Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்கமுடியாது - முதலமைச்சர் சி.வி.

Featured Replies

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி விஜயங்களின் போது இங்கு நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
_73107957_73107956.jpg
 
ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவர் காமினி எஸ்.செனரத் விடுத்துள்ள அழைப்பிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
அக் கடிதத்தில், மேன்மை தங்கிய உங்களின் பணியாளர் குழாமின் தலைவர் காமினி எஸ்.செனரத்தினவினால் 2014 செப்ரம்பர் 23ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,
 
ஜனாதிபதியால் தலைமை தாங்கப்படும் அட்டவணைப்படுத்தப்படும் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தொடரில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் சார்பாக விசேட இணை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் 2014ஆம் ஆண்டு ஒக்ரோபர் 13ம் திகதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
 
இந்த அட்டவணைப்படுத்தப்பட்ட கூட்டத்தில் 2012ஆம் ஆண்டில் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களில் எடுத்த தீர்மானங்களின் நடைமுறைப்படுத்தல் சம்பந்தமான முன்னேற்றம் பற்றியும் 2014 தொடக்கம்- 2016ஆம் ஆண்டுகால மத்திம கால முதலீட்டு திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமான முன்னேற்றம் பற்றியும் மதிப்பீடு செய்து கலந்துரையாட வேண்டி இருக்கின்றது.
 
இக் கூட்டத்தில் நீங்கள் பங்குபற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
கடந்த 2012ஆம் ஆண்டில் நடந்த கூட்ட விடயதானம் சம்பந்தமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் நடைபெறும் இக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் பற்றியோ அதன் அவசியம் பற்றியோ வடமாகாண சபையுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு அதுபற்றிச் சபைக்கு தெரியப்படுத்தப்படுத்தப்படவில்லை. வடமாகாண முதலமைச்சர் மற்றும் மத்திய அரசாங்க அமைச்சர்கள் ஆகியோரின் இணைத் தலைமைத்துவத்தின் கீழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெற்று வருவது நீங்கள் அறியாததல்ல.
 
2013ஆம் ஆண்டில் நடந்த மாகாணசபைத் தேர்தலின் பின் உருவாக்கப்பட்டதே வடமாகாணசபை. 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற கூட்டம் சம்பந்தமான தொடர்புகளை 2014ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் கவனத்திற்கு எடுப்பது எமது வடமாகாண சபைக்குக் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு விசனத்தையும் கொடுக்கின்றது. வடமாகாணம் சம்பந்தமாக அரசாங்கத்திற்கு இருக்கும் தற்போதைய கொள்கைகளை வடமாகாண மக்கள் பெருவாரியாக ஏற்க மறுத்துள்ளதுடன் முன் எப்பொழுதும் இல்லாதவாறு 38 ஆசனங்களில் 30 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குப் பெற்றுத் தந்தமை உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்படியிருந்தும் மக்களின் நேரிடைப் பிரதிநிதிகளால் நடாத்தப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் கூட்ட விடயதானங்களைக் கவனத்திற்கெடுக்காது இக்கூட்டம் நடைபெறப் போவது மனவருத்தத்தைக் கொடுக்கின்றது.
 
போரினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களின் தேவைகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் வடமாகாணசபை அந்த நடவடிக்கைகளில் ஒரு முக்கிய பங்குதாரராக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது நன்கு புலனாகின்றது. மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்புக்களுக்கு முரணாக அதிகார அலகு ஒன்று வடமாகாண சபையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதும் புலனாகின்றது.
 
இம் மாதம் 12ஆம் திகதி நீங்கள் கிளிநொச்சியில் வைத்து வடமாகாண காணிகள் சம்பந்தமான அனுமதிப் பத்திரங்களை சுமார் 20ஆயிரம் பேருக்கு வழங்கவிருப்பதாக அறிகின்றோம். கிளிநொச்சி காணித்துண்டுகள் 3ஆயிரத்து 886 பேருக்கும், முல்லைத்தீவில் 3ஆயிரத்து642 பேருக்கும், மன்னாரில் 7ஆயிரத்து202 பேருக்கும், வவுனியாவில் 4ஆயிரத்து228 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து ஒருவருக்கும் வழங்கப் போவதாக அறிகின்றோம். அத்துடன் பல தூர இடங்களிலிருந்தும் 400இற்கும் மேற்பட்ட பஸ் வண்டிகளில் மக்களைக் கிளிநொச்சிக்குக் கொண்டுவர ஆயத்தங்கள் செய்யப்படுவதாகவும் அறிகின்றோம். நீங்கள் வழங்கும் அனுமதிப் பத்திரங்களைக் கையேற்கவே இவர்கள் கொண்டுவரப்படுகின்றார்கள் எனில் உங்கள் அரசியல் இலாபத்திற்காக அவர்களுக்கு பல மாதங்களாக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படாது காத்திருக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் புலனாகின்றது.
 
வடமாகாண காணிகள் சார் அமைச்சர் என்ற வகையில் எந்த செய்முறையின் பயனாக அனுமதிப்பத்திரப் பெறுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், சட்ட ரீதியான எந்த அடிப்படையில் வடமாகாண காணிகள் சம்பந்தமாக நீங்கள் இத்துணை தாராள சிந்தையுடன் நடந்துகொள்ள உத்தேசித்துள்ளீர்கள், எப்படியான நெறிமுறைகளின் வாயிலாக பங்கீட்டில் பெறுநர்கள் பயன் பெற்றுள்ளார்கள், எப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் மேலும் வடமாகாண வதிவாளர்களை விட வெளி மாகாண மக்களும் பயன்பெற இருக்கின்றார்களா என்பது போன்ற பல விடயங்கள் சம்பந்தமாக என்னுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பதைத் தெரியப்படுத்துகின்றேன். ஆனால் ஒன்று மட்டும் அறிந்து கொண்டுள்ளேன் உரிய செயல் முறை, வெளிப்படைத் தன்மை, பதிலளிக்கும் கடப்பாடு ஆகிய நல்லாட்சிக்கான குணாதிசயங்களைப் பேணி நடக்காது தங்கள் அரசியல் இலாபம் கருதி உங்கள் அரசாங்கத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவரும் உங்கள் கட்சிக்குச் சார்பான பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவரும் சேர்ந்து ஆயிரத்து 284 அனுமதிப் பத்திரங்களை 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் கையளித்துள்ளார்கள்.
 
காணி அனுமதிப்பத்திரங்கள் வழமையாக சட்ட முறைப்படி வழங்கப்பட வேண்டும். அது சம்பந்தமான செயல் முறை பூரணப்படுத்தப்பட்டபின் உடனேயே பயன் பெறுநர்கள் தமது அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வர். உங்களால் அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படப் போகும் நபர்கள் சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று வைத்துக்கொண்டாலும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனுமதிப் பத்திரங்களை சுமார் இரண்டு வருடங்கள் தாமதித்தே வழங்குவது நீதிப்படி ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு செயல் அன்று. இது மனிதாபிமானமற்ற முறையில் இரண்டரை இலட்சம் எமது தமிழ்ப் பேசும் மக்களை அநியாயமாகச் சிறைப்படுத்தி வைத்திருந்து 2010ஆம் ஆண்டில் உங்களுடைய ஜனாதிபதி தேர்தல் வந்த நேரத்தில் அவர்களைத் திடீர் என்று விடுதலை செய்ததை போன்று உள்ளது.
 
நாம் பின்பற்ற விரும்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2013ஆம் ஆண்டின் தேர்தல் திட்ட அறிவிப்பு ஆவணமானது காணிபற்றிய பின்வரும் பொருத்தமான வாசகங்களைக் கொண்டுள்ளது.
 
“யுத்தம் முடிந்து 4 வருடங்களுக்குப் பின்னரும் அரசாங்கம் இன்று சில பகுதிகளை உயர் பாதுகாப்பு பிரதேசமெனவும் மட்டுப்படுத்தப்பட்ட பிரதேசமெனவும் கூறி மக்களை அங்கு குடியேற விடாமல் தடுத்து வருகின்றது. உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் காணி உரிமையாளர்களிடமிருந்து நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு ஜனநாயக அரசுக்கும் உரிய நடைமுறைகளைக் கைக்கொள்ளாமல் நிலத்தினைச் சுவீகரிப்பதற்கு உரிமை இல்லை.
 
தனியார் சொத்துடமையை அரசாங்கம் மதித்து அந்தச் சொத்துக்கள் உரியவர்களுக்குச் சென்றடைவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இந்த நிலங்களில் இருந்து வெளியேறியவர்களில் பலர் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தினுடைய நில சுவீகரிப்பு மீள்குடியமர்வு தொடர்பான பயங்கரமான விதிமுறைகள் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைத் தமது செழிப்பான விவசாய நிலங்களிலிருந்தும் மீன்பிடிப் பிரதேசங்களிலிருந்தும் ஜீவனோபாயங்களை இழந்து வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
 
வலுக்கட்டாயமாக நிலத்தினை வடக்கு, கிழக்குப் பகுதியிலிருந்து சுவீகரித்து அதனை அரச தேவைக்காகப் பயன்படுத்துவது பற்றி எமது அதி விசேட கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மொழி, கலாச்சாரம், தனித்துவங்களைக் கருத்திற் கொண்டு இப்பகுதியிலுள்ள நில உரிமை, அதிகாரம், பாவனை தொடர்பான கொள்கைகளில் சீர் திருத்தங்கள் ஏற்பட்டாலன்றி சமாதானத்தினை ஏற்படுத்துவதென்பது முடியாததொன்றாகும்.
 
எதிர்கால அபிவிருத்தி தொடர்பான 2014 தொடக்கம் 20-16 ஆண்டுக்கான மத்தியகால முதலீட்டு திட்டம் குழப்பநிலை ஏற்படுத்துகின்றது. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சென்ற தேர்தலின் பொழுது மக்களிடம் பெற்ற ஆணையை உதாசீனம் செய்வதாக அமைந்துள்ளது. அதாவது யுத்தத்திற்குப் பின்னரான மக்களின் தேவைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலான தேவைகள் இங்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதியிடப்பட்ட உங்கள் கடிதத்தைக் குறிப்பிட்டு 2014 ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் கீழ் அமைந்துள்ள வடமாகாணசபையின் சார்பாக ஜனநாயக ரீதியில் எமக்குத் தேர்தலில் கிடைத்த வெற்றியையும் அதன் நிமித்தம் மகிந்த சிந்தனையை வடமாகாணத்தில் பிரயோகிப்பது தொடர்பாக மீளாய்வு செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தியிருந்தேன். மகிந்த சிந்தனையானது இன்று வடமாகாண மக்களின் மிகப்பெரும் பகுதியினரால் நிராகரிக்கப்பட்ட சிந்தனையாகும் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.
 
இந் நிலையில் இப்பொழுது அழைக்கப்பட்ட கூட்டமானது ஒரு சட்டபூர்வமான முன்னேற்றத்திற்காகவென வெளிப்படைத்தன்மை உடையதாகவோ அல்லது ஒற்றுமை அடிப்படையிலானதாகவோ இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. தேர்தலில் ஏமாற்றில் ஈடுபடுபவர்களுக்காக வடமாகாண மக்கள் தங்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்குத் தங்களின் வாக்குகளை அளிக்கவில்லை. ஏற்கனவே கூறியது போன்று இந்த காணி உரிமையாளர்கள் சட்ட பூர்வ அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட இங்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை மறைக்கும் விதமாக இதற்கென ஒழுங்கு செய்யப்பட்ட இவ் விழாவில் பங்குபற்றுவதன் மூலம் வடமாகாணசபை இத்தவறினை மறைக்க விரும்பவில்லை.
 
இந்த விடயங்கள் அந்தந்தப் பின்னணிகளில் வைத்து ஆராயப் பட வேண்டியனவாகும். 2014ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி நீங்கள் வடமாகாணசபையின் ஆரோக்கியமான செயற்பாட்டுக்காக ஒரு சில விடயங்களைச் செய்வதாக ஏற்றுக் கொண்டீர்கள். அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஜனவரி 2ஆம் திகதி அன்று உரையாடப்பட்ட விடயங்களைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு 2014 ஜனவரி 26ஆம் திகதியிடப்பட்ட எனது கடிதத்தின் மூலம் அனுப்பியிருந்தேன். அதன் பிரதியையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளேன். இது தொடர்பாக எந்த
 
நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
 
இராணுவ அமைப்பைச் சேர்ந்த ஆளுநர் மாற்றி அமைக்கப்படுவார் எனக் கூறியதால் யூலை மாதம் வரையும் நாம் காத்திருந்தோம். ஏமாற்றப்பட்டோம். 27.07.2014ஆம் திகதியன்று அதே ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி பேசப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதில் தங்களுக்குரிய கடமைகளையும் பொறுப்புக்களையும் தெரிவித்திருந்தேன். குறிப்பாக 2014 ஓகஸ்ட் நடைபெறுவதற்காக வேண்டி அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த முதலமைச்சர்கள் கூட்டம் தொடர்பாக நான் மூன்று விடயங்களை வடமாகாண சபையின் திறமையான செயற்பாட்டுக்காக வேண்டி உங்களிடம் கேட்டிருந்தேன்.
 
அதாவது, வடமாகாண ஆளுநரையும் பிரதம செயலாளரையும் மாற்றுதல், ஜனாதிபதி செயலணியின் செயற்திட்டங்களை வடமாகாணசபைக்கு மாற்றுவது, வடமாகாணத்தின் பல்வேறுபட்ட தேவைகளைக் கணிப்பீடு செய்வது, இம்மூன்றையும் செய்வதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டிருந்தேன். இத்துடன் நான் தொடர்பாடிய விடயங்களை உங்கள் பார்வைக்காக இணைத்து அனுப்புகின்றேன். இன்றுவரை இவை தொடர்பான எதுவித பதிலும் உங்களிடமிருந்து கிடைக்கவில்லை.
 
இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காகச் சென்ற உங்களுடன் என்னையும் வருமாறு அழைக்கப்பட்ட கடிதத்திற்கு நான் பதில் அனுப்பிய போது எனக்குள்ள அக்கறையை வலியுறுத்தியும் அவ்வாறு செய்வதனூடாக நான் எனது ஒத்துழைப்பை உங்களது செயற்பாடுகளுக்கு வழங்குகின்றேன் என்ற ஒரு மாயையைத் தவிர்ப்பதற்காக வேண்டி அந்த அழைப்பினை நான் நிராகரித்தேன்.
 
மிகவும் அவதானமாக எமது மந்திரிகள் குழாமுடனும் மாகாணசபை தலைவருடனும் இக்கூட்டம் தொடர்பாகக் கலந்துறவாடி வடமாகாணசபையும் வடமாகாண மக்களும் ஓரம் கட்டப்பட்டுள்ள இந்நிலையில் ஒக்ரோபர் 13ஆம் திகதிய கூட்டத்திலோ அரசியல் தொடர்பாக வடமாகாணத்தில் நடைபெறவுள்ள ஏனைய கூட்டங்களிலோ கலந்து கொள்வது அர்த்தமற்றதொன்றாகின்றது என்று தீர்மானித்துள்ளோம்.
 
வடமாகாணசபையை நீங்கள் புறக்கணித்தமையானது 13ஆவது திருத்தத்திலுள்ள நடைமுறைச் சிக்கல்களையும் வெறுமையினையும் காட்டி நிற்கின்றது. அரசாங்க விளம்பரங்களின் படி வடமாகாணசபை 2014ஆம் ஆண்டிலிருந்து 6 பில்லியன் ரூபாவை பெற்றிருந்ததாகவும் அதில் ஒரு சிறு பகுதியை மட்டுமே இச் சபை பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் வடமாகாண சபைக்கு ஆயிரத்து 875 மில்லியன் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு மேலதிகமாக 3ஆயிரத்து955 மில்லியன் நேரடியாக மத்திய அரசினால் பயன்படுத்தப்பட்டதொன்றாகும். வடமாகாணசபை பொறுப்புடனும் விழிப்புடனும் செயற்பட்டு தமக்கென ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி வருகிறது.
 
இராணுவ ஆளுநர் ஒருவர் தொடர்ந்து இங்கு இருப்பதும், சட்டவிரோதமாக வெளிப்படையாகவே எதிர்ப்பைத் தெரிவித்து ஒத்துழைப்பு நல்காத பிரதம செயலாளர் பதவியில் தொடர்ந்திருப்பதும், தொடர்ந்தும் வடமாகாணம் இராணுவமயப்படுதலும், மாகாணசபை ஒதுக்கப்படுதலும், அரச அதிபர் போன்ற மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள் போன்றவர்களின் செயற்பாடுகள் மாகாணசபையின் செயற்பாடுகளுள் உள்நுழைவதும் வடமாகாண பிரதேச எல்லைகளுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கும் காணிகள் கபளீகரமும் கணிக்கப்பட முடியாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
இவையாவும் 2009 மே மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் முன்பாகவும் 2010 ஜனவரியில் இந்தியப் பிரதம மந்திரி முன்பாகவும் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலதிகமாகச் செயற்பட இருப்பதாக தாங்கள் அளித்த வாக்குறுதியையும் மீறிய செயலாகும். மிக அண்மையில் 2014 செப்ரம்பர் மாதத்தில் ஐ.நா. பொதுச்சபையில் தாங்கள் இலங்கையில் வடமாகாணத்தில் ஜனநாயக அமைப்புக்கள் மீள அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் ஜனநாயகம் என்பது தேர்தல்களை நடாத்துவதற்கு மேலாகச் சென்று தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் கடமைகளை எந்தத் தலையீடும் இல்லாமல் மக்கள் ஆணைப்படி அவர்கள் இறைமையை ஏற்று செயற்படுத்தலாகும் என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
 
நாம் ஒரு வருடம் பதவியில் இருந்து வந்துள்ள இன்றைய நிலையில் வடக்கில் மட்டுமன்றி கிழக்கிலும் கூட மாகாண சபை ஆட்சி முறைமை எமது ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒரு அதிகாரமற்ற ஓட்டை அமைப்பாகவே தென்படுகின்றது. தற்போதைய ஆட்சி முறையில் குறிப்பாக யுத்தத்திற்கு பின், நிலையான அரசியல் தீர்வு எதுவுமற்ற நிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு மாகாண சபையானது அதிகாரமற்றதொன்றாகவே தென்படுகின்றது.
 
ஆகவே யுத்தத்தின் பின் தாங்கள் சர்வதேச சமூகத்திற்கும் இந்திய பிரதம மந்திரிக்கும் வாக்குறுதி அளித்தது போல் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று அதைக் கட்டியெழுப்புவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சர் என்ற ரீதியிலே தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். 1987ஆம் ஆண்டு யூலை மாதத்தில் ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் 13ஆவது திருத்தத்திற்கு வழிவகுத்தது. மேற்படி 13வது திருத்தச் சட்டத்தினைக் கட்டியெழுப்பும் போது தமிழ் மக்கள் கௌரவத்துடன் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வடக்கு கிழக்கில் வாழக் கூடிய ஒரு நிலைமையினை ஏற்படுத்த உத்தரவாதம் அளிப்பார்கள் என இந்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். எம்மைப் பொறுத்தவரையில் ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் சட்ட வரையறைகளை உணர்ந்துள்ளோம்.
 
எங்கள் மேல் நம்பிக்கை வைத்து, கடந்த மாகாணசபை தேர்தலில் இராணுவத்துடன் சேர்ந்து நடாத்திய பல ஜனநாயக விரோத செயல்களையும் முறியடித்து எம்மை வடமாகாணசபைக்கு தெரிவு செய்த மக்களுக்காக வேண்டி நான் இக் கடிதத்தை பகிரங்கப்படுத்துகிறேன். 2013 செப்ரெம்பர் தேர்தலில் எம்மை தெரிந்தெடுத்த மக்களுக்காக அவர்களது தேவைகள் முன்னுரிமைகள் என்பவை பற்றி மத்திய அரசுடன் உரிய மரியாதையுடனும் ஒத்துழைப்புடனும் நாம் எவ்வாறு ஜனநாயக பாரம்பரியங்களை கடைப்பிடித்து செயற்பட்டோம் என்று இக் கடிதத்தினூடாக தெளிவாகின்றது. எமது மக்கள் நடப்பவற்றை அறிய சட்ட ரீதியான உரித்துடையவர்கள்.
 
மத்திய அரசாங்கத்தினுடைய அரச நிர்வாக, அரசியல் சிந்தனை பற்றாக் குறையாலும் அடம்பிடிக்கும் நிலையாலும் 2014 ஜனவரி 2ஆம் திகதி நடைபெற்ற எமது கூட்டத்தினதும் 2014 யூலை 26ஆம் திகதி நடைபெற்ற தொடர்பாடல் தொடர்பானதுமான அறிக்கையையும் இங்கே வெளியிடுவதினூடாக நாங்கள் அரசாங்கத்துடன் ஜனநாயக ரீதியாக நல்லாட்சி அடிப்படையில் இணைந்து செயற்பட எவ்வளவு அக்கறையாக இருக்கின்றோம் என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இது கலியாணமொன்றுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை குடும்பத்திலேற்பட்ட மனவருத்தமான விடயங்களைக் காரணங்காட்டி நிராகரிக்கும் கடிதம்போன்று படு செண்டிமெண்டலாயிருக்கிறது. 

ஓர் மாகாண அரசுக்கும் மத்திய அரசுக்குமிடையே இருக்க வேண்டிய தொடர்பாடல் முறைமைகள் இப்படித்தான் இருக்க வேண்டுமா? அல்லது சற்று வேறுபட்டு அரசியல், சட்டரீதியான உத்தியோக பூர்வ அணுகு முறையுடன் இருக்க வேண்டுமா? என்பது சரியாகத் தெரியவில்லை. அரசியலில் அனுபவப்பட்ட நிபுணர்கள் இதனைச் சரியான வழிமுறையாகவும் ஏற்கக்கூடும்.   ஆனால் எனக்கு இப்படி எழுதுவது சரியான அணுகுமுறையாகத் தெரியவில்லை.  கூடியவரை சுருக்கமானதாகவும், “நான் கூறி நீங்கள் அறிய வேண்டியதில்லை” என்பது போன்ற தேவையற்ற வாசகங்கள் அற்றதாகவும் இருப்பதே உரிய அரசியல் நடைமுறையாக இருக்கக்கூடுமென்று எனது சிற்றறிவுக்குப் படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாக நடைமுறையைப் பின்பற்றும் நிர்வாகக்திற்கு கரு சொன்னது போன்ற professional கடிதங்கள் உதவலாம், சிறி லங்காவுக்கு அது பொருந்துமோ தெரியாது. மேலும், இது அரசுக்கு மட்டும் எழுதப் படவில்லை. இங்கே யாழில் கூட சிலர் வந்து இப்ப எழுதுவினம், "மத்திய அரசோடு அனுசரிச்சுப் போய் அபிவிருத்தியைச் செய்ய வேணும், முரண்டு பிடிக்கக் கூடது" எண்டு. அவர்களுக்கும் முதலே ஏன் பகிஷ்கரிப்பு என்று சொல்லப் பட்டிருக்கு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.