Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரே போடு...சத்!

Featured Replies

1)

இப்பொழுது டிசிஎஸ் நிறுவனம் கைகளில் கோடாரியை எடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரையிலான பணியாளர்களை வெட்டப் போகிறது. ரத்தச் சகதி. மிகச் சமீபத்தில் யாஹூ இதைச் செய்தது. அதற்கு முன்பாக ஐபிஎம். அப்புறம் ஆரக்கிள். இப்படி பெரும்பாலான நிறுவனங்கள் இதைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் டிசிஎஸ் இதுவரைக்கும் தங்களைப் புனித நிறுவனமாகக் காட்டிக் கொண்டிருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பாக டிசிஎஸ்ஸில் சேர்ந்தால் ‘அது கவர்ன்மெண்ட் வேலை மாதிரி’ என்பார்கள். சம்பளத்திலும் பதவி உயர்விலும் தாறுமாறான வளர்ச்சி இருக்காது என்றாலும் கூட முரட்டுத்தனமாக வெளியே தள்ளிவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை அது. முதல் சில வருடங்களுக்கு இந்தியாவில் இருப்பார்கள். பிறகு ஒன்றிரண்டு வருடங்களாவது வெளிநாட்டு வாய்ப்பு நிச்சயமாகக் கிடைக்கும். கையில் பணம் புழங்கத் தொடங்கும். இன்னும் கொஞ்சம் பணத்தை வங்கியில் கடனாக வாங்கி வீடு ஒன்றைத் தயார் செய்து கொள்வார்கள்.

அதே சமயத்தில் திருமணம், குழந்தை என்று வாழ்க்கை ஒரு வகையில் அமைதியாகச் சென்று கொண்டிருக்கும். வாங்குகிற சம்பளத்தில் வீட்டுக்கடன், குழந்தைகளுக்கான கல்விச் செலவு போன்ற தேவைகள் இருந்தாலும் வேலை நிரந்தரம் என்கிற comfort zone அது. இப்பொழுது அந்தப் பருவத்தில் இருப்பவர்களின் கழுத்தைக் குறி வைத்துதான் கோடாரியை வீசவிருக்கிறார்கள். செய்திகளிலிருந்து யூகித்தால் எட்டிலிருந்து பதினைந்து ஆண்டுகள் வரையிலான அனுபவமுடைய மிடில்-மேனேஜ்மெண்ட் ஆட்கள்தான் இலக்கு. அநேகமாக முப்பத்தைந்திலிருந்து நாற்பது வயது வரையில் இருப்பார்கள். சர்க்கரை நோய் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருக்கலாம்; ரத்த அழுத்தம் மீட்டரில் உயரத் தொடங்கியிருக்கக் கூடும்; இருதயத்தின் குழாய்களில் கொழுப்பு திரண்டு கொண்டிருக்கலாம். அவர்கள்தான் இந்த விளையாட்டின் பகடைக்காய்கள்.

அமெரிக்கச் சம்பளம் வேண்டும். அமெரிக்கரிகர்களின் வாழ்க்கை முறை வேண்டும். ஆனால் அமெரிக்க நிறுவனங்களைப் போல வேலையிலிருந்து தூக்கினால் மட்டும் ஆகாதா என்று கேட்கலாம்தான். வேலை நீக்கமே இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் இப்படி பெருமொத்தமாகத் நீக்க வேண்டியதில்லை அல்லவா? ஒவ்வொரு வருடமும் மதிப்பாராய்தல் (appraisal) நடக்கிறது. தகுதியில்லாத பணியாளர்கள் என்று கருதக் கூடியவர்களுக்கு பயிற்சி அளித்துப் பார்க்கலாம். அப்படியும் தேறாதவர்களை வேலையை விட்டு அனுப்பலாம். அது வருடத்திற்கு இரண்டு சதவீதம் கூட ஆகாது. அப்படி சொற்பமான ஆட்களை வேலையை விட்டு நீக்கும் போது வேலையை இழந்தவர்களும் வெளியில் வேலை தேடுவதில் சிரமம் இருக்காது.

‘நாங்கள் நல்லவர்கள்’ என்று சொல்லிச் சொல்லியே சேர்த்து வைத்துக் கொண்டு திடீரென்று இப்படி பெருமொத்தமாக வேலையை விட்டுத் துரத்தும் போது வேலைச் சந்தையில் ஆட்கள் நிரம்பி வழிவார்கள். அடுத்த நிறுவனத்திற்கு தெரியாதா என்ன? இந்த நிறுவனத்தில் இருந்து வந்திருக்கிறான் என்றாலே அவனுக்கு புரிந்துவிடும். ஆடு மாடுகளை விலை பேசுவது போல பேசுவார்கள். ‘இவ்வளவுதான் சம்பளம். வர முடிந்தால் வா’ என்கிற மாதிரி. வேறு வழி? கிடைக்கிற வேலையில் சேர வேண்டியதுதான். அப்படி அரைச் சம்பளத்திலாவது வேலை கிடைத்தால் பாக்கியசாலி. அதுவும் கிடைக்காதவன் என்ன செய்வான்? பல வருடங்களாக தனது நிறுவனத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவனை இப்படியொரு இக்கட்டில் கொண்டு வந்து நிறுத்துவதைத்தான் வெளிப்படையாகச் செய்கிறார்கள்.

இரண்டு வருடங்களாக தொடர்ந்து 'under performance' செய்த ஆட்களைத்தான் தூக்குகிறோம் என்பது போன்றதான சாக்குப் போக்குகளைச் சொல்வார்கள். தாராளமாகச் செய்யட்டும். ஆனால் எதற்காக இருபத்தைந்தாயிரம் பேரை நீக்குகிறோம், ஐம்பதாயிரம் தலைகளை வெட்டுகிறோம் என்றெல்லாம் பரபரப்பூட்டி தங்களது பணியாளர்களை முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

பெரும்பாலான நிறுவனங்களில் இந்த வேலை நீக்கம் உண்டுதான். ஆனால் இத்தனை ஆயிரம் பேரை வெட்டுகிறேன் என்று அறிவித்துவிட்டு ரத்த வேட்டை நடத்துவதில்லை. இப்பொழுது நான் பணியாற்றும் நிறுவனத்தில் கூட சில மாதங்களுக்கு முன்பு ஆட்களை வேலையை விட்டு நீக்கினார்கள். ஆனால் அதை மரியாதையாகச் செய்தார்கள். நீக்கப்பட்ட எல்லோருக்குமே இரண்டு மாதச் சம்பளம் உறுதி. அது போக அந்தப் பணியாளர் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் இரண்டு மாதச் சம்பளம் கொடுத்தார்கள். அதாவது மூன்று வருடங்கள் பணியாற்றியிருந்தால் {(3x2=6)+இரண்டு} ஆக எட்டு மாதச் சம்பளம். நான்கு வருடங்கள் பணியாற்றியிருந்தால் {(4x2=8)+இரண்டு} ஆக, பத்து மாதச் சம்பளம். இது தவிர பயன்படுத்தாத விடுமுறை தினங்கள், இதுவரையிலுமான போனஸ் என பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். அதைவிட முக்கியம் சத்தம் வெளியில் வரவில்லை. விடுப்புக் கடிதத்தில் (Relieving Letter)இரண்டு மாதம் தள்ளி தேதி போட்டுக் கொடுத்தார்கள். அதாவது இன்றைய தினம் வேலையைவிட்டு அனுப்புவதாக இருந்தால் பிப்ரவரி 22 என்பதுதான் அவரது கடைசி வேலை நாள் என்று குறித்துக் கொடுப்பார்கள்.

இன்னொரு நிறுவனத்தில் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் போது தான் இன்னமும் வேலையில் இருப்பதாகச் சொல்லி பேசலாம். ‘தன்னை வேலையைவிட்டு நீக்கிவிட்டார்கள்’என்று சொன்னால் எந்த நிறுவனமும் அடிமாட்டை போலத்தான் பார்ப்பார்கள். அதைத் தவிர்ப்பதற்காக தங்களது பணியாளர்களுக்கு நிறுவனம் செய்து கொடுத்த சகாயம் அது. கெட்டதிலும் ஒரு நல்லது.

அப்பொழுது எங்கள் நிறுவனத்தைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் இந்தச் செய்தியைப் படித்தால் அதெல்லாம் எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது.

இப்படி திடீரென்று பணியாளர்களைக் குறைத்தால் வெளியிலிருந்து பார்க்கிறவர்கள் ‘அடடா இந்த நிறுவனத்தில் ஏதோ பிரச்சினை போலிருக்கிறதே’ என்று நினைத்துவிடக் கூடாதல்லவா? பங்கு விலை அடி வாங்கிவிடும். அதனால் ‘நாங்கள் மூத்த ஆட்களைத்தான் அனுப்புகிறோம் ஆனால் புதியவர்கள் ஐம்பத்தைந்தாயிரம் பேரை வேலைக்கு எடுக்கிறோம்’ என்று அறிவித்திருக்கிறார்கள். அதாவது முதலீட்டாளர்களிடம் ‘தங்களிடம் திறமைக்குத்தான் மரியாதை’ என்று அறிவிக்கிறார்களாம்.

அதெல்லாம் இல்லை. எளிமையான கணக்குத்தான்.

‘உனக்கு ஐம்பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக புதிதாக வருபவர்கள் இரண்டு பேருக்கு ஆளுக்கு இருபதாயிரம் கொடுத்தால் போதும். செக்கு மாடு மாதிரி இன்னும் ஐந்தாறு வருடங்களுக்கு பாடுபடட்டும். பிறகு அவன் சம்பளம் அதிகமாகக் கேட்கும் போது அவனையும் தூக்கிவிடலாம்’ என்பதுதான் சூத்திரம்.

இதைத்தான் எல்லா நிறுவனங்களும் அச்சுபிசகாமல் செய்துவருகின்றன. ஐடி நிறுவனங்கள் அரசாங்கத்திடமிருந்து எல்லாவிதமான சலுகைகளையும் அனுபவித்து வருகின்றன. இந்தியாவுக்குள் இந்த நிறுவனங்கள் வரும் போது தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட அனைத்துச் சட்டங்களிலும் என்ன சலுகைகளை அறிவித்தார்களோ அவற்றில் பெரும்பாலானவற்றை இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கார்போரேட்க்காரர்கள் ஆட்சியாளர்களைக் அவ்வப்போது குளிப்பாட்டிவிடுகிறார்கள். அதனால் எந்த அரசாங்கமும் சலுகைகளை குறைப்பது பற்றி வாயே திறப்பதில்லை.

கடைசியில் யார் சிக்குகிறார்கள்?

பொறியியல் மற்றும் எம்.சி.ஏ என்கிற பெருங்குட்டையில் எல்லோரும் குதிக்கிறார்கள் என்று தானும் குதித்து, ஏதாவதொரு கணினிப்படிப்பை படித்துவிட்டு, காலையில் மடிப்புக்கலையாத சட்டையும் பேண்ட்டுமாகச் சென்று, மாலையில் பேயறைந்த மாதிரி வீடு திரும்பி, மாதச் சம்பளத்தை மிச்சம் பிடித்து, சிறுகச் சிறுகக் கடனில் வீடு சேர்த்து இனி குழந்தைகளைப் படிக்க வைத்து வீட்டுக்கடனை அடைத்தால் போதும் என நினைக்கத் துவங்கும் அரைச் சொட்டை இளங்கிழவர்கள்தான்.

ஒரே போடு...சத்!

கார்பொரேட்டில் புனிதன் என்ன? புல்லுருவி என்ன? எல்லோருமே காசேதான் கடவுளடா எனக் கும்பிடும் களவாணிகள்தான். அவர்கள் கோடாரியை வீசிக் கொண்டேதானிருப்பார்கள். குனிந்து தப்பிக்கிறவன் இன்னும் கொஞ்ச நாளைக்கு தனது உயிரை காப்பாற்றிக் கொள்கிறான். தெரியாத்தனமாக அப்படியே நிற்பவனின் ரத்தச் சகதி அந்தப் பெரு முதலாளிகளின் கால்களை வெதுவெதுப்பாக நனைத்துக் கொண்டேயிருக்கும்.

2)

என் career குழப்பமானது. சிம்புவின் கேர்ள் ஃப்ரெண்ட்ஸை விட நான் செய்த வேலைகள் அதிகம். கோடம்பாக்கத்தில் வலது கால் வைக்கும் முன் கடைசியாக நான் செய்த வேலைகள் 1) Recruitment consultant at ABC consultants. 2) Oracle Functional consultant at Oracle corporation.

விஷயமிருக்கிறது. ஒரு leading IT giant ஆட்குறைப்பு வேலை செய்து வருகிறார்கள். வயதில் அதிகமானவர்களை குறி வைத்து ஜாலியன் வாலாபாக் அளவிற்கு காலி செய்து வருகிறார்கள். சரியா தவறா என்ற வாதத்திற்குள் நான் போக விரும்பவில்லை. நான் Recruiter ஆகவும், IT employee ஆகவும் இருந்தவன் என்பதால் சில விஷயங்களை சொல்ல நினைக்கிறேன். அதற்கு நான் ஒருவரை பற்றி சொல்ல வேண்டும்.

Blog மூலமாதான் எனக்கு அவர் அறிமுகம். அந்த அவர் 12 வருடங்களாக மென்பொருள் துறையில் பிழைத்து வருகிறார். எனக்கு அறிமுகமான நாளிலிருந்தே பிசியாக இருக்கிறார் அவர். “ஐடி ல இருக்கிற என் மத்த ஃப்ரெண்ட்ஸ்லாம் பாதி நேரம் ஃப்ரீயா இருக்காங்களே” என 2010ல் ஒரு தடவை அவரிடம் கேட்டேன்.

“நான் Diploma கார்க்கி. அப்புறம் கரஸ்ல BCA பண்ணேன். Engineers அளவுக்கு educational qualification கிடையாது. எங்க கம்பெனியும் சின்ன கம்பெனி. அடிக்கடி ஆள் தூக்க வேண்டியிருக்கும். அப்ப என் மேலதான் மொதல்ல கை வைப்பானுங்க. என் இடத்த தக்க வச்சிக்கணும்ன்னா நான் இப்படி ஓயாம வேலை செஞ்சுதான் ஆகணும்.”

அவர் இப்போது ஒரு MNCல் project manager. நல்ல சம்பளம். ஆனால் முன்பிருந்த அளவிற்கு வேலை இல்லை. கூடுதலாக இன்னும் 3 மணி நேரம் வேலை செய்கிறார். மீண்டும் அதே கேள்வியை கேட்டபோது

““நான் Diploma கார்க்கி. அப்புறம் கரஸ்ல BCA பண்ணேன். Engineers அளவுக்கு educational qualification கிடையாது. நான் வேலை செஞ்ச previous companiesம் சின்ன கம்பெனி. என் வயசுக்கு project manager வேலை அதிகம். Cost cutting வந்தா முதல்ல highly paid ஆளுங்க மேலதான் கை வைப்பாங்க. ரெண்டு புராஜெக்ட் எக்ஸ்ட்ராவா நான் பாத்துக்கிட்டா கொஞ்சம் சேஃபு. அதான் இப்படி..”

IT industryன் dynamics வித்தியாசமானது. நாளையே ஆள் வேண்டுமென்றால் 5 லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவருக்கு 10 லட்சம் கொடுக்கவும் தயாராக இருப்பார்கள். வேலை முடிந்தவுடன் முதல் கத்தி அவர் தலையின் மீதுதான் தொங்க விடப்படும்..

கடந்த 10வருடங்களாகத்தான் இத்துறையில் ஆட்சேர்ப்பு பணி அதிகமாக நடந்து வருகிறது. அதாவது 40-50 வயதினரை விட 30-40 வயதினர் அதிகம். மற்ற துறைகளை போல சீரான hike இவர்களுக்கு ஒத்து வருவதில்லை. அடிக்கடி company மாற்றி சீக்கிரமே நல்ல சம்பளத்திற்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் அதற்கேற்ற அளவுக்கு skills வளர்த்துக்கொள்வதில்லை..

25 வயதில் இருப்பவர்கள் project இல்லை என்றால் சந்தோஷமாக நேரத்தை கடத்த இணையம் போதும். ஆனால் ஒவ்வொரு billingம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதை இவர்கள் உணர்வதற்குள் கத்தி தயாராகிவிடுகிறது.

0-3 yrs experienced, 5000 பேர் தேவைப்பட்டால் 5-10 Yrs experience 1000 பேர்தான் தேவைப்படுவார்கள். மீதி இருக்கும் 4000பேர் குறைவான சம்பளத்துடன் இருந்தால் நலம். அல்லது தகுதியை வளர்த்துக்கொண்டு அந்த 1000 பேருடன் சென்றுவிட வேண்டும். இல்லையேல், எப்போதும் தலைக்கு மேல் கத்தியுடன் தான் நாட்களை கடத்த வேண்டும்..

என் கணிப்பு சரியென்றால் 2004க்கு பிறகு வேலைக்கு சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் இனி வரும் ஆண்டுகளில் இந்த danger zoneக்கு தள்ளப்படுவார்கள். இந்தியா போன்ற நாட்டில் இதற்கு முறையான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டு எல்லோருடைய வாழ்க்கையும் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நீங்கள்தான் உங்களை பார்த்துக்கொள்ள வேண்டும்.

என் observation படி ITல் இருக்கும் 90% பேர் Over paid. நீங்களாக உங்கள Skill setஐ வளர்த்துக்கொள்ளுங்கள். அல்லது, காற்றில் பறக்காமல் தரையில் நிற்கும் சம்பளத்திற்கு நகர்ந்து கொள்ளுங்கள். இப்படியே இருக்கலாமென்றால், மொத்தமாக வீடு திரும்ப வைத்துவிடுவார்கள்.

3)

ஐடி நிறுவனங்களின் ஆட்குறைப்பு விஷயத்தில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஐடி நண்பர்கள் பலரின் ஆலோசனைகளை பேஸ்புக், டிவிட்டர் பதிவுகளில் தொடர்ந்து பார்க்கமுடிகிறது.

நான் சந்திக்கும் பெரும்பாலான நண்பர்களிடம் இந்த ஐடி தொழில் இல்லாவிட்டால் என்ன செய்வீங்க என்று கேட்டால் ஒருக்கணம் திகைத்து நிற்பதை பார்த்துள்ளேன். பெரும்பாலும் கல்லூரி கேம்பஸ் நேர்முகத் தேர்வில் தேறி மென்பொருள் நிறுவனத்துக்கு வேலைக்கு வருபவர்கள் முதல் மாதம் சுளையாக இருபதாயிரம், முப்பதாயிரம் என்று வரும்போது என்ன செய்வதென்று தெரியாமல் சாம்சங் கேலக்ஸியும், டெர்பி, லீ ஜீன்சுகளுமாய் வாங்கி குவிப்பார்கள். நடுத்தர வயதினர் இஎம்ஐக்களில் கார்,வீடு வாங்கி சம்பளத்தில் முக்கால்வாசியை கடன் கட்டிக் கொண்டிருப்பார்கள்.

பெரும்பாலும் கடன் வாங்காமல் வீடு,கார் வாங்க முடியாது என்பது நிதர்சனம் என்றாலும் என்னைக்கேட்டால் சம்பளத்தில் இருபது சதவீதத்துக்கு குறைவாக கடன் வாங்கினால் நல்லது என்பேன். எந்த தொழில் செய்தாலும் பதினெட்டு மாதங்கள் சம்பளத்தை கையில் சேமிப்பாக வைத்திருக்கவும் என்று வாரன் பபெட் சொல்வார்..

சைக்கிளில் சென்று பேப்பர் விநியோகம் செய்தது, ஊரில் அம்மா நடத்திய இட்லிக்கடையில் வேலை, பிறகு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பயிற்சியாளர் வேலை, பத்திரிக்கையில் உதவி ஆசிரியர், மார்கெட்டிங் ரெப், பத்திரிக்கையில் ப்ரீலான்சர் என்று பல வேலைகளை செய்தபிறகே ஐடி நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றவன் நான்.

ஐநூறு ரூபாய் சம்பளம் வாங்கும்போது இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய் சம்பளத்துடன் புதிய வேலை வரும்.மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும்போது அந்த வேலை பிடிக்காமல் திடீரென ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து ஆயிரம் ரூபாய்க்கு வேலை பார்ப்பேன். நான்கைந்து ஐடி நிறுவனங்கள் மாறி அலைந்துவிட்டேன்.

இப்போது இருக்கும் வேலை பறிபோய் ஒரு பத்திரிக்கை வேலையோ அல்லது வேறு ஒரு தொழிலோ செய்யும் பட்சத்தில் நான் கெளரவம் பார்க்காமல் அதை செய்வேன். எனது தேவைகள் மிக குறைவு.

சிக்கல்கள் அதிகம் இல்லாமல் மிக எளிமையாக வாழ பழகிவிட்டேன். பெரியளவில் கடன் இல்லை. பெரியளவில் சேமிப்பும் இல்லை. ஒரு குழந்தையோடு போதுமென்று நிறுத்திவிட்டேன். எனது உணவுபழக்கமும் மிக எளிமையானவை. இந்த விஷயத்தில் மலையாளிகளை எனக்கு பிடிக்கும். எந்த சூழலிலும் வாழ பழகியவர்களை வாழ்க்கை அப்படியொன்றும் பெரிதாக தண்டித்து விடாது என்று உறுதியாக நம்புவன்.

சிக்கனத்தை, சேமிப்பை, எளிமையை கொண்டாடியவர்கள் தமிழர்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. தவிர வேலை இழப்பு என்பது வருத்தமான விஷயம் என்றாலும் வாழ்க்கை அதனுடன் முடிந்துவிடுவதில்லையே. ஆடம்பரம் மேற்கத்திய வாழ்க்கையிடமிருந்து நாம் கற்றது. போலிக்கெளரவம் நமது ரத்தத்திலேயே ஊறியது. இந்த இரண்டுமே நவீன வாழ்க்கையின் சிக்கல்கள்.

http://www.nisaptham.com/search?updated-min=2014-01-01T00:00:00%2B05:30&updated-max=2015-01-01T00:00:00%2B05:30&max-results=50

&

Twitter.com

தனது காலில் நிற்க முயற்சி செய்யாது, அடுத்தவனிடம் வேலைக்கு  போக நினைக்கும் யாருக்கும் மேல உள்ள கட்டுரை பொருந்தும்.
இந்தியா, என்று இல்லாமல் உலக நாடுகள் எல்லாவற்றிலுமே இன்று இது தான் நிலை.
தனது காலில் சுயமாக  நிற்க வேண்டுமென எண்ணுவோருக்கு பின்வரும் இணைய தளம், ஒரு idea வை/ உதவியை
வழங்க கூடும்.

www.paidonbillsnow.com

Edited by professor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.