Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரும்பிப்பார்க்கின்றேன் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் குத்துவிளக்கு திரைப்படம் வெளியிட்ட கட்டிடக்கலைஞர் வி.எஸ். துரைராஜா தென்னிந்திய தமிழ் சினிமாவின் இராட்ச ஒளிவெள்ளத்தால் மங்கிப்போன ஈழத்தின் அகல்விளக்குகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
குத்துவிளக்கு   திரைப்படம்   1970   களில்    உருவான    சூழல்   மிகவும் முக்கியமானது.     டட்லி சேனா  நாயக்கா    தலைமையிலான    ஐக்கிய தேசியக்கட்சி    படுதோல்வியடைந்து    ஸ்ரீமா ( ஸ்ரீலங்கா .சு.க)  -  என். எம். பெரேரா   (சமசமாஜி) -   பீட்டர்    கெனமன்    (கம்யூனிஸ்ட்) கூட்டணியில்    அரசு    அமைந்த   பின்னர்   பல   முற்போக்கான திட்டங்கள்    நடைமுறைக்கு    வந்தன. உள்நாட்டு     உற்பத்திக்கு   மிகவும்    முக்கியத்துவம்   தரப்பட்டது. வடக்கில்    வெங்காயம் - மிளகாய்   பயிர்செய்கையாளர்களின் வாழ்வில்    வசந்தம்   வீசியது. உள்நாட்டு    ஆடைத்தொழிலுக்கு  ஊக்கமளிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து    தரமற்ற    வணிக   இதழ்கள்   மீதான  கட்டுப்பாடு வந்தது. உள்நாட்டுத்திரைப்படங்களை   ஊக்குவிப்பதற்காக திரைப்படக்கூட்டுத்தாபனம்    தோன்றியது.
 
அதுவரைகாலமும்    இந்திய   திரைப்படங்களை    இறக்குமதி  செய்து கோடி    கோடியாக    சம்பாதித்த   இலங்கையில்    திரைப்படங்களின் இறக்குமதிக்கு   ஏகபோக    உரிமை     கொண்டாடிய   பெரும் தனவந்தர்களுக்கு   வயிற்றில்    புளி   கரைக்கப்பட்டது. பதுக்கிவைக்கப்பட்ட   கள்ளப்பணத்தை   வெளியே    எடுப்பதற்காக புதிய    ஐம்பது  -   ரூபா   நூறு    ரூபா    நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்நிய செலாவணி   மோசடிகளில்   ஈடுபட்ட   சில   பெரும்   புள்ளிகள் கைதானார்கள்.  கொழும்பு    தெற்கில்   வோர்ட்    பிளேஸில்   முன்னாள்   அதிபர் ஜே. ஆர் .ஜெயவர்தனாவின்    வாசஸ்தலத்திற்கு    அருகாமையில்   தமது கட்டிடக்கலை        பணியகத்தை    நடத்திக்கொண்டிருந்த  துரைராஜா அவர்களுக்கு    தாமே  ஒரு   தமிழ்த்திரைப்படம்   தயாரிக்கவேண்டும் என்ற    எண்ணம்    உருவானது   தற்செயலானது  என்று    சொல்ல முடியாவிட்டாலும்  அன்றைய   காலப்பின்னணியும்   அவரை அந்தப்பரீட்சைக்கு    தள்ளியிருந்தது    எனச்சொல்லலாம்.
 
அந்தத்திரைப்படம்    வெளியானதும்    கொழும்பு   சென்று   அதனை   ஒரு திரையரங்கில்    பார்த்தேன். ஈழத்திருநாடே    என்னருமைத்தாயகமே    இரு  கரம்  கூப்புகின்றேன்  வணக்கம்   அம்மா   எனத்தொடங்கும்    எம். ஏ. குலசீலநாதன்    பாடும்  முதல்    பாடல்  திரைப்படக்லைஞர்களின்  பெயர்கள்   வரும்   முதலாவது   ரீலில்   ஒலிக்கிறது.   இலங்கை நதிகளும்    மலையகமும்  இலங்கைப்பெரியோரும்   யாழ்ப்பாணம்   கோட்டையும்    காண்பிக்கப்படும்    அந்தத்திரைப்படம்   தற்காலத்திய  நவீன   டிஜிட்டல்    முறையில்   உருவானது    அல்ல. டிஜிட்டல்   என்ற    சிந்தனையே   இல்லாத   அக்காலத்தில்   சிறந்த ஒளிப்பதிவுடன்    குத்துவிளக்கு    வெளியானது.     மகேந்திரன் இயக்கத்தில் நடன   நர்த்தகி  லீலா நாராயணன்  -   ஜெயகாந்த் -  பொறியிலாளர்  திருநாவுக்கரசு  -   யோகா    தில்லைநாதன்  -  கலைவளன்  சிசு. நகேந்திரா  -   ராமதாஸ்  -   சிங்கள    திரைப்பட  நடிகை சாந்திலேகா    உட்பட   பல   ஈழத்துக்கலைஞர்கள்    நடித்திருந்தார்கள். ஈழத்து    இரத்தினம்    வசனமும்   பாடல்களும்    எழுதியிருந்தார். மூலக்கதையை    வி.எஸ். துரைராஜா   எழுதினார். எனினும்  -  இத்திரைப்படம்   வெளியானபொழுது   பல்கலை   வேந்தன் சில்லையூர்  செல்வராசனின்  தணியாத   தாகம்  திரைப்படச்சுவடி நூலும்   வெளியாகி    சலசலப்புத்தோன்றியது. குறிப்பிட்ட   குத்துவிளக்கின்    மூலக்கதை    தன்னுடையது    என்று வாதாடினார்    சில்லையூர்.    ஆனால்  -  அதுகுறித்து    எந்தக்கருத்தும் சொல்லாமல்    தமது    திரைப்படம்    குத்துவிளக்கு    எங்கெங்கே எத்தனை     நாட்கள்   ஓடிக்கொண்டிருக்கின்றன  என்பதை   தமது வோர்ட்  பிளேஸ்    அலுவலகத்திலிருந்து அவதானித்துக்கொண்டிருந்தார்    துரைராஜா.
 
ஒரு   நாள்  பலாங்கொடையில்  அச்சமயம்    வசித்துக்கொண்டிருந்த எனது    அக்காவின்   குடும்பத்தினரைப்பார்த்துவிட்டு   பஸ்ஸில் திரும்புகையில்   -   இரத்தினபுரியில்     இளைப்பாறலுக்காக  அந்த  பஸ் தரித்து    நின்றபொழுது   பஸ்நிலையத்திற்கு   அருகே    அமைந்திருந்த ஒரு   சைவஹோட்டலுக்கு    தேநீர்    அருந்தச்சென்று -  அங்கு விற்பனைக்கு     தொங்கிக்கொண்டிருந்த    எழுத்தாளர்    பறாளையூர் பிரேமகாந்தனின்    ரோஜாப்பூ   இதழை   வாங்கினேன்.  நோர்வூட்டிலிருந்து  குறிப்பிட்ட    ரோஜாப்பூ    கலை - இலக்கிய   மாத இதழை    வெளியிட்டார்    பிரேமகாந்தன். அதில்    குத்துவிளக்கு    தயாரிப்பாளர்    வி.எஸ். துரைராஜாவின் படத்துடன்    நேர்காணல்   வெளியாகியிருந்தது.    சில    நாட்களில் துரைராஜாவின்    படம்    முகப்பில்   பதிவான    யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான    மல்லிகை    வந்தது. இவை    இரண்டையும்   வாசிப்பதற்காக    அப்பொழுது   கொழும்பில் ஒரு    தனியார்   நிறுவனத்தில்   இரவு வேலைக்குச்சென்றுகொண்டிருந்தபொழுது    மாலை    வேளையில் கைவசம்    எடுத்துச்சென்றேன்.
 
நீர்கொழும்பிலிருந்து    கொழும்பு     நோக்கிப்புறப்பட்ட    அந்த   பஸ்ஸில்    இலங்கை    வானொலி    கலைஞரும் நாடகத்தயாரிப்பாளருமான  சாணா . சண்முகநாதனையும் நீர்கொழும்பில்    பிரசித்தமான    மருத்துவர்   ஜெயமோகனையும் சந்தித்தேன். ஜெயமோகன்     கலை  ரசிகர்.     சாணா  -   ராமதாஸ்  -  உபாலி செல்வசேகரன்  -  அப்புக்குட்டி   ராஜகோபால் -   பி.எச். அப்துல்  ஹமீட் முதலானோர்   அங்கம்   வகித்த   ஒரு   கலைச்சங்கத்தின் காப்பாளராகவும்   இயங்கியவர்.
 
துரைராஜாவின்    குத்துவிளக்கு   திரைப்படம்    கொட்டாஞ்சேனை செல்லமஹாலில்    திரையிடப்பட்டபொழுது    சில    திரையரங்குகளில் எம்.ஜி.ஆரின்    புதிய    படம்   ஒன்றை    காண்பித்தார்    சினிமாஸ் குணரத்தினம். என்ன   நடக்கும் ?  என்பதை    புரிந்துகொள்வது   சிரமமில்லை. எம்.ஜி.ஆர்.   படம்  திரையிடப்பட்ட    அரங்குகளில்   ஹவுஸ்ஃபுல் அட்டைகள்   தொங்கின.    ஆனால்  -  குத்துவிளக்கு   திரைப்படம் காண்பிக்கப்பட்ட   ஒரே   ஒரு   திரையரங்கு வெறிச்சோடிப்போயிருந்தது. இந்தக்கொடுமை பற்றி    ஈழத்து    எழுத்தாளர்கள்    குரல்    எழுப்பினோம். அவ்வேளையில்    இலங்கையில்    பிரசித்தி    பெற்ற    தமிழ் ஊடகங்களும்   இலங்கை    வானொலியும் இதனைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால்  -  குறைந்த    எண்ணிக்கையில்    பிரதிகளை   வெளியிட்ட ரோஜாப்பூ  -   மற்றும்    மல்லிகை    ஆகியன    மாத்திரம் குத்துவிளக்கிற்கு   விளம்பரம்   தந்தன.    வி.எஸ். துரைராஜாவை சிலாகித்து    எழுதின. கொழும்பு  பஸ்ஸில்  உடன்  பயணம்  செய்த  சாணா . சண்முகநாதனிடமும்    மருத்துவர்    ஜெயமோகனிடமும்    ஏன்   நீங்கள்   எல்லோரும்    இந்த    அநியாயம்  பற்றி   வாய்   திறக்கிறீர்கள் இல்லை    என்று    சற்றுக்கோபத்துடன்   கேட்டேன். அச்சமயம்  நோயுற்று   சிகிச்சைக்காக   தாம்  சில   நாட்கள் நீர்கொழும்பில்   மருத்துவர்   ஜெயமோகனின்   பராமரிப்பில் இருந்துவிட்டு    அன்றுதான்   கொழும்பு    திரும்புவதாகவும்   கொழும்பு சென்றதும் குத்துவிளக்கை   பார்ப்பதாகவும்    சாணா   சொன்னார். அந்தப்படத்தில்    அவருக்கு    நன்கு    தெரிந்த   வானொலிக்கலைஞர்கள்   ராமதாஸ் - யோகா  தில்லைநாதன் நடித்திருப்பதாகவும்  சொன்னேன்.
 
சில்லையூரின்    பிரசாரம்  கூட   அன்றைய வானொலிக்கலைஞர்களுக்கும்  அந்தக்குத்துவிளக்கு அந்நியமாகியிருந்தது.   சாணா  அந்தப்படத்தை  பார்த்தாரா?  என்பதும் தெரியாது.   அவர்   கொழும்பு    திரும்புவதற்கிடையில் அந்தக்குத்துவிளக்கு   திரையரங்குகளில்    அணைந்துவிட்டது   என்பது    மட்டும்   தெரியும்.
 
குத்துவிளக்கு   பற்றி   நீர்கொழும்பில்   எனது   உறவினரும்  அண்ணி என்ற    திங்கள்   இதழை    வெளியிட்டவருமான   சாந்தி  அச்சகம் மயில்வாகனன்   மாமா   அவர்களிடம்  பிரஸ்தாபித்தேன். குத்துவிளக்கு    நீர்கொழும்பில்   காண்பிக்கப்படவில்லை. மயில்வாகனன்   மாமா   சில்லையூர்  செல்வராசனின்   நண்பர். ஏற்கனவே   பரவியிருந்த   குத்துவிளக்கின்   மூலக்கதை   பற்றிய சர்ச்சையை   அவரும்   அறிந்திருந்தார்.    கொழும்பு    சென்று குத்துவிளக்கு    படத்தை    பார்க்கும்    சந்தர்ப்பத்தையும்    இழந்திருந்தார். எனினும்   -  அச்சமயம்    அவருக்கு   நல்லதொரு   யோசனை உதித்ததது.    இக்காலப்பகுதியில்   நாம்   நீர்கொழும்பு    விஜயரத்தினம் மகா    வித்தியாலயத்தில்    விஞ்ஞான   ஆய்வு  கூடம்  ஒன்றை அமைக்கும்   முயற்சியில்    பழையமாணவர்   சங்கத்தை ஸ்தாபித்தோம். குறிப்பிட்ட    விஞ்ஞான   ஆய்வு  கூடத்தின்    கட்டிட    நிதிக்காக குத்துவிளக்கு    படத்தினை   காண்பிக்கும்    யோசனையை மயில்வாகனன்     மாமா    முன்மொழிந்தார் அது    ஈழத்து  தயாரிப்பு.    எதிர்பார்க்கும்    வசூல்  கிடைக்காது   என்று பலரும்   எச்சரித்தனர்.    வித்தியாலயத்தில்    பணியாற்றிய    பவாணி ரீச்சரின்    கணவர்    பொறியியலாளர்    திருநாவுக்கரசு   நடித்த   படம் குத்துவிளக்கு.    திருநாவுக்கரசு   எழுத்தாளர்   டொக்டர்   நந்தியின் சகோதரர்.    நீர்கொழும்பில்    திருநாவுக்கரசுவை   சந்தித்து துரைராஜாவுடன்   தொடர்புகொண்டோம். துரைராஜா   எம்மை   தமது   வோர்ட்   பிளேஸ்   அலுவலகத்திற்கு அழைத்து -   எமது    விநோதமான   விருப்பத்தை  அறிந்து வியப்புற்றார். அவரைச்சந்திக்க   மயில்வாகனன்    மாமாவுடன்   பழைய   மாணவர் சங்கத்தின்    சார்பில்   யோகநாதன்   மற்றும் திருநாவுக்கரசு -  நண்பர் நவரத்தினராசாவுடன்  சென்றேன்.   நவரத்தினராசா  அக்காலப்பகுதியில்    சிலோன்    தியேட்டர்ஸ்   கொழும்பில்   நடத்திய அச்சகத்தில்    பணியாற்றிக்கொண்டிருந்தார். நான்    நீர்கொழும்பின்    வீரகேசரி    நிருபராகவும் -   நண்பர் யோகநாதன்    நீர்கொழும்பு  ராஜ்  சினிமா   திரையரங்கில்   படம் காண்பிக்கும்   ஒப்பரேட்டராகவும்    பணியாற்றினோம்.
 
என்னையும் திருநாவுக்கரசுவையும் தவிர    நீர்கொழும்பைச்சேர்ந்த   வேறு  எவரும்   குத்துவிளக்கு   படத்தை    பார்த்திருக்கவில்லை. நாம்    விஞ்ஞான  ஆய்வுகூடம்  அமைக்கும்  முயற்சியில் ஈடுபட்டிருப்பதை   அறிந்தவுடன்    தமது   திரைப்படத்தை    காண்பிக்க அந்தத்    திரைப்படச்சுருளை   இலவசமாகவே   தரலாம்   எனச்சொன்ன     துரைராஜா  எமக்கு   ஆதரவுக்கரம்   நீட்டினார். குத்துவிளக்கு   திரைப்படச்சுருள்   சிலோன்   தியேட்டர்ஸ்   வசம் இருப்பதாகவும்  சொன்னவர்   -  எம் முன்னிலையிலேயே   அதன்  இயக்குநர்   செல்லமுத்துவுடன்   தொலைபேசியில்   தொடர்புகொண்டு    தகவல்    தெரிவித்துவிட்டு  எம்மை   அவரது அலுவலகத்திற்கு  அனுப்பிவைத்தார். செல்லமுத்துவை  லேக்ஹவுஸ்   ஏரிக்கரை  பத்திரிகை  பணிமனைக்கு    அருகாமையில்   ரீகல்  திரையரங்கு   அமைந்திருக்கும் இடத்தில்   இருந்த   அலுவலகத்தில்    சந்தித்தோம்.   அவரும்  எமது நல்ல    நோக்கத்தைப்  புரிந்துகொண்டு   நீர்கொழும்பிலிருக்கும் அவரது   ரீகல்   திரையரங்கினை   இலவசமாகத்தருவதற்கு விரும்பினார்.
 
எமது   முன்னிலையில்  நீர்கொழும்பு   ரீகல்  திரையரங்கு முகாமையாளருடன்   தொலைபேசியில்   தொடர்புகொண்டு  ஒரு சனிக்கிழமை    முற்பகல்  பத்து   மணிக்காட்சிக்கு   திரையரங்கினை முன்   பதிவுசெய்துதந்தார். திட்டமிட்டவாறு  குத்துவிளக்கு   திரைப்படம்   நீர்கொழும்பில்    ரீகல் திரையரங்கில்   முற்பகல்   காட்சியாக   காண்பிக்கப்பட்டது. துரைராஜாவுடன்    அவரது  நண்பர்   கண்   மருத்துவ  சிகிச்சை  நிபுணர் ஆனந்தராஜா   மற்றும்    திரைப்படத்தில்   நடித்த  ராமதாஸ், ஜெயகாந்த்  ஆகியோரும்   வருகைதந்து  இடைவேளையின்பொழுது மேடையேறி    உரையாற்றினர்.    நடிகை  சாந்திலேகா   தனது வாழ்த்துச்செய்தியை   அனுப்பியிருந்தார். குத்துவிளக்கு  சிறப்பு  மலரும்  வெளியிட்டோம் ரீகல்  திரையரங்கு  மண்டபம்   நிறைந்த  காட்சியாக  குத்துவிளக்கு காண்பிக்கப்பட்டது.    துரைராஜா     நீர்கொழும்பு   ரசிகர்களை மனந்திறந்து    பாராட்டினார்.    அன்று    துரைராஜாவுடன்   வருகை தந்திருந்தவர்களுக்கு    மயில்வாகனன்   மாமா   வீட்டில்   மதிய விருந்துபசாரம்    வழங்கினோம்.
 
அங்கு  நிகழ்ந்த   கலந்துரையாடலில்   குத்துவிளக்கு   படத்தின் காட்சிகள்    குறித்து   துரைராஜா   பல   சுவாரஸ்யமான தகவல்களைச் சொன்னார். அந்தப்படத்தில்    யாழ்ப்பாணத்தின்    கற்பகதரு    பனையின்  பயனும் விவசாயத்தில்   படித்த   பட்டதாரிகளும்   ஈடுபடவேண்டும்   என்ற கருத்தியலும்    நுட்பமான    யதார்த்த  சித்திரிப்பாகியிருந்தன. நீண்ட  இடைவெளிக்குப்பின்னர்    துரைராஜாவை   அவுஸ்திரேலியா சிட்னியில்   2008   இல்    சந்தித்தேன்.    அந்த    ஆண்டு   எமது அவுஸ்திரேலியா   தமிழ்   இலக்கிய    கலைச்சங்கம்   சிட்னியில் எட்டாவது   தமிழ்   எழுத்தாளர்   விழாவை   நடத்தவிருந்தது. அதுசம்பந்தமான    கலந்துரையாடலை    நண்பர்  கம்பன்  கழக ஸ்தாபகர்  திருநந்தகுமாரின்   சிட்னி    இல்லத்தில்   நடத்திவிட்டு துரைராஜாவை    சந்திப்பதற்காகச்சென்றோம். எட்டாவது    விழாவில்   துரைராஜாவையும்   தகைமைசார் பேராசிரியர்    பொன். பூலோகசிங்கத்தையும்   பாராட்டி  விருது  வழங்கி கௌரவிப்பது   என்று   தீர்மானித்திருந்தோம்.
 
இச்செய்தியை  சொல்லி  அவரை அழைப்பதற்காகவே    சென்றோம். நண்பர்கள்   காவலூர்  ராஜதுரை  -   திருநந்தகுமார்   மற்றும் குத்துவிளக்கு   படத்தில்    நடித்திருந்த   கலைவளன்         சிசு. நாகேந்திரன் ஆகியோருடன்   நானும்   இணைந்தேன். குத்துவிளக்கு   இறுவட்டில்   பதிவாகியிருப்பதாகவும்    யூ ரியூபிலும் இருப்பதாகவும்    சொன்னார். நீண்ட   இடைவெளிக்குப்பின்னர்   கடந்து சென்ற   வசந்தகாலங்களை இரைமீட்டிக்கொண்டோம். அவர்   வாழும்   காலத்திலேயே    பாராட்டிக்கௌரவிக்கப்படவேண்டும் என்ற    எமது    விருப்பம்    நிறைவெய்தியது.    திருநந்தகுமார் விருதுக்கான    சிறப்புரையை    விழாவில்   சமர்ப்பித்தார். துரைராஜாவையும்  பூலோகசிங்கத்தையும்   நாம்   பாரட்டவிருக்கிறோம்    என    அறிந்ததும்   மெல்பனிலிருந்த  -   ஒரு காலகட்டத்தில்    ரோஜாப்பூ    இதழை   வெளியிட்ட   பறாளையூர் பிரேமகாந்தன்  -  அவர்களுக்காக   இரண்டு   புத்தம்   புதிய பொன்னாடைகளை     நண்பர்  எழுத்தாளர்   ஆவூரான்   சந்திரன்   ஊடாக அனுப்பியிருந்தார். சிட்னி   ஹோம் புஷ்    ஆண்கள்   உயர்தர   கல்லூரி   மண்டபத்தில் நடந்த    எட்டாவது   தமிழ்    எழுத்தாளர்   விழாவுக்காக இலங்கையிலிருந்து   வருகை தந்திருந்த   நாடகக்கலைஞரும் எழுத்தாளரும்   வவுனியா    முன்னாள்    அரச   அதிபருமான   உடுவை தில்லை   நடராஜா -  துரைராஜாவுக்கு   பொன்னாடை  போர்த்தி வாழ்த்தினார்.
 
பொருத்தமான   ஒருவரை   அன்று    வாழ்த்தினோம்    என்ற மனநிறைவுடன்    துரைராஜாவின்    மரணச்செய்தியை    சில வருடங்களின்     பின்னர்    அவுஸ்திரேலியா   தமிழ்  முரசு   இணைய இதழில்   படித்தேன். இன்றும்     இலங்கை  - இந்திய   உறவை    தொப்புள்கொடி    உறவென்று ஒருதலைப்பட்சமாகவே    பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால்  -   இலங்கையில்    தயாரிக்கப்பட்ட   திரைப்படங்களை   தமிழகத்தில் காண்பிக்க      என்றைக்கும்   சந்தர்ப்பம்  கிட்டவில்லை. அவ்வாறு    கிட்டியிருந்தாலும்   ஈழத்து    இலக்கியத்திற்கு   அடிக்குறிப்பு    கேட்டதுபோன்று   ஈழத் தமிழுக்கே   தமிழில்  Sub Title  கேட்டிருப்பார்கள். துரைராஜா    நாற்பது   ஆண்டுகளுக்கு   முன்பே   துணிந்து   ஈழத்து குத்துவிளக்கிற்கு    ஒளியேற்றினார்.   ஆனால்    எம்மவர்கள்   அந்த விளக்கின்    சுவாலையிலிருந்து   மேலும்    மேலும்   சிறந்த ஒளிவிளக்குகளை   ஏற்றிவைக்கத் தவறிவிட்டார்கள்   என்பது காலத்தின்   சோகம். அப்படி    விளக்குகளை   ஏற்றிவைக்க    முனைந்திருந்தாலும் தென்னிந்திய    தமிழ்   சினிமாவின்   இராட்சத    ஒளிவெள்ளம்   அந்த அகல்விளக்குகளின்    சுடரை    மங்கவைத்திருக்கும். 
துரைராஜா   வாழும்   குத்துவிளக்கு.
 
letchumananm@gmail.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.