Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஸ்கிருதமும் லத்தினும்

Featured Replies

"கைமண் அளவு" வலைப்பதிவில் இருந்து

..........மொழியியல் அறிமுகம் இல்லாதவர்களுக்கு தொடர்பில்லாததுபோல் தோன்றும் சொற்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளையும் பயிற்சி உடையவர்களால் கண்டறிய முடியும். அதற்கு ஒரு மொழியில் உள்ள சொல் மற்றொரு மொழியில் எப்படித் திரியும் என்ற விதிகளை அறிந்திருக்கவேண்டும். ஒரு எளிய எடுத்துக்காட்டாக 'பெயர்' என்றத் தமிழ் சொல்லுக்கும் அதே பொருளுடைய கன்னடச் சொல்லான "ஹெசரு" என்பதற்கும் உள்ள தொடர்பை மூன்று விதிகளைக் கொண்டு விளங்கலாம். விதி 1: தமிழ்சொல்லின் துவக்கத்தில் 'ப' வந்தால் அது கன்னடத்தில் 'ஹ' என்று திரியும் (புலி -> ஹுலி, பால் -> ஹாலு). விதி 2: 'ய' என்ற எழுத்து 'ச' என்றுத் திரிவதை தமிழ் மொழிக்கு உள்ளேயேக் காணலாம் (நேயம் -> நேசம், குயவன் -> குசவன்). விதி 3: 'ர்' என்ற எழுத்தில் முடியும் சொற்களை 'ரு' என்று முடியுமாறு உச்சரிப்பது கன்னடர்களின் வழக்கம் (ஓசூர் -> ஓசூரு, மைசூர் -> மைசூரு). இந்த மூன்று விதிகளையும் 'பெயர்' என்ற சொல்லின் மேல் செலுத்தினால் 'ஹெசரு' என்று உருமாறும்.

இரண்டு மொழிகளில் உள்ள சொற்களுக்கு இடையே உள்ளத் தொடர்பை அறிய வழக்கொழிந்துவிட்ட பழஞ்சொற்களைப் பற்றிய அறிவும் தேவை. எடுத்துக்காட்டாக, 'இன்று' என்பதை 'இண்ணு' என்றும் 'நாளை' என்பதை 'நாள' என்றும் சொல்லும் மலையாளிகள் 'நேற்று' என்பதை மட்டும் 'இன்னலெ' என்று ஏன் சொல்கிறார்கள் என்று நான் குழம்பியதுண்டு. இதற்கான விளக்கம் வேங்கடராஜுலு என்பவர் எழுதிய "தமிழ் சொல்லமைபு" என்ற நூலில் கிடைத்தது. பழந்தமிழில் 'நேற்று' என்பதைக் குறிக்க 'நெருநல்' மற்றும் அதன் திரிபாகிய 'நென்னல்' ஆகியவைப் பயன்படுத்தப்பட்டுள்ளன. (குறள்: "நெருநல் உளனொருவன் இன்றில்லை.." - நேற்று இருந்தவன் இன்றில்லை). நென்னல் என்பதே கன்னடத்தில் 'நென்ன' என்றும் மலையாளத்தில் இன்னலெ என்றும் திரிந்திருக்கிறது.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளும், மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் பிராஹுய் போன்ற மொழிகளும் சமஸ்கிருதம், லத்தீன் போன்ற இந்திய-ஐரோப்பிய மொழிகளுடன் சற்றும் தொடர்ப்பில்லாத மற்றொரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதை முதன்முதலில் முறையாக ஆய்ந்து அறிவித்தவர் ராபர்ட் கால்டுவெல். 1841-ல் கிருஸ்தவம் பரப்புவதற்காக திருநெல்வேலிக்கு வந்த இவர் தொழிலுக்கு உதவும் என்று தமிழ் கற்கத் தொடங்கிய பின் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அடுத்த ஐம்பது ஆண்டுகளைத் தமிழ் ஆய்விலும் மொழியியல் ஆய்விலும் செலவிட்டார். "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூல் இவரது முக்கியமான பங்களிப்பு. தமிழறிஞர்களால் "கால்டுவெல் அய்யர்" என்று குறிப்பிடப்படும் இவருக்கு சென்னைக் கடற்கரையில் தமிழக அரசால் சிலை வைக்கப்பட்டது. அண்மைக்காலமாக அய்யரவர்களுக்கு நேரம் அவ்வளவாக சரியில்லை. "இந்தியாவைத் துண்டாட வந்த வெள்ளை இனவெறியன்" போன்ற வசைகள் தன் மீது ஏவப்படுவதை அறிந்தால் கால்டுவெல் இடையன்குடியில் உள்ளத் தன் கல்லறையில் புரண்டுப் படுக்கக்கூடும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதையெல்லாம் பள்ளிப்பாடத்தோடு விட்டுவிட்டச் சிலருக்கு தமிழும் சமஸ்கிருதமும் முற்றிலும் வெவ்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை என்ற ஆய்வு முடிவை எவ்வளவு ஹஜ்மோலாவுடன் சேர்த்து விழுங்கினாலும் செரிக்க முடியாமல் இருப்பதே இந்த வசைகளுக்குக் காரணம்.

என் நண்பர் ஒருவர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். சென்னையில் சில ஆண்டுகள் தங்கியிருந்தபோது தமிழைச் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டுவிட்டார். அவரது ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டியபோது, "தமிழ் தெலுகு ரெண்டுக்கும் பெரிய டிஃபரன்ஸ் இல்லை. ஆஃப்டர் ஆல், ரெண்டுமே ஸான்ஸ்க்ரிட்லேந்து வந்தது தானே" என்றார். தமிழும் தெலுங்கும் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை என்ற அவரதுக் கருத்து கடந்த நூற்றைம்பது ஆண்டுகால மொழியியல் ஆய்வு முடிவுகளுக்கு முற்றிலும் எதிரானது என்று விளக்க முயன்றபோது சற்று எரிச்சல் கலந்தக் குரலில் சொன்னார்: "இண்டியன் லாங்குவேஜஸ் எல்லாம் ஸான்ஸ்க்ரிட்லேந்து தான் வந்ததுங்கிறது ரொம்ப பேசிக்கான விஷயம்". உண்மையில் பெரும்பாலான தெலுங்கர்களும் மலையாளிகளும் (சிலத் தமிழர்களும்) இந்தக் கருத்தைக் கொண்டிருப்பதை விவாதங்களில் கண்டிருக்கிறேன். தங்கள் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியதல்ல என்று மொழியியல் ஆதாரங்களோடுச் சுட்டிக் காட்டப்பட்டால் இவர்கள் மிகுந்த சினம் கொள்வதைக் காணலாம்.

மேற்படிக் கருத்தைக் கொண்டிருப்பவர்கள் செய்யும் தவறு இதுதான்: தென்னிந்திய மொழிகளில் ஏராளமான சமஸ்கிருத இரவல் சொற்கள் இருப்பதைக் காண்கிறார்கள். எனவே தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருத்ததிலிருந்து தான் தோன்றியிருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்கமுடியாது. நானூறு ஆண்டுகளுக்கு முந்தையத் தமிழில் ஒரு ஆங்கிலச் சொல் கூட இருந்திருக்காது. ஆனால் இன்றையப் பேச்சுத்தமிழிலும் (திங்க் பண்ணி, டிசைட் பண்ணி, இன்ஃபார்ம் பண்ணி என்று பேசப்படும் 'பண்ணி' மொழியில்) ஜூனியர் விகடன் போன்ற எழுத்துக்களிலும் ஏராளமான ஆங்கிலச் சொற்கள் கலந்திருப்பதால் தமிழ் ஆங்கிலத்திலிருந்துத் தோன்றியது என்றுச் சொல்லமுடியாது. இருநூறு ஆண்டுகளாக தமிழர்கள் மீது ஆங்கிலேயர் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தியது மற்றும் இன்றைய உலகில் ஆங்கிலம் பேசுவோரின் மறைமுக ஆதிக்கம் ஆகியவையே தமிழில் ஆங்கிலக் கலப்புக்குக் காரணம். தென்னிந்திய மொழிகளில் சமஸ்கிருதக் கலப்புக்கான காரணமும் இதுபோன்றது தான். உண்மை இப்படியிருக்க, இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்துத் தோன்றியவை என்பது மத நம்பிக்கைகளைப் போல தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒரு நம்பிக்கையாக இந்தியர்கள் நடுவே நிலவுகிறது.

தங்கள் மதம், இனம் தொடர்பான நம்பிக்கைகளுக்கும் ஐதீகங்களுக்கும் எதிரான அறிவியல் / தொல்லியல் ஆய்வு முடிவுகளை மூர்க்கமாக எதிர்ப்பதும் உள்நோக்கம் கற்பிப்பதும் இந்தியர்களுக்கு மட்டுமே உள்ள இயல்பு அல்ல. மனித இனத்தின் தோற்றம் குறித்த டார்வின் கோட்பாடு தங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானது என்பதால் அது பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படுவதை கடுமையாக எதிர்த்து அதற்கு மாற்றாக எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லாத intelligent design என்ற ஒரு பம்மாத்து தத்துவத்தை அமெரிக்க கிருஸ்தவ அடிப்படைவாதிகள் முன்வைப்பதை இங்கேச் சுட்டலாம். அதுபோல இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் பிறப்பிடம் மத்திய ஆசியா என்ற ஆய்வு முடிவு இந்தியாவில் 'பித்ருபூமி', 'புண்ணியபூமி' போன்ற கருத்தாக்கங்களால் ஒருத் தேசியத்தை வரையறைச் செய்து தங்களுக்கு வேண்டாதவர்களை அதற்கு வெளியே நிறுத்தி மகிழும் சிலருக்கு படக்கூடாத இடத்தில் உதைக்கப்பட்டதுப் போன்ற உணர்வை எழுப்புகிறது போலும். எனவே அதை மறுத்து இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் பிறப்பிடம் இந்தியா தான் என்று "எப்படியாவது" நிறுவவேண்டும். மொகஞ்சதாரோவிலும் ஹரப்பாவிலும் வாழ்ந்த மக்கள் சமஸ்கிருத மொழியையோ பண்பாட்டையோ அறிந்திருக்கவில்லை என்பது நியாயமான ஐயங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் நிறுவப்பட்டுவிட்டப் போதும் அங்கே சமஸ்கிருதத்தின் இருப்பை நிலைநாட்டியேத் தீருவோம் என்ற முன்முடிவுடன் நடத்தப்படும் "ஆய்வுகள்" இந்தப் போக்கின் நீட்சி.

பதிவுக்கு மீள்வோம். கீழே உள்ளப் பட்டியல் சமஸ்கிருதம் மற்றும் லத்தீன் சொற்களிடையே உள்ள ஒற்றுமைகளின் அடிப்படையில் உருவானது. வேறு சில சமஸ்கிருதச் சொற்களுக்கு லத்தீன் சொற்களோடு உள்ள ஒற்றுமையை நிறுவ முடியாவிட்டாலும் மற்ற ஐரோப்பிய மொழிகளில் அதேபோல் ஒலிக்கும் சொற்கள் இருப்பதைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, நாபி (தொப்புள்) என்ற சமஸ்கிருதச் சொல்லுக்குரிய லத்தீன் சொல் umbilicus. ஆனால் ஜெர்மன் மொழியில் nabel, ஆங்கிலத்தில் navel. அதே வேளையில் சமஸ்கிருதத்துக்கு ஐரோப்பிய மொழிகளைக் காட்டிலும் பலமடங்கு அதிக ஒற்றுமை இரான், ஆஃப்கானிஸ்தான் நாடுகளில் பேசப்படும் பழைய பாரசீக மொழியிலிருந்து தோன்றிய மொழிகளுடன் இருக்கிறது. இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் சமஸ்கிருதத்துக்கு பாரசீக மொழி சொந்த சகோதரி என்றால் லத்தீன் ஒன்றுவிட்ட சகோதரி. பட்டியல் இந்த வரிசையில் உள்ளது: முதலில் தமிழ்ச்சொல், அடுத்த வரியில் சமஸ்கிருதச் சொல்லும் தொடர்புடைய இந்திய மொழிச் சொற்களும், இறுதியாக லத்தீன் சொல்லும் தொடர்புடைய ஆங்கிலச் சொற்களும்.

1. பிறப்பு

ஜன் -> ஜன்மம், ஜனனம்

genus -> genetic, genealogy

2. இறப்பு

மர் -> மரணம்

mors -> mortuary, mortal

3. தாய்

மாத்ர் -> மாத்ருபாஷா, 'வந்தே மாதரம்'

mater -> matrilineal, maternal

4. தந்தை

பித்ர் -> பித்ருபூமி, 'பிதுர் கடன்'

pater -> patriarchal, paternal

5. பெயர்

நாமன் -> நாமம், நாமகரணம்

nomen -> name, nomenclature

6. நெருப்பு

அக்னி -> அக்னி

ignis -> ignite

7. கடவுள்

தேவ -> தெய்வம்

deus -> deity, deify

8. மன்னன்

ராஜ -> ராஜகுரு, ராஜகுமாரன்

regis -> regicide, regal

9. கைம்பெண்

விதவா -> விதவை

vidua -> widow

10. மூக்கு

நாஸ் -> நாசி

nasus -> nasal

11. பல்

தந்த் -> தாந்த் (ஹிந்தி: பல்)

dentis -> dental

12. அடி

பாத -> பாதசாரி

pedis -> pedestrian, pedal

13. இரண்டு

த்வி -> த்விபாஷி (இரு மொழி அறிந்தவன்), த்விவேதி

duo -> dual, duet

14. மூன்று

த்ரி -> த்ரிமூர்த்தி, த்ரிவேதி

tria -> triangle, trinity

15. ஏழு

சப்த -> சப்தஸ்வரம் (ஏழு ஸ்வரங்கள்)

septem -> september (7th month in old calender)

16. ஒன்பது

நவ -> நவக்கிரகம், நவராத்திரி

novem -> november (9th month in old calender)

17. பத்து

தச -> தசாவதாரம், தசாப்தம்

decem -> december, decimal

18. என்னை

மா -> மேய்ன் (இந்தி: நான்)

me -> me

19. உன்னை

த்வா -> து (இந்தி: நீ)

tu -> thou (Old English: you)

20. உள்ளம்

மனஸ் -> மனஸ்தாபம், மனம்

mens -> mental

21. பெரும்-

மகா -> மகாகவி, மகாராஜா

magna -> magnificent, megastar

22. சிறை

காராக்ரஹ -> காராக்ரஹம்

carcer -> incarcerate

23. தொன்மையான

சன -> சனாதன

senex -> senile, senior

24. இளைஞன்

யுவன் -> யுவன்

iuvenis -> juvenile

25. குரல் / பேச்சு

வாக் -> வாக்கு

vox -> vocal

26. ஆடவன்

வீரா -> வீரியம்

vir -> virile

27. சொல்

வ்யார்த்தி -> வார்த்தை

verbum -> verbal

28. தன்

ஸ்வ -> சுய, சுயம்

suo -> 'suo moto'

29. இரவு

நக்தம் -> நக்ஷத்திரம்

noctis -> nocturnal

30. புதுமை

நவ -> நவீன

novus -> novel

31. உதவி

ஸாக -> சகாயம்

succurro -> succor

32. அறிவு

ஞான -> ஞானம்

gnoscere -> ignore, knowledge

33. நடு

மத்ய -> மத்யஸ்தம், மத்தியில்

medius -> median, middle

34. கக்குதல்

வாமிதி -> வாந்தி (திரிபு)

vomito -> vomit

35. மாலுமி

நௌகர -> நௌக்கா (இந்தி: படகு)

nauta -> nautical

36. உள்ளே / இடையே

அந்தர் -> அந்தராத்மா, 'அந்தர்-ராஷ்ட்ரிய' (இந்தி)

inter -> internal, international

37. ஊர்தல்

சர்ப்ப -> சர்ப்பம் (பாம்பு)

serpere -> serpent

38. வண்டி

வாஹன -> வாகனம்

vehiculum -> vehicle

39. நிலம்

தர -> தரை, தரணி

terra -> terrestrial, terrain

40. ஆடை

வஸ்த்ர -> வஸ்திரம்

vestis -> vest

நல்ல ஆய்வு, நன்றி

என்னிடம் இருந்த சில சொற்களின் திரிபுகள் தொடர்புகள் பற்றிய சந்தேகத்தை உறுதி செய்திருக்கு.

  • தொடங்கியவர்

இன்று வரைக்கும் எந்த ஒரு மொழியியல் வல்லுனராலும் "இந்தோ-ஐரோப்பிய" மொழிக் குடும்பக் கோட்பாட்டை நிராகரிக்க முடியவில்லை.

இந்த மொழிக் குடும்பம் கண்டுபிடிப்பு என்பது "சமஸ்கிருதம் தேவ பாசை" என்று சொல்பவர்களின் தலையில் விழுந்த சம்மட்டி அடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக நல்ல பதிவு.

இந்த சமஸ்கிருத மாஜை இடைப்பட்ட காலத்தில்தான் புகுத்தப் பட்டது. ஆங்கில அறிஞர் கால்டுவேல் தனது திராவிட மொழிகளின் ஒக்கிலக்கணம் என்ற நூலில் தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது என்ற உண்மையை வெளிக் கொணர்ந்தார். பார்ப்பனியத்தின்மேல் விழுந்த முதல் சம்மட்டியடி அது. அதன்பின் வடமொழிக்கு ஆதிக்கத்திற்கு எதிரான மாபெரும் தனித் தமிழ் பணியை தமிழ்க் கடல் மறைமலை அடிகள் மேற்கொண்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.