Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிபா தலைவர் பதவியிலிருந்து விலகினார் செப் பிளாட்டர்

Featured Replies

பிபா தலைவர் பதவியிலிருந்து விலகினார் செப் பிளாட்டர்

 

ஜூரிச்: ஊழல் மற்றும் முறைகேடு புகார் காரணமாக பிபா தலைவர் பதவியிலிருந்து செப் பிளாட்டர் ராஜினாமா செய்தார். இவர் சமீபத்தில் நடந்த தேர்தலில் தான் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

 

தான் பிபா தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும், புதிய தலைவரை தேர்வு செய்ய மீண்டும் தேர்தல் நடக்கும் எனவும் பிளாட்டர் கூறியுள்ளார்

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1266245

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவரான  செப் பிளாட்டர் பதவி விலகினார்.
 
கடந்த வார இறுதியில்  தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட செப் பிளட்டர் மொத்த ஐரோப்பிய நாட்டு அங்கத்தவர்களின்  பலத்த எதிர்ப்புக்களின் மத்தியிலும் தான் தலைவர் பதவியில் தொடரப்போவதாக அறிவித்திருந்தார்.

தலைவருக்கான அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோர்டான் நாட்டு இளவரசர் அலி பின் அல் ஹுசைன் இரண்டாம் சுற்றின்போது போட்டியிலிருந்து விலகியதால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
மிகவும் பரபரப்புக்கு இடையே  நடைபெற்ற இந்தத் தேர்தலில்  
முதல் சுற்று வாக்கெடுப்பில் இரு வேட்பாளர்களுக்கும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காததால், போட்டி இரண்டாம் சுற்றுக்குச் சென்றது.

எனினும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது, அலி பின் அல் ஹுசைன் விலகுவதாக தெரிவித்த பின்னர், பிளாட்டர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவர் ஐந்தாவது முறையாக ஃபிஃபா அமைப்பின் தலைவராக தெரிவாகியிருந்தார்.

இந்த நிலையில்  இன்று செவ்வாய்க்கிழமை செப் பிளாட்டர் கூட்டிய ஊடகவியலாளர் சந்திப்பில் தான் பதவி விலகுவதாக  அறிவித்தார்.

செப் பிளாட்டர் அவர்களின் பதவி விலகலை உதைபந்தாட்ட ரசிகர்கள்
பலத்த கரகோசத்துடன் வரவேற்பார்கள் என நம்பலாம்.

  • தொடங்கியவர்

‘பிபா’ தலைவர் பிளாட்டர் ராஜினாமா

 

ஜூரிச்: சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் செப் பிளாட்டர்.

 

சுவிட்சர்லாந்து தலைநகர் ஜூரிச்சில் ‘பிபா’ தலைவர் தேர்தல் கடந்த மே 29ல் நடந்தது.  மொத்தம் உள்ள 209 உறுப்பு நாடுகளில், முதல் சுற்றில் 140 ஓட்டுகள் பெறுபவர் வெற்றி பெறலாம். ஆனால், சுவிட்சர்லாந்தின் செப் பிளாட்டருக்கு 133 ஓட்டுகள் தான் கிடைத்தன. இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோர்டான் இளவரசர் அலி பின் அல்– ஹூசைன் 73 ஓட்டுகள் பெற்றார்.

 

இரண்டாவது சுற்று ஓட்டெடுப்புக்கு முன் ஹூசைன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து செப் பிளாட்டர் 5வது முறையாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின்(பிபா) தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

 

இந்தச் சூழலில் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து ‘பிபா’ அமைப்பில் பிளாட்டரின் 17 ஆண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. சமீப காலமாக ‘பிபா’ ஊழலில் சிக்கி தவிக்கிறது. இதன் நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டதால், பிளாட்டர் பதவி விலக நேர்ந்துள்ளது.

 

இது குறித்து பிளாட்டர் கூறுகையில்,‘‘தேர்தலில் நான் வெற்றி பெற்ற போதும், உலகின் அனைத்து தரப்பினரும் ஆதரவு தரவில்லை. எனவே, ராஜினாமா செய்வது என முடிவு செய்தேன். விரைவில் ‘பிபா’ அவசர கூட்டம் நடத்தப்படும். இதில், புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார்,’’என்றார்.

 

 

யார் இந்த பிளாட்டர்

கடந்த 1936ல் சுவிட்சர்லாந்தில் பிறந்தவர் செப் பிளாட்டர். கல்லுாரியில் பட்டப்படிப்பு முடித்த இவர், 1948–71 வரை கால்பந்து வீரராக இருந்தார். அப்போது சுவிட்சர்லாந்தின் அமெச்சூர் லீக் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

 

1964ல் சுவிட்சர்லாந்து ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பு தலைவர் ஆனார். 1972, 1976 ஒலிம்பிக் போட்டிகளுக்கான நிர்வாகத்தில் ஆர்வம் காட்டிய பிளாட்டர், 1981ல் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) பொதுச்செயலர் ஆனார்.

 

17 ஆண்டுகால பணிக்குப் பின், 1998ல் ‘பிபா’ தலைவர் ஆனார். தொடர்ந்து ஐந்து முறை தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிளாட்டர், தற்போது திடீரென பதவி விலகியுள்ளார்.

 

http://sports.dinamalar.com/2015/06/1433268780/SeppBlatterresignsasFIFApresident.html

  • தொடங்கியவர்

பிஃபா தலைவர் பதவியை செப் பிளாட்டர் ராஜினாமா செய்த பிறகு நிலவும் போட்டி
 

 

அமெரிக்க தலைமை பிஃபா ஊழல் விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து பிஃபா தலைவர் பதவியை செப் பிளாட்டர் திடீரென ராஜினாமா செய்ததையடுத்து அப்பதவிக்கு போட்டி அதிகமாகியுள்ளது.

 

5-வது முறையாக சமீபத்தில் பிளாட்டர் பிஃபா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதாவது அமெரிக்க தலைமை ரெய்டில் பிஃபா அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்ட பிறகு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஜூரிச்சில் அவர் தான் பதவி விலகுவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.

 

“பிஃபா அமைப்பில் ஆழமான மறுகட்டமைப்பு தேவை” என்று கூறினார் பிளாட்டர். ஊழல்வாதிகள் பட்டியலிலோ அதனுடன் இணைத்தோ பிளாட்டர் பெயர் வரவில்லை என்றாலும் அவர் திடீர் ராஜினாமா கால்பந்து வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கத்தார் மற்றும் ரஷ்யாவுக்கு உலகக் கோப்பை கால்பந்து தொடர்களை வழங்கியதும், 2010 உலகக் கோப்பை கால்பந்து தொடரை தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கியதிலும் கடும் ஊழல்கள் நடைபெற்றதாக எஃப்.பி.ஐ. கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியது.

 

இந்நிலையில் பிஃபா தலைவருக்கான புதிய தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று ராஜினாமா செய்த பிளாட்டர் தெரிவித்ததையடுத்து அப்பதவிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

யு.இ.எஃப்.ஏ தலைவரும் முன்னாள் பிரான்ஸ் வீரருமான மைக்கேல் பிளாட்டினி, அலி பின் அல் ஹுசைன், போர்த்துக்கீசிய கால்பந்து நட்சத்திரம் லூயி பீகோ, ஆகிய பெயர்கள் உடனடியாக தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் பட்டியலில் வெளியாகியுள்ளது.

 

பிரேசிலின் லெஜண்ட் மிட் ஃபீல்டர் ஸீகோ, (இவர் தற்போது கோவா கால்பந்து பயிற்சியாளர்) தென் கொரிய அதிகாரி சுங்-மாங் ஜூன் ஆகியோரது பெயர்கள் அடிபட்டாலும், அதிகாரபூர்வமாக எதுவும் வெளியாகவில்லை. தேர்தலுக்கும் சிறிது காலம் பிடிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article7278505.ece

  • தொடங்கியவர்

‘பிபா’ புதிய தலைவர் யார்: விசாரணை வளையத்தில் பிளாட்டர்

 

ஜூரிச்: செப் பிளாட்டர் ராஜினாமா செய்த நிலையில், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின்(பிபா) தலைவர் பதவிக்கு கடும் போட்டி காணப்படுகிறது. முன்னாள் வீரர்கள் பிளாட்டினி, ஜிகோ, ஜோர்டான் இளவரசர் அலி பின் அல் ஹூசைன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக செப் பிளாட்டரிடம் அமெரிக்க புலனாய்வு துறையினர் விசாரணை நடத்த இருப்பதால், பிரச்னை பெரிதாக வாய்ப்பு உள்ளது.

 

கடந்த 17 ஆண்டுகளாக கால்பந்து நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த செப் பிளாட்டர், 79, திடீரென ‘பிபா’ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. 2018ல் ரஷ்யா, 2022ல் கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்த உரிமை தந்ததில் லஞ்சம் தரப்பட்டதாக கூறப்பட்டது.

 

அமெரிக்காவில் நடந்த தொடர்களில் ‘பிபா’ நிர்வாகிகள் செய்த ரூ. 984 கோடி ஊழல் தொடர்பாக, 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இப்படி பல்வேறு ஊழல் புகார்கள் கிளம்ப, வேறு வழியில்லாத பிளாட்டர் பதவி விலக நேர்ந்தது.

 

அடுத்து என்ன:

‘பிபா’ புதிய தலைவராக ஐரோப்பிய கூட்டமைப்பு (யு.இ.எப்.ஏ.,) தலைவர் பிளாட்டினி, 59 (முன்னாள் பிரான்ஸ் வீரர்) தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

சமீபத்திய ‘பிபா’ தேர்தலில் பிளாட்டரிடம் தோற்ற ஜோர்டான் இளவரசர் அலி பின் அல்– ஹூசைனும் தலைவர் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். இவர்களுடன் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு தலைவராக உள்ள இந்திய வம்சாவளியை (அலகாபாத்) சேர்ந்த சுனில் குலாட், 55, நெதர்லாந்தின் லுாயிஸ் பிகோ, ஜிகோவும்  போட்டியில் உள்ளனர். இதில், பிளாட்டினி தலைவராக அதிக வாய்ப்பு உள்ளது.

 

தேர்தல் எப்போது

அடுத்த தலைவர் தேர்தல் வரும் டிசம்பர் முதல் 2016 மார்ச் மாதத்துக்குள் நடக்கும். அதுவரை செப் பிளாட்டர் இந்த பொறுப்பில் நீடிப்பார்.

 

‘ஸ்பான்சர்கள்’ வரவேற்பு

செப் பிளாட்டர் ராஜினாமாவை ‘பிபா’ அமைப்பின் முக்கிய ‘ஸ்பான்சர்’ ஹூண்டாய் நிறுவனம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்,‘ கால்பந்து அமைப்பு நிர்வாகத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான முதல் நடவடிக்கை இது,’ என, தெரிவித்தது.

 

கத்தாருக்கு சிக்கல்

ரஷ்யா (2018), கத்தார் (2022) உலக கோப்பை தொடருக்கு அனுமதி கொடுத்ததில் பெருமளவு முறைகேடு நடந்தது என, கூறப்படுகிறது. தற்போது செப் பிளாட்டர் விலகியதை அடுத்து, இந்த அனுமதிகளை ரத்து செய்து மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.ஒருவேளை அனுமதி ரத்தானால், ரஷ்ய தொடரை இங்கிலாந்து ஏற்று நடத்தலாம். கத்தார் தொடருக்கு புதிய தேர்வு நடக்கும், இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளுடன் கத்தாரும் போட்டியிடும்.

 

அமெரிக்கா போலீசார் விசாரணை

பதவி விலகிய செப் பிளாட்டரிடம் அமெரிக்க புலனாய்வுத் துறை (எப்.பி.ஐ.) விசாரிப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து தனிப்பட்ட முறையில் ஏற்கனவே அவரிடம் போலீசார் பேசியுள்ளனர். ஏனெனில், இவரது காலத்தில் தான் ஊழல் அதிகமாக வேரூன்றியது. இதில் செப் பிளாட்டருக்கும் பங்குள்ளதாக கூறப்படுகிறது.

 

‘இன்டர்போல்’ அறிவிப்பு

டிரினிடாட் அண்டு டுபாகோ கால்பந்து அமைப்பு தலைவர் ஜாக் வார்னர், தென் அமெரிக்கா கால்பந்து சங்க தலைவர் நிகோலஸ் லியாஸ் (பராகுவே), அர்ஜென்டினாவின் அலெக்சாண்ட்ரோ, ஹியுகோ ஜின்கிஸ், மரியானோ ஜின்கிஸ், ஜோஸ் மார்குலிஸ் (பிரேசில்) என மொத்தம் 6 பேரை, சர்வதேச அளவில் அதிகமாக தேடப்படும் நபர்கள் என்று சர்வதேச போலீசார் (‘இன்டர்போல்’) அறிவித்தனர்.

 

இதில் ஜாக் வார்னர் ஜாமினில் உள்ளார். நிகோலஸ் லியாஸ் பாராகுவேயில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

 

http://sports.dinamalar.com/2015/06/1433353593/BlatterPlatinirfifa.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பிளாட்டர் கொம்பனி கொள்ளை அடிச்சது ஒரு கோடி இரண்டு கோடியில்லை எக்கச்சக்கமாம்.....இதுக்கை புட்டின் இவையளுக்கு வக்காளத்து வேறை.....
 
கிறிஸ்மஸ் நேரத்திலை உலக உதைபந்தாட்ட போட்டியை வைச்ச பன்னாடையளுக்கு நல்ல பாடம்..
  • தொடங்கியவர்

பிளேட்டரின் சாம்ராஜியத்துக்கு ‘ரெட் கார்டு
 

 

பணபலம், செல்வாக்கு, உலகளாவிய பிரபலம் என எல்லாவற்றிலும் முதன்மையாகத் திகழும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு அமைப்பான சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபாவை (FIFA) ஊழல் உலுக்கி எடுத்திருக்கிறது. ஒன்றல்ல, இரண்டல்ல… 17 ஆண்டுகள் பிஃபாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த 79 வயதான செப் பிளேட்டர் ஊலுக்கு கொடுத்த மிகப்பெரிய விலை தனது தலைவர் பதவி.

 

உலகப் புகழ்பெற்ற பிஃபாவை கால் நூற்றாண்டு காலமாக அரித்து வந்த ஊழல் கரையான்களை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது அமெரிக்க நீதித் துறை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கால்பந்து போட்டிகளை நடத்தும் உரிமையை வழங்குவதற்காக சுமார் ரூ.980 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக பிஃபா நிர்வாகிகள் 14 பேர் மீது அமெரிக்க அட்டார்னி ஜெனரல் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஏ.வின் விசாரணையும் முடுக்கிவிடப்பட்டது.

 

7 பேர் கைது

புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான பிஃபா கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகருக்கு கடந்த வாரம் வந்திருந்த பிஃபா நிர்வாகிகள் 7 பேரை அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று ஜூரிச் போலீஸார் கைது செய்தனர். அதுதான் பிஃபாவின் ஊழல் பேர்வழிகளுக்கு விடுக்கப்பட்ட முதல் எச்சரிக்கை.

2018, 2022 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் உரிமை ரஷ்யா மற்றும் கத்தார் நாடுகளுக்கு வழங்கப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஸ்விட்சர்லாந்து போலீஸார், பிஃபா நிர்வாகிகள் கைது செய்யப் பட்ட அதேதினத்தில், பிஃபாவின் தலைமை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். இது பிஃபாவுக்கு விடுக்கப்பட்ட இரண்டாவது எச்சரிக்கை.

 

பிஃபா நிர்வாகிகள் 7 பேரின் கைது, பிஃபா அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை போதாதென்று, ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து பிஃபா தலைவர் செப் பிளேட்ட ருக்கு நெருக்கடிகள் வர ஆரம்பித்தன. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். தேர்தலில் போட்டியிடக்கூடாது என எதிரப்புக் குரல்கள் கிளம்பின. அமெரிக்க நாடுகள் உலகக் கோப்பை போட்டி யிலிருந்து விலகுவோம் என எச்சரித்தன. பிஃபா தன் மீதான ஊழல் கறையை நீக்கினால்தான் ஸ்பான்சர் செய்வோம் என மிகப்பெரிய நிறுவனங்கள் மிரட்டின.

 

ஆனால் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பிளேட்டரோ எதற்கும் அசரவில்லை. கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு 5-வது முறையாக தலைவரானார். ஆனால் அடுத்த சில தினங்களில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது கால்பந்து உலகில் மிகப்பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

ராஜினாமா ஏன்?

பிளேட்டரின் ராஜினாமாவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. பிளேட்டர் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஏவின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அதனாலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என கால்பந்து வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. அமெரிக்க விசாரணை அமைப்புகளைச் சேர்ந்த மூத்த அதிகாரி களும் அதை உறுதி செய்துள் ளதாக நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

கடந்த வாரம் ஜூரிச்சில் கைது செய்யப்பட்ட 7 பேரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அவர்கள் தங்களின் தவறுகளை ஒப்புக் கொண்டிருப்பதோடு, தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் பிளேட்டருக்கு எதிராக சாட்சியம் அளிக்க தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பிளேட்ட ருக்கு எதிராக வலுவான ஆதாரங் களை உருவாக்க முடியும் என எஃப்பிஏ அதிகாரிகள் நம்புகின்றனர். இது பிளேட்டருக்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படு கிறது.

 

இந்த விவகாரத்தில் சட்ட நிபுணர் களிடம் பிளேட்டர் ஆலோசனை பெற்றதாகக் கூறப்படுகிறது. அவர்களும் தலைவர் பதவி யில் இருந்து விலகுவதே சரியாக இருக்கும் என பிளேட்டருக்கு ஆலோசனை வழங்கியிருக்கி றார்கள். ஒருவேளை தலைவர் பதவி யில் தொடர்ந்தால் இப்போது உங்களை காப்பாற்றிக் கொள்ள லாம். ஆனால் வரக்கூடிய நாட்களில் அது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

 

சாம்ராஜியத்துக்கு முற்றுப்புள்ளி

தேர்தலுக்கு முன்பாக மிகப் பெரிய நெருக்குதல்கள் வந்த போதும், அதை சமாளித்து வெற்றி கண்டார் பிளேட்டர். ஆனால் கைது செய்யப்பட்ட அவருடைய சகாக்கள் அப்ரூவர்களாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வேறு வழியின்றி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் இக்கட்டான நிலைக்கு பிளேட்டர் தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் பிஃபாவில் நிகழ்ந்த கால் நூற்றாண்டு கால ஊழல், பிளேட்ட ரின் 17 ஆண்டுகால சாம்ராஜியத் துக்கு முடிவு கட்டியுள்ளது.

 

கால்பந்து விளையாட்டில் நடுவர் ரெட் கார்டு கொடுத்தால், சம்பந்தப்பட்ட வீரர் வெளியேற் றப்படுவார். அது, அவர் சார்ந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஆனால் இங்கே அமெரிக்க நீதித் துறை, பிஃபா நிர்வாகிகள் 7 பேரை கைது செய்தது, கால்பந்து சம்மேளனத்துக்கு காட்டப்பட்ட ரெட் கார்டாகவே பார்க்கப்படுகிறது. அந்த ரெட் கார்டு, பிஃபாவில் இருந்து பிளேட்டரை வெளியேற்றியுள்ளது.

 

தேர்தல் எப்போது?

பிளேட்டர் தற்போது ராஜினாமா செய்திருந்தாலும், புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை அவர்தான் இடைக்கால தலைவராக இருப்பார். பிஃபாவின் அடுத்த கூட்டம் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறவுள்ளது. ஆனால் அதுவரை புதிய தலைவரை தேர்வு செய்யாமல் இருந்தால் அது பிஃபாவின் செயல்பாடுகளை பாதிக்கும். அது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிளேட்டர், “புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான சிறப்பு பிஃபா கூட்டத்தை விரைவில் கூட்டுமாறு செயற்குழுவை வலியுறுத்துவேன்” என குறிப்பிட்டுள்ளார். பிஃபாவின் சிறப்பு கூட்டம் வரும் டிசம்பர் அல்லது 2016 மார்ச்சில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மும்முனைப் போட்டி?

பிஃபாவின் புதிய தலைவரா வதற்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் பிளேட்டரிடம் தோல்வியடைந்த ஜோர்டான் இளவரசர் அலி பின் அல் ஹுசைன் பிஃபா தலைவராவதில் தீவிரமாக இருக்கிறார். கால்பந்து விளையாட்டுக்கு சேவை செய்வதற்காக எப்போதும் தயாராக இருக்கிறேன் என அவர் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

 

ஐரோப்பிய கால்பந்து சம்மேள னத்தின் தலைவராக இருப்ப வரும், செப் பிளேட்டரின் எதிர்ப்பாள ருமான மைக்கேல் பிளாட்டினி போட்டியிடலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. பிரான்ஸைச் சேர்ந்த 59 வயதான பிளாட்டினி, பிளேட்டருக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தாலும், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. பிளேட்டரை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம் என்பதாலேயே அவர் போட்டியில் குதிக்கவில்லை. ஆனால் இந்த முறை போட்டியில் பிளேட்டர் இல்லாததால் அவர் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரான டேவிட் ஜினோலா வும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் தற்போதைக்கு மும்முனைப் போட்டியில் இருக் கிறது பிஃபா தலைவர் பதவி.

 

இன்டர்போல் வளையத்தில் பிஃபா நிர்வாகிகள்

பிஃபா நிர்வாகிகள் ஜாக் வார்னர், நிகோலஸ் லியோஸ் உள்ளிட்ட 6 பேரின் பெயரை சர்வதேச அளவில் தேடப்படுபவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர் சர்வதேச போலீஸார் (இன்டர்போல்). அவர்களை கைது செய்வதற்கு சர்வதேச அளவில் முடுக்கிவிடப் பட்டுள்ளது.

 

ஜாக் வார்னர், நிகோலஸ் தவிர எஞ்சிய 4 பேரும் ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனங்களின் தலைவர்கள் ஆவர். ரூ.980 கோடி அளவுக்கு ஊழல் நடந்தது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் மேற்கண்ட 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாக் வார்னர், பிஃபாவின் முன்னாள் துணைத் தலைவர் ஆவார். இவர் டிரினிடாட் அன்ட் டொபாக்கோவைச் சேர்ந்தவர். நிகோலஸ் லியோஸ் செயற்குழு உறுப்பினர் ஆவார். லியோஸ் தனது சொந்த நாடான பராகுவேயில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

தலைவர் பதவிக்கு இந்தியர் போட்டி

பிஃபா தலைவர் பதவிக்கு அமெரிக்க கால்பந்து சங்கத்தின் தலைவராக இருக்கும் சுனில் குலாதி போட்டியிடலாம் என தெரிகிறது. 3-வது முறையாக அமெரிக்க கால்பந்து சங்க தலைவராக இருக்கும் குலாதி, உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தவர். கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த பெரும் பங்காற்றியுள்ளார் குலாதி.

 

ஐரோப்பிய கால்பந்துசங்க கூட்டம் ரத்து

செப் பிளேட்டர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பிய கால்பந்து சங்க நிர்வாகிகளின் கூட்டத்தை கூட்டியிருந்தார் அதன் தலைவர் மைக்கேல் பிளாட்டினி. ஆனால் திடீரென பிளேட்டர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் செயல்பாடுகள் கணிக்க முடியாததாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் என்ன முன்னேற்றம் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம் என பிளாட்டினி தெரிவித்துள்ளார். பிளேட்டரின் ராஜினாமா குறித்து பேசிய பிளாட்டினி, “துணிச்சலான, கடினமான முடிவு. அதை வரவேற்கிறேன்” என்றார்.

 

ஸ்பான்சர்கள் வரவேற்பு

பிளேட்டரின் முடிவை வரவேற்றுள்ள பிஃபாவின் பிரதான ஸ்பான்சரான கோக-கோலா, “பிளேட்டரின் முடிவு சரியானது. அது கால்பந்துக்கும், ரசிகர்களுக்கும் நல்லது” என குறிப்பிட்டுள்ளது. இதேபோல் தென் கொரியாவைச் சேர்ந்த ஆட்டோ குழும நிறுவனமான ஹூண்டாய் கியா, விசா கார்டு குழுமம் ஆகியவையும் பிளேட்டரின் முடிவை வரவேற்றுள்ளன.

 

ரஷ்யா அதிர்ச்சி

பிளேட்டரின் ராஜினாமாவால் அதிர்ச்சி அடைந்துள்ள ரஷ்யா, “பிஃபாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளே காரணம். கிரிமினல் குற்றச்சாட்டுகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், அது ஒரு சதவீதம் மட்டுமே. 99 சதவீதம் அரசியல்தான் காரணம்” என சாடியுள்ளது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article7279265.ece

  • தொடங்கியவர்

'ஃபிஃபா ஊழல் குறித்த அனைத்தையும் கூறுவேன்'

ஃபிஃபா ஊழல் குறித்து தனக்கு தெரிந்த அனைத்தையும் விசாரணையில் கூறுவேன் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலக கால்பந்து கட்டுப்பாட்டு அமைப்பான ஃபிஃபாவின் ஊழல் குறித்து தனக்கு தெரிந்த அனைத்தையும் தான் விசாராணையாளர்களிடம் கூறுவேன் என்று இந்த ஊழல் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களில் முக்கியமான ஒருவரான அந்த அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் ஜாக் வார்னர் கூறியுள்ளார்.

 

தான் உயிரச்சத்தில் இருப்பதாக, பணம் கொடுத்து ரினிடாட்டில் உள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில், கூறிய ஜாக் வார்னர், ஆனால், இனியும் மௌனமாக இருக்கமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

 

ஃபிஃபா அமைப்பின் தலைவர் செப் பிளட்டர் அவர்களின் கொடுக்கல் வாங்கல்கள் உட்பட, தனக்கும், ஃபிஃபா அமைப்புக்கும், அதற்கான நிதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த ஆவணங்களை தான் சட்டத்தரணிகளிடன் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஃபிஃபாவும், பிளட்டரும் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறிவருகின்றனர்.

 

ஃபிஃபாவுக்கும், ரினிடாட்டில் 2010இல் நடந்த தேர்தலுக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் தான் நிரூபிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்

 

 

http://tamil.thehindu.com/bbc-tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/article7282309.ece

  • தொடங்கியவர்

2018, 2022 உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கு உரிமை பெற்ற ரஷ்யா, கத்தார் தொடர்பாகவும் விசாரணை
 

 

சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளனத்தில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் இலஞ்ச ஊழல் மற்றும் மோச­டிகள் தொடர்­பாக விசா­ரணை நடத்­தி­வரும் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் சமஷ்டி புல­னாய்வுப் பிரி­வினர், 1918, 1922 ஆம் ஆண்­டு­க­ளில் உலகக் கிண்ணப் போட்­டிகள் நடத்­தப்­ப­டு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்ட விதம் குறித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

 

 

இந்தத் தக­வலை ஐக்­கிய அமெ­ரிக்­காவின் சட்ட அமு­லாக்கல் அதி­காரி ஒருவர் வெளி­யிட்­டுள்ளார்.

 

இதே­வேளை 1918 உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டிகள், 1922 உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டிகள் ஆகி­ய­வற்றை நடத்­து­வ­தற்­கான உரிமையைப் பெறும் விட­யத்தில் தாங்கள் எவ்­வித தவ­றான வழிமுறைகளைக் கையா­ள­வில்லை என முறையே ரஷ்­யாவும் கத்­தாரும் தெரி­வித்­துள்­ளன.

 

ஏற்­க­னவே குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ள­வர்கள் மீது நடத்­தப்­படும் விசாரணைகளுக்கு புறம்­பாக, உலகக் கிண்ணப் போட்­டி­களை நடத்­து­வ­தற்கு செய்­யப்­பட்ட மனுக்கள் தொடர்­பா­கவும் விசா­ரணை செய்­யப்­படும் என பெயர் குறிப்­பிட விரும்­பாத ஐக்­கிய அமெ­ரிக்­காவின் சட்ட அமு­லாக்கல் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார்.

 

40 வருட கால­மாக ஃபீஃபாவின் தலை­வ­ராக இருந்து வரும் செப் ப்ளட்டர் தொடர்­பான விசா­ர­ணை­க­ளையும் அமெ­ரிக்க சமஷ்டி புல­னாய்வுப் பிரி­வினர் (எப்.பி.ஐ) ஆரம்­பித்­துள்­ளனர்.

 

இந்த விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டதை அடுத்து முற்­றிலும் எதிர்­பா­ரா­த­வி­த­மாக தனது பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தாக செப் ப்ளட்டர், கடந்த செவ்வாயன்று அறி­வித்தார்.

 

கடந்த 20 வரு­டங்­களில் 150 மில்­லியன் டொலர்கள் இலஞ்­ச­மாக வழங்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பாக விசா­ரணை செய்து வரு­வ­தாக அதி­கா­ரிகள் குறிப்பிட்டனர்.

 

இதே­வேளை, 2018, 2022 ஆம் ஆண்­டு­க­ளில் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களை நடத்துவதற்கான உரிமையைப் பெறுவதற்கு மனுக்களை சமர்ப்பித்தபோது கையாளப்பட்ட விதம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுவிற்சர்லாந்து வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10439#sthash.xUMvgLoP.dpuf

  • தொடங்கியவர்

லஞ்சம் பெற்றது உண்மை தான்: ‘பிபா’ அதிகாரி ஒப்புதல்

 

ஜூரிச்: ‘கடந்த 1998, 2010 உலக கோப்பை தொடர் நடத்த அனுமதி கொடுக்க, லஞ்சம் பெற்றது உண்மை தான்,’ என, ‘பிபா’ முன்னாள் தலைமை அதிகாரி சக் பிளாசர் தெரிவித்தார். இது பதவி விலகிய பிளாட்டருக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

 

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பில் (பிபா) கடந்த 17 ஆண்டுகளாக நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர் செப் பிளாட்டர், 79. இவரது காலத்தில் 2018ல் ரஷ்யா, 2022ல் கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்த உரிமை தந்ததில் லஞ்சம் தரப்பட்டதாக கூறப்பட்டது. 2010ல் உலக கோப்பை தொடரை நடத்திய தென் ஆப்ரிக்கா, ரூ. 64 கோடி வரை  லஞ்சம் கொடுத்த விவகாரமும் வெளியானது.

 

தவிர, அமெரிக்காவில் நடந்த தொடர்களில் ‘பிபா’ நிர்வாகிகள் செய்த ரூ. 984 கோடி ஊழல் தொடர்பாக, 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து அமெரிக்க புலனாய்வுத் துறை (எப்.பி.ஐ.,) விசாரிக்கிறது.

 

இந்நிலையில் ஐந்தாவது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிளாட்டர், திடீரென பதவி விலகினார். இவரிடம் எப்.பி.ஐ., விசாரிக்கும் எனத் தெரிகிறது.

இதனிடையே ‘பிபா’ முன்னாள் தலைமை அதிகாரி சக் பிளாசர் (அமெரிக்கா), அமெரிக்க கோர்ட்டில் தெரிவித்த பல உண்மைகள் தற்போது வெளியாகியுள்ளன.

தற்போது ‘கேன்சர்’ மற்றும் நிமோனியா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு, நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிளாசரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ‘பிபா’ நிர்வாகிகள் உட்பட 14 பேர் மீது வழக்கு பதியப்பட்டதாம்.

 

 

கடந்த நவம்பர், 2013ல் பிளாசர், 70, வழங்கிய வாக்குமூலத்தின் சில பகுதிகளின் விவரம்:

 

கடந்த 1998ல் பிரான்சிற்கு உலக கோப்பை தொடரை நடத்த அனுமதி தரப்பட்டது. இதற்காக நானும், மற்ற சிலரும் இணைந்து 1992ல் லஞ்சம் பெற்றுக் கொண்டு, பிரான்சிற்கு ஆதரவாக ஓட்டு அளித்தோம்.

 

இதேபோல, 2010ல் தென் ஆப்ரிக்காவுக்கு அனுமதி தந்த போதும், நானும், தலைமை அதிகாரிகள் கமிட்டியும், லஞ்சம் பெற்றுக் கொள்ள சம்மதித்தோம்.

தவிர, 1996, 1998, 2000, 2002 மற்றும் 2003ல் நடந்த கோல்டு கோப்பை தொடரில் ‘டிவி’ ஔிபரப்பு உரிமையை வேண்டிய நபர்களுக்கு கொடுக்க லஞ்சம் பெற்றோம். இது 2011 வரை தொடர்ந்தது.

 

இவ்வாறு அதில் பிளாசர் தெரிவித்துள்ளார். குற்றத்தை ஏற்றுக் கொண்ட இவருக்கு, 20 ஆண்டு வரை தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.

 

அமெரிக்கா விசாரணை:

இப்படி பல்வேறு உண்மைகள் வெளியான நிலையில், ரஷ்யா, கத்தாருக்கு அனுமதி தரப்பட்டது எப்படி என்ற விசாரணையில் எப்.பி.ஐ., போலீசார் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், 2018ல் உலக கோப்பை கால்பந்து தொடரை எப்படியும் நடத்தியே தீருவது என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதியாக உள்ளார்.

 

http://sports.dinamalar.com/2015/06/1433428297/Blatterfifa.html

 

  • தொடங்கியவர்

'லஞ்சம் பெற்றது உண்மை!' - ஃபிஃபா முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஒப்புதல்

 

கடந்த 1998 பிரான்சில் நடந்த உலகக் கோப்பை, 2010ஆம் ஆண்டு தென்ஆப்ரிக்காவில் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பினை அந்த நாடுகளுக்கு வழங்குவதற்காக தானும் மற்ற உறுப்பினர்களும் லஞ்சம் பெற்றது உண்மைதான் என்று ஃபிஃபா முன்னாள் செயற்குழு உறுப்பினர் சக் பிளேசர் ஒப்புக் கொண்டுள்ளார்.

 

rb9nkn.jpg

ஃபிஃபாவில் ஊழல் நடைபெற்றது தொடர்பாக இன்டர் போல் அமைப்பு அந்த அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் ஜேக் வார்னர், நிசோலஸ் லியோஸ், அலெசான்ட்ரோ பல்சாக்கா, ஹீகா ஜிங்ஸ், மரினோ ஜிங்கிஸ், ஜோஸ் மெர்குலீஸ் ஆகியோருக்கு சிவப்பு நோட்டீஸ் விநியோகித்து,  தேடப்படும் சர்வதேச குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. இதில் ஜேக் வார்னரும் நிகோலஸ் நியோசும் 'மோஸ்ட் வான்டட்' குற்றவாளிகள் ஆவார்கள்.

 

 

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஃபிஃபா முன்னாள் செயற்குழு உறுப்பினரான சக் பிளேசர், கடந்த 1998 ஆம் ஆண்டு பிரான்சில் உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்காகவும்,  2010ஆம் ஆண்டு தென்ஆப்ரிக்காவில் உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்காகவும் தானும் இன்டர்போல் அறிவித்துள்ள குற்றவாளிகள் பட்டியலில் உள்ள 6 பேரும் லஞ்சம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

httfz8.jpg

 

பிரான்ஸ் உலகக் கோப்பைக்கான வாக்கெடுப்பு 1992ஆம் ஆண்டிலும், தென்ஆப்ரிக்க உலகக் கோப்பைக்கான வாக்கெடுப்பு 2004ஆம் ஆண்டும் நடந்தன. தற்போது புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியுள்ள சக் பிளேசர்,  நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

http://www.vikatan.com/news/article.php?aid=47461

  • தொடங்கியவர்

உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தும் உரிமைகளை ரஷ்யா, கத்தார் இழக்கக்கூடும் - ஃபீஃபா அதிகாரி
 

வாக்கு வேட்­டைக்­காக இலஞ்சம் கொடுக்கப்­பட்­டுள்­ள­தற்­கான உறு­தி­யான ஆதா­ரங்கள், சாட்­சி­யங்கள் கிடைத்தால் ரஷ்­யாவும் கத்­தாரும் முறையே 2018, 2002 உலகக் கிண்ணப் போட்­டி­களை நடத்தும் உரி­மை­களை இழக்க நேரிடும் என சர்வதேச கால்­பந்­தாட்ட சங்­கங்கள் சம்மேளன ஃபீஃபா பிர­தான அதி­காரி டொமி­னிக்கோ ஸ்காலா தெரி­வித்­துள்ளார்.

எனினும் உலகக் கிண்ணப் போட்­டி­களை நடத்­து­வ­தற்­கான தங்­க­ளது மனுக்களுக்­கான முயற்­சி­க­ளின்­போது எவ்­வித தவ­றான செயல்­க­ளிலும் ஈடுப­ட­வில்லை என ரஷ்­யாவும் கத்­தாரும் தெரி­வித்­துள்­ளன.

 

 

இந்த இரண்டு நாடு­களும் உலகக் கிண் ணப் போட்­டி­களை நடத்­து­வ­தற்­கான உரி­மை­களைப் பெறும்­பொ­ருட்டு எவ்­வித மோச­டி­களும் இடம்­பெற்­ற­தற்­கான ஆதா­ரங்கள் எதுவும் இல்லை என ஸ்காலா குறிப்பிட்­டுள்ளார்.

 

ஃபீஃபாவில் கணக்­காய்வு மற்றும் இசைவுக் குழுவின் தலை­வ­ராக ஸ்காலா கட­மை­யாற்­று­கின்றார்.

 

''உலகக் கிண்ணப் போட்­டி­களை நடத்­து­வ­தற்­கான உரி­மை­களைப் பெறும் நோக்கில் ரஷ்­யாவும் கத்­தாரும் வாக்­கு­களை வாங்­கி­ய­தற்­கான ஆதா­ரங்கள் கிடைத்தால் அந்த நாடு­க­ளுக்கு வழங்­கப்­பட்ட உரி­மைகள் இரத்துச் செய்­யப்­ப­டலாம்'' என அவர் கூறினார்.

 

''இற்­றை­வரை எத்­த­கைய ஆதா­ரங்­களும் சமர்ப்­பிக்கப்ப­ட­வில்லை'' என்றார் அவர்.

 

2013இலும் இதே­போன்ற கருத்­துக்­களை ஸ்காலா வெளி­யிட்­டி­ருந்தார்.

 

ஆனால், ஃபீஃபாவில் கடந்த இரண்டு வாரங்­க­ளாக இடம்­பெற்­று­வரும் சம்பவங்­களைப் பார்க்­கும்­போது ரஷ்­யா­வுக்கும் கத்­தா­ருக்கும் உலகக் கிண்ணப் போட்­டி­களை நடத்­து­வ­தற்கு வழங்­கப்­பட்ட உரி­மைகள் குறித்து மீளாய்வு செய்­யப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

ஃபீஃபா தலைவர் பத­விக்­கான வாக்­க­ளிப்பில் கலந்­து­கொள்­வ­தற்­காக சுவிட்ஸர்­லாந்தின் சூரிச் ஹோட்­ட லில் தங்­கி­யி­ருந்த ஃபீஃபா வின் சிரேஷ்ட அதி­கா­ரிகள் எழு வர்  சுவிட்­ஸர்­லாந்தின் ஊழல் ­மோ­சடி தடுப்புப் பிரிவினரினால் கைது செய்­யப்­பட்­டனர்.

 

இதேவேளை, 150 மில் லியன் டொலர்களுக்கு மேல் ஆதாயம் பெற்றுள்ள தாகத் தெரிவித்து 14 பேருக்கு எதிராக ஐக்கிய அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பிரிவினரால் (எவ்.பி.ஐ) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10508#sthash.YKeix1DF.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.