Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத நாடு.....?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத நாடு.....?

இலங்கையில் சுமார் கால் நூற்றாண்டு காலமாகத் தொடரும் உள்நாட்டுப் போரில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 65 ஆயிரம் என்று ஒரு கணக்கு பல வருடங்களாகக் கூறப்பட்டு வருகிறது. உண்மையில் அந்த எண்ணிக்கை சரியானதல்ல என்பதே எமது நம்பிக்கை. இதை விடவும் கணிசமானளவுக்கு கூடுதல் எண்ணிக்கையானவர்கள் பலியாகியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

உலகில் இன்று இடம்பெறுகின்ற உள்நாட்டுப் போர்களில் அப்பாவிக் குடிமக்களைப் படுமோசமாகப் பாதிக்கின்றவற்றில் ஒன்றாக இலங்கை நெருக்கடியைக் குறிப்பிட முடியும். மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத ஒரு நாடாக இலங்கை மாறிவிட்ட அவலத்தை காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கு- கிழக்கு நெருக்கடிக்கு தீர்வொன்று காணப்பட்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கான எந்தவிதமான சாத்தியப்பாட்டையுமே அண்மைய எதிர்காலத்தில் காணக்கூடிய சூழ்நிலை இல்லை என்பதை நோக்கும் போது மக்கள் அனுபவிக்கப்போகும் அவலங்களை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

அண்மைக்காலத்தில் தீவிரமடைந்த வன்முறைகளில் பலியான அப்பாவிக் குடிமக்கள் தொடர்பிலான புள்ளி விபரமொன்றை தொகுத்து மனித உரிமைகளுக்கான இல்லம் (Home for HumanRights) என்ற அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை எமது கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருக்கிறது. நாட்டில் நீதி விசாரணைக்குப் புறம்பான படுகொலைகள் உட்பட உக்கிரமடைந்த வன்முறைகளில் இவ்வருடம் இதுவரை 1,300க்கும் அதிகமான குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஐந்து மணித்தியாலங்களுக்கும் ஒருவர் என்ற வீதத்தில் அப்பாவிக் குடிமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித் திருக்கிறது.

கடந்த ஜனவரி தொடக்கம் செப்டெம்பர் வரை ஊடகங்களில் வெளியான செய்தி அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த கணிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. மேற்குறிப்பிட்ட 9 மாத காலத்தில் உள்நாட்டுப் போரில் சம்பந்தப்பட்ட இருதரப்பினராலும் பரா இராணுவக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் 1339 குடி மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்களேயாவர். முஸ்லிம்களும் சிங்களவர்களும் அடுத்த எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த வருடம் ஜூலைக்கும் டிசம்பருக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொல்லப்பட்ட குடிமக்களின் எண்ணிக்கை (229) யுடன் ஒப்பிடும்போது இவ்வருட எண்ணிக்கை அதிர்ச்சியும் கவலையும் தருவதாக அமைந்திருக்கிறது. இவ்வருடம் மே மாதத்துக்குப் பிறகு நீதி விசாரணைக்கு புறம்பான கொலைகளில் கடுமையான அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. வருடத்தின் முதல் 4 மாதங்களில் 134 பேர் இவ்வாறு கொல்லப்பட்ட அதேவேளை, மே மாதத்துக்கும் செப்டெம்பருக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 1205 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

படுமோசமான மாதமாக ஆகஸ்டே அமைந்திருக்கிறது. அந்த மாதத்தில் 489 பேர் கொல்லப்பட்டனர். திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, யாழ்ப்பாண மாவட்டத்தின் அல்லைப்பிட்டி ஆகிய இடங்களிலேயே ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலான கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இரண்டாவது இடத்தை ஜூன் மாதம் பிடித்திருக்கிறது. ஜூன் 15 இல் கெப்பிட்டிக்கொல்லாவையில் இடம்பெற்ற கிளேமோர்க் குண்டுத் தாக்குதலில் 80 குடிமக்கள் பலியாகினர்.

மே மாதத்தில் 184 குடிமக்களும் ஜூலையில் 160 குடிமக்களும் செப்டெம்பரில் 117 குடிமக்களும் பெப்ரவரியில் 9 குடிமக்களும் பலியாகியிருக்கிறார்கள். குறைந்த எண்ணிக்கையிலான குடிமக்கள் பலியான பெப்ரவரி மாதம் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான முதல் சுற்று ஜெனீவாப் பேச்சுவார்த்தை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் எண்ணிக்கையான கொலைச் சம்பவங்கள் திருகோணமலை மாவட்டத்திலேயே இடம் பெற்றிருக்கின்றன. மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் மாவட்டக் கொலைகள் அடுத்தடுத்த எண்ணிக்கையில் வருகின்றன.

மன்னார், அம்பாறை, முல்லைத்தீவு, கொழும்பு, அநுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் ஒரு கணிசமான எண்ணிக்கையில் குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 10 - 15 வயதுக்கிடைப்பட்ட பல சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இந்த கணிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்ட காலப் பகுதியில் கொல்லப்பட்டவர்களில் அதிக கூடிய வயதுடையவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் கதிரவேலு (85 வயது) ஆவார்.

இவ்வருடம் ஜனவரி தொடக்கம் செப்டெம்பர் 19 வரை 325 பேர் கடத்தப்பட்டிருப்பதாக அல்லது காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஊடக செய்தியறிக்கைகளின் படி கணக்கிடக் கூடியதாக இருக்கிறது. ஆட்கடத்தல்களும் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்களும் மே மாதத்திலிருந்தே கடுமையாக அதிகரித்திருந்தன. ஜனவரியிலிருந்து மே மாதம் வரை இந்த எண்ணிக்கை 38 ஆக இருந்தது.

ஆனால், மேயிலிருந்து செப்டெம்பர் வரை 287 பேர் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர். ஜூலையில் 84 பேரும் ஆகஸ்டில் 104 பேரும் கடத்தப்பட்டனர் அல்லது காணாமல் போயினர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பொலன்னறுவை, கொழும்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலேயே ஆட்கடத்தல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

அப்பாவிக் குடிமக்கள் கொலைகளும் கடத்தல்களும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. அத்தகைய வன்முறைகள் தணிவதற்கான எந்த அறிகுறியையுமே காண முடியவில்லை. அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடந்த வார இறுதியில் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவுற்றதையடுத்து, மோதல்கள் தீவிரமடையக் கூடுமென்று மக்கள் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஐந்து மணித்தியாலயத்துக்கும் ஒரு அப்பாவிக் குடிமகனின் உயிர் பலாத்காரமாகப் பறிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் விபரம் இலங்கையில் மனித உயிர்களுக்கு இருக்கின்ற `மதிப்பை' உலகிற்குப் பறைசாற்றுகிறது. இலங்கை எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது......?

-தினக்குரல்

list.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

front-l1.jpg

காணாமல் போனோரின் உற்றார், உறவினர் கதறல்

கைது, காணாமல் போதல், ஆட்கடத்தல், படுகொலை என்பவற்றைக் கண்டித்தும் இவற்றை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தையும் அரசாங்கத்தையும் வலியுறுத்தி மக்கள் போராட்டமொன்று நேற்று புதன்கிழமை நண்பகல் நடைபெற்றது.

கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று நண்பகல் 12 மணி தொடக்கம் 2 மணிவரை நடைபெற்ற இந்த மக்கள் போராட்டத்தில் காணாமல் போனோரின் பெற்றோர், உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்த மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டோர் காணாமல் போனோரின் புகைப்படங்களையும் பதாதைகளையும் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

காணாமல் போனோரின் சிறு குழந்தைகளும் பெருமளவில் இந்த மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதுடன் மனைவிமார், பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுததையும் காணக்கூடியதாகவிருந்தது.

`மகிந்தவின் சிந்தனையா? மரண சிந்தனையா?', `மகிந்தவின் சிந்தனையே மனித உரிமைகளை நசுக்காதே', `காணாமல் போன எம்மவர்களை மீட்டுத் தாருங்கள்', `வேண்டாம் வேண்டாம் கடத்தல் வேண்டாம்', `கைது செய் கைது செய் கடத்தியவரை கைது செய்', `அரசே எம்மவர்கள் இருக்குமிடத்தை தேடிப்பிடி', `வேண்டாம் வேண்டாம் இனியும் இந்த மனித அவலம் வேண்டாம்', `சர்வதேச சமூகமே அரசின் படுகொலைகளுக்கு துணைபோகாதே' போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.

காணாமல் போனோரை கண்டறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மக்கள் போராட்டத்தில் மக்கள் கண்காணிப்புக்குழு, ஐக்கிய பெண்கள் சம்மேளனம், மனித உரிமைகளுக்கான மத்திய கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, புதிய இடதுசாரி முன்னணி, புதிய ஜனநாயகக் கட்சி என்பவற்றின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.கே. சிவாஜிலிங்கம், மனோ கணேசன், என். ரவிராஜ், பிரதியமைச்சர் பி. இராதாகிருஷ்ணன், மாகாண சபை உறுப்பினர் பிரபாகணேசன், முன்னாள் எம்.பி. அப்பாத்துரை விநாயகமூர்த்தி, புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, புதிய ஜனநாயக கட்சியின் செயலாளர் கே. செந்திவேல், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான கலாநிதி எம். குமரகுருபரன், வேலணை வேணியன், எம். கார்த்திக், என். ரவிக்குமார், கே. குருசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சிவாஜிலிங்கம்

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உரையாற்றுகையில் கூறியதாவது;

"தலைநகர் கொழும்பில் மாத்திரமன்றி, நாடுபூராகவும் தொடரும் ஆட்கடத்தல், படுகொலைகளைக் கட்டுப்படுத்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இவ்வாறான மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே மனித உரிமைகளைப் பேண முடியும்.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் பல தடவைகள் முறையிட்டுள்ள போதிலும் ஆயுதக் குழுக்களின் இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கைது, காணாமல் போதல், படுகொலை என்பன இன்று நாடு பூராவும் ஒரு அன்றாட நிகழ்வாகிவிட்டது.

மூவின மக்களும் ஒன்றுபட்டுள்ள, அரசுக்கு எதிரான இந்த எதிர்ப்புக்குரலை சர்வதேச சமூகம் கவனத்தில் எடுத்து மனித உரிமைகளை நிலைநிறுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மனோ கணேசன்

மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. உரையாற்றுகையில் கூறியதாவது;

"ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் இன்றைய ஆட்சியில் கைது, காணாமல் போதல், படுகொலைகளைத் தவிர, வேறொன்றையும் காணமுடியவில்லை. சந்திக்கு சந்தி சோதனைச் சாவடிகளை கொண்டுள்ள தலைநகர் கொழும்பில் கடந்த மூன்று மாதகால இடைவெளியில் 40 இற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

அதிஉச்ச பாதுகாப்பைக் கொண்டுள்ள தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு இவ்வாறானதோர் நிலைமையென்றால் பிரகடனப்படுத்தாத யுத்தமொன்றுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் எவ்வாறான கொடூரங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் படுகொலை, கைது, காணாமல் போதல் என்பவற்றுக்கு எதிரான எமது மக்கள் போராட்டம் தலைநகரில் மட்டுமல்ல, அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி நாடுபூராகவும் முன்னெடுப்போம்" என்றும் அவர் தெரிவித்தார்.

ரவிராஜ்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் என். ரவிராஜ் உரையாற்றுகையில்;

"ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அவர்களே கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் தமது தந்தையர்களை பறிகொடுத்துவிட்டு பரிதாபத்துடன் நிற்கும் இந்தப் பிஞ்சுக் குழந்தைகளைப் பாருங்கள். உங்களுக்கும் மூன்று குழந்தைகள் உள்ளன. ஆனால், நீங்களோ பாதுகாப்புடன் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

முழத்திற்கு முழம் சோதனைச்சாவடிகள். இந்தக் கடத்தல்கள் யாரால்? எவ்வாறு நடத்தப்படுகின்றன. நாட்டின் முழு அதிகாரத்தையும் கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே மக்களுக்கு பதில் சொல்லுங்கள்.

சர்வதேச சமூகம் அரசின் அப்பட்டமான சதிவலைக்குள் சிக்குண்டு துணை போகாமல் மனித உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன்

பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் உரையாற்றுகையில் கூறியதாவது;

"நாம் அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும் எமது மக்களுக்கு எதிரான சம்பவங்களை கண்டித்தே வந்துள்ளோம். கைது, காணாமல் போதல் தொடர்பாக ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்தே வருகின்றோம்.

எமது கட்சியின் முக்கியஸ்தர் சிவகாந்தன் கடத்தப்பட்டு இரு மாதங்கள் கடந்துவிட்டன. அவர் பற்றிய எந்தவொரு தகவலையும் கூடப் பெறமுடியவில்லை.

அரசுடன் இணைந்துள்ள போதிலும் கைது, காணாமல் போதல் தொடர்பாக எமது எதிர்ப்பை தொடர்ந்தும் வெளிப்படுத்துவோம்.

செந்திவேல்

புதிய ஜனநாயகக் கட்சியின் செயலாளர் கே. செந்திவேல் உரையாற்றுகையில் கூறியதாவது;

"ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு நாட்டு மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியது கடத்தல், படுகொலைகளை நாடுபூராவும் விஸ்தரிப்பதற்கா என்பதற்கு முதலில் அரசு பதில் சொல்ல வேண்டும்.

எமது மக்களின் பாதுகாப்பற்ற வாழ்க்கை, துயரங்களின் அவலக்குரல் இன்னமும் சர்வதேச சமூகத்தின் காதுகளை எட்டவில்லையா?

முன்னொருபோதுமில்லாதவாறு நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் அநியாயங்களை தடுத்துநிறுத்த மூவின மக்களும் ஒன்றுபட்டு இவ்வாறான மக்கள் போராட்டங்களை தொடர்ந்தும் நடத்த வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மக்கள் போராட்ட நிகழ்வில் ஜயதிலக பண்டாரவின் சமாதான இசைப்பாடல்களும் ஒலிபரப்பப்பட்டன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.