Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெஞ்சிற்குள் உறைந்திருக்கும் பனிமலை...! சந்திரா இரவீந்திரன்.

Featured Replies

 
 
(இதிலிருந்த படங்களை அகற்றியுள்ளேன் )
 

நெஞ்சிற்குள் உறைந்திருக்கும் பனிமலை...! சந்திரா இரவீந்திரன்.

தலைவர் பிரபாகரன் அவர்கள் தாயகத்தை உண்மையுடன் நேசித்த, துணிச்சல் மிக்கதொரு வீரனாகவே எப்பவும் என் மனதில் தோன்றினார்....!

பிரபாகரன் அவர்களது ஆளுமை பற்றி, நான் அவரை நேரில் சந்திப்பதற்கு முன்னராகவே அவர் பற்றி எனக்குள்ளிருந்த பிம்பத்தை நினைத்துப் பார்ப்பதிலிருந்து தொடங்க விரும்புகிறேன்.

எண்பதுகளில் இயக்கங்கள் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்த காலங்களில் பிரபாகரனை பலரும் 'தம்பி' என்று தான் அழைத்துக் கொண்டிருந்தார்கள். என் தம்பியர்கள் (மாவீரர்கள்- மொறிஸ், மயூரன்) இருவரும் அவரை ‘அண்ணர்’ என்று விழித்துப் பேசுவார்கள். இதில் எதனை நான் பாவனையில் வைத்துக்கொள்வது என்று அப்போது எனக்குள் குழப்பம் இருந்தது! அவர் என்னைவிட வயதில் கூடியவர் என்பதால் 'தம்பி' என்று அவரைக் குறிப்பிட்டுப் பேசுவதும் எனக்கு ஒட்டாத ஒரு சொல்லாக மனதிற்குள் நெருடியது. அதனால் போராளிகளுடன் பேசும் போது 'பிரபா' என்று மட்டும் அவரைக் குறிப்பிடுவேன். என் தந்தை அவரை 'விறைச்ச மண்டையன்' என்பார். அவர் அப்படிக் குறிப்பிட்டுப் பேசும் போது அந்தச் சொல்லிற்குள் ஒருவித பாசம், கோபம், பெருமை எல்லாம் அடங்கியிருப்பதாய் எனக்குத் தோன்றும்.

1983 யூலையில் தமிழர்களுக்கு எதிராகக் தென்னிலங்கை முழுவதும் சிங்களக் காடையர்களால் நடாத்தப்பட்ட கலவரத்திற்கு சில மாதங்களிற்கு முன்னர், பலாலி வீதியில் புலிகள் நிகழ்த்திய சிங்கள அரச இராணுவத்திற்கெதிரான குண்டுத் தாக்குதல் நடைபெற்ற சமயம் நான் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். தாக்குதலினால் ஏற்பட்ட பரபரப்புகள் அடங்க சில நாட்கள் பிடித்தன. அது நடந்து முடிந்த மறுவாரம் வழமை போல மீண்டும் பேருந்தில் பயணித்து, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகாக உள்ள பலாலி வீதியில் இறங்கிய போது குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை என் கண்களால் பார்க்க முடிந்தது. வீதியில் பென்னம்பெரிய குழியொன்று ஏற்பட்டிருந்தது. அத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். நான்கு தமிழ் பாடசாலை மாணவிகளை சிங்கள இராணுவத்தினர் கடத்திச் சென்று கற்பழித்ததன் எதிரொலியாக அந்தத் தாக்குதல் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்டது என்று செய்திகள் அடிபட்டன. அதன் விளைவு முழு நாட்டையும் எப்படிப் புரட்டிப்போடப் போகிறதோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் அனைவரும் வீட்டிற்கு வெளியே அதிகம் வராமல் முடங்கிக் கிடந்தார்கள். அந்த வீதி முழுவதும் ஒரு மயான அமைதி நிலவிக்கிடந்தது. எத்தனை நாட்களிற்கு இப்படி இருக்கப் போகிறது என்ற யோசனையுடன் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நடைபெற்றுக்கொண்டு தானிருந்தன.

ஆனால் அந்தத் தாக்குதலை நிகழ்த்தியவர்களை தமிழ் மக்களில் பலரும் மாபெரும் துணிச்சல்காரர்களாகவும் வீரர்களாகவும் மனதினுள் நினைத்துப் பெருமைப்படத் தொடங்கி விட்டார்கள். அந்தப் பெருமை என்னையும் மூழ்கடித்திருந்தது! அந்தக் காரியத்தைச் செய்த பெடியளை (‘பெடியள்’ என்று தான் போராளிகளை யாழ்ப்பாண மக்கள் செல்லமாக அழைத்துக் கொள்வார்கள்) சந்திக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் கண்ணால் ஒரு தடவை பார்த்தாவது விடவேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் மேலோங்கத் தொடங்கியிருந்தது. அந்த ஆசை எனக்கு மட்டுமல்ல எமது மக்கள் பலருக்குமே அது இருந்தது. அதிலும் இளம் ஆண்கள், இளம் பெண்கள் பலரும் தம்மையறியாமலே மனத்தைரியம் அதிகரித்து, இலேசாக முறுக்கேறியது போல் ஆகியிருந்தார்கள். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. சிங்கள இராணுவ வாகனங்களை வீதிகளில் காணும்தோறும் ஏதோ அடிமைப்பட்டவர்கள் போல அச்சமும் பதற்றமும் மேலோங்க கூனிக்குறுகி, அடங்கியொடுங்கிப் போகும் நரகநிலை மாறி, இனி நாம் தலைநிமிர்ந்து பயமேதுமின்றி வீதிகளில் நடக்கலாம் என்ற இனம்புரியாத உணர்வு எமக்குள் தலை தூக்கத் தொடங்கியிருந்தது. அந்தத் தாக்குதலில் பிரபாகரன் தன் இரண்டு கைகளிலும் துப்பாக்கியேந்தி சுட்டுத்தள்ளினார் என்று எமது கல்லூரி இளைஞர்களிற்குள் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் உற்சாகமாகவும் ரகசியமாகவும் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் சில இளம்பெண்கள் சேர்ந்து கல்லூரி பாட இடைவேளைகளில் இதுபற்றியே அடிக்கடி பேசிக்கொண்டிருப்போம். ஒட்டு மொத்த தமிழ் மக்களிடையேயும் அந்தச் சமயம் அதுவே பெரும் பேசுபொருளாக இருந்தது!

இதன் விளைவு தான் 1983ம் ஆண்டு யூலை மாதம் தமிழர்களுக்கு எதிராக தென்னிலங்கை முழுவதும் சிங்களக் காடையர்களால் நிகழ்த்தப்பட்ட பெரும் இனஅழிப்புக் கலவரம்! 1981ல் சிங்கள இராணுவத்தினரால் யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட போது தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருந்த மனக்கொந்தளிப்பிற்கும் எழுச்சிக்கும் மேலானதொரு பெருந்தாக்கத்தை அந்தக் கலவரம் ஏற்படுத்தியிருந்தது. அந்தக் கலவரத்தில் நாலாயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்கள் உயிரோடு எரித்தும் வெட்டியும் அடித்தும் கொல்லப்பட்டனர். தமிழர்களின் இருப்பிடங்கள், வியாபார தாபனங்கள் வழிபாட்டுத் தலங்கள் யாவும் எரியூட்டப்பட்டன. தென்னிலங்கைச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் சிறைக்குள் வைத்தே சிங்களக் கைதிகளால் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த இந்த வேளையில், அரசினால் பயங்கரவாதத் தடைச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு, வெகு சுலபமாக அப்பாவித் தமிழர்கள் குற்றவாளிகளாகப் பெயர் சூட்டப்பட்டு சிறைகளுள் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தனர். தமிழ் மக்களின் வாய்கள் அரச தடைச்சட்டத்தினால் இறுக்கப் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

ஏன்? எதற்கு? என்ற கேள்விகளிற்கு அங்கு இடமிருக்கவில்லை. 'யாரும் வாய் திறக்காமல் இருக்கக் கடவீர். நாம் சொல்வதே வேதம். விரும்பினால் கேளுங்கள். மீறினால் சுட்டுத் தள்ளப்படுவீர்கள் ‘ என்கிற ஒரு மௌனமொழியை அரசு கட்டவிழ்த்து விட்டிருந்தது.

இந்த நிலையைத் தொடர்ந்து பல சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக.... யாவும் இப்போ மனக்கண்ணில் வந்து போகிறது.

தமிழர்களுக்கு ஒரு துணிச்சலும் வீரமும் மிக்க தலைவன் வேண்டும். இல்லையேல் தமிழினம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிடும் என்ற ஆதங்கம் தம்மையறியாமலே ஒவ்வொருவர் எண்ணத்திலும் வீச்சமுடன் உதிக்கத் தொடங்கியிருந்த சரியான நேரமும் அதுதான் என்று நம்புகிறேன். அரசியல் கொள்கைகளில், வழிநடத்தல்களில் கருத்து வேறுபாடு கொண்டவர்களும் இல்லாமலில்லை. அது எங்கு தான் இல்லாமலும் இருந்திருக்கிறது?

அப்பொழுதிருந்தே 'தம்பி' என்று பலராலும் அன்பாக அழைக்கப்பட்ட பிரபாகரன் என்னும் தலைவனை நானும் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படத் தொடங்கிவிட்டேன். யாழ்ப்பாண சமூகக் கட்டமைப்பிற்குள் வாழும் ஒரு சாதாரணமான இளம்பெண்ணுக்கு அக்கட்டமைப்பு விதித்திருக்கும் எழுதப்படாத சட்டங்களை மீறி, அவள் செயற்படுவதென்பது அப்போது மிகவும் கடினமான காரியம். இத்தகைய சூழ்நிலையில், தாக்குதலை நிகழ்த்திய இளைஞர்களையெல்லாம் சந்திப்பதென்பது சாத்தியமே இல்லாதது என்று தெரிந்தும் அந்த நினைப்பிலும் அந்த நினைப்பில் உருவாகும் தெம்பிலும் பல காரியங்களை உற்சாகமாகச் செய்ய முடிந்திருக்கிறது.

என் மூத்த தம்பி – மொறிஸ், 1983க் கலவரத்திற்குப் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பின்னர் அவர்களுக்கும் எமக்குமான உறவு மேலும் அதிகரித்திருந்த வேளையில் ஒரு நாள் வல்வெட்டித்துறைப் பகுதிக்கு 'அண்ணர் வருகிறார்' என்ற பரபரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்டிருந்தது. என் தம்பி மொறிஸ் ம் அவரைச் சந்திப்பதற்குப் பறந்து போய் விட்டான். நானும் போனால் என்ன என்று எனக்குள் மனம் துடித்துக் கொண்டிருந்தது. வீட்டில் அதற்கான அனுமதி கடைசிவரைக்கும் கிடைக்காது என்ற துயரத்தில் தம்பி வரும்வரை நான் காத்திருந்தேன். பின்னர் என் தம்பி வந்து, அவரைச் சந்தித்த விபரத்தை ரகசியமாக எனக்கு மட்டும் சொன்னான். வேறேது தகவல்களும் கேட்கக்கூடாது என்றும் சொல்லி வைத்தான். நானுமோ பிய்த்துப் பிய்த்து விபரம் கேட்டுக்கொண்டிருந்தேன். அவன் ஒரு துரும்பும் சொல்லாமல் போய்விட்டான். அதன் பின்னர் பிரபாகரன் என்ற அந்த வீர இளைஞனைப் பற்றிய பேச்சுக்கள் எமது வீட்டில் மிகத் தாராளமாக அடிபடத் தொடங்கியிருந்தன. அவனோடு சேர்ந்திருந்து பணியாற்றியவர்களின் திறமையும் வீரமும் கூட அந்நேரம் பேசப்படத் தொடங்கியிருந்தன.

அந்த நிகழ்விற்குப் பின்னர் நடந்துவிட்ட பல சம்பவங்கள் தமிழர் வரலாற்றில் பதியப்பட வேண்டியவையாகின.

சிங்கள அரசிற்கெதிராகவும் தமிழர் பகுதியில் நிலைகொண்டு பல சித்திரவதைகளைச் செய்து கொண்டிருந்த சிங்கள இராணுவத்திற்கெதிராகவும் பிரபாகரன் தலைமையில் பல தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. அவற்றில் பல வெற்றிகரமான தாக்குதல்களாக அமைந்திருந்தன. இதனால் பிரபாகரன் தலைமையில் இயங்கிக்கொண்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றி இலங்கை முழுவதும் மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளிலும் செய்திகள் வியப்புடன் பேசப்படத் தொடங்கியிருந்தன.

விடுதலைப்புலிகள் அமைப்பினால் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும் அவரது போராற்றல் பற்றியும் அவரது அமைப்பின் ஒழுக்க நெறிகள் பற்றியும், அவரது அமைப்பில் இணைந்து போராடிய ஏனைய போராளிகள் பற்றியும் அவர்களது அர்ப்பணிப்புகள் பற்றியும் எழுதுவதென்றால் அது ஒரு மகா காவியமாகும்.

இந்திய இராணுவம் தமிழர் பகுதியில் அமைதி காக்கவென்று எமது மண்ணில் வந்திருந்த போது எவ்வளவோ அனர்த்தங்கள் நிகழ்ந்து எண்ணுக்கணக்கற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன. 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் - இந்திய இராணுவக் கெடுபிடிகள் அதிகரித்திருந்த அந்தச் சூழ்நிலையில், திடீரென என் தம்பியின் தோழர்கள் வந்து 'சுதுமலைப் பொதுக்கூட்டம்' பற்றிச் சொன்னார்கள். அந்தக் கூட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆயுதக்கையளிப்பு நிகழ்வு நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கான காரணமும் அந்த இக்கட்டான சூழலும் பற்றி தமிழ்மக்களிடையே தெளிவற்ற குழப்பமான நிலை தோன்றியிருந்தது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வியே எல்லோர் மனதிலும்.

எல்லா ஊர்களிலிருந்தும் வந்த தமிழ் மக்கள் பெருந்திரளாக அங்கு கூடியிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் தான் ‘தலைவர்’ என்றும் ‘அண்ணர்’ என்றும் பலராலும் அன்போடு அழைக்கப்படும் பிரபாகரன் அவர்களை நான் முதன் முதலாக நேரில் கண்டேன். அப்போது இராணுவ உடை தவிர்த்து, சாதாரண சிவில் உடையில் ஒரு பொதுமகன் போல அவர் காட்சியளித்தார். சுற்றிவர இந்திய இராணுவ வீரர்கள். மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மேடையில் அவரின் அருகில் அப்போது விடுதலைப்புலிகள் அமைப்பின் யாழ்.மாவட்டத் தளபதியாக இருந்த கிட்டண்ணா. அந்த மாபெரும் கூட்டத்தில் வைத்து பிரபாகரன் அவர்கள் ஆயுதக்கையளிப்பு பற்றிய விடயத்தை அறிவித்தபோது கூட்டத்தில் இருந்த சிலர் புரிந்தோ புரியாமலோ கரகோஷம் எழுப்பினார்கள். அந்த ஓசை ஏற்படுத்திய துயரம் அண்ணர் பிரபாகரன் உட்பட, அங்கு குவிந்திருந்த போராளிகளின் முகங்களை இருளடையச் செய்த காட்சி இப்பவும் என் கண்களுக்குள் நிற்கிறது.

அந்த வரலாற்றுச் சம்பவத்திற்குப் பின்னர் அவர்களது போராட்ட வடிவமே முழுமையாக மாறத்தொடங்கியிருந்த போது அவர் வெகுதூரத்திற்குப் போய்விட்டிருந்தார். மக்கள் பிரதேசங்களிற்குள் நின்று பணியாற்றிக் கொண்டிருந்த போராளிகளே அவரைச் சந்திப்பதற்கு ஏங்கிக் கொண்டிருந்த ஒரு நிலை தான் அப்போது அங்கே இருந்தது. ஒரு நாள் திடீரென்று என் தம்பி-மயூரன் காட்டிற்குள்ளிருந்து வந்திருந்தான். அமைப்பு சம்பந்தப்பட்ட அலுவலாக வந்திருப்பான் என்று ஊகித்தேன். ஓர் இரவு நீண்ட நேரம் மொறிஸ் உடன் தனிமையாகப் பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் பேசியதில் ஒரு சிறுசொல்லைக் கூட என்னால் அறியமுடியாமல் இருந்தது. அது எனக்கு ஒருவகை அவஸ்தையாகவும் இருந்தது.

பிரபாகரன் அவர்களைச் சுற்றியிருந்த காடும் காடு சார்ந்த இடமும் வரவர ஒரு மாயப்பிரதேசம் போலவே பலருக்கும் தோற்றம் காட்டத் தொடங்கியிருந்தது. அங்கு செல்வதை பலரும் ஒரு தவமாக நினைக்கத் தொடங்கியிருந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து எமது மண்ணில் நடந்துவிட்ட சம்பவங்கள் ஒன்றா இரண்டா? ஏராளம்! வடமராட்சி ‘ஒப்பிறேசன் லிபறேசன்’ முடிவுற்ற பின்னர் வடமராச்சியில் நிகழ்ந்த (1988) முதல் நூல்வெளியீடு என்னுடைய 'நிழல்கள்' சிறுகதை குறுநாவல் தொகுப்பு வெளியீடு தான் என்பதை பின்னாளில் நிகழ்ந்த சம்பவங்களின் வாயிலாக அறிந்து கொண்டேன்.

அந்தச் சமயம் வடமராட்சிப் பகுதி முழுவதும் யுத்த அழிவுகளிற்குப் பின்னரான ஒருவித மயான அமைதி தான் நிலவியிருந்தது. அந்த நாட்களை நினைக்கும் போது இப்போதும் உயிர் சிதைவது போன்ற ஒரு பதைப்பு ஏற்படுகிறது. யாரும் எதையும் செய்வதற்குச் சக்தியற்றவர்களாக அழிவுகளின், உயிரிழப்புகளின் துயரத்தில் மூழ்கிப் போயிருந்தார்கள். அவ்வப்போது இராணுவத்தினரால் அமுல்பபடுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், மேலும் மக்களை முடக்கிப் போட்டிருந்தது. எனது நூல் வெளியீடு நடைபெறவிருந்த பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தின் முன்பாக, முதல் நாள் குண்டு வெடித்த காரணத்தால் குறிப்பிட்டபடி மறுநாள் அங்கே விழாவைச் செய்ய முடியாமல் போய்விட்டது. விழாவில் பேசுவதற்காக ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விமர்சகர்களுக்கு இதுபற்றி நேரத்துடன் அறிவிக்க முடியாமல் ஊரெங்கும் ஊரடங்குச் சட்டத்தை இந்திய இராணுவம் அமுல்படுத்திவிட்டிருந்தது. இதனால் இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்த பருத்தித்துறை ‘யதார்த்தா இலக்கிய வட்டத்தினர்’ குழம்பிப் போயிருந்தார்கள். சிலருக்கு உட்பாதைகளினூடாக ஆட்களை அனுப்பி, நிலைமைகள் அறிவிக்கப்பட்ட போதும், சிவத்தம்பி மாஸ்ரர், கோகிலா மகேந்திரன் அக்கா, யோகராஜா மாஸ்ரர், தெணியான் ஆகியோர் சற்றே தூரத்திலிருந்து பிரயாணம் செய்து வந்து திரும்பிப் போனார்கள். இது எனக்கும் விழா ஏற்பாட்டாளர்களுக்கும் மிகுந்த கவலையையும் மனச்சோர்வையும் ஏற்படுத்தியிருந்தது.

விழா நடைபெறும் நாள் மேலும் ஒரு வாரம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக அனைவருக்கும் அறிவித்த பின்னர் ஒரு முக்கிய சம்பவம் நடந்தது. அச்சமயம் பருத்தித்துறைப் பொறுப்பாளராக இருந்த ரவிராஜ்(மாவீரன்) என்னிடம் ஆளனுப்பியிருந்தான். பொட்டம்மான் என்னை நேரில் வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்துள்ளதாக வந்தவரிடம் செய்தி கொடுத்தனுப்பப்பட்டிருந்தது. என் மனதிற்குள் ஒருவித பதற்றம் தலைதூக்கத் தொடங்கி விட்டது. நான் மொறிஸ்க்கு ஆளனுப்பி விடயத்தைத் தெரிவித்தேன். அதற்கு அவன், 'ஒரு பிரச்சனையுமில்லை.. அவசியம் சென்று சந்தியுங்கள்...' என்று மட்டும் செய்தி அனுப்பியிருந்தான். அன்று பின்னேரம் என் அம்மாவைத் துணைக்கு அழைத்துக்கொண்டு பொட்டண்ணாவை ('அம்மான்’ என்றும் அப்போது அவரைப் பலரும் அழைப்பார்கள்) சந்திப்பதற்காக பஸ்ஸில் புறப்பட்டேன். வல்வெட்டித்துறைப் பகுதியில் தான் அந்தச் சந்திப்பிற்கான இடம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. நான் முதன்முதலாக நேரில் பொட்டண்ணாவைச் சந்தித்ததும் இந்த இடத்தில் தான். நானும் அம்மாவுமாகப் போய்ச் சேர்ந்த இடத்திற்கு சில நிமிடங்களிலேயே அவரும் வந்து சேர்ந்தார்.

அவர், நடக்கவிருக்கும் எனது புத்தக வெளியீட்டு நிகழ்வு பற்றி விபரமாக விசாரித்தார்.

'இந்தக் காலகட்டத்தில் இந்த மண்ணிலிருந்து யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிற துணிச்சலான படைப்புகள் கட்டாயம் வரவேணும். அதிலும் ஓர் இளம்பெண்ணான நீங்கள் அதைத் துணிவாகச் செய்யுறீங்கள் என்கிறது எங்களுக்கு சந்தோசம். உங்கட இந்தப் புத்தக (நிழல்கள்) வெளியீட்டு நிகழ்விற்கு எங்களிட்டையிருந்து ஏதும் உதவிகள் தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கோ....' என்று சொல்லிவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார். எனக்கு என்ன கேட்பது என்று தெரியாமல் பதற்றத்தோடு அவரை நோக்கினேன்.

இது நடந்தது 1988ன் நடுப்பகுதியில். 1987 யூலை மாதம் தான் நான் எனது தொழிற்கல்வியை முடித்துக் கொண்டு யாழ்.அரச செயலகத்தில் பணியாளராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். நூல் வெளியீட்டிற்கான போதிய பொருளாதார வசதி இல்லாத ஒரு சூழலில், நான் நினைத்தே பார்த்திராத ஒரு வேளையில் ‘பருத்தித்துறை யதார்த்தா இலக்கிய வட்டத்தினர்’ தாமாகவே முன்வந்து எனது சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கப் போகிறார்கள் என்ற செய்தியை எனக்குத் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலை தெரிந்து தானோ என்னவோ அம்மான் அடுத்த விடயத்தைத் தொட்டுப் பேசினார்.

'இந்தப் புத்தக வெளியீடு சார்பாகப் பொருளாதார வசதிகள் ஏதும் தேவையென்றால் நாங்கள் செய்கிறம்...' என்றார். மறுகணமே எனக்கு சந்தோச அதிர்ச்சியில் நாக்குளறத் தொடங்கி விட்டது. நான் ஒரு துளியும் எதிர்பார்த்திராத விடயம் அது. நெகிழ்ச்சியில் வார்த்தைகள் தொலைந்து போன அந்தக் கணங்கள் இப்பவும் ஞாபகத்தில் இருக்கிறது.

நான் பேசாமடந்தையாகவே இருந்தேன். அம்மா என்னைப் பார்த்தா. நான் அம்மாவைப் பார்த்தேன். அவ்வளவு தான்!

'நாங்கள்...செய்கிறம்...' என்பதில் இருக்கும் ‘நாங்கள்' என்பது எங்கோ ஒரு காட்டிற்குள் இருக்கும் அண்ணரின் இதயத்திலிருந்து புறப்பட்டு, அம்மானின் வாய் வழியாக வந்த செய்தி என்பதை பின்னர் கிடைத்த தகவலினூடாக நான் அறிந்து ஆச்சரியப்பட்டேன்! அன்றைய அந்த நெருக்கடியான சூழ்நிலையில் அம்மானின் அந்த வார்த்தைகள் என் கண்களில் நீரை வரவழைத்தது. அதற்குக் காரணமாக இருந்த, பிரபாகரன் என்ற அந்த ஆத்மாவை ஒரு வீரனாக மட்டுமல்ல, உயர்ந்த கலைஞனாகவும் என்றைக்கும் நான் போற்றுகிறேன்!

மறுநாள் என் தம்பியின் தோழனும், போராளியுமான ரவிராஜ் என்னிடம் சில தொகைப் பணத்தைக் கொண்டு வந்து தந்திருந்தான். அதனைத் தொடர்ந்து பருத்தித்துறை யதார்த்தா இலக்கிய வட்டத்தினரின் ஒழுங்கமைப்பில் குறிப்பிட்ட தினத்தில் விழா சிறப்பாக நடைபெற்றது. அம்மானால் அனுப்பப்பட்டிருந்த போராளிகள் சிலரும் அங்கு பார்வையாளர்களாக வந்திருந்தார்கள். விழா முடிவுற்ற பின்னர், அங்கு விற்பனையான புத்தகங்களிலிருந்து கிடைத்த நிதி மூலம் அவர்கள் உதவிய நிதியை அவர்களிடமே நன்றியுடன் கையளித்தேன். என்றைக்கும் மறக்கமுடியாத அந்த சம்பவத்தின் பின்னர், தலைவர் பிரபாகரன் அவர்களும் அவரின் வழிகாட்டலில் தொடரும் அவரது தோழர்களும் என்னுள் ஒருபடி மேலே உயர்ந்து காட்சியளிக்கத் தொடங்கினார்கள்.

அவற்றிற்குப் பின்னர் எவ்வளவோ நடந்து விட்டிருந்தன. அவர்கள் நானாகவும் நான் அவர்களாகவும் என் மனதிற்குள் ஓர் இயல்பான ஐக்கியத்தோடு வாழ்ந்ததாகவே இப்போதும் உணர்கிறேன். விடுதலைக்காகத் தம் உயிரையே அர்ப்பணித்துப் பணியாற்றியவர்களில், கடைசிவரை வாழ்ந்தவர்கள், இறந்துபோனவர்கள், பிரிந்தவர்கள், பழகியவர்கள் எல்லோரும் என் உடன்பிறப்புகளாகவே இப்போதும் தோன்றுகிறார்கள். எத்தனை ஆண்டுகள் கடந்து போனாலும் அவர்களின் அன்பும், பரிவும், தோழமையும் பற்றி நினைக்கும் போதெல்லாம் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் துயரமும் கலந்ததொரு இனிமையான வேதனையை அவை தருகின்றன.

மறுவருடம், எனக்கு திருமணம் நிகழ்ந்தேறிவிட்டது. நாம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த வீடு, 1990ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த கோட்டைத் தாக்குதலின் போது அரச விமானப்படையினரின் தாக்குதலில் தரைமட்டமானது. அதன் பின்னர் எல்லாவற்றையும் போட்டதுபோட்டபடி விட்டுவிட்டு, லண்டன் வந்து சேர்ந்த போது, சொந்த மண்ணைப் பிரிந்து வந்துவிட்ட ஏக்கத்திலும் துயரத்திலும் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதே வேளை, நான் பயணம் வெளிக்கிடும் சமயம், என் மூத்த சகோதரன் சங்குப்பிட்டி, தாண்டிக்குளத்தருகில் இராணுவ ஷெல் தாக்குதலில் காலை இழந்துவிட்டிருந்த கொடியநிலையும் அதுபற்றிய நினைவுகளும் மேலும் எனக்கு அதிக மனவலியைத் தந்து கொண்டேயிருந்தன. அச்சமயம் மனம் தாளாமல் நான் எழுதிய ஒரு கதை 'அக்கினியில் கருகும் ஆத்மாக்கள்'. பிரான்ஸிலிருந்து அப்போது வெளிவந்துகொண்டிருந்த ‘பாரிஸ் ஈழநாடு’ பத்திரிகை நடாத்திய ஒரு சிறுகதைப் போட்டியில் அக்கதைக்கு முதற்பரிசு கிடைத்த செய்தி தாயக பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தன. அந்தப் பத்திரிகைச் செய்தியை காலமாகிவிட்ட திருச்செல்வம் அண்ணை (புலோலி வாசிகசாலை பொறுப்பாளர், வீரகேசரி நிருபர்) வெட்டி, எனக்கு தபாலில் அனுப்பி வைத்திருந்தார். அதே செய்தியைப் பார்த்த பின்னரோ என்னவோ, வன்னிக் காட்டிற்குள் அண்ணருக்கு அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த என் தம்பி- மயூரன் ஒரு நான்கு வரிக்கடிதம் தபாலில் அனுப்பியிருந்தான். அதில் 'இளையக்கா, நீங்கள் நாட்டை விட்டுப் போனதைப் பற்றி அண்ணர் என்னிடம் கூறிக் கவலைப்பட்டார். நீங்கள் இங்கிருக்க வேண்டியவர் என்றார்' என்று எழுதியிருந்தான். அதைப் பார்த்ததிலிருந்து நான் அப்படியே மனம் நொருங்கிப் போனேன். தனிமையிலிருக்கும் போது அதை நினைத்து எத்தனையோ தடவைகள் அழுதிருக்கிறேன். அதேவேளை என்னையறியாத ஒரு பரவசமும்.. தலைவர் என்னை இவ்வளவு ஞாபகத்தில் வைத்திருக்கிறார் என்ற பரவசம் அது!

அந்த ஏக்கமும் துயரமும் என்னை முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். பல சமயங்களில் அது விடயமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிப் போயிருந்தேன் என்பது தான் உண்மை.

1993ல் தம்பி – மயூரன் தவளைப்பாய்ச்சலில் மாவீரனாகிப் போனான். அதன் பின்னரான வலியை வார்த்தைகளில் வடிக்க முடியாமல் அல்லாடினேன். அதன் பின்னர், நான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்த பல விடயங்களை என்னால் எழுதவே முடியாமல் போய்விட்டது. சிந்திக்கும் திறன் வரட்சி பெற்றுவிட்டது போல் உணர்ந்தேன். அப்போது தான் 2003ம் ஆண்டில் குறிப்பிட்ட சில மாதங்கள் சமாதான காலமாக தாயகத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நான் என் அதிர்ஷ்டமானதும் அதிர்ஷ்டமற்றதுமான காலமாகவே இப்பவும் மனதிற்குள் நினைக்கிறேன். சகோதரர்களின் இழப்பிற்குப் பின்னர், மீண்டும் அந்த மண்ணில் கால் வைப்பதற்குத் தைரியமில்லாமல் இருந்த எனக்கு, அந்தச் சமாதானக் காலகட்டத்தில் சாத்தியமாகப்போகும் பயணம் பற்றி எதையும் கற்பனை பண்ண முடியாமலே இருந்தது. என் அண்ணனும், என் தம்பியர்களும் அவர்களின் இன்னுயிர்த் தோழர்களுமில்லாத அந்த மண்ணை நான் எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்ற திகைப்பும் அச்சமும் என்னை உள்ளுரப் புரட்டிப் போட்டிருந்தது. நான் என் மண்ணில் கால் பதிக்கும் போது அவர்கள் யாருமற்ற அந்த வெறுமையை என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியாமல் இருந்தது. ஆயினும் நடப்பது நடக்கட்டும் என்ற ஒரு வெற்றுத் துணிச்லோடு தான் நான் என் கணவர் பிள்ளைகளோடு புறப்பட்டேன். அதற்கான ஒரே காரணம் வன்னிக்குள் ஒரு தடவையேனும் கால் வைக்க முடியும் என்ற துளி நம்பிக்கை மட்டும் தான்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப்பகுதியில் இருக்கிறது என் ஊர். அந்த மண்ணில் கால்வைத்த போதே என் நெஞ்சம் குமுறத் தொடங்கிவிட்டது! நான் பிறந்த மண்ணும், நான் வாழ்ந்த வீடும் கடந்தகால நினைவுகளால் சுட்டெரித்து, கண்ணீரில் என்னை மூழ்கடித்தது. அங்கிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்கள், நினைவுத்தூபிகள், உருக்குலைந்து கொண்டிருக்கும் பிரபாகரனின் வீடு, உருமாறிப்போன நிலங்கள், சிதறியும் புதிதாக உருவாகியுமிருக்கும் வீடுகள், மரங்கள், காணிகள், கடற்கரை.... என்று எல்லாவற்றிலும் கடந்து போன நினைவெச்சங்களைப் பூசிப் பூசி எதெதையோ தேடிப் பார்த்துக்கொண்டு திரிந்தேன்.

திடீரென்று ஒருநாள், வன்னியில் அப்பொழுது ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரருடன் தொடர்பு கிடைத்தது. அந்தத் தொடர்பில் தான் எமது வன்னிப்பயணமும், தலைவர் பிரபாகரன் அவர்களை நாம் சந்திக்கப்போகும் அந்த நாளும் தீர்மானிக்கப்பட்டது. மறுநாளே, எம்மை அழைத்துச் செல்வதற்காக வன்னியிலிருந்து ஒரு வாகனம் வருகிறது என்றும் ஆயத்தமாக இருக்கும்படியும் அறிவிக்கப்பட்டிருந்தது.

நான் எப்பொழுதோ சந்திப்பதற்கு ஆசைப்பட்டிருந்த, ஏங்கியிருந்த அந்தக் காலம் கடந்து பதினைந்து வருடங்களிற்குப் பின்னர் அதே தலைவர் பிரபாகரன் அவர்களைக் காணப்போகிறேன் என்ற உணர்வு என்னுள் ஒருவித மகிழ்ச்சியையும் அதேவேளை ஒருவித பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அவரை நான் முதற்தடவையாகச் சந்திக்கப்போகும் அந்த வேளையில், மாவீரர்களின் சகோதரியாகவா அல்லது ஒரு படைப்பாளியாகவா அல்லது அவரின் திறமைகளையும் பண்புகளையும் இரசிக்கும் ஓர் இரசிகையாகவா, அல்லது அவர்களுக்கு விசுவாசமாகவும் நேசமாகவும் இருந்த ஒரு சகோதரியாகவா சந்திக்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

முடிவில் ஒரு படைப்பாளியாக, அவருக்குப் பிடித்தமான, ஆழ்ந்த வாசிப்பிற்கு உகந்ததான ஒரு கனமான நூலை அவருக்குப் பரிசளிப்பதென்ற முடிவோடு பயணத்திற்குத் தயாரானேன். அந்தப் பிரயாணம் எந்தப் பிரச்சனையுமில்லாமல் குறிப்பிட்டபடி குறிப்பிட்ட நாளில் அமைந்தது.

வன்னிமண் எங்களை மிகுந்த அன்போடும் மரியாதையோடும் வரவேற்றுக் கொண்டது. இது எங்கள் மண், இவர்களெல்லாம் எம்மவர்கள் என்று நினைக்கும் போதே ஒருவித பரவசம் நிறைந்த உற்சாகம் என்னையறியாமலே ஏற்பட்டது. வன்னி மண்ணின் இராச்சியம் என் கண்களை ஆச்சரியத்துடன் அகல விரிய வைத்தது! வன்னியை ஆண்ட பண்டாரவன்னியன் காலத்தில் கூட இத்தனை கரிசனையோடு ஒவ்வொரு துறைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்திருக்குமா? இத்தனை கட்டுக்கோப்புடன் ஓர் அரசபரிபாலனம் நடந்திருக்குமா? இத்தனை நேர்த்தியான ஒரு மகளிர் இராணுவப்படையணி இருந்திருக்குமா? என்ற கேள்விகளும் பிரமிப்பும் எனக்குள் ஏற்பட்டது. ஒவ்வொரு துறைகளும் வெகு நேர்த்தியாக இயங்கிக் கொண்டிருந்தன. செல்லுமிடமெங்கும் அந்தந்தத் துறைகளின் செய்காரியங்களும் அவற்றின் நேர்த்தியும் வாயைப் பிளக்க வைத்தன! உள்நாட்டு வளங்கள் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு, ஓர் அழகான புதிய உலகம் அங்கு உருவாகியிருந்தமை கண்டு வியந்தேன்! பிரபாகரனும் தோழர்களும் கனவு கண்ட அந்தப் பொன்னான தமிழீழம் எப்படியிருக்கும் என்பதற்கு உதாரணமாக அதன் அடிப்படை வடிவம் அங்கே உருவாகியிருந்தமை கண்டு அதிசயித்தேன்!

எமக்கான தங்குமிடம், உணவு, வாகனவசதி யாவும் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களின் காரியதரிசியும் ஊடகத்துறைப் பொறுப்பாளராகவுமிருந்த தயா மாஸ்ரர் அவர்களால் கரிசனையோடு கவனிக்கப்பட்டது. தமிழ்செல்வன் அவர்களின் அலுவலகத்தின் வெளியே ஒரு அழகான நீண்ட காற்றோட்டமான கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. அங்கே பலரையும் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அரசியல்துறைச் செயலகத்தில் நான் நின்றிருந்த சமயம் அங்கு வந்து என்னைச் சந்தித்துக்கொண்ட கலைஞர்களில் கவிஞர் நாவண்ணன், கருணாகரன், நிலாந்தன், தமிழ்க்கவி ஆகியோரை இன்றைக்கும் மறக்கமுடியவில்லை.

நான் சென்று பார்த்த பல முக்கியமான பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், புலிகளின்குரல் வானொலி ஆகியவை என்னை அப்படியே இழுத்து வைத்திருந்தன என்று தான் சொல்ல வேண்டும்!

கலைபண்பாட்டுக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞர்களில் துளசிச்செல்வன் என்னை அழைத்துச் சென்று உட்காரவைத்து, அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வேற்றுமொழித் திரைப்படங்களை திரையில் ஓடவிட்டு எமக்குக் காண்பித்தார். அது சம்பந்தமான எனது கேள்விகளிற்கெல்லாம் துளசிச்செல்வன் அழகாகப் பதிலளித்தார். அவர்களது தொழில்நுட்பப் பணிகளிற்கான கல்வி, பயிற்சி வகுப்புகள், மற்றும் தொழில்சாதனங்கள் என எல்லா வசதிகளையும் தலைவர் மிகுந்த கவனத்துடன் தமக்கு அளிப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார்கள். எனக்கு அந்தக் கலைக்கூடங்களை விட்டுப்பிரியவே மனமில்லாமல் இருந்தது.

அது போல் புலிகளின் குரல் வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த அத்தனை ஆண், பெண் கலைஞர்களும் எம்மை இதமாக வரவேற்று, இரண்டு மணிநேரத்தை எமக்காக ஒதுக்கி, எம்முடன் ஒன்றாக உட்கார்ந்து ஒரு சிறு விருந்துபசாரமே பண்ணிவிட்டார்கள். நான் அப்போது இலண்டனிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் ‘ஐ.பி.சி தமிழ்’ (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) வானொலியில் சில நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிக் கொண்டிருந்தேன் என்பதனால் அவர்கள் என்னை ஒரு படைப்பாளியாக மட்டுமல்லாமல், ஒரு வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் வரவேற்றுக் கொண்டு உரையாடலைப் பகிர்ந்து கொண்டார்கள். அங்கு அந்த வானொலி நிகழ்ச்சிகளை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்பதனையும் அதற்காக தலைமை எத்தனை வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது என்பன பற்றியும் மிகுந்த பொறுப்புணர்வோடு ஒவ்வொருவரும் விளக்கினார்கள். அப்போது புலிகளின்குரல் வானொலிக்கு ஜவான் என்று அழைக்கப்படும் தமிழன்பன் அவர்கள் பொறுப்பாக இருந்தார். பின்னர் ஜவானைச் சந்தித்ததும் அவர் எம்மை நாயாற்றுப்பாலம் வரை அழைத்துச் சென்று, அந்தவிடத்தில் நடாத்தப்பட்ட வெற்றிச்சமர் பற்றி மிகுந்த களிப்போடு விளக்கியதும் இன்றைக்கும் என் ஞாபகத்தில் அடிக்கடி வந்து போகும் காட்சிகள்!

தமிழ்ச்செல்வன் அவர்களது அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த சமயம், ஒரு மாலை நேரம், இந்தியாவிலிருந்து அங்கு வந்து தங்கியிருந்து போராளிகளுக்கு கல்வி கற்பித்துக்கொண்டிருந்த ஒரு தமிழ் பேராசிரியரிடம் நான் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது, திடீரென்று தயா மாஸ்ரர் எம் முன்னால் வந்து நின்றார். 'தலைவர் வந்து நிற்கிறார். வரட்டுமாம். உடனே வெளிக்கிடுங்கோ' என்றார். சந்தோஷ அதிர்ச்சியில் ஒருகணம் நெஞ்சுத் தண்ணீர் வற்றிவிடும் போலிருந்தது! அரக்கப்பரக்க வெளிக்கிட்டோம். மனதிற்குள் என்னையறியாத ஒருவித பதற்றம். மறுகணமே எம்மை அழைத்துச் செல்வதற்கான வாகனம் வந்து நின்றது. புறப்படும் போது எமது புகைப்படக்கருவி, ஒளிப்பதிவுக்கருவி ஆகியவற்றையும் எம்மோடு எடுத்துச் சென்றோம். இலேசாக இருள் கவிந்து கொண்டிருந்தது. நான்கைந்து வீடுகள் ஒன்றாக இணைக்கப்பட்டது போல் தோன்றிய ஒரு நீளமான பெரிய வீட்டின் முன்னால் இறக்கப்பட்டோம். அங்கே உள்நுழைந்த போது சில போராளிகள் நிலையெடுத்தபடி நின்றிருப்பது தெரிந்தது. அவர்களில் சிலர் எமது புகைப்படக்கருவி, ஒளிப்பதிவுக் கருவி எல்லாவற்றையும் வாங்கி உள்ளே வைத்துவிட்டார்கள். நான் திகைத்துப் போனேன். 'இல்லை அது வேணும்...' என்று மெதுவாக தயக்கத்துடன் கூறினேன். அவர்கள் எதுவும் பேசவில்லை. வாயை மறைத்திருந்தார்கள். ஆனால் அதற்கு அனுமதியில்லை என்பது போல் தலையை மட்டும் ஆட்டி, சைகையால் தெரிவித்தார்கள். எனக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. அவர்கள் யாவரும் பொட்டம்மானின் புலனாய்வுப் படையணியினர் என்று பின்னர் நடந்த சம்பவமொன்றில் அறிந்து கொண்டேன்.

இன்னுமொரு வாகனம் அந்தக் கட்டடத்திற்கு வந்து சேர்ந்தது. எம்மை அதில் ஏறச் சொன்னார்கள். ஐந்து நிமிடங்களில் ஒரு பூந்தோட்டத்திற்குள் நுழைவது போல் தோன்றியது. நீளமான அந்தப் பூங்காவின் மத்தியில் மினுமினுவென்று ஒரு கண்ணாடிக் கட்டடம். அது தான் வெளிநாட்டிலிருந்து வரும் அரசியல் அதிகாரிகளைச் சந்திக்கும் கட்டடம் என்று பின்னர் அறிந்து கொண்டேன். கட்டடத்தின் வாயிலருகில் வாகனம் போய் நின்றது. திரும்பிய பக்கமெல்லாம் வண்ணவண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கின! தூய்மையும் அழகும் கலந்த ரம்மியமான அந்தச் சூழலில் வார்த்தைகள் தொலைந்து போயின!

நாம் உள்ளே நுழைகிற தருணம், எமக்குப் பின்னால் வாகனச் சத்தம் கேட்டது. கறுப்புக் கண்ணாடிகளால் மூடப்பட்டதொரு வாகனம் வந்து வாசலில் நின்றது. பின்னால் அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள். கறுப்பு உடைகளுடன் ஆயுதம் தாங்கிய போராளிகள் மளமளவென்று குதித்து இறங்கி நிலையெடுத்து நின்று கொண்டார்கள். நான் திகைத்துப் போய் அப்படியே வாசலில் நின்றிருந்தேன். எங்கிருந்தோ மேலும் சில போராளிகள்; வந்து குவிந்து கொண்டார்கள். அந்தக் கூட்டத்தின் நடுவில் தலைவர். சிரித்தவாறே உள்ளே நுழைந்தார்.

'வாங்கோ... என்ன நிக்கிறியள். உள்ளை வாங்கோ.. இருங்கோ...' என்றவாறே உள்ளே போடப்பட்டிருந்த மெத்தை இருக்கைகளில் எம்மை அமரச் செய்து தானும் எம் முன்னால் அமர்ந்து கொண்டார். தலைவர் சாதாரண சமாதான கால உடையுடன் தான் வருவார் என்று எதிர்பார்த்திருந்த எனக்கு அவரின் இராணுவ உடையுடனான அந்தக் கம்பீரத் தோற்றம் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவுமிருந்தது. அவரை ஒரு சிறந்த வீரனாக என் மனதிற்குள் எப்படி நான் உருவகித்திருந்தேனோ அதுபோலவே மிகுந்த உற்சாகத்தோடும் தீரக்களையோடும் அவர் என் முன்னால் கம்பீரமாகக் காட்சி தந்து கொண்டிருந்தார். கூடவே தமிழ்ச்செல்வன் அவர்களும் வழமையான அவரது வெண்மை ததும்பும் புன்னகையோடு வந்து அமர்ந்து கொண்டார். முதலில் என்ன பேசுவது, எங்கே தொடங்குவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த என்னை மிகவும் குசாலாகச் சிரித்துக் கொண்டு 'எப்பிடி பயணம்? எல்லாம் இங்கை வசதியாக இருக்கோ..' என்று வெகு சாதாரணமாகக் கேட்டு கதையைத் தொடங்கினார் தலைவர். வெகு இயல்பாகவும் பக்கத்து வீட்டுக்காரரோடு பத்தும்பலதும் பேசிச் சிரிப்பது போலவே அவருடனான உரையாடல்கள் அமைந்திருந்தன. அவரின் வெளிப்படையான இயல்பான பேச்சு மனதிற்குள்ளிருந்த பதற்றைத்தையெல்லாம் ஒருநொடியில் ஓடிமறையச் செய்துவிட்டது. லண்டன் நிலவரங்கள் பற்றியும் மிகவும் சிரத்தையுடன் விசாரித்துப் பேசினார். லண்டனில் அப்போது தேசியப் பணிகளிற்குப் பொறுப்பாக இருந்தவர்கள் பற்றியும் பேச்சுகள் வந்து போயின. பேச்சிற்கிடையே தேநீர், பலகாரங்கள் எல்லாம் சுடச்சுட வந்து கொண்டிருந்தன.

'இதெல்லாம் யார் செய்கிறார்கள் சுடச்சுட வருகுது..' என்று கேட்டேன்.

'உவங்கள் தான்... எங்கை... இன்னும் கொஞ்சம் கொண்டு வாருங்கோ...' என்றவாறே சிரித்துக்கொண்டு பின்னால் திரும்பினார்.

மனது அதீத மகிழ்ச்சியில் நிரம்பியிருந்ததாலோ என்னவோ எதையும் சுவைத்துச் சாப்பிடக்கூடிய மனநிலை அப்போதெனக்கு இருக்கவில்லை. அடிக்கடி பேச்சினிடையே 'ஆறப்போகுது சாப்பிடுங்கோ..' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் அவருடன் பேசுவதையே அதிகம் விரும்புபவளாக கேள்வி மேல் கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தேன். கடைசிக் காலங்களில் அவரோடு இருந்த என் தம்பி – மயூரன் பற்றிக் கேட்டேன். அவனைப் பற்றி பல விடயங்களைச் சொல்லிச் சிரித்தார்.

'அவன் பூநகரித் தாக்குதலுக்குப் போக முதலே என்னை அதுக்கு விடுங்கோ... இதுக்கு விடுங்கோ எண்டு ஆக்கினை பிடிச்சுக் கொண்டுதான் இருந்தவன். நான் இப்ப அவசரப்படாதை பிறகு பார்க்கலாம் எண்டு கடத்திக் கொண்டேயிருந்தன். எங்கையாவது நான் வந்து இருந்தால் என்ரை கண்ணுக்கு முன்னாலை வந்து நிண்டு எதையாவது நோண்டிக்கொண்டு நிற்பான். கடைசியா சரி எண்டு அவன்ரை ஆசைக்காகத் தான் போக விட்டனான்..' என்று கூறிவிட்டு சில கணங்கள் மௌனமானார்.

அவர் குறிப்பிட்டது ‘பூநகரி தவளைப் பாய்ச்சலை’ என்று எனக்கு விளங்கியது. அந்தப் பேச்சினிடையே பின்பு தம்பி- மொறிஸ் ஐப் பற்றியும் பல விடயங்கள் பேசினார்.

'கடைசி வரைக்கும் அவனைச் சந்திக்க முடியாமலே போயிட்டுது... ஒரு கட்டத்தில இங்கால வாறதாத்தான் இருந்தது. அதுக்கிடையில....' என்று வசனத்தை முடிக்காமலே என்னைப் பார்த்தார்.

'அவங்கள் சொன்னதைச் செய்திட்டாங்கள். நான் இன்னும் செய்யேல்லை. அவங்களுக்குக் கிட்ட நிக்கிற தகுதி எனக்கின்னுமில்லை...' இலேசான துயரத்துடன் அவர் அதைச் சொல்லும் போது குரல் தாழ்ந்து போயிருந்தது. அந்த வரிகளின் பின்னர் அங்கு சில விநாடிகள் மௌனம் நிலவியது. தமிழ்ச்செல்வன் கதையை மாற்றுவதற்காக வேறு ஏதோ என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். என் படைப்பு முயற்சிகள் பற்றிய பேச்சு மெதுவாக எழுந்தது.

பின்னர் நான் அவருக்காகவென்றே எடுத்துச் சென்றிருந்த ஈழத்து, புலம்பெயர்ந்த படைப்பாளிகளினது தொகுப்பு நூலை அவரிடம் கையளித்தேன். அவர் அதனை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் ஈழத்துப் படைப்புகள் பற்றியும் தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடுகள் பற்றியும் பேசினார்.

'ஒரு பிரச்சனையைத் தொட்டு ஒரு படைப்பை உருவாக்குபவன், அந்தப் பிரச்சனைக்கான தீர்வையும் முன்வைக்க வேணும்....இல்லாட்டில் அதை இன்னோர் தருணத்திலாவது வெளிப்படுத்த வேணும்...' என்றார்.

நான் எதுவும் கூறாமல் அவர் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தேன்.

விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழகம் பற்றி நான் பேச்செடுத்த போது கவிஞர் நாவண்ணன் அவர்களின் படைப்புத்திறன், புதுவை இரத்தினதுரை அவர்களின் செயற்பாடுகள், அவர்களுக்கிடையேயான உறவுநிலை பற்றியெல்லாம் நகைச்சுவையோடு உரையாடினார். மேலும் தமிழர் கலாச்சாரத்தில் பெண்களின் நிலை பற்றியும் சிலவிடயங்கள் பேச்சில் வந்து போனது. இளையோரின் கல்வி, கலைவளர்ச்சி என்பவை சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது என்ற தொனியில் சில விடயங்கள் பேசிக்கொண்டிருந்தார். இடையில் நகைச்சுவையாக, அவற்றில் தான் செலுத்தும் கவனத்தை விட தன் மனைவி செலுத்தும் கவனம் அதிகம் என்றும் தன் பிள்ளைகளின் படிப்பில் அதிக கவனம் செலுத்திக் கவனிப்பவர் தன் மனைவிதான் என்றும் சொன்னார்.

நீண்ட நேர உரையாடல், சிந்தனை, சிரிப்பு, நகைச்சுவை, துயரம் என்ற உணர்வுகளோடு நகர்ந்து, கடைசியில் புகைப்படம் எடுப்பதில் போய் நின்றது.

'எமது போட்டோ கமரா, வீடியோக் கமரா எல்லாவற்றையும் வேறொரு இடத்தில் வாங்கி வைத்துவிட்டார்கள்...' என்று கவலையுடன் மெதுவாகச் சொன்னேன். உடனே விருட்டென்று இருக்கையை விட்டு எழுந்தார்.

'டேய் என்னடாப்பா? என்ன செய்திருக்கிறியள்? ஓடிப்போய் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வாங்கோடா...' என்று உரத்த குரலில் அதட்டினார், ஒருவித செல்லக் கோபத்தோடு!

நான் திடுக்குற்றுப் போனேன். நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு உரிமையோடு இந்த விடயத்தைக் கையாள்வார் என்று.

அடுத்த நிமிடமே எமது புகைப்பட, ஒளிப்பதிவுக் கருவிகள் எம் முன்னால் இருந்தன.

தமிழ்ச்செல்வன் எங்களுடைய புகைப்படக்கருவியை வாங்கிப் படம் எடுக்கத் தொடங்கினார். தயாநிதி மாஸ்ரர் எங்கள் வீடியோ கமராவை வாங்கி ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினார்.

தலைவர் சிரித்தவாறே பகிடியாக, 'பெரிய பெரிய தளங்களுக்குப் பொறுப்பானவர்கள் எல்லாம் இண்டைக்கு கமராவோட நிக்கினம்' என்றார். சிரிப்பொலி அந்த மண்டபத்தை நிறைத்துக் கொண்டிருந்தது.

என் சின்னமகன் அந்த நேரம் பார்த்து, குளியலறைக்குள் நுழைந்திருந்தான். அவனுக்கு வன்னிக் காலநிலை மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்ததால் ஏற்கனவே காலையில் வாந்தி எடுத்திருந்தான். அன்றும் அந்த சமயத்தில் அதற்காகத்தான் போயிருந்தான் என்று நான் மனதினுள் யோசித்தேன். அவன் திரும்பி வரும் போது 'பரவாயில்லை ஆற அமர அலுவலை முடிச்சுக் கொண்டு வாங்கோ. நாங்கள் காத்திருக்கிறம்..' என்றார் தலைவர் பகிடியாக.

பின்னர் அவன் வாந்தியெடுக்கிறான் என்றறிந்ததும் உடனே 'பிள்ளையை பொன்னம்பலம் ஹொஸ்பிட்டலுக்கு கூட்டிப்போங்கோ...' என்று தமிழ்ச்செல்வனிடம் கட்டளையிட்டார்.

நான் 'பரவாயில்லை....நாங்கள் போகும் போது அதில் போய் காட்டிவிட்டுப் போகிறோம் ...' என்று அவரைத் தடுத்தேன். அண்ணர் அவனுக்கு அருகில் வந்து அவனின் தலையைத் தொட்டுத் தடவி,

'காய்ச்சல் காய்கிறதா? என்ன நடந்தது? இரவில ஏதும் நுளம்புத் தொல்லையோ?' என்றவாறே 'ஏண்டாப்பா அங்கை போய் அவயளின்ரை நுளம்பு வலையை திரும்ப ஒருக்கால் பார்த்து செக் பண்ணுங்கோ...' என்று பின்னால் திரும்பிச் சொன்னார்.

அன்றைய மாலைப்பொழுது அவருடன் அப்படியே இனிமையாகக் கழிந்து போனது. எமக்காக ஏற்கனவே தரப்பட்டிருந்த அரசியல்துறை உப பொறுப்பாளர் தங்கன் அவர்களின் ஜீப் வண்டி வாசலில் வந்து நின்றது. நிர்மலன் சாரதி இருக்கையிலிருந்து இறங்கி புன்னகைத்தவாறே எம்மை வரவேற்றார்.

நாங்கள் வாகனத்தில் ஏறும் போது ஒரு கனவுலகிலிருந்து விடுபடுவது போல் தோன்றியது!

தாய் மண்ணிலும் மக்களிலும் மாவீரர்களிலும் அளவிலாப் பற்றும், அன்பும், நட்பும், கொண்ட ஒரு நேர்மையான தலைவனை விட்டுப் பிரிகிறேன் என்ற துயரம் மனதிற்குள் பொங்கிப் பிரவாகித்துக் கொண்டிருந்தது! நான் உயிராய் நினைக்கும் என் தாய்மண்ணின் ஒளிக்கற்றையொன்று கழன்று போவது போல் மனதிற்குள் வெறுமையாய் நின்றுகொண்டிருந்தேன்!

அண்ணர் கையை அசைத்தவாறே புறப்படுவது தெரிந்தது....!

அழியா நினைவுகளோடு..

சந்திரா இரவீந்திரன்

994477_892580070770524_79797642935818060

 

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைபிட்க்கு    BLUE BIRD.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.