Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

‘சாத்தானின் மைந்தன்’ - இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (லண்டன்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘சாத்தானின் மைந்தன்’

- இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (லண்டன்)

hitler-and-eva-300x165.jpg

29.04.1945 (இரவு)

தூரத்தில் கேட்டுக்கொண்டிருக்கும் பீரங்கிகளின் வெடிச்சப்தம் அதல பாதாளத்தில் அமைக்கப்பட்டிருந்த பங்கரில் வாழும் அந்த நாயை மிகவும் பயப்படுத்திவிட்டது.

வெளியில் ஓடியாடித்திரிந்த அந்த அல்ஸேஸியன் நாய் கடந்த சில மாதங்களாக இந்த பங்கரில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இயற்கை வெளிச்சத்தைக் கண்டே எத்தனையோ மாதங்களாகி விட்டன.

பங்கரின் குறுகிய பாதைகளில் அங்குமிங்குமாகத்தெரியும் சின்ன வெளிச்சங்கள் ஏதோ ஒரு குகையில் இருட்டில் அகப்பட்ட உணர்வையே கொடுப்பதால் அந்த அல்ஸேஸியன் நாய் என்னேரமும் ஏதோ ஒரு பயத்தில் மனமுடைந்து போயிருக்கிறது.

வெளிச்சமற்ற சவப்பெட்டியில் வாழ்வது போலிருப்பதாக அந்த நாய் உணர்கிறது. வெளியிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கும் பீரங்கிச் சத்தங்களும் குண்டு வெடிப்புக்களும் நாயை மிகவும் குழப்பி விட்டது.

கடந்த சில நாட்களாக அந்தப் பீரங்கிகளின் சப்தம் பங்கரையண்மித்து வருவதாக அது புரிந்து கொண்டதால் தனது எஜமான் ஹிட்லரைப் பயத்துடனும் பரிதாபத்துடனும் உற்றுப்பார்த்தது.

ஹிட்லர் சோர்ந்து, துவண்டு போயிருக்கிறான்.

நான்கு வருடங்களுக்கு முன் லண்டன் மாநகரத்தைக்குண்டு போட்டு எரியப் பண்ணியபோது அவனடைந்த குதூகலம் இப்போது அவனின் முகத்திலில்லை.

ஹிட்லரின் தலை நகர் பேர்லின். அனுமான் எரித்த இலங்கைபோல் அக்கினிக்கு இரையாகிக்கொண்டிருக்கிறது.

ஜேர்மனியின் கிழக்குப்பக்கத்தை ரஷ்யப்படைகளும் மேற்குப்பக்கத்தை பிர்ட்டிஷ் அமெரிக்கப் படைகளும் குண்டு போட்டுத் தகர்த்து துவம்சம் செய்து கொண்டிருக்கின்றன.

போர்நிலை சரியாயில்லை ஹிட்லர் ஜேர்மனியை விட்டு வெளியேறுவதுதான் ஹிட்லர் உயிருடன் தப்பிக்க ஒரேவழி என்று ஹிட்லரின் தளபதிகள் எத்தனையோதரம் சொல்லியும் அவன் கேட்கவில்லை.

ஹிட்லர் ஓரு இடமும் போக மாட்டானென்றும் போக முடியாதென்றும் அந்த நாய்க்குத்தெரியும்.

தனிமையிலிருக்கும்போது அவன் தன் அருமைத் தோழனான அந்த நாயிடம் எத்தனையோ விடயங்களைச் சொல்வான்.

“ப்லோண்ட்டி நான் என்னைச் சுற்றியிருக்கும் யாரையும் நம்ப மாட்டேன். நான் ஒரு கணம் கண் அயர்ந்தாலும் என்னைக் கொல்லக் குள்ள நரிகள் என்னைச் சுற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.” என்று எத்தனையோ தரம் சொல்லியிருக்கிறான்.

எங்கே போவது?

திரும்பிய பக்கமெல்லாம் எதிரிகள்.

பிரிட்டிஷ், அமெரிக்கன், ரஷ்யன் படைகளை விட அவனில் ஆத்திரமுள்ள ஜேர்மனியர்கள் இவனைத்தனியே கண்டால் உயிருடன் விடப்போவதில்லை.

ஹிட்லருக்கும் அவனின் 16 வருடக்காதலியான ஏவாளுக்கும் இன்று தான் திருமணம் நடந்தது.

8.01.45ல் ஹிட்லருடன் அவள் இந்த பங்கருக்குள் வந்த போது பெண் பேய் ஒன்று வந்து விட்டதாக ஹிட்லரின் பாதுகாப்பாளன் முணுமுணுத்ததும் அந்த நாய்க்குத்தெரியும். ஏவாள் என்ற பெண்ணுக்கும் ஹிட்லரன் பாஸிஸ அரசியல் கொள்கைகளுக்கும் ஒரு தொடர்பும் கிடையாதென்றும் ஒரு சில தளபதிகளுக்குத்தெரியும். ஹிட்லரின் அரசியல் திட்டங்களில் அவளுக்குத் தெரிந்த மிக அற்பமே என்று அந்த நாய்க்குத் தெரியும்.

ஹிட்லருக்கு ஒரு காதலியிருப்பதே வெளியுலகத்திற்குத் தெரியாது. அவளை ஹிட்லர் அவனின் முக்கிய தளபதிகளுக்கோ அல்லது அவனைச் சந்திக்க வரும் பிரமுகர்களுக்கோ அறிமுகம் செய்து வைத்ததுமில்லை.

அவனுடன் திரியும் மெய்ப்பாதுகாப்பாளருக்குக் கூட அவள் தனது காரியதரிசி மட்டும்தான் என்று சொல்லி வைத்திருந்தான்.

இப்போது ஜேர்மனியின் கிழக்குப் பக்கத்திலிருந்து ரஷ்யப் படைகள் பேர்லினை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதால் இதுவரையும் ஹிட்லரின் ஹெட்குவார்டஸ் பிரஸ்யாவிலிருந்தது.

அப்போது,ஹிட்லர் தனது காதலியான ஏவாளை அல்ப்ஸ் மலையடிவார வீட்டொன்றில் வைத்திருந்தான்.

ப்லோண்டி நாயுடன் ஏவாளைப் பார்க்கப்போவான். அவளுக்கு வெளியுலகில் என்ன நடப்பதென்றே தெரியாது. நாய்க்குத் தெரிந்த விடயம் கூட அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் வைத்திருந்தான் ஹிட்லர்.

ஏவாளுக்கு இப்போதுதான் முப்பத்தி மூன்று வயதாகிறது.

அவள் ஹிட்லரின் கற்பனைப்பெண்ணான, ஆரியப் பெண். ஆரிய ஆணின் தேவைகளுக்காக வாழ்பவள். உலகின் உயர் குடி மக்கள் ஆரியர் என்றும் அவர்கள் பொன் நிறமுடையவர்கள் என்பதும் ஹிட்லரின் சிந்தாந்தம்.

அவளுக்குப் பொன்னிறத்தலை மயிர், பூனைக்கண்கள் கஷ்டம் தெரியாத உடம்பு. எப்போதும் கற்பனையில் ஆழ்ந்திருக்கும் முகபாவம்.

ஏவாள் ஒரு மணித்தியாலத்திற்கொருதரம் தன் ஆடைகளை மாற்றிக் கொள்வாள். காதல் கதைகளைப் படிப்பாள். காதல் படங்களைப் பார்ப்பாள்.

இடைவிடமால் விலையுயர்ந்த வாசனைத்திரவியங்களைப் பூசிக் கொள்வாள். அவள் ஹிட்லருக்குப்பிடித்த கவர்ச்சியான உபயோகப்பொருளாக வாழ்பவள்.

இப்போது அவள் வழக்கம் போல் அடிக்கடி ஆடைகளை மாற்றிக் கொள்ளவில்லையென்று அந்த நாய்க்குத்தெரியும்.

1923-24ம் ஆண்டுகளில் இடதுசாரிகளையும் தனக்குப் பிடிக்காதவர்களையும் கொலை செய்ய முயன்ற ஹிட்லரை ஜேர்மன் அரசாங்கம் சிறையிலடைத்து வைத்த போது ஹிட்லர் எழுதிய “மைன் காம்ப்–எனது சரித்திரம்” என்ற நூல் பற்றி ஹிட்லர் அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்வான்.

“ஆரிய இனம்” மகா உயர்ந்த இனம். உயர்ந்தவர் தாழ்ந்தவர்களை இனம் காட்டத்தான் கடவுள் பல நிற மக்களைப் படைத்திருக்கிறார். அழகிய வெண்ணிற மக்கள்தான் உலகையாளக் கடவுளால் படைக்கப்பட்டவர்கள். வல்லமையானவர்கள். ஆரியரின் கலைகள், விஞ்ஞான வளர்ச்சி என்பன உலகில் மிக உயர்ந்தது. ஆரிய இனத்தைப்பரப்ப நிறைய நிலப்பரப்பு தேவைப்படும். அதற்காக ஆரியர்களல்லாத மற்றவர்கள் ஆரியரால் அடிமைகொள்ளப்பட வேண்டியவர்கள். ரஷ்யர், போலாந்து, செக்கோஸலாவாக்கியர், உலகில் சமத்துவம் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கருத்துக்களைச் சொன்ன கார்ல்மார்கஸ் ஒரு யூதன். அவனின் சித்தாந்தத்தில் பிறந்த சோவியத் கம்யூனிஸ்ட் அரசாங்கம் உலகிலுள்ள எல்லா மக்களும் ஏற்றத்தாழ்வற்று வாழ வேண்டுமென்று 1918ல் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து விட்டார்கள். என்ன துணிவு?

எனவே,யூதர் என்போர் உலகிலிருந்து அழிக்கப்பட வேண்டியவர்கள். முக்கியமாக யூதர்கள் இந்த உலகிலிருந்து ஒழிக்கப்பட வேண்டியவர்கள்.

ஜேர்மன் பெண்கள் ஆரிய விருத்திற்கு இன்றியமையாதவர்கள். இவர்களின் கடமை, தூய்மையான வெண்ணிற உடம்பும், பொன்னிறத்தலையும், பூனைக்கண்களுமுடைய குழந்தைகளைப் படைப்பதாகும்” இப்படி எத்தனையோ கருத்துக்களை அந்த நாய் கேட்டிருக்கிறது.

அவனது நாயான ப்லோண்டியும் பொன் நிறச் சடைகளையுடையது. இன்று அந்த ஜேர்மன் குடிமக்கள் ஹிட்லர் அடிமைகளாக வைத்திருக்கவேண்டும் என்று போர் தொடுத்த ரஷ்யரின் படைக்குப்பயந்து நாட்டை விட்டோடுகிறார்கள்.

நாய் தனது எஜமானை ஏறிட்டுப்பார்க்கிறது.

ஜேர்மனியை உலகின் அதிக வல்லமையுள்ள நாடாக்கி அந்த நாட்டின் அதிபதியாய் வாழக்கனவு கண்ட ஹிட்லர் 20.04.1889ம் ஆண்டு பிறந்தவன். ஐம்பத்தைந்து வயதுகளை மட்டும் தாண்டியவன் இப்போது தொண்ணூறு வயதுக்காரன் மாதிரி உடல் தளர்ந்து, கண்கள் மங்கிப்போய், கால்கள் தள்ளாட,இடது கை கால் இடைவிடாது நடுங்குகிறது. வாயால் இடை விடாமல் எச்சில் வழிகிறது. பேச்சுத்தடுமாறுகிறது.

இந்த பங்கருக்குள் ஹிட்லர் தனது காதலி ஏவாளுடன் வந்த நாளிலிருந்து ஹிட்லரைப் பார்க்க வந்து போகும் சில தளபதிகள் ஹிட்லரின் பேச்சை விளங்கிக் கொள்ளாமல் மிகவும் தர்மசங்கடப்படுவது அவர்கள் முகங்களில் தெரிகின்றது. ஏதும் பெரிய பிரச்சினை வந்தால் ஹிட்லர் குழம்பிப் போவான் என்று அந்த நாய்க்குத்தெரியும்.

அவளும் அப்படித்தான் ஹிட்லரின் காதல் விடயமாக இரண்டு தடவை தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்திருக்கிறாள் என்று இந்த நாய்க்கு ஹிட்லர் சொல்லியிருக்கிறான்.

அவன் மட்டுமென்ன? இவனின் கோழைத்தனம் எத்தனைபேருக்குத் தெரியும்? “எவனொருவன் ஆயுதத்தை வைத்துக்கொண்டு தன் வலிமை பற்றிப் பெரிதாகப் புலம்புகிறானோ அவன் மிகவும் மனவலியற்றவன்” என்பதை ப்லோண்டியறியாதா என்ன.

எத்தனை தடவை ஹிட்லர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள யோசித்திருக்கிறானெ;ன்னு அவனுடனிருந்த நாய்களுக்குத்தான் தெரியும்.

அவர்களுக்கு முன்னாலிருநக்கும் சில கண்ணாடிக்குப்பிகளில் அந்த நாயின் பார்வை பதிகிறது. ‘சயனைட்’ என்று அந்தக்குப்பிகளில் எமுதப்பட்டிருந்கிறது.

சோழம் பூவின் கருகிய மஞ்சள் நிறச் சடைமயிரைக் கொண்ட அந்த அல்ஸேஸியன் நாய் தன் அதிபனைப்பரிதாபத்துடன் பார்க்கிறது. அந்த நாய் ஹிட்லர் இதுவரைக்கும் ஒரு நிமிடமும் ஹிட்லரை விட்டுப் பிரியவில்லை.

ஹிட்லர் தனது நாயையும் தனது தாய் கிளாராவின் படத்தையும் ஒரு நாளும் பிரிய மாட்டான் என்று அவனை நெருங்கிப்பழகும் ஹிட்லரின் காதலி ஏவாள், ஹிட்லரின் நம்பிக்கைக்குரிய தளபதி, ஹிம்லர் போன்ற ஒரு சிலருக்குத்தான் தெரியும்.

தனது பேச்சைப்புரிநது கொள்ளாத தளபதிகளைக் கோபத்துடன் வைகிறான் ஹிட்லர்.

ஹிட்லரின் மகத்தான சக்தி அவனுடைய பேச்சு. அவனுடைய பேச்சின் வல்லமையாற்தான் இலட்சக்கணக்கான இளைஞர்கள் ஹிட்லரின் பாசப்பாதையில் தங்கள் வாழக்கையை அர்ப்பணித்தார்கள். அவனுடைய வீறு கொண்ட பேச்சால் இலட்சக்கணக்கான போராளிகள் வீர உணர்வுடன் போராடி ஜரோப்பாவின் பல தேசங்களை வென்றார்கள்.

அவனுடைய வசீகரமான பேச்சால் இவனில் காதல் வயப்பட்டவர்களையும் இந்த நாய்க்குத் தெரியும்.

நாயின் பார்வையை உணர்ந்ததுபோல் ஹிட்லர் நாயைத் தடவிவிடுகிறான். “ப்லோண்டி…” ஹிட்லரின் குரல் நடுங்குகிறது.

தன் வாழ்நாள் முழுக்க எத்தனையோ ரகசியங்களைத் தன்னுடன் பகிர்ந்த தன் எஜமானை ஏக்கத்துடன் நிமிர்ந்து பார்த்த நாயின் பார்வை ஹிட்லரின் காதலியான ஏவாளில் பதிகிறது.

‘ஹிட்லர் உன்னில் வைத்திருக்கும் அன்பில் ஒரு துளியாவது என்னிடம் என் காதலன் வைக்கவில்லையே’ என்று ஏவாள் ப்லோண்டியை அணைத்துக் கொண்ட வேளைகளை அந்த நாய் மறக்கவில்லை. உண்மைதான், ஏவாள் ஒரு நாள் தனது பழைய டயறியை இந்த நாயிடம் படித்துக் காட்டினாள். பத்து வருடங்களுக்கு முன் அவள் எழுதியதை ஒரு சில நாட்களுக்கு முன் ஹிட்லர் இல்லாத நேரம் பார்த்துப் படித்துக் காட்டினாள். அதில் இருந்ததாவது, ஏப்ரல் 1.1935 (ஏவாளின் டயறி)

“இன்று அவர் என்னை சாப்பிட அழைத்துச் சென்றார். நாங்கள் ‘நான்கு பருவங்கள்’ என்றழைக்கப்படும் சாப்பாட்டு விடுதிக்குப்போனோம். அந்த இடத்தில் மூன்று மணித்தியாலங்களைச் செலவழித்தோம். என்னுடன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. எழும்பிப் போகும் போது வழக்கம் போல் ஒரு கவரைத் தந்தார். அதில் வழக்கம் போல் பணம் இருந்தது. அதை வாங்க எரிச்சலாகவிருந்தது. இந்தப் பணத்தை விட ஒரு அன்பான வார்த்தையைச் சொல்லியிருந்தால் அல்லது ஒரு பூச்செண்டை அன்பளிப்பாய்த் தந்திருந்தால் சந்தோசப்பட்டிருப்பேன். ஆனால் அவருக்கு அப்படியான சிந்தனைகள் இருக்குமென்று நான் நினைக்கவில்லை’.

நாய்க்குப் பேச முடிந்தால் ஏவாளுக்கு எத்தனையோ விடயங்களைச் சொல்லியிருக்கலாம். ஹிட்லரின் தாய் கிளாரா இறந்தபின் ஏவாள் ஒருத்திதான் ஹிட்லரைத் தன் உயிருக்கும் மேலாக நினைக்கிறாள் என்று அந்த நாய்க்குத்தெரியும்.

ஹிட்லின் நட்பு வேண்டாமென்று ஏவாளின் தகப்பன் ஏவாளிடம் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை. பதினேளாவது வயதில் நாற்பது வயதுள்ள ஹிட்லரைச் சந்தித்ததும் அவனது காதலியானதும் ஏவாளின் குடும்பத்திற்குப்பிடிக்கவில்லை. அப்போதே அவனுக்கு அவனின் 22 வயது மருமகளான ஆஞ்ஞலா காதலியாயிருப்பது ஏவாளுக்குத்தெரியாது.

ஹிட்லருக்கு ஏவாள் என்றொரு காதலியிருக்கிறாள் என்று தெரிந்ததும் ஆஞ்ஞலா தற்கொலை செய்ததும் (8.09.1931) ஏவாளுக்குத் தெரியாது. ஹிட்லரின் நெருங்கியவர்களெல்லாம் ஏதோ ஒரு விதத்தில் இறந்து விடுகிறார்களே.

ஹிட்லரின் தந்தை அவனால் மனமுடைந்து இறந்தான். அடங்காத மகன் எதிர் காலத்தில் என்ன மாதிரி மாறுவானோ என்ற பயம் அந்தத் தந்தைக்கு இருந்திருக்குமா? அந்த நாய் சில வேளை இதையெல்லாம் நினைத்ததுண்டு.

ஏவாளை ஹிட்லர் தன்னுடன் கூட்டிக்கொண்டு வந்ததற்குப் பல காரணங்களிருக்கலாம். ஹிட்லருக்கு அறிவுள்ள பெண்களைப் பிடிக்காதென்று ப்லோண்டிக்குத் தெரியும். அவர்கள் கேள்வி கேட்பார்கள் அதிலும் இப்போது ஜேர்மனி அழைத்து கொண்டிருக்கும்போது ஹிட்லரிடம் கேள்வி கேட்பவர்களையோ எதிர்த்துப் பேசுபவர்களையோ அவன் விரும்பான்.

அவன் சொல்வது, செய்வதெல்லாற்றையும் ஏவாள் சகித்துக் கொள்வாள் என்று தெரியும். கடந்த காலங்களில் இவனின் தொடர்பால் மனமுடைந்து மரணத்தைத்தழுவ நினைத்த மரியா ரெய்ட்டர் என்ற பெண்ணுக்கு வயது பதினாறு.

இவனைக்காதலித்துத் தற்கொலை செய்து கொண்ட ஆஞ்ஞலா: அதன் பின் நதியில் விழுந்திறந்த ரெனேற்றே முயலர் என்றொரு நடிகை அப்பாவிப்பெண்…

இப்படி எத்தனை பெண்கள்? அந்தக்காலத்தில் இவனால் நடந்த அகால மரணங்கள்தான் பின் படிப்படியாய் மாபெரும் கொலைகாரனாக வழி வகுத்ததா?

நாயால் யோசிக்க முடியவில்லை. சில மாதங்களாக இந்த பங்கருக்கள் வாழ்ந்து மனமே இருண்டு போய்விட்டது.

பெண்களின் மரணம் பற்றி ஹிட்லர் பெரிதாக துக்கப்படப்போவதில்லை என்று நாய்க்குத் தெரியும். இந்தப்பெண்களின் தொடர்புகளை இவனுடைய அடிவருடிகள் பொது மக்களுக்குத் தெரியவிடவில்லை.

நாட்டுக்காத்தான் வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவன் என்று அவனுடைய பாஸிஸப் பத்திரிகைகள் மூலம் பிரசாரம் செய்து மக்கள் மனதில் ஒரு கௌரவத்தையுண்டாக்கிவிட்டான். ஜேர்மன் நாட்டுத் தாய்குலத்திற்கு இவனில் பெரிய மதிப்பிருந்ததால் தேர்தல்களில் வெல்வது சுலபமாயிருந்தது.

அதே நேரம் படித்த பெண்களைப் பெரிய பதவிகளில் வைத்திருப்பதை விரும்பாமல் ஜேர்மன் நாட்டின் வளர்ச்சிக்குத் தாய்மார் வீட்டிலிருந்து குடும்பத்தைப் பாதுகாப்பது தேசியக்கடமையென்று பிரகடனப்படுத்தினான். மிகச் சிறந்த வைத்தியர்களாக இருந்த பெண்கள்கூட வீட்டுக்கனுப்பட்டார்கள்.

குடும்பம் குழந்தைகளையவனுக்குப் பிடிக்காது.

ஆனால் எந்தக் கூட்டத்திலும் பெண்களையுயர்த்திப் பேசுவான். குழந்தைகளைக் கொஞ்சுவான். அவன் காலடியில் விழுந்து கிடக்கும் ப்லோண்டி நாய் கிண்டலுடன் அவனைப்பார்க்கும். சிநேகிதர்களிடம் பேசும் போது “வலிமையுள்ள, கெட்டித்தனமுள்ள ஆண்கள் ஒரு நாளும் கெட்டிக்காரப் பெண்களிடம் உறவு வைக்கக்கூடாது. ஆண்களின் தேவைக்கு ஒரு முட்டாள் பெண் போதும்” என்று கிண்டலாகச் சொல்வான்.

ஹிட்லருக்குப் பிடித்தவர்கள் யாரென்று ப்லோண்டிக்குத்தெரியாது. ஹிட்லருக்கு யூதர்கள், இடதுசாரிகள், மனித உரிமைவாதிகள், பிச்சையெடுப்போர், கறுப்பு இனமக்கள், விலைமாதர், ஓரினச்சேர்க்கையிலீடுபடுவோர், ஜிப்ஸிகள், மனநலமற்றவர்கள், அங்கவீனமான மனிதர்கள் என்று இப்படி எத்தனையோ ரக மக்களைப்பிடிக்காது. பதவிக்கு வந்து கொஞ்ச மாதங்களில் இவர்கலெல்லாம் சமூகத்திற்குத் தேவையற்றவர்களென்று மேற்பட்ட மக்களையெல்லாம் கொலை செய்து விட்டான்.

இவனைவிடக் கூடப்படித்த யாரையும் இவனுக்குப்பிடிக்காது. அதிலும் பெண்களென்றால் ஏதோ ஒரு வழியில் அவர்களை ஒழித்துக்கட்டி விடுவான். உதாரணமாக தொழிற்கட்சிகளைச் சேர்ந்த பல பெண் இடது சாரிப் பெண்கள் பாஸிஸக் கொள்கைகளை எதிர்த்த போது அவர்கள் ஜேர்மன் நாட்டின் துரோகிகள் என்று கொலைசெய்து விட்டான்.

ஹிட்லர் ஜேர்மன் அதிபதியாய் வந்தபோது ஐரோப்பாவின் இருபத்திரண்டு நாடுகளில் ஒன்பது கோடி யூதர்கள் வாழ்ந்தார்கள். அவர்களில் ஆறுகோடி மக்களை என்ன மாதிரிக் கொடுமைகள் செய்து கொலை செய்தான் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்.?

இப்படியான மரணங்கள் பற்றியெழுத ஜேர்மனியில் யாருக்கும் துணிவு கிடையாது. இவனுக்காக வேலை செய்யும் அதிரடிப்படைகள் (எஸ்.எஸ்) தான் முழுக்க முழுக்கப் பிரசார வேலைகளைக்கவனித்துக் கொள்கிறது.

“எனக்குப் பேச முடிந்தால் இவன் என்னைத் தன்னுடைய செல்லப்பிராணியாய் வைத்திருக்கமாட்டான்” நாய் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறது. நாய் பீரங்கிச்சத்தத்தில் இன்னொரு தரம் சிலிர்த்தெழுகிறது. ரஷ்யரின் படைகள் எவ்வளவு தூரத்தில் வந்திருக்கிறது என்று யோசிக்கிறது. நேற்று வந்திருந்த தளபதிகள் ஆயிரக்கணக்கான ஜேர்மன் மக்கள் ரஷ்யப்படைகளுக்குப்பயந்து நாட்டை விட்டோடுவதாகச் சொன்னார்கள்.

அந்த விடயமும் அவனை ஏரிச்சல் படப்பண்ணியது. “ஏன் ஓடுகிறார்கள்” ஹிட்லர் தனது மங்கிய பார்வையைத் தன் தளபதிகளிற் தவழவிடுகிறான். 1918ம் ஆண்டில்,முதலாவது உலக மகாயுத்தத்தின்போது, பிரிட்டிஷார் ஜேர்மனியில் போட்ட குண்டடி பட்டு இவனின் பார்வை தற்காலிகமாகப்போயிருந்தது. பின்னர் பல வைத்தியங்களின் பின் பார்வை திரும்பியது. இப்போது கிட்டத்தட்டக் குருடனாகி விட்டான். தளபதிகள் மௌம் சாதிக்கிறார்கள். யாருடைய ஆலோசனைiயும் ஹிட்லர் ஏற்றுக்கொள்ள மாட்டானென்பது உலகறிந்த விடயம்.

“போலாந்தை வெற்றி கொள்ள எனக்கு நாலு கிழமைதானெடுத்தது. நோர்வேய் நாட்டை வெற்றி கொள்ள ஐந்து கிழமையெடுத்தது.. உங்களுக்குத் தெரியுமா ஹாலண்ட் நாடு ஐந்து நாளில் எங்கள் படைகளின் காலடியில் விழுந்ததே, அதுமட்டுமா பெல்ஜிய நாடு மூன்று கிழமையிலும் ஒரு காலத்தில் எங்களை வெற்றி கொண்ட பிரான்ஸ் நாடு ஆறு கிழமையிலும் என் படையின் காலடியில விழுந்ததே…அந்த மாதிரி வெற்றிகளைத்தந்த ஜேர்மன் படைகள் என்ன செய்கிறார்கள்” தடுமாறிய வார்த்தைகளைக் கொட்டுகிறான் ஹிட்லர்.

“ரஷ்யப்படைகள் பிரமாண்டமானது. அவர்களை வெற்றி கொள்ள முடியாது அத்துடன் எங்கள் படையிலுள்ள சிப்பாய்களும் தங்கள் உயிரைக் காப்பாற்ற மக்களுடன் மக்களாக பெர்லின் நகரை விட்டோடுகிறார்கள்.” தளபதி ஹிம்லர்; கொஞ்சம் துணிவுடன் முணுமுணுக்கிறான். ஹிட்லரை ஆதரிப்பது போல் மற்றத் தளபதிகளான கோப்லரும் பேர்மனும் தலையாட்டுகிறார்கள்.

இந்தத் தளபதிகள்,; மிக நீண்ட காலமாக ஹிட்லரின் விசுவாசிகள். மிகவும் மோசமான இனவாதிகள் என்று அந்த நாய்க்குத் தெரியும். ஹிட்லரின் அணையால் இந்தத்தளபதிகள் யூத மக்களை எப்படிச் சித்திரவதை செய்து கொலை செய்தார்கள் என்று விவரணச் சித்திரமாய் ஹிட்லரிடம் சொல்வதை ப்லோண்டி எத்தனையோ தரம் தன் காதால் கேட்டிருக்கிறது. ஹிட்லர்,மனித சரித்திரமே கேட்டறியாத பல கொடுமைகளை யூத மக்களுக்குச் செய்தவனிவன். ஒரு மனிதனின் உதிரத்தையுறிஞ்சி எடுத்து விட்டால் அவன் எவ்வளவு காலம் உயிர்வாழ்வான். தாய்பாலில்லாமல் ஒரு பச்சைக்குழந்தை எவ்வளவு காலம் உயிர் வாழும், சாப்பாடில்லாமல், தண்ணியில்லாமல் ஒரு உயிர் எவ்வளவு காலம் உயிர்வாழும் என்றெல்லாம் பரிசோதனை செய்தவன் இவனொரு சாத்தானின் மகனென்று அந்த நாய் முடிவுகட்டியிருந்தது.

இவனின் கொடுமை தாங்காமல் கடந்த வருடம் கேர்ணல் வொன் ஸ்ரவ்வன்பேர்க் என்பவன் ஹிட்லரின் மேசையினடியில் ஒரு வெடி குண்டை மறைத்து வைத்தான். அந்தக் குண்டு வெடிப்பில ஹிட்லர் சிறு காயங்களுடன் தப்பிவிட்டான்.

அதன் பின் அவன் தன்னைக் கொலை செய்ய முயற்சித்தவர்களைத் தன் கைகளாலேயே அழித்து முடித்தான். ஒன்றா இரண்டா? 4980 கொலைகள். ஒரு சிலரைத் தற்கொலை செய்யப்பண்ணி விட்டான். தனது எதிரிகளை எப்படிக் கொலை செய்தானென்பதை ப்லோண்டியைத் தடவிக்கொண்டடு சிரித்தபடி மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவான். ஹிட்லரை எதிர்த்துக்கொண்டால் தங்களுக்கும் இதுதான் கெதி என்பது ஹிட்லரின் பேச்சைக் கேட்பவர்களுக்கு விளங்கும்.

தனது தலைமையைக் காத்துக்கொள்ள ஜேர்மன் நாட்டின் கடைசிக் குழந்தையையும் கொலை செய்யத் தயங்க மாட்டானென்று ஒரு சிலர் பேசிக்கெண்டார்கள்.

ரஷ்யப் படைகளை எதிர்த்து ஜேர்மன் படைகள் தொடர்ந்து போராட வேண்டுமாம். “எனக்குத் தோல்வி பற்றித் தெரியாது. வெற்றிதான் தெரியும்” கடந்த மூன்று வருடங்களாக ரஷ்யாவிருந்து 5-11 கோடிக் கைதிகளைக் கொன்றழித்த எங்கள் படைகளுக்கு என்ன நடந்தது?” ஹிட்லரால் நீண்ட நேரம் நிற்க முடியாது. தள்ளாடியபடி உட்காருகிறான்.

“இந்த ஆரிய பூமியைக்கட்டியெழுப்ப நான் பட்ட கஷ்டத்தையுணராத ஜன்மங்களா இந்த முட்டாள்கள். ஒரு பரிசுத்த பரம்பரையையுண்டாக்க நான் எடுத்த முடிவுகள் முட்டாள்த்தனமானதா? முப்பத்திமூன்றாம் ஆண்டு தேர்தலின் பின் ஒரு சில வாரங்களில் அறுபதினாயிரம் இடதுசாரிகளை ஊரை விட்டோடப் பண்ணியது பிழையா? சமத்துவம் பேசிய தொழிற்சங்கத் தலைவர்களைச் சிறையிலடைத்தேனே அதெல்லாம் யாருக்காக? என்னுடைய கொள்கைகள் பிடிக்காத.எதிர்;க் கட்சியைச் சேர்ந்த 150.000 ஜேர்மனியரை ஒரேயடியாகச் சிறையில் போட்டேனே யாருக்காக? இந்த நாட்டில் வலிமை படைத்த, அழகிய ஜேர்மனியர் தவிர வேறு யாரும் வாழ முடியாதென்று எனது படைகள் 5 கோடி ஜிப்ஸிகளைக் கொலை செய்தNது அந்த நன்றி கூட இந்த ஜேர்மனியருக்குத் தெரியாதா?

250,000 பைத்தியங்கள், 3 கோடி ரஷ்யக் கைதிகள், சமத்துவ வாதிகள், இடது சாரிகளென்று எத்தனையோ கோடியினரை இந்த ஜேர்மன் மண்ணிலிருந்து அழித்தேனே அதெற்கெல்லாம் ஜேர்மனியர்; எனக்குச் செய்யும் கைமாறு இது தானா?”

ஹிட்லரின் முன் உள்ள சிறிய மேசையில் சயனைட் குப்பிகளும், குண்டுகள் நிரப்பிய 7.65 வால்ரன் துப்பாக்கியும் ஜேர்மன் மக்களின் கடைசி ஞாபகங்களாக வீற்றிருக்கின்றன. இந்த நாயிடம் ஹிட்லர் மனம் விட்டுச் சொன்ன விடயங்களை அவன் யாரிடமும் சொல்லியிருக்க முடியாது. “ப்லோண்டி, நீ ஒரு நாய் ஆனாலும் உன்னைத்தவிர நான் யாரையும் இந்த உலகத்தில் நம்பமாட்டேன். எல்லோரும் தங்கள் தேவைக்கு என்னைப்பாவிக்கிறார்கள். என்தகப்பன் தொடக்கம் எனது தாய் கூட தங்களின் ஆசைகளை நான் நிறைவேற்றி வைக்கவேண்டும் என்று தான் நினைத்தார்கள்” தாயைப்பற்றிப் பேசும்போது 1907ம் ஆண்டில் இறந்து விட்ட அவளின் புகைப்படத்தை எடுத்துக்காட்டுவான்.

நாயிடம் சொல்வதுபோல் தனக்குத்தானே பேசிக்கொள்வான். “எனது தகப்பனுக்குத் தானொரு தகப்பன் தெரியாக் குழந்தை என்ற வெட்கம். எனது தனப்பன் அலோய்ஸ் யாரோ ஒரு பணக்காரன் வீட்டில் வேலை செய்த ஒரு வேலைக்காரியின் வயிற்றில் பிறந்த, சொந்தத் தகப்பன் பெயர் தெரியாத குழந்தையாக வளர்ந்தவன் என்தகப்பன். அந்த அவமானத்தைப் போக்க இரவும் பகலும் படித்து முன்னுக்கு வந்ததாகச் சொல்லியிருக்கிறான். தன்னைப்போல் நானும் வரவேண்டும் என்னை இடைவிடாது நச்சரித்துக்கொண்டிருப்பான். எனக்கு படிப்பு அவ்வளவாக ஏறாது என்ற விஷயம் என் தகப்பனுக்கு வருத்தத்தையுண்டாக்கிவிட்டது. அவனின் சாவுக்கு நான் பொறுப்பல்ல”.

இப்படி எத்தனையோ சம்பவங்களை இந்த நாய்க்குச் சொல்லியிருக்கிறான். இரவு பகலாக இந்த நாயும் அவன் துணையாகவிருக்கும். உயர்ந்து வளர்ந்த அல்ஸேஸன் எப்போதும் ஹிட்லருக்குத்துணையாயிருக்கும். தன் செல்ல நாயிடம் மனிதர்களிடம் சொல்ல முடியாத எத்தனையோ ரகசியங்களைச் சொல்வான்.

ப்லோண்டி நாயிடமட்டுமல்லாமல் ஹிட்லரின் செல்ல நாயாய் ப்லோண்டி வரமுதல் இருந்த எல்லா நாய்களும் ஹிட்லரின் அந்தரங்களைத் தெரிந்தவை. ஹிட்லரின் தகப்பன் தன் மகன் ஒரு நல்ல படித்தவனாய வரவில்லையே என்ற துயரில் மகனைத்திருத்த எடுத்த எத்தனையோ முயற்சிகள் விழலுக்கிறைத்த நீராய்ப்போயின.

“எனக்கு ஒரு பெயர் பெற்ற ஓவியனாய் வர ஆசையிருந்தது. ஆனால் அப்பாவுக்கோ நான் ஒரு அரசாங்க அதிகாரியாய் வரவேண்டுமென்ற ஆசை. நான் எடுத்த பரீட்சைகளிலெல்hம் பெயில். அப்பாவின் மூத்த மனைவிக்குப்பிறந்த எனது தமயன் திருடனாகிச் சிறைக்குப்போனபின் அப்பாவின் தொல்லை கூடியது. அவர் தந்த தொல்லையால் படிப்பிலிருந்த அக்கறை போய்விட்டது. எனது சின்ன வயதில் எனக்குப் பிடித்த விளையாட்டு என்ன தெரியுமா?

தென் ஆபிரிக்காவில் ஆங்கிலேயர்களுக்கும் அவர்களை எதிர்த்துப் போராடிய போயர்களுக்கும் நடந்த போரை விளையாட்டாக நடத்துவேன். நான்தான் போயர்களின் கொமாண்டோ. ஆங்கிலேயர் கைதிகளாய்க் கைப்பற்றி காம்புகளில் வைத்திருந்த போயர்களை போய் விடுவிப்பனாக விளையாடுவேன். விளையாடும் போது கூட நான்தான் தலைவன். ஆனால் பரீட்சைகளில் பெயிலானதால் படிப்பும் தொடரவில்லை. சினேகிதர்களும் நிலைக்கவில்லை. அடங்காத மகன் என்று அப்பாவிடம் அடியும் பேச்சும். அப்பா அந்தத் துயருடன் 1903ல் இறக்க அம்மா கான்ஸர் வந்து 1907ல் இறந்துவிட்டாள். அவள் வைத்து விட்டுப்போன பணம் நீண்ட நாள் நிலைக்கவில்லை.

படிப்பில்லாததால் நல்ல வேலையில்லை. பட்டினியாய் ஆஸ்திரியா நாட்டின், வியன்னா நகரின் தெருவில் அலைந்த நாட்களுமுண்டு. எப்படியும் ஒரு தலைவனாக வர ஆசை ஆனால் படிப்பில்லாததால் வேலை கிடைக்கவில்லை. இப்போது எனது தாய் தகப்பன் உயிருடனிருந்தால் நான் ஜேர்மனியின் அதிபதி என்பதை நம்புவார்களா. ஹிட்லர் தன் நாயைக் கேட்பான். ஒரு நாளில் எந்த ஒரு நிமிடத்தையும் வீணாக்காமல் ஏதோ ஒரு திட்டத்தைத் தீட்டிக்கொண்டிருப்பான்.

1939ல் போலந்தை வெற்றி கொண்ட நாளிலிருந்து அவனுக்கு போர் வெறியேறிவிட்டது என்று அந்த நாய் புரிந்து கொண்டது. ஆங்கிலேயருக்கு இந்தியா போன்ற ஒரு பெரிய நாடிருப்பது போல் தனக்கு ரஷ்யா தேவையென்று தனது தளபதிகளுக்குச் சொன்னான். ஜேர்மனியிலிருந்து ஓடிப்போன யூதர்கள் அமெரிக்காவிலிருக்கிறார்கள் அத்துடன் மிருகங்களுக்குச்சமமான கறுப்பரும் அமெரிக்காவிலிருக்கிறார்கள். ஐரோப்பா, ஆபிரிக்கா அமெரிக்காவையெல்லாம் வென்றெடுத்து ஆரிய இனத்தை உலககெல்லாம் பரப்பத் திட்டம் போட்டான்.

ஒவ்வொரு நாட்டை வெற்றி கொண்ட பின் அந்த நாட்டிலுள்ள யூதர்கள், இடதுசாரிகள் எல்லோரையும் கொலை செய்ய உத்தரவிட்டதும் இத்தனை கைதிகளையும் எப்படிக் கொலை செய்வதென்று தளபதிகள் யோசித்தபோது மிகமிக இனவாதியான ஹெப்ம்லரின் ‘கடைசி’ முடிவு என்ற திட்டம் ஹிட்லருக்கு மிகவும் பிடித்து விட்டது.

பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா போன்ற எல்லா நாடுகளையும் ஹிட்லர் வெற்றி கொண்டபின் உலகத்திலுள்ள யூதர்களை ஒன்று சேர்த்து மடகாஸ்கர் தீவில் குடியேற்ற நினைத்தவனுக்கு இப்போது கைதிகளாகப் பிடிபட்ட யூதர்களைக் கூடிய கெதியில் அழிக்க போலந்திலுள்ள ஆஷ்விச் என்ற இடத்தில் நச்சு வாயுக்குதங்களைப்பாவித்து கிட்டத்தட்ட ஆறு கோடி யூதர்களையழித்தபோது தன் திறமையைத் தளபதிகளிடம் சொல்லிப்பெருமைப்பட்டதைக் கேட்ட நாய் மனித குலத்தின் மனிதமற்ற குணத்தைப்புரிந்து கொள்ளக் கஷ்டப்பட்டது.

1941ல் பிரிட்டன், அமெரிக்கா நாடுகளுக்கெதிராகப் போர்ப்பிரகடனம் செய்தான் ஹிட்லர். ஜேர்மனியின் நாலாப்பக்கமும் போராட வேண்டியதாலும் பிரிட்டன் அமெரிக்க எதிர்த் தாக்குதல்களாலும் ஜேர்மன் படைகள் தோல்வியைத் தழுவத் தொடங்கின. தளபதிகள் சமாதானத்திற்குப் போகச்சொல்லி விடுத்த எத்தனையோ விண்ணப்பங்கள் ஹிட்லரின் காதில் விழவில்லை.

2.2.1943 மாபெரும் ஜேர்மன் இராணுவம் சோவியத் இராணுவத்திடம் சரணடைந்தது. இன்றைய நிலையென்ன? ப்லோண்டிக்கு முன் வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டில் மனம் பதியவில்லை. ஹிட்லரின் கனவுகள் ரஷ்ய, பிரிட்டிஷ், அமெரிக்கப்படைகளால் சின்னாபின்னாமாகி விட்டது. அவர்கள் ஜேர்மனி நாட்டின் பெரும் பகுதியைப் பிடித்து விட்டார்கள். ஹிட்லரைத்தேடி ரஷ்யப்படைகள் வீதி வீதியாயச் சல்லடை போடுகிறது.

உலகத்தின் அதிபதியாய் வாழக்கனவு கண்ட ஹிட்லர் ஓடமுடியாமல் இருண்ட பங்கரில் அகப்பட்டுக் கிடக்கிறான். ஹிட்லருக்குத் தெரியாமல் சில ஜேர்மன் தளபதிகள் பிரிட்டிஷாருடன் சமாதான ஒப்பந்தம் செய்யப்போனது ஹிட்லருக்குத் தெரியாது. ஹிட்லரில் பரிதாபப்பட்ட ஒரு சிலர் ஹிட்லரைத் தப்பியோடச் சொன்னதை அவன் ஆத்திரத்துடன் நிராகரிக்கிறான்.

அதற்குக் காரணம் இத்தாலிய சர்வாதிகாரி முசோலியின் மரணமாகும். ஹிட்லரின் சினேகிதனான இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி முசோலி ஹிட்லர் மாதிரியே பொல்லாத சர்வாதிகாரியென்பதை அந்த நாய் கேள்விப்பட்டிருக்கிறது. ஒரு சில நாட்களுக்கு முன் அந்த நாட்டு மக்கள் முசோலியை வீதிகளில் உயிருடன் இழுத்துக்கொண்டு போய்க் கொலை செய்ததை அதிகாரிகள் பேசிக்கொண்டார்கள். அதேமாதிரி நான் சாகத் தயாராயில்லை. ஹிட்லர் உறுமுகிறான். நாய் ஓரக்கண்ணால் தன் எஜமானனைப் பார்க்கிறது.

ஹிட்லரும் அவனுடைய சண்டியர்களும் தேசியம் என்ற பெயரில் எத்தனை மனிதர்களைத் தேசத்துரோகிகள் என்று தெருக்களில் வைத்துக்கொலை செய்தார்கள்? அதை மறந்து விட்டானா? தனக்குப் பிடிக்காதவர்களை வீட்டோடு வைத்துக் கொழுத்தியதற்கு என்ன தண்டனை? எத்தனை யூதர்களை உயிருடன் வைத்துப் பரிசோதனை செய்தான் அதுவும் மறந்தாயிற்றா? யூதர்களின் தோலையுரித்துக் காலணி செய்ததற்கு என்ன தண்டனை? விஷவாயு அறைகளில் அழிந்த தாய்கள் குழந்தைகளின் ஆவிகளுன்னைத்துரத்தாதா? நாய் எத்தனையோ கேள்விகள் கேட்க யோசிக்கிறது.

தினை விதைத்தவன் தினையை அறுக்கத்தான் வேண்டும். ப்லோண்டி பெருமூச்சு விடுகிறது.

30.04.1945 ப்லோண்டி ஹிட்லரின் பங்கரில் இறந்து கிடக்கிறது.

எத்தனையோ வருடங்களாக ஹிட்லரின் காவலனாகவும், செல்லப் பிராணியாகவுமிருந்த அந்த நாய் ஹிட்லரின் காலடியில் அசைவற்றுக்கிடக்கிறது. தனக்குப் பிடிக்காத அத்தனை ஜன்மங்களையும் கொலை செய்த ஹிட்லர் தனக்குப்பிடித்த அருமை நாயான தன்னையும் கொலை செய்வான் என்பதை அந்த வாய் பேசாப் பிராணி எதிர்பார்த்திருக்க முடியாது. யூதர்களுக்கும் ஹிட்லருக்குப்பிடிக்காத அத்தனை பேருக்கும் ஹிட்லர் கொடுத்த மரண தண்டணையை இப்போது அவன் தனக்கு வழங்க முடிவு செய்து விட்டான்.

இந்த பாதாள அறையிலிருந்து வெளியே போக முடியாது என்று தெரிந்ததும் தன் உயிரை மாய்த்துக்கொள்ள அவன் எடுத்த முடிவை யாரும் தடுக்கவில்லை. தடுக்கத்துணிவுமில்லை, ஒட்டு மொத்தமாகச் சொல்லப்போனால் அவன் உயிருடனிருப்பதை யாரும் விரும்பவுமில்லை. அவன் உயிரோடிருக்கும் வரை யுத்தத்தைத் தொடரச் சொல்லிக் கட்டளை போடுவான் அதனால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ஜேர்மனியர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

தான் எப்படி இறக்கப்போகிறேன் என்று அவன் தனது மெய்க்காப்பாளர்களிடம் ஒரு சில நாட்களுக்கு முன்தான் விவரித்தான். தன்னுடன் தன் காதலி ஏவாளும் சாக முடிவு செய்து விட்டதாகச் சொன்னான். “உன்னைச் சந்தித்த ஒரு சில நாட்களிலேயே உனக்காக வாழ்வதாக முடிவு செய்து விட்டேன். உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்’ என்று ஏவாள் சொல்லியிருக்கிறாள். ஏற்கனவே ஹிட்லருக்காக இரண்டு தடவைகள் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறாள். ஹிட்லர் தனது கடைசி முடிவு பற்றிச் சொன்னபோது துப்பாக்கியால் தான் சாக விரும்பவில்லை என்று சொன்னாள்.

ஹிட்லரின் கட்டளைப்படி சயனைட் குப்பிகள் கொண்டு வரப்பட்டன.

பெரும்பாலான தளபதிகள் ஹிட்லரை விட்டோடி விட்டார்கள். ஜேர்மனியை எதிரிகள் வளைத்து விட்டார்கள் என்பதையுணர்ந்தும் மெய்க்காப்பாளர் கொண்டு வந்த சயனைட் சரியானதுதானா என்று பரிசோதிக்க விரும்புகிறான்.

தன் தளபதிகள் ‘விஷம்’ என்ற பெயரில் மயக்க மருந்தைத்தந்து தன்னை மயக்கி விட்டுத் தன்னைத் தன் எதிரிகளிடம் கொடுத்து விடுவார்களோ என்ற பயத்தில் சயனைடைப் பரிசோதிக்க விரும்புகிறான் ஹிட்லர்.

தனது எஜமான் வழக்கம் போல் அவனது கையால் சாப்பாடு தருகிறான் என்ற சந்தோசத்தில் சாப்பிடுகிறது ப்லோண்டி. கண்ணாடிபோல் ஏதோ கடிபட்டதே என்று ப்லோண்டி யோசிக்கமுதல் ப்லோண்டியின் நினைவு போய்விட்டது. ஹிட்லரை நம்பியவர்கள் யாரும் உயிரோடிருந்ததில்லை என்று யோசிக்க முதல் ப்லோண்டியின் உயிர் போய்விட்டது.

மதியம்-3.30. “கொஞ்ச நேரம் யாரும் கதவைத்தட்ட வேண்டாம்” ஹிட்லரின் கடைசிக் கட்டளையது. ஹிட்லர் கதவைப்பூட்டிக் கொஞ்ச நேரத்தில் ஏவாளின் கதறல் காதைப்பிழக்கிறது. அதைத் தொடர்ந்து சில வெடிச்சப்தங்கள். இருபது வருடங்களுக்கு மேலாக ஈவிரக்கமற்ற முறையில் தனக்குப் பிடிக்காதவர்களைக் கொலை செ;யத பாதகன் தன்னைத் தானேயழித்துக்கொண்டான்.

கதவைத் திறந்த போது ஏவாளின் சவம் ஸோபாவில் கண்களை விரித்தபடி கிடந்தது.

5.28.1935ல் அவள் எழுதிய டையறியில் “அவனிடமிருந்து நான் எதிர் பார்க்கும் பதில் கிடைக்காவிட்டால் 25 மாத்திரைகளுடன் மீளாதொரு நித்திரைக்குப்போய் விடுவேன்”.

இப்போது அவன் கொடுத்த சயனைட்டின் உதவியுடன் மீளாத்துயிலடையப் போய்விட்டாள். அவளருகில் ஹிட்லரின் பிணம் தலையிலிருந்து குருதி வழிந்தபடி இறந்துகிடந்தது.

அவனின் மெய்க்காப்பாளர்களில் பலர் ஓடிவிட்டார்கள். ஓரிருவர் ஹிட்லரினதும் ஏவாளினதும் பிணங்களை மாலை ஐந்து மணியளவில் பங்கரின் பின்வழியால் கொண்டுவந்து பெட்ரோலிட்டு அவசர அவசரமாக எரித்தார்கள். சித்திரை மாதக்கடைசி நாளன்று மாலைச்சூரியன் மறைந்தபோது அந்த இரவில் அனாதைப்பிணங்களிரண்டு எரிந்து கொண்டிருந்தன. சாத்தானின் மைந்தனின் சரித்திரம் முடிந்துவிட்டது.

http://puthu.thinnai.com/?p=28769

  • கருத்துக்கள உறவுகள்

விரைவான எழுத்து நடை விடாமல் வாசிக்க வைக்கிறது.  பலரும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய விடயம்.  ஹிட்லர் எழுதிய - மெயின் காம்ப் தமிழ் மொழிபெயர்ப்பைப் பல வருடங்களாக வைத்திருந்தும் இன்னும் வாசித்து முடிக்கவில்லை.  ஹிட்லரின் வாழ்க்கையை அவன் வளர்த்த நாயின் கதையோடு தொடர்புபடுத்திச் சுருக்கமாகத் தந்த ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்.

நிட்சயம் எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு வரலாற்று கதை ,அல்ல பாடம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.