Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விரட்டப்படும் விதைகள்

Featured Replies

yerindri_2274887f.jpg

 

'மடி விதையை விடப் பிடி விதை முளைக்கும்' என்று ஒரு பழமொழி உண்டு. மடியில் இருக்கும் விதையை எடுத்து விதைப்பதைவிட, கைப்பிடியில் இருக்கும் விதை உடனடியாகப் பயன் தரும். அதாவது, உரிய நேரத்தில் எவ்விதத் தடையும் இல்லாமல் விதை கிடைக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
 
ஆனால், நமது ஆட்சியாளர்கள் விதைக்கான இறையாண்மையை இழந்துவிடத் தயாராகிவருவது மிகுந்த வேதனை தருவதாக உள்ளது. அந்நிய நேரடி முதலீடு என்ற ஒரே கண்ணாடியைக் கொண்டு எல்லாவற்றையும் பார்க்கின்றனர்.
 
அமைச்சரின் பார்வை
 
அண்மையில் மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஓர் அறிக்கையை வெளியிட்டார். மரபீனி மாற்ற விதைகளை (Genetically modified seeds) எதிர்ப்பது முறையல்ல என்றும், அப்படிச் செய்வது அறிவியலுக்கு எதிரானது என்றும் அதில் கூறியுள்ளார். நெல், கோதுமை, மக்காச்சோளம், சோளம், கத்தரி, கடுகு, உருளைக்கிழங்கு, கரும்பு, கொண்டைக்கடலை போன்ற மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளின் கள ஆய்வுக்கு அனுமதி அளிக்க அவர் முனைந்துள்ளார். ஆனால் பல மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதில் தமிழ்நாடும் ஒன்று.
 
(ஈன் என்ற சொல் ஆங்கிலத்தின் Gene என்று மாறும், இதற்கு ஈனுதல் என்று பெயர். 'ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும்' என்பது திருக்குறள். Generator என்றால் மின்சாரத்தை ஈனுவது என்று பொருள். மரபுக் கூறுகளை ஈனுவதால், ஜீனை மரபீனி என்று அழைக்கிறோம். மரபணு என்று கூறுவது பொருள் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியது, அணு என்றால் atom என்று பொருளாவதையும் கவனிக்க வேண்டும்)
 
மரபீனி மாற்ற விதைகள் முற்றிலும் வணிக நோக்கத்துக்காகப் பன்னாட்டு கும்பணிகளின் அந்நிய நேரடி முதலீட்டைக் குறிவைத்துக் களம் இறக்கப்படுகின்றன. இதன் மூலம் இந்திய விதைச் சந்தையும் வேளாண்மை இறையாண்மையும் காவு வாங்கப்படும்.
 
பொறுக்கு விதைகள்
 
விதைகளைப் பொறுத்த அளவில் மூன்று பெரும் பிரிவுகளுக்குள் அவை அடங்கும். முதலில் பொறுக்கு விதைகள் (selection breeds) இவை காலங்காலமாக உழவர்களிடமிருந்து வருபவை. பல்லாயிரம் ஆண்டுகள், பல பருவங்கள், பல பூச்சிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு, உழவர்களால் தேர்வு செய்யப்பட்டுப் பயன்பாட்டில் இருப்பவை.
 
இவை அந்தந்த மண்ணுக்கேற்ற வகையில் பொருந்தி இருப்பவை. வறட்சியைத் தாங்குபவை, நோய் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவை. மீண்டும் மீண்டும் முளைக்கும் திறன் கொண்டவை மட்டுமல்லாது, விளைச்சலையும் முறையாகக் கொடுப்பவை. உழவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறப்பு கொண்டவை.
 
ஒட்டு விதைகள்
 
அடுத்தது கலப்பின விதைகள் எனப்படும் ஒட்டு விதைகள். இவை வீரிய விதைகள் என்று அறிமுகம் செய்யப்பட்டவை. ஆனால், நிஜத்தில் சோதா விதைகள். இவற்றுக்கு வறட்சியைத் தாங்கும் திறன் குறைவு, நோய் எதிர்ப்பாற்றலும் குறைவு. விளைச்சலை மட்டுமே கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டவை. இவற்றைப் பெரும்பாலும் கும்பணிகள் அல்லது அரசு நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
 
இவை மீண்டும் முளைக்கும், ஆனால் முந்தைய அளவுக்கு விளைச்சல் தராது. இவை உழவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. இவற்றின் விலை அதிகம். எடுத்துக்காட்டாக, ஒரு கிலோ தக்காளி வீரிய விதையின் விலை ஏறத்தாழ 40,000 ரூபாய்! மீண்டும் மீண்டும் சந்தைக்குச் சென்று விதையை வாங்கி வர வேண்டும். என்ன ஒரு தந்திரம்!
 
மரபீனி மாற்ற விதைகள்
 
அடுத்தது, கும்பணிகளும் அவர்களுக்கு ஆதரவான சில அறிவியலாளர்களும், ஆளும் ஆட்சியர்களில் சிலரும் இப்போது அறிமுகப்படுத்த முனையும் மரபீனி மாற்ற விதைகள். இவை இரண்டு பயிர்களுக்கு இடையில் கலப்பு செய்யப்பட்டவையல்ல, ஒரு பயிரையும், ஒரு நுண்ணுயிரியின் மரபீனியையும் இணைத்து உருவாக்கப்பட்டவை. இவற்றைப் பெரும் பன்னாட்டு கும்பணிகள் மட்டுமே தயாரிக்கின்றன.
 
அரசுகள்கூட இந்த விதைகளைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில், அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் (டங்கல் வழங்கிய கொடை!) அவற்றை முழுமையாகக் கும்பணிகள் கட்டுப்படுத்துகின்றன. இவை மீண்டும் முளைக்கும் திறன் அற்றவை. அதனால், விதைக்கு உழவர்கள் மீண்டும் மீண்டும் கும்பணிகளையே எதிர்பார்த்து இருக்க வேண்டும். விலையும் மிக அதிகம்.
 
கட்டுரையாசிரியர், 
சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
 
  • தொடங்கியவர்

புரட்சி விதைகளால் வாடிய பயிர்கள்

 

vidhai_2280870f.jpg

 

விதை சார்ந்த கொள்கையில் இன்றைக்கு எப்படி அமைச்சர்கள் பேசுகிறார்களோ, அப்படியே அன்றைக்கும் (60-களில்) பேசினார்கள். அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி போன்றோர் எச்சரித்தும்கூட, அன்றைய வேளாண் அமைச்சர் சி.சுப்பிரமணியன் வலுக்கட்டாயமாக ஐ.ஆர். ரக விதைகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்தார். அன்றைக்கு ஒட்டு விதைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த எம்.எஸ். சுவாமிநாதன், இன்றைக்கும் மரபீனி மாற்ற விதைகளுக்கு ஆதரவான குரல் எழுப்புகிறார். 

 
ராக்பெல்லர் பவுண்டேஷன், ஃபோர்டு பவுண்டேஷன் ஆகியவற்றின் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய் பணம் இறக்கப்பட்டு உழவர்களிடம் வலுக்கட்டாயமாக வெளிநாட்டு விதைகளும் வேதி உரங்களும் திணிக்கப்பட்டன. இன்றைக்கு அந்த ராக்பெல்லர் பவுண்டேஷனின் இடத்தில் மான்சாண்டோ வந்துவிட்டது. 
 
வரலாறு அப்படியே திரும்புகிறது. அன்று விதைகள் ஓரளவு அரசுக் கட்டுப்பாட்டில் இருந்தன. அதனால் ஓரளவு தப்ப முடிந்தது. ஆனால் இப்போது, முற்றிலும் பன்னாட்டு கும்பணிகளின் கைகளில் சென்றுவிடும் ஆபத்து உள்ளது. இத்துடன் முடிவிப்பு (டெர்மினேட்டர்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், நமது உள்ளூர் விதைகளும் மலடாகிப் போகும். 
 
ஒரு மக்கள் அறிவியலாளர் 
 
ரிச்சாரியா என்ற மாபெரும் மக்கள் அறிவியலாளர் ஆயிரக்கணக்கான உள்நாட்டு ரக நெல் விதைகளைச் சேகரித்து வைத்திருந்தார். இந்திய மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக அவர் இருந்தபோது, நெட்டை ரகம் மட்டுமல்லாது நம் நாட்டுக்கே உரிய குட்டை ரகங்களையும் கண்டறிந்து வைத்திருந்தார். 
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் பகுதியைச் சேர்ந்த கடூர் சாலா (Gadur Sela - Bd:810) என்ற நெல் வகை ஹெக்டேருக்கு 9.8 டன் விளைச்சலைத் தர வல்லது. இப்பகுதி பழங்குடிகள் நிறைந்த பகுதி. அவர்களிடம்தான் எண்ணற்ற அரிய வகை விதைகள் இருந்தன, இருக்கின்றன. அந்த விதை வளத்தை இன்றைய மேலை நாட்டு அறிவியல் உலகம், அறிவியல் இல்லை என்று கூறுகிறது. இதேபோலப் பாடல் பூல் போன்ற குட்டை ரகம் இருந்துள்ளது. இவை நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை. இவற்றை ஆதரித்த ரிச்சாரியா, நோய் எதிர்ப்புத் தன்மையற்ற அந்நிய விதைகளை ஏற்க மறுத்தார். 
 
தவறான முடிவு 
 
இந்திய வேளாண் சந்தையைக் கைப்பற்ற, அந்நிய விதைகளை இந்தியாவில் பயன்படுத்த வேண்டும் என்ற நெருக்கடியை அமெரிக்கா ஏற்படுத்தியது. குறிப்பாக கம்மிங்ஸ் என்பவரின் நெருக்கடிக்கு இந்திய ஆட்சியாளர்கள் பலியானார்கள். 
 
இதற்குப் பல காலம் முன்பாகவே, இந்தியாவின் வேளாண்மை என்பது சிறு- குறு உழவர்களால்தான் உயிர்ப்புடன் இருக்க முடியும். ஜமீன்தார்களிடம் குவிந்து கிடக்கும் நிலங்கள் உழுபவர்களின் கைகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜே.சி. குமரப்பா, தற்சார்பை அழிக்கும் மையப்படுத்தப்பட்ட வேதி வேளாண்மையை மிகக் கடுமையாக எதிர்த்தார். 
 
ஆனால், பின்னர் வந்த ஆட்சியாளர்கள் அந்நிய விதைகளை அனுமதித்தனர். அதனால் பெரும் பேரழிவு ஏற்பட்டது. துங்குரோ வைரஸ் என்ற நோய் தாக்குதலும், அதுவரை காணப்படாத பூச்சி தாக்குதலும் ஏற்பட்டன. 
 
வாடிய பயிர்கள் 
 
வீரிய விதைகள் எனப்படும் பசுமைப் புரட்சி விதைகள் அதிக அளவு உரம், நீர் போன்றவை தேவைப்படுபவையாக உள்ளன. ஏனெனில், இந்த விதைகள் கட்டுப் படுத்தப்பட்ட ஆய்வகங்களில் வைத்து உருவாக்கப்படுகின்றன. இவற்றைக் கொழுக்க வைப்பதற்காக அதிக அளவு வேதி உரங்களைக் கொட்ட வேண்டும். 
 
அறிவியல் முறைப்படி ஒரு செடியானது, சவ்வூடு பரவல் என்ற முறையில் தனக்கான ஊட்டங்களை நீர் வழியாக எடுத்துக்கொள்கிறது. ஊடுருவும் தன்மை கொண்ட ஒரு சவ்வினால் செறிவு அதிகமான நீர்மமும் செறிவு குறைவான நீர்மமும் பிரிக்கப்பட்டு இருந்தால், அச்சவ்வின் ஊடாகச் செறிவு குறைவான நீர்மத்தைச் செறிவு அதிகமான நீர்மம் ஈர்த்துக்கொள்ளும். இதுதான் சவ்வூடு பரவல் தொழில்நுட்பம். 
 
செடியில் அமைந்துள்ள பாகங்கள் யாவும் சில்லிகளால் (cell) ஆனவை. இவற்றின் சுவர், மேலே கூறிய சவ்வைப் போல அமைந்துள்ளது. இந்தச் சவ்வின் வழியாகச் செறிவு குறைந்த நீர் செறிவுமிக்க சில்லிச் சாறு மூலமாக ஈர்த்துக்கொள்ளப்படுகிறது. இந்த முறையில் பயிர்களின் வழியாக நீர் நகர்ந்து ஊட்டங்களையும் கொண்டு செல்கிறது. 
 
இப்போது பாசன நீருடன் யூரியா போன்ற வேதி உப்புகளை இடும்போது, பாசன நீரானது செறிவுமிக்கதாக மாறிவிடுகிறது. இதனால் பயிர்களில் உள்ள நீர்மம் வெளியேறிவிடுகிறது. எப்போதெல்லாம் வேதி உரங்கள் போடப்படுகிறதோ அப்போதெல்லாம் செடிகள் வாடி நிற்பதைக் காண முடியும். இதை ஈடுசெய்வதற்காக அதிக அளவு நீர் பாய்ச்ச வேண்டும். இந்தப் பசுமைப் புரட்சி விதைகள் அதிகமாக வேதி உரங்களைச் சார்ந்து இருப்பதால், இவற்றின் தாக்கம் நீர் வளத்திலும் கைவைத்தது. 
 
கட்டுரையாசிரியர், 
சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
 
 
 
  • தொடங்கியவர்

எந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது?

 

water_2288562f.jpg

தமிழகம் மட்டுமல்லாது இந்திய வேளாண்மையில் கிணற்றுப் பாசனம் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கிறது. கமலை, இறைப்பெட்டி போன்ற நீரிறைக்கும் கருவிகளைக் கொண்டு ஒரு காலத்தில் வேளாண்மை நடந்துவந்தது.

 
கிணற்றுப் பாசனம் தன்னகத்தே ஒரு பண்பாட்டுக் கூறையும் கொண்டிருந்தது. கமலைத் தோட்டம், முன்னும் பின்னும் போய்வரும் காளைகள், கிணற்றடியில் பூவரச மரம், அதில் தூங்கும் குழந்தை, அதற்குத் தாலாட்டு பாடும் தாய், கமலைக் கயிற்றைப் பிடித்துத் தொங்கும் சிறார்கள் என்று ஓர் இனிய ஓவியம் நம்முன் தோன்றும்.
 
இன்று கமலைக் கிணறு என்பது காண முடியாத காட்சியாகிவிட்டது. கமலை வைத்து நீரிறைக்கும்போது குறிப்பிட்ட அளவு நீர் மட்டும் எடுக்கப்படும்.
 
கமலையின் மகத்துவம்
 
நீரில் மூன்று அடுக்குகள் உள்ளன. முதலாவது மேல்மட்ட நீர் (surface water), இரண்டாவது தந்துகிக் குழாய் நீர் (capillary water), மூன்றாவது நிலத்தடி நீர் (ground water).
 
பொதுவாக மேல்மட்ட நீரானது குளங்களிலும் ஆறுகளிலும் காணப்படும். நிலத்தடி நீர் என்பது 100 அடிக்கும் கீழே தண்ணீர் தாவளங்களாக (aquifers) காணப்படும். இதற்கிடையில் உள்ள நீர், நுண்துளை நீர் என்று அழைக்கப்படும். இது ஆண்டுதோறும் பெய்யும் மழை, குளங்களில் சேமிக்கப்படும் நீரின் அளவு, காணப்படும் மரங்களின் அடர்த்தி ஆகியவற்றைக்கொண்டு உருவாகும்.
 
பொதுவாகக் கமலைக் கிணறுகள் யாவும் இந்த நுண்துளை நீரை மட்டுமே பயன்படுத்துபவை. கமலையின் இறைப்பு அளவும், கிணற்றின் நீர் ஊறும் திறனும் பெரும்பாலும் சமமாக இருக்கும். ஒரு சால் நீரை வாய்க்காலில் ஊற்றிவிட்டு, அடுத்த சால் இறைக்கப் போகும்முன் நீர் ஊறிவிடும். இதைத்தான் நீடித்ததன்மை (sustainability) என்று இப்போது பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
 
வந்தது மோட்டார்
 
ஆனால், வேதி உரங்கள் அறிமுகம் ஆனவுடன் இந்த நீரின் அளவு போதுமானதாக இல்லை. ஏனெனில், வீரிய விதைகளுக்கு உரமும், அதனால் அதிக நீரும் தேவைப்பட்டது. ஆனால், நாட்டு விதைகளுக்கு அப்படி ஒரு நெருக்கடி இல்லை. இதனால் கமலைகளை மாற்ற வேண்டிய நிலைக்கு உழவர்கள் ஆளானார்கள்.
 
அப்போது வங்கிகள் மின்எக்கிகளை (electric motor) அமைத்துக்கொள்ளக் கடன் வழங்கின. கடன் பெறத் 'தகுதி' பெற்றோர் கடன் வாங்கி 'மோட்டார்களை' அமைத்துக்கொண்டனர். ஒரு சிற்றூரில் 100-க்கு 80 பேர் கமலை வைத்திருந்தார்கள் என்றால், அதில் 20 பேருக்கு மட்டும் கடன் கிடைத்தது. அதாவது, 80 உழவர்களில் 20 பேர் மின்எக்கிகளுக்கு மாறினர்.
 
மின்சார எக்கிகள் நீரை மிக வேகமாக உறிஞ்சின. கிணற்றின் ஊறும் வேகம் மின்சார எக்கிகளுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே, கிணறுகளில் நீர் மட்டம் அதி வேகமாகக் கீழிறங்கியது. இதனால் மீதமுள்ளவர்களும் மின்சார எக்கிகளுக்கு மாற வேண்டும் அல்லது சாகுபடியைக் கைவிட வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகினர்.
 
வற்றிய கிணறுகள்
 
நீர் மட்டம் கீழிறங்கியதால் பலர் கிணறுகளை ஆழப்படுத்தினர். இதுவும் வசதி படைத்த ஒரு சிலராலேயே முடிந்தது. விளைவு பாதிக்கு மேற்பட்டோர் சாகுபடியைவிட்டு வெளியேறினர். நகர்ப்புறங்களுக்குச் சென்று குடியேறினர். வேதிஉரம் இட்ட நிலத்தில் தழை ஊட்டத்தைப் பிடித்துத் தரும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்தது. எனவே, மேலும் உரம் போட வேண்டியதாயிற்று, இதனால் கூடுதல் நீர் பாய்ச்ச வேண்டியதாயிற்று. திறந்தவெளிக் கிணறுகளால் பயனில்லாத நிலை ஏற்பட்டதால், ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டன. இன்று கோவை பகுதியில் மட்டும் ஆயிரம் அடி ஆழமான ஆழ்துளைக் கிணறுகள் நூற்றுக்கும் மேலாகக் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதை இந்த இடத்தில் கவனிக்க வேண்டும்.
 
ஏன் காக்க வேண்டும்?
 
இந்தச் சூழலில்தான் விதைகளைக் காக்க வேண்டிய கடமை உழவர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்துத் தரப்பினருக்கும் உள்ளது. தமிழகத்தில் கிச்சிலி, மொழிக்கறுப்பு, மாப்பிள்ளைச் சம்பா முதலிய 75-க்கும் மேற்பட்ட நெல் வகைகள் மீட்கப்பட்டுள்ளன. சடைத் தினை, செந் தினை, வரகு, பனி வரகு, குதிரைவாலி, சடைக் குதிரைவாலி என்று பல நாட்டு விதைகள் உள்ளன. இவற்றைக் காப்பதன் மூலமே, நமது நாட்டின் வேளாண் இறையாண்மையைக் காக்க முடியும், காக்க வேண்டும்.
 
கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
 
  • கருத்துக்கள உறவுகள்

அமரிக்கரைப் பற்றிய விமர்ச்சனம் ஒன்றை முன்பு படித்த ஞாபகம். அவர்கள் ஆராட்சியில் ஈடுபடுவது அதிகம். ஆராட்சியினால் உயர்வடைவதாகத் தெரிவது ஒரு தோற்றமே தவிர உண்மையில் ஆராட்சியின் முடிவில் அலறுகிறார்கள். தெருவோடு போகும் ஒரு பாம்பைப் பிடித்துச் சட்டைப்பையில் போட்டுக்கொள்வார்கள். பின்பு கடித்துவிட்டதே என்று கத்துவார்கள். அதுபோலவே, நாங்களே அரசியல்வாதிகளைத் தேர்வு செய்கிறோம். தேர்வுசெய்துவிட்டு அலறுகிறோம்.  

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.ஆர் இன நெல்லு இந்தியாவுக்கு முதன்முதலாக எங்கிருந்து கொண்டுவரப்பட்டு பயிரிடப்பட்டது? பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்தா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.