Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாவது வேட்பாளரை தமிழர்கள் நிறுத்துவதில் உள்ள அனுகூலங்கள்! - இரும்பொறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது வேட்பாளரை தமிழர்கள் நிறுத்துவதில் உள்ள அனுகூலங்கள்! - இரும்பொறை 

[Wednesday 2014-12-03 20:00]
3-Person-elect-031214-350-article.jpg

தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச வேண்டிய அவசியம் மகிந்த அரசுக்கு இல்லை என்றும், தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான வழிமுறைகள் மகிந்த அரசுக்கு தெரியும் என்றும், மகிந்த ராஜபக்ஸவின் பேச்சாளர் மமதைப்பேச்சு பேசியுள்ளார். பதிலுக்கு, மைத்திரி பாலசிறீசேனவை முன்னிறுத்தும் பொது எதிரணியினர், சமஸ்டி அரசியல் அமைப்பு முறையை எவருக்கும் வழங்க முடியாது என்றும், முற்றுமுழுதாக அதை தாம் நிராகரிப்பதாகவும், இரகசிய ஒப்பந்தங்கள் எதனையும் தாம் எவருடனும் செய்துகொள்ளத்தயாரில்லை என்றும் ஆணவத்துடன் கர்ஜித்துள்ளனர்.

அதே பொது எதிரணியைச்சேர்ந்த சஜித் பிறேமதாச இன்னும் ஒருபடி மேலேபோய், தாம் அதிகாரத்துக்கு வந்தால் புலம்பெயர் நாட்டிலுள்ள புலிகளையும் அழித்தொழிப்போம் என்று கொட்டம் அடித்துள்ளார்.

ஆனால் இந்த இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும், தம்மை ஆதரித்து வாக்களித்தால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை பயக்கும்? என்று இதுவரையில் கூறவில்லை.

மாறாக, தமிழ் மக்களுடன் பேசவேகூடாது எனும் நிலைப்பாட்டில் மகிந்தவும், கொடுக்கவே கூடாது எனும் நிலைப்பாட்டில் மைத்திரியும் கடுமையாக உள்ளனர். யார் உண்மையான தனிச்சிங்கள பௌத்த மேலாதிக்கவாதி? என்பதை நிரூபிக்கும் போட்டிப்பலப்பரீட்சையில் இருவரும் அதிதீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக இருக்கும் இரண்டு பெரும் இனவாதிகளுக்கும் சார்பான முடிவை, தமிழ் மக்களும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் எடுக்க முடியாத நிலைமையில் உள்ளனர்.

தமிழ் மக்கள் வாக்களிப்பதற்கான அடிப்படைத்தகுதிகளை இரண்டு பிரதான வேட்பாளர்களும் கொண்டிருக்கவில்லை. வெறுமையான இத்தகைய ஒரு சூழமையில் இரண்டு கட்சிகளினதும் அதிதீவிர தனிச்சிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாடுகளை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தி, தமிழ் மக்கள் சார்பாக மூன்றாவது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு வாக்களிக்குமாறு கோரும்பட்சத்தில் அதிலுள்ள அனுகூலங்கள்!

முதலாவதாக,

தமிழ் மக்களுக்கான தீர்வு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இது அமைவதோடு, தமிழ் மக்கள் வாக்களிப்பதற்கான அடிப்படைத்தகுதிகளை இரண்டு பிரதான வேட்பாளர்களும் கொண்டிருக்கவில்லை என்பதையும் பறைசாற்றும். கூடவே இலங்கை அரசியல் அமைப்பு சாசனத்தையும், அதனூடான தேர்தல் முறைமைகளையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதோடு, அவர்கள் கோரிவரும் சர்வஜனவாக்கெடுப்புக்கான அவசியத்தையும் வலுப்படுத்தும்.

இதைவிடுத்து எத்தகைய கோரிக்கைகளும் வலியுறுத்தல்களும் இல்லாமல் தமிழ் மக்கள் இரண்டு பிரதான வேட்பாளர்களும் வாக்களிப்பதானது, தனிச்சிங்கள பௌத்த மேலாண்மையை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவே அர்த்தம் கொள்ளப்படும்.

கடந்த 2005ம் வருடம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்து, தமிழ் மக்கள் தாம் தனித்துவத்துக்குரிய தேசிய இனம் என்பதையும், தமது சுதந்திர வேட்கையையும் வெளிப்படுத்திய அணுகுமுறையை விடவும், இது பெரும்பான்மையான உலகத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகச்சிறந்த ஜனநாயக முறைமையாகும்.

இரண்டாவதாக,

தமிழ் மக்கள் தமது முதலாவது வாக்கை, கட்டாயம் தம்மை பிரதிநிதித்துவம் செய்யும் வேட்பாளருக்கு அளித்த பின்னர், இரண்டாவது விருப்பு வாக்கை யாருக்கு அளிப்பது அது மைத்திரிக்கா? மகிந்தவுக்கா? என்பதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்களுக்கு கனகச்சிதமாக தெளிவுபடுத்த வேண்டும். இது மிகவும் முக்கியமானதாகும். நெஞ்சுரமற்று இதில் எந்த வளைவு நெளிவு சுழிவுகளையும், நெகிழ்வு போக்கையும் கடைப்பிடிக்க கூடாது. ஏனெனில் நாம் மேற்கொண்டுள்ள மூன்றாவது வேட்பாளரை களமிறக்கும் நடவடிக்கையின் உயிர்ப்பு, வெற்றி, பேரம் பேசும் சக்தி எல்லாமே இந்த விருப்பு வாக்குகளில் தான் தங்கியுள்ளது. (இதன் பலாபலனை பத்தியின் முடிவில் கண்டுகொள்ளுவீர்கள்)

மூன்றாவதாக,

இறந்தவர்கள் அனைவரும் எழுந்துவந்து வாக்களித்தாலே ஒழிய,(முறைகேடான வாக்குகள்) 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப்பெறும் வல்லமையில் மகிந்தவும், மைத்திரியும் இல்லை. இலங்கையில் இன்றுள்ள அரசியல் சூழலில் அதற்கான வாய்ப்புகள் மழுங்கடிக்கப்பட்டு விட்டன. (மூன்றாவது வேட்பாளரை தமிழ் மக்கள் களம் இறக்கும் பட்சத்தில் மாத்திரமே இந்த கணிப்பு சாத்தியமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.)

எனவே 50 வீதத்துக்கும் குறைவான வாக்குகளையே இரண்டு வேட்பாளர்களும் பெறுவார்கள். அவ்வாறு பெறும் சந்தர்ப்பத்தில் இரண்டாவது சுற்று விருப்பு வாக்குகள் எண்ணும் இடர்நிலைமை ஏற்படும். இங்குதான் நாம் மேலே இரண்டாவதாக வலியுறுத்திக்கூறிய “தமிழ் மக்களின் விருப்பு வாக்குகள்” செல்வாக்கு செலுத்தப்போகின்றன. அதாவது இலங்கையின் ஆட்சியாளரை தீர்மானிக்கப்போவது தமிழர்களின் வாக்குகளே!

தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் “தமிழர்கள்” என்ற சொல்லை உச்சரித்தாலே அது தமது தோல்விக்கான காரணமாக அமைந்துவிடும் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி, சிங்கள மக்களை திருப்திபடுத்தியவாறு வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டும், தமிழ் மக்களை தீண்டத்தகாதவர்களாக சித்திரித்தும் அருவருப்பான அரசியல் செய்துகொண்டிருக்கும் சிங்களத்தலைமைகளுக்கு, தமிழ் மக்கள் நாம் மிகப்பெரிய சேதியை கன்னத்தில் பலமாக அரைந்து சொல்ல முடியும். அந்த அரை அவர்களின் ஆன்மாவை உலுப்ப வேண்டும்.

இலங்கையின் ஆட்சியாளர் யார்? என்பதை தீர்மானிப்பது சிங்கள மக்கள் அல்ல, தமிழ் மக்களே! தமிழ் மக்களிடமே அந்த பலம் இருக்கிறது! என்பதை அவர்களுக்கு நிரூபிப்பதோடு அது ஒரு வரலாற்றுப்பதிவாகவும் அமைந்துவிடும்.

நான்காவதாக,

தமிழ் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியானவர் என்ற உருத்து அவர்களை துரத்திக்கொண்டேயிருக்கும். அது ஒருவகை சங்கடத்தையும், கூச்சநாச்சத்தையும் ஆட்சியாளருக்கு கொடுக்கும். தமிழ் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் என்பதால், தமிழ் தேசியக்கூட்டமைப்பும் ஒரு திமிருடன் உயர்ந்த தரத்திலிருந்துகொண்டு காத்திரமான பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியும். தமிழ் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையால் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தங்களை அகப்புறச்சூழல்கள் உருவாக்கும்.

இதைவிடுத்து எத்தகைய கோரிக்கைகளும், நிபந்தனைகளும், வலியுறுத்தல்களும், சவால்களும் இல்லாமல் இரண்டு பிரதான வேட்பாளர்களும் வாக்களித்து தனிச்சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை தமிழர்கள் ஆதரிக்க போகிறார்களா?

ஐந்தாவதாக,

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, “மூன்றாவது வேட்பாளரை தமிழர்கள் களமிறக்கிறார்கள்” என்ற தீ பற்றி எரியத்தொடங்கியவுடன், இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றத்தை விரும்புகின்ற, அதனை முழுமையாக ஆதரிக்கின்ற, அதற்காக முயற்சிக்கின்ற அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும், இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகள் சிலவும் தமிழர்களின் முடிவு தமது நோக்கத்தை சிதறடித்து திசை திருப்பி விடுமோ என்ற கலக்கத்தில், “உங்களுக்கு என்ன வேண்டும். உங்கள் தேவைகள் எதிர்பார்ப்புகள் என்ன” என்றவாறு இறங்கி வருவார்கள்.

இப்போது வாசகர்களாகிய நீங்கள் அவசியம் செய்ய வேண்டியது,

மீண்டும் இந்த பத்தியின் தொடக்கத்துக்கு செல்லுங்கள். இரண்டு பிரதான வேட்பாளர்கள் தரப்பும் கூறிய பேச்சுகளை மறுபடியும் வாசியுங்கள்.

இங்கு தான் தமிழர்கள் தமது அரசியல் பலத்தை, பேரம் பேசும் சக்தியை சிங்கள தலைமைகளுக்கு உணர்த்தப்போகிறார்கள். அவர்களை தமது காலடிகளுக்கு தமிழர்கள் கொண்டு வரப்போகிறார்கள். “அந்த இரண்டாவது வாக்கை இன்னவருக்கு அளியுங்கள்” என்ற வேண்டுதலோடு மேற்குலக நாடுகளின் சுட்டுவிரல் யாராவது ஒருவரை நோக்கி நீளும். அந்த சுட்டுவிரல் யாரை நோக்கி நீண்டதோ அத்தரப்பும், தமிழ் தேசியக்கூட்டமைப்பும் சர்வதேச மத்தியஸ்தத்துடன் ஒரு (இரகசிய) கனவான் ஒப்பந்தத்துக்கு செல்ல முடியும்!

அந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்கள் கோரும் அரசியல் தீர்வுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கான பிரகாசமான வாய்ப்புகளும் உண்டு.

எனவே மூன்றாவது வேட்பாளரை களமிறக்கும் முடிவில், தமிழ் மக்களின் நலன், பலம், பாதுகாப்பு, பேரம் பேசும் சக்தி, கிடுக்குப்பிடி போடும் திறன் எல்லாம் ஒருங்கே இருப்பதால்தான், இங்கு “மூன்றாவது வேட்பாளர்” தெரிவு முக்கியத்துவம் பெறுகிறதே தவிர,

இது ராஜபக்ஸவை மறைமுகமாக ஆதரிக்கும் முடிவு, ராஜபக்ஸ வீசியெறிந்த கோடிகளுக்கு விலைபோனவர்களின் முடிவு என்றெல்லாம் விமர்சித்து பேசுவது, “தேத்தண்ணிக்கடை பெஞ்ச்” அரசியலுக்கு சரிப்பட்டுவருமே தவிர, அறிவுபூர்வமான அரசியல் நடவடிக்கைகளுக்கு பொருத்தி வராது.

ஈழத்திலிருந்து...

-இரும்பொறை-

http://www.seithy.com/breifNews.php?news

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் இரண்டாவது வாக்கை பற்றி எழுதிய இரும்பொறை சிங்கள, முஸ்லிம் வாக்காளர்களுக்கும் இரண்டாவது வாக்கு போடும் உரிமை உண்டு என்பதை மறந்து விட்டார் போலும்.

இங்கு தான் தமிழர்கள் தமது அரசியல் பலத்தை, பேரம் பேசும் சக்தியை சிங்கள தலைமைகளுக்கு உணர்த்தப்போகிறார்கள். அவர்களை தமது காலடிகளுக்கு தமிழர்கள் கொண்டு வரப்போகிறார்கள். “அந்த இரண்டாவது வாக்கை இன்னவருக்கு அளியுங்கள்” என்ற வேண்டுதலோடு மேற்குலக நாடுகளின் சுட்டுவிரல் யாராவது ஒருவரை நோக்கி நீளும். அந்த சுட்டுவிரல் யாரை நோக்கி நீண்டதோ அத்தரப்பும், தமிழ் தேசியக்கூட்டமைப்பும் சர்வதேச மத்தியஸ்தத்துடன் ஒரு (இரகசிய) கனவான் ஒப்பந்தத்துக்கு செல்ல முடியும்!

அந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்கள் கோரும் அரசியல் தீர்வுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கான பிரகாசமான வாய்ப்புகளும் உண்டு.

 

 

கனவு காணும் உரிமை அனைவருக்கும் உள்ளது..... :D  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது வேட்பாளரை தமிழர்கள் நிறுத்துவதில் உள்ள அனுகூலங்கள்! (இரண்டாம் இணைப்பு) – தனபாலசிங்கம்


[Thursday 2014-12-04 20:00]

3-Person-elect-031214-350-article.jpg

மூன்றாவது வேட்பாளரை தமிழர்கள் நிறுத்துவதில் உள்ள அனுகூலங்கள்! தொடர்பில் ஈழத்திலிருந்து இரும்பொறை அவர்கள் எழுதியிருந்தார். அதில் மூன்றாவது வேட்பாளரை தமிழர்கள் நிறுத்தும் பட்சத்தில் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை பயக்கும் என்றும், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் விருப்பு வாக்குகள் எப்படி செல்வாக்கும் தாக்கமும் செலுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.


   

மூன்றாவது வேட்பாளரை களமிறக்கும் உத்தி மற்றும் அணுகுமுறை தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பிக்களில் சிலர், சிவில் சமுக அமைப்புகளிடமும், கல்வியாளர்கள், புத்திஜீவிகள் பலரிடமும் கருத்தாடல்கள் புரிந்தபோது, சாதகமான சமிஞ்ஞைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் மூன்றாவது வேட்பாளரை களமிறக்கும் நடவடிக்கையில் தாம் ஈடுபாட்டுடன் முன்னின்று செயல்படுத்தினாலோ அன்றி அதுதொடர்பில் ஆர்வத்துடன் கருத்துக்கூறினாலோ, தமக்கு கூட்டமைப்புக்குள் இருக்கும் வேறுசில எம்.பிக்களே “துரோகிப்பட்டம்” சூட்டி கொச்சைத்தனமாக எழுதித்தீர்த்து அநாகரிக அரசியல் செய்வார்கள் என்று அவர்கள் அஞ்சுவதாகவும் அறிய முடிகின்றது.

இந்தநிலையில் தமிழ் மக்கள் சார்பில் மூன்றாவது வேட்பாளர் போட்டியிட்டால், எப்படி வாக்களிப்பது? அதாவது வாக்களிக்கும் முறை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தி வலுப்படுத்தி,

தனபாலசிங்கம் அவர்கள் எழுதியுள்ள பத்தி இதோ!

இங்கு உண்மை என்னவெனில் தமிழருக்கு எதிராக அரசியல் அமைப்பை எந்தவகையிலும் பாதகமாக பயன்படுத்துவதற்கான மனத்திடத்தை சிங்களத் தலைவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். எனவே கடந்த காலத்திலாகினும் சரி, நிகழ்காலத்திலாகினும் சரி, எதிர்காலத்திலாகினும் சரி, ஒரு யாப்பில் ஏதாவது நல்லவற்றை செய்ய இடம் இருக்கிறதா என்பதைவிடவும் தமிழருக்கு எதிரான நடைமுறைகளை பின்பற்றுவதற்கான மனநிலையை சிங்களத் தலைவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதே இங்கு பெரிதும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

ஆனால், இங்கு நடைமுறையில் இருக்கின்ற யாப்பில் ஜனாதிபதி தேர்தலின் போது சிங்களத் தலைவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு தமிழ் வாக்காளர்களுக்கு உண்டு. இந்த வாய்ப்பை நாம் சரிவர பயன்படுத்தப்போகிறோமா இல்லையா என்பதே இங்குள்ள பிரதான கேள்வியாகும்.

அதாவது ஜனாதிபதி தேர்தலின் போது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அளிப்பதற்குரிய மாற்று வாக்கு (Alternate Vote) என்று ஓர் ஏற்பாடு உண்டு. ஒரு வாக்காளர் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு தான் விரும்பும் முதலாவது நபருக்கு ஒன்று (1) என்ற இலக்கத்தை இடுவதன் மூலம் தனது முதலாவது வாக்கையும், அவர் தேர்ந்தெடுக்கப்படாது தோல்வியடையும் இடத்து இன்னொருவரை தெரிவதற்கான தனது இரண்டாவது (2) வாக்கை இடவும் இவ்வாறாக வழியுண்டு.

ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்படும் வாக்கில் 50.01 வீதத்திற்கு மேலான வாக்குக்களை பெறுபவர் ஜனாதிபதியாக தெரிவாக முடியும். ஆனால் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும்போது 50 வீதத்திற்கும் மேலான வாக்குகளை ஒருவர் பெற முடியாத போது அதில் யாரும் வெற்றி பெற்றவராக கொள்ளப்பட மாட்டார். ஆனால் அப்படிப்பட்ட நேரத்தில் மூன்றாவது நபர் தேர்தலிலிருந்து விலக்கப்பட்டு, அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டில் இரண்டாவதான மாற்று வாக்கு, மேல் உள்ள இருவரில் யாருக்கு அளிக்கப்பட்டுள்ளன என்று எண்ணப்படும். இம்மேலதிக வாக்குகளையும் கூட்டி யார் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளை பெறுகிறாரோ அவரே ஜனாதிபதி என அறிவிக்கப்படுவர்.

இந்நிலையில் தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு தெளிவான வாய்ப்பு இருக்கிறது. தமிழ் பேசும் மக்கள் தமக்கென ஒரு வேட்பாளரை தேர்தலில் நிறுத்தினால் மேற்படி வாய்ப்பை பயன்படுத்த முடியும். இதனை பின்வரும் உதாரணத்தின் மூலம் பார்ப்போம்.

ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குக்களை 100 என எடுப்போம். இத்தேர்தலில் Mr.X, Mr.Y என இருபெரும் சிங்களக் கட்சிகளின் சார்பில் இரு சிங்களத் தலைவர்கள் போட்டியிடுவதாக வைத்துக்கொள்வோம். அதேவேளை தமிழ் பேசும் மக்கள் தரப்பில் Mr.T என ஒரு வேட்பாளர் போட்டியிடுவதாகவும் வைப்போம். இதில் Mr.X 45 வாக்குகளும் Mr.Y க்கு 35 வாக்குகளும், Mr.T க்கு 20 வாக்குகளும் கிடைப்பதாக வைப்போம். இதன் போது முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது யாரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெறாதவர் என்ற வகையில் யாரும் வெற்றி பெற்றவராக அறிவிக்கமுடியாது.

அடுத்து மூன்றாவது வேட்பாளரான Mr.T தேர்தலில் இருந்து விலக்கப்பட்டு அவரது வாக்குச்சீட்டில் இரண்டாவதாக அளிக்கப்பட்ட வாக்குகள் மேற்கூறப்பட்ட இருவரில் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என தரம்பிரிக்கப்பட்டு அவரவரது வாக்குகளோடு சேர்க்கப்படும். உதாரணமாக இவரது வாக்குக்சீட்டில் 18 வாக்குகள் Mr.Y க்குரியது என இருந்தால் Mr.Y ஏற்கனவே பெற்ற 35 வாக்குகளோடு 18 வாக்குகளை கூட்டும்போது அவர் 53 வாக்குக்களை பெற்றவராய் வெற்றிபெற்றுவிடுவார்.

இதில் மற்றொரு ஏற்பாடும் உண்டு. அதாவது Mr.T க்கு வாக்களிப்போர் தமது வாக்குகளை இரண்டாவதான மாற்று வாக்கை அளிக்காது, Mr.T க்கு மட்டும் வாக்களித்ததோடு நிறுத்திவிட்டால் அந்த வாக்குக்கள் தேர்தலில் இருந்து விலக்கப்படும். இதன்படி Mr.T க்கு வாக்களித்த 20 வாக்காளர்களும் தமது 2வது வாக்கை அறவே பயன்படுத்தாதுவிட்டால், அந்த 20 வாக்குக்களும் விலக்கப்பட்டு 80 வாக்குகளும் பின்பு 100 வாக்குகளாக கொள்ளப்படும். அதன்படி 45 வாக்குக்களை பெற்றவர் 56.25 வீத வாக்குகளை பெற்றவராக கொள்ளப்பட்டு வெற்றி பெறுவார்.

இதன்படி தமிழ் பேசும் மக்கள் தமக்கென ஒரு வேட்பாளரை நிறுத்தி தமது முதலாவது வாக்கை மட்டும் அளித்துவிட்டு 2வது வாக்கை அளிக்காது விடலாம். அவ்வாறன சூழலில் முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது எந்த ஒரு சிங்களத் தலைவரும் வெற்றி பெறாது, 2வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதுதான் வெற்றி பெற முடியும். இந்நிலையில் முதலாவது சுற்று எண்ணிக்கையில் வெற்றி பெற முடியாத ஜனாதிபதி என்ற பெயரையே பெறுவார். மேலும் அளிக்கப்பட்ட மொத்த வாக்கில் பெரும்பான்மையினரின் வாக்கைப் பெற்ற ஜனாதிபதி என்ற பெயரே அவருக்குரியதாக அமையும்.

அதேவேளை தமிழ் பேசும் தரப்பு வேட்பாளர், மேற்கூறப்பட்ட இரு சிங்கள வேட்பாளர்களில் ஒருவருடன் பேரம் பேசி அதன் அடிப்படையில் தமது 2வது வாக்கை தமக்கு சாதகமான பேரத்திற்கு ஒத்துக்கொள்பவருக்கு அளிக்க முடியும். இந்த வகையில் Mr.Y சாதகமான பேரத்திற்கு ஒத்துக்கொள்வாரேயானால் இரண்டாவது வாக்கை Mr.Y க்கு அளித்து 2வது சுற்று எண்ணிக்கையில் Mr.Yயை வெற்றிபெற வைக்க முடியும்.

அதாவது முதல் சுற்றில் 45 வாக்குக்களை பெற்ற Mr.X யை, 35 வாக்குகளைப் பெற்ற Mr.Y, 2வது சுற்றின் போது Mr.T யின் வாக்குச்சீட்டில் உள்ள 2வது 20 வாக்குகளையும் கூட்டுவதன் மூலம் 55 சதவீத வாக்குகளை பெற்றவராய் வெற்றி பெற முடியும். இங்கு சிங்கள மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவரை தமிழ் பேசும் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவராக்க முடியும். இது ஒரு நிகழ்தகவு கணிப்பாகும்.

இனி நாம் நேரடி நடைமுறைக்கு வருவோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை நிறுத்துமிடத்து தமிழ் மக்களின் வாக்குகளை சிங்கள இனவாதத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகளாக, தமது உரிமைகளை பேணுவதற்கு ஒன்று குவிக்கப்பட்ட வாக்குகளாக உலகிற்கு காட்ட முடியும். இரண்டாவதாக தேர்தல் காலத்தில் உள்ள ஜனநாயக நடைமுறைகளை பயன்படுத்தி மக்களை சந்திக்கவும் அதன் மூலம் தமிழ்மக்கள் ஒன்று திரட்டப்பட்ட அரசியல் உணர்வை பேணவும் தமிழ் மக்களின் உரிமைக்கான வழிகளை வலுப்படுத்தவும் முடியும். எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை நிறுத்துவதே சரியானதும், புத்திசாலித்தனமானதுமாகும். தேவை ஏற்பட்டால் பேரம் பேசலின் போது தமது 2வது வாக்கை பிரயோகிப்பதைப்பற்றி சிந்திக்கலாம். எனவே இங்கு முதலாவதாக ஒரு வேட்பாளரை நிறுத்தி அதனை ஓர் அரசியல் செயற்பாட்டுக் களமாக பயன்படுத்துவது அவசியமாகும்.

-தனபாலசிங்கம்-

http://www.seithy.com/breifArticle.php?

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.