல்லையோ அந்த மனுஷனின் எழுத்தை படிக்கிறேன் என்று சொல்லி வைப்போம்’ என்று பம்மத் தொடங்கிவிடுவான்.

வாசிப்பதும் எழுதுவதும் ஒரு கலைதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதற்காக செருக்கும் திமிருமாக இருக்க வேண்டியதில்லை. படைப்பாளனுக்குத் திமிர் அவசியம் என்றும் படைப்பவனின் கர்வம் பெருமையுடைத்து என்றெல்லாம் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ஒரு மண்ணும் இல்லை. தறி ஓட்டுபவனும், வயல் உழுபவனும் எந்தவிதத்திலும் கேவலமானவன் இல்லை. காலங்காலமாக சேற்றுக்குள் உழலும் அவனுக்குத்தான் எந்தப் பயிர் எந்தப் பருவத்தில் விளையும் என்று தெரியும். அவனது துறையில் அவன் கொண்டிருக்கும் அறிவில் ஐந்து சதவீதம் கூட நம்மிடம் இல்லை என்பதுதானே உண்மை?

இதையெல்லாம் ‘அவர் எழுதியதற்கு எதிர்வினை’ என்று எந்த எழுத்தாளரோடும் இதை இணைத்துப் பார்க்க வேண்டியதில்லை. ‘அவர் சொல்லவந்ததன் அர்த்தமே வேறு’ என்று யாராவது வியாக்கியானம் வேறு கொடுப்பார்கள். எதற்கு வம்பு? எழுத்தும் வாசிப்பும்தான் அறிவின் இலக்கணம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் எல்லோருக்குமான பதில்தான் இது. இங்கு நிறையப் பேர் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்- மண்டை நிறைய கனத்தோடு. இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் வாசிப்பதும் எழுதுவதும் எந்தவிதத்திலும் பிறவற்றைவிட சிறப்பு வாய்ந்ததில்லை. அப்படி யாராவது நம்பிக் கொண்டிருந்தால் பொடனியிலேயே புறங்கையால் தட்டலாம். ஆனது ஆகட்டும்.

அவனவன் துறையில் அவனவன் கில்லி. அவன் வாசிக்காவிட்டாலும் கூட கில்லிதான்.

http://www.nisaptham.com/2014/09/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

 . எழுத்து, ஃபேஸ்புக், வலைப்பதிவு, ட்விட்டர் என்று திரிபவர்கள்தான் தம்மை பெரிய அறிவாளியாகவும் மற்றவர்களை ஒன்றுமே தெரியாத பொக்கைகளாகவும் நினைத்துக் கொள்கிறோம்.

நிதர்சனமான உண்மை நன்றி இனைப்பிற்க்கு கிருபன்.

எனக்கும் இவ்வாறு சிலரைத்தெரியும்

உழைப்பால் உயர்ந்தவர்கள் மட்டுமல்ல

மற்றவர்களுக்கு உதவும் முடிந்ததை செய்யும் குணத்தாலும்

எல்லோரோடும் அன்பாக

எல்லோரது பிரச்சினைகளையும் தீர்ப்பவர்களாக.....

இருப்போரைக்கண்டிருக்கின்றேன்

பழகியிருக்கின்றேன்

அதிசய  பிறவிகளாகத்தெரிவார்கள் எனக்கு..

கல்வி படிப்பு பத்திரங்கள் எதுவற்று

இவ்வாறு இருக்கும் நபர்களை  சந்தித்ததை இட்டு பெருமைப்படுவதுண்டு

நானும் இவ்வாறு வாழணும் என்ற ஆசையை  என்னுள் விதைப்பவர்கள்

அவர்களது   குணத்துக்கு

வருவது  அவ்வளவு எழிதல்ல என்பதை எனது ஒவ்வொரு நடவடிக்கைகளும் எனக்கு சுட்டி நிற்கும்..

நல்ல  பதிவு

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான விடயங்கள் ...!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆக்கத்தை படிக்கும் போது எனக்கு ஒரு நினைவு வந்தது...அண்மையில் கிடைத்த அனுபவம்  கூட ....நான் என் நேரத்தை எப்போதும் வீணாக்க மாட்டேன்...அந்தவகையில் நிறைய ஏதாச்சும் எழுதிக்கொண்டு பொயிண்டாக சொல்வது மாதிரி எடுத்துக் கொண்டே  இருப்பன்..

என்னோடு நன்றாக நடித்துப் பழகிய ஒருவர் என்னைக்  களட்டி விடுவதற்கான உதாரணமாக சொல்வப் பட்டவை. உனக்குத் தானே எழுத தெரியுமாச்சே அதை வைச்சு பிழைச்சுப்போ எள்று முறித்துக் கொண்டு போய் விட்டார்...எழுதிறம் என்றதற்காக நாங்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்று சொன்னால் சனம் கல்லால் தான் குத்த வரும்...எல்லாராலும் எல்லாம் செய்ய இயலாது..அதே நேரம் ஓரே எழுதிக் கொண்டும் இருக்க ஏலாது..பறக்கும் தேனீக்கும் ஓய்வு தேவையானதால் தான் ஓய்வு எடுக்கிறது அவ்வாறே மனித மனங்களும்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ இங்ஙையுமா? சில விடயங்களில் அமைதி காப்பதே மேல் யாயினி அப்படி இருந்தைமையால் உண்மையாண நட்புகளை இன்றும் இழக்காமால் இறுமாப்புடனேயே வாழ்கிறேன்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளன் என்றால்?

வா. மணிகண்டன்

வணக்கம்.

தங்களை முகநூல் மூலம் அறிந்து,அப்புறம் உங்களின் இணைய பக்கங்களை படிக்கத் தொடங்கினேன்.வாழ்த்துக்கள்!!

நீ அறிவாளியா? என்கிற கட்டுரையில், “இந்த எழுத்தை வாசிக்க ‘நீ அறிவாளியாக இருக்க வேண்டும்’ என்கிற ரீதியில் இன்று ஒருவரி கண்ணில்பட்டது. இத்தகைய வரிகள் உண்மையிலேயே disturb செய்கின்றன. சங்கடமாகவும் இருக்கிறது. தஸ்தாயோவ்ஸ்கியை வாசிக்கவில்லை என்றால் அவன் முட்டாள் என்று அர்த்தம் இல்லை. மாக்ஸிம் கார்க்கியை புரிந்து கொள்ளாதவன் மடையன் என்று அர்த்தம் இல்லை. இதையெல்லாம் வாசிக்கத் தெரிந்தவன் தான் அறிவாளி என்று ஸ்டேட்மெண்ட் விடுவதை எப்படி புரிந்து கொள்வது? இது ஒருவிதமான மிரட்டல். இதை புரிந்து கொண்டால்தான் நீ அறிவுஜீவி என்பது ஒருவிதமான ப்ளாக்மெயில்” என்று எழுதியிருக்கிறீர்கள். அப்படி எழுதியது யார் என்பது உங்களுக்கும் தெரியும் - எனக்கும் தெரியும்.

ஒரு புரிதலுக்காக கேட்கிறேன். நீங்கள் பொறியியல் பட்டதாரி. எனக்கு அது சம்மந்தமாக ஒன்றும் தெரியாது.இருந்தாலும் தெரிந்த மாதிரியே நான் உங்களிடம் பேசுகிறேன். என் பேச்சு சுத்த முட்டாள் தனமாக இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால் நான் வேறு ஒரு துறையில் ஜாம்பவான். அதற்காக நீங்கள் சகித்துக்கொண்டு தலையாட்டிக்கொண்டிருபீர்களா? இல்லை, “உங்களுக்கெல்லாம் இது தெரியாதுண்ணே, போய் உங்களுக்கு தெரிந்ததை செய்யுங்கண்ணே” என்பீர்களா?

தனக்கு பரிச்சியம் இல்லாத அல்லது பாண்டித்யம் இல்லாத துறையில் ஒருவர் மூக்கை நுழைத்து தடாலடியாக பேசும் போது எரிச்சல் தானே வரும்?

நீங்கள் குறிப்பிடும் அந்த லாரி டிரைவர், உங்களிடம் வந்து, “என்ன செயகாந்தனும்,செயமோகனும் எலுதி கிலிச்சிட்டானுங்க தம்பி....நா(ன்) சின்னப்புள்ளையா இருக்கச்சே பி.டி.சாமியோட கதைய படிப்பேன் பாரு அத அடிச்சிக்க இன்னொருத்தன் பொறந்து வறனும்...”னு பேசினா அவரின் தொழில் திறமையை பாராட்டிய நீங்கள், அவரின் இலக்கிய அறிவையும் பாராட்டுவீர்களா அல்லது “நமக்கெதுக்குங்கண்ணே அதெல்லாம், போய் லாரிய ஓட்டுங்க..” என்பீங்களா?

எம்.எஸ்.ராஜேந்திரன், திருவண்ணாமலை.

அன்புள்ள ராஜேந்திரன்,

வணக்கம்.

எழுத்து என்பதை ஒரு புரிதலுக்கான திறவுகோலாக மட்டும்தான் பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு வேண்டுமானாலும் ஆழமான சரக்கும் இருக்கலாம் சாக்குப்பையும் இருக்கலாம். அவையெல்லாம் இரண்டாம்பட்சம். அடிப்படையில் அது ஒரு தகவல் தொடர்புக்கான வழி. அவ்வளவுதான். எழுத்தாளனுக்கு நம்மிடம் சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது. அதை கட்டுரையாகவோ, கவிதையாகவோ, கதையாகவோ அல்லது நாவலாகவோ அவன் தனக்குத் தெரிந்த வழியில் எழுதுகிறான். அதை வாசகனால் புரிந்து கொள்ள முடியலாம் அல்லது இயலாமலும் போகலாம். ஆனால் அதற்காக எழுதுகிறவன் பிஸ்தா என்கிற பில்ட் அப் சமாச்சாரங்களில்தான் சங்கடமாக இருக்கிறது.

இங்கு எல்லோரிடமுமே எழுதுவதற்கான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு கிழவியிடம் பேசினால் அவளிடம் ஆயிரம் கதைகளாவது தேறும். ஒரு குழந்தையிடம் கூட சொல்வதற்கான கதைகள் இருக்கின்றன. யாரிடம்தான் கதைகள் இல்லை? இருக்கிற கதைகளை எழுதுகிறவன் எழுத்தில் கொண்டு வந்துவிடுகிறான் மற்றவர்களால் அதைச் செய்ய முடிவதில்லை. அது மட்டும்தான் வித்தியாசம். அவனால் தனது கதைகளை எழுத்தாக்க முடிகிறது என்கிற அளவில் மரியாதையைக் கொடுக்கலாம்.

ஆனால் இங்கு அப்படியா நடக்கிறது? எழுத்தாளன் என்றால் கண்களுக்குத் தெரியாத இரண்டு கொம்புகள் இருப்பதாகத்தானே கருதிக் கொள்கிறார்கள். இது இன்று நேற்று வந்ததில்லை. பாரம்பரியம். காலங்காலமாக அப்படித்தான் இருக்கிறது.

கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார். கம்பனைத் தெரிகிறது, வள்ளுவனைத் தெரிகிறது, பள்ளு இலக்கியத்தை எழுதியவனின் பெயரைக் கூடத் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் இருக்கும் நந்தி சிலையை வடித்தவனின் பெயரைத் தெரிந்து வைத்திருகிறோமா என்ன? என்று. குகை ஓவியங்கள் வேண்டாம்- சமீபத்தில்-முந்நூறு அல்லது நானூறு வருடங்களுக்கு முன்பாக மதுரை மீனாட்சியம்மன் போன்ற கோவில்களில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களை வரைந்தவனின் பெயரைத் தெரிந்து வைத்திருக்கிறோமோ? மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை எழுதிய குமரகுருபரை நமக்குத் தெரியும் ஆனால் அதே பிள்ளைத்தமிழை சிற்பங்கள் ஆக்கியவன் யாரென்று தெரியாது. சிற்பம், ஓவியம் போன்ற பிற கலைகளுக்கு இன்று வரையிலும் அதே நிலைமைதான். எத்தனை தற்கால ஓவியர்களின் பெயர்கள் நமக்குத் தெரியும்? எத்தனை சிற்பிகளின் பெயர்களைத் தெரியும்? சொற்பம்தான்.

ஆனால் கவிஞர்களை லிஸ்ட் எடுங்கள். கதை எழுதுபவர்களை லிஸ்ட் எடுங்கள். பல பக்கங்கள் வேண்டும்.

ஓவியன், சிற்பி உள்ளிட்ட கலைஞனையெல்லாம் விட எழுத்தாளன் எந்தவிதத்தில் உயர்ந்தவனாக இருக்கிறான்? பிரச்சினை நம் பாடத்திட்டங்களிலும் நம் புரிதலிலும் இருக்கிறது. இன்றைக்கு செய்யுளை படிக்கிறோம். கவிதைகளைப் படிக்கிறோம். ஆனால் சிற்பக்கலையின் அடிப்படையை மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறோமா? மாணவர்களை விடுங்கள். நாமாவது தெரிந்து வைத்திருக்கிறோமா? ஓவியம் பற்றிய நம் புரிதல் என்ன? ஒன்றுமில்லை.

இதே பாரம்பரியத்தில் வந்தவன் தானே இன்றைய எழுத்தாளன்? அதனால்தான் கம்பனுக்கும், பாரதிக்கும் கொடுத்த புகழை எனக்கும் கொடுங்கள் என்கிறான். சக காலத்தில் வாழும் ஓவியனையும் சிற்பியைவிடவும் நாம் எந்தவிதத்திலும் உயர்ந்தவனில்லை என்கிற மனநிலையே எழுத்தாளனுக்கு உருவாவதில்லை. அதுதான் சிக்கல். வெளிப்படையாகச் சொன்னால் மற்ற எந்தக் கலையைவிடவும் மிகச் சுலபமானது எழுத்துக்கலை. ஆனால் இங்கு எழுத்தாளர்கள்தான் பிதற்றுகிறார்கள். ‘நான்தான் அறிவாளி’ என்று கூக்குரலிடுகிறார்கள். ‘எங்களை அங்கீகரியுங்கள்’ என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். ஓவியர்களும், சிற்பிகளும் எங்கேயாவது எங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று எழுத்தாளனைப் போல கதறுவதைப் பார்க்கிறோமா?

இணையம் ஏகப்பட்ட வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். கொஞ்சம் பயிற்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் எழுத்தில் முத்திரை பதித்துவிட முடியும். மற்றவர்களை கவனிக்க வைத்துவிடவும் முடியும். நானும் எழுதுகிறேன். நீங்களும் எழுதுங்கள். எழுதிவிட்டு போகலாம். எவ்வளவுதான் திணறினாலும் ஜெயமோகனின் எழுத்தை யாரேனும் அழித்துவிட முடியுமா என்ன? சாருவின் இடத்தை இன்னொருவன் பிடித்துவிட முடியுமா என்ன? சுஜாதா எப்பொழுதும் சுஜாதாதான். ஜெயகாந்தன் எப்பொழுதும் ஜெயகாந்தன் தான். பிறகு எதற்கு இவ்வளவு பதற்றம்? ஏன் எந்நேரமும் எழுத்தாளன் பீடத்தின் மீதே இருக்க வேண்டும் என நாமும் எதிர்பார்க்கிறோம்? அவனும் விரும்புகிறான்.

இதையெல்லாம் உடைத்துவிட வேண்டும். இது சரியான தருணம். இந்த மாயை அவசியமே இல்லாதது. எழுத்தாளன் எந்தவிதத்திலும் பீடாதிபதி இல்லை. சாதாரண எளிய மனிதனாக இருக்கும் வரை அவன் ஒரு ஊற்று. எழுத்துக்களால் வாசகனை கட்டிப்போடுகிறான். ஆனால் பீடத்தின் மீதேறி அருள்பாலிக்கத் தொடங்குவதிலிருந்து அவன் அடங்கத் தொடங்குகிறான். பதற்றம் அவனது கைகளைப் பற்றிக் கொள்கிறேது.

உங்களின் கேள்விக்கு என்னிடம் இருக்கும் பதில் இதுதான் - என்னிடம் வந்து ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்கிற ரீதியில் தப்பும் தவறுமாகப் பேசினால் விவரிக்க முயற்சிப்பேன். ஆனால் எதிரில் பேசிக் கொண்டிருப்பவர் கண்களையும் காதுகளையும் மூடியிருந்தால் நான் தலையைக் குனிந்து அடுத்த வேலையைப் பார்ப்பேனே தவிர ஓங்கி அறைந்து ‘உனக்கு அறிவில்லை’ என்று ஆயா மீது சத்தியமாகச் சொல்லமாட்டேன். அதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று தெரியும்.

http://www.nisaptham.com/2014/09/blog-post_73.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.